சிங்கையில் 1998 ஆம் ஆண்டு கைப்பேசிகள் புழக்கத்தில் வந்த பிறகும் நான் அவை தேவையற்ற ஆடம்பரம் என்றே வாங்காமல் இருந்தேன், 'அட வாங்கி வைத்துக் கொள், எப்போ வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பேசலாமே என்று எனக்கு ஒன்றை அவனது கணக்கிலேயே வாங்கிக் கொடுத்தான் என் தம்பி. தம்பிக்கு எனக்கும் வயது வேறுபாடு 2.5 ஆண்டுகள் தான், அவன் எனக்கு முன்பாக சிங்கை வந்திருக்காவிட்டால், எனக்கு சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்லலாம் என்ற எண்ணமே வந்திருக்காது, அவன் சிங்கைக்கு வந்து ஒரு ஆண்டுகள் முடிய எனக்கும் பகுதி நேர பிஇ படிப்பு முடிய நாமும் சிங்கப்பூர் செல்லலாம் என்று முடிவெடுத்தேன், செல்லும் செலவு, முகவருக்கு பணம் எல்லாம் தம்பி தான் கட்டினான், திருப்பிக் கொடுத்துவிட்டேன் என்றாலும் அந்த நேரத்தில் எனக்காக செலவழிக்கப்பட்டது பெரிய தொகை, சிங்கைக்கு வேலைக்கு வந்த புதிதில் நண்பர்கள் யாரும் இல்லாத நிலையில் தம்பியும், தம்பி அறையில் தங்கி இருந்தவர்களும் தான் நண்பர்கள், சனி ஞாயிறுகளில் அவர்களது அறைக்குச் சென்று அங்கேயே இருந்துவிட்டு திங்கள் காலையில் வேலைக்குச் செல்லுவதற்காக ஞாயிறு இரவு கிளம்புவது வழக்கமாகவும் இருந்தது, வந்த ஒரு மாதத்திற்குள் சிங்கப்பூரில் இருந்த அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் சென்றுவிட்டான்.
ஏற்கனவே சென்னையில் ஒன்றாக ஒரே வீட்டிலும் வசித்தோம், பிறகு பணி இடம் தொடர்பில் வேறு வேறு இடத்திலும் வசித்தோம், சிங்கையிலும் ஒன்றாகவும் தனித்தனியாகவும் வசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது, வேலைக்காக வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு, திருமணத்திற்கு முன்பு வரை அதிக நாட்கள் நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்திருக்கிறொம் என்ற வகையில் என்னுடன் பிறந்தவர்கள் இன்னும் ஐந்து பேர் என்றாலும் எனக்கு அடுத்து பிறந்தவனான இவனுடன் மட்டும் தான் நீண்ட நாட்கள் ஒன்றாக இருக்கும் வாய்ப்பும் கிட்டி இருந்தது. கிட்ட் தட்ட 20 ஆண்டுகள் ஒன்றாக வசிக்காவிட்டாலும் அருகருகே மாதம் ஒருமுறையேனும் பார்க்கக் கூடிய அளவில் வசித்து வந்தோம்,. சிங்கையில் சில ஆண்டுகள் அவனும் தனது குடும்பத்துடன் வசித்தான், பிறகு தனியாகவும் வசித்து வந்தான், கடந்த 10 ஆண்டுகளாக நீரிழிவு குறைபாட்டுடன் வாழ்ந்து வந்தவனுக்கு 2009 ஆம் ஆண்டு உடலுறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்பு அடைய, இனி இங்கே இருப்பது சரிபட்டு வராது என்று கூறி தமிழகத்திற்கே அனுப்பி வைத்தேன், தமிழகத்திற்கு புறப்படும் முன்பு வரை தம்பியின் பெயரில் பதிந்திருந்த அலைபேசி எண்ணைத்தான் வைத்திருந்தேன், போகும் முன்பு என் பெயரில் மாற்றிக் கொடுத்துச் சென்றான், அதே தொலைபேசி எண்ணை 12 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வருகிறேன்.
