பின்பற்றுபவர்கள்

மொழியியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொழியியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16 ஆகஸ்ட், 2014

கணிணிக்கு ஏற்றமொழி என்னும் புரட்டு !

மனிதர்களுக்கு விளங்காது, ஆனால் தேவர்களுக்கு விளங்கும் மொழி அதனால் தான் தேவ பாஷை என்றார்கள், ஆனாலும் வடமொழியை வளர்த்து எடுக்க முடியவில்லை, மனிதர்கள் மனிதர்களோடு உரையாட தேவ பாஷை எதற்கு என்பதாலோ அல்லது அதன் கடின இலக்கண வரையரைகளினாலோ, அண்மைய இலக்கியத்தின் உரைநடை, புதுக்கவிதை போன்ற புதிய உத்திகளை ஏற்றுக் கொள்ள வாய்ப்பு இல்லாத தாலோ, அல்லது சொல்லிக் கொடுப்பவர்கள் ஆங்கிலம் என்கிற பிழைப்பு சார்ந்த மொழியை நாடிய தாலோ வடமொழியை 19 ஆம் நூற்றாண்டில் வளர்த்து எடுக்க முடியவில்லை, எனக்கு தெரிந்து 19ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட புதிய நூல்கள் என்று எதுவுமே வடமொழியில் இல்லை, இருந்தால் தெரிவிக்கவும் என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன், தற்பொழுது தான் சங்கரமடம் உள்ளிட்ட வடமொழி பற்றாளர்களால் வடமொழியில் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன, புரியாவிட்டாலும் வடமொழி 'ஸங்கீதத்தை' தலையாட்டி ஆட்டி கேட்பது போல் ஒரு கூட்டம், ஒருவேளை சொர்கத்தில் பலன் தரக்கூடும் தேவர்களுடன் பேச பயன்படக் கூடும், தவறவிடக்கூடாது என்று கேட்கின்றனர். 

மற்றபடி அண்மைய கணக்கு எடுப்பின்படி வடமொழி பேசுவர்களின் எண்ணிக்கை 120 கோடி இந்திய மக்கள் தொகையில் வெறும் 15 ஆயிரம் பேர் மட்டுமே. இந்த எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளதுடன், நாளடைவில் அதுவும் குறைந்து பேசப்படாத வெறும் வழிபாட்டு மொழி என்கிற நிலையை அடையலாம், மாறாக பலரும் கூறும் கருத்து வடமொழி என்றைக்குமே மக்களால் பேசப்பட்ட மொழி கிடையாது, அந்த 15 ஆயிரம் பேரும் வேண்டுமென்றே வடமொழியை வாழவைக்க வேண்டும் என்பதற்காக வலிந்து தான் பேசுகின்றனர் என்கின்றனர்.

நான் அறிந்த அல்லது படித்து தெரிந்த வரையில் வடமொழிக்கு தமிழுக்கு இருப்பது போன்று பிராமி (தமிழி) எழுத்து பின்னர் வட்டெழுத்து என்று தொன்று தொட்டாக, வரலாற்றின் தொடர்ச்சியாக எழுதும் முறைகள் கிடையாது, திருவள்ளுவர் காலத்திற்கு முன்பு தமிழுக்கு எழுத்துகள் பயன்படுத்தப்படுவதால் 'எண்ணென்ப ஏனை எழுத்தென்ப...' என்று குறளில் எழுத்துகள் பற்றியும் எழுத முடிந்திருக்கிறது, மீன் இலட்சினை சிந்து சமவெளி நாகரீகத்தில் விண்மீனைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டதாலும் தற்கால அல்லது பண்ணெடுங்காலமாக தமிழில் விண்மீனை  வான் மீன் என்ற இடப்பெயர் சொல்லாக மீன் என வழங்கும் வழக்கும் உள்ளது தவிர சிந்துசமவெளி மக்களின் சிவ வழிபாடு திராவிட வழி வந்தவை என்பதாலும் வேறு சில சான்று அடிப்படையில் சிந்துவெளி நாகரீகம் பண்டைய திராவிட நாகரீகம் தான் என்று ஐராவதம் மகாதேவன் மற்றும் ஐரோப்பிய ஆய்வளர்கள் உரைக்கின்றனர்,  திராவிட மொழிப்பிரிவில் ஒன்றான Brahui மொழி பேசுவர்கள் தற்காலத்திலும் சிந்துசமவெளி அமைந்த பாகிதான் பகுதியில் வாழ்ந்துவருகின்றனர், வடமொழியில் வேதகாலம் முதலாக / முன்பாக மீன் என்ற சொல் 'மச்ச' என்றும்.  வின்மீன் 'நக்‌ஷத்திர' என்றும் வழங்கப்படுவது குறிப்பிடத் தக்கது.


அஃதாவது 11 ஆம் நூற்றாண்டுவரை எழுத்தே இல்லாத மற்றும் ஆண்குறி வழிபாடு என்று சிவ வழிப்பாட்டை வேதங்களினால் பழித்த வடமொழிக்கு சிந்துவெளி நாகரீக தொடர்பு இருக்க கூறுகளே இல்லை என்கிறனர், சிந்துவெளியில் பயன்படுத்தப்பட படக்குறி (சித்ர / Symbol) எழுத்துகளின் தொடர்ச்சியாக திராவிட எழுத்து முறையான பிராமியும், அதே பிராமியில் கூடுதல் எழுத்துக்களுடன் மாற்றம்  செய்து 'அசோகர் பிராமி' பாலி மொழியில் அசோகர் காலத்து கல்வெட்டுகள் எழுதப்பயன்பட்டதாக ஆய்வாளர்கள் கூற்று, முதலில் வடமொழிக்கு எழுத்து முறைகள் தோன்றி அது தமிழுக்கு பயன்படுத்தப்பட்டிருந்தால் நாமும் 31 எழுத்துகளுக்கு (உயிர், மெய் மற்றும் ஆய்தம்) மாற்றாக 51 எழுத்துகளைத் தான்  பயன்படுத்தி இருப்போம், எனவே தமிழ் பிராமி எந்த மொழியிலும் இருந்தும் பெறப்படவில்லை மாறாக அவை தமிழுக்காக உருவாக்கப்பட்டது என்கிறனர்.

வடமொழிக்கு எழுத்து வடிவம் கிடைத்ததே 11 ஆம் நூற்றாண்டுகளில் தான், அதற்கு முன்பு (10 நூற்றாண்டு) வரை குறிப்பாக தஞ்சாவூர் கல்வெட்டுகளில் கூட வடமொழியை தமிழ் எழுத்தில் தான் எழுதி வந்திருக்கின்றனர், விக்கிப்பீடியாவில் வடமொழி தொடர்பான சான்றாவணமாக தமிழ் எழுத்தில் எழுதப்பட்டதைத் தான் காட்டுகின்றனர்,


( இது தற்பொழுது விக்கியில் நீக்கப்பட்டுள்ளது)



அது மட்டும் தான் முதன் முதலில் வடமொழி எழுத்துவடிவாக அமைந்ததற்கான தகவல், பின்னர் தேவநகரி என்னும் (தற்போது உள்ள) எழுத்துவடிவம் 51 எழுத்துகளுடன் அமைக்கப்பட்டு அவற்றை 11 ஆம் நூற்றாண்டுகள் முதல் வடமொழியை எழுதப் பயன்படுத்துகின்றனர். ஒரு பேச்சுக்கு சிந்து சமவெளி நாகரீகத்திற்கும் வடமொழி / வேத நாகரீகத்திற்கும் தொடர்பு இருந்தால் இடைப்பட்ட காலத்தில் வடமொழிக்கு எழுத்துகளே இல்லாது போனது ஏன் ? என்று நினைக்க, 'ஸ்மிருதி' அல்லது மனனம் செய்யும் அடைப்படையில் மட்டுமே வடமொழி வழி வழியாக பயிற்று விக்கப்பட்டுவந்திருப்பது தெளிவாகிறது. ஆசிரியர் - மாணவர்கள், பின்னர் அவர்களின் மாணாக்கர்கள் என தொடர்ந்து அவை பாதுக்காப்பட்டது அன்றி எழுதி வைக்கப்பட்ட ஒன்று அல்ல, வால்மிகிக்கு காலத்தில் ஓலைச் சுவடிகளில் வடமொழியை எழுதி வாய்ப்பிருக்கவில்லை, அதாவது 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு குரங்குகள் கட்டிய பாலத்தில் செங்கற்களில் 'राम' (ராம்) என்று 11 ஆம் நூற்றாண்டில் உருவான எழுத்தில் எழுதப்பட்டிருப்பதாக காட்டுவதே ஒரு மோசடியும் முரண்பாடானதும் ஆகும், ஸ்வஸ்திக் சின்னம் தவிர ॐ உள்ளிட்டவை தேவநகரி எழுத்து உருவான பின்பு பயன்படுத்தப்படுவையே. வடமொழியின் எழுத்து வரலாற்றின் சுருக்கம் இவை. 

