ஆங்கிலத்தில் ஜட்ஜ்மெண்ட், ஜட்ஜ் என்பதற்கான நேரடி பொருள் 'தீர்வு', 'தீர்வு சொல்லுபவர்' என்பதே. ஒரு வழக்கு என்றாலே ஒருவர் (வாதியோ, எதிர்வாதியோ) மனசாட்சியை அடகு வைத்தவர், மற்றவர் நேர்மையானவர் என்பது பரவலான புரிதல், அதுமட்டுமின்றி சில சமயம் இருவருமே விட்டுக் கொடுக்காதவர்கள் என்னும் போது, இருவருக்கும் இடையேயான உடன்பாடின்மை ஆகியவை தீர்வுக்களைத் தேடி நீதிமன்றம் வருகின்றன. என்னைப் பொருத்த அளவில் 'நீதி' என்ற சொல்லை வழக்கு தீர்வுகளுக்கும், அதனை வழி நடத்துபவர்களுக்கும் கொடுப்பது அநீதியானது. ஏனெனில் வழக்கு மன்றங்கள் கொடுப்பது நீதி அல்ல தீர்வு மட்டுமே. ஒரு பிரச்சனையின் தீர்வு நீதியா அநீதியா என்பதை அவரவர் மனசாட்சி தவிர்த்து யாருமே சரியாக மதிப்பிட முடியாது என்பதால் நீதிபதிகளின் தீர்ப்பை நீதி என்று நான் நினைப்பது இல்லை. நீதிபதிகள் அளிப்பது நீதியல்ல சாட்சிகள் அடிப்படையில் ஆன தீர்வுகள் மட்டுமே. இது போன்ற புரிதல்களால் தான் எந்த ஒரு பதவிக்கும் புனிதம் கொடுக்கக் கூடாது என்பதால் தீர்வை நீதி என்றோ, தீர்ப்பு சொல்லுபவர்களை நீதிபதி என்றோ சொல்லாமல் 'தீர்வு அளிப்பவர்' என்னும் பொருளில் 'ஜட்ஜ்' என்று சொல்லுகிறார்கள், தீர்வுகள் மன்னர்களிடமிருந்து அதற்கான படிப்பு படித்தவர்களுக்கு சென்ற பிறகு வெள்ளைக்காரர்கள். 'மை லாட்' என்ற பதத்தை நீதிபதியை நோக்கி பயன்படுத்த்தினார்கள் அல்லது தீர்பளிப்பவர்கள் வழக்கிற்கு பொதுவானவர்கள் என்பதாலும் முறையான தீர்வு அளிப்பவர் என்கிற நம்பிக்கையாலும் தீர்ப்பு அளிப்பவர்களை கடவுளுக்கு நிகராக 'மை லாட்' என்று சொல்லி வந்தனர். இருந்தாலும் நடைமுறையில் அந்த பதவிக்கு 'தீர்வு அளிப்பவர்' என்ற பொருளில் தான் 'ஜட்ஜ்' என்று சொல்லப்பட்டு வருகிறது.
சாட்சிகள் அடிப்படையிலான தீர்வுகள் என்பதையும் மீறி, சாட்சிகளை கவனத்தில் கொள்ளாது நீதிபதி தன் விருப்பம் போல் (அநீதியாக) தீர்ப்பு வழங்கிவிட்டால் நீதிபதிகளின் தீர்ப்புகளை விமர்சனம் செய்யக் கூடாது என்பது தான் மக்களாட்சி தத்துவங்களில் எழுத்தப்பட்ட மற்றொரு அநீதியாயன நடைமுறைகள். நீதிபதிகள் என்பவர்கள் கடவுள்கள் அல்ல, சாமியார்களும் சாதாரண மக்களே என்பது போல நீதிபதிகளும் அதற்கான படிப்பு படித்த மனிதர்கள் மட்டும் தான், அவர்களை கடவுளுக்கு இணையாக வைத்துப் பார்ப்பதும், 'நீதி அரசர்' என்கிற பட்டம் கொடுப்பதும் எனக்கு ஏற்புடையது அல்ல.
நீதிபதிகளில் தவறு செய்யக் கூடியவர்களும் இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை, காசு வாங்கிக் கொண்டு ஆளுனராக இருந்த அப்துல்கலாமும் கைது வாரண்ட் பிரப்பித்தவனும் கூட 'நீதிபதி' என்ற பதவியில் இருந்து தான் அதனை வழங்கினான். ஒரு சிலர் தவறு செய்வதற்காக ஒட்டு மொத்த நீதிபதிகளை குறைச் சொல்ல முடியுமா ? அந்த ஒரு சிலரின் தவறுகளை கடுமையாக தண்டித்திருக்க வேண்டிய பிற நீதிபதிகள் அதுபற்றி அலட்டிக் கொள்ளாமல் இருப்பதை என்னவென்று சொல்வது.
ஒரு நீதிபதி லஞ்சம் வாங்கியாதகச் சிக்கினால் அதற்கு முன் அவர் வழங்கிய தீர்ப்புகளின் நம்பகத்தன்மை கேள்விக்கு ஆளாகிறது, அவ்வாறு அதற்கு முன் வழங்கிய தீர்வுகள் எதுவும் நீக்கம் (ரத்து) செய்யபடுவதில்லை. ஒருவர் அரசாங்கத்திற்கு கணக்கு காட்டாத சொத்துக்களை அரசாங்கம் எடுத்துக் கொள்ள உரிமை இருக்கிறது என்னும் போது தவறான நீதிபதிகள் வழங்கிய தீர்வுகள் மட்டும் செல்லுபடியானவை என்பது நீதியில் வருமா ?
