ஆகஸ்ட் 13 - 17 வரை சிங்கை எக்ஸ்போ 3 ஆவது தளத்தில் இந்திய கைவினை பொருள்கள் மற்றும் வீட்டும்னை விற்பனையாளர்களின் கண்காட்சி நடை பெறுகிறது. இல்லத்தினருடன் இன்று சென்று வந்தேன். அவ்வளவாக கூட்டமில்லை. சிங்கை வானொலி வழி விளம்பரத்தில் கண்காட்சிக்குச் செல்ல 2 வெள்ளி நுழைவு சீட்டு வாங்க வேண்டும் அறிவிக்கப்பட்டு இருந்ததால்

பலர் வரவில்லை போலும் என்று நினைத்துக் கொண்டே நுழைவுச் சீட்டை வாங்கும் பகுதிக்கு சென்றேன் பதிவு செய்துவிட்டு இலவச அனுமதி கொடுத்தார்கள். சனி - ஞாயிறு மக்கள் வெளியே கிளம்புவதே அறிது, அதிலும் கட்டணம் என்றால் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துவிட்டு இருந்துவிடுவார்கள் என்பது பின்னர்தான் அவர்களுக்கு தெரியும் போல, அதனால் கட்டணமின்றி இலவசமாகவே அனுமதிக் கொடுத்தார்கள்.
எக்ஸ்போ வளாகத்தின் 3 வது தளத்தில் தான் கண்காட்சி நடந்தது.

நான் சென்ற போது மாலை 2.30 ஆகி இருந்தது, அருகிலேயே சின்னத்திரை நட்சத்திரங்களுடன் சிலர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நாங்கள் உள்ளே சென்றதும் நேராக உணவு கடைகளுக்குச் சென்று வேண்டியதை வாங்கிக் கொண்டு அமர்ந்தோம். அப்போது நட்சத்திரங்களும் அங்கு வந்து உணவை வாங்கிக் கொண்டு ஒரு மேசையில் அமர்ந்து உண்ண ஆரம்பித்துவிட்டார்கள். சென்னையில் துணை நடிகை துணிக்கடைக்குச் சென்றாலே அவளால் கசங்கமல் வெளியே வரமுடியாது.

இங்கு சின்னத்திரை நட்சத்திரங்களை யாரும் கும்பலாக மொய்க்கவில்லை. அங்கிருக்கும் மக்களில் ஒருவராகத்தான் அவர்களைப் பார்க்க முடிந்தது. விருப்பப் பட்டவர்கள் அவர்களுக்கு கைகுலுக்கி (வெகு சிலர்தான்) அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மற்றவர்கள் ஓரிரு முறை அவர்களை திரும்பிப் பார்த்ததுடன் சரி. சின்னத்திரை நட்சத்திரங்கள் யாரும் 'பந்தா' செய்யவில்லை. பாராட்டலாம் ! அவர்கள் அனைவருமே பெரிய திரைகளிலும் நடிப்பவர்கள் தான்.
நாங்களும் சாப்பிட்டு முடித்ததும்,

அருகில் சென்று சின்னத் திரை நட்சத்திரங்களின் அனுமதி பெற்று புகைப்படம் எடுத்துக் கொண்டேன். க்ளிக்கிக் கொடுத்தது தங்கமணிதான்.
மேடையில் புடவைக் கட்டிக் காட்டும் நிகழ்ச்சி ஒன்றை வைத்திருந்தார்கள், புடவையை 200 வகையாக கட்ட முடியுமாம், யாராவது கேள்வி பட்டு இருக்கிறீர்களா ? 10 வகையாக ஒரே புடவையை கட்டிக் கட்டினார்கள், சீனப் பெண்ணைத் தான் புடவை கட்டுவதற்கு காட்சிப் பொருளாக ஆக்கி இருந்தார்கள்,
நம் இந்தியப் பெண்கள் பொது இடத்தில் இதெற்கெல்லாம் ஒப்புக் கொள்ளமாட்டார்கள் என்பதால் சீனப் பெண்தான்

