பின்பற்றுபவர்கள்

31 ஆகஸ்ட், 2012

நடுத்துண்டு யாருக்கு ?

எங்க அலுவலகத்தில் இன்னிக்கு சீன நாள்காட்டிப்படி ஏழாம் திங்கள் வழிபாடு, இதெல்லாம் படையலில் இருக்கு, நடுத்துண்டு / தொடை கறி வேணுங்கிறவங்க துண்டு போடுங்க. நான் சைவம், எஸ்கேப்

29 ஆகஸ்ட், 2012

Bet - ம், Risk - க்கும் !


தொலைகாட்சி தொகுப்பாளர்கள் பேசுவதைக் கேட்கும் பொழுது இரத்தக் கொதிப்பு தான் வருகிறது, நாகரீகம் என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் கூத்துகளுக்கு அளவே இல்லை, இவர்கள் பேசுவதில் 5 விழுக்காடு தமிழ் இருக்குமா என்பது ஐயமே, இதை ஒரு ஆங்கிலத் தொலைகாட்சி நிகழ்ச்சியாக கற்பனை செய்து கொண்டு தொகுப்பாளர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவராக நினைத்து, அவர் தொகுப்பு நிகழ்ச்சியில் தவறிப் போய் ஒரே ஒரு சொல்லை தமிழில் சொல்லிவிட்டால் நாக்கைக் கடித்துக் கொண்டு மன்னிப்பு கேட்பாரா இல்லையா ? கூடவே கண்டனம் தெரிவித்து வாசகக் கடிதங்களும் குவிந்துவிடும், தினமலர் உள்ளிட்ட நாளிதழ்களிலும் ஆங்கிலம் பரவலாகவே இடை இடையே எழுதப்படுகிறது தவிர 'கோர்ட்' என்று தலைப்பிட்டு நீதிமன்றம் சார்ந்த செய்திகளையும் வெளி இடுகிறான், 'கோர்ட்' என்பதற்கு மாற்றாக இவர்களால் ஏன் 'நீதித்துறை' என்று தலைப்பிட்டு அதன் கீழ் செய்திகளை போட முடியவில்லை. இதை வேண்டுமென்றே செய்யும் திமிர்த் தனம் என்று வகைப்படுத்த முடியுமா முடியாதா ? அல்லது பார்பனக் கொழுப்பு என்று நான் விமர்சனம் செய்தால் சண்டைக்கு வருபவர் யார் ?  அவ்வாறு சண்டைக்கு வந்தால் தினமலரின் திமிர் தனங்களுக்கு போதுமான காரணங்களைச் சொல்லிவிட்டு சண்டையிடலாமே. தொலைகாட்சி, செய்தி ஊடகம் இவற்றில் இருந்துதான் மக்களும் தமக்கான மொழியறிவை வளர்த்துக் கொள்கிறார்கள் என்ற புரிந்துணர்வில் தமிழ் என்ற பெயரில் அன்றாடப் புழக்கமாகிப் போன தமிங்கிலத்தை சகித்துக் கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது, யாருமே நேரங்களைக் குறிப்பிடுவதில் கூட 10 மணி , 12 மணி என்றெல்லாம் சொல்வது கிடையாது டென் ஓ க்ளாக், ட்வள் ஓ கிளாக் என்று தான் கூறுகிறார்கள், சுரணை அல்லது அது பற்றிய சிந்தனைகளே இல்லை என்றால் கேட்கும் நமக்கு எரிச்சல் ஏற்படாது. கண்ணுக்கு முன் மொழிச் சிதைவை பார்க்கும் பொழுது ஏற்படும் ஆற்றாமைகள் தொடர்ச்சியாகக் கிடைக்கும் தண்டனைகளை துய்ப்பது போன்ற கொடுமை. நான் செந்தமிழில் உரையாடுங்கள், பேசுங்கள் என்று சொல்லவரவில்லை, ஆனால் புழக்கத்தில் இருக்கும் சொற்களை புதைத்துவிடுகிறார்கள் என்று புலம்புகிறேன், நான் என்னதான் முடிந்த வரையில் தூய தமிழில் உரையாடலாம் என்று முயற்சி எடுத்தாலும்'பேருந்து வருகிறது' என்று சொன்னாலும் எதோ புரியாத ஒன்றை சொல்லக் கூடாத ஒன்றைச் சொல்லிவிட்டது போல் கொஞ்சம் நக்கலாகப் பார்த்து நகைப்பதால் யாரிடம் தமிழில் மட்டுமே பேசுவது என்றெல்லாம் நான் முடிவு செய்ய வேண்டி இருக்கிறது, ஒரு சிலருக்கு நான் என்ன சொன்னேன் என்பதை திருப்பிச் சொன்னால் தான் புரியும் என்ற நிலையும் உள்ளது.  தமிழன் தமிழன் என்று நாம் பெருமை பீற்றிக் கொண்டாலும் நாம் பேசுவது தமிழ்தானா ? இன்றைக்கு தமிழ் பேசும் எவரும் 50 விழுக்காடுகள் ஆங்கிலச் சொற்கள் கலவை இன்றி பேசுவதே கிடையாது. பிறகு நாம் பேசுவது எப்படி தமிழாகும் ?

*****

சிங்கப்பூர் தமிழ் மாணவர்கள் எல்லது தமிழர்கள் தொலைகாட்சி நிகழ்ச்சியின் செய்தியில் / அல்லது வேறு நிகழ்ச்சிகளின் இடையே பேசும் பொழுது பேசுவதைக் கேட்கும் பொழுது தமிழை தாய்மொழியாகக் கொண்ட இவர்கள் ஏன் தமிழைப் பேச இப்படித் திணறுகிறார்கள் ? என்று முதல் முறைப் பார்ப்பவர்கள் நினைக்கத் தோன்றும்,  திணறுவதற்கு முதல்காரணம் அவர்கள் மொழி தாய் மொழி தமிழ் என்றாலும் வீட்டில் பேசுவது முழுக்க முழுக்க சிங்கை ஆங்கிலம் (சிங்லிஸ்), எனவே ஒரு நிகழ்ச்சியின் இடையே தமிழில் பேச வேண்டும் என்கிற நிலை வரும் பொழுது ஆங்கிலத்தில் பேசிப் பழகிய அவர்கள் தமிழுக்கு மாற வேண்டிய சூழலும் ஏற்பட சற்று திணறலாகத்தான் இருக்கும், தவிர திணறலுக்கு அது மட்டுமே காரணம் இல்லை, பேசப் போவது தமிழ் என்பதால் அதில் அவர்களின் சிந்தனையில் கலந்த ஆங்கிலச் சொற்கள் கலந்து பேசிவிடக் கூடாது என்பதால் பொருத்தமான தமிழ் சொற்களை ஆங்கில சிந்தனை வழியாக சிந்தித்து  பிறகு பேசுவார்கள்,  பொருத்தான தமிழ் சொற்கள் குறித்த அவர்கள் சிந்திக்கும் நேரம் பேசுவதின் தொடர்ச்சியில் நேரத் தொய்வை ஏற்படுத்த கேட்கும் நமக்கு அவர்கள் தமிழில் பேச திணறுகிறார்கள் என்பது போல் தோன்றும், உண்மை அதுமட்டுமல்ல, தமிழில் பேசும் போது தமிழில் மட்டும் தான் பேச வேண்டும் என்கிற நிலைபாடு தான் காரணம், நம்மைப் போன்று ஆங்கிலச் சொற்களைக் கலந்து பண்ணித் தமிழில் பேசலாம் என்று அவர்கள் நினைத்திருந்தால் அவர்களாலும் திணறல் இன்றிப் பேசிவிட முடியும். எந்த ஒரு மொழியையும் பேசும் பொழுது அந்த மொழியில் விளக்க பொருத்தமான சொற்கள் இல்லாத நிலையில் சொற்களை கடன் வாங்கிப் பயன்படுத்துவது தவறே இல்லை. 

'பார்க் பண்ணிட்டிங்களா ?',  லஞ்சுக்கு கெளம்புறிங்களா ? டிக்கெட் எடுத்துட்டிங்களா ? இதை கொஞ்சம் கட் பண்ணித் தாங்க. ஒரு வாக் போய்ட்டு வந்துடுறேன், அவரு போன் பண்ணி சொன்னார், நாளைக்கு மார்னிங்க் உங்களுக்கு மிஸ்டு கால் கொடுக்கிறேன்,  அந்த மூவி செம ஃபோர்...  உஙக வைப் ஒர்க் பண்ணுறாங்களா ? உங்க டாட்டர் என்ன ஸ்டாண்டார்ட் படிக்கிறா ? - இது போல் தான் பேசுகிறோம், இதை தமிழில் பேசுவதாகவும் கூறிக் கொள்கிறோம்.

*****

முந்தைய நாள் பேருந்தினுள் பக்கத்து இறுக்கையில் முதலாம் வகுப்பு படிக்கும் தமிழ் குழந்தை அவளுடைய அம்மாவிடம் "அம்மா பெட் (Bet) - டுக்கு தமிழில் என்னம்மா ?" என்று கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தாள், நான் பெட் - டுக்கு என்ன தமிழ் சொல் என்று சிந்திக்கத் துவங்கியதும் அந்த குழந்தையின் அம்மா என்ன சொல்லி கொடுத்திருப்பார் என்று கவனிக்கவும் இல்லை, ஆனால் குழந்தையின் அம்மா சரியான சொல்லை எடுத்துச் சொல்லவில்லை என்று தான் தெரிந்தது, நானும் சிந்தித்து சிந்துத்துப் பார்த்து 'நாம பெட் கட்றது, பெட் வச்சிக்குவோம் வரியா ? ன்னு தானே போட்டிப் போடுவோம் ? வேற என்ன சொல் தமிழில் இருக்கும் ? என்றெல்லாம் மிகுந்த நேரம் சிந்தித்து 'பந்தயம்' தான் சரியானச் சொல் என்று முடிவு செய்தேன், அவர்களிடம் சொல்லவும் தயக்கம், நாம பேசிவருவதை இவர் ஏன் காது கொடுத்துக் கேட்டார் என்று நினைப்பார்களோ என்று பேசாமல் இருந்துவிட்டேன்,  சிறுவயதில் 'வாடா பந்தயம் வச்சிக்கலாமா ?' வெகு இயல்பாக புழங்கிய ஒருச் சொல் கால ஓட்டத்தில் மறக்கடிக்கப்பட்டு பெட் அதில் படுக்கைப் போட்டுக் கொண்டதை நினைத்துப் பார்க்க ஊடகங்கள் செய்துவரும் தமிழ் துரோகமே காரணம் என்று நினைக்கத் தோன்றியது. செய்தி ஊடகங்களும், அரசியல்வாதிகளும், திரைப்படத் துறையினரும் தமிழை வைத்து தான் பிழைப்பு நடத்துகிறார்கள், அவர்கள் வயிற்றுப் பிழைப்பான தமிழை அவர்களே அழிக்கிறார்கள் என்பது எவ்வளவு கொடுமையான நடைமுறையாக இருக்கிறது. சில அறிவிலிகள் மொழிகள் என்பவை தொடர்புக்கானவை என்ற புல்லரிக்கும் விளக்கங்களையெல்லாம் கொடுக்கும் பொழுது உணவு என்பது சாப்பிட மட்டும் தான் அதில் வேறு சிந்தனைகள் தேவை இல்லை என்று கண்டதையும் ஏன் நீ உண்பது இல்லை ? வெந்ததையும் வேகாததையும் கூட திண்ணலாமே என்றெல்லாம் கேட்கத் தோன்றும், 

*****

முன்பு ஒரு நாள் நண்பர் ஒருவர் தமிழ் குறித்த சற்று சூடான உரையாடலில் நீங்க தமிழ் தமிழ் என்று பேசுகிறீர்கள், நான் கேட்பதற்கு பதில் சொல்லுங்க என்று சொல்லிவிட்டு 'ரிஸ்க் எடுக்காதீங்க ? ' என்பதற்கு தமிழில் எப்படிச் சொல்லுவிங்க என்று மடக்கினார், நான் 'முயற்சி செய்யாதிங்க ?' என்று சொன்னேன், அப்ப 'ட்ரை பண்ணாதிங்க' என்பதற்கு என்னச் சொல்லுவிங்க என்று மறு கேள்வி கேட்டார். அந்த நேரத்தில் மாற்றுச் சொல் தேடி சிந்தனைகள் அலைந்தது தவிர்த்து உருப்படியாக ஒன்றும் அவருக்கு மாற்றாகச் சொல்லத் தோன்றவில்லை, அவரும் நக்கலாக சிரித்துக் கொண்டார், பிறகு யோசித்துப் பார்க்க, ரிஸ்க் என்பது செய்யலாமா வேண்டாமா என்கிற கேள்வியை கொண்ட ஒரு சொல், இதற்கு சரியான தமிழ் சொல் சொல்ல வேண்டுமென்றால் ரிஸ்க் எடுக்காதிங்க என்பதற்கு மாறாக  'துணியாதீர்கள்' என்று தான்  சொல்ல வேண்டும்,  துணிவு என்பது வெறும் துணிச்சல் சார்நத சொல் மட்டுமே இல்லை, அதில் செய்யலாமா வேண்டாமா என்கிற எண்ணமும் சேர்ந்த சொல்லாகவும் பயன்பாடுடையது. நம்மாளுங்க இன்னும் பயன் என்ற எளியச் சொல் இருக்க 'உபயோகம்' என்றெல்லாம் எழுதுகிறார்கள் தெரியுமா ?

செந்தமிழில் பேச வேண்டும் என்பது தேவை இல்லை, ஆனால் பேசுவது ஆங்கிலம் உள்ளிட்ட வேற்றுமொழிகள் கலந்த கொடுந்தமிழாக இல்லாமல் தூய தமிழாக இருந்தால் போதும், வலைப்பதிவில் எழுதும் பொழுது முடிந்த வரை தமிழில் எழுதுகிறோம், அதையே நாம் பேச்சிலும் செயல்படுத்தினால் நம்மைப் பார்த்து தமிழில் கலப்பின்றி பேசுவது தாழ்வானது இல்லை என்று நம்பத் துவங்குவார்கள். சிங்கையில் முகவை இராம் என்கிற நண்பர் ஒருவர் யாரு என்ன நினைப்பாங்க என்றெல்லாம் கவலை படமாட்டார், நல்ல தெளிவான தமிழில் பேசுவார். அவரைப் பார்த்து நகைத்தவர்கள் இல்லை, பாராட்டியவர்களே மிகுதி.

28 ஆகஸ்ட், 2012

யார் மூத்தப் பதிவர்கள் ?


