பின்பற்றுபவர்கள்

30 நவம்பர், 2010

சென்னை அருகே ஒரு போலி சுங்கச் சாவடி !

மகளின் பள்ளி விடுமுறையை அடுத்து மகனையும் மகளையும் தமிழகத்திற்கு அழைத்துச் செல்லும் திட்டமாக ஒருவார காலம் சென்று வந்தேன். மழைகாலம், எல்லோரையும் பார்த்துவருவது இயலாத செயல், ஒருவார காலமே இடைவெளி என்பதால் நண்பர்களிடம் சொல்லிக் கொள்ளவில்லை. சென்னை சென்றது ஓடபோன் இணைப்புப் பெற்று கூகுள் பஸ்ஸில் அறிவித்திருந்தேன். அதைப் பார்த்து அழைத்தவர்கள் கேபிள், அப்துல்லா, லயன் சுதாகர் (பித்தனின் வாக்கு), இவர்களுடன் கேஆர்பி செந்திலையும் சந்திக்க முடிந்தது.
கேஆர்பி செந்தில் மற்றும் கேபிள் சங்கர்
பித்தன் வாக்கு சுதாகர், அப்துல்லா
அப்துல்லா மற்றும் செங்கதிர்

20 ஆம் தேதி சென்னைச் சென்றேன், 22 ஆம் தேதி சென்னையில் சிறு வேலை இருந்ததால் சென்னையில் 22 ஆம் தேதி வரை தங்கினேன். சிங்கையில் இருந்து சென்னைச் செல்லும் பயணிகளில் 90 விழுக்காடு தமிழர்கள், ஆனாலும் ஏர் இந்திய விமான சேவையின் அறிவிப்புகள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் தான் வருகிறது. இறுக்கையில் டிவி வைத்திருக்கிறார்கள், மருந்துக்கு ஒரு தமிழ் படம் கூடப் போடவில்லை. இந்தியை வலுக்கட்டாயமாக திணிப்பதில் என்ன ஒரு கொல வெறியோ. இந்தி ஒழிகன்னு விமானத்தின் நடுப்பகுதிக்கு வந்து கத்தனும் போல் இருந்தது. அவனுங்களுக்கு தமிழ் தெரியாதேன்னு விட்டுவிட்டேன். வழக்கம் போல் பாட்டிகளே விமானப் பணிப் பெண்ணாக வந்தார்கள். உலகிலேயே ரிடையர்ட் வயது விமானப் பணிப் பெண்ணை ஏர் இந்தியா சேவையில் தான் பார்க்க முடியும். திரும்பும் போதும் அதே கதைதான். இந்தியாவிற்குச் செல்லும் விமானங்களில் கட்டுப்படி கட்டண (பட்ஜட்) சேவை இல்லாத பொது விமான சேவையில் மிகவும் மட்டமான சேவைக்கு பதக்கம் கொடுத்தால் ஏர் இந்தியாவுக்குக் கொடுக்க நான் வாக்களிப்பேன். விமானங்களில் பார்க்க முடியாத தமிழ் விமான நிலையத்தில் பார்க்க முடிந்தது, அறிவிப்புகள் தமிழில் இருந்தன. சென்னை செல்லும் பிற நாடுகளின் விமானங்கள் தமிழில் அறிவிப்புகள் செய்யும் போது ஏர் இந்தியா விமானத்திற்கு மட்டும் என்ன எழவு நேர்ந்தது ?

*****

தமிழக பயணத்தின் ஊடாக பிறந்த ஊருக்குச் சென்று இரு நாட்கள் இருந்துவிட்டு, மதுரையில் டிபிசிடி மற்றும் சீனா ஐயா அழைப்பின் பேரில் மதுரைக்குச் சென்று வந்தேன். மழை மிகுதியாக இருந்ததால் ஏற்கனவே சந்தித்தவர்கள் தவிர்த்து யாரையும் அழைத்து தொந்தரவு செய்ய விரும்பவில்லை. 24 ஆம் தேதி பின்னிரவில் பேருந்தில் ஏறி தஞ்சை சென்று அங்கிருந்து புதுக்கோட்டை வழி மதுரையை அடைந்தேன். காலை 6 மணி ஆகி இருந்தது. மாட்டுத் தாவணி பேருந்து நிலையை எதிரே உள்ள விடுதிகளில் ஏற்கனவே தங்கி இருந்து பட்டதால் அங்கு தங்க விருப்பம் இன்றி வேறுறொரு விடுதி முகவரியைக் கேட்டு அங்கு சென்றேன், அன்று மங்கல நாளாம் விடுதிகள் அனைத்தும் அறைகள் இல்லை என்று கை விரித்தன. அப்பறம் அங்கு டிபிசிடி வந்து வேறொரு விடுதிக்கு அழைத்து சென்றார். அங்கும் இல்லை, அறை இல்லை என்றவரிடம் அண்ணனை எழுப்பிவிடுவேன் என்று டிபிசிடி மிரட்டிப் பார்த்தார். அண்ணனுக்கு அங்கு மதிப்பு இல்லை, திரும்பி எதிரே இருந்த மற்றொரு விடுதியில் இடம் இருந்தது, 300 ரூபாய் என்றார்கள், பணத்தை முன்பணமுமாகச் சேர்த்து 600 கொடுத்துவிட்டு அறைக்கு சென்றால் அரசு மருத்துவ மனையின் ஒரு அறையில் படுக்கைப் போட்டது போல் இருந்தது, பினாயல் வாடை போதாக் குறைக்கு பச்சை நிறத்தில் படுக்கை. எந்த வசதியும் இல்லை, 300க்கு இவ்வளவு தான், ஆனாலும் அறை கிடைக்காத சூழலில் ? அங்கே விட்டுச் சென்ற டிபிசிடி 10 நிமிடத்தில் அழைத்தார். அண்ணே இங்கு சாரதா இராஜனில் டிலக்ஸ் ரூம் 2,500 டபுள் ரூம் 1,700 என்றார். 1,700 க்கு உள்ளதை பேசி முடித்துவிடு என்றேன், கீழே வந்து அறையைக் காலி செய்வதாகச் சொல்ல, 300ம் அம்பேல்.
சீனா ஐயா
ஜாலி ஜம்பர்
தருமி ஐயா
டிபிசிடி
கோவியார் என்கிற நான்