வடமொழி கணிணிக்கு வேறெந்த மொழியைக்காட்டிலும் ஏற்ற மொழி என்றும், அதை நாசா உறுதி செய்துள்ளதாகவும் இணையம் பொதுப்பயன்பாட்டுக்கு கடந்த 20 ஆண்டுகளாக இட்டுக்கட்டிய கட்டுரைகள் குப்பைகளாக குவிந்துள்ளன, இதையெல்லாம் எந்த சுனாமியும் தூக்காது என்கிற இறுமாப்பில் தொடர்ந்து பரப்புகின்றனர், எந்த வகையில் கணிணிக்கு சிறந்தது என்பதற்கு இவர்கள் வடமொழியில் உள்ள வேற்றுமை உருபுகளாக (they call it is vibhakti) காட்டும் சான்றுகள் அனைத்தும் திராவிட மொழிகள் அனைத்திற்குமே பொதுவானது.

அதாவது பெயரெழுத்தின் விகுதியை மாற்றி வரிகள் அமைப்பது

இராமனை அடைந்தனர்,
இராமனால் கொல்லப்பட்டான்,
இராமனுக்கு பசித்தது,
இராமனின் வேண்டுகோள்,
இராமனது வில்
இராமன்கண் விடப்பட்டது
இராமனிடம் வந்து சேர்ந்தனர்,
இராமனே கொன்றான்,
( ஐ, ஆல், கு, இன், அது, கண், இடம் மற்றும் விளி வேற்றுமை)

இதில் கண் வேற்றுமையும்,  இட வேற்றுமையும் தற்போதைய இலக்கணத்தில் ஒன்றாகவே பயன்பாட்டில் உள்ளது,

ஆக எட்டு வேற்றுமைகள் தமிழிலும் உள்ளது. இதே எட்டு வேற்றுமைகள் தான் வடமொழியிலும் உள்ளன. ஆங்கிலத்தில் இது போன்று பெயர் சொற்களை மாற்றி வரிகள் அமைப்பது கடினம், Belong to Ram > Ram's (இது கூட அண்மையில் ஏற்பட்டவையே) Raamaa feel hungry, Raavana Killed by Raamaa, Raamaa Request... இது போல் இராம் தனித்து மட்டுமே வரும், தவிற ஒவ்வொரு செயலுக்கும் வினைச் சொற்கள் மாறுபடும்m முன்னிலையின் (Subject) விகுதி மாறாது,  இந்த பெயர்ச் சொல் விகுதி மாற்றம் என்னும் வேற்றுமை உருபு இலக்கணம் மட்டும் ஆங்கிலத்தில் மாறுபடுகிறது, இதனால் ஆங்கிலத்தை விட வடமொழி கணிக்கு Object Oriented Program, மற்றும் Class' எழுத மிகவும் பயனுள்ளது, அதனால் கணிக்கு மிகவும் ஏற்ற மொழி என்கிறார்கள். இவர்களுக்கு வடமொழி தவிர்த்து திராவிட மொழியும் அதன் இலக்கண அமைப்பு குறித்து கொஞ்சமும் தெரியாது அல்லது அவற்றை மறைத்துவிட்டு வடமொழியே சிறந்தது என்று நிறுவ முயற்சிக்கின்றனர்.

வடமொழியில் ஒன்றின் பால், இரண்டின் பால், பலவின்பால் என்கிற இலக்கண விதிகள் உண்டு, அதாவது, Baaley (குழந்தையினுள் - Singular) , Baalayo (குழந்தையருள் Dual ), Baaleshu (குழந்தைகளுக்குள் Plural), காலப்போக்கில் தமிழில் உள்ள இருமை 'ர்' விகுதி மதிப்புக்காகப் பயன்படுத்துவதால் தந்தையர், தாயார் என்று ஒருமை சார்ந்த விகுதியாவிட்டது,

குழந்தை அழுதது (Singular)
குழந்தையர் அழுதனர் (Dual)
குழந்தைகள் அழுதனர்  (Many / Plural)

ஒன்றிற்கு மேற்பட்டவை பல என்பதால் தற்காலத்தில் திராவிட மொழிகளில் இருமை குறிப்புகள் எழுவாயின் விகுதியாக வருவதில்லை.

மற்றபடி தமிழிலோ, திராவிட மொழிகளிலோ, இருமை விகுதிகள் இல்லை என்று சொல்வதற்கில்லை, அதுவும் வடமொழிக்கான தனிச்சிறப்பும் இல்லை, பயன்பாட்டில் இல்லாத மொழியின் தனிச்சிறப்புகள் என்பவை வானவில்லின் வண்ணம் போன்றவை அவற்றை எடுத்து வந்து கலந்து சுவற்றில் பூசமுடியுமா ? எனக்கு தெரிந்து வடமொழியில் திராவிட மொழிகளைக்காட்டிலும் அணி இலக்கணங்கள் ஏனெனில் அணி (உவமை அணி, இல்பொருள் உவமை அணி...போன்றவை)  சற்று கூடுதல், அதனால் அது கணிக்கு ஏற்ற மொழி என்று கூற ஒன்றும் இல்லை, அணி இலக்கணத்திற்கும் Computer Program or Object Oriented Program க்கும் எந்த ஆணித் தொடர்பும் இல்லை.

மேலும் 'I Love You' என்பது போன்ற ஆங்கில வரியின் சொற்களை இடம் மாற்றினால் 'You Love I', Love I You' போன்றவை ஆங்கிலத்தில் பொருள் தராது மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும், வடமொழியில் எழுதப்பட்டும் வரிகளின் சொற்களை மாற்றினால் பொருள் மாறாது, இந்த வசதி ஆங்கிலத்தில் இல்லை அதனால் வடமொழியே ஆங்கிலத்தைக்காட்டிலும் சிறந்த மொழி என்கிறார்கள், அதனால் வடமொழியைப் பயன்படுத்துவதால் கணிணியின் விரைவுத் திறன் கூடுமாம், திராவிட மொழிகளிலும் சொற்களை இடம் மாற்றினால் பொருள் மாராது,

இராமதாசு மரத்தை வெட்டினார்,
இராமதாசு வெட்டினார் மரத்தை,
மரத்தை வெட்டினார் இராமதாசு,
மரத்தை இராமதாசு வெட்டினார,
வெட்டினார் மரத்தை இராமதாசு,
வெட்டினார் இராமதாசு மரத்தை ,


ஆறுவகையாக இடம்மாற்றில் எழுதினாலும் இதில் எங்காவது பொருள் மாறுகிறதா ? ஆக சொற்களை இடம் மாற்றி பொருள் மாறாமல் இருக்கும் இலக்கண அமைப்பு திராவிட மொழிகளுக்கும் பொதுவானதாகும் எனவே வடமொழி மட்டும் தான் கணிணிக்கு ஏற்ற மொழி என்பது முற்றிலும் புறக்கணிக்கக் கூடிய கூற்றாகும், ஒருவேளை அவ்வாறு அவற்றை பலரும் ஒரு பேச்சுக்கு ஒப்புக் கொள்ள நேர்ந்தாலும் கணிக்கு ஏற்ற மொழிகள் இந்திய மொழிகள் அனைத்துமே என்பதே சரியானதாக இருக்கக் கூடும். 

என்னைக் கேட்டால் இன்றைய மேம்பட்ட தொழில் நுட்பத்தில் மிகவிரைவு கணிணிகளும் (Super CPU, I7 Processor), அளவுக்கு மிதியான நினைவு சில்லுகளும் (Memory in TB) வந்துவிட்டதால் கணிணியில் பயன்படுத்தப்பட இது சிறந்த மொழி என்று எந்த மொழியையுமே பயன்படுத்திவிட முடியும், ஒரு குறிப்பிட்ட மொழியைப் பயன்படுத்திப் பெறப்படும் விரைவுத் திறன் குறித்த கூற்றெல்லாம் இன்றைய தொழில் நுட்பத்திற்கு முன்பு ஒன்றுமே இல்லை. ஒருவேளை இவர்கள் இந்த பொய்களை பரப்பும் காலத்தில் இருந்த 8 Bit CPU, 16MB Memory க்கு மேல் எதிர்காலத்தில் மேம்பட வாய்ப்பே ஏற்படாது என்று தவறாக நினைத்திருக்கக் கூடும். மற்றபடி இந்த 'வடமொழி மட்டுமே கணிக்கு ஏற்ற மொழி' என்பது முற்றிலும் அடைப்படை அற்ற கூற்று, மற்றும் புறந்தள்ள வேண்டியதும் ஆகும்.

