பின்பற்றுபவர்கள்

31 மே, 2014

அப்பாவின் நண்பர்கள் !

நட்பு என்பது நம்மோடு முடிந்து போகும், உறவுகள் மட்டுமே நிலைக்கும் என்பதால் தான் உறவுகள் தொடர்கதை என்று உணர்ந்தே சொல்லி இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.

ஒவ்வொரு முறையும் ஊருக்கு செல்லும் போது எண்ணங்களை சுமந்து கொண்டு வரும் போது வெறுமையுடன் திரும்புவது எனக்கு வாடிக்கைதான். அப்பா மறைந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அப்பாவின் செயல்களை தம்பி ஞாபகப்படுத்துவான், அப்பா எடுக்கும் காவடி அப்பா செல்லும் சபரிமலை பயணம் இதெல்லாம் நினைவு வைத்திருந்து தம்பி செய்து கொண்டுவருகிறான். எனக்கு தனிப்பட்ட முறையில் காவடி எடுப்பதில் உடன்பாடு இல்லாவிட்டாலும், பார்த்து பழகியது, அப்பாவை நினைவு படுத்துவது என்பதால் முடிந்த வரையில் மே மாதம் காவடி நிகழ்வின் போது ஊரில் இருப்பதற்கு முடிந்த வரையில் முயற்சி செய்து சென்றுவிடுவேன்.
(இது என் தம்பி)
அம்மாவின் முயற்சியில் இல்லாம் விவாசயத்தை முதன்மை தொழிலாகக் கொண்டிருந்தாலும் அப்பாவிற்கு அவ்வப்போது கொத்தனார் வேலை தான், நாகப்பட்டினத்தில் கொத்தனார் சங்கத்தை முன்னின்று உருவாக்கியது, மாநில அளவில் சங்க தலைவர்களை பொன் குமார் உள்ளிட்டவர்களை அழைத்துவந்து கொத்தனார் தொழிலில் ஒரு மரியாதையை ஏற்படுத்தியவர் என்பதால் நாகைப் பகுதி கொத்தனார்களுக்கு நன்கு அறிமுகமாகியவர், கொத்தனார் சங்கத்தின் சார்பில் நாகை மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது எடுக்கப்படும் 'கைலாச வாகன' ஊர்வல நிகழ்வில் அப்பாவிற்கு மாலை அணிவித்து பரிவட்டமெல்லாம் கட்டுவார்கள், மாரியம்மன் கோவில் திருவிழாவின் முதல் நாள் இரவில் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் நடக்கும்,  இந்த முறை சென்றிருந்த போது கூடப் பார்த்தேன், அங்கு வந்த கொத்தனார்களில் அதில் ஒருவரையும் எனக்கு தெரியவில்லை, அந்த நாளில் அதேநேரத்தில் மறுநாள் காவடிக்காக, நிகழ்வு நல்லபடியாக நடக்க காத்தவராயன் பூசை செய்ய நாங்கள் அங்கு இருப்போம், அங்கு வந்தவர்களில் சிலரை தெரியும் என்றான் தம்பி.

அப்பாவும் நாகை கொத்தனார் சங்கத்தில் தலைவராக இருந்தார் பின்னர் தலைவராக இன்னொருவருக்கு வழிவிட்டார், பெரும்பாலும் சங்கக் கூட்டம் எங்கள் வீட்டுவாசலில் திங்களுக்கு (மாதம்) ஒருமுறை நடக்கும், 25 லிருந்து 50 பேர் வரை வருவார்கள், அவர்களில் 20 பேராவது எனக்கு தெரிந்திருந்திருக்கும், அண்ணன் மாமா என்றெல்லாம் உறவு முறைகளில் அவர்கள் அழைத்துக் கொள்வார்கள். அப்பாவின் மறைவிற்கு பிறகு அப்பா வைத்திருந்த கரனை, ரசமட்டம், மட்டப் பலகை உள்ளிட்டவற்றை ஞாபகார்த்தமாக சிலர் வாங்கிச் சென்றார்கள், அப்பாவின் மறைவிற்கு பிறகு கொத்தனார்களும், கொத்தனார் தொழிலும் சற்று தள்ளிப் போனாலும் அண்ணன் சிவில் பொறியாளர் என்பதால் அவர்களில் சிலரிடம் இன்னும் தொடர்பு இருக்கிறது, எனக்குத்தான் ஒருவரையும் தெரியவில்லை.

