பின்பற்றுபவர்கள்

28 பிப்ரவரி, 2013

ஓவராக சீன் போடுறாங்க !


தடி எடுத்தவனெல்லாம் தண்டால் காரணும் இல்லை, தாடி வைத்தவனெல்லாம் தீவிரவாதி இல்லை, தீவிரவாதம் பற்றி விமர்சனம் செய்தாலே எங்களை ஒட்டுமொத்தமாக அவமதிக்கிறார்கள் என்பது போல் வஹாபியர்கள் கட்டமைக்கிறார்கள், பார்பனியத்தை சாடுபவர்களுக்கு பார்பனர் நண்பராக இருக்க முடியாது என்று சிலர் நம்புவது போல் தீவிரவாதிகளை கண்டிப்பவர்கள் இஸ்லாமியர்களுக்கு நண்பனாக இருக்க முடியாது என்பது போல் கட்டுமானங்கள் முன்வைக்கப்படுகிறது.

அமெரிக்க அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கிறோம், அரசுகளை மிரட்டுகிறோம் என்ற பெயரில் எவனோ ஒரு அப்பாவி மனிதனை கழுத்தறுத்துக் கொல்வதாக இருந்தாலும் 'அல்லாவின் திருப்பெயராலே' என்கிற குரான் ஓதிதான் கொல்லப்படுவது குறித்து யுடியுபில் ஏராளமான வீடியோக்கள் இருக்கிறது, அதற்கு அவர்கள் ஜிகாத் என்றும் புனிதப் போர் என்று பெயர் கொடுக்கிறார்கள், மதத்தின் பெயராலும் மதத்தின் பின்னனியிலும் நடைபெறும் தீவிரவாத செயல்களை மதம் பெயரில் குறிப்பிட்டால் மட்டும் ஏன் இவர்களுக்கு அவமானம் ஆகிறது என்று தெரியவில்லை, உண்மையில் இவர்கள் அவமானம் அடைவதாக இருந்தால் அவப்பெயரை ஏற்படுத்தி இறைவன் திருப்பெயர் சொல்லிக் கொலை செய்து மதத்திற்கு கெட்டப் பெயர் வாங்கித் தருபவர்கள் மீது தானே ஞாயமாக கோபம், வெறுப்பு எல்லாம் வந்து, அவர்களை மதத்திலிருந்து விலக்கி வைக்க வேண்டும், மாறாக அந்தத் தீவிரவாதிகள் / சமூக விரோதிகள் கொல்லப்பட்டால் அவர்களுக்கு தூவா செய்கிறோம் என்று சிறப்புத் தொழுகை எல்லாம் நடத்துகிறார்கள்.

மதத் தீவிரவாதம் என்கிற விமர்சனம் வரும் பொழுது ஒட்டுமொத்தமாக அவமானப்படுத்துகிறார்கள், புறக்கணிக்கிறார்கள் என்று புலம்புவது எந்தவியத்தில் ஞாயம் என்று தெரியவில்லை, உண்மையில் எல்லா மதத்திலும் எல்லோருக்கும் நெருங்கிய நண்பர்கள் உண்டு, எங்கோ அல்லது அருகிலேயே நடக்கும் மதச் சார்ப்பு தீவிரவாதச் செயல்களால் தத்தம் மாற்று மத நண்பர்களை விலக்கிக் கொள்பவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள் ?  அவையெல்லாம் உண்மையான நட்பா ?

பின்னே ஏன் மதம் சார்ந்து அவமானப்படுத்துகிறார்கள் என்கிற கூப்பாடு ? காரணம் உண்டு, 'நம்மை அவமானப்படுத்துகிறார்கள் என்று கூப்பாடு போடும் பொழுது தத்தம் மதத்தை சார்ந்தவர்களை ஒன்று திரட்டமுடியும் என்கிற நம்பிக்கை தான், ஒன்று திரட்டுவது ஒன்றும் தவறான செயல் இல்லை, பல்வேறு சமயத்தினர் மதத்தினர், சாதியினர் கூட எதோ ஒரு பொதுத்தன்மையை வைத்து ஒன்று திரள வேண்டும் என்றே நினைப்பர், ஆனால் பொய்யாக ஒரு பீதியை கிளப்பி ஒன்று திரட்டும் பொழுது வெறுப்புணர்வையும் சேர்த்தே ஒன்று திரட்டுகிறோம் என்பதை இவர்கள் அறிகிறார்களா ?  இதே நபர்கள் சிங்களுனுக்கு எதிராக ஒன்றும் திரளும் தமிழ் அமைப்புகள் பெரும்பான்மை சிங்கள அரசுக்கு அடங்கிப் போவது தான் நாட்டு நலனுக்கு ஒட்டுமொத்த நன்மை விளைவிக்கும் என்கிற கருத்தும் கொண்டு இருக்கிறார்கள், எனெனில் இராஜபக்சே தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறாராம், இன்னும் எத்தனை காலத்திற்கு அளிப்பார் ? 

தீவிரவாதத்திற்கு மதம், நிறமில்லை என்று குண்டுவெடிப்பு நடக்கும் பொழுதெல்லாம் எழுதும் இவர்கள் அடுத்த வரியிலேயே இது 'காவி' தீவிரவாதமாக, இந்துத்துவ  தீவிரவாதமாக இருக்கும் என்று நிறம், மதம் காட்டுவார்கள், 'நம்மை அவமானப்படுத்துகிறார்கள், நம் மதத்தை இழிவுபடுத்துகிறார்கள்' என்கிற கூப்பாடு உண்மையிலேயே அப்பாவிகளை அச்சம் கொள்ள வைப்பது, நம்ம சாதிக்காரன் மேல கைவைச்சுட்டாண்டா ஓடிவா அவன் ஊரையே துவம்சம் செய்துவிடுவோம் என்பது போன்ற மதவெறிவை மென்மையாக ஊட்டும் முயற்சியே இத்தகை கூப்பாடுகள்.

இவர்களே எழுதுகிறார்கள், ஐரோப்பாவில் வேகமாக வளரும் மதம் எங்கள் மதமே, அது எந்தளவு உண்மை என்று யாருக்கும் தெரியாது. அதாவது இஸ்லாமியர் பெரும்பான்மையாக இல்லாத நாடுகளில் வேகமாக வளர இவர்கள் வாழ்கை  அங்கு பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே வாய்ப்பு, பாதுகாப்பற்ற நாடுகளில் வேகமாக வளர எந்தவகையான வாய்ப்பிருக்கிறது ? அரபு நாடுகளைவிட கவுரவமாகவும் பாதுகாப்பாகவும் இஸ்லாமியர்களை நடத்தும் நாடுகள் எவ்வளவோ இருக்கின்றன. 9/11 க்கு பிறகு எந்த நாடு இஸ்லாமியர்களை வெளியேற்றியுள்ளது ?    ஈரான், ஈராக் அல்லாத எண்ணைவளஅரபு நாட்டு எத்தனை இஸ்லாமியருக்கு அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விசாவை மறுத்திருக்கின்றனர் ? பாகிஸ்தான்,இந்தியா, பங்களாதேஷ் முஸ்லிம்களை சந்தேகக் கண் கொண்டு விசா மறுப்பர், அல்லது கடுமையான சோதனைக்கு பிறகு அனுமதிப்பர், அது இஸ்லாமியர் என்கிற காரணத்திற்காக மட்டும் அல்ல, தலிபான், அல்கொய்தா தொடர்பிருக்கும் வாய்ப்பு என்பதாலும் ஏழை நாட்டினர் என்பதாலும் அவ்வாறு செய்கின்றனர், முஸ்லிம்களுக்கு விசா மறுப்பு என்றால் ஷேக்குகளெல்லாம் அமெரிக்க விரும்பிய போதெல்லாம் சென்றுவருவது எவ்வாறு  ? அமெரிக்காவைப் பொருத்த அளவில் காசு இல்லாதவர்கள் அவர்கள் நாட்டினுள் நுழைந்து ஏதும் பிரச்சனை ஆகிவிடக் கூடாது என்பது தான், அதை தீவிரவாத சாக்கிட்டு நடத்துகிறார்கள். 

அமெரிக்கா இஸ்லாமியர்களை அவமானப்படுத்துகிறது என்று சவுதியில், ஐக்கிய அரபு எமிரேட்டில் எவரும் பொங்குவது போல் தெரியவில்லை. குஜராத் தவிர்த்து வேறு மாநில அரசுகள் இஸ்லாமியர்கள் மீது எந்த காழ்புணர்வையும் காட்டுவதில்லை. இவர்கள் ஏன் இந்தியாவில் இஸ்லாமியருக்கு பாதுகாப்பு இல்லை, உரிமைகள் இல்லை என்று கூவுகிறார்கள் என்று தெளிவாகத் தெரியவில்லை, இந்தியாவின் நிலைமை இந்துக்கள் நிறைந்த பகுதியில் இஸ்லாமியர்களால் கடை நடத்த முடியும், ஆனால் இஸ்லாமியர் நிறைந்த பகுதியில் இந்துக்கள் நடத்தும் கடைகளுக்கு எந்த அளவு ஆதரவு இருக்கிறது ? இஸ்லாமியர்களுக்கு நகரங்களில் வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை என்று சொல்லப்படுவது போல் இஸ்லாமியர் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் எத்தனை இந்துக்களுக்கு வாடகைக்கு வீடு கிடைக்கிறது ? நாகூரிலோ, கீழக்கரையிலோ இஸ்லாமியர்கள் எத்தனை இந்துக்களுக்கு வாடகைக்கு வீட்டு விட்டிருக்கிறார்கள் ? அவர்கள் அங்கு குடியிருக்க விரும்புவாரக்ளா என்பது வேற விசயம்.  பர்மா பஜாரில் ஒரு கடை வாடகைக்கு வந்தால் ஒரு இந்துவுக்கு கிடைக்குமா ?

இஸ்லாமியர் நிறைத்திருக்கும் இடங்களில் மாற்று மதத்தினர் வீடுவாங்க விரும்ப மாட்டார்கள், அல்லது இஸ்லாமியர் நிறைந்திருக்கும் இடத்தில் தான் மற்ற இஸ்லாமியர்களுக்கு வீடுவாங்க ஆசைப்படுபவர்கள்,. சென்னை போன்ற நகரங்களில் இஸ்லாமியர் பெரும்பான்மையாக வசிக்கும் ஐஸ் ஹவுஸ் போன்ற பகுதி இருக்கிறது, அங்கெல்லாம் வீடு வைத்திருப்பவர்கள் இந்துக்களுக்கு வாடகைக்கு விடுகிறார்களா ? எனவே வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை என்பதும் குறிப்பிட்டவர்களுக்கு மறுக்க வேண்டும் என்பது எழுதா விதியாகத்தான் இருக்கிறது, இதற்கு யார் மீதும் பழி போட முடியாது. வீடே கிடைக்கவில்லை என்கிற குற்றச் சாட்டுகள் ஓரளவு மறுக்கக் கூடியதும் ஆகும். சென்னையில் வாடகைக்கு குடியிருக்காத இஸ்லாமியர்களே இல்லை என்றால் அவ்வாறு கூறலாம், ஒரு சிலர் இஸ்லாமியருக்கு வீடில்லை என்று சொல்லுவார்கள், பிராமின்ஸ் ஒன்லி என்றெல்லாம் வீடுவாடகைக்கு விடப்படுகிறது. ஒரு சிலருக்கு அவ்வாறு நேர்ந்திருக்கலாம், எல்லோருக்கும் அவ்வாறு என்றால் ? யாருக்குமே உதவும் மனநிலை வாய்த்த மாற்று மத நண்பர்களே இல்லையா ? அல்லது இவர்கள் ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கவில்லையா என்கிற கேள்வியும் வருகிறது.

தமிழகத்தில் கமல் படத்திற்கு தடைவிலக்கப்பட்ட பிறகு ஏறக்குறைய 20 நாட்கள் சென்றுவிட்ட நிலையில் விஷ்வரூபம் படத்திற்கு மலேசியாவில் தொடர் தடைதான், இத்தனைக்கும் மலாய்காரர்கள் யாரும் கமல் படம் பார்க்கப் போவதில்லை. இவர்களுக்கு அதிகாரம் உள்ள இடங்களில் இவர்களின் நல்லிணக்கம் / நல்லெண்ணம் இவ்வளவு தான். கமல் நட்டம் அடைந்தார், ஐங்கரன் நட்டம் அடைந்துவிட்டது என்று வருந்தியெல்லாம் இதை எழுதவில்லை, இவர்கள் அதிகாரம் பெறும் பொழுது, அதிக்காரம் செலுத்தும் இடங்களில்  இவர்கள் தாரள மனப்பான்மையுடன் மற்றும், பெருந்தன்மையாக நடந்து கொள்வார்கள் என்று நம்ப ஒன்றுமில்லை என்பதற்காகவே குறிப்பிடுகிறேன்,  இங்கே வெளிப்படையாக அமீரகத்தில்,சவுதியில் தமிழ் இணைய தளங்களை முடக்கிவிடுவோம் என்று முழங்குபவர்களும் செய்து காட்டுபவர்களும் உண்டு. மலேசியாவில் அரபு நாடுகளில் கமல் படத்திற்கும் ஏற்பட்டது அதே நிலைதான். ஐயோ எங்க மதத்தை தாக்கினால் நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்க முட்டாளா ? மதம் அவமானப்படுத்துவதை இழிவு படுத்துவதைத்தானே நாங்கள் தடுக்க முயற்சிக்கிறோம் என்று கேட்டால் வருண பேதம், இரட்டை டம்பளர்  உள்ளிட்டவை இந்து மதம் சார்ந்த உள் விவாகரம், அதை எதிர்க்க அதிலேயே ஆட்கள் உண்டு, இவர்கள் ஏன் மதம் பரப்ப அதனைப் பற்றிப் பேசவேண்டும் ? இவர்களின் இந்துமத விமரசனம், சிலைவணக்க எதிர்ப்பு உள்ளிட்டவை ஒட்டுமொத்த இந்துகளை அவமானப்படுத்துகிறது என்கிற ஆதங்கம், ஒரு இந்துமதப் பற்றாளருக்கு ஏற்படாதா ?

