பின்பற்றுபவர்கள்

25 அக்டோபர், 2011

திரட்டிகளை பிரபலமாக்குவது எப்படி ?

முன்குறிப்பு : நான் எந்த திரட்டி அமைப்பிலும் நடத்துனராகவோ ஓட்டுனராகவோ இல்லை, சில திரட்டிகளில் இணைந்திருக்கிறேன், நான் இங்கு எழுதுவது கூட திரட்டிகள் வளர்ச்சி பற்றிய விமர்சனம் தான், பிறரை / தனிப்பட்ட திரட்டியை தனிப்பட்ட முறையில் காயப்படுத்தாமல் எதையும் விமர்சனம் செய்யும் உரிமை அனைவருக்குமே உண்டு, அந்த புரிந்துணர்வில் தான் வலைப்பதிவுலகமும் அவற்றைத் தாங்கிச் செல்லும் திரட்டிகளும் உள்ளன என்கிற அடிப்படை புரிந்துணர்வில் தான் இதை எழுதுகிறேன். பதிவர் நண்பர்கள் சிலர் திரட்டி நடத்துகிறார்கள், உங்களுக்கும் திரட்டி நடத்துவது பற்றி விருப்பம் ஏதேனும் இருந்தாலோ, அதன் தொடர்பிலான மற்ற தகவல்களை தெரிந்து கொள்ள ஆவல் இருந்தாலோ கீழ்கண்டவற்றைப் படிக்கலாம்.

*******

* பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் டேவிட் பெக்கம் பெர்பூயும் (வாசனை திரவிய) நிறுவனம் துவங்கியுள்ளார், அவருக்கு அவர் விற்பதை விளம்பரம் செய்ய அவர் பெயரே போதும், திரட்டி துவங்க வேண்டுமென்றால் முதலில் பிரபல பதிவர் ஆகனும், மூன்றாண்டுக்கு முன்பு துவங்கிய திரட்டிகளில் பிரபலப்பதிவர் அல்லாதவர்கள் துவங்கும் திரட்டிகள் (தமிழ்மணம், தேன்கூடு தமிழிஷ், தமிழ்வெளி தவிர்த்து) வெறெதுவும் பிரபலமாகவில்லை, காரணம் திரட்டி ஓனர்கள் யார் என்று வெளிப்படையாகத் தெரியாததால் திரட்டிகளுக்கு அறிமுகம் கிடைக்கவில்லை. திரட்டித் துவங்க பிரபல பதிவர் அந்தஸ்து மிக மிக அவசியம். உங்களுக்குள் திரட்டி துவங்கும் கனவு இருந்தால் முதலில் பிரபல பதிவர் ஆகுங்கள், பிரபலப் பதிவர் ஆக என்ன என்ன எழுத வேண்டும் என்பதை பிரபலப் பதிவர்களின் பதிவுகளைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், அதை நானே சொன்னால் விமர்சனம் ஆகிவிடும்.

* பிரபல பதிவர் ஆகி திரட்டி துவங்கியவுடன் அதை அடுத்த கட்ட மார்கெட்டிங்க் செய்வது முக்கியம், அதற்கு உங்களை பிரபலம் ஆக்கிய திரட்டியிலேயே அதையும் செய்துவிட முடியும். உலகிலேயே உன்னதமானது இந்த புது மாடல் டெலிவிசன் தான் என்பது பழைய டிவியில் விளம்பரமாக ஓடும் போது பழைய டிவி எப்படி நாணாதோ அதே போன்று தான் பழைய திரட்டிகள் புதிய திரட்டிகளின் விளம்பரங்களை சகித்துக் கொள்கிறார்கள், காரணம் பழைய திரட்டிகளின் புரிந்துணர்வு அவற்றை போட்டியாக கருதாமல் மாற்றாக இருக்கட்டுமே என்று நினைப்பதாக இருக்கும், எந்த ஒரு பழைய திரட்டியும் புதிய திரட்டிகளின் வருகையை ரசிக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக போட்டியாக நினைப்பது இல்லை என்பதே புதிய திரட்டிகளின் பலம் என்பதை உணர்ந்தாலே உங்கள் திரட்டிகள் அந்த பழைய திரட்டிகள் வழியாக விளம்பரம் செய்ய பிரபலமாகும்.

* பிறகு கூகுள் பஸ், கூகுள் + மற்றும் அனைத்து சமூக இணைய தளங்களிலும் உங்களை நண்பர்களாக நினைப்பவர்கள், இணைத்திருப்பவர்கள் அடிக்கடி உங்கள் திரட்டி பற்றிய விளம்பரங்களை சகித்துக் கொள்வார்களா என்ற எண்ணமெல்லாம் விட்டுவிட்டு நாள்தோறும் திரட்டி பற்றி, வசதிகள் பற்றி எழுதிக் கொண்டே இருங்கள், உங்கள் விளம்பரம் பிடிக்காதவர்கள் அவர்களாகவே ம்யூட் செய்து கொள்வார்கள், உங்களைக் கடிந்து கொள்ள மாட்டார்கள், ஏனென்றால் எந்த பிரபலப் பதிவரையும் நேரடியாக விமர்சனம் செய்ய இணைந்திருப்பவர்கள் தயங்குவார்கள். அப்படியும் எவரேனும் விமர்சனம் செய்தால் அதுவும் பொருட்டல்ல, உலகில் அனைத்து விற்பனையாளர்களின் வெற்றிக்குப் பின்பும் புறக்கணிப்பின் வலி உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்

* மிக முக்கியமானது அலெக்சா ரேங்கில் உங்கள் திரட்டியில் இடம் என்ன என்பதை நீங்கள் விளம்பரம் செய்தே ஆகவேண்டும், கூடவே தற்போதைய திரட்டி வரிசையில் நீங்கள் எவ்வளவு தூரம் பிறத் திரட்டிகளைக் புரட்டி முன்னேறி இருக்கிறீர்கள் என்பதையும் விளம்பரமாகச் செய்ய வேண்டும், அதற்கு உங்கள் நண்பர்களும் மதீப்பீடு கொடுத்து சமூக இணையத் தளங்களில் விளம்பரம் கொடுத்து, பிற திரட்டிகளை முடிந்தால் விமர்சனம் செய்து கூட உங்கள் திரட்டிகளை அவர்கள் பிரபலப்படுத்திவிடுவார்கள்