கணிணிகள் பொதுப் புழக்கத்திற்கு (Even Before Internet) வந்த பிறகு வடமொழி கணிக்கு ஏற்ற மொழி என்று ஏறக்குறைய 25 ஆண்டுகளாக பரப்பட்டுவருகிறது, இந்திய அரசுகள் கோடிக்கணிக்கில் மக்கள் வரிப்பணைத்தை வாரி இறைத்து வடமொழி வளர்ச்சிக்கு செலவிட்ட போதிலும் அந்த 36 விழுக்காடு நாசா பொறியார்களில் ஒருவரும் வடமொழியை கணிணியில் ஏற்றி இவர்களின் கூற்றை மெய்ப்பிக்கவும் முயற்சிக்கவில்லை,  தவிர இவ்வாறு தவறான கூற்றை பரப்புவர்களும் இதுவரை அதை செய்து காட்டவும் இல்லை, வெறும் பரப்புரையாக மட்டுமே இவை நம்ப வைக்கப்படுகிறது.



அகண்டபாரதம் இருந்தால் நல்லா இருக்குமே என்பது போன்ற வெறும் கற்பனை கனவே கணிணியில் வடமொழி ஏறும் என்பதும், சிறந்த கணிணி மொழியாக திகழும் என்பதும். இதை மறுப்பவர்கள் தகுந்த சான்றுகளுடன் வந்து வடமொழியே கணிணிக்கு சிறந்தது என்று கூறலாம். எனக்கு மனத்தடை எதுவும் இல்லை.

பின் இணைப்பு :

http://www.vedicsciences.net/articles/sanskrit-nasa.html (புரட்டு 1)
http://uttishthabharata.wordpress.com/2011/05/30/sanskrit-programming/ (புரட்டு 2)

Similarities between Sanskrit and Programming Languages (புரட்டு 3)

http://uttishthabharata.wordpress.com/2011/05/30/sanskrit-programming/ (எதிர்வினை)
http://mushafiqsultan.com/nasa-and-sanskrit-hoax/ (எதிர்வினை)

19 ஜனவரி, 2014

தேவ மொழி ஆகிவரும் ஆங்கிலம் !

மொழி என்பது பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கியது, இதில் எந்த ஒரு மொழியும் விதி விலக்கு இல்லை, மொழிகளின் அழிவுக்கு அதனை பேசுபவர்களின் பொறுப்பின்மையும், அதன் மீது பூசப்படும் அளவுக்கு மிகுதியான புனிதமும் தான் காரணமாக இருக்க முடியும், ஒரு மொழியின் வளர்ச்சி பற்றி அதனை தாய்மொழியாக பேசுபவர்கள் தவிர்த்து யாரும் அக்கறை கொள்வதில்லை/தேவையுமில்லை, இருந்த போதிலும் தமிழகத்தில் பிறந்தவர்கள், வாழ்ந்தவர்கள் பல்வேறு மாநிலத்தை சார்ந்தவர்கள் நாடுகளைச் சார்ந்தவர்களும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ளனர்.

இன்றைய நாள்களில் ஆங்கிலம் தவிர்த்து பட்டப்படிப்பின் வழியாக படித்து சோறுபோடும் மொழிகள் அரிது. எனவே தான் ஆங்கிலத்திணிப்பையும் பிறமொழித் திணிப்பையும் ஒப்பிட முடியாது. ஆங்கிலம் தவிர்த்து மூன்றாம் மொழியை கற்றுக் கொள்ளும் பொழுது பேசுபவர் தவிர்த்து கேட்பவருக்கும் பயன் தான். அது ஒரு தகவல் தொடர்பு என்ற அளவில் மட்டுமே பயன் தரும், நமக்கு அன்றாட வாழ்க்கைக்கு பயனாக இருக்கும் ஆங்கிலத்தை எளிமையாகவும் புரியும்படியும் பேச வேண்டும், எழுத வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஆங்கிலம் பற்றிய பொதுவான புரிதல் அதனை பேசுபவர்களிடையே இலக்கணம் குன்றாமல் பேசவேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்துகிறார்கள்.

எந்த ஒரு மொழியும் கால போக்கில் சிதையும் என்பதற்கு ஆங்கிலம் விதிவிலக்கு இல்லை, அதனால் தான் அமெரிக்க ஆங்கிலம், ஆப்ரிக்க ஆங்கிலம், ஆஸ்திரேலிய ஆங்கிலம், இங்கிலாந்து ஆங்கிலம் என்ற வேறுபாடுகள் விளைந்துள்ளது, உலகத்திலேயே ஆங்கிலத்தை மிக எளிமையாக மாற்றி பேசும் வழக்கம் சிங்கப்பூரிலும் அருகே மலேசியாவிலும் உண்டு, சிங்கை ஆங்கிலத்தை சிங்க்லிஸ் என்பார்கள், நாமெல்லாம் சரியாக முறைபடியான ஆங்கிலம் பேசுவதில்லை என்று 'ஸ்பீக் குட் இங்கிலிஸ்' என்ற அரசால் கூட அறிவுறுத்தப்பட்டது, ஆனாலும் நான் அறிந்தவரையில் சிங்கையில் ஆங்கிலத்தில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை என்பது தான்.

பேசும் மொழி எளிதாக இருந்தால் தான் அவை சில ஆண்டுகளில் எல்லோரையும் சென்று அடையும் என்பதற்கு சிங்கையில் பேசப்படும் ஆங்கிலமே நல்ல எடுத்துக்காட்டு. 90 விழுக்காடு சிங்கை ஆங்கிலம் இங்குள்ளவர்களால் பேசப்படுகிறது, வேலை நடைபெறுகிறது, தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது, இதற்கு மேல் ஆங்கிலம் பேசுவதால் வெளிநாட்டிலிருந்து வரும் வெள்ளைகாரர்கள் தவிர்த்தும், இங்குள்ளவர்கள் வெளிநாட்டிற்கு சென்றாலும் பயன் என்பதும் தவிர்த்து வேறொன்றும் இல்லை.

'அவன் பேசுற இங்கிலேசைப் பாரு, இதுக்கு பேசமாலே இருக்கலாம்' என்று நக்கல் அடிப்பவர்கள், ஒரு முறை சிங்கப்பூர் வந்தால் ஆங்கிலம் குறித்த அவர்களது மாயையும், எண்ணிய புனிதமும் அடிப்பட்டு போகும். தாய் மொழியில் வினைச்சொற்களையெல்லாம் ஆங்கிலத்தில் சொல்லி 'பண்ணி' த்தமிழ் பேசுபவர்களும் கூட ஆங்கிலத்தில் எவரேனும் ஈஸுக்கு வாஸ் போட்டுவிட்டால் அதற்காக வெள்ளைக்காரனுக்கு அவமானம், மரியாதை இழப்பு ஏற்பட்டுவிட்டது போல் பேசுபவரை எள்ளி நகையாடுகிறார்கள், 

ஆங்கிலமும் பல குறைகளை உள்ள மொழி தான், 26 எழுத்தில் எல்லாவற்றையும் எழுதுகிறேன் என்று பல்வேறு ஊர்பெயர்களை, பெயர் சொற்களை சிதைத்தே எழுதுகிறார்கள். வெள்ளைக்காரனுக்கு மாற்றாக ப்ரெஞ்சுகாரனோ, டச்சுக்காரனோ உலகை ஆளுமைக்குள் கொண்டுவந்திருந்தால் இன்றைக்கு ஆங்கிலத்திற்கு இருக்கும் இடம் ப்ரெஞ்சு அல்லது டச்சுக்கு கிடைத்திருக்கும், மற்றபடி ஆங்கிலம் வானத்தில் இருந்தெல்லாம் குதித்துவிடவில்லை, செம்மை ஆக்குதல் என்கிற பெயரில் ஆங்கில அகராதியில் அன்றாடம் பல மொழிகளைச் சேர்ந்த சொற்கள் சேர்க்கப்பட்டுவருகின்றன, மற்ற மொழி இலக்கணங்களை விட ஆங்கில இலக்கணம் கடினமானது மட்டுமின்றி பல குறைகள் உள்ளதும் கூட. தமிழில் ஆங்கிலத்தைப் போல பல்வேறு மொழிகளில் இருந்து கடன் வாங்கி சேர்த்தால் தமிழ் வளரும் என்று சிலர் உளறுவதும் உண்டு, அதுக்கு தான் ஏற்கனவே ஆங்கிலம் இருக்கிறதே தமிழை ஏன் கெடுக்க வேண்டும் ? பிற மொழி பேசுபவர்களுக்கு பொருளீட்டல் பயனில்லாத எந்த ஒரு மொழியும் அவர்களிடமும் வளர வாய்பே இல்லை. ஒரு தமிழன் இந்தி படித்தாலோ, இந்திகாரன் தமிழ் படித்தாலோ புதிதாக நாம் சேர்த்துக் கொள்ளும் ஒரு சொல்லால் எந்த பயனும் இல்லை, பேச்சுவழக்கிற்கு, மொழி சார்ந்த, மண் சார்ந்த கலைகளுக்கு தேவையான சொற்கள் ஒரு மொழியில் இருந்தாலே அதுவே நிறைவானது.