சாரதா இராஜனில் அறையை எடுத்துவிட்டு சீனா மற்றும் தருமி ஐயாவை அழைத்து வருகையைச் சொன்னேன். 30 நிமிடத்தில் காலை 9.30 மணி அளவில் சீனா ஐயா வந்தார். அவருடன் காலை உணவு எடுத்துவிட்டு பேசிக் கொண்டு இருந்தோம், பிறகு தருமி ஐயா வந்தார், மதிய உணவு நேரம் ஆகி இருந்தது, அருகில் இருந்த மீனாட்சி பவனில் உணவு அருந்தி சிறிது ஓய்வு எடுத்துவிட்டு மாலை 3:30 மணிக்கு தருமி ஐயா விடைபெற்றார், பிறகு வீட்டுக்கு உணவு அருந்த சென்ற சீனா ஐயா குட்டித் தூக்கம் போட்டுவிட்டு மாலை 5 மணிக்கு வந்தார், பிறகு ஜாலி ஜம்பர் வந்தார், பேசினோம்... பேசினோம் மாலை 6 ஆகி இருந்தது, பிறகு டிபிசிடி திரும்பவும் வந்து மூவருடன் சிறிது நேரம் கதைத்துவிட்டு நேரம் ஆகவே மாலை 7 மணிக்கு அறையை காலி செய்து அனைவரிடம் விடை பெற்று பிறந்த ஊருக்குத் திரும்பினேன் வந்து சேரும் போது இரவு 3 மணி ஆகி இருந்தது. மதுரையில் பிற பதிவர்களையும் சந்திக்க ஆவல் இருந்தாலும், அன்று வியாழன் வேலை நாள், நல்ல மழை என்பதால் அழைத்த நண்பர்களை மட்டும் பார்த்துத் திரும்பினேன்.

*********

போலி சுங்கச் சாவடி (Poli-Toll)


தமிழகத்தில் சாலை வசதிகள் விரிவு படுத்தப்பட்டுள்ளது, 120 கிமீ விரைவில் வாகனங்கள் பயணித்தன. இது போன்ற விரைவு சாலைகளை வெளிநாடுகளில் மட்டுமே முன்பு பார்க்க முடியும்,
வாஜ்பாய் அரசு துவங்கிய சாலை நல்ல திட்டம், செயல்படுத்திய அரசுகளை பாராட்டவேண்டும். ஆனாலும் அரசு ஆதரவுகளோடு விரைவு சாலைகளில் தில்லுமுல்லு நடக்கின்றன, புதுவையில் இருந்து சென்னைக்கு காரில் பயணித்தேன், நண்பருடைய கார் தான். மூன்று நண்பர்களாக பாண்டியில் இருந்து சென்னைக்கு பயணித்தோம், முன்னதாக இருவர் ஏற்கனவே சென்னையில் இருந்து புதுவைக்கு அதே காரில் வந்திருந்தனர், திரும்பும் போது என்னையும் அழைத்துச் சென்றனர். திண்டிவனத்திற்கும் மதுராந்தகத்திற்கு இடையே ஒரு டோல் கேட். நண்பர் விவரம் அறிந்தவர் என்பதால் அந்த டோலில் நிற்காமல் போனால் ஒண்ணும் கண்டு கொள்ள மாட்டார்கள், காரணம் ஒரு எம் எல் ஏ தான் தன்னுடைய ஆட்களைப் போட்டு டோல் நடத்திவருகிறார், அந்த இடத்தில் முன்பு டோல் இருந்தது பிறகு வேறொரு இடத்தில் செங்கல்பட்டு தாண்டி சென்னையில் நுழையும் முன்பாக மாற்றிக் கொண்டு சென்றுவிட்டார்கள், ஆளும் கட்சியின் எம் எல் ஏ நேரடியாக இந்த டோலை நடத்துவதால் அரசுகளின் ஆதரவோடு பொதுமக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்றார். திண்டிவனம் மார்க்கமாக ஒரு நாளைக்கு சென்னைக்குச் செல்லும் தனியார் வாகனங்கள் குறைந்தது 10,000 என்றால் டோல் கட்டணம் 20 வைத்துக் கொண்டாலும் நாள் ஒன்றுக்கு 2 லட்ச ரூபாய் கிடைக்கும், 10 பேருக்கு யூனிபார்ம் போட்டு நிறுத்தி வைத்திருக்கிறார்கள். ஒரு மாத வருமானம் 60 லட்சம். 10 பேருக்கு நபர் ஒன்றுக்கு 5 ஆயிரம் சம்பளம் கொடுத்தாலும் மீதம் 59+ லட்சம் பகல் கொள்ளையாக நடக்கிறது. நண்பர் காவல் துறையில் இருந்ததால் அவருக்கு இது போலி டோல் என்பது தெரியும், அவருக்கு மட்டுமல்ல, அந்த வழியாகச் செல்லும் அரசு பேருந்துகளுக்கும், நாள் தோறும் சென்று வருபவர்களுக்கும் தெரியும், அவர்களும் இந்த ஏமாற்றுக் கூத்து தெரிவதால் சுங்கம் செலுத்துவதில்லை. நாங்கள் காரை அங்கு நிறுத்தவும் இல்லை, அவர்களும் எங்களை துறத்திப் பிடிக்கவும் இல்லை.

*****

தமிழகம் எங்கும் நல்ல மழை பல ஆண்டுகளுக்குப் பிறகு மதுராந்தகம் ஏரி கடல் போல் காட்சி அளிக்கிறது.

(எனது நண்பர்கள் இராம் என்கிற இராமநாதன் மற்றும் ஜெ.கண்ணன்)

சென்னையில் முதன்மையான சாலைகள் தவிர்த்து தெருக்களில் குண்டும் குழியும், சேறுமாக நிற்கிறது. சிங்காரச் சென்னை மழைகாலத்தில் அசிக்காரச் சென்னையாக நிற்கிறது. முழுவதும் சுரங்க இரயில் பாதைகளைப் போடலாம், மெட்ரோ ரயில் திட்டம் அவ்வளவாக பயனளிக்குமா என்று தெரியவில்லை. சென்னை மக்கள் தொகைக்கு மெட்ரோ இரயிலெல்லாம் போதாது. வெளிநாடுகளில் 20 ஆண்டுகளுக்கு பிறகு வேண்டிய வசதிகள் என்பதை பொதுமக்களுக்கு ஏற்படுத்தித் தருவார்கள். இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தேவைப்படும் வசதியைத்தான் ஏற்படுத்தித் தருகிறார்கள் இரண்டாம் வரிசை அலைக்கற்றை ஊழல் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடியாம். இதில் எத்தனையோ நல்ல திட்டங்களைப் போட்டிருக்கலாம், கிடைக்கும் சில ஆயிரம் கோடி கையூட்டுகளுக்காக அரசு வருமானம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி அம்பேல்.


***

நெருங்கிய பதிவர் நண்பர்களின் அலைபேசி எண்கள் கைவசம் இருந்தும் தொடர்பு கொள்ள இயலவில்லை. சென்று பார்க்க இயலாத கடுமழைச் சூழலில் அழைத்துப் பேசி பிறகு பார்க்காமல் திரும்பவும் மனதில்லை என்பதால் தவிர்த்தேன். மன்னிக்கவும்.

16 நவம்பர், 2010

மதச்சார்பின்மையும் மண்ணாங்கட்டியும் !

