பின்பற்றுபவர்கள்

20 மார்ச், 2013

முதியோர் இல்லம் - நல்லதொரு தொழில் !


இல்லறவாழ்வில் இரு குழந்தைகள் கட்டுப்பாடு மறைமுகமாக பல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது, கூட்டுக் குடும்ப வாழ்கை முறையில் இருந்து விலகிய 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் வாழ்வியலில் இரு குழந்தைகள் கட்டுப்பாடு பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது, பெற்றோருடன் தாத்தா பாட்டியையும் வைத்து பாதுகாக்கும் வழக்கம் மறைந்துவிட்டதை நம் இன்றைய காலத்தில் பார்க்கிறோம், ஓரிரு குழந்தைகள் பெற்று அதையும் வெளிநாட்டு வேலைக்கு அனுப்பிவிட்டு தனிமையில் வாடும் பெற்றோர் ஒருபுறம், அல்லது நகர சூழலில் வாழப் பிடிக்காமல் தாம் வாழும் சூழலிலேயே வாழப் (பிடிவாதம்) பிடித்து தனிமையில் வாடும் பெற்றோர் ஒருபுறம், பெற்றோர் சுமை என்றே புறக்கணிப்பில் வாழும் பெற்றோர் ஒருபுறம், ஆண் வாரிசுகளைப்  பெற்றோருக்கும் இந்நிலை தான், அதனால் ஆண் குழந்தையைப் பெருவது பெருமையானது இல்லை என்று தனிமையில் இருக்கும் பொழுது தான் பெற்றோர் உணரத் துவங்கியுள்ளனர். ஆணைப் பெற்றவர்களுக்கும் பெண்ணைப் பெற்றவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை, ஆணைப் பெற்றவர்களிடம் பிறர் மருமகள் சேர்த்துக் கொள்வாளா என்ற எந்த ஒரு கேள்வியும் பற்றி சிந்திக்காமல் நீங்கள் உங்க மகன் வீட்டில் இருக்கலாமே ? என்று கேட்பார்கள், அதன் சிக்கல் பெற்றோர்களுக்கு தெரியும் என்பதால் நகர வாழ்க்கை பிடிக்கவில்லை என்று கவுரவமாக சொல்லிக் கொள்ள முடியும், பெண்ணைப் பெற்றவர்களுக்கு மருமகன் வீட்டில் இருப்பது இழுக்கு என்று நினைத்துக் கொள்வார்கள், மாமனார் மாமியார்களையும் பெற்றோர்களாக நினைத்து கூட வாழ அனுமதிக்கும் மருமகன்கள் இன்றும் குறைவே, இதிலும் யாரையும் குறை சொல்ல முடியாது, வேலை முடிந்து அலுப்புடன் வந்தால் பணி விடை செய்யும் மனைவி இன்று கிடையாது, அவளும் வேலைக்கு சென்று அதே அலுப்புடன் தான் திரும்பி இருப்பாள், இன்றைய வாழ்க்கைச் சூழலில் மனைவியையும் வேலைக்கு அனுப்புவது தவிர்க்க முடியாது என்பதால் வயதான பெற்றோர்களை உடன் வைத்திருந்தால் கவனிப்பது யார் என்ற கேள்வி, அதைப் புரிந்து கொண்ட பெற்றோர் தனிமையிலேயே வாழ முடிவு செய்துக் கொள்கின்றனர்.

