பின்பற்றுபவர்கள்

திரைவிமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரைவிமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19 ஜனவரி, 2009

வில்லு - பதிவர் விமர்சன கடமை :)

குருவி பாட்டை திரும்ப திரும்ப போட்டுப் பார்த்து, கேட்டு சிம்பு ரசிகையாக இருந்த என் பொண்ணு விஜய் ரசிகையை மாறிட்டாள். :) வில்லு படத்துக்கு போலாம் என்று அவள் விருப்பத்தின் பெயரிலும், வீட்டுக்கு அருகில் திரை அரங்கு இருப்பதால் படம் தொடங்கி எப்ப வேண்டுமானாலும் எழுந்து போகலாம் என்ற முடிவில் வில்லு படத்துக்கு சென்றோம். இரண்டாவதாக விஜய் - குஷ்பு குத்தாட்டம் இருக்குன்னு கேள்விப் பட்டுதான் படத்துக்கு ஓகே சொன்னேன். ஆர அமர கிளம்பினதால், பாட்டு ஓடிக் கொண்டு இருந்த போது தான் உள்ளே சென்றோம். உறுதிபடுத்தப்பட்ட இருக்கையில் (Reserve Seat) வேறொருவர் சற்று பேரிளம் பெண் அமர்ந்து இருந்தால், அவரை கிளப்பி, அவருக்கு உங்க சீட்டு இது இல்லன்னு, அவருடைய சீட்டுக்கு அவரை அழைத்து சென்று காட்டி, அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவிட்டு வந்து அமருவதற்குள் பாட்டே முடிந்துவிட்டது. அந்த காட்சியில் ஒன்ற முடியாமல் போய்விட்டது :(

அப்பன் கெட்டப் பெயரை மகன் துடைக்கும் கிமு காலத்து திரைக்கதை. தாவூத் இப்ராஹிம் ரேஞ்சுக்கு வளர்ந்த இரு தாதாக்களை பலிவாங்கி, தந்தை பெயரை காப்பாற்றும் கடும் பணியை விஜய் மேற்கொள்கிறார். பின்நகர்வு காட்சியில் (ப்ளாஸ் பேக்கில்) அவரே அப்பனாக (சூர்யா, அஜித் செய்வதால்) துணிந்து இவரே நடிக்கிறார். மேஜர் ஜெனரலாம், பார்பதற்கு பாம்ஸ் ஸ்குவார்ட் போல தோற்றமளிக்கிறார்.

வடிவேலு வழக்கமான நகைச்சுவை, சற்று போரடித்தாலும், படத்தில் நகைச்சுவைக்கு இதுவாவது இருக்கிறதே. கூம்பு வடிவ கொண்டை பார்க்கும் போதெல்லாம் சிரிப்பை வரவழைத்தது.

பில்லாவில் அஜித்துக்கு முழுத்திறமையையும் வெளிப்படுத்திய வழங்கிய நயன் தாரா, விஜய்க்கும் துரோகம் செய்யவில்லை இன்னும் தாராளமாக வழங்கி இருக்கிறார். இதுக்கு மேல என்ன சொல்வது. பலரும் விமரசனம் எழுதிவிட்டார்கள்.

விஜய் ஆட்டம், ஸ்டெப்ஸ் அருமை, பிரபு தேவாவின் டச் அதில் நன்றாக தெரிகிறது, விஜய்க்கு ப்ளஸ் ஆட்டம் தான். பிரபு தேவா படங்கள் இப்படித் தான் இருக்கும் என்பதை இந்த படம் பளிச்சென்று காட்டுகிறது. பழைய படங்களைப் பார்த்துவிட்டு அதிலிருக்கும் காட்சிகளை சுட்டு கோர்க்கிறார். இதற்கு பதிலாக எதாவது நல்ல படத்தை ரீமேக் செய்யலாம். படத்தில் பைரவி கீதா மற்றும் ரஞ்சிதா ஆகியோர் விஜயின் வளர்ப்பு அம்மா, பெற்ற அம்மாவாக வருகிறார்கள். இரண்டாவது பகுதியை உன்னிப்பாக பார்பவர்கள் செண்டி மெண்டல் ஆவது உறுதி. ப்ரகாஷ் ராஜை சரியாகப் பயன்படுத்தவில்லை, உடைத் தவிர வேறெதுவும் தாதாத் தனத்தைக் காட்டவில்லை. பொசுக்கு பொசுக்குன்னு அல்லக்கைகளை சுட்டு ஹிட்லராக காட்ட முயற்சித்து அவரை உலக பெரும் தாதா என்று சொல்ல முயன்று இருக்கிறார்கள்.

வில்லு குருவியைவிட பரவாயில்லை. இது இந்தியாவின் தலைசிறந்த ஜேம்ஸ் பாண்ட் படம் என்று விளம்பரப்படுத்தப் படுதாம். கொடுமை கொடுமை கொடுமை. விஜய் இப்படி பட்ட படங்களிளை நடித்து கொடுத்து வந்தால் இடைக்கால அஜித்தை தேடியது போல் தேட வேண்டி இருக்கும்.

வில்லு மழுங்கலான பழைய ஆயுதம் !

16 நவம்பர், 2008

வா...ர...ண...ம்........ஆ...யி...ர...ம்...!

சூரியா படம் என்பதற்காக அல்ல கெளதம் மேனனின் படம் என்பதற்காக விமர்சனங்களைப் படிக்காமல் சென்றது முட்டாள் தனமாகியது. நான்கு படங்களை வெற்றிப்படமாக கொடுத்துவிட்டால் 5 ஆவது படம் 'நாம எதை எடுத்தாலும் பார்த்து தொலைப்பாங்க' என்று நினைக்கும் இயக்குனர் வரிசையில் கவுதம் மேனன் சேர்ந்துவிட்டார் என்று படம் முடிந்ததும் தெரிந்தது. ஆமாம் கவுதம் மேனனின் காக்க காக்க, வே.விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற படங்களைப் பார்த்த துய்ப்பில் இந்தப்படத்துக்குச் சென்றேன்.

"Life has to go on" என்ற சித்தாந்த அடிப்படையில் நடக்கும் சம்பவங்களை ஏற்றுக் கொண்டு முன்னேறிச் செல் என்ற ஒற்றைவரிதான் படத்தின் கதை. கதைப்படி அப்பா - மகன் இருவரும் சூர்யாக்கள், அப்பா சூர்யா பரிதாபமாக இருக்கிறார், ஜாக்கி என்று பெயரில் முன்பெல்லாம் சண்டைக்காட்சிகளில் வரும் வில்லனுக்கு வயதானவர் வேசம் போட்டால் இருப்பது போன்ற தோற்றம், சூர்யா வயதானால் சிவக்குமார் போலத்தானே இருப்பார், அந்தக் உண்மையால் சூர்யாவின் வயதான செயற்கை வேடம் படத்துக்கு ஒட்டவே இல்லை. (கோல்ட் ப்ளேக்) சிகெரெட் பிடிப்பதால் கேன்சர் வந்து செத்துப் போவதாகக் காட்டுவார்கள் (படத்துக்கு அன்பு மணி நிதி உதவி செய்தாரோ ?) மகன் சூர்யாவை நல்ல முறையில் வளர்க்கும் பொறுப்பான அப்பா வேடம். மகன் அலட்டிக்கொள்ளாத துறுதுறு. கல்லூரி கடைசி ஆண்டில் ஊருக்குத் திரும்பும் போது சவீதா ரெட்டியை சந்தித்து முதல்பார்வையில் காதலிக்கத் தொடங்கி, வாங்கப் பழகிப் பார்த்து காதலிக்கலாம் என்று சொன்னதை நம்பி அவரை அமெரிக்காவரை துறத்திச் சென்று காதலிக்கிறார். அவர் விபத்தில் இறக்கவே சென்னைத் திரும்பி, இரண்டாவது காதல் அதாவது தங்கையின் தோழி குத்து ரம்யா மீது காதல் அறும்புகிறது (பசங்களுக்கு மட்டும் தாடியை மழிப்பதற்கு 2 வாது ஒண்ணு சிக்கிடுது பாரேன்...பின் சீட்டில் இருந்த இளைஞர்களின் கமெண்ட் ரசித்தேன்) இடையே காதலியை மறக்க போதையை நாடி...(அந்த காட்சிகளில் நன்றாக செய்திருக்கிறார்) அதிலிருந்து மீள காஷ்மீர் செல்வது, அங்கே அமெரிக்காவில் சந்தித்த ஒரு பணக்காரரின் மகனை (டெல்லியில்) சிலர் கடத்திவிட அதிரடியாக தனியாக துப்புத் துலக்கி...அந்த சிறுவனை மீட்டுக் கொடுக்கிறார். அங்கு கடத்தல் காரனாக நடித்திருக்கும் பப்லூ அசத்தல் நடிப்பு...அதன் பிறகு ரம்யாவுடன் திருமணம் என்பதாக நீண்டு கொண்டே செல்கிறது.

படம் பார்பவர்கள் சீட்டு நுனிக்கே வந்துவிடுகிறார்கள். ஒண்ணும் இல்லை படம் எப்போ முடியும் எழுந்து போவோம் என்று தான். 70 களின் காட்சிகளாக அப்பா சூர்யா - அம்மா சிம்ரனின் காதல் காட்சிகளை வைத்திருக்கிறார்கள், அவர்களின் மகன் சூர்யாவின் 90 களின் காட்சிகள், ஓரளவுக்கு காலக் கட்டத்தை துல்லியமாகக் காட்ட உடை, வாகனம் இவற்றிலெல்லாம் கவனம் செலுத்தி இருக்கிறார்கள். 90 களின் விளம்பரங்களாக Solidair TV விளம்பரமெல்லாம் வைத்திருந்தது நல்ல நேர்த்தி. பாடல்கள் கேட்கும் ரகம் தான். மூன்று மணி நேரம் படம்....இ......ழு......வையாகச் சென்றது, படம் போரடிக்கவில்லை என்றாலும் நீளமானக் திரைக்கதை பார்பவர்களை அலுப்படைய வைக்கிறது.

படத்தில் மொத்தம் மூன்று காதல் காட்சிகள்...இதுவே படத்தின் பின்னடைவு, ஒளிப்பதிவு, பின்னனி இசையும் அருமையாக இருந்தது. படம் ஒரேடியாக டப்பா என்று சொல்ல முடியவில்லை. தீபாவளிக்கு வந்தப் படங்களை ஒப்பிடுகையில் வாஆ பரவாயில்லை. மீசையை எடுத்து இராணுவ மேஜராக வரும் சூர்யா ரியாஸ்கானைப் போன்றே தோற்றமளிக்கிறார். கல்லூரிக்கால சூர்யாவின் தோற்றம் நன்றாக இருக்கிறது. எப்படி இருந்த சிம்ரன் என்று சிம்ரன் ரசிகர்கள் பெருமூச்சு விடுவார்கள்.

