பின்பற்றுபவர்கள்

16 ஜூன், 2008

அப்பா இன்னும் சாகவில்லை....!

மார்ச் 25 1990...அன்றுதான் அப்பா மறைந்ததாக வீட்டில் உள்ள மற்றவர்கள் சொல்லுகிறார்கள். நான் என் தம்பியுடன் சென்னைக்கு வந்த இரண்டாம் ஆண்டு அது. டிசம்பர் 24 1989ல் நானும் தம்பியும் எப்படி வாழ்கிறோம் (சென்னையில் எப்படி காலம் தள்ளுகிறோம்) என்று பார்க்க வந்திருந்தார். 'கந்த கோட்டம் பார்கனும்டா...இங்கே எங்கேயோ இருக்காம்ல' சொல்லும் போது நண்பர்களும் நானும், 'சென்னை வந்தால் எம்ஜிஆர், அண்ணா சமாதியைத்தான் பார்த்து செல்வாங்க...கந்த கோட்டமா அது எங்கே இருக்கு ?' எல்லோரும் சிரித்து செய்த கிண்டல் அவருக்கு கூச்சமாக இருந்ததிருக்கும்... அதன் பிறகு அதைப்பற்றி கேட்பதை தவிர்த்தார். அவரை ஊருக்கு அனுப்பிவிட பாரிஸ் கார்னருக்குச் செல்ல ...அவருடன் பேருந்தில் பயணம் செய்த போது கை, கால்களில் பளபளப்பு குறைந்து சற்று சுருங்கிய தோல்கள் கண்ணில் பட மனதிற்குள் என்னை அறியாமல் ஏற்பட்ட உணர்வு 'அப்பாவுக்கு...வயது ஆகிக் கொண்டிருக்கிறது...' என்று நினைக்க வைத்தது ...அப்போது அவருக்கு 51 வயதுதான். பாரிஸ் கார்னரில் தான் கந்த கோட்டம் இருக்கிறது என்பது கூட தெரியாமல் அங்கேயே அவரை பேருந்து ஏற்றிவிட்டேன்.

அப்பாவுக்குத்தான் எத்தனை பெயர்கள் ? அவரை சிறுவயது முதலே தெரிந்தவர்களில் அவரைவிட சிறியவர்கள்...'ராமண்ணா..' என்றும் பெரியவர்கள்...'ராமா...' என்றும் அன்பாக கூப்பிடுவார்கள்....சபரிமலைக்குத் தொடர்ந்து சென்றதால் அவர் பெயரையே எல்லோரும் மறந்து மற்ற நாட்களிலும் 'சாமி' என்றே அழைத்தனர்....நாங்களும் அம்மாவும் கூட அப்படியே அழைத்தோம். அவரும் 5 வயது சிறுவர்களைக் கூட 'சாமி' என்றே அழைப்பார். டீக்கடைக்காரர்களிடம் 'சாமி வீடு?' எங்கே என்று கேட்டால் கூட ... எந்த சாமி ? எதிர்கேள்வி இல்லாமல் எங்கள் வீட்டுக்கு வழி சொல்லிவிடுவார்கள். அதைத் தவிர அப்பாவுக்கு அதிர்ஷ்ட குலுக்கல் கிடைத்து ... அதன் மூலம் ஊரார் சுட்டும் பெயர் 'லட்சாதிபதி'. 'லட்சாதிபதி வீடாமே ?' தபால் காரர்களிடம் கேட்டால் எங்கே இருக்கிறது என்று சொல்லிவிடுவார்கள். அப்பாவுக்கு 'கோவிந்தராஜு' என்ற இயற்பெயர் எங்களது இனிசியலாக மட்டுமே இருந்தது. அந்த பெயரை அறிந்தவர்களும் மிகக் குறைவே.

உடன் பிறந்த அறுவரில் அப்பாவுக்கு பிடித்தவர் யார் ? அம்மாவும் தோற்றுப் போனார்...காரணம் அம்மாவுக்கு பிடித்தவர்கள் யார் யார் என்பது வெளிப்படை. அப்பாவுக்கு ? 'அப்பா என்னிடம் தான் அதிகம் பாசம் வைத்துள்ளார்' ஒவ்வொருவரும் அதையே உணர்ந்தோம்.... தனித்தனியான அன்பு...குறைவில்லாத அன்பு...அப்பா வைத்தது போல் அப்படி குறையற்ற அன்பை வைக்க அமமாவால் முடியவில்லை.

