பின்பற்றுபவர்கள்

ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 நவம்பர், 2009

தமிழர்களின் தாகம் !

கடமை போல் நடப்பு நிகழ்வுகளை வைத்து எழுதுவதில் அவ்வளவாக விருப்பம் இல்லை, சில முதன்மை நிகழ்வுகளின் அடைப்படையில் அது போல் எழுதுவதும் மன ஆறுதலைத் தருகிறது.

மாவீரர் நாள் கொண்டாட்டங்கள் சென்ற ஆண்டுகளில் நடக்கும் பொழுது அதை ஒரு நிகழ்வு என்பதாக ஊடகத் தலைப்புகளைப் படிப்பதுடன் சரி. இன்று இலங்கையின் நிலவரங்கள் ஈழத்தமிழர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியும், திணித்தும் வைத்திருக்கின்றன. ஈழத் தமிழர் தமிழக "அகதி" முகாம்களைப் படங்களாகவும், இராமேஸ்வரம் கடற்பகுதிக்கு அவர்கள் படகில் வந்து தஞ்சம் புகும் படங்களே நமக்கு மிகப் பெரிய சோகக் காட்சிகளாக இருந்தது, அதையெலாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு உலக மதங்கள் காட்டும் நரகக் கூடங்களாக கம்பி வேலிக்குள் லட்சக்கணக்கில் சதையோடும், உடலோடும், உயிர் "சித்திர" வதைகளின் காட்சிகளாக ஈழமக்கள் நிற்கும் படங்களைப் பார்க்கும் போது உணவும், உறக்கமும் வெறுமையாகிப் போகிறது. வசதியான, பாதிப்பு இல்லாத இடத்தில் இருந்து கொண்டு அறிவுரை கூறும் ஆளும்வர்க அறிவாளிகள் 'இப்படி நடந்திருக்கலாம், அப்படி நடந்திருக்கலாம்...' என்ற காலம் கடந்த அறிவுரைகள் நிகழ்கால உண்மைகளை முடிந்த மட்டில் மறைக்கவே முயல்கின்றன.



ஈழமண்ணில் போராடி இறந்தவர்களைப் போல் ஈழத்தமிழர்களுக்காக மனதையும் உயிரையும் கொடுத்து தன்னை மாய்த்துக் கொண்ட முத்து குமார் போன்ற மாந்தர்கள் நம் தமிழக மண்ணில் இருந்திருக்கிறார்கள். இன விடுதலைக்காக போராடி வரலாற்றில் வாழும் அனைத்து ஈழத்தமிழர்களுக்கும் வீர வணக்கம் !

எந்த ஒரு விடுதலையும் ஓர் இரவில், இரத்தம் சிந்தாமல் கிடைத்தது இல்லை என்பதே உலக நாடுகளின் விடுதலை வரலாறு. எந்த ஒரு போராட்டத்திற்கான காரணங்கள் தொடந்து இருக்கும் போது போராடுபவர்களை ஒழித்துவிட்டால் போராட்டம் ஓய்ந்துவிடும் என்று தப்பாக நினைத்து தவறான முடிவெடுக்கும் ஆட்சியாளர்களின் அடக்கு முறைகள் உலகெங்கிலும் நடந்தவையே.

உலகெங்கிலும் யூதர்கள் உண்டு, யூதர்களுக்கென தனி நாடு இல்லை, என்கிற கருத்து இஸ்ரேல் தோன்றுவதற்கு முன்பு இருந்தது. யூதர்களைப் போல தமிழர்களையும் உலகம் வருங்கால வரலாற்றில் எழுதிக் கொள்ளும் காலம் வரும் என்ற நம்பிக்கையுடன், சொல்லுவோம்

மாவீரர்கள் மரணித்ததே இல்லை !

7 ஜூலை, 2009

ஊரார் கண்ணில் வெண்ணை !

இந்தியாவில் அகதிகளாக குடியேறி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை, ஊட்டியில் உள்ள திபெத்தியர்கள் கோலாகலமாகக் கொண்டாடினர். - என்கிற செய்தியை தினமலரில் படித்தேன்.

இந்தியாவுக்குத்தான் எவ்வளவு பெருந்தன்மையான மனது !!! என்று எண்ணும் முன் தமிழ்நாட்டின் வங்கக் கடலோரம் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்களை நினைத்துப் பார்த்ததும் இந்தியாவின் கரிசனம் பல் இளிக்கிறது. வேறொரு நாட்டில் இந்திய வம்சாவளியோ, இந்திய இனத்தைச் சேராதவர்களுக்கு இரக்கப்பட்டு பல்வேறு வசதிகளையும், படம் நன்றி : தினமலர்அவர்களின் நாடுகடந்த அரசியலுக்கு ஆதரவு கொடுத்து கொண்டாடும் நிலைக்கு வைத்திருக்கும் அரசு, இந்திய இனத்தைச் சேர்ந்த தமிழர்களை முகாம்கள் என கண்கானிப்புடன் கூடிய திறந்த வெளிச் சிறைச் சாலையைப் போல் வைத்திருப்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் 'இந்தியாவின்' நிலைப்பாடுகள் என்பதைத் தாண்டி இந்திய ஆட்சியாளர்களின் நிலைப்பாடுகள் ஒருதலையாக இருப்பதை ஆதாரத்துடன் காட்டுவதாகவே விளங்கிக் கொள்ள முடிகிறது.

திபெத்தியர்களுக்கு தஞ்சம் அளிப்பதால் இந்தியா மனித நேயம் போற்றும் நாடு என்கிற உலகப் பார்வை கிடைக்க ஆடும் நாடகமா ? உண்மையிலே மனித நேயம் தான் காக்கப்பட்டுகிறதா ? அப்படி என்றால் ஈழத்தமிழர்களின் கண்களில் சுண்ணாம்பு வைப்பதற்கு இராசீவ் படுகொலையின் காரணமாக பிராபகரன் மீது இருக்கும் தனிமனித வெறுப்பும் தான் காரணமா ? உலக தமிழர்களில் ஒரு பகுதியினர் தங்களை தனிநாட்டுடன் அடையாளப்படுத்திக் கொள்வதை இந்தியா விரும்பவில்லையா ?

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் இந்தியாவிற்கு வந்தவர்கள் மட்டும் தான் ஈழம் திரும்பிச்
மண்டபம் முகாம்செல்லும் நாளை எதிர்பார்க்கின்றனர், ஏனெனில் இந்தியாவில் தான் அவர்களது வாழ்வியல் நிலையில் உயிர்பாதுகாப்பு தவிர்த்து எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. இது இந்தியாவுக்கு பெருமையா ? இதைத் தெரிந்து ஈழ எதிர்பாளர்கள் புலம் பெயர்ந்து பிற நாடுகளுக்குச் சென்ற ஈழத்தமிழர்கள் ஈழச் செய்திகள் அறிந்து கொள்வதைத் தவிர்த்து, ஈழம் திரும்பிச் செல்வது பற்றி பேசுவதில்லை என்றெல்லாம் 'தேசபக்தி இல்லை' என்பதாகப் பேசி பினாத்துகிறார்கள். மற்ற நாடுகளும் ஈழத்தமிழர்களை அகதிகளாகத் தான் நடத்தி இருக்க வேண்டும் என்று ஈழ எதிர்பாளர்கள் எதிர்பார்த்து ஏமாந்ததினால் ஏற்பட்ட வெறுப்புதான் இந்த உளரலுக்குக் காரணாம்.

இந்தியா போடும் பல்வேறு வேடங்கள் இந்திய அரசியல் கட்சிகளின் ஒப்பணையால் ஒளிர்ந்து கொண்டே தொடர்கிறது ஈழ எதிர்பாளர்களின் ஜெய்ஹோ................. இரைச்சல்.

23 ஜூன், 2009

கண்ணகி, பாரதி, தாமரை அறச்சீற்றம் !

கண்ணகி(இளங்கோ), பாரதி ஒப்பீடு முன்பே எழுதி இருக்கிறேன். அதாவது 'கண்ணகி தன் கணவன் தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு கொலையுண்டான் என்று வீறு கொண்டு மதுரையை எரித்தாள்' என்று சிலப்பதிகார கதைகள் சொல்லுகின்றன. அதைப் படிக்கும் இன்றைய புரட்சியாளர்கள், 'என்னதான் இருந்தாலும் கோவலன் ஒருவனுக்காக மதுரையை எரித்தாள் என்றால் அப்பாவி பொதுமக்களும் சேர்ந்தே அழிக்கப்பட்டு இருப்பார்கள் இல்லையா, கண்ணகிக்கு மனிதாபிமானம் இல்லை, அவள் மதுரையை எரித்ததும் ஞாயம் இல்லை' என்று தங்களுக்கு தெரிந்த விளக்கம் (வியாக்யாணம்) சொல்லுவார்கள்.

அதே ஆட்கள் 'தனிமனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று சொன்ன பாரதியையும் அந்த வரியையும் சிலாகித்துக் கூறுகிறார்கள். ஒருவருக்கு உணவு இல்லை என்பதற்காக உலகில் உள்ள ஏனையோரையும் சேர்த்து உலகையும் அழிக்க அழைப்பு விடுப்பது தான் புரட்சியா ? கதை புனைவாக இருந்தாலும் மெய்யாக இருந்தாலும் கண்ணகியின் அறச்சீற்றம் தொடர்புடைய ஊர் என்பதால் மதுரை என்ற அளவில் நின்றுவிட்டது. ஆனால் பாரதி சொல்லும் 'ஜெகம்' அந்த தனிமனிதனுக்கு தொடர்புடைய நாட்டில் எதோ ஒரு புண்ணாக்கு, ஊழல் காரணத்திற்காக உணவு கொடுக்கவில்லை, அல்லது அவனுக்கு கிடைக்கவில்லை என்பதற்காக இதில் தொடர்பே இல்லாத மற்றநாடுகள் உட்பட்ட உலகை(ஜெகம்) அழிப்பது அறிவுடையதா ? பாரதிக்கு 'கஞ்சா' பழக்கம் இருந்தது என்று யாரும் சொல்லிவிட்டாலோ, பாரதியை கடவுளாகப் பார்ப்பவர்கள் அதைச் சொல்லுபவர்களை சொல்லால் சுடுவார்கள். ஆனால் அவர்கள் தான் கண்ணகியை விமர்சனம் செய்கிறார்கள்.

ஈழம் தொடர்பான இந்திய செயல்குறித்து வேதனை அடைந்த கவிஞர் தாமரை 'குழந்தைகள் தவிர அனைத்து இந்தியர்களுக்கும்' சாபம் இட்டிருக்கிறார். அவ்வாறு தாய்நாட்டின் மீதே சாபம் இடுவது தவறு என்று அப்பாவி முரு மற்றும் பலர் குறிப்பிடுகிறார்கள், கண்டனம் தெரிவிக்கிறார்கள். எழுத்தாளர்கள் அவர்களின் உணர்சிகளை எழுத்தின் வழியாகத்தான் பதிய வைக்க முடியும். தாமரை சொல்லிவிட்டால் அப்படியே நடந்துவிடப் போவதில்லை. கணவன், குழந்தைகள், பெற்றோர்களை இழந்த ஈழத்துப் பெண்கள்
தாமரையைவிட பல மடங்கு இந்தியாவைத் திட்டி சாபம் விட்டிருப்பார்கள்.

தாமரையின் கவிதை / சரி தவறு என்கிற ஆராய்ச்சியைவிட அதில் இருக்கும் மறைமுக வேதனை வரிகள், அந்த அளவு உணர்ச்சிக்கு உள்ளாகி இருப்பவர்களுக்கும், பாதிப்பு அடைந்தவர்களுக்கும் இருக்கும் மன அழுத்ததின் வெளிப்பாடாக கொள்ளவேண்டும்.

பாரதியின் வரிகள் புதுமை, புரட்சி என்றால், தாமரையின் வரிகள் உளறலா ? துக்கத்தில் இருப்பவர்களுக்குத்தான் இழப்பின் வேதனைத் தெரியும். தாமரையின் வரிகளில் சொற்குற்றம் பொருள்குற்றம் இருந்தாலும், வரிகளுக்கு என்று தனிப் பொருள் உணர்வின் அழுத்தம் என்று கொள்வது சரியாக இருக்கும்.

(பணம் பெறாத) பொதுமக்கள் தங்கள் வெறுப்பை தேர்தல் நேரத்தில் காட்டுவார்கள், படைபாளிகள் கவிதைவழிக் காட்டுவார்கள். அவர்களில் பாரதி என்றாலும், தாமரை என்றாலும் செயல் ஒன்று தான்.

31 மே, 2009

தமிழீழம் மலரும் !

