பின்பற்றுபவர்கள்

28 பிப்ரவரி, 2007

சுற்றிச் சுற்றி வந்தேங்க - திண்டுக்கல் 1

ஒரு பத்து நாள் சிறுவிடுப்புடன் உறவினர் திருமணத்திற்காக பிறந்தகம் (நாகை) செல்ல வேண்டி இருந்தது. நிகழ்ச்சிக்கு முன் கூட்டியே 9 நாள்களுக்கு முன்பு சென்றதால் இடைப்பட்ட காலத்தில் நம் வலைப்பதிவாளர்களைச் சந்தித்தால் என்ன ? என்று முன்கூட்டியே முடிவு செய்து அதன் படி என் நினைவுக்கு வந்தவர் பெரியவர், அனைவரின் அன்புக்குறியவர், தற்காலச் சித்தர், பதிவர் ஞான வெட்டியான் ஐயா ஞாபகம் வந்தது. நாகையிலிருந்து கடந்த திங்கள் அன்று (19/02/2007) அவருக்கு முன்கூட்டியே நாளை வருவதாக தொலைபேசி சந்திக்க வருவதை தெரிவித்தேன். மகிழ்வுடன் வரவை நல்வரவாக்குவதாக சொன்னார்.

செவ்வாய் காலை 8 மணி அளவில் நாகையிலிருந்து நேரடி பேருந்து உடனடியாக இல்லாததால் தஞ்சை - திருச்சி - திண்டுக்கல் செல்வதாக முடிவுசெய்து தஞ்சை பேருந்தில் ஏறி அமர்ந்தேன். தஞ்சை பேருந்து நிலையத்தை அடைய 3 மணி நேர பயணம். பேருந்தில் படக்காட்சியில் (வீடியோ) இளையராஜாவின் இசை நிகழ்ச்சி தொகுப்பு படம். நல்ல பொழுதுபோக்கு பயண நேரம் சென்றதே தெரியவில்லை.

தஞ்சையிலிருந்து திருச்சி செல்லும் பேருந்தில் ஏறினேன் கையில் படக் கருவி (கேமரா) இல்லை. மனைவியிடம் இருந்தது, மனைவியும் மகளும் திருவெரம்பூருக்கு மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு முன்பே சென்று விட்டார்கள். இந்த பயணத்தில் அவர்கள் இடம் பெறவில்லை. படக் கருவி தேவையாக இருந்ததால். பேருந்து எண், நிறம், எத்தனை மணிக்கு திருவெரம்பூர் வழியாக செல்லும் என்று அறிவித்து அங்கு படக் கருவியுடன் வந்து பேருந்து பயணிகள் இறங்குவதற்காக நிற்கும் போது சன்னல் வழியாக படக் கருவியை கொடுக்கும் படி செல்போன் வழி தெரிவித்தேன். பேருந்து திருவெரம்பூர் நிறுத்த இடத்தை அடைந்ததும் எதிர்பார்த்த படி மனைவியும், மகளும் நின்றிருந்தார்கள். புகைப்படக் கருவி கைமாறியது. ஏக்கத்துடன் பார்த்த இருவருக்கும் பேருந்தில் இருந்தபடியே கை அசைத்துவிட்டு, திருச்சி மைய பேருந்து நிலையத்தை அடையும் போது மணி மதியம் 1.05.

பசி கண்களுக்கு அனிச்சை செயலை தூண்ட கண்கள் உணவு விடுதியை தன்னிச்சையாக தேடியது. ஹோட்டல் ராஜசுகம் கண்ணுக்குள் அகப்பட அதற்குள் நுழைந்தேன். ஏற்கனவே அங்கு சிலமுறை சென்றிருக்கிறேன். காற்று சீரமைக்கப்பட்ட (குளிர் சாதனம் பொருத்தப்பட்ட) அறையில் தென் இந்திய பகல் உணவு. அருமை அருமை. விலையும் குறைவு ( ரூ 40/- மட்டும்) இனிப்பு வகை, கோதுமை ரொட்டி (சப்பாத்தி) மற்றும் உணவு வகைகளுடன், பெரிய பொறித்த அப்பளம் (ஆனை அடி அப்பளம் என்று சொல்லுவார்கள்) அருமையான சாப்பாடு. முடிந்ததும் வெற்றிலைப்பாக்கு இனிப்பு பீடா கொடுத்தார்கள். போதுமானதாக (திருப்தி) இருந்தது.

திண்டுக்கல் செல்லும் பேருந்தைப் பிடிக்க பகல் 1.30 ஆகி இருந்தது. திருச்சியில் இருந்து திண்டுக்கல் இரண்டு
மணி நேரப் பயணம் என்றார்கள். வீடியோவில் எம்ஜிஆர் படம் பெயர் நினைவு இல்லை, அந்தப் படத்தில் ஜெய - இரட்டை வேடம் படம் ஓடியது. ( இப்போது உண்மையிலும் ஜெ இரட்டை வேடம் என்று கூட சொல்கிறார்கள் :) - அரசியல் ) பேருந்து திண்டுக்கல் வந்தடையும் நேரத்தை செல்பேசி வழி ஞான வெட்டியான் ஐயாவுக்கு சொன்னேன். எப்படி அவர் இல்லத்தை அடைவது என்று சொன்னார். நினைவு வைத்துக் கொண்டேன். திண்டுக்கல் பேருந்து நிலையத்துக்கு முன்பாகவே காட்டாஸ்பத்திரி என்ற இடத்தில் இறங்க சொல்லி இருந்தார். அதன் படி இறங்கினேன். அங்கேயே ஆப்பில், ஆரஞ்சு, திராட்சை பழங்களை வாங்கிக் கொண்டு ஆட்டோ நிலையத்தை அடைந்தேன்.

திரும்பவும் செல்பேசி வழி ஐயாவை தொடர்பு கொண்டு இல்ல முகவரி இருக்கும் இடத்தையும் எந்த வழி வரவேண்டும் என்பதையும் ஆட்டோ ஓட்டுனரிடம் சொல்லச் சொல்லி ஆட்டோ ஓட்டுனரிடம் உடனடியாக செல்பேசியைக் கொடுத்தேன். பேசும் போதே அந்த இடமா ? தெரியும்... சரி... சரி என்று தலையாட்டினார் ஆட்டோ ஓட்டுனர். இடத்தை அடைவதற்கு பல சுற்றுக்கள் அந்த வட்டாரத்தை சுற்றினார். கண்டுபிடிக்க முடியவில்லை. திரும்பவும் செல்பேச இல்லத்திற்கு வெளியில் பச்சை டி சர்டில் நின்று கொண்டு இருப்பதாக ஐயா அடையாளம் சொன்னார். இன்னும் ஒரு சுற்று சுற்றி அதே பாதையில் செல்ல வழியில் ஞானவெட்டியான் ஐயா அவர் வீட்டிற்கு சற்று அருகே எதிர்கொண்டார்.

தொடரும்...

11 பிப்ரவரி, 2007

பூவினும் மெல்லியது...(அன்பர் நாள் சிறுகதை)

கண் விழிக்க முயல்வது போல் இருந்தாலும், முடியாமல் உடம்பை முறுக்குவது மாதிரியான வலி, கழுத்தை யாரோ அறுப்பது போன்ற ஒரு வேதனையான உணர்வு, மின்சாரம் தீரப்போகும் டார்ச் லைட் மிக மங்கிய ஒளியை காட்டுவது போல் லேசாக திறந்த கண்களின் வழியாக பிம்பங்கள் தெரிந்தன.

இரைச்சல் மாதிரி கேட்கப்பட்ட ஒலி தெளிவின்றி காதில் கேட்டது, மெது மெதுவாக அதிகரித்த இரைச்சலில், அப்பா அம்மாவின் அழுகைச் சத்தமும், அண்ணா அண்ணா - என்ற தங்கையின் குரலும் கிணற்றுக்குள் இருந்து வருவது மாதிரி கேட்டது.

'பேசன்ட் கண்ணை முழிச்சிட்டார்ன்னு நினைக்கிறேன், யாரும் தொந்தரவு செய்...' அதற்குள் மறுபடியும் மயங்கிப்போனேன், நினைவுச் சுழல், சுழன்று சுழன்று ஒரிடத்தில் நின்றது.

என்னுடைய அலுவலகதில் நான் சேர்ந்து ஆறாவது மாதம் சென்றபின், புதிதாக விற்பனைப் பிரிவில் உதவியாளராக வேலைக்கு சேர்ந்தாள் ஒருத்தி. ஐந்தரை அடி உயரத்தில் நல்ல மாநிரத்தில் நேர்த்தியான ஒற்றை பின்னலுடன் வசீகரிக்கும் அழகு இல்லாவிட்டாலும் ஒரு கிராம தேவதை ஜீன்ஸ் அணிந்தவந்தது மாதிரி இருந்தாள்.

அவளை எல்லோருக்கும் அறிமுகப்படுத்திய அவளுடைய மேலாளர், என்முறை வந்ததும், 'மிஸ் உமா, தி ஈஸ் மூர்த்தி, நம்ப அக்கவுன்ட் டிபார்ட்மென்ட்ல அக்கவுன்ட் எக்ஸிகுயூட்டிவா இருக்கார்' என்று அறிமுகப்படுத்தினார். என்னை நிமிர்ந்து பார்த்து கண்களை விரித்து பார்த்து மெல்லியதாக புன்னகைத்து ஒரு சின்ன ஹலோ சொல்லிவிட்டு கடந்து சென்றாள்.

சூரியனை எட்டிப்பார்க்கத் துடிக்கும் விதையின் கொழுந்து பூமியை மெதுவாக பிளப்பதுபோல், எனக்குள் ஏதோ கொழுந்துவிட ஆரம்பித்தது. ஏனோ அவளை திரும்பவும் பார்க்க
வேண்டும் போல் இருந்தது.