கிடைத்திருக்கிறாள். அந்த சீனப் பெண்ணும், அவ(ர்க)ளது பொது இட கலாச்சாரமும் மேற்கத்திய தாக்கம் இருப்பதால், அவள் வெட்கப்பட வில்லை. அழகாகவே சிரித்தாள், புடவை கட்டுவதை மேடை நிகழ்ச்சியாக பார்க்கும் போது ஆபாசமாக பார்த்தால் ஆபாசம் தான், கலையாக பார்த்தால் கலைதான். பெண்களுக்கு கலையாக தெரிந்திருக்கும். நான் கலையாக மட்டும்தான் பார்த்தேன் என்று சொன்னால் அது பொய்தான். கொஞ்சம் ஆபாசமாகத்தன் இருந்து.
அதன் பிறகு கோலப்போட்டி நடந்தது. தங்கமணிக்கும் கோலப்போட்டியில் கலந்து கொள்ள ஆசை, கலந்து கொள்ளச் சென்றோம், வண்ணப் பொடிகளைக் கொடுத்தார்கள். கோலமாவு இல்லாமல் வண்ணப் பொடிகளை மட்டும் வைத்து எப்படி கோலம் போடுவது ? ஏற்பாட்டளரிடம் கேட்டோம். "By mistake we forgot to bring the rongoli white powder (வெள்ளை கோலை மாவு), please draw the outline on the newspaper and color it...we are very sorry". என்றார்கள். சொதப்பலான, பொறுப்பின்மையாக ஒரு ஏற்பாடு. அப்படியும் சில சிறுவர் - சிறுமியர்,

சில பெண்கள் வண்ணப் பொடியை வைத்து அவர்களால் முடிந்த அளவு முயன்றார்கள். அருகில் இருக்கும் கோலங்கள் தான் பரிசு பெற்றவை. இது இவ்வளவு அலங்கோலமாக இருப்பதற்குக் காரணமே வெள்ளை கோல மாவு இல்லாததால் தான். ஒரு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்தால் அடிப்படை தேவைகளாவது சரியாக செய்ய வேண்டும். கோலப் போட்டி பெரிய சொதப்பல் தான். அதன் பிறகு சிறுவர்களுக்கு திரைப்பாடல்களுக்கான நடன அசைவுகளை சென்னையில் இருந்து வந்த திரைக் கலைஞர் ஒருவர் செய்து காட்டினார். விஜய் பாட்டு (மதுரைக்கு போகாதடி....), ம

ற்றும் ஒரு ஹிந்திப் பாட்டின் ஒரு பகுதிக்கு அசைவுகளைச் சொல்லிக் கொடுத்தார், 20 பேர்வரை சேர்ந்து ஆடினார்கள். அந்த நிகழ்ச்சி நன்றாக இருந்தது.
கடைசியாக கண்காட்சியைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தோம். மாலை 7.00 மணிக்கு நடைபெறப் போகும் சின்னத் திரை நட்சத்திரங்களின் நிகழ்ச்சிக்கு இலவச நுழைவு சீட்டுக் கொடுத்தார்கள். மாலை வரை அங்கிருந்தால் மிகவும் அசதி ஆகிவிடும் என்பதால் மாலை 5 மணிக்கு திரும்பிவிட்டோம், 5 மணிக்கு மேல் நல்ல கூட்டம் வர ஆரம்பித்துவிட்டது. அப்பொழுதெல்லாம் சின்னத்திரை நட்சத்திரங்களின் நிகழ்ச்சிக்கு இலவச நுழைவுச் சீட்டுக் கொடுக்கவில்லை. நண்பர் ஒருவர் இல்லத்தினரோடு அங்கு வந்தார், அவரிடம் கொடுத்துப் பார்க்கச் சொல்லிவிட்டு நாங்கள் திரும்பிவிட்டோம்.
கண்காட்சிக்கு நாளை கடைசிநாள், பார்க்க விருப்பம் உள்ளவர்கள் சிங்கைப் பதிவர்கள், சிங்கை நண்பர்கள் சென்று வரலாம். சிங்கப்பூர் எக்ஸ்போ 3 ஆவது தளத்தில் தான் கண்காட்சி நடக்கிறது. இந்திய மாநகரங்களில் / தலைநகரங்களில் வீடு,

மனை வாங்குபவர்களக்காக நிறைய ஆலோசனைக் நிலையங்கள் (ஸ்டால்ஸ்) இருக்கிறது, அவர்கள் விற்பனை செய்யும் இடங்களைப் பற்றிய தகவல்கள் அளிக்கிறார்கள். கைவினைப் பொருள்கள் மற்றும் பல்வேறு மாநில இந்திய உடைகள், அலங்காரப் பொருள்கள், தரைவிரிப்புகள் எல்லாம் கண்காட்சியில் விற்பனையில் உள்ளது. உள்ளே எல்லாம் சேர்த்து 50 நிலையங்கள் (ஸ்டால்) வரையில் இருக்கும். சைவம் மற்றும் அசைவ உணவுகளுடன் 5 -6 உணவுக் நிலையங்கள் இருந்தது.