பொதுப்புத்தி, ஊடக கட்டுமானங்கள் தாண்டி எல்லோரும் எல்லாவற்றையும் பார்த்தே வருகிறார்கள். எனக்கும் 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நண்பர்கள் உண்டு, குண்டுவெடிக்கும் பொழுதெல்லாம் இவர்கள் குண்டு வைப்பவர்களுக்கு ஆதரவாளர்கள், அதனை ஆமோதிப்பவர்கள் என்றெல்லாம் நினைப்பது இல்லை. 

தாடிவைத்தவனெல்லாம் தீவரவாதி இல்லை, ஆனால் (சாமியார்கள் உள்ளிட்ட ) எல்லா தீவிரவாதிகளும் தாடி வைத்திருக்கிறார்கள்

இஸ்லாமியருக்கு இந்தியாவில் அவமானம் என்னும் வஹாபிய கூப்பாடுகளை ஏனைய இஸ்லாமியர்கள் புறக்கணித்தால் மாற்றுமத நண்பர்களுக்கிடையே நல்லுறவை பேண முடியும், இல்லை என்றால் நட்பிற்கு மதம் உண்டு என்கிற நிலைக்கு இட்டுச் செல்லும்.

27 பிப்ரவரி, 2013

ஏக(ப் பட்ட) இறைவன்கள் !


கடவுள் நம்பிக்கைக் குறித்து நம்பிக்கையுள்ளவர்களிடம் கேள்வி எழுப்பினால் விடை சொல்லத் தடுமாறும் நிலையில் கடைசியாக நமக்கு கிடைக்கும்  பதில் அல்லது மழுப்பல் 'நமக்கு மேல் ஒருவன் இருக்கான்னு நான் நம்புறேன் அவ்வளவு தான்' என்பதாக முடியும், இந்த பதிலில் நம்பிக்கை சார்ந்த தம் சடங்கு, சம்ப்ராதயம், வேதப் புத்தகம், வேள்வி, வழிபாடு முறை, நோன்பு, படையல், நரகம், சொர்கம் இவற்றையெல்லாம் தற்காலிகமாக புறக்கணித்துவிட்டு / தவிர்த்துவிட்டு தான் அதனை முடிவாக சொல்கிறார் என்பதும் அடங்கும்.

இனக்குழுக்கள் தங்களுக்கான அடையாளம் என்ற அளவில் தான் வழிபாட்டு முறைகளையும் அவரவர் கடவுள்களையும் ஏற்படுத்திக் கொண்டனர், எதிரி நாட்டுப் படையெடுப்பு எப்படியெல்லாம் நில ஆக்கிரமிப்பு செய்கிறதோ, கொள்ளையடிக்கிறதோ அதனால் பாதிப்பு பொருளியல் ரீதியானது மட்டுமே, ஆனால் அவர்கள் அவ்விடத்தில் முடிவாக தொடர்ந்து தங்கும் நிலை ஏற்பட்டால் அவர்களது வழிபாட்டு முறைகள், பழக்க வழக்கங்களையும் புதிய இடத்தில் திணிப்பர், ஏனெனில் தம்முடைய பண்பாட்டு தொடர்ச்சி பேணப்படவேண்டும், மற்றவர்களுடைய பண்பாடு நம்முடையதல்ல என்று தெளிவாகவே அதைச் செய்வர். படையெடுப்புகள் இல்லாமல் எந்த மதங்களும் பரவியதில்லை. 

தற்காலத்தில் படையெடுப்புகளால் மதம் பரவச் செய்வது எளிதன்று. மக்கள் எல்லோரும் தெளிவாகவே இருக்கிறார்கள், மதம் என்பது நிலம் சார்ந்த பண்பாடுகளை அழிக்கக் கூடியது என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர், அதனால் மதவாதிகளின் தற்போதைய உத்தி மனித இனத்தில் ஏற்றத் தாழ்வு, மற்றும் நிற வேறுபாடுகளை சுட்டிக்காட்டி அங்கு கடைவிரிப்பது தான். 

இனக்குழு கடவுளை பொதுக் கடவுளாக முன்வைக்கப்படும் உத்தி தான் 'ஏக' இறைவன் பற்றிய கருத்துகட்டுமானங்கள், இந்தியாவிலேயே ஏகப்பட்ட ஏக இறைவன்கள் உண்டு, சமண மதத்தை எடுத்துக் கொண்டால் ஏக இறைவன் 'ஆதி பகவன்' என்ற பெயரில் இருபபர், அவரை அருகன் என்றும் சொல்லுவார்கள், ஒரு சமணருக்கு அருகனைத் தவிர வேறு இறைவன் கிடையாது, அவர்களைப் பொறுத்த அளவில் அருகன் ஏக இறைவன், பிறகு பவுத்த மதம், புத்தர் தன்னை கடவுளாகக் கூறிக் கொள்ளாவிட்டாலும் பவுத்தர்களுக்கு ஏக இறைவன் புத்தர் தான், புத்தனைத் தவிர வெற இறைவன் இல்லை என்பார்கள்.

சைவம் மதம் சிவன் தான் முழு முதல் கடவுள் ஏக இறைவன், மற்ற கடவுள்களெல்லாம் சிவனுக்கு ஏவல் செய்யும் கடவுள்கள் தான், சிவனுக்கு கட்டுப்பட்டவை, வைணவர்களுக்கு கிருஷ்ணன் தான் ஏக இறைவன், கிருஷ்ணனை வழிபடுவது அன்றி முக்திக்கு வாய்ப்பில்லை என்பார்கள், இஸ்கான் அமைப்பும் முழுக்க முழுக்க கிருஷ்ணன் தான் ஏக இறைவன் என்று பிரச்சாரம் செய்துவருகிறது. சைவத்தையும் வைணவத்தையும் இணைக்கும் முயற்சியில் புதிதாக ஒரு ஏக இறைவன் முன்வைக்கப்பட்டார் அவர் தான் பிள்ளையார், முழு முதற்கடவுள் விநாயகனே என்று ஒருசாரர் கூறுவர், சக்தி வழிபாட்டுக் குழுவினர் எல்லாம் ஆதி சக்தியில் இருந்து உண்டானவை எனவே ஆதிக்கு தொடர்புடையவள் ஆதி சக்தி, அவளே ஏக இறைவன்(ள்) என்பார்கள். சீக்கியர்களுக்கும் (Waheguru ) ஏக இறைவன் வழிபாட்டாளர்கள்.

இது தவிற ஒவ்வொரு இல்லத்திற்கும் குல தெய்வம் என்று ஒன்று உண்டு, அவரவர் இல்லத்திற்கு அவரவர் குல தெய்வமே ஏக இறைவன், அதைத் தாண்டிய வழிபாட்டு முறைகள் இரண்டாம் பட்சமே. 

ஆபிரகாமிய மதங்களில் ஏகப் பட்ட ஏக இறைவன் உண்டு, யூதர்கள் பழைய ஏற்பாட்டு ஜெகோவா, அல்லோலேயாவின் பரிசுத்த ஆவி, கிறித்தவர்களுக்கு ஏசு. இஸ்லாமியர்களின் அல்லா இவர்களெல்லாம் ஏக இறைவன் பட்டியலில் உள்ள மேற்கத்திய ஏக இறைவன்கள், இதில் இஸ்லாமியர்கள் குறிப்பிடும் அல்லா யூதர்களுக்கும் கிறித்துவர்களுக்கும் பொதுவானவர் என்று முஸ்லிம்கள் கூறிக் கொண்டாலும், அதை அவர்கள் ஏற்றுக் கொண்டது போல் தெரியவில்லை.

மேற்கத்திய மதங்களுக்கும் கிழக்கு மதங்களுக்கும் உள்ள வேறுபாடு, முழுமுதற்கடவுள் நேரடியாகப் பேசமாட்டார், தூதர் ஒருவர் இருக்க வேண்டும், அதனால் தான் தூதர் இல்லாத மதங்களை மேற்கத்திய மதத்தினர் மதங்கள் மதமாக நம்புவதில்லை, ஆனால் கிழக்கில் இந்த பார்முலா 'அவதாரம்' என்ற பெயரில் வருகிறது, சங்கராச்சாரியார் முதல் சாயிபாபாவரை எல்லோரையும் அவதாரங்கள் என்றும் சிலர் அவர்கள் தான் மனித உருவில் வந்த ஏக இறைவனின் துளி என்றும் நம்புவார்கள். இந்திய மனங்கள் இறைவனுக்கு தமக்கும் இடையே தூதர் / தரகர் தேவை இல்லை என்று நினைக்கும் அதனால் தான் இந்திய மதங்கள் இறைத்தூதர்கள் உருவாக்கிக் கொள்ளவில்லை,  பகவானுக்கும் பக்தனுக்கும் இடையில் பூசாரி எதற்கு ? இப்படித்தான் புனித நூல்களை வேதங்களை உருவாக்கிக் கொண்டு, இறைவனே தன் வாக்கினால் கீதையை உருவாக்கி புனித நூலாக்கினார், இது வேறெந்த புனித நூல்களைக் காட்டிலும் நேரடியானது  மிகப் பழமையான பெருமை கொண்டது என்பர்

ஏக இறைவன் கோட்பாடு மேற்கத்திய மதங்களிலும் சரி, கிழக்கு மதங்களில் சரி எந்த ஒரு ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்த வில்லை, காரணம் இவர்கள் சுட்டிக்காட்டும் ஏக இறைவனின் பண்பு நலன்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை, என்ன தான் ஏக இறைவன் என்றாலும் மதப்புத்தகம், அதில் காட்டும் சொர்கம் நரகம் இவற்றில் வேறுபாடுகள் இருப்பதால் நமது ஏக இறைவன் தவிர ஏகப்பட்ட பிற ஏக இறைவனெல்லாம் ஒன்றல்ல என்று நம்புகிறார்கள்.

கிரேக்க நாகரீக காலத்தில் வாழ்ந்த ஏக இறைவன்கள் நாகரிகம் மாறிய பொழுது மறைந்து போனார்கள்.

நமக்கு மேல ஒரு கடவுள் உண்டு நம்புவதோடு விட்டுவிட்டு அது எந்த மதம் குறிப்பிடும் கடவுள் என்று ஆய்ந்து பார்த்தால், இதுக்கு பதிலாக நாமே ஒரு ஏக இறைவன் ஆகிவிடலாமோ என்று தோன்றலாம், இப்படித்தான் நித்தி, கல்கி போன்ற சாமியார்கள் தன்னை ஏக இறைவனாக ஆக்கிக் கொண்டனர்,  மதங்கள் கட்டமைக்கும் கடவுள் எல்லாம் பித்தலாட்டம் என்று தனிமனிதனாக ஒருவர் நம்பாவிட்டாலும் அவர் சார்ந்திருக்கும் மதக்கடவுள் தவிர்த்து அனைத்தும் பித்தலாட்டம் என்றே நம்புவர். இந்தியர்களுக்கு எல்லாம் ஒரே கடவுள் என்கிற நம்பிக்கை இருந்தது, அதனால் தான் மேற்கு மதங்கள் ஊடுறுவிய பொழுது அவர்கள் அதை வரவேற்காவிட்டாலும் பெரிதாக எதிர்க்கவில்லை, ஆனால் அதற்கும் இந்துத்துவவாதிகள் வேட்டு வைத்த பிறகு ஏக இறைவன் கோட்பாடுகள் உலகினர் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும் படி தெளிவாக வரையறுக்கப்படவில்லை, வரையறுக்கவும் முடியாது என்றே சொல்லலாம், ஏனெனில் எந்த ஏக இறைவன் கோட்பாடு என்றாலும் அவை நிலம் சார்ந்த பண்பாடுகளை உள்ளடக்கியதாகவும் ஆண் பெண் மற்றும் பிற உயிரினங்களுக்கு பொதுவானதாக இருக்க வேண்டும்,

கூகுள் தேடலில் 'one and only God' என்று தேடினால் பலவேறு படங்கள் தான் வருகின்றன. என்னைக்காவது கூகுள் ஹேக் செய்யப்பட்டு ஒரே படம் வந்தால் ஏக இறைவனின் ஒரே மாதிரியான படம் வரலாம், மற்றபடி எந்த காலத்திலும் ஏக இறைவனுக்கு ஒரே படம் தேடலில் வர வாய்ப்பில்லை.