அன்று மதியமே அவளுடன் பேச வாய்ப்புக் கிடைக்கும் என்று நான் எதிர் பார்க்கவில்லை, அன்று என்னுடைய உணவை எடுத்துக் கொண்டு மதிய உணவிற்கான அறைக்குச் சென்றபொழுது அவள் தனிமையில் அமர்ந்து அவளுடைய உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

நான் அருகில் சென்று, ஒரு ஹலோ சொல்லிவிட்டு எதிரில் உட்கார்ந்து கொண்டேன், எனது உணவை சாப்பிட தாயாராய் எடுத்துவைத்துக் கொண்டு, "மிஸ் உமா, என்ன தனியா சாப்பிட வந்திருக்கிங்க, உங்க டிபார்ட்மென்ட்லர்ந்து யாரும் உங்க கூடவரலையா"

"ஆமாம் மூர்த்தி சார், அவுங்கல்லாம் இன்னைக்கு வெளியில் சாப்பிடப் போறாங்களாம், நான் மட்டும் தனியா சாப்பிட வந்திருக்கேன், எனக்கு ஹோட்டல் சாப்பாடு பிடிக்காது, அதான் அவுங்க கூட போக முடியல"

"ஓகோ" என்று அமைதியாக கேட்டுக்கொண்டேன்.

எனக்கு மின்னல் அடித்ததுபோல் ஆச்சிரியமாக இருந்தது, ஒரே நாளில் முப்பது பேருக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டவள், அதுவும் இன்றைக்கு தான் வேலைக்கு வந்தவள், ஒருமுறை தான் அறிமுகம் ஆகியிருக்கிறது, அதற்குள் என்னுடைய பெயரை நினைவு வைத்திருக்கிறாளே. எனக்கு ஆச்சரியம்! நான் வேலைக்கு சேர்ந்த அன்று முதல்நாள் என்னுடைய மேலாளரின் பெயரை பலமுறை, சாரி சொல்லி கேட்டு கேட்டு, ஒழுங்காக நினைவுக்கு கொண்டுவர மூன்று நாள் ஆகியது.

பரஸ்பரம் விசாரிதுக் கொண்டோம், அவளுக்கு ஒரு தங்கை இருப்பதையும், அவள் அப்பா ரிடையர்ட் மிலிடெரி ஆபிஸரென்றும் சொன்னாள். நானும் என் குடும்பம் பற்றி சொன்னேன். பண்மைகளை தவிர்த்து ஒருமையில் அழைத்தால் போதும் என்றும் கேட்டுக்கொண்டாள். அவள் என்னிடம் நெருங்கவதாகவும் நான் நொருங்குவதாகவும் உணர்ந்தேன்.

நாளாக, நாளாக எனக்கு அவளின், நினைவுகள் அடிக்கடி வர ஆரம்பிக்க எனக்குள் ஊர்ஜிதப் படுத்திக்கொண்டேன், அவள் வேலைக்கு வராத நாட்களில், என் மனம் அவளை தேடுவதில் தீவிரமாவதை வைத்து, எனக்கு அவள் மேல் காதல் அரும்பியிருந்தது தெளிவானது.

எனக்குள் பலவாறான எண்ணங்கள், நான் காதலில் விழுந்தது நிஜமா ? காதலுக்கு கண் இல்லையென்று சொல்வது மிகச் சரி. கண் ஒரு தீப்பொறியை பார்த்துவிட்டு அல்லது காட்டிவிட்டு அது முடித்து கொள்கிறது, அதன்பிறகு காதலுக்கு கண் எதற்கு, இதயங்கள் தானே இணையப்போகிறது.

இது எப்படி நடக்க முடியும், கல்லூரி படித்த காலங்களில் வாராத காதல் இப்பொழுது எப்படி வந்திருக்க முடியும் ? ஒரு வேலை அவளின் தோற்றமா ? அப்படி சொல்வதற்கொன்றும் இல்லை, அவளுடைய பளபளக்கும் கண்களாக இருக்கலாம், அல்லது அவளுடைய ஆடை உடுத்தும் அழகா? தெரியவில்லை. முட முடப்பான சேலை அணிந்து வந்தால் நல்ல தமிழ்பெண் என்ற அடையாளமாக தெரிந்தாள், சுடிதார் அணிந்திருந்தாலும் அதுவும் அவளுக்கு பொருத்தமாக இருந்தது, பேன்ட் சட்டையிலும் மிடுக்காக இருந்தாள், மொத்தத்தில் ட்ரெஸ்ஸிங் சென்ஸ் என்று சொல்லுவார்களே அது அவள் உடுத்தும் ஆடைகளிலும், அதற்கு ஏற்றவாறு தலை அலங்காரங்களும் தெளிவாக தெரிந்தது.

உடைகள் அணியும் விதம் ஒழுக்கங்களை வெளிச்சமிடும் என்று சொல்லுவது போல் அவள் ஒழுங்கின் இலக்கணமாகவும் இருந்தாள், அதிகம் பேசாதவளாக இருந்தாலும் அதேசமயத்தில், அவசியமானதை தயங்காமலும் தெளிவாகவும், எவரையும் தவிர்க்க வேண்டும் என்பதுபோல் நடந்து கொள்ள மாட்டாள். அவள் மீது கொண்ட காதல் உணர்வால் சற்று மிகையாக அவளைப் பற்றிய எண்ணமோ இது என்ற சந்தேகமும் அவ்வப்போது எனக்கு வரும். யாராவது அவளைப் பார்த்து ஹலோ சொல்லி சிரித்தால் பதிலுக்கு மென்மையாக சிரித்து வைப்பாள்.

மூர்த்தி, மூர்த்தி என்று என்னிடம் மட்டும் அதிகம் பேசுவது அலுவலகத்தில் அனைவரையும் ஆச்சர்யப் படுத்தியது. மூர்த்தி நீங்களும் உமாவும் லவ் பண்ணுகிறார்களா ? சிலர் என்னிடமே கேட்டு வைத்தார்கள். அவசரமாக மறுத்திருக்கிறேன், மேலும் என்னிடம் கேட்ட மாதிரி அவளிடம் கேட்டுவிடாதீர்கள் என்று வேண்டியிருக்கிறேன்.

நானே அவளிடம் சொல்லி, அவள் என்னிடம் சொல்லி உறுதிப்படுத்திக்கொள்ளாத விசயத்தை எப்படி மற்றவர்களிடம் உறுதியாக கூறமுடியும். எனக்கு அவள் மேல் காதல் என்பதுபோல் எனக்கு தெரியும், அவளுக்கும் என் மீது ஈர்ப்பு என்பதை உறுதிபடுத்திக் கொள்ளாதவரை அவளிடமே முதலில் சொல்லக் கூடாது என்பதில் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டேன்.

யாராவது என்பெயரை சொல்லி கூப்பிடும் போது, அவள் தனக்குள் சிரித்துக் கொள்வதை பலமுறை ஊர்சிதப் படுத்திக் கொண்டேன்

நாளுக்கு நாள் எங்களின் பழக்கம் நெருக்கமாக ஆக, உமாவின் வீட்டு நாய் குட்டி போட்டது வரை, என்வீட்டில் தங்கை பரிச்சையில் பெயிலானது வரை எல்லா விசயங்களும் பற்றி பேசினோம்.

இதற்கிடையில் என் அப்பா,

"மூர்த்தி, உனக்கு கல்யாணம் பேச வேண்டிய நேரம் நெருங்கிடுச்சி ..."

"அதுக்கு என்னப்பா அவசரம் ?"

"அவசரம்னு, இல்லப்பா மூர்த்தி, இது எல்லாம், அந்தந்த வயசில அவசியம்"

"உனக்கு தான் தெரியுமே, நான் இந்த காலத்து ஆளு, நீ ஏதாவது பொண்ணை நெனெச்சிட்டு இருந்தால், சொல்லிடு அவளையே பேசி முடிச்சிடலாம்"

நான் உமாவை நினைத்துக் கொண்டு இருந்தாலும்,

"அப்படியெல்லாம் இல்லப்பா, நீங்க என்னோட சந்தோசத்திற்கு குறுக்கே நிற்கமாட்டீங்கறது எனக்கு தெரியும்"

"பின்னெ என்னப்பா, தயங்கிற"

"இல்லப்பா, நான் இன்னும் நல்ல பொசிசனுக்கு வரனும்-னு ஆசைப்படுறேன்"

"சரிப்பா, அதுக்கும் கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்"

"இருக்குப்பா, என் பிரண்டு ரொம்ப சின்ன வயசில கல்யாணம் பண்ணிட்டு அவஸ்தை படுறான், என்னோட மற்ற நண்பர்கள் கல்யாணத்துக்கு தயாராகிறப்ப நானே உங்களிடம் சொல்கிறேன்" என்று சமாளித்து வைத்தேன்.

"சரி, இன்னும் கொஞ்ச நாள் போகட்டும், என் பிரண்டு சந்தானம் என்னோட சம்பந்தியா ஆகனும்-னு ஆசைப்படுறான், அவன் பொண்னுதான் உனக்கு தெரியுமே, சின்ன வயசில பார்திருப்பியே மேகலா. அவள்... அவளோட பாட்டி வீட்டுலிருந்து தங்கிதான் காலேஜ் எல்லாம் படிச்சி முடிச்சாளாம், நல்ல நட்போட பழகுற பொண்ணு, ஒனக்கு நூறு சதவிகிதம் பொருத்தமானவ ..."

"சந்தானம் எனக்கு பால்ய சினிகிதன் மட்டுமல்ல... என்னை மாதிரி முற்போக்க இருப்பவன்... அவன் நம்ம சாதி இல்லாட்டிலும் நட்பை அதிகம் நேசிக்கிறவன், எங்களோட நட்பு அடுத்த தலைமுறைக்கும் தொடரனும்னு ஆசைப்படுகிறான் ..."

"சரிப்பா, இதப்பத்தி பிறகு பேசலாம்னு, சந்தானம் அங்கில்கிட்ட, கொஞ்ச நாள் போகட்டும்-னு சொல்லாம, ஒரு வருசம் ஆகட்டம் பிறகு பேசுவோம்னு சொல்லுங்கப்பா, சம்பந்தத்தைப் பற்றி உறுதியாக எதுவும் இப்போதைக்கு கூறவேண்டாம்"

அப்பா என் மீது வைத்திருக்கும் அன்பினால், நான் சொல்வது நிசம் என்று நம்பினாலும், அப்பாவை ஏமாற்றுகிறோம் என்ற சின்ன குற்ற உணர்வு எனக்கு இருந்தது.