நேற்று ஒரு இடுகையைப் படித்ததும் பெருவாரியான இந்திய மதச்சார்பின்மைக்கு வேட்டுவைக்கும் திரியாக இருந்தது. மதச்சார்பின்மை என்பது பல்வேறு மத நம்பிக்கையினர் வாழும் நாட்டில் மிக மிகத் தேவையானது. மதச்சார்பின்மை என்பது சகிப்புத்தன்மை அல்லது புரிந்துணர்வு. மதத்தினரிடையே சகிப்புத் தன்மை குறைவு என்பதால் புரிந்துணர்வு என்பதே பொருத்தம், அதாவது நீ உன்னுடையதை கழுவிக் கொள், நான் என்னுடையதைக் கழுவிக் கொள்கிறேன் யாருக்கும் புறத் தொல்லைகள் இல்லை, மாறாக நான் மட்டும் தான் கழுவவில்லை என்று சுட்டிக் காட்டாதே என்பதே மதங்களுக்கிடையேயான புரிந்துணர்வு. மற்றபடி அவங்க மதம் சார்ந்த விழாவுக்கு இவங்க வருகிறார்களா ? புறக்கணிக்கிறார்களா போன்றவை அனைத்தும் மத நல்லிணக்கம் என்பவையாக சொல்லப்படுகிறது. தற்போதைக்கு மதங்களுக்கிடையே முற்றிலும் நல்லிணகம் என்பதே கிடையாது, அவ்வாறு இணங்குபவர்கள் மதங்களை மறுக்கும் நாத்திகர்கள் மட்டுமே, மத நல்லிணக்கவாதிகள் என்று நாத்திகர்களைச் சொல்லலாம் அவர்களுக்கு எல்லா மதமும் ஒண்ணு தான். சகிப்புத்தன்மையே இல்லாத மதவாதிகளிடம் நல்லிணக்கம் எதிர்பார்க்க முடியுமா ? எனவே தற்போதைய சூழலில் பல்வேறு மதத்தினர் இருக்கும் நாட்டில் இருப்பவை வெறும் புரிந்துணர்வுகள் மட்டுமே, அதற்கும் வேட்டுவைக்க அவ்வப்போது இந்தியா இந்து நாடு, இந்து மதம் தமிழர்களின் தாய் (தந்தை மதம் என்ன ?) போன்ற மதவாத முன்னெடுப்புகள் நூற்றாண்டுகளாக நடந்தேறிவருகிறது.

இன்றைய வாழ்வியல் மற்றும் சமூக அமைப்புகள், அரசுகள் பெருவாரியான நடைமுறைகள் (சிஸ்டம்) ஐரோப்பிய வழிகாட்டலின் வழியாக நடந்தேறிவருகிறது, உதாரணத்திற்குச் சொல்லப் போனால் நாட்காட்டி இவை உலகினருக்கு பொதுவானது, அது போன்றே நேரம் இவையும் பொது, இவை கிரிக்கேரியன் முறையைப் பின்பற்றி ஆங்கிலத்தில் உள்வாங்கி அதையே உலகினருக்கு பொதுவானதாகப் பயன்படுத்திவருகிறோம். குறிப்பாக வெள்ளைக்காரன் உடை. இதையெலலாம் வைத்து உலக நாடுகள் அனைத்தும் கிறித்துவத்திற்கு மாறிவிட்டன என்று சொல்ல முடியுமா ? அல்லது உலகமே ஒரு பெரிய கிறித்துவ நாடு என்று சொல்லிவிட முடியுமா ? இந்தப் பதிவைப் படித்ததும் உண்மையிலேயே வெறுப்பே மிஞ்சியது, இந்தியா இஸ்லாமிய நாடாக மாறிவருகிறதாம், அல்லா கைகாட்டியுள்ளான், நாம் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்கு முயற்சி செய்வோம் இதுவே சரியான சமயம் என்பதாக இந்தியா இஸ்லாமிய நாடு - ஏன் என்பதற்கான காரணங்களைச் சொல்லி இருக்கிறார்கள்.

என்ன கொடுமைசார், இந்துக்களுடன் சேர்ந்துவாழ எங்களுக்கு விருப்பம் இல்லை, ஒத்துவராது நாங்கள் செல்கிறோம் என்று தானே பாகிஸ்தான், பங்களதேஷாக பிரிந்து சென்றார்கள். பிரிந்தவர்களின் நிலையோ படு மோசம், இதில் பங்களாதேசாவது பரவாயில்லை பாகிஸ்தான் பண மதிப்பு இந்திய நாணய மதிப்பைவிட மிகக் குறைவு. மொத்த நாடும் சர்வாதிகாரிகள் கையில் மாறி மாறி சிக்கி அந்த நாட்டை வறுமை கோட்டிற்கு கீழே வைத்திருக்கிறது, மேலும் அரபு நாடுகளில் பணிபுரிந்தால் மட்டுமே பாகிஸ்தானில் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்கிற நிலை, இது தான் இந்தியா பிரிவினையால் முழுக்க இஸ்லாமிய நாடாக மாறிய பாகிஸ்தான் பெற்ற பலன். பங்களாதேஷ் நிலையும் அதே என்றாலும் பொருளாதார வாழ்வியலில் பாகிஸ்தான் மக்களைவிட இவர்கள் பரவாயில்லை காரணம் இராணுவத்திற்கு பாகிஸ்தான் அளவுக்கு செலவு செய்வதில்லை. பாகிஸ்தானோ, பங்களாதேஷோ இஸ்லாமிய நாடாக மாறியதால் அங்கு தேன் மாரி பொழிகிறதா ? கோவையில் குழந்தைகளை கடத்திக் கொன்றது தொடர்பாக குற்றவாளிகளைத் தண்டிக்க அரபு நாடுகளின் சட்டங்களை பின்பற்ற வேண்டும் பொதுமக்கள் சொன்னது இவர்களுக்கு இஸ்லாமிய ஆட்சி முறை இந்தியாவில் நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான அழைப்பாக இருக்கிறதாம்.

குறிப்பிட்ட அந்த இடுகையை கூகுள் பஸ்ஸில் போட்ட போது சில நண்பர்கள் வருத்தம் தெரிவித்தார்கள், ஏன் இவர்களுக்கு விளம்பரம் கொடுக்கிறீர்கள், நீங்கள் விளம்பரம் கொடுப்பதால் நல்லவர்கள் கூட அதைப் படித்து கெட்டுப் போகலாம் இல்லையா ? ஞாயம் தான். தடுப்பு ஊசிப் போட்டுக் கொள்ள நோய் தாக்கி இருக்கத் தேவை இல்லை. இது போன்ற கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால் இது சரிதான் என்பதாக கருத்தாக்கத்தை உருவாக்குபவர்கள் மேலும் மேலும் முயலமாட்டார்களா ?

