பின்பற்றுபவர்கள்

தமிழ் சொற்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் சொற்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 ஆகஸ்ட், 2012

Bet - ம், Risk - க்கும் !


தொலைகாட்சி தொகுப்பாளர்கள் பேசுவதைக் கேட்கும் பொழுது இரத்தக் கொதிப்பு தான் வருகிறது, நாகரீகம் என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் கூத்துகளுக்கு அளவே இல்லை, இவர்கள் பேசுவதில் 5 விழுக்காடு தமிழ் இருக்குமா என்பது ஐயமே, இதை ஒரு ஆங்கிலத் தொலைகாட்சி நிகழ்ச்சியாக கற்பனை செய்து கொண்டு தொகுப்பாளர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவராக நினைத்து, அவர் தொகுப்பு நிகழ்ச்சியில் தவறிப் போய் ஒரே ஒரு சொல்லை தமிழில் சொல்லிவிட்டால் நாக்கைக் கடித்துக் கொண்டு மன்னிப்பு கேட்பாரா இல்லையா ? கூடவே கண்டனம் தெரிவித்து வாசகக் கடிதங்களும் குவிந்துவிடும், தினமலர் உள்ளிட்ட நாளிதழ்களிலும் ஆங்கிலம் பரவலாகவே இடை இடையே எழுதப்படுகிறது தவிர 'கோர்ட்' என்று தலைப்பிட்டு நீதிமன்றம் சார்ந்த செய்திகளையும் வெளி இடுகிறான், 'கோர்ட்' என்பதற்கு மாற்றாக இவர்களால் ஏன் 'நீதித்துறை' என்று தலைப்பிட்டு அதன் கீழ் செய்திகளை போட முடியவில்லை. இதை வேண்டுமென்றே செய்யும் திமிர்த் தனம் என்று வகைப்படுத்த முடியுமா முடியாதா ? அல்லது பார்பனக் கொழுப்பு என்று நான் விமர்சனம் செய்தால் சண்டைக்கு வருபவர் யார் ?  அவ்வாறு சண்டைக்கு வந்தால் தினமலரின் திமிர் தனங்களுக்கு போதுமான காரணங்களைச் சொல்லிவிட்டு சண்டையிடலாமே. தொலைகாட்சி, செய்தி ஊடகம் இவற்றில் இருந்துதான் மக்களும் தமக்கான மொழியறிவை வளர்த்துக் கொள்கிறார்கள் என்ற புரிந்துணர்வில் தமிழ் என்ற பெயரில் அன்றாடப் புழக்கமாகிப் போன தமிங்கிலத்தை சகித்துக் கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது, யாருமே நேரங்களைக் குறிப்பிடுவதில் கூட 10 மணி , 12 மணி என்றெல்லாம் சொல்வது கிடையாது டென் ஓ க்ளாக், ட்வள் ஓ கிளாக் என்று தான் கூறுகிறார்கள், சுரணை அல்லது அது பற்றிய சிந்தனைகளே இல்லை என்றால் கேட்கும் நமக்கு எரிச்சல் ஏற்படாது. கண்ணுக்கு முன் மொழிச் சிதைவை பார்க்கும் பொழுது ஏற்படும் ஆற்றாமைகள் தொடர்ச்சியாகக் கிடைக்கும் தண்டனைகளை துய்ப்பது போன்ற கொடுமை. நான் செந்தமிழில் உரையாடுங்கள், பேசுங்கள் என்று சொல்லவரவில்லை, ஆனால் புழக்கத்தில் இருக்கும் சொற்களை புதைத்துவிடுகிறார்கள் என்று புலம்புகிறேன், நான் என்னதான் முடிந்த வரையில் தூய தமிழில் உரையாடலாம் என்று முயற்சி எடுத்தாலும்'பேருந்து வருகிறது' என்று சொன்னாலும் எதோ புரியாத ஒன்றை சொல்லக் கூடாத ஒன்றைச் சொல்லிவிட்டது போல் கொஞ்சம் நக்கலாகப் பார்த்து நகைப்பதால் யாரிடம் தமிழில் மட்டுமே பேசுவது என்றெல்லாம் நான் முடிவு செய்ய வேண்டி இருக்கிறது, ஒரு சிலருக்கு நான் என்ன சொன்னேன் என்பதை திருப்பிச் சொன்னால் தான் புரியும் என்ற நிலையும் உள்ளது.  தமிழன் தமிழன் என்று நாம் பெருமை பீற்றிக் கொண்டாலும் நாம் பேசுவது தமிழ்தானா ? இன்றைக்கு தமிழ் பேசும் எவரும் 50 விழுக்காடுகள் ஆங்கிலச் சொற்கள் கலவை இன்றி பேசுவதே கிடையாது. பிறகு நாம் பேசுவது எப்படி தமிழாகும் ?

