பின்பற்றுபவர்கள்

சாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 நவம்பர், 2012

சாதிவெறி கிராமத்தில் மட்டும் தானா ?


தலித் ஆடவர் வன்னிய பெண்ணை காதலித்து மணந்து கொண்டார் என்பதற்காக பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொள்ள அவரது உறவினர்கள் கிளர்ந்தெழுந்த பெரும் கலவரத்தில் தலித் உடமைகள், வீடுகள் எரிக்கப்பட்டு இருக்கிறது. சாதியத்தின், வருணாசிரமத்தின் கொடுமைகளின் கோரமுகங்கள் அவ்வப்போது வெளிப்படும் நிகழ்வுகளில் வழியாக தற்போதும் வெளிப்பட்டு இருக்கிறது, இதைத் தவிர்த்து இதற்கு வேறென்ன முக்கியத்துவம் ?

இருக்கிறது. ஆம் தமிழகத்தில் கலப்பு திருமணங்கள் நடக்காமல் இல்லை, ஆனால் அவை அனைத்தும் தலித்துகளுடன் தொடர்பில்லாமல் பல்வேறு சாதியத் திருமணங்கள் நடந்தேறிவிடுகின்றன, நாடார் மனமகனை முதலியார் பெண் மணந்துவிட்டாள், தேவர் சாதி ஆண் செட்டியார் பெண்ணை மணந்துவிட்டான் என்பதெல்லாம் சாதிப் பிரச்சனையாகுவதோ, கலவரங்களை உருவாக்குவதோ இல்லை, ஆனால் தாழ்த்தப்பட்ட சமூகம் தவிர்த்த பிற சாதிய கலப்பு மணங்கள் ஓரளவு சகிப்புத் தன்மையுடன் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன, எங்கள் உறவினர்களில் பல்வேறு சாதியைச் சார்ந்தவர்களுடன் திருமணங்கள் நடந்தேறியுள்ளன, அவையெல்லாம் எந்த ஒரு காலத்திலும் பிரச்சனையாகிப் போனதுமில்லை, இவற்றில் காதல் திருமணங்களும், பார்த்து வைத்த திருமணங்களும் கூட உண்டு, ஆனால் தலித் ஆடவர் ஒருவருடன் ஓடிய உறவுக்காரப் பெண்ணையும் அவரது தாயாரையும் இதுவரை எங்கள் உறவினர்கள் சேர்த்துக் கொண்டதே இல்லை, நான் தலித் சமூகம் சார்ந்தவன் இல்லை என்று வெளிச்சம் போட இதை நான் எழுதவில்லை, இதை எழுதுவதையே கூச்சமாகக் கருதுகிறேன்,  ஒரு நாடாரையும், ஒரு பத்தரையும், ஒரு நாயுடுவையும், தஞ்சாவூர் கள்ளரையும் , ஒரு பார்பனரையும் திருமண சம்பந்ததில் வைத்திருக்கும் எங்கள் உறவினர்கள் தலித்துகளுடன் ஏற்பட்ட திருமண பந்தத்தை மட்டும் அவமானகரமாக நினைக்கிறார்கள்.

காலம் காலமாக தாழ்தப்பட்டவர்களை தீண்டத்தகாதவர்கள் என்றும் இறந்த விலங்குளை உண்ணுபவர்கள் என்றும் நினைத்துக் கொண்டிருக்கும் சமூகம், அவர்களை சம்பந்தியாக்கிப் பார்பதில் உடன்படுவதில்லை என்பது தவிர்த்து வேற எந்த காரணமும் தெரியவில்லை, ஒரு காலத்தில் தீண்டத்தகாத சமூகமாக கருதப்பட்டு தோள் சீலை அணிய தடைவிதிக்கப்பட்ட நாடார் சமூகங்கள் அந்த நிலையை மிகுந்த ஒற்றுமையுடன், பொருளியல் ரீதியாக முன்னேற அவர்கள் மீதான சாதிய தாழ்வு நிலையை அவர்கள் என்றோ கடந்து வந்துவிட்டார்கள், ஆனால் தலித்துகள் ஏன் அவ்வாறு வளரவில்லை ? சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அவர்கள் நிலை மாறவில்லையா ? கண்டிப்பாக மாறி இருக்கிறது, ஆனால் அவர்களுடைய சாதிப்பிரிவு நான்காம் பிரிவில் வருவதே காரணம். தாழ்த்தப்பட்டவர்கள் தவிர்த்து பிற சாதியினர் குடியானவர்கள், 'சாதி தமிழர்கள்' என்கிற அடைமொழியை தனக்கு தாமே கொடுத்துக் கொண்டு வைசிய, சத்திரிய பிரிவை கிட்டதட்ட பிராமணப் பிரிவுக்கு இணையாக உயர்த்திக் கொண்டார்கள், இதில் பார்பனர்கள் பங்கு என்று எதுவும் கிடையாது, தனக்கு கீழே ஒரு தாழ்த்தப்பட்ட சாதி இருந்தால் தன் சாதி தாழ்ந்ததல்ல என்கிற எண்ணத்தில் அனைத்து சாதிகளுமே தலித்துகளின் முன்னேற்றத்தை ஏற்றுக் கொண்டதும் இல்லை, அவர்களை அரவணைத்துக் கொண்டதுமில்லை.

எட்டணா காசைக் கீழே வைத்தால் கும்பிடு போட்டு குணிந்து பொறுக்கி எடுத்துக் கொண்டு போவான், இன்னிக்கு பேண்டு போட்டுவந்து சரிக்கு சமமாக நின்னு கூலிய தெனாவெட்டாகக் கேட்கிறான், வெட்டியானுக்கு திமிரைப் பாருங்க என்றெல்லாம் தன் தவறை உணராது கூழைக் கும்பிடு போடாத தலித்துகளை 'திமிர்' தனம் என்று சொல்லும் சுடுகாட்டுக் காட்சிகளை நேரில் பார்த்தே இருக்கிறேன்,  எங்கள் சாதி சமூகத்தில் எவனும் பிச்சை எடுத்ததில்லை, விபச்சாரம் செய்ததில்லை, மாமா வேலைப் பார்த்ததில்லை என்று சொல்லும் நிலையில் எந்த சாதியும் இல்லை என்பதே உண்மை, பட்டினி சாவை எந்த சாதியாவது தடுத்திருக்கிறதா என்றால் அதுவும் இல்லை, டாஸ்மாக் எச்சில் க்ளாசில் சாராயம் குடிக்கும் பொழுது அதற்கு முன் அதில் குடித்தவன் எந்தசாதி (தற்பொழுது பேப்பர் டம்ப்ளர் வைத்திருக்கிறார்கள்), வேற ? எந்த சாதி பாலியல் தொழிலாளியிடம் செல்லுகிறோம் என்றேல்லாம் அவ்வாறு செல்பவர்கள் ஆராய்ச்சி நடத்துவதும் இல்லை, ஆனால் திருமணம் நீண்டகால பந்தம் என்று நம்புவதால் அதற்கு மட்டும் தன்னைவிட தாழ்ந்த நிலையில் இருக்கும் சாதி என்றால் முகம் சுளிக்கிறார்கள், 

