பின்பற்றுபவர்கள்

தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19 ஆகஸ்ட், 2014

படகர் மொழியை காப்பாற்றுவது யார் ?

வட்டார வழக்குகள் தனிமொழி என்று அறியப்படும் போது அவற்றின் தொடர்புடைய அல்லது அவை இவற்றின் மூலம் வந்திருக்கக் கூடும் என்னும் குறிப்பிட்ட மொழியில் உரையாடுபவர்களுக்கும் அவ்வட்டார வழக்கில் உரையாடுபவர்களும் உரையாடினால் புரிந்து கொள்வது கடினம், அதாவது வேர் மொழியில் இருந்து தனித்துவிட்டது என்ற நிலையில் வட்டார வழக்குகள் தனி மொழி என்னும் சிறப்பை பெருகின்றன அல்லது அடையாளப்படுத்தப்படுகிறது. திராவிட மொழிகள் அனைத்தும் பழந்திராவிட மொழிகள் இருந்து கிளைத்தன, பழந்திராவிட (Proto Dravidan) மொழி அமைப்பு பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது, ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழின் மாற்றம் மிகப் பெரிய அளவில் இல்லை என்பதால் திராவிட மொழிகளின் ஊற்று தமிழாக இருக்கக் கூடும் என்கின்றனர், தமிழை திராவிட மொழிகளின் தாய் என்று முன்னிருத்துவதில் தற்போதைய சிக்கல் கன்னடம், தெலுங்கும் உள்ளிட்ட மொழிகளைப் பேசும் மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை, தம்மொழியே சிறந்தது என்கிற உயர்வு மனப்பான்மையில் தமிழை திராவிடத் தாய் என்று ஒப்புக் கொள்வதற்கு அவர்களுக்கு இருக்கும் மனத்தடையை நாம் புரிந்து கொள்ள வேண்டும், பழந்திராவிட மொழி என்கிற பொதுமையை முன்னிருத்தினால் அதன் வழி திராவிட மொழிகள் கூட்டாக தத்தம் வளர்ச்சிக்கு பயனடைய முடியும். இது என் தனிப்பட்ட கருத்து.

*****

திராவிட மொழிகள் இவை என்று அடையாளப்படுத்தப்பட்டவை ஏறத்தாள 45, அவற்றில் வரிகள் அமைப்பு மற்றும் பொதுவான வினைச் சொற்கள் மற்றும் பெயர் சொற்கள் உண்டு, அவற்றிற்கிடையேயான தொடர்புகளைப் பொருத்து அவை திரிந்தோ, திரியமலோ இருக்கும், பொதுவான இலக்கண அமைப்பும் சேர்ந்து தான் குறிப்பிட்ட மொழிகள் ஒரு தொகுப்பில் வரும், திராவிட மொழிகள் இந்தியாவின் தென்மாநிலங்களிலும், வட இந்தியாவின் மைய பகுதிவரையும், பாகிசுதானில் ஒரு பகுதியிலும் கூட (Brahui) பேசப்பட்டுவருகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் தவிர்த்து ஏறத்தாழ 4 லட்சம் மக்கள் பேசும் மொழியாக கர்நாடகாவின் மங்களூர் பகுதியில் துளுவும், தமிழ்நாடு நீலகிரி மாவட்ட மலைப்பகுதியில் படகர் மொழியும் பேசப்படுகிறது, துளுவுக்கு தனி எழுத்துகள் (Tigalari script) இருந்தாலும் தற்பொழுது கன்னட எழுத்துகளைத் தான் பயன்படுத்துகின்றனர். கர்நாடக மாநிலத்திற்குள் அமைந்துள்ளதால் துளு பேசுவர்களுக்கு அது தான் சரியாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.

நீலகிரி தமிழகத்தில் அமைந்துள்ளது, படகர்கள் / வடகர் / படுகு / வடுகு என்று குறிக்கப்படும் ஒரே வடுகு மொழியை பேசுபவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அவர்களின் மொழி பெரும்பகுதி கன்னடத்தை ஒத்திருந்தாலும் கன்னட எழுத்தில் அவர்களின் மொழியை வளர்ப்பதில் தமிழக அரசின் உதவியையோ, கர்நாடக அரசின் உதவியையோ அவர்களால் பெற முடியாது. படகர் மொழி கன்னடம் தமிழ் ஆகியவற்றின் திரிந்த கலவைதான், ஆனால் படகர் மொழிக்கென்றே தனிச் சொற்களும் நிரம்ப உண்டு, தமிழும் கன்னடமும் அறிந்தவர்கள் படகர் உரையாடலை புரிந்து கொள்ள முடியும். படகர்களின் பள்ளிக் கல்விக்கு கொடுக்கப்படும் இருவாய்ப்புகள் முதல் மொழியாக கன்னடமும் தமிழும் மட்டுமே, அவர்களுடைய மொழியை வீட்டில் பேசினாலும் அவர்களுக்கு படகர் மொழிக்கல்விக்காக எந்த ஒரு பள்ளிக் கூடங்களோ, தனியார் அமைப்போ கிடையாது, நம்முடைய தாய் மொழி ஒன்றாக இருந்து பெரும்பான்மையினர் பேசும் மொழி என்று தமிழை மட்டுமே கற்றுக்கொள்வது மன அளவில் அவர்களுக்கு இருக்கும் தடைகளை தமிழகத்தின் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்வது போல் தெரியவில்லை, தமிழ்நாட்டில் தமிழ் படித்தால் நல்லது என்பது தமிழை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம், அவர்களுக்கும் ஏன் கட்டாயமாக திணிக்க வேண்டும், இந்தி திணிப்புக்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் தமிழகம் (எனக்கு அதில் உடன்பாடு உண்டு) படகர்களுக்கான கல்வி வாய்ப்பில் தமிழை காட்டுவது எந்தவிதத்தில் ஞாயம் என்று எனக்கு தெரியவில்லை, அவர்களுக்கு ஆரம்ப பள்ளிகளாவது படகர் மொழியை கற்றுக் கொள்ளும் வாய்ப்பை கொடுக்கலாம்,

வீட்டில் தான் பேசுகிறார்களே, பின்னர் ஏன் பள்ளியில் கற்றுக் கொள்ள வேண்டும் ? பள்ளிக் கல்வி என்பது எழுத்தை படிக்கக் கற்றுக் கொள்வது அல்ல, மாறாக அவர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, மொழி வரலாறு, இலக்கணம் இலக்கியம் உள்ளடக்கியவையே, படகர் மொழிக்கென்றே தமிழ் எழுத்துகளை பின்பற்றி தனி எழுத்துகளை அம்மக்களில் ஒருவர் உருவாக்கி இருக்கிறார், அது ஒரு நல்ல முயற்சி, எழுத்தில்லாத மொழிகள் இலக்கிய இலக்கணங்களையும், மொழி சார்ந்த படைப்புகளையும் அடுத்த சந்ததியினருக்கு அளிக்க முடியாது,  அவர்கள் மொழியை தமிழ் எழுத்துகளிலேயே எழுதலாமே ? மொழிக்கான தனிச் சிறப்பு என்பது அது தனக்கான தனி எழுத்து வடிவத்தை கொண்டிருப்பது தான், இந்தியாவில் உள்ள மலையாளம், தமிழ் தவிர்த்து ('ழ்') ஏனைய மொழிகளை இந்தி மற்றும் வடமொழியை எழுதப்பயன்படும் தேவநகரியில் எழுதிவிட முடியும், ஆனால் அதில் தனித்துவம், தனிச்சிறப்பு ஏதுவும் இல்லை, அதனால் தான் படகர் மொழிக்கென தனி எழுத்துகளை உருவாக்கி, கணிணி ஒருங்குறியில் (Unicode) படகர் மொழி எழுத்துகளையும் ஏற்ற) முயற்சிக்கின்றனர், இதற்கு தமிழக அரசு எந்திரம் ஒத்துழைத்தால் படகர் மொழி இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு மேலும் வாழும்.
The Badaga Script developed by Anandhan Raju

வெறும் 15,000 பேர் மட்டுமே பேசும் வடமொழியை அழிவில் இருந்து காப்பாற்ற கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது, பல்கலைகழகங்கள், 100க் கணக்கான சபாக்கள் இயங்குன்றனர். வடமொழி விழிப்புணர்வுக்காக ஏழுநாள் கொண்டாடப்படுகிறது, சங்காலத்தில் (புறநானூற்று குறிப்புகள்) வடகர் என அறியப்பட்டு 4 லட்சம் பேர் பேசும் ஒரு மொழியை வளர்த்தெடுக்க மைய அரசோ, மாநில அரசோ முன்வரவில்லை, தமிழ் திணிப்பால் அழிந்த மொழி என்னும் நிலை படகர் மொழிக்கு வரவேண்டாம், படகர் இனமக்கள் ஒன்று திரண்டு தமிழக அரசிடம் தங்கள் மொழி வளர்ச்சிக்கு பல்வேறு கோரிக்கையை வைத்து பேராடி மொழி உரிமையைப் பெறுவது தான் தற்போதைய வழி, அம்மக்களை தமிழகத்தின் எல்லைக்குள் அடைத்துவிட்டு, அம்மக்களின் மொழியை கண்டுகொள்ளாமல் இருந்தால் படகர் மொழி அழிவுக்கு, தமிழ் திணிப்பும் தமிழக அரசுமே காரணமாக அமைந்துவிடும்.




கும்கி படத்தில் அம்மக்களின் வாழ்வியலை பதிய வைத்திருப்பார்கள், ஆனால் அவர்கள் பேசும் மொழி பற்றி ஒருகாட்சி அமைப்பு கூட கிடையாது. படகர் மொழியில் இலக்கியம் படைக்க படகர்களில் பலருக்கு ஆர்வம் உண்டு, அவர்கள் பள்ளிகளுக்கு தேவையான பாடத்திட்டங்களை தமிழ் பாடத்திட்டங்களை ஒட்டி அமைத்து தருவதற்கும் ஆவலாகவே உள்ளனர், நீலகிரி படகர் இனமக்கள் திராவிட மக்கள், தமிழகத்தை சார்ந்தவர்கள், வெள்ளைக்காரன் அவர்களது மலைவாழ் இடங்களை பறிக்க, பின்னர் திரைப்படம் எடுக்கவும், சுற்றுலாவிற்காகவும் அவற்றையெல்லாம் நாம் பறித்து கொண்டோம், அவர்களின் மொழியை காப்பாற்றிக் கொடுப்பது ஒவ்வொரு தமிழனுக்குமே கடமையாகும், ஏனெனில் விரைவில் அழியும் மொழிகளின் பட்டியலில் படகர் மொடியும் உண்டு.

இணைப்புகள் :

Badaga language

12 ஆகஸ்ட், 2014

வடமொழி கிழமை கொண்டாட்டம் !

நான் தனிப்பட்டு எந்த ஒரு மொழிக்கும் எதிரானவன் இல்லை, ஆனால் மொழித் திணித்தலும் பண்பாட்டு அழித்தலும் ஒன்றில் ஒன்று தொடர்புடையது என்கிற புரிதல் உள்ளவன், ஒருவர் விருப்பப்பட்டு எந்த மொழியையும் எத்தனை மொழியையும் கற்கலாம், அவை வரவேற்கத்தக்கது, ஆனால் எந்த ஒரு பலனும் முன்னே இல்லாத ஒரு மொழியை பெரும்பான்மையினர் பேசுகின்றனர் என்று சிறுபான்மையினரிடம் திணிப்பது வன்மையாக கண்டிக்கத் தக்கதே.