*****

சிங்கப்பூர் தமிழ் மாணவர்கள் எல்லது தமிழர்கள் தொலைகாட்சி நிகழ்ச்சியின் செய்தியில் / அல்லது வேறு நிகழ்ச்சிகளின் இடையே பேசும் பொழுது பேசுவதைக் கேட்கும் பொழுது தமிழை தாய்மொழியாகக் கொண்ட இவர்கள் ஏன் தமிழைப் பேச இப்படித் திணறுகிறார்கள் ? என்று முதல் முறைப் பார்ப்பவர்கள் நினைக்கத் தோன்றும்,  திணறுவதற்கு முதல்காரணம் அவர்கள் மொழி தாய் மொழி தமிழ் என்றாலும் வீட்டில் பேசுவது முழுக்க முழுக்க சிங்கை ஆங்கிலம் (சிங்லிஸ்), எனவே ஒரு நிகழ்ச்சியின் இடையே தமிழில் பேச வேண்டும் என்கிற நிலை வரும் பொழுது ஆங்கிலத்தில் பேசிப் பழகிய அவர்கள் தமிழுக்கு மாற வேண்டிய சூழலும் ஏற்பட சற்று திணறலாகத்தான் இருக்கும், தவிர திணறலுக்கு அது மட்டுமே காரணம் இல்லை, பேசப் போவது தமிழ் என்பதால் அதில் அவர்களின் சிந்தனையில் கலந்த ஆங்கிலச் சொற்கள் கலந்து பேசிவிடக் கூடாது என்பதால் பொருத்தமான தமிழ் சொற்களை ஆங்கில சிந்தனை வழியாக சிந்தித்து  பிறகு பேசுவார்கள்,  பொருத்தான தமிழ் சொற்கள் குறித்த அவர்கள் சிந்திக்கும் நேரம் பேசுவதின் தொடர்ச்சியில் நேரத் தொய்வை ஏற்படுத்த கேட்கும் நமக்கு அவர்கள் தமிழில் பேச திணறுகிறார்கள் என்பது போல் தோன்றும், உண்மை அதுமட்டுமல்ல, தமிழில் பேசும் போது தமிழில் மட்டும் தான் பேச வேண்டும் என்கிற நிலைபாடு தான் காரணம், நம்மைப் போன்று ஆங்கிலச் சொற்களைக் கலந்து பண்ணித் தமிழில் பேசலாம் என்று அவர்கள் நினைத்திருந்தால் அவர்களாலும் திணறல் இன்றிப் பேசிவிட முடியும். எந்த ஒரு மொழியையும் பேசும் பொழுது அந்த மொழியில் விளக்க பொருத்தமான சொற்கள் இல்லாத நிலையில் சொற்களை கடன் வாங்கிப் பயன்படுத்துவது தவறே இல்லை. 

'பார்க் பண்ணிட்டிங்களா ?',  லஞ்சுக்கு கெளம்புறிங்களா ? டிக்கெட் எடுத்துட்டிங்களா ? இதை கொஞ்சம் கட் பண்ணித் தாங்க. ஒரு வாக் போய்ட்டு வந்துடுறேன், அவரு போன் பண்ணி சொன்னார், நாளைக்கு மார்னிங்க் உங்களுக்கு மிஸ்டு கால் கொடுக்கிறேன்,  அந்த மூவி செம ஃபோர்...  உஙக வைப் ஒர்க் பண்ணுறாங்களா ? உங்க டாட்டர் என்ன ஸ்டாண்டார்ட் படிக்கிறா ? - இது போல் தான் பேசுகிறோம், இதை தமிழில் பேசுவதாகவும் கூறிக் கொள்கிறோம்.

*****

முந்தைய நாள் பேருந்தினுள் பக்கத்து இறுக்கையில் முதலாம் வகுப்பு படிக்கும் தமிழ் குழந்தை அவளுடைய அம்மாவிடம் "அம்மா பெட் (Bet) - டுக்கு தமிழில் என்னம்மா ?" என்று கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தாள், நான் பெட் - டுக்கு என்ன தமிழ் சொல் என்று சிந்திக்கத் துவங்கியதும் அந்த குழந்தையின் அம்மா என்ன சொல்லி கொடுத்திருப்பார் என்று கவனிக்கவும் இல்லை, ஆனால் குழந்தையின் அம்மா சரியான சொல்லை எடுத்துச் சொல்லவில்லை என்று தான் தெரிந்தது, நானும் சிந்தித்து சிந்துத்துப் பார்த்து 'நாம பெட் கட்றது, பெட் வச்சிக்குவோம் வரியா ? ன்னு தானே போட்டிப் போடுவோம் ? வேற என்ன சொல் தமிழில் இருக்கும் ? என்றெல்லாம் மிகுந்த நேரம் சிந்தித்து 'பந்தயம்' தான் சரியானச் சொல் என்று முடிவு செய்தேன், அவர்களிடம் சொல்லவும் தயக்கம், நாம பேசிவருவதை இவர் ஏன் காது கொடுத்துக் கேட்டார் என்று நினைப்பார்களோ என்று பேசாமல் இருந்துவிட்டேன்,  சிறுவயதில் 'வாடா பந்தயம் வச்சிக்கலாமா ?' வெகு இயல்பாக புழங்கிய ஒருச் சொல் கால ஓட்டத்தில் மறக்கடிக்கப்பட்டு பெட் அதில் படுக்கைப் போட்டுக் கொண்டதை நினைத்துப் பார்க்க ஊடகங்கள் செய்துவரும் தமிழ் துரோகமே காரணம் என்று நினைக்கத் தோன்றியது. செய்தி ஊடகங்களும், அரசியல்வாதிகளும், திரைப்படத் துறையினரும் தமிழை வைத்து தான் பிழைப்பு நடத்துகிறார்கள், அவர்கள் வயிற்றுப் பிழைப்பான தமிழை அவர்களே அழிக்கிறார்கள் என்பது எவ்வளவு கொடுமையான நடைமுறையாக இருக்கிறது. சில அறிவிலிகள் மொழிகள் என்பவை தொடர்புக்கானவை என்ற புல்லரிக்கும் விளக்கங்களையெல்லாம் கொடுக்கும் பொழுது உணவு என்பது சாப்பிட மட்டும் தான் அதில் வேறு சிந்தனைகள் தேவை இல்லை என்று கண்டதையும் ஏன் நீ உண்பது இல்லை ? வெந்ததையும் வேகாததையும் கூட திண்ணலாமே என்றெல்லாம் கேட்கத் தோன்றும், 