நாங்கள் சாதிக் கொடுமைகள் எதையும் செய்வதில்லை என்று பார்ப்பனர்கள் மார் தட்டுகிறார்கள், ஆனால் /பிராமணர்களுக்கு மட்டும் வீட்டுவாடகை; என்னும் அவர்களது அறிவிப்பு பலகைகள் அவர்களது சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதாதைக் காட்டுகிறது, பார்பனர்கள் சாதிக் கொடுமை செய்யாததற்கு அவர்கள் திருந்திவிட்டார்கள் என்று சொல்ல ஒன்றும் இல்லை, ஆனால் இதுபோன்ற குழுசார்ந்த கொடுமைகள் செய்யும் அளவுக்கு அவர்களுக்கு ஆள் பலம் போதாது என்பது தவிர்த்து வேறொன்றும் இல்லை, வெளிமாநிலங்களில் வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்தே வருவாதால் தமிழ் நாட்டு பார்பனர்கள்  திருந்திவிட்டார்கள் என்பது மாற்றம் என்றாலும் அந்த மாற்றத்திற்கு காரணம் எண்ணிக்கை தான், அதையும் ஒப்புக் கொள்ள மனமில்லை என்றால் பெரியாரைத்தான் காரணாமாகச் சொல்ல முடியும், பெரியாரின் பெண் விடுதலையால் முழுக்க முழுக்க பயன்பெற்றவர்கள் பார்பனப் பெண்களே, மொட்டை அடித்துக் கொண்டு காவி புடவையுடன் தென்படும் பார்பனப் பெண்கள் கனிசமாக குறைந்து மறைந்துவிட்ட நிலை ஏற்பட்டுள்ளது, வேலைக்குச் செல்லும் பெண்கள் மிகுதியாகிவிட்டார்கள், இது பிறமாநிலங்களை ஒப்பு நோக்க தமிழகத்தில் மிக அதிகம்,

சென்னையிலோ, திருச்சி போன்ற பெருநகரங்களிலோ கலப்பு திருமணங்கள் பெரிய அளவில் கலவரமாக வெடிப்பதில்லை, ஏனெனில் சாதிய பெரும்பான்மையுடன் ஒரு இடத்தில் வசிக்கும் வாய்ப்பு நகரங்களில் குறைவு, கிராமங்களில் சாதி வாரியாக சிறுபான்மை பெரும்பான்மை என்று வசிப்பதால் அங்கு இவை அன்றாடப் பிரச்சனையாகிப் போகிறது. மற்றபடி நகரத்தில் வசிப்பவர்கள் நாகரீகம் அடைந்துவிட்டார்கள் என்று சொல்ல ஒன்றும் இல்லை.

பிரசன்னவோ அல்லது சினேகாவோ அவர்களில் ஒருவர் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சார்ந்தவராக இருந்தால் அவர்களுடைய சாதி வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு இருசாதி வழக்கப்படி திருமணம் நடந்திருக்குமா ?

இன்றைய தேதிக்கு பார்பனர்கள் மட்டுமே உயர் சாதியினர் இல்லை, தலித்துகள் அல்லாத அனைத்து சாதிகளுமே தங்களை உயர்சாதியாக நினைத்துக் கொண்டும், அவர்களுக்கு நேர் எதிர் தாழ்ந்த சாதியாக ஒட்டுமொத்த தலித்பிரிவுகளையும் வைத்துள்ளனர், என்னைக் கேட்டால் இதற்கு நிரந்தர தீர்வு தலித்துகள் அனைவருமே ஒட்டுமொத்தமாக மதம் மாறி இவர்கள் முகத்தில் காரி உமிழ்வது தான் சிறந்த தீர்வாக இருக்கும். 

தங்களை இந்துக்கள் என்று அறிவித்துக் கொள்ளும் வரையில் தலித் விடுதலை சாத்தியமற்றது, அதைப் பெரும்பான்மை பிறசாதிகள் கொடுத்துவிடவும் மாட்டார்கள்.

*******

அனைவருக்கும் தோழர் நரகாசூரன் நினைவு நன்னாள் வாழ்த்துகள்.

3 ஆகஸ்ட், 2012

சுவனப்பிரியன் கேட்கும் மொய்விருந்து !


ண்பர் சுவனப்பிரியன் 'சவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே!' என்ற தலைப்பில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உதவிகள் கேட்டு இடுகை ஒன்றை எழுதி இருக்கிறார், அவரின் உதவி செய்யும் நோக்கம், மனப்பான்மை இவற்றை நான் குறை சொல்லவிரும்பவில்லை மாறாக பாராட்டுகிறேன், ஆனால் இவர் போன்றவர்கள் 'தமிழ்/தமிழன்' என்ற லேபிளை எங்கு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பார்க்க இவர்களின் முரண்பாடுகள் விவாதிக்கக் கூடியவை என்ற நிலைக்கு வருகிறது. இலங்கையில் தமிழனுக்கு கொடுமை நடந்தால் இவர்களின் தமிழின பற்று காணமல் போய்விடும் அங்கெல்லாம் இலங்கைத் தமிழர்கள், இலங்கை தமிழ் விடுதலை அமைப்புகள் இஸ்லாத்திற்கு / இஸ்லாமியர்களுக்கு எதிரானாவர்கள் என்ற இவர்களின் நிலைப்பாட்டினால் தமிழும், தமிழனும் காணாமல் போய்விடுவான்.

சுவனப்பிரியன் குறிப்பிட்டுள்ள சவுதி சிறையில் வாடும் இஸ்லாமியர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர் என்பதால் இவர் தமிழன் என்று எழுதுவதாகவே வைத்துக் கொண்டாலும், சவுதி போன்ற இஸ்லாமிய நாடுகளில் பிற நாடுகளைச் சார்ந்தவர்களின் மதம் ஆராயப்பட்டு அவர்களுக்கு சிறப்பு சலுகை எதையும் கொடுக்கவில்லை. என்பதை பாதிக்கப்பட்ட நபர் தன்னை குற்றவாளி இல்லை என்று நிருபனம் செய்ய இயலாத நிலையில், மதத்தைக் காட்டி தப்பித்துக் கொள்ளவும் இயாலாத நிலையில் உள்ளார் என்பதிலிருந்தும் தெரிகிறது, ஆனால் சவுதி அல்லது அரேபிய நாடுகளைப் பற்றி விமர்சனம் செய்தால் இவர்கள் இஸ்லாமை விமர்சனம் செய்வதாக நினைத்து கச்சைக் கட்டுகிறார்கள், இவர்களை மதம் சார்ந்து மதிக்காத அரசுகளுக்கு இவர்களாக வலிய சென்று வாதம் பேசுவதில் இருந்து இஸ்லாம் என்றால் அரபு நாடுகளும் அதன் கொள்கைகளும் என்றே எம்மைப் போன்றவர்களை இவர்கள் நினைக்க வைத்துவிடுகிறார்கள் என்பதை இவர்கள் ஒப்புக் கொள்ளவும் மறுக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட நபர் ஒரு இஸ்லாமியர் என்றும், அவரை விடுவிக்க அவர் திருடியதாக குற்றம் சொல்லப்படும் சவுதி ரியாலை கொடுத்துவிட்டாலே போதும் என்றே சுவனப்பிரியன் எழுதி இருக்கிறார். தமிழ் நாட்டில் இருக்கும் இஸ்லாமிய அமைப்புகள் நினைத்தால் குறிப்பிட்ட நபரை வெளியே கொண்டுவர போதிய பணத்தை திரட்ட முடியாதா ?

  • பாதிக்கப்பட்டவர் அப்பாவி, குற்றமற்றவர் மற்றும் ஏழை இஸ்லாமியர் - இந்த தகுதி அடிப்படையில் அவருக்கான உதவிகளை செய்ய இவர்களது (சுவனப்பிரியன் சார்ந்து இருக்கும் தவ்ஹீது ) அமைப்புகளுக்கு போதிய பணம் இல்லை என்று நம்புவதற்கு கடினமாகவே இருக்கிறது.
  • ஒரு  ஏழை இஸ்லாமியரைக் காப்பாற்ற முடியும் என்ற அளவுக்கு பணம் இல்லாதவர்கள் ஊருக்கு ஊர் அமைப்புகளை தொடங்கி நடத்துவது மட்டும் எப்படி சாத்தியம் ?
  • தன் மதத்தைச் சார்ந்த ஒரு ஏழை அப்பாவியை காப்பாற்ற முடியாத நிலைகள் இந்த அமைப்புகள் வேறு எந்த உயர்ந்த நோக்கத்திற்காக செயல்படுகின்றன ?