* திரட்டியின் பெயர் ? அது தமிழுக்கு தொடர்ப்பு இல்லாமலும் தமிழிஷ் போல பாதி தொடர்பிலும், இண்டலி, சுண்டலி போல் முற்றிலும் தொடர்பே இல்லாமல் இருக்கலாம், ஆனாலும் நாம் தமிழுக்குத்தான் சேவை செய்கிறோம் என்ற நினைப்பு இருந்தாலே போதும்

* அடுத்து எதாவது ஸ்பான்ஸர் பிடித்து பதிவர்களுக்கான போட்டிகளை நடத்த வேண்டும், இவற்றையெல்லாம் முறையாகச் செய்யும் போது உங்கள் திரட்டி மிக விரைவில் ஆரம்பித்து இரண்டே நாளில் கூட பிரபலமாகிவிடும்

* முக்கியமாக பதிவர்களுக்காக பதிவர்களால் நடத்தப்படும் திரட்டியின் விளம்பர வருமானத்தில் பதிவர்களுக்கும் (பதிவுகளின் எண்ணிக்கை அடிப்படையில்) பங்கு கிடைக்கும் என்பதை திரட்டியின் தீமாக வைத்துக் கொள்ளுங்கள்.

* பிரபல இணையத்தளங்கள் நக்கீரன், தினமலர் போல் வெப்டிவியையும் உங்கள் திரட்டிகளில் வைத்திருப்பது மேலும் பதிவர் மற்றும் வருகையாளர் எண்ணிக்கையைக் கூட உதவும்

******

* கடைசியாக மிகவும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆபத்தான தகவல், திரட்டி நடத்துபவரின் ஓய்வு நேரங்களைத் தாண்டி தூக்க நேரத்தையும் திரட்டி தின்றுவிடும், கூடவே பதிவர் பஞ்சாயத்து முதற்கொண்டு, எவரேனும் ஆபாசத் தளங்களை இணைத்திருக்கிறார்களா என்று கண்கொத்திப் பாம்பாக செல் போனை ஆன் செய்துவிட்டு விழிப்போடு இருக்க வேண்டும்.


யப்பாடா பதிவை பிரபலமாக்குவது, பிரபலப் பதிவர் ஆகுவது எப்படி என்று தான் பல பதிவர்கள் மொக்கையாக எழுதியுள்ளார்கள், முதன் முதலில் திரட்டியை பிரபலப்படுத்தவது எப்படி என்கிற (மொக்கை) இடுகையை இட்டு பெருமை எனக்கே சாரும், ஜெமோவும் கூடவே ஞானியும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.

24 அக்டோபர், 2011

தீவாளி !

தீபாவளி என்று எழுத்துக் குறையாமல் (அக்ஷ்ரம் சுத்தமாக..ம்பா) சொல்லிப் பழகி இருக்கவில்லை, நாங்கள் சிறுவயதில் பெற்றோர்களைப் பார்த்து தீவாளி இன்னும் 40 நாளில் 30 நாளில் 20 நாளில் 10 நாளில் வருது என்று நாட்களை மகிழ்ச்சியோடு எண்ணிக் கொண்டிருப்போம், காரணம் புத்தாடை, பட்டாசு கொஞ்சம் காசு கிடைக்கும், அப்பா வாங்கிவரும் பட்டாசுகளை வயதுக்கேற்ற வகைகளை பங்குபிரித்து தீவாளிக்கு முதல் நாள் இரவில் துவங்கும் வெடிச்சத்தம் மறுநாள் நடு இரவு வரைத் தொடரும், வெடிக்காத வெடிகளைப் பொறுக்கி எடுத்து வந்து நண்பர்களுடன் சேர்ந்து அவற்றின் மருந்துகளை ஒன்றாகக் கொட்டி பத்தவைத்துவிடுவோம், பல தடவை திடிரென்று பற்றிக் கொண்டு கைகளை ஓரளவுக்கு வேகை வைத்திருக்கிறது என்றாலும் அந்த பயமின்றி அதே வேலை மறு ஆண்டுகளிலும் தொடரும்.

முதல் நாள் பின்னிரவில் தூங்கச் சென்றாலும் அதிகாலை 5 மணிக்கு எழுப்பி விட்டு, முகம் கழுவச் சொல்லி, பல் விளக்கச் சொல்லி சாமி அறைக்கு அழைத்துச் சென்று நிற்கவைப்பார்கள், அதற்கு முன்பே புத்தாடைகளுக்கு சந்தனமும், குங்கமும் இட்டு வைத்து, நல்லெண்ணை, சீயக்காய் வைத்து கொஞ்சம் சாம்பிராணி போட்டு சாமி கும்பிடச் சொல்லி, ஒவ்வொருவருக்கும் அப்பாதான் தலையில் எண்ணை வைத்து தேய்த்துவிடுவார், தீவாளி லேசான குளிர்காலம் ஆகையால் வெதுவெதுப்பான வெண்ணீர் சுடவைத்து அண்டாவில் கலக்கி வைத்திருப்பார்கள், எண்ணைப் போக சீயக்காய் தேய்த்து குளிப்பாட்டி விடுவார்கள்.

அம்மா உள்ளிட்ட அனைவரும் குளித்த பின்பு, புத்தாடைகளை அணிந்து, விடிய விடிய செய்த அன்றைய பலகாரங்களான சுழியம், மசால்வடை, மெதுவடை, இட்லி, தோசை ஆகியவற்றுடன் முன்பே செய்த முறுக்கு, கெட்டி உருண்டை, சீனி உருண்டை, அதிரசம், சோமாசா உள்ளிட்டவைகளுடன் கொஞ்சம் பட்டாசுகளையும் சேர்த்து சாமி அறையில் வைத்து படைத்துவிட்டு சூடம் கொளுத்தியதும் கும்பிட்டுவிட்டு, அம்மா அப்பா காலில் விழுந்து ஆசி வாங்க வேண்டும், கண்டிப்பாக ஒன்று அல்லது இரண்டு ரூபாய் ஆசியுடன் சேர்ந்தே கிடைக்கும், பிறகு அனைவரையும் வரிசையில் அமரச் செய்து உணவு உண்போம், அக்கம் பக்கம் உறவினர்கள் வீட்டுக்குச் செல்ல அவர்களும் சில்லரைகள் மற்றும் பலகாரங்களைக் கொடுப்பார்கள், எண்ணைப் பலகாரங்களைத் தின்று தின்று மதியம் பசியே எடுக்காது.