தமிழ் பதிவர்களின் மாபெரும் ஒன்று கூடலை நேரடி ஒளிபரப்பை நேரம் கிடைக்கும் பொழுது பார்க்க முடிந்தது, இந்த ஏற்பாடு சிறப்பு,  இணைய வேகத்தில் குறைபாடு இருந்ததால் விட்டு விட்டு தெரிந்தது, இருந்தாலும் என்ன நடக்கிறது என்பதை பார்க்கும் ஒரு வாய்ப்பு என்ற அளவில் இதை நான் குறையாகவும் கருதவில்லை. தமிழகத்தில் இந்த அளவு ஏற்பாடு செய்ய முடிவதே பெரிய அளவு.  நான் பார்க்கத் துவங்கிய பொழுது பதிவர் அறிமுக நிகழ்ச்சி நடந்தேறியது. இந்த நிகழ்ச்சி கிட்டதட்ட இரண்டு மணி நேரம் நடந்ததாக பின்னர் தெரிந்தது.  சிங்கப்பூரில் சிறிய அளவிலான சந்திப்புகளில் பதிவர் அறிமுகங்களை தவிர்ப்போம், காரணம் தேவையற்ற நேர விரயம் என்பதுடன், திட்டமிட்ட மற்ற நிகழ்ச்சிகளை நடத்த போதிய நேரம் கிடைக்காது என்பதால் பதிவர் அறிமுகங்களை தவிர்ப்போம், அதற்கு மற்ற காரணம், வலைப்பதிவில் எழுதுகிறார்கள், ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்ற அளவில் திரும்பவும் அறிமுகப் படுத்திக் கொள்வது தேவையற்றது என்பதாலும், மிகவும் புதியவர் / வாசகர் என்றால் மட்டுமே சிறு அளவிலான தகவல்களை கேட்டுப் பெருவதுடன் சரி. சிலருக்கு பேசவே கூச்சமாக இருக்கும்  அவர்களை அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொல்ல நெளிவார்கள்.  பெரிய கூட்டங்களில் சிலர் தம்மை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டாமே என்று நினைத்திருப்பார்கள். அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்பாத நிலையில் அவர்களை மேடை ஏற்றி அறிமுகம் செய்யது கொள்ளச் சொல்வதும் அவர்களை வர்புறுத்துவதாகும். சிலர் அறிமுகம் என்ற அளவில் இல்லாமல் பேசிக் கொண்டே இருப்பார்கள், அதை கேட்டுக் கொண்டு இருப்பவர்கள் நெளிவார்கள். இதற்கு மாற்றாக பெயர் அட்டைகளில்  (பேட்ஜ்) அவர்களது பெயர், தேவை என்றால் ஊர் மற்றும் வலைப்பதிவு பெயரை, வருகையை உறுதிப்படுத்தியவர்கள் என்ற அடிப்படையில் முன்கூட்டியே அச்சடித்து வைத்திருந்து வருகையின் பொழுது அணிந்து கொள்ளச் சொல்லலாம். அதைப் படிப்பவர்கள் இன்னார் இன்னார் என்று தெரிந்து கொள்வார்கள். விருப்பம் இருந்தால் நிகழ்ச்சி இடைவெளிகளில் தான் உரையாட விரும்புவர்களிடம் தன்னை அறிமுகம் செய்து தொடர்ப்பு கொள்வார்கள்.

*****

மூத்தப் பதிவர் யார் என்ற (சுரேகாவின்) விளக்கம் சிறப்பாக இருந்தது,  வலைப்பதிவில் ஓரளவு தொடர்ந்து செயல்படும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மூத்தப் பதிவர்கள் என்ற விளக்கம் எனக்கும் பிடித்திருந்திருந்தது, ஏற்கிறேன், என்னைக் கவர்ந்த மற்றொன்று தமிழ் பதிவர்களிடையே பெரியவர்களை மதிக்கும் பண்பு, இவை யாருமே சொல்லிக் கொடுக்காமல் வளர்ந்திருக்கிறது, இதற்கு அடிப்படைக்காரணம் நமது பண்பாடு என்றே நினைக்கிறேன், பெரியவர்களிடம் கருத்து மோதல் செய்வதுடன் அவர்களுக்கு கொடுக்கும் மதிப்புகளை இணைத்துப் பார்க்கலாகது என்ற புரிந்துணர்வு பங்குபெற்ற அனைவருக்குமே இருந்தது பாராட்டத்தக்கது, வலைப்பதிவில் எழுதுகிறார்கள், வயதில் மூத்தவர்கள் என்ற அளவில் அனைவரும் மதிக்கின்றனர் என்ற உணர்வே மூத்தவர்களுக்கு கிடைக்கும் சிறந்த வெகுமதியாகும், என்னுடைய தனிப்பட்ட நன்மதிப்பு பெற்றவர்கள் என்ற அளவில் மூத்த வலைப்பதிவர்கள் சிலரை நேரடியாக சந்திக்கும் பொழுது அவர்களின் காலில் கூட விழுந்து எழுந்திருக்கிறேன், அதற்காக அவர்கள் எழுதுவதையெல்லாம் சரி என்றெல்லாம் நான் ஒப்புக் கொண்டதோ, மறுக்கத் தயங்கியதோ இல்லை,  தீமையான கருத்துகளைப் பரப்புவர்கள் என்பவர்கள் தவிர்த்து மூத்தவர்களை மதிக்க வேறெந்த அளவுகோலும் தேவையற்றது என்பது எனது தனிப்பட்ட கருத்து.

வலைப்பதிவில் நீண்டகாலமாக எழுதிவரும் திரு டோண்டு இராகவன் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளாதது சற்று ஏமாற்றம் தான், சந்திப்பில் அனைவரையும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர், திரு டோண்டு இராகவன் கலந்து கொள்ளவதை ஏற்பாட்டாளர்களுக்கு தெரிவித்திருந்தால் அவருக்கும் சிறப்பு செய்திருபார்கள் என்றே நினைக்கிறேன், அது தவிர்த்து டிபி ஆர் ஜோசப், தருமி மற்றும் டிவிஆர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும், டிவிஆர் / தருமி கலந்து கொள்ளாததன் தனிப்பட்ட காரணங்களை பதிவில் எழுதி இருந்தனர்.  விழாவில் கலந்து கொள்ளபவர்கள் என்ற அடிப்படையில் இல்லாமல் முன்கூட்டியே ஏற்பாட்டாளர்கள்  மூத்தப்பதிவர்களை அடையாளம் கண்டு, தொடர்பு கொண்டு அவர்களின் விருப்பம் கேட்டிருந்தால் விடுபட்டவர்கள் ஒருவேளை கலந்து கொள்ள நேரிட்டிருக்கும். விழாவில் கலந்து கொள்பவர்கள் தவிர்த்து வெளிநாட்டில் வசிக்கும் மூத்தப்பதிவர்களையும் பாராட்டி அவர்களுகான சான்றிதழ்களை அனுப்பியும் வைக்கலாம், நேரடியாக அனைவரும் பங்குபெற முடியும் என்பது வாய்ப்பற்றது. உதாரணத்திற்கு திருமதி துளசி கோபால், இவரைத் தெரியாத பதிவர் வலைப்பதிவராக இருக்க முடியாது, வலைப்பதிவு முன்னோடி என்பது தவிர மூத்த வலைப்பதிவர் என்கிற தகுதியும் பெற்றவர், இவரைப் போன்றவர்களை நினைவு கூர்ந்து பாராட்டாமல் மாபெரும் சந்திப்புகளில் வெற்றி என்ற சொல்லாடலை இணைத்துக் கொண்டால் மட்டும் போதாது. இதை நான் குறை என்ற அளவுகோளில் குறிப்பிட வில்லை, நிகழ்ச்சி பற்றிய எனது எண்ணம், அதை வெளியே சொன்னால் தான் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் மற்றவர்கள் நிகழ்ச்சி பற்றி என்னக் கூறுகிறார்கள் என்பது தெரியவரும் என்பதால் குறிப்பிடுகிறேன், எனவே குறை / எதிர்கருத்து என்ற அளவில் இதைப் பொருத்திப்பார்க்காதீர்கள்.

*****

தமிழ் வலைப்பதிவர்களுக்கு பொது அமைப்பு தேவையா ? சாத்தியமா ? - இதையெல்லாம் கடந்த ஆண்டே பலர் எதிர்த்தும் ஆதரித்தும் எழுதிவந்தார்கள், பொது அமைப்பு என்றால் யார் தலைமை ஏற்பது ? கருணாநிதி உலகத் தமிழர்களின் தலைவர் என்று திமுகவினரால் சொல்லப்பட்டால் கருணாநிதி உலகத் தமிழர்களின் தலைவர் ஆகிவிடுவாரா ? அதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களா ? என்பது போன்றது தான் வலைப்பதிவர்களுக்கான பொது அமைப்பும் தலைமையும். எந்த ஒரு அமைப்பும் வெற்றிகரமாக செயல்பட தலைமை மிகவும் தேவை, வழிகாட்டல் தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் அமைப்பாக செயல்படவும், தலைமை தாங்குபவர்களை தேர்ந்தெடுக்கவும் விளக்கங்கள் காரணங்கள் தேவைப்படுகிறது. சிலர் சென்னைப் பதிவர் சந்திப்பு என்றார்கள், சிலர் தமிழ் நாட்டு பதிவர்கள் சந்திப்பு என்றார்கள், வெளிநாடுகளில் இருந்து சிலர் கலந்து கொண்டதால் உலக தமிழ் பதிவர்கள் சந்திப்பு என்றார்கள். வலைப்பதிவர்களுக்கான பொது அமைப்பு ஏன் ? என்பதற்கான காரணங்களை நாம் தெளிவாக வரையறுக்காதவரை அதுபற்றியும் அதன் தலைமை பற்றியும் பேசுவது வீண். மற்றபடி

நகரம் சார்ந்து ஒருசிலரின் உந்துதலில் வலைப்பதிவாளர்கள் ஒன்றுகூடி நிகழ்ச்சி நடத்துவதில் ஏதும் சங்கடங்கள் இல்லை, சென்னை நிகழ்ச்சியைக் கூட நான் அப்படித்தான் பார்க்கிறேன், இது போன்ற நிகழ்ச்சி ஏற்பாடுகள் மதுரை, கோவை, திருச்சி, பெங்களூர் டெல்லி மற்றும் வலைப்பதிவர்கள்  எண்ணிக்கை அளவில் மிகுந்திருக்கும் இடங்களில் நடத்துவது அவசியம் தான்.  நாங்கள் சிங்கையில் மணற்கேணி நிகழ்ச்சி நடந்தினோம், முதலாண்டு வெற்றியாளர்களுக்கு மறைந்த வலைப்பதிவர்களை நினைவு கூறும் வகையில் அவர்கள் பெயரிலேயே விருதுகள் வழங்கினோம்,  இதில் அமைப்பு என்பது சிங்கைப்பதிவர்கள், அதிலும் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் என்ற அடிப்படையில் கலந்து பேசி பொறுப்புகளைப் பிரித்துக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தினோம். தொடர்ந்து செயல்படாமல் இருப்பதற்கு வேறு சிலகாரணங்கள் இருந்தாலும் யாருக்கும் அதில் தனிப்பட்ட விறுப்பு வெறுப்புகள் எதுவும் இல்லை. 

இதுபோன்ற பொது நிகழ்ச்சியில் கணக்கு வழக்குகள் மிகவும் முக்கியம் யாரும் மட்டமான கமெண்ட் அடித்தால் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் ஏன் நடத்தினோம் ? என்று வருந்துவார்கள். ஸ்பான்ஸர் சிப் அல்லது விருப்பத்தின் பெயரில் விரும்பியதைக் கொடுக்கலாம், திட்டச் செலவு இவ்வளவு என்று சொல்லிவிட்டால் விரும்பியவர்கள் பொருளுதவி செய்வார்கள்,  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சி நடந்த பிறகு பல்வேறு தரப்பினரால் சர்ச்சைக்கு உள்ளாவர்கள். எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அதன் பிறகான சர்சைகளும் அங்கமே, அத்துடன் சேர்த்து தான் நிகழ்ச்சிகள் நிறைவுக்கு வருகின்றது, எனவே சர்சைகளைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளக் கூடாது, மிகவும் மோசமான சர்சை என்றால் மட்டுமே விளக்கங்கள் கொடுக்கலாம்.

நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பில் பார்க்கும் பொழுது நானும் கலந்து கொண்டிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது, அதற்கான முன்னேற்பாடுகளை நான் எதுவும் செய்யவும் இல்லை, ஆனாலும் இதுபோன்ற மாபெரும் சந்திப்புகளில் கலந்து கொள்வதால், என்னைப் பிடிக்காதவர்களையும் நான் சந்திக்க வேண்டிய சங்கடமாக அமைந்துவிடும், அதனால் முடிந்த அளவு இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்வது ஐயமே. கருத்து தெரிவித்தல் என்ற அடிப்படையை மறந்து தனிமனித தாக்குதல் செய்தவர்களை நேர்முகம் கண்டு கட்டித் தழுவுவது பெரும்தன்மை, சமூக நல்லிணக்கம் என்றெல்லாம் நான் நினைப்பது இல்லை.

24 ஆகஸ்ட், 2012

மருதாணி - வதந்தீ !


சன் தொலைகாட்சியின் மெகாத் தொடர் தலைப்பு தான், சென்ற வாரம் இஸ்லாமிய பெருநாளின் பின்னிரவிலும், மறுநாள் செய்தியாகவும் பரபரக்கப்பட்ட பெயர் மருதாணி. மருதாணி வைத்துக் கொள்பவர்களை அச்சுறுத்தி கிளப்பிவிடப்பட்ட வதந்ததி, வதந்திகள் நோக்கத்துடனும், நோக்கமின்மையாலும் கிளப்பிவிடப்படுவது வாடிக்கை தான். கண்ணதாசன் தாம் இறந்துவிட்டதாக அவரே ஒருமுறை வதந்தி கிளப்பி இருந்தார், தனக்காக வருந்துபவர் யார் என்று தெரிந்து கொள்ள அவ்வாறு செய்தாராம். கருணாநிதி, ரஜினி உள்ளிட்டோரைப் பற்றி கூட வதந்திகள் வந்து இருக்கின்றன, எம்ஜிஆருக்கும் பலமுறை வதந்தி கிளப்பி இருந்தனர்,  முன்பெல்லாம் வதந்தி பரவும் வேகத்தை ஒப்பிட அடங்க இரண்டு மூன்று நாள் பிடிக்கும், செல்பேசிகள் புழக்கத்திற்கு வந்த பிறகு பரவும் வேகமும் கூடுதலாகவும், அதே போன்று அடங்குவதும் கிட்டதட்ட அதே வேகத்தில் அடங்கிவிடுகிறது.

எந்த ஒரு சமயம் சார்ந்த பெரும் பண்டிகையில் பெண்கள் மருதாணி இட்டுக் கொள்வது இந்திய சமூகத்துப் பெண்களின் வழக்கமாக இருக்கிறது, நகைகள் போட்டுக் கொள்ளாத பெந்தகொஸ்தே அமைப்பு தவிர்த்து கிறித்துவர்கள், முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் அவரவர் பண்டிகையின் போது மருதாணி இட்டுக் கொள்வது வழக்கம்.  இந்தியாவில் இருந்த வரை தீபாவளி நாள்களின் அக்கா- தங்கை வைத்துவிடும் மருதாணி என் கைகளிலும் நகங்களிலும் கூட இருந்தது,  தாள்களில் நட்சத்திர வடிவங்களை வெட்டி அதன் மீது மருதாணி வைத்து உள்ளங்கையில் அழகான மருதாணி சிவப்பு வடிவங்களை அமைத்துக் கொள்வோம், அதன் பிறகு கையை கழுவும் வரை சொறிய முடியாது, காலையில் எழுந்து பார்த்தால் சட்டை படுக்கை பாய் ஆகியவற்றில் மருதாணி அங்காங்கே அப்பி இருக்கும், கையைக் கழுவி யாருடைய கை நன்றாக சிவந்திருக்கிறது என்று பார்த்து பார்த்து ரசிப்போம். வீட்டில் மருதாணி செடி இருப்பது மகிழ்ச்சியுடன், கவுரவத்தையும் கூட கொடுப்பதாக நினைத்திருந்தேன், கடைசியாக திருமணத்தின் முந்தைய இரவில் கொஞ்சம் வைத்துவிட்டார்கள், இப்பவும் ஆண் மருதாணி வைத்துக் கொள்வது தவறு இல்லை என்ற எண்ணம் எனக்கு இருந்தாலும் கேலி செய்யப்படுவோம் என்பதால் வைத்துக் கொள்வதில்லை. 

