பின்பற்றுபவர்கள்

26 ஜூலை, 2007

மன்னாதி மன்னா ... :)

அமைச்சர் : மன்னா ! எதிரி மன்னன் நம்மீது படையெடுத்து வருவதாக ஓலை அனுப்பி இருக்கான்...
மன்னர் : ஓ !!அப்படியா ? யானை படையை கிழக்கு திசையில் அனுப்பு, குதிரை படையை மேற்கு திசையில் அனுப்பு, காலாட் படையை தெற்கு திசையில் அனுப்பு...
அமைச்சர் : வடக்கு திசையில்...
மன்னர் : அந்த திசையில் தான் தப்பி ஓடப் போகிறேன்

அமைச்சர் : மன்னாதி மன்னா...! நீடூழி வாழ்க ! எதிரி நாட்டு மன்னன் போருக்கு வருகிறார்
மன்னர் : கடுப்பேத்தாதிங்க அமைச்சரே, நான் எப்படியும் மண்ணோடு மண்ணாகப் போகிறேன்...இந்த நேரத்தில் வாழ்த்துக்கள் வேறா. யாரங்கே இவனை என் முதுகோடு சேர்த்து கட்டுங்கள். நான் ஓடும் போது அமைச்சர் மார்பில் வேல் பட்டு வீர மரணம் அடையட்டம்.


அமைச்சர் : மன்னா உங்களைப் பார்க்க பெப்சி கம்பெணி காரங்க வந்திருக்காங்க
மன்னர் : எதுக்காம் ?
அமைச்சர் : நீங்கள் புறமுதுகிட்டு ஓடும் போது உங்க முதுகில் பெப்சி விளம்பரம் இருந்தால் நல்ல ரீச் ஆகி வியாபாரம் பெருகுமாம்.
மன்னர் : எதுக்கும் கோகோ கோலா விடம் இருந்து அதிக தொகை கிடைக்கிறதா என்றும் கேட்டுவர ஆள் அனுப்புங்க

பின்குறிப்பு : நண்பர் ஜே.கண்ணன் என்பவர் ஜிடாக்கில் பரிமாறியது இவை...கடியாக இருந்தால் நான் புறமுதுகு காட்டிவிடுகிறேன்....

23 ஜூலை, 2007

அரண்டவன் கண்ணுக்கு பதிவரெல்லாம் போலி.

திராவிட மற்றும் நடுநிலை பதிவர்களின் சிந்தனை கருத்துக்களுக்கு பதில் சொல்ல திரணற்ற ஒரு கும்பல் தமிழ்மணத்தின் மீது புழுதிவாரி இரைத்ததும், அதன் பிறகு தமிழ்மணத்துக்கு ஆதரவாக பல பதிவர்கள் தங்கள் பதிவின் பக்கத்தில் சாதி / மத வெறியர்களுக்கு கண்டனம் என்றும் பொறித்து வைத்தது கண்டனம் தெரிவித்ததையும் அனைவரும் அறிவர்.

அதன் பிறகு மேற்படி புழுதி புயல்கள் என்ன ஆனார்கள் என்று எவருக்கும் தெரியாது. அவர்களில் சில விஷமிகள் எனது நண்பர்கள் சிலருக்கு 'கோவி.கண்ணன் என்பவர் போலியா ?' என்பதை உறுதிப்படுத்தச் சொல்லி என்னுடைய தனிப்பட்ட தகவல்கள் கேட்டு இருக்கின்றனர்.

நானே கொடுக்கிறேன்.

நான் சொந்த பெயரிலேயே எழுதுகிறேன். எனது புகைப்படம் மட்டும் இணைக்கவில்லை. நானே சென்றும், மற்றும் என்னை சந்தித்த பதிவர்களின் எண்ணிக்கை 20 க்கும் மேற்பட்டவை.

நான் இதுவரை சந்தித்தவர்கள்,

1. விஎஸ்கே ஐயா (ஆத்திகம்)
2. வடுவூர் குமார்
3. குழலி (புருஷோத்தமன்)
4. துளசி கோபால்
5. நாமக்கல் சிபி
6. பொட்டிக்கடை சத்தியா
7. உடன்பிறப்பு (லக்கியின் நண்பர்)
8. ஜோ மில்டன்
9. சிங்கை நாதன்
10. சுப்பையா ஐயா
11. ஞான வெட்டியான் ஐயா
12. எல் எல் தாஸ்
13. பால பாரதி
14. பொன்ஸ்
15. புளியமரம் தங்கவேல்
16. லக்கி லுக்
17. இராஜ வனஜ்
18. திரு
19. விழிப்பு

மற்றும் சிலர்

இதைத்தவிர நான் தொலைபேசியில் உரையாடியது மட்டும் தினமும் சாட் செய்வது, தொடர்பு கொள்வது

1. சிவபாலன்
2. ஜிராகவன்
3. தருமி ஐயா
4. செந்தில் குமரன்
5. செந்தழல் ரவி
6. விடாது கருப்பு
7. மகேந்திரன்
8. என் எஸ் ஜெயகுமார்
9. சிறில் அலெக்ஸ்
10. இளா
11. முத்துகுமரன்
12. குமரன்
13. நாகை சிவா
14. வரவனை செந்தில்

மற்றும் பலர்.

*************


ஏனிப்படி சிலர் என்னை போலியாக நினைக்கவேண்டும் ?

எனது அண்மை கால இடுகைகளில் தமிழ் குறித்தும், ஆத்திக மூட நம்பிக்கை குறித்தும் விழிப்புணர்வு கருத்துக்களை எழுதி வருவதால். நான் எதோ ஒரு கூட்டத்தை எதிர்பதாகவோ, எங்கோ குத்துவதாகவும் எண்ணிக் கொண்டு என்னை போலி என்று சித்தரிக்க முயல்கின்றனர்.

என்னை போலி என்று நம்புபவருக்கு,
எனக்கோ போலிக்கோ எநத ஒரு தொடர்பும் இல்லை என்று என்னை அறிந்த நண்பர்களுக்கு நன்கு தெரியும். உங்களை திசைத்திருப்பவும் ஆதரவாக செயல்படவேண்டும் என்பதற்காக தவறான தகவல் தரும் உங்கள் நண்பரை சந்தேகியுங்கள்.

பூந்தியா ? இலட்டா ? - என்று ஞானவெட்டியான் அவர்கள் தமிழுக்கு ஆதரவான பதிவொன்றை இட்டு இருக்கிறார்.

வளவு இராமகி ஐயா - முழுக்க தமிழ் குறித்து எழுதுகிறார்

தருமி ஐயா திராவிட கருத்தாங்களை கொண்டிருக்கிறார் .... இவர்களையெல்லாம் எப்போது போலியாக பார்க்கப் போகிறீர்கள் ?

கண்ணையும், எண்ணங்களையும் தூய்மை படுத்திக் கொள்ள எதாவது 100 விழுக்காடு புண்ணிய தலம் ஒன்று இருப்பது தெரியவந்தால் போலி பித்து பிடித்த அந்த ந(ண் ?)பர்கள் தீர்த்த யாத்திரை சென்று எலுமிச்சை தேய்து குளித்துவிட்டு வரவும்.

போலித் தனங்களையே இணைய திண்ணையில் கட்டுரையாக கடைவிரித்ததில் அம்பலப்பட்டுக் கிடப்பவர்களுக்க்கு போலி குறித்த அச்சமா ? சிரிப்பு வருகிறது ஐயா :)))

- அடுத்து தம்மீது போலி முத்திரை குத்தப்பட்ட பதிவர் எவரேனும் இருந்தால் தனி இடுகை இடலாம்.

அன்புடன்,

கோவி.கண்ணன்

22 ஜூலை, 2007

தமிழுக்கு மா(ற்)றுகண் தேவையா ?

எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும். - கொன்றை வேந்தன்

எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்.
கண்என்ப வாழும் யிர்க்கு. - திருக்குறள்

என்றெல்லாம் நம் தமிழ்கவிகள் இரு கண்களை நன்றாக எழுதி வைத்திருக்கும் போது வடமொழி அறிந்த ஒரு தமிழறிஞர்... தாம் அறிந்த ஒரு மொழியை போற்றவேண்டும் என்ற உணர்சிப்பெருக்கால் 'வடமொழியும், தென் தமிழும் நம் இருகண்கள்' என்று சொல்லிய ஒன்றை பொதுவாக எல்லோருக்கும் குறிப்பாக தமிழருக்கு அறிவுரையாக சொல்கிறார் என்று தப்பாக முடிவு செய்து கொண்டு போற்றித்தான் ஆகவேண்டுமா ?

'எண்ணும் எழுத்தும்' ஆகிய இருகண்களும் ஒளி பொருந்திய குன்றா விளக்காக தமிழுக்கு இருக்கும் பொழுது இரவல் கண் நமக்கெதற்கு ? நம் கண்கள் புறையோடிப் போனால் ஒருவேளை சரிசெய்ய முயலலாம். அப்படியும் இல்லை என்றால் இரவல் கண்ணை பொருத்திக் கொள்ளலாம். இருக்கும் நல்ல கண்களில் ஒன்றை பிடிங்கி எறிந்துவிட்டு இரவல் கண்ணை வாங்கி வைத்துக் கொண்டு அதை புகழ்வதால் நம் நல்ல கண்ணுக்கு என்ன பெருமை ?

'உனது கண் கண்னே அல்ல அது கொள்ளி வாய் பிசாசின் கண்' என்ற பொருளில் தமிழ் ஒரு 'சூத்திர பாசை' என்று குதர்கமாகவும் பழித்தும் கூறும் ஒரு மொழியை கண்ணாக நினைக்கிறேன் என்று எவரும் சொன்னால் அது அவரது தமிழ் மொழிப் பற்றை கேலியாக நினைக்காமல் வேறு எதும் நினைக்க முடியவில்லை.

தமது பெற்றோருக்கு முதலில் சோறு போடுவோம், பிறகு மாற்றான் பெற்றோர் கவனிப்பார் இன்றி இருந்தால் அப்போது மட்டுமே தமிழருக்கு இருக்கும் பரிதாப உணர்வினால் காப்பாற்ற முனைவோம்.

சூத்திர பாசை என்பதை மற்ற திராவிட மொழிகளுக்கு இவர்களால் சொல்லவே முடியாது அங்கெல்லம் சென்று தம் வடமொழியில் இருந்தே அவைகள் பிறந்ததாக சொல்லுவர். அவர்களும் தேவபாசையின் குழந்தையான நம் மொழியும் தேவ பாசை என்றே நினைத்துக் கொண்டு தேவ பாசையை போற்றுகின்றனர். வாட்டாள் நாகராஜிடம் சென்று கன்னடம் ஒரு சூத்திர பாசை என்று இவர்கள் சொல்லட்டுமே ? இரு கண்களில் ஒன்று பிடுங்கப்படுமா ? இல்லையா ? என்று அப்போது தெரியும்.

