பின்பற்றுபவர்கள்

7 அக்டோபர், 2008

அன்பு என்னும் அடிமை சாசனம் !

கத்தியின் முனையைவிட கூர்மையானது அன்பு என்னும் உணர்வுக் கருவி. நாம் ஒருவர் மீது அன்பு செலுத்துவதற்கு பல காரணங்கள் கூட இருக்கும். காரணமில்லாமல் அன்பு இருக்கவே முடியாது. காரணமில்லாமல் இருக்கும் அன்புக்குப் பெயர் கருணை. விழியற்றவர் ஒருவர் சாலையைக் கடக்க முயற்சிக்கும் போது அவருக்கு நம் உதவ வேண்டும் என்று நினைப்பது நாம் அவர் மீது வைத்திருக்கும் அன்பு அல்ல, ஒரு மனிதனாக அவருக்கு உதவ வேண்டும் என்ற கருணை உள்ளம்.

மேற்சொன்னது போல் அன்பிற்கு பல காரணங்கள் உண்டு, அதில் 90 விழுக்காடு தன்நலம் கலந்தே இருக்கும், அந்த தன்நலத்தின் விழுக்காட்டு அளவில் தான் நமது அன்பின் தன்மையில் கூடுதலோ குறைவோ இருக்கும். ஆண் பெண் ஈர்ப்புக் கூட அப்படிப்பட்டது தான், இவர் தமக்கு வாழ்க்கைத் துணையாக வந்தால் மகிழ்வேனே என்று இருபக்கமும் நினைத்து நெருக்கத்தை ஆணும் பெண்ணும் வளர்த்துக் கொண்டு காதலிப்பது கூட ஒருவகையான தன்நலம் தான். ஆனால் அந்த தன்னலத்தில் லாப நோக்கு என்பது குறைவுதான். ஏனென்றால் இருவர் இணையும் போது தன்னைவிட்டுக் கொடுத்தல், வளைந்து கொடுத்தல் என்பது தன்மையை இழப்பதும் கூட அங்கே இருக்கிறது. எதிர்ப்பார்ப்பு மற்றும் விட்டுக்கொடுத்தல் ஆகியவை சம அளவில் இருக்கும் போது அத்தகைய அன்பை தன்நலம் என்று முழுமையாகச் சொல்லிவிட முடியாது.

நமது இந்திய தாய் திருநாட்டில் குழந்தை பெற்றுக் கொள்வதை எடுத்துக் கொள்வோம். இவை முற்றிலும் தன்னலம் சார்ந்ததாகவே இருக்கிறது. தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று நினைப்பது தவறு அல்ல. ஆனால் அந்த நினைப்பின் பின்னால் இருப்பது, 'வயதான காலத்தில் தன்னைப் பார்த்துக் கொள்ள / இறந்த பிறகு கொள்ளிப் போட ஒருவர் வேண்டுமே என்று நினைப்பது தான் மேலோங்கி இருக்கிறது. வெளிநாடுகளில் வாரிசுகளை உருவாக்கிக் கொள்வது குடும்பம் என்ற அமைப்பிற்காகவும், சந்ததியைப் பெருக்குதல் என்ற நோக்கத்திற்காக மட்டுமே பெற்றுக் கொள்கிறார்கள். என்னைக் காப்பாற்ற மகனோ / மகளோ வேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை. வெளிநாட்டினர் குழந்தை பெற்றுக் கொண்டால், அந்த குழந்தையை தங்கள் விருப்பத்திற்கேற்றபடி ஆட்டிவைப்பதும் இல்லை, அதற்கு என்ன என்ன தேவையோ தங்கள் வருமானத்திற்கு ஏற்றவாறு செய்வார்கள், தங்களின் முதுமைகாலத்திற்கும் சேமித்துக் கொள்வார்கள், குழந்தை கல்லூரியை எட்டும் பொழுது அவன் / அவளுக்கு எந்தவகையான படிப்பு என்பதை அதன் தேர்வுக்கே விட்டுவிடுவார்கள், தேவை என்று கேட்டால் மட்டுமே அலோசனை சொல்வார்கள். 'என் மகனை டாக்டருக்கு படிக்கவைப்பேன், கலெக்டெருக்கு படிக்கவைப்பேன்' என்று ஊர் முழுவதும் விளம்பரப்படுத்தி குழந்தைகளையும் 'நீ இதைத்தான் படிக்க வேண்டும்' என்று படுத்துவதும் இல்லை.