பணம் இருக்கிறவர்களுக்கு பாதுகாக்க வங்கி தேவைப்படும், அன்றாடம் காய்சிகள் ஏழைபாழைகள் கதவுக்கு பூட்டு இல்லாவிட்டாலும் கவலைப்பட மாட்டார்கள்,   கடவுள், மதம் இத்யாதிகள், எல்லாம் பணம் காசு உள்ளவர்களுக்கு அடிக்கடி தேவைப்படும் வஸ்து. முக்தி, சொர்கம், நரகம் இதுபற்றியெல்லாம் அதிகம் கவலைப்படுவார்கள், ஆனால் ஏழைகளுக்கு உணவே சொர்கம், பசியே நரகம். இதில் ஏழைகளிடம் ஏக இறைவன் பற்றிய அறிவை எங்கனம் ஊட்டுவது ?

நம்ம தல அஜித் கூட ஏக இறைவன் தான் அவர் ஏகன் என்ற படத்தில் நடித்திருக்கிறார் அவரது ரசிகர்களுக்கு அவரே ஏக இறைவன்

24 பிப்ரவரி, 2013

பாம்பும் பார்பானரும் -> இஸ்லாமிய திரித்தல்


....ஸப்பா ரொம்ப நாளாச்சு பெரியார் குறித்த அவதூறுகளுக்கு மறுப்பு எழுதி, மற்றபடி நான் திக தொண்டனோ, திராவிட போர்வாளா இல்லை, தமிழகத்தில் எண்ணற்றோர் பகுத்தறிவு பெறவும், பெண் கல்வி முன்னேற்றம், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்பட்டோர் இந்து இழி நிலைகளை மாற்றிக் கொள்ள முடிவு செய்து பிற :"மதங்களுக்கு" மாற பெரியாரின் அறிவுரைகள் பெரும் துணையாக இருந்தன என்பதால் பெரியார் மீது வேறெந்த தமிழக தலைவர்களை விட மிகுந்த ஈடுபாடும் பற்றுதலும் உண்டு.

இன்றைக்கு ஒரு இஸ்லாமிய பதிவர் பதிவு என்ற பெயரில் பெரியார் பார்பனர்களைக் கொல்லச் சொன்னார் என்கிற முஸ்தீபுடன் ஒரு பதிவை எழுதியுள்ளார், நாமெல்லாம் இஸ்லாம் தொடர்பில் ஏங்க உங்க மதம் போரில் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறது, குரான் ஹதீது என்று எதையெடுத்தாலும் போர் பற்றி நிறைய வருகிறதே.......என்று கேட்டால் அப்படியில்லை எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம், இஸ்லாம் என்றாலே அமைதி நீங்கள் படித்த ஹதீது தகவல் அல்லது குரான் வசனம் போர் நடந்த காலத்தில் வெளிப்பட்டதாக இருக்கக் கூடும், என்றே மழுப்புவார்கள். அதாவது இவங்க சொல்லும் விளக்கம் குறிப்பிட்ட பகுதியை மட்டும் படித்து வந்து கேட்காதீர்கள், அதில் தொடர்புடையதையும் படித்தால் தான் ஒட்டுமொத்தமாக உங்களுக்கு வெளங்கும் என்பதே இவர்கள் அத்தகைய வசனங்களுக்கு கொடுக்கும் மாபெரும் விளக்கம்.

பெரியார் பாம்பையும் பார்பானையும் ஒன்றாக கண்டால் பார்பானை அடி என்று சொன்னார் என்ன ஒரு வெறுப்புணர்வு ? ஒட்டு மொத்த பார்பனர்களையும் அடிக்கச் சொல்லுவதா ? தடித்தனமான பேச்சு, துவேசம், ஆவேசம், கொலைவெறி என்றெல்லாம் அறைகுறையாக ஒரு வரியைப் பிடித்துக் கொண்டு 'திடீர் பார்பன ஆதரவாளர்களாக மாறி இருக்கும் இவர்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாக வருது, இதை நாசுக்காக சொல்ல ஆடு நனைவதற்கு ஓநாய் ஒப்பாறி வைப்பதைத் தான் சொல்ல முடியும் ? காலம் காலமாக இஸ்லாமியர்களுக்கும் பார்பனர்களுக்கும் உள்ள ஒற்றுமை நமக்கு தெரிந்தவையே, இந்துத்துவா என்றால் அதை பின்னால் இருந்து வழிநடத்தும் பார்பனர்கள் என்றே எந்த ஒரு இஸ்லாமியர்களும் நம்புவர், இவர்களுக்கு பார்பனர்கள் மீதான திடிர் கரிசனம் நகைச்சுவை, எங்காவது குண்டு வெடித்தால் காவிக் கும்பல்களை விட வேகமாக 'இது காவிக் கும்பலின் கைங்கர்யமாக இருக்கும், அப்பாவி இஸ்லாமியர்களை பிடித்து தண்டிக்காமல் அரசு முறையாக விசாரணை நடத்த வேண்டும், என்று முந்திக்  கொண்டு கருத்து சொல்லிவிடுவார்கள், 

இப்ப பெரியார் - பாம்பு - பார்பானர் - அடி கதைக்கு வருவோம்.

பெரியார் சொன்னதாக குறிப்பிட்ட "பாம்பையும் பார்பனரையும் கண்டால் பாம்பை விடு பார்பானை அடி" - இந்த வரிகள் பெரியாரின் எந்த பேச்சு தொகுப்பிலும் இடம் பெற்றிருக்கவில்லை, ஆனாலும் பெரியார் அவ்வாறு குறிப்பிட்டார் என்பதை எல்லா தி.க தொண்டர்களும் ஒப்புக் கொள்வர். இன்றைய தேதிக்கு பொதுக் கூட்டங்கள் ப்ளக்ஸ் போர்ட் வைத்து அரசு மின்சாரத்தை திருடி ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு கட் அவுட்டுகள், தோரணங்கள் களைகட்ட இரவை பகலாக்க்கும் ஒளியில் 80 - 60 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றதில்லை. பெட்ரொமாக்ஸ் விளக்குகளின் ஒளி, கூட்டம் ஏற்பாடு செய்பவர்களின் வசதிக்கேற்ற ஒலிப்பெருக்கி என்ற அளவில் தான் பொதுக் கூட்டங்கள் நடைபெறும், ஆட்சியும் அதிகாரமும் பார்பனர்கள் கையில் இருந்த காலங்களில் பெரியார் கூட்டங்களுக்கு காவல் துறையில் பெரிய ஒத்துழைப்பும் கிடையாது, முடிந்த அளவில் கூட்டங்களில் கலகம் விளைவிப்பதையே தொழிலாக வைத்திருந்தனர், 

பெரியார் கூட்டங்களில் பார்பனர்களும், அவர்கள் ஏற்பாடு செய்த ஆட்களும் ஊடுருவி செருப்பு வீசுவது, அழுகிய முட்டைகளை வீசுவது, மலம் வீசுவது, பாம்புகளை வீசுவது உள்ளிட்டவைகள் எல்லா கூட்டங்களின் நிகழ்வாகவே இருந்தது, பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்று தெரிந்ததால் அதுவும் இரவு நேரத்தில் அவற்றை கூட்டங்களினிடையே விட்டால் என்ன விளைவு ஏற்படும் என்பதை பெரியார் எதிர்ப்பு பார்பனர்கள் நன்றாகவே தெரிந்து அதன் படி பாம்புகளை விட ஆட்களையும் ஏற்பாடு செய்திருந்தனர், பாம்பை பார்பனர் கையால் பயமில்லாமல் தொடுவார்களா ? என்கிற ஐயம் உங்களுக்கு ஏற்படலாம்,. ஏற்பாடு செய்த  ஆட்கள் பாம்புகளை கூட்டத்தில் விடுகிறார்களா என்று  கூட்டத்தின் அருகில் இருந்தே  கண்காணிப்பர், இது பெரியாரின் காதுகளுக்கும் சென்றது, கூட்டம் நடக்கும் பொழுது பாம்புகள் விடப்பட்டு கூடியிருப்பவர்கள் அலறிய பொழுது பேசிக் கொண்டிருந்த பெரியார் 'பாம்பையும் பார்பானையும் கண்டால் பாம்பைவிடு பார்பானை அடி' என்று கூறி இருக்கிறார். கூட்டத்தில் பாம்புவிட ஏற்பாடு செய்த பார்பனர் பெயர் தெரியாத நிலையில் பெரியாரால் அவ்வாறு தான் சொல்லி இருக்க முடியும், பாம்பு ஏற்பாடு செய்தவன் தேவதநாதன் என்ற பெயர் கொண்ட பார்பனர் என்றால் பாம்பையும் தேவநாதனையும் கண்டால் தேவநாதனை அடி என்று கூறி இருப்பார் :) எந்த பாவமும் அறியாத பாம்பு என்ன செய்தது அதை ஏன் கொல்ல வேண்டும் என்று பெரியார் நினைத்திருக்கக் கூடும்.

சிந்திக்க வேண்டாமா ? இதை மதப் புத்தகத்தில் மனப்பாடமாக படித்தவர்கள் சிந்திக்க வேண்டாமா ? பெரியாரின் உற்ற தோழர் இராஜாஜி என்றும் அவர் ஒரு பார்பனர் என்று அனைவரும் அறிந்த தகவல் தான், பெரியார் பார்பனர்களை அழிக்கச் சொல்லுவது உண்மை என்றால் கொள்கைக்கு முரணாக இராஜாஜியை கடைசி வரை தோழராக கொன்டிருப்பாரா ? அல்லது அவர் தலைமையில் தான் மணியம்மையை அவர் மணந்திருப்பாரா ? பெரியாரின் பார்பன வெறுப்பு என்பது பார்பனர்களிடம் இருந்து ஆட்சி அதிகாரம் அகற்றப்பட வேண்டும், பார்பனர்களின் தீண்டாமைக் கொள்கை அழித்தொழிக்கப்பட வேண்டும், அவர்களால் கதைக்கப்படும் மூட நம்பிக்கைகள், மனுதர்மம், வருணாசிரமக் கோட்பாடுகள் அழிக்கப்பட வேண்டும் என்பதே, மற்றபடி பார்பனர்களை தமிழ் நாட்டை விட்டே துறத்துங்கள் என்று அவர் சொல்லி இருக்கவில்லை, 

சிந்திக்க வேண்டாமா  ? இஸ்லாமிய நண்பர்களுக்கு இன வெறுப்பு என்றால் என்பதை குரானும் ஹதீசும் பாடமாகவே நடத்துகிறது, அவற்றை ஏக காலத்திற்கும், எந்த இனத்தவருக்கும் பொருந்தும் வசனம் என்று அன்றாடம் கூறும் முன் நீங்கள் சிந்திக்க வேண்டாமா ? 


யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த யுத்தத்தின் போது ’முஸ்லிமே இதோ எனக்குப் பின் னால் யூதன் ஒருவன் ஒளிந்திருக்கிறான்” என்று பாறைகள் கூறும்.
• நூல்: புகாரி 2926

யூதர்களுடன் உங்கள் போரின் வெற்றி அறிவிக்கப்படாதவரை உலக முடிவு நாள் வராது என்பதே அதன் சாரம், அதாவது நீங்களும் யூதர்களும் நண்பர்களாக இருக்க வாய்ப்பே இல்லை என்பதைக் குறிப்பிடுவதுடன் அதனை தீர்ப்பு நாளுடனும் முடிந்து வைக்கப்பட்டுள்ளது. இங்கேயெல்லாம் நீங்கள் என்பது அரேபியர்களைக் குறிப்பிடும் சொல் என்றெல்லாம் இவர்கள் சொல்லமாட்டார்கள், ஏனெனில் இவர்களின் நம்பிக்கை இஸ்லாமின் போதனைகள் ஒட்டுமொத்த உலக நன்மைகானது என்பதே, இந்த ஹதீதில் இருப்பது யூத வெறுப்பா ? அல்லது அணைப்பா ?

முகமது நபியின் கடைசி கூட்டத்தில் முகமது நபி கூறியவையாகக் கூறப்படுவது 

"யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஷ்ரிக்குகள் ஆகியோரை அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்."

அதாவது அரேபியா அரேபியர்களுக்கானது, அதில் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு இடமில்லை, அவர்களை வெளியேற்றுவது உங்களுக்கு கடமையாகிறது என்கிற அளவுக்கு அதனை விளங்கிக் கொள்ள முடியும், இதில் கிறிஸ்துவ வெறுப்பும் யூத வெறுப்பும் இல்லையா ? இறைத்தூதர் என்றால் பிறர் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ அவ்வாறு கூறிக் கொள்கிறவர் உலக மக்கள் அனைவருக்கும் தாம் பொதுவானவர் என்கிற நம்பிக்கை இருக்க வேண்டும், அந்த நம்பிக்கையை மேற்கண்ட வாசகத்தின் பொருள்  தந்துள்ளதா ?