நடுநிலைமை என்ற பெயரில் நமது தமிழை விட்டுக் கொடுக்கும் போர்வையில் 'வடமொழியும். தென் தமிழும் என் இருகண்கள்' எனப்படுபவை வரட்டு வேதாதந்தங்களே. நாம் இரு கைகளை நீட்டினாலும் அவர்கள் பதிலுக்கு காலை தூக்கி உதைக்கவே செய்வர். இதுவே நடந்தேறி வருகிறது. எனவே வரட்டு வேதாந்தகளை புறக்கணித்து அல்லது துறந்து நம் தமிழ்தாய் மொழி செழிக்க. எண்ணும் எழுத்துமான நம் இருகண்களை போற்றி ஏற்றம் பெறுவோம்

எந்த மொழியின் துணையின்றி தனித்தியங்கும் செம்மொழியான நம்மொழிக்கு 'மா(ற்)று' கண் எதற்கு ?

வரட்டு வேதாந்திகளையும் அவர்களின் தப்பான வாதங்களையும் புறக்கணிப்போம்.


பின்குறிப்பு : இந்த இடுகை, ஞான வெட்டியான் ஐயா எழுதிய பூந்தியா ? இலட்டா ? என்ற இடுகைக்குப் போடப்பட்ட பின்னூட்டத்தின் நீட்சி.

மொக்கை பதிவை எப்படி சூடாக்குவது ?

நீங்கள் எழுதுவது மொக்கையா என்று மற்றவர்கள் தான் தீர்மானிப்பார்கள். எனவே மொக்கை குறித்த கவலையை தள்ளி வையுங்க. நாம் தலைப்பைப் பார்ப்போம்.

சிலர் மொக்கையாக எழுதியும் சூடான இடுகையில் எப்படி வருகிறது என்று பலருக்கும் மில்லியன் மொக்கை கேள்விகள் இருக்கும் அது எப்படி என்று பார்ப்போம்.

1. அதிவேக பிராட் பேண்ட் கனெக்சன் இருப்பது நல்லது...ஏனென்றால் சூடாகும் நேரம் குறையும்.
2. முதலில் ஒரு பதிவை எழுதி தமிழ்மணத்தில் சேர்க்கவும்.
3. அதன் பிறகு சாப்பாடு, மற்றும் தண்ணீர், புகை பழக்கம் இருந்தால் கோல்ட் ப்ளாக் பில்டர் அல்லது ஏதோ காஜா பீடி வசதிக்கு ஏற்றவாறு அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.
4. அடுத்து 5 மணி நேரம் மிக முக்கியமானது. இதை எவ்வளவு வேகமாக செய்கிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் சூடான இடுகை ஆகும்.
5. தமிழ்மணம் முகப்புக்கு சென்று உங்கள் இடுகையை சொடுக்குங்கள்... அடுத்து
6. உங்கள் இடுகை தனிப்பக்கத்தில் தெரியும் ....இங்கே கவனமாக இருக்கவேண்டும்...உங்கள் பக்கம் தெரிய ஆரம்பித்ததும் தமிழ்மணம் கருவி பட்டை தெரியும்...உடனே உங்கள் பக்கத்தை மூடிவிடுங்கள். உங்கள் ப்ளாக் முழுவதும் தெரிவதற்குள் மூடிவிட்டால் நேரவிரயம் குறையும்
சரி மூடிவிட்டு ?
7. திரும்பவும் தமிழ்மண முகப்பில் உள்ள உங்கள் இடுகையை சொடுக்குங்கள்...உங்கள் இடுகையின் கருவிபட்டை தெரிய ஆரம்பித்ததும் மூடுங்கள்
8. மேற்கண்ட 5 முதல் 7 வரை உள்ள குறிப்பின் படி மீண்டும் மீண்டும் செய்யுங்கள்...அதன் பிறகு 1 மணி நேரத்திற்குள்ளாகவே உங்கள் இடுகை சூடான இடுகையின் கீழ் பகுதியில் தெரிய ஆரம்பிக்கும். அதன் பிறகு டீ யோ காபியோ குடித்துவிட்டு திரும்ப திரும்ப தமிழ்மணத்திலிருந்து சொடுக்குங்கள். அப்பறம் என்ன ?
9. சூடான இடுகையில் எவ்வளவு உயரம் உங்களுக்கு திருப்திகரமாக இருக்கிறதோ அங்கேயே நிறுத்திவிடலாம்.
10. தமிழ்மணத்தில் இருந்து உங்கள் இடுகையை சொடுக்கினால் மட்டுமே சூடான இடுகைக்கு செல்லும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

இப்பொழுது புரிகிறதா ? மொக்கையை எழுதிவிட்டோம் என்ற கவலையே தேவை இல்லை.

மனது வைத்தால் வெறும் தலைப்பை எழுதிவிட்டால் கூட சூடான இடுகைதான்.

21 ஜூலை, 2007

வவாச போட்டிக்கு மொ மொ மொக்கை பதிவு

மொக்கை பதிவு போடனும் ஆரம்பித்தால் எதாவது சிக்கலில் கொண்டு விடுது... மனசை தேத்திக்கிட்டு... மொக்கை போட முடியாது...என்னால் முடியாது... மணிரத்தினம் வசனம் நினைவுக்கு வந்து துவண்ட போது செந்தழல் ரவி ஜிடாக்கில் வந்து ஆறுதல் கூறினார்..
'கோவியாரே நாங்களெல்லாம் இருக்கோம், தெகிரியமாக களத்தில இரங்குங்கன்னு' தேற்றினார்.

விதிவலியது...செந்தழலின் வழியதன் மூலம் வந்து நுழையுது

மொக்கை என்பதை ஆராய்ந்து பார்த்தேன். மொக்கை என்றால் என்ன விரல் இல்லாத வெறும் கையா ?
எங்க ஊரில் மரத்தில் இலை கொட்டிவிட்டால் மரம் மொக்கையாக இருக்குன்னு சொல்லுவாங்க, அப்பறம் முடி 'போடா' என்று உதிர்ந்து கொண்ட மன்னர்களை 'மொக்கையன்' போறான் பாரு என்பார்கள். கோளக ஆடி, குழியாடின்னு வாத்தியார் பாட்டுக்கு பாடம் நடத்திக்கிட்டு இருப்பார்... டேய் சாரோட தலை கோளக ஆடிதேனே...ஒளி தெரியுதடா' படிக்கிற காலத்தில் வாத்தியாரின் மொக்கையை குறித்து சக மாணவர்கள் அடித்த கமெண்ட்

நாயர் டீக்கடையில் பிட்டு விளம்பரத்தைக் கூட விட்டுவிடாமல் படிக்கும் பெருசுகள் போடும் மொக்கை உலக மொக்கை. எங்க அண்ணன் பையன் துபாயில் இருக்கான் ( மகேந்திரன் இல்லை) அப்பறம் எங்க மாமம் பொண்ணு பாரிசில் இருக்கா...' சுயபுராண மொக்கைகள்

'இவன் கெட்ட பையன் சார்'... சொல்லிக்கிட்டு அறு அறு என்று அறுக்கும் விசய ஞானிகளைக் கண்டால் அஜீரணம் கூட ஆவது உண்டு. சில மொக்கையர் எதிராளி என்ன சொல்கிறான் என்று காது கொடுத்து கேட்காமல்... தான் ஒரு அறிவு ஜீவி என்றே நிரூபிக்க முயல்வர்கள். இரண்டு மொக்கைகள் ஒண்ணா சேர்ந்துட்டா போதும்...'இந்த நாயை தெரியாதா ?... ஒன்னுக்கு அடிக்கிற இடம் கூட விடாமல் துறத்தி பெருமையை பேசுறான் பாரேன்' இன்று இருவருமே முனுகிக் கொண்டே மொக்கையில் கண்ணாகவே இருப்பார்கள்.

அப்பறம் 'அந்த காலத்தில தம்பி...' ஆரம்பிச்ச உடனே ஒடினவன் இருக்கானானு பார்காமலே....ஒரு மணி நேரம் சென்று...'இப்ப அப்படியா ...காலம் கெட்டுப்போச்சு...என்னத்த சொல்ல...' பெருசுகளின் ரோதனையை விடவா ஒரு மொக்கை இருக்கிறது ?

பசங்க கிராஸ்பண்ணும் போது பொண்ணுங்க போடுகிற ஆங்கில மொக்கை அல்வா மொக்கை. நாம பதிவர்கள் கூட பின்னூட்ட மொக்கை போடுறாங்க... அட இப்போது போட்ட பதிவுக்கு அதுக்குள்ள பின்னூட்டம் வந்திருக்கா ? நண்பர் லக்கி பதிவில் எட்டிப்பார்த்தால் எல்லாம் 'தமிழ் ஹாப் ப்ளாக்' விளம்பர பின்னூட்டம்...ஆராய்ந்து பார்த்தால் அவரே போட்டுக் கொண்டாராம். இந்த டெக்னிக் எப்படியோ பலருக்கும் தெரிந்து நடைமுறையில் இருக்கிறது.... பின்னூட்டத்தை ஆவலாக படிக்க வர்றவங்களை ஏமாத்தாதிங்கப்பா.

என்னமோ எழுதினேன்...மொக்கையா ? சக்கையா ? முத்திரை அமுக கையில் !

:))

20 ஜூலை, 2007

தாழ்த்தி உயர்த்திச் சொல்லுதல் மட்டும் பாவமா ? பகுதி 2

இந்த நாட்டில் தேசத் தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை புனிதராக காட்ட முயன்று கொண்டிருக்கும் வேளையில், திறந்த புத்தகமாக அனைத்தையும் எழுதிவைத்த ஒரு உத்தமர் காந்தியை நாகூசாமல் விமர்சித்திக் கொண்டிருக்கும் வேளையில் பாரதியின் கவிதை வரிகளில் ஐயம் தெரிவிப்பவர்கள் குறித்து 'போற்ற வேண்டிய அவசியம் இல்லை, தூற்றாது இருத்தல் நலம்' என்று சொல்ல வருகிறார்கள். தமிழ் கவிஞர், புரட்சிவரிகளுக்கு சொந்தக்காரார் என்று நன்நம்பிக்கையில் சொல்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை. தமிழை செம்மொழியாக கண்டுகொண்டு, தமிழ் வடமொழியின் துணை இன்றி தனித்தியங்கும் செம்மொழி என்றும் வடமொழி எனப்படும் சமஸ்கிரதம் தேவபாடையல்ல, அது கிரேக்க மொழியில் இருந்து பிரிந்த கிளைமொழி என்று ஆதாரங்களுடன் விளக்கிய ஐயு போப் ஐயர் அவர்கள் கண்டு சொல்லிய, உண்மைகளை சகித்துக் கொள்ள முடியாமல் கிறித்துவ மிசனரி மற்றும் ஆங்கிலேயனின் கைக்கூலி என்று பலர் தூற்றியபோது.... பாரதி பற்று கொண்ட தமிழார்வலர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை.