*****

முன்பு ஒரு நாள் நண்பர் ஒருவர் தமிழ் குறித்த சற்று சூடான உரையாடலில் நீங்க தமிழ் தமிழ் என்று பேசுகிறீர்கள், நான் கேட்பதற்கு பதில் சொல்லுங்க என்று சொல்லிவிட்டு 'ரிஸ்க் எடுக்காதீங்க ? ' என்பதற்கு தமிழில் எப்படிச் சொல்லுவிங்க என்று மடக்கினார், நான் 'முயற்சி செய்யாதிங்க ?' என்று சொன்னேன், அப்ப 'ட்ரை பண்ணாதிங்க' என்பதற்கு என்னச் சொல்லுவிங்க என்று மறு கேள்வி கேட்டார். அந்த நேரத்தில் மாற்றுச் சொல் தேடி சிந்தனைகள் அலைந்தது தவிர்த்து உருப்படியாக ஒன்றும் அவருக்கு மாற்றாகச் சொல்லத் தோன்றவில்லை, அவரும் நக்கலாக சிரித்துக் கொண்டார், பிறகு யோசித்துப் பார்க்க, ரிஸ்க் என்பது செய்யலாமா வேண்டாமா என்கிற கேள்வியை கொண்ட ஒரு சொல், இதற்கு சரியான தமிழ் சொல் சொல்ல வேண்டுமென்றால் ரிஸ்க் எடுக்காதிங்க என்பதற்கு மாறாக  'துணியாதீர்கள்' என்று தான்  சொல்ல வேண்டும்,  துணிவு என்பது வெறும் துணிச்சல் சார்நத சொல் மட்டுமே இல்லை, அதில் செய்யலாமா வேண்டாமா என்கிற எண்ணமும் சேர்ந்த சொல்லாகவும் பயன்பாடுடையது. நம்மாளுங்க இன்னும் பயன் என்ற எளியச் சொல் இருக்க 'உபயோகம்' என்றெல்லாம் எழுதுகிறார்கள் தெரியுமா ?

செந்தமிழில் பேச வேண்டும் என்பது தேவை இல்லை, ஆனால் பேசுவது ஆங்கிலம் உள்ளிட்ட வேற்றுமொழிகள் கலந்த கொடுந்தமிழாக இல்லாமல் தூய தமிழாக இருந்தால் போதும், வலைப்பதிவில் எழுதும் பொழுது முடிந்த வரை தமிழில் எழுதுகிறோம், அதையே நாம் பேச்சிலும் செயல்படுத்தினால் நம்மைப் பார்த்து தமிழில் கலப்பின்றி பேசுவது தாழ்வானது இல்லை என்று நம்பத் துவங்குவார்கள். சிங்கையில் முகவை இராம் என்கிற நண்பர் ஒருவர் யாரு என்ன நினைப்பாங்க என்றெல்லாம் கவலை படமாட்டார், நல்ல தெளிவான தமிழில் பேசுவார். அவரைப் பார்த்து நகைத்தவர்கள் இல்லை, பாராட்டியவர்களே மிகுதி.

11 ஜனவரி, 2012

நாகைக்கும் காரைக்கும் காதம் !

இன்றைக்கு நாம் மெட்ரிக் அளவுகளுக்கு மாறிவிட்டோம், ஆனாலும் நீளம் அகலம் எடை குறித்த அளவி (அளவு) சொற்கள் தமிழில் ஏராளமாக இருந்தன, வெள்ளைக்காரர்களின் வருகைக்குப் பிறகு இவை முற்றிலும் வழக்கு இழந்து போயின, 35 ஆண்டுகளுக்கு முன்பு கூட 'வீசம்' என்ற நிறுத்தல் அளவீடுகளில் எடைகள் நிறுத்து கொடுக்கப்பட்டு வந்தன. குறிப்பாக ஆங்கில ஆட்சியின் கீழ் வந்த காமென் வெல்த் நாடுகளில் அளவைகள் இங்கிலாந்தைப் பின்பற்றி மாற்றிக் கொள்ளப்பட்டது, ஆனால் இங்கிலாந்தில் சாலைகளின் அளவீடுகள் கிமீ சொல்லப்படுவதில்லை, மைல் கணக்கில் தான் விரைவு தொலைவு உள்ளிட்டவற்றை வைத்திருக்கிறார்கள்.

*****

நாகைக்கும் காரைக்கும் காதம்
காரைக்கும் கடையூருக்கும் காதம்
கடையூருக்கும் யாழிக்கும் காதம்
யாழிக்கும் தில்லைக்கும் காதம்.

இது எந்த வகைப்பாடல், யார் எழுதியது என்று எனக்கு தெரியாது, சிறு வயதில் அம்மா வாய்பாடு போல் சொல்லக் கேள்விப்ப்ட்டிருக்கிறேன், இதன் பொருள்

நாகைக்கும் காரைக்காலுக்கும் இடைப்பட்ட தொலைவு ஒரு காதம் அது போன்று
காரைக்காலுக்கு திருக்கடையூருக்கும் இடைபட்ட தொலைவு ஒரு காதம்,
திருக்கடையூருக்கும் சீர்காழிக்கும் இடைப்பட்ட தொலைவு ஒரு காதம் மற்றும்
சீர்காழிக்கும் (தில்லை) சிதம்பரத்திற்கும் இடைப்பட்ட தொலைவு ஒரு காதம் என்பதாகும்

அதாவது நாகையிலிருந்து சிதம்பரம் நான்கு காதம் தொலைவில் உள்ளது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். காதம் என்ற தொலைவு எவ்வளவு ?