வெளிநாட்டினர்களைப் பொருத்து குழந்தைகளின் மீது வைத்திருக்கும் அன்பு என்பது கடமை என்ற அளவில் மிகச் சரியாக இருக்கும். நமது நாட்டில் தான் குழந்தைகள் மீது அன்பு செலுத்துகிறேன் என்கிற பெயரில் அவர்களுக்கு திணற திணற அன்பு செலுத்துகிறேன் என்கிற பெயரில் அவன் எதும் குற்றம் செய்தான் என்று எவரும் மூன்றாம் மனிதர் சொன்னால் அது உண்மையா ? என்று கூட ஆராயமல் 'அன்பு மகனை விட்டுக் கொடுக்கக் கூடாது' என்ற நினைப்பில் சொன்னவரை உண்டு இல்லை என்று செய்துவிடுவார்கள். அவனும் பெற்றோர்கள் இவ்வளவு அன்பு செலுத்துகிறார்கள் என்பதற்காக பூம்பூம் மாடு மாதிரி வரும் காலத்தில் அவனாக விரும்பிய பெண்ணைக் கூட பெற்றோர்களின் அன்புக்கு கட்டுபபட்டு உதற வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடுகிறது. பெரும்பாலன காதலர்கள் திருமணம் வரையில் செல்ல முடியததற்குக் காரணம் பெற்றோர்களின் 'அன்பு' என்னும் மிரட்டல் தான். 'உனக்கு என்ன என்னாவெல்லாம் செய்தேன் ?' என்று சொல்லிக் காட்டி இவர்கள் வெளிப்படுத்திய அன்பை நன்றி உணர்வுடன் முடிச்சுப் போட்டுவிட்டு அவனை குழப்பிவிட்டுவிடுவார்கள்.

தமக்கைகளும் இப்படித்தான்...'எங்க அண்ணன் நான் சொன்னால் கேட்கும், நீ புதுசா வந்தவ' என்று சொல்லும் அளவுக்கு அன்பை உரிமையுடன் தொடர்பு படுத்தி அவனுக்கு இருக்கும் முடிவெடுக்கும் திறனைக் கூட முடக்கிப் போடுவார்கள். 'என் தம்பியை நான் தூக்கி வளர்த்தேன்...நான் சொன்னால் கேட்காமல்...நீ சொன்னால் கேட்டுடுவானா ?' அக்காவின் அன்பு ஆயுதம் கடமையுடன் முடிச்சுப் போட்டு அவனை மிரட்டும்.

அன்பு என்ற உணர்வை நன்றி, உரிமை, கடமை ஆகியவற்றுடன் முடிச்சுப் போட்டு அதை ஆயுதம் ஆக்கி பயன்படுத்தி ஒருவரின் மனதை கருணைக் கொலை செய்வதில் நம்மவர்கள் கெட்டிக்காரர்கள். ஒருவன் சுயத்தன்மை இழந்து முடிவெடுப்பதில் திணறுவதற்குக் காரணம் அளவற்ற என்ற அளவில் அவன் மீது செலுத்தப்படும் தேவையற்ற உணர்ச்சிவடிவமான அன்பு என்னும் ஆயுதம் தான்.

'ஒருவர் தனக்காக உயிரையும் கொடுப்பார்' என்று சொல்வது பெருமைக்குரிய ஒன்றே அல்ல, அவரை அந்த அளவுக்கு அன்புக்கு அடிமையாக்கி இருக்கிறோம், அதாவது தனது அன்புக்கு நன்றி செலுத்தும் 'நன்றியுள்ள நாய்' என்று அவரை மறைமுகமாக கொச்சைப்படுத்தும் சொல் அது.