அடிச்சு பிடிச்சு உடனே பார்க்கும் அளவுக்கு படம் சூப்பர் என்று சொல்லமுடியவில்லை. கிரைம் சப்ஜெக்ட் வைத்து படம் எடுக்கும் கவுதம் மேனன் காதல்களையும், அப்பா சென்டிமெண்ட் கலந்து வைத்து செய்திருக்கிறார், படம் ஆட்டோகிராப்பை நினைவு படுத்துவதாக பின்சீட்டில் சிலர் கமெண்ட் அடித்தார்கள். கவுதம் மேனன் படம் என்று செல்பவர்களுக்கு படம் ஏமாற்றத்தையே தரும். (வழக்கமாக கவுதம் படத்தில் வரும் 'மாயா' என்ற பெயர் கதை நாயகிக்கு வைக்கவில்லை:)), கஜினிக்கு பிறகு சூர்யா நம்பிக் கொண்டிருந்தப்படம், சூர்யா ரசிகைகளுக்கு பிடிக்கலாம். வ...ரா...ண...ம்........ஆ...யி...ர...ம் இழுவை. படம் பார்த்துவிட்டு யாரும் திட்டக் கூடாது என்பதற்காகவே 'life has to go' என்று முடிவில் சொல்லிவிடுகிறார்கள். அதைப் புரிந்து கொண்டு....சரிதான் தலையெழுத்து...ஹூம்....என்ற பெருமூச்சு படம் பார்த்துவிட்டு வருபவர்களிடம் வருகிறது

26 அக்டோபர், 2008

ஏகன் ! தல ஏன் ?

டிஸ்யூம் டிஸ்யூம் சண்டை நடக்கும் காட்சியின் போது தான் திரையரங்கினுள் நுழைந்தேன். வில்லன் சுமனுக்கு எதிராக சாட்சி சொல்ல நீதிமன்றம் செல்ல இருந்த அப்ரூவர் வில்லன் (பாட்ஷா படத்தில் நக்மா அப்பாவாக நடிப்பவர்) குழுவிடமிருந்து தப்பிச் செல்லும் காட்சி. அதன் பிறகு அஜித் அறிமுகக் காட்சி, பாபு ஆண்டனியை ஞாபகப் படுத்தும் கெட்டப். வில்லனின் ஹாங்காங் ஏஜெண்டை பட் பட் என்று சுட்டு வீழ்த்துகிறார்.

போலிஸ் உயர் அதிகாரி நாசரின் (வளர்ப்பு மகனான - அதற்கு ஒரு கண்ணீர் சிந்த வைக்க முயலும் ப்ளாஷ் பேக் படத்தின் பின்பகுதியின் வைத்திருக்கிறார்கள், மிஸஸ் மணிரத்னம் வந்து போகிறார் ) வளர்ப்பு மகனான அஜித் அப்ரூவரை கண்டுபிடித்து கைது செய்வதும் வில்லனை போட்டுதள்ளுவதுடன் கதை முடிந்துவிடுகிறது.

அப்ரூவரின் மகளை வில்லன் கும்பல் குறிவைக்கும் என்று அறிந்து, ஊட்டி கல்லூரியில் மாணவனாக பாதுகாப்புக்காக அனுப்பப்படுகிறார் அஜித். அஜித் மாணவனா ? பார்பவர்கள் கிண்டல் செய்யக் கூடும் என்பதை உணர்ந்தே அவர்களே திரைக்கதையில் அதைச் செய்துவிட்டார்கள்.

முக்கிய பாத்திரம் நயன்தாரா, கல்லூரி விரிவுரையாளராக அறிமுகம் ஆக அவரை துறத்தி காதலிக்கும் மாணவனாக அஜித் என இடையே திரைக்கதை நகர்த்தப்படுகிறது. முந்தானை முடிச்சு தீபா கெட்டப்பில் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டுடன் கூடுதல் கவர்ச்சியுடன் நயன் தாரா கல்லூரி விரிவுரையாளர் ஆகவருவது, கல்லூரிகளின் தரத்தைக் கேவலப்படுத்தும் செயல், இப்பொழுதெல்லாம் எல்லா கல்லூரிகளிலுமே மாணவ - மாணவிகளுக்கே ட்ரெஸ் கோட் உண்டு.

எனக்கு படத்தில் பிடித்த மற்றொரு பாத்திரம் ஜெயராமன், இவரது குழந்தைத்தனமான நடிப்பு எப்போதும் எனக்கு பிடிக்கும், இந்தப்படத்திலும் நிறைவாகச் செய்திருக்கிறார். அவர்தான் அந்த கல்லூரியின் முதல்வர் அஜித்துக்கு உதவுகிறார், அவருடன் சேர்ந்து சத்தியன் காமடி செய்ய முயன்றிருக்கிறார். ஈஎம்சி ஹனிபா அஜித்தின் உதவியாளராக நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்டு நன்றாகவே செய்தார். படம் சீரியஸ் கதையாக காட்டப்பட்டு பிறகு முழுநீள நகைச்சுவையாக்க முயன்று தோற்று இருக்கிறார்கள்.

பாடல் இசையில் சத்ததத்தைத் தவிர வேறெதும் காணும், பிரபுதேவாவின் அண்ணன் ராஜு சுந்தரம் இயக்கம் என்பதால் 5 பாட்டுக்கு குத்துப்பாட்டு டான்ஸ் இருக்கிறது. பாடல்கள் எதுவும் நினைவுக்கு வரவில்லை. ராஜு சுந்தரம் கன்னி முயற்சியாக இயக்கம் வசனங்களில் கவனம் செலுத்திய அளவுக்கு காட்சியில் திரைகதையில் கவனம் செலுத்தவில்லை, அவ்வளவாக அனுபவமின்மையைக் காட்டுகிறது. விஜயை வைத்து பிரபுதேவா போக்கிரியைக் எடுக்க முயன்றது போல் அஜித்தை வைத்து ராஜு சுந்தரம் முயன்று... ஹூகூம் என்றே சொல்ல வைக்கிறது. நாசர் போலிஸ் அதிகாரி அவரது மகன் அதைச் சுற்றி க்ரைம் கதை, இதுபோல் தமிழில் 10 படங்களுக்கும் மேல் வந்துவிட்டது. போக்கிரி கதை போலவே :(

பில்லா வெற்றியை நம்பி அஜித் - நயன் தாராவை ஜோடி சேர்த்து ஒரு சொதப்பலான கதைக்கு பயன்படுத்த முயன்று இருக்கிறார்கள் என்பதைத் தவிர்த்து வேறெதும் படம் பார்பவர்கள் உணரப் போவதில்லை. அஜித் சண்டைக்காட்சிகளும் மற்ற படத்தில் வந்தவைப் போன்றே இருந்தது. பில்லா படம் ரீமேக் என்றாலும் படத்தில் ஒரு ரிச்னஸ் இருந்தது, இதில் அதுவும் இல்லை. தல ஏன் இப்படி என்று கேட்க வைக்கிறது ? ரசிகர்களால் ஓடினால் உண்டு.

ஏகன் ஏமாற்றம் !

2 ஆகஸ்ட், 2008

குசேலன் - கையேந்திபவன் இட்லியும் ஒரு ஓரத்தில் ஸ்டார் ஓட்டல் சட்டினியும் !

'தன்னுடைய வாழ்க்கை வரலாறு போல் இருக்கிறதென்பதால் இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்தார்' என்றெல்லாம் குசேலன் பற்றி கசியவிட்டார்கள், கட் அவுட் பாலாபிஷேகம், அண்ணாமலை, சந்திரமுகி 2 ஆம் பாகம் எல்லாம் ரஜினி சாமாச்சாரமாகக் காட்டிவிட்டு... ரஜினி தன் பாத்திரத்திலேயே ஏன் 'அசோக் குமார்' என்கிற பெயரில் 'நடிக்கிறார்' என்று புரியவில்லை.

படம் பற்றி எப்போதாவது எதிர்மறை கேள்வி கேட்கும் போது 'அசோக் குமார்' என்ற பாத்திரத்தில் நடித்தேன் அவ்வளவுதான் என்று ஆர் சுந்தாரஜனிடம் படத்தில் சொல்வது போல் சொல்வதற்கான முன்னேற்பாடோ ! எதையும் புதிராகப் பேசக்கூடிய அவருக்கே எல்லாம் வெளிச்சம். அவருடைய மவுனத்திற்குக்கூட இட்டுக்கட்டி ஆயிரம் பொருள் கூறி பெருமை பேசும் ரசிக சிகாமணிகள் இருக்கும் வரையில் அவர் எதைப்பற்றியும் கவலைப்படத் தேவை ?

********

பாட்சா, அண்ணாமலை வகையைச் சேர்ந்த 'நட்பை'ப் பற்றிய கதைதான். ஏழ்மையில் வாடும் நண்பன் (பசுபதி) தன் ஊருக்கு படப்பிடிப்புக்காக வரும் சூப்பர் ஸ்டாரின் அசுர வளர்ச்சியைக் கண்டு பயந்து அவரை சந்திக்க தயங்குவதும், அதற்குக் தடையாக அவரது காவலாளிகள் குறுக்கே நிற்பதும், இறுதிக் காட்சியான பள்ளிவிழா ஒன்றில் ரஜினி நண்பனை நினைத்து உருக்கமாக பேசிய காட்சிகள் மூலம், தான் என்றுமே பழசை மறக்காதவன் என்று கருத்தைச் சொல்ல முயன்றிருக்கிறார்.

பசுபதியைத் தவிர அவரது குழந்தைகள் மனைவி மீனா ஆகியோர் வறுமையில் இருப்பது போன்று இல்லாமல் உடைகள் பொருத்தமற்று இருக்கிறது. பாழடைந்த வீட்டையும், மரநாற்காலியும், ஒரு சைக்கிளும் தான் படத்தில் பசுபதியின் வறுமையைக் காட்டும் சின்னங்கள்.

நகைச்சுவை என்ற பெயரில் 'பேரீச்சம்பழத்தை கொட்டையோடு முழுங்கிடாதே...அப்பறம் மூனாகிடும்' என்று வடிவேல் பேசும் வசனம், வேட்டியைத் தூக்கிக் காட்டி ஒன்பதாவது அதிசயம் பார்க்கிறியா ? லிவிங்ஸ்டன் பேசும் ஆபாச வசனமும் நகைச்சுவை என்ற பெயரில் முகம் சுழிக்க வைத்தது. சந்தானம் வழக்கமான அண்டங்காக்கா குரலில் நகைச்சுவை செய்ய முயன்றிருக்கிறார். பில்லாவில் நயன்தாராவின் முழுத்திறமைக்(?) கண்டதால் தானோ, அவரது கவர்ச்சியை நகைச்சுவை என்ற பெயரில் அவர் உடை சரிசெய்யும் காட்சியை வடிவேலு மறைந்திருந்து பார்பதாகக் காட்டி வெளிச்சம் அடித்து இருக்கிறார்கள். 'பி'வாசுவுக்கு வயதாகிவிட்டதால் இதுபோன்ற மட்டமான கற்பனைக் கழிசல்களைத் கடைவிரித்து இருக்கிறார்.