இந்தியா இந்து நாடாக மாறுதா ? இஸ்லாமிய நாடாக மாறுதா ? என்பது பிரச்சனையில் சுடுகாடு ஆகிவிடாமல் இருந்தால் சரி. இங்கு மதவாதிகள் எவருக்கும் வெட்கமே இல்லை, இதற்கு எந்த மதத்தின்வாதிகளுக்கும் விலக்கு இல்லை. மதச்சார்பின்மைதான் இந்தியர்களின் சிறப்பு என்பதற்கு வேட்டுவைக்க எல்லா மத அமைப்புகளுமே தன்னால் ஆன கெடுதலை செய்தே வருகின்றன. பெரும்பான்மை மக்கள் தொகையை கணக்கில் கொண்டாலும் இந்தியா ஒரு இந்து நாடு அல்ல பலமாகவே முழங்கி மதச்சார்பின்மை போற்றிவரும் வேளையில் இந்தியா இஸ்லாமிய நாடாக மாறிவருதாக புழகாங்கிதப்படுகிறார்கள் ? இந்துக்களிடையே மதச்சார்பின்மை பேசும் பகுத்தறிவாளர்கள் என்போல் ஆயிரம் பேர் உண்டு, இந்தியா இஸ்லாமிய நாடாக மாறிவருகிறது என்று மகிழும் இவர்களை வெளிப்படையாக கண்டிக்க இஸ்லாமியர்கள் முன்வரவேண்டும்.

15 நவம்பர், 2010

தமிழக அரசியல் கலவரம் !

அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான ஊழல் (ஒருலட்சம் கோடியாம், ஒரு லட்சம் என்பதே இந்திய பொது மக்களுக்கு பெரிய விசயம், அதையே கொள்ளையடிக்கும் கோடிகளுக்கு முன்பாக பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது) தொடர்பில் திமுகவிற்கும், காங்கிரசிற்கும் இருக்கும் அரசியல் காதலில் கல் எரியும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் ஜெ. முதலில் லட்சம் கோடிகளுக்கான ஊழல் இதில் இந்திய ஆளும் கட்சிக்குத் தொடர்பே இருக்காது என்பதற்கு ஜெ உத்தரவாதம் கொடுக்கிறார் என்பதாக இதை எடுத்துக் கொண்டு பார்க்கும் போது, ஜெவின் செயல்பாடுகள் ஊழலைக் கண்டிப்பதற்காகவோ, ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்ல, கூட்டணி பலத்துக்கு கட்சி சேர்ப்பு என்பதாகத்தான் கொள்ள முடியும். மேலும் ஜெவுக்கு ஊழல் என்றாலே என்னவென்று தெரியாதா என்று பச்சை குழந்தையிடம் கேட்டால் கூட நகைக்கும். எதிர்கட்சிகள் பெரிய விவகாரம் ஆக்கி நாடாளுமன்ற கூட்டத்தொடர்களை நிறுத்தும் அளவுக்குச் சென்று கொண்டிருக்கும் ஸ்பெக்டரம் இதில் காங்கிரசு கட்சிக்கு தொடர்பே இருக்காது என்றும் பங்கு சேர்ந்திருக்காது என்று நினைப்பதும் அரசியல் அறிவின்மையின் அபத்தமே, காங்கிரசு ராசாவுக்கு நெருக்கடிக் கொடுத்து பதவி விலகச் சொல்லாததற்கு அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் நடை பெற்றிருக்க முகாந்திரமே இல்லை என்று கொள்வதற்கு ஒன்றும் இல்லை. தற்பொழுதி உச்ச நீதிமன்றங்களே இவ்வாகரத்தில் தலையிடுவதால் அரசுகளைக் காப்பாற்றிக் கொள்ள ராசாவே முன்வந்து பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்ததாக அரசியல் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

கழுதைகள் தேய்ந்து கட்டெறும்புகள் ஆகி ஒன்று சேர்ந்து சாரை சரையாகச் சென்றால் தான் சேர்ந்துவாழமுடியும் என்ற கற்பனையை இன்றைய அரசியல் கட்சிகளுக்கு பொறுத்தினால் மிகச் சரியாக இருக்கும் நடுவன் அரசு மற்றும் மாநில அரசு அமைப்பு என்பதில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்பதே இன்றைய அரசியல் சூழல், இதனால் தான் கூட்டணியாக தேர்தல்களை சந்தித்துவருகின்ற அரசியல் கட்சிகள். கூட்டணி பலம் அல்லது மிகப் பெரிய அனுதாப அலை இவையே வெற்றி தோல்விகளை முடிவு செய்யும் நிலைதான் இன்றைய தேர்தல் முடிவுகள். மத்தியில் கூட்டணி ஆட்சி தான் வழி என்றாகிவிட்டபிறகு அதில் கிடைக்கும் அமைச்சர் பதவிகளை தூண்டில் இட்டு தமிழக திராவிடக் கட்சிகளிடையே பேரம் நடத்தி தமிழக சட்டசபையில் கனிசமான இடங்களைப் பெற்றுக் கொண்டே வந்திருக்கிறது காங்கிரஸ். கூடவே காங்கிரஸ் மற்றும் பாமக, விசி ஆகிய கட்சிகள் இணையும் திராவிடக் கட்சிகள் இணைந்து தேர்ந்தலை சந்தித்தால் வெற்றி உறுதி என்பதே தமிழக அரசியலின் பார்முலா. காமராசருக்கு பிறகு காங்கிரஸ் முதல்வர் என்பது கிட்டதட்ட தமிழக அரசியலில் காணல் நீராகிவிட்ட படியால் இந்த முறை தன்னை கூட்டணியில் இணைத்துக் கொள்ள விரும்பும் கட்சிகளுக்கு பலமாகவே செக் வைக்க நினைக்கிறது காங்கிரஸ், கருணாநிதியுடன் கூட்டணி தொடர்ந்தால் 75 இடங்களுக்கு மேலும் பெற்று அதில் 90 விழுகாடு இடம் கிடைத்தால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் அவ்வளவு கிடைக்கவிட்டாலும் திமுக மைனாரிட்டி ஆட்சியாக தொடரவே காங் விரும்புகிறது. ஆலமரமாக வளர்ந்துவிட்ட வாரிசுகள், வாரிசுகளின் செல்வாக்குகளைக் காப்பாற்றிக் கொள்ள கருணாநிதி காங்கிரசின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்வதைத் தவிர வேறு வழியும் இல்லை.

