பின்பற்றுபவர்கள்

இடஒதுக்கீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இடஒதுக்கீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

5 ஏப்ரல், 2011

இட ஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும்.......!

இட ஒதுக்கீடு என்பது எதோ தகுதியற்றவர்களுக்குக் கொடுக்கப்படும் சலுகை போல் அவ்வப்போது பேசப்படுகிறது. இட ஒதுக்கீடு என்ற சொல்லே தவறு மாறாக இடப் பங்கீடு என்று தான் சொல்லவேண்டும். சாதி நம்பிக்கைகளை சிதைக்க விரும்பாத வருணாசிரம நம்பிக்கை கொண்ட இந்தியாவில் அனைவரும் சம அளவில் வேலை வாய்ப்புகள் மற்றும் கல்வியைப் பெற வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட மாற்று ஏற்பாடே இந்த இட ஒதுக்கீடு என்கிற இடப் பங்கீடு.

இட ஒதுக்கீடுகளை யார் யார் பெருகிறார்கள் ?

தாழ்த்தப்பட்ட, மலைவாழ், பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட வகுப்பினரே இட ஒதுக்கீட்டின் தகுதியைப் பெற்று இருக்கிறார்கள். இவர்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு என்பது அந்த பிரிவின் பெயரிலேயே அடங்கி இருக்கிறது. தாழ்த்தப்பட்ட என்றால் ? பிற சாதி சமூகத்தால் தாழ்த்தி வைக்கப்பட்ட, கீழான சமூகத்தவராக அறிவிக்கப்பட்ட அல்லது தீண்டத்தகாத என்ற நிலையில் வைக்கப்பட்டவர்களே தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஆவர், அது போன்ற விளக்கங்களே பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கும் பொருந்தும். மேலும் பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் சமூக பொருளாதார நிலையில் தாழ்த்தப்பட்டவர்களைவிட சற்று முன்னேறியவர்கள். இவை தனிப்பட்ட மனிதர்களை அவர்கள் பிறந்த சாதி இது என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளதால் அவர்களுக்கு அச்சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. சாதிகள் அவர்களுக்குள் குழவாக இயங்குவதால் தனிமனித பொருளாதார நிலையைப் பார்க்காது ஒட்டுமொத்த சாதியின் ஏற்றம் வளர்ச்சியை கொண்டு அவர்களுக்கு பொதுவான சலுகைகள் வழங்கப்படுவது தான் சாதி சமூகங்களை பொருளாதார சமூக அந்தஸ்துகளில் சமத்துவமாக்க முயலுவதன் ஏற்பாடாகும். தனிப்பட்ட மனிதர்களின் பொருளாதாரத்தைப் பார்த்து இட ஒதுக்கீடு அளிப்பது என்பது நடைமுறைக்கே ஒத்துவராத ஒன்று. எடுத்துக்காட்டாக ஒரு மாணவன் பொருளாதரத்தில் பின் தங்கிய குடும்பத்தில் பிறந்து 100க்கு 95 எடுத்து இட ஒதுக்கீடு பிரிவிக்குள் அவனுக்கு தகுதியில்லை என்றால் முதலில் அந்த மாணவன் 95 மதிப் பெண் பெற எடுத்த முயற்சிகள் என்ன என்று பார்க்கையில் வெறும் இயற்கை அறிவினால் அவன் 95 மதிப்பெண்கள் பெற்றானா ? என்ற கேள்வி தான் முதலில் வருகிறது. 95 மதிப்பெண் பெற தனியார் பயிற்சி வகுப்பிற்குச் சென்று இருக்க வேண்டும், மற்றும் படிப்பைத் தவிர்த்து அவனுக்கு வேறு வேலைகளே இல்லாமல் இருந்திருக்க வேண்டும். இங்கு பொருளாதார சுமை என்பது அவன் பெற்றோர் சுமக்கும் சுமையே அன்றி அம்மாணவனுக்கு ஏற்பட்ட நேரடியான அழுத்தம் இல்லை. ஒரு கல்லுடைக்கும் தொழிலாளியின் அல்லது கொத்தனார் வேலை செய்யும் தொழிலாளியின் பிற்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட மாணவனை எடுத்துக் கொண்டால் அவன் பெற்ற மதிப்பெண் 60 என்றாலும் அவன் தனியார் பயிற்சிக்கு சென்றிருக்காதவனாகவோ, தந்தைக்கு பொருளாதாரம் ஈட்டித்தரும் வேலைக்கு இடையே படித்து அந்த மதிப்பெண்ணைப் பெற்றிருப்பான். பெற்றோர் ஊக்கத்துடன் 95 மதிப்பெண் பெரும் மாணவனும், பெற்றோருக்கு உதவி செய்து கொண்டே படிக்கும் மாணவன் பெரும் 65 மதிப்பெண்களும் போட்டிப் போட்டு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தகுதி பெறவேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதமான சமூக நீதி. எந்த ஒரு ஊக்கமும் இல்லாமல் தன் முயற்சியால் படித்து 95 விழுக்காடு பெரும் மாணவர்கள் எந்த சாதியிலும் உண்டு ஆனால் அவர்களின் விழுக்காடு குறைவே. மாறாக நன்கு படித்து, விழிப்புணர்வு பெற்றவர்களின் பிள்ளைகளும், அத்தகைய விழிப்புணர்வுகளுக்கு வாய்ப்பில்லாதவர்களும் ஒன்று போலவே மதிப்பெண் எடுக்க முடியுமா ? இதில் மாணவரின் தனித்திறமை என்று எதுவும் இல்லை, அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளே அவர்களை உருவாக்குகிறது. வாய்ப்புகளின் சமச்சீரின்மையை சரி செய்யவே இட ஒதுக்கீடுகள் பயன்படுகிறது. மற்றபடி தேராத மாணவன் தகுதியே இல்லாத மாணவன் இட ஒதுக்கீடுகளால் பலன் பெறுவது இல்லை.