பின்னர் நண்பர்கள் (10 - 15 வயது) புடைசூழ திரையரங்கிற்குச் செல்வோம், மதியம் சென்றால் மாலைக்காட்சிக்குத்தான் டிக்கெட் கிடைக்கும், மூன்று மணி நேரம் அடுத்தக் காட்சிக்காக நீள் வரிசையில் நின்றால் தான் அதுவும் கிட்டும், படம் பார்க்க வரும் கிட்டதட்ட 90 விழுக்காட்டினர் புத்தாடை அணிந்திருப்பர். படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து எஞ்சிய வெடிகளில் கொஞ்சம் கார்திகை மாத சொக்கப்பானையுடன் வெடிக்க எடுத்து வைத்துவிட்டு மீதத்தை கொளுத்துவோம், அப்படியாக ஆண்டு ஆண்டுக்கு தீபாவளி செல்லும். சின்ன வயசில உடம்புல அறுவாள் மனையா இருக்கும் ? ஒரு ஆண்டுக்கு மேல் எந்த ஆடையும் கிழியாமல் இருந்ததில்லை, ஆனால் என் குழந்தைகளுக்கு சிறியதாகிவிட்டது என்று பயன்படுத்தாமல் விடுப்பதைத் தவிர்த்து எந்த ஆடைகளும் கிழிவதே இல்லை. பள்ளிச் சீருடைத் தவிர்த்து புத்தாடை வாங்கும் பழக்கம் ஏழ்மையான குடும்பங்களுக்கு தீபாவளி அன்று தான் வாய்ப்பே. அப்படித்தான் எங்களுக்கு புத்தாடை கிடைக்கும் என்பதால் தீபாவளி வருகிறதென்றால் மகிழ்ச்சி பொங்கும்.

*****

இன்றும் பழக்க வழக்கங்களாக பண்டிகைகள் தொடரத்தான் செய்கின்றன, இன்றைய தேதிகளில் ஆடை வியாபரங்கள் உள்ளிட்ட தீபாவளி வியாபரங்கள் பெருகி இருக்கும் அளவுக்கு கொண்டாட்டங்கள் பெருகி இருக்கவில்லை என்பதே உண்மை. ஆண்கள் வெள்ளைக்காரன் பேண்டுக்கு மாறிவிட்டு பெண்களை மட்டும் இந்திய ஆடைகளை அணிய பணிக்கிறார்கள், பண்பாடுகளை பெண்கள் மூலம் தான் காக்க முயற்சிக்கிறார்கள் என்ற எண்ணம் என்னிடம் இருந்தது, ஆனால் புடவைகள் மற்றும் பஞ்சாபி சல்வார் உடைகளில் இன்றைய வடிவமைப்பு மற்றும் அதன் விலைகளை வைத்துப் பார்க்கும் போது பெண்கள் இன்னும் ஆடைகளை மாற்றிக் கொள்ளாமல் இருக்க ஆண்களின் கட்டுப்பாடு காரணம் அல்ல, அவற்றின் விலைகளும் அவற்றின் பகட்டுமே காரணம் என்று புரிந்தது, 25 ஆயிரம் மதிப்புள்ள பட்டுப்புடைவுக்கு கிடைக்கும் மதிப்பு என்ன தான் நவீன நவநாகரக விலை உயர்ந்த ஆடை அணிந்திருந்தாலும் கிடைப்பதில்லை என்பதால் தான் பெண்கள் இன்னமும் புடவைக்கும் சல்வாருக்கும் விடைச் சொல்லாமல் இருக்கிறார்கள் என்பது தீபாவளி துணிச்சந்தைகளை வைத்து தெரிந்து கொண்டேன்.

பட்டாசுகளுக்கு மவுசு குறைந்துள்ளதை சென்னையில் என்னால் வெளிப்படையாகப் பார்க்க முடிந்தது, பெரிய அளவு கூட்டமில்லை, விலைகளும் விண்முட்டும் அளவுக்கு இருந்தது, பட்டாசுகளைப் புறக்கணிப்பது நல்லது தான். 'சின்ன சின்ன பிஞ்சு விரல்களாய் தீப்பெட்டிக்குள் தூங்குகிறது தீக்குச்சிகள்' என்று சிறுவர்களை வேலை வாங்கும் தீப்பெட்டித் தொழில் பற்றிய கவிதையை எப்போதோ படித்திருக்கிறேன்,

குழந்தைகளுக்கு தேவையான உடைமைகளை அவ்வப்போது வாங்குவதால் தீபாவளிக்கு வாங்குவது என்பதில் எந்த தனிச்சிறப்போ அவர்களுக்கு எதிர்பார்ப்போ எதுவும் இல்லை, அது ஒரு வழக்கமாகத் தொடர்கிறது அவ்வளவே.

இன்றைய தீபாவளிகள் தீவாளி அல்ல, இன்றைய தீபாவெளிகள் பணப்புழக்கம் ஏற்படுத்த மட்டுமே வழி செய்கிறது, துணி உள்ளிட்ட சந்தைகளின் விற்பனையைப் பெருக்குகிறது. அனால் முந்தைய தீவாளிகளில் கொண்டாட்டங்களும் இருந்தன. பண்டிகைகளை மறந்துவிட்டால் பண்பாட்டை தொலைத்துவிடுவோம் என்கிற அச்சத்தில் தான் தீபாவளிகள் ஒப்பேறி வருகின்றன. சிங்கையில் தீபாவளிக்கு விடுமுறை என்பது இங்குள்ள இந்துக்களுக்கு கிடைத்த வரம் தான். சிங்கையில் குட்டி இந்தியா பகுதிகள் களைகட்டி இருக்கும்.

இராவணனைக் கொன்றது தான் தீபாவளி என்று வட இந்தியாவிலும், நரகாசூரனை கிருஷ்ணன் அழித்தான் என தென்னிந்திய தீபாவளி கதைகளின் நதிமூல ரிஷி மூலங்கள் எதுவாக இருந்தாலும் மக்கள் வாழ்க்கையில் சில மகிழ்ச்சிகளைக் கொடுக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை,அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்,

14 அக்டோபர், 2011

கடன் சுறாக்கள் !