ரஜினி ரசிகர்கள் அவரை படப்பிடிப்பில் பார்க்க தவமிருந்து தள்ளுமுள்ளில் போலிஸ்காரர்களிடம் அடிவாங்குவது போன்ற காட்சி இயல்பாகவே இருக்கிறது.

மற்றக் காட்சிகளையெல்லாம் ஏற்கனவே பல பதிவர்கள் விமர்சித்து விட்டபடியால் விட்டுவிடுகிறேன்

60 கோடிக்கு பிரமீடு சாய்மிரா இதை வாங்கி இருக்கிறதாம். படத்தில் ரஜினி வருவது பாடல்காட்சியுடன் சேர்த்தே 40 நிமிடங்கள் தான் இருக்கும், இந்த 60 கோடியையும் வசூலிக்க ரஜினியை முன்னிறுத்தி விளம்பரம் செய்தால் தான் பணத்தை அள்ள முடியும். இதற்காகவே பசுபதி குசேலன் பாடல் வெளியீட்டில் தலைகாட்டுவது நல்லதல்ல என்று முடிவு செய்ததும், பெங்களூருவில் 2 கோடி வசூல் குறைந்துவிடும் என்பதால் ரஜினி மன்னிப்புக் காட்சிகளெல்லாம் நடந்தேறி இருக்கிறது என நினைக்க முடிகிறது.

வியர்வைக்கு தங்கக்காசு என்று எழுதிக் கொடுத்தப் பாட்டைப் பாடும் ரஜினி (அப்படித்தான் அவர் சொல்கிறார்) ஏசி அறையில் நின்றுகொண்டு இதில் பசுபதியின் வியர்வையின் மூலம் தயாரிப்பாளர் கவிதாலயா பாலச்சந்தருக்கு தங்காசு கொட்ட முயற்சி எடுத்து இருக்கிறார். என்ன இருந்தாலும் கேபிசார் வளர்த்துவிட்டவர் ஆயிற்றே. முத்துப்படத்திற்கு பிறகு கலைபிரம்மா பாலச்சந்தர் சார் எவ்வளவோ கெஞ்சியும் கால்சீட் எதையும் கொடுக்காததால் இந்த பேருதவி செய்து கேபிசாரின் கலை தாகத்திற்கு காக்டெய்ல் வழங்கி இருக்கிறார்.

ரஜினியை மையப்படுத்தி அமைந்த ஜிவி.பிரகாசின் இசையில் வந்த பாடல்கள் ஏஆர்ரகுமான் டைப் பாடல்கள் போன்றதே. ஏற்கனவே பலமுறைக் கேட்டதால் படத்தில் பார்க்கும் போது அலுப்பைத் தரவில்லை. பசுபதி - மீனா பாடும் பாடல் சத்தியமாக நினைவில் இல்லை. அவர்களின் ரேஞ்சுக்கு அப்படி பாட்டு வைத்தாலே போதும் என்று நினைத்து இருப்பார்கள் போல.ரஜினி - நயன்தாரா ஆகியோர் தோன்றும் ரஜினி புகழ் பாடல்காட்சியும், கெட்டப்பும் சகானா பாடல்காட்சியை நினைவு படுத்துகின்றன. புதிதாக தெரியவில்லை
20 கெட்டப் என்னன்னவே சொன்னார்கள், அப்படியெல்லாம் தெரியவில்லை. சினிமா தவிர்த்து பொது இடங்களில் நிருபர்களுடன் பேட்டியின் போது சிகெரெட்டும் கையும், மேக்கப் இன்றி வரும் ரஜினி சார், இந்த படத்தில் (அவராகவே) சூப்பர் ஸ்டாராகவே நடிக்கும் ரஜினி, அவர் தூங்க முயன்று அந்த இடத்திற்கு வெளியே ரசிகர்களின் கூச்சல்களால் தூக்கம் தடைபட்டு பிரண்டு பிரண்டு படுக்கும் காட்சியிலும் கூட கருகரு முடியுடன் மேக்கப் போட்டே தூங்குவதாகக் காட்டுவதால் காட்சி அமைப்பில் இயல்பு இல்லை.

********

இந்த படத்திற்கு 2 பாடல்களுக்கு மட்டுமே செலவு ஆகி இருக்கிறது. மற்றக்காட்சிகளில் அப்படி என்ன செலவு செய்தார்கள் என்றே தெரியவில்லை, கதையும் மற்ற காட்சிகள் எல்லாம் வெகு சாதாரணமானவையே, இதற்கு இவ்வளவு பில்டப் ஏன் என்று கேட்க வைக்கிறது.

படத்தில் ரஜினியின் பாத்திரத்தைக் குறைச் சொல்ல ஒன்றும் இல்லை என்றாலும், படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்கள் எவரிடமும் ரஜினி (பிராண்ட்) படம் பார்த்த திருப்தியில்லை என்பது அவர்களின் சலிப்பான பேச்சில் தெரிந்தது.

மொத்தத்தில் கையேந்தி பவன் இட்லி போன்ற சாதாரணப் படத்தை சூப்பர் ஸ்டார் என்னும் சட்டினியை ஓரத்தில் வைத்துவிட்டு ஸ்டார் ஓட்டல் சாப்பாடு என்பது போல் விளம்பரப்படுத்தி வெளியீட்டாளர்களிடம் தயாரிப்பாளர்கள் நிறைய காசு பார்த்துவிட்டார்கள். ரஜினி இதற்கு ஏன் துணை போனார் என்பது தெரியவில்லை? பழசை மறக்காமால் பாலச்சந்தர் சாரின் நட்புக்காக :) காசு கொடுத்து படம் பார்க்கும் ரசிகர்கள் பாவம் இல்லையா ?

குசேலன் 'ஓடி' போட்டியாக இல்லாமல் கண்டிப்பாக தசவதாரத்தையும் இன்னும் நெடுநாள் ஓடவைத்தே தீரும் !

21 ஜூன், 2008

தசவதாரம் - பதிவுலகம் சாராத ஒருவரின் விமர்சனம்

தலைப்பிலேயே டிஸ்கி (disclaimer) போட்டாச்சி, அதனால் தசவதார விமர்சனமா ? ஐயோ கொல்றாங்களே என்று சொல்வதை தவிர்பீர்கள் என்று நினைக்கிறேன். அப்படியும் கொலைவெறி வந்தால், இதற்கும் மேல் கீழே படிக்க வேண்டாம். எனது நெருங்கிய நண்பரின் மாமனார் ஒரு விமர்சனத்தை எழுதி அவருக்கு மின் அஞ்சல் அனுப்பி இருந்தார். அதை நண்பர் எனக்கு அனுப்ப...உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். பதிவர்கள் அடுத்த சுற்று 'தசவதாரம் எடுக்க' ஐடியா கொடுத்தாச்சு :)

இனி அவர் அனுப்பியதை இங்கே அப்படியே பதிக்கிறேன். அதில் எனது கருத்து எதையும் சேர்க்கவில்லை.

********

தசாவதாரம் -- ஒரு விமர்சனம்
தசாவதாரம் தொடங்கி சில நிமிடங்களிலேயே எனக்குத் தலைவலியின் அறிகுறி தோன்றத் தொடங்கி விட்டது.

கமல் போன்ற வெளிவாசிகளின் (outliers, the milder alternative for geniuses!) எதிர்பார்க்கப்பட்ட பண்புதான் இது! ஒரு நேரம் மிக ஆச்சரியகரமாய் அனைவரையும் கவர்வார்கள்; ஒரு நேரம் பெரும்பான்மையோரைச் சலிப்படைய வைத்துவிடுவார்கள்! ஆளவந்தான், அன்பே சிவம், மும்பை எக்ஸ்ப்ரெஸ், விருமாண்டி என்று மாறி மாறி வரும் கமலின் படைப்புத் தரங்களைப் பார்த்தால் நாம் இதை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். ராம்கோபால் வர்மா இன்னொரு எடுத்துக்காட்டு (இப்போது அவர் மேலெழுந்து வரும் அறிகுறி குறைவாக இருப்பது வேறு விஷயம்!)

தசாவதாரத்தின் முக்கியமான குறைகள்: பெரிதும் எதிர்பார்ப்புடன், பெரிய செலவு செய்து, நீண்ட காலம், நிறைய முயற்சிகள் செய்து ஒரு படம் எடுக்கும்போது அப்படத்தின் வகையை (genre) முதலில் நிர்ணயிக்க வேண்டியது முதற்கண் தேவை. இது ஒரு பொழுதுபோக்குப் படமா, ஒரு 'புத்திசாலிப்' படமா? பொழுதுபோக்கிலும் ஒரு மகானுபவப் (adventure) படமா, ஒரு உறவுகளின்/சம்பவங்களின் கோர்வையா (drama), ஒரு நகைச்சுவைப் படமா? தசாவதாரம் ஒரே நேரத்தில் இவையனைத்துமாகவும் இன்னும் மற்றபிறவாகவும் (அறிவியல், வரலாறு, உண்மைச்சம்பவங்களின் பின்புலம்) இருக்க முயல்கிறது. இதுவே அதன் முதற்குறை! இக்குறையையும் ஒரு நேரிய திரைக்கதையின் மூலம் நிவர்த்தி செய்திருக்கலாம்; செய்யவில்லை! அது மிகப்பெரிய இரண்டாம் குறை!

இவ்வளவு செலவு செய்து ஒப்பனை செய்து என்ன பயன்? ஓரிரு வேடங்களைத்தவிர மற்ற அனைத்தும் முகபாவங்களைக் காட்டமுடியாத அளவுக்குக் கல்லாகவும் பளபளப்பாகவும் நிற-அமைவு இல்லாமலும் சலிப்பையும் (சிலே நேரங்களில் சிரிப்பையும்) வரவழைப்பதே உண்மை!

ஆழம் தெரிந்து காலை விட்டிருக்க வேண்டும்; அமெரிக்கக் காட்சிகளும் கதை அமைப்பும் (நாசாவில் எங்கும் தமிழர்களா?) பெரிதும் நிரடுகிறது. 'ஹே ராம்' எடுத்தவர் இவர்தானா என்ற வியப்பு தோன்றுகிறது!

