பின்பற்றுபவர்கள்

12 செப்டம்பர், 2008

திண்டுக்கல் சர்தார் ஐயாவுக்கு...

அனுராதா அம்மாவின் மரணம் பெரும் வருத்தம் அளிக்கக் கூடியதே எவரும் மறுக்கவில்லை, உன்னதமான பெண்மணியின் உயிரழப்புக்கு பதிவர்கள் அனைவரும் கண்ணீர்வடித்தார்கள், கணவர் என்பதால் உங்களுக்கு பிரிவின் துயர் மிகுந்தது என்பது நீங்கள் எழுதிவரும் பதிவுகளில் இருந்தே தெரிகிறது.

நோய், விபத்து, இயற்கைச் சீற்றம் இவற்றால் ஏற்படும் மரணத்திற்கும் ஒருவர் நல்லவராக இருப்பதற்கும் தொடர்பு இல்லை என்பதே என் சிற்றறிவுக்கு ஓரளவு புரிகிறது. மகானாக வாழ்ந்தவர்களின் இறப்புக் கூட இப்படித்தான், புத்தரின் வாழ்வின் கடைசி நாளை விஷம் பரவி இருந்த பன்றி இறைச்சி உணவே தீர்மானித்தது, வாழும் யோகியாக வாழ்ந்த இராமகிருஷ்ண பரமஹம்சரின் உலக வாழ்க்கை அம்மாவைத் தாக்கியது போல் ஒருவகையான புற்று நோயால் தன் முடிவுக்கு வந்தது, 40 வயதிற்கு குடல் புற்று நோயால் மரணமடைந்தவர் தான் விவேகாநந்தர். மாகாத்மாவே துப்பாக்கியால் தானே துர்மரணம் அடைந்தார் தானே.

கருவில் இதயம் துடிக்கும் தொடங்கும் அதே விநாடியில் ஒருவரின் மரணம் 'குறித்த' கவுண்ட் டவுன் ஆரம்பமாகிவிடும். தொடக்கத்துடனே முடிவுக்கான முகூர்த்தங்கள் எழுதப்பட்டுவிடும்.

"என் மகனை உயிர்பிழைக்க வையுங்கள் " என்று கதறிய ஏழைத்தாயிடம்

"எவர் வீட்டில் இறப்பு நடக்கவில்லையோ...அவர்கள் வீட்டில் இருந்து சிறிதளவு கடுகை வாங்கி வாருங்கள் அம்மா....உங்கள் மகனைப் பிழைக்க வைக்கிறேன்" என்றார் புத்தார்

ஒரு நாள் முழுவதும் அழைந்துவிட்டு வந்த அம்மா திரும்பும் வழியிலேயே மரணம் ஏற்படாத வீடுகளே இல்லை என்று உணர்ந்து கொண்டு, புத்தரின் குடிலில் சேவை செய்து எஞ்சிய வாழ்கையைக் கழித்தாராம்

"உங்கள் வீட்டில் இழவு விழுந்தால் இது போன்று தத்துவம், கதைகளைச் சொல்லுவியா ?" என்று நீங்கள் கேட்கலாம், எனது தந்தையும் கூட 50 வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்தார், அவரது உடலைக் கூட பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டு...கதறி இருக்கிறேன் ".....அதன் பிறகு என்றும் என்னோடு தான் இருக்கிறார் என்ற உணர்வு இன்றும் கூட இருக்கிறது, மரணம் பற்றிய சிறு புரிதல்களை இந்த கதையில் எழுதி இருக்கிறேன் நேரம் கிடைத்தால் படித்து பாருங்கள்.

உடலுக்கு மட்டும் தான் இறப்பு, அவர்கள் விட்டுச் சென்ற சுகமான நினைவுகள் என்றும் நம்மோடு இருக்கும், அதை அசைப்போட்டு அவர்களை நினைவு கூறுவது தான் அவர்கள் மீது நாம் வைத்திருக்கும் அன்பைப் போற்றுவதாகும்.