தமிழைத் தப்பும் தவறுமாக பேசுனாலும் எழுதினாலும், பண்ணித் தமிழ் பேசினாலும் தமிழிக்கு இழுக்கு இல்லை என்பது போன்று தான் ஆங்கிலத்திற்கும், ஆங்கிலம் தப்பும் தவறுமாக பேசுவது ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் ஆசானாக இருந்தால் தவிர்த்து மற்றவர்களுக்கு அது குறையோ இழுக்கோ இல்லை. 

ஒருகாலத்தில் வடமொழி என்னும் சமசுகிரதம் இந்தியாவெங்கும் வட்டார மொழிகளில் உள்ள சொற்களை உள்வாங்கியும், கலந்தும் மொழிச் சிதைவுக்கும் வழிவகுத்து தமிழில் மணிப்ப்ரவளம் உட்பட கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் ஏற்பட காரணமாக அமைந்தது ஆனால் வரலாற்றையே புரிந்து கொள்ளாதவர்கள் இந்தியா மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் வடமொழியில் இருந்து பிறந்தது என்று கதைக்கிறார்கள். இன்றைய ஆங்கிலப் பரவலில் உலகில் பல்வேறு மொழிகள் அழிந்துவருகின்றன, தமிழ் உள்பட பல்வேறு மொழிகள் சிதைந்தும் வருகின்றன, ஆனால் பண்டைய நாட்களைப் போல் இல்லாமல் தற்பொழுது வரலாறுகள் தொகுப்படுவதால் ஒருவேளை ஆங்கிலத்தின் வழியாக பல்வேறு வட்டார / நாடுகள் சார்ந்த ஆங்கில மொழிகள் ஏற்பட்டாலும் ஆங்கிலம் தான் அனைத்து மொழிகளுக்கும் மூலம் என்று சொல்ல முடியாமல் போகும்.

ஆங்கிலம் தவிர்த்து ஏனைய மொழிகள் அழியும் பொழுது வழிபாட்டு மொழி என்னும் சிறப்பை ஆங்கிலம் கைப்பற்றும், பின்னர் ஆங்கிலத்தின் வழியாக ஏற்படும் மொழிகளுக்கு ஆங்கிலம் தான் தேவ மொழி.

ஆங்கிலத்திற்கு தேவையற்ற முதன்மைத்துவம் கொடுத்து அதனை புனிதப்படுத்தாதீர்கள், ஆங்கிலம் தப்பும் தவறுமாக பேசுபவர்களிடம் சரியான சொல்லைச் சொல்லிக் கொடுங்கள், ஒருவர் தப்பும் தவறுமாக ஆங்கிலம் பேசுவது அவரின் தகுதி இழப்பு ஆகிவிடாது, தாய்மொழி சரியாக பிறமொழி கலப்பின்றி பேசப்படுகிறதா என்பது பற்றி பெரிய அக்கறை இல்லாத போது ஆங்கிலம் குறித்த அக்கறையெல்லாம் நமக்கு எதற்கு ? அவையெல்லாம் வெள்ளைக்காரன் கவலை !

27 டிசம்பர், 2011

நான் அறிந்த வகையில் சீன மொழி !

சிங்கப்பூரில் பதிமூன்று ஆண்டுகளாக வசிக்கிறேன், இங்கே பெரும்பான்மை சீன இனம் தான், நாட்டின் 70 விழுக்காட்டினர் சீனர்கள், அவர்கள் பேசுவது 'பு-தொங்-க்வா' அல்லது மாண்டரின் எனப்படும் சீன மொழி பொதுவானது என்றாலும் அவர்களுக்குள்ளான வட்டார வழக்குகள் எனப்படும் 'ஹொக்கியன்' மற்றும் 'கான்டனீஸ்' ஆகியவையும் பேசப்படும், ஆனால் அரசு அல்லது பொதுப்பயன்பட்டிற்கும், செய்தித்தாள்களும், தொலைகாட்சிகளும் 'மாண்டரின்' மொழியில் தான் நடத்தப்படுகிறது. சிங்கப்பூரில் சீனம் கற்றுக் கொள்ள வேண்டிய தேவை 10 விழுக்காடு கூட இல்லை, இங்கு குறைந்த எளிதான சொற்களுடன் கூடிய வட்டார ஆங்கிலம் பேசப்பட்டு அதுவே அனைவருக்கும் பொது மொழி ஆகிப்போனதால் மேற்கொண்டு சீனம் படிக்க தேவை என்பது சீனர்கள் தொடர்பில் விற்பனைகள் நடத்தினால் மட்டுமே தேவை என்றாகிறது, வியாபார நிறுவனங்களில் விற்பனைப் பிரிவில் இருப்போருக்கு சீனமொழி தெரிந்திருப்பது தேவையான ஒன்று, காரணம் சிங்கப்பூருக்கு சீனச் சுற்றுலாவாசிகளுடனும், சீன நாட்டினருடன் பேச வேண்டிய தேவையும் இருப்பதால் அவற்றைக் கற்றுக் கொண்டவர்களுக்கு அவ்விதத் தொழில்களில் வாய்ப்புக் கிடைக்கும். என் தொழில் சார்ந்தத் தேவையில் சீனமொழி சார்ப்பு இல்லாததால் கற்றுக் கொள்ள வேண்டிய ஆர்வம் / தூண்டுதல் ஏற்படவில்லை

இந்த ஆண்டு துவக்கத்திலும் நடுவிலும் இருமுறை சீனா சென்ற பொழுது தான், மொழி என்பது ஒரு கண்ணாடித் தடுப்பு அந்தத் தடுப்பை பார்வை ஊடுறுவிச் செல்லும் ஆனால் காது ஊடுறுவாது என்று தெரிந்தது. அதாவது நம்மைச் சுற்றிப் பேசுபவர்கள் இருப்பார்கள் ஆனால் அவர்கள் பேசுவது என்ன என்று நமக்கு எதுவும் புரியாது. நமக்கு புரியாத மொழிப் பேசும் ஊரில் நாம் பேச வாய் இருந்தும் ஊமை தான். அடுத்து வேலைத் தொடர்பில் சீனாவுக்கு செல்வேனோ இல்லையோ கண்டிப்பாக இல்லத்தினருடன் சுற்றுலாவுக்குச் செல்ல முடியும் , பக்கத்துவீட்டு சீனப் பாட்டியிடம் பேசமுடியும், புறம் பேசுபவர்கள் என்னப் பேசுகிறார்கள் என்று அறிந்து கொள்ள முடியும், சீனத் தொலைகாட்சி நிகழ்ச்சிகளைக் காணமுடியும் இத்தேவைகளுக்காக சீனமொழிக் கற்றுக் கொண்டால் என்ன ? என்ற கேள்வியில் அம்மொழி மீது பேரார்வம் எழுந்தது. இருக்கின்ற வேலை, இல்லக் கடமைகள் இதற்கிடையே மொழிப்பாடம் படிக்க நேரம் மற்றும் பணம் செலவு செய்ய மனம் ஒப்பவில்லை. மாற்றுவழி, இணையத்தில் தேட 1000 வெப்தளங்கள் மொழிப்பாடங்கள் எடுத்துவருகின்றன. இருந்தாலும் கணிணி வழியாக எவ்வளவு நேரம் பாடம் படிக்க முடியும் ? ஆப்பிள் ஐபோனில் போட் கேஸ்ட் (PODCasts) MP3 ஒலி வழியாக பாட்டுக் கேட்கப் பயன்படுவது போல் சீன மொழிப் பாடங்களை ஆங்கிலம் வழியாக சீன மொழிச் சொல்லிக் கொடுக்கும் இணைய தளங்கள் கண்ணில் பட்டன, அவற்றில் இலவசமாகக் கிடைப்பதையெல்லாம் தரவிரக்கம் செய்தேன். கிட்டதட்ட 50 மணி நேரங்களுக்கு அவற்றை அலுவலகம் வரும் போது போகும் போது கேட்டு கொஞ்சம் மொழி அடிப்படைகளைக் கற்றுக் கொண்டேன்.