என்னைப் பொறுத்தவரை இப்படத்தில் என்னைக் கவர்ந்தது சில பாத்திரங்களின் வசன உச்சரிப்பே! குறிப்பாகத் தெலுங்கு-தமிழ் CBI அதிகாரியும் தலித் போராளியும் இத்துறையில் தேறுகிறார்கள்!

மிச்ச சிறப்புகள் அனைத்தும் மற்ற குறைகளின் அழுத்தத்தில் காணாமலே போகின்றன! மெல்ல மெல்ல வந்த என் தலைவலி சப்பணம் போட்டு அமர்ந்துகொண்டு மறுநாள் காலை வரை.

பின்குறிப்பு : இது தசவதாரம் குறித்த எனது எட்டாவது பதிவு. இன்னும் 2 சேர்த்து பத்தாவது பதிவு போடுவதற்கு எதாவது தேறும் என்ற நன்நம்பிக்கையில் இருக்கிறேன். வழக்கம் போல் பேராதரவு கொடுத்து எனது லட்சியத்தை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில் :)

தொடர் : ஒலக நாயகனின் தசவதாரம் - திரைக்கதை ( செப் 2006. எழுதியது நகைச்சுவை தொடர்)
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4

தசவதாரம் - கிளம்பிய புதிய சர்ச்சைகள் !
தசவதாரம் - பார்த்தவர்களுக்கு மட்டும் ...
தசவதாரம் - ஒரு சோதிட பார்வை !

15 ஜூன், 2008

தசவதாரம் - பார்த்தவர்களுக்கு மட்டும் ...

'இந்த குழந்தை பிறந்த நேரம் உலகத்துக்கே ஆபத்து' வழக்கமான மாரியாத்தா கதைக்கு மாற்றாக அமெரிக்கத் தனமான அறிவியல் பயமுறுத்தல் கதை. 'உயிர்கொல்லி கெமிக்கல் எதிரிகளின் கைகளுக்கு சிக்கிவிட்டாலோ, அல்லது திறந்து கொண்டாலோ ஏற்படும் விளைவுகள் சுனாமியால் தடுக்கப்படுகிறது' பெரிய எழுத்தில் சிறிய சிலேட்டில் எழுதிவிடக் கூடிய கதை. நைட் சியாமளனின் ஹேபனிங்க் கூட உலக மக்களை தற்கொலை செய்து கொள்ள வைக்கும் ஒரு கிருமி பற்றியது.

அதற்கு விதவிதமான மேக்கப் போட்டு சோழர்காலம் முதல் சென்ற சுனாமி வரை உள்ள காலத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள். சைவ வைணவ சண்டைகளுக்கு காரணம் குலோத்துங்கச் சோழன் 'தான்' என்று கதையில் சொல்லிவிட்டதால் இராமகோபாலன்களுக்கு நிம்மதி ஏற்பட்டு இருக்கும், சோழர்காலக் கதையில் காட்டி இருக்கும் ஒரு வைணவருக்கே முதுகில் கொக்கி மாட்டி தொங்கவிடப்பட்டு சிலையுடன் கடலில் மூழ்கடிக்கப்படும் இத்தகைய கொடூர தண்டனை என்றால் சைவ சமயம் தழைக்க கழுவேற்றப்பட்ட எண்ணாயிரம் சமணர்கள் அந்த காட்சியின் போது என்னுள் வந்து சென்றார்கள். :(

துரோகிகள் எப்போதும் கூடவே தான் இருப்பார்கள் என்று சொல்லுவிதமாக அமெரிக்க விஞ்ஞானியாக இருக்கும் கமலின் நண்பர்களின் பாத்திரங்கள். அங்கிருந்து தப்பிக்கும் காட்சிகள் எல்லாம் அருமை. இடையில் காட்டப்படும் ஜப்பானிய கராத்தே மாஸ்டர் படத்தின் இறுதிக் காட்சிகளில் மட்டுமே ஒட்டுகிறார். பாத்திரத்தின் முழுமைக்காக கமல் மிகவும் பாடுபட்டு இருப்பதால் என்னவோ அங்கு கமல் என்ற அடையாளமே மறைந்து இருக்க இல்லாமல் வேறுருவரைக் கூட அதற்கு போட்டிருக்கலாம் என்றும் தோன்றியது. முற்றிலும் மாறுபட்ட பாத்திரம் என்பதை தனது சுவடில்லாமல் சிறப்பாக செய்திருக்கிறார் என்றும் கொள்ளலாம்.

எனக்கு படத்தில் மிகவும் பிடித்தது பல்ராம் நாயுடு பாத்திரம் தான். பெங்களூரில் இருந்த போது பார்த்திருக்கிறேன் தெலுங்கர்கள் (பாஸ்) தட்டுத்தடுமாறி பேசும் தமிழை அப்படியே நகைச்சுவையுடன் கலந்து தந்திருப்பதை ரசித்தேன். அது போன்ற பாத்திரங்களை பலர் பார்த்திருக்கக் கூடும். கமல் சிறப்பாகவே செய்திருக்கிறார். அட்டகாசம் பல்ராம் நாயுடுவை மீண்டும் ரசிக்க மறுமுறை படம் பார்ப்பேன். :)

உயர்ந்த மனிதன், மற்றும் ஜார்ஜ் புஷ் உருவங்கள் அவ்வளவாக மனதில் ஒட்டவில்லை. பூவராகவன் பாத்திரம் பேசும் வசனங்களுக்காகவும் உருவ அசைவுகளுக்காகவும் மனதில் ஒட்டியது. சிங் வேடத்தில் புற்றுநோயால் இரத்த வாந்தி எடுக்கும் காட்சியைப் பார்க்கும் போது...இதைத்தான் ஏற்கனவே வாழ்வே மாயம், சலங்கை ஒலி படத்திலியே பார்த்துட்டோம்ல என்று நினைக்க வைத்தது. சிங் பாடும் பாடல் எழுந்தாட வைக்கும் என்று நினைத்தேன் ஏமாற்றம் தான். பஞ்சாப் பங்க்ரா நடனம் பார்த்தவர்களுக்கு அது சலிப்பையே தரும்.

சுனாமி சோகத்தில் மக்கள் அங்கும் இங்கும் அலறிக் கொண்டு ஓடுவதாகக் காட்டிக் கொண்டே நடுவே கமல் - அசின் பேசும் ரொமான்ஸ் வசனங்கள் அந்த சூழலிலும் அப்படி பேசிக் கொள்ள முடியுமா ? எதார்த்தமாக இல்லையே என நினைக்க வைத்தது. அடுத்தபடமெல்லாம் இவ்வளவு செலவு செய்யாமல் கே எஸ் இரவி குமார் எடுப்பாரான்னு எதிர்ப்பார்பை உண்டாக்கிவிட்டது. படத்தில் பார்க்க வேண்டும் என்று பாடல்கள் எதையும் இதுவரை கேட்காமல் சென்றதான் 'முகுந்தா...முகுந்தா' பாடல் தவிர எதுவும் ஒட்டவில்லை.

கடைசியில் கமல் மேக்கப் போட்டுக் கொள்ளும் காட்சியைப் பார்க்கும் போது உண்மையில் அதிர்ச்சி...சிஐஏ ஏஜெண்ட் அமெரிக்கராக நடித்தவரும் அவர் தான் என்று. அதன் பிரமிப்பு அகல நீண்ட நேரம் ஆயிற்று. காரணம் இந்த அமெரிக்கர் நன்றாக செய்கிறாரே அடுத்த அடுதத தமிழ் படங்களில் வாய்ப்புக் கிடைத்தால் தமிழ்நாட்டுக்கு வந்துவிடுவார் என்று படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது நினைத்துக் கொண்டிருந்தேன். மல்லிகா செராவத் 'தாராள' நடிப்பு...ஏற்ற பாத்திரம் சிறப்பாக செய்து இருந்தார். ஜெயபிரதா - எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் என்று சொல்ல முடியாதா அளவுக்கு ஓரளவு நன்றாகவே இருக்கிறார். அசின் லொட லொட பேச்சு கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்தியது (ஓவர் ஆக்சன்) மற்றபடி கமல் படத்தில் வரும் நாகேஷ், சந்தான பாரதி வருகிறார்கள். ரேகவும் பி.வாசுவும் தலையை காட்டுகிறார்கள். சுனாமி காட்டுவத்ற்கு முன்பு வரும் காட்சிகள் மைக்கேல் மதன காமராசனை நினைவு படுத்துகிறது.

சிவாஜியா ? தசவதாரமா ? - தமிழ்மண பதிவுகளைப் பொருத்தும்... சூடான இடுகைகளையும் மட்டுமே ஒப்பிட்டால் தசவதாரம் சிவாஜியை பின்னுக்கு தள்ளிவிட்டதென்றே சொல்லலாம். :) படத்தைப் பற்றி பலர் எழுதியதை படிக்கவில்லை. இருந்தாலும் சுனாமி போன்று தசவதார பதிவுகளாக வந்து எதிர்பார்க்க வைத்தது...ஓரளவுக்கு எதிர்பார்ப்பு ஏமாற்றம் தரவில்லை என்றாலும் ஏன் இவ்வளவு பில்டெப் என்றும் நினைக்க வைக்கிறது. கிறித்துவ, இஸ்லாமியர், தெலுங்கர் மற்றும் பார்பனர் ஆகிய பலதரப்பையும் கவரும் வண்ணம் பாத்திரங்களை படைத்து இருப்பது வியாபார தந்திரம் தான். வெற்றி அடைந்திருக்கிறார்கள்.

2 டிசம்பர், 2007

இராமே'ஸ்வரம்' திரைக்காவியம் பற்றி...

தூரிகை வரையும் ஓவியங்கள்
பேசினால் அவன் தான் ஓவியன் !
திரையில் கூட பாத்திரங்கள்

நம்மோடு கலந்துவிட்டால் அது காவியமாகிறது, சேதுபடத்திற்கு பிறகு ஒரு நேர்த்தியாக, இயல்பை எடுத்தப்படம் இராமேஸ்வரம்.

இராமேஸ்வரம் படத்தை திரைப்படம் என்ற அளவு, இலக்கணத்தில் என்னால் விமர்சிக்க முடியாது, படம் தொடங்கிய நொடியில் இருந்து முடியும் வரை இராமேஸ்வரத்தில் ஈழத்தமிழர்களின் முகாம்களில் நடப்பதை நேரடியாக பார்த்தது போன்று உணர்வு.