எந்த மதத்தினராக இருந்தாலும்...இறந்தவரின் உயிர் சாந்தி அடையட்டம் என்றே வேண்டிக் கொள்கிறார்கள். நெருங்கியவர் இப்படி அழுது புலம்பினால் இறந்தவரின் நல்லுயிர் அமைதி அடைவது எப்படி. இருக்கும் வரை அனுராத அம்மா மிகவும் துயரப்பட்டுவிட்டார், இறந்த பிறகாவது மன அமைதி அடைய வைக்க வேண்டியது உங்கள் எண்ணங்களில் தான் இருக்கிறது. நோயின் கொடுமை உணர்ந்த நீங்கள் அது போல் வருந்துபவர்களுக்கு ஆறுதல் அளிக்கலாம், விழிப்புணர்வு ஊட்டலாம், அதை உங்கள் மனைவிக்கு செய்யும் சேவையாகவே நினைத்து செய்யலாம், கண்டிப்பாக ஆறுதல் அடைவீர்கள்.

ஏதும் அறியாமல் கடற்கரையில் விளையாடிக் கொண்டு இருந்த குழந்தைகளைக் கூட கோரச் சுனாமியில் இறந்து கூட்டமாக கிரேன் மூலம் குழிதோண்டி புதைத்தையெல்லாம் தொலைக்காட்சி வழியாக பார்த்து இருப்பீர்கள், நம் துயர் தான் பெரியது என்று நினைப்பதை மறக்க, வெளி உலக இறப்புகளையும் அமைதியாக நினைத்துப் பாருங்கள், 'அம்மா வருகிறேன்........" என்று சிரித்தப்படி சென்ற குழந்தைகள், கும்பகோணம் விபத்தில் கரிக்கட்டையாக மாறிய போது எழுந்த பெற்றோர்களின் கதறல்கள் இன்னும் கூட கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

நீங்களும் அம்மாவும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்து மகிழ்ந்தவர்கள், வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களை நினைத்துப் பாருங்கள், இந்த வாழ்கையை சற்றும் சுவைத்திடாத எத்தனையோ பேர் கடுமையான நோய், கொடிய விபத்து, பெரும் இயற்கைச் சீற்றம் ஆகியவற்றால் எதிர்காலமே முற்றிலும் இருட்டானது போல் ஒரே நொடியில் இறந்திருக்கிறார்கள். உங்களின் மீது அனுதாபம் இருக்கிறது, அம்மாவின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு மரணம் பற்றிய உண்மைகளை மறைத்துக் கொண்டு இருக்கிறது.

சொல்வதற்கு சற்று யோசனையாகவே இருந்தாலும் சொல்கிறேன், நாம் எல்லோருமே ஒரு நாள் இறக்கப் போகிறவர்கள் தானே. நமக்கு முன் இறந்தவர்களிடம் தானே போய்ச் சேருவோம்? அம்மாவின் ஆத்மா அமைதியடைவது உங்கள் கைகளில் தான் இருக்கிறது, வாழும் கடைசி ஆண்டுகளில் நோய்களினால் மிகவும் வருந்தி இருக்கிறார்கள், இறந்த பிறகாவது துன்பங்களிலிருந்து மீண்ட அமைதி கிடைக்கட்டுமே, அதை உங்கள் வருத்தங்கள் தடைசெய்துவிடக் கூடாது. இறைநம்பிக்கை இருப்பதாலேயே இறைவனைத் திட்டுகிறீர்கள் என்பது புரிகிறது, உங்களுக்கு இருக்கும் இறை நம்பிக்கை உங்களை துக்கத்தில் இருந்து கண்டிப்பாக மீட்கும்.

தவறாக நினைக்காதீர்கள், உங்கள் வருத்ததை ஏளனம் செய்வதற்காக எழுதவில்லை, நீங்கள் பிரிவின் துயரிலிருந்து முற்றிலும் விடுபட்டு, உங்களுக்காகவும் நீங்கள் வாழவேண்டும் என்கிற எண்ணமே காரணம். பதிவர்கள் பலரின் எண்ணமும் இப்படித்தான் இருக்கும், உங்களுக்கு வருத்தம் ஏற்படுத்தாமல் சொல்லும் வழி தெரியாமல் தவிக்கிறார்கள்.

16 கருத்துகள்:

SurveySan சொன்னது…

excellent post.

கோவி.கண்ணன் சொன்னது…

//SurveySan said...
excellent post.
//

பாராட்டுக்கு நன்றி !