வயது ஆனாலும் கணவன் மனைவி இருவரும் இருக்கும் வரை இருவருக்கும் பாதுகாப்பு, உணவு, பணம் பற்றி எந்த ஒரு பிரச்சனைகளும் பெரிதாக எழுவதில்லை. ஆனால் அதில் ஒருவர் மறையும் பொழுது சொந்தங்கள் இருந்தும் ஆதரவற்றோர் என்ற நிலைக்கு ஆளாகின்றனர், எங்கு செல்வது எங்கு காலம் தள்ளுவது ? என்ற கேள்விகளுக்கு முன்பு விடையாக முதியோர் இல்லங்கள் தான் விடைகளாக இருக்கின்றன. சென்னைக்கு சென்றிருந்த பொழுது பழைய பெண் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது அவரது தாயார் தனிமையில் இருப்பது பற்றி தெரிவித்தார், தாம் கூட வைத்திருக்க விரும்பினாலும் வர மறுப்பதாகவும் கூறினார், அவரது தாயாருக்கு 85 வயதை கடந்து இருந்தது, காலை வேளையில் ஒரு பணிப் பெண் அன்றைக்கு தேவையானதை சமைத்துக் கொடுத்துவிட்டு வீட்டை துப்புறவு செய்துவிட்டு செல்வது தவிர்த்து வேறு யாரும் எட்டிப் பார்ப்பது இல்லையாம், இவருக்கு கவலை தாயார் ஏடாகூடமாக கழிவறை செல்லும் பொழுது விழுந்து கிடந்தால் என்ன ஆகுமோ ? ஒருவழியாக முதியோர் இல்லத்தில் சேர தாயார் ஒப்புக் கொண்டாராம், ஆனால் இவர்கள் பார்த்து வைத்துள்ள பெருங்களத்தூர் முதியோர் இல்லத்தில் தற்போதைக்கு இடமில்லை, பதிந்து வைத்துள்ளோம், யாராவது போய் சேர்ந்தால் தான் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் யாராவது சீக்கரம் போய் சேரனும் பெருமாளே என்று வேண்டி வருவதாக கூறினார், காரணம் அந்த முதியோர் இல்லம் பல வசதிகளுடன் தனி அறை, தனிக் கட்டில், தனி தொலைகாட்சி மற்றும் விருப்பப் பட்டால் தாம் பயன்படுத்தி வருகின்ற குளிச்சாதன பெட்டி கட்டில் ஆகியவற்றை எடுத்துச் சென்று வீட்டில் வசித்தது போலவே வசிக்கலாமாம், பணிவிடைகளும், தனிப்பட்ட கவனிப்புகளும் உண்டாம். சென்னையில் இருப்பதிலேயே நல்ல முதியோர் இல்லம், வாரம் ஒருமுறையாவது சென்று பார்த்து வரவவும் வசதியானது என்று கூறினார், யாராவது போய் சேர்ந்தால் தகவல் சொல்லி அனுப்புவார்கள், இடம் கிடைக்கும் என்று காத்திருக்கிறார்கள்.

முதிர்கண்ணன்கள் பெருவிட்ட காலத்திலும் முதிர்கன்னி கவிதை எழுதுவோர் உண்டு, முதியோர் இல்லம் என்றால் எதோ சமூகம் சீரழிந்து வருகிறது என்று பொங்குபவர்களும் உண்டு, இவையெல்லாம் காலத்தின் கட்டாயம் என்பதை ஏற்க மறுப்பவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் முதியோர் இல்லம் குறித்து கண்ணீர் கவிதை எழுதிவருகிறார்கள், தாமும் வயதான பிறகு முதியோர் இல்லம் தான் செல்வோம் என்று நல்ல தெளிவு உள்ளவர்கள் தயங்காமல் பெற்றோர்களை அங்கு அனுப்புகிறார்கள். முதியோர் இல்லங்களுக்கு பெற்றவர்களை அனுப்புவது அவர்களை புறக்கணிப்பது என்று பலர் புரிந்துள்ளது போல் அல்ல, அவர்களது எஞ்சிய காலம் கவனிக்கப்பட வேண்டும் அவர்களை ஒத்த வயதினருடன் பொழுது போக்கிக் கொள்வது மற்றும் தனிப்பட்ட கவனிப்பு, பாதுகாப்பு எப்போதும் இருக்கும் என்பதால் தான் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். வெளிநாடுகளில் இவை வெகு சாதாரண நடைமுறை, நமக்கு இவை அதிர்ச்சியாக தெரிகிறது, இன்னும் 30 - 40 ஆண்டுகளில் இவை நடைமுறை ஆகிவிடும். நண்பரிடம் பேசியதில் இருந்து நல்லொதொரு முதியோர் இல்லம் கிடைப்பது தான் தற்பொழுது பெரிய பிரச்சனை மற்றபடி செல்லுபவருக்கோ, அனுப்பி வைக்கப்படுவருக்கோ எந்த ஒரு மனத் தடையும் இல்லை.