அகதிகளுக்கு காதல் உணர்வு வரலாமா ? ஏற்படும் காதலினால் வந்து தங்கி இருக்கும் இடத்தில் வலியையும் வேதனையும் மறந்துவிடலாமா ? அப்படி இந்திய மண்ணில், இங்குள்ள தமிழ் பெண்ணின் மேல் காதல் வந்தால் அதனை ஏற்பதற்கு எந்தவகையான தியாகங்களெல்லாம் தேவைப்படுகிறது என்பது தான் கதை.

ஜீவன் என்ற பெயரில் அகதியாக இராமேஸ்வரம் வந்திறங்கும் ஜீவா, கடைசிவரை ஜீவாவாக இல்லாமல் ஜீவனாகவே கதைக்கும் ஜீவனாகவே வாழ்ந்திருக்கிறார். அவரை துறத்தி துறத்தி காதலிக்கும் அழகிய பட்டாம் பூச்சியாகவும், நகைச்சுவைக்காவும் பாவனா கலக்கி இருக்கிறார். காட்சிக்கு காட்சி பாவனா அழகு பதுமையாகவே செய்திருக்கிறார். மலர் புகைப்பட போட்டிக்கும் பாவனாவின் பூவுனுடன் சேர்ந்த பட்டாம் பூச்சிபோலவே இருக்கிறார், அவரின் ஸ்டில் ஒன்றை கொடுக்கலாம் ( இங்கு எழுதியதில் இது மட்டுமே என் காமடி, அமீரகம் நண்பர்கள் படம் பார்க்க கிளம்பிடுவாங்க)

ஈழத்திலிருந்து வந்த ஒரு ஜோடி ஏழுவருடம் தங்களுக்குள் இருந்த காதலை மறந்து ஈழத்தை நினைத்தப்படி எரியும் ஈழத்தின் நினைவு தீயில் காதலை எரித்துக் கொண்டு திரும்பும் நாள் நோக்கி எண்ணிக் கொண்டிருக்கும் சில நிகழ்வுகள் ஆகியவற்றை உணர்வாக வடித்திருக்கிறார்கள்.

படத்தில் ஈழத்தமிழர்கள் பாத்திரம் மேற்றிருப்பவர்கள் அனைவரும் உணர்வை தோய்த்துப் பேசி உணர்ச்சி காவியம் ஆக்கி இருக்கிறார்கள். மணிவண்ணன் 30 நிமிட காட்சிகளில் இருந்தாலும், ஈழ ஆசிரியர் ஒருவரை கண்ணுக் கொண்டு வந்து உணர்வுக்குள் மறைந்து போகிறார்.

தமிழ்நாட்டுக்காரராக பாவனாவின் அப்பாவாக நடித்திருப்பவர் (மலையாள நடிகர் லால்) மிக அருமையான குணச்சித்ர நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதற்கு முன்பு பலபடங்களில் வில்லனாகவே நடித்தவர். சண்டைக் கோழி படத்தில் வில்லனாக வந்து இறுதி காட்சியில் விசாலுடன் மோதுவாரே அவர்தான்.

போஸ்வெங்கட் படத்தில் பாவனாவின் முறைமாமன், ஒருதலையாக பாவனாவை காதலிப்பவர், பாவனா ஜீவாவை காதலிப்பதை ஏற்கமுடியாம்ல் வில்லனாக மாறுகிறார். அவர் நடிப்பில் உச்சத்தில் அவரை பலரும் சபிக்கும் படி இயல்பாக, பார்வையாளர்களின் வில்லன் மீதான வெறுப்பை வரவழைக்கும் படி நன்றாகவே செய்திருக்கிறார்.

அகதி என்ற ஒரு சொல் தரும் வேதனையும், ஆதரவு கிடைக்கும் மண்ணில் நிகழும் ஒருசிலரின் துவேசங்களும் எப்படி உணர்வுகளைக் கொல்கிறது என்பதை படம் பார்பவர்கள் புரிந்து கொள்வார்கள். அகதிகள் முகாம், என்பதை ஜீவா 'புலம்பெயர்ந்தோர் முகாம்' என்று மாற்றுவதும், அதைத் தொடர்ந்து 'பெயரை மாற்றினால் எலலாம் மாறிவிடுமா ?' என்று ஈழப்பெண் கேட்கும் போது, 'எல்லாமும் மாறனும், முதலில் இதை மாற்றுகிறேன், எனது பங்களிப்பு என்று இதுவாக இருக்கட்டும்' என்ற வசனம் பேசும் போது ஜீவனாக தெரியாமல் நடிகர் ஜீவாக ஈழத்தமிழரின் நலனில் அவரது பங்களிப்பு என்பதை படம் பார்பவர்களும் புரிந்து கொள்வர்.

கொடுப்பவரின் மகிழ்வை விட ஏற்பவர்களின் வலி எத்தகையது என்பதை நன்றாக சொல்லி இருக்கிறார்கள். இசை என்.நிரு, அவர் ஈழமைந்தர் என்பதால் பாடல்களின் உணர்வையை சேர்த்து இசை அமைத்திருக்கிறார். 'எல்லோரையும் ஏற்றிப் போக கப்பல் வருமா ? ' என்ற ஏக்கப்பாடல் மகிழ்ச்சியின் பின்னனியில் பாடப்பட்டாலும் அதிலுள்ள சோகம் மட்டுமே உணரமுடிகிறது. இயக்கம், கதை வசனம் எஸ் செல்வம், ஒவ்வொரு வசனமும் பேசுவது தத்துவமா ? உணர்வா ? இயல்பா ? சொல்லத் தெரியவில்லை. எல்லாம் ஒருங்கே சேர்ந்த உணர்வுவரிகள்.

ஜீவனின் (ஜீவா) ஒரு நிமிட நினைவில் ஈழத்தில் விமானங்கள் குண்டு மழைபொழியும் ஒரே ஒரு காட்சியே நம்மை உணர்ச்சி வசப்பட வைக்கிறது, அதே சூழலில் இருப்பவர்களின் நிலை சொல்லவும் வேண்டுமா ?

ஈழத்தமிழர்கள் மீது உண்மையிலேயே அக்கறை உள்ளவர்கள், புலம்பெயரும் ஈழத்தமிழர்களைப் பற்றி ஓரளவாவது புரிந்து கொள்ள இந்த படம் மிகச்சிறந்த படம். மற்றவர்களுக்கெல்லாம் மற்றொரு திரைப்படம் போல் தான் தெரியும்.

இறுதி காட்சியில் ஜீவாவின் நடிப்பிற்கும், சண்டைக்காட்சிகளுக்கும் அவரை பலமுறை பாராட்டலாம், ஈழத்தமிழர்களின் 'நலன்' என்று வாய்கிழிய பேசும் நடிகர்கள், அரசியல்வாதிகள், குறிப்பாக 'சோ' த்தனமானவர்கள் போல் இன்றி ஜீவா மற்றும் பாவானா ஆகியோர் இந்தப்படத்தில் தயக்கமின்றி நடித்தது உண்மையிலேயே பாராட்டப் படவேண்டியவை. அமையப்போகும் தமீழத்தில் தனக்கென ஒரு பெயரை ஜீவா பதித்துக் கொண்டார். வாழ்க வளர்க !

இராமே'ஸ்வரம்' படமல்ல ... உணர்வால் கலந்து ஒன்றிணைந்த தமிழர்களின் பல உணர்வுகளை மீட்டும் ஒரு காவியம் !

22 நவம்பர், 2007

திரை(மறைவு) ஊடகம் என்னும் மகா நடிகன் !

சிறுபாண்மை பெரும்பாண்மை என்ற சொல்லாடலில் எனக்கு விருப்பம் இருப்பதில்லை. உடன்படுவதில்லை. ஆனால் சமூகங்கள் அவ்வாறாக வலிய அடையாளப்படுத்தப்படுகின்றன. இனம் அல்லது சாதி, மதம் என பிரித்து அறிய எப்படி அவற்றின் ஒற்றை தன்மையை [எனக்கும் இதுபோன்ற சொற்கள் வருகிறது :) ]. சுட்டி வேறுபாடு காட்டப்படுகிறதோ, அதே போல் பிரித்து அறியப்படும் இனம், மதம் , சாதியும் தம்மை ஒரு குழுவாக 'இனம்' காட்டிக்கொள்ள அதில் உள்ள தனித்தன்மைகள் காரணிகளாக அமைந்திவிடுகின்றன. ( இவை உடல் அரசியலா, மன அரசியலா, வெறும் உளவியல் அரசியலா ? அந்த ஆராய்ச்சியை நண்பர் ஜமாலன் மற்றும் பாரி.அரசுக்கு அவர்களுக்கு விட்டுவிடுகிறேன்)

திரைப்படங்கள் ஆகட்டும், சின்னத்திரை நெடும்தொடர்(மெகா சீரியல்)கள் ஆகட்டும் அவை பெரும்பாண்மை சமூகத்தை மையப்படுத்தியே எடுக்கப்படுகின்றன. (சின்னத்திரைகளில் குறிப்பாக டிடி யில் ஆரம்ப காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கதைகள், அவர்கள் குடும்பத்தில் நடப்பவை தான் மிக்கவையாக வந்து எரிச்சலை ஏற்படுத்தியது. அதன் பிறகு வேறு வழியின்றி திருத்திக் கொண்டுள்ளது). ஒருபடத்தின் கதை நாயகன் என்பவனது பெயரும், கதையும் இந்தியாவில் 'இந்து' தன்மை வாய்ந்தாகவே இருக்கிறது. விஜய் என்னும் கிறித்துவ நடிகர் கதை நாயகனாக நடித்தாலும் ஒன்றில் கூட அவர் கிறித்துவ பெயரில் நடிக்க முடியாத நிலைமை. மசாலப்படங்களுக்கும் கதை நாயகர்களின் பெயருக்கும் என்ன தொடர்பு ? இருந்தாலும் 'இந்து' பெயரை வைத்துதான் எடுக்கின்றனர். திரை உலக ஜம்பவான்கள் கூட படம் எடுக்கும் போது இந்து இளைஞன் கிறித்துவ / இஸ்லாம் இளம்பெண் அதனால் வரும் புரட்சிக்காதல் என்ற அளவில் தான் கிறித்துவ / இஸ்லாமிய மதங்கள் இயக்குனரின் புரட்சிச் சிந்தனையை சொல்ல வருகின்றன. ( அதற்கும் மாற்றாக இஸ்லாமிய / கிறித்துவ இளைஞன், 'இந்து' பெண் என்று எடுக்க முன்வரமாட்டார்கள் ). மற்றபடி எந்த இயக்குனரும் இயல்பான காதல் கதையிலோ, வேறு மசாலா கதையிலோ அல்லது கலைப்படங்களிலோ கிறித்து / இஸ்லாமிய பெயர்களில் உள்ள பாத்திரங்களை கதை நாயகர்களாக படைப்பது இல்லை. நடப்பு (நிஜ) வாழ்க்கையில் எத்தனையோ உண்மை கதை நாயகர்கள் அப்துல் கலாம், ஏ ஆர் ரஹ்மான் போன்று உயரத்தில் இருக்கிறார்கள்.