து போல் திருட்டு வழக்கில் சிக்கிக் கொண்டவர்களையெல்லாம் எப்படி காப்பாற்றுவது, அவர்கள் ஒருவேளை திருடி இருந்தால், அல்லது இது போல் உதவிகள் கிடைக்கும் என்று தெரிந்தே திருடினால் அவர்களுக்கெல்லாம் இஸ்லாமிய அமைப்புகள் உதவிக் கொண்டே இருக்க முடியுமா ? என்ற அறிவுப்பூர்வமான கேள்விகள் வந்தால், பாதிக்கப்பட்டவரின் குற்ற முகாந்திரம் தெரியாமல் உதவிகள் மட்டும் கேட்க முடியுமா ? என்ற கேள்வியும் கூடவே வருகிறது.

பாதிக்கப்பட்ட நபருக்கான உதவிகள் என்பது அவர் குற்றமற்றவர் என்ற நம்பிக்கை அடிப்படையில் அமைந்த நிலையில் ஒருவரை காப்பாற்றவேண்டுமா ? பலரைக் காப்பாற்ற வேண்டுமா ? என்பதைவிட அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பது தான் முக்கியம்.

ற்ற மதத்துக்காரர்கள் குற்றவாளி இல்லை என்று நிருபனம் செய்ய சான்றுகள் தேவை. ஆனால் சுவனப்பிரியன் போன்றவர்களின் கூற்றுகளால் 'இஸ்லாத்தை அடிபிறழாமல் பின்பற்றும் ஒரு இஸ்லாமியர் திருடவோ அல்லது பிற குற்றச் செயல்களில் ஈடுபடவோ வாய்ப்பில்லை' (பர்மா பஜாரில் டிவிடி விற்கலாமா ? என்று கேட்காதீர்கள்). எனவே பாதிக்கப்பட்டவர் இஸ்லாத்தை அடிபிறழாமல் பின்பற்றுபவரா ? ஐந்து வேளை தொழுவரா ? இஸ்லாமிய கடைமைகளை பின்பற்றுவரா ? என்று தெரிந்தலே போதும்.  பாதிக்கப்பட்ட நபர் உண்மையான இஸ்லாமியர் இஸ்லாத்தை பின்பற்றுபவர், இவர் குற்றம் செய்திருக்க வாய்பில்லை, அப்படி நினைக்கத் தேவை இல்லை, அதை நிருபனம் செய்யவும் தேவை இல்லை என்று சுவனப்பிரியன் போன்றவர்களின் சான்றிதழ் / பரிந்துரை அடிப்படையில் மேற்சொன்ன இஸ்லாமிய அமைப்புகள் பாதிக்கப்பட்ட நபர் குறித்து தெரிந்து கொண்டு உதவி செய்ய முடியாதா என்ன ?

துவும் செய்ய வாய்ப்பில்லாதா நிலையில் இஸ்லாத்தை அடிபிறழாமல் பின்பற்றும் ஒருவர் குற்றவாளி என்று காவலர்களால் குற்றம் சுமத்தப்படும் நிலையில் இஸ்லாமிய அமைப்புகளும் காப்பாற்றது, இஸ்லாமிய அரசுகளும் காப்பாற்றது அவர்களுக்கு தேவை எல்லாம் குற்றமற்றவர் என்று குற்றவாளி தன்னைத் தானே நிருபனம் செய்யவேண்டும் என்ற நிலைப்பாடு என்பதையாவது ஒப்புக் கொள்ள வேண்டும்,  அதற்கு வாய்ப்பில்லாத நிலையில் குற்றம் சுமத்தப்பட்டவர் சிறையில் செய்யாத குற்றத்திற்கு தண்டனைப் பொறுவதைத் தவிர்த்து வேறு வாய்ப்பில்லை என்று தெரிந்தால் மனிதாபிமான அடைப்படையில் உதவ வெளி உலகில் ஏராளமானவர் உண்டு.

னால் மதமும், மதவாத அமைப்புகளும், மதவாத அரசுகளும் மக்களுக்கு சேவை செய்கின்றன என்பது போன்ற பொய் தோற்றத்தை தொடர்ந்து பரப்பாதீர்கள். உங்கள் வசதிக்கேற்றவாறு 'தமிழன்' லேபிளை தேவையான இடங்களில் மட்டுமே ஒட்டவைக்காதீர்கள்.

பாதிக்கப்பட்டவருக்கு கண்டிப்பாக உதவிகள் செய்து சொந்த ஊருக்கு அனுப்பப்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோளும், ஆனால் இதில் குற்றவாளியாக ஒருவர் சிக்க வைக்கப்பட்டிருப்பதையும் அவரின் இக்கட்டுகளும், அவர் அந்த மதத்தைப் பின்பற்றுகிறார' என்பதினால் இரு இம்மி கூட தீர்ந்துவிடாது, அதற்கு வாய்ப்பும் இல்லை என்பதை எடுத்துக்காட்டவே இதனை எழுதியுள்ளேன், இதை சுவனப்பிரியனும் உணர்ந்திருக்க வேண்டும் அதனால் தான் வழக்கத்திற்கு மாறாக பாதிக்கப்பட்ட நபரின் மதத்தை முன்னிறுத்தாது 'தமிழன்' என்று சொல்லி இருக்கிறார் சுவனப்பிரியன்.

பின்குறிப்பு : உதவி கேட்பதை கொச்சைப்படுத்தி இதை எழுதும் நோக்கம் எனக்கு கிஞ்சித்தும் இல்லை, ஆனால் இதுபோன்ற வேளைகளில் தான், மதவாத கொள்ளைவாத முரண்பாடுகளை எடுத்துச் சொன்னால் விளங்கிக்கொள்ளவும் முடியும். இது போன்ற நடைமுறை உதாரணங்களைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் மதவாதிகள், மத அபிமானிகள் கொஞ்சமேனும் மாறுவார்கள், மனிதாபிமானத்திற்கு திரும்புவார்கள் என்கிற நம்பிக்கையில் மட்டுமே இதனை இடுகையாக்கியுள்ளேன்.

பாதிக்கப்படும் ஏழைகளுக்கு சாதியும் இல்லை, மதமும் இல்லை என்று பன்னெடுங்காலமாக பலர் சொல்லிவருவதைத் தான் சற்று விவரித்து எழுதியுள்ளேன்.

20 நவம்பர், 2009

சாதீ...யம் சில எண்ணங்கள் !

இந்தியாவின் மையப் பிரச்சனை என்றாலும் இப்போது அரசியல்வாதிகள், சாமியார்கள் மறைமுகமாக ஆதரவுக் கொடுத்து வளர்த்துவிடும் ஒன்றாகவும் சாதி இருக்கிறது. கண்ணுக்கு தெரியாத சூழ்ச்சிப் பின்னலாகவே பிரிவினைக்கும், பெண்ணடிமைத்தனத்துக்கும் சாதி மற்றும் கற்பு என்கிற சொல்லாடல்கள் சமூகத்தில் அழுத்தமாக பதிந்து கிடக்கின்றன. கற்பு பற்றிய புரிதல் குறித்த மாற்றம் சமூகத்தில் ஏற்பட்டு இருக்கிறது, ஏனெனின்றால் பாலியல் வன்முறை செய்தவனையே திருமணம் செய்துக் கொள்ளச் சொல்லி பெண்களின் கற்பை மீட்டுக் கொடுக்கும் பழக்கம் தற்போது இல்லை அல்லது மிகக் குறைவு, அதே போன்ற வன்முறையால் (கணவன் தவிர்த்து) பிறரால் பாலியல் வன்முறைக்கு உட்படும் பெண்கள், கணவனுக்காக வைத்திருந்தது களவாண்டு போய்விட்டதே என்று தூக்கில் தொங்குவதோ, தீக்குளிப்பதோ நடப்பது இல்லை, மாறாக அப்படி பாலியல் வன்முறை செய்தவர்களை கடுமையான சட்டம் கொண்டே தண்டிக்கிறார்கள், நடந்தது ஒரு எதிர்பாராத விபத்து என்பதாக பாதிக்கப்பட்ட பெண்களில் மன நிலையாக மாறி வந்திருக்கிறது.