சென்ற ஆண்டு மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்த மாணவர்களில் எவருமே உயர்வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை. பின்தங்கிய மற்றும் பிற்பட்ட மாணவர்களை விட உயர்வகுப்பினர் குறைவாகவே மதிப்பெண் எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. என்னைக் கேட்டால் இட ஒதுக்கீடுகள் அரசு பள்ளியில் தமிழ் மொழி வழிக் கல்வி பெற்றவர்கள் அனைவருக்கு பொருளாதார ரீதி அடிப்படையில் வழங்கலாம், எந்த சாதியைச் சேர்ந்தவனாக இருந்தாலும் ஆங்கில வகுப்பில் படிப்பதற்கான பொருள் உதவி இருக்கும் மாணவன் தனியார் கல்லூரிகளில் பணம் கொடுத்து இடம் பிடிப்பது ஒன்றும் கடினமான செயலே இல்லை.

*****

இவற்றையெல்லாம் பலமுறை பதிவில் எழுதி இருக்கிறேன். இவை இட ஒதுக்கீடு பற்றிய சமூக ரீதியிலான புரிதல் மட்டுமே. ஆனால் இட ஒதுக்கீட்டை எடுத்துவிட்டால் என்ன ஆகும் என்பதை அனைவரும் தெரிந்தே ஆகவேண்டும், குறிப்பாக இந்து மத இடிதாங்கிகள், இட ஒதுக்கீடு இலவசமாக வழங்கபடவில்லை அது கையூட்டே என்று இந்துத்துவாதிகள் தெரிந்தே வைத்திருக்கிறார்கள். தலித்துகளுக்கு, பிற்பட்ட சமூகத்திற்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டால் அவர்கள் சென்று சேரும் இடம் மாற்று மதம் தான். ஏனெனில் இந்துமதத்தில் இருப்பதால் இவர்களுக்கு என்ன நன்மை ? சுதந்திர இந்தியாவிற்கு முன்பு மதம்மாறுபவர்களின் விகிதம் ஒப்பிட தற்போதைக்கு மிகவும் கீழே சென்றுள்ளது. அதற்குக்காரணம் இந்துமதத்தைச் சேர்ந்த தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு சலுகை கிடைப்பது என்பது தான் முக்கிய காரணியாகவும், இதுவும் மறுக்கப்பட்டால் நீங்களே உங்கள் மதங்களைக் கட்டிக் கொண்டு அழுங்கள், எங்களுக்கு பறையன் பள்ளன் என்ற அவப்பெயர் விளிப்புத் தேவை இல்லை என்று ஒட்டு மொத்தமாக இந்துமதத்தைக் கைகழுவிவிட்டு மதம் மாறி இருப்பார்கள், இட ஒதுக்கீடு என்பதே இந்து மக்கள் தொகையை குறிப்பாக தலித் இந்துக்கள் மதம்மாறமல் இருக்கக் கொடுக்கப்படும் கையூட்டு தான். இதைப் புரிந்து கொள்ளாத அதிமேதாவிகள், சமூக நலனை