******

இரவு சமைத்த சோறு ...தீய்ந்து போனது...மனது சரியில்லை... தூக்கமில்லாமல் மொட்டை மாடியில் படுத்துக் கொண்டிருக்கும் போது அதுகுறித்து...'எதோ விபரீதம் நடக்க இருக்கிறது' திக் திக் என இருக்க அப்படியே தூங்கிப் போனேன், மறுநாள் வழக்கமாக அலுவலகம் சென்றேன்

மார்ச் 26 1990... திங்கள் காலை 11 மணிக்கு சென்னையில் அலுவலில் இருந்த போது

"அப்பாவுக்கு ரொம்ப சீரியஸ்...உடனே நீயும் தம்பியும் கிளம்பி வந்திடுங்க....." ஊரில் இருந்து யாரோ அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார்கள் ... அழுத்தமானது மனது...எனது தம்பிக்கும் தொலைபேசி வீட்டுக்கு வரச் சொல்லிவிட்டு ...வீட்டில் இருந்து பேருந்து நிலையம் செல்வதாக முடிவு செய்தோம்....

இன்று போல் கைபேசிகளோ...வீட்டில் தொலைபேசி இணைப்போ இல்லாததால் உடனடியாக எதையும் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியவில்லை. பேருந்து ஏறிவிட்டால் தொடர்ந்து 8 மணி நேர பயணம் அந்த நேரத்தில் எவருடனும் தொடர்பு கொள்ளவே முடியாது

ஒருவழியாக மதியம் 2 மணி வாக்கில் பேருந்தை பிடித்து நானும் தம்பியும் நாகப்பட்டினம் செல்ல நேரடி பேருந்து கிடைக்காதாதால் காரைக்கால் பேருந்தில் ஏறிவிட்டோம். பேருந்தின் வேகமோ வழக்கத்தைவிட மிக மிக மெதுவாக சென்றது....சிதம்பரத்திற்கும் முன்பு செல்லும் போது மாலை 6 ஆகி இருந்தது...திடிரென்று பேருந்து நிறுத்தப்பட்டது...'ரோட்டில் லாரிக்காரன் ஒரு அம்மாவை அடித்துப் போட்டுவிட்டு போய்விட்டான்' ஊர் காரர்கள் சாலையை மறைக்கிறார்கள்' என்று பேசிக் கொண்டார்கள்.

'அப்பாவுக்கு என்ன ஆச்சோ.....' மனது துடித்த துடிப்பு....நான் தம்பியின் முகத்தை பார்க்க...அவனும் பேசமால என்னையை பார்க்க இருக்கமான சூழலில் 1 மணி நேரம் கழித்தே மெதுவாக சாலை மறியல் பேச்சுவார்த்ததயினால் திறக்கப்பட்டது......இருவரும் எதுவும் பேசிக் கொள்ள முடியாமல் காரைக்கால் வரை சென்று விட்டோம்...மணி 9:30 ஆகி இருந்தது.......அங்கிருந்து எங்கள் ஊருக்குச் சென்ற போது 10:00 மணி ஆகி இருந்தது....தெருவில் சத்தமில்லாமல் வெறிச்சோடி இருந்தது...'அப்பா இன்னும் ஆஸ்பத்திரியில் தான் இருக்கனும்' வீட்டில் எல்லாவற்றையும் வைத்துவிட்டு போவோம்...என்று நினைத்து வீட்டை நெருங்க நெருங்க....விசும்பல் ஒலிகள்....மனதை பிசைய....... காலடியில் மிதிபடும் பூக்கள் உண்மையை உணர்த்த

"டேய்......இன்னும் ஒரு மணி நேரத்திற்கு முன்பே வந்திருக்கக் கூடாதா ?........உங்க அப்பா இவ்வளவு நேரம் உங்களுக்காக காத்திருந்திட்டு போய்டாருடா......" என்றதும்.......