உசுப்பேற்றி உசுப்பேற்றி ரணகளம் ஆகிக் கொண்டிருந்ததை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே, இன்னும் எஞ்சி இருப்போரை அழிக்கும், தூண்டும் சொற்களான 'தமிழீழம் மலரும்' என்பதை படிக்கும் போது வெறுப்பும், விரக்தியும் மிஞ்சுகிறது. காலத்தின் கட்டாயத்தில் எதுவும் நடக்கட்டும், இப்போது காலத்தின் கட்டாயம் காயத்தை குணப்படுத்துவது தான். உயிருக்கும், உடைமைக்கும், உறவுகளை தொலைத்தவர்களுக்கு சாய்ந்து கொள்ளத் தோள். போர்கள வீரவசனத்திற்கான காலம் முடிந்துவிட்டது. எஞ்சி இருப்போரையாவது காப்பதற்கு முடிந்தவரை உரிமைக் குரல் கொடுப்போம், நம்பிக்கையான உலக அமைப்புகள் மூலம் உதவிகள் செய்யும் திட்டம் வெளியிடப் பட்டால் கைகளாக இணையுவோம். சுனாமி பேரைச் சொல்லி சுருட்டியது போல், ஈழத்தமிழர்களின் கண்ணீரைக் காசாக்கிக் கொள்ளும் திடீர் நலக்குழுக்கள், தனிநபர்கள் பணம் வசூல் செய்யப் புரப்படுவார்கள். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உலக அளவில் செஞ்சிலுவை சங்கம் போன்ற நம்பிக்கை உடைய அமைப்புகள் மூலமாக மட்டுமே உதவி செய்ய முன்வருவது இந்த நேரத்தில் சரியான உதவியாக அமையும்.

தமிழீழம் மலரும், மலரவேண்டும் என்பதே தமிழுணர்வாளர்கள் அனைவரின் விருப்போம், ஆனால் அந்த விருப்பதை இப்போதும் திணிப்பதால் இழப்பு எண்ணிக்கையை கூடுதலாக்குவது தவிர்த்து வேறொன்றும் நடைபெறப் போவதில்லை. மனமும் வலியும் போன்று நெருப்பும் புகையும் ஒன்றை ஒன்று சார்ந்தது. இப்போதைக்கு நாம் அதை ஊதிவிடாமல் இருப்பதே நல்லது. தண்ணீர் வேட்கையில் தவிப்பவர்களிடம் 'நாளை உனது தாகம் தீரும்' என்று நம்பிக்கை ஊட்டிக் கூறுவது இன்றைய தாகம் தீர்ப்பதற்கான தீர்வல்ல.

25 மே, 2009

பிரபாகரன் மீண்டும் வருவாரா ?

போர் தொடங்கிய போது பிராபகரன் போர் களத்தில் இருந்தார் என்பதே ஐயத்துக்குரியதாக இருக்கிறது. பிராபகரன் நீரிழிவு நோயாளி என்பதால் போர்களத்தில் இருந்து போரை வழிநடத்திச் சென்றிருப்பது ஐயமே. பிரபாகரன் போருக்கு முன்பே இயற்கை மரணம் அடைந்திருக்கலாம். இது உண்மையெனில்

இதை உளவுத்துறைகள் மூலம் அறிந்து கொண்ட சிங்கள அரசு போர் செய்து அந்த பகுதிகளை கைப்பெற்ற திட்டம் தீட்டி இருக்கலாம்

ஈழக்கனவு நிறைவேறத சூழலில் பிரபாகரன் மரணத்தை வெளியே கசியவிட வேண்டாம் என்று விடுதலை புலிகள் தரப்பு பொட்டு அம்மன் தலைமையில் செயல்பட்டு இருக்கலாம்

போரில் வெற்றி என்பதை வழியுறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த இலங்கை இராணுவத்திற்கு பிரபாகரன் 'உடல்' தேவைப்பட்டு இருக்கிறது, அதைக் காட்டியும் இருக்கிறார்கள். ஏற்கனவே பிராபகரன் மரணம் அடைந்திருந்தால் விடுதலைப் புலிகளின் அமைப்பு அதை வெளிப்படுத்த திணறும் என்பதைக் காரணமாக வைத்து பிரபாகரனின் 'உடலை'க் காட்டினார்கள் என்று ஊகிக்க முடிகிறது.

புலிகள் பிரபாகரனின் இறப்பை காலம் சென்று உறுதிப்படுத்துவது ஏன் ?

பிரபாகரன் இறந்தால் இரத்த ஆறு ஓடும் என்கிற வைகோவின் பேச்சைக் கேட்டு அச்சமுற்ற அரசு, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு தற்காலிக மறுக்கும் படி விடுதலைப் புலிகளின் வெளியுறவு அமைப்புகளிடம் கேட்டு கொள்ள ஆனது ஆயிற்று என்பதால் விடுதலைப் புலிகள் தரப்பு அந்த வேண்டுகோளை ஏற்றிருக்கக் கூடும்.

பிரபாகரன் போர்களத்தில் போரிடும் போது இறந்தார் என்று சொல்வது அவரை பெருமைப் படுத்தும் என்பதாலும் காலம் தாழ்த்திச் சொல்கிறார்கள் போலும்.

எது எப்படியோ போர் தொடங்கும் முன்பே பிராபகரன் மரணமடைந்திருக்கக் கூடும், ஏனெனில் போர் தொடங்கிய பிறகு பிரபாகரன் போர் களத்தில் இருந்தது போலவோ, வேறு நடவெடிக்கைக் குறித்தோ இதுவரை எந்தப்படமும் விடுதலைப் புலிகள் தரப்பில் வெளி இடப்படவில்லை.

இன்னும் சில விடுதலை புலிக்களின் குழுக்கள் பிரபாகரன் உத்தரவிற்காகக் காத்திருப்பதாகச் சொல்கிறார்கள். தப்பிவிட்டதாக சொல்லப்பட்ட இந்த ஒருவார காலம் உத்தரவிடவோ, இருப்பை வெளிப்படுத்தவோ போதாதா ?

நடப்புகளை எல்லாம் பார்க்கும் போது எனது ஊகம் பிரபாகரன் போருக்கு முன்பே மரணமடைந்திருக்கக் கூடும் என்பதே. இது தெரியாத இந்திய அரசை, இலங்கை அரசு பிரபாகரனையும், விடுதலைப் புலிகளையும் அழிக்கப் போவதாகச் சொல்லி இந்திய அரசின் உதவிகளைப் பெற்று அப்பாவி தமிழர்களை அழித்திருக்கிறார்கள்.

மற்றபடி பிரபாகரன் மீண்டும் வருவார் என்று எதிர்பார்ப்பது அவர் மீது வைத்திருக்கும், மதிப்பையும் நம்பிக்கையையும் பொருத்ததே. அப்படி நம்பிக்கை உடையவர்களில் நானும் ஒருவன்.

24 மே, 2009

ஈழம் : கட்டாந்தரையில் புல் முளைக்கும் !

ஈழப் போரில் விடுதலைப் புலிகளை அழித்ததாகக் கூறிக் கொண்டு வன்னி / முல்லைத் தீவு மக்களின் வாழ்வுரிமையை கீழே போட்டு புல்டவசரால் நசுக்கி இருக்கிறது இலங்கை இராணுவம் மற்றும் அதற்கு உதவிய இந்தியா உட்பட பலநாடுகள். திபெத் ஆக்கிரமிப்பையும் போராட்டக்காரர்களையும் நசுக்குவதை ஞாயப்படுத்த சீனா இலங்கைக்கு ஆயுதங்களைக் கொடுத்து உதவி இருக்கிறது. இங்கு இந்தியாவில் சீன தாங்கி கம்யூனிச கட்சிகள் எதுவும் இதுவரை சீனாவுக்கு எதிராக மூச்சு விட்டது கிடையாது. காங்கிரசு அரசின் இலங்கை ஆதரவு வெளிப்படையானது, பாஜக தமிழர்களின் தனிநாடு கோரிக்கையை ஆதரிக்கவில்லை. வழக்கமாக 'இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள்' என்று இந்து அரசியல் பிழைப்பு நடத்தும் பாஜகவிற்கு ஈழத்தமிழர்கள் இந்துக்களாகத் தெரியவில்லை. இதற்குப் பின்னனியும் உண்டு, விடுதலைப் புலிகள் சாயிபாபாவை பல்வேறு சமயங்களில் விமர்சித்தவர்கள், சாயிபாபா பாஜக தொடர்பு நாடறிந்தது தான். அதற்கு மேல் அவர்கள் ஏன் ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்க முன்வரவில்லை என்பதை விளக்கவும் வேண்டுமா ? பாரளுமன்றத்தில் வேறு பிரச்சனைகள் இல்லாதபோது ஓரிரு சமயங்களில் 'இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள்' என்று பேசினார்கள். அதற்கு எந்த ஒரு அழுத்த்தையும் கொடுத்து போராடவே இல்லை. தேசிய கட்சிகள் அனைத்துமே ஈழப் பிரச்சனையில் தங்களால் முடிந்த அளவுக்கு சொந்தப் பகையை முடித்துக் கொள்ளவும், வெறும் அரசியலுக்காகவும் மட்டுமே பயன்படுத்தின. தமிழகத்தில் திமுக சார்ப்பு ஊடகங்கள் ஈழப் பிரச்சனை தேர்தல் தலைவலியாக மாறிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து தனது மீடியாக்களின் மூலம் காமடி திரைப்படங்களைப் போட்டு வெற்றிகரமாக செய்திகள் செல்லாவண்ணம் கவனமாக நடந்து கொண்டன.


(தமிழனாக பிறந்ததால் இந்த தண்டனையா ?, இனி தமிழனாக பிறக்காதீர்கள் குழந்தைகளே...)

இதோ எல்லாம் முடிந்துவிட்டதாக அறிவித்து இலங்கையில் வெற்றி அறிவிப்பு இட்டாகிவிட்டது. 30 ஆயிரம் பொதுமக்கள் அழிந்ததையும் பொருட்படுத்தாது அந்நாட்டு சிங்களர்கள் உற்சாகமாகக் கொண்டாடினார்கள் என்றெல்லாம் தொலைக்காட்சிகள் படம் பிடித்துக் காட்டின. பார்க்கும் நமக்கே எரிச்சல் ஆகும் போது, அங்கே கொழும்பிலும், சிங்களர் பெரும்பாண்மையாக வசிக்க்கும் இடங்களில் வசிக்கும் தமிழர்கள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பெரும் வேதனையை அடைந்திருப்பார்கள். வெற்றி வெற்றி என்றால் எது வெற்றி ? 30 ஆயிரம் தமிழர்களைக் கொன்றதா ? அல்லது அவர்கள் வாழும் இடங்களை ஆக்கிரமித்ததா ? விடுதலைப் புலிக்கட்டுப்பாட்டு பகுதியில் கல்வி, மருத்துவம், வங்கிகள் அனைத்துமே அமைக்கப்பட்டு தனிநாடு போலவே தான் செயல்பட்டு இருந்தனர். அங்கிருந்த மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவம் முற்றிலுமாகவே அழிக்கப்பட்டதாகவே தெரிகிறது.

கிட்டதட்ட 30 ஆண்டுகளாக எந்நேரம் போர் நடக்கும், என்கிற பீதியிலே வாழ்ந்தவர்கள், வாழ்க்கை என்றாலே போர் தானோ என்ற அளவில் சிறுகுழந்தைக்கும் மனதில் பதிந்தும், இனி குடும்பத்தில் ஒன்று அல்லது மேற்பட்டவர்களை இழந்தோ, தானே கை, கால் இல்லாமல் ஊனமுற்றோ இருப்பார்கள். இவைதான் இலங்கை அம்மக்கள் மீது கொண்ட வெற்றி என்பது அந்த நாட்டு சிங்கள குடிமகனுக்குத் தெரியாதா ? முல்லைப் பெரியார் பகையை வைத்துக் கொண்டும், சிங்களர்களுக்கு நேரடியாக உதவிய மலையாளிகளின் தலைமைகளை நினைத்தும் வெறுப்படையும் நாம் நாளை கேரளாவில் பூகம்பம் ஏற்பட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டால் அதற்கு மகிழ்ச்சி தெரிவித்து பட்டாசு வெடிப்போமா ? ஆனால் அது போன்ற இழிசெயலைத்தான் சிங்களக் குடிமக்கள் செய்திருக்கின்றன. பிரபாகரனோ, விடுதலைப் புலிகளோ பாராசூட் வழியாக ஈழ மண்ணில் குதித்தவர்கள் அல்ல. பார்த்துக் கொண்டிருந்த ஒவ்வொரு தமிழனும் பிரபாகரன்களாக உருவானால் ஈழப் பிரச்சனை சுற்றுப் புறச் சூழலால் உலகம் அழியும் வரை (உண்மையிலேயே அப்படி ஒன்று நடந்தால் நான் மகிழ்வேன், ஏனென்றால் எந்த ஒரு கொடுமையும் தொடந்து நடப்பதை இயற்கைக் கூட பொறுத்துக் கொள்வதில்லை) கூட நிகழும். இராமர் பாலம் பற்றிய கதைகளை புறக்கணித்தாலும் இலங்கை 'இராவண' தேசம் என்று ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

கோழைகளுக்கு வரலாற்றின் பின்குறிப்பில் கூட இடம் இருந்ததில்லை, கோழைகள் உண்ணுவதையும் பொருளீட்டளையும் தவிர்த்து சொந்த வாழ்கையிலும் கூட எதையும் சாதிப்பது இல்லை, தனக்கான பிரச்சனை இல்லாதவரை தலையிட வேண்டாம் என்று அமைதியாக இருப்பவர்கள் அனைவருமே கோழைகள் தான். எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாத இந்த கோழைத்தனம் தான் ஒரு இனத்தை இன்னொரு இனம் அடிமைப்படுத்த வழியாக அமைகிறது. இந்தியர் கோழைத்தனமே முகலாயர் படையெடுப்பு, வெள்ளைக்காரர் படையெடுப்பு என்பதாக வரலாறு. தமிழனின் கோழைத்தனம் தான் இராஜராஜனுக்கு பிறகு பிற மாநில மன்னர் ஆட்சி. இவை அனைத்துமே தான் பாதிக்கப்படவில்லை என்கிற பொறுப்பின்மையினாலும், சுயநலத்தினாலும் ஏற்பட்டவை, அதற்கு சாதகமாக எதிரிகள் வைக்கும் விலைக்கு விலைபோகுபவர்களின் சுயநலம், ஒரு ஆயிரம் பேரை அடிமைப்படுத்த அந்த கூட்டத்தில் ஒருவனை விலைபேசினாலே அவன் அனைவரையும் காட்டிக் கொடுத்துவிடுவான். ஆனாலும் விழித்துக் கொள்ளும் போது ஓரளவு மீண்டு வெளியே வரத்தான் செய்கிறார்கள். இது இயற்கை மற்றும் உலக நடப்பு. இன்றைய தேதியில் சுயநலம், இனநலம் ஓங்கி இருப்பதால் எந்த ஒரு வெற்றியும், தோல்வியும் உண்மையானதோ, நிலையானதோ அல்ல.