வெட்டவெளியில் இருகை சேர்த்து ஒருமுறை பலத்த ஓசையுடன் கைதட்டினால் அல்லது இரவில் தீப்பந்தம் அல்லது விளக்கைக் காட்டி அது எவ்வளவு தொலைவில் உள்ளவரை ( தீப்பந்ததால் ஆட்டி சைகை செய்து) கூப்பிட வைக்க முடியும் என்பதே கூப்பீடு அளவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன், தமிழில் பெரும்பாலும் சொல்லுக்கு நேரடியான பொருள் உண்டு என்பதால் அவ்விதம் நினைக்கிறேன். அதாவது கண்ணுக்கும் காதுக்கும் எட்டிய தொலைவு 'கூப்பிடு' என்ற நீளம் குறித்த நீட்டல் அளவையாக இருக்கிறது. அது போன்ற நான்கு அளவுகளான கூப்பிடும் தொலைவு ஒரு காத தொலைவு எனப்படுகிறது. இந்த ஊர்களின் இன்றைய தொலைவு ஒவ்வொன்றிற்கும் இடைப்பட்டு சுமார் 20 கி மீட்டர்கள், தமிழார்வளர்கள் காதம் என்பதற்கு வடபுல தென்புல வாய்ப்பாடு என்ற அளவில் இரு அளவீடுகளைத் தருகிறார்கள், ஒரு காதம் எனப்படுவது 6.7 கிமீ தென்புல அளவீடாகவும், அதில் அரை அளவான 3.35 கிமி அளவு ஒரு காதம் என வடபுல அளவீடாகவும் குறிப்பிட்டுள்ளனர். இவை இரண்டும் கூட மேல் குறிப்பிட்ட வாய்பாட்டு பாடலில் குறிப்பிடும் தொலைவான ஒரு காதம் = 20 கிமீ அளவுடன் முரண்படுகிறது. திரு இராமகி ஐயா அவர்களின் ஆய்வு கூற்றுபடி காதம் = 3.35 என்று வைத்துக் கொண்டால், மேற்கண்ட பாடலில் ஆறு என்ற எண் அளவு விடுபட்டு இருக்க வேண்டும்,



அதாவது

நாகைக்கும் காரைக்கும் ஆறு காதம்
காரைக்கும் கடையூருக்கும் ஆறு காதம்
கடையூருக்கும் யாழிக்கும் ஆறு காதம்
யாழிக்கும் தில்லைக்கும் ஆறு காதம்.

என்பதில் இருந்த 'ஆறு' காலப்போக்கில் வாய்பாட்டுப் பாடலில் இருந்து எதுகை மோனை மயக்கத்தில் விடுபட்டி இருக்க வேண்டும், அதாவது காதம் என்ற அளவுச் சொல் பயன்பாடு குறைந்த பிறகு முழுப்பாடலின் மையப் பொருளான தொலைவு வாய்ப்பாட்டின் பலன் தேவையற்றதாகி வெறும் தொலைவு சார்ந்த சந்தப் பாடலாக திரிந்திருகிறது.

எண்கள், பின்னங்கள் - வகுத்தல், நீட்டல், முகத்தல், நிறுத்தல் அளவீடுகள் ஏராளமானவை தமிழில் இருந்தது, தற்போது அவற்றின் பயன்பாடுகள் இல்லை. இதைப் பயன்படுத்திக் கொள்ளாதது நமக்கு மட்டுமல்ல உலகத்தினருக்கே இழப்பு தான். ஒரு மொழியில் ஒரு கலைச் சொல் அழியும் போது அவற்றின் பயன்பாடுகள் அழியும், அவை கொண்டுள்ள அறிவின் பொருளும் அழியும், ஒரு வேளை இந்தச் அளவைகளைப் பயன்படுத்தினால் அளவீடுகளை பயன்படுத்தித் தீர்வு காணும் இன்றைய சிக்கலான கணக்குகள் கூட எளிமையான வடிவில் தீர்க்க முடியும். எடுத்துக்காட்டிற்கு போதையனார் பாடல் ஒன்று.

ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே.



இவற்றின் பொருள் செங்கோண முக்கோன நீளத்தில் (அடிப்பாகம்) 8 பங்கில் ஒன்றைக் கழித்துவிட்டு உயரத்தில் பாதியை எடுத்து கூட்டினால் வரும் நீள அளவே கர்ணம் என்பதாகும். இவ்வளவு எளிமையாக கர்ண நீளம் காணும் வாய்ப்பட்டை விட்டுவிட்டு வர்கமூலம், பெருக்கல் என பிதார்கரஸ் தியரம் சொல்லிவருவதை நாம் பயன்படுத்துகிறோம் இன்று.

9 ஜனவரி, 2012

ஒருவார்த்தை சில எச்சம் !

விஜய் தொலைகாட்சியில் ஒருவார்த்தை ஒரு லட்சம் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது, நிகழ்ச்சிப்பற்றி தமிழ் பற்றிய பொது அறிவை வளர்ப்பது தமிழ் சொற்களை அறிந்து கொள்ள வைப்பது என்று தான் முன்மொழியப்படுகின்றன, அதில் கலந்து கொள்பவர்களுக்கு தமிழ் பற்றிய தெளிந்த அறிவு இருக்க வேண்டுமோ என்ற எண்ணத்தை காண்போருக்கு ஏற்படுத்துகிறார்கள், ஆனால் என்னைப் பொருத்த அளவில் அது சொல் குறித்த ஒரு விளையாட்டு நிகழ்ச்சி அவற்றில் சிற்சில தமிழ் சொற்களும் உள்ளன.

எனக்கு தெரிந்து தமிழ் அடையாளங்களில் ஒன்றான வேட்டியுடன் கலந்து கொண்டவர் வேணு அரவிந்த் மற்றும்ஆஜய் ரத்தினம் மட்டுமே, அதன் பிறகு கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோர் பொது உடையில் தான் வந்தனர். உடைபற்றி பெரிதாக விவாதம் செய்ய ஒன்றும் இல்லை என்றாலும், தமிழ் சார்ந்த நிகழ்ச்சி என்று முன்மொழியப்படுவதில் பண்பாட்டு உடைகளுக்கு முதன்மைத்துவம் அளிப்பது நன்று. பெரும்பாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரும் பண்டிகைகால ஒளிபரப்புகளில் அவற்றில் வந்து போகும் பெண்கள் மட்டுமே பட்டுப் புடவை அணிந்துவருகிறார்கள், நிகழ்ச்சி நடத்தும் ஆண்களில் இந்திய வடிவமைப்பு உடைகளை அணிந்துவருவது கிட்டதட்ட இல்லை என்ற அளவில் தான்.

