காமன்வெல்க்த் போட்டிகளை ஏற்று நடத்துவதாக ஏற்பாடு செய்த இந்தியா பல்வேறு நாடுகளின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிவருகிறது. துவக்கம் முதலே ஊழல் குற்றச் சாட்டுகள், தற்போது தரமற்ற கட்டுமானங்களினால் பாதுகாப்புக் கூரைகள் இடிந்துவிழவதும், மற்றும் விளையாட்டுவீரர்களுக்கான வசதிக் குறைபாடுகள் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகளால் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, இங்லாந்து, ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகள் காமன் வெல்த் போட்டிகளுக்காக தங்கள் வீரர்களை அனுப்பப் போவதில்லை என்று அறிவித்திருக்கின்றனர். காமன்வெல்த் போட்டியின் கண்காணிப்புக் குழுவும் இந்தியா வந்து போட்டி நடைபெறும் இடங்களை பார்த்து ஏற்பாடுகள் நிறைவாக இல்லை என்று அறிவித்துவிட்டன. வெளிநாட்டு ஊடக செய்திகளில் காமன்வெல்த் போட்டியின் குறைபாடுகளை கட்டம் கட்டிப் போட்டு இந்தியாவின் மானத்தை கப்பல் ஏற்றிவருகிறார்கள்.
தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆட்சியில் இருக்கும் காங்கிரசு கட்சியின் கையாலகத்தனமாகவே இதனை கருதவேண்டி இருக்கிறது, வடகிழக்கில் நக்சல்களுடன் மோதல், காஷ்மீரில் பதட்டம், காமன்வெல்த் போட்டி நடைபெறும் இடத்திலேயே குண்டு வீச்சு என பாதுக்காப்பு தொடர்புடையவற்றில் காங்கிரசின் செயல்பாடுகள் எதுவும் பாராட்டுவிதமாக இல்லை. பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும், போட்டி ஏற்பாடுகளின் சொதல்பல்களையும் கருத்தில் கொண்டு பல நாடுகள் புறக்கணித்திருப்பதை நாம் தவறு என்று பார்க்க முடியவில்லை. பளுதூக்கும் அரங்கின் கூரையே இடிந்து விழுந்திருக்கிறது என்னும் போது இவர்களை நம்பி எந்த ஒரு நாடும் வீரர்களை அனுப்ப முடிவு செய்வார்கள் என்று நம்புவது நம் மடைமை.
இலங்கைப் போரில் சிங்கள இராணுவத்திற்கு உதவியதில் முனைப்புக் காட்டி தமிழர் அழிவுகளுக்கு அடிகோலியதன் சிறு பங்கை இந்திய நலனின் காட்டி இருந்தால் விளையாட்டுப் போட்டி நடத்தும் நாம் உலகின் முன்பு தலைகுணிந்து நிற்கத் தேவை இல்லை. வாரம் ஒருமுறையாவது மீனவர்கள் மீதான தாக்குதல்களும் தொடர்ந்தே வருகின்றன. இந்திய பாதுகாப்பும், இந்திய விளையாட்டுப் போட்டிகளின் ஏற்பாடுகளும் இராஜபக்சேவை திருப்திபடுத்தி இலங்கை வீரர்களாவது விளையாடவருவார்களா ? அல்லது இராஜபக்சே அரசும் இந்தியாவுக்கு பை பை காட்டுமா என்பது கேள்விக் குறியாக உள்ளது.
உணவு தானியம், பாதுகாப்பு, விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் காங்கிரசு அரசின் செயல்பாடுகள் மக்கள் நலன் சார்ந்ததாக, இந்திய நலன் சார்ந்ததாகவோ, பொறுப்பாகவோ இல்லை. எந்த ஒரு தனிப்பெரும்பான்மை பலமும் இல்லாத நிலையில் கூட்டணி என்ற பெயரில் ஆளும் காங்கிரசு ஆட்சியை கைப்பற்றியது தவிர்த்து எந்த ஒரு சாதனையும் செய்யவில்லை, ஏழைகளுக்கு இலவச செல்போனாம், எத்தனை ஆண்டுகளுக்கு ? ஒருவேளை ஏழைகளும் செல்போன் பயன்படுத்தி பழகிக் கொண்டால் இலவச செல்போன் திட்டங்களை களையும் போது பயன்படுத்தியவர்கள் எப்படியேனும் செல்போன் பயன்பாட்டை நாடுவார்கள், அதன் மூலம் தனியார் செல்பேசி நிறுவனங்கள் பெருத்த லாபம் அடையும் என்பதைத் தவிர்த்து வேறென்ன நடக்கும் ? கருணாநிதியில் இலவச தொலைகாட்சியைப் பெற்றுக் கொண்டோர் அவர் வாரிசுகள் நடத்தும் கேபிள் நிறுவனங்களுக்கு மாதக் கப்பம் கட்டிவருவது தானே நடந்துவருகிறது. அரசுகள் அறிவிக்கும் இலவசங்களெல்லாம் தனியார் லாபங்களை கருத்தில் கொண்டவையே.
கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணங்களை விளையாட்டு நடத்த செலவிட்டு, ஏற்பாடுகளை சரியாகச் செய்யாமல் நாட்டுமக்களை தலைகுனிய வைத்துவிட்டு, சின்னதம்பி படத்தில் 'எனக்கு கல்யாணம்......எனக்கு கல்யாணம்' என்பதாக காங்கிரசின் விளையாட்டுத் துறை அமைச்சர் செயபால் ரெட்டி 'எந்த நாடு புறக்கணித்தாலும் போட்டி வெற்றிகரமாக நடக்கும்' என்கிறார். போகிற போக்கைப் பார்த்தால் தெற்காசிய நாடுகள் தவிர்த்து எந்த ஒரு நாடும் கலந்து கொள்ளாதோ என்கிற அச்சம் தான் ஏற்படுகிறது. அதிலும் ஆழம் பார்க்க இலங்கை கழண்டு கொண்டால் வியப்பேதும் இல்லை.