மற்ற மொழிகளைப் போல் எழுத்துகளின் அறிமுகத்துடன் சீன மொழிப்படிப்பது மிகக் கடினம், சிறுவயதில் பள்ளியில் சேர்ந்து படித்தால் அவற்றை உள்வாங்கி ஞாபகத்திறனுடன் மொழி அறிவை ஏற்றிக் கொண்டே செல்ல முடியும், ஆனால் நடுத்தரவயதில் சீன மொழிப் படிக்கும் போது சீன எழுத்துகள் மலைப்பை ஏற்படுத்தும் காரணம் சீன எழுத்துகளின் எண்ணிக்கை 80, 000 ஆனால் அவற்றில் தற்காலத்தில் பயன்படுத்துவதன் எண்ணிக்கை சுமார் 3,000. இந்த 3,000 எழுத்துகளை மனனம் செய்து படிப்பது என்பது மிகக் கடினம். மற்ற மொழிகளைப் போல் அல்லாமல் சீன மொழிகளுக்கு சொல் அல்லது எழுத்து ஒலிப்பில் ஐந்து வகைகள் உண்டு அவற்றை ஹை டோன் (High Tone - High Frequency Tone), ரைஸிங் டோன்(Rising Tone), பாலிங்க் ரைசிங்க் டோன்(Falling Rising Tone), பாலிங்க் டோன் (falling Tone) மற்றும் நியூட்ரல் டோன் (Neutral Tone) என்பர். உதாரணத்திற்கு நம் தமிழில் குறில் நெடில் என்ற இரண்டே உண்டு, ம (குறில்) - மா (நெடில்) ஆங்கிலத்திலும் குறில் நெடில் என்ற வகைகள் இல்லாவிட்டாலும் சொற்களுக்கு ஏற்ற ஒலிப்பை பெற முடியும் என்பது அதன் இலக்கணம், ஆனால் சீன மொழியில் ம்ம, ம்மா, ம்ஆஆஅ, ம (mma, mmaa,maaha, ma) போன்ற நான்கு ஒலிப்புகளுக்கான சொற்களும் அதன் பொருளும் வேறு வேறனாது.

பிற மொழிக்காரர்கள் சீன மொழிப்படிப்பதில் இருக்கும் சிக்கலே அதன் ஒலிப்பு முறைகள் தான், அதில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை சரியாக உள்வாங்கி புரிந்து கொள்வது கடினம் தான், இருந்தாலும் சீன மொழி 'Contextual Language' (தொடர்புடைய நிகழ்வுக்கேற்ற பொருள் கொண்ட பேச்சுகள்) என்பதால் நிகழ்வுகளுக்கு ஏற்றச் சொற்கள் என்ற முறையில் துவக்க காலங்களில் படிக்கும் போது அவற்றை ஓரளவும் புரிந்து கொள்ள முடியும். அவன், அவள் என்பதற்கு 'Ta' என்ற ஒரே ஒலிப்பைத்தான் பயன்படுத்துவார்கள், ஆனால் அவற்றை எழுத்தாக எழுதும் போது அவன் மற்றும் அவள் வேறு வேறு எழுத்துகளைக் கொண்டதாக இருக்கும். பிற மொழிகளின் இலக்கணத்திற்கும் சீன மொழி இலக்கணத்திற்கும் பெருத்த வேறுபாடுகள் உண்டு, குறிப்பாக காலம் காட்டும் வினைச் சொற்களை அவர்கள் பயன்படுத்துவதில்லை, அதற்கு மாற்றாக 'லெ' என்ற ஒலிப்பில் முடிப்பார்கள், அப்படி முடியும் வரிகள் நடந்து முடிந்தது பற்றிப் பேசப்படுகிறது என்று விளங்கிக் கொள்ளப்படும், மேலும் நாள், நேரம், முன், பின் ஆகியவைகள் அவ்வரிகளில் இருப்பதால் பேசப்படும் காலம் அவற்றை வைத்து புரிந்து கொள்ளப்படும், 'வந்தான், வருவான், வருகிறான்' என்று விகுதியை மாற்றி நாம் அதன் நடப்பு வினை காலம் புரிந்து கொள்வது போலின்றி நேற்று அல்லது இன்று காலை வரும் அவன்' என்பதாக அவர்கள் மொழிகளிலில் காலம் சேர்த்தே எழுதப்படும் பேசப்படும்.

சீனமொழியும் பழங்கால மொழிகளில் ஒன்று மேலும் அது செம்மொழி தகுதி பெற்ற ஒன்று, அதாவது வேர் சொற்கள் நிறைந்த மொழி, எந்த ஒரு வேற்று மொழிப் பெயரையும் அவர்களுடைய மொழியில் உள்ள சொற்களைச் சேர்த்து அமைத்து பயன்படுத்திக் கொள்வார்கள், diàn nǎo - இதன் பொருள் மின்சார(ம்) மூளை இது கணிணி என்னும் பொருளில் விளங்கிக் கொள்ளப்படுகிறது. மின்சாரம் தொடர்புடைய பொருள்களைக் குறிக்கும் வகையில் அவற்றின் முன்பு diàn என்ற ஒலிப்பில் வரும் சீனச் சொல் இருக்கும்.

மொழி மாற்றமே செய்ய வழியில்லாத பொழுது சீனச் சொற்களில் குறிப்பிட்ட ஒலியை கிட்டதட்ட ஒத்துவரும் அளவிற்கான சொற்களை எடுத்து புதிய சொற்களை அமைத்துக் கொள்வார்கள் உதாரணத்திற்கு 'கொ-கொ-கோலா' இவற்றை சீன மொழியில் 'க்லா' என்றும் 'சாக்லேட்' 'சா-க-லே' என்றும் எழுதப்பட்டு சொல்லப்படும்.

பேசுவதற்கு கற்றுக் கொள்வதுடன் படிக்கவும் சீன மொழி எழுத்துகளைக் கற்றுக் கொள்வதில் மற்றொரு சிக்கல், என்னவென்றால் சீன மொழி எழுத்துவடிவத்தில் இரண்டு வகை உண்டு, சீனா, சிங்கப்பூர், மலேசியாவில் 'பு-தொங்-வா' எனப்படும் பொதுவடிவமும், தைவான் நாட்டில் பாரம்பரிய எழுத்து முறையான 'ட்ரெடிசனல் மாண்டரின்' எழுத்துகளும் பயன்படுத்தப்படுகிறது, அவற்றினிடையே மிகப்பெரிய வேறுபாடுகள் உண்டு, பொதுவடிவத்தின் எழுத்துகளில் குறைவான கோடுகள் உண்டு, பாரம்பரிய வடிவத்தில் அவற்றின் எண்ணிக்கை வடிவம் ஆகியவை முற்றிலும் மாறுபட்டது, என்றாலும் 75 விழுக்காடு எழுத்துகள் இரண்டிற்கும் பொதுவானது தான். பொதுவடிவம் மட்டுமே படிக்கத் தெரிந்தவர்களால் கடந்த 30 ஆண்டுகளில் எழுதப்பட்டதை மட்டுமே படிக்க இயலும். சீன மொழி மற்றும் கலாச்சாரம் பற்றி ஆழ்ந்து படிக்க பாரம்பரிய எழுத்துகளை தெரிந்து கொள்வது மிக மிகத் தேவையான ஒன்று.

சீன மொழிக்கு சீன மொழியில் மொழிப்பெயர் 'சுங் வென்(中文)'. அதாவது 'Zhong Qo' (சுங் கோ') என்றால் மைய அல்லது நடு(சுங்) நாடு(கோ) என்ற பொருளில் சீனர்கள் தங்கள் சீன நாட்டிற்கு சுங்-கோ (நடு நாடு) என்று பெயர் வைத்திருக்கிறார்கள், அந்த 'சுங்' மற்றும் மொழி எனப்பொருள் படும் 'Wen' (வென்) சேர்த்து 'சுங் வென்' என்றால் சீன மொழி. பிற நாடுகளில் பு-தொங்-க்வா அதாவது பொதுப் பயன்பாட்டிற்கானது என்ற பொருளில் வரும். 'இந்தியா' என்று அப்படியே எழுத சீனச் சொற்கள் இல்லையாதலால் 'யின்- து (Yin-dhu) என்றே இந்தியாவின் தொடர்புள்ளவற்றில் யின்- து சேர்த்துச் சொல்வார்கள், உதாரணத்திற்கு 'யி-ந்து ரென்' என்றால் இந்தியர் என்று பொருள். அது போலவே பிற நாடுகளையும் அந்நாட்டினரையும் குறிக்கும் சொற்கள் இருக்கும். முற்றிலும் அதன் ஆங்கில ஒலிப்புடன் கூட தொடர்பில்லாத வகையில் கூட சில நாடுகளின் பெயர்கள் உண்டு, அவற்றை சீனர்கள் மட்டுமே புரிந்து கொள்வார்கள். நாம தென் ஆப்பிரிக்கா என்று எழுதினால் அதன்பொருள் சவுத் ஆப்ரிக்கா தானே, அதே போல் அமீரகம் என்று நாம் வழங்குவது பிறமொழிக்காரகளுக்கு புரியாது, தென் அமெரிக்காவில் இருக்கும், ஆப்ரிக்கா பொதுவான பேசும் போது புரியும் ஆனால் அதன் முன்பு உள்ள 'தென்' ஒலி என்னவென்று நமக்குத் தெரியும் பிற மொழிக்காரர்களுக்குத் தெரியாது அல்லவா, அது போன்று தான் நாடுகளின் பெயர்கள், ஊர்கள் பெயர்கள் ஆகியவற்றை சீனர்கள் தங்கள் மொழிக்கு ஏற்ற அளவில் மாற்றித்தான் பொருள் கொள்கிறார்கள்.