ஏதோ, இப்போதைக்கு சமாளித்துவிட்டால் போதும், பின்பு உமாவை பற்றி சொன்னால் புரிந்து கொள்வார். ஆனால் உமா என்னை காதிலிக்கிறாள என்று உறுதியாக தெரியவில்லையே, ஆனால் அவள் என்னிடம் மற்றவர்களைவிட நன்கு பழகுவது, நடந்து கொள்வது என்பதை வைத்து ஓரளவு அவளுக்கும் என்மீது ஈர்ப்பு என்பது மட்டும் புரிந்தது"

ஆண் ஒரு பெண்ணிடம் முதலில் காதலை தெரிவிப்பது என்பது இயல்பு, ஏற்றுக்கொள்ளா படாவிட்டால் அவனுக்கு பெரிய இழப்பில்லை, பெண் ஒரு ஆணிடம் காதலை தெரிவித்து அவன் ஏற்றுக்கொள்ளவிட்டால் அது அவளுக்கு பெருத்த அவமான மாகிவிடுவது என்பது சமூக அமைப்பின் அவலம். ஒரு பெண், ஆணிடம் முதலில் காதலை சொல்லி அவன் ஏற்றுக்கொண்டால் அவன் பெரும் அதிர்ஷ்ட சாலி, அப்படி ஒரு அதிர்ஷ்ட சாலி ஆகவேண்டும் என்று என் காதலை மிகவும் ரகசியாமாக வைத்திருந்தேன். எனக்கு தவிப்புகள் அதிகமானாலும், பொறுமையாக இருந்தேன். அவள் என்வீட்டிற்கும், நான் அவள் வீட்டிற்கு சொன்று வருவதும் கூட அதிகமானது.

அவள் என்வீட்டிற்கு வந்த ஒரு நாள், அவளிடம் அப்பா நேரிடையாக கேட்டார்.

"ஏம்மா, உமா இவன் யாரையாவது லவ் பன்றானா?

நெற்றியை சுருக்கி, ஆழ்ந்து யேசித்து,

"இல்லை அங்கிள், அப்படி ஏதாவது ஒன்னு-ன்னா எங்கிட்ட சொல்லியிருப்பாரே"

"இல்லம்மா, அவன்கிட்ட பொண்ணுப் பாக்கலாம்னு சொன்னா கொஞ்சம் தயங்குகிறான், அதான் கேட்டேன்"

என்னை கேள்வியாக பார்த்தாள் உமா, கொஞ்சம் கோபம், ஏமாற்றம் எல்லாம் தெரிந்தது

"மூர்த்தி, நீங்கள் என்கிட்ட வரவர எதுவும் சொல்றதே இல்லை, உங்களை நாளைக்கு பார்த்துக் கொள்கிறேன்" என்று சொல்லி சென்றுவிட்டாள்.

ஒரு வேளை அதிர்ச்சி அடைந்திருப்பாளோ, அன்று எனக்கு தூக்கமே வரவேயில்லை.

மறுநாள் அலுவலகத்தில், பேசுவதைக் கூட தவிர்த்தாள், நான் தயங்கி, தயங்கி பேசினாலும் அதிகம் ஆர்வம் காட்டாதவள் போல நடந்து கொண்டாள்.

"உமா, ஒரு சம்பிர்யாதக்குத்தான் அப்பா என் கல்யாண விசயத்தை பேசினார்... நான் இப்ப வேண்டாம்-னு சொல்லிட்டேன், அதான் உங்கிட்ட சொல்லவில்லை"

"மூர்த்தி, நீங்க இதைப்பற்றி என்னிடம் மூச்சிவிடவில்லை என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது ..." என்றாள்

கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு அவள் திரும்ப ஒருவாரம் ஆகியது.

ஒரு நாள் மலை அலுவலகம் முடிந்தது அவள் வீட்டிற்கு அழைத்துச் சொன்றாள், அவள் தங்கை அவளுக்கு நேர் மாதிரியாக இருந்தாள், செகன்டரி ஸ்கூல் இறுதியாண்டு படிக்கிறாளாம், அவள் ஒரே வாயாடி என்று உமா சொல்வதை நேரடியாக பார்தேன்.

"மூர்த்தி அங்கிள், உமா காதலிக்கிற விசயம் உங்களுக்கு தெரியுமா ?"

எனக்கு ஆயிரம் ரோஜாக்களை தலையில் கொட்டியதுமாதிரி ஒரு உணர்வு, என்னை தவிர யாரை காதலிக்கப் போகிறாள் எனக்குள்ளே சொல்லி கொண்டேன். எனக்கு கொஞ்சம் வியர்த்தது.

"ஏய் யமுனா, கொஞ்சம் வயசுக்கு தகுந்த மாதிரி பேசுறியா ?" அதட்டினால் உமா

"என்னக்கா, போட்டுகுடுத்திட்டேன், பார்கிறியா, எப்படியும் மூர்த்தி அங்கிலுக்கு தெரியத்தான போறது".

"சும்மா...யிருடி, யாருகிட்ட எதை சொல்லனுமோ, அதுக்கான நேரம் வர்ரப்ப சொன்னாதான் அவுங்க சந்தோசப்படுவாங்க ..., சும்ம ஏதாவது உளரி கொட்டாதே ..."

கூச்சமும், சங்கடமாக என்னிடம்

"சாரி மூர்த்தி, இவள் ஏதோ உளருகிறாள், நீங்க தப்பா எடுத்துக்காதீங்க" என்றாள்

"நேரம் வர்ரப்ப நானே சொல்கிறேன் ..."

'அவ ஒன்னும் உளரல, சரியாத்தான் சொல்லுறா, நீ என்ன சொல்லப்போறன்-னு எனக்கு தெரியும் அதை, நீ உன் வாயால எப்ப சொல்லுவேன்னு தான் நான் வெயிட் பண்ணுகிறேன்' என்று நினைத்துக் கொண்டேன்

"சரி உமா, நாளைக்கு பார்கலாம்" என்று விடை பெற்று கொண்டேன்.

அதன் பிறகு வந்த நாட்கள் ஒவ்வொன்றும் எனக்கு ஆவல் மிகுந்து இருப்புகொள்ளாமல் இருந்தது, இப்படி உணர்வுகளை எப்படித்தான் அடக்கிவைத்துக் கொண்டிருக்க முடியுதோ, தெரியவில்லை. இந்த பெண்கள் இவ்வளவு ஆழமான மனது உள்ளவர்களா ? நான் அவளுக்கு முந்தி காதலை தெரிவித்தால், நான் அதிர்ஷ்டகாரானாக முடியாதே, என்ற என் உணர்வுகள் அவளிடம் என் காதலை தெரிவிப்பதற்கு தடையாக இருந்தது.


அன்றைக்கு எனக்கு அது மறக்க முடியாத நாளாக இருக்கும் என்று நினைக்கவில்லை, வழக்கத்துக்கு அதிகமாக அவளுடைய முகத்தில் ஒரு பூரிப்பு தெரிந்தது, யோசித்தபடியே மெதுவாக உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள்,

"என்ன உமா, ஏதோ நீ மகிழ்சியாக இருப்பது மாதிரி இருக்கு"

"ஆமாம், எல்லோரும் போகட்டம் அப்புறம் சொல்கிறேன், அதுக்குதான் நிதான மாக சாப்பிடுகிறேன்" என்றாள் மெதுவாக

வழக்கத்தை விட என்னை பார்பதும் சிரிப்பதுமாக இருந்தாள், அனைவரும் சென்றவுடன் என்னிடம், ஒரு தயக்க புன்சிரிப்புடன்

"மூர்த்தி உங்களிடம் ஒன்று தெரிவிக்கப் போகிறேன். சாயங்காலம் அலுவலகம் முடிந்ததும் நாம, நேரா ஹோட்டலுக்கு போறோம், சாப்பிட்டுகிட்டே பேசலாம்" என்று சொல்லிவிட்டு ஒரு வெட்கச் சிரிப்பை உதிர்த்துவிட்டு சென்றாள்.

'வார்ரே, வா, இன்னைக்குத்தானா அந்த பொன் நாள்' என்று ஆனந்தப்பட்டுக்கொண்டேன், எனக்குள் பருவகாலப்பூக்கள் ஒரே நாளில் ஆயிரக்கனக்காக பூப்பது போன்ற உணர்வு, உள்ளம் நிறைந்து போனது, மனித்துளிகள் நகராமல் வாட்டி வதைப்பது ஒரு இன்ப வேதனையாக இருந்தது ஒரு வழியாக அலுவலகம் முடிந்ததும்,

"மூர்த்தி உங்க பைக்கிலேயே இன்னைக்கு நாம போகலாம்"

ஒரு வினாடி பேச்சற்று போனேன், எத்தனை தடவை கெஞ்சி கேட்டும், என் பைக்கில் ஏறாதவள், இன்னைக்கு வருகிறேன் என்றால், அதுதான் அதுதான் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்

"என்ன உமா, முன்பெல்லாம் பைக்ல போகலாம்-னு கூப்பிடும் போதெல்லாம், யாராவது தப்பா நினைச்சுப்பாங்கன்னு, ரொம்ம பிகு பண்ணிக்குவ"

"இனிமே, அப்படியெல்லாம் நினைக்க மாட்டாங்க, இன்னைக்கு உங்களுக்கு தெரியப்போவது, நாளைக்கு அவுக்களுக்கு தெரியப்போவுது"

"சரி, சரி.... நீ ஏதோ சொல்லப் போறேன்-னு ரொம்ப ஆவாலாக இருக்கேன், இருப்பு கொள்ளவில்லை சீக்கிரம் ஏறு"

"மூர்த்தி, நீங்க நேரா ஹோட்டல் பார்க் இன்-னுக்கு போங்க" என்றாள் அமர்ந்ததும்.

"உமா, நல்ல கெட்டியாக சீட்ட புடிச்சுக்க"

என்று சொல்லிவிட்டு பைக்க அழுத்த, இத்தனை நாள் வெறும் பைக்காக இருந்த வாகனம் ஏதோ இறக்கை முளைத்து சொர்கத்துக்கு அழைத்துச் செல்வது போன்று இருந்தது.