சிங்கையில் ஆண் முகப்பவுடர் அடித்திருந்தாலும் 'மேக்கப் ?' என்று கேலி செய்வார்கள்,  ஆண்கள் யாரும் முகத்தில் பவுடர் அடிப்பது கிடையாது, பவுடரை உடலில் தடவிக் கொள்வார்கள். சென்னையிலோ தமிழகத்திலோ இரு நண்பர்கள் கைகோர்த்து நடப்பது போல் இங்கு நடந்தால் 'அவ(னா)ர்களா இவ(ன்)ர்கள் ?' என்பது போல் பார்பார்கள். பொது நீச்சல் குளங்கலின் ஆண் பெண்ணுக்கு தனித்தனியாக உடைமாற்று அறைகள் உண்டு, உடைமாற்று அறைகளில் எந்த வெட்கமுமின்றி ஆடையின்றி குளிபார்கள், அங்கேயே உடைமாற்றுவார்கள், உடைமாற்று அறையில் முன்பெல்லாம் ஷவர்கள் வரிசையாக இருக்கும் இடையே தடுப்பு இருக்காது, தற்பொழுது அறைகள் அமைத்து ஷவர் வைத்திருக்கிறார்கள். குளித்த பிறகு  தடுப்பில் இருந்து வெளியே வந்து  (அறையினுள்)  உடைமாற்றுவார்கள்,  ஆணுக்கு முன் ஆணின் நிர்வாணம் இங்குள்ளவர்களின் வெட்க வரையறைனுள் வராது,  பொதுவாகவே சீனர், ஜப்பானிய கலாச்சாரம் பரவிய இடங்களில் பொது இடம் தவிர்த்த தனிப்பட்ட இடங்களான பொதுக் குளியல் அறைகளில் அம்மணம் ஒரு பிரச்சனையே இல்லை.  அப்பனும் - மகனும் கூட குளியல் அறையில் ஒருவருக்கும் முன் ஒருவர் நிர்வாணமாகத்தான் நிற்பார்கள்,  முதன்முதலில் அவர்களைப் பார்க்க கொஞ்சம் அதிர்சியாக இருந்தது அவ்வளவு தான். இவர்களின் அகராதிபடி ஆண்மை பெண்மை இவையெல்லாம் வெறும் பாலியல் உறுப்புகள் சார்ந்தது கிடையாது, சீனா, ஜப்பான், தைவான் மற்றும் கொரியாவில்  வெப்ப நீருற்றுகளில் (Hot Spring) ஆண் பெண்ணுக்கு அமைக்கப்பட்ட தனித்தனிப் பகுதியில் நிர்வாணக் குளியல் மிகவும் இயலபாக நடைபெறும் ஒன்று. Hot Spring Tour என்ற வகையில் வெளிநாட்டினர் விரும்பிச் செல்லும் இடங்கள் அந்தநாடுகளில் ஏராளம் உண்டு. ஆண் இயல்புகள் பெண் இயல்புகள் என்ற அடைப்படையில் ஆண் பவுடர் அடிப்பதையும், ஒத்தப் பாலினர் கைகோர்த்துச் செல்வதையும் இவர்கள் இயலாக எடுத்துக் கொள்வது கிடையாது.

இஸ்லாமியப் பெண்கள் கைகள், முகம்  தவிர்த்து உடலை முழுவதும் மறைத்துக் கொண்டிருந்தாலும், ரம்சான் பண்டிகையின் போது மருதாணி வைத்துக் கொள்வதை தடுக்கும் நோக்கத்தில் ஏன் வதந்தி கிளம்பி இருக்க வேண்டும் ? யார் கிளப்பி இருப்ப்பார்கள் ? பெண்களின் வெளியே தெரியும் கையில் வைத்துள்ள மருதாணி கவர்ச்சியைத் தூண்டும் என்றும் என்ற அடிப்படைவாத நம்பிக்கைத் தவிர்த்து இதைத் தடுக்கும் நோக்கம் வேறெதும் இருப்பதாகத் தெரியவில்லை,  பின்னிரவில் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு என்ன ஆகுமோ  பதைப்புடன் உயிர் பயத்துடன் மருத்துவமனைகளுக்கு ஓடியதை வதந்தி கிளப்பியவர்களே கூட ரசித்திருக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன். இது வதந்தீ என்றே நிருபணம் செய்யப்பட்ட நிலையிலும் அடுத்தாண்டு மருதாணி வைக்கும் பழக்கம் பாதியாக குறைந்துவிட வாய்ப்புள்ளது, வதந்தி கிளப்ப எவ்வளவோ நிகழ்வுகள் இருந்தும், மருதாணி வைத்துக் கொள்வது பிரச்சனை (தான்) என்ற அளவில் மசூதி மைக்குகளில் அறிவிக்கும் அளவுக்கெல்லாம் சென்றிருக்கிறது.  கீழே உள்ளது ஒரு மாதத்திற்கு முன்பு வந்த செய்தி. மருதாணி வதந்தியுடன் ஒப்பிட்டுப் பார்க்க, யார் கிளப்பி இருப்பார்கள் ? ஏன் கிளப்பி இருப்பார்கள் ? கீழே உள்ள இணைப்புகள் பல்வேறு  ஊகங்களைக் கிளப்பிவிடுகிறது.

இணைப்புகள் :ஒரு சிலரால் அவர்களின் சமூகத்தை வலிந்தே  1400 ஆண்டு பின்தங்க வைப்பதை நினைத்து வருத்தப்படாமல் / பரிதாபப்படாமல் இருக்க முடியவில்லை, இவற்றிற்கெல்லாம் அவர்களைச் சார்ந்த சில பெண்களே ஆதரவு அளிப்பதும் கூட அவர்களுக்கு கிடைக்கும் ஆசிகளாகத்தான் அமைகிறது.

அரேபிய நாடுகளில் மருதாணி வைத்துக் கொள்ளுவது பாரம்பர்யமானது தான் , அதை ஏன் தமிழகத்தில் தடுக்கும் நோக்குடன் செயல்பட வேண்டும் என்றும் தெரியவில்லை. ஒருவேளை சவுதி போலிஸின் செயல்பாடுகள் தான் மதரீதியாக அனுமதிக்கப்பட்டது என்று கருதுகிறார்களோ. மருதாணி வதந்தி பற்றி எந்த ஒரு மதவாதப் பதிவரும் வருத்தப்பட்டோ / கண்டித்தோ பதிவு எழுதியது போல் தெரியவில்லை. இந்த வதந்தியின் வாய்ப்பு என்ற அடைப்படையில் இது முழுக்க முழுக்க எனது ஊகம்.  என் ஊகம் தவறு என்று சொன்னால் தமிழகத்தில் வசிப்பவர்கள் அடிப்படைவாதிகள் இல்லை என்று மகிழ்வேன்.

23 ஆகஸ்ட், 2012

கு_கா_ன் பே_சு வி_ஞ்_ப் போ_சு !


பிரச்சனை முடிஞ்சதா இல்லையான்னு தெரியவில்லை,  பதிவர் ஆரூர் மூனா செந்தில் மற்றும் நாய் நக்ஸ் - நக்கீரன் ஆகிய இருவர் தனிப்பட்ட முறையில் பேசியதை திரை ஒற்று (ஸ்கீரீன் ஷாட்) எடுத்து போட்டு, பதிவர் சந்திப்பு என்றாலே குடிகாரர்கள் கூடிக் களிக்கும் இடம் என்பது போன்ற தோற்றம் விளைவிக்க ஒரு முயற்சி மதவாதப் பதிவர்களால் நடந்தது,   இவங்க இரண்டு குழுவிற்கும் என்ன பிரச்சனை என்று ஊகித்தால், தமிழ்மணம் மகுட போட்டிகளில் அண்மைக்காலமாக முனா செந்திலின் இடுகைகளும் இடம் பிடிப்பது கூடக் காரணமாக இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து, தமிழ்மணம் மகுடம் சூடும் பதிவுகளின் 'தரம்' உருவாக்கப்படுபவை / தெரிந்தவை தான் என்பதால் நமக்கு அதில் ஏதும் நட்ட/நாட்டமில்லை, ஆனால் அதை 'தரமாக' நினைப்பதுடன் அதில் தங்கள் 'தரமான' பதிவுகளை போட்டிப் போட்டு வாக்குக் குத்தி இணைப்பவர்களுக்கும் மூனா செந்தில் மீது எரிச்சல் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என்பது எனது அனுமானம் என்றாலும் அதில் உண்மைகள் இருக்காது என்று சொல்ல ஏதேனும் வாய்ப்புள்ளதா என்பதை வாசிப்பவர்களின் பார்வைக்குவிட்டுவிடுகிறேன், நான் தனிப்பட்டு யாரையும் குறைச் சொல்லவில்லை, குழுவாகச் செயல்படுபவர்கள் குறித்து தான் சொல்கிறேன், விமர்சனங்கள் என்பது தவிர்த்து தனிமனித தாக்குதலில் எனக்கு விருப்பம் கிடையாது, தவிர 'முகம் தெரியாதவர்களை' பழகி இருக்காதவர்களுடன் விவாதம் செய்வதையும் கூட நான் தவிர்த்தே வருகிறேன், மூனா செந்திலோ, நக்கீரனோ கூட எனக்கு நேரடியாகவோ, மின் அஞ்சல் மூலமாகவோ தொடர்ப்பு அற்றவர்கள், இக்பால் செல்வன், சார்வாகன், ராஜ நடராஜன் ஆகியோருடன் கூட எனக்கு நேரடித் தொடர்புகள் எதுவும் கிடையாது,  குழுவாக செயல்படும் போது அதில் இணைந்திருப்பவர்களின் தனிப்பட்ட செயல்பாட்டுக்கும் சேர்த்தே முட்டுக் கொடுக்கும் மூட்டுவலி பற்றி அறிந்தவன் என்பதால் எந்த ஒரு குழுவிலும் சேர்ந்து செயல்படுவதில் விருப்பமற்றவன். இருந்தாலும் பதிவர் சார்ந்த ஒருங்கிணைப்பு சந்திப்புகளில் கலந்து கொள்வதுண்டு. வார இதழில் வாசிப்பாளர் போல் வாசித்துவிட்டு கருத்துகளை பின்னூட்டமாகச் சொல்வதுடன் சரி. இந்தக் கருமாந்திரத்தை நான் ஏன் எழுதனும் ? யாருக்காவது முட்டுக் கொடுத்து துட்டுப் பார்க்கப் போகிறேனா ? என்று கூட ஒரு சிலர் நினைக்கக் கூடும் என்பதால் விளக்கம் பின்னர் அளிக்கிறேன்.

******

ஒரு பழமொழி சொல்லுவாங்க 'குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு' கொலை வெறியோடு வசைபாடியதையோ, மதுவாடையுடன் சொட்டும் எச்சிலுடன் மேலே விழுந்து அன்பு செலுத்த முயற்சித்தையோ போதை தெளிந்து விடிந்தவுடன் மறந்துவிட்டு, யாரேனும் அதுபற்றிச் சொன்னால் 'ராத்ரி போதை அதிகமாச்சு மாப்ளே' என்று வழிந்துவிட்டு மறந்துவிடுவார்கள், குடிகாரர்களில் 95 விழுக்காட்டினர் கட்டிப் புரண்டு சண்டை இடுபவர்களோ, சாக்கடையில் விழுந்து கிடப்பவர்களோ கிடையாது, இருந்தாலும் மது உடலுக்கு நல்லது இல்லை என்பதால் அது 'தீய பழக்கம்' என்று வகைப்படுத்தப்பட்டு தவிரக்கச் சொல்லி வலியுறுத்தப்படுகிறது. பருவ வயதைக் கடந்தவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்ற வகையில் அரசுகளே மதுபான கடைகளை திறந்து விற்பனை செய்கின்றன என்பதால் மது ஒட்டு மொத்த சமூகத்தீன் சீர்கேடு என்று சொல்ல ஒன்றும் இல்லை, உடல் நலன் என்ற அளவில் தனிப்பட்ட மனிதனுக்கு மது குறித்த விழிப்புணர்வை ஊட்டுகிறார்கள், ஆனாலும் மதுவும் மருந்தாகும் என்ற அடிப்படையில் போதைக் குறைவான ஒயின் வகைகளை இதய நோயாளிகளுக்கு இரத்த சுத்திகரிப்புக்காக மருத்துவர்களும் பரிந்துரை செய்கிறார்கள்.  எனவே மதுவின் நன்மை தீமை என்பவை எல்லாம் அவற்றின் அளவான மற்றும் தேவையான பயன்பாடுகளைப் பொருத்து மாறும். ஒட்டு மொத்தமாக மது சமூகத்தின் சாபக் கேடு என்று சொல்ல முடியாது.

மனித சமூகத்தின் சாபக் கேடுகள் மதங்கள் தான், மதுவைக் காட்டிலும் போதைத் தரக் கூடியவை மதங்களே, நானும் அவனும் உற்ற நண்பர்களாக இருந்தாலும் எதோ ஒரு அசம்பாவிதத்தினால் மத ரீதியில் பிளவு பட்டு நிற்கும் பொழுது என் கையில் இருக்கும் அறிவாள் அவனைப் பதம் பார்க்காது என்பதற்கு மதம் உத்திரவாதம் கொடுக்காது, ஆனால் மனித நேயமும், நட்பும் உத்திரவாதம் அளிக்கும், அவை மதங்களினால் சொல்லிக் கொடுக்கப்பட்டு வருவதில்லை.

எந்த ஒரு மதம் சார்ந்த தீவிர வாதச் செயலிலும் குடிகாரர்களின் பங்கு என்று எதாவது இருக்கிறதா ? குடிகாரன் என்பதால் மட்டுமே குண்டு வைத்தான் என்று ஏதேனும் செய்திகள் வந்ததுண்டா ? துளி கூட ஆல்ஹால் இல்லாமல் போதை ஏற்றும் மதத்திற்கு இருக்கும் பண்பு நலன்களில் மிகக் குறைந்த விழுக்காடே ஆல்ஹால் சேர்ந்த மதுவில் இருக்கிறது. குழுவை ஏற்படுத்தவும், குழுவிற்கு போதை ஏற்றவும் சக்தி படைத்தவை மதங்கள், அதை ஒப்பிட டாஸ்மாக் கடைகளோ, குடிகாரர்களோ அற்பம் தான். 

மதப்பற்றாளர்கள், மதவெறியர்கள் போதை பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தால் அதன் முரண்பாடுகள் எத்தகையதாக இருக்கும் என்பதை மதம் - மது - எது போதை ? என்பதை ஒப்பிட்டு தெரிந்து கொள்ளலாம். நான் பல இடுகைகளில் எழுதிவருவது 'மதவெறி/சாதிவெறி - மதப்பற்று/சாதிப்பற்று' இவைகளுக்கான அடைப்படை வேறுபாடு சம்பவம் நடந்த பிறகு, சம்பவம் நடப்பதற்கு முன்பு' என்பது தவிர்த்து வேறுபாடுகள் இல்லை, அதாவது சாதி / மதம் சார்ந்து குழுவாக ஊர்வலம் செல்லும் போது கூட்டத்தில் ஏதேனும் சலசலப்பு அல்லது கூட்டத்தை நோக்கி சிறு கல்வீச்சு நடந்தாலும் கூட அதே குழு சாதி வெறி / மதவெறி குழுவாக மாறி தாண்டவம் ஆடிவிடும் இதை மறுப்பவர்கள் மதவெறிக்கும் மதப்பற்றிற்கும் பெருத்த வேறுபாடுகள் உள்ளது என்று  எனக்கு பாடம் நடத்தலாம்.