தன்னால் முடியாது என்று நன்கு தெரிந்தும் ஒருவர் ஒரு செயலை செய்ய விருப்பமின்றி செய்வதற்குக் காரணமே...'நம்மீது இவ்வளவு அன்பு வைத்தவர் கேட்டுவிட்டாரே...' என்றெல்லாம் நினைக்க வைக்கும் அளவுக்கு ஒருவர் மீது அன்பு செலுத்துவது என்பது, உண்மையிலேயே அவரை அடிமையாக்குவது தான். இதனால் அன்பைப் பெற்ற நபருக்கு துன்பமே. இதைக் கொச்சையாகச் சொல்வதென்றால் அன்பான 'வசியம்' இது அவசியமா ?

ஒருவரை மகிழ்வுடன் வைத்திருப்பது தன்னலமற்ற அன்பு, ஒருவரை அடிமையாக்குவது சுயநலம் சார்ந்த அன்பு. ஒருவர் மீது அன்பு செலுத்துகிறோம் என்று நாம் நினைக்கும் பொழுது அதை எந்த அளவுக்கு சுயநலத்திற்காகப் பயன்படுத்துகிறோம் என்ற தெளிவும் கட்டுப்பாடும் இருந்தால் தேவையற்ற உணர்ச்சி விளையாட்டுக்கள் இருக்காது.

இந்த பதிவுக்கு பின்குறிப்பு : பின்னர்

16 கருத்துகள்:

மணிகண்டன் சொன்னது…

இல்லை கோவி சார். தன்னலமற்ற அன்பு பல நேரங்களில் ஆறாக ஓடுகிறது. (அன்பு செலுத்தும் சமயத்தில்). ஆனால் பிற்காலத்தில் மனம் என்னும் குரங்கு அதை வேறு விதமாக பார்க்க தூண்டுகிறது. நம்ப இவ்வளவு செஞ்சோம். ஆனா இவன் சிங்கப்பூர், அமெரிக்கா, பிரான்சென்னு நம்பல விட்டுட்டு போய்ட்டானேன்னு.

அதுனால, அன்பு செலுத்தும் சமயத்தில் அது தன்னலமற்றதாகவே இருக்கிறது. பிறகே அதற்கு முலாம் பூச படுகிறது.

இப்ப இன்னுமே சூப்பர். பையனையோ பொண்ணையோ படிப்பு,படிப்புன்னு மட்டும் வளக்க கூடாதுன்னு, டென்னிஸ், செஸ், ஸ்விம்மிங், மியூசிக் எல்லாத்துலையும் சேக்கறாங்க. இது அவங்களுக்கு தெரிஞ்ச அன்பு செலுத்தற விதம். இதுவே பிற்காலத்துல வேறு விதமா பார்க்கப்படலாம்.

மணிகண்டன் சொன்னது…

me was the first !!

rapp :- i beat you ! ஹா ஹா ஹா

நவநீதன் சொன்னது…

எல்லாவற்றிலும் ஒரு சமசீர் (balance) இருக்கணும்.

உ.தா. 1
அதிகமாக செல்லம் கொடுக்கிற குழந்தைகளும் கெட்டு போயிருவாங்க. பாசத்தையே கண்டிராத குழந்தைகளும் கெட்டு போயிருவாங்க.

உ.தா. 2
நீங்க வேகமா வீட்டுக்கு போகலைன்னா மனைவி கோவிச்சுப்பாங்க. வேகமா வீட்டுக்கு போயிட்டா அலுவலகத்தில வேலை நடக்காது.

உ.தா. 3
கடவுள் இல்லைன்னு சில பேரால போகமுடியாது. அதுக்காக நாக்குல அலகு குத்திட்டு காவடியும் எடுக்க முடியாது. (இது யாரையும் புண்படுத்துவதற்காக சொல்லப் பட்டதல்ல. என்னைப் பற்றி நானே எழுதிக் கொண்டது. அதாவது கடவுள் விசயத்தில் நான் கொஞ்சம் 'limit'-டாகவே இருக்கிறேன்.)