மேலும் படங்களுக்கு


முழுதுமாக உழுதுவிட்டு, தீவைத்துக் கொளுத்தினால் கூட நம்பிக்கை தூறலில் புற்கள் முளைப்பது இயற்கை. திடலாகிப் போன வன்னி, முல்லைத்தீவு மீண்டும் எழும். அதை எந்த ஒரு சக்தியாலும் முடக்கிவிடவே முடியாது.

23 மே, 2009

30 ஆயிரம் புலிகளைக் கொன்றது இராணுவம் ?

புலிகளை அழித்துவிட்டோம், போர் முடிந்துவிட்டது என்று சொல்லிய இலங்கை இராணுவம், போர் பகுதியைப் பார்வையிட ஊடகங்களுக்கும், பொதுசேவை அமைப்புகளுக்கும், ஐநாவுக்குமே மறுப்பு தெரிவிப்பது ஏன் ?

கிட்டதட்ட 30 பொதுமக்கள் வரை இராசாயண குண்டு மூலம் கொன்றொழிக்கப்பட்டதாக தெரிகிறது, மிகப் பெரிய சர்வதேச போர் குற்றத்தில் இருந்து தப்பிக்க பிரபாகரனைக் கொன்றதாக நாடகம நடத்தப்பட்டுள்ளது.

இந்த சாவு எண்ணிக்கைத் தெரிந்துவிட்டால் உலகநாடுகளின் கண்டனங்களுக்கு ஆளாகவேண்டி இருக்கும்,

முகாம்களில் உள்ளவர்கள் உண்மையை வெளியே செல்லிவிடுவார்கள் என்கிற அச்சம்

30 ஆயிரம் உடல்களை அப்புறப்படுத்த கால அவகாசம் எடுத்துக் கொள்ளவேண்டும், அத்தனை உடல்களையும் புதைத்தால் என்றாவது ஒரு நாள் தோண்டி எடுக்கப்பட்டு உண்மைகள் வெளியே வரலாம் என்பதால் மொத்தமாக தடையங்கள் அனைத்தையும் அழிக்க குறுகிய கால அவகாசம் தேவைப்படும்.

ஆகிய காரணங்களே போர் பகுதிகளை பார்வையிட பாதுகாப்பு காரணங்களைக் காரணம் காட்டி தடை செய்திருக்கிறார்கள். துரோகி கருணா தைரியமாக அங்கு சென்று வர முடிகிறதென்றால் ஏனென்று கேட்க அங்கு நாதிஇல்லை, பாதுகாப்பு ஆபத்துகள் இல்லை என்று தானே பொருள்.

கொல்லப்பட்ட அனைவருக்கும் புலிகளின் ஆடைகளை மாட்டிவிடும் அளவுக்கு ஆடைகள் கையிருப்பு இருந்தால் 30 ஆயிரம் புலிகளை நாங்கள் போரில் கொன்றோம் என்று சொல்லி இருப்பார்கள்.

இராசீவ் காந்தி கொலைக்கு பலிவாங்கும் விதமாக சோனியா காந்தியின் உத்தரவின் பேரிலேயே இந்திய அரசு இலங்கை அரசின் துணை இராணூவம் போலவும், இந்திய நாட்டு பிரச்சனை போலவும் முனைப்புடன் செயல்பட்டதாக பல்வேறு தரப்பும் சொல்லப்படுவதில் உண்மை இல்லாமல் இருக்கவில்லை.

அமைதிப் படைகள் என்ற பெயரில் நடந்த கொடுமைகளைக் கண்டு புறப்பட்ட சிவராசனும், தனுவும் இந்தியாவில் ஊடுறுவி வெற்றிகரமாக ஒரு படுகொலை நடத்தி இருப்பதைப் பார்க்கும் போது, ஈழத்தமிழர்களின் பெரும்பான்மையினரின் கனவான தமிழ் ஈழக் கனவையும், 30 ஆயிரம் பொதுமக்களை அழித்த பிறகு, மீண்டும் வரலாறு திரும்பும் விதமாக எத்தனை சிவராசன்கள், தனுக்கள் வரப்போகிறார்களோ ?

பொம்மை அரசை ஏற்படுத்தி சதாமை தூக்கிலிட்டு ஈராக்கில் அமைதி திரும்புவதாக கூறிய அமெரிக்க இராணுவம் 2 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கேயே தான் இருக்கிறது, இருக்கும் நிலையிலும் ஈராக்கில் தற்கொலை தாக்குதல் நடக்காத நாளே இல்லை, அமெரிக்க இராணுவம் வெளி ஏறிவிட்டது என்று அறிந்தாலே மீண்டும் ஈராக்கில் இனக்கலவரம் பெரிதாகவே வெடிக்கும். எந்த ஒரு மூன்றாவது நாடும் தலையிட்டு ஒரு நாட்டிற்குள் அமைதியை ஏற்படுத்திவிடவே முடியாது, வரலாற்றில் இருந்து இந்தியாவும், எந்த நாடுகளும் பாடம் படிக்கவில்லை. விடுதலைப் புலிகளை அழிப்பதை வரவேற்கும் விதமாக இலங்கை அரசுக்கு ஆதரவாக கொண்ட இந்தியா, பின்னர் இலங்கைக்குள் தற்கொலை படை தாக்குதல் நடவாமல் இருக்க கொழும்பில் வாழும் அப்பாவி சிங்களன் உட்பட ஏனைய பொதுமக்களுக்கு எந்த விதமான பாதுகாப்பை கொடுக்கும் ?

பழிக்கு பழி என்று பாதிகப்பட்டவர்களின் உறவினர்களாக தன்னிச்சை குழுக்கள் தோன்றி இந்திய அரசியல்வாதிகளை குறிவைத்தால் இந்தியாவல் என்னேரமும் விழிப்பாக இருக்க முடியுமா ?

இலங்கைப் போரில் இந்திய தலையீடு கொள்ளிக்கட்டையை தலையில் சொறிந்து கொண்டதாகவே தெரிகிறது.

20 மே, 2009

ஒரு பிடி சாம்பல் கூட எதிரிகளின் கையில் கிடைக்க கூடாது !

ஈழத்தில் போர் தொடங்கிய பிறகு நக்கீரன் இதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில்,

"இவர்களே (இலங்கை அரசு) ஊடகங்களில் என்னைப் பற்றி ஊதிப் பெரிதாக்கி வைத்துவிட்டார்கள், அவர்கள் பயப்படும் அளவுக்கு நான் மிகப் பெரிய ஆளே அல்ல, நான் இளம் வயதில் மிகச் சாதாணமானவனாகத்தான் இருந்தேன், அப்போது கொழும்பில் இனவெறியில் என் கண் முன்னே பல தமிழர்கள் கொல்லப்பட்ட போது அதற்கு எதிராக கொதித்து கிளம்பினேன். தற்போதைய சூழலில், ஒருவேளை நான் எதிரியின் கைகளில் சிக்கும் நிலை ஏற்பட்டால் என்னால் முடிந்த அளவுக்கு அவர்களை அழித்துவிட்டு அதன் பிறகு நானும் அழிந்துவிடுவேன். எரிக்கப்பட்ட என் உடலின் ஒரு பிடி சாம்பல் கூட எதிரிகளின் கைகளில் கிடைத்துவிடக் கூடாது என்பதில் இயக்கத்தினரும் உறுதியாகவே உள்ளனர்"

என்று பிரபாகரன் பேட்டி அளித்திருந்தார். அதைப் படித்த பிறகு பிரபாகரன் உயிருக்கு ஆபத்து சூழ்ந்திருக்கிறது என்று தொல்.திருமாவளவன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார்.

******

இவ்வளவு தூரம் தன் முடிவும், அதைத் தொடர்ந்து நடக்கவேண்டியவைப் பற்றி இயக்கத்தினரிடம் விழிப்புணர்வு வைத்திருந்தவரை 'ஆம்புலன்சில் தப்பிக்கும் போது சுட்டதாக' இலங்கை இராணுவத்தகவல்கள் படம் போட்டு காட்டுகிறது. அந்தப்படத்தில்

* யுத்த களத்தில் பளபளவென சேவ் செய்யப்பட்ட முகம்

* கிட்டதட்ட 50 வயதுக்கும் மேலாகும் அவருக்கு நரையில்லா கருகரு மீசை, (ஷேவ் செய்யவே நேரமிருக்குமா என்று ஊகிப்பதே தலைவலியாக இருக்கும் போது, மீசைக்கு பொறுமையாக டை அடித்திருக்க முடியுமா ?

* தொலைகாட்சி வழியாக அண்மையில் 2008ல் மாவிரர் நாள் உரையில் பேசியபோது இருந்ததைவிட 20 வயது இளமையான தோற்றம்

இவை எல்லாம் எப்படி சாத்தியமா ? மொத்தமாக தலை, முகம், நிறம் ஆகியவற்றை மாற்றி புஷ் வேடம் போட்டு தோற்றத்தை மாற்றிக் காட்டிய தசவாதாரம் படத்தின் நடிகர் கமலைக் கேட்டால் எதாவது க்ளூ கொடுப்பார் என்றே நினைக்கிறேன்.

பிரபாகரன் போல் தோற்றம் இருப்பதால் அந்த படத்தில் இருபவருக்கும் கண்ணீர் அஞ்சலி !

மாவீரனுக்கு மரணமில்லை !

19 மே, 2009

பிரபாகரன் கொல்லப்பட்டதாக பொய் பரப்பபடுவது ஏன் ?

நேற்று தேசியத்தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக வெளியான செய்தி கேட்டு தமிழ் உணர்வாளர்களும், ஈழ ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்தது உண்மைதான். இந்திய ஊடகங்கள் குறிப்பாக தமிழில் சன் செய்தி முதற்கொண்டு 'பிரபாகரன் போரில் மரணமடைந்ததாக தகவல் வெளியிட்டது' இருப்பினும் இந்த செய்தியின் நம்பகத்தன்மை குறித்து யாதொரு படத்தொகுப்பும் வெளி இடப்படவில்லை. அனைத்து ஊடகங்களுமே இலங்கை இராணுவ செய்தியை மேற்கோள்காட்டியும், அவர்கள் அளித்த தகவலை வைத்தும் செய்தி வெளி இட்டார்கள்.

போர் என்றால் பிரபாகரன் ஒரு ஏகே 47 வைத்துக் கொண்டு சிங்கள இராணுவத்திற்கு எதிராக போராடியாதைப் போல் நினைத்துக் கொண்டு இருக்கிறோம், அப்படி பார்த்தால் இராஜபக்சேவும், பொன்சேகாவும் ஆளுக்கொரு துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டு போர்களத்தில் இருக்க வேண்டும் அல்லவா. பிரபாகரன ஈழ போராட்டத்தின் தலைவர், போர் உத்திகளை, போர் முறைகளை வகுத்து அதனை வழிநடத்த பயிற்சி கொடுத்துக் கொண்டு நிலமைகளை அனுக்கமாக கவனித்து வரும் தகவல்களை சேகரித்து போர் உத்திகளை மாற்றுவதற்கு பாதுகாப்பான ஒர் இடத்தில் இருந்து கொண்டு அதனை செய்து கொண்டிருப்பார். இவைதான் அனைத்து போராட்டக் குழுவிலும் நடைமுறை.

முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் சாலைகள் இருக்கிறதா என்பதே ஐயம் தான். பிரபாகரன் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட செய்திகளில் வீரப்பனை சுடப்பட்டது போல் ஆம்புலன்சில் தப்பிச்செல்ல இருந்த போது சுட்டதாகச் சொல்லுவது பூச் சுற்றப்பட்ட செய்தியாகத்தான் தெரிகிறது. போர் நடக்கும் இந்த 6 மாதத்திற்கும் மேலான காலங்களில் போர்களத்தில் பிரபாகரன் இருப்பது போல் விடுதலை புலிகளும் எந்த படத்தையும் வெளி இடவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொண்டால், பிரபாகரன் பற்றிய செய்திகள், திரிக்கப்பட்ட அல்லது உள்நோக்கம் கொண்ட தகவலாகவே தெரிகிறது.