பதில் பேச...முடியாமல் அருகில் இருந்த சைக்கிளை எடுத்து கொண்டு...எப்படி மிதித்தேன்......எப்படி அங்கு சென்றேன் என்றே தெரியவில்லை........ 3 கிலோ மீட்டர் தொலைவு

சுடுகாட்டை நானும் தம்பியும் அடைந்த போது 'அப்பா......சுடர்விட்டு எரிந்து கொண்டு இருந்தார்'

'அப்பாவை கடைசியாகக் கூட பார்க்க கொடுத்து வைக்கலையே......'

'அப்பா...........ஆ' சுடுகாடே எதிரொலிக்க போட்ட அளரலுடன்

அங்கேயே சாம்பலில் உருண்டு பிரண்டு உணர்ச்சியற்ற நிலையில் இருந்த என்னை கூடவே வந்தவர்கள் மீட்டுக் கொண்டுவர மிகவும் கஷ்டப்பட்டார்களாம்...'எரியும் நெருப்பில் விழப்போனேன்' என்றும் சொன்னார்கள். என்ன நடந்ததென்றே எனக்கு தெரியாது.....என்னைக் காப்பற்ற வேண்டும் என்பதற்காக என் தம்பி அவனது உணர்வுகளை அடக்கிக் கொண்டு கைத்தாங்கலாக வீட்டுக்கு அழைத்து வந்த்தான்.

முதல் நாள் (25 மார்ச் 1990)ல் மாலை அப்பாவுக்கு மாரடைப்பால் மரணம் நிகழ்ந்தது என்று பிறகு சொன்னார்கள். வேலையில் இருந்த போது நெஞ்சு வலி என்றதால் அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு சேர்த்து இருக்கிறார்கள்....மருத்துவமனையில் 3 மாதமே ஆன அக்காவின் மகனையும் அங்கே முதல் நாள் சேர்த்திருந்ததால் ... அக்கா மட்டுமே அப்பா இறக்கும் நேரத்தில் எதிர்பாராவிதமாக கேள்விப்பட்டு அங்கு சென்று அருகில் இருந்திருக்கிறாள். அப்பா கடைசியாக ஒரே ஒரு பார்வை பார்த்து எதுவும் பேச முடியாமல் உயிர்விட்டாரம்... நாங்கள் சென்னையில் அதற்கு முதல் வாரம்தான் வேறு வீடு மாறி இருந்ததை தெரிவிக்காமல் விட்டு இருந்ததால் கொடுத்த தந்தி பழைய வீட்டை அடைந்திருக்கிறது...நாங்கள் வருவோம் வருவோம் என்று காலை வரை எதிர்பார்த்து இருந்து...வராமல் போகவே மறுநாள் காலை (திங்கள்) எப்படியும் அலுவலகம் வருவோம் என்று எதிர்பார்த்திருந்து தொலைபேசி வழியாகத்தான் சொல்ல முடிந்ததாகவும்...எங்களிடம் விசயத்தை சொன்னால் பயந்துவிடுவோம் என்பதற்க்காக 'சீரியஸ்' என்று மட்டுமே தொலைபேசியில் சொல்லி வரச் சொன்னதாக சொன்னார்கள்.

அப்பாவின் பிணத்தை பார்க்கவே இல்லை என்பதால்....'அப்பா இறந்துவிட்டார்' என்று இன்னும் கூட என்னாலும் தம்பியாலும் நம்பவே முடியவில்லை.

அதன் பிறகு எவ்வளவோ கனவுகள் ......அப்பா கனவில் வரும் போதெல்லாம் அவரை கட்டியணைத்து மகிழ்கிறேன்....கனவில் வந்தாலும் கூட கண்ணீரால் தலையணையே நனைந்துவிடுவது...நானும் தந்தையான பின்பு இன்றும் எப்போதாவது நடக்கிறது.