******

சென்ற மாதம் ஐயா புலவர் இராமனுசம் அவர்களை அவரது சிங்கை சுற்றுலா பயணத்தின் போது சந்தித்தேன், சென்னைப் பதிவர்களின் மாபெரும் சந்திப்புக்கு திட்டமிட்டு பொறுப்பேற்று செயல்படுவதாக குறிப்பிட்டு இருந்தார், அவருக்கு தனிப்பட்டு லாப நட்டமில்லாமல் (நேர விரயம் கொஞ்சம் பண விரயம் என்கிற நட்டம் இருந்தாலும்) இப்படி ஒரு முயற்சியை அவரது 80 வயதை கடந்த நிலையில் எடுத்திருப்பது வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது, கிட்டதட்ட நூறு பேருக்கும் மேற்பட்ட பதிவர்களை தனிப்பட்டு தொடர்பு கொண்டு சந்திப்பின் பொழுது அவரவரின் செயல்பாடுகள் குறித்த திட்டமெல்லாம் தீட்டி ஒருங்கிணைப்பதன் கடினம் எனக்கு புரிந்தது, 'ராமா - கிருஷ்ணா, என்பதுடன் பேரக் குழந்தைகளுடன் பொழுதை கழிக்க வேண்டிய வயதில் தமிழ் சார்ந்த நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் செயல்படுவதை என்னால்  மிகச் சாதரண நிகழ்வாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அண்ணா காலத்தில் அவருடன் தொடர்பு கொண்டவர்களில் மிகச் சிலரே எஞ்சி இருக்கும் நிலையில் அது போன்ற ஒருவரின் தமிழ் நலம் குறித்த செயல்பாடுகளை வரவேற்காவிட்டால் நட்டம் நமக்குத்தான் என்பதால் ஐயாவின் முயற்சியை பாராட்டி பதிவர் சந்திப்பு விழா வெற்றிகரமாக நடக்க வாழ்த்துக் கூறினேன், எல்லாம் கூடிவரும் சமயத்தில் பதிவர் சந்திப்பு என்றாலே குடிகாரர்களின் சம்மேளனம் என்று கிளப்பிவிடுவது கண்டிக்கத் தக்கதுடன் அத்தகைய தூண்டல்களை துண்டித்து வெற்றிகரமாக பதிவர் சந்திப்பு செயல்பாடுகள் நடந்தேற வேண்டும், மூனா செந்திலோ, நக்கீரனோ ஒரு பெரியவர் எடுக்கும் முயற்சியில் 'தண்ணீ' அடித்துவிட்டு கலந்து கொள்வார்கள் என்பது போன்ற வதந்திகளை நான் நம்பவில்லை. மற்றபடி அந்த நிகழ்வு தவிர்த்த வேளைகளில் அவர்கள் குடிப்பதோ விழுந்து கிடப்பதோ யாருக்கும் நட்டம் ஏற்படுத்தாது என்றே நினைக்கிறேன்.

பொதுவாகவே நண்பர்களின் திருமணத்திற்கு அழைப்பின் பேரில் செல்லும் நண்பர்கள் குடியுடன் அதிகாலை 3 மணி வரை சீட்டாடிக் கொண்டு இருந்தாலும் காலையில் எதுவும் நடைபெறாது போல் திருமணத்தில் கலந்து கொள்வார்கள், மட்டையானவர்கள் மண்டபம் பக்கம் தலையை காட்டமாட்டார்கள், அதைத் தாண்டி அசம்பாவிதங்கள் பெரிதாக எதுவும் நடைபெறாது, எனவே குடிப்பழக்கம் உள்ளவர்களை நிகழ்ச்சிக்கு அழைப்பது தவறு என்று சொல்வதைக் கூட நான் மறுக்கிறேன், அப்படியே சொன்னாலும் சொல்லுபவர்களின் தகுதிகள் அறிந்து அதன் பிறகே அதை பரிசீலனை செய்யலாமா  புறந்தள்ளலாமா என்பதெல்லாம் முடிவு செய்யப்பட வேண்டும்.

மதுவின் தீமையை எடுத்தும் சொல்ல விரும்பும் எவரும் மதவாதத்தின் தீமைபற்றியும் விழிப்புணர்வு கொடுத்தால் அவர்களின் "நல்ல எண்ணம்" குறித்து அவர்களே கூட மகிழ்ந்து கொள்ளலாம். நாலு பேரு மட்டும் தான் இஸ்லாமியப் பதிவர்கள் இல்லை என்பதால் இதை 'இஸ்லாமியப் பதிவர்களின் எதிர்ப்பு' என்றும் வகைப்படுத்துவதை நான் புறக்கணிக்கிறேன், மத போதையுடன் 'தமிழ்மணம் மகுட' போதையும் சேர்ந்தால் அதன் விளைவுகள் எத்தகையது என்பதை ஒப்பிட்ட குடிகாரர்களின் போதை பெரிய விசயமே இல்லை,

22 ஆகஸ்ட், 2012

இரண்டாம் அகவை !


கால ஓட்டத்தின் கணக்கு வழக்குகளை பின்னுக்கு தள்ளும் குழந்தைகளின் வளர்ச்சி வியக்க வைக்கிறது, மணமானவர்கள் பெற்றோர்களானதும் அவர்களின் வாழ்நாள் இறக்கைகட்டிப் பறக்கும். குழந்தைகளின் ஒவ்வொரு 10 ஆண்டு அகவைகளும் பெற்றோர்களின் மண வாழ்க்கை மற்றும் அகவைகளை பத்து ஆண்டுகள் கூட்டிச் செல்லும். மகள் பிறந்ததே நேற்றைய நிகழ்வு போல் 12 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மகன் பிறந்தது முன்னிரவு நிகழ்வு போல் இருந்து, ஓராண்டு ஆகி, ஈராண்டும் ஆகிவிட்டது. ஒரு வயதில் எழுந்து நடக்கத் தெரியும், பசிக்கு அழத்தெரியும், சிரித்து மகிழவும், கையை நீட்டி வாங்கவும் தெரியும் என்று நிலையில் இரண்டாம் ஆண்டை எதிர் கொள்ளும் குழந்தைகள் விருப்பங்களை முடிவு செய்து அடம் பிடிக்கத் துவங்குகிறது,  தனக்கு வேண்டியவை, வேண்டாதவை, கூடவே மொழியைப் புரிந்து கொண்டு பேச முயற்சிக்கும் ஆற்றல் இவைகளை வளர்த்துக் கொள்கிறார்கள், பெண் குழந்தைகள் 18 மாதங்களின் பேசத் துவங்கினால் ஆண் குழந்தைகள் பேசத் துவங்க கூடுதலாக இரண்டு மாதங்கள் ஆகிறது, எங்கப் பையன் 'சிவ செங்கதிர்' கோர்வையாகப் பேசாவிட்டாலும், 'அப்பா மியாவ்' என்று கூறினால் பூனைகளைப் பார்க்க வெளியே அழைத்துச் செல்லச் சொல்கிறான் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும், 'அம்மா தண்ணீ' அல்லது 'தண்ணீ' என்றூ சொன்னால் தண்ணீர் கேட்கிறான் என்று பொருள். கூடவே 100க் கணக்கான சொற்களை கற்றுக் கொண்டு தேவையின் போது சொல்கிறான், அக்கம் பக்கம் குழந்தைகளை பெயர் சொல்லி அழைப்பது  உள்ளிட்ட அவனது மழலைப் பேச்சு இனிக்க வைக்கிறது. அழுது அடம் பிடித்தால் எப்படியும் கொடுத்துவிடுவார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதை ஒரு கருவியாகவே பயன்படுத்துகிறான். குழந்தைகள் 2 - 3 வயதில் குணங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள், பிடித்தது - பிடிக்காததெல்லாம் இந்த வயதில் அவர்களாக முடிவு செய்பவைகள் அவர்களின் குணங்களாக மாறுகிறது என்றே நினைக்கிறேன்.

ஒண்ணரை வயது வரை விரும்பி நடப்பார்கள், பிறகு தூக்கிச் செல்லச் சொல்லி அடம் பிடிப்பார்கள், நடப்பதால் ஏற்படும் (பிஞ்சுக்) கால்வலி உணர்வும், தூக்கிச் செல்வதால் கால் வலிகாது என்று தெரிந்துவிடுவதால் நடந்து செல்ல விரும்ப மாட்டார்கள், தண்ணீரில் ஆட்டம் போட இந்த வயதில் ரொம்பவே விருப்பம் இருக்கும், மற்ற விளையாட்டுப் பொருள்களைவிட தண்ணீர் விளையாட்டு ரொம்பவும் பிடிக்கும், தண்ணீர் அவர்களின் விருப்பதிற்கேற்ப வளைந்து கொடுப்பதால் தண்ணீரில் விளையாட கொள்ளை விருப்பம் இருக்கும், தண்ணீர் நிரம்பிய பாத்திரங்களை, வாலிகளை அவர்களுக்கு எட்டும் படி வைக்கக் கூடாது, முடிந்த அளவுக்கு வெற்றுப் பாத்திரங்களையும், குளியல் அறைக் கதவுகளை மூடி வைத்திருப்பதும் நலம். 

********

குழந்தைகளுக்கு தாய்மொழிப் பேச்சு வழக்கு குழந்தைப் பருவத்தில் பயிற்றுவைக்காவிட்டால் பின்னர் அவர்களுக்கு அதன் மீது கவன ஈர்ப்பு வரவே வராது, முடிந்த அளவுக்கு தாய்மொழியில் பேசி வளர்ப்பது தான் குழந்தைகளுக்கு நல்லது,  மூன்று வயதில் பாலர் பள்ளியில் குழந்தைகள் ஆங்கிலம் கற்றுக் கொள்வது எளிது, மூன்று வயதில் எதையும் கற்றுக் கொள்ளும் ஆற்றலில் ஆங்கிலம் கற்றுக் கொள்வது அவர்களுக்கு சுமையான ஒன்று இல்லை,  பாலர் பள்ளிக்குச் செல்லும் பொழுது குழந்தைகள் ஆங்கிலம் தெரியாமல் இன்னல் படுவார்கள் என்பது பெற்றோர்களின் தவறான எண்ணம், அனுபவப்பட்டவன் என்ற முறையில் தான் இதனை எழுதுகிறேன், மகளை 2 1/2 வயதில் சிங்கையில் பாலர் பள்ளியில் சேர்த்த போது அவளால் மற்றக் குழந்தைகளுடனும், காப்பாளருடனும் உரையாடமுடியவில்லை என்பது உண்மை தான், ஆனால் இவையெல்லாம் ஒரு மாதங்களில் சரியாகிவிட்டது, ஆங்கிலமே பேசி வளர்த்திருந்தால் அவளால் இயல்பாக பேசக் கூடிய தாய் மொழியை கற்றுக் கொள்ள முடியாமல் போய் இருக்கும், குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் கூட 'சூழல்' என்று வரும் பொழுது எதையும் கற்றுக் கொள்வார்கள். தாய்மொழியை ஒவ்வொரு தலைமுறைக்கும் சரியாகப் பயிற்று வைத்து அடுத்தத் தலைமுறைக்கு மொழியையும் கூடவே அழைத்துச் செல்வது தாய்மொழியைப் பேச்சு மொழியாகக் கொண்ட ஒவ்வொருவரின் கடமையும் கூட. ஒரு குழந்தைக்கு தாய்மொழியை பயிற்றுவிப்பதன் மூலம் தாய் மொழியின் புழக்கத்தை இன்னும் ஒரு 80 - 100 ஆண்டுகளுக்கு நம்மால் நீட்டிக்க முடியும், நம்புங்கள்,  தமிழ் நாட்டில் கன்னடம் மற்றும் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர்கள் குழந்தைகளிடம் அம்மொழியில் தான் பேசுவார்கள், பின்னர் பள்ளியிலும் வெளியிலும் தமிழில் உரையாடுவதற்கு அவர்கள் எந்த ஒரு இன்னலையும் சந்தித்தது கிடையாது, இதை ஏன் ஆங்கிலத்திற்கும் பொருத்திப் பார்க்க மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை, கண்டிப்பாக ஆங்கில வழிக் கல்விதான் குழந்தை படிக்கப் போகிறது என்று தெரிந்தும் ஏன் அவற்றை குழந்தைப் பருவத்தில் இருந்து திணிக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. எளிதில் கற்றுக் கொள்ளக் கூடியது மற்றும் சமுகம், கலை இலக்கியத் தொடர்பிற்கு மிகவும் தேவையானது என்ற அளவில் தாய்மொழி தான் குழந்தைக்கு உணவுடன் சேர்த்து ஊட்டப்பட வேண்டும். 

எனக்கு தெரிந்த நெருங்கிய நண்பர் 'பையன் சிரமப்படுவான் என்று ஆங்கிலத்தில் பேசி வளர்த்தோம், தற்பொழுது அவனுக்கு தமிழ் புரிந்தாலும் பேச தடுமாறுகிறான், அந்த தவறை மகள் பிறந்த பிறகு செய்யக் கூடாது என்பதற்காக அவளிடம் தமிழிலும் பேசுகிறோம்' என்றார். குழந்தைகளுக்கு எளிய ஆங்கிலமும் தமிழுடன் சேர்த்துச் சொல்லிக் கொடுப்பது நல்லது, ஆனால் ஆங்கிலமே போதும் என்று நினைப்பது அவர்களுக்கு கிடைக்க வேண்டிய மற்றொரு மொழி ஆற்றலை முளையிலேயே கிள்ளி எரிவது போன்றது. நாம் வாரிசுகளுக்கு முறைப்படியாக கொடுக்கும் அழியாதச் செல்வங்களுல் தாய் மொழியும் ஒன்று. போதிய ஊக்கம் கொடுத்தால் ஏனையவற்றை அவர்களே வளர்த்துக் கொள்வார்கள்.

ஒரு குழந்தைக்கு தாய்மொழியில் பெயர் சூட்டுவதால் தாய் மொழிப் பெயர்கள் இன்னும் 100 ஆண்டுகளுக்கு நிலைக்கும், ஒரு குழந்தைக்கு தாய் மொழி பயிற்றுவித்தால் மொழி சார்ந்து இயங்கும் கலைகளும், இலக்கியங்களும் இன்னும் ஒரு 100 ஆண்டுகளுக்கு படைக்கப்படும் வாய்பையும், தேவையையும் ஏற்படுத்தும், தாய்மொழி எதுவாக இருந்தாலும் அந்த மொழிப் பேசுபவர்களின் கடமை என்ற அளவில் இவை செயலாக்கம் பெரும் போது மொழிகளுக்கு அழிவு என்று யாரும் பேசவே முடியாது. தமிழ் இல்லத்து குழந்தைகளுக்கு  99 விழுக்காட்டு தாய்மொழிப் பெயர் வைக்கும் பழக்கம் இல்லை என்பது நாம் பெருமைப் படக் கூடிய ஒன்று இல்லை. 'ஸ்டைல். பெயர் ராசி' என்ற முடிவில் தாய்மொழிப் பெயர் வைக்கும் பழக்கம் அற்று போய்விட்டது.

இதையெல்லாம் ஏன் இங்கே எழுதுகிறேன் என்றால் என் பையன் தன்னைப் பற்றி அப்பா என்ன எழுதி இருக்கிறார் என்று ஆவலுடன் படிக்கும் பொழுது தனக்கு தமிழ் பெயர் வைத்ததன் காரணத்தையும் சேர்த்தே தெரிந்து கொள்வான், அவனுடைய வாரிசுகளுக்கும் தமிழ் பெயர் வைக்க விரும்புவான்.

*****


கடந்த ஞாயிறு (19 ஆகஸ்டு 2012) செங்கதிரின் இரண்டாம் அகவை நிறைவுற்றது, அக்கம் பக்கம் குழந்தைகளுடன் மிக சிறிய விழாவாக வீட்டில் கொண்டாடி மகிழ்ந்தோம், அவனுக்கு பாண்டா கரடி பொம்மை மிகவும் பிடிக்கும் அதானல் அவனுக்கு பிடித்த பாண்டா கேக்.

அலைபேசி, மின் அஞ்சல் மற்றும் கூகுள் கூ(ட்)டல் வழியாக வாழ்த்திய அனைத்து பதிவுலக உறவுகள் மற்றும் நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

21 ஆகஸ்ட், 2012

அஸ்ஸாம் - அண்மைய நிகழ்வுகள் !