ஒருவார்த்தை ஒரு லட்சம் என்பதில் இருக்கும் 'வார்த்தை' என்பது தமிழ் சொல்லே அல்ல, உண்மையில் தமிழ் பற்றுடன் தமிழ்சார்ந்த தலைப்பு வைத்திருக்க வேண்டுமெனில் ஒரு சொல் ஒரு லட்சம் என்றே இருக்க வேண்டும். இந்த 'வார்த்தை' என்ற வடமொழிச் சொல் திராவிட மொழிகள் பிறவற்றில் 'செய்தி' என்ற பொருளிலும் தமிழில் சொல் என்ற பொருளிலும் திணிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. சரி அது தான் போகிறது என்று பார்த்தாலும் அவர்கள் குறிப்புக் கொடுக்கும் விளையாட்டுச் சொற்கள் பலவற்றிலும் பரவலான வடசொற்களே இடம் பெற்றுள்ளன. இவர்கள் இப்படி தொடர்ந்து வடசொற்களை மறுபுழகத்தில் விடும் போது அவற்றிகு மாற்றாக புழங்கிவரும் தமிழ் சொற்கள் மறையும் நிலையைத்தான் ஏற்படுத்துகின்றன. எடுத்துகாட்டிற்கு 'நமஸ்காரம்' என்ற சொல்லைப் பற்றி குறிப்புக் கொடுக்கச் சொல்கிறார்கள், விளையாடுபவர் அதை குறிப்புகளின் வழியாக கண்டுபிடித்துவிடுகிறார் என்றே வைத்துக் கொள்வோம். நமஸ்காரம் என்பது தமிழ் சொல்லா ? அது நமஸ்கார் என்றோ வடமொழிச் சொல் தமிழில் புழங்கிவரும் வடிவம் தான், ஆனால் நாம் நமஸ்காரத்தை என்று விட்டு 'வணக்கம்' சொல்வதற்கு மாற்றிக் கொண்டுள்ளோம், மீண்டும் திரைகளில் இது போன்ற சொற்களை தமிழ் சொல் என்று காட்டுவதால் பயன்பாட்டில் இருக்கும் தமிழ் சொல் பற்றி மறந்துவிடும் கூறுகள் மிகுதியாகிறது.

அது தவிர நிகழ்ச்சியில் சொல்லை கண்டுபிடிக்கும் முறையை தற்போது விளையாட வரும் அனைவருமே ஒன்றுபோலவே பின்பற்றுகிறார்கள், கிட்டதட்ட அவை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஒன்றும் கடினமான ஒன்று அல்ல என்ற முதல் படிநிலைகளில் அச்சொற்கள் மிக எளிதாக கண்டுபிடிக்கப்படுகிறது.

உதாரணத்திற்கு 'எச்சம்' என்ற சொல்லைப் பற்றி விளையாடுபவர்களில் ஒருவர் குறிப்புக் கொடுக்க மிகவும் கடினப்படத் தேவை இல்லை, அவர்கள் ஏற்கனவே வரிசைப்படி அறிந்துள்ள சொற்றொடர்களின் ஒவ்வொரு சொல்லையும் வரிசையாகச் சொன்னாலே போதும், எச்சம் - இதற்கு எவ்வாறு குறிப்பு கொடுப்பது ?

விளையாடுபவர் 1 : தலைவர்
விளையாடுபவர் 2 : தொண்டர்
விளையாடுபவர் 1 : சிலையில்
விளையாடுபவர் 2 : மாலை
விளையாடுபவர் 1 : காக்கை
விளையாடுபவர் 2 : 'எச்சம்'

அதாவது எச்சம் என்று கண்டுபிடிக்க 'தலைவர் சிலையில் காக்கை' என்று சொல்லி முடிக்கும் போது நமக்கு அதன்விடை 'எச்சம்' என்று தெரிந்துவிடும். இப்படித்தான் மிக எளிதாக கண்டுபிடிக்கும் படி விதிமுறைகள் உள்ளன

விளையாடுபவர் 1 : ஜெயலலிதா
விளையாடுபவர் 2 : கருணாநிதி
விளையாடுபவர் 1 : மீண்டும்
விளையாடுபவர் 2 : மறுபடியும்
விளையாடுபவர் 1 :ஆனார்
விளையாடுபவர் 2 : 'முதல்வர்'

அதாவது முதலமைச்சர் என்ற சொல்லுக்கு 'ஜெயலலிதா மீண்டும் ஆனார்' என்ற குறிப்பின் முடிவில் விடைத்தெரிந்துவிடும். 30 ஆயிரம் ரூபாய்க்கான போட்டிச் சொற்களில் பெரும்பாலும் வழக்கில் இல்லாத வடசொற்களே எடுத்துகாட்டிற்கு 'எதோச்சிகாரம், விவாஹம், முகூர்த்தம், வஸ்து, வாஸ்தவம், வஸ்திரம்' போன்ற வடசொற்களே தமிழ்சொற்கள் என்பதாக போட்டியில் வைக்கப்படுகின்றன.

ஒருவார்த்தை ஒரு லட்சம் - நிகழ்ச்சி என்ற அளவில் பார்க்க சுவையார்வமாக இருக்கிறது, ஆனால் அதை தமிழ் நிகழ்ச்சி, தமிழைத் தாங்கும் நிகழ்ச்சி என்றெல்லாம் முன்மொழியப்படாமல் 'பொழுது போக்கு விளையாட்டு நிகழ்ச்சி' என்று சொன்னால் தகும். இதில் சிலபடிகள் வெற்றிபெற பெரிய அளவில் தமிழ் சொற்கள் குறித்த அறிவு தேவை இல்லை, 'தலைவர் சிலையில் காக்கை' போன்று சொற்கோர்வைகளை அமைக்கத் தெரிந்திருந்தாலே போதும்.