**********
நீங்கள் உங்கள் தந்தையை மிகவும் நேசிப்பவர் என்றால் ஈகோ பார்க்காது.....அவரை கட்டியணைத்து .... முத்தம் கொடுத்து ... மகிழுங்கள்... அவருக்கு நெகிழ்ச்சியாக இருக்கும். இவ்வாரெல்லாம் செய்துவிட்டால் பெற்றோர்களின் மறைவின் போது ஏக்கம் துரத்தவே துரத்தாது...அந்த இனிமையான நினைவும் உங்கள் எண்ணத்தை விட்டு என்று அகலாது. உயிரோடு இருக்கும் போது தான் வெளிப்படுத்தும் அன்பு சென்று சேரும்...அது எதையுமே செய்யாது பின்பு பொட்டு வைத்த படத்துக்கு முன்பு பிடித்ததை வாங்கி வைப்பதால் பயனில்லை

தந்தையராகி இருக்கும் அனைவருக்கும் தந்தையர் நாள் நல்வாழ்த்துகள் !

46 கருத்துகள்:

கிரி சொன்னது…

மனதை தொட்ட பதிவு.. நீங்கள் வரும் வரை உங்கள் அப்பாவை வைத்து இருக்கலாம் :-(

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...
மனதை தொட்ட பதிவு.. நீங்கள் வரும் வரை உங்கள் அப்பாவை வைத்து இருக்கலாம் :-(
//

உடல் உப்ப ஆரம்பித்தால் ஊர்காரர்கள் அதற்குமேல் வைத்திருப்பது நல்லதல்ல என்று சொன்னார்களாம். :( அதுவும் சரிதான் எனப்பட்டது...அழுகிப் போவதற்கு நானும் காரணமாகிவிடக் கூடாதே

துளசி கோபால் சொன்னது…

மனசு கனத்துப் போச்சு(-:

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
மனசு கனத்துப் போச்சு(-:
//

ஒருவழியாக கட்டுப்படுத்திக் கொண்டு எழுதி முடித்துவிட்டாலும் சுரக்கும் கண்ணீர் இன்னும் கட்டுப்பாட்டில் இல்லை.
:(

ஜெகதீசன் சொன்னது…

:(
தந்தையர் தின வாழ்த்துக்கள்!!

SP.VR. SUBBIAH சொன்னது…

எங்கள் பகுதியில் 24 மணி நேரம் வரை வைத்திருப்பார்கள். அதற்குப் பிறகே தகனம்.
நீங்கள் செல்லும் முன்பு எடுத்து விட்டார்கள் என்றால் - கொள்ளி வைத்தது யார்? உங்கள் மூத்த சகோதரனா?

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...
எங்கள் பகுதியில் 24 மணி நேரம் வரை வைத்திருப்பார்கள். அதற்குப் பிறகே தகனம்.
நீங்கள் செல்லும் முன்பு எடுத்து விட்டார்கள் என்றால் - கொள்ளி வைத்தது யார்? உங்கள் மூத்த சகோதரனா?
//

சுப்பையா ஐயா,
கடைசி தம்பி ஊரில் தான் இருந்தான் அவனுக்கு அப்போது வயது 15 படித்துக் கொண்டு இருந்தான். அவன் தான் வைத்தானாம்...அப்பாவுக்கு கடைசி மகனும் அம்மாவுக்கு முதல் மகனும் வைப்பார்களாமே.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
:(
தந்தையர் தின வாழ்த்துக்கள்!!
//

சித்தப்பா தினமெல்லாம் ஒன்னும் இல்லையா ?
:)

Sridhar Narayanan சொன்னது…

//நீங்கள் உங்கள் தந்தையை மிகவும் நேசிப்பவர் என்றால் ஈகோ பார்க்காது.....அவரை கட்டியணைத்து .... முத்தம் கொடுத்து ... மகிழுங்கள்... //

அருமையான வரிகள். நெகிழ்ச்சியான பதிவு. தந்தையர் தின வாழ்த்துகள்.

நாகு (Nagu) சொன்னது…

அப்பா/அம்மாவின் அருமை நிறைய பேருக்கு அவர்களை இழந்த பிறகோ, வெகு தொலைவில் இருக்கும்போதோதான் தெரிகிறது. என்ன செய்வது!

உங்கள் துயரம் ஊரில் இருந்து நெடுந்தொலைவு இருக்கிறவர்களுக்குதான் நன்றாகப் புரியும். அந்த மாதிரி கொடுமையான பிரயாணம் செய்யும் நிலை யாருக்கும் வரக்கூடாது.

