பின்பற்றுபவர்கள்

நூல் விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூல் விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3 டிசம்பர், 2009

கிறிஸ்தவம் ஒரு முழுமையான வரலாறு - சேவியர்

இறை நம்பிக்கைப் பற்றி எனது புரிதலில் எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், மனித புலன்களுக்கு அப்பாற்பட்ட ஒன்று, அனைத்தையும் அறிந்த ஒன்று, மனிதர்களை நல்வழிப்படுத்தும் ஒன்று என்கிற நம்பிக்கையின் வேராக இருப்பதே இறை நம்பிக்கை. இறை நம்பிக்கையில் இறை பற்றிய தன்மை அல்லது கட்டுமானம் மற்றும் அவை குறித்த கோட்பாடுகளின் வேறுபாடுகளின் தனித் தனி வேற்றுமைப் பெயர்களே மதங்கள் எனப்படுகின்றன. அவற்றினுள் முரண்பாடுகளை, அவை முரண்படும் போது அவற்றை எடுத்துக் கொண்டு தனித் தனியாக வடிவெடுத்தவையே மதப் பிரிவுகள். உலகில் உள்ள வளர்ந்த மதங்களை இருபிரிவுகளாக பிரிக்க முடியும், இந்திய மதங்கள், ஆப்ரகாமிய மதங்கள். ஆதாம் ஏவாளே மனித தோற்றுவாய், இறைச் சொல்லுக்கு கட்டுப்படாமல், விலக்கப் பட்ட கனியை உண்டதால் பாவம் செய்தவர்களானார்கள், அதன் தொடர்ச்சியாக அவர்களின் பாவத்தை சுமக்கும் அவர்களின் வாரிசுகளாக நாம், எனும் ஆப்ரகாம் என்கிற மூதாதைய நம்பிக்கையுடன் வளர்ந்தது ஆப்ரகாமிய மதங்கள் எனப்படுகின்றன. ஆப்ரகாமிய மதங்களில் யூத, கிறித்துவ அதன் உட்பிரிவுகள் மற்றும் இஸ்லாம் அடக்கம். இந்த வரிசைப்படி முதலில் தோன்றியது பிந்தியதை மறுதலிக்கும். பிந்தியவை நாங்களே இறுதியான, உறுதியானது உண்மையானது என்று சொல்லிக் கொள்ளும். இந்திய மதங்கள் பற்றி அனைவருக்கும் ஓரளவு நன்கு தெரியும் ஆகையால் நான் அதை மீண்டும் இங்கே எழுதுவதைத் தவிர்க்கிறேன். உலக மதங்கள் பற்றிய புரிதல் வலைப்பதிவுகளை வாசித்ததன் மூலம் நான் அறிந்து கொண்டவை தான்.

கிறித்துவம் பற்றி கிறித்துவம் சாராத பிற மதத்தினருக்கு குறிப்பாக இந்துக்களுக்கான, தமிழர்களுக்கான புரிதல் அவர்கள் (கிறித்துவர்கள்) நிறைய பள்ளிக் கூடங்களைத் திறந்தார்கள், ஏசு மற்றும் மாதாவை வழிபடுபவர்கள், ரோமை அல்லது வாடிகன் போப்பாண்டவரை தலைமையாக கொண்டவர்கள், துறவர வாழ்க்கை வாழும் சாமியர்கள் (பாதிரியார்கள்) தலைமையில் திருமணம் செய்து கொள்பவர்கள், ஞாயிற்றுக் கிழமை வழிபாடு செய்பவர்கள், அவர்களில் சிலர் வெள்ளை ஆடைகள் அணிந்து கொண்டு இரவு பதினோரு மணி வரை கூட 'ஏசு அழைக்கிறார், அலேலூயா, அலேலூயா, மீட்பர் வருகிறார்' என்று பிரச்சாரம் செய்து தூக்கத்தை கெடுப்பவர்கள், அங்கங்கே ஆர் எஸ் எஸ் காரர்களால் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள் என்கிற பொதுப் புரிதல் தான். இதைத் தாண்டி கிறித்துவம் என்கிற மதத்தைப் பற்றிய புரிதல், அதன் தோற்றம், அவற்றின் வளர்ச்சி, அவற்றின் பிரிவுகளை அறிந்தவர்கள் மிகவும் குறைவு தான்.

ஒரு மதம் பற்றிய பிற மதத்தினரின் புரிந்துணர்வுகள் என்பது அவர்களை மதிப்பது, அவர்களின் அடையாளம், பண்பாடு, அவர்களின் கடவுள் ஆகியவற்றுடன் முடிந்துவிடுகிறது. அதைத் தாண்டி மதங்களை வரலாறுகளாக படித்து தெரிந்து கொள்வோர் மிகக் குறைவே. அதற்கு காரணம் தன்னுடைய மதத்தின் மீதான உறுதியான நம்பிக்கையும், அந்த உறுதியான நம்பிக்கை பிற மதங்களைப் பற்றி தெரிந்து கொள்வதை, புரிந்து கொள்வதை மறுதலித்துவிடும்.

மதங்களை வரலாறு என்பதாக படிப்பதற்கு தமிழ் சூழலில் நூல்கள் குறைவாகவே இருக்கின்றன. மதங்கள் பற்றிய அறிமுகங்களை எளிமையான வரலாறு அல்லது வரலாற்று அடிப்படையில் தரவுகளுடன் எழுதப்படும் போது அவை ஒரு வரலாற்று இலக்கியம் என்கிற புரிதலுடன் பரவலாக வாசிப்பதற்கு வழி வகுக்கும். "கிறிஸ்தவம் ஒரு முழுமையான வரலாறு" என்கிற தலைப்பில் திரு சேவியர் 210 பக்கங்களில் மிகவும் எளிமையாக வரலாற்று இலக்கியம் போன்று மிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறார். கிழக்கு பதிப்பகம் அதை வெளி இட்டு இருக்கிறது. இந்த நூலை சென்றவாரம் சிங்கப்பூர் நூலகத்தில் இருந்து எடுத்துவந்து படித்தேன். விறுவிறுப்பாக நாவல் போல் தொடங்கும் நடை, தொய்வில்லாமல் பல்வேறு தலைப்பு உள்ளடக்கங்களுடன் சிறப்பாக எழுதப்பட்டு இருந்தது, போதிய நேரமின்மை என்பதைத் தவிர்த்துப் பார்த்தால் ஒரே மூச்சில் படித்துவிடக் கூடிய ஆவல் ஏற்படுத்தும் வண்ணம் எழுதப்பட்டு இருந்தது.

*****

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பிறகு கிறித்துவம் வளர்ந்தது பற்றியும், அது புறப்பட்டு, பயணப்பட்ட இடங்கள், அதை வளர்த்தெடுத்தவர்கள் பற்றி சிறப்பாக எழுதி இருக்கிறார். ஏசு கிறித்துவின் அப்போஸ்தலர்கள் எனப்படும் நேரடி சீடர்களில் அவரைக் காட்டிக் கொடுத்துவிட்டு, மனம் நொந்து தற்கொலை செய்து கொண்ட ஒரு சீடர், மற்றும் இயற்கை மரணம் அடைந்த யோவான் (John) தவிர ஏனைய 10 சீடர்களும் ஏசுவின் கொள்கைகளை போதித்தார்கள் என்பதற்காக அன்றைய ஆட்சியாளர்களாலும், பழைய மதத்தலைவர்களினாலும் கொடுரமாகக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள், இது பற்றிய குறிப்புகள், ஆண்டு விவரங்கள், அவர்கள் மதப் பரவலுக்குச் சென்ற இடங்கள், குறிப்பாக இந்தியாவிற்கு வந்த புனிதர் தோமா (செயின்ட் தாமஸ்) போன்ற விவரங்களைத் தந்திருக்கிறார். எந்த ஒரு மதமும் ஆளும் அரசர்களின் ஆதரவைப் பெறாமல் போனால் அது சந்திக்கும் இன்னல்களையும், ஆதரவு பெற்றால் பெரும் அசுர வளர்ச்சியையும் கான்ஸ்டண்டைன் மன்னருக்கு பிறகு கிறித்துவம், முன் கிறித்துவம் என்பதில் இருந்து நன்கு புரிய வைக்கப்பட்டு இருக்கிறது.