6 ஏப்ரல், 2010

அபித குஜலாம்பாள் !

பொதுவாக பெயர்களை கொச்சைப் படுத்துவது எனக்கு பிடிக்காது, எந்த ஒரு நபரின் பெயரும், குறிப்பிட்ட சிலர்கள் தவிர்த்து அவரவர் தேர்ந்தெடுத்துக் கொள்வது கிடையாது. பெற்றோர்கள் வைக்கும் பெயரே அவரவர் பெயராக நிலைத்துவிடுகிறது என்பது உண்மை.

******

இப்போதெல்லாம் ஷ் ஸ் தஸ்ஸு புஸ்ஸுன்னு முடியும் வடமொழிப் பெயர்களை சூட்டுவதற்கு பலரும் விரும்புகிறார்கள் என்னும் தகவல்கள் பலர் சொல்லக் கேள்விப்படுகிறோம், இதற்கெல்லாம் எண் கனிதம் ஜோதிடம் என்னும் ஒரு இத்துப் போன ஜோதிடம் காரணம் என்றாலும் அடிப்படை மற்றும் உளவியல், மொழியியல் காரணங்கள் வேறு. கூப்பிட எது எளிமையாகவும் புதுமையாகவும் இருப்பதையே மக்கள் விரும்புகின்றனர். எந்த வகையில் பெயர் மாற்றங்களுக்கு உடனடியாக மாறிக் கொள்பவர்கள் கிராமத்தினர் தான். எம்சிஆர், சிவாசி, கார்திக், பாக்கியராசு என்ற பெயர்கள் அது போல் பெண்கள் பெயர்களில் நடிகைகளின் பெயர்களுக்கு உடனடியாக மாறிவிடுவார்கள், நடிக,நடிகர்களின் பெயர்கள் பொதுவாக நான்கு எழுத்துக்குள் இருப்பதும் அறியப்பட்டதாக இருப்பதும் அதை கிராமத்தினர் விரும்புவதற்குக் காரணம்.

இது ஒருபுறம் மற்றபடி படித்த நடுத்தர வர்கத்தினர்கள் சூட்டும் பெயர்களில் வடமொழிப் பெயர்களே மிகுதியாக இருக்கின்றன. அதுவும் சுறுக்கப்பட்ட ரமேஷ், சுரேஷ், ஸ்ரீனிவாஸ், சுப்ரமணி போன்ற பெயர்கள் மிகுதியானவை, தமிழ்நாட்டு தொலைபேசி பட்டியலில் மிகுதியாக இடம் பெற்றிருக்கும் பெயர்களில் எனக்கு தெரிந்து சுப்பரமணி(யன்) ஸ்ரீனிவாஸ்/சன் குறைந்தது 5 பக்கங்களுக்கான பட்டியலாக இருக்கும்.
நடுத்தரவர்கத்தின் பெயர் சூட்டும் உளவியல் பெயர் சுறுக்கமாகவும் எளிதாகவும், புதுமையாக இருக்க வேண்டும் என்பது மட்டும் தான். அதிலும் ஒரு சிலர் எண்கனிதம் பார்த்து கொஞ்சம் திருத்தி அமைத்துக் கொள்வர். என் நண்பர் ஒருவர் அவரது முதல் மகனுக்கு எண் கனிதம் பார்த்து பெயர் வைத்தார். சிதார்த்....என்னடா இது பதார்த்தம் என்பது போல் சிதார்த் என்று கேட்டேன். குறிப்பிட்ட எழுத்து எண்ணிக்கைக்குள் வந்தால் அவன் எதிர்காலம் நல்லா இருக்கும் என்று ஜோதிடர் பரிந்துரைந்ததைத்தான் வைத்தேன் என்றான் அப்படியே பதிவும் செய்யப்பட்டு, கூப்பிடப்பட்டும் வருகிறது.

இப்ப அபித குஜலாம்பாளுக்கு வருவோம், ஒரு 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெண் பெயர்களில் எதோ ஒரு அம்பாள் என்று முடிவதாக பார்பன பெண்களின் பெயர்களும் நடுத்தரவர்கத்தினர் பெயரும் இருக்கும், என் அத்தை ஒருவர் தன் உண்மையான (மு/மினியம்மா) பெயர் கிராமத்து பெயர் போல் இருப்பதாக அவர்கள் தஞ்சாவூருக்கு இடம் பெயர்ந்த பிறகு மீனாம்பாள் என்று மாற்றிக் கொண்டார். மீனாட்சி என்னும் சித்தியின் பெயர் மீனா என்று சுறுங்கியது, அதெல்லாம் அவர்கள் விரும்பியே மாற்றிக் கொண்டவை. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பெயர் (கோவிந்தராஜுவுக்கு - பெருமாளுக்கு தங்கை முறை வரும் பெயர்) ஒத்துவராது என்று அம்மா பெயரை லஷ்மியுடன் தொடர்புடைய ஒரு பெயராக மாற்றிக் கொண்டாலும் அந்த பெயரில் அப்பா தவிர்த்து யாரும் கூப்பிடவில்லை. அம்மாவுக்கு அவருடைய அப்பா வைத்த பெயரே இன்றுவரை நிலைத்திருக்கிறது.