அப்பாவின் அடுத்த நடவடிக்கை ஆண்டு தோறும் சபரிமலைக்கு செல்வது, 12 வயதில் என்னையும் ஒருமுறை அழைத்துச் சென்றிருக்கிறார், அப்பாவின் சபரிமலைக்கு மாலை போடும் நண்பர்கள் என்கிற பெரிய நண்பர் வட்டமே இருந்தது. வாரத்தில் ஒருநாள் / இரண்டு நாள் ஐயப்பன் பூசை என்று அவ்வப்போது அழைப்பு வரும், அப்பா மலைக்கு செல்லத்துவங்கியது முதல் அப்பாவின் பெயர் 'சாமி' என்றே நிலைத்தது, அவருடன் பழகும் யாருக்குமே அவருடைய பெயரே தெரியாது, சபரிமலை சீசன் இல்லாத காலங்களிலும் அழைத்துப் பழகியவர் என்பதால் 'சாமி' என்றே அழைப்பார்கள், இவரும் 5 வயது குழந்தைகள் முதல் எந்தவயது பெரியவர் என்றாலும் 'சாமி' என்றே கூப்பிடுவார். வீட்டில் நாங்களும் அப்பா என்று கூப்பிட்டத்தைவிட 'சாமி' என்றே கூப்பிட்டுவந்தோம், 

அப்பாவுக்கு இருமுடிகட்டும் குருசாமி அப்படியே அவர்கள் அனைவரையும் மன்னார் குடி அருகே இருக்கும் லட்சுமாங்குடிக்கு அழைத்துச் என்று அங்குள்ளவர்களுக்கு முடிகட்டி பின்னர் சபரிமலைக்கு செல்வார்கள், ஆண்டுக்கு ஒருமுறை வெறும் 5 நாட்கள் சந்தித்தவர் என்ற முறையில் அந்த ஊரில் உள்ள ஒரு அயப்ப சாமிகள் அப்பாவுக்கு நண்பர்களாகவும் ஆனார்கள், அதில் ஒருவர் அப்பாவின் காலம் வரையில் ஆண்டுக்கு ஒருமுறையேனும் வீட்டுக்கு வந்து செல்வார், சபரிமலை பெருவழியில் நான் நடக்க முடியாமல் திணறிய போது என்னை தூக்கிக் கொண்டு சென்றவர்களில் அவரும் ஒருவர்/. அவரின் பெயர் எங்களைப் பொருத்த அளவில் 'லட்சுமாங்குடி சாமி' சபரிமலை சீசன் முடிந்து ஒருமுறை அவர் வீட்டுக்கு வந்த போது அவருக்கு அளித்த விருந்தில் தான் அவர் அசைவம் சாப்பிடுகிறார் என்று வியப்படைந்தேன், 'லட்சுமாங்குடி சாமி' சாமி என்று நினைத்துவந்ததால் என்னவோ அவர் அசைவம் சாப்பிடமாட்டார் என்று நினைத்திருந்தேனோ என்னவோ ? அப்பாவின் மறைவிற்குப் பிறகு லட்சுமாங்குடி சாமி என்ன இருக்கிறாரா ? இல்லையா என்றே தெரியவில்லை.

அப்பா காலை 6 மணிக்கு எழுந்ததும் டீ கடை, அங்கு தான் காலை ஒரு மணி நேரம் செல்லும், பெரும்பாலும் கடையாக இடம் பெயராவிட்டால் டீ கடையை மாற்றமாட்டார், ஒரு மணி நேரத்தில் இரண்டு டீ, மைனர் சேட் பீடி, செய்தித் தாள் அங்குள்ளவர்களுடன் அரட்டை மற்றும் அரசியல், அப்பாவை தேடிவருவர்களிடம் டீ கடையில் இருபபர் என்று எளிதாக வழிகாட்டிவிட முடியும், அப்பா அங்கு இல்லை என்றால், 'சாமி எப்போ போனார் ?' என்று கேட்டால் அரை மணி நேரத்திற்கு முன்பே சென்றுவிட்டாரே என்று சொல்லிவிடுவார்கள். டீ கடை நடத்துபவர்களும் அங்குள்ள பணியார்களும் உறவினர்கள் போலவே பழகி வீட்டிற்கெல்லாம் வந்து செல்வார்கள். அதே போன்று ஆண்டு கணக்கில் அப்பா ஸ்டார் திரையரங்கு அருகே இருக்கும் முடித்திருத்தகத்திற்கு மட்டுமே செல்வார், அது எந்தக் கடை என்று எனக்கு இன்றுவரை தெரியாது. அங்கு யார் யாரிடம் பழகினார் என்கிற விவரமும் தெரியாது.