சுதந்திர இந்தியாவின் அரசியல் அடிப்படை இந்தியாவின் எந்தப் பகுதி மக்களும் எங்கும் வசிக்கலாம், நிலங்களை வாங்கலாம் என்பதே.  சென்னையிலும் பெங்களூரிலும் மும்பையிலும் வெளி மாநிலத்தினர் காலூன்றி இருப்பதற்குக் காரணம் இந்த அடிப்படை சட்ட உரிமை தான், ஆனால் அஸ்ஸாம் மாநிலத்தவர் மீதான தாக்குதல் என்ற தகவல் பரவ தென் மாநிலங்களை விட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக வெளி ஏறுவதாக தகவலும் படங்களையும் பார்த்த பிறகு அண்டிப் பிழைப்பவர்களுக்கு சம உரிமைகள் என்பவையெல்லாம் வெறும் ஏட்டளவில் என்றே தெரிகிறது.  மாநில அரசுகள் தக்க பாதுகாப்புத் தருவதாக இருந்தாலும் மக்கள் நம்புவதற்கு தயாராகவில்லை, குஜராத் உள்ளிட்ட சொந்த மாநிலத்திலேயே சிறுபான்மை உயிருக்கு  பற்றுறுதி இல்லாத பொழுது சிறுபான்மையாக வெளி மாநிலங்களில் பிழைப்பவர்களை இந்த மாநில அரசுகள் எவ்வாறு காக்கும் என்று கேள்வியாகத்தான் அஸ்ஸாமியர்கள் வெளி ஏறினார்கள், கூடவே தம் வீட்டுக்கு ஆபத்து நேரிடாலாம் என்று வம்படியாக அவர்களை வீட்டைவிட்டு வெளியேறவும் வீட்டு உரிமையாளர்கள் செய்திருக்கிறார்கள் என்கிற தகவலும் வெளியானது. தமிழ்நாட்டில் கடைவிரிக்காத வெளி மாநிலத்தவர்களா ? கூலி வேலைக்கு வருபவர்களை ஏன் அடித்து துறத்த வேண்டும் ? 

பெரும்பாலும் கலவரங்களிலும் தீவிரவாத செயல்களும் பொதுமக்களையும் சாதாரண குடிமகன்களை தாக்குவதிலுமே வீரம் இருப்பதாக அவற்றில் ஈடுபடுபவர்கள் செயல்படுகிறார்கள், இவர்களை தாக்குவதும் எளிது தவிர அரசுகள் கண்டிப்பதுடன் நிறுத்திவிடும், எதிர்காலத்தில் பொது மன்னிப்பு கேட்டுவிட்டால் சரியாகிப் போய்விடும் என்றே நம்புகிறார்கள், தாக்குதல் பேசப்பட வேண்டும் ஆனால் அதன் பாதிப்புகள் மறக்கப்படும் நிலையில் இருந்தால் எதிர்ப்புகளை சமாளித்துவிடலாம் என்பதாகத்தான் இத்தகைய தாக்குதல் நடந்தேறிவருகின்றன, கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் கூட ராஜிவ் காந்திப் படுக்கொலையும் கோவை குண்டுவெடிப்பும் ஒன்றாகிவிடாது என்பதை ஒப்பு நோக்குக. கோவையில் குண்டு வெடித்தது என்பதை எத்தனை மாநிலங்கள் நினைவு வைத்திருக்கும் ?  சாதாரணப் பொதுமக்களை கொல்வது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என்கிற எண்ணத்தின் நீட்சியை உணர்ந்திருப்பதால் தான் என்னவோ நாங்கள் பாதுகாக்கிறோம் என்று சொன்னாலும் அஸ்ஸாமியர்கள் நம்புவதாக இல்லை.

வதந்தி ... வதந்தி என்றாலும் வதந்தியை நம்பும் சூழலும் முகாந்திரங்களும் இருப்பதை நாம் நம்ப மறுத்தாலும் அவர்கள் அதை வெறும் வதந்தி என்று நம்பத் தயாராக இல்லை, உலகில் எங்கு இஸ்லாமியர்களுக்கு அநியாயம் நடந்தாலும் கொதிக்கும் இஸ்லாமியர்கள் இந்தியாவெங்கும் உண்டு என்பதையும் அதற்காக இஸ்லாமியர்கள் தெருவில் இறங்கிப் போராடுவார்கள் என்பதை இஸ்லாமிய சமூகம் மற்ற சமூகத்தினருக்கு எண்ணமாக ஆக்கிவிட்டப்படியால், வட கிழக்கு மாநிலத்தவர் மீதான தாக்குதல் என்பவை வதந்தியாக இருந்தாலும் அஸ்ஸாமில் நடந்த அண்மைய வன்முறைகளை ஒப்பிட்டு பார்த்து அஸ்ஸாமியர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் மீது தாக்குதல் நடப்பது உறுதி என்றே நம்பத் துவங்கி தான் வெளியேறி உள்ளனர் என்றே நினைக்கிறேன்,  வேலை செய்யும் சூழல், பாதுக்காப்பு ஆகியவற்றின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இருந்தாலும் அஸ்ஸாமில் இருக்கும் அவர்களது உறவினர்கள் நம்பாத போது அவர்கள் வெளி ஏறுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

தருமி ஐயாவின் இந்தப் பதிவைப் படித்த பிறகு தான், அங்காங்கே அமைப்பு சார்ந்து இயங்கும் ஒரு சிலரின் தூண்டுதலால் ஒட்டு மொத்த இந்திய இஸ்லாமிய சமூகம் மற்றவர்களின் பார்வையில் எப்படி உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது, தேவையற்ற உணர்ச்சி கொந்தளிப்புகளால் புற சமூகத்தினருக்கும் அவர்களுக்குமான இடைவெளிகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன என்பதை ஏன் நம்ப மறுக்கிறார்கள் என்பது விளங்கவில்லை. அஸ்ஸாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற வதந்தியை இஸ்லாமியர்கள் தூண்டினார்களா ? பாகிஸ்தான் தூண்டியதா ? என்ற கேள்விகளை புறந்தள்ளிவிட்டு பார்த்தால் இத்தகைய தூண்டுதல் கண்டிப்பாக செயல்படும் என்ற நிலை இந்தியாவில் உருவாகி இருக்கிறது என்பதை மறுக்க முடியுமா ?

இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தின் எந்த பகுதியிலும் இஸ்லாமியர் பெயர்களைச் சொல்லி தூண்ட முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. இதற்கு யாரைக் குறைச் சொல்வது ? உதாரணத்திற்காக இணையத்தில் உலாவும் இந்த இரண்டு படங்களைப் பாருங்கள், இவற்றில் ஒன்று தான் உண்மையானதாக இருக்கும், மற்றது உருவாக்கப்பட்டது.


இதில் ஒன்றின் பொருள் "எங்கள் மதத்தை இழிவாகப் போசுபவர்களின் தலையை எடுப்போம்" , மற்றது கிராபிக்ஸ் செய்யப்பட்டு பல்வேறு இணையத் தளங்களில் இஸ்லாமியர்களை இழிவு படுத்தும் நோக்கதுடன் வெளி இடப்பட்டுள்ளது, இதன் பொருள் "எங்கள் மதம் ஆபத்தானது என்று சொல்லுபவர்களின் தலையை எடுப்போம்" என்பது. கிராபிக்ஸ் செய்தவர்களின் நோக்கம், "அமைதி மார்க்கம் என்று சொல்பவர்கள் தலை வெட்டுவது பற்றிப் பேசுகிறார்கள், எவ்வளவு முரண்பாடுடையதாக இருக்கிறது!" என்று காட்டுவதாகவும், அதாவது 'இவர்கள் தாங்கள் அமைதி மார்க்கம் என்று கூறிக் கொண்டாலும் இவர்களது செயல் தலையை வெட்டுவதே'என்பதாகும்.  கிராபிக்ஸில் மாற்றும் முன் இருந்த  "எங்கள் மதத்தை இழிவாகப் போசுபவர்களின் தலையை எடுப்போம்"  என்பது மட்டுமே உண்மையான பதாகை, மேலும் உணர்வு பூர்வமானவை, ஞாயமானவை என்றாலும் கூட  "தலைவெட்டுவது" குறித்த எச்சரிக்கை எவராலும் சகிக்க முடியாத ஒன்றே. இஸ்லாமியர்கள் மீதான பிறரின் எண்ணங்கள் எப்படி உருவாகின்றன, எப்படி பரிணமிக்கின்றன என்பதற்கு இந்த இரண்டு படங்கள் குறித்த பார்வையே புரிந்து கொள்ளக் கூடியதாகவும்.

எதற்கும் உணர்ச்சி வசப்படும் ஒருவனை உணர்ச்சி வசப்பட வைத்து தன்னிலை இழக்கச் செய்வது எளிது,  மிதமிஞ்சிய உணர்ச்சி வசப்படும் சமூகமாக இருக்கும் வரை, அவை அவர்களின் மீதான தூண்டுதல், வதந்திகள் பரப்புவர்களின் செயல்களுக்கான வாய்ப்பு என்றே பார்க்க முடிகிறது. விழித்துக் கொண்டால் ஒட்டுமொத்த மனித குலத்திற்கே நன்மை. இந்திய சமூக பெரும் இடைவெளி / இடைஞ்சல்களாக பிராமின் / நான்பிராமின் என்ற கோட்பாடுகள் வலுப்பெற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு வேட்டு வைத்தது போல் உலக அளவில் இஸ்லாமியர் / இஸ்லாமியர் அல்லோதோர் என்ற நிலை உருவாகி சமூகம் சீர்குழையும் ஆபத்துகளுக்கான முகாந்திரங்கள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.

இந்து என்பதற்காகவும், கிறித்துவர் என்பதற்காகவும் உணர்ச்சிவசப்படுபவர்கள் மிகக் குறைவே, அதற்காக அவர்களை உணர்ச்சி அற்றவர்கள் என்று கூறிவிட முடியாது, மதத்தை வைத்து இஸ்லாமியர்களை தூண்டுவதும், உணர்ச்சி வசப்பட வைப்பதும் எளிது என்பதால் இந்த வதந்திகள் பரவுவதுடன் அவை நடைபெறக் கூடியவை என்கிற நம்பகத் தன்மை எட்டியுள்ளதன் விளைவை அஸ்ஸாமியர்கள் அலறிக் கொண்டு இரயில் ஏறியது உறுதிப்படுத்துகிறது.

நான் இங்கு இழிவாகவோ, இட்டுகட்டியோ எதையும் எழுதவில்லை,  வெளியே சொல்லத் தயங்குபவர்களின் கருத்துகள் எத்தகையவை என்று அவர்களும் தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் என்ற அளவில் தான் இதை எழுதுகிறேன், எந்த மதமும் தனிமனிதனுக்கு சோறுபோடாது, உடைமைக்கு உத்திரவாதம் அளிக்காது என்கிற நம்பிக்கைகள் எனக்கு உண்டு எனவே எதையும் தாழ்வாக, இழிவாக, உயர்வாக எழுதும் தேவை எனக்கு இல்லை.

14 ஆகஸ்ட், 2012

பதஞ்சலி பாம்பின் அற்புதம் !


நான்கு நாளைக்கு முன்பு வலைப்பதிவு நண்பர் ஒருவர் 'மெய் சிலிர்க்க வைக்கும் அற்புதம் ( பதஞ்சலி தரிசனம் ) (படிக்கத் தவறாதீர்கள் )' இணைப்பைக் கொடுத்து 'இதன் உண்மை தன்மை' குறித்து ஏதேனும் சொல்ல முடியுமா ? அறிந்து கொள்ள ஆவல் என்று மின் அஞ்சல் செய்திருந்தார். அந்த இணைப்பில் ஏழு தலை நாகம் காட்சி தந்ததையும், அந்த ஏழு தலை நாகம் சாட்சாத் பதஞ்சலி மகரிஷியே தான் என்றும் அந்த வலைப்பதிவில் எழுதி இருந்தனர்.  நண்பர் இது போன்ற தகவல்களை நம்பக் கூடியவர் இல்லை என்றாலும் சித்தர்கள் மீது ஆழ்ந்த ஈடுபாடு உள்ளவர் என்பதால் அவரையும் மீறி இது அற்புதமாக இருக்குமோ என்கிற எண்ணம் ஏற்பட்டிருக்க, சித்தர்கள் நினைத்தால் இதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் என்று ஒருவேளை அவர் எண்ணி இருந்தாரோ என்னவோ, என்னைமாதிரி ஆளுங்களிடம் காட்டி ஒப்புதல் பெற்றால் உண்மையிலேயே அதை பலருக்கும் அனுப்பலாம் என்று கூட அவர் நினைத்திருக்கக் கூடும்.

நாம் ஏற்கனவே மாடு மணி அடிச்சக் கதை, பாம்பு சிவலிங்கத்திற்கு செய்த வில்வ அர்சனைக் குறித்தப் படம், குரங்கு செய்த பூசை எல்லாம் அறிந்தவர் அலசியவர் என்ற முறையில் இணைப்பில் இருந்த ஏழு தலைகள் நாகமும் தகவலும் பெரிதாக ஈர்க்கவில்லை, இந்த தகவலை 'கும்முகிறவர்களெல்லாம் வரிசையாக வாங்க' என்று கூறி கூகுள் கூ(ட்)டலில் இணைத்துவிட்டேன். அந்த தகவலைப் பார்த்த மற்றொரு கூகுள் நண்பர் இந்த பாம்புக்கு ஏற்கனவே மூணு தலை தானே இருந்தது என்று கூறி அவரும் ஒரு இணைப்பை எடுத்து அனுப்பினார். ஏழு தலை நாகம் பதஞ்சலி மகிரிஷி தான் என்று சத்தியம் செய்து இது கிராபிக்ஸ் படமில்லை என்று சாதித்துக் கொண்டிருந்த பதிவில் சென்று அந்த 'மூன்று தலைகள் நாகம்' குறித்த இணைப்பைப் கொடுத்துப் பின்னூட்டம் போட்டப் பிறகு பதிவையே தூக்கிவிட்டார்கள். ஆனாலும் வேறொரு இணையப்பக்கத்தில் அந்த தகவல் அப்படியே இருக்கிறது.

* ஒரு தகவலை யாரேனும் சொன்னால் அதன் நம்பகத்தன்மை குறித்து கொஞ்சம் கவலையின்றி நாலு பேருக்கு வதந்திகளைப் பரப்புவதில் உள்ள இன்பம் என்ற வகையில் இதைப் பார்ப்பதுடன், இது போன்றெல்லாம் அற்புதங்கள் நடந்தால் தான் தன் நம்பிக்கைகள் போற்றப்படும் என்கிற தவறான நம்பிக்கைகளையும் பலர் கொண்டு இருக்கின்றனர்.


*****

பாம்பு, இருட்டு இதற்கான அடிப்படை அச்சம் ஒவ்வொரு மனிதருக்குமே உண்டு, பாம்பு, இருட்டு (எமன்) இவைகள் தெய்வமாக மாறியதற்குக் காரணமே அதன் மீது இருக்கும் அடிப்படை பயம், அதைப் போற்றிவிட்டால் அது நம்மை அச்சப்பட வைக்காது அல்லது அச்சமின்றி இருக்கலாம் என்ற உளவியல் காரணங்களால் இவைகள் தெய்வமாயின, நாகம் என்று வாய் சொல்லாகச் சொன்னால் கூட ஏற்படும் அச்சத்தைப் போக்கிக் கொள்ள 'நல்ல பாம்பு' என்று கூறிவருகிறோம், நல்ல பாம்பு என்று கூறிவந்தாலும் அதற்கு நாம் முத்தம் கொடுக்க முடியுமா ? அச்சமற்றவன் (தைரியசாலி) என்று கூறிக் கொள்ள அச்சம்(பயம்) இல்லாதது போல் நடிப்பது போன்றது நம்மை நாம் ஏமாற்றிக் கொள்ள நாமாக ஏற்படுத்திக் கொண்டவையே பாம்பை தெய்வமாக்கியதும், நல்ல பாம்பு என்றதும். பாம்புகள் நம்மைப் பார்த்து அச்சமடைகின்றன, பல்வேறு உயிரினங்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவற்றிற்கு இயற்கை வழங்கி இருக்கும் பாதுகாப்புகள் போன்றவையே பாம்புக்கு நஞ்சு. மற்றபடி யாரைத் தீண்டலாம் என்று எந்த பாம்பும் வஞ்சத்துடன் பார்த்துக் கொண்டு இருப்பது கிடையாது.