பாராட்டுக்காக எழுதவில்லை,

இறந்தவர்களைவிட இருப்பவர்களின் நலன் காக்க வேண்டும்.

RATHNESH சொன்னது…

உங்கள் பதிவு மூலமாகத் தான் விஷயமே தெரிந்து கொண்டேன். இன்னொரு நல்ல எழுத்தாளரைத் தமிழுலகம் இழந்திருக்கிறது.

வாழ்க்கையின் சிரமங்களைப் போராடியே வென்று காட்டியவர் அவர். உடல் பூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் நிறைய சவால்களை எதிர்கொண்டவர் அவர். அவருடைய எழுத்தின் பக்குவப்பட்ட தன்மைகளுக்கு அவையும் ஒரு காரணம்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

நல்ல நோக்கம், வேண்டுகோள், பதிவு.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

என்ன சொல்வதென்று தெரியவில்லை.
எப்போதுமே கணவணை இழந்த மனைவி துன்புறுவதை விட அதிகமாக மனைவியை இழந்த கணவர் துன்புறுவார்கள். இதனால்தான் ஆணை விட குறைந்த வயதுடைய பெண்ணை திருமணம் செய்விக்கின்றார்கள். அவரது சோகம் சொல்ல முடியாதது. ஆனால் நீங்கள் சொல்லியிருப்பது போல் மக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஊட்டும் வண்ணம் அவர் செயல்படுவது தான் அம்மையாருக்கு செய்யும் சிறந்த அஞ்சலியாக அமையும். ஏற்கனவே பலரும் சொல்லியுள்ளபடி அம்மையாரின் எழுத்துக்களை புத்தகமாக்கும் முயற்சியில் ஈடுபடுவதே சிறந்த தொண்டாக அமையும் என்பது என் கருத்து. அவரது தொலைபேசி எண் இருந்தால் கொடுங்கள், நான் அவரிடம் பேசுகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
உங்கள் பதிவு மூலமாகத் தான் விஷயமே தெரிந்து கொண்டேன்.//
ரத்னேஷ் அண்ணா,

அனுராதா அம்மா மறைந்த அன்றிருந்தே எனது பதிவின் வலது மேல்பக்கத்தில் விளக்கு ஏற்றி வைத்து, தகவலுக்கான இணைப்பையும் கொடுத்து வைத்திருக்கிறேன்.

//இன்னொரு நல்ல எழுத்தாளரைத் தமிழுலகம் இழந்திருக்கிறது.

வாழ்க்கையின் சிரமங்களைப் போராடியே வென்று காட்டியவர் அவர். உடல் பூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் நிறைய சவால்களை எதிர்கொண்டவர் அவர். அவருடைய எழுத்தின் பக்குவப்பட்ட தன்மைகளுக்கு அவையும் ஒரு காரணம்.
//

மிகச் சரிதான் !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
நல்ல நோக்கம், வேண்டுகோள், பதிவு.

1:02 PM, September 12, 2008
//
ஜோதிபாரதி,
நல்ல நோக்கம், வேண்டுகோள் இரண்டிலும் பங்கெடுத்துக் கொண்டதற்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
அவரது தொலைபேசி எண் இருந்தால் கொடுங்கள், நான் அவரிடம் பேசுகிறேன்.
//

சென்னை மற்றும் மதுரை பதிவர்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

குரங்கு சொன்னது…

கோவியானந்தா...

உங்க பதிவ படிக்க படிக்க, நான் சாமியாரா போய்ருவேன் போலிருக்கு :(

மரணம் துக்கமானதுதான்...

ஆழ்ந்த அனுதாபங்கள்...

வால்பையன் சொன்னது…

இழப்பு பெரிது என்பதால்,
மீண்டு வர சில நாட்கள் எடுத்து கொள்ளலாம்.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

RATHNESH சொன்னது…

மன்னிக்க வேண்டும் கோவி.கண்ணன்,

// அனுராதா அம்மா மறைந்த அன்றிருந்தே எனது பதிவின் வலது மேல்பக்கத்தில் விளக்கு ஏற்றி வைத்து, //

நான் எவ்வளவு மோசமான டியூப்லைட் பாருங்கள். பதிவர் அனுராதா அம்மா என்று அந்த விளக்கின் அருகில் எழுதப்பட்டிருந்தது. எனக்குள் உறைக்கவே இல்லை. நான் இல்லாத இந்த ஐந்து மாத காலத்தில் தங்கள் மனதில் பதிந்த ஒரு புதிய பதிவர் போலும் என்கிற எண்ணம் தான் கொண்டிருந்தேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//குரங்கு said...
கோவியானந்தா...