சட்டவிரோத கடன் கொடுப்பது சிங்கப்பூரில் குற்றம், கடனில் என்ன சட்ட விரோதம் ? அரசிடம் கடன் வழங்கும் நிறுவனங்களாக அனுமதி பெறாதவர்கள் அளிக்கும் கடன்கள் சட்டவிரோதம் என்கிறது சிங்கப்பூர் அரசு. அவர்களிடம் ஏன் கடன் வாங்க வேண்டும் ? எந்த ஒரு பொருள் அடமானமும் இல்லாமல் கடன் வழங்க முன்வருபவர்கள் அவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதால் அடமானப் பொருள்கள் எதுவும் இல்லாதவர்கள் உடனடிக்கடனுக்கு அவர்களைத் தான் நாடுகிறார்கள், ஆனால் திருப்பிக் கொடுக்கும் திறன் பற்றி சட்டவிரோத கடன் வழங்கும் நிறுவனங்கள் ஆராய்வதில்லை, காரணம் மிரட்டியாவாது உயர்ந்த வட்டிக்கு கொடுக்கப்பட்டுவிடும் கடன்களை திரும்பப் பெற்றுவிடலாம் என்பது அந்நிறுவனங்களின் நம்பிக்கைகள், அவர்கள் அமர்த்தி இருக்கும் முகவர்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

சட்டவிரோத கடன் வழங்கும் நிறுவனங்களை 'லோன் சார்க்' அதாவது கடன் சுறாக்கள் என்கிறது சிங்கப்பூர் அரசு, அந்த 'லோன் சார்க்' என்னும் குறியீட்டுச் சொல்லில் அவர்களின் செயல்பாடுகளின் தீவிரமும் ஆபத்தும் அடங்கியுள்ளது.

பணத்தை வைத்து செய்யும் பணத்தொழிலில் உற்பத்தி செலவு மற்றும் விற்பனையில்லாமல் தேக்கம் என்கிற தொழில் குறியீடுகள் இல்லாததால் பணத் தொழிலான வட்டித் தொழிலை (பைனான்ஸ்) ஈடு (Yield) நிறைந்ததாகக் கருதுகின்றனர். கல்வி, வீடு, உந்துகள் (வாகனம்) ஆகியவற்றிற்கு அரசு சார்பு / அரசு வங்கிகள் வட்டிக்கு பணம் வழங்கினாலும், அவைச் சாராத உடனடி செலவுகளுக்கு தனியார் கடன் வழங்கும் நிறுவனங்கள் முன்வருகின்றன. வெறும் குடியுரிமை அடையாள அட்டையைக் காட்டி கையொப்பம் இட்டு வேறு எதும் ஆவணங்கள் இன்றி தான் தனியார்களிடம் கடன் வாங்குகின்றனர். இதில் கடன் வழங்குபவர்கள் எடுப்பது 'ரிஸ்க்' தான். இந்த ரிஸ்க் எடுக்காவிட்டால் வேறு எதாவது தொழிலில் பணத்தை முடக்க வேண்டும், அதற்கான அரசு விதிகளைப் பின்பற்ற வேண்டும், தொழிலில் லாபம் வரும் என்ற முகாந்திரமும் இல்லை.

அவசரத்தேவைக்கு பணம் வாங்குபவர்களில் 50 விழுக்காட்டினர் திருப்பித்தர இயலாதவர்களாக பணத்தேவை மிக்கவர்களாக உள்ளனர், அவர்களில் வேலை யற்றோரும், சூதாடுபவர்களும் உண்டு, 'அடகுவைத்த பொருள்களை மீட்டு மறு அடகு வைக்க பண உதவி' மாதா பைனான்ஸ் விளம்பரம் போல் ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வழங்கும் நிறுவனங்களில் கடன் வாங்கி வாங்கி விழிப் பிதுங்கும் போது பிறகு கடன் வாங்கியவர்கள் செல்பேசியை அணைத்து வைத்துக் கொண்டு, வேறெங்காவது சென்றுவிடுவார்கள், தொடர்ந்து நாளைந்து முறை அழைத்துப் பார்க்கும் கடன் வழங்கும் நிறுவனங்கள், ஆள் தொடர்பிற்கு வருவதில்லை, பணம் வருவது கடினம் என்ற முடிவுக்கு வரும் போது, அவர்கள் பிற முகவர்களை அல்லது தான் திரைமறைவில் வேலைக்கு வைத்திருக்கும் நபர்களிடம் கடன் வாங்கிச் சென்ற வீட்டினரின் முகவரிகளைக் கொடுத்துவிடுகின்றனர்.


அந்த முகவரிக்கு செல்லும் நபர்கள் ஆட்கள் புழங்காத நேரமாகப் பார்த்து மின்தூக்கிகளைத் தவிர்த்துவிட்டு, படிக்கட்டு வழியாக ஏறி, உயரம் அதிகமான மாடிகளில் நடுவில் எங்காவது இறங்கி, பின் மாடிப் படி ஏறி, கையில் கொண்டு சென்றிருக்கும் வண்ணக் கலவையை (நிப்பான் பெயிண்ட் போன்றவை) கதவுகளில், சுவர்களில் தெளித்தோ, கிறுக்கியோ வைத்துவிட்டு ஓடிச் சென்றுவிடுவார்கள், இது போன்று செய்வதன் மூலம் அண்டைவீட்டுகாரர்கள் முன் கடன் வாங்கியவர் நாணும் நிலை ஏற்படும் கொடுத்தக் கடன் வந்துவிடும் என்று செய்கிறார்கள். சிலர் தனியாகக் கொண்டு வந்த பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு ஓடிவிடுவர். கேமராக்கள் வழியாக பிடிபடுபவர்களுக்கு கடுமையான சிறை தண்டனைகள் கொடுக்கப்படுகின்றன.