உலகில் அன்பு என்னும் ஆயுதம் ஏந்தி புறப்பட்டவை இரு மதங்கள் தான் ஒன்று பவுத்தம், மற்றொண்டு கிறித்துவம், இவைகள் பின்னாளில் அரச மதங்கள் மற்றும் தங்கள் ஆளுமைக்கான மத அடிப்படை நாடுகளை உறுவாக்கிக் கொண்டன, ஐரோப்பாவில் கிறித்துவ சமய நாடுகளும், ஆசியாவில் புத்த சமய நாடுகளும் இருப்பதற்கு அவை வலிமையாக வழியுறுத்தப்பட்டன என்று சொல்வதற்கான ஆதாரங்கள் குறைவு அல்லது இல்லை. மக்கள் சேவைகளின் வழியாக பரவியதில் கிறித்துவமே முதலிடத்தை இன்றும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. பிரித்தாளும் சூழ்ச்சியில் இந்தியாவில் கிறித்துவம் பரப்பப்பட்டது என்கிற கூற்று ஓரளவுக்கு உண்மையாக இருக்கலாம் என்கிற கூற்றுக்கு ஏற்ப பிற நாடுகளில் விரைவான வளர்ச்சி பெற்ற கிறித்துவம் இந்தியாவிற்கு தோமாவால் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக கிட்டதட்ட திருவள்ளுவர் காலத்தில் அறிமுகம் ஆகி இருந்தாலும், புரோட்டஸ்டாண்ட் பிரிவு வெள்ளையர்கள் இந்தியாவில் நுழைந்த பிறகே விரைவாக வளர்ச்சி கண்டது, இந்தியாவில் கிறித்துவ வளர்ச்சிக்கு வந்த அருட் தந்தைகள் இங்குள்ளது போல் காவி உடை, பூணூல் அணிந்தது, தமிழ் வளர்ச்சிக்கு உதவியது பற்றியெல்லாம் நூல் ஆசிரியர் குறிப்பிட்டு இருக்கிறார், தோமாவுக்கு முன்பும், பின்பும் கேரளா மற்றும் கேராளாவை ஒட்டிய தமிழக கடற்கரைப் பகுதி கிறித்துவர்கள் பல நூற்றாண்டுகளாகவே இருந்துவரும் கிறித்துவர்கள், கத்தோலிக்க மற்றும் சிரியன் கிறித்துவர்கள் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

மதத்தை பயன்படுத்துபவர்களின் மொழி(கள்) புறக்கணிக்கப்பட்டால் (கிரேக்கம் மற்றும் லத்தீன்) மதம் பிளவு பெறும் என்பதற்கு கிறித்துவத்தில் புரோட்டஸ்டாண்டு என்னும் பிரிவு ஏற்பட்டு கிறித்துவம் பிளவு ஆகியதை நூல் ஆசிரியர் மிதமாக உணர்த்தி இருக்கிறார், அதற்கு காரணமாக பிரிதொரு மையக் கருத்தாக ரோம் தலைமையின் கட்டுப்பாடுகள், ஆளுமைகள் என்கிற குற்றச் சாட்டு எழுந்து கிறித்துத்தில் பிரிவுகள் ஏற்பட்டு பிரிந்தாகக் குறிப்பிட்டு இருக்கிறார். 'ஆண் வாரிசு' இல்லை என்பதற்காக மற்றோர் திருமணம் செய்து கொள்ள இங்கிலாந்து மன்னன் எட்டாம் ஹென்றி முடிவு செய்த போது அதை பாப்பரசர்(போப்) தலைமை திருச்சபை எதிர்க்க, கட்டுப்படாத மன்னன் பாப்பரசருக்கு எதிராக புரோட்டஸ்டாண்ட் பிரிவை ஆதரிக்க இங்கிலாந்து முழுவதும், மற்றும் உலக நாடுகளில் புரோட்டஸ்டாண்ட் பிரிவு வளர்ச்சி கண்டதாகா குறிப்பிட்டு இருக்கிறார். ஆண் வாரிசு ஆசை மதங்களையே ஆட்டம் காண வைக்கிறது என்று நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது.

இன்றைக்கும் தொடரும் பாலஸ்தீன இஸ்ரேல் பிரச்சனைகள் சிலுவைப் போர்களின் தொடர்ச்சி எனலாம், கிறுத்துவின் நிலம் (பெத்லகேம்) மீட்கும் போராட்டமாக தொடங்கப்பட்ட சிலுவைப் போர்கள் பல பின்னடைவை சந்தித்து இஸ்ரேல் என்னும் தனி நாடு உருவாக காரணமாக அமைந்திருக்கிறது. ஐரோப்பாவில் இஸ்லாமிய படையெடுப்புகள் ஐரோப்பியர்களை கிறித்துவர் மதம் சேர்ந்தவர்கள் என ஒன்றிணைந்த போராட்ட சக்தியாக மாற்றியது, கிறித்துவ பிரிவுகள் வேற்றுமைகளை மறந்து ஒன்றிணைய இஸ்லாமிய படையெடுப்புகள் தான் மறைமுகமாக வழி அமைத்தது. சிலுவைப் போர்கள் பற்றிய அறிமுகமாக ஆசிரியர் எளிமையாகக் அவைபற்றிக் குறிப்பிட்டு இருக்கிறார்.

தமிழில் விவிலியம் எனப்படும் பைபிள் எனப்படும் கிறித்துவர்களின் மறை நூல்களின் பிரிவுகள் (புதிய, பழைய ஏற்பாடுகள்) யாரால் ஏற்பட்டது, யாரால் தொகுப்பட்டது போன்ற விவரங்கள் நூலில் அடங்கி இருக்கிறது. கிறித்துவத்தின் பல்வேறு பிரிவுகளின் வேறுபாடுகள், அவர்கள் தங்கள் பணியாக நினைப்பது பற்றி சுறுக்கமான அறிமுகங்களைக் கொடுத்து இருக்கிறார். கொலைக் கருவியான சிலுவை எப்போது புனித சின்னமாக மாறியது, கிறித்துவ கொள்கைகள் திரிப்பு அல்லது வசதிக்கேற்று பொருள் கூறி வளர்ந்த கிறித்துவ பிரிவு இயக்கங்கள் ஆகியவை நூலில் சொல்லப்பட்டு இருக்கின்றன.

ஏசுவின் மறுவருகை இதோ, மீட்பர் இதோ வருகிறார் என்று சொல்லப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரு மதம் வளர்ச்சி பெற்றே வந்திருக்கிறது என்று நினைத்துப் பார்த்தால் பெரும் வியப்பு தான். குறியீடுகளையும் சிலை வழிபாடுகளையும் எதிர்த்து துவங்கிய கிறித்துவ மதம் சிலுவை குறியீட்டையும், சிலை வணக்கங்களையும் மீண்டும் கொண்டிருக்கிறது என்பதையெல்லாம் பார்க்கும் போது 'நாளை வருகிறார் ஏசு' என்கிற நம்பிக்கைக்கு குறியீடுகளும் சிலை வணக்கமும் மறைமுகமாக உறுதுணை புரிவதாக எனது புரிதல்.

இன்னும் நூலின் தகவல் உள்ளடக்கம் மற்றும் கிறித்துவம் பற்றி மிகுதியாகவே எழுத விருப்பம், இடுகை நீண்டுவிடும் என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்

*****

சேவியர் சிறப்பாக எழுதி இருந்தாலும் படிக்கும் போது கிறித்துவத்தில் கத்தோலிக்க கிறித்துவ பிரிவே உண்மையானது என்று சொல்லுகிறாரோ என்கிற பொருள் மயக்கம் வருகிறது. இங்கு பின்னூட்டத்தில் சேவியர் விளக்கம் அளித்தால் மகிழ்வேன். என்னுடைய அவதனிப்பு, என்னுடைய வாசித்தல் துய்ப்புபடி சொல்வதென்றால் நூலின் உள்ளடக்கம் மற்றும் எழுத்து நடை மிகச் சிறப்பு.


வரலாற்று ஆர்வம் உடையவர்களுக்கு,கிறித்துவம் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவர்களுக்கு பரிசாக கொடுக்க ஏற்ற நூல்


நூல் கிடைக்கும் இடம் : கிழக்கு பதிப்பகம்
நூலின் விலை : 100

14 செப்டம்பர், 2009

ஜெமோவின் ஏழாம் உலகம் !

அண்மையில் நூலகத்தின் வழியாக ஜெயமோகனின் ஏழாம் உலகம் வாசிக்க கிடைத்தது, ஒரு எழுத்தாளனின் பண்முகத் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்று அடையாளப்படுத்தும் ஒரு ஆக்கம் அதுவென்றால் அது மிகையல்ல. 'நான் கடவுள் படம்' ஏழாம் உலகத்தின் தழுவல் என்றாலும். ஏழாம் உலகம் சுழலும் தளம் நான் கடவுள் படத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.