சிந்திப்பதாகவும், ஞாயம் பேசுவதாகக் கூறுவதுடன் தலித்துகளுக்கு இலவசமாக அள்ளிக் கொடுக்கிறார்கள் என்ற பரப்புரையை செய்து காழ்புணர்வை வளர்த்துவருகிறார்கள். இந்த திடீர் சமூக ஆர்வலர்கள் உயர்வகுப்பினர் நடத்தும் கல்லூரியில் ஏன் உயர்வகுப்பு ஏழைமாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்க முன்வருவதில்லை என்பது குறித்து கேள்வி எழுப்பவே மாட்டார்கள்.

இட ஒதுக்கீடு என்பது சமூக சமச்சீருக்கு மாற்று ஏற்பாடு என்றாலும் அது இன்று வரை இந்துமக்கள் தொகையை கட்டிக்காக்கும் ஒரு கேடயமாகவே இருக்கிறது என்பதை திடீர் சமூக ஆர்வலர்கள் சிந்திக்க வேண்டும். இது தெரிந்துள்ளதால் இந்துதுவவாதிகள் நேரடியாக இட ஒதுகீட்டை எதிர்ப்பதில்லை ஆனால் மறைமுகமாக உயர்வகுப்பு மாணவர்களை இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தூண்டிவிட்டு குளிர்காய்வார்கள்.

இட ஒதுக்கீடு ஒழிக்கப்பட்டால் இந்துமதம் சிதையும் என்பதே உண்மை. தேசியவியாதிகளே, திடிர் சமூக ஆர்வளர்களே இப்போது சொல்லுங்கள் இட ஒதுக்கீடு யாருக்கு பயன்படுகிறதோ இல்லையோ வருணாசிரமத்தைக் கட்டிக்காக்கும் ஒரு கேடயமாகவே இருந்துவருகிறதா இல்லையா ? இராமகோபாலன் தலித் கிறித்துவர்களுக்கு இந்து தலித்துகளைப் போல் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று எதிர்ப்பது எதற்காக ?

இந்துபறையர்கள் மற்றும் பள்ளர்கள் மற்றும் பிற தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட சமூகத்தினர் தங்களை அவ்வாறே அழைத்துக் கொள்ள அனுமதிக்கிறோம் என்கிற மறைமுக ஒப்புதலுக்குக் கொடுக்கப்படும் கையூட்டே இட ஒதுக்கீடு. இதை இராமகோபாலன் போன்று இந்துத்துவாக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர், தவறு என்றால் ஒரு கிறித்துவ தலித்துக்கும், இந்து தலித்துக்கும் சமூக மற்றும் பொருளாதார நிலையில் என்ன வேறுபாடு இருக்கிறது என்று சொல்லுஙக்ள் ? இட ஒதுக்கீடு என்பவை மறைமுகமாக உயர்சாதியினர் அல்லாதோர் இந்துவாக தொடரக் கொடுக்க்படும் லஞ்சம்.

26 ஏப்ரல், 2010

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் பார்பனிய வாதிகள் !