அபித குஜலாம்பாள், குஞ்சிதபாதம், ஆதிமூலம் ஆகியவை வடமொழிப் பெயர்களே என்றாலும் அவை பழைய பெயர்கள் என்று இன்றைக்கு பார்பனர்கள் உட்பட யாரும் விரும்பி வைப்பது இல்லை. அதே போன்று நல்ல தமிழ் பெயர்கள் சுறுக்கமாக இருந்தால் நிறைய பேர் தற்பொழுது தமிழ் பெயர் சூட்டுவதற்கும் தயங்குவதில்லை, அன்பு, அறிவு, பரிதி, வெற்றி, தேன்மொழி, கயல்விழி, பொன்னி, இனியா, அரசி, செல்வி போன்ற பெயர்களையும் சூட்டுவதற்கு பெற்றோர்கள் விரும்புகிறார்கள்.

பெயருக்கும் தமிழுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு, தாத்தா பாட்டி பெயர்களையே பேரக் குழந்தைகளுக்கு சூட்டுவது தான் நம் வழக்கம், இடையில் சாதிப் பெயர்களை பின்னூட்டுகளாக சேர்த்துக் கொள்ளும் வழக்கம் வந்ததால் மூதாதையர்களின் பெயர் சூட்டிக் கொள்ளும் வழக்கம் குறைந்து போய் இருந்தது. தன் பெயரை உடையவன் பெயரன், பெயர்த்தி என்பதுவே பேரன் பேத்தி என்ற உறவுப் பெயராக இருப்பது தமிழகத்தின் தொன்று தொட்ட வழக்கம். பெற்றோர்களை நினைவு கூறும் கடமையாக பிள்ளைகளுக்கு அவர்கள் பெயரைச் சூட்டிப் பார்ப்பது தமிழர்களின் பண்பாடுகளில் ஒன்றாக இருந்தது.

மீண்டும் பெயரைக் கொச்சைப் படுத்துவதற்கு வருவோம், ஒருவர் என்ன பெயர் வைத்திருந்தாலும் பெயரை வைத்து பழிப்பது இயலாமையின் வெளிப்பாடே, அதைத் தவிர்க்கலாம். அது மட்டுமே இல்லை ஒரு பெயரை வைத்து குறிப்பாக பெண் பெயரை வைத்து ஒரு சொல்லாடல், கருத்தாக்கம் உருவாகிவிட்டால் அந்த பெயரை உடைய பெண்களுக்கெல்லாம் சங்கடமாகவே அமையும். சரோஜாதேவி ன்னு பெயர் உள்ள பெண்கள் படும் சங்கடம் இருக்கிறதே... அந்த பெயருக்கான பொருள் அவர்கள் புரிந்துகொண்டிருந்தால் மிகவும் நொந்து போவார்கள்.

முடிவாக சொல்ல வந்தது..... பெயர் சூட்டுவதற்கு வடமொழிப் பெயர்களைத்தான் சூட்டுவேன் என்று அடம்பிடிப்பவர்கள் குறைவு, ஆனால் ஜோதிடன் சொல்லும் எழுத்தில் தான் தொடங்குவேன் என்று அடம் பிடிப்பவர்கள் மிகுதி, அந்த எழுத்துக்களில் எளிமையான தமிழ் பெயர்களை பரிந்துரைத்தால் பலர் வைப்பதற்கே விரும்புகிறார்கள்.

15 பிப்ரவரி, 2009

வழக்கொழிந்த சொற்கள் !

வழக்கொழிந்த சொற்கள் பற்றி எழுதும் படி வெளிச்சப் பதிவரின் வேண்டிகோளை ஏற்று இந்த இடுகை. தமிழ் பேச்சு வழக்கில் பிறமொழி கலப்பென்பது இயல்பு. தொழில் தொடர்பில் (இதைதான் 'வியாபார நிமித்தம்' என்பார்கள்) பிற இன, மொழி மக்களுடன் உரையாடுபவர்களே பெரும்பாலும் மொழிக் கலப்பை (அறியாமல்) செய்பவர்களாக இருந்து வந்திருக்கின்றனர். இன்றைய தேதியில் தொலைக் காட்சி பெட்டிகளே அதைச் செய்கின்றன.

100க்கும் மேற்பட்ட ஒளிவழிகளில் பல்வேறு மொழியில் தொலைகாட்சி சேவைகள் ஒவ்வொரு வீட்டிக்குள்ளும் இருப்பதால், மொழிகலப்புகளுக்கான மூலம் வீட்டிக்குள்ளேயேயும் கூட தொடங்குகிறது எனலாம். ஒளிவழி என்றால் என்ன ? சிங்கை தமிழ் தொலைகாட்சி மற்றும் வானொலியில் Channel க்கு பயன்படுத்தும் சொல். ஒலிவழி ? ஒளி வழியா ? எதுசரி ? நிறப்பிரிகையின் (Spectrum of Light -உடனே ஊழலை நினைத்துவிடாதீர்கள்) குறியீட்டில் உள்ள அலைவரிசையே ஒளி/ஒலி பரப்புக்கு பயன்படுத்துவதால் ஒளிவழி என்று சொல்வது பொருத்தமானது.

மூன்றாவதாக அரைகுறை மொழிப்பேச்சாளர்களால் கலப்பு மிகுதியாக ஏற்படும், எது அரைகுறை பேச்சு ? தாய்மொழியல்லாத எந்த ஒரு மொழியையும் கற்றுக் கொண்டு பேசத் தொடங்கும் முன் அம்மொழியில் உள்ள அறிந்திராத சொற்களுக்கு மாற்றாக தாய்மொழியில் உள்ள சொற்களைப் பயன்படுத்திப் பேசுவார்கள், அது தவறு அல்ல. ஆனால் அவர்களிடம் உரையாடுபவர்கள் வழியாக அந்த கலப்பு மொழிகளின் மீது ஏற்றப்படும். சவுக்கார் பேட்டை சேட்டுகளின் தமிழ் இத்தகையவையே, அவர்களிடம் பணியில் இருப்பவர்களிடம் அவர்கள் பேச, அவர்கள் கலந்து பேசும் இந்தி மொழியில் அடிக்கடிக்கடி புழங்கும் சொற்கள் தமிழுக்குள் நுழைந்துவிடும். ஜல்தி (விரைவு), அதிகம் (மிகுதி), கம்மி (குறை-குறைவு) போன்ற பண்பு பெயர் சொற்கள் இப்படியாக நுழைந்தவையே.