அப்பா வேலைக்குச் செல்லாத நேரங்களிலும் மாலை வேளைகளிலும் அப்பாவின் மற்றொரு பொழுது போக்கிடம் இரண்டு மரக்கடைகள், ஒருவர் நாயர், இன்னொருவர் திருமேணி, அங்கு செய்தி தாள்கள் இருக்கும், அதைப் படிக்க வயது வேறுபாடின்றி சிறுவர் முதல் பெரியவர் வரை எந்நேரமும் நான்கைந்து நபர்கள் இருப்பார்கள், அவர்களில் சிறுவர்களிடம் 'கட்டியால் எட்டு கட்டி... கால் அரை முக்கால் மாற்று....' என்ற விடுகதைப் போடுவது, கழுத கால் ரூபாய், குதுரை முக்காருவ...' போன்ற கணக்கு போட்டு திணறடிப்பது, பெரியவர்களிடம் அரசியல் என்று ஓடும், அங்கு செய்தித்தாள் படிக்க வரும் என்னுடன் +2 வில் சேர்ந்து படித்த எஸ்  இரவிச்சந்திரனுக்கும் அப்பாவிற்கும் நல்ல நட்பு போல, 'என் பையனும் ஆண்டனீஸ் பள்ளியில் தான் படிக்கிறான் என்றார், பேரைக் கேட்டேன், 'கண்ணன்' என்று சொன்னார்' நீ ஏண்டா அவருடைய பையன் என்று சொல்லவே இல்லை ?' என்று கேட்டப்போது அப்பா பீடி குடிப்பார், கொத்தனார் வேலை செய்பவர் என்பதால் வெளிப்படையாக இவர் தான் என் அப்பா ? என்று நான் ரவிச்சந்திரனிடம் முன்பே அறிமுக்கப்படுத்ததால் எனக்கு சற்று அவமானமாகவே இருந்தது. அவனிடம் எதோ சொல்லி சமாளித்தேன். 

அப்பாவிற்கு சோதிடத்தில் நல்ல நாட்டம், கட்டம் பார்த்து சொல்லுவார், பாம்பு பஞ்சாங்கம் பார்ப்பார், புலிப்பாணி புத்தகம், மற்றும் 50 க்கும் மேற்பட்ட புத்தகம் வீட்டில் இருக்கும், செவ்வாய் வெள்ளி கிழமைகளில் மாலையில் வீட்டு வாசலில் பெரும் கூட்டமே சோதிடம் கேட்க வரும், அதில் பெரும் பகுதியினர் பக்கத்தில் உள்ள நம்பியார் நகர் மீனவ கிராமத்தினர் உள்ளிட்ட ஏழைகள் தான், பொண்ணுக்கு கல்யாணம் எப்போ நடக்கும், காணாமல் போன மாடு கிடைக்குமா ? போன்றவைகள் குறித்து கேட்க வந்திருப்பர், கட்டணமாக எதுவுமே வாங்குவதில்லை, அவர்கள் வாங்கிவரும் வெற்றிலைபாக்கு நாலண காசு, அது மட்டும் தான், காசை பக்கத்தில் உள்ள கோவில் உண்டியலில் போட்டுவிடுவார், வெற்றிலை பாக்கை போடுவர்களிடம் கொடுத்துவிடுவார், சோதிடம் பார்க்க வருபவர்கள் தவிர்த்து சோதிட ஆர்வம் உள்ள, சோதிடம் தெரிந்த நண்பர் கூட்டமும் அப்பாவுக்கு உண்டு, அவர்களெல்லாம் என்ன ஆனார் என்றே தற்போது தெரியவில்லை.