லோன் சார்க்குகள் கடனாளிகள் வீட்டின் முன்பு எழுதுவது 'O$P$' இதன் பொருள் "Owe money, Pay money"


எங்கள் வீட்டுக்கு கிழ்வீட்டில் வசிக்கும் ஒருவர் லோன் சார்கிடம் பணம் வாங்கி திருப்பி செலுத்தாததால் பெயிண்ட் ஊற்ற வந்தவன் யாரும் பார்க்காமல் விரைந்து செயல்பட நினைத்து நாங்கள் இருக்கும் அதே தளத்தின் வேறொரு வீட்டின் முன் ஊற்றிவிட்டுச் சென்றுவிட்டான். அதாவது 7 ஆம் மாடியில் ஊற்ற வந்தவன் 8 ஆம் மாடியின் ஒருவீட்டின் முன்பு ஊற்றி ஓடி இருக்கிறான், பிறகு சில நாள் சென்று கடன் பெற்ற நபரின் அஞ்சல் பெட்டி மீது பெயிண்ட் ஊற்றவந்தவன் எல்லாப் பெட்டிகளிலும் அது படும் படி செய்து ஓடிவிட்டான், இது போன்ற தேவையற்ற சங்கடங்களும் வசிப்போர்களுக்கு வந்து சேருகிறது. இதனால் தான் கடன் வழங்கிகளை கடுமையாக ஒடுக்கி வருகிறது சிங்கப்பூர் அரசு, சட்டவிரோதமாக கடன் பெறுவதற்கு கட்டுபாடுகள் நேரடியாக இல்லை, ஆனால் அவ்வாறு பெற்று சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள் என்கிற அறிவுறுத்தலை அரசு எப்போதும் செய்கிறது ஆனால் வழங்குபவர்கள் சிக்கினால் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் உண்டு. லோன் சார்க்குகளிடம் பெயிண்ட் ஊற்றுபவர்களாக பணிபுரிவர்களில் சிங்கப்பூர் வாசிகள் மிகக் குறைவு, சமுகவிரோத குழுக்கள் (கேங்க்ஸ்டர்), சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள், சட்டவிரோதமாக வேலையில் ஈடுபடுவர்கள் (வேறு வேலைக்கு வந்தவர்களை பகுதி நேரமாக இயக்க வைப்பது), படிக்க வந்த பிற நாட்டு மாணவர்கள் ஆகியோர்களைத்தான் இந்நிறுவனங்கள் நாடுவதாக இதுவரை கைது செய்ப்பட்டவர்களின் விவரங்களை வைத்து அறிய முடிகிறது.


தற்போது பல அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்தூக்கிகளில் கேமரா பொறுத்தி பிற நபர்களின் செயல்பாடுகள் படம்பிடிக்கப்படுகிறது, மேலும் சட்டவிரோத கடன் வழங்கிகளின் செயல்பாடுகளை குறைக்கவும், முற்றிலும் ஒடுக்கவும் கடன் வழங்கும் நிறுவனங்களின் அறிவிப்புகள் குறித்த கட்டுபாடுகளை அறிவித்திருக்கிறது இன்று,

1.கடன் வழங்கும் நிறுவனங்கள் தங்களது விளம்பரங்களில் தொடர்ப்புக்கு செல்பேசி எண்களை கொடுக்கக் கூடாது, லேண்ட் லைன் எனப்படும் அலுவலக எண்களை மட்டும் தான் கொடுக்க வேண்டும்
2. குறைந்த வட்டி என்று போடாமல் எந்த ஒரு (ஸ்டார், பின் விளக்கம்) * போடாமல் வட்டி விகிதம் மற்றும் பிற விதிகளை நேரடியாகவே விளம்பரங்களில் எழுத வேண்டும்
3. இதில் சொல்லப்பட்டு இருக்கிற விதிமீறலில் விளம்பரம் வந்தால் 20,000 வெள்ளிகள் தண்டம்(பைன்), ஆறு மாத சிறை மற்றும் உரிமம் நீக்கம் உள்ளிட்டவை கடுமையான நடவடிக்கை

கடன் வழங்கும் நிறுவனங்கள் எல்லை மீறி கடன் வாங்க ஆசையைக் கிளப்பிவிடுவம் வண்ணம் விளம்பரங்கள் செய்து பொது மக்களைத் தூண்டி சிக்கல் ஏற்படுத்துவதாக குற்றம் சுமத்தியே இந்த வரையறைகளை சுட்டியுள்ளது.

இது போன்ற கட்டுப்பாடுகள் வைத்திருப்பதால் சிங்கப்பூரில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்பவர்கள் மிகக் குறைவு. இருந்தாலும் அவமானம் ?

தேவைக்கு மிஞ்சி கடன் வாங்குபவர்கள், சட்டவிரோதமாக பணம் கொடுத்து வாங்குபவர்கள் என மான / அவமானம் பார்க்காதவர்கள் எல்லா நாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். திருடுதல், ஏமாற்றுதல் போன்று பெரிய அளவில் இல்லாமல் திரும்பிக் கொடுக்க வழியில்லை என்று தெரிந்தும் கடன் வாங்குவது ஒருவகையான பிழைப்பு, சாமார்த்தியம் என்று நினைப்பவர்களாகவும், கவலையற்றவர்களாகவும் தான் அவர்களில் பலர் உள்ளனர்.

இணைப்பு : விக்கி கட்டுரை
கடன் வழங்கு நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் அரசின் புதிய கட்டுபாடுகள்

7 அக்டோபர், 2011

முன்னாள் நீலப்பட நடிகை அன்னபெல் சாங்க் !

இழிவால் புகழடைந்தவர்களாக உலகில் பலர் உள்ளனர், அவர்களை பின்பற்றவேண்டாம் என்பதற்கான பாடம் என்ற வகையில் அவர்களது செயல்பாடுகள், வாழ்கை வரலாறுகளும் சேர்த்தே பதியவைக்கப்படுகிறது. ஒருவரின் பாலியல் நாட்டம் அல்லது விருப்பம் என்பவை பிறருக்கு துன்பம் விளைவிக்காவிடில் அவரது செயல்பாடுகளில் அரசுகள் தலையிடத் தேவை இல்லை என்பதாக ஐரோப்பிய நாடுகளில், தனிமனித பாலியல் சார்ந்த நடவடிக்கைகளில் அரசின் கட்டுப்பாடுகள் என்று எதுவும் கிடையாது. தனிமனித பாலியல் விருப்பில் இந்தத் கட்டுப்பாடின்மையை பாலியல் தொழில் சார்ந்து பயன்படுத்திக் கொள்ளும் ஐரோப்பிய மற்றும் அவர்களைப் பின்பற்றும் நாட்டினரில் சிலர் வெளிப்படையான பாலியல் தொழிலிலும் அடல்ட் இன்டஸ்ட்ரி என்னும் வயதுவந்தோருக்கான பாலியல் நாட்டம் தொடர்பான நீலப்படம் உள்ளிட்டவைகளை தயாரித்தும் நடித்தும் அதைத் தொழிலாக மாற்றிக் கொண்டுள்ளனர்.