(ஆண் ஆளுமை) சமூகத்தில் பெண்கள் மீது பழிபோட்டு அவர்களை மேலும் துன்பத்திற்கு உள்ளாக்கும் சமூக சித்தாந்தமான 'கற்பு நெறி' தூற்றி நல்ல மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தினார் பெரியார். பாலியல் வன்முறைக்கு தான் உள்ளானதாக முறையிட்டால் நான்கு சாட்சிகளைக் கொண்டுவர வேண்டும் என்கிற மதவாத சட்டங்கள் முசாரப் ஆட்சிக்கு முன்புவரை கூட பாகிஸ்தானில் அமுலில் இருந்ததாம், இதன் படி பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்கள் நான்கு சாட்சிகள் கொண்டுவர முடியாமல் போனால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளப்படுமாம். பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்கள் முறையிட்டு, நான்கு சாட்சிகள் இல்லை என்கிற காரணத்தால் 80 விழுக்காட்டுப் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அவர்கள் முஷ்ரப் ஆட்சியின் போது விடுவிக்கப்பட்டதாகவும் ஒரு நூலில் படித்தேன். பெண்கள் தனித்து வெளியே போகக் கூடாது என்கிற கட்டுப்பாட்டில் இருந்த அந்த காலத்தில் சாட்சியோடு பாலியல் வன்முறைக்கு வாய்ப்பு இருந்திருக்கலாம், இன்றைக்கு பெண்களும் வேலைக்கு, வெளியிடங்களுக்கு செல்லும் போதும் பாலியல் வன்முறை செய்பவன் சாட்சி வைத்துக் கொண்டு செய்வானா ? இந்த ஷரியத் சட்டம் சரியானது தானா ? என்பதை இஸ்லாமிய நண்பர்கள் விளக்கினால் நன்று.

சாதி பேதமற்ற சமூகம் அமைப்போம் என்று ஒரு சிலர் உண்மையேலேயே பேசினாலும், சாதி பற்றாளர்களின் புதிய சித்தாந்தம் என்னவென்றால் சாதி அமைப்பு சரியானதே, பின்னால் வந்தவர்கள் அதில் ஏற்றத்தாழ்வை உருவாக்கிவிட்டார்கள், அதை சரி செய்துவிட்டால் எல்லாம் சரியாக இருக்கும் என்பதாக கூறிவருகிறார்கள். நான் சாதிவெறியர்கள் பற்றி குறிப்பிடவில்லை, சாதிவெறியர்களின் சித்தாந்தம் சாதி கடவுளால் படைக்கப்பட்டது, விதிப்பயனால் அவன் உயர்ந்த அல்லது தாழ்ந்த சாதியில் பிறக்கிறான், சாதியைத் தாழ்த்தி வைப்பதும், உயர்த்திச் சொல்வதும் ஏற்றத்தாழ்வை போற்றும் ஆண்டவனின் ஏற்பாடு என்கிறார்கள். ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட பிறப்புகள் நாங்கள் என்பதை இஸ்ரேலிய யூதர்கள் என்றுமே சொல்லிவருவார்கள், அதே போல் பார்பனர்களின் பலர் 'ஆசிர்வதிக்கப்பட்ட பிறப்புகள் நாங்கள், அதாவது பிரம்மனின் முகத்தில் பிறந்தவர்கள்' என்கிற சித்தாந்ததை நம்புகிறார்கள். இப்படிப்பட்ட நம்பிக்கை உள்ளவர்கள் சமூக ஏற்றத்தாழ்வை என்றுமே ஆதரிப்பவர்கள், அவர்களுடைய கருத்துக்கள் படி ஒரு பொதுச் சமூகம் என்றுமே உருவாகிவிட முடியாது, உருவாகக் கூடாது என்பதும் அவ்ர்களின் எண்ணம், அதனால் சாதிவெறியர்களின் சாதி குறித்த சிந்தாந்தம் மிக வெளிப்படையானது என்பதால் அதனை பேசுவது பயனற்றது, அவர்களை மாற்றவும் முடியாது.

அடுத்து சாதிப் பற்றாளர்கள், இவர்கள் அவ்வளவு தீவிரமாக சாதிவெறி கொண்டிருக்காவிட்டாலும் இவர்கள் சாதிக்கு ஆதரவாக கூறும் காரணங்களில் அடிப்படை சாதி ஆண்டவனால் ஏற்படுத்தப்பட்டது என்றே நம்பினாலும் சாதிய சமூகத்தில் இருக்கும் ஏற்றதாழ்வு களையப்பட வேண்டும், சாதியை ஏற்படுத்தி இருந்தாலும் அதில் ஏற்றத்தாழ்வை கடவுள் திணிக்கவில்லை, மனிதர்கள் தங்கள் சுயநலத்தால் ஏற்றத்தாழ்வை அதில் நுழைத்துவிட்டார்கள் என்பதே அவர்களின் சாதி குறித்த பார்வையாக இருக்கிறது.
இவர்கள் சொல்லுவது நல்லெண்ண அடிப்படையில் என்றாலும் இவர்களும் சாதி அமைப்புகள் தான் பாதுகாப்பானது என்கிற நம்பிக்கைக் கொண்டவர்களாகவும், சாதியற்ற சமூகம் அமைத்தால் அவரர்களுக்கான பண்பாடுகள் தொலைந்துவிடும் என்பதாக இவர்கள் அலறுகிறார்கள்.

சாதி முட்களின் மீது சமூக சீலையை உளர்த்திய பின், சேலை கிழியாமல் அதை எடுக்க முடியுமா ? உயர்வு தாழ்வு அற்ற சாதி அமைப்பு வேண்டும் அல்லது சாதிகளில் ஏற்றதாழ்வு தேவை இல்லை என்பது எந்த காலத்திலும் உருவாகுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா ? "சாதி சொல்லி தாழ்த்துவது" என்பது சாதிகள் இருந்தும் உயர்வு தாழ்வு அற்ற சமூகத்தால் சாத்தியப்படுகிறது என்றே வைத்துக் கொள்வோம். 'என் சாதிக்காரனை அடிச்சிட்டான் அந்த சாதிக்காரன்' என்கிற நிலமை ஏற்படாமல் இருக்க சாதி உயர்வு தாழ்வு பாராட்டாத சாதிய சமூகத்தால் ஏற்படுத்திவிடமுடியுமா ? சாதி ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகம் இனக்குழுக்கலாக மாறிவிடும் என்பதைத தவிர்த்து, சாதி அமைப்பு முறையில் ஏற்றதாழ்வுகளை மட்டுமே அகற்றுவதால் வேறெதுவும் நிகழ்ந்துவிடாது.

சாதி அமைப்பு சரியானது, அதில் (சாதிய) ஏற்றத் தாழ்வு தேவை இல்லாதது என்ற கூற்றுகள் என்னைப் பொருத்த அளவில் ஏற்றுக் கொள்ள முடியாதும், என்றுமே சமூக மாற்றத்திற்கு எந்த ஒரு பயனையும் ஏற்படுத்தாத கூற்று ஆகும். உதிரங்களும் உறுப்புகளும் தேவைப்படும் போது பல்வேறு சாதிகள் என்று நம்பப்படும் மக்கள் ஒருவருக்கொருவர் தேவையின் காரணமாக மாற்றிக் கொள்ளும் இந்த காலத்தில் கண்ணுக்கு தெரியாத வலையாக நம்மீது பின்னப்பட்டு இருக்கும் சாதி என்கிற மாயவலையே தேவையற்றது.

‘‘இப்பல்லாம் யாருங்க சாதிப் பாக்குறா? சும்மா அதையேப் பேசிக்கிட்டுருக்காதீங்க’’ - இன்றைய தேதியில் சாதி பற்றிய பல்வேறு தரப்பினரின் எண்ணங்கள் பற்றி பதிவர் நண்பர் ஆழியூரான் சிறப்பாக எழுதி இருக்கிறார்.

14 நவம்பர், 2008

உயர்சாதி நாயும் மற்ற சாதி நாய்களும் !