ஜெ காங்கிரசுவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார் என்பது காங்கிரசுக்கு அனுகூலம் தான், இதன் மூலம் திமுகவிற்கு நெருக்கடி கொடுத்து மிகுதியான சட்டசபை இடங்களைப் பெற முடியும். இதைத்தான் ஜெவும் எதிர்பார்க்கிறார். காங்கிரசுக்கு நிறைய இடங்களை ஒதுக்குவதன் மூலம் திமுகவினால் பாமக மற்றும் தேமுதிக கட்சிகளை இணைத்துக் கொண்டு அவர்கள் திருப்தி அடையும் அளவுக்கு திமுகவினால் இடம் கொடுக்க முடியாது. இந்த நிலையில் பாமக மற்றும் தேமுதிக கண்டிப்பாக அதிமுகவுடன் இணையவே விருப்பம் தெரிவிக்கும் அதன் மூலம் திமுக - காங் கூட்டணியை எதிர்கொண்டு தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்பதே ஜெ-வின் கணக்கு. தனித்து போட்டியிட்டால் ஒரே ஒரு இடம் தான் கிடைக்கும் என்ற நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களை கூட்ட இந்த முறை தேமுதிக எதாவது ஒரு கூட்டணியில் இடம் பெற்றே ஆகவேண்டிய சூழல். காங்கிரஸ் - திமுக கூட்டணி மறு உறுதிப்படுத்தப்பட்டால் பாமகவும், தேமுதிகவும் அதிமுகவுடன் கைகோர்க்கும், கூடவே கம்யூனிஸ்டுகளின் ஆதரவு, சோ இராமசாமி உள்ளிட்ட பாஜக ஆதரவாளர்களின் மறைமுக ஆதரவு ஆகியவை ஜெவிற்கு சட்டசபை தேர்தலை சந்திக்க நம்பிக்கை ஊட்டியுள்ளது. இராஜிவ் காந்தி மறைவுக்கு பிறகு எந்த ஒரு தேர்தல் அலையும் இல்லாத நிலையில் கூட்டணி பலங்களே வெற்றி பெற்றுவருகின்றன. இலவசத் திட்டங்கள் கனிசமான வாக்கு பெற்றுத் தந்தாலும் அவற்றில் எதையும் பெறாத நடுத்தரவர்க்கத்தினர் வாக்குகளே தேர்தலில் வெற்றி தோல்விகளை முடிவு செய்வதாக உள்ளன. இந்த முறை தேர்தலில் எந்த ஒரு கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது, குதிரை பேரங்கள் வெற்றி பெற்றால் காட்சிகள் மாறலாம், அப்படிப் பார்க்கும் போது திமுகவிற்கே பணபலம் மிகுதி. இருந்தாலும் தமிழகத்தில் எந்த அரசு அமைந்தாலும் இழுபறி அரசாகத்தான் அமையும். திமுக - காங் கூட்டணி இந்த தேர்தலுக்கும் தொடரும் என்றே நினைக்கிறேன். பதிபக்தி இல்லாதவர், அண்டனோ மொய்னோ போன்ற ஜெவின் சோனியா குறித்த தரக்குறைவான சாடல்களை, சோனியா யானை போல் எதையும் மறக்காமல் தன்னைப் போலவே பலிவாங்குபவர் என்பதை ஜெ அறிந்தவர் தான், இருந்தாலும் ஜெவின் காங்கிரசிற்கு வெளிப்படையான ஆதரவு என்பது அதைவைத்து காங்கிரஸ் திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும், கொடுக்க வேண்டும் என்பதே.

11 நவம்பர், 2010

ஒருங்குறி - தினமணி குழப்பம் செய்ய முயற்சி !

தமிழுக்கான ஒருங்குறி புதிய பட்டியலில் புதீ'ய வடமொழி எழுத்துகளை நுழைத்து சர்மா என்பவர் பரிந்துரை செய்ததும் அதை தடுக்க கருணாநிதி முயன்றுவருவதும் பலரும் அறிந்ததே. இதற்கு இடையே தினமணி தலையங்கத்தில் இதனை வேறு மாதிரியாக திரித்து ஜ,ஷ,க்ஷ,ஸ, ஹ எழுத்துகளை ஒருகுறியில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழக அரசும், தமிழக ஆர்வலர்களும் முயற்சிப்பதாக எழுதியுள்ளது. இது ஒருங்குறி பற்றி முற்றிலும் அறியாதவர்களை குழப்பும் முயற்சியாகும், தமிழில் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் ஜ,ஷ,க்ஷ,ஸ, ஹ (தமிழுக்காக உருவாக்கப்பட்ட வட அல்லது பிற மொழியில் அமைந்த தமிழில் இல்லாத ஒலி அமைந்த சொற்களை ஒலிக்கும் வட்டெழுத்துகள், இவை தமிழ் வடிவம் பெற்றவை, இந்த எழுத்துகளின் ஒலிப்பு எழுத்துகள் இந்திய மொழிகளில் கிரந்த மற்றும் வட்டார மொழி எழுத்துவடிவங்களில் இருக்கிறது என்றாலும் இந்த எழுத்தை தமிழர்கள் தவிர்த்து வேறு எவரும் படிக்க முடியாது, இவை வட எழுத்துகள் என்பது தவறான பொருள், இவை தமிழில் பிற்காலத்தில் புகுத்தப்பட்ட எழுத்துக்கள், இவற்றை முற்றிலும் எடுக்க வேண்டும் என்று எவரும் சொல்லவில்லை, ஆனால் இவற்றின் புழக்கத்தை குறிக்கும் வண்ணம் சொற்களை தமிழ் படுத்தி பயன்படுத்துங்கள் என்றே சொல்கிறார்கள்), தினமணிக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. ஒன்றை அரைகுறையாகப் புரிந்து கொண்டதமின்றி அந்த அரைகுறைப் புரிதலை வைத்து தலையங்கம் தீட்டி தவறான கருத்தை பரப்பி வருகிறது தினமணி

தினமணி தலையங்கத்தின் பகுதி இது கீழே,

"சம்ஸ்கிருத ஒலிப்பே இடம்பெறாத தமிழ்ச் சூழலை உருவாக்குதல் நன்று. ஆனால், தானே மெல்ல வழக்கொழிந்துவரும் 5 வரிவடிவங்களுக்காக உலகம் முழுவதும் இணைய தளத்தில் ஒன்றுபோல அனைத்துத் தமிழருக்கும் பயன்தரக்கூடிய மென்பொருளையே நிறுத்தி வைப்பது சரியல்ல. பெருவாரியான தமிழ் ஆர்வலர்களின் பேரக்குழந்தைகளின் பெயர்களை ஸ,ஷ,க்ஷ,ஜ,ஹ இல்லாமல் உச்சரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பது முதல்வருக்குத் தெரியாதா என்ன? தேவையில்லாத சர்ச்சைகளை தேவையே இல்லாத வேளையில் கிளப்பி, மக்களின் பார்வையைத் திசை திருப்புவது என்பது அரசியல்வாதிகளுக்குக் கைவந்த கலை. இதுவும் அந்த ரகத்தைச் சேர்ந்தது என்பது மட்டும் தெரிகிறது. கண்ணெதிரில் தமிழை விழுங்கும் ஆங்கிலத்தைத் தமிழக அரசும், தமிழ்ச் சமூகமும் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் செத்துப்போன மொழியின், செத்தஉடலாக இற்றுக்கொண்டுவரும் 5 வரிவடிவங்களுக்காகத் தமிழக அரசு வேட்டியை வரிந்துகட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்கிறது. இதனால் யாருக்கு லாபம்?"


(தமிழக அரசு வேட்டியை வரிந்து கட்டாமல் பஞ்சகச்சத்தை வரிந்து கட்டினால் மகிழ்வார்களோ ?, இதைத்தான் தான் ஆடாவிட்டாலும் தன்னிடம் அனுமதிவாங்கமலேயே தான் அணிந்திருக்கும் பூணூல் ஆடும் என்பார்களோ !)