இப்படி நிறைய சொல்லலாம். உதாரணத்திற்கு, தன் மகனுக்கு கய்ச்சல்ன்னா, மருந்து எடுத்துக் கொள்ள ஞாபகப்படுத்திற அம்மாக்கள் இருக்கிறாங்க. இந்த அன்பை தவறுன்னு சொல்ல முடியாது. ஆனா, அதே அன்பு எல்லாவற்றையும் மற்றவர்கள் தான் செய்து தரனும் என்கிற மனப்பான்மைக்கு கொண்டு போயி விடாத அளவுக்கு இருக்கணும்.

நையாண்டி நைனா சொன்னது…

உள்ளேன் ஐயா......

பறந்தாலும் விட மாட்டேன்....
அன்பினால் உன்னை நான் கைது செய்வேன்...

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அன்பு..யார் யார் மீது வைத்திருந்தாலும் சரி..அது ஓரளவு ..ஏதாவது ஒரு வகையில் கைமாறு எதிப்பார்த்தே...இதில் நண்பர்களும் அடக்கம்

குடுகுடுப்பை சொன்னது…

நான் ரொம்ப அன்போட ஒரு பின்னூட்டம் போடுறேன். டிவிஆர் சொன்னத மறக்காதீங்க

குடுகுடுப்பை சொன்னது…

நான் ரொம்ப அன்போட ஒரு பின்னூட்டம் போடுறேன். டிவிஆர் சொன்னத மறக்காதீங்க

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
இல்லை கோவி சார். தன்னலமற்ற அன்பு பல நேரங்களில் ஆறாக ஓடுகிறது. (அன்பு செலுத்தும் சமயத்தில்). ஆனால் பிற்காலத்தில் மனம் என்னும் குரங்கு அதை வேறு விதமாக பார்க்க தூண்டுகிறது. நம்ப இவ்வளவு செஞ்சோம். ஆனா இவன் சிங்கப்பூர், அமெரிக்கா, பிரான்சென்னு நம்பல விட்டுட்டு போய்ட்டானேன்னு.

அதுனால, அன்பு செலுத்தும் சமயத்தில் அது தன்னலமற்றதாகவே இருக்கிறது. பிறகே அதற்கு முலாம் பூச படுகிறது.

இப்ப இன்னுமே சூப்பர். பையனையோ பொண்ணையோ படிப்பு,படிப்புன்னு மட்டும் வளக்க கூடாதுன்னு, டென்னிஸ், செஸ், ஸ்விம்மிங், மியூசிக் எல்லாத்துலையும் சேக்கறாங்க. இது அவங்களுக்கு தெரிஞ்ச அன்பு செலுத்தற விதம். இதுவே பிற்காலத்துல வேறு விதமா பார்க்கப்படலாம்.

2:34 PM, October 07, 2008
//

மணிகண்டன்,

கருத்துக்கு நன்றி, ஒருவருக்கு தெரிந்தவர்கள் (உறவினர் மற்றும் நண்பர்கள்) தான் சரியான சமயத்தில் உதவ முடியும். ஆனால் அவை இயல்பாக புரிந்துணர்வால் ஏற்பட வேண்டும், நான் செய்தேன் திருப்பி செய், உன்னால இதைக் கூட செய்ய முடியலையா ? என்றெல்லாம் கேட்பது எதிர்பார்ப்பில் இருந்ததையே காட்டும்.

நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி, நல்ல கருத்துகளைக் கூறி இருக்கிறீர்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
me was the first !!

rapp :- i beat you ! ஹா ஹா ஹா

2:35 PM, October 07, 2008
//

இது போன்ற பதிவுகளுக்கு மீ த பர்ஸ்ட் கூட போட யாரும் வருவதில்லை. கிட்டதட்ட 6 மணி நேரம் யாரும் பின்னூட்டவில்லை. :)

கோவி.கண்ணன் சொன்னது…

//நவநீதன் said...
எல்லாவற்றிலும் ஒரு சமசீர் (balance) இருக்கணும். //

நவநீதன்,

சரிதான்.