பைக்கை நிறுத்திவிட்டாலும், இதயம் பட் பட் என சத்தமாக அடிப்பது எனக்கு கேட்டது, கைகளின் நடுக்கத்தை கவனித்த உமா,

"மூர்த்தி, நான் தான் இன்னும் விசயத்தை சொல்லவில்லையே, ப்ளீஸ் கூல் டவ்ன்" என்று சொல்ல, எனக்கு பேச்சு வரவில்லை, ஒரு வழியாக மேசையில் அமர்ந்ததும்

"மூர்த்தி என்ன சாப்பிடுரிங்க" என்று கேட்டாள்

இதயங்கள் இணைய போகிற நேரத்தில், உணவில் மட்டும் வேறுபாடு எதற்கு என்று நினைத்தபடி,

"உமா, உனக்கு என்ன பிடிக்குமோ, அதையே எனக்கும் சொல்லு" என்று சொன்னேன்

சிறிது நேரம் மவுனம், அவள் முகத்தை முதல் தடவையாக பார்பது மாதிரி இருந்தது, வகுப்பில் முதலில் வரும் பாஸான மாணவன் தன்னுடைய மதிப்பெண்ணை தெரிந்து கொள்ள புறப்படும் போது ஏற்படும் உணர்வலைகள் ஏற்பட்டது, மெதுவாக ஆரம்பித்தாள்

"மூர்த்தி, என்னை பாருங்கள், இன்னைக்கு நான் ரொம்ப சந்தோசமா இருக்கிறேன்" பிறகு தீர்கமாக என்னைப் பார்த்து

கண்களாலேயே சொன்னேன் 'தெரிகிறது'

"யெஸ், ஐ லவ் மூர்த்தி"

உடல் லேசாகி பறப்பது போன்ற உணர்வு, இதற்கு தானே இத்தனை நாள் காத்திருந்தேன்

அத்தனையும் ஒரு வினாடி கூட நீடிக்கவில்லை.

"என்ன மூர்த்தி ஏதும் பேசாம இருக்கிங்க, மூர்த்தி யாருன்னு கேளுங்க, சரி நீங்க ரொம்ப படபடப்பா இருக்கிங்க, நானே சொல்லிவிடுகிறேன்"

"அவர் பெயரும் மூர்த்திதான், என்னோட கிளாஸ் மெட், நானும் அவரும் நாலு வருசமா லவ் பண்ணுகிறோம்"

ஒரு சில வினாடிகளே நீடிக்கும் பூகம்பம் பூமியை பிளந்து போடுவது போல், உணர்வுகள் அத்தனையும் நொருங்க, நெஞ்சில் அதிர்ச்சி அலைகள் வலிகளை ஏற்படுத்த, பேச்சற்று போனேன்

மேலும் சொல்லிக் கொண்டே போனாள்

"மூர்த்தி, இது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும், ஏன்னடா, இவ இவ்வளவு நாள் பழகி நம்மகிட்ட சொல்லவேயில்லைனு நினைப்பிங்க"

"என்னோட லவ்வர் 'பேச்சிலர் டிகிரி' முடிந்ததும், மாஸ்டர் டிகிரி படிக்க சென்றுவிட்டார்"

"மூனு மாசத்துக்கு முன்னதான் அவருடைய டிகிரி படிப்பு முடிந்தது"

"அவர்தான், நம்ப வீட்டல சம்மதிக்குமுன் யாரிடமும் சொல்ல வேண்டான்-னு சொன்னார், அதனால்தான் உங்களிடம் வெளிப்படையாக சொல்ல முடியல"

"அவுங்க வீட்ல, ஆரம்பத்துல ஒத்துக்கொள்ளவில்லை, இரண்டு மாத்ததுக்கு முன்புதான் நானே எங்க வீட்ல சொன்னேன்"

"அன்னைக்கு நீங்க என் வீட்டுக்கு வந்தப்ப, என் தங்கை உங்களிடம் உளரினாளே அதற்கு முன்புதான்"

"எங்க அப்பா கொஞ்சம் தயங்கினாலும், ஆனால் இதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை"

"ரொம்ம பிடிவாதமாகதான், அவருடைய பெற்றோர்களை சம்மதிக்க வைத்தார்"

"நம்முடைய நட்பை பற்றி அவரிடம் நிறைய சொல்லியிருக்கேன், ரொம்பவும் உங்களின் நட்பை நெகிழ்சியுடன் பாராட்டுவார்..."

"மூர்த்தின்-னு என்னுடைய லவ்வருடைய பெயர் உங்களுக்கு இருப்பதால், உங்களிடம் நெருக்கமான நட்புடன் பழகு முடிந்தது என்று ஒன்றிருந்தாலும், நீங்க உண்மையில் அதைவிடவும், நல்ல நட்பிற்கு தகுதியானவர்தான் "

"உங்களை பார்க்கும் போது, உங்களை யாராவது மூர்த்தின்னு பெயர் சொல்லி அழைக்கும் போதும், என்னவரை அடிக்கடி நினைத்துக் கொண்டு மனதுக்குள் சிரித்துக் கொள்வேன்"

என்று அவள் சொல்ல சொல்ல மழை வேண்டிய மரம், இடியினால் கருகியது போன்ற கருகி போனேன்.

"நீங்க நிஜமாக ஒரு ஜென்டில் மேன், உங்களுடைய நட்பு எங்க திருமணத்துக்கு பின்பும் தொடரனும்னு அவரும் விரும்புகிறார்"

"அவர்தான் சொன்னார், நீங்க தான் எங்கள் கல்யாணத்துக்கு சீப் கெஸ்ட்"

"சரி, சரி மூர்த்தி நான் உங்களிடம் கோபித்துக் கொண்டது மாதிரி, நீங்களும் கோபித்துக் கொண்டீர்கள்னு நினைக்கிறேன்"

"இவ்வளவு நாள் இந்த விசயத்தை மறைத்ததற்கு, என்னை மன்னிச்சிடுங்க..."

"அவர் இன்னைக்கு, ஏழு மணிக்கு கோவிலுக்கு போகலாம்-னு வரச்சொல்லி இருக்கார், நேரம் ஆச்சு"

"நீங்க சாப்பிட்டுபோங்க, இன்னைக்கு என்னோட ட்ரீட் பில்லை கவுண்டரில் கட்டிட்டு போயிடுறேன்"

"நான் டாக்ஸி பிடித்து போய்க்கிறேன், உங்க அம்மா, அப்பா கிட்ட விசயத்தை சொல்லிடுங்க"

"கல்யாண வேலை இருக்கு அதனால் ஒருவாரம் லீவு போட்டிருக்கேன், அடுத்த வாரம் நானும் அவரும் உங்க வீட்டுக்கு நேரில் வந்து சொல்லிவிடுகிறேன், மறுபடியும் மன்னிப்பு கேட்கிறேன், மன்னிச்சிங்க மூர்த்தி" என்னிடம் எந்த ரியாக்ஸனும் இல்லாத்தால் ஒரு குழப்பமான பார்வையுடன் என்று எழுந்து சென்றாள்

ஆறரை மணி ஆகியருந்தாலும் இன்னும் சூரிய நிழல்களாய் வெளிச்சம் எங்கும் இருந்து கொண்டிருந்தது, பைக்கை ஓட்டிச் செல்ல முடியுமான்னு தெரியவில்லை, தட்டு தடுமாறி ஹோட்டலை விட்டு வெளியே வந்து, டாக்ஸிக்கு கைகாட்டி ஏறிக்கொண்டு என் விட்டின் உடைந்து போன குரலால் முகவரியை சொன்னேன்.

"சார், நீங்க ரொம்ப படபடப்பா இருக்கிங்க, கவலைப்படாதிங்க உங்களை பத்திரமாக விட்டுவிடுகிறேன்" என்று சொன்னார் டாக்ஸி ட்ரைவர், வீட்டில் இறக்கிவிட்டான், எவ்வளது டாக்ஸிக்கு கொடுத்தேன் என்று தெரியவில்லை.

வீட்டில் யாரும் இல்லை, ஆமாம் இன்னைக்கு வெள்ளிக்கிழமை கோவிலுக்கு சென்றிருப்பார்கள்.

மழை வேண்டிய தளிரை வெள்ளம் அடித்து சென்றது போல், மணவரையில் மணித்துளியில் மண்டபம் இடிந்து மணமகனை இழந்தது போல் என் மனதில் ஒவ்வொரு துடிப்பும் வெறுமையையும், இடியையும் மாறி மாறி உணர்ந்தேன்

அழுகையும் ஆத்திரமும் கொப்பளித்தது, உமாவின் மேல் கோபம் வரவில்லை, மாறாக என்மீது வெறுப்பு வந்தது, உலகமே இருண்டது போல் ஆக, தட்டுத்தடுமாறி ஒரு பேப்பரை எடுத்து, சுருக்கமாக எழுதிவைத்தேன், "காதலில், நான் என்னையே ஏமாற்றிக் கொண்டுவிட்டேன், என் மனம் என்னை கேலி செய்கிறது... என்னையும், உங்களையும் ஏமாற்றி வந்திருக்கிறேன், என்னோட இந்த முடிவுக்கு வருத்தப்படாதீர்கள் ..."

உத்திரமும், கயிறும் தவிப்புடன் இருக்க, என்னை சிறுவயதில் தாலாட்டிய உத்திரத்திற்கு நன்றி சொல்லிவிட்டு, நாற்காலியை நகர்த்தி ஏறி, கண்களை இறுகமூடி, கழுத்தில் கயிறை மாட்டி கடைசியாக ஒருமுறைப் கண்கள் திறந்து பார்க்க, குடும்பப் புகை படம் தெரிந்தது. சின்னவயதில் சிரித்தபடி நான், தங்கை, அப்பா, அம்மா. அடைத்த தொண்டை திறப்பதற்கு முயற்சித்தி தோற்க, கண்களை மூடி, நாற்காலியை கால்களால் தள்ளினேன், கழுத்தில் இறங்கியது இடி, நெஞ்சின் துடிப்பா, வெடிப்பா என்று உணர துடித்து, கைககால்கள் உதர..."

"ஏய்.. ஏய்.. மூர்த்தி என்னாடா ஆச்....."

அதற்கு மேல் எனக்கு கேட்கவில்லை. இப்பொழுது புறிகிறது அடையாளம் கண்டுகொண்டேன்.

அது அப்பாவின் குரல்தான்

மெல்ல மெல்ல கண்கள் திறக்க முயற்சிக்க, நான் படுத்து கொண்டிருக்கிறேன் என்று உணர்ந்தேன்.

இமைகள் விலகிய கண்கள் வழியாக பார்த்தேன், அப்பா வாயில் துணியை வைத்துக்கொண்டு வெறித்தபடி என் கால்களை பார்த்துக் கொண்டிருந்தார். நான் சாகவில்லை என்பதை உணர்ந்தேன்.