பெரியாரைத் தூற்றும் முன் ஹதீதுகளை முழுதாகப் படித்துவிட்டு வரலாமே, இப்போதெல்லாம் குரான், ஹதீதுகள் பற்றி பிறரும் (இஸ்லாமியர் அல்லாதவர்களும்) அறிந்துள்ளனர் என்பதையாவது இவர்கள் அறிந்து கொள்ளட்டம்

சிலைவணங்கிகள், காபிர்கள் என்றெல்லாம் அடைமொழியுடன் இவர்களது அல்லாவை நம்பாதவர்கள் மீது வெறுப்புணர்வை விதைத்துள்ளதாக குரான் மீதும், ஹதீது மீதும் பிறர் குற்றம் சொன்னால் அதை இவர்களால் மறுக்க முடியுமா ? பிறகு ஏன் இவர்கள் யாரையோ திருப்திப் படுத்த பெரியார் மீது கல்லெறிகிறார்கள் ?

பெரியார் பேச்சின் ஒரு பகுதியை பிடித்துத் தொங்கி குழப்பம் ஏற்படுத்து முயற்சி செய்யும் இவர்களே வேண்டுமென்றால் வெட்கமில்லாமல் அவர் ஒரு இறைமறுப்பாளர் என்று நன்கு தெரிந்தும் (மார்க்க விரோதமாகவே) 'பெரியார் எங்கள் மதத்தை சமத்துவம் போற்றும் மதம் என்று சான்றிதழ் தந்துள்ளார்' என்று எழுதுபவர்கள் என்பது முரண் நகை

யாரோ ஒருவர் எழுதியதை ஏன் 'இஸ்லாமிய திரித்தல்' என்று எழுதியுள்ளீர்கள், இவர்கள் தான் இஸ்லாமியரின் ஒட்டுமொத்த அடையாளமா ? என்று கேட்பவர்கள் உண்டென்றால்,   எழுதுபவர்கள் அப்படித்தான் தங்களை எண்ணிக் கொள்கிறார்கள் என்பதைக் குறிக்கவே அவ்வாறு வைத்துள்ளேன்.

PJ வையும் BJP யவையும் கண்டால் PJ....  ன்னு கூட ஒரு தளத்தில் எதோ எழுதி இருக்கிறார்கள், லிங்கெல்லாம் கொடுக்க முடியாது, கூகுள் இட்டு தேடிக் கொள்ளவும். :)

14 பிப்ரவரி, 2013

தாவணி சரியான ஆடையா ?


முகநூலிலும் கூகுள் கூட்டலிலும் ஒரு அழைப்பிதழ் படமும் அதற்கான கருத்துகளும் நகைச்சுவையாக கிண்டல் அடிக்கப்படுகிறது. நான் அதற்கு மாற்றுக் கருத்தாக

"தாவணி என்பது அருகிவரும் வேளையில் இவற்றை வரவேற்போம், மஞ்சள் நீராட்டு விழா என்பது கொச்சையாக பார்க்கப்படுவதால் இப்பொழுது தாவணிக்கு மாறி இருக்கிறார்கள், அதையும் ஏன் தவிற்கும் படி நாம கமெண்ட் அடிக்கனும் ?""

அதற்கு நண்பரின் பதில் "தாவணி மாணவிகளுக்கு ஏற்ற உடை இல்லை, அதை பள்ளிகளும் தடை செய்துள்ளனர், தாவணி  அணியும் விழா மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவை நாம் வரவேற்க்கக் கூடாது" என்று எழுதினார்

நான் திரும்பவும் அவருக்கு மறுமொழி இட்டேன்.1. பள்ளிகளில் தடை செய்துள்ளதாக நீங்கள் எந்த ஆதரத்தில் இவற்றை தெரிவிக்கிறீர்கள் என்று தெரியவில்லை, தனியார் பள்ளிகளில் அவ்வாறான நடைமுறைகள் இருக்கலாம், மாடர்ன் ட்ரெண்ட் என்ற முறையில் சல்வாருக்கு மாற்றிவிட்ட பெற்றோர்கள் இருந்தாலும், இன்னும் அரசு பள்ளிகளிலும் அரசு ஆதரவு பள்ளிகளிலும் தாவணி அணிந்து செல்பவர்கள் உண்டு, நான் பார்த்து இருக்கிறேன்.

2. தவாணி என்பது புடவையின் சிறிய வடிவம், அவற்றை அணிய பழக்கப்படுத்துவது பிற்காலத்தில் புடவை உடுத்த பழகிக் கொள்வார்கள் என்பதற்காகவும், தாம் இனி சிறுமி இல்லை, என்று ஒரு பெண் உணரவேண்டும் என்பதற்காகவும் தாவணி அணிவிக்கப்படுகிறது.

3. பூப்பு மற்றும் மஞ்சள் நீராடும் சடங்கு தற்போதும் தேவையற்றது என்று சொல்லாவிட்டாலும் பலர் அறிய நடத்துவது தேவையற்றது என்ற கருத்தை நானும் வழிமொழிகிறேன், தற்பொழுதெல்லாம் ஊர் கூட்டி பூப்படையும் சடங்கு செய்யாவிட்டாலும் வீட்டு உறவினர்களை மட்டும் அழைத்து செய்கிறார்கள், காரணம் மேற் சொன்னது போல் சிறுமி மன நிலையில் இருந்து பெண் குடும்ப பொறுப்புக்கு மாறவேண்ட்ம் என்கிற உளவியல் ரீதியான சடங்கு மட்டுமே.

4. முன்பெல்லாம் பெண் வயதுக்கு வந்த உடன் மணம் செய்து கொடுக்கும் பொறுப்பும் இருந்ததால் அதனை விமர்சையாக செய்வதன் மூலம் சொந்தகளுக்கு அறிவித்து சொந்தங்களிடம் இருந்து மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்க முடியும், அல்லது பெண் திருமணத்திற்கு தயாராகிவிட்டாள் என்று அறிவிப்பு விழாவாகவே அது நடைபெறும், தற்போதைய சூழலில் உறவினருக்குள் திருமணம் செய்துவிட்டது கிட்டதட்ட முடிந்துவிட்ட நிலையில் ஊர் அறிய நடத்தும் பூப்பு விழா தேவையற்றது தவிற அந்த பெண்ணுக்கு கூச்ச உணர்வு தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை, ஆனால் முன்பு முட்டாள் தனமாகதான் இந்த சடங்கை வைத்திருந்தார்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

5. பள்ளி சீருடையாக குட்டைப் பாவடை அணிய வைப்பதைவிட சிருடையிலும் தாவணி எந்த விதத்திலும் தவறான தேர்வாக எனக்கு தெரியவில்லை. எனது சகோதரிகள் பள்ளிப்பருவத்தில் தாவணி அணிந்து தான் சென்றனர். குட்டைப் பாவாடையிலும் கவர்ச்சி தேடுபவர்கள் உள்ளனர் என்பதற்காக இதனை குறிப்பிட்டேன், மற்றபடி குட்டைப் பாவாடையில் எனக்கு எந்த மனத்தடையும் இல்லை.

6. மஞ்சள் நீராட்டு விழா அறுவெறுப்பாக எப்பொழுது பார்க்கப்பட்டது, சமூகத்தில் அத்தகைய மன நிலை ஏன் ஏற்படுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. முன்பெல்லாம் பொது இடத்தில் குழந்தைக்கு முலைப்பால் ஊட்டுவது அருவெறுப்பற்ற நிலையில், அப்படி ஒரு சிந்தனைகளே இல்லாத போது அவ்வாறு ஊட்டப்பட்டது, மனித மன வக்கிரங்கள் வளர வளர இப்பொழுது யாரும் அவ்வாறு செய்வதில்லை என்பதை நாம் சமூக மாற்றமாகக் கொள்ள வேண்டும் என்பதைவிட நாம் மன நிலைகளில் வக்ரங்கள் குடியேறிவிட்டன என்று தான் சொல்ல வேண்டும்.

7. பூப்பு நீராட்டுவது அறுவெறுப்பான சடங்கு தேவையற்றது என்கிற கருத்து உருவாகியுள்ளது போல் ஏழு மாதத்தில் கற்பினி பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவதைக் கூட அருவெறுப்பாக காணும் நிலை நம்மிடம் வளரக் கூடும், காரணம் குழந்தை பெற்றுக் கொள்வது இருவர் கூடுவதால் ஏற்படும்  நிகழ்வு, ஒரு பெண் வயிறு முன் தள்ளி நிற்பதைப் பார்க்கவும், அவள் கணவனுடன் கூடினாள் என்பதை எல்லோருக்கும் வெளிப்படுத்த இந்த விழாவை நடத்துவது தேவை தானா ? என்கிற கேள்வியைக் கூட நான்கு பேர் அசட்டுத் தனமாக கேட்டு வைப்பார்கள்.


*****


பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் தனக்கான தனிப்பட்ட விழா என்பதால் இது போன்ற சடங்குகளில் இயல்பாகவே ஆசை இருக்கும், ஆனால் நாம் நாகரீகம் என்ற பெயரில் அவற்றை புறக்கணிக்கத் துவங்கியுள்ளோம், நமது சமூகத்தில் பெண்களை மிகவும் தாழ்வாக வைத்திருந்தாலும் பெண்களுக்கு மட்டும் தான் தனிப்பட்ட சடங்குகள் நடைபெறுகிறது, சிறப்பு செய்யப்படுகிறார்கள் என்பது கவனிக்கத் தக்கது, அவை மறையும் பொழுது அந்த தனிச் சிறப்புகளையும் அவர்கள் இழந்துவிடுவார்கள்.

தாவணி அழகா இல்லையா ? தாவணிக்கு தமிழ் திரைப்படங்களில் சிறப்பான இடம் உண்டு, 16 வயதினிலே ஶ்ரீதேவி முதல் சண்டைக் கோழி மீரா ஜாஸ்மின் வரை தாவணிப் போட்ட தீபாவளியாக அழகாகத் தான் தெரிந்தார்கள், அதே போன்று திரைப்படங்களில் தாவணியை பூணூல் அளவுக்கு கவர்ச்சி உடையாகவும் ஆக்கினர்கள், புடவையை கவர்ச்சியாக கட்டுவது போல் தாவணியையும் அவ்வாறு காட்டியதால் என்னவோ தாவணி அணிவது அறுவெறுப்பானதோ என்று நினைக்க வைக்கப்படுகிறது, மேலும் உடுத்த எளிதனது பொதுவான உடை என்ற அடைப்படையில் சல்வார் தாவணிக்கு மாற்றாக வந்துவிட்டது, ஆனாலும் பள்ளியில் மாணவிகளை சீருடையாக உடுத்தச் சொல்லும் குட்டை பாவடையைக் காட்டிலும் தாவணி எந்த விதத்திலும் குறைந்தது இல்லை. எந்த உடையிலும் கவர்ச்சி தேடுபவர்கள் உண்டு, முழுக்க முழுக்க மூடி இருந்தாலும் உப்பிய பாகங்கள் உடையில் மேடுகளாக தெரிகிறதா என்று காமப் பார்வை உள்ளவன் பார்பான், ஒரு சில கேடுகெட்ட, எப்போதும் காம வயப்பட்ட ஆண்களின் காமப் பார்வை தான் பெண்களின் உடையை முடிவு செய்யக் கூடியது என்பதை நான் எப்போதும் எதிர்க்கிறேன்

12 பிப்ரவரி, 2013

மறுபடியும் மறுபடியும் மரண தண்டனை !


அஜ்மல் தூக்குக்கு வாய் திறக்காதவர்கள் கூட அப்சல்குருவிற்கு நிறைவேற்றப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக வாய்த்திறக்க துவங்கி இருக்கிறார்கள், இது மரண தண்டனைக்கு எதிராக திறந்த வாய்கள் இல்லை, மாறாக அப்சல்குருவிற்கு கொடுக்கப்பட்ட தண்டனை நியாமற்றது என்று வழக்கு ரீதியில், வழக்கு தவறாக நடந்ததாகவும், குற்றவாளியின் மரண தண்டனை நிறைவேற்றம் குறித்து பின்னர் தான் அவரது குடும்பத்திற்கே தெரிவிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள், அரசு இதில் அவசரம் காட்டியதன் மர்மம் பிஜேபிக்கு எதிரான காய் நகர்த்தல், இந்து வாக்குகள் அறுவடை குறித்த காங்கி-கின் எதிர்ப்பார்ப்புகள் என்று நாம் சந்தேகிக்க இடம் உள்ளது. பாபர் மசூதி இடிப்பிற்கு பிறகு பெரும்பாலும் காங்கிரசு தான் பல ஆண்டுகளாக ஆட்சி செய்துவருகின்றன, பாபர் மசூதி வ்ழக்குகள் முடிந்தபாடில்லை, காங்கிரசு ஆட்சியின் போது தான் பாபர் மசூதியும் இடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது, ஆனால் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு என்ற பெயரில் காங்கிரசு வாக்குகள் அறுவடை செய்வதும் ஆட்சியில் தொடர்வதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது, இந்த சூழலில் பாஜகவை நாம் இந்துத்துவ கட்சி என்றோ சிறுபான்மை எதிரி என்றோ பார்க்கத் தேவை இல்லாத அளவுக்கு காங்கிரசின் முகத்திற்கும் பாஜகவிற்கும் பெரிய வேறுபாடு இல்லை என்றே சொல்லலாம். இந்தியாவில் பெரும்பான்மை இந்து சமயத்தினர் எனும் பொழுது பாஜக நேரடியாக மதவாதமாக வாக்குக் கேட்பதை காங்கிரசு மறைமுகமாக செய்துவருகிறது. 