எல்லா துறைகளிலும் எல்லா மதத்தினரும் இருக்கின்றன. திரை துறையில் கூட இயக்குனர்கள், நடிகர்கள், இசை அமைப்பாளர்கள் பல மதங்களை சேர்ந்தவராக இருக்கின்றன. அமீர், பாசில் போன்ற இஸ்லாம் சமூகத்து இயக்குனர்கள் உள்ளனர், மம்முட்டி, இராஜ்கிரன் போன்ற இந்துமதம் சாராத நடிகர்கள் உள்ளனர். பொதுவாழ்க்கையில் எந்த மதத்துக்காரராக இருந்தாலும் சமூகத்தில் பொதுவாக எல்லோரும் சந்திப்பவற்றைத்தான் எல்லா மதத்தினரும் சந்திக்கிறார்கள். திரைப்படம் என்ற ஊடகத்தில் காட்டப்படும் பல கதைகளில் மதம் தொடர்புடைய எதுவும் இல்லாவிட்டாலும் அதில் 'இந்து' பெயரை வைத்தே கதை நகர்த்தப்படுகிறது.

ரஜினி காந்த் நடித்த 'பாட்சா' திரைப்படத்தை எடுத்துக் கொண்டால் அவரது பெயரான மாணிக்கம் என்பதை துறந்து நண்பனின் பெயரான 'பாட்சாவை' வைத்துக் கொள்வார். ஒரு ரவுடியாக காட்டுவதற்கு இஸ்லாமிய பெயரும், சாதுவாக காட்டுவதற்கு மாணிக்கம் என்ற பெயரையும் பயன்படுத்தி இருப்பார்கள்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வந்த திரைப்படங்களிலெல்லாம் ரீனா, ரீட்டா, ரோஸி ஆகிய கிறித்துவ பெண் பெயர்களை ஓட்டலில் நடனமாடுவதாக காட்டப்படும் பாத்திரங்களுக்கு வைத்திருந்தார்கள். தற்பொழுது இப்படியெல்லாம் வருவதில்லை. அதைப் பார்பவர்களுக்கு ஓட்டலில் நடனமாடும் பெண்கள் எல்லாம் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது கிறித்துவ பெண்கள் ஓட்டலில் நடனமாடுவார்கள் என்ற எண்ணம் தானே வரும். திரைக்கு வெளியே அரபு நாடுகளுக்கு கலைகுழுக்களாக சென்று ஷேக்குகளுக்கு ஸ்பெசல் ஆட்டம் போடுபவர்கள், மகாபலிபுரம் சாலைகளிலும், டிஸ்கோத்தே கிளப்புகளின் ரைடுகளில் சிக்குபவர்களில் கிறித்துவர்கள் மட்டுமே இல்லை என்பது வேறு விசயம் :). குறிப்பாக கடத்தல் காரன், சமூக பகையாளன் போன்ற பாத்திரங்களுக்கு இஸ்லாமிய, கிறித்துவ பெயர்களை வைப்பது இன்னும் நடைமுறையில் தான் இருக்கிறது. :(

மதநல்லிணக்கம், இந்தியன் என்ற ஒருமைப்பாடு எல்லாம் வாய்கிழிய பேசுகிறோம், திரைத்துரையில் உரையாசிரியர்கள் (வசன கர்த்தா) மற்றும் இயக்குனர்களுக்கும், நடிகர்களும் எல்லாவித சமூக அநீதிகளையும் போட்டு கிழிக்கிறார்கள். போட்டு தாக்குகிறார்கள். ஆனால் திரைக்கதைகளில் பெறும்பாண்மை 'இந்து' அரசியல் என்னும் கிழிபடாத கோர முகம் அவர்களின் வயிற்றுப்பாடு என்ற கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வெளியில் தெரியாமல் நடித்துக் கொண்டு இருக்கிறது.

8 நவம்பர், 2007

அழகிய தமிழ்மகன் விமர்சனம் !

வழக்கமான ரீமேக் கதைகளில் வருவது போல் ஒரு துடிப்பான இளைஞன் நான்கு வில்லன்கள் என்ற கதைகளில் இருந்து விஜய் வெளியே வரமுயன்றிருக்கிறார். கிராபிக்ஸ் காட்சிகளில் நான்காக, பத்தாக வருவது பத்தாது என்று இரட்டை வேடத்தில் படத்தை ஆக்கிரமித்திருக்கிறார். படத்தில் அவர் தவிர்த்து மற்றவர்களுக்கு திரையில் தோன்றும் வாய்பு குறைவு. கதைக்கு கரு, உரு கொடுப்பதற்காக விஜய்க்கு ESP சக்தி இருப்பதாகவும், நெருங்கிய உறவினர்களுக்கு நடக்கும் ஆபத்துக்களை முன் கூட்டியே அறிந்து கொள்வதாக காட்டுகிறார்கள்.

ஓட்டப்பந்தைய வீரராக இருக்கும் விஜய், ஷகிலா வீட்டில் வாடகைக்கு சந்தானம், சத்தியன் ஆகியோர்களுடன் குரு என்ற பெயருடன் இருக்கிறார். அறிமுகக் காட்சியே சண்டை காட்சியாக தொடங்குகிறது. சிரேயாவின் தோழியின் அண்ணன் கலந்து கொள்ளும் ஓட்டப்பந்தயத்தில் அவரின் இறுதி முயற்சி என்று அறிந்து விஜய் அவருக்காக விட்டுக் கொடுத்துவிடுகிறார். இதை தெரிந்த பணக்காரரான ஆசிஸ் வித்தியார்த்தி மகளான சிரேயா அவரை காதலிக்க தொடங்குகிறார். தனது காதலை அழகாக கடிதத்தில், குரு என்ற பெயரில் உள்ளவை எல்லாம் எனக்கு பிடிக்கும் என்று ஒரு பட்டியலில் பிடித்த ரஜினி படம் குரு சிஷ்யன், பிடித்த பறவை 'குரு'வி இது போல் பலவற்றை எழுதி கொடுக்க அதைப் படித்து பார்த்து விஜய் சிரேயா மேல் காதல் கொள்கிறார். இதை இரு பெற்றோர்களையும் சம்மதிக்க வைக்க செய்த உத்திகள் கலகலப்பானவை.

ESP சக்தியின் மூலம் சிரேயாவிற்கு உயிருக்கு இவரால் ஆபத்து என்று தெரிய வந்த போது, அதைத் தவிர்பதற்காக சிரேயாவிடம் சொல்லிக் கொள்ளாமல் மும்பைக்குச் செல்கிறார். அங்கு தான் மற்றொரு விஜயை (பிரகாஷ்) பார்க்கிறார். அவர் சென்டரல் பேங்கில் மேனஜராக இருந்து கொண்டே என்ஆர்ஐ பணத்தை வெளியில் விட்டு சம்பாதிக்கும் பணத்தாசை பிடித்தவராக காட்டுகிறார்கள். அவர் நகைக் கடை அதிபர் சாயாஜி சின்டேவிடம் முன்பு கொடுத்த பணத்தை திரும்ப வாங்க ரயிலில் சென்னை வருகிறார். சென்னை செல்லும் இரயில் பயணத்தில் சந்திக்கும் நமீதாவிடம் கசமுசா நடந்துவிடுகிறது. எல்லாம் முடிந்ததும் எஸ்கேப் ஆகிறார். ஒரிஜினல் விஜய்க்கு விபத்து ஏற்படவே அவர் மும்பையில் இருக்க, சென்னை வந்த மற்றொரு விஜயை ஒரிஜினல் என்று நினைத்து சிரேயா தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். பணத்தாசை பிடித்தவரான இந்த விஜய் சாதமாக பயன்படுத்திக் கொண்டு சிரேயாவை திருமணம் செய்யும் அளவுக்கு செல்கிறார். இதை அறிந்து ஒரிஜினல் விஜய் சென்னை திரும்புகிறார்.

தன் சத்தியின் மூலம் அறிந்தது போல் சிரேயாவுக்கு அவராலேயே ஆபத்து ஏற்படுகிறதா ? மற்றொரு விஜயை எப்படி வெல்கிறார். ஒரிஜினல் விஜயும் சிரேயாவும் சேர்ந்தார்களா ? வெள்ளித்திரையில் காண்க. பிரகாஷ் என்ற பெயரில் வரும் விஜய் ஒவ்வொரு முறையும் குருவாக நடிக்கும் போது வரும் சோதனைகளை சமாளித்து 'எவ்வளவோ செய்துட்டோம், இதையும் செய்துட மாட்டோமா ?' என்று வசனம் பேசுகிறார்.

இந்த படத்தில் குருவாக வரும் விஜய் தான் தான் குரு என்பதை நம்ப வைக்க செய்யும் முயற்சிகள் லாஜிக் எதுவுமில்லாமல் இருக்கிறது. குரு அறிந்திருப்பதையெல்லாம் பிரகாஷ் அறிந்திருந்து அவரைப் போல் நடித்து சமாளிக்க அவர் குருவின் டைரியை படித்து தெரிந்து கொள்வதாக காட்டுகிறார்கள். கூட இருக்கும் குருவின் நண்பர்களும் ஒரிஜினல் குருவை நம்ப மறுக்கிறார்கள். காதலிக்கும் சிரேயாவுக்கும் யார் ஒரிஜினல் என்ற குழப்பம் இருக்கிறதாம். இரட்டை பிறவிகளாகவே இருந்தாலும் ஒருவருக்கு தெரிந்த எல்லாமும் மற்றவருக்கு தெரியாது. கதைப்படி அப்படியும் இல்லை. இடைவேளைக்கு முன்பு வரை விறுவிறுப்பாக இருந்தது, சண்டை காட்சிகள் வழக்கமான ஆக்ரோசமான விஜய் ஸ்டையில். சண்டை பயிற்சி பெப்சி விஜயன். பெரிய பட்ஜெட் படம் என்பதால், கையை கடித்து நமிதா நடிக்கும் பாடல் காட்சிகளில் துண்டு விழுந்திருக்கிறது. சிவாஜியை விட இதில் சிரேயா பாடல் காட்சிகளில் ரொம்பவே இறங்கி அசத்தி இருக்கிறார்.