நேற்று விஜய் தொலைகாட்சியின் நீயா ? நானா ? நிகழ்ச்சியில் பாராளுமன்றத்தில் பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு பற்றிய சூடான வாக்கு வாதங்களை கேட்க நேர்ந்தது. பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டுமா வேண்டாமா என்பதைவிட அதில் பலர் பேசத் துணிந்த உள் ஒதுக்கீடு என்னைக் கவர்ந்தது. உள் ஒதுகீடு என்றால் சமூக ஏற்றத்தாழ்வுகளை சரி செய்யும் பிற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சாதிகளில் பிறந்த பெண்களுக்கான ஒதுக்கீடுகள். 33 விழுக்காடு கொடுக்கலாமா வேண்டாமா என்பதில் பல்வேறு கருத்துகள் ஒலிக்கின்றன. தமிழகத்திலும் பிற இந்திய மாநிலங்களிலும் பார்பனிய சிந்தனைவாதிகளின் ஒட்டு மொத்தக் குரல் பெண்களுக்கு அவ்வாறு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்பதே.



விஜய் நிகழ்ச்சியில் முற்போக்கு வாதியாக தம்மை நினைத்துக் கொண்டிருக்கும் இரு இளைஞர்கள் பெண்களுக்கு அத்தகைய இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்பதை வழியுறுத்தினர். அது கிட்டதட்ட சோ இராமசாமி உதிர்த்தவற்றை டோண்டு இராகவன் வலைப்பதிவில் (பெண்களுகான இட ஒதுக்கீடு என்பது தேவையில்லாத கூத்து) மறுபதிவு செய்ததைப் போன்றே இருந்தது. பெண்கள் வேலைக்குச் செல்வதை விபச்சரத்துடன் ஒப்பிட்ட பெரியவாள்களின் குரலுக்குள் 'அடக்கமானவர்கள்' இவர்கள். இவர்களால் இப்படித்தான் பெண்களின் இட ஒதுக்கீட்டை 'கூத்து' என கேலி செய்து விமர்சனம் செய்ய முடியும். இவர்களின் வாதம்,

33 விழுக்காடு என்று ஏன் கட்டுப்படுத்துகிறீர்கள், இட ஒதுக்கீடே இல்லை என்றால் அவர்களால் 100 விழுக்காட்டில் கூட போட்டி இட முடியும் அல்லவா என்பது தான்.

இதன் மூலம் இவர்கள் மறைமுகமாக திணிக்க நினைக்கும் கருத்துகள் 33 விழுக்காட்டிற்கு மேல் பெண்களால் போட்டி இட முடியாது என்பதைத்தான். இட ஒதுக்கீடு என்பது அவ்வாறு 33 விழுக்காட்டிற்குள் பெண்களுக்கான வாய்ப்பைச் சுறுக்கவில்லை, ஆனால் குறைந்த அளவாக 33 விழுக்காடு கண்டிப்பாக உண்டு என்பதை வழியுறுத்துகிறது. இதை யாருமே விவாதத்தில் பேசவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

33 விழுக்காடு என்பது அவர்களுக்கு மட்டும் அதற்குமேல் உள்ள 67 விழுக்காடு அனைவருக்குமானது இதை சோ இராமசாமி போன்றோர் பேசுவதில்லை. ஏனென்றால் அவர்களின் நோக்கம் பெண்களுக்கு 33 விழுக்காடு கிடைத்து விடக் கூடாது என்பதே. இந்த வாதத்தை மேலும் திரித்தலாகவும், மேலும் ஆணிய கருத்துக்களை ஆணித்தரமாக முன் வைத்த மற்றொரு பார்பனிய சிந்தனைவாத இளைஞர்
"ஒரு பெண்ணுக்கு ஒரு இடத்தை ஒதுக்குகிறோம் என்றால்....அதைவிட தகுதியான ஆண் ஒருவன் இருந்தால்......அவன் புறக்கணிக்கப்படுகிறான், இது சமூக விரோதச் செயல்....எனவே இட ஒதுக்கீடுகள் கூடாது.பெண்கள் போட்டி போட வேண்டுமென்றால் ஆண்களுக்கு நிகரான தகுதிகளை வளர்த்துக் கொண்டு போட்டி இடலாமே....இந்திரா, மார்க்ரட் தார்சர்.......இன்னும் எத்தனையோ பெண்கள் அப்படித்தானே வந்தார்கள் என்றெல்லாம் பொதுப்புத்திப் புரிதலாக பேசினார். எழுத்தாளர் ஞானி அதை உடனடியாக மறுத்தார், நீங்கள் சொல்லும் பெண்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே ஒட்டு மொத்த ஆண் அரசியவாதிகளை ஒப்பிடுகையில் அவர்கள் எண்ணிக்கையில் மிக மிகக் குறைவானவர்கள், தனிப்பட்ட ஒரு சிலரின் முயற்சியால் கிடைத்த பலனை ஒட்டுமொத்த பெண்களின் சாதனைக்கான அளவுகோளாக்கி பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது தவறு என்று சுட்டினார்.