சிங்கப்பூரில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டாயமாக மலாய் கற்றுக் கொடுக்கப்பட்டது, பின்னர் பன்னாட்டு நிறுவனங்களால் தான் உள்நாட்டு பொருளியல் வளரும் எனவே அனைவரும் ஆங்கிலம் கற்று தொடர்பு மொழியாக அதனைப்பயன்படுத்தலாம் என்று முன்னெடுக்கப்பட்டு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கப்பட்டு, பாமரர்களும் பேச எளிமையான வடிவில் சிங்கப்பூர் ஆங்கிலம் உருவாகி, அனைவரும் ஆங்கிலமே தொடர்பு மொழியாக பயன்படுத்துவதால் பெரும்பான்மை மக்களின் சீன மொழியோ, வட்டார மொழியான மலாய் மொழியோ அம்மொழி பேசாதவர்கள் தவிர்த்து வேறு யாருக்கும் திணிக்கப்படுவதில்லை, மாறாக அவரவர் தாய்மொழி கல்வி இரண்டாம் மொழியாக அனைவருக்குமே பயிற்றுவிக்கப்படுகிறது, சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்கு அதன் நில அமைப்பு, மக்களின் உழைக்கும் திறன் தவிர்த்து தொடர்பு மொழி ஆங்கிலம் என்பதால் ஆசியாவில் அமைந்த ஐரோப்பிய நாடு என்கிற எண்ணத்துடன் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் முதலீடு செய்து சிங்கப்பூரை வளமாக்கினார்கள்.

இது போல் அல்லாமல் எந்த ஒரு வகையிலும் பயனிளிக்காத இந்தியையும், வடமொழியையும் அனைத்து மாநிலங்களிலும் திணித்தே தீருவோம் என்று பொறுப்பேற்றுள்ள மோடி அரசு முதலில் இந்தியை அரசு சமூக ஊடகத் தொடர்பு மொழியாக அறிவித்து, பின்னர் எதிர்ப்பு கிளம்பவே வடமொழியை முன்னிருத்துகிறார்கள், வடமொழியில் இராமயண ம(ஹா)பாராத கதைகள், மற்றும் வேத உபநிசத்து, காம சாத்திரம், பிற இந்து சமயம் சார்ந்த நூல்களே உள்ளன, அது தவிர்த்து வடமொழி கற்றுக் கொள்வதால் வேறெதையும் புதிதாக அறியமுடியாது, வடமொழியில் அன்றாட செய்தி இதழ்களோ, கிழமை இதழ்களோ, திங்கள் இதழ்களோ வெளி வருவது கிடையாது, இந்தியை வடமாநிலங்கள் முன்னெடுத்த போதே வடமொழி வளர்ச்சி என்பது முற்றிலும் நின்று விட்ட ஒன்றாகும், ஆனால் வடமொழி காணாமல் போனதற்கு அல்லது புழக்கமற்று போனதற்கு கருணாநிதியை குறை சொல்கின்றனர், கருணாநிதி காரணமென்றால் இந்தியா என்பது தமிழ்நாடு அல்லது கருணாநிதியின் செல்வாக்கு இந்திய துணைகண்டத்தில் ஆளுமை மிக்கதாக இருக்க வேண்டும், இவற்றில் எதுவுமே உண்மை கிடையாது. வடமொழி வழக்கொழிந்து போனதற்கு இந்தியை வட மாநிலங்கள் தாங்கிப் பிடித்ததே ஆகும்,

ஏற்கனவே வடமொழி சார்ந்த நூல்களில் காமசூத்திரம் உள்ளிட்டவை ஆங்கிலத்தில் மொழி பெயர்கப்பட்டுவிட்டன, மாபாரதம் உள்ளிட்டவை ஆங்கில அசைபடங்களாக வெளிவந்துவிட்டன, ஆங்கிலம் அறிந்தவர்களும் அவையே போதுமானதாக உள்ளது, நான் பார்த்த லிட்டில் கிருஷ்ணா அருமையாக ஆங்கிலத்தில் ஆக்கி இருக்கிறார்கள், எனவே வடமொழி அறிந்து வடமொழியை அறிந்தால் மட்டுமே வடமொழியில் உள்ளவற்றை கற்றுக் கொள்ளலாம் என்பதில் யாதொரு உண்மையும் கிடையாது. தவிர வடமொழியை அறிவதால் அந்த நூல்களை படிக்க முடியும் என்பது தவிர்த்து பெரும் பயன் எதுவும் இல்லை. ஏற்கனவே வேதம் படிக்கிறவர்கள் பார்பனர் அல்லாதவர்கள் என்றால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்தவேண்டும் என்று சொல்லி இருப்பதை வடமொழி அறிந்து படிப்பதால் அம்மொழி மீது மேலும் வெறுப்பே மிஞ்சும். மற்றபடி பாரம்பரியம், நமது இந்திய மொழி போன்ற கூற்றுகள் அடிப்பட்டுப் போய்விட்டன.

விக்கிப்பீடியாவில் வடமொழி இந்தோ - ஐரோப்பிய பிரிவை சார்ந்தது என்று தெளிவான சான்றுகளுடன் சொல்லி இருக்கிறார்கள், எந்த ஒரு வடமொழி ஆர்வளரும், மொழியாளரும் அதை இதுவரை மறுக்க முடியவில்லை, ஆங்கிலம் உள்ளிட்ட ஐரோப்பிய மொழிகளில் வடமொழிச் சொற்கள் கனிசமான அளவில் இருப்பதற்கு வாய்ப்பும் அம்மொழியின் தாயகம் இந்தியாவாக இருக்கமுடியாது என்பதால் தான் என்றே சொல்லுகிறார்கள்,

இன்றைக்கு இந்திய மொழிகளில் ஆங்கிலம் நீக்கமற கலந்து தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளை திரிப்பது போன்று தான், வடமொழி பல்வேறு மொழிகளில் கலந்து அவற்றை சிதைத்தது, மற்றபடி வடமொழி இந்திய மொழிகளுக்கும் தாய் என்பது தவறான மற்றும் புறந்தள்ளக் கூடிய கூற்றுமாகும், அதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை, மொழியைப் பற்றி பெருமை பேசுபவர்கள் மொழி ஆராய்ச்சியாளர்களாக மட்டுமே இருந்தால் இது போன்ற தவறான கூற்றுகள் ஏற்பட்டிருகாது, மொழிப்பற்றாளார்கள், தம்மொழி மீது பெருமை கொண்டவர்கள் இட்டுக்கட்டிக் கூறித் திரித்தவையே இவையாகும். 

வடமொழி தென்னிந்திய மொழிகளில் கலந்ததற்கு எனக்கு தெரிந்து இருவாய்ப்புகள் தான், தென்னிந்தியாவில் பார்பனர்களின் பரவல், மற்றும் இராமயண மாபாரத இதிகாசங்களின் சொற்பொழிவுகள். கோவிலை பிழைப்பிடமாகக் கொண்ட வடமொழி கற்ற பார்பனர்கள் பிறருடன் உரையாடும் போது கலந்தவை, இராமயண, மாபாரத சொற்பொழிவுளில் அதன் செய்யுளை வடமொழியில் சொல்லி பின்னர் வட்டார மொழியில் கதைவிளக்கம் கொடுப்பார்கள், இராமயணக் கதை ஊடுருவல் என் டி ஆரை கிருஷ்ணராகவே பார்க்க வைத்துள்ளது என்றால் அந்த கதையின் தாக்கம் தெலுங்கில் எந்த அளவில் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்துப்பாருங்கள். தமிழ்நாட்டில் வடமொழி கலப்பு குறைந்ததற்கு வில்லிபாரதம் தமிழில் எழுதப்பட்டதும், கம்ப இராமயணம் தமிழில் மொழிமாற்றப்பட்டதும் ஆகும், இல்லை என்றால் மலையாள, கன்னட மற்றும் தெலுங்கு மொழிகளைப் போல் 50க்கு 50 என்ற கணக்கில் தமிழ் சிதைந்திருக்கக் கூடும், உரைநடைகள் வளர்ந்த 100 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் வடமொழி கலப்பு மிகுந்திருந்தது, ஏனெனில் தமிழ் உள்ளிட்ட மொழிகளை கற்றுக் கொடுக்கும் வேலையில் குருகுலம் அமைத்த்து பார்பனர்கள் தான் அதனையும் செய்துவந்தனர், அவர்களிடம் தமிழ் கற்றவர்களின் பேச்சு வழக்கில் இயல்பாகவே வடமொழி கலப்பு ஏற்பட பெரியார் உள்ளிட்டவர்களின்  மேடைப்பேச்சில் நீங்கள் வடமொழிக்கலப்பு மிகுந்திருப்பதைப் பார்க்கலாம், பின்னர் தனித்தமிழ் இயக்கம் தோன்றிய பிறகே அவை முற்றிலுமாக களையப்பட்டு, செந்தமிழ் இல்லாவிட்டாலும் நல்ல தமிழில் எழுத முடிந்தது.

இந்தி போன்ற பெரும்பான்மையினர் பேசும் ஒரு மொழியை திணிப்பது அல்லது படிக்கச் சொல்லி அறிவுறுத்துவது தவறா ? இந்தியர்களுக்கு பொதுவான இந்திய மொழி ஒன்று இருந்துவிட்டு போகட்டுமே ? கொஞ்சம் சிந்தித்துப்பாருஙகள், எந்த ஒரு மொழியும் தகவல் தொடர்பு என்ற அளவில் இருந்தால் கெடுதல் இல்லை, ஆனால் தற்கால தொலைகாட்சி மற்றும் திரை ஊடகங்களின் தாக்கம் உடனடி விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது, நன்கு திறமையானவர்கள், நாம் ஏன் 6 கோடி தமிழர்கள் மட்டும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியை படைக்க வேண்டும் ? என்ற கேள்வியில் பெரும்பான்மையினர் பாராட்டுகளே முதன்மையானது என்று மாற்றிக் கொள்வார்கள். கலைஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட திறமையானவர்கள் அனைவருமே இந்தி பேசும் பெரும்பான்மையினருக்காக உழைக்க முடிவெடுத்தால், தமிழை பாமரனும் தாய்மொழியாக வீட்டில் பேசுபவன் மட்டுமே வாழ வைக்க முடியுமா ?

தமிழ் மற்றும் தென்னிந்திய இயக்குனர்களுக்கு இந்திபடம் இயக்க வேண்டும் என்பதே கனவு. அதை நான் தவறு என்று சொல்லமாட்டேன். ஆனால் அவர்கள் எல்லோரும் அங்கு சென்றுவிட்டால் நமக்காக படம் எடுப்பவர் யார் ? ரஜினியோ கமலோ இந்தியில் தொடர்ந்து வென்றிருந்தால் அவர்கள் தமிழ் சூப்பர் ஸ்டார்களாக நம் முன் நிற்கமாட்டார்கள், அவர்களுக்கு இந்தி பேசத் தெரிந்தாலும் பெரிதாக வரவேற்பு இருக்க வில்லை, ஆனால் தென்னிந்திய இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள் இந்தியில் வெற்றிக்கொடிகட்டுகின்றனர், முதல் போடுபவர் இந்திகாரராக இருக்கும் பொழுது படமும் வெற்றி என்னும் பொழுது இயக்குனரின், இசை அமைப்பாளரரின் திறமையை நமக்கு ஒரு அடிமை சிக்கிவிட்டான் என்பது போல் தான் அவர்கள் வரவேற்கின்றனர்.  வட இந்தியர்கள் தென்னிந்தியரின் முகத்தை திரையில் பார்க்க விரும்பமாட்டார்கள், ஆனால் திரைக்கு பின்னால் இருக்கும் உழைப்பை பயன்படுத்திக் கொள்வார்கள்

இந்தியா முழுவதும் இந்தி மயமாகிவிட்டால், தமிழ் படம் என்று வரவே வராது, தமிழ் சார்ந்த செய்திதாள்களின் எண்ணிக்கை குறைந்து போகும், தமிழ் சார்ந்த கலைகளோ தொண்மங்களோ வளராது. தமிழின் வளர்ச்சி முற்றிலுமாக நின்று போய்விடும், அண்டை மாநிலங்களில் அவ்வாறு நடைபெற வில்லையே ?

கன்னடப் படங்கள் நன்றாக ஓடுவது குறைவு, அதனால் தான் கன்னட திரையுலகம் பல்வேறு கட்டுப்பாடுகளை பிற மொழி படங்களின் மீது விதிக்கிறது. தெலுங்குக்கு அந்த நிலமை வர சற்று காலம் எடுக்கலாம் ஆனால் நடக்காது என்று சொல்ல ஒன்றும் இல்லை. கேரளத்தினர் தம்படைப்புகள் மீது ஆழ்ந்த மதிப்பு வைத்திருப்பவர்கள் என்பதால் அவர்களும் தப்பி வருகின்றனர், அதுவும் எவ்வளவு நாள் என்று சொல்ல முடியாது.