//உ.தா. 1
அதிகமாக செல்லம் கொடுக்கிற குழந்தைகளும் கெட்டு போயிருவாங்க. பாசத்தையே கண்டிராத குழந்தைகளும் கெட்டு போயிருவாங்க. //

ரோபோவில் சேர்க்கச் சொல்லி ஷங்கரிடம் சொல்லிடுவோம், ஆனால் ரஜினி பெண்களுக்கு அறிவுரை சொல்வது போல் இருந்தால் தான் பேசுவார். :)


//உ.தா. 2
நீங்க வேகமா வீட்டுக்கு போகலைன்னா மனைவி கோவிச்சுப்பாங்க. வேகமா வீட்டுக்கு போயிட்டா அலுவலகத்தில வேலை நடக்காது. //

அலுவல் மற்றும் இல்ல ரகசியத்தைப் போட்டு உடைக்கிறிங்க. :)

//உ.தா. 3
கடவுள் இல்லைன்னு சில பேரால போகமுடியாது. அதுக்காக நாக்குல அலகு குத்திட்டு காவடியும் எடுக்க முடியாது. //

சாமி கும்பிடாதவங்க கூட அலகு குத்தி காவடி எடுக்கிறாங்க - திராவிட கழகம் !

//(இது யாரையும் புண்படுத்துவதற்காக சொல்லப் பட்டதல்ல. என்னைப் பற்றி நானே எழுதிக் கொண்டது. அதாவது கடவுள் விசயத்தில் நான் கொஞ்சம் 'limit'-டாகவே இருக்கிறேன்.)//

தனிப்பட்ட நபர் குறித்து சொல்லாமல் இது போல் பொதுவாகச் சொல்லும் விளக்கம் கொடுக்காதிங்க, உங்கள் கருத்து சுதந்திரம் நீங்கள் சொல்லலாம். எல்லோருக்கும் புரிந்துணர்வு இருக்கு, உங்கள் கருத்தை நீங்கள் சொல்வதை புண்படுகிறது என்று அவர்கள் சொன்னால், அவர்களின் அறியாமை பேச்சு உங்களையும் புண்படுத்துகிறார்கள் என்றே பொருள். :)

எதாவது விளங்கியதா ? :)))))

//இப்படி நிறைய சொல்லலாம். உதாரணத்திற்கு, தன் மகனுக்கு கய்ச்சல்ன்னா, மருந்து எடுத்துக் கொள்ள ஞாபகப்படுத்திற அம்மாக்கள் இருக்கிறாங்க. இந்த அன்பை தவறுன்னு சொல்ல முடியாது. ஆனா, அதே அன்பு எல்லாவற்றையும் மற்றவர்கள் தான் செய்து தரனும் என்கிற மனப்பான்மைக்கு கொண்டு போயி விடாத அளவுக்கு இருக்கணும்.

2:51 PM, October 07, 2008//

அன்பை பாசத்தைத் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அவன் வளர்ந்ததும், உனக்கு பாசத்தைக் கொட்டி வளர்த்தேன் நான் சொல்வதைக் கேட்கனும், தாய் சொல்லை தட்டாதே என்று சொல்வதெல்லாம் அவனை அடிமைப்படுத்துவதுதான். நல்ல முறையில் வளர்த்தால் மகன்களால் என்ன செய்ய முடியுமோ அதைச் சரியாக செய்வார்கள் என்றே நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
உள்ளேன் ஐயா......

பறந்தாலும் விட மாட்டேன்....
அன்பினால் உன்னை நான் கைது செய்வேன்...