பிச்சைக்குத் தள்ளப்படும் உடல்குறையுற்றோரின் துயரங்களை அவர்களோடு கோவில் படிக்கட்டுகளில் அமர்ந்து, படுத்து, அவர்கள் உழலும், சாக்கடைகளிலும், அவர்களின் மலக் கழிவுகளிலும் பயணித்தது போன்று மிக நேர்த்தியாக வட்டார வழக்கு சொல்லாடல், காட்சி அனைத்தையும் வாசகனின் மனதிற்குள் காட்சியாக விரிய வைக்கப்பட்டு இருக்கிறது, ஒரு எழுத்தாளனுக்கு பலமொழிப் புலமை எந்த அளவுக்கு அவசியம், அதன் தேவையால் ஒரு இயல்பான ஒரு இலக்கிய நடையைத் தரமுடியும் என்பதை அந்த கதையில் வரும் மலையாளப் பாத்திரங்களின் மூலம் உணர்த்தப்படுகிறது. உடற்குறையுற்றவர்கள் மீது ஆளுமை செலுத்தி அவர்களின் பிச்சையைத் தன் தொழிலாக வைத்திருக்கும் 'பண்டாரம்' பாத்திரம் கதையின் மையம் என்றாலும், கதையில் இடம் பெறும் ஒவ்வொரு பாத்திர படைப்பும் தனித்தனியாக ஒளிர வைத்திருக்கிறார்.

ஆபாசம், அசூசை, வெட்கம், சொரணை இவை எல்லாம் பிழைப்பு வாதத்திற்கு முன் அற்பமே என்பதை கதையைப் படிப்பவர்கள் புரிந்து கொண்டு அதிர்ச்சி அடைவார்கள். உதாரணத்திற்கு பழனி கோவிலுனுள் சிலைக்கு அருகே பண்டிதர்கள் வெற்றிலை எச்சிலைத் துப்புவதையும், சிறுநீர் கழிப்பதையும் எழுதி அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறார். உண்மைகள் புனித பேச்சுக்கும், போர்வைக்கும் முன்பு காவிப் பற்கள் இளிப்பதைப் பார்க்கும் போது, அது புனிதப் பேச்சிலும், புனித போர்வையிலும் மயங்கிக் கிடக்கும் உலகத்தின் மீது அசுத்தங்களை அபிசேகமாக்குகிறது, ஏற்க கடினமாக இருந்தாலும் அவை இயல்பாக நடக்கும் உண்மைகள் என்னும் போது பொதுச் சமூகத்தின் மீதும் அதன் கட்டமைப்புகள் மீது வெறுப்பு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

'யார் வேண்டுமானாலும், நம்மை விற்கலாம், வாங்கலாம்' என்று மனம் வெதும்பும் உடற்குறையுற்ற பிச்சைக்காரர்களின் இயலாமை விளிம்பு நிலை மாந்தர்களின் மெல்லிய முனுகலாக பதியவைக்கப்பட்டு இருக்கிறது. கதையில் ஒழுகும் எச்சிலும், வீசும் மலத்தின் நாற்றமும் நாம் வாழும் சமூகத்தின் புறக்கணிக்கப்பட்ட கழிவுகளாகவும், நாம் நாற்றத்தை மறைக்க வாசனையைப் பூசிக் கொண்டு நடமாடுவதை இயல்பாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதைக் கதையெங்கும் உணர்த்தி இருக்கிறார்.

பிச்சைக்காரர்களை கொடுமைப் படுத்தி அவர்களை 'உருப்படி' என்று அழைத்துவரும் பண்டாரம் 'நான் என்ன பாவம், செய்தேன், கெடுதல் செய்தேன், யாருக்கு துரோகம் செய்தேன்' என்றெல்லாம் முருகன் சன்னதியில் வேண்டிக் கொள்வது, உடற்குறையுற்றோர்களை பண்டாரம் போன்றவர்கள் ஒரு மனித இனமாகவே மதிக்கவில்லை, அவர்களை ஒரு பொருளியலுக்கு மூலதனமாகப் பயன்படும் விலங்கைப் போன்றே நினைக்கிறார்கள் என்பதையெல்லாம் நன்கு உணர்த்தி இருக்கிறார்.

சுயநல உலகின் மீது ஒவ்வொரு பக்கத்திலும் செருப்புகளை வீசி காரி உமிழும் ஜெமோவின் 'ஏழாம் உலக நாவல்' தமிழ் சூழலில் மிகவும் போற்றப் படவேண்டிய, பலருக்கும் பரிந்துரைக்கப்பட வேண்டிய நாவல். ஜெமோவின் உழைப்பும், தகவல் சேகரிப்பும் எண்ணும் போதெல்லாம் வியப்பாக இருக்கிறது.

ஜெமோ முன்னுரையில் தன்னடக்கமாக குறிப்பிட்ட வரிகள் ' நான் எழுதியதிலேயே இந்த நாவல் தான் ஜெயகாந்தனின் எழுத்துக்கு அருகே நிற்கும் தகுதியைப் பெற்றிருப்பதாக நினைக்கிறேன்' என்கிற வரியில் அவரது இலக்கிய வேட்கை எந்த அளவுக்கு தாகம் கொண்டதாக இருந்து இப்படி ஒரு சிறப்பான படைப்பை உருவாக்க முடிந்திருக்கிறது என்று நினைக்கையில் இலக்கிய வாசகன் என்ற முறையில் ஜெமோவை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

நான் கடவுள் படம் பார்த்த பிறகு, அந்தப் படம் இந்துத்துவாவை முன்னிறுத்துகிறது என்றும் ஜெமோ அவற்றை வலிந்து செய்திருப்பாரோ என்று நான் நினைத்துக் கொண்டிருத்தேன். விளிம்பு நிலை மாந்தர்கள் பற்றி அழுத்தமாக புரிய வைக்க வேண்டிய சூழலில் அகோரியை இடை நுழைத்து மூலக் கதைச் சிதைக்கப்பட்டு இருக்கிறது என்றே தற்போது எனது புரிதலாக இருக்கிறது. பாலாவின் 'நான் கடவுள்' படத்தில் ஜெமோவின் 'ஏழாம் உலகத்திற்கு' உயிர் கொடுத்திருந்தாலும் திரைக்கதைகாக மூலக் கதையில் நடைப் பெற்ற மாற்றங்கள் படைப்பாளி என்ற முறையில் ஜெமோவை வருத்தப்படுத்தி இருக்கக் கூடும் என்றே நினைக்கிறேன்.

ஜெமோவின் மற்ற எழுத்துக்கள் மீது உங்களுக்கு எப்படிப் பட்ட விமர்சனம் இருந்தாலும் அவை எல்லாமும் 'ஏழாம் உலகம்' ஒரு முறை வாசித்துவிட்டால் மறைந்துவிடும்.

3 ஆகஸ்ட், 2009

மண்ட்டோ !

நான் ஒரு இலக்கிய ஆர்வலன் என்று (அவராக :)) நினைத்த தம்பி புதுகை எம் எம் அப்துல்லா, ஆறு மாதங்களுக்கு முன்பு சிங்கை வந்திருந்த போது கொஞ்சம் கனமான 600 + பக்கங்கள் கொண்ட சிறுகதைத் தொகுப்பு ஒன்றைக் கொடுத்தார். நூல்களை எப்போதும் பயண நேரத்தில் படிப்பது வழக்கம் என்றாலும், படித்துப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் நூலின் எடை அந்த ஆவலை அடக்கி இருந்தது. இரண்டு மூன்று நாளாக வாசிப்பதற்கு நிறைய நேரம் கிடைத்ததால் எடுத்து வாசித்தேன். முன்னுரைகளையும், முதல் சில அத்யாயங்களைப் படித்ததும், 'தங்கச் சுரங்கம் ஒன்று தலையணைக்கு அடியில் இருந்தது தெரியாமல் நாள் தோறும் படுத்து எழுந்தது ஒரு நாள் தெரிந்தால் உணர்வு எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வெளியீடாக மண்டோவின் படைப்புகள் அடங்கிய நூலின் இரண்டாம் பதிப்பு. குறுகிய காலத்திலேயே இரண்டாம் பதிப்பு பதிப்பிக்கத் தேவையான காரணங்களாக நூல் அமைந்திருந்தது என்று சொன்னால் மிகையல்ல.