தினமணி கூறியிருப்பது யாவும் கற்பனையே. ஜ,ஷ,க்ஷ,ஸ, ஹ எழுத்துகளை யாரும் நீக்க வேண்டும் என்று குறிப்பிடாத போது தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் தினமணி ஏற்படுத்துவது எதற்காக யாரை மனநிறைவு செய்ய ? தமிழ் ஒருங்குறியில் சர்மா புகுத்தி முயன்ற புதிய 26 எழுத்துகளைத் தான் கூடாது என்கின்றனர் தமிழறிஞர்கள்.

தினமணியை கண்டனம் செய்து சங்கமித்ரன் என்பவர் எழுதிய இடுகையின் சுட்டி

9 நவம்பர், 2010

கமலஹாசனின் பகுத்தறிவு பேச்சு அலறும் இந்துத்துவாக்கள் !

விஜய் டிவி தீபாவளி நிகழ்ச்சியாக காபி வித் அனுவில் கமல் நிகழ்ச்சியில் கமல் பேசிய பகுத்தறிவு கருத்துகளை தினமலர் யாரோ ஒரு பாண்டே என்பவர் மூலம் சர்சை ஆக்க முயன்றுள்ளது. கமல் நிகழ்ச்சியில் என்ன சொன்னார் ?

1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது,ஆபாசமானது; அர்த்தமற்றது.
2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர்.
3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக்
குடித்துக்கொள்கிறார். என்ன தப்பு?
4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர்.

இதற்கு பாண்டே பதில் கூறுவதாக உளறி இருக்கிறார்

1. படுக்கையறை உணர்வுகளை எப்போதுமே மறைத்து வைக்கத் தெரியாதவர் கமல்ஹாசன். அவருடைய உணர்வுகளும், உறவுகளும் உலகறிந்த விஷயம். அப்படிப்பட்டவர், படுக்கையறை ரகசியங்களை பிறரோடு பகிர்ந்துகொள்ளக் கூடாதுஎன பேசியதே வியப்பு. இருந்தாலும், ஆத்திகவாதிகள் அதை அடக்கி வாசிக்கவேண்டும் என்றால், நாத்திகவாதி ஏன் அதைப் பற்றி, "டிவி'யில் பிரஸ்தாபிக்கிறார்?தனது நாத்திக உணர்வுகளை, தனக்குள்ளேயே வைத்திருக்க வேண்டியது தானே.இவரைப் போன்ற சிலர் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி இத்தகையபிரசாரங்களில் ஈடுபடுவதால் தான், ஆத்திகமும் பீறிட்டு எழ வேண்டியிருக்கிறது.

கமல் போன்ற பெரிய நடிகர்கள் முதல் குத்தாட்ட நடிகைகள் வரை அனைவரின் படுக்கை அறைகளை எட்டிப் பார்த்து திரைச் செய்திகள், துணுக்கு மூட்டை, கிசு கிசு என்பதாக எழுதுவது தினமலர் போன்ற செய்தி / வார இதழ்கள் தன்னிச்சையாக செய்வதே அன்றி, எந்த ஒரு நடிகரும் / நடிகையும் தான் இன்னாருடன் குடித்தனம் நடந்துகிறேன், (கள்ள) உறவு வைத்திருக்கிறேன் என்பதாகச் சொல்லுவதில்லை, இப்பவும் கூட பிரபுதேவா - நயந்தாரா ஆகியோர் பின்னால் மோப்ப நாய்களைப் போல் அலைகிறார்கள். கடவுள் வியாபாரத்தில் பிராச்சாரம் செய்வது தனிமனிதர் ஒருவரின் உரிமை என்றால் அதை மறுப்பதும் அதன் கேடுகள் உணர்ந்து, பிடிக்காத தனிமனிதனின் உரிமை ஆகும். கமல் பொதுத்தளத்தில் நாத்திக பகுத்தறிவு பேசுவது ஆன்மிக வா(ந்)திகளுக்கு பொது இடத்தில் பேசும் உரிமை போன்றது தான்.

2. உலக நாயகனாக இன்று பரிணமித்திருக்கும் நடிகர் கமல், தனது சொந்த ஊர் எதுஎன்று கேட்டால், பரமக்குடியைத் தானே குறிப்பிடுவார்? "யாதும் ஊரே; யாவரும்கேளிர்' என தத்துவம் உதிர்ப்பாரோ. பிரபஞ்சம் முழுக்க இறைவன் வியாபித்திருந்தாலும், தெய்வ சாந்நித்தியம் குவிந்திருக்கும் இடங்கள் என்று சிலஉண்டு. திருப்பதி அவற்றில் ஒன்று. கமலின், "மன்மதன் அன்பு' படம்வெளியாகிவிட்டால், அவரவர் இருந்த இடத்தில் இருந்தே பார்த்துவிட முடியுமா? தியேட்டருக்குச் சென்று தானே பார்க்க வேண்டும்!

எந்த ஒரு தேசியவியாதியும் தான் தமிழன் என்றே சொல்லிக் கொள்ளாத போது, தான் பரமகுடிக்காரன் தமிழகத்தைச் சேர்ந்தவன் என்று சொல்வதில் என்ன தப்பு ? பிரபஞ்ச,ம் முழுவதும் கடவுள் இருக்கிறா இல்லையா என்பதே பிரச்சனை இல்லை, ஒரு மசூதியில் கடவுள் இருப்பதையோ, காஃபாவில் கடவுள் இருப்பதையோ, எருசலேமில் ஏசு அவதரித்தார் என்பதையோ இந்த இந்துத்துவாக்கள் முதலில் நம்புவார்களா ? அது எப்படிங்க பிரபஞ்சம் முழுவதும் இருக்கும் கடவுள் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் இருக்க மாட்டார்?. திரைபடம் திரை அரங்கு போய் தான் பார்க்க வேண்டுமா ? டிவி பெட்டியில் பார்க்க முடியாதா ? வெளிநாடுகளில் படம் வெளியாகும் அன்றே ஒரிஜினல் டிவிடியும் வெளி ஆகிவிடுகிறதே. பாண்டேக்கள் ஒப்பிடு என்றால் திரைப்படத்தையும் கடவுளையும் ஒப்பிடுவாங்க, அதையே மற்றவர்கள் அரசியல் தலைவர்களையும் கடவுளையும் ஒப்பிட்டால் இந்து மதத்தை அவமதித்துவிட்டார்கள் அலறுவார்கள்

3. பெருந்தெய்வங்கள் பற்றியும், குறுந்தெய்வங்கள் பற்றியும், தெய்வ நம்பிக்கையே இல்லாத கமலுக்கு என்ன கவலை? யார், யாரைக் கும்பிட்டால் என்ன? இவர் ஏன்குறுந்தெய்வங்களுக்காக வக்காலத்து வாங்குகிறார்? அப்படி என்றால்,குறுந்தெய்வங்கள் இருப்பதை ஒப்புக்கொள்கிறாரா? இவர் குறிப்பிடுவது போல,எங்கேயாவது குறுந்தெய்வங்களுக்கு, அவமரியாதை நடந்திருக்கிறதா? அல்லது,சுடலை மாடசாமி சாராயம் குடிப்பதைப் பற்றி, பெருந்தெய்வங்களைப் போற்றும்ஆன்மிகத் தலைவர்கள் யாராவது இவரிடம் ஆதங்கப்பட்டார்களா?