இதுவரை நான் கற்ற அளவில் 50 எழுத்துக்களின் வடிவம் மனனம் ஆகி இருக்கிறது, 300 சொற்களின் ஒலிகளைப் புரிந்து கொள்ள முடியும், அதை வைத்து என்னைப்பற்றிய அறிமுகம் கொடுத்து அடிப்படையான தகவல்களான 'பேருந்து எங்கே செல்கிறது, இப்ப என்ன மணி ?, இந்த சாலையில் பெயர்' போன்ற எளிமையான கேள்விகளையோ பதில்களையோ கேட்டு பெற முடியும், குறிப்பாக யாராவது சீனர் தவறான எண்ணைச் சுழற்றி அழைத்தால் அவருக்கு சீன மொழியிலேயே 'நீங்கள் தவறான் எண்ணைச் சுழற்றியிருக்கிறீர்கள் என்று கூற முடியும்', சுற்றுலா செல்லத் தேவையான அளவுக்கு தகவல்களை சீன மொழியில் கேட்டுப் பெற முடியும். வெட்டிப் பொழுதுகளை குறைத்துக் கொண்டால் சீன மொழி அறிவை கூட்டிக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன்

நான் அறிந்த அளவில் சீன மொழிக்கும் தமிழுக்கும் பொதுவான சொல் 'நீ' அதாவது நீங்கள் என்பதன் ஒருமை, அவர்களின் நீஈ என்று ஏற்ற இறக்கமாக இருக்கும், மற்றொரு சொல் மல்லி (பூ வகை) அவர்கள் சற்று திரிந்தது போல் ம-லி என்பார்கள், இன்னும் ஏராளமான சொற்கள் பொதுவாக இருக்கலாம் என்று நினைக்கிறேன், ஆழ்ந்து செல்கையில் அவற்றை அடையாளம் கானமுடியும் என்று நினைக்கிறேன். இன்னும் ஆறுமாத காலங்களுக்குள் படிக்கவும் கற்றுக் கொள்ள நினைத்துக் கொண்டிருக்கிறேன், எனக்கு தெரிந்து நேரடியாக சீன - தமிழ் அகராதி இதுவரை யாரும் எழுதியதில்லை, மலாய் மொழி - தமிழ் மொழிக்கு எழுதி இருக்கிறார்கள். ஏன் சீன மொழிக்கு முயற்சி மேற்கொள்ளவில்லை என்பதன் காரணமாக நான் நினைப்பது, தமிழ் ஆர்வம் மற்றும் பிற மொழி ஆர்வம் கொண்டவர்கள் சீன மொழி கற்றுக் கொண்டிருந்தாலும் அவற்றை பொருத்தி அகராதி நூலாக எழுதும் ஆற்றல் பெற்றிருக்கவில்லையோ என்று நினைக்கிறேன்.

எனக்கு பிற மொழிகளில் ஆங்கிலம், கன்னடம், பேசவும், தெலுங்கு மலையாளம் ஹிந்தியை புரிந்து கொள்ளமுடியும், இந்திய மொழிகளை கற்றுக் கொள்ள உண்மையான ஆர்வம் இருந்தால் கற்றுக்கொள்ளும் காலம் என்பது மூன்று மாதத்திற்கும் குறைவே. சீனமொழிக்கு குறைந்தது ஓர் ஆண்டாவது ஆகலாம் ஏனெனில் சீன மொழி இந்திய மொழிகளுக்கு முற்றிலும் தொடர்பற்ற மொழி மேலும் அவர்களின் ஒலிப்பை நாம் அடையாளம் கண்டு பொருள் உணர்ந்து கொள்வது மனம் ஒன்றிய நல்ல பயிற்சியினால் மட்டுமே முடியும்.

****

சீன மொழியை சீனர்கள் மற்றும் பிற மொழிப் பேசுபவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஒரு மலையாளி பற்றி அடுத்து எழுதுகிறேன். என்னை வியப்படைய வைத்தவர்களில் அம்மலையாளியும் ஒருவர்

19 டிசம்பர், 2011

ஒரு மொழி அழிந்தால் என்னவாகும் (1) ?

மொழிகள் பேசப்படாமல் அழிவதிலும், அல்லது பிற மொழியினரால் அழிக்கப்படுவதிலும் அது பிறரிடம் திணிக்கப்படுவதிலும் உடன்பாடு அற்றவன், காமம் என்பது இனிமையான உணர்வு என்றாலும் ஒப்புதலுடன் கூடுதல் மற்றும் வன்புணர்வாக தீர்த்துக் கொள்ளப்படுதல் என்பதன் மிகப் பெரிய வேறுபாடுகளைப் போன்றது பிற மொழியை தனிப்பட்ட ஒருவர் விரும்பிக் கற்பது மற்றும் அதன் மீது தொடர்ந்து செய்யும் புறக்கணிப்பு.

எப்போதும் அறிவீனர்கள் அல்லது மேம்போக்களர்களின், பொதுப் புத்தியாளர்களின் கூற்று 'மொழிங்கிறது பேசுவதற்குத்தானே (Medium of Communication) அதற்கும் மேல் என்ன இருக்கு ?' என்கிறார்கள், பெருவாரியானவர்களின் புரிதல் கூட இத்தகையது தான், அவை வெறும் அடிப்படைப் புரிதல். மொழி என்பது பேசுவதற்கு மட்டும் தான் என்ற நிலை மனிதன் தோன்றிய காலம் தொடர்ந்து இருந்தால் காக்கைக் கூட்டம் எங்கும் வாழ்ந்தாலும் ஒன்று போல் கரைவது என்ற நிலையில் தான் மனிதனின் மொழி ஒன்றாகவே இருந்திருக்கும். இங்கே முதன்மையாக கவனத்தில் கொள்வது என்ன வென்றால் மதவாதிகளின் படைப்புக் கூற்றுகளை உடைத்துப் போடுவதன் மறைமுக கருவியாகவே இருக்கிறது, மனிதன் படைக்கப்பட்டு இருந்தால் அவனுடைய மொழி ஒன்றாகவே இருந்திருக்கும், அல்லது அடிப்படைச் சொற்களான தாய் தந்தை உறவு முறைப் பெயர்களாவது ஒன்றாக இருக்க வேண்டும், ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளுக்குள் கூட சொற்கள் அவ்வாறு இல்லை என்பது கவனிக்கத் தக்கது. மனிதன் படைக்கப்பட்டு பல்கிப் பெருகினான் என்ற மதவாதக் கூற்றை மொழிக் கூறுகள் முற்றாக உடைக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அதுமொழிப் பற்றிய சமூகக் கருத்து அல்லது மாற்றுப் புரிதல் தான், இங்கு கூற வருவது மொழிப் பற்றிய அரசியல் சார்ந்த புரிந்துணர்வுகள் இல்லை.

மொழி என்பது மனிதனின் வாழும் சூழலுக்கேற்ப உருவாக்கப்படுகிறது அல்லது உருப்பெறுகிறது என்பது தான் மொழியாளர்களின் மொழிக் குறித்த அடிப்படை பாடம், மொழியின் தோற்றம் என்பவை ஒரு மனிதன் வாழும் சூழலில் தம்மைச் சுற்றியுள்ளவற்றைப் பற்றி கதைப்பதற்கு உருவாக்கப்பட்ட சுட்டுச் சொற்களாக இருந்து பின்னர் அவர்களிடையே தகவல் பரிமாற்றம் மற்றும் தொகுப்பு ஒலிகள் என்ற அளவில் வளர்ந்து தத்தம் சந்ததியினரிடையே வரலாற்று ஒலிகோப்பாக தலைமுறை தலைமுறையாக கடத்தப்படுவது ஆகும்.

மனித ஒலிகள் அத்தனையும் ஒலி அலைவரிசையினுள் அடக்கம் என்றாலும் ஒரு குறிப்பிட்ட மொழிக் குறித்த சரியான ஒலிப்பு (உச்சரிப்பு) ஒன்றை பிற மொழியினரால் அப்படியே உள்வாங்க முடியாது, இதற்கு அடிப்படைக்காரணம் மொழிச் சொற்களின் அல்லது குரல் ஒலிகளின் தோற்றம் அல்லது உருவாக்கம் என்பவை மனித தொண்டை அமைப்பு, முக்குத் துளை, மூக்கு வடிவம் ஆகியவற்றை உள்ளடக்கியது. மிக்க குளிர் மிகுந்த நாடுகளில் வசிப்போரின் மூக்கு அமைப்புகளும் புறத்தோற்றம் மற்றும் நிறம் கூட பிற இடங்களில் வசிப்பவரை ஒப்பிட மாறுபட்ட ஒன்றாகவே இருக்கும், வாயை நன்கு திறந்து பேசினால் குளிரையும் உள்ளிழுக்க வேண்டிய சூழலைத் தவிர்க்க அவர்களின் சொற்கள் மற்றும் சொற்களின் ஒலி அமைப்பு உதடுகளை அதிகம் விரிக்காமல் அல்லது வாயைத் திறந்து (உதடு ஒட்டும் ஒட்டாது என்பது போல்) பேசப்படும் சொற்களின் எண்ணிக்கையும் மிகக் குறைந்ததாகவே இருக்கும், மாறாக வெப்ப நாடுகளில் வசிப்போருக்கு மூச்சுவிடுதல் ஒரு பெரிய இடற்பாடு இல்லை என்பதால் அவர்களின் மொழிகளில் இயல்பாகவே பல்வேறு ஒலிகளை கொண்ட சொற்கள் இருக்கும். மனிதன் தொடர்ந்து இடம் பெயர்ந்து கொண்டே இருப்பதால் சூழலுக்கு ஏற்ப முந்தைய மொழிகளின் திரிபுகளும் கண்டு கொண்ட புதிய நில அமைப்புகள் அவற்றின் தன்மை, பயனுக்கான, பொருளுக்கான புதிய சொற்களின் உருவாக்கங்களும் சேர கிளை மொழிகள் உருவாகின்றன. இது மொழிகள் உருவாக்கம் மற்றும் கிளைத்தல் பற்றிய மொழியாளர்களின் அடிப்படைப் புரிதல்.