முற்போக்கு சிந்தனை, தலித்தியம், பெண்ணியம், விளிம்பு நிலை மாந்தர்கள் பற்றிய படைப்புகள் பரவலாக வாசிக்கப்படும் இந்தக் காலத்தில் விளிம்பு நிலை மாந்தர்களின் கதைகளை இந்திய சுதந்திரத்திற்கு முன்பே மிகுதியாக பதிவு செய்தவர் மண்ட்டோவாகத்தான் இருக்கும். இலக்கியங்கள் அனைத்துமே 'ரிடையர்மெண்ட்' வாழ்க்கை விரும்பும் நடுத்தரவர்க்கம் சார்ந்த மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டே மிகுதியாக வருகின்றன. உயர்வர்கம் நாகரீகம் என்ற பெயரில் அவிழ்த்துப் போட்டு ஆடுவதாகவும், விபச்சாரம் போன்ற தொழில்களில் ஈடுபடுபவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே அல்லது வறுமையின் காரணமாக அந்த தொழிலை செய்து அநாகரீகமாக நடந்து கொள்வதாகவும் நடுத்தரவர்க்கம் தன் கருத்துகளை இலக்கியம் என்ற பெயரில் பதிவு செய்துவருகிறது. இலக்கியம், திரை, செய்தி ஊடகம் இவையாவும் நடுத்தர மக்களை மையமாக வைத்து இயங்கி வருபவை. உண்மையில் சமூகம் என்பது அனைத்து தரப்புகளையும் உள்ளடக்கியதே. விளிம்பு நிலை மாந்தர்களின் வாழ்வியலை, கதைகளை பதியவைக்காமல் முழுமையடைந்த ஒரு இலக்கிய சமூகம் இருந்துவிட முடியாது.

மண்டோவின் படைப்புகள் புனைவாக எதுவுமில்லாது, அவர் சென்ற இடங்களின் பழகிய மாந்தர்களையும், கண்ணுற்ற மாந்தர்களின் வாழ்க்கையில் நடந்தவற்றை சூழல், உணர்வு, எண்ணம், கலந்து ஒரு சில படைப்புகளில் பாத்திரங்களில் அவரும் ஒருவராக, மற்ற சில படைப்புகளில் ஒரு படக்கருவி சுழல்வது போல் காட்சிகளையும் உரையாடல்கள் ஒரு சேர இருக்கும் படி சிறப்பாக படைத்திருக்கிறார். கொஞ்சமும் கற்பனையற்ற இயல்பான உரையாடல்கள், படிக்கும் போது காட்சியை கொண்டுவருவதாக அமைந்திருக்கிறது.

நவீன இலக்கியம் படைக்க நினைப்பவர்கள்,நிகழ்வுகளை வைத்து (முடிவெதும் சொல்லாத) சிறுகதைகளை எழுத விரும்புவோர் மண்டோவின் படைப்புகள் நல்ல பயிற்சிகளைக் கொடுக்கும் என்பது திண்ணம். அப்படி எந்த ஒரு எண்ணமும் இல்லாமல் வாசித்தாலும், எழுத்தார்வம் மிக்கவர், பிறகு எழுதப் போகும் படைப்புகளில் மண்ட்டோவின் தாக்கம் இல்லாமல் எழுத முடியுமா என்பதை அறுதி இட்டுச் சொல்லிவிட முடியாது ஏனெனில் எழுத்தென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை படிப்பவர் எவரும் உணருவார்கள். வாசகர்கள் வாசிப்பு அனுபவங்களைவிட எழுத்தாளர்கள் அறிந்து கொள்ள வேண்டியவை அனைத்துமே மண்டோவின் சிந்தனைகளில் நிறையவே உண்டு. உருது மொழியில் மண்டோ எழுதியதை மிகச் சிறப்பாக இராமனுசம் மொழிப் பெயர்த்து இருக்கிறார். மொழிப் பெயர்ப்புகள் அம்மொழிக்கேற்றவாரு சொற்களுடன் இணைத்து இரத்தமும் சதையும் போல் எழுதுவதென்பது கடினம் என்றே நினைக்கிறேன். மண்ட்டோவின் மூல எழுத்தில் இருந்து மொழிப்பெயர்க்கப்பட்ட நூல் நிகழ்வுகள் நடந்த இடங்களைக் குறிப்பிடாவிட்டால் மொழிப்பெயர்ப்பு நூல் என்று கண்டு பிடிப்பது கடினம் தான்.

மண்ட்டோ சுதந்திர போராட்டக் காலத்திற்கு முன்பும், அதற்கு பின்பு வாழ்ந்தவர், முற்போக்கு எழுத்தாளர் ஒருவருக்கு எதிராக கருத்தும், எதிர்வினையும் பலமுனை தாக்குதலாக நடந்திருக்கிறதென்றால் அது மண்டோ ஒருவருக்குத்தான் என்பதாக முன்னுரையில் சுட்டி இருப்பதை மண்ட்டோவின் படைப்பை வாசிக்கும் போது உணரலாம். ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அவைகளின் மூலம் அன்றும் திரையுலகம் (நடிகைகளை) பெண்களைப் போகப் பொருளாகவும், ஆண் ஆதிக்கத்திலும் இருந்திருந்ததை தெரிந்து கொள்ள முடிகிறது. மண்டோ குறிப்பிடும் மாந்தர்கள் பெயர்களும் இடங்களும் மாறி இருக்கலாம் ஆனால் இன்றும் கூட அப்படியே தான் இருக்கிறார்கள், அது விலைமகளிர் என்றாலும் சரி, மதவெறியர்களாக இருந்தாலும் சரி. 80 விழுக்காடு இந்தியப் பகுதியில் நடக்கும் கதைகளுக்குச் சொந்தகாரரான 'மண்டோ, பாகிஸ்தானில் ஏன் இறுதி நாட்களைக் கழித்தார் ?' என்ற கேள்வி தம்பி புதுகை அப்துல்லா முன்னுரையில் குறிப்பிட்டுருந்ததை நினைத்தால் எனக்கும் வியப்பாகவே இருக்கிறது, இப்படி ஒரு சிறந்த எழுத்தாளர் ஒரு பாகிஸ்தானியாக மாறியதன் நிர்பந்தங்களில் இருக்கும் ஞாயங்கள் நாம் அறிவதற்கு அப்பாற்பட்டவையாகவோ, அதற்கு தேவையான காரணங்கள் இருக்கலாம் என்பதைத் தவிர வேறொன்றும் தேற்றிக் கொள்ள கிடைக்கவில்லை.

அன்பிற்குறிய அண்ணன் ஜமாலன், அசோகமித்ரன். அ.மார்க்ஸ் போன்றவர்களின் ஆழமான வாசிப்பு அனுபவங்களையெல்லாம் ஒப்பிட்டு நான் சாதக் ஹுசைன் மண்டோவின் எழுத்துக்களைப் பற்றி எழுதுவதை ஒப்பிட்டால் மலையைப் பார்த்து வியக்கும் கவிஞர்களின் வியப்பும், அதே மலையைப் பார்க்கும் ஒரு சிறுவனின் வியப்பிற்கும் உள்ள வேறுபாடுகள் போன்றவை என்றே நினைக்கிறேன். நூலை முழுவதுமாக வாசிக்கவில்லை என்றாலும் முதல் அத்யாயங்கள் படித்ததும் மண்டோவை வாசித்தேன் என்று எழுதுவது சாண்டியல்யன், கல்கியை வாசித்தவர்களுக்கு ஏற்படும் குதூகலத்திற்கு
ஒப்பான ஒன்றாக நினைக்கிறேன்.

நூல் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் இலவச வெளி ஈடு, பெற விரும்புபவர்கள் தம்பி புதுகை எம் எம் அப்துல்லாவின் அன்பைப் பெற்றால் கிடைக்கும். இந்த நூலுக்கு அவர் முன்னுரை எழுதியதைப் படித்த போது அவரின் வாசிப்பு அனுபவம், இலக்கிய ஆர்வம் விழிகளை விரிய வைத்து வியப்பு ஏற்படுத்தியதை மகிழ்வுடன் குறிப்பிடுகிறேன். அன்பளிப்புகளுக்கான மதிப்புகளில் ஒருவரின் அன்பைப் பெறும் / நமது அன்பை உணர்த்தியதின் தகுதிகளும் அடங்கி இருக்கிறது என்பது அவரவர் பெருமைப் படவேண்டிய சிறப்பு குணம், அப்துல்லாவின் நட்பு வழியாக எனக்கு அந்த மன மகிழ்ச்சி கிடைத்தது.