என் கால் விரல்கள் மெதுவாக அசைய, வேகமாக எழுந்து என்னை பார்த்து

"நர்ஸ், இங்க வாங்க, என் பையன் கண்ண திறந்துட்டான்" என்று கூவியடி, என் கண்களைப் பார்த்தபடி என் கண்ணத்தை மெல்லவருடினார், பதட்டத்துடன்,

"மூர்த்தி, அப்பா மூர்த்தி, எனக்கு இப்பதாண்டா உயிர்வந்திச்சு ..."

"இப்ப பாத்து, தங்கச்சிய கூட்டிட்டு வீட்டுவரைக்கும் போய்டுவரேன் சொல்லிட்டு போய்டாளே உங்க அம்மா..."

"சரி, நான் போன் பண்ணி சொல்லிடுறேன்.."

அங்கு வந்த நர்ஸ்,

"சார் நீ கொஞ்சம் அமைதிய இருங்க", என்றாள்.

"என்னப்பா, காதல் தோல்வியா ?, படிச்ச பையனா இருக்க"

"உங்க அப்பா, அம்மா மூனு நாளா தூங்கல தெரியுமா?, எப்ப கண்ணு திறப்பன்னு காத்து கிடந்தாங்க"

"விடும்மா, பையன் பொழச்சிட்டாந்னு நான் சந்தோசப் படறப்ப, தேவையில்லாம ஏதோ ஏதோ பேசதம்மா" என்று நர்ஸை அடக்கினார்

"சாரி, சார் இந்த மாதிரி பசங்களுக்கு, பெத்தவங்க தெய்வமாக இருந்தாலும் தெரியாம, கிறுக்குத்தனமா இப்படி செஞ்சிடுறாங்க ..."

"எங்கள மாதிரி ஆளுங்க, நல்லா உரைக்கிற மாதிரி சொன்னால் தான்... இவங்களுக்கெல்லாம் திருந்துவாங்க ..."

"இல்லென்னா... ஏன் காப்பாத்தினேன்-னு... மறுபடியும் பிரச்சனை பண்ண ஆரம்பிச்சிடுவாங்க..."

"இனிமே, உங்க பையனுக்கு ஒன்னும் ஆகாது, சாயங்காலமா வீட்டுக்கு அழைச்சிட்டுப் போங்க" என்று சொல்லிவிட்டு சொன்றாள்

அவள் சொன்னது குத்திகாட்டுவது போல் இருந்தாலும், நான் செய்த செயலால் எல்லோருக்கும் எத்தனை பெரிய அவமானம் ?

அப்பா என்னை மெதுவாக தலையை கோதிவிட்டு, அன்புடன் பார்த்தபடி,

"ஏன்டா, இப்படி செய்த என்று கேட்டார்" குழுங்கி குழுங்கி அழுதுகொண்டு கேட்டார்

அவமானமாக இருந்தது, என்னுடைய உணர்வுகளுக்கு என்றுமே மதிப்பு கொடுப்பவர் அப்பா.

குரல் உடைய அழுகைவந்தது, கைகளை பற்றிக்கொண்டு

"என்ன மன்னிச்சிக்குங்க..."

அவர் கண்களின் ஈரம், கன்னத்தில் வழிய

"அதல்லாம் இருக்கட்டம்பா ..."

"நீ முதல்ல, நடந்தத சொல்லு, ஏதோ உனக்கு காதல் தோல்வின்னு தெரியுது, நீ எழுதிவைத்த லெட்டரில் அவ யாருன்னு சொல்லவில்லை"

"சொல்றேன்பா ...", கூனிக் குறுகி ஒருவேளை அலுவலகத்துக்கு தெரிந்திருக்குமோ, உமாவுக்கு தெரிந்திருக்குமோ என்று பதட்டம் இருந்தது. கடவுளே இதெல்லாம் யாருக்கும் தெரிந்திருக்க கூடாது, அப்படி தெரிந்திருந்தால் யாருடைய முகத்திலும் விழிக்க முடியாதே என்று எண்ணியவாறு, சற்று ஆழ்ந்த மவுனத்திற்கு பிறகு, முகத்துக்கு நேரே கேட்க கூசியதால்,

"அப்பா, இது போலிஸ் கேசா, ஆயிடுச்சாப்பா" என கேட்டேன்

"அப்படி, எதுவும் நடக்கலப்பா, உனக்கு தான் தெரியுமே, இது நம்ப டாக்டர் ருத்ர மூர்த்தியோட கிளீனிக், அவர் முதலில் தயங்கினாலும், பொழைக்கிறத்துக்கு சான்ஸ் இருக்கு, சாமளிச்சிடலாம்னு சொல்லிட்டார், ஆண்டவன் புண்ணியத்தில போலிஸ் கேஸ் ஆகல, உங்க ஆபிஸ்லேயும் நீ வெளியூருக்கு அவசரமா போயிருக்கிறதா சொல்லிட்டேன்"

நிம்மதி பெருமூச்சி வந்தது, பின்பு ஒவ்வொன்றாக நடந்ததை சொன்னேன்

என் கைகளை பிடித்துக்கொண்டு

"இவ்வளவு நடந்திருக்கு, இதை ஊகித்து சரிப்படுத்த முடியாமல் போனதை நினைத்து, எனக்கு வெட்கமாக இருக்குடா மூர்த்தி" என்றார்

"யாருக்கும் தெரியவேண்டாம்னு, நான் தான் ரொம்ப கவனமாக நடந்துகிட்டேன், இதுல உங்க தப்பு எதுவுமில்லை" என்றேன்.

மேலும் அவர் முகத்தைப் பார்க்காமல்,

"எனக்கு கல்யாணமே வேணாம்பா, நான் உங்க பிள்ளையா இப்படியே இருந்திடுறேன்" என்றேன்

என் கண்ணத்தில், அவர் கையை பதித்து பேச ஆரம்பித்தார்

"மூர்த்தி, உனக்கு சின்ன வயசிலேர்ந்து ... விரும்பியதெல்லாம் கிடைத்தும் ... கேட்காதது கூட கிடைத்தும் ஏமாற்றம்னா என்னான்னு உனக்கு தெரியல"

"முதன் முறையாக, நீயே விரும்பிய ஒன்று, உனக்கு எப்பவும் கிடைக்காதுன்னு தெரிஞ்சப்ப உன்னால தாங்கிக்க முடியல... அதுக்கு காரணம் ..." என்று சொல்லி நிறுத்தி, மறுபடியும் தொடர்ந்தார்.

"மூர்த்தி, இந்த உலகத்தில் வாழுற ஒவ்வொருவரும் அடைய துடிக்கிற உணர்வு, காதல் ..."

"காதல் ஒரு ஈர்ப்பு சக்தி மட்டுமல்ல, அதுதான் மனிதனின் இதயத்தில் தூங்கிக்கொண்டிருக்கும் அன்பு உணர்வுகளை எழுப்பிவிடுகிறது "

"நம்ப கூடயே இருக்கும், வரும் உறவுகள்கிட்ட நாம வைக்கிற அன்பு என்பது இயற்கையா அமைந்தது, அவர்களை பிரியும் போது, அந்த இழப்புகளில் ஏக்கம் இருந்தாலும் நம்மாளால் ஏற்றுக்கொள்ள முடிகிறது, எப்படியும் அவர்களிடம் ஒரு நாள் சேருவோம் என்று நம்பிக்கொண்டிருப்போம்"

"நட்பு கூட அப்படித்தான், துரோகம் என்ற கருநிழல் படியும் வரைக்கும், நட்பை நாம் மிக ஆழமாக நேசிப்போம், ஒரு வேளை நன்பன் துரோகியாகும் போது, சில சமயம் முற்றுப்புள்ளியும், மண்ணிக்கவும் மனம் இடம் கொடுக்கிறது"

"ஆனால் காதல் என்பது, மன தூண்டுதலால், நமக்கு இது கிடைக்கவேண்டும் என்று விரும்பி நேசிப்பதாலும் ... தன்னுடைய விருப்பும், சந்தோசமும் சேர்ந்த சுயநலம் சேர்ந்திருப்பதாலும்... தோல்வியின் போது அது நம்மை சோர்ந்து போக வைத்துவிடுகிறது"

"காதல் ஒரு அற்புதமான உணர்வு, சிலருக்கு மட்டுமே வெளிப்படும் அற்புத உணர்வு, மென்மையானவர்களின் இதயம் அதனை அடையாளம் காட்டி பற்றவைத்துவிடுகிறது"

மேலும் மெதுவாக சொல்லிக்கொண்டே போனார்

"காதல் உணர்வு என்றுமே நிலையானது, அது காதலியுடன் சம்பந்தப் பட்டிருந்தாலும் அது ஒரு தனியான உணர்வு, அது காதலியிடம் குவிந்து துண்டப்படுவதால், காதலையும் காதலியையும் ஒன்றாக நினைத்துவிடுகிறோம்"

"காதலியை அடையமுடியாத போது, காதல் தோல்வி என்கிறோம், உண்மையில் காதல் அப்படியல்ல"

"அன்பு, பாசம் என்ற உணர்வுகளை விட அற்புதமானது காதல், அன்போ, பாசமோ கிடைக்காமல் போகும் அல்லது மறுக்கப்படும் போது, நாம் அன்பு தோல்வி என்றோ, பாச தோல்வி என்றோ சொல்வதில்லை, ஏனோ காதலை, காதலியுடன் சம்பந்தப்படுத்தி, கிடைக்காமல் போகும் போது காதல் தோல்வி என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்"

"தன்னோட காதலன் பெயர் உனக்கு இருக்கறதால, உமா உன்கிட்ட நேசமாக பழக முடிந்திருக்கிறது, இது தான் காதல்"

"ஐம்புலன்களையும் கட்டிப் போடவைப்பதும், திக்குமுக்காட வைப்பதும் காதல்"

"அது கடவுள் வரம், அது தூண்டப்பட்டவர் அடைவது பேரின்பம்"

"அந்த உணர்வை தேடுபவர்கள் பலரை அது தேடி வருவதும் இல்லை, தேடாதவர்களை விட்டுவைப்பதும் இல்லை"

"காதலி தனக்கு இல்லையென்று ஆகிவிட்டதால், காதல் செத்துவிட்டதாக நினைப்பது மடமை"

"அன்பின் ஆழத்தை போதித்து, உணர்த்தி பரவசப்படுத்தும் காதலை வெற்றி என்றோ தோல்வியென்றோ வீனாக போட்டு எல்லோரும் குழப்பிக்கொள்கிறோம்"