உங்க பதிவ படிக்க படிக்க, நான் சாமியாரா போய்ருவேன் போலிருக்கு :(

மரணம் துக்கமானதுதான்...

ஆழ்ந்த அனுதாபங்கள்...
//

மரணம் துக்கமானதுதான்... அதன் அழுத்ததைக் குறைப்பதற்குத்தான் சொந்தங்கள் கூட சிறிது நாட்கள் உடன் இருப்பார்கள். நம்மால் முடிந்த வகையில் நல்ல சொற்களால் ஆறுதல்அளிப்போம்.

பெயரில்லா சொன்னது…

//நீங்கள் பிரிவின் துயரிலிருந்து முற்றிலும் விடுபட்டு, உங்களுக்காகவும் நீங்கள் வாழவேண்டும் என்கிற எண்ணமே காரணம். பதிவர்கள் பலரின் எண்ணமும் இப்படித்தான் இருக்கும், உங்களுக்கு வருத்தம் ஏற்படுத்தாமல் சொல்லும் வழி தெரியாமல் தவிக்கிறார்கள்.//

கோவி சரியாகச் சொன்னீர்கள்.
எனக்கும் இதே எண்ணம்தான்.

Subramanian சொன்னது…

வணக்கம் கோவி கண்ணன்.எனக்கெனவே ஒரு பதிவு போட்டு ஆறுதல் கூறியமைக்கு முதலில் என் நன்றி.இறைவனைத் திட்டும் அந்த வலையை நீக்கிவிட்டேன்.என்ன செய்வது?ஆற்றொணாத்துயரின் வெளிப்பாடாக அமைந்தாலும் அது தவறென்று பிறகு உணர்ந்தேன்.

நீண்ட நாள் கழித்து இன்று வலையை மேய்கிறேன்.

அடுத்த மாதம் 15ம் தேதி சிங்கை வருகிறேன்.தாங்கள் சம்மதித்தால் சந்திக்கிறேன்.விருப்பமும் நேரமும் இருந்தால் எனது sks_anu@hotmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//திண்டுக்கல் சர்தார்12818834628383879881 said...
வணக்கம் கோவி கண்ணன்.எனக்கெனவே ஒரு பதிவு போட்டு ஆறுதல் கூறியமைக்கு முதலில் என் நன்றி.இறைவனைத் திட்டும் அந்த வலையை நீக்கிவிட்டேன்.என்ன செய்வது?ஆற்றொணாத்துயரின் வெளிப்பாடாக அமைந்தாலும் அது தவறென்று பிறகு உணர்ந்தேன்.

நீண்ட நாள் கழித்து இன்று வலையை மேய்கிறேன்.

அடுத்த மாதம் 15ம் தேதி சிங்கை வருகிறேன்.தாங்கள் சம்மதித்தால் சந்திக்கிறேன்.விருப்பமும் நேரமும் இருந்தால் எனது sks_anu@hotmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.

6:41 PM, September 23, 2008
//

ஐயா,

மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது, என்னைப் போல் தான் பலரும் நீங்கள் துக்கத்தை மறந்து பழையபடி உற்சாகத்தை மீட்டுக் கொண்டு உங்களுக்காகவும் வாழவேண்டும் என்று விரும்புகிறார்கள், அதற்கு இங்கிருக்கும் பின்னூட்டங்களே சாட்சி. அதற்காக எனது இந்த பதிவும் சிறிதேனும் உதவி இருக்கிறது என்பதை நினைக்கும் பொழுது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது.

சிங்கை வரும் போது தொடர்பு கொள்ளுங்கள், பதிவர்களுடன் கலந்து ஆலோசித்து ஒரு பதிவர் சந்திப்பை நடத்திடுவோம், உங்களையும் நேரில் சந்திக்க பலர் விரும்புகிறார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//வடகரை வேலன் 12:38 AM,

கோவி சரியாகச் சொன்னீர்கள்.
//

அண்ணாச்சி நன்றி !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்