இல்லாத ஒன்று தமிழர்களை / இந்தியர்களைப் பிரித்துப் போட்டு எத்தனை பாடாய் படுத்துகிறது. சாதியைத் தான் சொல்கிறேன். உடலில் எந்த பாகம் சாதியைக் குறிக்கிறது என்று யாரவது சொல்ல முடியுமா ? அப்படி ஒரு பாகம் இல்லாததாலேயே எங்கள் சாதி இதுதான் என்று காட்ட வெளி அடையளமாக 8 ஆம் நம்பர் நூலை வாங்கி குறுக்காகச் சுற்றிக் கொள்கிறது ஒரு கும்பல். பெரியார் ஏன் அவற்றை அறுக்கச் சொன்னார், அறுப்பது தேவைதானா என்று நன்றாக யோசித்துப் பாருங்கள், ஊருக்குள் அனைவரும் அமைதியாக வாழ ஒரு வீட்டில் உள்ளவர்கள் மட்டும் 'என் மனைவி ஒழுக்கமானவள்' என்று எழுதிவைத்தக் கதைதான் சாதி.

பார்பனரை மட்டுமே சாதிவெறியாக சித்தரிக்கும் முற்போக்கு வாதிகள் (வாந்தி முன்னால் வருவதால் முற்போக்கு, பேதி பின்னால் வருவதால் பிற்போக்கு என்று சொல்லலாம் போல) தேவர் சாதி வெறியர்களையும், கவுண்டர் சாதி வெறியர்களையும், வன்னியர் சாதி வெறியர்களையும் எப்போதாவது கண்டிப்பது உண்டா என்று பார்த்தால் மிக மிகக் குறைவுதான். இத்தனைக்கும் வெளிப்படையான கலவரங்களை பார்பனர்கள் நடத்துவது கிடையாது, பஸ் எரிப்புகளை பார்பனர்கள் நடத்துவது கிடையாது. ஆனால் இவையெல்லாம் நடக்கும் போது அதை நேரிடையாக கண்டிக்காமல் 'பார்பனர்களின் வருண அடுக்கு முறைதான்' இவற்றிற்கெல்லாம் காரணம் என்பது போலவும் அதுவும் அரை மணி நேரத்திற்கு முன்பு வந்த கடைசி செய்தி வழியாக அறிந்து கொண்டது போலவும் மூன்று பக்கத்திற்கு மனுவிலிருந்து தொடங்கி ராஜாஜியின் குலக்கல்வி திட்டம் வரையில் கொண்டு வந்து முடிப்பார்கள். ஐயா இவையெல்லாம் கடைக்கோடி தமிழனுக்கும் தெரிந்து நாறிப் போன வரலாறு, இதையே திரும்ப திரும்ப பேசிக் கொண்டிருந்தால் தேவன் திருந்திடுவானா ? நினைத்துப் பாருங்கள்.

இவைதான் காரணம் என்பது ஏற்கனவே தெரிநத்து தானே. கிரிமி எப்படி தோன்றியது என்கிற ஆராய்ச்சியைவிட நோய்கண்டவர்களை குணப்படுத்துங்கள் ஐயா. எய்ட்ஸ் குரங்கிலிருந்து வந்தது என்று சொல்வது எய்ட்ஸ்க்கான தீர்வு அல்ல. மாற்று மருந்து அதுதான் தீர்வு. சமூகம் கெட்டு நாற்றமடிப்பதை இன்னும் எத்தனை காலத்துக்கு பார்பன சதி என்றும்...வருண அடுக்கைச் சுட்டிக் காட்டி பேசுவதையும் வைத்து மறைத்துவிட முடியுமா ? ஆர்எஸ்எஸ் போன்ற இயக்கங்களில் பெரிய ஈடுபாடு வைத்து குண்டுவைக்கப் போகும் அளவுக்கு தமிழகத்தில் வெறியுடன் இருப்பவர்களில் பார்பனர்கள் யாரும் இல்லை என்பதை நம்புங்கள்.

சாதி வெறி எடுத்து சமூகத்தை சீர்கெடுக்கும் அனைத்து சாதிகளையும் அதே சாதிப் பெயரை வைத்தே சாடுங்கள். 'பார்பன பண்ணாடையே' என்று எழுதத் துணிபவர்கள் எவருமே 'தேவர் சாதி வெறியர்களே நிறுத்துங்கள், 'வன்னிய சாதிவெறியர்களே நிறுத்துக்கங்க...' என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை கூட எழுத முன்வராதை நினைக்கும் போது முற்போக்கு என்ற பேச்செல்லாம் ஒவ்வாமையால் வந்த வாந்தியோ என்றே நினைக்கத்தோன்றுகிறது. சாதி வெறிகளையெல்லாம் 'பார்ப்பனியம்' என்ற சொல்லில் அடக்கியது தவிர்த்து சாதிமறுப்புப் போராட்டத்தில் எந்த முன்னேற்றத்தையும் காணும்.

இதோ இன்றைக்கு சட்டக்கல்லூரியில் தேவர் சாதி மாணவர்கள் நடத்திய வெறியாட்டத்தில் உணர்ச்சிப் பெருக்கில் ஆளுக்கு நான்கு கட்டுரைகளை எழுதுவதுடன் இவர்களது சாதிமறுப்பும் முடிந்து போகிறது.

அந்த கொடூர மாணவர்கள் நடத்தியது வெறும் தாக்குதலோ, கொலைவெறி மட்டுமேயன்று, சாதிமேலாண்மையை அழிக்கவே முடியாது என்ற அறைகூவல் தான். மாணவர்கள் இடையேயிலும் இத்தகைய சாதிவெறி அதுவும் சாதிவெறியால் கூனிக் குறுகிமேலெழுந்த அண்ணல் அம்பேத்கார் என்னும் மாமேதையின் பெயரிலான கல்லூரியில் இத்தகைய கொடுமை. இவையெல்லாம் வெறும் மாணவர்களுக்கிடையேயான சண்டை மாட்டும் தானா ? புறையோடிப்போன சாதித் திமிரால் சிலிர்த்த மயிரில் ஒன்று தான் அது. இன்னும் கோரப்பற்களும், கூரிய நகங்களும், ரத்தம் குடிக்கத் துடிக்கும் நாக்கும் கண்டு கொள்ளப்படமலேயே இருக்கிறது. ஆனால் முற்போக்காளர்களின் கண்களில் தெரிவதும் வெறும் உச்சிக் குடுமி மட்டும்தான்.

சாதிப்பெயரை வெளியே சொல்லி அதன் மூலம் பெருமை தேடுபவன் எவனாக இருந்தாலும் செருப்பால் அடியுங்கள். சாதிவெறியால் அரசு பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் அந்தந்த சாதிசங்களிடம் அதற்குண்டான ஈட்டுத்தொகைகள் வசூலிக்கப்பட்டால் எவனாவது துணிந்து பேருந்தை கொளுத்துவானா ?

7 நவம்பர், 2008

யாதவர்களும் ரஜினிகாந்தும் !

பைத்தியம் முற்றினால் பாயைச் பிராண்டும் என்று சொல்வது எத்தகைய உண்மை. ஜாதிவெறி என்ற பைத்தியம் முற்றினால் சக மனிதனின் உயிரைக் கூட மதிக்காது. இத்தனைக்கும் வேறு வேறு சாதிக்கார, இனத்துக்கார ஆண் பெண் கூடினால் குழந்தை கண்டிப்பாக பிறக்கும் என்பது தெரிந்தே (விந்தணுவுக்கும் அது சேரும் கருமுட்டைக்கும் ஏது சாதி ?) அனைவருமே மனிதர்கள் என்பதை மறந்துவிட்டு சாதிப்பேயின் சதிக்கைகளின் கைபொம்மையாகி விடுகிறார்கள்.