அந்த இளைஞர்கள் மேலும் உள்ரலாக...'நான் இந்தியா முன்னேற்றத்தைத்தான் நினைக்கிறேன்......எனவே தகுதி உடையவர்களுக்கு கொடுப்பது தான் இந்தியா வளர்ச்சிக்கு பயன்படும்' என்றெல்லாம் கூறினார். இவர்கள் தகுதி என்று கூறுவது என்ன ? தேர்வில் பெற்ற மதிப்பெண்ணா ? அறிவா ?

மக்களாட்சியில் தன்னை யார் ஆளவேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்குமே உண்டு, படிக்காதவர்கள் நிறைந்த சமூகத்தில், தாழ்த்தப்பட்டவர்கள் நிறைந்த சமூகத்தில் அவர்களின் நலனுக்காக பாடுபடுபவர் எவரோ அவருக்கு சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினராகும் தகுதி இருக்கிறது, கட்சிகளால் மக்களாட்சி தேர்தல் முறை குட்டிச்சுவர் ஆகி இருந்தாலும் கூட மக்களாட்சி நாட்டின் தேர்தல் முறை இந்த அடிப்படையில் தான் அமைந்திருக்கிறது. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினரும் முறையே முதல்வர், பிரதமர் ஆகியோரை தேர்ந்தெடுக்கின்றனர். இதில் அந்த இளைஞரும், பொது புத்தியாளர்களும் கூறும் தகுதி என்பதற்கான அளவுகோள் வேறு என்ன இருக்கிறது.

தகுதி என்ற சொல்லாடலே ஒரு ஏமாற்று மற்றும் பம்மாத்து, இவர்கள் சொல்லும் தகுதி என்பது மன்னர் ஆட்சி காலத்தில் கூட இருந்தது என்று வைத்துக் கொண்டாலும் கூட, நாடு மொகலாய மன்னர்களிடமோ, அதன் பிறகு வெள்ளைக்காரனிடமோ அடிமையாக ஆனது ஏன் ? ஒட்டுமொத்த அறிவாளிகளால் முன்பு ஆளப்பட்ட நாடு அடிமை பட்டது ஏன் ? அவ்வாறு அடிமைப்பட்ட நாட்டை மீட்பதற்கு தகுதியாளர்களாக இவர்கள் கற்பிதம் செய்து கொண்டவர்களால் மட்டும் தான் முடிந்ததா ?

தகுதி பற்றிய உளரல்கள் அவ்வப்போது அங்கங்கே ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது, குறிப்பாக பார்பனிய சிந்தனையாளர்களிடமும் அவர்களின் நரித்தனம் அறியாத அடிவருடிகளிடமும் அந்தக் குரல் பலமாகவே ஒலிக்கிறது. இட ஒதுக்கீடு அடிப்படையில் வேலை பெற்று வருபவன் ஊழல் செய்கிறான், லஞ்சம் வாங்குகிறான் என்கிறார்கள் இவர்கள். ஊழல், லஞ்சம் இவையெல்லாம் தனிமனித தவறுகள் இவை நடைபெறாத காலமே இல்லை. முன்பெல்லாம் ஊடகங்களினால் வெளிப்படுத்தப்படாதவை தற்பொழுது வெளிப்படுத்தப்படுகிறது அவ்வளவு தான்.