இப்படி செய்வதால் என்ன லாபம் ? பொய்யான கொண்டாட்டத்திற்கு சிங்களர்களை தூண்டி பிறகு உண்மை வெளியே தெரிந்தால் அவமானமாக இருக்காதா ? அது சிறிய அவமானம் தான். ஏனெனில் விடுதலை புலிகளைக் கொல்வதாகச் சாக்கிட்டு ஒட்டுமொத்தமாக 30 ஆயிரம் அப்பாவி பொதுமக்களை மூன்று நாட்களுக்குள் அழித்ததாக தகவல் கசிவதால் ஐநா அந்த இடங்களை பார்வை இட வேண்டும் என்று இலங்கை அரசை நெருக்குவதால், 'இது இறுதி தாக்குதல், பிரபாகரனை அழிக்க எடுத்த நடவடிக்கை' என்று சொல்லிவிட்டால் போர் குற்றத்தில் இருந்து தப்பிவிடலாம் என்று சிங்கள அரசு கணக்கிட்டு பொய் பரப்புவதாக பல்வேறு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின்றன.

அதுமட்டுமல்ல இன்னும் போரைத் தொடர பல்வேறு சிங்களர்களுக்கு ஒப்புதல் இருப்பது போல் தெரியவில்லை. இருபக்கமும் பெரிய உயிரழப்பு ஏற்பட்டுள்ளதால், அமெரிக்க முதற்கொண்டு பள்வேறு நாடுகள் சுட்டிக் காட்டும் உள்நாட்டு போர் ஏற்படும் அச்சம் இருப்பதால், போர் முடிந்துவிட்டதாகவும், பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும் இனிப்பான செய்தியாக அதை வெளி இடுவதன் மூலம் கலகங்களை தவிர்த்துவிட சிங்கள அரசு நினைத்திருக்கக் கூடும். இதில் இருபக்கமும் புரிந்துணர்வு, பொதுமக்கள் இழப்பையும், கலகங்களையும் கணக்கிட்டு சமரசம் ஏற்பட்டு இருப்பதால் தானோ என்னவோ விடுதலைப் புலிகளும் துப்பாக்கிக்கு ஓய்வு கொடுத்துவிட்டதாக தன்னிச்சையாக அறிவித்திருப்பதாக ஊகிக்க முடிகிறது.

இராஜபக்சே மண்ணை முத்தமிட்டாரா ? கவ்வினாரா ? உண்மைகள் ஒரிரு நாளில் வெளியாகலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.

இதற்கிடையே வருகிற 22 ஆம் தேதி ஐநாவின் கண்காணிப்புக் குழு போர் பகுதிக்குள் சென்று பார்வை இட இருக்கிறது.




இந்த வேளையில் சிலர் கருத்து என்ற பேரில் 'இவ்வளவு பேர் இழப்பிற்குப் பிறகு விடுதலைப் புலிகள் ஆயுதத்தைக் கீழே போடுவதை முன்கூட்டியே செய்திருந்தால் இழப்பை தவிர்த்திருக்கலாமே... ஏன் செய்யவில்லை' என்பது போல் வழக்கமாக விடுதலைப் புலிகள் மீது இருக்கும் வெறுப்பை கருத்தாக வெளியிட்டு ஈழ ஆதரவாளர்களை ஆமாம் சாமி போட வைக்க முடியுமா என்றெல்லாம் முயலுகிறார்கள். இவர்களைப் போல் ஆசாமிகள் நாட்டின் இராணுவத் தலைமையில் இருந்தால் எதிரி நாடு போர் தொடுக்கும் வருவதாக செய்தி வந்தாலே 'பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் ' என்று சாக்கு கூறி வடிவேலு புலிகேசி பாணியில் மக்களை எதிரிநாட்டு இராணுவத்திற்கு விருந்து வைத்துவிட்டு நாட்டை விட்டு ஓடிவிடுவார்கள் போலும்.

18 மே, 2009

உறுதிப்படாத தகவல் என்பதால் இடுகை நீக்கப்பட்டது !



உறுதிப்படாத தகவல் என்பதால் இடுகை நீக்கப்பட்டது !

28 ஏப்ரல், 2009

கலைமாமணி விருதை வீசினார் கவிஞர் இன்குலாப் !

ஈழ விவாகரத்தில் ஈழத் தமிழர்கள் பற்றிய கருத்தில் இஸ்லாமியர்களில் சிலர், விடுதலைப் புலிகளுக்கும் - இலங்கை இஸ்லாமியர்களுக்கும் இருந்த கருத்து வேறுபாடுகளைக் குறிப்பிட்டு, விடுதலைப் புலிகளால், இலங்கை இஸ்லாமியர்கள் இடம் பெயர நேரிட்டதாகவும், இன்னல்கள் அடைந்ததாகவும் சொல்லி காங்கிரஸ் நிலைப்பாட்டுடன் இருந்தனர், அதாவது ஈழத்தமிழ்ர்கள் மீது இரக்கப்படுகிறோம், விடுதலைப் புலிகள் அழிவதைப் பற்றி கவலை இல்லை என்பதாக கருத்து தெரிவித்திருந்தனர்.

இஸ்லாமியர்களான இயக்குனர் அமீர் போன்றவர்கள் மிகவும் உரக்க குரல் கொடுத்து சிறை வரை சென்றனர். மேலும் ஒரு இஸ்லாமியர், கவிஞர் திரு இன்குலாப் தனக்குக் கொடுக்கப்பட்ட கலைமாமணி விருதை ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு ஆதரவான காங்கிரசையும் கூட்டணியில் இருந்து கொண்டே அதை தடுக்கும்படி வலியுறுத்தாமல் இருந்த திமுகவிற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் திருப்பி அனுப்பி இருக்கிறார்.

தமிழருவி மணியன் போன்ற தமிழுணர்வு மிக்கவர்கள் கட்சிக்காரன் என்கிற அடையாளத்தை விட எப்போதும் நிலையான தமிழன் / தமிழின உணர்வே மேலானது, உண்மையானது, உணர்வு பூர்வமானது என்று வெளிக்காட்டி தமிழின உணர்வாளர்களால் போற்றப்படுகிறார்கள்.

அந்த வரிசையில் கவிஞர் இன்குலாப் ஐயாவின் செயலும் மிகவும் போற்றத் தக்கது.

***
இனப் படுகொலை: கலைமாமணியை திருப்பி அனுப்பினார் இன்குலாப்!

சென்னை: ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து அது தனக்கு அளித்த கலைமாமணி விருதை கவிஞர் இன்குலாப் திருப்பி அனுப்பி விட்டார்.

கடந்த 2006ம் ஆண்டு இன்குலாப்புக்கு கலைமாமணி விருது அளிக்கப்பட்டது.

இந்த விருதை தற்போது தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி விட்டார் இன்குலாப். இதுகுறித்து அவர் அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

எனக்கு அளிக்கப்பட்ட 'கலைமாமணி' விருதைப் பின்வரும் காரணங்களால் திருப்பி அனுப்புகின்றேன்.

தமிழீழத்தில் நடைபெறும் தமிழினப் படுகொலைக்கு எதிரான தமிழக மக்களின் போராட்டத்தில் முத்துக்குமார் உள்ளிட்ட இளைஞர்கள் உயிர்த்தியாகம் செய்வது தொடர்கிறது. உண்மையான மக்கள் அரசு இங்கு இருக்குமேயானால், இவற்றால் துணுக்குற்றுத் தமிழினத்துக்கு நியாயம் செய்திருக்கும்.

ஆனால் தமிழின ஒழிப்பை முன்னின்று நடத்தும் சிங்களப் பேரினவாத அரசுக்கு, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இன்றும் வஞ்சகமாக உதவிக் கொண்டிருக்கின்றது.

வன்முறையில் நம்பிக்கை அற்றதாகப் பீற்றிக்கொள்ளும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள், தமிழக இளைஞர்கள் மேற்கொண்ட உயிர்த்தியாக அகிம்சைப் போராட்டத்தைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை.

அகிம்சைப் போராட்டங்களைப் பொருட்படுத்தாத வல்லாதிக்க மரபு காங்கிரசுடையது. தமிழ் நாடு என்ற பெயர் சூட்டக் கோரிய தியாகி சங்கரலிங்கனார் உண்ணாநோன்பிருந்து உயிர்துறந்தது காங்கிரஸ் ஆட்சியின் போதுதான்.

1965 இல், இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக உணர்வுகொண்ட தமிழர்கள் தீக்குளித்து உயிர்துறந்தபோதும், துப்பாக்கிச் சூடு நடத்தி இரத்தவெறி தீர்த்துக் கொண்டது காங்கிரஸ் ஆட்சிதான்.

இந்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி திலீபன் யாழ். மண்ணில் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த போதும் பொருட்படுத்தாது, ஈழத் தமிழர்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்ததும், தமிழ்ப் பெண்களை வல்லாங்கு செய்து கொடுமைப்படுத்தியதும் இதே காங்கிரஸ் ஆட்சிதான்.

இன்று இலங்கையில் போர் நிறுத்தம் கோரித் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் காலவரம்பற்ற உண்ணாநோன்பை மேற்கொண்டிருக்கிறார். அவர் எல்லா நலத்துடனும் நீடுழி வாழவேண்டும்.

தமிழகச் சட்டமன்றமும் தமிழக மக்களும் ஒருமித்து நடத்திய அனைத்து அறப் போராட்டங்களையும் கண்டு கொள்ளாது, சிங்களப் பேரினவாத அரசுக்குப் படை, கருவி, நிதி முதலியவற்றை வழங்கியது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுதான்.

இது குறித்துத் தமிழக அரசு மேற்கொண்ட செயல்பாடுகள் அனைத்தும், நடுவணரசின் தமிழின விரோத நடவடிக்கைகளுக்கு உதவுவதாகவே முடிந்தன.

இந்திய அரசே தமிழகத்தில் நிகழ்ந்த உயிர்த் தியாகங்களைப் பொருட்படுத்தாத போது, ராஜபக்சே அளவிலான சிங்கள பாசிச அரசு, கலைஞரின் உண்ணாநோன்புப் போராட்டத்தை ஏற்று நியாயம் வழங்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

கலைஞர் அவர்களின் இந்தப் போராட்டத்தின் பயனாக, முன்பு கலைஞர் அவர்களே முன்வைத்த இலங்கை அரசுடனான அரசியல் (ராஜீய) உறவைத் துண்டிக்கவேண்டும் என்ற கோரிக்கையையாவது இந்திய அரசு நிறைவேற்றுமா?

கலைஞர் அவர்களின் இந்தப் போராட்டம் தமிழகத்தில் மூண்டெரியும் சிங்களப் பேரினவாத எதிர்ப்பையும், இந்திய அரசின் துரோகத்துக்கு எதிரான தமிழ் உரிமை உணர்வையும் மடை மாற்றத் தான் பயன்படும்.

இன்று கலைஞர் செய்ய வேண்டியது தேர்தலைப் பற்றிக் கவலைப்படாது காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறுவது தான்.

மனிதன், தமிழன், படைப்பாளி என்றவகையில் இந்தக் கொடுமைகளுக்கு எதிராகச் செயற்பட வேண்டிய கடமை எனக்கும் இருக்கிறது.

இந்த வகையில் 2006 ஆம் ஆண்டு, தமிழக அரசின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் வழங்கப்பட்ட 'கலைமாமணி' விருது, எனக்குக் கௌரவமாக அல்லாமல் முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கிறது. இதைத் தமிழக அரசிடமே திருப்பித் தருவதுதான் எனது மனித கௌரவத்தைத் தக்க வைத்துக் கொள்வதாக அமையும்.

தமிழக இளைஞர்கள் நிகழ்த்திய உயிர்த்தியாகங்களுடன் ஒப்பிடும்போது இது நிரம்பச் சாதாரணமானது.

அதனால் இம்மடலுடன் எனக்கு அளிக்கப்பட்ட 'கலைமாமணி' விருதுக்கான தங்கப்பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றைத் தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றச் செயலாளர் அவர்களுக்குப் திருப்பி அனுப்புகிறேன் என்று கூறியுள்ளார் இன்குலாப்.

தகவல் : நன்றி தட்ஸ்தமிழ்

26 ஏப்ரல், 2009

கருணாநிதியின் கையாலாகத்தனத்திற்கு வைகோவும் காரணம் !

கலைஞர், தமிழின தலைவர் என்று சொல்வதற்கு கூசுவதால் கருணாநிதியென்றே சொல்கிறேன். நான் கட்சித்தொண்டோனோ திமுக அனுதாபியோ கிடையாது, திராவிட சித்தாந்தங்களின் மீது இருந்த ஈர்ப்பால் அண்ணாவழி வந்த இயக்கம் என்பதாலும் திமுகவின் மூத்த தலைவர், தமிழ் பற்றாளர் என்பதால் பலரைப் போல் 'கலைஞர்' என்றே நானும் எழுதி வந்தேன். இப்போதைய சூழலில் அந்த பெயரெல்லாம் கட்சித்தொண்டர்கள் கட்டாயத்தின் பேரில் அழைக்கிறார்கள் என்பதைத் தவிர ஒரு தமிழன் என்ற முறையில் அவர்களும் அப்படி அழைப்பார்களா என்பதே ஐயம்தான்.