சிங்கையில் இருந்து சென்று ஒரு ஆறுமாதத்தில் நீரிழிவு மோசமடைய, இரு சிறுநீரகங்களும் பழுதடைய டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலைக்கு சென்று கிட்டதட்ட ஓராண்டுகள் டயாலிசிஸ் என்னும் இரத்த சுத்திகரிப்பு செய்து வந்தான், பிறகு அவனது மாமியாரின் (தாய் மாமனின் மனைவி) சிறுநீரகம் பொருத்தமாக அமைய 2011ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அதனை மாற்று சிறுநீரகமாக வைத்தோம், நன்கு பொருந்தினாலும் கணையம் ஏற்கனவே பழுதடைந்த நிலையில் வைத்த சிறுநீரகமும் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்கத் துவங்கி இருந்தது, இந்த கணையப் பிரச்சனையை முன்பே கண்டிருந்தால் நீரிழிவு ஏற்பட்டிருந்திருக்காது, மருத்துவர்கள் நீரிழிவிற்கான சிகிச்சை மட்டுமே அளித்து வந்திருந்தனர், பிரச்சனை கணையத்தில் தான் என்பதை நீரிழிவு முற்றும் வரை யாரும் அறிந்திருக்கவில்லை,
மூன்றுவாரம் முன்பு 10 நாள் விடுமுறையில் ஊருக்குச் சென்ற பொழுது தம்பியின் உடல் நிலை சற்று கவலைக்கிடமாகவே இருந்தது, விசாரித்ததில் இவரு இப்படிதான் படுத்திருப்பார் பிறகு எழுந்துவிடுவார் என்றார்கள், என்னிடம் நன்றாகத் தான் பேசினான், எழுந்து உட்கார கொஞ்ச முயற்சி எடுத்தான், கூடவே கொஞ்சம் காய்ச்சல், இரண்டு நாளாக காய்ச்சல் டாக்டரிடம் கூப்பிட்டால் சரியாகிவிடும் தேவை இல்லை என்கிறார் என்று தம்பியின் மனைவியும், என்னுடைய இன்னொரு தம்பியும் கூறினர், இதற்கிடையே நான் வேறு ஊர்களுக்கு சென்று திரும்பும் பொழுது மருத்துவ மனையில் சேர்த்திருப்பதாக எனக்கு அழைத்துச் சென்னார்கள், மருத்துவ மனைக்குச் சென்று பார்த்த பொழுது உடல் மிகவும் நலிவுற்று கைகால்கள் சோர்ந்தே இருந்தது, ரொம்பவும் அளவாகப் பேசினான், இவ்வளவு உடல் வலிகளை எப்படித்தான் தாங்கிக் கொள்கிறானோ என்று கவலையாக இருந்தது, நல்லாப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று பக்கத்தில் பார்த்துக் கொண்டு இருந்த அம்மாவிடம் சொல்லிவிட்டு எனக்கும் சிங்கைத் திரும்ப வேண்டி சில வேலைகள் இருந்ததால் திரும்பிவிட்டேன்,
சிங்கைத் திரும்பிய மூன்றே நாட்களில் (புதன், 28 நவம்பர் 2012) 'கிட்னி மாற்றிய பிறகு ரெகுலர் செக்கப் செல்லும் சென்னை மருத்துவ மனைக்குக் வழக்கமான செக்கப்புக்கு அழைத்துச் சென்றோம், இங்கே சோதித்துப் பார்த்து டெங்கி காய்சல், இரண்டு நாள் முன்பே அழைத்து வந்திருக்கலாம் என்கிறார்கள், ரொம்ப சீரியஸ் கண்டிசன்' என்று எனக்கு இன்னொரு தம்பியும், தங்கையும் அழைத்துச் சொன்னார்கள், வீட்டில் உள்ள அனைவருக்கும் பயண ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கும் பொழுதே, மருத்துவர் இன்னும் இரண்டு