*****

சிங்கப்பூரில் ஆண்டு 2000 க்கு முன்பு சற்று அதிர்ச்சி ஏற்படுத்திய பெயர்களில் அன்னபெல் சாங்க் என்ற பெயரும் ஒன்று, காரணம் தங்கள் குழந்தைகளுக்கு இங்கு இடம் கிடைக்காதா ஏங்கும் ஒரு நல்லப் பள்ளியில் முதல் மாணவியாக இருந்த ஒருவரின் பெயர் புகழ்பெற்ற நீலப்பட நடிகையாகவும் இருந்தது என்பதே அந்த அதிச்சிக்கு காரணம், அவர் பெயர் கிரேஸ் கெக், அவர் எப்படி 'அன்னபெல் சாங்க்' எனப்படும் நீலப்பட நடிகை ஆனார் என்பதே பரவலான பேச்சாக இருந்ததாம். கிரேஸ் கெக் அடிப்படையில் மிகவும் அறிவுள்ள மாணவி அதனால் தான் அவளுக்கு அந்த புகழ்பெற்ற பள்ளியில் இடம் கிடைத்தது. பின்னர் சட்டக் கல்லூரிப் படிப்பிற்காக லண்டன் சென்ற போது தான் அவளது வாழ்க்கைப் பாதையே மாறியது, போதைக்கு அடிமையான அவளுக்கு உதவுவதாகக் கூறிய ஆடவன் ஒருவன் அவளிடம் பேசி உடலுறவுக்கு அழைக்க, அவளும் இணங்க, அவன் தனது நண்பனையும் அழைத்து வந்து குப்பைகள் குவிந்த இடத்தில் வைத்து அவளது விருப்பத்தை மீறி பாலியல் வன்புணர்வில் ஈடுப்பட்டார்களாம். போதைப் பழக்கத்தில் இருந்து மீள முடியதவளாகவும், ஒழுக்கம், ஒழுங்கீனம் தொடர்பில் கல்லூரி அவளை இடைநீக்கம் செய்ய, பிறகு அமெரிக்கா சென்று புகைப்படக் கலைத் தொடர்பான படிப்பில் பட்டப்படிப்பை தொடர்ந்தாள், கூடவே அவள் தன் செலவிற்கு வழிதேட நீலப்பட உலகம் அவளை வேலைக்கு அமர்த்திக் கொன்டது. 'அன்னபெல் சாங்க்' என்ற பெயரில் நீலப்பட நடிகை ஆனாள்.

22 வயதில் நீலப்பட நடிகையாக தொடர்ந்த தன் தொழிலை 52 படங்களுக்குப் பிறகு, தன் 31 வயதில் விட்டுவிட்டு தற்போது தகவல் தொழில் நுட்பத் துறையில் வெப் டிசைனராக பணிபுரிந்து வருகிறாராம்.

எல்லோரையும் போல இவள் ஒரு நீலப்பட நடிகை தானே ? எப்படி அவளது பெயர் பேசப்படும் பெயராகிற்று ? அவர் தொழிலில் அவர் செய்த சாதனை தான் அதற்கு காரணம். அதாவது ஒரே நாளில் 10 மணி நேரத்திற்குள் 251 ஆடவர்களுடன் இவர் உடலுறவு கொண்டதாக விளம்பரம் செய்து வெளியிடப்பட்ட தகவலும் அந்த நீலப்படமும் (World's Biggest Gang Bang') பெரும் சாதனையாக பரப்பப்பட்டது. இதனை கேள்விப்பட்ட சிங்கப்பூர் சீனமக்கள் 'சிங்கப்பூர் பெண் நிகழ்த்தி இருப்பது கேவலமான சாதனை, நாம் வெட்கப்பட வேண்டி இருக்கிறதே' என்று அதிர்ச்சி அடைந்தனர்.

*****

நான் படித்த தகவல் அடிப்படையில் நீலப்படங்களில் நடிப்பவர்களுக்கு பெரிய அளவில் வருமானம் ஒன்றும் கிடையாது, மற்ற தொழில்களில் முகவர்கள் வருமானம் ஈட்டுவதைப் போலவே பாலியல், நீலப்படத் தொழில்கள் முகவர்களும், தயாரிப்பாளர்களும் மட்டுமே வருமானம் ஈட்டுகின்றனர், ஒரு நீலப்படம் நடிப்பவர்களுக்கு நாள் கூலியாக அவர்களின் வயதிற்கேற்ப ஒரு சில ஆயிரங்கள் வரைக்கும் கிடைக்கும், அவர்களுக்கு மருத்துவ உதவியோ பிற உதவிகளோ கிடைக்காது, அன்றாடம் மருத்துவ சோதனைகளை சொந்தப் பணத்தில் தான் அவர்கள் செய்து கொள்ள வேண்டும். இந்த தொழில் வரும் பெண்கள் 30 வயதிற்குள் அவை கசந்து போய்விடும், காரணம் சொன்னபடி தயாரிப்பாளர்கள் அவருக்கு ஊதியத்தைத் தருவதில்லை, சாதனை நிகழ்த்திய அன்னபெல் சாங்கிற்கு தயாரிப்பாளர் பேசியபடி 10000 டாலர் கொடுக்கவும் இல்லையாம்.


நீலப்பட நடிகையாக வலி நிறைந்த தன் கதையை டாக்குமெண்ட்ரியாக எடுத்தப்பிறகு, தொழில் இருந்து ஓய்வு பெற்ற சாங்க், தனது இணையப்பக்கத்தை மூடிவிட்டு 'முகப்பில் அன்னபெல் சாங்க் இறந்துவிட்டாள்' என்று அறிவித்துவிட்டு தற்போது தான் பார்த்துவரும் கணிணி தொழில் நுட்பத்துறையில் பணி புரிந்துவருகிறாளாம், அவரது பழைய வாழ்க்கைப் பற்றி தெரிந்தவர்களிடம் கேள்விகளை தவிர்க்கிறாராம், 'நான் மறந்த ஒன்றைப் பற்றி என்னிடம் சொல்ல ஒன்றும் இல்லை' என்று ஒதுங்குகிறாராம். அவர் படித்தவர் என்பதால் அதிலிருந்து விலகி புதிய வழிக்குச் செல்ல முடிந்தது, படிக்காதவர்களுக்கு உடல் தளர்வுறும் வரையில் சொற்ப பணத்திற்கு அதே தொழில் தான்.