புனிதராகவே வாழ்ந்து புனிதராகவே போற்றப்படும் அன்னை தெராசவை... கிறித்துவராக மட்டுமே பார்த்து 'தொழுநோயாளிக்கு சேவை செய்வதாகச் சொல்லி போட்டோவுக்கு போஸ் கொடுத்தவர் தானே..' என்று இந்துத்துவ வாதிகளால் வலைப்பக்கத்தில் தூற்றப்பட்டத்தையும் பார்த்துவந்தோம்.

தேசியம்... தேசியம்... என்று பேசி மாநில மக்களின் குரல் வளையை அறுத்து கொழித்து வந்த தேசியவாத கட்சிகளை தமிழ்நாட்டைவிட்டு துறத்தி சாதி ... மதவாதிகளின் உயர்வகுப்பு மனப்பாண்மையை கேலிக் குறியாக்கி, சுயமாரியாதையின் மாண்பை தமிழருக்கு ஊட்டிய தமிழகத்தில் தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் பெரியாரை 'மாமா' என்று காழ்புணர்வை காட்டி இழித்து கூறியும், சாதி என்பதே கொடுமையானதாக அறிவித்து அதற்கு எதிராக போராடிய பெரியாரை 'இராமசாமி நாயக்கர்' என்று சாதிப் பெயரால் அடையாளப்படுத்த முயலும் 'இழி பிறவிகளுக்கு' எதிராக இதே தமிழார்வளர்கள் குறைந்த அளவுக்கு கண்டனமாவது தெரிவித்தார்களா ? என்பதெ கேள்விக்குறியுடன் தான் நிற்கிறது.

இன்னும் சொல்லிக் கொண்டே போக முடியும்....

பாரதி என்ன விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா ? அப்படி விமர்சனம் செய்வதால் அவர் பற்றாளர்கள் பலகீனமானவர்கள், பாரதியை வெறுக்க ஆரம்பித்துவிடுவார்களா ? பின் ஏன் பாரதியைப் பற்றிச் சொன்னால் கொதித்து எழுகிறார்கள் ?. இங்கு பாரதியே வேண்டாம் என்றதை அவனுக்கு ஆக்கி அவனையும் சாதி பிரதிநிதியாக்க முயல்வது என்பதும் மறைமுகமாகவே நடக்கிறது. 'பாரதி எங்கள் சாதிக்காரன்...சாதி ஒழிப்புக்குப் போராடி இருக்கிறான்...என்பது கூட அவன் நோக்கத்தையே கேலியாக்கும் செயல் தானே ?' இந்த அளவுக்கெல்லாம் எவரும் பாரதியை அவமானப்படுத்த முடியாது...இவர்களின் செயலால் அடுத்த தலைமுறைக்கு பாரதி ஒரு 'பார்பன கவி' என அடையாளமாக்கப் பட்டுவிடுவான்.
பாரதியின் தனிமனித செயல்களின் உயர்வை, திறமையை சாதியின் அடையாளமாகவும், சாதியின் புகழாகவும் காட்டமுயல்பவர்களுக்கு எனது கண்டனங்கள்.

ஒருவர் சொல்லிய கருத்துக்களை வேறுறொரு காலத்தில் ஆராய்ந்தால் காலத்துக்கு பொருந்தாது என்பது ஒரு விதப் புரிதல். மற்றொன்று அவர் ஒரு கருத்தை எந்த சூழலில் சொன்னார் என்பதைப் புரிந்து கொண்டால் மட்டுமே அந்த கருத்தை சரியா ? தவறா ? என்று சொல்ல முடியும்.

'அச்சமில்லை அச்சமில்லை' முரசு கொட்டிய பாரதி ஏன் பின்னாளில் வெள்ளைக் காரனிடம் மன்னிப்பு கடிதம் எழுதிகொடுத்துவிட்டு சிறையில் இருந்து மீள முயன்றான் ?

புத்தக வெளியீட்டில் சிக்கலாகி.... பல பிரச்சனைகளை சந்தித்த போது....'ஒளிபடைத்த கண்ணினாய் வா வா, உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா' - தனக்கே சொல்லிக் கொள்ளாமல் ...கஞ்சா அபினுக்கு அடிமையாக சாவை சந்தித்தது எவ்வாறு ? நாமெல்லாம் யானை மிதித்துக் கொன்றதாக மட்டுமே வாசித்திருக்கிறோம். பாரதி போதை அடிமையானதையும் அதிலிருந்து மீளாமலேயே சாவை சந்தித்தார் என்றும் வரலாற்றில் கருப்புப் பக்கங்களாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்பதை எவரும் மறுக்க இயலாது.

- இதற்கெல்லாம் கூட தெளிவான விளங்கங்களை பாரதி பற்றாளர்கள் கொடுக்கலாம்...எனக்குத் தேவை இல்லை...எனெனில் அன்று அவன் இருந்த சூழலை நான் புரிந்து கொண்டுள்ளதால் அவை முரண்பாடுகள் போல தெரியவில்லை.

நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் -- இந்த
நாட்டினில் இல்லை; குணம் நல்லதாயின்,
எந்தக் குலத்தின ரேனும் -- உணர்
வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்.
- பாரதியின் வரிகள்

இங்கே நந்தனரின் உயர்வைச் சொல்ல ஏன் 'பார்பன்' என்பதைப் அடைமொழியாக கொள்ளவேண்டும் ?

பாரதியைப் பொறுத்தவரை ''ப்ராமனன்", என்பவன் உயர்ந்த பண்புடையவன், பார்பான்' என்பவன் உயர்ந்தவன் என்ற பொருளில் சொல்கிறார் என்று தான் எனக்கு புரிகிறது. எனவே நந்தனுக்கு 'பார்பனன்' பட்டம் கொடுத்து அவனைப் போன்று ஒரு பார்பன் நாட்டில் இல்லை என்கிறார். நந்தனைப் போல் ஒரு பார்பான் இல்லை என்பதை 'பார்னரில் ஒருவர் கூட நந்தன் போல் இல்லை' என பொருள் கொள்ள முடியாது... எனெனில் பாரதி திருஞானசம்பந்தர் முதல் பல பக்தியில் சிறந்த பார்பனர்களை பாரதி அறிந்து வைத்திருக்கிறார்.

பார்பனரை உயர்வாக நினைத்தாலும் அந்த காலத்தில் பார்பனர்கள் தெண்டச்சோறு உண்டார்கள் என்று மனம் வெதும்பியும், பார்பனர்களின் மனுநீதியில் பேதம் தவறானது என்றும் சாடி இருக்கிறார்.

"சூத்திரனுக்கு ஓர் நீதி, தண்டச்சோறு உண்ணும் பார்பனுக்கு ஓர் நீதி"

நீதிகள் எல்லோருக்கும் பொதுவாக இருக்கவேண்டும் என்றும் பார்பனர் உழைத்து சாப்பிடவேண்டும் என்று சாடி இருக்கிறார் என்று தான் எனக்கு புரிகிறது. மேற்கண்ட நந்தானாரைப் போன்று பார்பன் இல்லை என்றதில் 'பார்ப்பான்' என்பதை அவன் பக்தியின் உயர்வாக கிடைத்த தகுதி போன்று சொல்கிறார் என்றும் அவர்களின் நடவடிக்கையை மட்டும் அவருக்கு பிடிக்கவில்லை என்றே புரிந்து கொள்கிறேன். தற்காலத்தில் இசைஞானியை 'நவபிராமனர்' என ஒரு கூட்டம் சொல்ல முயல்வதையும் ஒப்பு நோக்குக.

குலமே இல்லை என்று சொல்லும் பாரதி ஏன் 'பார்ப்பான்' என்ற சொல்லை உயர்வுக்கு 'உவமையாக' சொல்ல வேண்டும். எனக்கு புரியவில்லை. மற்றவர்களுக்கு தெளிவாக புரிந்தால், ஏற்புடையதாக இருந்தால் மகிழ்ச்சி.

என்னுடைய புரிதலில் பாரதி சாதிகளை எதிர்த்திருக்கிறார் என்பதில் எள்ளளவு ஐயமும் இல்லை... நான்கு வருணங்கள் (குலங்கள்) தவறல்ல...அவற்றில் பேதம் மட்டுமே கூடாது என்றும் விரும்பி இருக்க்கிறார் என்று தெரிகிறது.... சாதிகள் வேறு ...குலம் வேறு...சாதிகள் குலத்தின் உட்பிரிவுகள்...

சாதிகள் இல்லையடி பாப்பா - சாதி ஒழிக !
குலம் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் - குலங்களுக்கு இடையே பேதம் பார்காதே
என்று பாரதி சொல்கிறார் என்றே கருதுகிறேன்.

பாரதி சாதியை ஆதரிக்கவில்லை...அதே சமயத்தில் இந்துத்துவா பாணியில் அவர் கருத்துக்களை விட்டுச் சென்றிருக்கிறார் - இது எனது புரிதல் மட்டுமே.


பகுதி 1

18 ஜூலை, 2007

அரசியல்வாதிகள் இந்தி படிக்கவிடாமல் செய்துவிட்டனர் !

சிங்கை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை முடிந்து காத்திருக்கும் இடத்தில் இருவர் பேசிக் கொண்டது காதில் விழுந்தது. பொதுவாக மற்றவர்கள் பேசுவதில் நாம் கவனம் கொள்வதற்கு அந்த விடயம் கொஞ்சமேனும் நாம் அறிந்து வைத்திருப்பவராகவோ, அதுபற்றிய ஆர்வமுடையவராகவோ இருக்கவேண்டும், அப்படி இருந்தால் உன்னிப்பாக என்ன பேசுகிறார்கள் என்று கவனிக்கவே செய்வோம்.

பேசிக் கொண்டிருந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாதாவர்கள் என்பதும் அவர் பரஸ்பரம் பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டு இருப்பதால் நேர போக்கிற்கு (டைம் பாஸ்) பேசிகிறார்கள் என்பதும் அந்த இடத்திற்கு முன் இருக்கையில் முன்பே அமர்ந்துவிட்டதால் எனக்கு புரிந்தது. முதலாமவர்,

"சார்... எந்த ஊர் ?"

"சென்னையில் தான் ******* ஒர்க் பண்ணுகிறேன்...ஒரு பிசினஸ் விசயமாக வந்தேன்...நீங்க ?"