இயக்குனர் பரதன் என்று டைட்டிலில் இருந்தது இவர் சூரியன் படம் எடுத்த பழைய பரதானா என்று தெரியவில்லை. நகைச்சுவை காட்சியில் கோவில் குருக்களை (ஐயரை) பார்த்து, சாமி..... நாத்திகம் பேசுகிறவர்களை நாத்திகவாதி என்கிறேம். அரசியல் பேசுகிறவர்களை அரசியல்வாதி என்கிறோம், கோவிலில் மந்திரம் சொல்கிறவர்களை ஏன் மந்திரவாதி என்று சொல்வதில்லை ?' என்று நக்கல் வசனம் வருகிறது, அதைக் கேட்ட ஐயர் அடிக்க வருகிறார். அனேகமாக பரதன் சேது இயக்குனர் பாலாவின் சிஷ்யராக இருப்பார் போல. படத்தில் எனக்கு பிடிக்காத காட்சி, விஜய் முன்கூட்டியே அறிந்து கொண்டபடி 'ஒரு 10 வயது பெண் குழந்தை மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம் அடைவதும், அதை படுக்கையில் கிடத்தி பிண அலங்காரம் செய்து வைத்திருப்பதையும் தவிர்த்திருக்கலாம். குழந்தைகளின் மரணத்தை திரையில் பார்பது கூட சோகம் தான். அந்த குழந்தையின் அம்மா இந்த காட்சிக்கு எடுப்பதற்கு எப்படி சம்மதம் தெரிவித்தார்கள் என்று தெரியவில்லை.

ஏஆர்ரகுமான் முதன் முறையாக விஜய் படத்துக்கு இசை. சூப்பர் என்று சொல்லும் அளவுக்கு இல்லை, மோசம் என்றும் சொல்ல முடியாது. குத்துப்பாட்டு வகையில் 3 பாடல்கள், ஒரு ரீமிக்ஸ் பாடல் பின்னனி இசை நன்றாக இருக்கிறது.

மன்மத ராசாவாக தனுசும், மன்மதனாக சிம்புவும் பெயர் பெற்றுவிட்டார்கள் என்ற ஆசை அடிப்படையில் 'மன்மதன்' என்பதை தமிழ் படுத்தி படத்திற்கான தலைப்பாக 'அழகிய தமிழ்மகன்' என்று வைத்துவிட்டார்கள் போல் தெரிகிறது.

இந்த படத்தை உலகெங்கும் வெளி இட்டு இருக்கும் பிரமிட் சாய்மிரா நிறுவனத்தினருக்கு நன்கு தெரிந்தே வாங்கி இருக்கிறார்கள் அதாவது ' விஜயடோ குப்பை படங்கள் எவ்வளவோ ஓடி இருக்கிறது, இது ஓடாதா ?'
விஜய் ரசிகர்களுக்கு தேவையான அம்சங்கள் இருப்பதால் நிச்சயம் ஓடும்.

16 ஜூன், 2007

சிவாஜி : ஷங்கர் பாதி ரஜினி பாதி கலந்து செய்து கலவை

எங்கே பாத்தேன்... எப்டி பாத்தேன்.......நோ டிஸ்கி ... நேராக மேட்டர்...இதோ...

ஷங்கர் படம் என்பதற்கு : ஜென்டில் மேன், இந்தியன், முதல்வன், அந்நியன் வகையறா கதைகளான லஞ்சம், ஊழல், பொறுப்பின்மை, போன்ற சமுக அவலங்களை ஹைலைட் பண்ணி எடுப்பது போன்று இங்கே 'ஏழெங்கே...இலவசக் கல்வி' கிடைக்காமல் திண்டாடுகிறார்கள்' என்று ஆரம்பித்து முடிகிறது கதை. மேற்சொன்ன படங்களில் ப்ளாஷ் பேக் காட்சிகள் இருக்கும். சிவாஜியில் 90 விழுக்காடு பிளாஸ் பேக். அதாவது சிவாஜி எம்ஜிஆராக (மொட்டைதலை) ரஜினியாக மாறும் வரை ப்ளாஸ் பேக்தான்.

வழக்கமான பிராமாண்ட செட்டுகளில் எடுக்கப்பட்ட கலர்புஃல் பாடல்காட்சிகள். அதைத்தவிர ப்ரேம் பை பேரம் ஷங்கரின் கைவண்ணம் என்றுபார்த்தால் ஷங்கர் படம். சமூக அவலம் என்ற சொறி இருக்கும் வரை அரிப்பு இருக்கவே செய்யும். ஷங்கர் நன்றாக தன் படங்கள் மூலம் சொறிந்துவிடுவதை சிவாஜியில் சற்று குறைவாக சொறிந்து இருக்கிறார். அதற்கு காரணம் படத்தில் ரஜினி பார்முலா இடம் பெற வேண்டும் என்பதற்காக என நினைக்கிறேன். கதாநாயகிகளை இளமையாகக் காட்டுவதுடன், இந்த படத்தின் மூலம் ரஜினி ஒரு இளைஞராக காட்டி இருக்கிறார். தலைமுடிகளில் நல்ல கருப்பாக அடர்த்தியாக இருப்பது கொஞ்சம் செயற்கையாக தெரிகிறது. ஆனால் ரஜினியின் முகத்தில் தெரியவில்லை.

காதல், வெயில் போன்ற தன் சொந்த தயாரிப்பு என்றால் ரொமாண்டிக் ரெமோவாக இருக்கும் ஷங்கர் ... தான் இயக்கும் படங்களில் சமூக அவலத்திற்கு எதிராக ஆயுதம் எடுக்கும் வழக்கமான அந்நியானாக மாறி இருக்கிறார்.

திரைக்கதை + பிரமாண்டம் என்று பார்த்தால் - இது 50 விழுக்காடு ஷங்கர் படம்.

ரஜினி படம் என்பதற்கு : தனது ரசிகர்களுக்கு குறைவைக்காத ஹீரோயிசத்தில் ரஜினி சிவவஜியிலும் குறைவைக்கவில்லை. வழக்கமான அப்பாவித்தனமான காமடி காட்சிகள். குறிப்பாக ஷ்ரேயா ரஜினியின் நிறத்தை வெளுப்பபக மாற்றிக் கொள்ள சொல்ல ... அதற்கு ரஜினி செய்வது நல்ல நகைச்சுவை. மேலும் இது ரஜினி படம் தான் என்பதற்கு ... நிராயுதபாணி ஹீரோ, சொத்துக்களை இழந்து நடுத்தெருவில் நிற்பவர், வில்லன் துவைத்து எடுக்கும் போது அடியை வாங்கிக்கொண்டு எதுவும் செய்யமுடியாமல் ரசிகர்களை உச் கொட்ட வைக்கும் காட்சிகள் போன்றவை அண்ணாமலை, அருணாசலம்,முத்து,படையப்பா படங்களை நினைவு படுத்துகிறது. மொட்டைத்தலை எம்ஜிஆராக வரும் போது தலையில் விரலால் படபடவென்று தட்டிக் கொண்டு வசனம் பேசுவது புது ஸ்டைல்...(சந்திரமுகி லக்க லக்க போல ரசிக்க வைக்கிறது) மற்றபடீ ஸ்டைலாக சுவிங்கம் தூக்கிபோட்டு பிடிப்பது சந்திரமுகியில் வந்ததுதான்.

காசு கொடுத்து படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு முதலில் காலை காட்டி வணங்க வைத்த காட்சி ஏற்கனவே சந்திரமுகியில் வந்தாலும்...இங்கே காலை காட்டுவார் வேறு சூழல்.

மற்றபடி எனக்கு பிடித்த காட்சிகள் : திருகுறள் (அன்பும் அறமும் உடைத்தாயின்..) சொல்லி தமிழ்முறை திருமணம்...சுஜாதாவில் டைமிங் சென்ஸ் வசனம் ரசிக்கும் படி இருந்தது. மொட்டை தலை ரஜினி...ரஜினி எம்ஜிஆர்..சிவாஜி..கமல் பாணியில் உள்ள பாடல் காட்சி...விவேக் நகைச்சுவை. 'என்னது பஞ்ச் டயலாக் பேசப் போறியா ?...உன்னைப் போல பேசி விடலை பசங்களும் வெரலை தூக்குறானுங்க...' என்று சிம்புவுக்கு அம்பு விட்டு இருப்பார். ஒரு காட்சியில் வந்தாலும் போலிஸ் அதிகாரியாக வரும் லிவிங்ஸ்டனின் 'லக்க லக்க' நல்ல டைமிங் காட்சி... மயில்சாமி...சின்னி ஜெயந்த்...தாமு ஆகியோரின் ரஜினி மிமிக்கிரி நன்றாக இருந்தது.

ஷ்ராயா இதற்கு மேல் மற்ற படங்களில் தனது முழுத்திறமையையும் (?) காட்டமுடியாது அந்த 'அளவுக்கு' நன்றாக செய்து இருக்கிறார்.


மொத்தத்தில் சிவாஜி = ரஜினி பாதி + ஷங்கர் பாதி கலந்து செய்த கலவை !

அடுத்து நான் சிவாஜி விமர்சனம் எழுத அழைப்பது

1. நாமக்கல் சிபி
2. இளா
3. செந்தழல் ரவி
4. மகேந்திரன்
5. நாகைசிவா
6. கோ.இராகவன்

டென்சன் ஆகாதிங்க ப்ளீஸ்...........
:))

5 மே, 2007

நான் 'கண்ட' பெரியார் !

பெரியார் வாழ்க்கை வரலாறு படமாகிறது என்றதும், தமிழன் என்ற படம் முறையில் எப்பொழுது வரும் ? என்று ஆவலுடன் இருந்தேன். இன்று (05-மே-2007) நிறைவேறியது. படத்தின் ஆரம்பமே பெரியார் எதிர்பாளர்கள் முன்வைக்கும் 'பெரியார் குளிக்காதவர்' என்பதைச் சொல்லவரும் காட்சியுடன் நேர்மையாக எடுக்கப்பட்டு இருந்தது. தாழ்த்தப்பட்டவன்,படிக்காதவன், குளிக்காதவன் என்ற சொற்களில் ஒருவருடைய கருத்துக்களை சிதைக்க முனைபவர்களை புறம் தள்ளவேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் என்பது பின்பு புரிந்தது.

பெரியாரின் தந்தையின் வணிக மண்டியில் ஆரம்பித்து படம் பகுத்தறிவு வெடித்துணுக்குகளுடன் தொடர்கிறது. பின்னர் அவரது தங்கைக்கு நடைபெறும் 'பால்ய விவாகமும்' அவர் தங்கை வயதுக்கு வரும் முன்னே கைம்பெண் ஆவதையும், அதன் பிறகு தங்கைக்கு வேறு ஒரு திருமணம் அவரே ஏற்பாடு செய்து நடத்தி வைப்பதையும் காட்டினார்கள். பின்பு முறைபெண் நாகம்மையுடான காதல்... பெற்றோர் எதிர்ப்பு, நாகம்மையின் தற்கொலை முயற்சி அதன் பிறகு பெரியார் - நாகம்மை திருமணம்... தனக்கு விருப்பமில்லாவிட்டாலும் மனைவியின் விருப்பத்துக்கு இணங்க கோவில் வாசலில் அவருக்காக காவல் இருப்பது, பின்பு கோவிலுக்குள் நாகம்மையை சில ரவுடிகள் துரத்த... நாகம்மை வெளியில் ஓடிவருகிறார். .. 'ஆண்டவன் ஆயுதங்களுடன் கோவில் முழுதும் நிறைந்திருந்தாலும் ஆபத்துக்கு உதவுபவன் மனிதன் தான்' என்று பெரியார் நாகம்மையிடம் 'நச்'சென்று சொல்லுவார்.