இதே போன்று தான் ஆலய நுழைவு போராட்டம் நடத்திய திகவினரிடமும் கடிந்து கொண்டார்கள், நீ சூத்திரன் இல்லை என்றால் மூடிக் கொண்டு போக வேண்டியது தானே, உங்களுக்கு தான் நால்வருண கோட்பாட்டின் மீது நம்பிக்கை இல்லையே, எங்களைப் பொறுத்த அளவில் சூத்திரன் உண்டு அவன் தீண்டத் தகாதவன் கோவிலுக்குள் விடமாட்டோம் என்றார்கள். ஒரு அநியாயத்தை தட்டிக்கேட்க பாதிக்கப்பட்டவனாகத்தான் இருக்கனுமாம். பாதிக்கப்பட்டவனுக்காக எவரும் பேசக் கூடாதாம். அடங்கொக்கா மக்கா ஜெயலலிதா ஆடுகோழி பலி இட தடை போட்டத்தை இவனுங்க வசதியாக மறந்துட்டு நாமும் மறந்திருப்போம் என்றே பேசுறானுங்க. ஆடுகோழி வெட்ட சுடுகாட்டிற்கெல்லாம் சென்று மறைந்து நின்று பலி இட்ட நிகழ்வும் அதை தமிழக போலிசார் ஒட ஓட விரட்டி பிடித்து வழக்கு பதிவு செய்த நிகழ்வும் தமிழகத்தில் தானே நடந்தது. விராலி மலை முருகனுக்கு சுருட்டு படைக்கக் கூடாது என்று இன்னும் தடை வரவில்லை :). ஆன்மிகத் தலைவர்கள் ஆதங்கப்பட்டு ஜெ வை அத்தகைய சட்டம் போடுவது வழிபாட்டு உரிமையை பறிப்பதாகும் என்று சொல்லி தடுத்திருக்கலாமே. இல்லாத ஒன்றை இந்து மதம் என்பது போலவே பார்பனர் வழிபாட்டு முறைகளை அனைவருக்கும் பொதுவானது என்று கூறுவது முட்டாள் தனமன்றோ.

4. ஆகம விதிகள் என்பது, அறிவியலை மையமாகக் கொண்டது. ஃபைவ் ஸ்டார்ஓட்டலில் ரூம் போட்டு, பலான பலான சரக்குகளோடு எழுதப்படும் திரைக்கதைபோன்றது அல்ல. அது தவிர, தங்கள் கோவில் எப்படி கட்டப்பட வேண்டும் என்பது,கோவில் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயமே தவிர,பகுத்தறிவுப் புலிகளுக்கு இதில் வேலை இல்லை. தன்னுடைய வீட்டை, என்விருப்பப்படி கட்டுவாரா? தன் விருப்பப்படி கட்டுவாரா கமல்? "ஏழைகுடிசைவாசிகளின் ஏக்கத்தைப் புறக்கணித்து, பங்களா கட்டிக்கொண்டுள்ளார் கமல்'என புகார் சொன்னால், அதை நியாயம் என்பாரா ?

ஆகமவிதி கோயி(லி)ல் கருவரையில் தான் தேவநாதன் ஆணுறைகளை கழட்டிப் போட்டான். ஆகமவிதிகள் எதையும் கடைபிடிக்காத கண்ணப்பனுக்குத்தான் அருளினான் என்று பெரிய புராணத்திலேயே வருகிறதே. சிவ ஆகமங்கள் அனைத்தும் சிதம்பரத்தில் கரையான் அரிக்க பூட்டப்பட்டு நம்பியாண்டார் நம்பி தலைமையில் அதை மீட்டெடுத்தான் இராஜராஜன் என்று தான் வரலாறு சொல்லுகிறதே. ஆகம விதி என்றால் என்ன ? தற்போதைக்கு பார்பனர் வடமொழியில் அருச்சனை செய்வது அதுவும் அவர்கள் மட்டுமே செய்வது இதைத்தானே ஆகமம் என்று கூறுகின்றார்கள். முக்தி என்ற பெயரில் நந்தனார் எரிக்கப்பட்டதாக...இவர்களின் ஆகமவிதிப்படி சூத்திரன் கோவிலுக்குள் நுழையக்கூடாது. இது போன்ற ஆகமவிதிகளை அடுப்பில் பொசுக்கி ஆண்டுகள் கடந்துவிட்டதே.


இணைப்பு : இரண்டாவது பெரியாராக முழங்கிய கமல் (தினமலர்)

விஜய் தொலைகாட்சியின் காணொளி:

5 நவம்பர், 2010

குட்டிப் பையனின் முதல் தீபாவளி !

எங்க வீட்டு தீபாவளியின் கொண்டாட்டமே எங்க குட்டிப் பையன் சிவசெங்கதிர் தான், இன்னிக்கு காலையில் அடம் பிடிக்காமல் ஒத்துழைப்பு கொடுத்தான். குளிச்சிட்டு, புத்தாடை அணிந்து, மத்தாப்பும் கொளுத்தியாச்சு. அனைவருக்கும், இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்.

(மகள் போட்ட மாக்கோலம்)

4 நவம்பர், 2010

கலவை 04/நவ/2010 !

பதிவு எழுத மேட்டர் தேத்துவதைவிட இப்போதெல்லாம் பதிவு எழுத நேரம் கிடைக்கவில்லை எனக்கு. வீட்டில் இருக்கும் போது குழந்தைகளுடன் இருப்பதற்கே நேரம் சரியாக இருக்கும், கையில் ஐபோன் இருப்பதால் கணிணியை திறக்காமலேயே இணையத்தை மேய்ந்துவிட முடிகிறது, அரசியல் விமர்சனம் எழுதி அலுத்துப் போச்சு. நாம எழுதுவதால் எதுவும் மாறப் போவதில்லை என்றாலும் தற்போதைய அரசியல் நிலைப்பாடுகளில் கட்சிக்காரர்கள் அனைவருமே மனசாட்சி அற்றவராக இருக்கும் பொழுது (இவங்களெல்லாம் மனுசப் பிறப்பான்னு கூட நினைச்சுப் பார்ப்பேன்) நம்மைப் போன்ற மனநிலை உள்ளவர்களுக்காக பகிர்தல் என்ற அளவில் தான் எனது அரசியல் விமர்சனங்கள், பொதுமக்களின் வெறுப்பு ஆளாகுபவர்கள் எவராக இருந்தாலும் ஆட்சி அமைக்கவே முடியாது என்பது கடந்தகாலப் பாடம், அதையும் ஊடக தந்திரங்கள் இலவசங்கள் என்பதாக (ஆளும்)அரசியல்வாதிகள் வென்றுவரும் வேலையில் எவன் இருந்தால் என்ன செத்தால் என்ன நமக்கு பிரச்சனை இல்லாதவரை சரிதான். மக்கள் உணர்வற்று அல்லது உணர்வுகள் மழுங்கடிக்கப் படுவது தொடர்ந்து என்றுமே நடைபெறாது, மக்கள் சோம்பிக் கிடந்த நாடுகளில் தான் புரட்சிகள் வெடித்துள்ளன, அந்த புரட்சி சிங்களர்களால் அன்றாடம் துன்புறுத்தபடும் மீனவ சமுதாயத்திடமிருந்தோ, இலவசம் என்று எதுவும் கிடைக்கப் பெறாமல் பரபரப்பாக அன்றாடம் வேலைக்குச் சென்றுவரும் பொதுச் சமூகத்திடமிருந்தோ கூடத் ஏற்படலாம். ஒருவிதத்தில் அரசியல்வாதிகள் ரிஸ்க் எடுக்கிறவர்கள் தான் அவர்களால் தானே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடிவது போல் சிறைச்சாலைக்குள் அலுமினிய தட்டில் சாப்பிடவதற்கான வாய்ப்புகளும் அடுத்து அடுத்து நடக்கிறது :) அரசியல்வாதிகளால் சூழப்பட்டுள்ள இந்தியர்களுக்கு தீபாவளி வெள்ளைக்காரன் போனவுடனே போச்சு :)