"நானும் சென்னைதான்..."

"ஓகோ"

பெயர்களை சொல்லிக் கொண்டார்கள்

முதலாமவர்,

"சார்... எனக்கு நோய்டாவில் நல்ல பொசினில் வேலை கிடைச்சு ...டெல்லி பக்கம் சென்றிருக்க வேண்டியது"

"ஏன் என்ன ஆச்சு ?"

"இண்டர்வூயூ எல்லாம் நல்லாதான் பண்ணினேன். அவன் கேட்ட அனைத்து தகுதியும் என்னிடம் இருந்தது"

"!!!???"

"கடைசியாக ஒண்ணே ஒண்ணு கேட்டுவிட்டு ... வேலை இல்லை என்று சொல்லிவிட்டாங்க "

"என்ன சார் கேட்டாங்க ?"

"இந்தி எழுதப்படிக்க தெரியுமான்னு கேட்டாங்க"

"ஏன் உங்களுக்கு தெரியாதா ?"

"போங்க சார், நம்ம அரசியல் வாதிங்க நம்மை எங்கே சார் ஹிந்தி படிக்க விட்டாங்க...?"

"ஆமாம்..."

"இவங்க போராட்டம் நடத்தி இந்தியை துறத்தியதால் நாம பாதிக்கப்படுகிறோம்..."

"புரியுதுங்க சரிதான்"

"கேடுகெட்ட அரசியல் வாதிங்க சார் "

இதுவரை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவர்... உசுப்பேற்றலால் அவரும் சும்மா இருந்தால் அரசியல், நாட்டு நடப்பு ஒண்ணும் தெரியாதவர் என்று நினைத்துவிடுவார் என நினைத்தாரோ, என்னவோ... பிறகு அரசியல் வாதிக்கு எதிராகவும், இந்திக்கு ஆதரவாகவும் கருத்துக்களைச் சொல்ல ஆரம்பித்தார்

"ஆமாங்க...எல்லாம் பச்சை அரசியல்தனம், நாம் தான் பாதிக்கப்டுகிறோம்"

"அண்ணாதுரை என்ற புண்ணியவான் ஆரம்பிச்சு வச்ச இந்தி எதிர்ப்பு போராட்டம்...இப்பவும் அதை பிடித்து தொங்குறாங்க"

"நாட்டை கொடுத்துட்டானுங்க சார்...காங்கிரஸ் ஆட்சி பரவாயில்லை"

இதுக்கு மேல் பேச்சு செல்லவதற்குள் அனைவருக்கும் அழைப்பு வரவே விமானத்துக்குள் சென்றோம்

********************************************
அது உண்மை சம்பவம் தான்...

இப்படித்தான் திட்டமிட்டே பொது இடத்தில் முன்பின் தெரியாவதர்களிடம் கருத்துக்கள் பரப்பப்பட்டும், திரிக்கப்பட்டும் சொல்லப்படுகிறது. ஒன்றும் தெரியாதவராக ஒருவர் இருந்துவிட்டால் போதும் அவரையும் சேர்த்தே தலையாட்ட வைத்து எதிர்ப்புக்கு ஆள் சேர்த்துவிடுவார்கள்.

இந்தி தெரியாத தமிழ்நாடு இந்தியாவில் முன்னேற்றத்தில் பின்தங்கி இருக்கிறது? இந்தி தெரிந்த பீகார் முன்னேறி இருக்கிறது ?

"இந்தி திணிப்பு மறுத்தல்" என்பதை "இந்தி எதிர்ப்பு" என்று மட்டுமே திரித்து இன்னும் எத்தனைக் காலத்துக்கு அதையே சொல்லி ஏமாற்றுவார்களோ ?

விருப்பப்பட்டவங்க போய் படிங்க யார் வேண்டாம் என்றது. உமக்கு பிடிகிறதே என்பதற்காக நானும் மற்றும் என்னைப் போன்ற பலரும் ஏன் அந்த வேண்டாத ஒன்றை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கவேண்டும் ? மொழி கற்றுக் கொள்வது என்பது வேறு... இந்த மொழியை கற்றுக் கொள் என்று திணிப்பது வேறு. இந்த அடிப்படை தெரியாமல் "இந்தி வேண்டும் !" என்று பிதற்றியும் அதற்கு ஆதரவாக திரிப்பவர்களிடம் எச்சரிக்கை தேவை.

17 ஜூலை, 2007

கலைகள் குலத்தொழிலா ?

முறையாக பயின்றவர் மட்டுமே அந்தந்த துறையில் ஜொலிக்க முடியும் என்ற கோட்பாடுகள் அரை நூற்றாண்டு வரை இருந்தது. அதை உடைத்தவர் பலர். சாஸ்திரிய சங்கீதம் அறிந்தவர் தான் பாடகர், முறையாக நடனம் பயின்றவரே நடிகர் என்று நாடகம், திரையுலகம் போன்றவை ஒரு குறிப்பிட்ட சமூகத்திடம் மட்டுமே இருந்து வந்தது. இவர்கள் வெளிப்படுத்தும் கலைகள் பெரும்பாலும் அவர்கள் வாழும் சமுகத்தைச் சுற்றியே இருந்தது.

இந்திய சூழலில் மக்கள் வாழ்க்கை என்பது நகரத்தையோ, மாநகரத்தையோ, பிரதிபலிப்பது அல்ல. அது கிராம மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதே.

ஏறுபூட்டி போவோமே, அண்ணே சின்னண்ணே..
ஏர்முனைக்கு நேரிங்கு எதுவுமே இல்லை..
பட்டிக்காடா பட்டணமா ?

போன்ற பாடல்கள் இடம் பெற்ற படங்களெல்லாம் கிராம வாசனையுடன் வந்த பாடல்கள். நன்றாக ஓடியதாக அறிகிறோம். சினிமா ஹிரோக்களின் வெற்றிப்படங்கள் பெரும்பாலும் அன்று முதல் இன்றுவரை கிராமத்தை மையமாக வைத்து எடுத்த எதார்த்த படங்களே வெற்றி பெற்றன.

இவை சினிமாவின் வியாபரா யுக்தி மட்டுமே, சினிமா துறை 90 விழுக்காரு முற்பட்ட சமுகத்தினரிடம், ஆதிக்க சக்திகளிடம் இருந்தது ( தேவர் பிலிம்ஸ், ஏவிஎம் நிறுவனங்கள் போன்ற சில நிறுவணங்கள் தவிர்த்து), இயக்குனர்களும் அவ்வாரே இருந்தனர். இவர்கள் இயக்கிய இந்த படங்களில் நடித்தவர்கள் சிவாஜி கனேசன், மற்றும் ஒரு சிலரைத்தவிர மற்றவர்கெளெல்லாம் முன்னேறிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சிவாஜி நடிப்பில் இமயமென உயர்ந்ததற்குக் காரணம் அவர் கிராம / நகர மக்களின் இயல்பை வெளிப்படுத்தினார். எம்ஜிஆர் கிராமத்தினரையே குறிவைத்து படக்கதைகளை அமைத்துக் கொண்டார்.

தற்காலத்தில் இன்றைய திரையுலகம் கிராமத்தில் இருந்து படையெடுத்த இளைஞர் கையில் இருக்கிறது. அவர்களால் தான் மக்கள் வாழ்கையை பிரதிபலிக்கும் பிரச்சனைகளை அவர்கள் பார்வையில் பார்த்து வெளிப்படுத்த முடியும்.

எந்த ஒரு இசைப் பின்னனியும் (முறையாக) இல்லாத இளையராஜாவால் தமிழ் திரையுலகையே 20 வருடங்களுக்கும் மேலாக தன் ஆளுகைக்குக் கொண்டுவர முடிந்ததென்றால் அவரிடம் இருந்த கிராமத்து மணமும், தனித் திறமையுமே காரணம். இளையராஜாவுக்கு முன்பு இசை அமைப்பாளர்களெல்லாம் முற்பட்ட சமுகத்தைச் சேர்ந்தவர்களாகவும், முறையாக பயின்றவர்களாகவும் இருந்தார்கள். அதுவே அளவு கோலாகவும் பார்க்கப்பட்டது. அதை முதன் முறையாக உடைத்து எறிந்தவர் இசைஞானி இளையராஜா. இளையராஜாவை இன்றைக்கும் விமர்சிப்பவர்கள் இருகிறார்கள். ஆதங்க வெளிப்பாடாகவே அவைகள் அவ்வப்போது வருகின்றன.

பாரம்பரியம், பழக்கவழக்கம், வழிவழிவருவது, இவர்களால் தான் இதைச் செய்ய முடியும் என்று சில சமூகத்தினரால் அடக்கியாளப்பட்டு மாய வித்தை போன்று நம்ப வைக்கப்பட்டு இருந்தது கலைகள். இந்த கலைகள் எல்லாமும் எல்லோராலும் செய்ய முடியும் என்று குலவழி வழக்கத்துக்கு முற்றுப் புள்ளிகளை பல்வேறு துறைகளில் நம் தமிழர்கள் வைத்து வந்திருக்கிறார்கள், வைத்துக் கொண்டு இருக்கிறார்கள், வைப்பார்கள்.

15 ஜூலை, 2007

மொக்கை போட ஆரம்பித்து...

கவிதைகள் மீது எனக்கு ஈடுபாடு வந்ததற்கு முதன்மைக் காரணமாக நான் நினைப்பது கவிஞர் வாலி மற்றும் கவிஞர் வைரமுத்து சுற்றி வளைக்காது "நச்"சென்று எழுதுவதில் இருவரும் வல்லவர். பெரியவர் வாலி எதுகை மோனைக்காக ஆங்கில சொற்களை எடுத்தாளுவார், வைரமுத்து திரைப்படப் பாடல்களில் அதைச் செய்வார். இளமை என்பது பருவமே இல்லை அது மனம் சார்ந்த அகப்பொருள்.. அது என்றும் இருப்பது இதை நான் வாலியின் கவிதைகளை வாசிக்கும் பொழுது அவருடைய எழுத்தின் துள்ளல்கள் சொல்லிக் கொடுத்த பாடம். சில ஆபாசபாடல்களை எழுதி இருந்தாலும் என் ஆசாபாசத்துக்குள் என்றுமே இருப்பவர் கவிஞர் வாலி. கற்பனை என்ற விடயத்தில் எழுதும் பொழுது அது கவிதையானாலும் சரி ...கதை ஆனாலும் சரி அதை எழுதுபவரின் கற்பனை என்ற இடத்தில் நிறுத்திப் பார்ப்பது போதும், அதை தாண்டி இப்படி கீழ்தரமாக எழுதுபவரும் (ஒரு சிலர் தவிர்த்து) கீழ்தரமான ஆளாக இருப்பார் என்று அதீதமான கற்பனைகள் அவசியமற்றது என்றே சொல்வேன். ஏனென்றால் ரொம்பவுமே 'பாசிட்டீவ் திங்' எழுத்தாளர்களுக்கு இருந்தால் எந்த அவலத்தையும் எழுத்தில் கொண்டுவரமுடியாத கட்டுப்பாட்டை அது அவனுக்கு விதித்துவிடும்.