படைப்பாளிகள் என்றுமே மறைவதில்லை அப்படி வாழ்பவர்களில் மண்ட்டோ, நாகரீக வேடமிடும் பொதுச் சமூகத்தைக் காரித்துப்பும் பிச்சைக்காரனாகவும், இலக்கியம் என்ற பெயரில் நடுத்தரச் சமூகம் கட்டமைத்தவைகளை கிழித்துப் போடும் பைத்தியக்காரனாகவும், சிறந்த ஒரு முற்போக்காளனாகவும் பன்முகங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

27 ஏப்ரல், 2009

சோ இராமஸ்வாமியின் ஹிந்து மஹா சமுத்திரம் - 'நூல் விமர்சனம்' !

அண்மையில் சிங்கை நூலகத்தில் சோ இராமஸ்வாமி எழுதிய ஹிந்து மஹா சமுத்திரம் என்னும் நூல் வாசிக்கக் கிடைத்தது. ஹிந்துமதம் பற்றி எதேனும் புதிய செய்திகளைச் சொல்லுவாரோ என்று எதிர்பார்ப்பில் படித்த எனக்கு ஏமாற்றமே. வேதகாலத்தில் தொடங்கி இன்று வரை நடக்கும் வருணாசிரம (அ)தருமத்தை தேவைப்படும் இடங்களில் தாங்கிப் பிடித்து இருக்கிறார். இதற்கு ஆதரவாக அதிலிருக்கும் ஸ்லோகங்களுக்கு இவரே கண்டிபிடித்த கற்பனைகளை சேர்த்து மொழுகி இருக்கிறார். ஒரு பகுதியில் வேதகாலத்தில் விலங்குகள் எதையும் பலி இடவில்லை, ஸ்லோகங்களில் உள்ள பலியிட்டதாக சொல்லி இருக்கும் பெயர் சொற்களான ஆஜ என்றால் ஆடு இல்லை, கோ என்றால் பசு இல்லை, அஸ்வம் என்றால் குதிரை இல்லை என்கிறார். அவை பலியிடப் பட்டதாகச் சொல்வது ஒரு குறியீடுதான் என்கிறார். இன்னொரு பக்கத்தில் ஒருவன் தனக்கு விருப்பமானவற்றை இறைவனுக்குக் கொடுப்பான் எனவே மிருகங்களை உண்பவர்கள் மிருகங்களை பலி இட்டத்தில் தவறு ஒன்று இருப்பதாக தெரியவில்லை என்று முன்னுக்கு பின் முரணாக எழுதி இருக்கிறார்.

ஏகத்துவம் அதாவது பிற மதங்களில் இருக்கும் ஒற்றை இறை நம்பிக்கையே இந்து மதத்தில் இருப்பதாகவும் அதைத்தான் அத்வைதம் வழியுறுத்துவதாகவும், ஆதிஷங்கரர் வழியுறுத்திய அத்வைதம் ஒற்றை இறைத்தன்மையைப் போற்றுவதாகவும் கூறுகிறார். எனக்குத் தெரிந்த்து அத்வைதம் ஒற்றைக் கடவுள் கொள்கையெல்லாம் கொண்டிருக்கவில்லை, நீங்களும் நானும், பாம்பும், பல்லியும், மலமும், மூத்திரமும் ஒன்றே என்கிறது. இதுதான் அந்த ஒற்றைத் தன்மை, இது இறைவன் என்கிற தனித்தன்மையை போற்றுவதாக எப்படிக் கொள்வது ? ஆதிசங்கரின் அத்வைதம் என்பது பெளத்தக் கொள்கையில் சற்று ஒட்டுப் போட்டு புதிய கொள்கைகளாக காட்ட முயன்றது மட்டுமே, புத்தர் கடவுள் எதையும் காட்டவில்லை, அவர் சொன்னது அனைத்தும் சூனியமே சூனியத்தைத் தவிர எதுவுமே இல்லை, சூனியத்தில் சூனியமாக ஒடுங்குவதே பரிநிர்வாண நிலை என்றார், அதன் பிறகு பிறப்புக் கிடையாது என்றார். ஆதிசங்கரர் அதைச் சற்று மாற்றி அனைத்தும் பிரம்மமே, பிரம்மத்தில் ஒடுங்குவதே லட்சியம் என்றும் அதன் பிறகு பிறவி கிடையாது என்றார். இரண்டிற்கும் உள்ள வேற்றுமைகளை எளிதாகச் சொல்ல வேண்டுமென்றால் வெற்று குடுவை ஒன்றில் எதுவும் இல்லை என்பது புத்த தத்துவும், அதில் காற்று இருக்கிறது என்பது ஆதிசங்கரரின் தத்துவம் அவ்வளவுதான் வேறுபாடு.



உலகத்தின் ஆதிமதம் ஹிந்து என்பதை அழுத்தம் கொடுத்து சொல்ல முயல்கிறார் சோ. ஆதிமதம் என்று எதுவும் கிடையாது, அந்தந்த நாடுகளில் வழங்கப்பட்ட மதம் என்று தான் சொல்ல முடியும். ஆதிமதம் என்றால் பிற மதத்திற்கு இடையில் இருக்கும் தொடர்பைச் சொல்ல வேண்டும். சோ இராமஸ்வாமியின் நூலில் அதுபோல் எதுவும் சொல்லப்படவில்லை. எனக்குத் தெரிந்து பெளத்தம், சமணம் மதங்களுக்கு மட்டுமே ஹிந்து மதத்துடன் ஓரளவு தொடர்பு இருக்கிறது மற்றபடி உலக மதங்கள் பலவற்றுடனான ஹிந்துமதத் தொடர்பு என்பது தேடினாலும் கிடைக்காது.

உருவ வழிபாடு ஆகியவை கிழானவை என்று அவர் கூறினாலும் வைதீகர்களின் பிழைப்பைப் கெடுக்கக் கூடாது அதே சமயம் ஆதிசங்கரரின் அத்வைதத்தையும் போற்ற வேண்டும் என்கிற இரட்டை சிந்தனையில் உருவ வழிபாடு கிழானது தான் என்றாலும் நம்மைப் போல் சாதாரணவர்களுக்கு அது தான் எளியவழி ஞானிகளுக்குத் தான் அத்வைதம் சிறந்த வழி, அதுவே நேரான வழியும் என்கிறார். சோ இராமஸ்வாமியின் 'ஹிந்து மஹா சமுத்திரத்தில்' நாட்டார் தெய்வ வழிபாடு, அதாவது மதுரை வீரன், முனி, இருளன், ஐயனார், மாரியம்மன் குறித்து எந்த ஒரு பத்தியையும் பார்க்க முடியவில்லை. அதையெல்லாம் ஹிந்து மதத்தில் இருந்து நீக்கிவிட்டாரா என்று தெரியவில்லை.

நாத்திகம் என்பது ஈரோட்டு இராமஸ்வாமியால் முன்னெடுக்கப்பட்டது அல்ல, வேதகாலத்திலேயே சார்வாகம் என்ற பெயரில் ஹிந்து மதத்தில் ஓர் அங்கமாக நாத்திகம் இருந்தது தான் என்கிறார், பிறகு ஏன் நாத்திகம் பற்றி அங்கங்கே தூற்றுகிறார் என்றும் தெரியவில்லை. இவர் சொல்வது என்ன வென்றால் நாத்திகம் உயர்ந்தது என்றாலும் ஈரோட்டு இராமஸ்வாமிக்கு அந்த பெருமை கூடாது என்பதே. ஸோம பானம் மதுபானம் இல்லை ஆனால் சுரா பானம் தான் மது பானம் என்கிறார். சுரர் என்றால் தேவர்கள். அவர்கள் குடிக்கும் பானம் மதுபானம் என்பதை மறைமுகமாக தயக்கத்துடன் சொல்கிறார் என்பதாக எடுத்துக் கொண்டேன்.