ஒரே சமயத்தில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ், பிரபு தேவா, ஏஆர் ரஹ்மான் ஆகியோருக்கு இந்திபட வாய்ப்பும் தமிழ் பட வாய்ப்பும் கிடைத்தால் எதை தேர்ந்தெடுப்பார்கள் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். நான் அவர்களை மொழி பற்று இல்லாதவர்கள் இல்லை என்று சொல்லவரவில்லை, ஆனால் தமிழனாக இல்லாமல் 'இந்தியானாக' வெற்றி பெருவதையே அவர்கள் விரும்புவார்கள், ஊடகங்களில் பிற மொழி நுழைந்தால் தாய் மொழியின் வளர்ச்சி குறைந்து கொண்டே நாளடைவில் நின்று போகும், இது தான் இந்தி மொழி வளர வளர வடமொழி வளர்ச்சி தடைபட்டு நின்று போனதற்கும் காரணம்.

தமிழகத்தில் பிறமொழி தாக்கம் ஏற்பட ஏற்பட அவற்றை அறிந்தவர்களின் ஊடகத் தேர்வும் அம்மொழியை நோக்கியும் திரும்பும். நாளடைவில் தமிழ் வெளிநாடுகளில் மட்டுமே வாழும் மொழியாகிவிடும். வடமொழி வளர்ச்சி நின்று போனது ஏன் என்று விடை அறிந்துவிட்டு பின்னர் வடமொழி கிழமை (வாரம்) கொண்டாடுங்கள்.

13 ஏப்ரல், 2013

தவிட்டு ரொட்டிக்கு மாறுங்கோ !


தவிட்டு ரொட்டி என்று ஒண்ணு உண்மையிலேயே தனியாக இருந்ததா ? இன்றும் இருக்கிறதா என்று தெரியாது. ஆனால் குருவி ரொட்டி (பறவைகள், விலங்குகள் போன்ற உருவங்களால் செய்யப்பட்டது), உப்பு ரொட்டி, ஐஞ்சு ரொட்டி (ஐஞ்சு பைசாவுக்கு ஐஞ்சு - பழைய 25 பைசா அளவில் இருக்கும்), சாரொட்டி (சென்னையில் வரிக்கி அல்லது பொறை என்பார்கள், சாரொட்டி என்ற பெயர் காரணம் தெரியவில்லை, ஒருவேளை சறக் மொறுக் என்பதால் அல்லது முற்றிலும் ஈரச் சாறு இல்லாமல் சாரற்ற ரொட்டி சாரொட்டி என்று மறுவியதா தெரியவில்லை)  இது போன்று இன்னும் சில ரொட்டிகளை சிறுவயதில் வாங்கி தின்றிருப்பேன், இவற்றில் சாரொட்டி தவிர்த்து ஏனையவற்றில் தவிடும் அரிசி மாவும் இருப்பது தவுடு சுவை அறிந்தவர்களால் உணர முடியும், தவிடு / உமி என்றாலே பலருக்கு என்னவென்று தெரியாது என்றே நினைக்கிறேன், அரவை மில்லில் நெல்லை இட்டு அரைக்கும் பொழுது நெல்லின் தோலும் மாவாக அரைக்கப்பட்டே வெளியே வரும், அதில் ஒரு கையளவு நெல் அரைத்து முடித்த பின் மீண்டும் போட்டு அரைப்பார்கள், காரணம் கடைசியாக எந்திரத்தில் இருக்கும் நெல்லும் அரைந்து வெளியே வந்துவிடும். அரைத்த அரிசியை மறுபடியும் ஒரு சல்லடை எந்திரத்தினுள் கொட்டுவார்கள், அது அரிசி தனியாகவும், நொய் / குருணை  (பாதிக்கும் குறைவாக உடைந்த அரிசி, ஆங்கிலத்தில் Grain அல்லது fine grain என்று சொல்லி முடித்துவிடுவான்) தனியாகவும் பிரித்து வெளியே கொட்டும், ஏற்கனவே அரவை கட்டணம் செலுத்தி இருந்தாலும் இரண்டு கை சேர்த்து மூட்டைக்கு ஒரு கை அளவு அரிசியை அரைக்கும் தொழிலாளிக்கு கொடுத்துவிட்டு அரிசி, நொய் மற்றும் தவிட்டை கட்டிக் கொண்டு வீடு வருவோம்.

நொய் கஞ்சு காய்த்து குடிக்கவும், தவிடு மாடுகளுக்கு கழுநீரில் (கழனி தண்ணி) கொட்டி கலக்கி வைக்க, பிரியாணி சாப்பிடுவது போல் சுவைத்து சாப்பிடும், தவிட்டின் பயன் அத்துடன் முடியாது, அடுப்பில் விறகு நன்றாக எரியும் போது அதன் மீது கொஞ்சம் தூவி விட மேலும் நன்கு எரியும், பெரும்பாலும் புழுங்கல் அரிசிக்காக நெல் வேக வைக்கும் பொழுது எரியூட்டியாக பயன்படும், தவிட்டு அல்லது உமி ( ஒதுக்கப்பட்டது / உமிழ்ந்தது என்ற பொருளில் உமி வந்திருக்கும் என்றே நினைக்கிறேன்)  அடுப்பில் உமி தான் முதன்மையான எரிபொருள். இப்போதெல்லாம் மாடும் இல்லை, உமி அடுப்பும் இல்லை, தவிடு எரிக்கப்பட்டு மறுப்பயனீட்டு உரமாக்கப்படுகிறதா என்று தெரியவில்லை, நெல் அரவை நிலையங்களில் எரிக்கப்பட்ட தவிடு முன்பெல்லாம் உரமாக எடுத்துச் செல்லப்படும்.

அரவை எந்திரங்கள் வராத பொழுது உரல் உலக்கை தான் நெற்களில் இருந்து அரிசியையும் உமியையும் பிரித்து எடுக்க பயன்படும், அவ்வாறு எடுக்கப்படும் அரிசியை அரவை எந்திரங்கள் வந்த பிறகு கைக்குத்தல் அரிசி என்பார்கள், அதற்கு முன்பு நெல் குத்துவதற்கு தனியாக பெயர் தேவைப்படாமல் இருந்தது, தமிழில் அரிசி என்பது தோல் நீக்கிய அனைத்து தானியங்களுக்குமான பொதுப் பெயர் தான், நெல் அரிசி, வரகரிசி, சாமை அரிசி, கேப்பரசி, கம்பரிசி, திணை அரிசி என்று தான் சொல்லுவார்கள், கால மாற்றத்தில் அவற்றை உண்ணும் வழக்கம் மறைந்ததால் நெல் அரிசிக்கு மட்டுமே அரிசி என்ற பெயர் வழங்கிவருகிறது, அரிசி தான் ஆங்கிலத்தில் Rice க்கும் மூலச் சொல், காரணம் விவசாயம் பண்டைய காலம் தொட்டே (இன்றும் செயலபடும் கல்லணை தான் உலகின் முதல் அணை) தமிழகத்தில் நடந்து, ஏற்றுமதி செய்யப்பட்டவை என்பதால் அந்த சொல் தமிழகத்தில் இருந்தே பல்வேறு மொழிகளுக்கு சென்றிருக்க வேண்டும் A-RI-CE (அ-ரி-சி), இவற்றில் 'அ' வை விழுங்கிவிட்டு ரிசி யை (Rice) ரைஸ் ஆக்கி நம்மையும் அவ்வாறே சொல்ல வைக்கிறார்கள், தமிழகத்தில் ரைஸ் / ஷாதம் என்று சொல்வது தான் நாகரீகம் என்ற நிலைக்கு வளர்ந்துள்ளது, யாராவது சோறு என்று கேட்டால் பிச்சைகாரனோ ? என்பது போல் முகத்தை ஏறிட்டு பார்க்கிறார்கள், உலகினருக்கு ஒரு உணவுப் பொருளின் சொல் பிச்சை அளித்து அவற்றை திரும்பவும் நாமே வாங்கி உண்கிறோம் :)


Etymology

First attested in English in the middle of the 13th century, the word "rice" derives from the Old French ris, which comes from Italian riso, in turn from the Latin oriza, which derives from the Greek ὄρυζα (oruza). The Greek word is the source of all European words (cf. Welsh reis, German Reis, Lithuanian ryžiai, Serbo-Croatian riža, Polish ryż, Dutch rijst, Hungarian rizs, Romanian orez).[7][8][9] The origin of the Greek word is unclear. It has sometimes held to be from the Tamil word அரிசி (arisi), or rather Old Tamil arici.[10][11] However, Krishnamurti[12] disagrees with the notion that Old Tamil arici is the source of the Greek term, and proposes that it was borrowed from descendants of Proto-Dravidian *wariñci instead. Mayrhofer[13] suggests that the immediate source of the Greek word is to be sought in Old Iranian words of the types *vrīz- or *vrinj-, but these are ultimately traced back to Indo-Aryan (as in Sanskrit vrīhí-) and subsequently to Dravidian by Witzel and others.

நன்றி விக்கி

*****

கைக்குத்தல் அரிசிகளில் தானியங்களின் சத்துகள் நிரம்ப இருக்கும், அரவை எந்திரங்கள் மூலம் அரைக்கப்படுவதில் அரிசியின் மேற்பகுதி நன்றாக தீட்டப்பட்டு வெறும் மாவுப் பொருள் மட்டுமே நமக்கு உணவாக கிடைக்கிறது, இவற்றை கால விரைவாக உணர்ந்து கொண்டவர்கள் தற்போதும் வெளிநாட்டினரே, குறிப்பாக ஐரோப்பியர்கள் உணவுக்காக தயாரிக்கப்படும் ரொட்டிகளில் தானியங்களின் உமியும் கலந்த (whole meal) ரொட்டிகளே சத்தானவை என்று பரிந்துரைக்கப்படுகிறது, whole meal bread விற்பனை தற்போது விரும்பி வாங்கப்படும் ரொட்டி உணவு வகையாக மாறியுள்ளது, தானியங்களின் மேல் தோல் உள்ளிட்டவைகளில் புரத சத்துகள் உண்டு, என்பதால்  whole meal உணவு பொருள்கள் பல்வேறு சுவையூட்டத்துடன் கிடைக்கிறது.  புரதம், நார்சத்து, கொழுப்புசத்து, இரும்பு சத்து ஆகியவை தானியத்தின் தோல் மற்றும் அவற்றின் முளைகளில் உண்டு,  தீட்டபட்ட அரியினுள்  மாவு சத்து மட்டுமே உண்டு, அதனால் தான் உடல் பருமன் மிகுவது மற்றும் நீரிழிவு குறைபாடு உள்ளவர்களுக்கு உண்டவுடனேயே சர்கரை அளவு கூடுவது போன்ற உடல் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

whole meal க்கு விக்கி ஒரு பக்கமே திறந்து வைத்து அதன் பயனை தெரிவித்துள்ளனர், நெல் மட்டுமின்றி அனைத்து தானியங்களிலுமே அனைத்து சத்துகளும் அவற்றின் தோலையும் சார்ந்தவையாகவே உள்ளது. இந்த whole meal, digestive   Biscuit ஆகியவை நாம் முன்பு தவிட்டு ரொட்டி என்ற பெயரில் சாப்பிட்ட ரொட்டி. சுவை தான், கொஞ்சம் சக்கை போன்று சற்று சுவை குறைந்ததாக (சப்பென்று) இருக்கும், வெள்ளைக்காரன் சாப்பிடும் தவிட்டு ரொட்டிக்கு whole meal என்று பெயர் வைத்ததால் அவற்றை உண்ணுவது உடல் நல மேன்மை மற்றும் நாகரீக உணவு என்ற நிலையை அடைந்துள்ளது. 

29 ஆகஸ்ட், 2012

Bet - ம், Risk - க்கும் !