நான் அதுபற்றி மிகுதியாக சொல்ல விரும்பவில்லை, இந்த அரசியல் ஏமாற்றுகளிலும் கட்சிகளிலும் எனக்கு பெரிய நம்பிக்கைகள், ஈர்ப்புகள் கிடையாது, நான் எந்த ஒரு கட்சியையும் தொடர்ந்து ஆதரிப்பதாக எழுதுவதும் இல்லை, நான் இங்கு சொல்ல வந்தது மரண தண்டனைகள் குறித்து தான், அப்சல் குருவிற்கு கொடுக்கப்பட்டது தண்டனை என்றாலும் அரசு அவரது குடும்பத்திற்கு செய்தது அநீதி, அப்சல் உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததாகவும் சிறை வளாகத்திலேயே அடக்கம் செய்யப்படுவதாகவும் ஒரு ஊடகம் எழுதி இருந்தது, மற்றொரு ஊடகத்தில் அப்சலுக்கு தண்டனை நிறைவேற்றிய இரண்டு நாள் குறித்து தான் தண்டனை நிறைவேறப் போவது குறித்த கடிதம் உறவினர்களுக்கு சென்று சேர்ந்ததாம், இரண்டு நாள் சென்று கடிதம் கிடைத்தவர்கள் உடல் அடக்கம் பற்றிய கருத்துகளை எப்படி கூறி இருப்பார்கள் ? ஆக உடல் அடக்கம் குறித்த உரிமை கூட உறவினர்களுக்கு வழங்கப்படவில்லை என்றே சந்தேகம் கொள்ள நேரிடுகிறது.

மரண தண்டனை ஆதரவாளர்கள் எல்லோரும் ஒன்று போலவே, 'உங்கள் குடும்பத்தில் இப்படி நடந்திருந்தால் குற்றவாளியை தண்டிக்கச் சொல்லமாட்டீர்களா ?' என்றே கேட்கிறார்கள், பழிக்கு பழி , இரத்தத்திற்கு இரத்தம் என்பவை காட்டுமிராண்டி கலாச்சாரம் என்றே நாமும் எழுத வந்த காலத்தில் இருந்தே எழுதிவருகிறோம், தனக்கு இழைக்கப்பட்டது அநீதி என்று நினைப்பவர்கள்  அதையே தண்டனையாக அநீதி இழைத்தவர்களுக்கும் செய்யச் சொல்வார்களா ? உதாணத்திற்கு பக்கத்து வீட்டுக்காரன் ஆத்திரப்பட்டு பலிவாங்கும் நோக்குடன் அடுத்தவீட்டுக்  குழந்தையை   கொன்றுவிடுகிறான், அதே வேதனையை அவனும்  அனுபவிக்க வேண்டும் என்று விரும்புவர்கள் அவனுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று விரும்புவார்களா ? அல்லது ஒருபாவமும் அறியாத அவனது குழந்தையைக் கொல்வது தான் சரி,  'இழப்பு' என்றால் அவன் அறியச் செய்ய தரும் சரியான தண்டனை என்று சொல்லுவார்களா ? உண்மையில் அவனை மட்டும் தண்டித்தால் அவனுக்கு 'இழப்பு' என்றால் என்ன வென்று தெரியாமல் அது செய்த குற்றத்திற்கான தண்டனை என்ற அளவில் மட்டுமே அவனால் உணர முடியும், அது தான் அவனுக்கான சரியான தண்டனை என்று இங்கு குறிப்பிட முடியுமா ? இல்லை இல்லை அவனுடைய குழந்தையையும் கொல்லுவது தான் அவனுக்கான தண்டனை என்று மரண தண்டனை நியாவான்கள் தீர்ப்பு எழுதிவிட்டால், அதை 'சரியான தீர்ப்பு' என்று அறிவுடையோர், சமூக அக்கரை உள்ளோர் அதை ஆமோதிக்க முடியுமா ?

மரண தண்டனைகள் மூலம் இழப்பு என்பது கொலைகாரனுக்கு அல்ல, அவனது குடும்பத்தினருக்கு மட்டுமே, கொலை வழக்கிற்கான மரண தண்டனைகள் எல்லாமும் ஒரு குடும்பம் மற்ற குடும்பத்தை பழிக்கு பழி வாங்குதல் என்ற பக்க விளைவுகளை மட்டுமே ஏற்படுத்துகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. கொலைகாரனை பெற்றவர்கள், கொலைகாரனின் மனைவி, கொலைகாரனின் வாரிசுகள் என்கிற தூற்றலை சுமந்து கொண்டு ஏற்கனவே அந்த குடும்பம் பல தண்டனைகளை நாள் தோறும் அனுபவத்து வருகின்றன, இதில் கொலை செய்தவனுக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனை எந்த ஒரு விளைவை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை ? அவசரத்தில், கோபத்தில் அல்லது தூண்டுதலில் செய்த கொலைக்கு அரசு ஆதரவுடன் தீர்ப்பு என்ற பெயரில் கொடுக்கப்படும் மரண தண்டனை மற்றொரு கொலை தான், ஒன்று கேட்காமல் செய்யப்படுகிறது மற்றொன்றோர் ஆன்றோர் சான்றோர் ஆமாம் போட நடைபெறுகிறது. உயிரெடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்ற பெயரில் கொடுக்கப்படும் தண்டனை உயிரெடுப்பது தான் என்றால் அதை நீதி நேர்மை நியாயம் என்ற வகைப்படுத்தல் இன்றி வெறும் தண்டனை என்ற சொல்லாடலில் இட்டு நிரப்புங்கள்.

சந்தர்ப்ப சாட்சியம், சாட்சியம் என்ற பெயரில் தான் தீர்ப்புகள் எழுதப்படுகின்றன மற்றபடி ஒருவர் குற்றவாளியா இல்லையா என்பதை நீதிபதிகள் முற்றிலும் அறிந்து தான் எழுதுகிறார்கள் என்று சொல்ல அவர்கள் முக்காலத்தை உணர்ந்தவர்களும் இல்லை, மரண தண்டனைகள் மூலம் ஆயிரக் கணக்கானோர் தண்டிக்கப்பட்டாலும் ஒரே ஒருவர் குற்றமற்றவராக இருந்து அவருக்கும் சந்தர்ப சாட்சியங்கள் வழியாக மரண தண்டனை தீர்ப்பு எழுதிவிட்டால் தவறாக நிறைவேற்றப் பட்ட தண்டனைக்கு மரண தண்டனை ஆதரவாளர்கள் பொறுப்பேற்பார்களா ?

நேற்று கூகுள் ப்ளஸில் நண்பர் ஒருவர் 'அப்சலுக்கு இழைத்தது அநீதி என்றால் ஆண்டவன் அநியாயமாக தீர்ப்பு எழுதியவர்களை தண்டிப்பார்' என்று வருத்தப்பட்டு இருந்தார், அவரும் மரண தண்டனைக்கு ஆதரவானவர் என்பது குறிப்பிடத் தக்கது. ஒருவேளை அப்சல் அப்பாவியாக இருந்து தண்டிக்கப்பட்டிருந்தால் அநியாயமாக தீர்ப்பு எழுதியவர்களுக்கு எங்கோ கிடைக்கும் தண்டனையைப் பற்றி எந்த கருத்தும் இல்லை, அது நாம் அறியாத ஒன்று, ஆனால் அப்சல் குடும்பத்திற்கு ஏற்பட்ட இழப்பு யார் இட்டு நிரப்புவது ஆண்டவனா ?

பலிக்கு பலி, பழிக்கு பழி, இரத்திற்கு இரத்தம் சரி என்றால் சமாதானம், சமரசம் என்பதன் பொருள் என்ன ? வெறும் சொத்து தகராறுக்கு மட்டும் தான் அவையெல்லாம் ? கொலைக்கு 'கொலை நீதி' தான் பெரிது என்று நம்பும் நாம் ஏன் சமதானப் புறக்களையெல்லாம் பறக்க விடாது, அவற்றின்  கறியை சூப்பு வைத்துக் குடிக்கக் கூடாது ?

இங்கு சென்றவாரம் சிங்கப்பூரில் சிமெண்ட் லாரி ஓட்டுனரின் கவனக் குறைவால் 7, 10 வயது இரண்டு ஆண் குழந்தைகளை பறிகொடுத்தப் பெற்றோர் சொன்னது 'ஓட்டுனரை மன்னிக்கிறோம், ஓட்டுனருக்கு கொடுக்கும் தண்டனை என் குழந்தைகளை மீட்டுத் தந்துவிடாது'


மரணதண்டனை தேவையா ?   (2007 ல் எழுதியது)

9 பிப்ரவரி, 2013

பல்லு போன சொல்லு மட்டும் தான் போகுமா ?


இதை ஒரு விழிப்புணர்வு பதிவு என்று நினைத்து தான் எழுதுகிறேன், உங்களுக்கு இந்த இடற்பாடு இருந்தால் பதிவை படித்து முடித்து முயற்சி செய்யுங்கள், சிறுவயதில் (7 - 8) வயதில் இனிப்பு சாப்பிடும் ஆவல் எனக்கு கட்டுப்படுத்த முடியாத அளவில் இருந்தது, தீபாவளிக்கு செய்யும் இனிப்பு பண்டங்கள், கெட்டி உருண்டை, அதிரசம், சீனி உருண்டை, கோவிலுக்கு போடும் மாவிளக்கு இவற்றில் எங்கள் வீட்டில் 75 விழுக்காடு தின்று தீர்ப்பது நான் தான், அதுமட்டும் இல்லாமல் அம்மா வீட்டில் இல்லாத பொழுது சீனியை கரண்டி கரண்டியாக அள்ளி தின்பேன், போன வாரம் தானே ஒருகிலோ வாங்கினேன் என்னா ஆயிருக்கும் என்று யோசித்து கொண்டு இருப்பார்கள், அதனால் ஏற்பட்ட எதிர்வினை கடைவாய் பற்களில் சேதம், பால் பற்கள் விழுந்து முளைந்திருந்தவைகளில் சேதாமாகியது, அந்த கால வளர்ப்பில் குழந்தைகளை இரவில் பல் துலக்கச் சொல்லும் கெட்ட பழக்கமெல்லாம் எங்கள் பெற்றோர்களிடமும் இல்லை, அது தவிர நாம பல் துலக்க பயன்படுத்துவது பயோரியா, கோபால் பற்படி,(அதன் இனிப்பு சுவையால் துலக்கி வெளியே துப்புவது ரொம்ப குறைவு) அவைகள் இல்லாத பொழுது இருக்கவே இருக்கு,  உமி கரி, வரட்டி சாம்பல் (சப்பென்றெ இருந்தாலும் சுவைதான்) , திருநீறு, செங்கல் தூள், இப்படியெல்லாம் பல்லை துலக்கி இருந்தால் அந்த பல் தான் துலங்குமா ? 10 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது இருபக்கமும் பக்கத்திற்கு ஒன்றாக கடவாய் பற்களில் பள்(ல்லு)ளதாக்கு, அதை பல்மருத்துவரிடம் காட்டி அடைக்கலாம் என்று கூட தெரியாது, அப்படியே விட்டதில் நொறுங்கி நொறுங்கி இரண்டு பற்கள் காணாமல் போனது. 

நம்உடல் இருக்கும் உறுப்புகளுக்கு ஏற்ப வளைந்து கொள்ளும், கடவாய்பற்கள் இல்லாத நிலையில் உணவை மென்று உண்ணும் வழக்கம் குறைய பாதி அப்படியே விழுங்கிவிடுவதும், மென்று திங்க வேண்டிய முருங்கைக்காய் வகையறாக்களை மட்டுமே மெல்வது மென்மையான அரிசி சோறு, தோசை இட்லி வகைகளை நாக்குக் சுவை காட்டிவிட்டு அப்படியே விழுங்குவது என்று உணவு உண்ணும் முறையே மாறி போய் இருந்தது, எதனால் மெல்லாமல் விழுங்குறேன் என்பதே எனக்கு அண்மை வரை தெரியாதது, மேல் தாடையிலும் இரண்டு பற்கள் 18 - 19 வயதில் ஆட்டம் காண அதை 30 வயது வரை தாக்குபிடித்து வைத்திருந்தேன், பின்பு ஒருநாள் பட்டாணியை கடிக்க, பட்டாணிக்கு வலி பொறுக்குமா ? உடைத்துவிட்டது பல்லை, மேல் வரிசை பற்களில் முன்புறவரிசையைத் தள்ளி பக்கத்திற்கு ஒன்றாக இரு பற்கள் வேறு வேறு நாட்களில் காணாமல் போனது, விளைவு ?