மொழிகள் பண்பாட்டுக் கூறுகள் என்கிறார்கள், அதாவது ஒரு மொழிப் பேசுபவர்களின் கலைத் திறன் மற்றும் பண்பாடு அவற்றின் பழக்க வழக்கங்கள் அவர்கள் பேசும் மொழியின் வாயிலாகவே அவர்களிடையே தொடர்சிகளை காக்கிறது. குழுக்களுக்குள் மனிதப் (புலம்) பரவல் இல்லாத காலங்களில் எழுத்துகளின் தேவை என்பதற்காக இன்றியமையாத பிற காரணங்கள் எதுவும் இல்லை, நாகரீக வளர்ச்சி அல்லது அறிவின் சேமிப்பு, குரல்களை எடுத்துச் செல்ல இன்றியமையாமை என்ற தேவை ஏற்பட்ட போது (பொதுவாக மன்னர் ஆட்சி, நாகரீக சமூகம் என்று வளர்ந்த நிலையில்) எழுத்திற்கான தேவை ஏற்பட நாகரீகம் வளர்ந்த நிலையில் இருந்த மொழி இனங்கள் தங்களுக்கான எழுத்துளை அமைத்துக் கொண்டன. எழுத்துகள் இல்லாத மொழிக்குழுக்கள் பேசுவதன் மூலம் மட்டுமே தத்தம் சந்திகளிடைய முன்பு தாம் சேகரித்த தகவல் மற்றும் தொழில் குறித்த அறிவுகளை மாற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

ஒரு மொழி அழிந்தால் என்ன ஆகும் ? மொழிகள் அழிவதற்கு பல காரணங்கள் உள்ளன, தற்காலத்தில் பொருள் ஈட்டப் பயன்படாத மொழி என்ற அளவில் தாய்மொழிகள் ( தொல் பொருள் காப்பகங்களில்) தள்ளிவிடப்படுகின்றன. தொடர்ச்சியான புலம் பெயர்வு மற்றும் பிறமொழியினரின் படையெடுப்புகள், திணிப்புகள், புறக்கணிப்புகள் என்ற அளவீடுகள் மொழி அழிவதற்கான முதல் காரணிகளாக உள்ளன, அவைத்தவிர்த்து குறிப்பிட்ட மொழிப் பேசுபவர்களின் பொறுப்பின்மை. ஒரு மொழிப் பேசப்படாமல் தவிர்க்கப்பட்டால் அவற்றில் புதைந்துள்ள அறிவு சார்ந்தவைகளும் சேர்ந்தே அழிந்து போகும், உதாரணத்திற்கு குறிப்பிட்ட மூலிகைக் குறித்த பயன்பாடுகள் அவற்றை வளர்ப்பது மருந்தாக்குவது ஆகியவை மொழிக் குறியீடாகவே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கும் போது அம்மொழியே அழிந்த பிறகு அம்மூலிகையின் பயன்பாடு குறித்த பயன்பாடுகளும் அழிந்தே போகும், தமிழில் பழைய மருத்துவ நூல்கள் யாவிலும் சித்தமருத்துவ முறைகள் பாடல்களாக மறைமுகப் பொருளில் தான் கூறப்பட்டுள்ளது, அவற்றின் பொருள் புரிந்து அம்மூலிகையை மருந்தாகப் பயன்படுத்த நல்ல தமிழ் மொழி அறிவும், அச்செய்யுள்களின் மறை பொருள்களை விளங்கிக் கொள்ளும் ஆற்றலும் இருந்தால் மட்டுமே முடியும்.

மூலிகை மட்டும் அல்ல, விவசாயம், வேட்டை ஆடுதல், கட்டுமானம், பிற தொழில் மற்றும் அன்றாடப் பயன்பாடுகள் ஆகியவற்றின் கருவூலமாக மொழி இருந்து வந்திருக்கிறது, குறிப்பிட்ட சில வகை ஆக்கங்களை பிறர் அறிந்து கொண்டால் பேராபத்து அல்லது தம் தொழிலைச் செய்ய முடியாது என்ற அளவில் சங்கேதமாகவே எந்த ஒரு மொழியில் பல கூறுகள் அமைந்துள்ளன, இன்றைக்கு இராணுவ இரகசியங்களைக் கோட் செய்வது போன்றவை அவை, குறிப்பிட்ட கோட் முறைப்பற்றிய விளக்கங்கள் அழிந்து போகும் போது காத்த இராணுவ ரகசியகங்கள் எவருக்குமே புலப்படாமல் அழிந்து போவது போன்றவை அவை. இராணுவ ரகசியங்கள் மறைந்து போவது இராணுவத்திற்கு இழப்பு அன்று, ஒட்டுமொத்தமாக அந்த நாட்டுகே இழப்பு, மொழியாளர்களின் கூற்று மிகத் தெளிவாக

ஒரு மொழியின் அழிவு என்பவை தனிப்பட்ட அம்மொழிப் பேசுபவர்களுக்கான இழப்பு அல்ல மாறாக அவை ஒட்டு மொத்த மனித குலத்திற்கான ஈடு செய்ய இயலாத இழப்பு தான் என்பதை நம்புங்கள் என்கிறார்கள். ஒரு மொழி அழியும் போது அம்மொழிப் பேசியவர்களின் அம்மொழி வழியாக அறிந்திருந்த தனிப்பட்ட அறிவுத் திறன்களையும் சேர்த்தே உலகம் இழக்கிறதாம்.

ஒரு மொழி அழியும் போதும் மேலும் என்ன ஆகும் ? பிரிதொரு பகுதியில் பார்ப்போம்.

Ref :
When Languages Die: The Extinction of the World's Languages and the Erosion of Human Knowledge

16 ஜூலை, 2009

ஆங்கிலமும் சமஸ்கிரதமும் !

பொத்தி பொத்தி வைக்கப்படும் எதுவும் பயன்படாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சமஸ்கிரதம் எனப்படும் வடமொழி. சமஸ்கிரதம் புழக்கத்தில் இருந்து மறைந்து போனதற்கு முழுப் பொறுப்பும் பார்பனர்களுடையது. இன்றைய ஆங்கிலத்தில் நூல்கள் எழுதுபவர்கள் அனைவருமே வெள்ளைக்காரர்கள் கிடையாது. பிறமொழிகளை தாய்மொழியாக் கொண்ட ஆங்கிலப் புலமைப் பெற்றவர்கள் எழுதும் நூல்கள் வெள்ளைக்காரர்கள் எழுதும் நூல்களை விட மிகுதியானவை.

பிராகிரதம் எனப்படும் வேதமொழி கிட்டதட்ட ஐரோப்பிய மொழிகளின் ஒலியமைப்பையும் இலக்கணத்தையும் ஒத்திருந்ததை வரலாற்று மொழி ஆய்வாளர்கள் ஒப்புக் கொண்ட உண்மை. ஐரோப்பிய மொழி ஒப்புமைகள் பழைய சமஸ்கிரத மொழியில் இருந்ததை வைத்துதான், சமஸ்கிரதம் இந்தியாவின் மொழி அல்ல, வெளியில் இருந்து வந்தது என்று குறிப்பிட்டு ஆரியர்கள் வருகைப் பற்றிய கருத்துகள் எழுந்தன.

விக்கிபீடியாவில் இருந்து,

Sanskrit is a member of the Indo-Iranian sub-family of the Indo-European family of languages. Its closest ancient relatives are the Iranian languages Old Persian and Avestan.[9] Within the wider Indo-European language family, Sanskrit shares characteristic sound changes with the Satem languages (particularly the Slavic and Baltic languages), and also with Greek.[10]
In order to explain the common features shared by Sanskrit and other Indo-European languages, many scholars have proposed migration hypotheses asserting that the original speakers of what became Sanskrit arrived in what is now India and Pakistan from the north-west some time during the early second millennium BCE.[11] Evidence for such a theory includes the close relationship of the Indo-Iranian tongues with the Baltic and Slavic languages, vocabulary exchange with the non-Indo-European Finno-Ugric languages, and the nature of the attested Indo-European words for flora and fauna.[12]
The earliest attested Sanskrit texts are Hindu texts of the Rigveda, which may be located in the Punjab region and dated to the mid-to-late second millennium BCE. No written records from such an early period survive.