முன்பெல்லாம் தலைவர்களின் சாதியைப் பார்த்து அவர்களின் படங்களை சாதி சங்கத்தில் அலங்கார புகைப்படம் ஆக்கி வைத்திருந்தார்கள். சாதிகள் சாமிகளைக் தங்களுக்கே உரித்ததாகக் கொண்டாடுவது கேலிக் கூத்திலும் பெரிய கேலிக் கூத்து. சைவ வெள்ளாளர்கள் சிவனை சொந்தம் கொண்டாடுவார்கள், வன்னியர்கள் திரவுபதி அம்மனை சொந்தம் கொண்டாடுவார்கள், செட்டியார்கள் முருகனை சொந்தம் கொண்டாடுவார்கள், வைணவர்களாக அறிவித்துக் கொள்ளும் பல்வேறு சாதிகள் கோனார், நாயுடு முதல் தென்கலை ஐய்யங்கார் வரை கிருஷ்ணனை சொந்தம் கொண்டாடுவார்கள். பெருமாளின் முகத்தை வைத்து யாருக்கு சொந்தம் என்பதில் சிக்கல் வரும் என்பதாலேயே பெருமாளுக்கு வடகலை நாமமும், தென்கலை நாமும் போடப்பட்டு யாருடைய பெருமாளை வணங்காமல் இருக்கவேண்டும் என்ற அடையாளமெல்லாம் வைத்திருப்பது ஆன்மிக அபத்தங்களின் உச்சத்தில் ஒரு முனை. தேவர்களும் முருகனை சொந்தம் கொண்டாடுவார்கள், ஏனென்றால் வீரபாகுத் தேவர் என்னும் கந்தபுராண பாத்திரம் முருகனுக்கு பக்க பலமாக இருக்கும், அந்த பெயரில் தேவர் இருப்பதால் தேவர்களுக்கு முருகன் சொந்தக்காரனாக ஆகிவிட்டான். அய்யர்களுக்கு ? மதுரை வீரன் உட்பட சாமிகளுக்கு பூனூல் அணிவித்த பிறகு அனைத்துமே அவர்களுடைய வேத வழியில் வந்ததாக ஆக்கிக் கொண்டார்கள். இவை தெரிந்ததாலோ என்னவோ மகாபெரியவா சந்திரசேகர சுவாமிகள் (வருத்தப்பட்டு) ஆரியக் கடவுள் என்றால் 'ஆரியன்'காவில் தோன்றிய ஐயன் + அப்பன் ஐய்யப்பன் மட்டும்தான், மற்றதெல்லாம் திராவிட தெய்வங்கள் என்றார். இவைதான் ஆதிக்க சாதிகள், இவர்கள் தவிர்த்து நாடார்கள், தலித் பெருமக்கள் அனைவருக்கும் மதபேதமின்றி அனைத்தையும் வழிபடுவார்கள்.

தலைப்புக்கு வருவோம் ?

கோனார்கள் என்றால் கால்நடை வளர்த்தவர்கள், அதன் பாலைக் கரந்து விற்றவர்கள், தொழில் அடிப்படையில் சாதிகள் அறியப்பட்டதால் கால்நடையுடன் தொடர்புடையவர்கள் கோனார் அல்லது இடையர் என்று சொல்லிவருவது வழக்கம். கிருஷ்ணனும் ஆடுமேய்க்கும் ஆயர் குலத்தைச் சேர்ந்தவன் என்ப்பதால் கோனார்களுக்கும் கிருஷ்ணன் சொந்தமாகிவிட்டான். வடநாட்டில் யாதவர் என்றாலும் ஆயர்கள் என்றாலும் ஒரே குலமான யாதவர்கள் தான். லல்லு யாதவ் மற்றும் ஏனைய யாதவ்கள் அனைவருமே யாதாவர்கள். இங்கே தமிழகத்தில் கோனார்களை பழிப்பதற்கென்றே ஏகப்பட்ட பழமொழிகள் உருவானது. அவர்களுக்கும் கணக்குக்கும் வெகுதூரம் என்றே ஒவ்வொரு பழமொழியிலும் அவர்களை மடையர்கள் என்றே தூற்றி பலசாதியினரும் பழித்தனர். அதனாலேயே இடையர் சாதி என்றும் கோனார் என்றும் அறியப்பட்டவர்கள் தங்களின் சாதிப்பெயர்களை இடையன் என்று குறிப்பிட்டு இடையர் சாதிசங்கம் என்று குறிப்பிட்டால் பழிப்பிற்கு ஆளாகிவிடுவோம் என்பதால், தமிழை தாய்மொழியாக கொண்ட இவர்கள் 'யாதவர்கள்' என்று ஆக்கிக் கொண்டனர். வட இந்திய யாதவர்களுக்கும் தென்னிந்திய யாதவர்களுக்கும் வேறெந்த தொடர்பும் கிடையாது. அடைப்படையில் ஒரே தொழில், கண்ணன் பிறந்த குலம் இவைதான் இடையர்கள் யாதவரானதற்குக் காரணம். அது அவர்களின் விருப்பம். தமிழகத்தில் யாதவர்கள் எப்படி ஆனார்கள் என்பதற்காக குறிப்பிட்டேன். அதுதவறு சரி என்றெல்லாம் குறிப்பிட வில்லை.

****

இப்போது தலைப்புக்கு வருவோம் ?

ரஜினி காந்த் : "கடமையைச் செய் பலனை எதிர்பார்"

கிருஷ்ணன் : "கடைமையைச் செய் பலனை எதிர்பாராதே"

கீதையை கிருஷ்ணன் சொன்னதாக எழுதப்பட்ட நூல்தானேயன்றி, கிருஷ்ணனே அதை எழுதிவிடவில்லை. அதில் கீதாச்சாரியனின் கற்பனையும் உண்டு. ரஜினி சொன்னது கண்ணனை அவமதிக்குதாம் ?

ரஜினி எங்காவது நான் கீதைக்கு மாற்றாகச் சொல்கிறேன் என்று சொன்னது கிடையாது. 'தலைவா எப்போ வருவிங்க' என்று கேட்பதற்கு, 'ரசிகர் மன்ற கடமையை சரியாக ஆற்றுங்கள், நிச்சயம் வருவேன்' என்ற பொருளில் அதைச் சொல்லி இருப்பார் என்றே யூகிக்கிறேன். என்ன பொருளில் சொன்னாலும் ரஜினி சொன்னதற்கென்றே பொருள் உண்டு. சொற்கள் எல்லாமே வெவ்வேறு இணைப்பில் ஒரு பொருளைக் குறிக்கும் அல்லவா ? "மிகுதியாக சாப்பிடுவது உடலுக்கு தீங்கானது" என்று ஒருவர் சொல்கிறார், இன்னொருவர் "சாப்பிடாமல் இருப்பது உடலுக்கு கேடு" என்கிறார். முதல் வரி இரண்டாவது வரியைப் பழிக்கிறது என்று சொல்ல முடியுமே ? இவற்றின் பொருள்கள் வேறு வேறு தொடர்பற்றது. படத்துக்கு தலைப்பு வைப்பது போல் புகழ்பெற்ற வாக்கியத்தின் அமைப்பில் ரஜினி ஒன்றைச் சொல்லி இருக்கிறார் அவ்வளவுதானே. இதற்கு ஏன் யாதவ மாகாசங்கம் இந்த குதி குதிக்கவேண்டும். இவர்கள் கண்ணனை வழிபடுபவர்கள் என்பதாலேயே யாரும் அதுபற்றிக் கூறிவிடக் கூடாதா ? எங்க சாமியை யாரும் கும்பிட்டால் நாங்கள் தீக்குளிப்போம் என்று சொல்வது தானே.

கிருஷ்ணனையோ, சிவனையோ பக்தர்களிடம் இருந்து பிரித்துப் பார்ப்பவர்கள் இந்த சாதி வெறிபிடித்தவர்கள் தான்.

18 செப்டம்பர், 2008

பொது நலவழக்குத் தொடுக்க யாராவது முன் வரவேண்டும் !

//தாழ்த்தப்பட்ட 18 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகும் அந்த சமுதாய மக்கள் முன்னேற்றம் அடையவில்லை. இந்த நிலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் மதம் மாறி போனாலும் அவர்களையும் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்து சலுகை வழங்க வேண்டும் என்று ரங்கநாதன் மிஸ்ரா அறிக்கை தந்துள்ளது.

இதை அடுத்த பாராளுமன்ற கூட்டத்தில் சட்ட மசோதாவாக கொண்டு வர முயற்சி நடக்கிறது. இதனால் இந்து ஹரிஜன மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதை அறியாமல் அவர்கள் சில மத ஊர்வலங்களில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

எனவே மதம் மாறியவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்க கூடாது என்று டெல்லியில் 21ம் தேதி பாஜக தாழ்த்தப்பட்டோர் அணி சார்பில் பேரணி நடைபெறுகிறது.