சொல்லவருவது இதுதான் கவிதையோ, கதையோ அதில் சொல்லவருபவை விமர்சனத்துக்கு வரலாம் ஆனால் அதை சொல்பவரின் மனமோ அல்லது அவரது தனிப்பட்ட குணமாக அவரது ஆக்கத்தை விமர்சனமாக்கக் கூடாது. 'எப்படி எப்படி...சமைஞ்சது எப்படி' என்று வாலி எழுதினால், அது அந்தப்படத்தில் அவருக்குக் கொடுக்கப்பட்ட சிக்சுவேசனுக்காக எழுதப்பட்ட பாடல், இயக்குனரின் விருப்பத்திற்காக எழுதப்பட்ட பாடல் என்று கொள்வது பொருத்தமாக இருக்கும். சுயவிருப்பங்களும் கற்பனையில் இருக்கும் என்பதை ஒப்புக் கொள்ளவேண்டும் அத்தகைய சுயவிருப்பத்தை ஒருவர் எழுதும் போது எல்லோரைப்போலவும் அவர்களும் சமூக பொருப்புணர்வுடன்தான் செயல்படுவார்கள் என்பதையும் நாம் நம்ப வேண்டும். விமர்சனமே இல்லாமல் ஒன்று எழுதவேண்டுமென்றால் அவை 'சுற்றுலா சென்று வந்ததைப்பற்றி சிறு குறிப்பு வரைக' என்று ஆசிரியர் தரும் அசைன்மெண்டுக்கு எழுதப்படும் கட்டுரைகள் மட்டுமே.

பதிவுலகம் போன்ற ஊடகத்தில் 'பாசிட்டிவ் திங்கிங்' என்ற எவரும் அறிவுறுத்தினால் அவர் பரிதாபத்துக்கு உரியவர்தான். குப்பனும் சுப்பனும் பதிவு எழுத வந்தால் அவர்களுக்கு எழுத்து வரமால் போகலாம், பொது இடத்தில் எப்படி பேசுவது என்று தெரியாமல் போகலாம், ஆனால் அவர்களுக்கு இருக்கும் கருத்தை அவர்கள் மொழியில் மட்டுமே அவர்களால் வெளிப்படுத்த முடியும் என்பதைப் புரிந்து கொண்டால், பதிவுலகம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எல்லைகள் உடைந்து ப்ரபஞ்சம் போல விரிந்து இருக்கும். முகம் சுளிக்க வைக்கும் ஆபாசங்கள் எப்பொழுதும் நம்மை சுற்றி நடப்பவையே, காதில் விழுந்தாலும் அவற்றில் நாம் கவனம் செலுத்துவதில்லை. பொருட்படுத்துவதில்லை. இணையத்திலும் இதே நிலையை வைத்துக் கொண்டால் போதும் அவரவர் எண்ணத்தை எழுதுவதற்கு வரும் எதிர்வினை ஆபாசங்கள் குறித்து ஐயப்படத்தேவை இல்லை.

புனிதர்பட்டம் நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் போது, நம்மை நம் செயல்களை புனிதமாக நினைத்து அல்லது முற்றிலும் மறந்துவிட்டு மற்றவர்கள் எல்லோரும் குறையுடவர்கள் போலவும் அவர்கள் எல்லோரும் அபத்தமாக நடந்து கொள்பவர்கள் என்று தெரிவது நம் மனவியாதியே அன்றி வேறொன்றும் இல்லை. அதற்காக கருத்துக்கு எதிர்கருத்து தேவை இல்லை என்ற சொல்லவரவில்லை. அவரவர் எண்ணத்தில் அவரவர் அறிந்துள்ள எல்லைக் குட்பட்டே எழுதுகிறார்கள் என்று புரிந்து கொண்டு மறுமொழிய முன்வரவேண்டும்.

பதிவுக்கும் தலைப்புக்கும் தொடர்பில்லாமல் போய்விட்டது... என்ன செய்ய ? மொக்கைப் போடலாம் என்று எழுத ஆரம்பித்தேன்... மொக்கைப் போட விசயம் கிடைக்காமல் திண்டாடி திண்டாடி ... கடைசியில் சீரியஸ் ஆகிவிட்டது. :)))

10 ஜூலை, 2007

பயங்கரவாதங்களினால் வளரும் புதிய தொழில் நுட்பங்கள் !

மனித நாகரீகம் வளர்ந்து அறிவு வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் போது, அதிலும் குறுக்கு வழியில் பயணித்தால் என்ன ? சிந்தித்து அப்படி சிலர் செல்லத் தொடங்கி தீங்கு இழைக்கத் ஆரம்பித்ததும், அபகரித்தல், திருடுதல் என்று பிறர் பொருள்களை கவர்ந்து செல்ல ஆரம்பித்தான். மனிதனின் முதல் காப்புரிமை ஆயுதமாக அவனே செய்து கொண்டதுதான் கதவு, அதற்கு பூட்டு அதற்கான சாவியும்.

பிறர் பொருள்களை அபகரித்தல் என்பது தனிமனித செயலில் தொடங்கி, பின்னர் தன் சமூகத்திற்காக பிற சமூகங்களை அழிக்கலாம் என்று துணிந்த போது வேட்டையாடி வயிற்றுப்பாட்டுக்கு செய்த கருவிகளெல்லாம் போராயுதங்களாக புதிய வடிவம் எடுத்தது. அதன் பிறகு சமூகம் வளர்ந்து மன்னன் மக்கள் என்று ஒரு நாட்டுக்குள் தங்களை அடக்கிக் கொண்டு அரசுகளாக இருந்தவர்கள், பேரரசுகள், சாம்ராஜ்யம் என்ற வளர்ந்த போது போர் கருவிகள் (ஆயுதம்) உற்பத்தி என்ற புதிய தொழில்கள் பன்னெடும் காலத்திற்கு முன்பே உருவாகிவிட்டது. ஆயுதங்கள் அழிவை தருபவை என்றாலும் அதைச் செய்பவர்களுக்கு சோறுபோடும் தொழிலாகவும் அது ஆகியது.

அனுஆயுத கண்டுபிடிப்பிற்கு முன்பாகவே ஐரோப்பிய, அமெரிக்கா போன்ற நாடுகளில் முக்கிய தொழிலாக இன்றைக்கும் இருப்பது ஆயுத உற்பத்தி மற்றும் அதன் ஏற்றுமதிகளே. இவையெல்லாம் அமைதியை நிலைநாட்டவோ, மனிதனுக்கு நன்மை அளிப்பவைகளோ இல்லை என்று நேரிடியாக அறியப்பட்டாலும் ஒரு நாட்டின் குறிப்பாக ஆயுத உற்பத்தி அமெரிக்காவின் பொருளியல் வளர்ச்சியில் முக்கிய பங்கு ஆற்றுகிறது.

இன்றைய கணனி உலகில் எல்லாமே கனனி மயமாகிவிட்டலும், இணைய வைரஸ்கள், ஹேக்கிங் என்னும் எதிர் தொழில் நுட்பம் அவைகளை அழிப்பதற்கு ஏற்பட்டு திணர அடிக்கிறது. இது போன்ற கனனி வைரஸ்களை, மற்றும் ஹேக்கிங் ஆகியவற்றை ப்ரிலான்சர் மூலம் செய்து பெரிய நிறுவனங்கள் தம்மிடம்
போட்டியிடும் நிறுவனங்களின் மீது தாக்குதல் நடத்துகின்றன விற்பனையை முடக்குதல், உற்பத்தி ரகசியங்களை அறிதல் போன்றவற்றை செய்கின்றன. இவற்றில் ஈடுபடும் பொறியாளர்கள் நல்ல வருமானமும் பார்க்கின்றனர்.

911 - ஈவிள் நம்பர் என்ற அறியப்பட்ட பிறகு கணனிகளின் தகவல் (DATA) பாதுக்கப்பட வேண்டிய அவசியத்தை உலக அளவில் பல நிறுவனங்களுm உணர்ந்தன. அதைத்தொடர்ந்து டேட்டா சென்டர் என்னும் புதிய நிறுவனங்கள் உலகம் முழுவதும் பல்வேறு தொழில் நுட்ப செயல்பாடுகளுடன் முளைத்துள்ளன. இந்த நிறுவனங்கள் அரசாங்கம் பெரிய பொது நிறுவனங்கள் மற்றும் வங்கி ஆகியவற்றின் டேட்டாக்களை பாதுக்காக்கும் ஒரு சேவையை செய்து வருகின்றன. இதன் மூலம் நில அதிர்வு (பூகம்பம்), கடற்கோள் (சுனாமி), தீவிரவாதிகளின் தாக்குதல் போன்றவற்றால் நிறுவன கட்டிடமே தகர்ந்தாலும் அவர்களுடைய டேட்டா பேஸ் பாதுக்காப்பா வேறு ஒரு இடத்தில் வைத்து பாதுகாத்து, அரிய தகவல்களை அழியாமல் காப்பதற்கு துணைபுரிகிறது. அதற்காக மிரர் சைட் எனப்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட டேட்ட சென்டர்களை வேறு வேறு நாடுகளில் வைத்து தீ தடுப்பு போன்று மிகவும் பாதுகாப்புகளில் கவனம் செலுத்தி பல நிறுவனங்கள் மில்லியன் டாலர்கள் லாபத்தில் இயங்கி வருகின்றனர்.

மனிதன் தன் பயங்கர வாதசெயல்களினால் அவனே பாதிக்கப்படும் போது புதிய தொழில் நுட்பங்கள் வளருவது மட்டுமின்றி வேலை வாய்புகளையும் அது அதிகரிக்க வைத்துவிடுகிறது.

நடப்பதெல்லாம் நன்மைக்கே ! நாம் நேரிடையாக பாதிக்கப்படாதவரை ! :))

தாழ்த்தி உயர்த்திச் சொல்லுதல் மட்டும் பாவமா ?

தாழ்த்தி உயர்த்தி சொல்லுதல் மட்டும் பாவமா ?

பாரதியை தெரிந்தவர்களுக்கு, பாரதியின் பாடல்களை அறிந்தவர்களுக்கு, பள்ளி மாணவர்களுக்கும் கூட தெரிந்த பாரதியின் பாடல்,

சாதிகள் இல்லையடி பாப்பா ! - குலம்
தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்
.