தொலைகாட்சி தொகுப்பாளர்கள் பேசுவதைக் கேட்கும் பொழுது இரத்தக் கொதிப்பு தான் வருகிறது, நாகரீகம் என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் கூத்துகளுக்கு அளவே இல்லை, இவர்கள் பேசுவதில் 5 விழுக்காடு தமிழ் இருக்குமா என்பது ஐயமே, இதை ஒரு ஆங்கிலத் தொலைகாட்சி நிகழ்ச்சியாக கற்பனை செய்து கொண்டு தொகுப்பாளர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவராக நினைத்து, அவர் தொகுப்பு நிகழ்ச்சியில் தவறிப் போய் ஒரே ஒரு சொல்லை தமிழில் சொல்லிவிட்டால் நாக்கைக் கடித்துக் கொண்டு மன்னிப்பு கேட்பாரா இல்லையா ? கூடவே கண்டனம் தெரிவித்து வாசகக் கடிதங்களும் குவிந்துவிடும், தினமலர் உள்ளிட்ட நாளிதழ்களிலும் ஆங்கிலம் பரவலாகவே இடை இடையே எழுதப்படுகிறது தவிர 'கோர்ட்' என்று தலைப்பிட்டு நீதிமன்றம் சார்ந்த செய்திகளையும் வெளி இடுகிறான், 'கோர்ட்' என்பதற்கு மாற்றாக இவர்களால் ஏன் 'நீதித்துறை' என்று தலைப்பிட்டு அதன் கீழ் செய்திகளை போட முடியவில்லை. இதை வேண்டுமென்றே செய்யும் திமிர்த் தனம் என்று வகைப்படுத்த முடியுமா முடியாதா ? அல்லது பார்பனக் கொழுப்பு என்று நான் விமர்சனம் செய்தால் சண்டைக்கு வருபவர் யார் ?  அவ்வாறு சண்டைக்கு வந்தால் தினமலரின் திமிர் தனங்களுக்கு போதுமான காரணங்களைச் சொல்லிவிட்டு சண்டையிடலாமே. தொலைகாட்சி, செய்தி ஊடகம் இவற்றில் இருந்துதான் மக்களும் தமக்கான மொழியறிவை வளர்த்துக் கொள்கிறார்கள் என்ற புரிந்துணர்வில் தமிழ் என்ற பெயரில் அன்றாடப் புழக்கமாகிப் போன தமிங்கிலத்தை சகித்துக் கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது, யாருமே நேரங்களைக் குறிப்பிடுவதில் கூட 10 மணி , 12 மணி என்றெல்லாம் சொல்வது கிடையாது டென் ஓ க்ளாக், ட்வள் ஓ கிளாக் என்று தான் கூறுகிறார்கள், சுரணை அல்லது அது பற்றிய சிந்தனைகளே இல்லை என்றால் கேட்கும் நமக்கு எரிச்சல் ஏற்படாது. கண்ணுக்கு முன் மொழிச் சிதைவை பார்க்கும் பொழுது ஏற்படும் ஆற்றாமைகள் தொடர்ச்சியாகக் கிடைக்கும் தண்டனைகளை துய்ப்பது போன்ற கொடுமை. நான் செந்தமிழில் உரையாடுங்கள், பேசுங்கள் என்று சொல்லவரவில்லை, ஆனால் புழக்கத்தில் இருக்கும் சொற்களை புதைத்துவிடுகிறார்கள் என்று புலம்புகிறேன், நான் என்னதான் முடிந்த வரையில் தூய தமிழில் உரையாடலாம் என்று முயற்சி எடுத்தாலும்'பேருந்து வருகிறது' என்று சொன்னாலும் எதோ புரியாத ஒன்றை சொல்லக் கூடாத ஒன்றைச் சொல்லிவிட்டது போல் கொஞ்சம் நக்கலாகப் பார்த்து நகைப்பதால் யாரிடம் தமிழில் மட்டுமே பேசுவது என்றெல்லாம் நான் முடிவு செய்ய வேண்டி இருக்கிறது, ஒரு சிலருக்கு நான் என்ன சொன்னேன் என்பதை திருப்பிச் சொன்னால் தான் புரியும் என்ற நிலையும் உள்ளது.  தமிழன் தமிழன் என்று நாம் பெருமை பீற்றிக் கொண்டாலும் நாம் பேசுவது தமிழ்தானா ? இன்றைக்கு தமிழ் பேசும் எவரும் 50 விழுக்காடுகள் ஆங்கிலச் சொற்கள் கலவை இன்றி பேசுவதே கிடையாது. பிறகு நாம் பேசுவது எப்படி தமிழாகும் ?

*****

சிங்கப்பூர் தமிழ் மாணவர்கள் எல்லது தமிழர்கள் தொலைகாட்சி நிகழ்ச்சியின் செய்தியில் / அல்லது வேறு நிகழ்ச்சிகளின் இடையே பேசும் பொழுது பேசுவதைக் கேட்கும் பொழுது தமிழை தாய்மொழியாகக் கொண்ட இவர்கள் ஏன் தமிழைப் பேச இப்படித் திணறுகிறார்கள் ? என்று முதல் முறைப் பார்ப்பவர்கள் நினைக்கத் தோன்றும்,  திணறுவதற்கு முதல்காரணம் அவர்கள் மொழி தாய் மொழி தமிழ் என்றாலும் வீட்டில் பேசுவது முழுக்க முழுக்க சிங்கை ஆங்கிலம் (சிங்லிஸ்), எனவே ஒரு நிகழ்ச்சியின் இடையே தமிழில் பேச வேண்டும் என்கிற நிலை வரும் பொழுது ஆங்கிலத்தில் பேசிப் பழகிய அவர்கள் தமிழுக்கு மாற வேண்டிய சூழலும் ஏற்பட சற்று திணறலாகத்தான் இருக்கும், தவிர திணறலுக்கு அது மட்டுமே காரணம் இல்லை, பேசப் போவது தமிழ் என்பதால் அதில் அவர்களின் சிந்தனையில் கலந்த ஆங்கிலச் சொற்கள் கலந்து பேசிவிடக் கூடாது என்பதால் பொருத்தமான தமிழ் சொற்களை ஆங்கில சிந்தனை வழியாக சிந்தித்து  பிறகு பேசுவார்கள்,  பொருத்தான தமிழ் சொற்கள் குறித்த அவர்கள் சிந்திக்கும் நேரம் பேசுவதின் தொடர்ச்சியில் நேரத் தொய்வை ஏற்படுத்த கேட்கும் நமக்கு அவர்கள் தமிழில் பேச திணறுகிறார்கள் என்பது போல் தோன்றும், உண்மை அதுமட்டுமல்ல, தமிழில் பேசும் போது தமிழில் மட்டும் தான் பேச வேண்டும் என்கிற நிலைபாடு தான் காரணம், நம்மைப் போன்று ஆங்கிலச் சொற்களைக் கலந்து பண்ணித் தமிழில் பேசலாம் என்று அவர்கள் நினைத்திருந்தால் அவர்களாலும் திணறல் இன்றிப் பேசிவிட முடியும். எந்த ஒரு மொழியையும் பேசும் பொழுது அந்த மொழியில் விளக்க பொருத்தமான சொற்கள் இல்லாத நிலையில் சொற்களை கடன் வாங்கிப் பயன்படுத்துவது தவறே இல்லை. 

'பார்க் பண்ணிட்டிங்களா ?',  லஞ்சுக்கு கெளம்புறிங்களா ? டிக்கெட் எடுத்துட்டிங்களா ? இதை கொஞ்சம் கட் பண்ணித் தாங்க. ஒரு வாக் போய்ட்டு வந்துடுறேன், அவரு போன் பண்ணி சொன்னார், நாளைக்கு மார்னிங்க் உங்களுக்கு மிஸ்டு கால் கொடுக்கிறேன்,  அந்த மூவி செம ஃபோர்...  உஙக வைப் ஒர்க் பண்ணுறாங்களா ? உங்க டாட்டர் என்ன ஸ்டாண்டார்ட் படிக்கிறா ? - இது போல் தான் பேசுகிறோம், இதை தமிழில் பேசுவதாகவும் கூறிக் கொள்கிறோம்.

*****

முந்தைய நாள் பேருந்தினுள் பக்கத்து இறுக்கையில் முதலாம் வகுப்பு படிக்கும் தமிழ் குழந்தை அவளுடைய அம்மாவிடம் "அம்மா பெட் (Bet) - டுக்கு தமிழில் என்னம்மா ?" என்று கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தாள், நான் பெட் - டுக்கு என்ன தமிழ் சொல் என்று சிந்திக்கத் துவங்கியதும் அந்த குழந்தையின் அம்மா என்ன சொல்லி கொடுத்திருப்பார் என்று கவனிக்கவும் இல்லை, ஆனால் குழந்தையின் அம்மா சரியான சொல்லை எடுத்துச் சொல்லவில்லை என்று தான் தெரிந்தது, நானும் சிந்தித்து சிந்துத்துப் பார்த்து 'நாம பெட் கட்றது, பெட் வச்சிக்குவோம் வரியா ? ன்னு தானே போட்டிப் போடுவோம் ? வேற என்ன சொல் தமிழில் இருக்கும் ? என்றெல்லாம் மிகுந்த நேரம் சிந்தித்து 'பந்தயம்' தான் சரியானச் சொல் என்று முடிவு செய்தேன், அவர்களிடம் சொல்லவும் தயக்கம், நாம பேசிவருவதை இவர் ஏன் காது கொடுத்துக் கேட்டார் என்று நினைப்பார்களோ என்று பேசாமல் இருந்துவிட்டேன்,  சிறுவயதில் 'வாடா பந்தயம் வச்சிக்கலாமா ?' வெகு இயல்பாக புழங்கிய ஒருச் சொல் கால ஓட்டத்தில் மறக்கடிக்கப்பட்டு பெட் அதில் படுக்கைப் போட்டுக் கொண்டதை நினைத்துப் பார்க்க ஊடகங்கள் செய்துவரும் தமிழ் துரோகமே காரணம் என்று நினைக்கத் தோன்றியது. செய்தி ஊடகங்களும், அரசியல்வாதிகளும், திரைப்படத் துறையினரும் தமிழை வைத்து தான் பிழைப்பு நடத்துகிறார்கள், அவர்கள் வயிற்றுப் பிழைப்பான தமிழை அவர்களே அழிக்கிறார்கள் என்பது எவ்வளவு கொடுமையான நடைமுறையாக இருக்கிறது. சில அறிவிலிகள் மொழிகள் என்பவை தொடர்புக்கானவை என்ற புல்லரிக்கும் விளக்கங்களையெல்லாம் கொடுக்கும் பொழுது உணவு என்பது சாப்பிட மட்டும் தான் அதில் வேறு சிந்தனைகள் தேவை இல்லை என்று கண்டதையும் ஏன் நீ உண்பது இல்லை ? வெந்ததையும் வேகாததையும் கூட திண்ணலாமே என்றெல்லாம் கேட்கத் தோன்றும், 

*****

முன்பு ஒரு நாள் நண்பர் ஒருவர் தமிழ் குறித்த சற்று சூடான உரையாடலில் நீங்க தமிழ் தமிழ் என்று பேசுகிறீர்கள், நான் கேட்பதற்கு பதில் சொல்லுங்க என்று சொல்லிவிட்டு 'ரிஸ்க் எடுக்காதீங்க ? ' என்பதற்கு தமிழில் எப்படிச் சொல்லுவிங்க என்று மடக்கினார், நான் 'முயற்சி செய்யாதிங்க ?' என்று சொன்னேன், அப்ப 'ட்ரை பண்ணாதிங்க' என்பதற்கு என்னச் சொல்லுவிங்க என்று மறு கேள்வி கேட்டார். அந்த நேரத்தில் மாற்றுச் சொல் தேடி சிந்தனைகள் அலைந்தது தவிர்த்து உருப்படியாக ஒன்றும் அவருக்கு மாற்றாகச் சொல்லத் தோன்றவில்லை, அவரும் நக்கலாக சிரித்துக் கொண்டார், பிறகு யோசித்துப் பார்க்க, ரிஸ்க் என்பது செய்யலாமா வேண்டாமா என்கிற கேள்வியை கொண்ட ஒரு சொல், இதற்கு சரியான தமிழ் சொல் சொல்ல வேண்டுமென்றால் ரிஸ்க் எடுக்காதிங்க என்பதற்கு மாறாக  'துணியாதீர்கள்' என்று தான்  சொல்ல வேண்டும்,  துணிவு என்பது வெறும் துணிச்சல் சார்நத சொல் மட்டுமே இல்லை, அதில் செய்யலாமா வேண்டாமா என்கிற எண்ணமும் சேர்ந்த சொல்லாகவும் பயன்பாடுடையது. நம்மாளுங்க இன்னும் பயன் என்ற எளியச் சொல் இருக்க 'உபயோகம்' என்றெல்லாம் எழுதுகிறார்கள் தெரியுமா ?