மேலும் இந்து ஹரிஜன மக்கள் மத்தியில் விழிப்புணர்வு யாத்திரையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.//


தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கிறித்துவர்களுக்கான இட பங்கீடு குறித்து முன்பே எழுதி இருந்தேன்.

மதம் மாறும் தாழ்த்தப்பட்டவர்களை பிற்பட்டவராக அறிவிக்கிறது இந்திய அரசியல் சட்டம். இது எந்த வகையில் ஞாயம் என்பது தெரியவில்லை.

ஒரு சாதியின் சமூக நிலையை வைத்தே இட ஒதுக்கீட்டிற்குள் அந்த சாதி குறிப்பிட்ட பிரிவுக்குள் வருகிறது.
மதமாற்றம் ஒருவரின் சமுக நிலையை அடுத்த நாளே மாற்றிவிடுகிறது என்பது வெறும் மத விளம்பரங்கள் தான், தலித்துகள் மதம் மாறிய பிறகும் தலித்துகளாகவே நடத்தப்படுவதுதான் கொடுமையே. அவர்கள் எதை நம்பி மதம் மாறினார்களோ அதன் பயனை அடைந்தவர்கள் என்பது விழுக்காட்டு அளவில் மிக மிகக் குறைவே. சாதிவெறி என்பது கிறித்துவ மதத்தில் இருக்கிறது என்பதை கிறித்துவர்களே ஒப்புக் கொண்ட விசயம் தான். நான் அறிந்த வகையில் தங்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமை மறுக்கப்படும் என்பதற்காகவே இந்து மத வழிபாடுகளில் இருந்து கிறித்துவ வழிபாட்டுக்கு மாறினாலும் இந்துவாகவே சர்டிபிகேட் அளவில் தொடர்பவர்கள் உள்ளனர். அவர்கள் இட பங்கீட்டு சலுகைகளையும் அனுபவத்தே வருகிறார்கள். இந்த யோசனை இல்லாத பல தலித் கிறித்துவர்கள் உரிமையை இழந்து 50 ஆண்டுகளாகப் போராடியே வருகிறார்கள். அவர்களுக்கும் கொடுப்போம் என்ற வாக்குறுதி தேர்தல் காலங்களோடு நிற்கிறது.

மதம் மாறினால் சமூக பொருளாதாரம் மாறும் என்று எந்த மதமாவது எழுத்தளவில் இந்திய அரசுக்கு ஆவணங்கள் வழங்கியுள்ளதா ?

எதன் அடிப்படையில் தலித் கிறித்துவர்கள் பிற்பட்டவர் பிரிவுக்கு தள்ளிவிடப் படுகின்றனர் ? தனக்கு பிடித்த மதத்துக்கு ஒருவர் மாறுவதற்கும் அவரது சமூக, பொருளாதாரத்திற்கும் என்ன தொடர்பு ?

மதம் மாறுவது சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்துகிறது அதனால் தான் தலித் கிறித்துவர்களை பிற்பட்டோருக்கு மாற்றுகிறோம் என்று அரசாங்கம் சொல்ல முடிந்தால்... அனைத்து தலித் பெருமக்களையும் கிறித்துவ மதத்திற்கு மாறச் சொல்லி அரசாங்கமே சிபாரிசு செய்து, இட ஒதுக்கீட்டு தலைவலிகளை குறைத்துக் கொள்ளலாமே...ஏன் செய்வது இல்லை ?

இந்த கேள்விகளை வைத்து தலித் கிறித்துவர்கள், அல்லது அவர்கள் சார்பில் யாராவது வழக்கு தொடர்ந்தால் அரசாங்கத்தின் மவுனம் கலையும்.

தற்போதுள்ள நடைமுறை அதாவது, 'மதச்சார்பற்று நடந்து கொள்வோம்' என்று உறுதி எடுத்துக் கொண்ட அரசாங்கத்தின் செயல், இந்து தாழ்த்தப் பட்டவர்களுக்கு மட்டும் தான் இடப்பங்கீடு என்பது இந்து மதத்தின் மக்கள் தொகையைக் கட்டிக் காக்கும் கேடயமாகவே இருக்கிறது என்று யாரும் குற்றம் சாட்டினால் இந்திய அரசாங்கம் என்ன பதில் அளிக்கும் ?

பொருளாதாரத்திலும் சமூகத்திலும் நசுக்கப்பட்டுள்ள தலித் கிறித்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக் எதிராக போராடும் உரிமை அதே போன்ற நிலையில் இருக்கும் இந்து தலித் அமைப்புகளுக்குக் கூட கிடையாது என்றே நினைக்கிறேன். வேண்டுமென்றால் இந்து தலித் அமைப்புகள், கிறித்துவ தலித் மக்களுக்கும் சேர்த்தே இட ஒதுக்கீட்டு அளவை கூடுதலாக்கச் சொல்லி கோரிக்கை வைத்து போராடுவது தான் சிறந்த வழி.

********

1. தாழ்த்தப்பட்ட 18 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகும் அந்த சமுதாய மக்கள் முன்னேற்றம் அடையவில்லை - இல.கனேசன்

தகவலுக்கு நன்றி ! அப்படியென்றால் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் எப்போதும் கைவைக்காமல் முன்னேற்றம் அடையும் வரையில் அப்படியே தொடரலாம்.

2. இதனால் இந்து ஹரிஜன மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதை அறியாமல் அவர்கள் சில மத ஊர்வலங்களில் கலந்து கொண்டு வருகிறார்கள். - இல.கனேசன்

என்ன ஒரு கரிசனம் - சிலிர்க்கிறது ! இப்போதாவது தெரிகிறதா ? இந்து தாழ்த்தப்பட்டவராக தொடர சம்மதம் தெரிவித்தால் வெகுமதியாக இட ஒதுக்கீடு கொடுக்கலாம், என்பதை இவ்வளவு கரிசனமாக, அழகாகச் சொல்ல முடியுமா ?

3. மதம் மாறிய தலித்துகளை, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கூடாது என பாஜக கூறியுள்ளது.

அவர்களைத்தான் நாங்கள் தாழ்த்த முடியாதே பிறகு எப்படி தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லமுடியும் என்பதைத்தான் சொல்லமுடியாமல் சொல்கிறார்கள் போலும்.

சுட்டிகள் :
வருண பேதத்தைக் கட்டிக்காக்க பயன்படும் இட ஒதுக்கீடு... !
இடஒதுக்கீடும், தேசிய'வாத' ஜல்லிகளும் !
தாழ்த்தப்பட்டவன் என்று சொல்லிக் கொள்வதில் தான் பெருமையாம்...!
மதமாற்றமா ? மனமற்றமா ?

7 செப்டம்பர், 2008

சாதி ஒழியனும் ஆனால் ...

"இடப் பங்கீடு" அதனால் பாதிக்கப்படுகிறோம் என்று உணர்ந்ததால் ஏற்படும் புலம்பல்கள், திடீர் சமத்துவ வாதிகளுக்கெல்லாம் திடிரென்று ஞானம் பிறந்து இட ஒதுக்கீடு சாதிய உணர்வை அதிகப்படுத்தி இருப்பதாகச் சொல்கிறார்கள். அதற்கு தரவுகளாக (ஆதாரமாக) புற்றீசல்களாக முளைத்த சாதி சங்கங்களைக் காட்டுகிறார்கள். இவர்களின் எழுத்துக்களைப் மேலோட்டமாக படித்தால் 'ஆமாம்ல' என்று தலையசைக்க வைக்கும். இவர்கள் ஆராய்ந்து தான் பேசுகிறார்களா ? உயர்சாதியினரின் கைக்கூலிகளாக பேசுகிறார்களா ? புலம்பல்களைக் கேட்ட புல்லரிப்பில் பேசுகிறார்களா ? இல்லை... இல்லை சமத்துவம் பேசும் சமூக முகங்களாக தங்களை நினைத்துக் கொண்டு அறியாமையில் பேசுகிறார்களா ? என்பது அவர்களே வெளிச்சம்.