இது தவிர்த்து குழுமமாக செயல்பட்டு எடுக்கும் எட்டுக்குடி காவடி, முத்துமாரியம்மன் கோவில் காவடி, அரப்ஷா தர்கா சந்தனக்கூடு என்கிற இன்னொரு நண்பர்கள் வட்டத்திலும் அப்பா இன்றியமையாதவராகவே இருந்தார், நாகை வெளிப்பாளையத்தில் சாமி வீடு எது ? என்று கேட்டால் எங்க வீட்டுக்கு வழிகாட்டும் அளவுக்கு அப்பாவிற்கு அந்த பகுதியில் நல்ல அறிமுகமே இருந்தது. அப்பாவின் மறைவிற்கு பிறகு அப்பாவின் நெருங்கிய நண்பர்களில் சிலர் ஓரிரு ஆண்டுகளில் இறந்துவிட்டனர். அப்பாவின் சிறுவயதில் அவர் வளர்ந்த இடமான நாகை சவுரிராஜ பெருமாள் மேல வீதியில் இருந்த நண்பர்களில் அவரைவிட சிறியவர்கள் 'ரமண்ணா'  (ராமன் அண்ணா), என்று அப்பா வயதினர் 'டேய் ராமன்' என்றும், பெரியவர்கள் 'ராமு' என்று கூப்பிடுவதை பார்த்திருக்கிறேன், அப்பா வழி உறவுக்காரகளுக்கு அப்பாவின் பெயர் 'ராமன்', எங்கள் பள்ளி சான்றிதழ்களில், அழைப்பிதழ்களில் கோவிந்தராஜு', மற்றவர்கள் எல்லோருமே கூப்பிடுவது 'சாமி', அப்பாவின் ஒன்றுவிட்ட அண்ணன் மறைந்த பிறகு 'இராமன்' என்று அப்பாவை உரிமையுடன் குறிப்பிட்டு சொல்ல இன்று யாரும் இல்லை, அவர் சிறுவயதில் வாழ்ந்த இடத்தில் இன்றும் வாழும் ஒரு சிலர் 'ராமண்ணா பையனா வா, எப்படி இருக்கே ?' என்று கேட்பார்கள்.

இந்ந முறை ஊருக்கு சென்ற போது தம்பியிடம் அப்பாவின் நண்பர்கள் குறித்து கேட்க, சற்று நகைச்சுவையாக 'அப்பாவின் (அப்பா வயது) பிரண்ட் எல்லோருமே டிக்கெட் வாங்கிட்டாங்க...அதில் மீதம் சமூன் பாய் மட்டும் தான் இன்னும் இருக்கார்' என்றான். சமூன் பாய் இன்னும் இருக்க காரணம், அவருக்கு அப்பாவைவிட 15 வயது குறைவு, ஆனால் அவரை வெளியில் பார்க்க முடியவில்லை.

***

இதை நான் அப்பாவின் நண்பர்கள் குறித்து மட்டுமே எழுதவில்லை, தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு எவ்வளவு தான் நெருக்கம் என்றாலும் நட்புகள் என்பவை அது அவர் வாழும் வரை மட்டுமே, அதை தொடர நண்பர்களுடன் திருமண உறவை அமைத்துக் கொள்ள வாய்ப்பு இருந்தாலும், 'சாதி' என்கிற ஒன்று குறுகே நிற்பதால், நண்பர்களின் நட்பு நாம் இருக்கும் வரை மட்டுமே, அப்பாவின் நினைவுகளைப் போற்றுகிறோம், ஆனால் அவருடைய நண்பர்களை சந்திக்க முயற்சித்தில்லை. நண்பரின் மறைவின் பிறகு நண்பரின் வீட்டை கடந்து  செல்லும் / நினைக்கும் நண்பர்கள் மனம் குறித்து நாம் நினைப்பது இல்லை. அப்பாவின் மறைவிற்கு பிறகு தேடிச் சென்று பேசினால் அவர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அளவில்லாதது என்பதை நாம் என்றுமே உணர்ந்தது இல்லை.

நட்புகள் நம்மோடு சேர்ந்தே மறித்துவிடுகின்றன. 

இதை வாசிக்கும்  நீங்கள் தந்தையை இழந்தவரென்றால் உங்கள் அப்பாவின் மற்றும் அவர் நண்பர்கள் பற்றிய நினைவை இவ்விடுகை கிளறிவிட்டிருக்கும் என்றே நினைக்கிறேன், நீங்களும் உங்கள் பதிவில் உங்கள் அப்பாவின் நினைவுகளையும் அவர் தம் நண்பர்களையும் போற்றுங்கள். 

இது நான் தான்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்