***

சென்ற சட்டமன்ற தேர்தலில் ஒரே ஒரு இடம் மிகுதியாக வைகோ கேட்க, கருணாநிதி முடியாது என்று சொல்ல, சிறையில் தின்ற களி செறிப்பதற்குள் அம்மாவிற்கு கொடுத்த பூச்செண்டில் தனது தன்மானத்தையும் சேர்த்தே முடிந்து கொடுத்தார் வைகோ. அதற்கு வைகோ கூறிய காரணங்கள் ஆயிரம் என்றாலும், பலரும் முகம் சுளித்தனர். ஈழவிடுதலையை ஆதரித்தவர் என்பதை சாக்காக வைத்து எதிர்தரப்பில் இருந்த ஒருவரை வெறும் அரசியல் பழிவாங்களால் அவரை பொடா சட்டத்தில் தூக்கி உள்ளே போட்டார் ஜெ. மற்றபடி பொடோவை பயன்படுத்தி வைகோவை உள்ளே போட ஈழவிடுதலையை ஆதரித்தார் என்று சொல்லியது அதை ஒரு சட்ட பூர்வ நடவெடிக்கையாக காட்ட மட்டுமே. அந்த வழக்கில் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராக எதுவுமே இல்லை என்பதால் வைகோ வெளியே வரமுடிந்தது. வைகோ மட்டுமல்ல நக்கீரன் கோபால் போன்றவர்கள் மீதும் பொடா பாய்ச்சப்பட்டு சிறை செல்ல நேர்ந்ததை ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஜெ வின் இந்திய இறையாண்மை காப்பில் இருந்த அக்கரையின் தன்மையை அரசியல் அறிவே இல்லாதவர்கள் கூட அதை பழிவாங்கும் நடவெடிக்கை என்றே விமர்சித்தார்கள், அதையே திமுக அரசும் இன்று சீமான் போன்றவர்களிடம் தோற்றுப் போகும் வழக்கு என்று தெரிந்தே செய்துவருவதையும் கவனிக்க வேண்டும். இவை வைகோவிற்குத் தெரியாதா ?

தன்னை அரசியல் ரீதியாக பழிவாங்கி வாழ்வில் ஓர் ஆண்டுகளுக்கும் மேலான நாட்களை சிறையில் கழிக்க வேண்டி இருந்ததை, உணர்ச்சி உள்ள ஒருவன் வாழ்நாள் முழுவதுமே இதனை மறக்கமாட்டான். ஆனால் ஜெவுக்கு பூச்செண்டு கொடுக்க முனைந்த அந்த நொடியே வைகோ உணர்ச்சியற்றவராக மாறிவிட்டார். தன்னைப் பலரும் தூற்றுவார்கள், இனி எப்படி பொதுமக்கள் முகத்தில் விழிப்பேன் என்ற உணர்வு / வெட்கம் சிறிதும் இல்லாமல், திருடி மாட்டிக் கொண்டவன் விழிப்பதைப் போன்ற பூச்செண்டு கொடுத்துக் கொண்டு விழித்தார். புலியாக சீறிக் கொண்டு இருந்தவர் தான் வெறும் பூனை என்பதாக தனக்கு தானே அடையாளப்படுத்திக் கொண்டு, அதுவரை கட்டிக் காத்த இயக்கத்தையும், தொண்டர்களையும் தன்னை மிதித்தவர் கால்களில் வைத்தார், அதன் தொடக்கமே தமிழர்களுக்கான கெட்டகாலம் தொடங்கிவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

வைகோ அல்லது கருணாநிதி பிடிவாதத்தை விட்டுவிட்டு சென்ற சட்டமன்ற தேர்தலில் இணைந்திருந்தால் திமுக போட்டியிட்ட அணைத்து தொகுதிகளிலும் வென்று தனிப்பெரும்பாண்மையுடன் ஆட்சியைப் பிடித்து இருக்கும், ஆனால் அது நடக்காமல் போக வைகோவின் வாக்குகள் அதிமுக கூட்டணிக்குச் செல்ல, பல இடங்களில் திமுக மண்ணை கவ்வியதற்கு அதுவே காரணம், திமுகவிற்கு பெரும்பாண்மை இடம் கிடைக்காமல் போகவே காங்கிரசின் தயவிலும், பாமக தயவிலும் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டது. பாமக உறுப்பினர்கள் சொற்ப அளவே, ஆனால் காங்கிரசின் துணை இன்றி திமுக அரசை அமைக்க முடியாத நிலையும், அமைத்த அரசை தொடர முடியாத நிலையும் அன்றிலிருந்தே தொடர்ந்து வருகிறது. காங்கிரசின் ஆதரவே திமுக அரசின் கடிவாளமாகிப் போனதால் காங்கிரசை மீறி ஈழத்தமிழர்களுக்காக எந்த வித அழுத்ததையும் கொடுக்க முடியாத நிலைக்கு திமுக சென்றுவிட்டது. இல்லை என்றால் பெருசாக புடிங்கி இருக்குமா என்றெல்லாம் கேட்காதிங்க.

தனிபலம் இருந்திருந்தால் சட்டசபை கவிழும் மோசமான நிலை இருந்திருக்காது. மத்திய அமைச்சர்களை திரும்பப் பெற்று இருப்பார்கள், ஏனென்றால் தமிழர்கள் நலனில் தொடர்ந்து பாடுபடுகிறோம் என்று காட்டவதற்காகக் கூட அவ்வாறு செய்து 'தமிழின தலைவர்' பதவியை தொடர்ந்து காப்பாற்ற முயன்றிருப்பார்கள், ஆனால் இன்றைய சூழலில் அந்த பதவியை காக்க முயன்றால் முதலமைச்சர் பதவி பறிபோய்விடும். மேலும் ஸ்பெக்டரம் ரகசியங்கள் சோனியாவுக்கு தெரிந்திருக்கலாம், அதன் மிரட்டலில் வேறுவழியின்றி காங்கிரசு நிலைப்பாட்டையே அவர்களும் தொடர்வதுடன், நாங்களும் போராடுகிறோம் என்று காட்ட மனித சங்கிலி, வேலை நிறுத்தம் போன்ற நாடகங்களை நடத்திக் கொண்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.வேலை நிறுத்த போராட்டம் என்பது அரசுக்கு எதிராக பொதுமக்களோ, எதிர்கட்சிகளோ நடத்துவதே வழக்கம். மக்களால் அரசு அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கட்சி, மக்கள் இயல்பு வாழ்க்கை நலிவடையும் வேலை நிறுத்தங்களை நடத்துவதும் அது வெற்றிகரமாக நடந்ததாக பீற்றிக் கொள்வதும் மக்களாட்சியின் கேலிக் கூத்துகள்.

இன்றைய சூழலில் திமுக அரசு தற்காப்பு தன் நலநோக்கில் செயல்படுவது மறைமுகமாக அன்றைய நாளில் வைகோ எடுத்த தவறான முடிவினால் தான். ஒண்ணால நான் கெட்டேன், என்னால நீ கெட்டாய். நம்மால் ஈழத்தமிழர்கள் நம்பிக் கெட்டார்கள் என்பது இருவருக்குமே தெரியும்.

***

கேடுகெட்ட அரசியல் வியாதிகள். இனி வருங்காலத்தில் கொள்கைகளில் தெளிவும், நடத்தையில் தூய்மையும், வாக்கில் நேர்மையும் உள்ள அரசியல்வாதிகள் எவரையுமே பார்க்க முடியாது, ஏனென்றால் அரசியல் கட்சிகள் அனைத்துமே வாரிசு அரசியல் நிறுவனங்கள் ஆகிப் போய்விட்டன, அதன் நோக்கு மக்கள் நலன் அல்ல. முடிந்தவரையும் அதன் மூலம் பதவி சுகங்களை அனுபவித்து, பணக் குவியல் திரட்டுவது தான் நோக்கமே. தமிழ், தமிழர், கொள்கை போன்ற இனிய சொற்களை அரசியல் வாதிகள் பேசும் போது அவற்றைக் கண்டு கொள்ளாமல், உணர்ச்சி வசப்படாமல் சொற்பொழிவாகக் கேட்டுக் கொண்டு தன்னுடைய முடிவில் தெளிவாக இருக்க வேண்டும் என்பதை அரசியல் வாதிகளின் செயல்களில் இருந்து மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

21 ஏப்ரல், 2009

11 ஆவது நாள் ஆனதும்...

இலங்கை இனப்படுகொலைக்கு எதிராக முத்துக்குமார் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்தில் பெண்கள் தொடர்ந்து எட்டாவது நாளாக உண்ணாவிரதம் இருப்பது அனைவரும் அறிந்ததே. உண்ணாவிரத பெண்களுடம் அமர்ந்து கனிமொழி கண்ணீர் வடித்தாராம். தன் தந்தை தமிழர்களுக்காக வாழ்நாளை அற்பணித்து யோகியாகி அமர்ந்திருக்கிறார் என்று அந்த பெண்களிடம் தெரிவித்தாராம். அங்கே அந்த பெண்களைப் பார்த்து பேச வந்த காங்கிரசு சுதர்சனம் நாட்சியப்பன், இன்னும் மூன்று நாட்களுக்குள் உண்ணாவிரதம் பற்றி சோனியாவிடம் எடுத்து சொல்லப் போவதாக தெரிவித்தாராம். அன்னை சோனியா தற்பொழுது பிரச்சார பயணத்தில் இருப்பதால் அவரை தொடர்ப்பு கொள்வது கடினமாம். 8 நாள் தொடரும் உண்ணாவிரதம் 11 நாள் வரையில் சோனியாவிடம் எடுத்துரைப்பதற்காக நீடிக்கப்படுமா ? இல்லை அவர்களுக்கு பால் ஊற்றியதும் தான் சோனியாவின் காதுக்கு பெண்கள் இப்படி உண்ணாவிரதம் இருக்கும் செய்தி போய் சேருமா என்பது தெரியவில்லை :(

உண்ணாவிரதம் இருக்கும் பெண்கள் இதை உடனடியாக கைவிடாவிட்டால் அவர்கள் நிலமை மோசமாகி எதுவேண்டுமானாலும் நடக்கலாம். இன்னும் கூட திமுக - காங்கிரஸ் கூட்டணி ஈழப் பிரச்சனை தேர்தலை எந்த விதத்திலும் பாதிக்காது என்று கூறிவருவது கவனிக்கத் தக்கது. இராமேஷ்வர மீனவன் குண்டடிப்பட்டு மாள்வதையே கண்டு கொள்ளாதவர்கள் ஈழத்தமிழர்களுக்காக மனம் இறங்குவார்கள் என்று நினைப்பது வீண் என்றே சமூக நோக்காளர்கள் கருதுகிறார்கள்

கல்மனதுக்காரர்கள் கரைவார்கள் என்று நினைத்து இதில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் உடனடியாக உண்ணாவிரத்தை முடித்துக் கொள்ளவது நல்லது. இல்லை என்றால் நானும் அந்த உண்ணாவிரத பந்தலில் 'கடைசி' வரையில் உட்கார்ந்திருந்தேன் என்று கூறி அங்கு வந்தவர்கள் போஸ்டர் அடித்து ஒட்டி அதைத் தேர்தலுக்கு பயன்படுத்தி வாக்குக் கேட்கவும் முயல்வார்கள்.

17 மார்ச், 2009

கம்பவாருதி திரு இ.ஜெயராஜ் !

செவிக்குள் விழும் தேனினிய தமிழோசை என்றால் நல்ல இலக்கிய சுவையுடன் கூடிய சொற்பொழிவே அது. பேச்சாற்றல் என்ற வகையில் வரும் சொற்பொழிவு நிகழ்த்துவது அவ்வளவு எளிதன்று. அதைக் கேட்கக் கூடியிருப்போரில் கற்றொரும் கல்லாதவரும் உண்டு, கற்றோர் எள்ளி நகைக்கா வண்ணமும், கல்லாதவர்க்கு திகட்டா வண்ணமும் சுவையார்வமாக பேசுவதென்பது மிகக் கடினம், அப்படி இருதரப்பையும் கவரும் வண்ணம் பேசுபவரே நல்ல சொற்பொழிவார். ஒரு எழுத்தாள்ர் எழுதி முடித்தவுடன் பலருக்கு அளிக்கும் முன்பு படித்துவிட்டு திருத்தலாம், ஆனால் சபைப் பேச்சென்பது அப்படியல்ல, சபையின் நடுநாயகர் பேசப் பேச செவிகளை அடைந்து கொண்டிருக்கும், சிறு(தகவல்) பிழை என்றாலும் கேட்பவர் முகம் சுளிப்பர். அப்படி எந்த தவறும் நேராவண்ணம் தொடர்ந்து பேசுவதென்பது மிகப் பெரிய கலை. அது சிலருக்கு மட்டுமே வாய்க்கும், சிறுவயது முதலே சரியான பயிற்சி மேற்கொண்டோர்க்கு அந்த கலை இயல்பாக அமைந்துவிடும். மற்ற மேடைப் பேச்சுக்கும், இலக்கிய சொற்பொழிவுக்கும் உள்ள பெரும் வேறுபாடே பேச்சின் தன்மைதான்.