சாதிகள் ஒழிய வேண்டும், மதங்கள் கூட ஒழிய வேண்டுமென்பதே என் விருப்பமும், படித்தவர்கள் மிக மிக (அதிகரிக்க)... சாதிப் பெருமை குறைய வில்லையே என்பதே பலரின் ஆதங்கமாக இருக்கிறது. சரிதான். படித்தவர்கள் அரசியலுக்கு வந்தால் விஞ்ஞான முறையில் மாட்டிக் கொள்ளாமல் ஊழல் செய்வது போலவே, படித்தவர்கள் மிக மிக... அவர்களின் சாதியைக் கட்டிக் காக்கும் கேடயங்களாகவே மாறிவிடுகிறார்கள், அரசு பதவியில் தேர்தல் அதிகாரியாக இருந்த மலைச்சாமி போன்றவர்களே இதற்கு சாட்சி. இதன் பின்னனிக்குச் செல்லும் முன், இவற்றை மனதில் கொள்ளுங்கள்.

சாதிக் கொடுமைகள் ஓரளவு ஒழிந்திருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா ? 50 ஆண்டுகளுக்கு முன்பு நாடார்களும், வன்னியர்களும் தீண்டத்தகாதவர்கள், அதனாலேயே இந்த இருசாதிகளில் பலர் கிறித்துவத்தைத் தழுவினார்கள். தற்பொழுது அவர்களை தீண்டாத்தகாதவராக ஒதுக்கி வைக்க முடியுமா ? தலித்துகள் நிலையும் அவர்கள் பொருளாதாரம் கல்வி பெரும் போது உறுதியாக மாறும்.

சாதிய அடையாளம் என்பது குலப்பெருமைக்கும், பிறரைத் தாழ்த்துவதற்கும் என்று நிலையில் இயங்கிதன் புள்ளி கொஞ்சம் மாறி இருக்கிறது. தற்பொழுது உயர்சாதியினர் தவிர்த்து பிறரும் சாதிப் பெருமை பேசுவதற்குக் காரணம், எல்லோரும் நினைப்பது போல் சாதி வெறி என்பது அல்ல, ‘நாங்களும் தாழ்ந்தவர் இல்லை’ என்று சொல்வதே அதன் பொருள்.

எல்லோருமே அவரவர் சாதி உயர்ந்தது... தாம் எவனுக்கு தாழ்ந்தவன் என்று நினைக்கிறார்கள், இனியும் பிறரை சாதிச் சொல்லி தாழ்த்த முடியாத நிலை தான் இன்று. அப்படியும் மீறினால் வன்கொடுமை சட்டம் இருக்கவே இருக்கிறது.

உயர்சாதியினர் தங்கள் சாதியைச் சொல்வதற்கும், ஒடுக்கப்பட்டவர்கள் சொல்வதற்கும் பெரிய வேறுபாடு உண்டு, முன்னது குலப்பெருமை, பின்னது எழுச்சிக்கான அடையாளம். சாதி ஒழிகிறதோ இல்லையோ குலப்பெருமை பேசுவது ஒழிந்து கொண்டு தான் இருக்கிறது.

ஒரு தாழ்த்தப்பட்டவர் உங்கள் முன் வந்து ‘தாம் பறையர் குலத்தில் பிறந்ததற்காக பெருமை படுகிறேன், என் குலம் தாழ்ந்தது இல்லை’ என்று சொன்னால் அதை சாதி வெறியாக பார்க்க முடியுமா ?

சீனர்களில் பல்வேறு பிரிவினர் இருந்தாலும் அவற்றை குடும்ப பெயராக (சர் நேம்) பயன்படுத்துவதுடன் சரி, அவர்களுக்குள் எந்த பேதமும், அந்த சர் நேம் கொண்டவர்களுடன் தான் மணம் முடிப்பு என்றெல்லாம் இல்லை.

பேதங்கள் ஒழிந்தால் அதன் பிறகு சாதி ஒழிந்தாலும் ஒன்று தான் ஒழியாவிட்டாலும் ஒன்று தான், விருப்பபட்டவர்கள் சர் நேம் போலவே தங்கள் சாதிப் பெயரை பெயருக்கு பின்னால் தாரளமாகப் போட்டுக் கொள்ளலாம். ஆனால் மற்றவர்களிடம் சென்று "நீ காலில் இருந்து பிறந்தாய், நான் முகத்தில் இருந்து பிறந்தேன்" என்று சொன்னால் "நான் என் அம்மாவின் கால்களுக்கு இடையே தான் பிறந்தேன்... நீ முகத்தில் இருந்து தான் பிறந்தாயா என்பதை உங்கள் அம்மாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் வந்து சொல்லட்டும் அதன் பிறகு நம்புகிறேன்.." என்பான்.

இது போன்றே 'போலி மதச்சார்பின்மை' என்ற சொல்லும் மிகுந்தவையாகவே உலாவருகின்றன, திராவிடக் கட்சிகள் கிறித்து மற்றும் இஸ்லாமிய அமைப்புடன் கூட்டணி வைத்துக் கொண்டால் அது போலி மதச்சார்பின்மையாம். 'ஆமாம்ல' என்று நினைக்கத் தோன்றுகிறதா ? அவர்கள் சிறுபான்மையினர் எனவே அவர்களை நசுக்க வேண்டும் என்றே இந்துத்துவ சக்திகள் எப்போதும் சொல்லி வருகின்றன. அதனாலேயே அவர்கள் தங்கள் மதத்தின் பெயரால் ஒன்றினைந்து ஒரே தலைமையில் இயங்குகின்றனர், இவர்களிடம் கூட்டணி வைத்துக் கொள்வது போலி மதச்சார்பின்மையா ? அவர்களை இந்திய மக்கள் என்பதிலிருந்து பிரித்துச் சொல்லவே 'சிறுபாண்மையினர்' என்ற அடைமொழியை இந்துதுவாக்கள் பயன்படுத்துகிறார்கள். அதனைப் புரிந்து கொண்டவர்கள் திராவிட அமைப்பினர் தான், இப்போது சொல்லுங்கள் கிறித்துவ / இஸ்லாமியர்களை அரவணைப்பது போலி மதச் சார்பின்மையா ?

இந்தியராகவே பிறந்து இந்தியர்களாகவே மடியும் இம்மண்ணின் மக்களை சிறுபாண்மையினர் என்று தூற்றுவது எந்த வகையில் ஞாயம் ? இவர்களை முறியடித்து அம்மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது மதம் வெறி இல்லாத அனைத்து இந்துக்களின் கடமையல்லவா, நாம் செய்யத் தவறியதை திராவிட அமைப்பினர் செய்து வருகின்றனர், அவர்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளாவிட்டாலும் இந்து மதத்தைவிட்டு ஓடிவிடவில்லையே ? 'போலி மதச்சார்பின்மை' என்ற குற்றச் சாட்டு புறம் தள்ளப் படவேண்டிய ஒன்று.

நவீன சொல்லாடல்கள் மூலம் ஆதிக்க சக்திகள் எப்போதும் தம்மை புதுப்பித்துக் கொண்டே புரட்சி, புரிந்துணர்வு என்றெல்லாம் குழப்பம் உருவாக்கும் அத்தனை உத்திகளையும் மேற்கொள்வார்கள். நடுநிலையாளர்கள் குழப்பத்திற்கு ஆளாகமல் நன்றாக சிந்தித்தே அவர்களின் திரித்தல்களை அடையாளம் காணவேண்டும்.

பின்குறிப்பு : கீழ்கண்ட இருபதிவுகளுக்காக பின்னூட்டமாக எழுதினேன், பெரியதாகிவிட்டதாலும், பயன் கருதியும் தனி இடுகை ஆக்கி இருக்கிறேன்.

சாதி - எதிர்ப்போரே வளர்க்கிறோமா?
சாதி என்னும் பெருங்கேடு - எங்கே போகிறோம்?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்