எதற்கு ஏன் இவ்வளவு புலம்புகிறேன் என்றால் படித்த ஒரு செய்தி எரிச்சலை ஏற்படுத்தியது.
********
ஊழலில் ஈடுபட்ட நீதிபதிகள் இட மாற்றத்தை அரசு நிராகரித்ததுமே 11,2010,00:00 IST
புதுடில்லி : பல கோடி ரூபாய் வருங்கால வைப்பு நிதி மோசடியில் சிக்கிய மூன்று நீதிபதிகளின் இட மாற்றம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குழு அளித்த பரிந்துரையை, மத்திய அரசு ஏற்காமல் கிடப்பில் போட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள காசியாபாத்தில் நடந்த வருங்கால வைப்பு நிதி பல கோடி ரூபாய் மோசடி சம்பவம், நாட்டையே உலுக்கியது.
இந்த மோசடியில் அலகாபாத், நைனிடால் ஐகோர்ட் நீதிபதிகள் மூன்று பேருக்கு தொடர்பு இருந்தது சி.பி.ஐ., விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, ஊழல் புகாரில் சிக்கிய அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி சுசில் ஹர்கவுலி ஜார்க் கண்ட் ஐகோர்ட்டிற்கும், ஜே.சி.எஸ்.ரவாத் நைனிடால் நீதிமன்றத் திற்கும், நைனிடால் ஐகோர்ட் நீதிபதி தருண் அகர்வால் ஜார்க்கண்ட் ஐகோர்ட்டிற்கும் அதிரடியாக இடமாற்றம் செய்யப் பட்டனர்.
ஊழல் நீதிபதிகளின் இடமாற்ற விவகாரம் குறித்து விசாரணை நடத்த, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. தவிரவும், ஊழலில் சிக்கிய மூன்று நீதிபதிகள் மோசடிகள் குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எனவே, புகாரில் சிக்கிய நீதிபதிகளை மீண்டும் பழைய இடத்திற்கே பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற சிபாரிசு, மத்திய அரசுக்கு திருப்தி தரவில்லை.
நீதிபதிகள் குழு அளித்த இந்த பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஊழல் நீதிபதிகள் இடமாற்றம் தொடர்பாக நீதிபதிகள் குழு பழைய உத்தரவையே மீண்டும் அரசுக்கு பரிந் துரை செய்தால், அவர்கள் மாறுதல் உத்தரவை விதிமுறைகளின்படி மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று கூறப்பட்டது.
*******
குற்றத்தின் முகாந்திரம் இருக்கிறது என்பாதக்தான் விடுமுறை நாட்களிலும் காவலர்களால் வீட்டிற்கே அழைத்துவந்து முன் நிறுத்தப்படுவர்கள் (நக்கீரன் கோபால், வைகோ, சு.வீ, நெடுமாறன்) குற்றவாளிகள் என்பதாகப் புரிந்து கொண்டு உடனடியாக ஒரு நீதிபதி போலிஸ் காவல் விசாரணைக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்து இடுகிறார்கள். இது குற்றம் செய்யும் நீதிபதிகளுக்கு பொருந்ததா ? என்ன கொடுமை பாருங்கள், சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்பதற்காக ஊழல் முகாந்திரம் உள்ள ஒருவரை மீண்டும் பணி இடத்திற்கே திருப்பி அனுப்ப வேண்டுமாம்.
அரசுகளை அரசியல்வாதிகள் ஆட்டிப்படைப்பது போலவே நீதிபதிகள் தங்கள் நலன் சார்ந்து நீதிமன்ற ஆணைகளை தங்களுக்கு சாதகமாக வளைத்துக் கொள்கிறார்கள்.
நீதிபதிகளின் தீர்ப்புகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை என்பது லஞ்சம் பெற்று குற்றவாளியாக நிற்கும் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புகளுக்கும் பொருந்துமா ? அல்லது நீதிபதிகளே விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா ?
நீதிபதிகள் வழங்குவது நீதி அல்ல வழக்கின் சாட்சிகள் அடிப்படையிலான தீர்வுகள் மட்டுமே, அதையும் மனசாட்சிக்கு விரோதமாக அறிவிக்கும் நீதிபதிகளும் உண்டு, அப்படியான வழக்குள் சில சமயம் வழக்கு நடத்த பண பலம் இருந்தால் மேல் நீதிமன்றத்தில் வெற்றி அடைகின்றன, சில தண்டனை அடைகின்றன, அதற்காக உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்வுகள் நீதியானவை என்று நான் சொல்லவரவில்லை.
தீர்ப்புகள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை அல்லது விமர்சனம் செய்வது இந்திய சட்டவியல் படி குற்றம் என்றாலும் கூட நீதிபதிகளின் தவறான செயல்களை, பணியைப் பயன்படுத்தி செய்த குற்ற நடவடிக்கைகளை விமர்சனம் செய்யக் கூடாது என்று எந்த ஒரு சட்டத்திலும் இல்லை.
"நீதி" என்ற சொல் "தீர்ப்புகளுக்கு" தொடர்பில்லாதது, தீர்வுகள் அனைத்தும் "நீதிகளும்" அல்ல. தீர்ப்பு வழங்குபவரை "நீதிபதி", "நீதி அரசர்" என்று சொல்வது பொருத்தமில்லாத ஒன்று, அதற்கு பதிலாக 'ஜட்ஜ்' என்ற சொல்லின் நேரடி பெயர்பான, 'தீர்வு ஆணையர்' அல்லது 'தீர்வாளர்' என்று குறிப்பிடுவதே சரி.
நீதிபதிகளை விமர்சனம் செய்து முன்பு எழுதிய
இடுகை.