விரத உணவில் கோழி காலை மறைத்து வைத்து பெரியார் அவருடைய அம்மாவை ஏமாற்றுவது போன்றவை சில நகைச்சுவை காட்சிகள். தலைமறைவாக இருக்கும் ஒரு சாமியாரின் தம்பியை நீதிமன்ற நோட்டீஸ் கொடுப்பதற்காக தபேதாருக்கு பெரியார் பிடித்துக்கொடுக்க, உயர்சாதிக்காரர்களின் கோபத்துக்கு ஆளாகிறார். அவர்கள் முறையிட்டதும் பெரியாரின் தந்தை பெரியாரை செருப்பால் அடித்து வீட்டைவிட்டு வெளியேறும் படி சொல்கிறார். அதன் பிறகு பெரியாரின் பயணம் காசி நோக்கிச் செல்கிறது. அங்கு இரண்டு பிராமணர்களுடன் சேர்ந்து கதா கலேட்சேபம் செய்கிறார் ( இராமர் அணிலுக்கு கோடு போட்ட பாடல்) ஒரு நாள் பசிக் கொடுமையில் காசியில் இருக்கும் செட்டியார் சத்திரத்திக்குள் மூவரும் நுழைகின்றனர். அங்கே பிராமணர்களுக்குத் தான் உணவு என்றதும் பசிக் கொடுமையால் எச்சிலையில் எஞ்சியதை தின்கிறார். பின்பு ஒரு சாமியாருக்கு தேவையான பொருள்களைக் கொண்டுவரும் எடுபிடியாக சேருகிறார். அங்கிருந்த பெரிய சாமியாரின் காம லீலைகளை அறிந்து அங்கிருந்து ஊருக்கு திரும்புகிறார்.

அவருரைய தந்தையாரின் மறைவுக்குப் பின்பு பல்வேறு பொறுப்புகள் அவருக்கு வந்து சேர... அதுவரை நடிப்பது சத்யராஜ் என்று தெரிந்தது... அதன் பிறகு கண்ணாடி, மீசை என வயதிற்குறிய தோற்றம் ஏற... சத்தியராஜின் உருவம் மறைய பெரியார் தோன்ற ஆரம்பிக்கிறார். இடையிடையே ராஜாஜி அவர்களுடன் ஆழமான நட்பு, காந்திஜியுடன் உரையாடல் என செல்கிறது... ராஜாஜியின் வேண்டுகோளுக்கினங்கி... இட ஒதுக்கீடு கோரிக்கையுடன்... காங்கிரசில் பெரியார் சேர்ந்ததும் அந்த இயக்கத்திற்கு தமிழகத்தில் உரமாகிறார். கதர் புடவையை தன் அம்மாவை உடுத்த வைக்க பெரியார் சொல்லும் சாமியார் காரணம், 'ஸ்ரீலஸ்ரீ காந்திமகான் சொல்லி இருக்கிறார்' என்று காந்திஜி சொன்னதை பெரிய சாமியார் சொல்லியதாக தனது தாயிடம் சொல்லி அவருடைய ஒப்புமை பெற வைப்பதும் நகைச் சுவை வெடி.

வைக்கம் போராட்டத்தை தொடங்கி வைத்தும், அங்கு எதிர்ப்பு கிளம்ப... அங்குள்ள நம்புதிரிகள் சத்ரூசம்ஹாரம் என்ற பெயரில் பெரியார் அழிவதற்கு நடத்துகின்றனர். திருவிதாங்கூர் மகாராஜா இறந்து போகிறார். உங்களுக்கு நடத்திய யாகம் மன்னரை காவு கொண்டதாக பெரியாரின் நண்பர் சொல்ல... பெரியார் அவரை 'இது அதைவிட பெரிய மூடநம்பிக்கை' என்று திட்டுகிறார். மன்னரின் மறைவை ஒட்டி எல்லோரும் விடுதலை பெறவே, வைக்கத்தில் தெருநுழைவு போராட்டம் வெற்றி பெருகிறது . சிறைசென்று சாதித்து வைக்கம் வீரராக திரும்புகிறார். பின்பு காஞ்சி காங்கிரஸ் மாநாட்டில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று பெரியார் தன் கோரிக்கையை மீண்டும் வலியுருத்த ராஜாஜியும், திலகரும் எதிர்க்க... காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து விலகி சுயமரியாதை இயக்கம் தொடங்குகிறார். பின்பு ரஷ்யா சென்று அங்கு மார்கசியத்தின் கொள்கைகள் பிடித்துப் போகவே, மக்கள் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்று மார்கசிய கொள்கைகளை ஆதரிக்கிறார். ஒரு நாள் நாகம்மை மறைந்துவிட ... நாகம்மை தன்னிடமிருந்து விடுதலைப் பெற்றதாக சொல்கிறார். தேவதாசி முறையை தடுத்து நிறுத்துவது... தாழ்த்தப்பட்டவர்களுக்கு தண்ணீர்பிடிக்கும் உரிமை, எழுத்து சீர்திருத்தம் என போராட்டமாகவே செல்கிறது நிகழ்வுகள்.

இடையில் மணியம்மை பெரியாரின் கொள்கைப் பித்தினால் அவருக்கு பணிவிடை செய்ய ஆரம்பிக்க ... ஒரு நாள் பெரியாருக்கும் - மணியம்மைக்கும் பதிவு திருமணம் நடக்கிறது. விமர்சனம் செய்துவிட்டு திராவிட முன்னேற்ற கழகம் அறிஞர் அண்ணா வழி உதயமாகிறது. காமராஜருக்கு ஆலோசனை சொல்லி அவரை காங்கிரசுக்கு தலைமை ஏற்க வைக்கிறார் பெரியார். பின்பு அண்ணா ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் அண்ணா - பெரியாரின் உணர்சி மயமான சந்திப்பு, மணியம்மையை மேடைகளில் விமர்சித்ததற்காக அண்ணா மன்னிப்பு கேட்பது போன்ற காட்சிகள் மிகச் சிறப்பானவை. அனைவரும் கோவிலில் நுழைந்து அர்சனை செய்யும் உரிமை தன் காலத்தில் நிகழவில்லை ... இது தன் நெஞ்சில் குத்திய முள் என்று சொல்லும் போது உண்மையில் நெஞ்சில் முள்தைக்க மாரடைப்பில் இறக்கிறார். காந்திஜியை தேச தந்தையாக ஏற்று எந்த அரசாங்க பதவியிலும் இல்லாத ஒருவருக்கு அரசுமரியாதை அடக்கம் செய்ததைக் காட்டி எதிர்ப்புகளை சமாளித்து பெரியாருக்கு கருணாநிதி அரசு, அரசு மரியாதையில் அடக்கம் நடைபெறுகிறது.



இந்த இடத்தில் பெரியார் மறைவை ஒட்டி எடுக்கப்பட்ட உண்மை காட்சிகளை காட்டினார்கள். படம் முடிந்துவிட்டதா ? என்று நினைக்க வைத்துவிட்டது.

பெரியாரே தமிழக கட்சிகள் (பிஜேபி தவிர) அனைத்திற்கும் சொந்தமானவராக இருக்கிறார். என்பதை படம் சொல்லாமல் சொல்லி இருந்தது. உண்மை தமிழர்கள் தந்தை பெரியார் என்று அழைப்பது ஏன் என்பதை உணரவைத்தது.

படத்தில் எம்ஜிஆருக்கு 1 காட்சி, கலைஞருக்கு 2 காட்சி, வீரமணிக்கு 2 காட்சி என ரொம்பவே சுருக்கி இருந்தார்கள். பெரியாரே படம் முழுவது நிறைந்து இருந்தார்... இன்றைய தலைவர்கள் படத்தை ஆக்கிரமிக்காததற்கு இயக்குனருக்கு பாராட்டுச் சொல்லவேண்டும். இடையில் பெரியார் - அம்பேத்கார் சந்திப்பு. அம்பேத்கார் பெரியாரை புத்தமததை தழுவ சொன்னதும்... இந்து மதத்தில் இருப்பதால் என்னால் அதில் களையெடுக்க முடிகிறது. ..என்று பளிச் பதில் சொல்வார்.

படத்தில் பிராமணர்களின் பங்களிப்பும் மிகுதியாகவே இருக்கிறது.

மதன் பாப் (மார்வாடி?), ஒய்ஜி மகேந்திரன், சொர்ணமால்யா, மற்றும் பல நிஜ பிராமணர்கள் நடித்து இருந்தனர். பெரியார் துவேசம் தமிழ்நாட்டில் ஒழிந்து கொண்டிருக்கிறது என்பதாக நான் அவர்கள் மூலம் கருத்துகிறேன். வரலாற்று நிகழ்வை அழகாக படம் ஆக்கி தொய்வில்லாமல் எடுத்துச் சென்றதில் இயக்குனர் இராஜசேகரன் வெற்றி பெற்றி இருக்கிறார். பெரியார் பற்றி அறியாமையில் எதிர்பவர்கள் (வேண்டுமென்று எதிர்பவர்கள் அல்ல) அவர்களுக்கு பிற்காலத்தில் பெரியாரின் வாழ்வு, போராட்டுக் குறித்து அறிய செய்ய திரைப்பட குறுந்தகடை (வி.சி.டி) வாங்கி பரிசளிக்கலாம்.

வித்யாசகர் திறன் முழுவதையும் இசையிலும், பின்னனி இசையிலும் கையாண்டு இருக்கிறார். தங்கர்பச்சான் ஒளிப்பதிவில் தன் திறனை மேலும் மெய்பித்து இருக்கிறார்.


படம் வெற்றியா தோல்வியா ?


ம்.... படம் வெற்றிப் பெற்றால் வருத்தப்படுபவர்களைப் பார்த்தும், தோல்வியானால் துள்ளிக் குதிப்போரையும்ம் பார்த்து கேட்கவேண்டிய கேள்வி ! அவர்களுக்கு இருக்க வேண்டிய கவலை !
:)))

அன்புடன்,
- கோவி.கண்ணன்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்