அரங்கநாதன் அல்லது நாரயணனின் படுக்கையாகவும், சிவன் கழுத்து மாலையாகவும் பாம்புகள் இருப்பதற்கு என்ன காரணம் ? கடவுளுக்கு உருவங்கள் உருவகங்கள் போல் பாம்பு அந்த உருவகத்தில் அமைந்த மற்றொரு உருவகம் அவ்வளவு தான், அதற்கு மேல் ஒன்றுமே இல்லை, பொதுவாக பஞ்சமா பாதகம் அல்லது பெரும்பாவங்கள் என்று சொல்லப்படும் (மிதமிஞ்சிய) காமம் அல்லது காமவெறி, வெறுப்பு, பொறாமை, பேராசை, ஆணவம் ஐந்து தீய குணங்களைக் கொண்டவன் தீயவன் என்றும் அது இல்லாதவனை நல்லவன் என்றும் சொல்லுகிறார்கள், இதை இந்தி அல்லது வடமொழியில் காம, க்ரோத, லோப, மோக, அஹங்காரம் என்று சொல்லுவர். தீய எண்ணங்களால் ஆட்கொள்ளப் படாததே தெய்வாம்சம் அல்லது தெய்வீகத் தன்மை என்று சொல்லப்படும், நாகம் தீயது தீண்டி கொல்லக் கூடியது என்ற உருவகத்தில் இந்த ஐந்து தீய எண்ணங்களை இணைப்பாக ஐந்து தலை நாகம் உருவகப்படுத்தப்பட்டு அது  குடையாக இருப்பதாகவும் பஞ்சணையாக இருப்பதாகவும் நாராயணன் படங்கள் வரயப்பட்டது, அதே போன்று தீய எண்ணத்தின் உருவகமான நாகத்தை அணிகலனாக அணிந்தவர் என்று சிவன் படங்கள் வரையப்பட்டன. வேறு மாதிரி விளக்க வேண்டுமென்றால் 'நாய்கள் ஜாக்கிரதை' அறிவிப்பு பலகை என்பது வெளி ஆட்களுக்குத் தான் அன்றி அதை வளர்ப்பவர்களுக்கான எச்சரிக்கைக் கிடையாது. என்னதான் ஒருகடியில் ஒரு கிலோ சதையை கவ்வி எடுக்கக் கூடிய நாயாக இருந்தாலும் அதனை கட்டுப்படுத்தி வளர்ப்பவர்களுக்கு அது நன்றி உள்ள நாய், வளர்ப்பவரின் கட்டுப்பாட்டில் உள்ளவை, அந்த நாய் வளர்ப்பவர்களை ஒன்றும் செய்யாது தவிர அவர்களை பாதுகாக்கும், அதைப் பார்த்து வளர்ப்பவர்கள் அச்சம் அடைவதில்லை, தீய எண்ணங்களின் பிடியில் இருப்பவர்களுக்கும். 

தீய எண்ணங்களை கட்டுபடுத்தி வைத்திருப்பவர்களுக்கும் இருக்கும் அடிப்படை வேறுபாடுகளே மனிதன் - தெய்வம் குறித்த வேறுபாடுகள், இதைத் தான் இந்திய சமய உருவ வழிபாடுகளின் உருவங்களில் பாம்புகளும் சேர்த்தே வரையப்பட்டிருப்பதாகக் காண முடியும், முருகனுக்கு கால் அடியிலும், பிள்ளையாரின் இடுப்பு பட்டியாகவும் பாம்பு இருக்கும். இவை தத்துவ ரீதியான விளக்கம், இதைச் சொல்வதால் நான் இந்திய சமயங்களுக்கு முட்டுக் கொடுக்கிறேன் என்று பொருளும் இல்லை, தத்துவங்கள் மதங்களைக் கடந்தவை, மனித நலனுக்காக ஏற்படுத்தி வைக்கப்பட்டவை என்பதை மறுக்கும் எண்ணம் எனக்கு அமையப் பெற்றதும் இல்லை, தந்தைப் பெரியாரையும், இராமலிங்க வள்ளலாரையும் ஒன்றாக வைத்துப் பார்க்கும் மனநிலை வாய்க்கப் பெற்றவன் நான், தவிர விமர்சனங்களுக்கு பயந்து 'மூடிக் கொள்ளலாம்' என்று என்றுமே நினைத்ததும், என்னைப் பற்றிய எண்ணம் மாறிவிடுமோ என்றெல்லாம் நான் நினைப்பதே கிடையாது.

உண்மையிலே ஏழு தலைகள் கொண்ட நாகம் இருப்பதாக நம்புவதன் விளைவே பதஞ்சலி முனிவர் பற்றிய அற்புதமாக பரப்பப்பட்டுள்ளது, அவர்கள் காட்டி இருக்கும் படத்தில் பதஞ்சலி முனிவருக்கு பின்னால் இருக்கும் படத்தில் ஐந்து தலைகள் நாகமே உள்ளது, இவர்கள் எப்படி ஏழு தலைகள் நாகத்தைக் காட்டி பதஞ்சலி காட்சி கொடுத்தார் என்று நம்புகிறார்களோ தெரியவில்லை. இதற்கு பதிலாக சப்தரிஷிகள் காட்சி கொடுத்தார்கள் என்றாவது இவர்கள் நம்பி இருக்கலாம், ஆக தகவல் பிழை அடிப்படையிலும் இவர்களின் நம்பிக்கைகள் பொய் தான்.

இவர்கள் மட்டுமல்ல, அனைத்து மதங்களிலுமே இது போன்ற அற்புதகங்களுக்கு வாய்பிருப்பதாக நம்புகிறார்கள், இரண்டு தலையுடன் பிறந்தாலே அந்த பாம்பு பரிதாபத்துக்கு உரியது என்றே சொல்லுகிறார்கள், ஒரு தலை வலப்புறமாக செல்ல விருப்பப்பட மறு தலை இடப்புற செல்ல விரும்பம் போராட்டத்தில் பாம்பு முடிவெடுக்கத் தெரியாமல் திணறிக் கொண்டு இருக்குமாம், பின்னர் எந்த தலையின் மூளை விரைவாக செயல்படுகிறதோ அந்தப் பக்கம் பாம்பு செல்லுமாம், ஒரு தலைக்கு பசி உணர்வும், மறு தலைக்கு உண்ட களைப்பும் இருக்குமாம், இரண்டு தலைக்கே இப்படி என்றால் ஏழு தலை நாகம் இருந்தால் அது படும்பாடு அந்தோ பரிதாபம்.

இரட்டை குழந்தைகள் அல்லது ஒரே மகப்பேரில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறப்பதும், இரண்டு தலை பாம்பு, ஆமை உள்ளிட்டவை இருப்பதும் அதிசயமோ அற்புதமோ இல்லை, அவை இயற்கையில் சில வேளைகளில் நடைபெறும் கூறுகளே, அவற்றிக்கு அறிவியல் ரீதியான காரணங்களும் விளக்கங்களும் உள்ளன, இரட்டை குழந்தைகள் பிறப்பது அதிசயம், அற்புதம் என்று நம்பப்படாத போது ஏழு தலைகளுடன் ஒரு நாகம் ஒரு வேளை இருந்தால் அது மட்டும் எப்படி அதியமாகவோ, அற்புதமாகவோ நம்ப்படும் என்று தெரியவில்லை, இறை அற்புதங்கள் என்றால் அது நம்பக் கூடியத் தன்மையைக் கடந்தது என்ற தவறான அடிப்படைப் புரிந்துணர்வுகளலாம், அவை நடைபெறுவதால் இறைவனின் இருப்பு உறுதிப்படும், தத்தமது நம்பிக்கைகள் போற்றப்படும், பொருள் படும் என்று நம்புவதன் விளைவே அற்புதங்கள் குறித்த மனிதத் தேடலாகவும், அவை குறித்த கட்டுகதைகளை பரப்புவதாகவும் உள்ளது.

*****
நம்ம சுவனப்பிரியனை எடுத்துக் கொள்ளுங்கள் 'அல்ஜிமர்ஸ் நோயை விரட்டுகிறது தொழுகை' என்று ஒரு கட்டுரையை எழுதி இஸ்லாமின் அற்புதம் பாரீர் என்று புழகாங்கிதத்துடன் கடைவிரித்துள்ளார்( Suvanapriyan version of அற்புத சுகம்) , அவரே சில நாள்களுக்கு முன்பு 'சூரிய நமஸ்காரமும் அதனால் எழுந்த சர்ச்சையும்' இந்திய யோகா குறித்த தனது ஒவ்வாமையை பதிவு வாந்தியாக எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது, 

"நம் நாட்டில் சூரிய நமஸ்காரத்தை வழக்கமாக கொண்டுள்ள பலரும் அறியாமல் நோயை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள். நம் நாட்டில் கண்பார்வை மங்கியவர்களின் விகிதாச்சாரமும் தோல் வியாதியின் விகிதாச்சாரமும் அதிகமாக இருப்பதற்கு இந்த சூரிய நமஸ்காரமும் காரணமாக இருக்கலாம்." - சுவனப்பிரியனின் உளறல்.

முரண்பாடுகளைத் தான் நாம் விமர்சனம் செய்கிறோம், குனிந்து நிமிரும் தொழுகையால் கூன் விழும் ஆபத்து உண்டு, முதுகு தண்டுவடம் தேயும், பாதிப்பு அடையும், ஆண்களின் விந்தகம் (Prostate)  அடிக்கடி அழுத்தம் ஏற்படுவதால் பாதிக்கப்படும் என்று ஒரு நாசா விஞ்ஞானி கூறியுள்ளார் என்று ஒருவர் காணொளி காண்பித்தால் சுவனப்பிரியனுக்கு இனிப்பாக இருக்குமா ?

மேலும் இணைப்புகள்.
ஆக ஒருவருக்கு அற்புதமாக தெரிவது மற்றவருக்கு அற்புதமாக தெரியத் தேவை இல்லை, இவையெல்லாம் அவரவருக்கு வெறும் நம்பிக்கை மட்டுமே.

*****

இவர்கள் மாய்ந்து மாய்ந்து எழுதும் அற்புத விளக்கங்களினாலும், இயற்கைக்கு மேம்பட்ட சக்தி கடவுள் நினைத்தால் சாத்தியமே என்று இவர்கள் எழுதிவதில் இருந்தும் எனக்கு விளங்காதவை ஒன்று உண்டு. இயற்கைக்கு மேம்பட்ட சக்திகள் எல்லாம் கடவுளின் இருப்பை உறுதிப்படுத்தும் என்ற நம்பிக்கை உண்மை என்றால். ஓருபால் சேர்கையாளர்களையும், திருநங்கைகளையும் @#%%&&& கொழுப்பெடுத்தவர்கள், அரிப்பெடுத்தவர்கள் என்றும் இவர்கள் எள்ளி நகையாடுவதன் முரண்பாடுகள் எத்தகையது ?  இவையெல்லாம் அற்புதம், விசித்திரம் என்ற வகைக்குள் வராதா ? இயற்கைக்கு மாறுபட்டு பாம்புக்கு பல தலைகள் இருந்தால் அதிசயம், அற்புதம், இயற்கைக்கு மாறுபட்ட ஒரு பால் விருப்பம், திருநங்கைத் தன்மை ? இவர்களின் படைப்புகள்  மட்டும் யார் செயல் ?

அனாதைகள் கடவுளின் குழந்தைகள் என்றால் கடவுளுக்கு செய் குடும்பக் கட்டுப்பாடு - கலைஞானி கமலஹாசன்

10 ஆகஸ்ட், 2012

பிணம் தின்னிக் கழுகுகள் !


மனிதனைத் தவிர்த்து ஏனைய உயிரினங்களுக்கு ஓய்வு பெற்ற வாழ்க்கை (Retired Life) என்பதே கிடையாது, இடையே அவை வேட்டையாடப்பட்டு உணவாக்கப்படுகிறதா ? அல்லது வளர்த்தே உணவாக்கப்படுகிறதா ? என்பதெல்லாம் அவை காட்டு விலங்கா ? வீட்டு விலங்கா ? என்பதைப் பொறுத்தது. மனிதன் உண்ணும் விலங்கினம் பறவை இனம, மீன் இனம் இவற்றிற்கெல்லாம் மனித வயிரே இடுகாடு அல்லது அவர்களது சமையல் அறையே சுடுகாடு மற்றும் அவர்களது குளிர்சாதனப் பெட்டியே பிணவறை. வளர்ப்பு விலங்குகள் பறவைகள் தவிர்த்து மற்ற விலங்குகளின் ஓய்வு கால வாழ்க்கை என்ன என்பதெல்லாம் நமக்கு தெரியாத மற்றும் நாம் சிந்திக்காத கவலைப்படாத ஒன்று. உடல் வலிந்த விலங்கினம் தவிர்த்து ஏனைய விலங்கினங்களுக்கும் ஓய்வு கால வாழ்கை வாய்ப்பில்லை, அப்படியே இருந்தாலும் அவையும் (வேட்டைக்கு) உழைத்தால் தான் அவைகளுக்கும் உயிர் வாழ்க்கை (Survival). மனிதன் தவிர்த்த ஏனைய படைப்புகள் மனித உணவிற்கானது என்கிற மேற்குலக  (மதவாத) சித்தாந்தங்களைத் தாண்டி காட்டு விலங்குகள், பறவைகள் மீன் இனங்கள் பிழைத்திருப்பதே அதிசயம் தான். உணவு வகையில் இடம் பெறாதா வகைகளாகவும், உணவு வகைக்குள் அடங்கும் உயிரினங்களில் உற்பத்தி இனப்பெருக்கத் திறனில் மேம்பட்டு இருப்பதுமான காரணமே இன்றும் அவை நிலைத்திருப்பதற்குக்கான முதன்மைக் காரணம். அது தவிர்த்து  மனித இனத்தின் கருணையாக விட்டுவைக்கப்பட்ட உயிரினங்கள் எதுவும் கிடையாது.