சோற்றை மென்று சாப்பிடுவதற்கு பதில் விழுங்குவது இதெல்லாம் எனக்கு பிரச்சனையாகத் தெரியவில்லை, ஆனால் முன்வரிசையில் மூன்றாம் பற்கள், காணாமல் போனது வாய்விட்டு சிரிப்பது முக அழகைக் கெடுப்பதாகவே இருந்தது, நாம் சிரிக்கும் பொழுது பார்க்கிறவர்களுக்கு இரண்டு பக்கமும் பற்களில் இடையே  ஓட்டை இருப்பது தெரிந்தம் நமக்கு கொஞ்சமேனும் கூச்சம் மற்றும் அவமானம் ஏற்படும், அதைத் தவிர்க்க, பெரும்பாலும் வாய்குள் சிரிப்பது, உதடை மூடிச் சிரிப்பது என்று பழக்கப்படுத்தி கொண்டேன், வாய் முடி குலுங்கி குலுங்கி சிரிச்சா எப்படி இருக்குமோ ? அப்படி சிரிக்க வேண்டிய நிலை, கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக இதுவே என் சிரிப்பு அழகு என்று இருந்தது, கொஞ்சமாக உதடு திறந்து சிரித்தால் ஒன்றும் தெரியாது, ஆனால் அதற்கும் கொஞ்சம் கூடுதலாக சிரித்தால் மேல் பக்கம் நான்காம்  பல் இல்லை என்பது தெரிந்துவிடும்.

இடையில் செயற்கையாக எடுத்து மாட்டும் பக்கத்து ஒன்றாகமேல் வாயை ஒட்டி இருக்கும் க்ளிப் வகை ஒன்றையை பொறுத்திப் பார்த்தேன், எனக்கு சரியாக வரவில்லை, சிரித்தால் க்ளிப் கம்பி தெரியும், சாப்பிடும் பொழுது துணுக்குகள் போய் அடைத்துக் கொண்டு பெரிய தொந்தரவாகவே இருக்கும், சாப்பிட்ட உடனேயே எடுத்து கழுவ வேண்டி இருக்கும், வீட்டில் இருக்கும் பொழுது பரவாயில்லை, வெளியே நான்கு பேருக்கு முன்பு அவ்வாறு செய்ய முடியாது,  தொந்தரவாகவே இருக்கும்,  படுக்கும் பொழுதும் அவற்றை அணிந்திருப்பது பொருத்தமற்றவையாக இருந்தது.  அப்பறம் கழட்டி எரியும் முன்பு அதுவே உடைந்து போக அதன் பிறகு 4 - 5 ஆண்டுகளுக்கு உதடு மூடிச் சிரித்தே பல் பிரச்சனையை சமாளித்து வந்தேன். அதற்கு மேல் மொத்தமாக மேலும் கிழும்  நான்கு பற்கள் இல்லையே என்பதை நான் ஒரு பிரச்சனையாக கருதியதில்லை,  ஆனாலும் அவ்வப்போது இந்த நான்கு பற்கள் இல்லாததால் நாம் முழுமனிதன் இல்லை என்று அதை ஒரு குறையாகவே மனசு உணரும்,

ஓராண்டு முன்பு ஊருக்குப் போன பொழுது தான், இதே பிரச்சனை உள்ள (அண்மையில் மறைந்த) என் தம்பி செராமிக் செயற்கைப் பல் பொருத்தி இருந்ததைப் பார்த்தேன், விவரம் கேட்க இந்த செய்ற்கைப் பல் எடுத்து மாட்டத் தேவை இல்லை, ஒரு முறைப் பொருத்தினால் அப்படியேதான் இருக்கும் (Permanent Fixing), வழக்கமாக பற்கள் துலக்குவது போல் துலக்கிக் கொண்டால் போதும் இதை பராமரிக்கத் தேவை இல்லை என்றான், எனக்கு ஆர்வம் பிறந்தது ஆனாலும் அப்போது செயல்படுத்த கால அவகாசம் இல்லை, பல் மருத்துவர் நமது பல் அச்சுகளை எடுத்து அவற்றை செய்யக் கொடுத்து பொருத்த குறைந்தது ஒருவார கால ஆகும் என்பதால் அடுத்த முறை பார்க்கலாம் என்று வந்துவிட்டேன், 

ஐந்து மாதங்களுக்கு முன்பு வேலை மாற்றும் சூழலில் இடைப்பட்ட 10 நாள் இடைவெளியில் தமிழகம் சென்ற பொழுது, மருத்துவரைப் பார்க்க பற்களை அச்சு எடுத்து ஒருவார காலத்தில் பொருத்திவிட்டார், முதல் இரண்டு நாட்கள்  தொடர்ந்து எதோ பற்களை கடித்துக் கொண்டு இருப்பது போன்ற உணர்வு இருந்தது பிறகு அவை மறைந்துவிட்டன, உணவை நன்றாக மென்று விழுங்க முடிகிறது என்றாலும் பழைய பழக்கமாக அப்படியே விழுங்கும் வழக்கம் இன்னும் மாறவில்லை, என்ன தான் இருந்தாலும் உண்மையான பற்களுக்கும் செராமிக் பற்களுக்கும் அளவு நிரம் உறுதி இவற்றில் பெரிய மாற்றம் இல்லாவிட்டாலும் உண்மையான பற்கள் கொடுக்கும் சுவை, குறிப்பாக முறுங்கைகாய் உள்ளிட்டவற்றைக் கடிக்கும் பொழுது கிடைக்கும் சாற்றின் சுவை வேறுபாடுகளை உணர முடிகிறது, மற்றபடி பெரிய வேறுபாடு இல்லை, வாயைத் திறந்து சிரிக்கலாம்.
(இது நான் இல்லிங்க - எனக்கு மீசை இருக்கும், இணையத்தில் எடுத்தப் படம், இதே  போன்று தான் மேல் தாடையில் பக்கத்திற்கு ஒன்றாக எனக்கு இருபற்கள் இல்லாமல் இருந்தது)

செய்ற்கைப் பற்கள் பொருத்தாமல் ஆண்டுகணக்கில் விட்டுவிட்டால் மற்ற பற்களிடையே இடைவெளிகள் ஏற்படத் துவங்கும், நாளடைவில் பற்கள் உறுதி இழக்கும், கீழ் தாடையில் ஒரு பல் இல்லாவிட்டால் மேல் தாடையில் அதற்கு நேர் மேலே இருக்கும் பற்கள் கீழாக இறங்கத் துவங்கும், சொத்தைப் பற்களை அடைக்காமல் விட்டுவிட்டால் அடிக்கடி பாக்டிரியாக்களால் ஈரல் கட்டி ஏற்படும். அனைத்துப் பற்களையும் 60 வயது வரையிலாவது பாதுக்காக்க வேண்டும், அதற்குள் சிதைந்திருந்தால், விழுந்திருந்தால் அந்த இடத்தில் செயற்கைப் பற்கள் வைத்துக் கொள்வது நல்லது, கடைவாய்பற்களில் எண்ணிக்கைக் குறைய குறைய கன்னம் குழிவிழ முக அழகை கெடுக்கும்.

மேலும் கீழும் இரண்டு பற்களைப் பொருத்த மருத்துவர்கள் செய்வது, எங்கு பல்லைப் பொருத்த வேண்டுமோ அதற்கு இரு பக்கத்திலும் உள்ள பற்களை சுற்றிலும் கொஞ்சம் குறைக்கிறார்கள், பின்னர் அந்தப் பற்களின் உறுதியினால் அதனையும் சேர்த்து மொத்தமாக ஒட்டி இருக்கும் படி மூன்று பற்கள் , அதாவது நடுவில் செயற்கைப் பல் இருபக்கமும் செயற்கைப் பல் உண்மையான பல்லை மூடி இருக்கும் படி ஒரு வித உறுதியான பசையினால் பொருத்துகிறார்கள், பல்லை கொஞ்சம் தேய்த்து எடுக்கும் பொழுது கொஞ்சம் பற்கூச்சம் இருக்கும் மற்றபடி இதற்கு எந்த அறுவை சிகைச்சையும் கிடையாது. இதற்கு பற்களுக்கு பாலம் போடுதல் என்று பெயர் ஆங்கிலத்தில் Bridge என்கிறார்கள், சிங்கையில் மூன்று பற்கள் சேர்ந்த ஒரு பாலத்திற்கு கட்டணம் 4000 வெள்ளிகள் வரை வாங்குகிறார்கள், 3000 வெள்ளுக்கும் குறைவாக இந்த சிகிச்சை இங்கு கிடையாது.

தமிழகத்தில் செயற்கைப் பற்களின் உலோகத்திற்கு ஏற்ப ஒரு பல்லுக்கு 10,000 ரூபாய் வருகிறது, பொதுவாக செராமிக் பாலப் பற்களுக்கு பல்லுக்கு 3000 ருபாய், எனக்கு மொத்தமாக நான்கு செயற்கைப் பற்களுக்கு அக்கம் பக்கம் 8 பற்களை தேய்த்து குறைத்து, நான்கு பாலங்கள் போட 12 பற்கள் கணக்கு. செலவு 36000 ரூபாய் ஆனது, கொஞ்சம் குறைத்துக் கொள்ள முடியுமா என்று மருத்துவரிடம் கேட்டேன், ஒரு பல்லாக இருந்தாலும் 12 பல்லாக இருந்தாலும் நாங்க பல்லு கணக்கு 100 ரூபாய்  கேரளாவிலில் இருந்து செய்து அனுப்பும் கூரியர் கட்டணம் வாங்குவோம், அதை வேண்டுமானால் குறைத்துக் கொள்கிறேன், உங்களுக்கு கூரியர் கட்டணம் 100 ரூபாய் மட்டும் போட்டுக் கொள்கிறேன், 12 பல்லும் ஒரு கூரியர் வழியாகத்தானே வந்திருக்கும் என்பதால் இவ்வாறு ஒப்புக் கொண்டு மொத்தம் 30,900/- வாங்கிக் கொண்டார். சிங்கையில் இதைச் செய்திருந்தால் 16,000 வெள்ளிகள் ஆகி இருக்கும் என்று ஒப்பிட்ட  31,900/- ரூபாய் 16ல் ஒரு பங்கு செலவு தான். ஆனால் 32,000 ஆச்சு என்றதும் எங்க அக்காவே ஆ......! அவ்வளவா ? என்றார்கள்.

பணம் என்ன ? பழைய படி வாய்விட்டு சிரிக்க முடிகிறதே, முன்பைவிட கன்னமும் கொஞ்சம் உப்பலாக வந்து கொண்டு இருக்கிறது. முக்கியமாக நமக்கே நமக்கான சிலவற்றில் நாம் அலட்சியம் காட்டுவது மட்டுமின்றி அப்பறம் பார்க்கலாம் என்று விட்டுவிடும் அதன் பக்கவிளைவுகள் வேறுமாதிரியாக இருக்கும். என்னுடைய குழந்தைகளை நாள் தோறும் இருமுறை பல் துலக்க வைப்பதை பழக்கப் படுத்திவிட்டேன், அவங்க என் அளவுக்கு இனிப்பு வெறியர்களாகவும் இல்லை என்பது வேற.

இப்போதெல்லாம் எனக்கு 'நான் முழுமனிதனா ?' என்ற கேள்வி வருவதே இல்லை.

7 பிப்ரவரி, 2013

குஷ்புக்கு கருத்து சொல்ல அருகதை ?


சென்ற சட்டமன்ற தேர்தலில் மூழ்கின கப்பலில் ஏறி மதிப்பை இழந்தவர்கள் முக்கியமாக இருவர், அதில் நடிகை குஷ்பு மற்றும் வடிவேலு பற்றிக் குறிப்பிடலாம். வடிவேலுவுக்கு திரையில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது, தற்பொழுது தான் ஒருசிலர் ஒப்பந்தம் செய்யத் துவங்கியுள்ளனர், இதற்கிடையே விஜயகாந்ந் திமுகவை நெருங்குவது உங்களுக்கு பொறுக்கலையா ? என்று கருணாநிதி பத்திரிக்கையாளர்களிடம் பொங்கி இருக்கிறார், இந்தக் கேள்வியை வடிவேலுவிடமும் இவர் கேட்டு இருக்கலாம், பாவம் வடிவேலு விஜயகாந்தை எதிர்க்க திமுகதான் சரியான கட்சி என்று முடிவு செய்து திமுகவிற்காக பரப்புரைகள் செய்து ஈராண்டாக செல்லாகக் காசாக இருக்கிறார், திமுக சார்பு தொலைகாட்சி ஊடகங்கள் வடிவேலு நடித்த நகைச்சுவைக் காட்சிகளை தொடர்ந்து போட்டு கல்லாக் கட்டி வந்தாலும் அவர்களின் சொந்த நிறுவனங்கள் எடுக்கும் படங்களில் கூட வடிவேலுவிற்கு வாய்ப்புக் கொடுப்பதில்லை. 

