வைகோ திமுகவின் வருங்காலத் தலைவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள நினைத்திருந்தார், முயன்றார் என்பதை எதோ குற்றாச் சாட்டு போல் கவிதை வடித்து இருக்கிறார் கலைஞர்.
தலைவர் பதவிக்கு குறி வைத்த தம்பி - கருணாநிதி கவிதை
பெரியாருடன் அண்ணா இணைந்த பிறகு அண்ணாவின் எழுத்தாற்றல், பேச்சு கண்டு பெரியார் மகிழ்ந்து பாராட்டி, இயக்க வளர்ச்சிக்கு பயன்படுத்த தட்டிக் கொடுத்தார். தலைமைப் பண்பின் அடையாளம் என்பது ஆற்றல் மிக்க தொண்டர்கள் வளர்வதைப் பாராட்டி மேலே கொண்டு விட தூண்டு கோலாக இருப்பது தான். பெரியாரிடமிருந்து பிரிந்தது அண்ணா பிரிந்தது வேறு கதை, அது கட்சி அபகரிப்புத் திட்டத்தில் வராது. அதே போன்று அண்ணாவினால் தொடங்கப்பட்ட திமுக கழகத்தில் மேடை நாடகம், திரையுலகம், இலக்கியம் போன்றவற்றிலும், அரசியலிலும் திரம்பட செயல்பட்டதால் அண்ணாவின் அன்பு தம்பி என்ற பாராட்டைப் பெற்ற கருணாநிதி அண்ணாவின் ஆட்சி அமைக்கிறேன் என்று அண்ணாவிற்கு பிறகு திமுகவை நடத்தி வருகிறார். அண்ணாவுக்கு பிறகு திமுக தலைவர் ஆகும் தகுதி தனக்கு இருக்கிறது என்கிற நினைப்பு கலைஞருக்கு இருந்திருக்காதா ? ஒரே நாளில் 'தலைவா....அண்ணாவுக்கு பிறகு நீ தான் தலைமை ஏற்கவேண்டும்' என்று கூறி முள் கிரிடத்தை தொண்டர்கள் கலைஞரின் தலையில் வைத்தார்களா ? கட்சிவிசுவாசிகள், கட்சிக்காக கடுமையாக உழைப்பவர்கள் யாரும் தியாகிகள் கிடையாது, நாளை தனது உழைப்பு அங்கீகரிக்கப்படும் என்று நினைப்பது மனித இயல்பு, அதுவும் அரசியலில் நோக்கமின்றி உழைப்பவர்கள் எவருமே கிடையாது.
வைகோ எதோ படுபாதகம் செய்யத் துணிந்தது போல் கவிதை தீட்டி இருக்கிறார் கலைஞர். அதோடு மட்டுமின்றி வைகோ அதை யாருடன் ஆலோசித்தார் என்பதை குறிப்பிடும் விதமாக
"ஆனால் -
துரைமுருகன் ரகசியத்தைக் காப்பாற்றுவதில் இரும்புப் பெட்டி!
ஆற்காட்டாரோ -அசல்; கண்ணாடிப் பேழை -
எனினும்
ஆண்டுகள் சில பல கடந்த பிறகே;
அன்றைய குமரி முனையில் குமுறிய எரிமலையின்
குட்டை மனப் பேராசையின் வெளிப்பாட்டைக் கூறினர் எனக்கு!"
அந்த கவிதையை படித்ததும் மனதில் ஏற்படும் எண்ணங்கள், இரும்பு பெட்டி ஆண்டுகள் பல ஆனதும் துரு ஏறி உடைந்து விட்டதா என்று தெரியவில்லை. ஆக வைகோ சொன்னதை என்னிடம் இவர்கள் போட்டுக் கொடுத்துவிட்டார்கள் என்று சொல்வதாகத் தான் அதனை புரிந்து கொள்ளமுடிகிறது. மூவரின் நம்பகத் தன்மைகளை கேலி செய்வதாக நினைத்து குடும்ப அரசியலை ஞாயப்படுத்தும் விதமாக ஸ்டாலினின் அருமை பெருமைகளைச் சொல்லி தன்னையே கேவலப்படுத்திக் கொண்டு இருக்கிறார் கலைஞர்.
வைகோவுக்கு கவிதை பாடியவர் அதே போன்று எம்ஜிஆருக்கு பாடி இருக்க முடியாது, ஏனெனில் எம்ஜிஆர் 'திமுகவை நீயே வைத்துக்கொள்' என்று உதறித்தள்ளி, வெளி ஏறி, திமுகவையும், கலைஞரையும் ஓரம் கட்டினார். வைகோவும் அதே போல் வளர்ந்திருந்தால் இந்த கவிதை திமுக கழகத்தினரையே கேலி செய்யும். எப்படியோ...கலைஞரின் பெரும்தன்மை இன்மையால் அண்ணாவின் திமுக. அதிமுக, மதிமுக என மூன்றாகியது.
****
விஜயகாந்து திருமணத்துக்கு தாலி எடுத்துக் கொடுத்தார் கலைஞர், விஜயகாந்த் நன்றி மறந்தவராக கலைஞரை தாக்குகிறார் என்று பேராசிரியர் சொல்லிக் காட்ட, பதிலடியாக நான் திரையுலகினரை திரட்டி கருணாநிதிக்கு விழா எடுத்தேன், தங்கப்பேனா கொடுத்தேன் என்கிறார் விஜயகாந்த். இவர்களெல்லாம், ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பை வைத்தே எதையும் செய்துவிட்டு மக்கள் மேடையில் இந்த கருமாந்திரங்களைப் பேசி மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள்.
நான் இங்கே வைகோ தூய்மையானவர், விஜயகாந்த் சொக்கத் தங்கம் என்று சொல்லவரவில்லை, 30 ஆண்டுகளுக்கும் திமுகவின் தலைமை ஏற்று பலமுறை முதல்வராக இருந்தவரின் மேடைப் பேச்சுகளும், கவிதைகளும் இவர் மீது அரசியல் பொதுப்பார்வையாளர்களுக்கு எரிச்சலையே ஊட்டுகிறது. முதிர்ச்சி இன்மை பற்றி கலைஞர் பேசினால் அது இனி காமடிதான்.