இதுபோன்ற தொழில்களை யாரும் விரும்பிச் செய்வதோ, தொடர்வதோ கிடையாது, தவறான பழக்க வழக்கங்கள் அவர்களை அங்கு தள்ளிவிடுகிறது

இன்றும் கூட எதோ ஒரு நடிகையின் நீலப்படம் கிடைப்பதாகத் தகவல் வந்தால் பார்க்க விருப்பமில்லாதவராகோ, அது இங்கு கிடைக்குமா என்று வீடியோ கடைக்காரர்களிடம் கேட்காதவர்கள் மிகக் குறைவே. எந்த ஒரு சந்தைகளும் தேவைக்கு முன்பே தோன்றிவிடுவதில்லை, தேவைகள் உருவாகும் போது அதனை நிரப்ப சந்தைகள் உருவாகின்றன, சதைத் தொழில்களான பாலியல் மற்றும் நீலப்படப் சந்தைகளின் பெருக்கத்திற்கும் இதே தான் காரணம். விருப்பமின்மையால் தள்ளப்படும் பெண் பாலியல் தொழிலாளிகள், நீலப்பட நடிகைகளின் வாழ்க்கை என்பது 'தீயில் விழுந்த தொழுநோயாளியின் போராட்டம் போன்றது, தானாக மீளவோ, அறுவெறுப்பின்றி அவர்களை மீட்க முன்வருபவர்களோ மிகக் குறைவே. அன்னபெல் சாங்க் மீண்டுவிட்டார். ஆனால் அவரால் அவரது பெற்றோர்கள் பட்ட மனக்காயத்தை அவரால் ஆற்ற முடியாது.

விக்கி இணைப்பு : Annabel Chong
*****

சிங்கப்பூரில் பிறந்து தற்போது நியூசிலாண்டில் வசிக்கும் மற்றொரு பெண்ணின் நீலப்பட நடிகையாகும் விருப்பம் சென்றவாரம் செய்தியாகி இருந்தது, அதில் அவர் தனது முன்னோடியாக குறிப்பிட்டு இருப்பவர்களில் 'அன்னபெல் சாங்க்' கும் ஒருவர், என்பதால் அன்னபெல் சாங்க் பற்றிய குறிப்புகள் கிடைத்தது

5 அக்டோபர், 2011

இவர்களின் ஆயுதங்களுக்கு பூஜை உண்டா ?

'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற பம்மாத்து உண்மை என்றால் இவர்களின் (கழுவிய)
ஆயுதங்களுக்குக் கூட பூசைப் போட சொல்லலாம் அல்லவா ?





3 அக்டோபர், 2011

கலவை 03/அக்டோபர்/2011

உள்ளாட்ச்சித் தேர்தல் : இந்த முறை தேமுதிக தவிற வேறெந்தக் கட்சியும் கூட்டணி இன்றி போட்டி இடுகின்றன. சமச்சீர் கல்வி, கூடங்குளம், பரம குடி கலவரங்கள் குறித்து தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்காமல் ஆளும் கட்சிக்கு ஜிங்சா அடித்து வந்த விஜயகாந்த், கூட்டணியில் இருந்து கழட்டிவிட்அதிமுக மீது விமர்சனங்கள் வைத்துவருகிறார். 'அண்ணே உங்க நேர்ம ரொம்ப பிடிச்சு இருக்கு. மூன்று மாதங்களாக மின்வெட்டு உள்ளிட்ட பிரச்சனைகள் ஆளும்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். உள்ளாட்ச்சித் தேர்தல்கள் கட்சி பார்க்காது செயல்படுபவரை ஆதரித்தால் அந்தப்பகுதி மக்கள் பயன்பெறுவர். தமிழகத்தில் காங்கிரசைத் துடைத்தது என்பது தவிர்த்து மக்கள் விரோத ஆட்சியாளர்களே தமிழகத்தின் அதிகாரமட்டத்தில் தொடர்வது தமிழகத்தின் சாபக்கேடு. சன் டிவி ஒருநாளும் இல்லாமல் மக்கள் பிர்ச்சனைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதாம், நேற்றைய செய்திகளில் 'அறிவிக்கப்படாத மின் வெட்டு' பற்றி ஐந்து நிமிடம் பொதுமக்களிடம் குறை கேட்டு ஒளிபரப்பினார்கள், முகவின் இருண்ட காலத்தில் இது போல் ஒரு நாளும் சன் டிவி செய்தது இல்லை. அதில் பேட்டி கொடுத்த திருநெல்வேலி முதிய பெண் ஒருவர் நேற்றைய செய்தியில் 'திடிரென்று கரண்டு போகுது எங்களால வேல வெட்டி' எதையும் செய்ய முடியவில்லை என்றார். அதற்கு முந்தைய நாள் அதே அம்மா 'நகப் போட்டுக்கிட்டு வெளியே போக முடியல ஒரே திருட்டு பயமாக இருக்கு' என்று தொடரும் நகை திருட்டுகள் குறித்தும் அதற்கு முந்தைய நாள் செய்தியில் பேசினார்.

*******

நாய் செல்லுமா சொர்க்கம் ? சென்ற சனிக்கிழமை அழகான நாய் படம் போட்டு 'முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி' என்ற தகவல் விளம்பரம் சிங்கைத் தமிழ் முரசில் வந்தது. நாயை வளர்த்தவர்களுக்கு அந்த நாய் எந்த அளவுக்கு நன்றியாகவும் அன்பாகவும் இருந்தது என்பதை அந்த விளம்பரம் உணர்த்தியது. ஆனாலும் நாய்க்கு சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு இதெல்லாம் கொஞ்சம் அதிகம் தான். நல்ல வேளை 'ஆத்ம சாந்தி' வழிபாடு என்று அவர்கள் போடவில்லை. பூனைக்கு கடவுள் இருந்தால் அது ஒரு பெரிய பூனை அந்தப் பூனையால் நினைத்த இடத்தில் பாலோ எலியோ வரவழைக்க முடியும், நாய்க்கு கடவுள் இருந்தால் எழும்புத் துண்டுகள் சதைப்பற்றுடன் வரவழைக்கும், நம்ம மனித கடவுள் கான்செப்ட் கூட அப்படித் தானே, நம்மால் முடியாதவற்றை கடவுள் செய்து கொடுத்துவிடும் என்பது நம்பிக்கைதானே. மனிதப் பண்புகளற்ற கடவுள் எந்த ஒரு மதத்திலும் காட்டப்படுவதில்லை என்பதை நினைத்துப் பார்க்கவும்.