எல்கேஜி அனுமதிக்கு வயிற்றில் இருக்கும் பொழுதே பதிய வேண்டும் என்பது போல் ஐம்பவது வயதில் முன்கூட்டியே பதியாமல் விட்டால் நல்லதொரு முதியோர் இல்லம் கிடைக்காது என்ற நிலைமை ஏற்படலாம்.


முதியோர் இல்லங்களுக்கு பெற்றோர்களை அனுப்புவர்கள் குறித்து புரிந்துணர்வு இன்றி தூற்றுவதும் அவ்வாறு செல்பவர்களை ஆதரவற்றோர் என்று நினைப்பதையும் நாம் மாற்றிக் கொள்ள வேண்டும், தாய் மட்டுமல்ல தந்தையும் கூட அங்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர், பள்ளி வாழ்க்கை முடிந்ததும் கல்லூரி வாழ்கையில் ஆஸ்டல் வாழ்க்கையை நாம் ஏற்கனவே பழகி இருக்கிறோம் அவையெல்லாம் உறுத்தாத போது முதியோர் இல்லங்கள் மட்டும் ஏன் நாம் கலாச்சார சீரழிவாக நினைக்க வேண்டும் ? முடிந்தால் நல்லொதொரு முதியோர் இல்லங்களை அமைப்பது தொழிலாகவும், சேவையாகவும் கூட மாற்றிக் கொள்ளலாம்.

17 மார்ச், 2013

பாலியல் தொழிலுக்கு பால் வார்க்கும் செய்தி நிறுவனங்கள் !


அண்மையில் இந்தியா சென்றிருந்த பொழுது பெங்களூரு சென்றிருந்தேன், விடுதியில் கொடுக்கப்படும் நாளிதழில் பார்வையை ஓட்டும் பொழுது வரி விளம்பரப் பகுதி கண்ணில் பட்டது, அதில் மசாஜ் விளம்பரங்கள், படித்தவுடனேயே கோபம் கொப்பளித்தது, இந்த மாதிரி ஈனத்தனமான விளம்பரங்களில் வருவாய் தேடும் நாளிதழ்களால் தான் சமூதாயம் சீரழிகிறது என்பதை அழுத்தமாகவே பதிய வைக்க விரும்புகிறேன், செய்தியின் தரம், விளம்பரத்தின் தரம் என்று எந்த விதிமுறைகளும் இல்லாததால் அவை நாளிதழ்கள் வாசிக்கும் இதயங்களில் கழிவு நீராக கலந்துவிடுகின்றன, ஆண்மைக் குறைவுக்கு வரும் விளம்பரங்களாகட்டும், ஈமு கோழி விளம்பரங்களாகட்டும், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் விளம்பரமாகட்டும், வெளிநாட்டு வேலை வாய்ப்பு விளம்பரங்கள், வீட்டில் இருந்தபடியே மாதம் 30000 ஆயிரம் சம்பாதிக்கும் வாய்ப்பு, பல்லடுக்கு தொழில் (மல்டிலெவல்) இவற்றில் மக்கள் எந்த அளவுக்கு அவைகளை நம்பி பணம் போட்டுவிட்டு பாதிப்பு அடைவார்கள் என்று இவர்கள் கொஞ்சமும் ஆய்வு நடத்தாமல் விளம்பர நிறுவனங்கள் கொட்டிக் கொடுக்கும் பணத்தில் கொழித்துக் கொண்டு நாங்கள் நான்காவது தூண்கள் என்றெல்லாம் மார்தட்டுகிறார்கள்.