குறைந்த மதிப்பெண் பெற்ற ஒருவன் இட ஒதுக்கீடு வழியாக மேற்கல்வி கற்றால் அவனால் பிற்காலத்தில் வேலையில் சிறப்பாக இயங்க முடியாது என்றும் உளறுகின்றனர். என்னைவிட குறைந்த மதிப்பெண்கள் பெற்ற எத்தனையோ பேர் நிறுவன முதலாளிகளாக நான் பார்த்திருக்கிறேன். படிப்பில் தங்கபதக்கம் பெற்ற மாணவன் தனியார் நிறுவனத்தில் உயர்பதிவியில், அதைவிட சற்று குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மேலாளர் என்ற அளவில் தான் பதவியில் இருக்கின்றனர். அவர்களின் ஒரு சிலர் நிறுவனம் நடத்துகின்றனர். இட ஒதுக்கீடோ, குறைந்த மதிப்பெண்ணோ சமூக பொருளாதாரத்தை குறைத்துவிடும் அல்லது சீரழித்துவிடும் காரணியும் அல்ல. இட ஒதுக்கீடு என்பவை ஏற்றிவிடும் ஏணி என்ற அளவிற்கு தான் பயன்படுகிறதே அன்றி முழுக்க முழுக்க அதை வைத்துக் கொண்டு யாரும் வாழ்நாள் சாதனையாளர்கள் என்கிற உயரத்தின் அளவுகோள் ஆக்கிக் கொள்வது கிடையாது, அவையெல்லாம் தனிப்பட்ட மனிதரின் முயற்சி. பின் தங்கிய கிராமத்தில் பிறந்த கலாம் ஜனாதிபதியாகியது அவரது தனிப்பட்ட உழைப்பின் பயனேயன்றி, அவரைப் போல் எல்லோருமே ஆகமுடியும் அதனால் இடஒதுக்கீடு என்பது ஒழிக்கப்பட வேண்டும் என்பது வெறும் பொதுப்புத்தி புரிதலே. அப்துல்கலாம் என்பவர் இளைஞர்களின் நம்பிக்கை மற்றும் தூண்டுகோல் அன்றி இளைஞர்களின் எதிர்காலத்தை முடிவு செய்யக் கூடிய அடி ஒற்றி பின்பற்றக் கூடிய அளவுகோல் இல்லை. அத்தனை பேரும் அப்துல்கலாம் ஆகுவதற்கு அத்தனை ஜனாதிபதி பதவிகள் நாட்டில் இல்லை என்பது சிந்திக்கக் கூடிய ஒன்று. எனவே அவரைப் போல் நீயும் மாறு என்று மேடையில் பேசுவது பிரச்சனையை திசை திருப்பும் பம்மாத்து மற்றும் பிரச்சனையின் தீவிரம் தெரியாத உளரல்கள் மட்டுமே.

இட ஒதுக்கீடுகளே இல்லை என்றால் பெண்களுக்கு 100 விழுக்காட்டிலும் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது என்பதும் 33 விழுக்காடு பெண்களை சுறுக்குகிறது என்று கூறுவோர் குறுகிய மனம் படைத்த ஆணிய சிந்தனைவாதிகள். 33 விழுக்காடு பெண்களின் போட்டித்தன்மையை சுறுக்கவில்லை, 33 விழுக்காட்டு இடத்தை உறுதிப்படுத்துகிறது, அதற்குமேல் விழுக்காட்டை கூட்டுவது பெண்களின் முன்னெடுப்புகளினால் கண்டிப்பாக ஏற்படும். பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் 33 விழுக்காடு இட ஒதுக்கீடு உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும். பார்பனிய சிந்தனைவாதிகளின் பெண்களுக்கான இட ஒதுக்கீடு பற்றிய கருத்துகள் புறக்கணிக்கக் கூடியது. மேலும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் அவர்களுக்குள்ளேயான உள் ஒதுக்கீட்டுடன் கிடைக்கும் பொழுது அது அனைத்துப் பெண்கள் சமூகத்திற்கும் பெரும்பயனாக அமையும்.