இன்றைய தேதியில் ஆங்கிலம் பிறமொழிச் சொற்களை ஏற்றுக் கொண்டு அதை ஆங்கிலப்படுத்திக் கொள்கிறதோ அதே போன்றே பழைய சமஸ்கிரதமும் பல்வேறு திராவிட மொழிகளின் சொற்களை சமஸ்கிரத ஒலிப்பிற்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொண்டது. கிமு 4 ஆம் நூற்றாண்டுவரை சமஸ்கிரதம் லட்சக்கணக்கில் சொற்களை ஏற்று வளர்ந்து கொண்டிருந்தது. அதை முறைப்படுத்தவும், கட்டுக்குள் கொண்டுவரவும் பனானி என்கிற பண்டிதரால் சமஸ்கிரதத்திற்கு இலக்கணம் எழுதப்பட்டு, எழுத்து வழக்கிற்கு பயன்படும் ஒரு மொழியாகியது. கிமு 5 ஆம் நூற்றாண்டு வரை காலத்தில் சமஸ்கிரத்திற்கு எழுத்துகள் தோன்றி அல்லது அமைப்பட்டு இருக்கவில்லை. புத்தரின் காலம் கிமு 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது, அதற்கு முன்பு எழுத்தில் இருந்தவை திராவிட மொழிகளும், பாலி மொழியும் தான். அசோகர் தனது கல்வெட்டுகள் அனைத்தையும் பாலி மொழியில் தான் எழுதினார். நாளந்தா போன்ற பழைய பல்கலைக் கழகங்களில் பாலி மொழியில் பயிற்றுவிக்கப்பட்டது. புத்த மதத்தை தகர்க்க மாற்று வேண்டும் என்று முன்னின்றவர்கள் மாற்றுமொழியாக அதுவும் எழுத்து வழக்கு மொழியாக முன்வைக்கப்பட்டது தான் சமஸ்கிரதம். பார்பனர் மட்டுமல்லாது பவுத்த மதத்திற்கு எதிரானவர்கள் அனைவரும் சமஸ்கிரத்தில் எழுதுவது பாரதம் முழுதும் பரவும் என்கிற கருத்தில் சமஸ்கிரத்தில் எழுதத் தொடங்கினர். சமஸ்கிரத நூல்களில் பார்பனர்களின் பங்களிப்பை விட பார்பனர் அல்லோதோரின் பங்களிப்பே மிகுதி.

மனு ( நான்காம் நூற்றாண்டு) க்கு பிறகு பார்பனர்கள் இந்து சமயத்தை வருண பேதத்தின் சாக்கிட்டு கையில் எடுத்துக் கொண்டபடியால், ஆளுமை செலுத்தும் நோக்கில் பிற மொழியை தாய் மொழியாக உடையவர்களுக்கு சமஸ்கிரதம் பயிற்றுவிப்பதைத் தவிர்த்தனர். பார்பனர் அல்லாதோரின் பங்களிப்புகளும் குறைய தொடங்கியது. ஞானசம்பந்தர் காலத்தில் பக்தி இயக்கம் வளர்க்கிறேன் என்ற பெயரில் புத்தமததினருக்கு எதிராக தமிழ் மொழியை பலரும் முன்னெடுக்க, தமிழ்நாட்டில் சமஸ்கிரத பயன்பாட்டிற்கும் சேர்த்தே ஆப்பு வைத்துவிட்டனர். இருந்தாலும் முடிந்தவரை வடமொழி தமிழில் கலக்கச் செய்ய மணிப்ரளவம் என்னும் உத்தி கையாளப்பட்டது, அதன் தாக்கமாக மலையாளம் என்னும் புதிய மொழிப் பிறந்ததைத் தவிர்க்க முடியாமல் போனது.

இவை பழைய வரலாறு என்ற போதிலும், மறைமலை அடிகள் காலத்தில் தமிழின் தூய்மை படுத்த தனித் தமிழ் இயக்கம் தொடங்கப்பட்ட பிறகு தமிழில் வடமொழிக்கலப்பு மிகுதியாகவே களையப்பட்டது.

வெள்ளைக்காரர்கள் வடமொழியின் மூலம் குறித்து ஆராய்ந்த போது, அடி மடியில் கைவைக்கிறார்களே என்கிற பதற்றத்தில் வடமொழி தேவ பாஷை என்னும் கட்டுக்கதைகளெல்லாம் 200 ஆண்டுகளுக்கு முன்பு கிளப்பி விடப்பட்டு இருக்க வேண்டும். எந்த ஒரு பழைய இலக்கியத்திலும் வடமொழி குறித்து அப்படி ஒரு கருத்து இருந்தது இல்லை.

வடமொழி புழக்கம் குறைந்ததற்கு அது பொத்தி வைக்கப்பட்டதும், மிகவும் உயரியதாக காட்ட பிற மொழிகளை தூற்றியதே வடமொழி மீதான பிறர் வெறுப்புக்காரணம். என்னைக் கேட்டால் உலக அளவில் பலரின் நாக்கு, தொண்டை இவற்றின் ஒலிக்கு ஏற்ப பேசப்படும் ஆங்கிலத்துக்கு மாற்றாக முன்வைக்க் கூடிய தகுதிகள் உடைய சிறந்த மொழிகளில் சமஸ்கிரதமும் ஒன்று. மிகவும் புனிதம் பூசி மறையச் செய்துவிட்டார்கள்.

இப்பவும் கூட வடமொழியின் மேன்மை என்கிற பெயரில் பரப்பரப்படும் கருத்துகளில் ஒன்று, 'ஆங்கிலத்தில் மிகுதியான சமஸ்கிரதச் சொல் இருக்கிறது, ஆங்கிலமே சமஸ்கிரத்தில் இருந்து பிறந்தது, சமஸ்கிரதம் உலக மொழிகளின் மூலம்' - இது எப்படி இருக்கிறதென்றால் தன்னைப் போல் இருப்பவன் ஒருவனைப் பார்த்து வியப்பது போல் ஆகும், இருவரின் பெற்றோர்கள் பற்றி தீரக் கேட்டுப் பார்த்தால் தான் தெரியும் அவர்களின் பெற்றோர் இருவரும் எதோ காரணங்களினால் முன்பே பிரிந்த அண்ணன் தம்பிகள் என்றும் இவர்கள் இருவரும் வாரிசுகள் என்கிற உண்மை. அதாவது சித்தப்பா மகனைப் பார்த்து அவன் சித்தப்பா மகன் என்று அறியாமல் தன்னைப் போலவே இருக்கிறான் என்கிற வியப்பும், ஒருவேளை தந்தையின் இரத்தத்தில் பிறந்தவனோ என்கிற ஐயம் ஏற்படுவது போல் ஆகும். ஆனால் சமஸ்கிரதம் - ஆங்கில ஒப்பீட்டில் இவை ஆங்கிலத்தில் பலசொற்களில் வடமொழி சொற்கள் இருப்பதால் இருப்பதால் அது வடமொழியில் இருந்து பிறந்ததாகக் பெருமையாகப் பேசப்படுகிறது.

இன்றைய ஆங்கிலம் என்பது லத்தீன், கீரேக்க மொழிகளின் கலவை, கூடவே உலக மொழிகளின் சொற்களை ஏற்றுக் கொள்கிறது, அதை 2000 ஆண்டுகளுக்கு முன்பே செய்தது சமஸ்கிரதம், தமிழில் மிகுதியான (தேவையான என்ற பெயரில் சொல்லப்படும்) பிற மொழிச் சொற்களை ஆங்கிலம் போல் ஏற்றால் என்னவாகும் என்பதை சற்றேனும் சிந்தித்து பாருங்கள். பிறமொழியில் இருக்கும் அனைத்து சொற்களையும் ஏற்கவேண்டுமென்றால் அதை அந்த மொழியிலேயே படித்துவிடலாம், அதை ஏன் தாய்மொழியிலும் சேர்க்க வேண்டும் ?

வெள்ளைக்காரர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு ஆங்கிலம் வெள்ளையர்களின் மொழி என்று கூறி பிறர் படிப்பதைத் தடுத்தால் ஆங்கிலம் வளருமா ? மறையுமா ? பிறர் படிக்கக் கூடாது என பார்பனர்களால் சமஸ்கிரதம் இவ்வாறு தான் தடுக்கப்பட்டது.

இணைப்புகள் : சம்ஸ்கிருதம் - சில கேள்விகள்

Sanskrit - From Wikipedia, the free encyclopedia

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்