செந்தமிழில் பேச வேண்டும் என்பது தேவை இல்லை, ஆனால் பேசுவது ஆங்கிலம் உள்ளிட்ட வேற்றுமொழிகள் கலந்த கொடுந்தமிழாக இல்லாமல் தூய தமிழாக இருந்தால் போதும், வலைப்பதிவில் எழுதும் பொழுது முடிந்த வரை தமிழில் எழுதுகிறோம், அதையே நாம் பேச்சிலும் செயல்படுத்தினால் நம்மைப் பார்த்து தமிழில் கலப்பின்றி பேசுவது தாழ்வானது இல்லை என்று நம்பத் துவங்குவார்கள். சிங்கையில் முகவை இராம் என்கிற நண்பர் ஒருவர் யாரு என்ன நினைப்பாங்க என்றெல்லாம் கவலை படமாட்டார், நல்ல தெளிவான தமிழில் பேசுவார். அவரைப் பார்த்து நகைத்தவர்கள் இல்லை, பாராட்டியவர்களே மிகுதி.

25 மே, 2012

மேம்பட்டுவரும் திருநங்கைகள் சமூகம் !


ஆனந்த விகடன் வலைபாயுதே பகுதியில் எனது வலைப்பதிவு பற்றி குறிப்பிட்டு இருந்த போது திருநங்கைகள் குறித்து நான் எழுதி இருந்ததன் வரிகள் இடம் பெற்றிருந்தன.  

"உலக முன்மாதிரியாக தமிழக கிறிஸ்தவர்கள் திருநங்கை ஒருவரை ஆயராக ஆக்கியுள்ளனர், திருநங்கைகளை அர்சகராக ஆக்குவதால் ஏற்கனவே கூந்தல் உள்ளவர்கள் என்ற முறையில் அப்பணிக்கு கொண்டை போட்டுக் கொள்வது எளிது மேலும் ஆண் அர்சகரைப் போன்று மேலாடை இல்லாத அரைமனிதனாக வலம் வந்து அருவெறுப்பை ஏற்படுத்தாமல் இருப்பார்கள், மூன்று நாள் வீட்டு விலக்கு மாதவிலக்கெல்லஅம் அவர்களுக்கு கிடையாது என்பதால் இந்துமதம் சொல்லும் தூய்மைக் கேடும் ஏற்படாது, பார்பன அர்சகர்கள் இதனை எதிர்த்தாலும் பிற கோவில்களில் பூசாரிகளாக அவர்களை பணிக்கலாம், எந்த ஒரு ஆகமவிதிகளிலும் திருநங்கை அர்சகராகும் / பூசாரி ஆவதை தடுக்கும் கட்டுப்பாடுகள் கிடையாது என்றே நினைக்கிறேன். நாயகிபாவம் என்ற ஒரு வழிபாட்டு வழக்கம் இந்து மத வழக்கங்களில் ஆண் கடவுளை கணவனாக நினைத்து உருகும் முக்தி தேடும் வழிகள் இருக்கிறதாம், அவற்றைச் செய்ய சரியானவர்கள் திருநங்கைகள் தான்"

கூத்தாண்டவர் திருவிழாவில் கூடும் திருநங்கைகளை கேலிப் பொருளாக பார்த்துவரவும், அவர்களிடம் சில்மிசம் செய்யவும் செல்வோர்கள் அதிகம். இத்தகைய அவமான அங்கீகாரம் தவிர இந்து மதம் சார்பில் திருநங்கைகளுக்கு பெரிய அங்கீகாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

திருநங்கைகள் குறித்த பல்வேறு தரப்பினர்கள் கூறும் கருத்துகள் கவனமாக படிக்கப்படுகிறது என்பதைத்தான் ஆனந்தவிகடனில் அந்த தகவல் இடம் பெற்றிருந்த போது தெரியவந்தது. பாதிரியார் ஆன திருநங்கை யார் அவர் பெயர் என்ன, எந்த சூழலில் அவருக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது  போன்ற தகவல்கள் அந்தப் பதிவை  எழுதும் போது எனக்கு கிடைக்கவில்லை, நேற்று விஜய் தொலைகாட்சியில் 'குற்றமும் பின்னனியும்' என்ற நிகழ்சியின் இரண்டாம் பாகமாக பாதிரியார் ஆன திருநங்கையைப் பற்றீய தகவல்களை, அவரது பேட்டியுடன் கொடுத்தனர், இவற்றைக் காட்டவேண்டிய நிகழ்ச்சியின் பெயர் சற்று உறுத்தல் என்பது தவிர்த்து, அது பலரும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி என்பதால் அதில் அந்தத் தகவல் வந்திருந்தது பலரை அடைந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 'பாரதி ராஜா' என்ற பெயரில் ஆண் குழந்தையாகப் பிறந்து வழக்கம் போல் திருநங்கைகளுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளால் தன்னை ஒரு பெண்ணாக நினைக்கத் துவங்கி பல்வேறு சிக்கல்கள், குடும்பத்தினரின் வெறுப்பு, கோபம் ஆகியவற்றை எதிர்நோக்கத் திறன் இல்லாமல் சென்னைக்கு வந்து பிற திருநங்கைகளுடன் சேர்ந்து கடை கேட்கும் (கை தட்டி பிச்சை எடுத்தல்) செய்து வந்தாராம், அதில் ஏற்பட்ட அவமானங்கள் 'எவ்வளவு பெரிய வசதியான குடும்பத்தில் பிறந்த எனக்கு இவ்வளவு அவமானமா ?' கூனிக் குறுகி தத்தளிக்கும் போது, சமூக ஆர்வலர் மூலமாக ஒரு கன்னியாஸ்திரி அறிமுகமாக அவர் வழியாக கிறிஸ்துவ சமய்ப் படிப்பைப் மதுரையில் தங்கிப் படித்துவிட்டு. அவரின் பரிந்துரையின் மூலமாக செங்கல்பட்டு கிறிஸ்துவ சமய ஆயர் என்னும் பதவியைப் பெற்று இறைப் பணி செய்துவருகிறார்.

நேற்று அவர் பேட்டியைப் பார்க்கும் போது அவருடைய கண்ணில் அதன் பெருமிதம் தெரிந்தது, மறைவாக பாலியல் தொழில் அதில் அடி உதை, பொய் வழக்கு, பாலியல் நோய், கடன், கொலைகள் என்பதாகத்தான் அவரைப் போன்ற மற்ற திருநங்கைகளின் வாழ்க்கை சென்று கொண்டு இருக்கிறது என்பதைப் நினைக்க அவரது பெருமிதத்தின் மீதான பொருள் ஆழமாக விளங்கியது.

பாரதி பாதிரியாக இருக்கும் பகுதிகளில் வசிப்பவர்கள் பாரதியை ஒரு பெண்ணாகவும், மதபோதகராகவும் பார்த்து மிகவும் மரியாதையாகவே நடத்துகின்றனர் என்பதையும் நிகழ்ச்சியில் காட்டினார்கள், 'என் தம்பி தனது திருமணத்திற்கு வரக்கூடாது என்று கூறினான், ஆனால் இன்றோ என் தலைமையில் நிறைய திருமணங்கள் நடக்கின்றன, இது எனக்கும் திருநங்கைகள் சமுகத்திற்கும் பெருமையானது' என்று கூறினார் பாரதி.

ஆண் உடல் வலிவும் பெண் மனமும் இருப்பதால் அவர்களால் பண்பாட்டு கலைகளை நல்ல முறையில் வளர்க்க முடியும். ஆனால் சமூகம் தான் அவர்களை பாலியல் தொழிலில் தள்ளிவிட்டு தொடர்ந்து அவமானமும் படுத்துகிறது. ஆண் பெண் செய்யக் கூடிய அனைத்து வேலைகளையும் இவர்களால் செய்ய முடியும், தலைமை ஏற்கவும் முடியும். அவர்களை செயல்படவிடாமல் முடக்கி வைத்திருப்பது அவர்களுடைய பெற்றோர்களும், பின்னர் சமூகமும் தான். பாரதி மூலமாக திருநங்கைகளுக்கு தன்னம்பிக்கையும், பொதுமக்களுக்கு மாற்றுப் பார்வையும், அவர்களை சமூகத்தின் அங்கமாக ஏற்றுக் கொள்ளும் மனநிலையும் வாய்க்கும் என்றே தெரிகிறது, இது ஒரு நல்ல முன்னோட்டம். ஆனால் இதையும் மதப் பிரச்சாரத்திற்கு திருநங்கையை வளைத்த கிறிஸ்துவம் என்று தூற்றி அவர்களை இழிவுப்படுத்தத் தான் முயல்வர். ஏனென்றால் மதவெறி மனிதாபிமானங்களை என்றுமே மதித்தது இல்லை, இதைவீடக் கொடுமையானது இஸ்லாமிய சமூகம் திருநங்கைகள் முற்றிலுமாகவே நிராகரிக்கிறார்கள், வெறும் நம்பிக்கை தான் என்றாலும் ஆதாம் ஏவாள் இல்லாமல் தனித்து உருவாக்கப்பட்டது அவனுள் சரிபாதி பெண்மை இருந்தது, திருநங்கையாக இருந்தான் என்றாவது ஒப்புக் கொண்டால் திருநங்கைகள் பற்றிய தெளிவாவது கிடைக்கும். சிந்திப்பவர்களுக்கு இதில் நல் அத்தாட்சி இருக்கிறது என்று கூறி இதை நான் மத அரசியலாகத் தொடரவிரும்பவில்லை, 

தகவலின் சாரம் திருநங்கைகளை நீங்கள் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை அவர்களை மனிதனாக மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்பதே, அவர்கள் முன்னேற்றம் தொடர்வது சமூகம் தன்னை மாற்றிக் கொண்டு இருப்பதன் அடையாளமாகத் தெரிகிறது. ஆஷா பாரதி, நர்தகி நட்ராஜ், லிவிங்க் ஸ்மைல் வித்யா, சிஙகப்பூரில் ஒரு குமார், இப்படிக்கு ரோஸ் என்று திருநங்கைகள் பிரபலங்களாக வளர்ந்துவருகிறார்கள், அவர்களுக்கு மகுடம் வைத்தது போல் பாதிரியாராக பாரதி. தமிழ் சமூகம் நாட்டிலேயே முன்னோடியாக திருநங்கைகளுக்கு வழி அமைத்துக் கொடுத்திருப்பதால் பண்பாட்டு வளர்ச்சியில் நாம் முன்னோடி என்பது நமக்கு பெருமையானது. நல்வாழ்த்துகள்


17 மே, 2012

காணாமல் போனவை - கோவணம் !


பண்பாடு கலாச்சார மேன்மை என்கிற சமூக பூச்சுகளில் காணமல் போவதில் முதன்மையானது பாரம்பரிய உடைகள் தான். விலையும் பொழிவும் மலைக்க வைக்கவில்லை என்றால் பட்டுப் புடவையும் பட்டு வேட்டியும் கூட தமிழர்களிடம் இருந்து காணாமல் போய் இருக்கும், ஏதாவது நிகழ்ச்சி அல்லது கோவிலுக்கு செல்லுவதற்கு என்ற அளவில் அவைகள் இன்றும் நம்மிடையே இருப்பது ஆறுதல். உடைகள் அழகுக்காக ? வசதிக்கா ? என்பதைக் காட்டிலும் தோற்றத்திற்காகவும் நன்மதிப்பிற்காகவும் என்கிற பரிணாமங்களாக அந்நிய ஆடைகளையே அணிந்துவருகிறோம், வெயில் நாடுகளில் வேட்டியில் இருக்கும் காற்றோட்டத்தை நீளக் கால்ச் சட்டை (Pant) தந்துவிடாது. இருந்தாலும் சபை நாகரீகம் என்பதாக வேட்டிகள் புறக்கணிக்கப்படுகிறது, தமிழகத்திலும் வேட்டிக் கட்டி அலுவலகம் செல்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அரசு அலுவலகங்களில் விதித்தடையாக இல்லாவிட்டாலும் வெட்டி அணிந்து செல்வதை யாரும் வரவேற்பது கிடையாது, நான் துவக்கப் பள்ளியில் படித்த காலங்களில் ஆசிரியர்கள் வேட்டி கட்டிக் கொண்டு வருவார்கள், அரசு அலுவலகம் செல்பவர்களில் கனிசமானவர்கள் வேட்டி அணிந்தவர்களாக இருந்தனர். ரொம்பவும் எளிமையான உடை, அதை கை விட்டுவிட்டது பண்பாட்டுக் கூறுகளுக்கு நட்டம் தான். வேட்டியே காணாமல் போன பிறகு கோவணம் ?