பணக்காரர்களின் குழந்தைகள் கடத்தப்படுவது வாடிக்கையாகத் தொடர்கிறது, இதில் இரு குழந்தைகள் மிகவும் கொடுமையான முறையில் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். பணக்காரன் வீட்டில் குழந்தையாகப் பிறப்பதும் கூட பாவம் என்ற நிலைக்குச் சென்றிருப்பது பொருளாதார ஏற்றத்தாழ்வு சமச்சீரின்மையின் வேறு கோணம் தான். குற்றவாளிகள் பிடிப்பட்டது ஆறுதல் அளிக்கிறது, இருந்தாலும் இவை தொடராது என்பதற்கு எந்த பற்றுறுதியும் கிடையாது. ஏழைக் குழந்தைகள் போலி சாமியார்களின் நரபலிக்கோ, சமூக விரோதிகளானால் பிச்சை எடுக்கவோ கடத்தப்படுகிறார்கள், பணக்காரக் குழந்தைகள் பணத்துக்காகக் கடத்தப்படுகிறார்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் என்பதில் இவை அனைத்தும் ஒன்றே. குழந்தைகளை குறித்தக் குற்றச் செயல்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

தீபாவளி சந்தைகள் சிங்கையில் மலேசியாவிலும் களைகட்டியுள்ளது, குட்டி இந்தியா செரங்கூன் சாலை வண்ண மின்விளக்கு அலங்காரத்தில் காட்சி அளிக்கிறது, விறுவிறுப்பான தீபாவளி சந்தை விற்பனை நடைபெறுகிறது, நான் சென்று வந்த மலேசியா ஜோகூர் பகுதியிலும் அதே நிலைதான், வண்ண விளக்குகள் இல்லை, ஆனால் நிறைய தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. எங்க வீட்டுக் குட்டிப்பையனு இது முதல் தீபாவளி, அதைவிட வேறு ஒண்ணும் எங்களுக்கு இந்த தீபாவளியில் தனிச் சிறப்பு கிடையாது.
(JB- Malaysia)


(Near Perumal Temple, Serangoon Road, Singapore)

(Near Teka Market, Serangoon Road, Singapore)

பலரையும் உடனேயே ஈர்க்க் கூடிய திரைப்படம், பாலியல் ஜோக்குகள் போன்ற மார்கெட்டிங்க் யுத்திகள் எதுவும் இல்லாமல் அன்றாடம் பயன்படுத்தும் கணிணி தொடர்பான வெறும் தொழில் நுட்பப் பதிவுகளை மட்டுமே எழுதி ஏராளமான பின் தொடர்பவர்களைப் பெற்று அலெக்சா பட்டியலில் முதல் ஒரு லட்சம் இணையத்தளங்களுக்கான தர வரிசையில் ஒருவராக பதிவர் வேலன் இடம் பிடித்திருக்கிறார். இதன் மூலம் திரைப்படம், பாலியல் சாராத தகவல்கள் கூட பலரிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன, எழுத்து முயற்சியும் பயனுள்ள தகவல்களும் கூட சிறந்த வரவேற்பை பெற முடியும் என்ற நம்பிக்கையை பலருக்கும் பெற்று தந்திருக்கிறார். வாழ்த்துகள் வேலன் சார்.

*****

பதிவர் உறவுகள் அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்

1 நவம்பர், 2010

தங்கமீனிற்கு தூவிய பொரி !

தங்கமீனில் எழுதிய கட்டுரையை இங்கு பகிர்ந்தளிக்கிறேன். கிளிக் செய்து படிக்கவும். தங்கமீன் திங்கள் (மாத) இணைய இதழாக சிங்கையில் இருந்து நண்பர் பாலு மணிமாறன் அவர்களின் முயற்சியினால்
வெளிவந்து கொண்டிருக்கிறது. இந் நவம்பர் திங்கள் இதழில் எழுத்தாளர் சாரு வின் கட்டுரையும் உள்ளன.

"உண்மையில் தமிழ்நாட்டில் வாழ்வதென்பது மரணக் கிணற்றில் வாழ்வதற்குச் சமமாகும். இந்திய நிலைமையே அதுதான் என்றாலும் அங்கே கொஞ்சம் கலாச்சார உணர்வாவது இருக்கிறது. பா. விஜய் போன்ற ஒரு ஆளை அங்கே இலக்கியவாதி என்று சொல்லமாட்டார்கள்; இங்கே மரணக் கிணறு வாழ்க்கையோடு சேர்த்து கலாச்சார சீரழிவு வேறு விசேஷ போனஸ். அந்தக் காலத்தில் அமெரிக்காவில் ஆஃப்ரிக்க அடிமைகள் ஒரு பகல் பூராவும் விலங்குகளைப் போல் வேலை செய்ய வேண்டும். ஆனால் இரவில் அவர்கள் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் கதை சொல்லிக் கொண்டும் இருப்பார்கள். அத்தனை நூற்றாண்டுகளாக அவர்களை உயிர்வாழ வைத்தது அவர்களுடைய இரவு வாழ்க்கைதான்; அவர்களுடைய கலாச்சாரம்தான். ஆனால், கச்சி ஏகாம்பர நாதா, அந்தக் கலாச்சாரத்தையும் இங்கே தமிழ்நாட்டில் எங்களிடமிருந்து பிடுங்கிக் கொண்டு பதிலுக்கு ரஜினிகாந்தையும் பா. விஜய்யையும் கொடுத்து எஞ்ஜாய் எஞ்ஜாய் என்கிறார்களே, இந்தக் கொடுமையை எங்கே கொண்டு போய் முறையிட?" - சாரு

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்