"என்னை பொறுத்தவரை, காதல் என்ற உணர்வை அனுபவிக்காதாவர்களை தான் காதலில் தோல்விகண்டவர்கள் என்று சொல்லுவேன்"

"அது மலரினும் மெல்லிய உணர்வு, அதை நீ அடைந்தை நினைத்து ஆனந்தப் பட்டுக்கொள்"

அப்பா சொல்லச் சொல்ல, நெஞ்சின் பாரம் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கியது

அப்பாவின் கைகளைப் மெதுவாக பற்றிக் கொண்டு,

"அப்பா, எனக்கு புரியவைச்சிட்டிங்க ..." என்றேன், நெகிழ்சியோடு என்னைப் பார்த்து,

"சரிப்பா, உன் மனசை ஆறவைக்கனும் நினைக்கிறேன்... அதுக்கு ஒரே வழி உன்னோட திருமணம் ..." என்றார். நிதானமாக,

"நான் என் பிரண்ட் சந்தானத்துகிட்ட பேசி மேகலாவை, உனக்கு கல்யாணம் பண்ணிவைக்கிறேன்"

நான் கொஞ்சம் தயக்கமாக,

"கல்யாணம் பண்ணிக்கொள்வதில் எனக்கு ஆட்சேபனையில்லை, ஆனால் என்னோட மனசு என்னுமோ வரப்போர மனைவிக்கு துரோகம் செஞ்சிட்டேன் நினைச்சி பீல் பண்ணும்-னு நினைக்கிறேன்"

"இது போதும்பா எனக்கு, உனக்கு தெரியாதுப்பா... சந்தானமும் உன் வயசில காதலில் மாட்டியவன் தான், அவனுடைய காதல் வாழ்கையும் உன் மாதிரிதான் முடிந்தது"

"நீயாவது காதலன் இருக்கிறான் தெரியாம காதிலிச்சிருக்க, அவன் கல்யாணமானவள் தெரியாமல் ஒருதலையா கதாலிச்சி புலம்பியிருக்கிறான்"

"நான் உன்கிட்ட காதலைப் பற்றி உயர்வாக எடுத்து சொன்னதெல்லாம், அவன் எனக்கு சொன்னதுதான், எனக்கு ஏது காதல் அனுபவம் ?"

"நானும் சின்ன வயசில அதுக்காக ஏங்கினேன், கிடைக்கவில்லை. கடைசியில் உங்க அம்மாவ பார்த்து கட்டிவெச்சிட்டாங்க... அதனால சோர்ந்து போகாம... உங்க அம்மாவை திருமணத்திற்கு பின்பு முழுமையா நேசிச்சிகிட்டுதான் இருக்கேன்"

"இது பற்றி சந்தானத்துக்கோ, மேகலாவுக்கோ தெரிந்தால் , 'என் மாப்பிள்ளையும் என்னை மாதிரிதானான்னு கேலிபண்ணி சிரிப்பான், அவங்கெல்லாம் முற்போக்கா வளர்ந்தவங்க, இருந்தாலும் கண்டிப்பாக அவர்களிடம் சொல்லிவிடுகிறேன்"

"நீ துரோகம் அது இதுன்னு... வீனா கற்பணை பண்ணிக்கொள்ளாதே"

"கல்யாணத்துக்கு பின்பு துணையை ஏமாற்றினால் தான் துரோகம், அடுத்தவர் மேல் பருவ வயதில் ஏற்பட்ட ஒரு இயற்கையான உணர்வு காதலை பற்றி சொல்வதை எப்படி வருங்கால மனைவிக்கு துரோகம்னு சொல்லமுடியும் ?"

"எனக்கு நம்பிக்கை இருக்கிறது, உன் வருங்கால மனைவியை மிகவும் நேசிப்பாய் என்று... ஏனென்றால் நேசம் என்ற ஆழமான உணர்வை அடைந்திருக்கிறாய் ! அனுபத்திருக்கிறாய் ! அந்த நேச உணர்வு, உன்னை நேசிக்க வைக்காமல் விட்டுவிடாது !" என்றார்

"தாங்ஸ்ப்பா, சந்தான மாமகிட்ட அப்ப பேசி ஏற்பாடுபண்ணுங்க" என்றேன். என் கைகளை பற்றியபடி

"எனக்கு அதைவிட்டா வேற வேலையில்லடா மூர்த்தி" என்றார்.

கடைசியில் தயக்கமாக சொன்னேன்,

"அப்பா... உமா, ஒருவாரம் கழித்து நம்ப வீட்டுக்கு வரேன்னு செல்லியிருக்கா... நடந்ததெல்லாம் அவகிட்ட சொல்லிடாதிங்க, அம்மா, தங்கையிடமும் இதைப்பற்றி அவளிடம் எதுவும் மூச்சிவிட வேணாம்னு சொல்லிடுங்க"

"உனக்கு சங்கடம் வரும், கூச்சமாக இருக்கும், எனக்கு புரியுதுப்பா, நான் சொல்லி வெச்சிடுறேன்" என்றார்

அந்த சமயத்தில் டாக்டர் ருத்ரமூர்த்தி அங்குவர, அருகில் வந்து,

"என்ன தம்பி எப்படி இருக்க, போட்டு எதையும் குழப்பிக்காதே, பாவம் உன் அப்பாவும், அம்மாவும் ரொம்ப பயந்துட்டாங்க"

"சாரி டாக்டர், டிப்ரெசன்-னால அப்படி நடந்துடிச்சி, ரொம்ப நன்றி டாக்டர் ..." வெட்கத்துடன் சொன்னேன்.

"அப்பா சொல்றபடி, கேட்டு நடந்துக்கோ" என்று சொல்லிவிட்டு, அப்பாவிடமும் பேசிவிட்டு டாக்டர் நகர்ந்தார்.

"மூர்த்தி, உங்கிட்ட பேசிக்கிட்டே, உங்க அம்மாகிட்ட விசயத்தை போன் பண்ணிக்கூட சொல்லவில்லை, அவ பதறிக்கிட்டே இருப்பாள்" என்று சொல்லி முடித்தார், அப்போது

வாசலில் கேட்ட ஆரவாரம் அவர்களின் வருகையை தெரிவித்தது. உள்ளே வேகமாக நுழைந்த அம்மாவும், தங்கையும், நான் அப்பாவிடம் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து, ஆனந்த கண்ணீருடன் என்னை ஓடிவந்து கட்டிக்கொண்டார்கள்.


நன்றி : இணைய இதழ்கள் தமிழோவியம், பதிவுகள், புதுமை

7 பிப்ரவரி, 2007

புது ப்ளாக்கர் - குறிசொற்கள், குறிசொற்களின் பட்டியல் அமைத்தல்

புது ப்ளாக்கர் கொடுத்திருக்கும் பல வசதிகளில் குறிசெற்கள் முதன்மையானது. நீங்கள் உங்கள் இடுகையை உங்கள் வலைப்பக்கத்திலேயே வகைப்படுத்தலாம்.

நீங்கள் எழுதும் ஒவ்வொரு இடுகையும் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட பிரிவுகளில் அடங்கும். எடுத்துக்காட்டு இந்த பதிவை நான் 'ப்ளாக்கர் உதவி', 'கட்டுரைகள்' என்று வகைப்படுத்த முடியும். 'ப்ளாக்கர் உதவி' என்று குறி சொல்லைத் தேடும் போதும் இந்த பக்கத்தைக் காட்டும், 'கட்டுரைகள்' என்று தேடினால் இதுவரை எழுதியுள்ள 'கட்டுரைகள்' சார்ந்த பதிவுகளுடன் பட்டியலில் இதுவும் இருக்கும்.

பதிவுகள் காலவதியான போது பெட்டகத்தில் (Archive Folder) சேர்ந்துவிடும். எனவே குறிப்பிட்ட இடுகையை தேடுவதென்பது அயற்சியை தரும். நாம் ஒவ்வொரு இடுகைக்கும் குறிசொற்களை சேர்த்து பதிந்து கொண்டால் குறிப்ப்ட்ட குறிசொல் உள்ள இடுகையை அடைவது எளிது.

குறிசொற்களை பதிவில் சேர்ப்பது எவ்வாறு ?

வெளியிடும் முன் தலைப்பு மற்றும் பதிவின் உட்பொருளை முன்னேற்பாடு (தயார்) செய்து கொள்ளுங்கள். கீழே Labels for this post: என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் இடதுபக்கம் குறிசொற்களுக்கான பெட்டி இருக்கும் (கீழே படம் காண்க). அதில் உங்களுக்குத் தேவையான குறிசொற்களை கமா (,) சேர்த்து எழுதிக் கொள்ளுங்கள்.


அதன் பிறகு பதித்தால் (Publish) குறி சொற்கள் பதிவில் சேர்ந்துவிடும். ஆனால் பயன்படுத்தப்படும் மொத்த குறிசொற்களின் பட்டியல் (Label List) இல்லாவிட்டால் பயனில்லை.

குறிசொற்கள் பட்டியலை (Label List) பதிவின் பக்கத்தின் சேர்ப்பது எப்படி ?

(ஓருமுறை செய்தால் போதும்)

1. ப்ளாக்கரின் கணக்கு வழியாக உள்ளே சென்று கீழே படத்தில் உள்ளது போல் Template -> Page Elements பக்கத்திற்கு செல்ல வேண்டும்


2. உங்கள் கருவிபட்டைக்கு (Template) ஏற்றார்போல் உங்கள் பக்க அமைப்பு காணப்படும், அதில் 'Add a Page Element' மேல் மவுஸ் பட்டனை அழுத்துக்கள், கிழ்கண்ட புதிய பக்கம் திறக்கும்.அதில் படத்தில் காட்டிய படி 'Labels' என்ற இடத்தில் உள்ள 'ADD TO BLOG' பட்டனை அழுத்துக்கள். அதன் பிறகு வரும் புதிய பக்கத்தில் (பின் வரும் படம்) குறிசொல் தலைப்பை இட்டுக் சேமிக்கவும் (Save Changs).