சேலம் சித்தவைத்தியர்கள்  ஆண்மை இழந்த எத்தனை பேருக்கு எழுச்சி ஏற்படுத்தினார்கள் என்கிற எந்த ஒரு கணக்கும் கிடையாது, ஆனாலும் அத்தகைய விளம்பரங்களை நம்பி பணம் விரயம் செய்பவர்கள் எந்த காலத்திலும் இருப்பார்கள், சரி ஆகாவிட்டாலும் இதை வெளியே சொன்னால் வெட்கம் என்று பணத்தை கொட்டிவிட்டு செல்பவர்கள் என்றும் உண்டு என்பதே இத்தகைய விளம்பரங்கள் இன்றும் நாளிதழ் தாண்டி தொலைகாட்சி விளம்பரங்களாகவும் வளர்ச்சி பெற்றிருக்கிறது. ஈமு கொழிகளுக்கு விளம்பரம் கொடுக்காத புலனாய்வு நாளிதழ்கள் / வார இதழ்கள் / வாரம் இருமுறை புலனாய்வு இதழ்கள் ஏதேனும் உண்டா ? ஆனாலும் ஈமு கோழி ஏமாற்றுப் பேர்வழிகள் ஓடியதும் ஏதோ அவர்கள் மட்டுமே மக்களை ஏமாற்றியது போன்று கட்டுரைகள் எழுதி தங்கள் நேர்மையையும் புலனாய்வு திரனையும் பறைசாற்றுவார்கள்.

நான் பார்த்த மசாஜ் விளம்பரங்களில் மசாஜ் செய்துவிடுபவராக இந்தியர், வெளிநாட்டினர், விளம்பர மாடல்கள், மாணவ / மாணவியரும் உள்ளதாக விளம்பரம் செய்துள்ளனர். இந்தியர் வெளிநாட்டினர், விளம்பர மாடல்கள் மசாஜ் செய்துவிடுவது பெரிய குற்றமில்லை ஆனால் மாணவ / மாணவியரும் பணியாற்றுவதாக விளம்பரம் செய்வதும், அதை ஈனப்பிழைப்பாக பத்திரிக்கைகள் வெளி இடுவதும் கண்டனத்துக்குரியது ஆகும், மசாஜ் என்ற பெயரில் 90 விழுக்காடு பாலியல் தொழில்கள் தான் நடைபெறுகின்றன என்பதற்கு விளம்பரத்தில் மாணவ மாணவியர் சேவை இருப்பதாக காட்டி இருப்பதை விட வேறு என்ன சான்று கொடுக்க முடியும் ? உண்மையில் உடல்வலிக்காக அல்லது சிகிச்சைக்காக மசாஜ் செய்து கொள்பவர் மாணவ மாணவியர் அதை செய்தால் திருப்தியாக இருக்கும் என்று நினைப்பார்களா ? பிறகு ஏன் இவர்கள் மாணவ / மாணவியர் மசாஜ் சேவை இருப்பதாக விளம்பரம் செய்கிறார்கள் ? அதை ஒரு ஏமாற்று விளம்பரம் என்று வகைபடுத்தினாலும் கூட பாலியல் தொழிலை ஊக்குவிக்கும் ஒரு விளம்பரம் என்று தானே கொள்ள முடியும் ?