சாதிகள் இல்லையடி என்று சொல்லி இருக்கிறார். மிகவும் அழகான வரி, அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியது, பாராட்டக் கூடியது. அடுத்தவரியில் 'குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்' என்கிறார். இதில் தான் முரண்பாடு இருக்கிறது.
சாதிகளே இல்லையென்று சொல்லிவிட்டு, குலத்தை தாழ்த்தாதே உயர்த்தாதே என்பதில், குலம் இருக்கலாம் என்பது போலவும் அதில் உயர்வு தாழ்வு கூடாது என்று முண்டாசு கவிஞர் முரண்பாடாக சொல்லவருவது எதற்கு ?

பகவத் கீதையை பெருமையாக பேசுபவர் எவரும், அதில் உள்ள வருண பேதங்களையும் போற்றித்தான் ஆகவேண்டும் என்பதற்கு, அதைப் போற்றிய காந்தியடிகள், கோபால கிருஷ்ண கோகுலே, இராஜ கோபால் ஆச்சாரியார் மற்றும் நம் பாரதியாரும் விதிவிலக்கு அல்ல என்பதை அந்த 'குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்' ஒற்றையடி சொல்லிவிடுகிறது. இவர்கள் முறையே மகாத்மா, சுதந்திர போராட்ட வீரர், மாமனிதர், மகாகவிஞர் என்று பண்புப் பெயர்களால் அழைப்பட்டாலும், சமூக மாற்றம் என்பதை 'குலமே கூடாது' என்று சொல்லி அதன் வழி பெரியார் ஏற்படுத்தியது போல் இவர்கள் ஏற்படுத்தவில்லை.

என்னதான் சமத்துவம் பேசினாலும் வருண வழி சமுக அமைப்புகளில் உள்ள நான்கு குல ஆதார பிரிவான பிராமன குலம், சத்ரிய குலம், வைசிய குலம் சூத்ர குலம் அப்படியே தொடரவேண்டும் என்று விரும்பி இருக்கிறார்கள் ஆனால் அதில் உயர்வு தாழ்வு கூடாது என்று கூடுதலாக பொறுப்புணர்வை(?) வெளிப்படுத்தி அதற்கு கேடயம் அமைத்து இருக்கிறார்கள்.
குலங்கள் இருக்கலாம் ஆனால் உட்பிரிவான சாதிகள் கூடாது என்ற புரட்சிகருத்துக்களை (?)பல்வேறுவிதமாக சொல்லியே வருகின்றனர்.

குலங்கள் தொழில் அடிப்படையானது, அது பிறப்பு அடிப்படையில் அல்ல என்ற ஜல்லியை மாடுகள் பூட்டிய வண்டிகள் மூலம் அடித்த காலத்திலும் சரி, இன்றைக்கு அதே ஜல்லியை மிகவும் கஷ்டப்பட்டு கிரேன் மூலம் தூக்கி கொட்டினாலும் சரி, சாதிகள் பிறப்பு அடிப்படையில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறது என்பதை எவரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. பின்பு ஏன் குலங்கள் தொழில் அடிப்படையிலானவை என்ற பழைய பல்லவியையே திரும்பவும் பாடவேண்டும்? காரணம் அப்படி சொல்லவிட்டால் சாதிகள் மறைந்துவிடும் என்ற மனக்கவலையே. குலங்களில் மூலம் அடைந்துவந்த பலன்கள் மறைந்துவிடும் என்பதாலே, உழைப்பை நம்பாமல் பிறப்பின் அடிப்படையில் பலனை அனுபவத்து வந்ததால்... இன்றும் உழைத்தால் தான் சோறு என்றிருக்கும் இந்த காலத்திலும் குலப்பெருமை பேசி பிதற்கின்றனர்.

நான் பதிவுகளை கவனித்து வரும் போது சாதி சண்டைகளையும் கவனித்துவருகிறேன். இதில் சாதிகளைக் குறித்து மிகவும் தரக்குறைவான விமர்சனங்கள் இருக்கும். இவை முகம் சுளிக்கக் கூடியவை என்பதில் எள்ளளவும் ஐயமே இல்லை. தனி ஒருவன் செய்யும் தவறுகளுக்கு ஏன் ஒரு குலத்தையே கேவலப்படுத்துகிறார்கள் என்று நினைப்பதும் உண்டு. சிலர் பொறுக்க முடியாமல் 'ஒட்டு மொத்த குலத்தையே' கேவலப்படுத்துவது சரி அல்ல என்று சிலரின் பதிவை சுட்டி என்னிடம் சொல்லி இருக்கிறார்கள், சிலருடைய பதிவுகளின் பின்னூட்டமும், சில பதிவுகளும் ஒட்டு மொத்தமாக சில குலத்தினரை குறைசொல்வதை குறித்து குறைசொல்லும் பதிவுகளாக இருக்கிறது.

தன்னை நடுநிலைவாதி என்று கூறிக் கொள்பவர்கள் கூட அதே போல் 'ஒட்டு மொத்த சாதியை குறை சொல்வது தவறு' என்று சொல்கிறார்கள், குறிப்பாக ப்ராமனர், தேவர், வன்னியர், கவுண்டர் என ஒரு குறிப்பிட்ட சாதியனர் என்று தங்களை வெளிப்படுத்திக் கொண்டு எழுதுபவர்களுக்கு எதிராக அவர்களுடைய சாதி குறித்த மிக மட்டமான விமர்சனங்கள் வரும் போது நடுநிலைவாதிகளாக இருப்பவரும் கூட... அவை கண்டனத்துக்கு உரியவை ஏனென்றால் எனக்கு தெரிந்து இந்த சாதியை சேர்ந்தவர் நல்லவராக இருக்கிறாரே, ஏன் நானும் கூட இந்த சாதியில் பிறந்ததால் என்ன கெட்டவனாகவா இருக்கிறேன் ? என்பது போன்ற விவாதங்கள் வருகிறது. இதில் மறைமுகமாக கவனிக்க வேண்டியவை சாதிகள் இருக்கலாம் என்று சொல்லவருவதைத்தான் பார்க்க முடிகிறது. ஒருவன் செயல் சாதியை குறிக்கவில்லை என்றால், அவனை சார்ந்த சாதியை குறைத்துக் கூறும் போது, சாதியை உயர்வாக நினைக்காதவர்கள், சாதி பெருமை பேசாதவர்கள் ஏன் ஆவேசப்படவேண்டும். இப்படி நடந்து கொள்ளும் போதே சாதிதாக்குதல்கள் பற்றி குறைகூறுபவருக்கு 'மிதவாத சாதி உணர்வு' இருக்கிறது என்பது அப்பட்டமாக தெரிகிறதே.

ஒருவர் நல்லவராக இருப்பதை சாதியின் பின்புலமாக நீங்கள் பார்த்தால், ஒரு கெட்டவனின் பின்புலமும், செயலும ் அதே சாதியை சேர்ந்தும் சார்ந்தும் இருக்கும் பொழுது அதையேன் அந்த சாதியின் தாழ்வு என்று பிறர் சொல்லும் போது ஏற்க முடியவில்லை ? அந்த சாதிகள் போற்றி வளர்கப்படுவதுபோல், அதனால் பாதிக்கப்பட்ட பிறரால் தாக்கப்படும் என்பதும் சரிதானே ? அதாவது தனிப்பட்டவரின் நல்ல செயல்களுக்காக அவரது சாதியை பார்த்து சாதியை குறை சொல்லக் கூடாது என்று முட்டுக் கொடுப்பதும், சாதிப் பெருமை பேசி மற்றவர்களை மறைமுகமாக இழிப்பவர்களை எதிர்க்க ... அதே சாதியை சொல்லி அவரை தாக்குபவரின் செயலும் ஒன்றே.

சாதிகளைப் போற்றாதவர்கள், நடுநிலையாளர்கள் எவரும், உயர்த்தி பிறரைத்தாழ்த்தும் சாதிகள் எவை இருந்தாலும் அவை தாக்கப்படும் போது கவலைப் படத்தேவை இல்லை என்பது என்கருத்து. ஒரு சாதியில் பிறந்தவர் தன் சாதி உயர்ந்தது என்று சொல்லுவதை ஒப்புக் கொள்ள முடிந்தால் அதே சாதியால் ஒரு சமூகம் பாதிக்கப்பட்டதாக சொல்லி வேறுருவர் பழித்தால் அதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். பல நூறுவருடங்களாக பல சாதிகளைச் சேர்ந்தவர்களை பிறப்பின் அடிப்படையில் தரக்குறைவாகவே நடத்தப்பட்டு, இன்றும் அந்த இழிநிலை கிராமங்களில் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், சிலர் இன்னும் தங்கள் சாதி உயர்ந்ததே, அதில் பிறந்ததில் பெருமை படுகிறேன் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் செயல்களை கண்ணுற்றால் பிறர் சாதிகள் தாக்கப்படும் போது மெளனமாகவும், அதே சமயத்தில் சந்தர்பம் கிடைத்தால் இவர்களே பிறரை அவர்கள் பிறந்த சாதிகளைச் சொல்லி தாக்கவும் செய்கிறார்கள்... அவனெல்லாம் யோக்கியமா ? என்று கேட்கவும் செய்கிறார்கள். இது ஒரு இரட்டை நிலை...எனவே
எந்த சாதியாக இருந்தாலும் அவைகளை வெளியில் சொல்வதே இழிவானது என்ற நிலைவரும் பொழுது சாதிகள் ஒழிந்து மனிதம் தழைக்கும்.

குலமே பாவம் தான், மனித குலம் பிடித்துக் வைத்துக் கொண்டுள்ள ஒரு நோய், அதை தாழ்த்தி உயர்த்தி சொல்லுதல் மட்டும் தான் பாவமோ ?

குப்பையில் மாணிக்கம் கிடைத்தது என்ற ஒரே காரணத்துக்காக குப்பையை போற்ற முடியுமா ? அப்புறப்படுத்தத் தானே வேண்டும்.

சாதிகள் இல்லையடி பாப்பா ! எந்த
குலமும் இங்கு வேண்டாமடி பாப்பா !

6 ஜூலை, 2007

விஜய் அடுத்த சூப்பர் ஸ்டாரா ?

சூப்பர் ஸ்டார் கனவும் அதைத் தொடர்ந்து முதல் நாற்காலியும் இளைய நடிகர்களை மிகவும் படுத்துகிறது. சூப்பர் ஸ்டார் கனவில் தற்போது மும்மரமாக இருப்பவர்கள் இருவர் ஒருவர் ஏற்கனவே சிறுவயது முதலே லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற அழைக்கப்பட்டு வரும் சிம்பு, அடுத்தவர் இளைய தளபதி விஜய்.