22 ஆகஸ்ட், 2008

உயர்வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் என்ன தப்பு ? - எல்லோரும் எல்லாமும் பெருக !

உயர்சாதியினர் தமிழகத்தில் 14 விழுக்காடு இருக்கிறார்களாம், அவர்கள் தங்களுக்கு 14 விழுக்காடு இட ஒதுக்கீடு கேட்டதை கலைஞர் தலைமையிலான அரசு மறுத்துவிட்டது. பேசாமல் அவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கி மொத்த இடமான 100 விழுக்காட்டையும் சாதி மக்கள் தொகைக்கு ஏற்ப பிரித்துக் கொடுத்துவிடலாம்.

அப்படியே பிரிச்சு கொடுத்துட்டு அந்த ஒதுக்கீட்டில் எந்த மாணவனைத் தேர்ந்தெடுப்பது என்ற தலைவலியையும் அரசு வைத்துக் கொள்ளாமல் அதாவது கட் ஆப் மார்க் பற்றி யெல்லாம் அந்தந்த சாதிகளே தீர்மாணிக்க சாதிசங்கங்களின் முடிவுக்கு விட்டுவிடலாம்.

தற்போதைய ஒதுக்கீட்டு முறையில் மொத்தம் 4 பிரிவுகள் இருக்கிறது,

எஸ்ஸி / எஸ்டி - 19
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 20
பிற்படுத்தப்பட்டோர் - 30 விழுக்காடு
ஓப்பன் - 29 விழுக்காடு (கணக்கு சரியாக தெரியல, கொஞ்சம் கூட குறைவாகக் கூட இருக்கும்)

உயர்வகுப்பினர் வெறும் 14 விழுக்காடு தானே கேட்கிறார்கள், மீதம் இருக்கும் (29 மைனஸ் 14 ) 15 விழுக்காடும் அதே அடிப்படையில் பிரித்துக் கொடுத்தால்

எஸ்ஸி / எஸ்டி - 22
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 23
பிற்படுத்தப்பட்டோர் - 35 விழுக்காடு
உயர்வகுப்பு - 15 விழுக்காடு

என்று கணக்கு வந்துவிடும்......

இந்திய அளவில் இருக்கும் இந்திய அரசு வேலை / கல்விகளிலும் இட ஒதுக்கீட்டு முறை மாற்றப்பட வேண்டும். தற்போது வகுப்படிப்படையில் இருக்கும் ஒதுக்கீட்டை மாநில அடிப்படைக்கு மாற்றி அமைத்து அந்தந்த மாநில நிலவரப்படி ஒதுக்கீடு வழங்கவேண்டும். பல்வேறு மாநிலங்களில் சாதிப்பெயர் ஒன்றாக இருந்தாலும், மக்கள் நிலையும் வாழ்க்கைத் தரமும் வேறு. அதனால் இந்திய அளவில் மாநில அளவிலான இட ஒதுக்கீடே சரியான தீர்வாக அமையும் என்று நினைக்கிறேன்.

சேவகம் பண்ணுவதற்காக என்ற எந்த தனிப்பட்ட சாதியும் கிடையாது ஆகவே.....இருக்கும் சாதி மக்கள் தொகை அடிப்படையில் எல்லோருக்கும் இட ஒதுக்கீடு வழங்கினால் தான் சமத்துவம் நிலைநாட்டப்படும்.

உயர்வகுப்பினர்களும் படிக்க வேண்டுமே. அவர்களுக்கு இட ஒதுக்கீடே இல்லை என்றால் எப்படி ?

எல்லோரும் எல்லாமும் பெருக !

:)

இவரு என்ன சொல்றாருன்னா ? இட ஒதுக்கீட்டையே எடுத்துவிடனுமாம்...யாரா ? அதை அங்கேயே போய் படிங்க...

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்