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து தற்பொழுது தான் கொஞ்சமேனும் விழிப்புணர்வு எட்டியுள்ளது. இது போன்ற விளம்பரங்கள் சமூக வாழ்வை சீர்குலைக்கச் செய்வதுடன், சமூக அமைப்பையே சிதைக் கூடியது ஆகும், மாணவ மாணவியர் மசாஜ் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பவனுக்கு இந்த விளம்பரம் வாய்பை அளிக்கிறதோ இல்லையோ, மாணவ மாணவியரிடம் சில்மிசம் செய்யலாம் என்கிற எண்ணத்தை ஏற்படுத்திவிடும், தவிர ஏழை மாணவ / மாணவியர் அல்லது விருப்பம் போல் செலவு செய்ய ஏங்கும் / நினைக்கும் அவர்களின்  கண்களில் இது போன்ற விளம்பரங்கள் பட்டால் அந்த மசாஜ் நிறுவனங்களில் மசாஜ் செய்வராக வேலை செய்ய விருப்பம் தெரிவித்து பாலியல் தொழில் பாதாள குழிக்குள் தள்ளப்பட்டுவிடுவார்கள்

மத்திய அரசிலும், மாநில அரசிலும் தணிக்கை துறைகள் உண்டு, அவர்களின் கண்களில் இந்த விளம்பரங்கள் படுவதில்லையா ? ஏன் அவற்றையும் குறிப்பிட்ட பத்திரிக்கைகளையும் தடை செய்வதில்லை ? 

************

பத்திரிக்கை நான்காவது தூண் என்று எவரும் சொன்னால் செருப்பைக் கழட்டிக் காட்டலாம், ஈமு கோழிகள் வளர்ப்பு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு என்றெல்லாம் மோசடி பேர்வழிகள் சிக்கும் பொழுது நடைபெரும் போராட்டங்களில் குறிப்பிட்ட விளம்பரங்களை வெளியிட்ட செய்தி இதழ்/ தாள் நிறுவனங்கள் முன்பும் முற்றுகை போராட்டம் நடத்தி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இரு தரப்பில் இருந்தும் நட்ட ஈடு பெற்று தந்தால் ஒழிய இத்தகைய ஈனத்தனம் ஒழியாது. மாணவ மாணவியர் மசாஜ் சேவையில் உள்ள  வரும் வெளம்பரத்தை வெளியிடும் செய்தி நிறுவனங்கள் மீது ஏன் யாரும் பொது வழக்கு தொடுக்கக் கூடாது ?  அந்த பத்திரிக்கைகளை ஏன் தடை செய்யக் கூடாது ? 

பலர் நாடிப் படிக்கும் செய்தி இதழ்களில் இத்தகைய விளம்பரங்களை வெளியிடுவதும், முறையற்ற பாலியல் தொழிலும் பெரிய வேறுபாடுகள் இல்லை. இவர்களும் ஒருவகையில் 'மாமாக்களே'

5 மார்ச், 2013

யார் அந்த அதிகாரி ?


நான் செய்தி நிறுவனங்கள் எதையும் முழுதாக நம்புவதில்லை, செய்தி ஊடகங்கள் அனைத்துமே அரசு சார்பு அல்லது எதிர்ப்பு ஊடகங்கள் தான், தாங்கள் கட்டுப்பாடற்றவர்கள் என்று செய்தியாளர்கள் கூறிக் கொண்டாலும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக அல்லது தனக்கு வேண்டிய எதிர்கட்சிக்கு ஆதரவாக, அல்லது தாம் சார்ந்த அமைப்புகளுக்கும், தங்கள் கொள்கைக்கு எதிராகவும் செய்திகளை திரித்து வெளி இடுவது அல்லது தேவையற்ற தகவல்களை திணிப்பது இவை தான் செய்தி இதழ்களின் தலையாயப் பணி,  செய்திகளை முந்தித்தருவது என்றெல்லாம் போட்டித் தன்மை சமாளிப்பு என்ற பெயரில் மக்கள் மூளையை கிறங்கச் செய்வதில் செய்தியாளர்களுக்கு நிகர் அவர்களே தான், ஒருவரை உயர்த்திப் பிடிப்பதும், சாதனைகளை கண்டுகொள்ளாமல் விட்டு புறக்கணித்து முன்பு தூக்கியவர்களை கீழே போடுவதும் அவர்களின் சர்குலேசனுக்கு ஏற்ற கலை.