வேட்டிக்கு முன்பே காணாமல் போனது கோவணம், வேட்டி அணிந்தவர்கள் பரவலாக கோடு போட்ட உள்ளாடைக்கு (ராமராஜன் டைப் அண்டர்வேருக்கு) மாறி உள்ளாடைகளிலும் நாகரீகம் என்பது நுழைந்து கொள்ள கோவணம் கட்டிக் கொள்வது முற்றிலுமாக மறைந்து போனது, கோவணம் என்பதே இல்லாதவர்களின் ஒற்றை உடை என்ற அளவில் பார்க்கப்பட்டது, எங்காவது வயலில் வேலை செய்பவர்கள், விறகு வெட்டுபவர்கள், சாக்கடைக்குள் இறங்குபவர்கள் தவிர்த்து கோவணம் அணிந்திருப்பவர்கள் எண்ணிக்கை விரைவாக குறைந்தது. 

இடுப்பு சுற்றளவு அளவு பற்றிக் கவலைப்படாமல் இரண்டு முழம் துண்டுத்துணியை இறுக்கமாகவோ, தளர்வாகவோ வசதிக்கேற்ப, அரைஞான் (அரை நாண் - பாதி உடலில் பூணும் கயிறு) கயிற்றில் கட்டிக் கொள்ளும் ஒரு உள்ளாடை என்ற அளவில் இன்றைய நவீன உள்ளாடைகளில் இருக்கும் வசதிகளுக்கு குறைவில்லாமல் மேலாகவே இருந்தது கோவணம். கோவணம் கட்டவதற்கு என்று சுற்றிக் கட்டிக் கொள்ளும் அரைஞான் கயிற்றை மட்டும் இன்றும் பலர் கட்டிக் கொள்கிறார்கள், வெறும் அரைஞான் கயிற்றால் என்ன பயன் என்று தெரியவில்லை, இடுப்பைச் சுற்றிக் கட்டப்படும் கருப்பு அல்லது சிவப்பு நிற பார்பனர் அல்லாதவர்களின் இடுப்புப் பூணூல் போன்று வெறும் வழக்கமாகக் (சம்பிரதாயம்) கட்டப்படுகிறது தமிழக தமிழ் (இந்து) ஆண்களின் அரைஞான் கயிறுகள். சாவியை கட்டுவதற்குக் கூட பயனில்லாத அளவில் அரைஞான் கயிறுகளின் இன்றைய தேவை என்ன வென்றும் தெரியவில்லை.

கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் ஆண்களின் எளிமையான உள்ளாடையாக இருந்தது கோவணம், தலையில் முண்டாசும், உடலில் சிறிய கோவணம் கட்டிக் கொண்டு வேலை செய்பவர்கள், வேலை முடிந்ததும் குளத்தில் இறங்கி குளித்துவிட்டு இடுப்பு மறைக்க குளத்தில் நின்று கோவணத்தை அவிழ்த்து அலசி பிழிந்து தோளில் போட்டுக் கொண்டு துண்டை நனைத்து பிழிந்து உடலை துவட்டிப் பின்னர், அதனை சுற்றிக் கொண்டு மேலே வந்து கோவணத்தை அங்கேயே காய வைத்து கட்டிக் கொண்டு வீடு திரும்புவார்கள். வெறும் கோவணத்தை அணிந்திருப்பதை அறுவெறுப்பாக பார்க்காத சமூகமாக, அதை காம உணர்வுத் தூண்டுதலாகப் பார்க்காத சமூகமாக, பால் கொடுக்கும் தாய்மார்களிடம் கவர்ச்சி தேடாத சமூகமாகத் தான் தமிழ் சமூகம் இருந்தது, இவற்றில் நாகரீகம் என்பது புக இன்றைய மனச் சீர்கேடுகளும் புகுந்துள்ளதை மறுக்கலாகாது.


இன்றைக்கு ஏதோ ஒரு படத்தில் முன்னனி நடிகர் ஒருவர் கோவணம் கட்டிக் கொண்டு நடித்தால் அது புரட்சி என்ற அளவில் அந்தப் பெருமை நடிகருக்கு கிடைக்கும் அளவுக்கு கோவணம் இழுக்காப்பட்டுள்ளது. இன்றைக்கு ஆண்கள் அணியும் ஜட்டிக்கும் குழந்தைகளுக்கு போட்டுவிடும் டயப்பருக்கும் ஈரம் உறிஞ்சுதல் என்பது தவிர்த்து பெரிய வேறுபாடு இல்லை. கோவணத்தின் பயன் என்பதில் அதன் எளிமை, பராமரிப்பு என்பது தவிர்த்துப் பார்த்தாலும் ஆண்களுக்கு மிகவும் ஏற்ற உள்ளாடை என்றே சொல்லப்படுகிறது, குறிப்பாக விரைகள் மிகவும் குளிர்ந்து போகமல் உடல் சூட்டுடன் நெருக்கமாக வைத்திருப்பதற்கு கோவணம் பயனளிக்கிறதாம், இதன் மூலம் விந்தணுக்களும் உற்பத்தியும் பாதிக்கப்படாமல் இருக்குமாம். உடல் சூட்டை விட விரைகள் 2 டிகிரி குறைவாக இருப்பதால் விந்தணுக்கேற்ற வெப்பம் உருவாக்கப்படுகிறது அதனால் தான் மனித விரைகள் உடலுக்கு வெளிப்புறமாக இருப்பதாக சொல்கிறார்கள். ஆனாலும் அவை வெளிப்புறமாக இருப்பதால் குளிர்ந்தும் போகும் என்பதால் ஓரள உடலோடு சேர்த்து கட்டி இருந்தால் அதே 2 டிகிரி குறைவான சமநிலை காக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது, இவையெல்லாம் சொல்லக் கேள்விப்பட்டவையே இதற்கு ஆதாரம் என்னிடம் கேட்காதீர்கள். எப்படிப் பார்த்தாலும் கோவணம் பயனற்றது, நகரீகமற்றது என்று சொல்ல ஒன்றும் இல்லை, அவை உள்ளே அணியப்படும் ஆடை என்பதால் ஒருவர் தாம் கோவணம் தான் கட்டி இருக்கிறேன் என்று வெளிப்படுத்த வேண்டியதற்கான தேவையும் இல்லை. பேண்ட் அணிபவர்கள் உள்ளாடையாக கோவணம் அணிந்தால் அவசரத்திற்கு சிறுநீர் கழிக்க அவிழ்க்க கொஞ்சம் மெனக்கட வேண்டி இருக்கும் என்பதை ஒப்புக் கொள்கிறேன். மற்றவர்கள் பார்த்துவிடுவார்களே என்பது தவிர்த்து அதில் வேறு நேரடியான பிற சங்கடங்கள் எதுவும் இல்லை.

*****

ஒரு பக்கம் நாம் கோவணத்தை புறக்கணித்தாலும் ஜப்பானிய பாரம்பரிய உள்ளாடை என்ற அளவில் அவர்களிடையே கோவணங்கள் கட்டும் வழக்கம் இன்றும் உள்ளது, தமிழர்களுக்கும், ஜப்பானியர்களுக்கும் மொழி பண்பாட்டு தொடர்புகளில் கோவணமும் ஒன்று, அவர்களுடைய திருவிழாக்களில் கோவணம் அணிந்து கலந்து கொள்ளும் ஆண்கள் மிகுதி, தவிர சுமோ வீரர்கள் கோவணங்களைத் தான் அணிந்திருப்பார்கள், அவர்களின் கோவணம் தமிழர்களின் கோவணங்களைவிட நீளமான துணியால் ஆனது காரணம் அவர்கள் அரை ஞான் கயிறு கட்டிக் கொள்வதில்லை எனவே வேட்டி அளவுக்கு நீளமான துணியை பிரி (திரித்து) அவற்றை இடுப்பில் சுற்றி அதையே கோவணமாக முடிந்திருப்பார்கள். ஜப்பானிய கோமணத்திற்கு அவர்கள் வழங்கி வரும் பெயர் Fundhosi ((இதில் இருக்கும் தோஷி, வேட்டி வேஷ்டி ஆனது போல், வேட்டியின் ஒரு திரிபு என்றே நினைக்கிறேன்), தற்போதைய ஜப்பானிய கோவணங்கள் நாடா வைத்தும் விற்பனைக்கு கிடைக்கிறது.

For traditional Japanese men, fundoshi is THE underwear of choice at summer! We'll reveal you a bit about the currently popular traditional underpants movement! 
Psst, fashion watch, fundoshi have become the hot shit in Japan recently! No wonder, since this Japanese tied underwear for men is being rediscovered for its comfort. Generally, we would associate fundoshi with traditional pants or the formal attire for Shinto festival. However nowadays, there are all kinds of fun variations for men and women — and its sales are soaring! PingMag will introduce to you a fine selection that still leaves modern-day Japanese in awe.
Written by Ayana
Translated by Natsumi Yamane




Heritage
During the Sengoku period, fundoshi used to be a piece of military clothing only worn by the samurai class, but since the Edo period, fundoshi also became widespread among commoners and various historical sources confirm that it established itself as the standard male tied underwear. With the wave of Westernisation after World War II, however, fundoshi gradually went out of fashion to be taken over by western underwear. 
http://komanamkaupinam.blogspot.com/2008/07/fwd-fundoshi-for-blog.html
*****
இன்றைக்கும் கோவணத்தின் பயன்பாடு என்ற அளவில் மலையாளிகளின் கேரள ஆயுர்வேத உடம்பு பிடிப்புக்கு (மசாஜ்) செல்பவர்களுக்கு கோவணம் தான் கட்டிவிடுவார்கள், இரண்டு முழம் 20 செமி அகலத்தில் ஆன வெள்ளைத் துணியின் நிள வாக்கில் இருபுறமும் ஒரு செமி அளவுக்கு மறு முனைக்கு சற்று கீழ் வரை கிழித்து அதை கோவணமாக கட்டிவிடுவார்கள்.


பழனி மலை முருகனை இன்னும் Jocky ஜட்டிக்கு மாற்றாத அளவில் நாம் கோவணத்தை காப்பாற்றி வருகிறோம் :)

இணைப்புகள்:
http://komanamkaupinam.blogspot.com/

26 ஏப்ரல், 2012

கஞ்சி (Congee) !


நேற்று இரவு எங்கள் வீட்டு அருகே இருக்கும் பெருங்கடை வளாகத்திற்கு இரவு உணவிற்காகச் சென்றோம், சிங்கப்பூர் கோமளாஸ் அங்கே புதிதாகக் கிளைத் (திறந்)திருந்தார்கள். சிங்கப்பூரில் Food Court எனப்படும் உணவு கடைத் தொகுதிகள் மிகுதி. நாம் தேடும் உணவு இல்லா விட்டாலும், இருப்பதை உண்ணலாம் என்ற அளவில் உணவுக் கடைகளுக்கு சிங்கையில் பஞ்சம் என்பதே இல்லை, இரவு பகல் என்னேரமும் திறந்திருக்கும் உணவுக் கடைகள் ஏராளம் இங்கு உண்டு, சென்னைப் போன்ற பெரிய நகரங்களில் இரவு 11 மணிக்கு மேல் கையேந்தி தள்ளுவண்டிக் கடைகள் தவிர்த்து அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கும் சென்ற முறை சென்னை சென்ற போது நான் உணர்ந்தது அது. சிங்கப்பூரார்கள் வெளி நாட்டிற்குச் சென்றால் அவர்கள் நினைத்துப் பார்த்து ஏங்குவதென்பது சிங்கப்பூர் உணவு வகைகள் குறித்துதான், அந்த அளவுக்கு ஏராளமான உணவுக்கடைகளும் அவற்றில் உணவு வகைகளும் அடக்கம். ஒரு உணவுக் கடைத் தொகுதியில் 10க்கும் மேற்பட்ட உணவு கடைகள் இருக்கும், அவற்றின் ஒவ்வொன்றிலும் ஏராளமான வகைகள் இருக்கும், நாள் தோறும் இதையே சாப்பிட வேண்டுமா ? என்கிற கேள்வியே இல்லாமல் விருப்பம் போல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவு வகையை ரசித்து சாப்பிடுவர், இந்தியர்கள் ஒரு நாள் பேசமால் இருந்தால் செத்துப் போய்விடுவார்கள், சீனர்கள் ஒரு நாள் சாப்பிடாமல் இருந்தால் செத்துப் போய்விடுவார்கள், எனவே சீனர்கள் நிறைந்த சிங்கப்பூரில் ஆசியாவின் அனைத்து வகையான உணவுகளும் கிடைக்கும், சைவமோ, அசைவமோ விருப்பம் போல் உண்ணலாம். 