*****

சிங்கையின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியில் தான் அடுக்குமாடி (Apartments) குடியிருப்பில் உள்ள என்னுடைய வீடும் இருக்கிறது. வீட்டின் அருகே அடர்ந்த காடு உண்டு, காட்டின் அடுத்தப் பகுதி கடற்கரையும் அதனை ஒட்டிய வீடுகளும் உண்டு. சிங்கையில் கலப்பில்லாத காற்றை நுகரக் கூடிய இடங்களில் அந்தப் பகுதியும் ஒன்று. அந்தப் பகுதியில் தொடர்ந்து 12 ஆண்டுகளாக வசித்துவருகிறேன். சிங்கையின் பிற குடியிருப்பு பகுதிகளைவிட இங்கு இரைச்சல் குறைவு, வாகன நெருக்கமும் குறைவு, இரவு 10 மணிக்கு மேல் மிகவும் அமைதியாக இருக்கும். அந்தப் பகுதிக்கு முன்பு வாடகைக்கு வந்து ஆறு ஆண்டுகள் வாடகை வீட்டில் குடியிருந்து அந்தப் பகுதி பிடித்திருந்ததால் அங்கேயே வீட்டை வாங்கி குடியிருந்துவருகிறோம். பிற பகுதியை ஒப்பிட எண்ணிக்கை அடிப்படையில் வீடுகள் குறைவாகவும், கடற்கரையை ஒட்டிய கிழக்கு பகுதி என்பதால் அப்பகுதி நகருக்குள் போக்குவரவுகளும் குறைவு, சனி / ஞாயிறுகளில் வணிக வளாகங்கள் / கடைத்தொகுதிகளில் பெரிதாக மக்கள் நெருக்கத்தைப் பார்க்க முடியாது, அதுவே பிற பகுதியில் உள்ள மக்கள் நெருக்கம், அங்கே வணிக வளாகங்களில் எங்கேயாவது சாப்பிடப் போனால் உட்கார இடம் கிடைக்காத நிலை. எல்லாம் நல்லப்படியாகத்தான் போய் கொண்டு இருந்தது. மேற்சொன்ன அடர்ந்த காட்டில் அரசாங்கத் திட்டம் நுழைய காட்டின் அருகே 'இந்த இடத்தில் ஒரு பள்ளியும் தனியார் குடியிருப்பும் வர இருப்பதாக' அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

அறிவிப்பைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சி ஏற்பட்டது, காரணம் இயற்கையாக அமைந்த காடுகளில் எஞ்சி இருப்பவை மிகச் சிலதான், பிற காடுகள் எல்லாம் நகர ம(மை)யமாகவும், செயற்கை பூங்காக்களாக உருவாக்கப்பட்ட நிலையில் ஒரு சில இடங்களில் மட்டுமே காடுகள் காடுகளாகவே நீடித்து இருக்கின்றன. வருத்தப்பட்டவர்களில் சிலர் அப்பகுதி குடியிருப்பாளர் அமைப்புகளில் கூடிப் பேச, 'காட்டில் கை வைக்கக் கூடாது !' என்று ஒன்று கூடி தீர்மானம் போட்டுள்ளனர்.
குறிப்பிட்ட காட்டுப்பகுதியில் நன்கு உயர்ந்த மரங்களும் அவற்றில் கழுகுக் கூடுகளும் உள்ளன, எங்கள் வீட்டு அருகே நின்றுப்பார்த்தாலும் உயர்ந்த மரங்களும் அதில் கழுகுக் கூடு இருப்பதைப் பார்க்க முடியும், கழுகுகள் அவ்வப்போது கூட்டுக்கு திரும்புவதைக் காண முடியும், கழுகுகள் பொதுவாக நெடிந்து வளர்ந்த மரங்களில் மட்டுமே கூடுகட்டும், காடுகளில் மட்டுமே அத்தகைய மரங்கள் உண்டு என்பதால் கழுகுக் கூடுகளை பொதுவாக காணுதல் மிக அரிதே. கழுகுகள் தவிர்த்து ஆந்தைகள் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட பறவை இனங்களின் சரணாலயமாக அந்த காடு இருந்துவருகிறது, அடிக்கடி சாலைப்பகுதிக்கு எட்டிப்பார்த்துச் செல்லும் காட்டுப்பன்றிகளும் வசிப்பதை நான் பார்த்திருக்கிறேன். தவிர அழியக் கூடிய நிலையில் இருக்கும் பறவைகளும், மரம் மற்றும் செடிகளும் கூட அதே காட்டில் உண்டு. பறவை ஆராய்சியாளர்கள்  (Bird Watcher) அடிக்கடி அங்கே வந்து பறவைகள் பற்றிய ஆராய்ச்சியைத் தொடந்துவந்தார்கள்.
சிங்கையில் அரசாங்கத் திட்டங்களை எதிர்ப்பதற்கு நடைமுறையில் சாத்தியமில்லை என்பதே பரவலாக நம்பபடும் ஒன்றும், பெரும்பாலான சிங்கைவாசிகளும் அவ்வாறு நம்புகிறார்கள், ஆனாலும் எதிர்ப்புகளை தெரிவிக்க வழிமுறைகள் உள்ளன, மேற்சொன்னது போல் குடியிருப்பாளர்கள் அமைப்புகளில் முறையிடலாம், அவை எதிர்ப்பாக எடுத்துக் கொள்ளப்படாமல் (மாற்றுக்) கருத்து (Feedback) என்ற அளவில் எடுத்துக் கொண்டு ஆராயப்படும். காட்டை ஒட்டி அமைந்த குடியிருப்புகள் மொத்தம் ஒரு 300 இருக்கும், அந்த 300 வீட்டில் இருந்தும் ஆளுக்கு ஒருவர் அல்லது மேற்பட்டவர் என்று கணக்கில் 300க்கும் மேற்பட்டவர்கள் கழுகுகளைக் காப்பாற்ற வேண்டும், காடுகளில் கை வைக்கக் கூடாது என்று வழியுறுத்தலும் அதை ஒட்டி பல்வேறு தரப்பினர் பேசினார்கள். எனக்கு இந்தக் கூட்டம் பற்றி அழைப்பு வந்த பொழுது 'இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதும், அழிப்பதையும் நான் ரசித்தது இல்லை' என்பதால் தயங்கமல் ஒப்புக் கொண்டேன்.


உயர்ந்த பதவியில் இருப்பவர்கள், அமைப்புகளின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், சிறு குழந்தைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்கள் ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டு பேசினார்கள், 'கட்டப் போவது பள்ளிக் கூடமாக இருந்தாலும், அதை ஏன் இந்த காட்டை அழித்துவிட்டு கட்ட வேண்டும் ?  காடுகளை அழிக்க முடியும், உருவாக்க முடியாது, அதுவாக உருவாகி இருந்தால் தான் உண்டு, அவ்வாறு உருவாகிய காடுகளில் எஞ்சி இருப்பது மிகச் சிலதான், அதை அகற்றும் முன் அது பற்றிய முழுமையாக தெரிந்து கொண்டு தான் அரசு அதில் கை வைக்கிறதா ?' என்றெல்லாம் சற்று உணர்ச்சி வசப்பட்டு பேசினார்கள், குறிப்பாக அந்த காட்டில் குடியிருக்கும் கழுகுகள் பற்றி பலரும், குழந்தைகளும் குறிப்பிட்டனர், காட்சிக்காகவும், ஆவணமாகவும் அசை படங்களை எடுத்துவந்து அந்தப் பகுதியில் வசிப்பவர்களின் கருத்துகளைக் கேட்டு தொகுத்திருந்தனர், தவிர காட்டில் வசிக்கும் உயிரினங்கள், பறவைகள் (ஆந்தை உள்ளிட்ட பிற) மற்றும் மரங்களின் புகைப்படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. 

அரசாங்கம் காடுகளை அழித்து குடியிருப்புகளையும் அதை ஒட்டி அழகிய பூங்காங்களை உருவாக்கினாலும், அந்த பூங்கக்களில் விலங்குகள் பறவைகளும் வாழும் சூழலை அது உருவாக்கவில்லை என்பதே பலரின் குற்றச் சாட்டாக இருந்தது, மைனா, காகம், புற, குயில் உள்ளிட்ட பறவை இனம் தவிர்த்து பிற பறவை இனங்களெல்லாம் ஆள் நடமாட்டம் இல்லாத இறைச்சல் இல்லாத பாதுகாப்பான சூழலில் தான் வசிக்க விரும்பும், எனவே பூங்காக்களினால் அவற்றிற்கு பலன் இல்லை, சென்ற திங்கள் (மாதம்) பீஷான் பூங்கப்பகுதியில் காட்டுப்பன்றி அங்கு சென்றவர்களை கடித்துவிட்டது என்ற முறையிடல்கள் வர, காட்டுப்பன்றிகள் பிடிக்கப்பட்டு விலங்கியல் பூங்காவிற்கு அனுப்பப்பட்டது இதையும் கூடி இருந்தவர்கள் அறிந்திருந்தனர், இந்தக் காட்டுப்பகுதியை அழிக்கக் கூடாது என்பதற்கு போதிய காரணங்களை நாங்கள் முன்வைக்கிறோம், அரசு அந்தக் காட்டில் கைவைப்பதற்கு தகுந்த காரணங்களை எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கடுமையாகவே பேசினார்கள். அங்கு வந்திருந்த அரசாங்கத் தரப்புகள் எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுக் கொண்டு இதுபற்றி முடிவுகள் பின் அறிவிக்குமாறு தெரிவித்தனர், இது தொடர்பாக நடக்கும் அடுத்தடுத்த கூட்டங்களுக்கு குடியிருப்பாளர்கள் வருவதாகவும் ஒருமனதாக ஒப்புக் கொண்டனர், முடிவுகள் இன்னும் வரவில்லை, அதற்கு ஒர் ஆண்டாவது ஆகலாம். 

எனக்கு ஒன்றே ஒன்று மனதை கொஞ்சம் உறுத்தியது, கூட்டத்திற்கு வந்தவர்கள் அனைவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட (மினரல்) தண்ணீர் பாட்டில் வழங்கினார்கள், அதற்கு பதிலாக பொதுத் தண்ணீர் குடுவையை வைத்து விட்டு பேப்பர் டம்பளர்களை வைத்து விருப்பப்படுபவர்கள் எடுத்துக் கொள்ளும்படி ஏற்பாடு செய்திருக்கலாம், நான் பார்த்த வகையில் தண்ணீர் பாட்டில் கையில் வைத்திருந்தவர்களில் பாதிபேர் பாதி தண்ணீரை குடித்துவிட்டு பாட்டிலை அங்கேயே வைத்துச் சென்றார்கள். அமைப்பினர் பணம் கொடுத்து வாங்கும் பாதி தண்ணீர் வீண் என்றாலும் ப்ளாஸ்டிக் பாட்டில் சுற்றுச் சூழலுக்கு உகந்ததும் அல்ல. சுற்றுச் சூழல் பற்றிப் பேசும் பொழுது இது போன்றவற்றிலும் கவனம் செலுத்தினால் நிகழ்வுகள் முழுமையாக உணர்வுடன் கலந்தே வெற்றி அடையும்.

*****

பொதுவாகவே நகர மைய சூழலில் எந்திர வாழ்க்கையில் விலங்குகள், பறவைகள் மற்றும் காடுகள் பற்றி மக்களுக்கு அக்கரை இருக்குமா ? என்னும் கேள்வியை புறம் தள்ள வைத்தது நிகழ்வு, உலகமெங்கும் பசுமைச் சூழல் பற்றிய புரிந்துணர்வு வளர்ந்துள்ளதும் இந்த குட்டி நாட்டில் அதில் தீவிரமாகவே இயங்குகிறார்கள் என்பது தெரிய வந்தது. காடுகளை அழிப்பதால் தம்முடைய இயற்கையான வாழ்வியல் சூழலும் கெட்டுவிடுகிறது என்பதையும் கூடவே பிற உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்துகிறார்கள் என்பதும் தெரியவர நெகிழ்ச்சியாகவே இருந்தது. 'கழுகும் பறவைகளும் யாரிடம் முறையிடும் ? அவற்றை யார் காப்பற்றுவது ? யார் பொறுப்பேற்றுக் கொள்வது ? இந்தப் பகுதியில் வசிக்கும் எங்களைத் தவிர்த்து ! - ஒட்டுமொத்த மனநிலையும் எதிரொலிக்க 'எதிரே இருந்த காடுகளைப் பார்க்கும் பொழுதெல்லாம் நாளைக்கு இந்தக் காடுகள் இருக்குமா ?' என்று கேள்வி எழுப்பியவர்களின் மன நிலை தற்காலிகமாக கிடைத்த நிம்மதிப் பொருமூச்சில் அந்தக் காடுகளுக்கு தேவையான கார்பண்டை ஆக்சைகடுகளின் தேவைகளின் துளிகளாக சிலவற்றை வெளி இட்டிருக்கும். கண்டிப்பாக அந்தக் காடுகளும் கழுகுகளும் காப்பாற்றப்படும் என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது.

கூட்டத்துக்கு போனிங்களே என்ன ஆச்சு ? மகளும் மனைவியும் கேட்க 'நான் பார்த்த வகையில் தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கும் பிணம் தின்னிக் கழுகள் எதுவும் இங்கே இல்லை அதனால் இப்போதைக்கு காட்டுல கைவைக்க மாட்டாங்க, வீட்டெதிரே வசிக்கும் வெள்ளை வயிற்றுக் கழுகள் இங்கே தான் வாழும்' என்றேன்.8 ஆகஸ்ட், 2012

யுனிக்ஸ் மற்றும் விண்டோஸின் மதங்கள் !


இன்றைக்கு பரவலாக இருக்கும் ஆப்ரேட்டிங்க் சிஸ்டம் (OS) எனச் சொல்லப்படும் இயங்கு தள மென் பொருள்கள் இவை இரண்டு தான். இவை வளர்ந்தவிதம் பற்றி எளிமையாக விளக்க ஆப்ரகாமிய மற்றும் இந்திய மதங்களை ஒப்பிட்டு விளக்கலாம், விண்டோஸ் இயங்கு தள மென் பொருள் ஆப்ரகாமிய மதங்களின் வளர்ச்சியைப் போன்றது அதாவது MS-DOS தான் ஆப்ரகாம், அதிலிருந்து பழைய விண்டோஸ் 3.1 வெர்சன், பின்னர் 3.2, 95, 98, 98SE, Me, 2000, XP, Win 7 மற்றும் தற்போதைய Windows 8 வரை ஒற்றையாக பரிணாமம் கண்டவை. அதே போன்று Unix இந்தியாவின் துவக்க மதம் , பின்னர் சமணம், பவுத்தம், சாக்கியம், சைவம், வைணவம் என்று பல பரிணாமங்களைக் கொண்டது போன்று BSD, Novel, Solaris, Linux, Red-hat Linuz, HpUX, Mac, Ubundu என்று தனித் தனியாக ஒன்றிலிருந்து கிளைந்து 100க் கணக்கான யுனிக்ஸ் வகை இயங்கு தளங்கள் தனித்தனியாக வளச்சி கண்டன. யுனிக்ஸ் வகை பரிணாமங்களில் இந்திய சமய அடிப்படையில் புதிய மதம் ஏற்படவும், புதிய சாமி(யார்)கள் ஏற்படவும் நிறைய வாய்ப்புகள்  உள்ளன என்பது போல் யுனிக்ஸ் அதன் அடிப்படையைச் சார்ந்து  நீங்களும் உங்களுக்கு தேவையானபடி யுனிக்ஸை வடிவமைத்துக் கொள்ளலாம், அப்படித்தான் லினெக்ஸ், மேக், உபுண்டு போன்றவை தனித்தனியாக ஆதிக்கம் செலுத்திவருகின்றன. 

விண்டோஸ் வளர்ச்சி விகிதம் இதற்கு மாறாக முன்பு இருந்த பழைய விண்டோக்களை புறக்கணிக்கும் படி வெளிப்படையாகவே கூறி புதிய வடிவத்தைப் பற்றி பேச வைக்கும், இருந்தாலும் XP அளவுக்கு, Win 7 அல்லது Vista வைப்பிடிக்க வில்லை என்று கூறி XP யிலேயே தொடர்வார்கள் உண்டு. Win 7 வைப் பொறுத்த அளவில் அதனால் XP ஐ புறக்கணிக்க முடியாது, ஏனெனில் அதன் பரிணாமமாக வளர்ந்தவை தான் Win 7. இதைவைத்து ஆப்ரகாமிய மதங்கள் அதாவது மைக்ரோ சாப்ட் மென்பொருளைப் போல் புகழ்பெற்றுள்ளன என்று சொல்லவரவில்லை, அப்படி ஒப்பிடப் போனால் மைக்ரோசாப்ட் இயங்குதளம் உறுதியான கட்டுமானம் கொண்டவை அல்ல போதிய பாதுகாப்பற்றது என்ற நிலையில் பெரிய நிறுவனங்களுக்கும், மென் பொருள் விலை தொடர்பில் பணம் இல்லாதவர்களாலும் வாங்க முடியாத நிலையில் இருக்கின்றது என்பதையும் ஒப்பிட வேண்டும். குறிப்பாக யுனிக்ஸ் தனிப்பட்ட நபரின் கண்டுபிடிப்பு அல்ல, அவை குழுவாக உருவாக்கிப் பின்னர் பல பரிணாமங்களில் வளர்ந்து சென்றவை, மைக்ரோ சாப்ட் ? ஆப்ரகாமைப் படைத்த ஜெஹோவா / அல்லாவைப் போல் (அல்லாவை ஜெஹோவாவிற்கு இணைவைக்கலாமா ? இஸ்லாமிய அன்பர்கள் விளக்கினால் ஏற்றுக் கொள்கிறேன்) பில்கேட்ஸ் ஒருவரால் உருவாகி வளர்ந்தது. இவை போன்ற காரணங்களால் யுனிக்ஸ் மற்றும் விண்டோஸ் முறையேயான ஒப்பிடுகளை செய்துள்ளேன். சரி அதைவிடுவோம், 

**********

கணிணிகளைப் பொருத்த அளவில் அதன் ப்ராசசர் (Intel, AMD உள்ளிட்ட CPU or Processor) எனப்படும் கணிணி சில்லு தான் முதன்மையானவை,  இதனுடன் நேரடி தொடர்பில் இருக்கும் கணிணி மொழியை Machine Languageஅல்லது Binary Language என்று சொல்லுவார்கள், Machine 
Language புரோக்கிராம் வடிவத்திற்கு கடினமானவை என்பதால் இயங்கு தள மென் பொருள் புரோகிராம் (VB, C, Java)  மொழிகள் மூலம் எழுதப்பட்ட அப்ளிகேசன் எனப்படும் பயனீட்டு மென்பொருள்களை அமைத்து அதனை Kernel (Core OS) எனப்படும் தொடர்பு அமைப்பில் தொடர்பு கொள்ள Kernel அதனை மெசின் லாங்க்வேஜிற்கு மாற்றி கணிணி சில்லுடன் தொடர்பு கொண்டு பேச நமக்கு தகவல்கள் கிடைக்கின்றன.