மணி நேரம் மட்டும் டைம் கொடுத்திருக்கிறார், நுரையீரலில் இரத்தக் கசிவு இனிமே எதுவும் செய்ய முடியாதாம், செயற்கை சுவாசம் கொடுக்கிறார்கள், நாம சொன்னா எடுத்துவிடுவாங்க, (இன்னொரு) அண்ணன் வரட்டம் என்று காத்திருக்கிறேன் என்று திரும்ப அழைத்துச் சொன்னார்கள். அப்போது என் (அடுத்த) தம்பியிடம், உடல் உறுப்பு தானம் செய்ய ஏதேனும் வாய்பிருக்கிறதா என்று கேளேன், என்றேன், 'இதுக்கு தான் ஏற்கனவே கிட்னி பிரச்சனை, கண்ணும் பார்வை குறைவாகத்தானே இருந்தது, இப்ப நுரையீரலும் போய்விட்டது தானம் செய்யும் அளவுக்கு எதுவும் இல்லையே' என்றான், தம்பியின் உடலுறுப்புகளில் ஏதேனும் ஒன்றையாவது வாழ வைக்க முடியும், அவனது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையும் பொய்ததது, , மரண செய்திகளைவிட இன்னும் கொஞ்ச நேரத்தில் மரண செய்தி வரப்போகிறது என்று உறுதியாக தெரியும் பொழுது ஏற்படும் கையறு நிலையையும் வேதனையும் விவரிக்க முடியாது,
சரியாக விமானநிலையத்திற்கு புறப்படும் முன் 'நம்முடைய சகோதரன் நம்மைவிட்டு போய்விட்டான்' என்று உறுதியான தகவலாக குறுந்தகவலை அனுப்பி இருந்தான் இன்னொரு தம்பி. சென்னை மருத்துவ மனையில் எல்லா வழக்ககங்களையும் முடித்து உடல் நாகை வரும் முன்பே, நான் திருச்சியில் இறங்கி தஞ்சைக்கே வந்துவிட்டேன், அங்கிருந்து இரண்டு மணிநேர பயணத்தில் அதிகாலை 4 மணிக்கு நகைச் சென்று தம்பி வீட்டிற்குச் செல்ல, வாசலில் பந்தல், ஜெனரேட்டர் வைத்து மின் விளக்குகள், உறவினர் பெண்கள், தம்பி மனைவி, எங்கள் அக்கா, தங்கை, அம்மா என பெண்கள் குழுமி இருக்க, நடுக்கூடத்தில் ஐஸ் பெட்டியினுள் தூங்குவது போல் படுக்க வைத்திருந்தனர், பார்த்து நான்கு நாள் தானே ஆகிறது, அதற்குள் இப்படியா ? என்னைப்பார்த்ததும் அம்மா, அக்கா, தங்கை எல்லோரும் கதறினார்கள், அவனது மனைவி பிரமைப்பிடித்தது போல் இருந்தார், அவனது 10 வயது மகனுக்கு இப்படி ஒரு நிகழ்வு வீட்டில் நடந்தது தெரியாதது போல் தூங்கிக் கொண்டு இருந்தான்,
ஊரில் அப்பா காலத்தில் இருந்தே எங்கள் குடும்பம் ஓரளவு அறிமுகமானது தான், அண்ணன் சிவில் எஞ்சினியர், தம்பி சிங்கையில் இருந்து திரும்பிய பிறகு எலக்டிகரிகல் ஸ்டோர் நடத்தி வந்தான் என்ற வகையில் அஞ்சலிக்காக பெரிய கூட்டமே கூடி இருந்தது, ரொம்ப நேரம் வளர்த்தாமல் முதல் நாள் மூன்று மணிக்கு இறந்தவனை மதியம் 12 மணிக்கு இறுதிப் பயண ஏற்பாடு செய்துவிட்டோம், தனது அப்பா இனி வரமாட்டார் என்று தெரியாமல் தம்பியின் மகன் செல்போனில் விளையாடிக் கொண்டு இருந்தான், பிறகு அவனுக்கு மொட்டை அடித்து, தண்ணீர் தூக்க வைத்து, எனது மகளும், மகனும் கூட சித்தப்பாவிற்காக தண்ணீர் குடம் சுமந்து வந்தனர்.