*********

நேற்று சென்ற கோமளாஸ் கடை அருகே ஒரு சீன உணவுக் கடைகளில் 'Congee' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட உணவு அறிப்புப் பலகையில் வகை வகையான Congee களின் படங்கள் போடப்பட்டு இருந்தது, பார்க்க நமது வீடுகளில் செய்யப்படும் கஞ்சிக்கும் அதற்கும் வேறுபாடுகள் என்பது அதனோடு அவர்கள் கலந்து தரும் பொருள்கள் (வேக வைத்தக் கோழித் துண்டு, பன்றி இறைச்சி, நெத்திலி கருவாரு, திருக்கை மீன் சதைத் துண்டுகள், வேக வைத்த வேர்கடலை, வேக வைத்த சர்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் பிஞ்சு சோளம்) போன்றவை தான். நமது தமிழ் நாட்டுக் கஞ்சி நொய் அல்லது குருணை (பொடித்த பச்சை அரிசி) உடன் சேர்த்த உடைத்தப் பச்சைப் பயிறு சேர்த்து கூழுக்கு முன்பான பதத்தில் உப்பு சிறிதளவு இருக்கும். அத்துடன் தேங்காய் துருவல் கலந்து உண்ண தனிச் சுவை. விரைவிலேயே செரிமானம் ஆகிவிடும். காலை உணவுக்கு ஏற்ற எளிமையான உணவாக இருந்தது. இன்றைக்கு அரசியலுக்காக கஞ்சி காய்ச்சு ஊத்துவதாகவும், கஞ்சித் தொட்டித் திறப்பதாகவும் சொல்லி கஞ்சி என்பதே எதோ பஞ்சம் பட்டினியில் இருக்கும் ஏழைகளின் உணவு என்பதாக நினைக்க வைத்துள்ளனர்.

ஆனால் கஞ்சி ஆசியாவின் அனைத்து நாடுகளிலும் காலை உணவில் முதன்மையாகவே இருந்துவருகிறது, அதை ஆங்கிலத்தில் Porridge என்றும் சொல்லுகிறார்கள், பொதுவாக Congee என்று சொன்னாலும் இங்குள்ளவர்களுக்கு விளங்கும், எனவே தான் அறிவிப்பு பலகை மற்றும் உணவுப் பட்டியலில் அவ்வாறே குறிப்பிட்டும் உள்ளனர். இந்த சொல் எப்படி இங்கு பரவியது, நேற்று நான் பெயர் பலகையில் Congee என்று படித்ததும், 'கஞ்சி' என்ற உணவுச் சொல் ஒரு வேளை தமிழ் தவிர்த்த பிற மொழிச் சொல்லோ என்று நினைக்க வைத்தது.


பிறகு இணையத்தில் தேடிப் பார்க்க கஞ்சி பற்றிய ஏகப் பட்டத் தகவல்கள் கிடைத்தன. 

சங்க இலக்கியங்களில் ஒன்றான பத்துப் பாட்டு தொகுப்பு, அதில் இடம் பெற்றிருக்கும் பட்டினப் பாலைத் தலைப்பில் காவேரியின் சிறப்புச் சொல்லி பின்னர் சோழ நாட்டின் சிறப்பு கீழ் கண்ட பாடலில் இடம் பெற்றுள்ளது

பட்டினப்பாலை
புலிப் பொறி போர் கதவின்
திருத் துஞ்சும் திண்காப்பின்
புகழ் நிலைஇய மொழி வளர
அறம் நிலைஇய அகன் அட்டில்
சோறு வாக்கிய கொழுங் கஞ்சி
யாறு போலப் பரந்து  ஒழுகி
ஏறு பொரச் சேறு ஆகி
தேர் ஓடத் துகள் கெழுமி
நீறு ஆடிய களிறு போல
வேறு பட்ட வினை ஓவத்து
வெண்கோயில் மாசு ஊட்டும். (40-50)


காவிரிப்பூம்பட்டினத்தின் புகழ் நிலைப்பதற்கும், சோழ நாட்டினைப் பற்றிய புகழ் மொழி எங்கும் பரவி வளர்வதற்கும், புலிச்சின்னம் பொறிக்கப்பட்டு, செல்வம் தங்குகின்ற இரட்டைக் கதவுகளைக் கொண்டதாக வலிமையான பாதுகாவலோடு அகன்ற அட்டிற் சாலைகள் அமைந்திருந்தன. இவ்வுணவுச் சாலைகளில் சோற்றினைச் சமைத்து வடித்த கஞ்சியானது, ஆறு போலப் பரந்து காவிரிப்பூம்பட்டனத்துத் தெருக்களில் ஓட, அங்கே காளைகள் ஒன்றொடொன்று சண்டையிட சோற்றுக் கஞ்சி சேறானது- அச்சேற்றின் மீது தேர்கள் ஓட , சேறு புழுதியாகி எங்கும் பரவியது. அப்புழுதி படிந்ததால், பல்வேறு வண்ணங்களால் வேலைப்பாடமைய ஓவியம் தீட்டப்பட்டு வெண்ணிறமாக இருந்த அரண்மனை,  புழுதியினைத் தன் மேல் வாரி இறைத்துக் கொண்ட யானையைப் போல் மாசு படிந்து காட்சியளித்தது.

திருஞானசம்பந்தர் எழுதிய திருமுதுகுன்றம் தேவாரத் திருப்பதிகம் (இரண்டாம் திருமுறை 64வது திருப்பதிகம்) 696 ஆம் பாடலில்

கருகு முடலார் கஞ்சி யுண்டு கடுவேதின்
றுருகு சிந்தை யில்லார்க்கயலா னுறைகோயில்
திருகல் வேய்கள் சிறிதே வளையச் சிறுமந்தி
முருகின் பணைமே லிருந்து நடஞ்செய் முதுகுன்றே.

கரிய உடலினராய், கஞ்சி உண்டு கடுக்காய் தின்று இரக்கமற்ற மனமுடையவராய்த் திரியும் சமண புத்தர்கட்கு அயலானாய் விளங்கும் சிவபிரான் உறையும் கோயில், கோணலை உடைய மூங்கில்கள் சிறிதே வளைந்திருக்கச் சிறிய மந்திகள் அகில் மரங்களின் கிளைகளின் மேல் நின்று நடனம்புரியும் முதுகுன்றமாகும்.

- இதில் ஞானசம்பந்தனின் சமணர்கள் மீதான எள்ளலை / வெறுப்பைப் புறந்தள்ளிவிட்டுப் பார்த்தால் சமணர்களின் முதன்மையான உணவாக கஞ்சி இருந்திருக்கிறது என்று அறிய முடிகிறது.

கஞ்சி என்ற சொல் பழந்தமிழ் காலம் தொட்டே வருவதால் அது தமிழ் சொல் தான். இந்த சொல் இந்திய மொழிகளில் பரவலாக சற்று திரிந்தும் ஆசிய மொழிகளில் 'கஞ்சி' என்ற ஒலிக்கப்படுகிறது.

கஞ்சி பற்றிய தகவல்கள் ஆங்கிலத்தில் விக்கிப் பீடியாவில் தொகுக்கப் பட்டுள்ளது. ஆனால் கஞ்சி என்ற சொல் எந்த மொழிச் சொல் என்று அவர்கள் குறிப்பிடவில்லை, 

Congee is a type of rice porridge popular in many Asian countries. It can be eaten alone or served with a side dish. Names for congee are as varied as the style of its preparation. Despite its many variations, it is always a thick porridge or soup of rice which has usually disintegrated after prolonged cooking in copious water.
To prepare the dish, rice is boiled in large amounts of water until it softens significantly. Congee can be made in a pot or in a rice cooker. Some rice cookers have a "congee" setting, allowing it to be cooked overnight. The type of rice used can be either short or long grain, depending on what is available and regional cultural influences. Culture also often dictates the way congee is cooked and eaten.
In other Asian cultures, it is also called kanji (Tamil/Malayalam/Tulu), pakhal bhat (Oriya), ganji (Kannada/Telugu), juk (Cantonese, Korean), cháo(Vietnamese), deythuk (Tibetan), chok (Thai), kayu (Japanese), lúgaw (Filipino), "Bubur" (Malay) or jaou (Bengali) which is derived directly from the Chinese character zhou (粥, which means gruel in Mandarin). Zhou is also called xifan in some Chinese provinces.

காய்ச்சு என்று வினைச் சொல்லின் பயன்பாட்டுத் தொடரின் பெயர் சொல் திரிபாக (பஞ்சாக - மென்மையாக, கூழாக காய்ச்சுதல்) கஞ்சி என்று சொல் வந்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.

மேலே உள்ள அறிவிப்புகள் போல் தமிழகத்தின் உணவு விடுதிகளில் இங்கு கஞ்சி கிடைக்கும் என்று எழுதுவார்களா ? மாட்டார்கள், கஞ்சி என்பது பிச்சைக்காரர் மற்றும் ஏழைகளுக்கான உணவு என்கிற தவறான எண்ணம், கஞ்சி மிகவும் எளிமையான உணவு, விரைவில் செரிக்கக் கூடிய உணவு என்பதே மெய்.

நாம் கைவிட்ட காலைக் கஞ்சி உணவை ஆசியாவின் பெரும்பாலன பகுதிகளில் காலை உணவாகக் கொள்கிறார்கள். நமக்குத்தான் கஞ்சி என்பது ஏழைகளின் உணவு என்று ஒதுக்கி வைக்கிறோம், உடல் நிலையைப் பொறுத்து 60 வயதுக்கு மேல் அது தான் நமது அன்றாட உணவாகும் என்று தெரியாமலேயே.

இணைப்புகள் :


13 ஏப்ரல், 2012

* தமிழ் புத்தாண்டு மீசை மயிரா ?


சில இஸ்லாமிய தளங்களில் மாற்று மத அன்பர்களுக்கு வாழ்த்து சொல்லலாமா ? கூடாதென்றெல்லாம் கேள்வி கேட்டு பதில் சொல்லி, சொல்லக் கூடாது மீறிச் சொன்னால் மத நம்பிக்கைக்கு எதிரானது என்றெல்லாம் சொல்கிறார்கள், என்று முன்பு சுட்டிகளோடு எழுதி இருக்கிறேன். இப்ப அதே நிலைமை தமிழ் புத்தாண்டிற்கும் ஏற்பட்டிருப்பதை இங்குச் சொல்கிறேன்.