இவர்கள் படங்களில் பஞ்சு டயலாக் இல்லை என்றால் தயாரிப்பாளர்களுக்கே பஞ்ச் விழும் என்பதால் ஸ்டார் அந்தஸ்து இருக்கிறதே என்று தயாரிப்பாளர்களும் சகித்துக் கொள்கின்றனர்.

தமிழன் படம் ஏன் ஓடவில்லை என்பதற்கு விஜயின் அப்பாவும் இயக்குனருமான சந்திரசேகர் மிக அருமையான கண்டுபிடிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது அந்த படத்தில் விஜய் இறப்பது போல் காட்சி வைக்கப்பட்டதாம் ( ஆனால் இறக்கவில்லை, பலர் பிரார்த்தனை செய்ய எழுந்துவிடுவார்) அதனால் விஜய் ரசிகர்களுக்கு அந்த காட்சியை ஜீரணிக்கவோ, ஏற்றுக் கொள்ளவோ முடியவில்லையாம் அதனால் படம் தோல்வி அடைந்துவிட்டதாகவும், ரஜினி படம் போல், விஜய் படத்திலும் கதாநாயகன் அடிவாங்குவது போல் இருந்தாலும், அல்லது இறப்பது போல் காட்சி இருந்தால் ரசிகர்கள் திரையை கிழித்துவிடுவார்களாம்.

தற்பொழுது வரும் விஜய் படங்களெல்லாம் ரஜினியின் அறிமுக காட்சி போல காலை தூக்கிக் காட்டிக் கொண்டுதான் வருகிறார். குத்துப்பாட்டுகள் மற்றும் க்ளோசப் காட்சிகள் எல்லாமும் ரஜினி பாணியிலேயே விஜய்படங்களிலும் இருக்கிறது. தானும் ரஜினி ரசிகன் என்று ஸ்டேட்மெண்ட் விடுவதால் ரஜினி ரசிகர்களின் கூட்டமும் ஓரளவுக்கு விஜய்க்கு இருக்கிறது.

இந்த கூத்தைவிட பெரும் கூத்தாக விஜயின் வரும்கால சூப்பர் ஸ்டார் கனவுக்கு தற்பொழுது விளம்பர யுக்தி போன்று 'விஜய் ரசிகன்' என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் வாரநாட்களில் ஒளிபரப்பாகிறது. அதில் கண்தெரியாதவர்கள் முதல் ஊனமுற்றோர் அனைவரும் வந்து விஜயின் புகழை பாடி செல்கின்றனர். எல்லாவற்றிக்கும் மேலாக விஜய் ரசிகர்களின் 'உடல் மண்ணுக்கு, உயிர் விஜய்க்கு' என விஜய்மீது அன்பை பிழிந்து டிவி திரையே கண்ணை மூடிக் கொள்ளும் அளவுக்கு அபத்த டயலாக்குகளை அள்ளி வீசுகின்றனர்.

எம்ஜிஆர், ரஜினி அடுத்து விஜய் மூன்றாவது தலைமுறை சினிமா ரசிகர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இவரது சூப்பர் ஸ்டார் கனவு இவருக்கு பலிக்குமா ? அவரையே பழிக்குமா ?

5 ஜூலை, 2007

சிறுவன் திலீபனின் நிலை மிகவும் பரிதாபம் :(

அண்மையில் மணப்பாறை பெண்ணுக்கு மகப்பேறு அறுவை சிகிச்சை செய்த மருத்துவ பெற்றோர்களின் மகன் திருச்சி சிறுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்திருக்கிறான்.

பெற்றோர்களின் ஆர்வக்கோளாரே இந்த குற்ற வழக்கிற்கு முதன்மையாக அமைந்திருக்கிறது. பெற்றோர்கள் வழி நடத்தியதன் மூலம் தான் அந்த சிறுவன் செயல்பட்டு இருக்கிறான் என்பது இதுவரை கிடைத்த தகவல் படி தெரியவருகிறது.

சிறுவர் நீதி மன்றத்தில் அந்த சிறுவன் சரணடைந்திருக்கிறான், போலிசார் வலைவீசி தேடினார்கள் என்றெல்லாம் செய்திகளில் மிகவும் அதிகமாகவே அந்த சிறுவனை புகைப்படத்துடன் போட்டு ரவுடி ரேஞ்சுக்கு எழுதுகிறார்கள். பாவம்... அவனும் பெற்றோர்கள் ஊக்கப்படுத்துகிறார்கள் என்பதால் இதை பெற்றோர்களின் தூண்டதல் மூலம் செய்திருக்கிறான். சிறிய வயதிலேயெ, உடன்படிப்போர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மூலம் மிகப் பெரிய அவமானம் தனக்கு காத்திருக்கிறது என்றெல்லாம் நினைத்துப் பார்த்திருக்க மாட்டான். இதையெல்லாம் நினைத்துப்பார்க்க வேண்டிய பெற்றோர்களே மருத்துவம் படித்தும் கவனக்குறைவாகவும், பெறும்பின்மையுடன் நடந்து கொண்ட போது பாவம் பள்ளிச் சிறுவன் என்ன செய்வான் ?

இது உண்மையில் நடந்திருந்தாலும் கூட இந்த வழக்கில் தண்டனை அடைய வேண்டியவர்கள் பெற்றோர்களே அன்றி சிறுவன் அல்ல. அரசும், பத்திரிக்கைகளும் கவனத்துடன் செயல்பட்டால் நன்றாக படிக்கும் ஒரு சிறுவனை மன உளைச்சல் அடைந்து, அவன் எதிர்காலமே கேள்விகுறியாகிவிடும் நிலையை தவிர்க்க முடியும்.

இந்த வழக்கில் சிறுவனை குற்றவாளியாக கருதாமல் சாட்சியாக மட்டும் எடுத்துக் கொண்டு சென்றால் அவனுடைய எதிர்காலம் பாதிப்பு அடையாது. அவனுடைய பெற்றோர்களில் தந்தை தூண்டினாரா ? அல்லது தாய் தூண்டினாரா என்பது சரியாக தெரியவில்லை. சாட்சிகள் மற்றும் வாக்கு மூலங்களின் மூலம் குற்றவாளிகள் என்று தெரிந்தால் கண்டிப்பாக தூண்டியவர் தண்டனைகளை அடைந்தே தீரவேண்டும். இது பலருக்கு பாடமாக அமையும், அதாவது ஆர்வகோளாறு பெற்றோர்கள் திருந்துவார்கள். சிறுவர்களை சிறிய வயதில் சாதனை என்ற பெயரில் அவர்களை கொடுமைபடுத்துவதும் குறையும்.

2 ஜூலை, 2007

நாணயத்தின் பக்கங்கள் (சிறுகதை) !

"சார்...உங்களைப் பார்க்கத்தான் வந்தேன், பையன் ஒரு வீடுகட்ட ஆசைப்படுகிறான், நல்ல இடமாக இருந்தால் சொல்லுங்க" - புரோக்கர் பொன்னுசாமியை சந்தித்து சொல்லிக் கொண்டு இருந்தார், ரிடையர்ட்டு தெய்வசிகாமணி

"அடடே, சரியான சமயத்துக்குத்தான் வந்திருக்கிங்க"

"ஓ ! அப்படியா ?"

"ஆமாம் பஸ்டாண்டுக்கு 5 நிமிச நடையில் போக முடிவது போல, சின்னத் தெருவில், ஒரு மனை இருக்கு"

"நல்ல இடம் மாதிரி இருக்கே, பேசுறிங்களா ?"

"ஓனர் நம்மகிட்டதான் வந்திருக்காங்க, பெரிய ரூவாயில் நாலு ரூவாய் சொல்கிறார்கள்"

"ஓ, அதிகமாகத்தான் இருக்கு, அதுக்கு பக்கத்தில் என் தம்பி கூட இடம் வாங்கினான், அவ்வளவு இல்லையே ?"

"பாருங்க, ஒரு பெரிய ஷாப்பிங் காம்ளெக்சும், இரயில்வே ஸ்டேசனும் இப்போ பஸ்டாண்டு பக்கத்திலேயே வரப்போகுது, அதுதான் திடீரென்று விலை எகிறிவிட்டது, மூனறை ரூவாய்க்கு பேசி முடிச்சிடுலாம்"

"இன்னும் கொறைக்க பாருங்க"

"இதுக்கு மேல் குறைக்க முடியாதுன்னு நினைகிறேன், வீடு உங்களுக்குத்தான், நாளைக்கு பார்டியை வரச் சொல்கிறேன், பேசி முடிச்சிடலாம்"

"நல்லது, நாளைக்கு சாயங்காலம் வருகிறேன், முடிச்சு கொடுத்துடுங்க"

"உங்களுக்கு செய்யாமல் யாருக்கு செய்யப் போகிறேன்"

விடைபெற்றார் தெய்வசிகாமணி

**********************

மறுநாள் வழக்கம்போல் காய்கறி கடைக்குச் சென்றார்

"இந்தாம்மா, கீரை வேற இல்லையா ?"

"இல்லைங்கைய்யா "

"சரி சரி, என்ன விலை வழக்கமாக போடுகிற 1 அரை ரூவாதானே ?"

"இல்லைங்கையா, காய்கறி வண்டி இன்னிக்கு வரலை, அதனால் பையனை விட்டு பக்கத்தூரு மார்கெட்டில் இருந்து வாங்கியாரச் சொன்னேன், அடக்கவிலையே 2 அரை ஆச்சுங்க, 5 கட்டுதான் வாங்கியாந்தான் கட்டு 3 ரூவான்னு 4 கட்டு ஓடிடுச்சு, இதுதான் கடைசி, உங்களுக்காக வேண்டுமானல் நாலனா குறைச்சிக்கிறேன்"

"வெலையை ஏத்தி விக்க எதாவது காரணம் சொல்லுவிங்களே, சரிம்மா, எடுத்துவை, மளிகை கடைவரை போய்டு வருகிறேன்"

ஐந்து நிமிடம் சென்று திரும்பவும் காய்கறி கடைக்கு வந்தார்.

யாரோ ஒரு பெண்மணியுடன் காய்கறிகாரி கையை ஆட்டி மறுத்து விவாதம் செய்து கொண்டிருந்தார், இவர் அருகே செல்லச் செல்ல தெளிவாக கேட்டது

"ஐஞ்சு ரூவா தருகிறேன், கீரையை கொடு, மாமியாருக்கு கீரை இல்லாட்டி சாப்பாடு எறங்காது"

"இந்தாம்மா, ஐஞ்சு ரூவா இல்லே, லெட்ச ரூவா தர்ரேன்ன்னு சொன்னாலும் இந்த கீரைகட்டை கொடுக்கமாட்டேன்"

"அப்படி என்னதான் இருக்கு அந்த கீரையில ?"