இறுதிப்பயணம் புறப்பட
ஆறில் ஒண்ணு போகுதே,,,,,,,,,,,,என்ற என் தங்கையின் கதறலும்
'ஒண்ணும் தெரியாத புள்ளையை கொள்ளிப் போட கூப்பிட்டுப் போறியே' இறந்த தம்பியின் மனைவியின் கதறல், தம்பியின் சேர்ந்து எரியச் சென்ற உயிருடன் இருக்கும் அவனது மாமியார் தானமாக கொடுத்த கிட்னி ஆகியவற்றை நினைக்க மிகுந்த சோகமாக இருந்தது
*****
யாருக்கு ஒருவருடைய அருகாமையும் ஆதரவும் தொடர்ந்து தேவைப்படுதோ அவர்களை அவருடைய மரணம் பாதிக்கும், மற்றவர்களுக்கு எங்கும் நடைபெறும் சாதரண நிகழ்வு, தம்பியின் குடும்பதிற்கும், பெற்றவள் என்ற முறையில் அம்மாவிற்கு மகனின் இழப்பு, காலம் மருந்திடும், தம்பிக்கு பால் ஊற்றிய அன்றே, 'அவளுக்கு (மருமகளுக்கு) சின்ன வயசு, மறுமணம் செய்து கொடுத்துவிடலாம்; என்று என் அம்மாவே முன்மொழிந்துள்ளார், விதவை வாழ்வு பற்றி அம்மாவுக்கும் தெரியும், தம்பி மனைவிக்கு மறுமணம் நடக்க வேண்டும் என்பதே எங்கள் அனைவரது விருப்பமும் என்று சொல்லி வந்தோம்.
தனிக் குடும்பம் என்று ஆகிவிட்டதால் தம்பியின் இறப்பு ஒரு இரு நாள் கடைமை என்று ஆகிவிட்டது, இறுதிப் பயண ஏற்பாடு, அதற்கு முன் தம்பிக்கான சிகிச்சைகள் எல்லாவற்றிலும் ஊரில் இருந்த அண்ணன், தம்பி, அக்கா, தங்கை செய்துவந்தனர், என் பங்குக்கு நான் குடும்பத்துடன் சென்று வந்தேன் என்பது தவிர்த்து எதையும் செய்யவில்லை, விமான டிக்கெட் வாங்கி விமானத்தில் வந்தவர் என்ற முறையில் மரண வீட்டிலும் நமக்கு விஐபி அந்தஸ்து கொடுத்து நம்மை கவனிக்கின்றனர், வெளிநாட்டில் வசித்தால் நெருங்கிய சொந்தத்தின் சாவில் கூட நமக்கு என்று எந்த பொறுப்பும் கிடையாது, எல்லாவற்றிலும் இறங்கி, எடுத்து செய்ய வேண்டிய நாம் எல்லாவற்றிலும் ஒதுங்கி இருக்கும் படி ஆகிவிட்டதே என்று வெட்கமாகவும், வருத்தமாகத்தான் இருந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளாக எதைத் தின்றாலும் வாந்தி, கடுமையான வயிற்றுவலி உடல் உபாதைகளில் இருந்து தம்பி நிரந்தர விடுதலை அடைந்துவிட்டான் என்று நாங்கள் அனைவருமே தேற்றிக் கொண்டோம், இறக்கும் முன்று நாட்களுக்கு முன்பு பார்த்து வந்தது எனக்கு கூடுதலான ஆறுதல்
தேவையற்ற அலைப்புகளை தடுக்க, ரொம்ப நாளாக அலைபேசி எண்ணை மாற்ற நினைத்திருந்தேன், இனிமேல் மாற்றும் எண்ணம் வராது