ஹிந்து மதம் சிறந்த மதம் அதை வெளிநாட்டினர் ஆய்ந்து ஆய்ந்து தவறான தகவல்களைப் பரப்பிவிட்டார்கள் என்கிறார். தீண்டாமை பாவச் செயல் என்று ஒரு வரியைக் கூட எழுதி இருக்கவில்லை அவர். பிராமணன் என்பது நிலை, அது சாதித் தொடர்புடையது கிடையாது, சூத்திரன் பிராமணன் நிலைக்குத் உயர்வதும், பிரமணன் சூத்திர நிலைக்கு உயர்வதும் அவரவர் செயல்களால் தீர்மாணிக்கப்படுவதே அன்றி அவை சாதி குறித்த அடையாளம் இல்லை என்கிறார். சரி தான். ஆனால் இன்றைய பார்பனர்களின் செயலை வைத்துப் பார்த்தால் ஒருவரும் தன்னை பிராமணர் என்று கூற தகுதியற்றவர் என்பதை சோ மறந்தும் கூட அந்த புத்தகத்தில் பதிக்கவில்லை. இன்றைய பார்பனர்களிலும் கருப்பு நிறத்தினர் இருப்பதற்கு அன்றை சூத்திரனில் சிலர் பிரமணராக உயர்ந்து அவர்களுடைய வாரிசுகளாக தன்னை பிராமணர்களாகக் கூறிக் கொள்ளும் பார்பனர்களும் இருக்கிறார்கள் என்றாவது சொல்லி இருக்கலாம். அதாவது பிராமணர்களில் பார்பனர் உண்டு, பார்பனர் அனைவருமே பிராமணர் இல்லை என்று சொல்லி இருக்கலாம்.

மொத்தத்தில் சோ இராமஸ்வாமியின் இந்த நூள் ஒற்றைத் தன்மை உள்ள இறைவழிபாடு ஹிந்துமதத்தில் இருக்கிறது என்பதை நிறுவும் ஒரு முயற்சியாகப் பார்த்தேன். நல்லது தான் கடைசியில் ஒரே ஒரு வரி, ஈஸ்வரன், அல்லா ஜெஹோவை ஆகிய பெயர்களை ஹிந்து ஒரே இறைவனாகத்தான் பார்க்கிறான் என்று சொல்லி இருக்கலாம், சோ இராமஸ்வாமி சார்ந்திருக்கும் இயக்கம், அவரது பார்பனிய ஆதரவு அதைச் சொல்லுமா ? கண்டிப்பாக சொல்ல முடியாது. இந்த நூல் ஹிந்து மதம் புனிதமானது என்ற அளவில் ஹிந்து ஆதரவாளர்களுக்கு அளித்தால் அவர்களை அதைப் படித்துவிட்டு, ஹிந்து மதத்தில் இருக்கும் அபத்தங்களை தெய்வீகம் என்று ஒருவேளை போற்றினாலும் போற்றலாம். மற்றபடி ஒரு நாத்திகன் படித்தால் வரிக்கு வரி கண்டனம் தெரிவிக்கும் படி பழமைவாத சிந்தனைகள் நிறைந்து காணப்படுகிறது.

வேதம், உபநிடதம், ஸ்மிருதி இதுபற்றிய சொல்லாடல்களை அறிந்து கொள்ள விரும்போவர் படிக்கலாம். ஹிந்து மதத்தில் விழுந்திருக்கும் குப்பைகளை மறுசுழற்ச்சி செய்து தந்திருக்கிறார். ஹிந்து மஹாசமுத்திரம் உப்பு நீர், பழமைவாத உவர்ப்பு ! கண்ணதாசனின் அர்தமுள்ள இந்து மதத்தின் மற்றுமொறு வைதீக வெர்சன் (பதிப்பு, பாதிப்பு) !

நூலை முழுமையாக வாசித்ததும், பழமை வாதங்களுக்கு புதிய முலாம் பூசி, இது போன்று பழைய புராண ஸ்லோகங்களுக்கு கற்பனை பொருள் கூறியும், இட்டுக்கதைகளையும் கூறியே இந்திய சமய நம்பிக்கைகளை பார்பனிய சித்தாந்தங்களிலும், வேதமயமாக்க முயன்றும் சோ இராமஸ்வாமி போன்றவர்கள் கெடுத்துவிட்டார்கள் என்ற பெருமூச்சே வந்தது.

Book Title : ஹிந்து மஹா சமுத்திரம்
Author : சோ
Price : RS 175 /-

25 நவம்பர், 2008

எஸ்.பாலபாரதியின் அவன்-அது=அவள்

திருநங்கைகள் பற்றி பல செய்தி கட்டுரைகள், கதைகள் படித்து இருந்தாலும் பதிவர் நண்பரின் பார்வையில் எழுதப்பட்ட அவன் - அது = அவள் எப்படி இருக்கும் ஆவல் பொங்கும் நீண்ட நாள் விருப்பாக இருந்தது, அன்மையில் தம்பி ஜெகதீசன் சென்னை சென்று திரும்பியதால் நிறைவேறியது, மற்றொரு தம்பி பால்ராஜின் ஏற்பாட்டில் ஜெகதீசன் நண்பர் எஸ்.பாலபாரதியிடம் இருந்து 20 நூல்களை சிங்கைப் பதிவர்களுக்காக பெற்று வந்தார்.

புதினமாக எழுதப்பட்ட திருநங்கைகள் பற்றிய தொகுப்பே அந்த நாவல். 3 மணி நேர தொடர் வண்டி பயணத்தின் போதே படித்து முடித்துவிட்டேன். திருநங்கைகளின் தோற்றமும் வாழ்க்கை முறைகளை பற்றியும், கோபி என்ற கோமதி(ஆகிய) என்கிற திருநங்கையை மையமாக வைத்து கதையை எழுதி இருக்கிறார். திருநங்கைகள் பற்றி, இந்தியா தழுவிய ஒரு நாவல் எழுதவேண்டுமென்றால் தமிழ் தவிர்த்து பிற மொழியும் அறிந்திருப்பதன் தேவை கதையின் ஓட்டத்தில் உணரப்படுகிறது. திருநங்கைகள் அனைவருமே ஹிந்தி கலந்து பேசுவதால், அவர்கள் பேசுவது இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே ஹிந்தி வசனங்கள் வந்திருப்பது பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஆண் குழந்தையாக வளர்க்கப்படும் ஒரு குழந்தை பருவ வயதில் எப்படி திருநங்கையாக மாறுகிறது என்பதையும், அதனால் அவர்கள் அந்த வயதில் இல்லத்தினரின் கொடுமைகளுக்கு ஆளாகுவதும், அதிலிருந்து தப்பித்து ஒரு பெண்ணாக வாழவிரும்பி வீட்டில் இருந்து வெளியேறி...அவர்கள் தங்களைப் போன்ற திருநங்கைகளை சேர்க்கிறார்கள், அதன் பிறகு ஆண் உறுப்பை அகற்றிக் கொண்டு முழுப்பெண்ணாக தங்களை வடிவமைத்துக் கொள்கிறார்கள் என்பதை கதையின் ஓட்டத்துடன் சொல்லி இருக்கிறார். திருநங்கைகளுக்கு இடையே புழங்கும் சொற்கள், அவர்களுடைய பழக்க வழக்கங்கள் அனைத்தையும் கதை ஓட்டத்துடன் அழகாக சேர்த்து இருக்கிறார்.


திருநங்கை ஆண்குறி அறுத்துக் கொள்ளும் தாயம்மா சடங்கை ஏற்கனவே சு.சமுத்திரம் எழுதிய வாடமல்லியில் படித்து இருக்கிறேன். அந்த பகுதியை எஸ்.பா எழுதியதைப் படிக்கும் போது அதற்கும் சற்றும் குறைவில்லாத திகிலாகவே காட்சி அமைப்பு விவரிக்கப்பட்டு இருந்தது. தனக்கு இருக்கும் 'ஆண் குறி' ஆணவத்துடன் (Penis Pride) நடந்து கொள்ளும் ஆண்களின் எண்ணங்களை தூக்கியெறியும்படி பெண்ணாக மாறும் ஒரு திருநங்கை அதை வினாடிக்குள் அறுத்து எரிவதைப் படித்தால் எந்த ஆணுக்கும் ஆண் குறி என்பது பெருமையான ஒன்றல்ல என்றே உணர்வார்கள்.