ஆன்றோர் சான்றோர் எது தமிழ் புத்தாண்டு என்று சொன்னார்கள், கொண்டாடினார்கள் என்கிற ஆராய்ச்சிக்குப் போகவிரும்பவில்லை, அது பற்றி ஏற்கனவே திரு இராமகி ஐயா மற்றும் கண்ணபிரான் ரவிசங்கர் (கே ஆர் எஸ்) எழுதியுள்ளனர், நான் எனது தமிழ் புத்தாண்டை திருவள்ளுர் ஆண்டின் தைத் திங்களில் மாற்றிக் கொண்டு நான்கு ஆண்டுகள் ஆயிற்று, அதன் பிறகு சித்திரை திங்கள் ஒன்றாம் தேதியை எப்போதும் வந்து போகும் ஒரு நாளாகத்தான் பார்க்கிறேன், இதற்குக் காரணம் கருணாநிதி தை 1 ஐ தமிழ் புத்தாண்டாக அறிவித்தார் என்பதற்கு அல்ல, இந்த தமிழ் புத்தாண்டு நாள் மாற்றம் ஏற்கனவே 71 ஆண்டுகளுக்கு முன்பே தனித் தமிழ் ஆர்வலர்களால் பரிந்துரைக்கப்பட்டவையே, கருணாநிதி ஆட்சி ஆளுமைகளில் இருந்ததால் நாளைய வரலாறு என் பேர் சொல்லும் என்பதாக சென்ற ஆட்சியில் மாற்றினார், ஆனால் இதை அவர் முன்பு எப்போதோ செய்திருக்க வேண்டியது. தனித்தமிழ் ஆர்வலர்கள் என்றால் யாரு ? அவர்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்போர் கே.ஆர்.எஸ் இடுகையைப் படிக்கவும்.
(இதில் யாரும் இறை மறுப்பாளர்கள் இல்லை)

என்னைப் பொருத்த அளவில் 100 ஆண்டு காலக் கோரிக்கைகளுக்குப் பிறகு சென்ற சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் செம்மொழி என்பதை மைய அரசு அறிவித்தது, அவ்வாறு அறிவிக்காத முன்பு தமிழ் சொம்மொழி வரையறைக்குள் வரவில்லை அல்லது தகுதி இல்லாமல் இருந்தது என்கிற கூற்று இருந்தால் அதில் எள்முனை அளவும் அறிவார்ந்த சிந்தனைகள் இல்லை என்பது போல் தான். கருணாநிதி அறிவிக்காத முன்பு சித்திரை 1ல் தான் புத்தாண்டு இருந்தது தைக்கு பொங்கல் வைப்பதைத் தவிர்த்து வேறெந்த சிறப்பும் இல்லை என்பது போன்ற கூற்றும். தமிழுக்கு செம்மொழிக்கான அனைத்து தகுதி இருந்தும் செம்மொழியாக அறிவிக்க மைய அரசைக் கெஞ்சியது போன்று தை 1 க்கு தமிழ் புத்தாண்டை மாற்றக் காரணங்கள் ஏற்கனவே இருந்தது, அதற்காகவே தமிழார்வளர்கள் காத்திருந்ததும் உண்மையே. தை 1 ஐ தமிழ் புத்தாண்டாக மாற்றிக் கொண்டால் தமிழ் புத்தாண்டை தமிழர்கள் மதச் சார்பற்று கொண்டாடலாம் என்கிற பரிந்துரைகளும் இருந்தது,  சித்திரை 1ஐ புத்தாண்டாகக் கொண்டாடும் வழக்கம் தமிழ் இந்து பண்டிகையைப் போன்று வடை பாயசத்தோடு படையல் மற்றும் அன்று மாலை கோவிலுக்குச் செல்வது என்பதுடன் முடிந்துவிடுகிறது. பிற மொழிப் பேசுபவர்கள் தங்கள் புத்தாண்டுகளை பெரிய அளவாக மதச் சார்பற்று கொண்டாடுவதைப் ஒப்பிட்டுப் பார்க்கையில் நாம் தமிழ் புத்தாண்டு என்று சித்திரை 1ல் கொண்டாடுவதில் எந்த ஒரு தனிச் சிறப்பும் கிடையாது. சித்திரை 1 என்பது ஆடி அமாவாசை, ஆவணி அவிட்டம், வைகாசி விசு, ஆடிப் பூரம், மாசி மகம், தைப் பூசம் போல் வந்து போகும் வெகு சாதாரண ஒரு இந்துப் பண்டிகை என்ற அளவிலேயே மொழிச் சார்ந்த தனி அடையாளத்தைச் சிதைத்து சுருக்கி இருக்கிறார்கள்.

நாம விருப்பப்படி வைத்துக் கொள்ள தமிழ் புத்தாண்டின் தேதி என்ன மீசையா ? என்ற கேள்வியை சித்திரை 1 ஆம் தேதியை புத்தாண்டாகக் கொண்டாடுபவர்கள் கேட்கிறார்கள், காலத்திற்கும் எவனோ இழித்துச் சொன்ன தீண்டத்தகாதவன் என்கிற இழிச் சொல்லை சுமக்க மறுப்பது இந்த மீசை வரையறைக்குள் வருமா என்று தெரியவில்லை, இன்றைக்கு அட்சய திருதியை ஒன்றை நுழைத்திருப்பதைப் போன்று என்றோ ஒரு நாள் நுழைக்கப்பட்டதே தமிழ் திங்களின் பெயர்களும் அதன் துவக்கமும், மாற்றிக் கொள்வதால் தமிழ் தனித் தன்மையை மேலும் கூட்டிக் கொள்கிறதே அன்றி அதனால் தமிழுக்கு கெடுதலோ, சிறுமையோ கிடையாது

********

நான் முன்பு பொங்கல் அன்று தை 1 ஐ தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுகிறேன் என்று கூகுள் + ல் அறிவித்திருந்தேன், நியமாகப் பார்த்தால் நாம கொண்டாடாத ரம்ஜானுக்கும், கிறிஸ்மஸ் நாளுக்கும் அந்த நண்பர்களுக்கு வாழ்த்துச் சொல்கிறோம், ஆனால் நான் தை 1 ஐ தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுகிறேன் என்றதும் சபிக்காத குறையாக சிலர் விவாதம் என்றப் பெயரில் கருத்துக்களைக் கூறி இருந்தனர், நான் தெளிவாகச் சொன்னேன், 'நீங்கள் தான் கொண்டாடவில்லை, அதை நான் ஏன் என்றும் கேட்கப் போவதில்லை, உங்களுக்கு விளக்கினாலும் வெளங்காது, ஆனால் கொண்டாடும் என்னை நீங்கள் வாழ்துவதற்கு உங்களுக்கு என்ன தடையோ ?'  இதில் புரியாதது என்றும் ஏதும் உண்டா ? 'வீம்புக்கு கொண்டாடுவதற்கெல்லாம் நாங்கள் வாழ்த்து சொல்ல மாட்டோம்' என்றனர். அப்படிப் பார்த்தால் என்னைப் பொருத்த அளவில் சித்திரை 1 யே அவர்கள் பிடித்துத் தொங்குவதும் எனக்கும் வீம்பாகத்தானே படும். வழக்கத்தை மாற்றுவது தர்மம் இல்லை, ஞாயம் இல்லை என்றெல்லாம் புலம்புகிறார்கள், தமிழ் நாட்டில் ராம நவமி என்று ஒன்று கொண்டாடப்படுகிறது, திருவரங்கம் தவிர்த்து ஏனையை பெருமாள் கோவிலும் ஒரு திங்களுக்கு முன்பு கொண்டாடப்படும் இராம நவமியின் அதே நட்சத்திரத்தில் திருவரங்கத்தில் கொண்டாடப்படுவதில்லை, அதற்குக் காரணம் சொல்கின்றனர், மற்ற கோவில்களில் கொண்டாடுவது 'சந்தர மாஸத்தை அடிப்படையாக கொண்டது, ஶ்ரீரங்கத்தில் ஸூர்ய மாஸத்தை அடிப்படையாகக் கொண்டது' இவற்றையெல்லாம் மாற்றி மாற்றிக் கொண்டாட ஏதோ ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து வைத்திருப்பதிலும் அதன் நடை முறைகளிலும் முரணே இல்லையாம், தமிழ் புத்தாண்டின் திங்களை மாற்றுவது தான் முரணானதாம்.

ஈழப்போரில் வென்றதன் நினைவாக இராஜபக்சே ஒரு வெற்றி நாள் அறிவித்து அதை அனைத்துக் குடிமக்களும் கொண்டாடச் சொல்லி ஒரு வழக்கத்தை ஏற்படுத்தி வைத்திருந்தால் நூற்றாண்டுகளுக்குப் பின் தம் முன்னோர்களை அழித்து வெற்றி கொண்டதன் அடையாளம் தான் அந்த நாள் என்று தெரியாமலேயே இலங்கைத் தமிழர்களும் அதைக் கொண்டாட நேரிடும். நாம தமிழ் புத்தாண்டு என்ற பெயரில் கொண்டாடும் சித்திரைப் புத்தாண்டும் தமிழ் அடையாளங்களை அழிக்க முயன்றதின் அடையாளங்களில் ஒன்று.

என்னதான் சங்கு ஊதினாலும் கேட்காத காதில் கேட்காது.

ஆனாலும் நான் கொண்டாடாவிட்டாலும் கொண்டாடுபவர்களை வாழ்தத் தயங்கும் அளவுக்கு எனக்கு சிறுமதி இல்லை. 

சித்திரையை தமிழ் புத்தாண்டாகவே கொண்டாடும் அனைத்து தமிழ் 'இந்து'க்களுக்கும் நல்வாழ்த்துகள். 

ஹேப்பி டமில் நியூ இயர் டூ யூ !



28 பிப்ரவரி, 2012

'மதராஸ்' உயர்நீதி மன்றம் தந்த அதிர்ச்சி !

நேற்று சன் செய்தியைப் பார்த்து அதிர்ந்தேன், சாலைப் பணியாளர்கள் உடனடியாக வேலைக்கு மீண்டும் அமர்த்தப்பட வேண்டும் என்ற போராட்டத்தில் சென்னை உயர் நீதி மன்றத்தின் முகப்பைப் காட்டினார்கள், முகப்பில் ஆங்கிலத்தில் 'Madras High Court' என்றும் 'தமிழில் மதராஸ் உயர் நீதிமன்றம்' என்றும் எழுதப்பட்டு இருந்தது, முன்பு ஆங்கிலத்தில் மட்டுமே பெயர் இருக்கும், கடந்த ஆட்சியில் செம்மொழி மாநாட்டின் போது சிறிய ஐஸ்கிரீம் கடைகளைக் கூட 'பனிக்குழை நிலையம்' என்று மநாகராட்சியில் (மிரட்டிப் ?) பெயர் மாற்றம் செய்த போது, தமிழக அரசும் பொது மக்களும் அன்றாடம் சென்று வரும் ஒரு பொது நீதிமன்றத்தின் முகப்பில் 'மதராஸ்' என்று விட்டு வைத்திருப்பது வியப்பையே அளிக்கிறது, மதராஸை சென்னை என்று மாற்றி 20 ஆண்டுகளாகிறது, அதற்கான ஆணையும் கூட நீதிமன்றத்தின் பார்வைக்கு வந்திருக்கும் என்றே நினைக்கிறேன், அதிகார மீறல் என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசை விமர்சனம் செய்யத் துணியும் நீதிமன்றங்கள், தங்கள் முகவரி காட்டும் பலகையில் 'மதராசை' விட்டு வைத்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது.

வெள்ளைக்காரர்களின் சட்டதிட்டங்களை நாம் பின்பற்றுகிறோம் என்பதற்காக இன்னும் அவர்கள் வைத்தப் பெயரையே வைத்திருக்க வேண்டும் என்பதற்கான நியாயங்கள் எதுவும் இல்லை வெறும் வரட்டுப் பிடிவாதமே.


கடந்த ஆட்சியில் 'மதராஸ் உயர்நீதி மன்றம்' என்பதை 'சென்னை உயர்நீதி மன்றம்' என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக அரசு ஆணை வெளி இடப்பட்டு இருந்ததாம், ஆனால் இது செயல்படுத்தப்பட்டது போல் தெரியவில்லை, சன் டிவி காரன் தான் பழைய (படத்துடன்) பெயரைக் காட்டுகிறான்னு சரியாகத் தெரியவில்லை. பாரிமுனை, பூக்கடை பக்கம் செல்பவர்கள் பெயர் மாற்றம் நடைபெற்றிருக்கிறதா என்று படம் பிடித்து வந்து உறுதிப் படுத்தினால் நலம், நீதிமன்றம் வளாகம் 'சென்னை உயர்நீதி மன்றம்' என்று பெயர் மாற்றப்படாவிட்டால் கண்டனத்திற்கு உரியது தான், இதற்கு ஆட்சியாளர்களும் நீதிமன்ற நிர்வாகிகளும் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழ் நாட்டில் தமிழ் பெயர் வைக்க தமிழ் பயன்படவில்லை என்றால் அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ அல்லது சீனாவிலோ பயன்படுமா என்ன ?



(சன் தொலைக்காட்சி செய்தியை சற்று தொலைவில் இருந்து படம் எடுத்தேன், வெளிச்சம் காரணமாக சரியாக விழவில்லை)


மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்