3. குறி சொல் பட்டை வலைப்பக்க கருவிப் பட்டையில் சேர்ந்துவிடும். உங்களுக்கு தேவையான் இடத்தில் (DRAG) குறிசொல் பட்டையை பொறுத்தி அதன் பிறகு (Template ஐ) சேமிக்க (SAVE) . பதிவின் முகப்பில் நீங்கள் பொறுத்திய இடத்தில் குறி சொற்கள் தொகுப்பட்டு இருக்கும்.
பின்குறிப்பு : எல்லா இடுகைக்கும் ஒரு பொது குறிசொல்லையும் சேர்த்துக் கொண்டால் நல்லது. நான் 'அனைத்தும்' என்று ஒரு பொது சொல் எல்லா இடுகைகளின் குறிசொற்களுடன் மேலும் ஒன்றாக (Additional) சேர்க்கிறேன். இப்படிச் சேர்ப்பதால். 'அனைத்தும்' குறிசொற்கள் உள்ள அனைத்து இடுகைகளையும் பெட்டக (Method of Archive)அமைப்பை மாற்றாமல் எந்த தேதியில் எழுதி இருந்தாலும் வரிசையாக ஒரே பக்கத்தில் கண்பிக்க வைக்க முடியும். அனைத்தையும் ஒன்றாக வேறெரு இடத்தில் சேமிக்கவோ. அச்சு எடுக்கவோ வசதியாக இருக்கும்.

எந்த ஒரு இடுகையின் குறிசொற்களையும் நீங்கள் எப்போதுவேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். அதற்கு ஏற்றார்போல் பதிவின் முகப்பில் உள்ள குறிசொற்கள் தொகுப்பு மாறிவிடும்.

6 பிப்ரவரி, 2007

பெயருக்குப் பின்னால் சாதி ? அவப்பெயரே !

பழமொழிகள் மக்களின் பண்பாடு கலாசாரத்தை வெளுத்துக் காட்டுபவை (ப்ரதிபலித்தல்). எல்லா நாடுகளிலும் பல மொழிகளிலும் பழ மொழிகள் உண்டு. நம் இந்தியாவில் பலமொழிகளுக்கென தனி அகராதியே போடலாம். தமிழ்நாட்டில் பலமொழிகள் என்பது தனி இலக்கியம் என்ற அளவில் எண்ணிக்கையில் இருக்கிறது. பழமொழிகள் தத்துவங்கள் சொல்வதும் உண்டு சாடுவதும் உண்டு.

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பது பழமொழி - இது தத்துவம் சார்ந்தது.
சுக்கு கால் பணம் சுமைகூலி முக்கால் பணம் - இது சாடல் வகை.

பழமொழிகள் பெருவாரியாக (அதிகம்) சாடுவதற்கென்றே உருவாக்கப் பட்டு இருக்கின்றன. தமிழகத்தில் சாதிகளுக்கு பஞ்சமில்லை. உயர்த்தி தாழ்த்திச் சொல்ல என்பதில் பெரும்பாலும் தாழ்த்திச் சொல்லவே பழமொழிகள் பெருவாரியாக பயன்பட்டுவந்திருக்கிறது. ஐம்பது நூற்றாண்டுகளுக்கு முன்புவரை இத்தகைய பழமொழிகள் புழங்குவது மிகவும் இயல்பு. தற்பொழுது சாதியைச் சாடும் பழமொழிகளை சிலவற்றைத் தவிர மற்றவற்றையெல்லாம் மக்கள் மனதில் இருந்து மறைந்து போய்விட்டது. இதற்கு காரணம் சாதிகள் ஒழிந்துவிட்டன என்று கொள்ளமுடியாது. எல்லோர் மனதிலும் அவரவர் சாதி குறித்த நல்லெண்ணம் இருக்கிறது.

தங்கள் சாதி உயர்ந்தது என்று நினைக்காவிட்டாலும் கண்டிப்பாக தாழ்வில்லை என்று கருதுகிறார்கள். ஒரு சில முற்பட்ட சாதிகளைத் தவிர மற்ற சாதியினர் சாதிப் பெயரைச் சொல்லி பெருமை (இதில் பிறந்ததற்கு பெருமை அடைகிறேன் என்பது போல்) கொள்வதும் இல்லை. மற்றவர்களை சாடுவதும் இல்லை. இந்த ஒரு இணக்கமான சூழலை நாம் அடைந்ததற்கு காரணம் சாதி பெயரை பெயரில் இருந்து நீக்கி கொண்டது தான் முதன்மையான காரணமாக இருக்க முடியும்.

தன் சாதி உயர்ந்ததென்று நினைத்து பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்ள முயன்றால் மற்றவர்களால் சொல்லடிபடுவோம் என்று பலதரப்பினரும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். பழமையை மீட்டு எடுக்கிறோம் சாதி என்பது பெருமை என்று மீண்டும் பெயருக்குப் பின்னால் சேர்த்துக் கொண்டால் அவப்பெயர் நமக்கு மட்டுமல்ல நம் குலத்துக்கே கூட கிடைக்கும்.

சாதிகளைச் சொல்லி பழிக்கும் பழமொழிகளை கீழே தருகிறேன்.


 • சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

 • கெட்டுப்போன பாப்பானுக்கு செத்த மாட்ட சீதனமா கொடுத்த மாதிரி

 • முதலியார் ஜெம்பம் வெளக்கெண்ணெய்க்கு கேடு

 • உதைப்பானுக்கு வெளுப்பான் சாதி வண்ணான்

 • செத்தாத்தான் தெரியும் செட்டியார் வாழ்வு

 • கிள்ளி எடுக்க சதை இல்ல பேரோ தொந்தியா பிள்ளை

 • இடையனுக்குப் புத்தி பிடரியில

 • உப்புக் கண்டம் பறிகொடுத்த பாப்பாத்தி போல

 • ஆட்டுக்கும் மாட்டுக்கும் ரெண்டு கொம்பு அய்யங்காருக்கு மூணுகொம்பு

 • வண்ணான்கிட்ட துணியப் போட்டுட்டு கொக்கு பின்னால நின்னாளாம்

 • ஆத்துல போட்டாலும் செட்டி அளந்துதான் போடுவான்

 • முட்டாள் நாய்கனும் மொரட்டு துலுக்கனும் பட்டாளத்துக்கு ஒத்துவராது

 • அம்பட்டனை அம்பலத்துக்கு அழைதால் மயிர் மயிர்னு தான் சொல்லுவான்

 • ஆடு திருடின கள்ளனுக்கு ஆக்கிப் போடும் கள்ளச்சி

 • ஆத்துல போனாலும் செட்டி ஆதாயம் இல்லாமல் போவானா ?

 • ஆரிய கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு

 • இடையன் அன்பெல்லாம் ஆட்டுக்குட்டி மேலே

 • இராவுத்தனே சினந்து இருக்கயில் குதிரை கோதுமை ரொட்டிக்கு அழுததாம்

 • செட்டி வீட்டில் பணம் இருக்கிறது ஆல மரத்தில் பேய் இருக்கிறது

 • தச்சன் பெஞ்சாதி தரையிலே கொல்லன் பெஞ்சாதி கொம்பிலே

 • திகம்பர சன்யாசிக்கு வண்ணானோடு என்ன உறவோ ?

 • தோண்டிக் கள்ளை தொடர்ந்து குடித்தால் பாண்டியன் மகனும் பறையன் ஆவான்

 • காடு கெட ஆடு ஊருகெட நூல் (பூனூல் அணிந்தவர்)

 • பசு சாதும் பார்பன ஏழையும் நம்பப்படா

 • பார்பனுக்கு மூத்த பறையன் கேட்பாரில்லாமல் கீழ்சாதியானான்

 • வண்ணான் பிள்ளை செத்தால் அம்பட்டனுக்கு மயிர் போயிற்று

 • வெள்ளாளர் செய்த வேளாண்மை வீடு வந்து சேராது

 • வேலை மெனக்கட்ட அம்பட்டன் பூனையை சிரைத்தானாம்

 • செட்டி சிங்காரிக்கிறத்துக்குள்ளே பட்டணமே பறி போகுமாம்

 • ஆற்றுக்கு பார்பன் துணையா ? சோற்றுக்கு பயற்றங்காய் கரியா ?

இன்னும் இருக்கின்றன பதிவின் நீளம் கருதி தவிர்த்துவிடுகிறேன். இந்த பழமொழிகளைப் பார்க்கும் போது நான்கு வருண அடுக்கில் கீழே உள்ளவர்களின் அறிவு குறித்து கேலி செய்யப்பட்டு இருக்கிறது, வைசியர்களின் தொழில் கேலி செய்யப்பட்டுள்ளது. சத்திரியர்களின் வீரம் கேலி செய்யப்பட்டுள்ளது. பார்பனர்களின் நம்பகத்தன்மை குறித்து கேலி செய்யப்பட்டுள்ளது.

சாதி பெயரை பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்வதன் மூலம் சாதியைச் சொல்லி பிறர் பழிப்பதற்கு ஏதுவாக அமைந்துவிடும். பழமொழிகளைப் பார்க்கும் போது மக்கள் மனதில் எந்த சாதியும் உயர்ந்ததாக கொள்ளவில்லை என்பது நன்றாக தெரிகிறது. சாதிப் பெயரை பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்வது என்பது இறந்து போன அல்லது மறந்து போன சாதிகளைக் குறித்த இழிவான பழமொழிக்களை தோண்டி எடுக்கும் வீண் முயற்சி. ஆக்கபூர்வமாக இல்லாமல் மேலும் வெறுப்பை (துவேசத்தை) வளர்க்கவே அது வழிவகுக்கும்.

சாதியை இழிவாக சொல்லும் பழமொழிகள் உங்களுக்கும் தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரியபடுத்துங்கள் எந்த சாதிக்கு என்ன 'பெயர்' கிடைத்திருக்கிறது என்று எல்லோரும் அறியட்டும். தனிமனித தாக்குதல் தவிர்க்க.

Don't Do !

4 பிப்ரவரி, 2007

பெண்களும் சாதீயமும் !