இந்த Kernel வடிவமைப்பில் இருந்து தான் UNIX and Windows மாறுபடுகின்றன, ஒவ்வென்றும் தமக்கேற்ற Kernel அமைத்து அதன் பிறகு User Interface எனப்படும் பயனீட்டாளர் தொடர்பு முகப்பு மென்பெருளை அமைக்கின்றன, User Interface இதைத்தான் ஆப்ரேட்டிங்க் சிஸ்டம் அல்லது இயங்குதளம் என்கிறோம், மைக்ரோசாப்ட் விண்டோஸ்களில் என்ன பிரச்சனை என்றால் வாங்குபவருக்கு பயன்படுகிறதோ இல்லையோ Buffet உணவு போல் எல்லாவித அப்ளிகேசன்களையும் சேர்த்தே தருவார்கள், பயன் இருக்கிறதோ இல்லையே பல மென்பொருள்கள் இயங்கிக் கொண்டு தான் இருக்கும். 

இதற்கு மாற்றாக யுனிக்ஸ் பயனீட்டாளர் எது தேவையோ அதை மட்டும் தேவையின் போது பயன்படுத்தும்படி அமைத்துக் கொள்ளலாம், அதனால் தான் யுனிக்ஸ் பலரால் பலவடிவங்களில் பல பயனீடுகளுக்கு ஏற்ற வகையில் மாற்றப்பட்டு சந்தையில் கிடைக்கிறது, ஆனாலும் அடிப்படையில் அவற்றின் செயலாக்கம் ஒன்று தான். உதாரணத்திற்கு ஆப்பிள் கணிணி Mac மென் பொருளில் இயங்குகிறது, இதுவும் யுனிக்ஸ் வகை தான், ஒரு ஆப்பிள் கணிணியில் பயனீடு என்ற வகையில் கிராபிக்ஸ் அப்ளிகேசன் மற்றும் இணைய உலவி மற்றும் எழுதி (வேர்ட் ப்ராசசர்) இவற்றை மட்டுமே வைத்து விற்பனைக்கு அனுப்புவார்கள், வேறு எதாவது குறிப்பாக மைக்ரோசாப்ட் ஆபிஸ் போன்றவை நிறுவத் தேவையாக இருந்தால் அதனை வாங்கிப் பொருத்திக் கொள்ளலாம். இதுபோல் மற்ற யுனிக்ஸ் இயங்குதளங்களான Solaris, HpUX மற்றும் Redhat Linux and Ubundu போன்றவை பயனீட்டாளரின் பயனுக்கு ஏற்ற வகையில் அதன் Graphical User Interface எனப்படும் முகப்புகளும், அப்ளிகேசன்களும் அமைக்கப்பட்டு இருக்கும். அதாவது உணவகங்களில் எல்லாமே இருக்கும், நமக்கு தேவையானதும் இருக்கும் அது தவிர அவர்கள் Value Meals என்று சிறப்பு வகை உணவுகளும் இருக்கும், நமக்கு தேவையானதை, நமக்கு பயனானதை நாம் வாங்கிக் கொள்ளலாம். அது போன்றதே யுனிக்ஸ் வகை இயங்கு தளங்கள்.

Server எனப்படும் வழங்கிச் சேவைகளில் 2000 ஆண்டு வரை மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால் ஆதிக்கம் செலுத்த இயலவில்லை, அதற்கு முன்பு சிறிய அளவில் Win NT 4 உருவாக்கி இருந்தாலும் அதன் செயல்பாடுகள் சிறப்பாகவும் இல்லை, தவிர எப்போது நீல திரையைக் காட்டும் என்றே தெரியாத நிலையில் Window Server களை உருவாக்கிவதில் மைக்ரோசாப்ட் பின்னடைந்திருந்தது. Windows Server 2000 முதன் முறையாக பல குறைபாடுகளை நீக்கி வெளியிட்டார்கள். அதற்கு முன்பு மைக்ரோசாப்டின் விற்பனை உத்தி மிகவும் அபாரமானது, யுனிக்ஸ் ஒரு கணிணியில் நிறுவ ஓரளவு யுனிக்ஸ் பற்றி தெரிந்திருக்க வேண்டிய நிலையில் திருட்டு சீடி சீரியல் எண்ணுடன் (Pirated Windows CD with Serial No) கிடைத்தால் கணிணி பற்றிய குறைந்த அறிவுள்ளவரே விண்டோஸ் இயங்குதளத்தை கணிணியில் பொருத்திக் கொள்ள முடியும் என்ற நிலையில் காப்பிரைட்டுகள் பற்றி அதிகம் கவலைப்படாமல் தாரளமாக மைக்ரோசாப்ட் நடந்து கொள்ள Windows 98 SE Desktop user பயன்பாடு என்ற அளவில் தனிப்பட்டவர்கள் பயன்படுத்தும் 90 விழுக்காடு கணிணிகளில் நிறைய பயனீட்டாளர்கள் மைக்ரோசாப்ட் அடிக்டட் என்ற நிலைக்கு மாற மைக்ரோசாப்ட் கணிணி மென்பொருள் மற்றும் இயங்குதள உலகில் ஆழமாக கால் பதித்து அடுத்த XP உள்ளிட்ட வர்சன்களில் காப்பிரைட் ஆன்லைன் ஆக்டிவேசன் உள்ளிட்டவற்றை செயல்படுத்த, பயனீட்டாளர்கள் ஏற்கனவே விண்டோஸ் மட்டுமே பயன்படுத்திய நிலையில் அதனை வாங்கத் துவங்கினார்கள். இருந்தாலும் கார்ப்ரேட் வழங்கி (Server) சேவை மைக்ரோசாப்டிற்கு கைகொடுக்கவில்லை. ஆனால் பெரும்பாலன கார்ப்ரேட்டுகளின் டெஸ்க்டாப் விண்டோஸ் இயங்கு தளமாக இருக்கும் வண்ணம் Unix Server தொடர்பு மென்பொருளையும் அவற்றிற்கான Protocol எனப்படும் அடிப்படை இணைப்புகளையும் இணைத்திருந்ததே மைக்ரோசாப்டின் சிறப்பான் வியாபார உத்தி.

வழங்கி சேவை இயங்குதளங்களை உருவாக்குவதும் அதனை பிழைகள் இன்றி இயக்குவதும் மைக்ரோசாப்டின் அரைகூவல் என்ற நிலையில் Windows Server 2000 க்கு பிறகு மேம்பட்ட வர்சனாக Windows Server 2003 ஐ உருவாக்கியது, அதுவரை மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் வழங்கி சேவைகளுக்கு யுனிக்ஸ் வழங்கியைத் தான் பயன்படுத்தி வந்தது, பிறகு .Net Frame எனப்படும் புதிய தொழில் நுட்பத்துடன் வழங்கி சேவைகளை Windows Server 2003 புகுத்த மைக்ரோசாப்டின் வழங்கி சேவைகளை கார்ப்ரேட் நிறுவனங்கள் நுகரத் துவங்கியது, அதற்கு முன்பே வழங்கி சேவைகளின் RFC Std எனப்படும் பரிந்துரைகள், வழிகாட்டல் ஆகியவற்றுடன் யுனிக்ஸ் சேவைகள் திறம்பட செயல்பட அவற்றின் மாதிரிகளை மைக்ரோ சாப்ட் விண்டோஸ் வழங்கிகளில் உருவாக்குவதி மைக்ரோசாப்டிற்கு எளிதாக ஆகியது.

மைக்ரோசாப்ட் எதையுமே புதிதாக உருவாக்குவதில்லை, ஏற்கனவே அவை உருவாகி பிரபலம் அடைந்திருந்தால் அதை மைக்ரோசாப்ட் உள்வாங்கிக் கொண்டு தனக்கு ஏற்ற அளவில் மாற்றி அமைத்துக் கொள்ளும். Word Perfect > MS Word, Lotus 123 > Ms Excel, Story Board > Ms Power Point, (IBM) Lotus Notes > Ms Exchange,  Novell NDS > Ms Active Directory, Unix DNS > Ms DNS , Adobe Flash > Ms SilverLight இது போன்று எல்லாமும் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்த நிலையில் அதன் விண்டோஸ் வடிவங்களாக மைக்ரோசாப்ட் மாற்றி க் கொண்டது தான் மைக்ரோசாப்ட் செய்தவை, Mac முகப்பைப் பார்த்து அதனை Vista மற்றும் Windows 7 ல் வடிவமைத்துக் கொண்டார்கள், புதிதாக எதையும் செய்துவிடவில்லை, ஏற்கனவே Sony PlayStation சக்கைப் போடு போட்ட பிறகு கேமிங் வடிவமைப்பில் இறங்கி  Xbox வெளியிட்டது மைக்ரோசாப்ட், பின்னர் அலைபேசி மென்பொருள் மைக்ரோசாப்டின் Windows CE அவ்வளவாக போகவில்லை என்றாலும் ஆப்பிள், ஆண்ட்ராய்டு அபாரமான வளர்ச்சியைப் பார்த்து விண்டோஸ் மொபைல் மென்பொருள்களை அமைத்துப்பார்த்தது, பெரிதாக விற்பனை ஆகவில்லை, இருந்தாலும் கொஞ்சம் காலத்திற்குபிறகு ஆப்பிள் ஆண்ட்ராய்ட் போல் முகப்புகளை மாற்றி விண்டோஸ் மொபைல் வெளிவரும் மேலும் ஆண்ட்ராய்ட் போல் இலவசமாக எவரும் பொருத்திக் கொள்ளவும் அனுமதிப்பார்கள் என்றே நினைக்கிறேன், முதலில் ஆழம் பார்ப்பது பின்னர் விற்பனைப் படகை செலுத்துவது மைக்ரோசாப்டின் கைவந்த கலை என்பதால் மொபைல் போன் இயங்குதள விற்பனையையை கண்டிப்பாக விட்டுவைக்கமாட்டார்கள்.

மைரோசாப்ட் இயங்குதளங்களில் Windows 95 to Windows 98SE பெரிய வேறுபாடுகள் இல்லை  Windows 95 Service Pack களையெல்லாம் ஒன்றாக இணைத்து முகப்பின் நிறத்தை மாற்றி Windows 98SE என்று புதுவர்சனாக விற்பனை செய்வார்கள், பின்னர் Vista மற்றும் Windows 7, Windows 2008 Std  to Windows 2008 R2 கூட அப்படித்தான். பிழைகளை சரிசெய்து அதை புதிய வர்சனாகவே மைக்ரோசாப்ட் அறிவிக்கும். அடுத்து Windows 8 மடிக்கணிணி மற்றும் மேசை கணிணி பயனீட்டாளர்களுக்கும், Windows 2012 Server வழங்கி சேவையாகவும் புதிய பரிணாமத்துடன் வெளி இட இருக்கிறார்கள்.

இதற்கிடையே VMWare, Citrix ஆகியவை மெய்நிகர் (Virtual Server / Client OS)  மற்றும் Cloud Computing தொழில் நுட்பத்துறையில் கார்ப்ரேட் நிறுவனங்களை ஆட்கொள்ள அந்த மெய்நிகர் தொழில் நுட்பத்தையும் விட்டுவைக்கக் கூடாது என்பதாக் Hyper-V மற்றும் Windows Azure ஆகியவற்றை விற்பனையில் இறக்கிவிட்டிருக்கிறது மைக்ரோசாப்ட் அதன் வளர்ச்சி விகிதம் இனிமேல் தான் தெரியும் இருந்தாலும் இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த பல இலவச அறிவிப்புகளையும் ஒண்ணு வாங்கினா ஒண்ணு ப்ரீ பாணியில் கடைவிரித்திருக்கிறது. இவை அனைத்தும் ஏற்கனவே Unix வழங்கிகளிலும் பயனீட்டு கணிணிகளும் வந்துவிட்டன. யுனிக்ஸை வீழ்த்தும் பல்வேறு முயற்சிகளில் யுனிக்ஸில் இருக்கும் Shell Script மற்றும் வெற்று இயங்கி (Core Operating System) எனப்படும் தொழில் நுட்பங்களையெல்லாம் இணைத்து Power Shell மற்றும் Windows Core ஆகியவற்றையும் மைக்ரோசாப்ட் அமைத்து சந்தைக்குள் இறக்கி இருக்கிறது. இன்னும் எழுத ஏராளம் உண்டு.

************

எனக்கும் மைக்ரோசாப்ட் தொழில் நுட்பம் தான் சோறு போடுது, மில்லியன் கணக்கானோர் வேலை வாய்ப்பு பெற்றதற்கு மைக்ரோசாப்ட் தான் காரணம், தவிர 1000க் கணக்கான மில்லினியர்களை உருவாக்கியவர் பில்கேட்ஸ் என்பதால் பில்கேட்ஸ் மீது மதிப்பும், நன்றியும் உண்டு, அவருடைய தொழில் தர்மம் மற்றும் தொழில் நுட்ப நேர்மை மட்டுமே விமர்சனம் செய்யப்பட்டே வருகிறது. மைக்ரோசாப்ட்டினால் பல மென்பொருள் நிறுவனங்கள் மூடுவிழா கண்டது குறிப்பாக NDS க்கு பதிலாக MS Active Directory வழங்கி சேவையாகப் பயன்பாட்டுக்கு வந்த பிறகு Novell காலி, ஆனாலும் முழுதாக யுனிக்ஸ் வளர்ச்சியை அவர்களால் வீழ்த்த / கட்டுப்படுத்த முடியவில்லை.

மைக்ரோசாப்ட் தொழில் நுட்பமும் உத்தியும் ஓரிரைக் கொள்கையாளர்களைப் போன்றது மாறாக யுனிக்ஸ் வகை இயங்குதளங்கள் இந்திய சமயங்களைப் போன்று தனித்தனி பரிணாமம் பெற்றிருந்தாலும் ஒன்றுக் ஒன்று தொடர்ப்புடையது. வல்லவனுக்கு வல்லவன் என்ற ரீதியில் எதிர்காலத்தில் கூகுள் மைக்ரோசாப்டை வீழ்த்தலாம் ஏற்கனவே இணைய சேவைகளில் மைக்ரோசாப்டை வீழ்த்திவிட்டார்கள். அடுத்து இயங்குதளங்களை உருவாக்கிவருகிறார்கள்,  மைக்ரோசாப்ட் ஆட்டம் காணும் நாள் தொலைவில் இல்லை.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்