*******

இவர்கள் அந்த நாய்களைப் போல் பணக்கார வீட்டில் பிறந்திருகக் கூடாதோ ? என்று நினைக்கும் படி அவலங்களைப் பார்க்க ஆதங்கம், சினம், ஏரிச்சல் ஏற்பட்டது, இவர்களுக்கு மதம் அளித்த கடவுள்கள் நாளொன்றுக்கு கைப்பிடிச் சோறு கூட கொடுக்கமால் போனதை நினைக்க சினம், இவர்களை அடிமைகளாகக் கூட ஏற்றுக் கொண்டு வாழவிடாமல் சாகடிக்கும் எந்திரங்களை நம்பிய இன்றைய முதலாளிகள் உலகத்தின் மீது எரிச்சல். நரக நெருப்பு இன்னும் என்ன என்ன நரகக் கோட்பாடுகள் இருக்குமோ அவற்றையெல்லாம் சோமாலிய மக்கள் நாள்தோறும் அனுபவித்தே வருகிறார்கள், நாம் வீணடிக்கும் உணவில் கூட இவர்களின் பசி போக்கும் பருக்கைகள் இருக்கலாம். பழங்குடி இனருக்கும் ஆதிவாசிக்கும் மதம் வழங்கும் 'ஆண்டவன் அவர்களில் பலருக்கு உண்ண அரிசியே வைத்திருக்கமாட்டான் பின்னே எங்கே அரிசியின் மீது அவர்களின் பெயர்களை எழுதுவது ?


********

செல்பேசி இணையச் சேவை வந்த பிறகு தொலைகாட்சிகளில் செய்தி தவிர்த்து எதையும் விரும்பிப் பார்ப்பது இல்லை. வெளியே செல்லும் இடங்களில் 10 நிமிடத்திற்கும் மிகுதியான பயண நேரம் இருந்தால் யூடியூப் ஓட விடுவேன், அப்படி ஓடவிட்டதில் 'வென்றிடுவேன்........நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்......எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்....' என்ற அகத்தியர் படத்துப் பாடல். அது போன்று போட்டிப் பாடல்கள் இப்பொழுதெல்லாம் படங்களில் மிகக்குறைவு அல்லது இல்லை. டி எம் எஸ் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் இருவரும் கர்ஜனை செய்து பாடி கலக்கி இருப்பார்கள், அதில் இரவணனாக நடிக்கும் ஆர் எஸ் மனோகருக்கு டி எம் எஸ் குரல், இராவணனின் கவுரவம், அகந்தை அனைத்தையும் முகத்தில் அப்பட்டமாகக் காட்டி இராவணின் உயிராகவே உட்கார்ந்திருப்பார். யார் இசைப்பதில் மலை உருகும் என்பதே போட்டி, இராவணனுக்கு அகத்தியருக்கும் போட்டி நடக்கும், ஆக்ரோசமான வாசிப்பில் இராவணனுடைய வீணையின் தந்தி அறுந்துவிடும் தொடர்ந்து வாசிக்கும் அகத்தியர் மலையை உருகச் செய்வார், இராவணன் தோற்றுவிடுவார். இப்ப இந்தப் படம் வந்தால் செல்லாது செல்லாது இரவணனுக்கு வேற வீணையை கொடுத்து வாசிக்கச் சொல்லி போட்டியைத் தொடரச் செய்யுங்கள் என்று சொல்லலாம். கடவுள் வாழ்த்தை கணக்கில் கொண்டு அம்பிகாவதி 99 பாடல் தான் பாடினான் என்று தலையறுத்த சமூகம் இது. வீணை தந்தி அறுகாமல் பாடினால் தான் வெற்றி என்ற கட்டுபாடு எதுவும் இன்றி ஆனால் அதை வைத்தே வெற்றியாளர்கள் முடிவு செய்யப்படுகிறார்களாம் :) முழுப்படமும் இங்கே

யூடியூப் இணையச் சேவை வாழ்க வாழ்க. திரைக்கு வந்து சில நாட்களே ஆன திரைப்படங்களைக் கூட கோடம்பாக்கம் காக்கிறதோ ஆனால் யூடியூப் காக்கும் போல.

********

சிறு கவிதை : சிங்கையில் இந்த வார இலக்கிய விழாவில் கவிமாலைக் கவிதைகள் அடங்கிய நுல்களை வெளியிட்டு இருந்தனர். பொதுவாக கவிமாலைக் கவிதைகள் தலைப்பு கொடுக்கப்பட்டு பின்னர் அவற்றை கவிஞர்கள் தங்கள் சிந்தனையில் எழுதிவந்து கவிமாலை நிகழ்ச்சிகளில் வாசிப்பார்கள், அவற்றில் சிறந்த கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகளை வழங்குவர், வாசிக்க வந்த கவிதைகள் சிலவற்றை ஆண்டுவிழாவில் கவிதைத் தொகுப்பு நூல்களில் சேர்த்து வெளி இடுவார், ஏணியும் தோணியும் என்ற தலைப்பில் ஆகஸ்ட் மாத கவிமாலையில் சேர்க்கப்பட்ட எனது கவிதையும் தொகுப்பு நூலில் வந்திருந்தது, நேரமின்மையால் நான் விழாவிற்குச் செல்லவில்லை

ஏணியும் தோணியும் !

ஏணி ஏறிய பின் எட்டி உதைக்கும் கால்களே !
உங்கள் கால்களின் தன்னம்பிக்கை வலி(மை)யை
உணர்ந்து கொண்ட பெருமையில்
மீண்டும் மீண்டும் பிறருக்காகவும் சாயவே விரும்புகிறேன் !

வறண்ட ஆற்றங்கரையில் ஓய்ந்திருக்கும்
தோணி சொல்லிற்று,
கண்ணீர் பெருக்கில் வீழ்ந்தோரை கரைசேர்க்க
முயல்கிறேன், எடுத்துச் செல்வீர்களா ? இலங்கைக்கு !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்