காதல் வயப்படும் உணர்வு ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது என்றாலும். ஆண் காதல் வயப்படுவதற்கும் பெண் காதல் வலையில் விழுவதற்கும் பெரும் வேறுபாடு உள்ளது. ஆணுக்கு காதல் ஒரு பெண் அழகாக இருந்தால் போதும் 'முயற்சித்து' பார்க்கிறார்கள். பெண்களின் அழகு மட்டுமே அவர்களை ஈர்க்கிறதென்றால் எனக்கு தெரிந்த வரையில்ல் 'அழகு' என்பதும் ஒரு காரணம் என்றாலும் எந்த ஆணும் கண்டதும் காதல் என்று ஒரே தடலாடியாக காதலை சொல்வதில்லை. 90% சதவிகித காதலில் ஆண் தன் துணையை காதல் வழி தேடும் போது தன்னை விட உயர்ந்த சாதியில் அல்லது தனது சாதியில் உள்ள பெண்களைத் தான் தேர்ந்தெடுக்கிறான். சில ஆண்களுக்கு பெண் தன் சாதியை சேர்ந்தவள் அதுவும் அழகானவள் என்றால் உடனே காதல் வருவதற்கான வாய்ப்பு 90% ஆக இருக்கும்.

ஆனால் தன்னை காதலிக்கும் ஆணின் சாதியைப் பார்த்து காதலிக்கும் பெண்கள் 10%க்கும் குறைவு. 90% பெண்கள் ஒரு ஆண் தன்னை விரும்பும் போது அவன் அவளை கவர்ந்திருந்தாலே போதும் எந்த சாதியைச் சேர்ந்த ஆணையும் ஒரு பெண் விரும்பிவிடுவாள்.

சாதி மத வேற்றுமையை துணிந்து தாண்டுவது பெண்கள்தான். எந்த ஒரு ஆணும் தன்னைவிட தாழ்ந்த சாதி பெண்ணை அவள் அழகாக இருக்கிறாள் என்றாலும் கூட விரும்புவதில்லை. தற்போது உள்ள சாதி அடுக்குகளில் ஒரு ஆண் தன்சாதியை விட முற்பட்ட எந்த சாதியில் உள்ள பெண்ணாக இருந்தாலும் தயங்காமல் காதலிப்பான். ஆனால் எந்த ஒரு ஆணும் தன்னைவிட பிற்பட்ட சமூகத்தில் உள்ள பெண்ணைக் காதலிப்பது அத்திப் பூத்தது போல அங்கொன்றும் இங்கொன்றும் நடந்தால் உண்டு.

இது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள நடைமுறைதான் அது என்று நினைக்கிறேன். சிங்கப்பூரில் சீன ஆடவன் இந்திய பெண்களை விரும்பி திருமணம் செய்து கொள்வது குறைவு. ஆனால் இந்திய ஆடவர்கள் (சிங்கப்பூர் இந்தியர்) சீன பெண்களை விரும்பி மணம் செய்து கொள்வது அதிகம். அதாவது இந்திய ஆண் - சீனப்பெண் ஜோடி அதிகம். சமூக பொருளாதார அந்தஸ்தில் சீனர்கள் இந்தியர்களைவிட உயர்ந்து இருக்கிறார்கள். இதுபோல் வெளி நாடுகளில் பார்க்க முடிகிறது. கறுப்பின ஆண் - வெள்ளை இன பெண் ஜோடிகளின் எண்ணிக்கை கறுப்பின பெண் - வெள்ளை இன ஆண் ஜோடிகளை விட அதிகம். ஆசிய பெண்களை மணந்து கொள்ளும் ஐரோப்பிய ஆண்களின் எண்ணிக்கையைவிட ஆசிய ஆண் - ஐரோப்பிய பெண் ஜோடிகள் எண்ணிக்கை அதிகம்.

காதலனின் அந்தஸ்து பார்க்காமல், தன்னைவிட பிற்பட்ட வகுப்பா என்று பார்க்காமல் மனதை மட்டும் பார்த்து மணம் முடித்து உண்மையில் *காதல்* என்ற உணர்வுச் சொல்லை வாழவைப்பவர்கள் பெண்களே.

ஆண்கெலெள்ளாம் காதலிக்கிறார்கள் ஆனால் தனது சமூகத்தைவிட பிற்பட்ட வகுப்பில் உள்ள பெண்ணை காதலிப்பது மிக மிக குறைவே. தன் காதல் தன்னைச் சார்ந்த சமூகத்தை எந்தவிதத்திலும் பாதிக்கக் கூடாது என்று நினைக்கும் ஆண்களின் காதல் உண்மையிலே காதல் தானா என்று கூட சந்தேகப் படவேண்டி இருக்கிறது.

சாதிகளை ஒழிக்கும் ஆயுதமான காதல் திருமணங்கள் பெண்கள் நினைத்தால் மட்டுமே சாத்தியம். பெண்களே உண்மையில் சாதிகளை / மதங்களை துணிந்து கடந்து காதலுக்கு மரியாதை செய்துவருகிறார்கள்.

சாதிகளைச் சாடி... சாதி குறித்து புரட்சிக்கவி பாரதி சொல்லுகையில்

"சாதிகள் இல்லையடி பாப்பா" என்கிறார். சாதிகள் இல்லையென்று பெண்களிடம் ஏன் சொல்கிறார் ? பையன்கள் தான் சாதி பார்க்கின்றனர்.

"சாதிகள் இல்லையடா பையா" என்று தான் சொல்லி இருக்கவேண்டும். ஆண்கள் திருந்தமாட்டார்கள் என்று நினைத்துதான்,

பெண்களிடம் சொல்வதுதான் சரி என்று உணர்ந்து சொன்னாரோ ?

பெண்கள் மட்டும் தான் பாரதி சொன்னதை கேட்டு நடக்கிறார்கள் !

2 பிப்ரவரி, 2007

இட ஒதுக்கீடு குறித்து...

இட ஒதுக்கீடு குறித்து அரசாங்கப் பிரிவுகள் முற்பட்டோர் அதாவது கல்வி மற்றும் சமூக அளவில் முன்னேறியவர்கள், பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் பழங்குடியினர் / ஆதிவாசிகள்.

இந்த நால்வகையினர் சேர்ந்ததுதான் ஒரு சமூகம். ஏற்றத்தாழ்வுகளை என்றைக்கோ விதைத்தன் அறுவடை முடிந்து இன்று எல்லாவற்றையும் சமப்படுத்தும் நிலையில் இருக்கிறது நாடு.

அள்ளியவனும் ஆள்பவனும் சக மனிதனே என்று எல்லோரும் உணரவேண்டும். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற நோக்கில் பொருளாதாரத்திலும் அதனால் கல்வியிலும் கீழே உள்ளவர்களை மேலே உயர்த்த வேண்டும் என்று சமூக அமைப்புகளை நன்கு ஆரய்ந்தே தான் அரசாங்கம் இடஒதிக்கீடுகளை அறிவித்து செயல்படுத்துகிறது. அனைத்து சமூகமும் அந்தஸ்தில் சம அளவில் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் தத்தம் சமூகம் முன்னேற வேண்டுமென்றெ மனப்பான்மையால் இருப்பதால் இட ஒதுக்கீடு கொள்கைகள் குறித்து மாறுபட்ட கருத்துக்களைச் சொல்கின்றனர்.

இப்பொழுது உள்ள இட ஒதுக்கீடு ஒரேடியாக கீழே உள்ளவர்களை மேலே கொண்டுவந்துவிடவில்லை. இது அவர்கள் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கு ஊட்டமாகவும் அதைவிட விழிப்புணர்வுக்காகவும் தான் பயன்படுகிறது.

போட்டி போட்டு வெற்றிபெற முடியும் என்ற அளவுக்கு கீழ்நிலை சமூகங்கள் இன்னும் விழிப்புணர்வு பெற்றுவிடவில்லை என்பதை கட்-ஆப் மார்க் வைத்தே தெரிந்து கொள்ள முடிகிறது.

ஒரே மாதிரி 50 மார்க் மட்டுமே எடுக்கும் 4 வித சமூகங்களும் ஒன்றாகவே கருத்தப்பட வேண்டுமென்பது ஏற்புடையதா ?

பள்ளிசெல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் வேலைசெய்தால் தான் உணவு என்று இருப்பவன் எடுக்கும் 50 மதிப்பெண்ணும் படிப்பைத் தவிர வேறெதும் செய்யத் தேவையில்லாதவர்கள் எடுக்கும் 50 மதிப்பெண்களும் ஒன்றா ?

50 மதிப்பெண் எடுத்து இடம் கிடைத்த பழங்குடியினரைப் பார்த்து 50 மதிப்பெண் எடுத்து இடம் கிடைக்காத மிகவும் பிற்படுத்தவர் / பிற்படுத்தப்பட்டவர் தாம் பழங்குடியினராக பிறந்திருந்தால் நல்லது என்று நினைப்பார்களா ? இது போலத் தான் மற்ற சமூகங்களின் மனப்பான்மைகளும்.

மதம் மாற்றம் போல் சாதி மாறி சலுகைகளை அடைய எந்த சமூகம் தயாராக இருக்கிறது ? தனது சாதியையும் விட்டுக் கொடுக்கக் கூடாது சலுகையும் வேண்டும்.

இடஒதுக்கீடு பற்றிய பெருமூச்சுகளைப் பற்றி பச்சையாக சொல்லப் போனால் பிச்சைகாரன் சோற்றில் கைநினைக்க ஆசைப்படுவது போல் இருக்கிறது, சலுகைகள் பெறுபவர்களை பிச்சைக்காரான் என்று சொல்வதாக பொருள் அல்ல... அவர்கள் அந்த நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்... அந்த விழிப்புணர்வும் அற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதே பொருள்.

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டுமென்பது நல்ல சிந்தனைதான்... அதற்கு முன்பு இதுவரை எல்லோரும் எல்லாமும் பெற்று சமநிலையில் இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்...போட்டிக்கு அவர்களை தயார்படுத்தவேண்டும். பலமில்லாதவர்கள் தங்களுடன் போட்டி போடவேண்டும் மென்பது சுயநலப் பார்வையும் தன்சமூகம் சேர்ந்த பார்வையே அன்றி வேறுபாடுகளை களையவேண்டும் என்ற பொது சமூகப் பார்வை இல்லை. தனிமனித, தனிசமூக பாதிப்புகளைவிட ஒரு பல சமூகத்தில் இதுநாள் வரை வைத்து இருந்த / திணிக்கப்பட்ட பாதிப்புக்களைத்தான் கவனத்தில் கொள்ள வேண்டும்.


பின்குறிப்பு : இது தமிழ்மண விவாதகளத்தில் அளித்த பின்னூட்டம்

பின்னூட்டமிடம் இட Post a Comment


கீழே உள்ள பின்னூட்ட இணைப்பை (Post a Comment - Link) பயன்படுத்தவேண்டாம் ப்ளாக்கர் சொதப்பல் அது

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்