"கீரை எப்பவும் போலத்தாம்மா இருக்கு, அதை கோடிவீட்டு ஐயா ஏற்கனவே வாங்கி வச்சுட்டார்"

"ரொம்பவும் தான் நேர்மை, ஹூம்..." என்று முகம் சுளித்தபடி மற்றவற்றை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டாள்

காய்கறிகாரி விலையேற்றத்திற்காக பொய் சொல்லவில்லை, என்ற நிம்மதியுடன் கீரையை வாங்கிக் கொண்டு வீடுவந்து சேர்ந்தார்.

******

சாயங்காலம் ஆனதும், புரோக்கர் பொன்னுசாமியை சந்திக்க சென்றார்,


'ரொக்கமாக ஐம்பதாயிரம் கமிசன் கொடுக்குறிங்க... போய்டு வாங்க தம்பி, நாள் குறிச்சுட்டு ரிஜிஸ்ட்ரேசன் வச்சிக்குவோம்' பொன்னுசாமி ஒரு இளைஞருக்கு விடை கொடுத்துக் கொண்டு இருந்தார்.

தெய்வசிகாமணியின் வருகையை கண்டதும் உற்சாகம் குன்றியவராக காணப்பட்டார் பொன்னுசாமி, தலையை சொறிந்தவாரே,

"நானே, உங்களை நேரில் பார்கலாமுன்னு..."

"உங்களுக்கு எதுக்கு சிரமம், அதான் நானே வந்துட்டேன்"

"இல்லைங்க, அது இல்லை... அதாவது அந்த ஓனர் இடத்தை விக்கப் போறதில்லையாம், மகன் எதோ பிரச்சனை பண்ணுகிறானாம்"

தெய்வசிகாமணிக்கு சற்று வருத்தம் ஆகிவிட்டது,

"அடடே, நல்ல இடமாச்சேன்னு, இரண்டாம் முறை கூட யோசிக்காமல் சரி என்று சொன்னேன், இப்போ கிடைக்கலை, நமக்கு கொடுத்து வைக்கல, என்ன செய்றது, வேற எடம் இருந்தால் சொல்லுங்க"

"சொல்கிறேன்...உங்களுக்கு சொல்லாமல் யாருக்கு சொல்லப் போகிறேன் ?"

"நல்லது, வருகிறேன்" விடைபெற்றார்

**********

மாலை 6 மணிக்கு மேல் ரேசன் கடைக்குச் சென்றார், அங்கு இரு பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர்

"அக்கா, என் தம்பி சின்னத் தெருவில் இடம் வாங்கிப் போட்டு இருக்கான்"

"உனக்கு என்னடி அம்மா, தம்பி பேங்கில வேலைப் பார்கிறான், இடம் சல்லிசா வந்தால் வாங்கிப் போடாமல் என்ன செய்யப் போறிங்க, பணத்தை சேர்த்து வச்சா பாசிதானே புடிக்கும்"

"உங்க கிட்ட சொன்னேன் பாருங்க, சல்லிசா வரலை மாமி, 5 லட்சம் ஆச்சாம், புரோக்கர் பொண்ணுசாமின்னு பைக்கில போவரு இல்லையா ? அவருதான் ஆறு லட்சம் வெலை உள்ள இடததை இவனுக்காக பேசி 5 லட்சத்துக்கு இன்னிக்கு மதியம் தான் முடிச்சுக் கொடுத்து இருக்கார், அட்வான்ஸ் கொடுத்துட்டான்...லோன் போட்டு இருக்கானாம், வாங்கப்போறதா சொல்றான் தம்பி"

"ஒரு லட்சம் குறைச்சி பேசி இருக்காரே, நல்ல மனுசன்டி அந்த புரொக்கர்"

'ஆமாம் ஆமாம் நல்ல மனுசன் தான்', மனதுக்குள் செல்லிக் கொண்டார் ! காய்கறிகாரி காலையில் ஒரு பெண்ணிடம் கீரைக்கட்டை லட்ச ரூபாய் தந்தாலும் தரமுடியாது என்று மறுத்தது நினைவுக்கு வந்தது.


படம் : விகடன் (நன்றி)

1 ஜூலை, 2007

தமிழக தேர்தல் ஆணையம் தூங்கியதா ?

இந்தியாவில் தேர்தல் என்பது ஜனநாயகம் செத்ததன் நினைவு நாள் போலவும், அது நடப்பதற்கு சுபயோக சுபதினத்தில் நாள் குறித்து தரும் புரோகிதர் போலத்தான் தேர்தல் ஆணையம் செயல்பட்டுவருகிறது. மக்கள் ஆட்சி என்னும் மாளிகையின் உளுத்துப்போன தூண்களாக மா(ற்)றிவரும் ஜனநாயக தேர்த்தல் கூத்துக்களில் ஒன்றாக 6 வருடங்களுக்கு முன்பு அரங்கேறி இருக்கிறது ஒரு கேலி கூத்து.

அதாவது 2001ல் தமிழக சட்டமன்ற தேர்தலில் விதிகளுக்கு புறம்பாக ஜெயலலிதா 4 இடங்களில் போட்டி இட்டதாகவும், தான் 2 இடங்களுக்கு மேல் போட்டி இடவில்லை என்று ஒவ்வொரு தொகுதியிலும் கையெழுத்து இட்டு கட்சியின் முதன்மை பொறுப்புகளில் இருந்தவர்கள் மூலம் வேட்பு மனு தாக்கல் செய்ததாகவும் கோமாவில் இருந்து எழுந்த ஒரு சர்சையை திமுகவின் சீனியர் எம்பியும் தொழிற்சங்க தலைவருமான குப்புசாமி என்பவர் எழுப்பி நீதிமன்றத்தில் இதுபற்றிய வழக்கு ஒன்றை தொடுத்து இருக்கிறார்.

நீதிமன்றம் இவ்வழக்கை ஏற்றுக் கொண்டு தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டு இருக்கிறது. இதில் என்ன இருக்கிறது ? சட்ட ரீதியாகத்தானே பிரச்சனையை அணுகுகிறார்கள் என்று தானே தெரிகிறது ! என்கிறீர்களா ? இதில் ஜெ தவறு செய்தாரா ? அப்படி செய்திருந்தால் தண்டனை பெறத்தகுந்தவரா ? என்ற சர்சைகளை இங்கே தூரம் வைக்கிறேன். இங்கு சொல்ல வருவது என்னவென்றால் செல்லறித்துப்போன அரசு துறையில் படிந்துள்ள நடைமுறை அவலங்களைத்தான் இந்த வழக்கு காட்டுகிறது.

தமிழ்நாட்டில் எந்த ஒரு நபரின் பெயரும் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளின் வாக்களர்கள் பட்டியலில் பெயர் இருந்தால் மோப்ப நாயை வைத்து கவ்வி கண்டுபிடிப்போம் என்று மார்தட்டும் தேர்தல் ஆணையம். முதல்வராகவும், ஒரு கட்சி தலைவியும் 4 இடங்களில் மனுதாக்கல் செய்கிறார் என்ற விசயம் அதே நாளில் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவதற்கு வாய்பே இல்லையா ? புறாக்களின் மூலம் கடிதங்களும், தபால் அலுவலகம் மூலமும் தான் தமிழக தேர்தல் தலைமை ஆணையம் வேட்பு மனுதாக்கல் செய்யப் பட்டவர்களைப் பற்றிய தகவல்களை பெற்று வருகிறதா ? வாக்கெடுப்பை உலகிலேயே முதன் முறையாக கணனி மயப்படுத்தினோம், எலக்டானிக் வாக்கெடுப்பு என்றெல்லாம் பீற்றிக் கொள்ளும் தேர்தல் ஆணையத்திற்கு, ஜெயலலிதாவின் பெயரை நான்கு சட்டமன்ற தொகுதிகளில் முன்மொழிந்தது பற்றி அதே நாளில் எதுவுமே தெரியமல் இருப்பதற்கான சாத்தியம் இல்லாதிருக்கும் ?

இந்தவழக்கில் முக்கிய சாட்சியாக தான் இரண்டு இடங்களுக்கு மேல் மனுதாக்கல் செய்யவில்லை என்ற படிவம் இருப்பதாக நீதிமன்றத்தில் சொல்லி இருக்கிறார்கள். ஜெயலிதாவின் வேட்பு மனுவை மனுபரிசீலனை அன்றே பரிசீலித்து நான்கு இடங்களில் போட்டி இட்டு இருப்பதை காரணமாக சொல்லி தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்திருக்க முடியும். (நான்கு இடங்களிலுமே டான்சி வழக்கில் கிடைத்த தண்டனை மூலம் தள்ளுபடியானதும், இடைதேர்தல் மூலம் ஜெயலலிதா மீண்டும் முதல்வரானது வேறுவிசயம்)

அன்று தேர்தல் ஆணையம் அனுமதித்த ஒன்றை இன்று முறைகேடான ஒன்றாக சொல்லி திமுக அரசு கையில் எடுத்துக் கொண்டு, ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து வருகிறது. இந்த வழக்கில் ஞாயமாகப் பார்த்தால் இந்த வழக்கு நடப்பதற்கு முக்கிய காரணியாக அமைந்த தேர்தல் ஆணையத்தின் பொறுப்பற்ற தன்மைக்காக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்து, அன்றைய தேர்தல் தலைமை அதிகாரியாக (சாரங்கி ?) இருந்தவருக்கு தான் தண்டனைகள் பெற்றுதரவேண்டும்.

பொறுப்பற்ற அரசு அதிகாரிகளின் நேர்மையற்ற செயலால் இந்த வழக்கு ஜெயலலிதாவின் மீது உள்ள குற்றமாக மட்டுமே திசைத்திருப்பபட்டுள்ளது. ஜெயலலிதா அரசியல் நாகரீகம் தெரியதவர் என்ற பின்பாட்டை செய்தியாளர்கள் கூட்டத்தின் முன்பாக பாடிவரும் திமுக அரசு எதிர்கட்சி அரசியலை ஜனநாயக ரீதியில் அணுகாமல் குறுக்குவழியில் செல்வது நாகரீகமான அரசியல் அல்ல, பச்சை அரசியல் தனத்தை விட்டுவிட்டு, மக்கள் செல்வாக்கை பெற மக்கள் நலதிட்டங்களின் மீது நம்பிக்கை வைத்து செயல்படலாம்.


தேர்தல்மீதே நம்பிக்கை இல்லாதவர்கள் என்று சிலர் இருக்க, தேர்தல் ஆணையத்தின் மீதும் நம்பிக்கையற்ற சூழல் நடந்துவருவது வருத்தம் அளிக்கிறது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்