சும்மா கெடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி. இப்பழமொழிக்கும் மொழிக்கலப்பிற்கும் உள்ள தொடர்பைப் பார்ப்போம். பயன்பாடில்லா, வெறும், அசைவற்று என்கிற ஒரு நிலையில் இருந்த ஒன்றை தொடர்பு படுத்தி சொல்ல பயன்பட்டு வருவது 'சும்மா' இந்தி சொல். சும்மா கிடத்தல் என்பது கவனிப்பாரின்றி கிடத்தல், சும்மா என்பது பண்பு பெயர் என்ற நிலையில், கவனிப்பாரின்றிய, அசைவற்ற என்கிற பண்பைப் குறிக்க பயன்படுத்தப்படும் சொல்லாக சும்மா என்பதைப் பயன்படுத்துகிறார்கள். சும்மா கிடைக்கிறதே என்று நாமும் இதுபோல் பலசொற்களை பயன்படுத்தி மொழியை கெடுக்கிறோம். சும்மா கிடைக்கிற பிறமொழிச் சொற்கள் யாவும் மற்றொருமொழிக்கு சுமையே. குரங்கு கை பூமாலை என்பதின் மாற்றுவடிவம் தான் சும்மா கெடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி என்கிற பழமொழியும். நல்ல நிலையில் இருந்த ஒன்றை வீனாக்குவது.

மொழிக்கலப்பு என்பது இயல்பு தான். ஆனால் அதை அப்படியே விட்டுவிட்டால் மொழி உருக்குலைந்துவிடும். அங்கிலம் எல்லா மொழிகளையும் ஏற்கவில்லையா ? ஆங்கிலம் எல்லா மொழிச் சொற்களையும் ஏற்கும், அதிலிருக்கும் 2 லடசத்திற்கும் மிகுதியான சொற்கள் அனைத்தையுமே சொல்விளக்க அகரமுதலி (அகராதி) இல்லாமல் ஒருவருமே அறியமுடியாது. அதுமட்டுமின்றி ஆங்கிலம் பயற்சி இன்றி கற்றுக் கொள்ளும் அளவுக்கு எளிதான மொழியல்ல, இருப்பினும் வட்டார வழக்கு போல் ஆங்கிலம் சில நாடுகளில் பேசப்பட்டு வருகிறது சிங்கை, மலேசிய ஆங்கிலம் இத்தகையதுதான். எந்த ஒரு இலக்கணத்திலும் அடங்காமல் ஒரு கலவை மொழி போலத்தான் ஆங்கிலம் இப்பகுதியில் பேசப்படுகிறது. ஆங்கிலத்தில் அமைந்திருக்கும் நீதிமன்ற தீர்பாணை மிக எளிதாக ஆங்கிலம் அறிந்த அணைவருக்குமே புரிந்துவிடுமா ? அது தவறாக புரிந்து கொள்ளப் பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே தனியாக விளக்கமெல்லாம் எழுதப்படும். மொழிக்கலப்பை ஏற்பதால் மொழி வளரும் என்பது மொழி வரலாறுகள் அறியாதவர்களின் பிதற்றல்கள்.

கிரேக்கம், லத்தீன், இப்ரோ போன்ற ஐரோப்பிய மொழிகள் ஒன்றுக் கொண்டு மிகுதியாக கலந்ததால் உருவான புதிய மொழியே ஆங்கிலம் ஏறக்குறைய அதே காலத்தில் தான் உருதும் சமஸ்கிரதமும் கலந்து 'இந்தி' உருவானது, ஆங்கிலேயர்களைப் போல் 'இந்தி'யர்களும் வெளிநாடுகளைக் கைப்பற்றி இருந்தால் அங்கிலத்திற்கு பதில் இந்தி பரவி இருக்கும். ஆங்கிலம் பரவியதற்கு அதன் மொழி வளம் மட்டுமே காரணம் என்பதை விட அரசியல் காரணமே மிகுதி.

மொழிக்கலப்பை தவிர்க்க என்ன செய்யலாம் ? மிக எளிதானவையே, இருவரும் தமிழர்கள், இருவருக்குமே தமிழ் நன்றாக தெரியும் என்று இருவருமே அறிந்தால் தமிழிலேயே பேசலாமே,

அண்மையில் சென்னையில் நண்பர் வீட்டுக்குச் சென்றேன். நண்பர் வீட்டுக்கு மேல் மாடியில் இருந்த தமிழர் நண்பரிடம், எதோ ஒன்று குறித்து பேசும் போது

'யூ நோ வாட் ஐ டிட்...' என தனது ஆங்கிலப் புலமையைக் காட்டிக் கொண்டிருந்தார். எரிச்சலாக இருந்தது. பத்து உரையாடல் வரிகளில் ஆறில் ஆங்கிலமே பேசினார்

வெள்ளைக்காரன் நாட்டை விட்டுவிட்டுச் சென்றாலும் அவனது மொழியையே தங்களுக்குள் பேசி அவனது அடிமையாக தொடர்ந்து இருப்பதையே பலரும் பெருமையாக கருதுகிறார்கள்.

வழக்கொழிந்தது எது ? சென்னைப் போன்ற பெருநகரங்களில் இருக்கும் தமிழர்கள் தங்களுக்குள் தமிழில் தொடர்பு கொள்வது வழக்கொழிந்தது வருகிறது. பணி தொடர்பில் இல்லாது மற்ற நேரங்களிலும் ஆங்கிலத்தில் உரையாற்றும் தமிழர்களிடம் வெட்கப்படாமல் தமிழிலேயே பேசச் சொல்லுங்கள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்