மற்ற மேடைப் பேச்சுகளில் மக்களின் வாழ்வியல் நெறிபற்றி யாதொரு கவலையுமின்றி எடுத்துக் கொண்ட பொருளை சிறப்பாக பேசுவதாக அமையும், ஆனால் சொற்பொழிவுகள் மக்களின் உணர்வு, வாழ்வியல் நெறிகள் இதுபற்றி கருத்தில் கொண்டு அதற்கு மெருகூட்டும் வண்ணம், எடுத்துகாட்டுகளுடன் அமைத்துக் கொண்டும், நகைச்சுவயுடனும் அப்படி பேசுவது செயற்கையின்றி இயற்கையாகவும் அமைய வேண்டும், அப்படிப் பட்ட இலக்கிய சொற்பொழிவுகள் நிறைய பார்த்திருக்கிறேன். சாலமன் பாப்பையா, தென்கச்சி ஸ்வாமிநாதன் மற்றும் சுகிசிவம் ஆகியோர் தற்காலத்தில் சொற்பொழிவாற்றுவதில் சிறந்தவர்கள். இவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இலங்கையில் இருக்கும் ஒருவர் இதுபோன்று பேசுவார் என்பதை கம்பவாருதி இ.ஜெயராஜ் அவர்களின் பேச்சை கேட்கும் வரை சிந்தித்ததே இல்லை. ஏனெனில் இலங்கையின் கடந்த 20 ஆண்டுகால அரசியல் நிலையில் இலங்கையைப் பற்றி நினைக்கும் போது அங்கு தமிழ் இலக்கியம் பற்றியும், அதைப் பற்றிப் பேசும் சொற்பொழிவார்கள் இருப்பார்கள் என்று நினைப்பு சிந்தையில் கூட வந்திருக்கவில்லை.

நண்பரும் பதிவருமான முகவை மைந்தன் (இராம்) சிலோன் சாலை, சென்பக விநாயகர் கோவிலில் கம்பராமயணம் ஐந்து நாள் சொற்பொழிவு நடக்கிறது வருகிறீர்களா ? என்று கேட்டார். கம்பர்மீது இருக்கும் ஆர்வம் எனக்கு இராமன் மீது இல்லையாகையால் நான் உடனடியாக வருகிறேன் என்று சொல்லவில்லை. சென்ற ஞாயிறு பதிவர் சந்திப்பு முடிந்ததும் எல்லோரும் சென்ற பிறகு உடனடியாக வீட்டுக்கு கிளம்பும் எண்ணம் ஏற்படவில்லை, அதனால் கம்பராமயண சொற்பொழிவுக்கு நானும் வருகிறேன் என்று கூறி ஜெகதீசன் மற்றும் விஜய் ஆனந்துடன் இணைந்து இராமுடன் சென்பக விநாயகர் கோவிலுக்குச் சென்றேன். சென்றதும் தான் தெரியும் அந்த கோவில் இலங்கைத் தமிழர்களால் நடத்தப்படுகிறது என்கிற தகவல். 'இலங்கை தமிழ் சங்கம்' என்ற அறிவிப்பு பலகை வைத்திருந்தார்கள். நாமெல்லாம் ஈழம் ஈழம் என்று எழுதிவர இவர்கள் ஏன் இலங்கை தமிழர்கள் என்கிறார்கள், 'தமிழ் ஈழம்' என்று சொல்வது உறுதிப்படுத்தப்படாத ஒன்று என்றாலும் ஈழம் என்ற சொல் இலங்கையை குறிக்கும் தமிழ் சொல்தான்,

'ஈழத்தமிழர் சங்கம்' என்று அழகாக எழுதி இருக்கலாமே ஏன் 'இலங்கை தமிழர்கள் சங்கம்' என்று எழுதி இருக்கிறார்கள் என்கிற ஆதங்கம் வேறு இருந்தது. கோவிலுக்குச் சென்றபிறகு 'தற்போதைய போர் சூழலில் இந்த மக்களுக்கு கம்ப இராமயணம் கேட்பதற்கெல்லாம் மனது வருகிறதா, இதைக் காது கொடுத்து கேட்கும் இந்த நேரம் வன்னியில் எத்தனை உயிர் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதோ தெரியவில்லை, இந்த சொற்பொழிவுக்கு செல்ல மனம் ஒப்பவில்லை இராம்' என்று கூறித் தயங்கினேன். பிறகு சென்றேன். சொற்பொழிவு தமிழ்சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் முன்மொழிய தொடங்கிவிட்டது.
சொற்பொழிவைக் கேட்க கேட்க, 'மனம் சிந்திக்க வேண்டுமென்றால் இது போன்ற சொற்பொழிவுகளில் சிறிது நேரம் செலவிட்டால், சோகம் தற்காலிகமாக விடைபெறும், வெறுப்பு, சினம், சோகம் என்று கூறிக் கொண்டு சோறு உண்ணாமல் இருக்கிறோமா ? நமக்குள் உணர்வுகள் செத்துப் போகாமல புத்துணர்வு கொடுக்க இது போன்ற நிகழ்ச்சிகள் இந்த நேரத்தில் மிக மிகத் தேவை என்று புரிந்தது. அதனால் மேற்சொன்ன எனது எண்ணங்களை திருத்திக் கொண்டு, சொற்பொழிவின் சுவைக்குள் மூழ்கினேன்.

கம்பவாருதி இ.ஜெயராஜ் - இப்படி ஒரு சொற்பொழிவாளரா என்று விழிகளும் மனமும் விரிய விரிய வியக்க வைத்தார். தமிழக சொற்பொழிவாளருக்கும் இவருக்கும் இருக்கும் முதன்மையான வேறுபாடு, இவர் உரையாற்றும் போது கொஞ்சி விளையாடும் ஈழத்தமிழ். அந்த ஈழ மண்ணுக்கே உரிய மண்வாசனை பேச்சு. கிட்டதட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை வானொலியில் கேட்ட ஈழத்தமிழ் சுவையை கம்பவாருதி அவர்களின் பேச்சில் கேட்டது மயக்கியது என்று சொன்னால் அதில் மிகை ஒன்றும் இல்லை.
இதுவரை மூன்று நாட்கள் நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் வீதம் கேட்டு வருகிறேன். நாளை நிறைவு நாள். முதல் நாள் கேட்ட சொற்பொழிவு மறுநாளும் செல்ல வேண்டும் என்ற உணர்வை தூண்டியது. சொற்பொழிவார்கள் ஒவ்வொருவருக்குமே அந்த திறன் உண்டு, அப்படிப் பட்ட திறன் உள்ளவர்கள் மட்டுமே அந்த மேடைகளுக்கு வருகிறார்கள். கம்பவாருதி நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று செய்யுள்கள் மட்டுமே படிக்கிறார். ஆனால் அதனுடன் நிறைய இலக்கிய தகவல்களையும் வாழ்வியல் நெறிகளையும் அள்ளித்தருகிறார்.

நான் பார்த்ததில் மிகவும் தன்னடக்கமான ஒரு சொற்பொழிவாளர் என்றால் கம்பவாருதி ஐயாவைத்தான் சொல்ல வேண்டும். மேடையில் இருப்பதால் நான் உயர்ந்தோன் அல்ல, எனக்கு முன்பே கற்றோர்களும் அமர்ந்திருக்கிறார்கள் என்கிற நடுக்கம் எனக்கு எப்போதும் உண்டு, என்றார். இப்படி மேடையில் தன்னைப் பற்றிய உண்மைகளை வெளிப்டையாக சொல்பவர்கள் அரிதே. கம்ப இராமயணம் சொற்பொழிவு என்றாலும் அதை மட்டுமே பேசவில்லை, அதற்கு தொடர்புடைய திருக்குறள், பெரிய புராணம், சைவ திருமுறைகள் ஆகியவற்றில் இருக்கும் செய்யுள்களையெல்லாம் தேவையான இடத்தில் எடுத்து நகைச்சுவையுடன் சொன்னார். அரசு பதவியில் இருப்பவர்கள், ஆண்கள் பெண்கள் என அனைத்து தரப்பையும் பேச்சின் நடுவே நாகரீகமாக கிண்டல் அடித்து நகைச்சுவையாக பேசினார். எப்பொழுது நேரம் முடியும் என்று ஒருவரும் நேரம் பார்க்கவில்லை. இத்தனைக்கும் ஞாயிறு தவிர மற்ற நாட்களிலும் இரவு 9:30 வரை சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. நேரம் செல்கிறதே...முடிந்துவிடுமோ என்கிற கவலைதான் ஏற்பட்டது. நகைச்சுவையுடன், செய்யுள்களை ஏற்ற இறக்கத்துடன் நயம், ஓசை குன்றாமல் சொல்வதில் அவரது இலக்கியத் திறன் ! கேட்க கேட்க வியந்தேன்.



இதுபோன்ற சொற்பொழிவாளர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது நாம் வாழும் காலமும், தமிழ்ச் சூழலும் இன்னும் முழுமையாக கெட்டுப் போக இல்லை என்கிற மகிழ்ச்சியையும், மன நிறைவையும் கொடுக்கிறது. நீங்கள் வாழும் நாடு, ஊர் எதுவாக இருந்தாலும் எங்காவது கமபவாருதி இ ஜெயராஜ் அவர்களின் சொற்பொழிவு என்று எழுதி இருந்தால் உடனேயே தகவல்களை கேட்டு அவரது சொற்பொழிவை கேட்டுவாருங்கள். நான் பெற்ற இலக்கிய இன்பம் பெருவீர்கள்.






மேற்கண்ட பதிவை முதல் 27 பின்னூட்டங்களுடன் நகல் அச்சை கம்பவாருதி ஐயாவிடம் கொடுத்து உரையாடிய போது எடுத்தப் படம்.



ஜெகதீசன், விஜய் ஆனந்த் மற்றும் முகவை இராம் கம்பவாருதி ஐயாவிடம் உரையாடிய போது எடுத்தப் படம்.

5 மார்ச், 2009

ஜெ திடீர் உண்ணாவிரதம் ஏன் ?

தற்பொழுது ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு அலை தமிழகத்தில் வீசுகிறது. இலங்கைக்கு போர்தளவாடங்கள் வழங்கி ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் மீது தமிழக மக்கள் எரிச்சல் அடைந்திருக்கிறார்கள், தேர்த்தல் தேதி அறிவிக்கும் முன், முன் அறிவிப்பாக பிராணாப் முகர்ஜி விடுதலை புலிகளின் போர் நிறுத்த ஒத்துழைப்பை இலங்கை அரசு மதித்து போரை நிறுத்த வேண்டும் என்பதை செய்தியாளர்களின் கூட்டத்தில் பேசினார். இது இந்திய அரசு சார்பிலான அறிவிப்பு அல்ல, காங்கிரஸ் புள்ளியின் கருத்தாக மட்டுமே பார்த்த இலங்கை அரசு பிராணாப்பின் பேச்சை நிராகரித்தது.

தற்பொழுது காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடரப் போவதாக அறிவித்துள்ளதால், காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம் என்கிற கையெழுத்து இயக்கமும் விரைவாக செயல்படுவதால் அந்த வாக்குகளை அள்ளும் பொருட்டு ஜெ... 'இலங்கை' தமிழர்களை காக்க போர் நிறுத்தம் வேண்டும் என்றும், இலங்கை தமிழர்களைக் காக்க தவறியதாக காங்கிரஸ் - திமுக அரசுகளை கண்டித்தும் விரதம் இருக்கப் போவதாக அறிவித்து இருக்கிறார். இதே ஜெ ஒரு மாதத்திற்கு முன்பு 'போர் என்றால் அப்பாவிகள் பலியாவது இயற்கை' என்று திருவாய் மலர்ந்தவர் தான்.

எப்போதும் வெற்றிக் கூட்டணி பக்கமே இருக்க நினைக்கும் பாமக தலைமை, தமிழகத்தில் காங்கிரஸ் - திமுக விற்கு எதிரான அலையை புரிந்து கொண்டு கூட்டணி பற்றி முடிவெடுக்காமல் தயக்கம் காட்டி வருகிறது. ஈழத்தமிழர்களுக்க்கு ஆதரவாக அறிக்கை விட்டால் அதிமுக பக்கம் வருவதாக பாமக தரப்பு அதிமுக தரப்பிடம் தெரிவித்ததாகவும், கூட்டிக் கழித்துப் பார்த்துவிட்டு கூட்டணி பலம் தேவை என்பதால் ஜெ இந்த முடிவுக்கு வந்திருக்க வேண்டும் என்று தினமலர் பாணி அப்பாவிகளும், ஏழை எளியோரும் நினைக்கிறார்கள் :)

ஜெ வின் உண்ணாவிரத அறிவிப்பில் 'ஈழத்தமிழர்கள்' என்று எதுவும் குறிப்பிடப் படவில்லை, 'இலங்கை தமிழர்கள்' என்றே தெளிவாக குறிப்பிட்டு இருப்பதால் ஈழத்தமிழர்களின் தனிநாடு கோரிகையை ஜெ கண்டுகொள்ளவில்லை என்பதை அரசியல் நோக்கர்கள் (அவர்கள் எல்லாம் யாருன்னு கேட்காதிங்க) உறுதிப்படுத்துகிறார்கள்.

ஆக ஈழ ஆதரவு, காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுகளை குறிவைத்து அதிமுக - பாமக நெருங்கிவருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் மருத்துவர் ஐயாவிடம் இருந்து காட்டமான விமர்சனங்கள் திமுக மீது வீசப்படும், அதன் பிறகு மக்கள் நல அமைச்சர் சின்ன ஐயா பதவி விலகுவார். திமுக கூட்டணியில் இருந்து விலக மக்கள் நல அமைச்சர் மட்டும் பாமக தரப்பில் தயக்கம் காட்டி வருகிறாராம்.