டுத்து குஷ்பு 'தலைவர் கலைஞர் அடுத்து ஸ்டாலின் என்று முடிவு செய்திருந்தாலும் பொதுக் குழு உறுப்பினர்களின் தேர்வும் சேர்ந்து தான் ஸ்டாலின் அடுத்த தலைவரா ? என்று முடிவு தெரியவரும் என்று பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்லி இருக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது ? ஞாயமாகப் பார்த்தால் குஷ்புவின் இந்தப் பேச்சை திமுகவினர் பாராட்டி இருக்க வேண்டும், காரணம் தலைவர் தேர்வு என்பது திமுக கட்சியில் முறைப்படியாக நடக்கக் கூடியது என்பதே அவர் சொல்லவந்ததும் புரிந்து கொள்ளக் கூடியதும் ஆகும்.

'அதான் 'எனக்குப் பிறகு ஸ்டாலின்'தான்னு திமுக தலைவர் கருணாநிதியே சொல்லிட்டாரே?''  - கேள்வி

''எல்லார் விருப்பப்படிதான் தலைவர் தேர்ந்து எடுக்கப்படுவார்னு தலைவரே சொல்லியிருக்கார். கட்சியில அடிமட்டத் தொண்டனா இருப்பவங்களுக்குக்கூட தலைவரைத் தேர்ந்தெடுக்க உரிமை இருக்கு. தலைவர் முடிவு எடுத்துட்டாரேனு யாரையும் தேர்ந்தெடுக்க முடியாது. கட்சியின் நலனுக்கு யார் பொருத்தமா இருப்பாங்களோ, அவங்களை உட்கட்சித் தேர்தல் நடத்தித் தேர்ந்தெடுப்பாங்க.'' -குஷ்பு

கட்சியில் பெரும்பான்மையாக இருக்கும் ஸ்டாலின் ஆதரவாளர்கள் குஷ்புவின் இந்தப் பேச்சை ஸ்டாலினுக்கு எதிரானது என்று கூறி குஷ்பு வீடுமீது தாக்குதலும், அவர் மீது விமான நிலையத்தில் செருப்பு வீச்சும் நடத்தி இருக்கிறார்கள், இது உட்கட்சி பூசல் அதில் உனக்கென்ன என்றெல்லாம் கேட்டுவிட முடியாது, வெளியில் இருந்து பார்க்கும் பொழுது ஒரு பெண், ஒரு நடிகை, அதுவும் கட்சியில் புதிதாக இணைந்தவர் கட்சித் தலைவராக அடுத்து வர இருப்பவர் குறித்து கருத்து கூறலாமா ? என்றே கொதித்திருக்கிறார்கள் என்றும் இவர்களது 'முற்போக்கு சிந்தனை பரப்புரைகள்' குறித்து விமர்சனம் செய்ய வேண்டியதாக உள்ளது.

துமட்டுமின்றி என்னதான் எங்க கட்சியைப் பற்றி உங்களால் விமர்சனம் செய்ய முடிந்தாலும் திமுக மட்டுமே உட்கட்சியில் ஜனநாயக ரீதியில் பேசுவதற்கு அனுமதிக்கும் கட்சி என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும், அதிமுகவில் ஜெ-வை எதிர்த்து எவராலும் பேசமுடியுமா ? என்றெல்லாம் வாய்கிழிய பேசுவார்கள், திமுகவின் உட்கட்சி ஜெனநாயகம் பேச்சு சுதந்திரமெல்லாம் இருக்கிறதா இல்லையா ? என்பது எம்ஜிஆர் கட்சித் துவங்க, பின்னர் வைகோவும் கட்சி துவங்க காரணமாக அமைந்தது என்பது நமக்கும் தெரியும். பாவம் குஷ்புவுக்கு அவை தெரிந்திருக்கவில்லை என்பது தான் நமக்கு புதிய தகவல்.

குஷ்பு மீது நடிகர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பொங்குவதற்கு அவர் ஒரு நடிகை, ஒரு பெண் மற்றும் அதுவும் அண்மையில் தான் திமுகவில் இணைந்தவர் வெளிப்படையாக பேசலாமா என்கிற வெறுப்பா ? அல்லது ஸ்டாலின் ஆதரவாளர் என்ற முறையில் எழுந்த போர் குரலா ?

திமுக என்பது தனியார் சொத்து தான் என்று கட்சியில் இருக்கும் குஷ்புவுக்கு தெரியாதது நமக்கு வியப்பே.

6 பிப்ரவரி, 2013

'சமீபத்தில்' நண்பர் டோண்டு இராகவன் இழப்பு !

2005ல் வலைபதிவில் எழுதத்துவங்கி தொய்வில்லாமல் எழுதிவந்தவர்கள் மிகக் குறைவு, எழுதத் துவங்கி இணைய வாசிப்பாளர்களை வலைப்பதிவுகள் பக்கம் இழுத்துவந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் அமரர் டோண்டு இராகவனும் ஒருவர். நேற்று கூட பல பதிவுகளில் பின்னூட்டமிட்டிருந்தார், இவர்து சமூகக் கருத்தாங்களில் எனக்கு ஒப்புதல் இல்லாவிட்டாலும் ஏனைய இவரது எழுத்துகள் படிக்கக் கூடியவை தான், அன்னாரை சென்னையில் இருமுறை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது, வலைப்பதிவர்கள் கூட்டத்தில் கடற்கரை சந்திப்பில் முதல் முறை சந்திக்கும் பொழுது 'நீங்கள் தான் கோவி,கண்ணனா ?' என்று விசாரித்து தழுவிக் கொண்டார்,  அடுத்த முறை தி.நகரில் பதிவர் கூட்டத்தில் சந்திக்கும் பொழுதும் அவ்வாறே கட்டிக் கொண்டார், சமுக கருத்தாங்களில் இருவரும் எதிர் எதிர் நிலைப்பாடு கொண்டவர்கள் என்று அறியப்பட்ட அளவில் இந்தத் தகவல் பல வலைப்பதிவர்களை பெரும் வியப்பில் ஆழ்த்தியது.

அவரது எழுத்தில் இருந்தே....

"அதன் பிறகு (கோவி.கண்ணனை) நேரில் சந்தித்தபோது நான் அவரை கட்டித் தழுவி வரவேற்றேன் (இதை இதுவரை யாருக்குமே செய்ததில்லை, அவரைப் பார்த்து என்னையறியாமல் செய்தேன்). பிறகுதான் எனக்கு ஒன்று புரிந்தது. அவருக்கும் எனக்கும் சண்டை வந்தது துரதிர்ஷ்டவசமானது என்று. அதன் பிறகும் பல மன வேற்றுமைகள் வந்தாலும் நாங்கள் இருவருமே அதை ஓரளவுக்கு மேல் வளர விட்டதில்லை என்பதை இங்கே குறிப்பிடுகிறேன்."


என்னைப் பொருத்த அளவில் அவரும் அவரது சமூகம் சார்ந்த கருத்தாங்களும் அவராக ஏற்படுத்திக் கொண்டது அல்ல, தனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டதை அவரது சமூகம் சார்ந்த குரலாக ஒலித்தார் என்றே நினைத்தேன், அவரது சாதிப்பற்றும் சாதிசார்ந்த கருத்தாங்களும் வெளிப்படையானவை என்பதால் பலரும் முகம் சுளித்தனர் என்றாலும் பிறர் மறைவாக செய்துவருவதை இவர் வெளிப்படையாக செய்தார் என்ற அளவில் பாராட்டுக்குரியதே, ஏனைய பார்பனர்கள் சாதிப் பெருமையில் தங்கள் சமூகத்தை 'பிராமணர்' என்று எழுதிவருவது தொடர்கின்ற வேளையில் எனக்கு தெரிந்து 'டோண்டு இராகவன்' ஒருவரே தம் சமூகம் என்றாலும் பார்பனர் பற்றிக் குறிப்பிடும் இடங்களில் 'பார்பனர்' என்றே எழுதிவந்தார், காலம் காலமாக பிராமணர் என்பது சாதியமாகவும், சாதிசார்ந்து பிறப்பு வழி சாதியில் ஒன்றாக அறியப்படுவதால் அதில் தனிச் சிறப்பு ஒன்றும் இல்லை, அவை சாதியக் குழு அடையாளம் தான் என்பதை டோண்டு இராகவன் ஒப்புக் கொண்டே ஆனால் சாதிய அடையாளம் களையப்படத் தேவை இல்லை என்கிற தற்சார்பில் 'பிராமணர்' என்று எழுதாமல் பார்பனர் என்றே எழுதிவந்தார், பார்பனர்களில் இத்தகைய புரிதல் உள்ளவர்கள் வெகு குறைவே. பார்பனர் ஒன்றும் வானத்தில் இருந்து குதித்துவிடவில்லை அவர்களும் பலரைப் போன்றவர்கள், சாதிகளுள் ஒன்று என்கிற புரிந்துணர்வில் தான், தான் சிக்கன் விரும்பி சாப்பிட்டுவதையும் தன்னை 'சண்டைக்கார பார்பான்' என்றும் கூட அவரால் வெளிப்படையாக எழுத முடிந்தது.

அவரைப் பொருத்த அளவில் நிகழ்வுகள் கடந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இருந்தாலும் அவற்றை எழுதும் பொழுது 'சமீபத்தில் 1952ல்' என்றே எழுதிவந்தார், படிப்பவர்களுக்கு நகைச்சுவையாக, முரண்பாடாக இருந்தாலும் அவற்றை பலரும் ரசித்தனர், அவ்வாறு எழுதுவதற்கு அவர் சொன்ன விளக்கம் 'என்னைப் பொருத்த அளவில் நிகழ்வுகள் அனைத்தும் அண்மையில் நடந்ததாக உணர்வதால் நான் அவ்வாறு எழுதுகிறேன்' என்றே குறிப்பிடுவார்.

முன்பெல்லாம் '65 வயது இளைஞனான டோண்டு இராகவன் எழுதுகிறேன்' என்று தன் வயதை வெளிப்படையாகக் கூறி தன்னை இளைஞன் என்றும் கூறிக் கொள்வார், அண்மையில் ஒருபதிவில் என்னதான்  நான் என்னை இளைஞன் எனக்கூறி வந்தாலும், நான் வயதால் கிழவன்தானே. என்றும் எழுதி இருந்தார், நோய்வாய்ப்பட்டு படுத்தப் படுக்கையாக இருந்து மீண்டும் எழுத வந்தும் தனது பழைய நிலைப்பாடுகளில் எந்த வித சமரசமும் இல்லாமல் அதே வேகத்துடன் தான் எழுதிவந்தார், 


அன்னாரின் மறைவு சோ மற்றும் மோடியின் வலைப்பதிவு ஆதரவாளர் என்ற அளவில் அவர்களுக்கு தெரியாவிட்டாலும் கூட இழப்பு தான். அவரது பெரியார் எதிர்ப்பு எழுத்துகளும் அதற்கான விளக்கமான சுகுணாதிவாகர், குழலி மற்றும் யுவகிருஷ்ணா போன்ற பிறரின் எதிர்வினைகளும்  எம்போன்றவரை பெரியார் அப்படி என்ன தான் செய்தார் என்று அறிய வைத்து பெரியார் மீது பற்றுதல் கொள்ள வைத்தது.

பல்வேறு மொழிகளைப் படித்து பட்டறிவை வளர்த்துக் கொள்பவர்கள் வெகுசிலரே, ஜெர்மனி, ஹிந்தி, ஆங்கிலம் உள்பட ஆறுமொழிகளில் கைதேர்ந்வராகவும் மொழிப்பெயர்பை தன் தொழிலாகவும் வைத்திருந்தார், தாம் எழுத வந்ததே மொழிப் பெயர்ப்பு தொழிலுக்கு விளம்பர வாய்பாக அமையும் என்கிற மற்றொரு காரணமும் உண்டு என்று வெளிப்படையாகச் சொன்னார், ஒருமுறை அவரிடம் பின்னூட்டத்தில் கேட்டேன், 'உங்களுக்கு தெரிந்த மொழிகளில் தமிழைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?' 'சந்தேகமே வேண்டாம், இதில் எனக்கு பாரதியின் நிலைப்பாடு தான்' என்று தமிழைப் பற்றி உயர்வாகவே குறிப்பிட்டு இருந்தார், ஒரு மொழிப் பெயர்பாளர் என்ற அளவில் அவரது இழப்பு மொழிப்பெயர்பாளர்களில் சிறந்த ஒருவரை இழுந்துள்ளோம் என்பதும் தான்.

வலைப்பதிவர்கள் 'தென்திருப்போரை மகர நெடுங்குழைக்காதன்' என்கிற பெயரைக் கேள்விப்படும் பொழுதெல்லாம் டோண்டு இராகவன் வடகலை ஐயங்கார் கண்டிப்பாக நினைவுக்கு வருவார்.