4:06 PM, October 07, 2008
//
நைனா,

இன்னும் 3 மாதத்தில் திருமணம் செய்யப் போறிங்க, அப்பறம் எங்கே இந்த டயலாக்கெல்லாம் வரப் போகுது ! கேட்க நல்லா இருப்பதால் இப்ப கேட்டுக்கொள்கிறோம்

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
அன்பு..யார் யார் மீது வைத்திருந்தாலும் சரி..அது ஓரளவு ..ஏதாவது ஒரு வகையில் கைமாறு எதிப்பார்த்தே...இதில் நண்பர்களும் அடக்கம்

2:25 AM, October 08, 2008
//

ஐயா,
அதை எதிர்ப்பார்ப்பு என்ற சொல்லாக சொல்ல முடியாது பரஸ்பர புரிந்துணர்வினால், சரியான நேரத்தில் தேவை என்றால் கிடைக்கக் வேண்டிய உதவி.

நண்பர் / உறவினர் நிலை மிகவும் திண்டாடமாக இருக்கிறது என்பதை மனம் விட்டு நம்மிடம் சொல்லும் போது, அல்லது நாமாக அறிந்து கொள்ளும் போது அவர்களும் நம் குடும்பத்தில் ஒருவர் என்ற நினைப்பில் உதவி செய்ய வேண்டும். நாம நன்றாக இருந்து, அவர்களின் துன்பத்தைக் கண்டும் காணாமல் இருந்தால் அது தவறுதான், நாம இருப்பதும் இல்லாதததும் அவர்களுக்கு ஒன்று தான்.

எதிர்ப்பார்ப்பு என்று நான் இங்கே எழுதி இருப்பது... ஒருவரை கட்டாயப்படுத்துவது பற்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//வருங்கால முதல்வர் said...
நான் ரொம்ப அன்போட ஒரு பின்னூட்டம் போடுறேன். டிவிஆர் சொன்னத மறக்காதீங்க

3:20 AM, October 08, 2008


குடுகுடுப்பை said...
நான் ரொம்ப அன்போட ஒரு பின்னூட்டம் போடுறேன். டிவிஆர் சொன்னத மறக்காதீங்க

3:21 AM, October 08, 2008
//

குடுகுடுப்பை தான் வருங்கால முதல்வரா, அல்லது வருங்காலர் முதல்வர் தான் குடுகுடுப்பையா ?

:)

(இது அரசியல் பற்றியது அல்ல)

குடுகுடுப்பை சொன்னது…

இரண்டுமே நான் தான். நான் நிரந்தர வருங்கால முதல்வர்.

RATHNESH சொன்னது…

//இது போன்ற பதிவுகளுக்கு மீ த பர்ஸ்ட் கூட போட யாரும் வருவதில்லை. கிட்டதட்ட 6 மணி நேரம் யாரும் பின்னூட்டவில்லை. :)//

அடடா!

அன்புடமை என்கிற திருக்குறள் அதிகாரத்தைப் படித்துப் பாருங்கள். அன்பு என்கிற கான்செப்ட் குறித்த தங்கள் பார்வை மறுபரிசீலனைக்கு ஆளாகலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

// RATHNESH said...

அடடா!

அன்புடமை என்கிற திருக்குறள் அதிகாரத்தைப் படித்துப் பாருங்கள். அன்பு என்கிற கான்செப்ட் குறித்த தங்கள் பார்வை மறுபரிசீலனைக்கு ஆளாகலாம்.
//

எழுதும் போது 'என்புதோல் போர்த்திய உடம்பு' நினைவுக்கு வந்தது. துய அன்பைப்பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. அன்பான மிரட்டல் உருட்டல்கள், பச்சாதாபங்கள் இவையெல்லாம் வலிந்து திணிக்கப்படும், அல்லது உரிமை என்ற பெயரில் எடுத்துக் கொள்ளும் அன்பினால் கிடைக்கும் தண்டனைகள்.

ஒருவரை மனம் குழைய வைப்பது பிறரின் கோபத்தை விட அன்பினால் கிடைக்கும் ஏமாற்றம் தான் என்பது தானே உண்மை. தற்கொலைகள் நடப்பது கூட எதிர்பார்த்த அன்பு ஏமாற்றப்படுவதால் தானே.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்