பாமக கூட்டணியில் இருந்து விலகியதும் அந்த இடத்தை நிரப்ப காங்கிரஸ் தேமுதிகவிடம் பேச்சு நடத்துவதாக சொல்கிறார்கள்.

***

எது எப்படியோ, ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு பெருகுவது மகிழ்ச்சியளிக்கிறது, பிஜேபி ஈழத்தமிழர்களுக்காக பாரளுமன்றத்தில் பேசியதால் பிஜேபி தமிழ்நாட்டுக்கு ஆகாது என்று சொன்ன திமுக அனுதாபிகாள் பலரும் கூட பிஜேபி - திமுக கூட்டணி உருவாக வேண்டும் என்று ஈழ நலனை முன்னிறுத்தி கருத்து கூறி இருந்தனர். ஜெவின் திடீர் உண்ணாவிரதம் தேர்தலை முன்னிறுத்தியது என்று அறிந்தாலும் ஈழத்தமிழர்களை நசுக்கும் இலங்கை அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் என்பதால் வரவேற்கத் தக்கதே.

28 பிப்ரவரி, 2009

இறையாண்மை நாட்டாமை வெங்காயம் !

சீமான் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதால் இந்தியாவின் இறையாண்மை பாதிக்கப்பட்டுவிட்டதாம் நாட்டாமைகள் பஞ்சாயத்து செய்து சீமானை குண்டர் சட்டத்தில் அடைத்திருக்கிறார்கள்.

அடேங்கப்பா...ஒரு மாநிலத்திற்கான ஒக்கனேக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிராக கருநாடக அரசியல் ரவுடிகள் ரகளை செய்தபோதும், காவேரி ஆணையத்திற்கு எதிராக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மறுத்துவருவதற்கும், முல்லை பெரியார் அணை விவகாரத்தில் மலையாளிகள் பொய்யுரைகளை பரப்பிவருவதற்கும், 'தேசிய' இந்தியாவில் மும்பையில் சிவசேனை ரவுடி கும்பல் பிறமாநிலத்தினரின் உடமைகளைப் பறித்து துறத்தியதற்கும், இந்த ஆமைகள் இதுவரை எந்த கண்டனத்தையும் தெரிவித்ததே இல்லை. அதுமட்டுமா ?


கார்கில் போரில் 1000க் கணக்கான இராணுவ வீரர்களை இழந்ததையெல்லாம் மறந்து அவர்களின் சமாதி ஈரம்காயும் முன் அதற்கு காரணமாக முஷாரப்புக்கு சிவப்பு கம்பளவரவேற்பு கொடுத்து பள்ளிச் சிறார்களையும் அழைத்து நிகழ்ச்சி நடத்தி முஷாரைப்பை குஷி படுத்திய போதும் இந்த ஆமைகள் கூட்டுக்குள் ஒடுங்கிதான் இருந்தன. அப்போதெல்லாம் ஆவி மன்னிக்காது என்ற செண்டிமண்ட் வசனங்களையெல்லாம் பேசியது இல்லை. இறந்து போன வீரர்கள் அனைவருமே சாதாரண குடிமக்கள் தானே அவர்களுக்கெல்லாம் ஆவியாவது மயிராவது என்று ஒடுங்கியே இருந்தன இந்த ஆமைகள்.

இவர்களைப் பார்த்து சீமான் கேட்கிறார். 'அடேய் வெண்ணைகளா, தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவு கொடுப்பது நீங்கள் போட்ட சட்டப்படி தப்புதான், ஆனால் அதே இயக்கத்தைப் பற்றி தூற்றலாம் என்று அந்த சட்டம் எங்காவது சொல்லி இருக்கிறதா ? உனக்கு தூற்றுவதற்கு அனுமதி இருக்கும் போது, ஆதரவு கொடுப்பதற்கு மட்டும் நான் ஏன் உங்கள் அனுமதியை எதிர்பார்க்க வேண்டும், முதலில் சட்டத்தை மதித்து விடுதலை புலிகள் பற்றி நீங்கள் தூற்றுவதற்காக பேசுவதை நிறுத்துங்கள்' என்கிறார்

சீமான் சொல்வது ஞாயம் தானே, தடைசெய்யப்பட்ட இயக்கம் பற்றி தாறுமாறாக அவதூறு செய்ய மட்டும் இவர்களுக்கு சட்டம் அனுமதி கொடுக்கிறதா ?


(இலங்கை, இந்திய இறையாண்மைகள் இப்படியெல்லாம் காக்கப்படுகிறது)


தமிழர் நலனுக்கு எதிராக அரசியல் செய்யும் இவர்களை தமிழர் வரலாறு மன்னிக்காது, ஈழத்தமிழர் விடுதலைக்கு யார் யாரெல்லாம் தடையாக இருந்தார்கள் என்று விடுதலையாகும் ஈழத்தில் எழுதப்படும் வரலாற்றில், இவர்கள் பெயர் உலக வரலாற்றில் நீரோ மன்னனுக்கும், இடியமீனுக்கும், ஹிட்லருக்கும் கொடுத்திருக்கும் இடங்களையே இவர்களுக்கு ஈழத்தமிழர்கள் கொடுப்பார்கள்.

அனுமான் தன்வாலில் தீவைத்துக் கொண்டாலும் அது இலங்கையை எப்படி அழித்ததோ... முத்துகுமார் வைத்துக் கொண்ட தீ ? இதற்கு மேலும் சொல்ல வேண்டுமா ? நடந்து கொண்டுதானே இருக்கிறது !

24 பிப்ரவரி, 2009

அப்பாவி சிங்களர்களை(யும்) காங்கிரஸ் காக்க வேண்டும் !

வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வன்னியிலும், முல்லைத்தீவிலும் சிக்கியுள்ள அப்பாவி தமிழர்கள் குறித்து அச்சம் அடைவாதாகவும், இலங்கை அரசு கேட்டுக் கொண்டால் அப்பாவி தமிழர்களை வெளியேற்ற உதவுவதாகவும் இந்திய அரசின் சார்பில் கூறியுள்ளார். இது நல்ல நோக்கமாக தெரிந்தாலும், அப்பாவி தமிழர்களை அவர்கள் வாழும் இடத்தில் இருந்து வெளியேற்றிவிட்டடல் அதன் பிறகு அங்கிருக்கும் விடுதலைப் புலிகளை ஏவுகனை வீசி முற்றிலும் அழித்துவிட முடியும் என்ற மறைமுக யோசனையை காங்கிரஸ் முன்வைப்பதாகவும், உதவ ஆயத்தமாக இருப்பதாக தான் எடுத்துக் கொள்ள முடிகிறது.

மேலும் இதன் மூலம் போரில் இலங்கை அரசு வெற்றி பெற காங்கிரஸ் அரசு ஆதரவு அளிப்பதையும், தமிழ் ஈழம் அமைவதை தடுத்துவிட முயற்சிக்கும் இலங்கை அரசின் முயற்சிக்கு ஊதுகுழலாக காங்கிரஸ் பின் நிற்பதைத் தான் பிரணாப் முகர்ஜியின் அந்த போர்கள பூமியில் ஒடுங்கி இருக்கும் அப்பாவிகள் குறித்த 'அக்கரை' தெரிவிக்கிறது.

இலங்கைக்கு அரசுக்கு உதவும் காங்கிரஸ், அப்பாவி சிங்களர்கள் குறித்து அக்கரை படாதது வியப்பையே அளிக்கிறது. விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் எப்பொழுது மனித வெடிகுண்டுகளாக கொழும்பில் ஊடுறுவி வெடிப்பார்கள், எப்போது விமானம் மூலம் குண்டு போட்டு தாக்குவார்கள் என்ற நிலையில் கொழும்பில் வாழும் அப்பாவி சிங்களர்களும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்கிறார்கள். அவர்களை அப்புறப் படுத்த உதவுகிறோம் என்று காங்கிரஸ் அரசு தெரிவித்து, சிங்கள அப்பாவிகளை வேறு பாதுகாப்பான இடத்திற்கு பெயரவைத்தால் எதிரிக்கு எதிரிகளான சிங்கள இராணுவமும், ஈழ விடுதலை போராளிகளும் நேரடியாக மோதிக் கொள்வார்கள்.


அப்பாவி தமிழர்கள் குறித்து அச்சப்படும் காங்கிரஸ் அரசு, எப்போது வெடிகுண்டு தாக்குமோ என்று நடுங்கும் கொழும்பில் வாழும் அப்பாவி சிங்களர் பற்றி அக்கரைபடுமா ?

- தினமலர் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் இந்த கேள்வியை அப்பாவிகளும், பாமரர்களும் கேட்கிறார்கள்.

22 பிப்ரவரி, 2009

ஐ....நாவுக்கு அப்பாவிகள் கேள்வி !

கண்டனம் சடங்கில் மொய் வைப்பது தான் அது பற்றிய அறிக்கை, இது போன்று கண்டன திருவிழாக்களை நடத்துவது அரசியல் கட்சிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு பொழுது போக்கு. யார் முதலில் கண்டனம் தெரிவிப்பது என்ற போட்டி தான் இதுவரை நடைபெற்றதில்லை. கிட்டதட்ட அனைத்து நாடுகளுமே கண்டன திருவிழாவில் பங்கேற்கும். காந்திதேசமாச்சே... கண்டனம் பதிய வைப்பதில் இந்தியாவே முன்னிலை வகிக்கிறது என்பதை ஒவ்வொரு இந்தியனும் நினைத்து பெருமை பட வேண்டும்.

சதாம் உசேன் தூக்கில் இடப்பட்ட நிகழ்வுகளைக் கூட பன்னாட்டு கண்டனங்களுடன் உலகம் மறந்துவிட்டது. (பின்னே பழையதெல்லாம் மறக்கனும் என்று தெரியாமலா சொல்கிறார்கள்). ஐநா அரங்கம் (சபை) ஒன்று இருப்பதே உலகில் எங்காவது அமெரிக்கா போர் தெடுக்கும் பொழுது தான் தெரியவரும். ஐநா சபை என்பதை அமெரிக்கவின் அறிவிக்கப்படாத பன்னாட்டு கட்டுப்பாட்டு (அமெரிக்கா தவிர்த்து பல நாடுகளைக் கட்டுப்படுத்தும்) மையம் என்றுதான் பாமரர்கள் கூட சொல்கிறார்களாம்

(பாமரருக்கு ஐநா வெல்லாம் தெரியுமா ? அவங்களுக்கு தெருநாய் மட்டும் தானே தெரியும் என்கிற அறிவு பூர்வமான கேள்விகள் வரவேற்கப்படுகின்றன. அப்படி கேட்பவர்கள் தினமலர் வாசகர் கடிதம் படித்ததே இல்லை என்றே நினைக்கிறேன். அங்கு கடிதம் எழுதுபவர்கள் அனைவருமே 'அப்பாவிகள் கேட்கிறார்கள், 'பாமர்கள் கேட்கிறார்கள் என்றே எழுதுவார்கள். பின்னே அப்பாவிகளின் நாடி துடிப்பை அறிந்த ஒரே 'தமிழ்' நாளிதழாச்சே தினமலர், அதை படித்து வாசகர் கடிதம் எழுதும் அனைவருக்குமே அந்ததந்த பகுதியில் வாழும் சேரி, அப்பாவி மக்களின் நாடி துடிப்பும், அங்கே குட்டையில் ஊறும் அப்பாவி பன்றிகளின் மொழி கூட தெரிந்து வைத்திருப்பார்கள். நீங்கள் தினமலரில் வாசகர் கடிதம் எழுதுபவர் என்றால் உங்களுக்கு அப்பாவி தமிழ் மக்கள் யார் என்ற வெவரம் எல்லாம் வெள்ளிடை மலையாக தெரிந்திருக்கும்...தினமலரைப் பற்றி எழுதி என்/உங்கள் நேரத்தை வீனாக்கிவிட்டேனா ? வேறொன்னும் இல்லை தினமலர் அப்பாவிகளின் குரலாய் ஒலிப்பதைப் படித்து கீழே உதிர்ந்த எனது தலைமயிர் கூட சிலிர்த்தே நிற்கிறது. தினமலருக்குத் தான் அப்பாவிகள், பாமரர்கள் மீது என்ன ஒரு பாசம் ! தினமலர், இந்து(ராம்), துக்ளக்(சோ ராமசாமி) ஆகியவை நாள்தோறும் இலங்கையில் வாடும் தமிழர்களின் குரலாய் ஒலிக்கிறார்கள்!!!)