கூவாகத்தில் ஆரம்பிக்கும் கதை என்றாலும் கூவாக நிகழ்வுகளை பலரும் எழுதிவிட்டதால் அதை கவனத்துடன் தவிர்த்து இருக்கிறார். மற்றபடி எல்லா திருநங்கைகளுக்கும் நடக்கும் ரவுடிகள் மற்றும் போலிஸ் கொடுமைகளை சிறப்பாகச் சொல்லி இருக்கிறார். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பது பொய்யா மெய்யா என்பது தெரியாது, திக்கற்ற திருநங்கையாக வீட்டை விட்டு வெளியேறுபவர்களுக்கு அவர்களைப் போல் உள்ளவர்களே ஆறுதலாகவும், உறவாகவும் இருக்கிறார்கள் என்பதை நன்றாக பதிய வைத்திருக்கிறார். கதையில் வரும் அனைத்து திருநங்கைகளும் ஒருவரை ஒருவர் பெண் பால் உறவு முறையில் அழைத்துக் கொள்வதும், பெண்ணாகவே உணர்ந்து அவர்களுக்குள் 'டி' போட்டு பேசுவதை பிசிறில்லாமல் எழுதி இருக்கிறார். ராமேஷ்வரத்தில் நடந்தவைகளைச் சொல்லும் போது அங்கு பேசும் வட்டாரவழக்குகள் வசனங்களிலும், கூவாகம் பகுதியில் கதை செல்லும் போது அங்கு பேசுபவர்கள் பன்ருட்டி வட்டார வழக்குகளில் பேசுவது இயல்பாக இருக்கிறது.பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்து வேளைகளில் முதலில் உதவுபவர்களாக திருநங்கைகளைச் சொல்லி இருப்பது அவர்களை பெருமை படுத்தும் எழுத்து. அதற்காக (மும்பையில்) தொடர் வெடிகுண்டு விபத்துகளை செல்லி அதனை பதிய வைத்திருக்கிறார்.

திருநங்கையாக மாறி வீட்டை விட்டு வெளியேறுபவர்களின் வாழ்க்கை எத்தகையது என்பது கதையின் முடிவில் உணரப்படுகிறது.



*****

இந்த கதையில் சில சொதப்பல்களும் இருக்கிறது, பத்திரிக்கை செய்தியாளராக வரும் அன்பு என்பவர் கதையின் நாயகியான கோமதியை விரும்பும் முன் ஒரு முற்போக்காளராகச் அவரை கதைக்குள் கொண்டு வரும் போது சொல்லி இருப்பார், அன்பு தனது உதவியாளரிடம் திருநங்கை பற்றிய உயர்வான எண்ணத்தை ஏற்படுத்துவார், அதே அன்பு கோமதியின் அழகில் மயங்கி அவளை காதலிக்கவும் தொடங்குவார், தனக்கு ஓரினசேர்க்கை பழக்கம்
இருப்பதையெல்லாம் கோமதியிடம் சொல்லிவிட்டு தான் அவளை காதலிப்பார், ஆனால் முதல் உறவுக்காக இருவரும் கூடும் போது, கோமதி நிர்வாணம் செய்யாமல் (ஆண்குறி அகற்றிக் கொள்ளாமல்) இருப்பதை அறிந்து அதையே, காரணமாகச் சொல்லி, விலகி அவளுடன் அப்போது கூடவில்லை என்பதாக சொல்லி இருவரும் தற்காலிகமாக பிரிவது பொருத்தமாக இல்லை, அந்த ஒரே காரணத்துக்காக கோமதி நிர்வாணத்துக்கு தயாராகுவது போல் சொல்லப்படுகிறது. ஓரின புணர்சியாளரான அன்பு ஏன் கோமதியை நிர்வாணம் செய்துக் கொள்ள வற்புறுத்துகிறார் என்பது புரியவில்லை. ஓரின புணர்ச்சியாளார்களுக்கு ஆண்குறி தடையே அல்ல என்றே நினைக்கிறேன்.

ஆரம்பம் முதலே கோமதி வளர்ந்த குடும்ப சூழலை வைத்து அவள் கடை கேட்கவே (பிச்சை எடுக்க) தயங்குவதாகச் சொல்லிவிட்டு, கடைசியில் படிப்பறிவு இல்லாத ஒரு சாராசரி திருநங்கை, தன்னை விரும்பும் ஒரு ஆணை சேர்த்துக் கொண்டு திருப்தி அடைவது போலவே கோமதியும் செய்துவிடுகிறாள். ஆரம்பத்தில் அழகில் மயங்கி, பெண்ணாகவே ஏற்றுக் கொண்ட முற்போக்கு சிந்தனையுடைய அன்பு என்பவன், அவளை சேர்ந்த ஆறுமாதத்தில், அவளை மீண்டும் கடை கேட்க அனுப்புவதாக சொல்வது பொருத்தமாக இல்லை. அவன் திருநங்கையுடன் வெறும் உடல் இன்பத்தைத்தான் நாடுகிறான், குடிகாரனாக முடிவில் புரியவைக்கப் போவதாக இருந்தால் அவனை ஏன் திருநங்கைகள் பற்றிய அக்கரை உள்ளவனாக அறிமுக காட்சிகளில் சொல்ல வேண்டும் என்ற காரணமும் தெரியவில்லை. படிப்பு ஆர்வமும், நல்ல வேலைக்குச் செல்லவேண்டும் என்று அவ்வப்போது பேசும் கோமதி கடைசில் பிற திருநங்கைகள் போலவே ஒருவனுக்கு மனைவியாக அடி உதைகளை வாங்கிக் கொண்டு வாழ்வதாகவும், கொடுமை மிகுதியாகும் போது ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொள்வேன் என்று சொல்லி கதையை முடித்து இருப்பது சற்று ஏமாற்றமாகவே இருந்தது. படிப்பை பாதியில் விட்டுவிட்டு பின்பு அதனை லட்சியமாகக் கொண்டு முன்னேறிய பல திருநங்கைகள் இருக்கிறார்கள். அப்படி சொல்லிவிட்டால் 'வாடமல்லி' கதை சாயல் வந்துவிடும் என்று நினைத்திருப்பாரோ ?

கதையைப் படிப்பவர்களுக்கு கண்டிப்பாக திருநங்கைகளைப் பற்றிய நல்ல எண்ணம் வரும். ஆனால் ஒரு திருநங்கை அந்த கதையைப் படித்தால் நம் தலையெழுத்து இப்படித்தானோ என்று நினைக்க வைத்துவிடும், அவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்க லிவிங் ஸ்மைல், ரோஸ் மற்றும் நர்தகி நடராஜ் போன்ற பாத்திரம் ஒன்றை கதையின் இடையில் எங்காவது கொண்டுவந்திருக்கலாம். இவைகளே எனக்கு கதையின் குறையாக தெரிகிறது.


இவைகளைத் தவிர்த்து கதையின் ஓட்டத்திலும், காட்சிகளை கண் முன் விரிப்பதற்கான விவரிப்புகளும் படிக்கும் போது ஒரு கதையாசிரியரின் முதல் நாவல் போன்று சிறிதும் தெரியவில்லை. அந்தவகையில் எஸ்.பா சிறந்த எழுத்தாளராக வியப்பூட்டுகிறார். இந்த கட்டுரை இந்த நூலின் மீதான என்னுடைய தனிப்பட்ட மதிப்பீடு மட்டுமே, இதனை பொதுக்கருத்தாக கொள்ளவேண்டாம்.

10 நவம்பர், 2008

மிர்தாதின் புத்தகம் - வெறும் நூல் அல்ல !

தத்துவ நூல்களை வாசிப்பென்பது எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று கூட்டிக் கழித்துப் பார்த்தால் சுயநலம் கூட எதாவது ஒரு கோட்பாட்டிற்குள்ளேயே அடங்கும் என்பதால் உலகின் அசைவுகள், செயல்கள் ஒவ்வொன்றும் ஒரு தத்துவம் சார்ந்தவையே என்று என்னால் கூறமுடியும்.

அன்புத் தம்பி ஈப்போ விக்னேஷ்வரன் சிங்கை வருகையின் போது அன்புப் பரிசாக ஒரு நூலை கொடுத்தார். மற்றவர்களுக்கு கொடுத்ததைவிட அளவில் மாறுபட்டு இருந்ததைக் கூட நான் அதைப் பெரும் போது கவனிக்கவில்லை. பரிசு கிடைப்பதே பெருமகிழ்ச்சி என்ற நினைப்பு திறந்து பார்க்கும் ஆர்வத்தைக் குறைந்திருந்தது. மேலும் மேலே பரிசுத்தாள் சுற்றப்பட்டு இருந்ததால் வீட்டில் சென்று பார்க்கலாம் என்று இருந்துவிட்டேன். பெரிய நிகழ்வாக இல்லாமல், நினைவு பரிசாக, பொதுவாக நாம் யாருக்காவது அன்பு பரிசு கொடுத்தால், நாம் அங்கிருக்கும் போதே... அவர்கள் அதைத் திறந்து பார்த்து எதாவது சொல்லவேண்டும் என்றே எதிர்ப் பார்ப்போம். மாறுபட்ட ஒரு நூலைக் கொடுக்கும் விக்கி அதே போன்று நினைத்திருப்பார் போலும், 'அண்ணே பிரிச்சு பார்த்திங்களா' ன்னு கேட்டார். சந்திப்பு கூட்டம் முடியட்டும் வீட்டில் சென்று பார்க்கிறேன் என்று சொன்னேன். அதன் பிறகுதான் தெரிந்தது, இவ்வளவு ஆவலாக கேட்பவர், புத்தகத்தை நான் திறந்தாவது பார்க்கவேண்டும் என்று விரும்புகிறார் என்பதே. வீட்டுக்கு திரும்பும் போது பிரித்துப் பார்த்தேன்.