செய்தியாளர்கள் பொதுச் சேவையாளர்கள் இல்லை, அவை நிறுவனங்கள் தான், எல்லா தொழில்களிலும் லாபம் ஈட்டும் நோக்கமே முதன்மையானது என்பது போல் தான் செய்தி நிறுவனங்களும், இவர்களின் செய்திகளின் தரம், அதில் நேர்மை இவற்றின் விழுகாட்டு வேறுபாடுகள் தான் ஒரு செய்தி நிறுவனம் மக்கள் இடையே புகழடைந்து விற்பனையில் கூடுகிறதா இல்லையா என்பதையெல்லாம் முடிவு செய்யும், தகவல் என்ற அடிப்படையில் எதையும் நாம் அவர்களிடம் இருந்து தெரிந்து கொண்டாலும் அவர்கள் அதில் விதைத்துள்ள அல்ல மறைத்துள்ள அரசியலையும் சேர்த்தே நுகர்கின்றோம் என்பதே உண்மை. எனவே செய்தி இதழ்களின் எந்த நிகழ்வு பற்றிய தகவல்களுக்கு நாம் உணர்ச்சி வசப்படலாம் என்பதையெல்லாம் அவரவர் தெளிந்து முடிவு செய்வதே நன்மை இல்லாவிட்டாலும் இரத்த அழுத்தம் கூடாமல் இருக்கும், செய்தியாளர்களால் புரட்சி நடந்திருக்கிறது, ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது, ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது என்பதெல்லாம் கூட உண்மை தான், ஆனாலும் அவற்றைக் காரணமாக வைத்து அவர்கள் என்னேரமும் மக்கள் நலன் குறித்து சிந்திக்கிறார்கள், அதுபற்றி எழுதுகிறார்கள் என்று சொல்வதற்கில்லை

கிழே உள்ள இரண்டு செய்திகளை கவனமாக படிக்கவும், அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை

************

சென்ற மாதம் ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு தொடர்பில் வெளி வந்த செய்திகளில் ஒன்று.....

ஹைதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்பிருப்பதாகக் கூறி ஜார்க்கண்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் மன்சர் இமாம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரது விவரங்களை அளிக்க இமாம் மறுத்துவிட்டார்.

ஏற்கனவே அகமதாபாத் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்பிருப்பதாகக் கண்டறியப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக மன்சர் இமாம் தேடப்பட்டு வந்துள்ளார். இவருக்கு ஹைதராபாத் குண்டு வெடிப்பிலும் தொடர்பிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Read more at: http://dinamani.com/latest_news/article1487767.ece

இன்று ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு தொடர்பில் வெளி வந்த செய்திகளில் ஒன்று.....

டெல்லி: ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு தொடர்பான விவரங்களை பாகிஸ்தான் உளவாளிக்கு கொடுத்த தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி) அதிகாரி விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். 

இந்திய ராணுவத்தில் மேஜர் நிலையில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் தேசிய பாதுகாப்புப் படைக்கு மாற்றப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் உளவாளி என்று சந்தேகிக்கப்படும் ஒருநபர் அவரை தொலைபேசியில் அழைத்திருக்கிறார். ஆனால் அவருக்குப் பதிலாக வேறு ஒரு அதிகாரி பேசியிருக்கிறார். அந்த உளவாளியும் குறிப்பிட்ட அதிகாரியிடம்தான் பேசுகிறோம் என்று நினைத்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இது தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

பாகிஸ்தான் உளவாளியுடன் தொடர்பில் இருந்த அதிகாரி, ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு இடத்தை நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தவர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவல் மற்ற புலனாய்வு அமைப்புகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டு உஷார் படுத்தப்பட்டனர். 

இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு படை தலைவர் அர்விந்த் ரஞ்சன், அந்த அதிகாரியை தொலைபேசியில் அழைத்த நபர் யார் என்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார். 

மேலும் ஒரு அதிகாரி... 