அவர் ஒரு மூத்த வலைபதிவர் மற்றும் என் நண்பர் என்ற அளவில் அவரது இழப்பு எனக்கு மிகுந்த மனவருத்ததை ஏற்படுத்தியுள்ளது, நல்ல நண்பர் என்ற முறையில் அவருக்காக இந்த ஒரு சிறப்புப் பதிவு எழுதி அவரைப் பெருமைப்படுத்துவதை நான் கடமையாகவே நினைக்கிறேன்,  திருவிக அவர்களின் இறுதி ஊர்வலத்தில் பெரியாரின் வேண்டுகோளுக்கு இணங்கி தி.க தொண்டர்கள் திருவாசகம் ஓதி அவரை பெருமைப் படுத்தியது போல், பெரியார் பற்றாளன் என்ற முறையில் அன்னாரின் ஆன்மா அமைதியடையவும், அவரது இல்லத்தினர் இழப்பில் இருந்து மீண்டு வரவும் மகர நெடுங்குழைக்காதனை பிராத்திகிறேன்,

இரங்கல் பதிவு இணைப்புகள் : 


பிரபல வலைப்பதிவாளர் டோண்டு ராகவன் மரணம் - என்றும் அன்புடன் பாலா


திரு.டோண்டு ராகவன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள். - எடக்கு மடக்கு (முட்டாபையன்)


சாதி இனிஷியல் மாதிரி -  யுவகிருஷ்ணாடோண்டு ராகவன் -  பத்ரி சேஷாத்ரிடோண்டு சார் -  கானா பிரபா

பாண்டுச் சோழன் சரித்திரம்  - பினாத்தல் சுரேஷ்

டோண்டு ராகவன் இன்று நம்மிடம் இல்லை!  - சுவனப்பிரியன்

அமரர் டோண்டு ராகவன்.. -  T.V.ராதாகிருஷ்ணன் 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .. .சிராஜ்

பதிவர் டோண்டு மரணம் - கல்வெட்டு 

Dondu Raghavan Sir, We miss you!! - பழமைபேசி

தமிழின் மூத்த பதிவர் டோண்டு ராகவன் மறைவின் நினைவாக - இக்பால் செல்வன்

பதிவர் திரு டோண்டு ராகவன்! - வருண்

டோண்டு ராகவன் இறைவன் அடி சேர்ந்தார் - அருண் அம்பி

டோண்டு! - மு.சரவணக்குமார்

டோண்டு ராகவன் - அஞ்சலி..! - உண்மை தமிழன்

டோண்டு ராகவன். - கேபிள் சங்கர்

டோண்டு ராகவன் சார்! - என். உலகநாதன்

அஞ்சலி – டோண்டு ராகவன் - சா. திருமலைராஜன்

டோண்டு - துளசி கோபால்


டோண்டு சார்- இன்னும் வாழ்ந்திருக்கலாம் - ramachandranusha(உஷா)

2 பிப்ரவரி, 2013

சோ இராமசாமி இஸ்லாமிய நண்பன் ஆன கதை !


நேற்றில் இருந்து சிங்கையில் விஸ்வரூபம் ஓடுது, இங்கே முதலில் வெளி இடவும் இல்லை, பிறகு இடை நிறுத்தவும் இல்லை, தமிழக கூத்துகள் முடியட்டம் என்று இங்குள்ள தனிக்கைக் குழு காத்திருந்ததோ என்னவோ, நேற்று தீர்ப்பு அப்படி இப்படி என்றதும் அதற்கு மேல் காலம் தாழ்த்தாமல் அனுமதி கொடுத்துவிட்டனர், நேற்று முதல் இங்கே விஸ்வரூப காய்சல் அடிக்கக் துவங்கி இருக்கிறது, கோல்டன் டிஜிட்டல் மற்றும் ரெக்ஸ் திரைவளாகங்களில் மொத்தம் ஐந்து அரங்குகளில் விஸ்வரூபம் காட்சி. கூட்டத்திற்கு குறைவில்லை, சனி / ஞாயிறும் அரங்கு நிறையும் என்றே நினைக்கிறேன்.

145 நிமிட காட்சி, மிகப் பெரிய வெட்டுகள் எதுவும் இல்லை, தடைசெய்யக் காரணம் என்று சொல்லப்பட்ட, சர்சைகள் என்று கிளப்பிவிடப்பட்ட காட்சிகளும் இருந்தன. நடனக் கலைஞராக அறிமுகம் ஆகும் கமல் வரலாறு அஜித் போன்று செயற்கையாக செய்யாமல் உடல் நளினத்தை அழகாக வெளிப்படுத்தி இருப்பார். ஆப்கான் காட்சிகள் ஆவணப்படம் போன்று இருந்தது, அதில் திரைப்படத்திற்கு முன்பே நாம் கேள்விப்பட்டது, படித்தது,  யுடியுபில் பார்த்ததில், வழிபாட்டுடன்  கழுத்தறுப்பது, மனித வெடிகுண்டு, பொது இடத்தில் தூக்குப் போடுவது, ஓஃபிய விற்பனை இவற்றை  சித்தரிக்கப்பட்ட காட்சிகள் என்று சொல்வதை விட கஷ்டப்பட்ட எடுத்த காட்சிகள் என்று தான் சொல்ல வேண்டும், 100க் கணக்கான துணை நடிகர்கள், ஆப்கான் குகைகள் ஆப்கானிய உடையுடன், ஆண்கள் பெண்கள், அவர்களின் பின்புலம், அமெரிக்க வெறுப்பு, எதிர்ப்பு.....ஆப்கானில் எடுக்கப்பட்ட காட்சிகள் பார்க்க ஆவணப் படம் போல் தான் இருந்தது, ஆப்கான் தவிர்த்து அமெரிக்க காட்சிகள் விறுவிறுப்பான துறத்தல் ரகம், மற்றபடி இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி இருக்கிறார்கள் என்று சொல்ல காட்சிகள் எதுவும் இல்லை. பில்லா - 2 போல் படம் முழுவதும் துப்பாக்கி சத்தம். படத்தொகுப்பாளரை படம் ரொம்ப வேலை வாங்கி இருக்கும் போல். 

படத்தில் கமல் இஸ்லாமியராகவே வந்து போகிறார்.ஹிரோவும் அவன் செயலும் நல்லவை எனும் போது ஹிரோவின் மதமும் இது தான் என்று தெளிவாகக் காட்டும் பொழுது மதத்தை இழிவுபடுத்தி இருக்கிறார்கள் என்று யார் கொளுத்திப் போட்டதோ, இவை வெறும் பேரம் படியாத அரசியல் திசைத் திருப்பல்கள் மட்டுமே, அதற்கு தமிழக இஸ்லாமிய அமைப்புகள் பகடைகாய் ஆகியுள்ளன, இது தெரியாமல், படத்தையும் பார்க்காமல் தாறுமாறாக எதிர்ப்புகள் குவிந்திருப்பது, மதவாத அமைப்புகள் நினைத்தால் மதப் பற்றாளர்களை உணர்ச்சி வசப்பட வைக்க முடியும் என்பதை நிருபனம் செய்துள்ளது. விஸ்வரூபத்திற்கு எதிரான தாண்டவம் தமிழகத்தில் மதவெறிபரவி வருவதை உணர்த்துகிறது, ஒரு பெரும்பான்மை சமூகத்தை சார்ந்தவர் எடுத்தப் படத்தை சிறுபான்மையினர் எப்படி தடை செய்யலாம் ? என்று உணர்ச்சி ஊட்டப்பட்டால் மதக்கலவரம் தவிர வேறு என்ன நடக்கும் ?  கமல் நினைத்திருந்தால் இந்துத்துவவாதிகளை நாடி தன் படத்திற்கு ஆதரவாக களம் இறக்கிவிட்டிருக்க முடியும், கமலை கண்டபடி திட்டும் மடையர்களுக்கு இது புரியுமா ? புரியாதது போல் நடிக்கிறார்களா ? மற்றவர்களுக்கு உணர்ச்சி இருக்காது என்று நம்புகிறார்களோ ?

அமெரிக்ககாரன் குழந்தையை, பெண்களை கொல்லமாட்டான் என்று ஒரு தீவிரவாதி பேசும் வசனத்தை நான் ரசிக்கவில்லை, அமெரிக்ககாரன் ஈராக், ஆப்கான் போரில் குழந்தையை,பெண்களை கொன்றானா ?  இல்லையா என்பது அமெரிக்க நண்பனான சவுதிக்கு தெரியாதா ? சவுதிகாரன் சகித்துக் கொள்ளும் சங்கதி ஒன்றைத் தானே தானும் சொல்லி இருக்கிறார்.படத்தில் அமெரிக்ககாரன் பெட்ரோலுக்காக சண்டையிடுகிறான் என்றும் வசனம் வருகிறது, எனவே குறிப்பிட்ட வசனத்தை அமெரிக்க அடிவருடித்தனம் என்று சொல்வதையும் என்னால் முழுமையாக ஏற்க முடியவில்லை. ஒருவேளை ஆப்கானில் பெண்களையும் குழந்தைகளையும் கேடயமாக பிடித்துக் கொள்வார்களோ என்னவோ, அதுபற்றி தெளிவான காட்சியை கமல் வைக்கவில்லை, என்பதால் அந்த வசனம் படத்தில் ஒரு இடறல்தான்,

படத்தைவிட படவிவகாரம் தான் விஸ்வரூபம் ஆகியது, படத்தின் இறுதியில் விஸ்வரூபம் - 2 தொடரும் என்று போடுகிறார்கள், கமலுக்கு இனிமேலும் அந்த ஆசை இருக்குமா ?  படத்தில் பூஜா குமார், ஆண்டிரியா நல்ல தேர்வு, ஓமராக நடித்திருப்பவர் காட்சிக்கு காட்சி பயம் கொள்ளச் செய்யும் அளவுக்கு அசத்தி இருக்கிறார், 

*****
கூட்டத்தோடு கூட்டமாக 'சோ. இராமசாமி' விஸ்வரூபத்திற்கு தடை சரிதான் என்று பேசியுள்ளார். படத்தில் பார்பனர்கள் பற்றிய காட்சி உள்ளது, கமல் கோழி சமைத்துவிட்டு, 'பாப்பாத்தி அம்மா உங்களுக்குதான் இதோட டேஸ்டு நல்லா தெரியும், கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன், எங்க ஆத்துகாரி கூட சிக்கன் விரும்பி சாப்பிடுவா என்று நடனம் கற்றுக் கொள்ளும் பெண்ணிடம் சொல்லுவார். பார்பனர்கள் கோழி சாப்பிடுவது தவறு என்று யாரும் தவறாக நினைப்பதில்லை, ஆனா கமல் இப்படி போட்டுக்கொடுக்கிறாரே என்று சோ நினைத்திருக்கக் கூடும், அடுத்து கமலின் மனைவியாக காட்டப்படுவர் சொல் தூய்மையாக 'பிராமணாள் பாஷை' பேசுகிறார், படத்தில் கமல் ஒரு முஸ்லிம் என்று தெரிந்தும் அவரை வெறுக்காமல் அவருடனேயே ஒட்டிக் கொள்கிறார், ஒரு இந்துப் பெண், நம் பிரமணா சமூகத்தைச் சார்ந்த பெண் ஒரு முஸ்லிமுக்கு மனைவியாக எப்படிக் காட்டலாம் ? என்று நினைத்து சோ எரிச்சல் அடைந்திருக்கக் கூடும். சாலமன் ருஷ்டியுடன் பத்மலெட்சுமி கொஞ்ச காலம் மனைவியாக வாழவில்லையா ? கமல் காட்டியது புதுசா ?  மற்றபடி சோ இராமசாமி இஸ்லாமிய நண்பன் ஆகி இருப்பதற்கு காரணம் தெரியவில்லை, ஒரு இந்துத்துவ அடைப்படைவாதி இஸ்லாமியர்களுக்கு வெறுப்பு ஏற்படுவை இவை இவை என்று தெரியவந்தால் உள்ளுர ரசிப்பான், சோ வுக்கு தமிழக களேபரங்கள் தெரியாதா ? தெரிந்தே கார்டூன் போட்டு கலவரம் ஏற்படுத்தும் தினமலர் வகையறாக்களை சார்ந்த இவர் இது இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் படம் என்று கூறி இருந்தால் கூட நாம் ஒருவேளை இவர்கள் மாறிவிட்டார்களோ என்று நினைக்கலாம், ஆனால் இவர் சொன்னகாரணம், கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் தடை செய்யக் கூடிய படம் என்று திருவாய் மலர்ந்துள்ளார். 

*********

தமிழகத்தில் மதவாத மற்றும் சாதிய சக்திகள் பெருகிவருவதால் எதிர்காலத்தில் (ஓய்வு வயதில்) கூட தமிழகம் திரும்பவது பற்றி  யோசிக்காமலேயே இருந்துவிடனும் என்று நினைக்க துவங்கியுள்ளேன்,

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்