"மிர்தாதின் புத்தகம்" - மூலம் மிகெய்ல் நெய்மி, தமிழில் புவியரசு என்றிருந்தது. அன்றும் இரவு 10 மணி அளவில் பதிவர் நண்பர்களுடன் இருந்ததால் படிக்க முடியவில்லை, மறுநாளும் அலைச்சல், விக்கியை வழியனுப்பும் போது மீண்டும் கேட்டார். புத்தகத்தைப் படிச்சிங்களா ? ... 'இல்லப்பா நேரம் கிடைக்கல' ..படிங்க உங்களுக்கு பிடிக்கலாம், என்று கூறிவிட்டு சிறு முன்விளக்கமும் கொடுத்துச் சென்றார்.

மறுநாள் தான் படித்தேன். பின் அட்டையில் ஓசோவின் குறிப்பாக

"உலகின் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன, அவையாவும் இதற்கு ஈடாகாது, நைமி எல்லா நூற்றாண்டிற்கும் சேர்த்தே இவரே மாபெரும் எழுத்தாளர்"
- என்பதை வாசித்த போது, நல்ல படைப்பாக இருக்கும் என்ற ஆவல் ஏற்பட்டது.

இதைத் தமிழில் உருவாக்க எடுத்துக் கொண்ட நல்ல அனுபவ முன்னோட்டத்துடன், புத்தகத்தில் இருக்கும் நாவல் பகுதியின் சிறுகுறிப்புடன் புத்தகம் தொடர... அதன் உள்ளீடை நோக்கி பயணம் செய்தேன்.

ப்ளாட்டோ, சீசர் போன்ற தத்துவ ஞானிகள் மேலை நாடுகளில் தோன்றி இருந்தாலும், இஸ்லாம் / கிறித்துவ மதங்களில் தத்துவங்கள் என்பதைத் தேடித்தான் பிடிக்கவேண்டும். ஆனால் இந்த புத்தகத்தில் இவ்விரு மதங்களில் வரும் நோவாவின் வரலாற்றைத் தொடர்பு படுத்தி முழுக்க முழுக்க தத்துவமாகவே எழுதப்பட்டுள்ளது. புத்தகத்தின் நாயகன் 'மிர்தாத்'தின் ஒவ்வொரு உரையாடல் வரிகளும் தேர்ந்தெடுத்த சொற்களான தத்துவங்கள், அவை அறிவுரையா, பேருண்மையா என்று இனம் பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றோடு ஒன்று பின்னி எழுதப்பட்டு இருக்கிறது.

"கடவுள் பல அல்ல, கடவுள் ஒன்றுதான், மனிதரின் நிழல்கள் பலவாக இருக்கும் வரை அது பலதான். நிழல் இல்லாதவன், ஒளியில் இருப்பவன், நிழல் அற்றவனே ஒன்றே கடவுள் என்பதை உணர்வான், கடவுளே ஒளிதான், ஒளியால் தான் ஒளியை உணரமுடியும்"

நிழல்கள் அற்றது ஒளிதானே, மனிதனின் நிழல் என்று ஆசிரியர் சொல்வது மனிதனை மூடி இருக்கும் மனத்திரைகளைத்தான்.

"மனிதன் பற்றுகின்ற பொருள்களெல்லாம் அவனை பற்றிப் பிடித்துக் கொள்ளும் பற்றுவதை விட்டுவிட்டாலே பற்றுறற்று போகும்"

(பற்றுக பற்றற்றான் பற்றினை - என்ற திருக்குறள் நினைவுக்கு வந்தது)

எதை நாம் மிகவும் விரும்புகிறோமோ, அது கிடைக்காமல் போகும் போதும், நம் கைவிட்டு நழுவிச் செல்லும் போது சொல்ல முடியாத சோகத்தைக் கொடுத்துவிட்டுப் போய்விடும்

"அன்பே வாழ்வின் சாறு, வெறுப்பே மரணத்தின் சீழ், ஆனால் இரத்தம் நரம்புகள் வழியாக தடையற்று பாய்வது போல், அன்பு உடலெங்கும் பாயவேண்டும், இரத்தம் தடைபட்டால் நோய்தான் வரும், வெறுப்பு என்பது தடைபட்ட அன்புதான்...அன்பில் அதிகம் குறைவெல்லாம் கிடையாது, அதை அளக்க முயற்சித்தாலே அது நழுவி சென்றுவிடும்"

நூல் பேசுவது இன்னும் ஏராளம் ஏராளம்...மரணம், பிறப்பு, மறுபிறப்பு...விபத்துகள், அதற்கான காரணங்கள், புலனடக்கம், நாவடக்கம், பேராசை, பற்று அறுத்தல், பிரபஞ்ச சுழற்சி, கடவுள், ஆதாம் ஆப்பிள்...ஆன்மிகம் தொடர்பில் அனைத்தையும் பேசுகிறது.

முப்பரிமாணங்களை ஒருங்கே அமைந்த நூலாகத்தான் இதனை உணர்ந்தேன். அதாவது நாவல் என்று படித்தால் நாவல், தத்துவம் என்று படித்தால் பகவத் கீதையைப் போல் சிறிய அளவிளான தத்துவ நூல், உளவியல் என்று பார்த்தாலும் முழுக்க உளவியல் என்பதாக உணரப்படும் ஒரே நூல். ஒப்பீடு அளவில் சுவாமி விவேகாநந்தரின் ஞானயோகம் போன்ற வாழ்க்கைத் தத்துவங்களை வெகு இயல்பான உரையாடல்களாக அமைக்கப்பட்டு இருக்கிறது.


கதைப்படி நோவா வழி வரும் ஒரு மடலாயத்தின் 8 துறவிகளுக்கு தலைவராகும் மிர்தாதின், ஆன்மா மற்றும் உடல் வாழ்க்கை பற்றிய முழு அறிவை போதனை செய்கிறார், அவரை மதிக்காத முன்னாள் மடாலயத் தலைவரான 8 ஆம் துறவி பின்னர் தவறை உணர்ந்து கொள்ள, 8 ஆம் துறவியைத் தேடிப் போகும் ஒருவர் மூலம் அந்த அறிவுரைகள் வெளி உலகத்துக்கும் தெரியவருகிறது.


இந்நூலை விமர்சனம் செய்வது எளிதல்ல, பக்கத்துக்கு பக்கம் வரிக்கு வரி என தத்துவம் மற்றும் முற்போக்கு, ஆன்மிகம் என எதாவது ஒன்று பேசப்படுக்கிறது, பெருக்கெடுத்த ஆற்றின் நீரை கையளவு நுரையுடன் அள்ளிக் காட்டி இதுதான் அந்த ஆறு என்று சொல்ல முனையும் அளவுக்குத்தான் என்னால் அது பற்றி சொல்ல முடிகிறது.

கவிஞர் புவியரசுவின் மொழிப்பெயர்ப்பு சிக்கல் இருப்பதை அவரே ஒப்புக் கொண்டாலும் நல்ல நேர்த்தியாகவே மொழிப் பெயர்த்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். மொழிப்பெயர்ப்பே இப்படி என்றால் மூல நூலை அதன் மூல மொழியிலேயே படித்தால் அதன் கருத்தாழம் இன்னும் மிகுதியாக இருக்குமோ என்று நினைக்க வைத்திருக்கிறார்.



புத்தகம் கிடைக்கும் இடம்:
கண்ணதாசன் பதிப்பகம்,
23, கண்ணதாசன் சாலை
சென்னை 017
தொலைபேசி எண் ; +91 44 2433 2682

இந்நூலை நினைவு பரிசாக எனக்கு வழங்கிய பதிவர் விக்னேஷ்வரன் மற்றும், நூலை பரிந்துரைத்த திரு ஜவகர் ஆகிய இருவருக்கும் நன்றி

தொடர்புடைய மற்றொரு சுட்டி : The Book of Mirdad - துக்ளக் மகேஷ்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்