*****

கொழும்பில் விடுதலைப் புலிகளின் வான்படை பிரிவு தற்கொலைப் படை கரும்புலிகள் விமானத்தின் மூலம் குண்டு வீசிட்டார்களாம். அதற்குத்தான் ஐநா முதல் ஆளாக கண்டனம் தெரிவித்திருக்கிறது. வன்னியிலும் முல்லைத் தீவிலும், ஆளும் அரசு...மக்கள் பிரதிநிதி என்ற பெயரில் இலங்கை அரசு குண்டு மழை பொழிந்து தமிழினத்தை துடைத்தொழிக்கும் இன ஒழிப்பு நடந்து கொண்டு இருக்கிறது. ஒருபக்கம் 'தமிழர்கள் அழிந்துவிடுவார்கள்' என்று கவலைப்படும் ஐநா, அதை தடுத்து நிறுத்த எந்த நடவெடிக்கையும் எடுக்காமல் விடுதலைப் புலிகளின் நேற்றைய விமான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறார்கள். ஐநா நைனாக்களே....கொழுப்பில் வாழும் சிங்களன் உயிர்தான் உயிர்... இலங்கை இராணுவத்தின் குண்டு மழைக்கு பதுங்கு குழியின் அடியில் ஒடுங்கி நடுங்கியபடி இருக்கும் தமிழன் உயிர் மயிரா ? - அதெற்கெல்லாம் எந்த கண்டனமும் கிடையாதா ? இதை யாரும் கேட்கவில்லை, நம்ம தினமலர் பாணியில் சொல்லவேண்டு என்றால் இந்த கேள்வியை அப்பாவிகளும், பாமரர்களும் தான் கேட்கிறார்கள்

ஈழப்போராளிகளுக்கு ஓர் வேண்டுகோள், இலங்கை இராணுவத்திற்கு எதிராக போராடும் பொழுது, போராட்டத்தில் துப்பாக்கிகளைப் பயன்படுத்தலாமா ? ஐநாவிடம் கேட்டு முன் அனுமதி பெற்றுக்கொள்ளுங்கள், இல்லை என்றால் கண்டனம் தெரிவிப்பார்கள் - இதையும் அப்பாவிகள் தான் சொல்கிறார்கள்

16 ஜனவரி, 2009

மருத்துவர் ஐயாவின் கண்துடைப்பு காமடி!

சென்னை: இலங்கை அரசின் பயங்கரவாதம் மற்றும்இனவெறியை கண்டிக்கும் வகையில், இலங்கையுடன் கிரிக்கெட் விளையாடுவதை இந்தியா தவிர்க்க வேண்டும். இல்லையேல், வரும் காலங்களில் சென்னையில் நடக்கும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளைப் புறக்கணிக்கும் நிலை வரலாம்' என்று ராமதாஸ் எச்சரித்துள்ளார்.


இந்திய இராணுவத்தின் மறைமுக உதவியுடனும், இந்திய போர்தளவாடங்களானாலும் இலங்கையில் தமிழின ஓழிப்பு நடந்தேறுகிறது என்றே தமிழக கட்சிகள் நடுவன் அரசை குற்றம் சொல்கின்றன. அதை நடுவன் அரசும் அரசின் அறிக்கையாக மறுக்கவில்லை. காங்கிரஸ்காரர்கள் மட்டுமே, இலங்கைக்கு உதவி செய்யவில்லை என்று வாய்ச் சொல்லாக சொல்லி வருகின்றனர். இந்நிலையில் மருத்துவர் ஐயா இலங்கையுடன் கிரிக்கெட் விளையாடக் கூடாது என்கிறார். கட்டுச் சோத்துக்கு பெருச்சாளியை காவல் வைத்தார் போல யார் இலங்கை அரசுக்கு நண்பனாக இருக்கிறார்களோ அவர்களிடமே சென்று முறையிட்டால் எதுவும் நடக்குமா ? வெறும் எதிர்ப்பை பதிய வைப்பதற்காக மட்டுமே அறிக்கை, கோரிக்கை, வேண்டுகோள் நடைமுறைகள் நடந்தேறுகிறது.

நடுவன் அமைச்சர் அன்பு மணியை மீட்டுக் கொள்கிறேன் என்று ஏன் சொல்ல முடியவில்லை ? அன்பு மணி நடுவன் அரசில் அங்கம் வகிப்பத்தால் இலங்கை தொடர்பாக இந்திய அரசு சார்பில் எதுவும் பேச்சு நடத்துகிறாரா ? எதற்கு இந்த நாடகமெல்லாம் ?


கலைஞருக்குத்தான் வயதாகிவிட்டது, கட்சியை வாரிசு உரிமையாக்கும் கட்டாயத்தில் இருக்கிறார், அதனால் நிதியைத்திரட்டி போர் நிவாரணம் அனுப்பி வைத்ததுடன் கடமையை முடித்துக் கொண்டு மங்களம் பாடிவிட்டு, திருமங்கலத்தில் முழுவீச்சாக ஈடுபடுத்திக் கொண்டார், மருத்துவருக்கு என்ன ஆச்சு ? மரங்களை வெட்டுவதற்கு கூட்டும் கூட்டத்தை ஈழத்தமிழர்களுக்காக ஏன் கூட்ட முடியவில்லை. விடுதலைப் புலிகளை ஆதரித்தால் இந்திய தண்டனை சட்டப்படி சிறை என்றால், அத்தனை பாமக உறுப்பினர்களையும் அழைத்து ஈழப்போரை ஆதரிப்பதாக அறிவிப்பு விட்டால், எத்தனை பேரை இந்திய அரசு சிறையில் அடைத்து சோறுபோடும் ? இதை செய்வதற்கு மருத்துவருக்கு ஏன் துணிவில்லை ?

சீமானோ, அமீரோ பேசினால் மட்டும் தான் சிறையில் அடைப்பார்களா ? சாதாரண தொண்டர்கள் அனைவரையும் பேச வைத்து ஆதரவு தெரிவிக்க வைத்தால் அவர்களை அடைப்பதற்கு சிறைகள் போதுமா ? தொண்டர்கள் சிறைக்குச் சென்றால் அவர்கள் குடும்பத்தை யார் பார்ப்பது என்னும் அக்கரையோ? தொண்டர்களை தேர்தலுக்கு சுவரொட்டி ஒட்டவும், வரவேற்பு தோரணங்களைக் கட்டவும் பயன்படுத்திக் கொண்டு மாதக் கணக்கில் அவர்கள் தேர்தலுக்கு வேலை செய்யும் போதும் குடும்பம் ஒன்று இருப்பதை நினைத்துப் பார்க்கிறார்களா ? அல்லது கட்சித்தலைமை நினைக்க விடுமா ? மருத்துவருக்கு வயதாகிவிட்டது, அன்பு மணி அமைச்சர் அதனால் சிறைச் செல்ல முடியாது, காடுவெட்டி குரு போன்றவர்களை போராட அனுப்பலாமே ? காங்கிரஸ் கட்சி கண்டித்தால் பாமகவிலிருந்து சிலரை விலக்கி அவர்களை போராட அனுப்பலாமே, கட்சியில் இருந்து கண் துடைப்புக்காக நீக்குவதும், மீண்டும் சேர்ப்பதும் வரலாற்றில் புதிதா என்ன ? இதை திமுகவும் செய்யலாம்.

தன்னை தமிழர் போராளி என்று சொல்லிக் கொள்ளாவிட்டாலும், 'தமிழ் குடிதாங்கி' என்று மருத்துவருக்கு பட்டம் சூட்டிய திருமாவளவன் சாகும் வரை உண்ணாவிரதம் என்று செயலில் இறங்கிவிட்டார், தொண்டர் பலமிக்க மருத்துவர் ஐயா வெறும் அறிக்கை, கண்டனம், வேண்டுக்கோள் என்று செய்தி தாள்களில் இடம் பிடித்து, 'இருப்பை' உணர்த்துகிறார். இராமதாஸ் ஐயா, கிரிக்கெட் விளையாட்டை நிறுத்துவதால் பிரச்சனை தீராது, இலங்கை அரசுக்கு உதவிசெய்வதையாவது இந்தியா நிறுத்தனும், அதைச் செய்யச் சொல்லி நெருக்குதல் கொடுத்து, செய்யவில்லை என்றால் அன்பு மணியை பதவி விலகச் சொன்னால், ஈழத்தமிழர் குறித்த மருத்துவர் அக்கரையை ஈழமக்கள் மட்டுமல்ல, இந்திய மக்களும் கூட புரிந்து கொள்வார்கள்.

பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பதாக நடந்து கொண்டு, கிரிக்கெட்டை தவிர்க்கச் சொல்வது காமடியாக இல்லை ?

30 டிசம்பர், 2008

கலைஞர் மற்றும் இராமதாஸ் - நரியிடம் நாட்டாமை கேட்டால் ?

நரியை நாட்டமையாக்கி தீர்ப்புச் சொல்லச் சொன்னால் என்னவாகும்...தனக்கு சாதமாகத் தானே தீர்ப்புச் சொல்லிக் கொள்ளும். இதைத்தான் காங்கிரஸ் அரசாங்கம் ஈழப் பிரச்சனையில் செய்துவருகிறது. இராஜீவை விடுதலைப் புலிகள் கொன்றார்கள் என்கிற ஒரே காரணத்தினால் தமிழர் வாழும் பகுதிகளில் விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கிறேன் என்கிற போர்வையில் தமிழினம் துடைத்து ஒழிக்கப் படுகிறது.

"போர் நிறுத்தம் வேண்டும்...அதனை இந்தியா வலியுறுத்த வேண்டும்" என்று தமிழகத்தின் குரல்களை மன்மோகன் அரசு கண்டு கொண்டது போல் தெரியவில்லை. இதெல்லாம் கூட 'அவனுங்க அப்படித்தான்' தமிழனுக்குள்ளேயே காங்கிரஸ்காரன் என்கிற பெயரில் அப்படித்தானே நடந்து கொள்கிறார்கள் என்று விட்டுத் தொலையலாம். ஆனால் தமிழகத்தில் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறார்கள், தனி ஈழத்தை ஆதரிக்கிறார்கள் என்று கூறி சீமான் உட்பட பலரை கைது செய்து சிறையில் அடைப்பது எந்த விதத்தில் ஞாயம் என்று தெரியவில்லை. விடுதலைப் புலிகள் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கம் தான். ஆனால் அவர்களின் ஈழவிடுதலைப் போராட்டம் என்பது ஈழமண்ணில் நடக்கிற ஒன்று அதற்கு ஆதரவு தெரிவிப்பது எந்த வகையில் இந்திய இறையாண்மையை பாதிக்கிறது என்று தெரியவில்லை.

போராளிகளின் ஆயுத போராட்டம் இன்றி ஈழ விடுதலை என்பது சாத்தியமற்றதே, இவை நன்கு தெரிந்தும், நாங்கள் புலிகளை ஆதரிக்கவில்லை, தமிழீழம் அமைவதை ஆதரிக்கிறோம் என்று சொல்லும் அரசியல் பித்தலாட்டாவாதிகளை எந்த கணக்கில் சேர்ப்பது ? இவர்கள் ஈழத்தமிழருக்கு வடிக்கும் கண்ணீர் உண்மையான கண்ணீர் தானா ?

மத்திய அரசில் அங்கம் வகிப்பதால் பாமகவும், திமுகவும் நாங்கள் புலிகளை ஆதரிக்கவில்லை, ஈழவிடுதலையை ஆதரிக்கிறோம் என்கிறார்கள். ஈழ விடுதலை என்பது இன்னொரு ஈழகாந்தியால் ஏற்படப் போகிறதா ? யார் அந்த காந்தி....இதையெல்லாம் தெளிவு படுத்துவிட்டு ஈழம் அமைவதை ஆதரிக்கிறோம் என்று சொல்லாமே, தானும் தெளிவில்லாமல், தொண்டர்களையும் தெளிவு படுத்தாமல் இவர்கள் ஈழத்தமிழர்களின் நலன் குறித்து பேசுவது முரணாகவே இருக்கிறது.

ஈழவிடுதலைக் குறித்து கலைஞர் வடிக்கும் கண்ணீரும், மருத்துவர் இராமதாசின் கண்ணீரும் யாருக்காக என்றே தெரியவில்லை. எங்களுக்கு காங்கிரஸ் கூட்டணி தான் முக்கியம் என்று சொல்லிவிட்டால் தொண்டர்களாவது குழம்பாமல் இருப்பார்கள். அதைவிடுத்து மேடைக்கு மேடை ஒரு பேச்சு, வெளியே ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்போர் மீது கைது நடவெடிக்கை. இரட்டை வேஷம் ! Shame !

இந்த விசயத்தில் காங்கிரஸ் அரசுடன் தொடர்பு இருக்கின்ற காரணத்தினால் மருத்துவர இராமதாஸ் மற்றும் கலைஞர் செயல்பாடுகள் எனக்கு வேறு வேறாக தெரியவில்லை. முரண்பாடுள்ள ஜெவுடன் கூட்டணி அமைத்திருந்தாலும் ஈழ விடுதலைக் குறித்து வைகோ தெளிவாக இருக்கிறார். காங்கிரஸ் நிர்பந்தம் இல்லாததால் திருமாவளவனும் தெளிவாகவே இருக்கிறார்.

இராஜிவ் காந்தியின் உயிருக்காக ஈழத்தமிழர்கள் அனைவருமே பலியாகத்தான் வேண்டும் என்று நினைக்கும் காங்கிரசாரின் நிலைக்கு ஆதரவாகவே கலைஞரும், இராமதாசும் செயல்படுகிறார்கள், இதில் அடிக்கடி டெல்லி பயணம், வலியுறுத்தல்கள். நினைக்கவே பெரிய அரசியல் அசிங்கமாக இருக்கிறது. இந்த விசயத்தில் மிகத் தெளிவாகவே, வெளிப்படையாக இருக்கும் ஜெ கூட பரவாயில்லை.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்