இதனிடையே ராஜஸ்தானில் கைதான ஐஎஸ்ஐ உளவாளியுடன் தொடர்புடைய மற்றொரு அதிகாரியிடம் டெல்லி போலீசாரும் புலனாய்வு அமைப்பினரும் விசாரணை நடத்தினர். கடந்த மாதம் பொக்ரானில் நடைபெற்ற விமானப் படைப் பயிற்சியின்போது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உளவு பார்த்ததாகவும் சில முக்கியத் தகவல்களை அந்த அமைப்புக்கு அளித்ததாகவும் சுமர் கான் என்பவர் சிக்கினார். அவருடைய தொலைபேசி அழைப்புப் பட்டியலில் உள்துறை அமைச்சகத்தில் வெளிநாட்டவர் விவகாரங்கள் துறையில் பணியாற்றும் அதிகாரி ஒருவருடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த அதிகாரியிடம் புலனாய்வு அமைப்பினரும் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர் பலருக்கு முறையற்ற வழியில் விசா நீட்டிப்பு செய்து தந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/03/05/india-hyderabad-blasts-nsg-official-facing-probe-170958.html

********

இரண்டு தகவல்களும் வெவ்வேறு ஊடகங்களில் வந்த தகவல் தான், முதல் செய்தியில் குற்றவாளி என்று கருதப்படுபவரின் பெயரை வெளி இட்டுள்ளனர், குற்றவாளியின் பெயரை  (மன்சர் இமாம்) வைத்து என்ன மதத்தை சேர்ந்தவர் என்று கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமானதல்ல, ஆனால் இரண்டாம் செய்தியில் இந்திய தேச துரோகம் என்ற அளவுக்கு குற்றம் செய்தவனை ஒரு அதிகாரி, அந்த அதிகாரி என்றெல்லாம் மொட்டையாகவே செய்தி போட்டு இருக்கின்றனர், மேஜர் நிலையில் பணியாற்றிய 'அந்த அதிகாரிக்கு' பெயர் இல்லையா ? பெயரை வெளி இடாமல் இருக்க பாதுகாப்பு காரணம் என்றால் அதை ஏன் செய்தியாளர்களுக்கு தகவலாக தரவேண்டும், உள்ளுக்குள்ளேயே அமுக்கி இருக்கலாமே, எல்லாவற்றையும் நோண்டுவோம், நொங்கெடுப்போம் என்று அறைகூவும் செய்தியாளர்கள் அந்த தேச துரோக குற்றம் சாட்டப்பட்டவரின் பெயரை தெரிந்து கொள்ள முயற்சிக்கவில்லையா ? ஒருவேளை 'அந்த அதிகாரி' பெயரை வைத்து இந்து என்று கண்டிபிடித்து காரித்துப்பினால் பிறகு இஸ்லாமியர்களை மட்டுமே குறிவைத்து செய்திகள் போட முடியாது என்கிற நட்ட நடுசெண்டர் நிலையோ ?

குற்றங்களும் குற்றவாளிகளும் தாங்கள் சார்ந்துள்ள மதங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து கண்டுகொள்ளாமல் செயல்பட்டாலும், குறிப்பிட்ட மதத்தினரை மட்டுமே வெளிச்சம் போட்டு மற்றதை மறைப்பது நல்லதில்லை. ஒருதலைப்பட்சமான தகவல்கள் தேவையற்ற வெறுப்புகளையும், அச்சத்தையும் வளரவைக்கும். குற்றங்கள் நிருபனம் செய்யப்பட்டு தண்டனைகள் அறிவிக்கப்படாதவரை எவருடைய பெயரையும் புகைப்படத்தையும் இன்னார் தான் குற்றவாளியாக கைது செய்யப்படுகிறார் என்று காட்டுவதை தவிர்கலாம். பிழைப்புவாதிகளான செய்தியாளர்கள் செய்வார்கள் என்று நம்பிக்கை இல்லை.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்