//நீங்கள் உங்கள் தந்தையை மிகவும் நேசிப்பவர் என்றால் ஈகோ பார்க்காது.....அவரை கட்டியணைத்து .... முத்தம் கொடுத்து ... மகிழுங்கள்... அவருக்கு நெகிழ்ச்சியாக இருக்கும்//

உண்மை!

தந்தையர் தினத்தில் மகன்களை ஊருக்கு அனுப்பி வைப்பதும் கஷ்டம்தான்!

தந்தையர் தின வாழ்த்துக்கள்!!

பரிசல்காரன் சொன்னது…

என் தந்தையார் இறந்து ஒரு வருடம் ஆகப் போகிறது. எங்கள் பதிவை அவசர அவசரமாய்ப் படிக்க மனமில்லை. பிறகு படித்து பின்னூட்டாமிடுகிறேன்..

VIKNESHWARAN சொன்னது…

அழுத்தமாக பதிவு... நந்தையர் தின வாழ்த்துக்கள்...

SP.VR. SUBBIAH சொன்னது…

////சுப்பையா ஐயா,
கடைசி தம்பி ஊரில் தான் இருந்தான் அவனுக்கு அப்போது வயது 15 படித்துக் கொண்டு இருந்தான். அவன் தான் வைத்தானாம்...அப்பாவுக்கு கடைசி மகனும் அம்மாவுக்கு முதல் மகனும் வைப்பார்களாமே.////

இல்லை (எங்கள் பகுதியில்)மூத்த மகனுக்குத்தான் அந்த ரைட்ஸ்!
தாய், தந்தை இருவருக்குமே அவன்தான் கொள்ளியிட வேண்டும்!

கோவி.கண்ணன் சொன்னது…

//Sridhar Narayanan said...

அருமையான வரிகள். நெகிழ்ச்சியான பதிவு. தந்தையர் தின வாழ்த்துகள்.//

மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// நாகு (Nagu) said...
அப்பா/அம்மாவின் அருமை நிறைய பேருக்கு அவர்களை இழந்த பிறகோ, வெகு தொலைவில் இருக்கும்போதோதான் தெரிகிறது. என்ன செய்வது!

உங்கள் துயரம் ஊரில் இருந்து நெடுந்தொலைவு இருக்கிறவர்களுக்குதான் நன்றாகப் புரியும். அந்த மாதிரி கொடுமையான பிரயாணம் செய்யும் நிலை யாருக்கும் வரக்கூடாது.


உண்மை!

தந்தையர் தினத்தில் மகன்களை ஊருக்கு அனுப்பி வைப்பதும் கஷ்டம்தான்!

தந்தையர் தின வாழ்த்துக்கள்!!//

நாகு,

கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
என் தந்தையார் இறந்து ஒரு வருடம் ஆகப் போகிறது. எங்கள் பதிவை அவசர அவசரமாய்ப் படிக்க மனமில்லை. பிறகு படித்து பின்னூட்டாமிடுகிறேன்..
//

கேகே,
படித்தால் உங்கள் சோகம் குறையலாம் !

kannabiran, RAVI SHANKAR (KRS) சொன்னது…

மனதைச் சிறிது நேரம் கட்டிப் போட்ட பதிவு!

தந்தையர் தின வாழ்த்தைத் தந்தைக்கு நேரடியாகச் சொன்னதாக எண்ணிக் கொள்ளுங்கள் கோவி அண்ணா!

அடியேனும் இந்தச் சமயத்தி்ல் கந்தனைத் தேடிய "சாமி"யை அடி வீழ்ந்து வணங்கிக் கொள்கிறேன்!

//உயிரோடு இருக்கும் போது தான் வெளிப்படுத்தும் அன்பு சென்று சேரும்...அது இல்லாது பொட்டு வைத்த படத்துக்கு முன்பு பிடித்ததை வாங்கி வைப்பதால் பயனில்லை//

இருக்குங்கால் செய்யும் அன்பு அவர்களுக்குச் செய்யும் அன்பு! அது மாசற்றது! கட்டாயம் தேவை!

சென்ற பின்னுள்ள அன்பு நமக்கு நாமே செய்து கொள்ளும் அன்பு! அதற்கு மாசிருந்தாலும் கொஞ்சம் மதிப்பும் உண்டு!

சென்ற தலைமுறையின் மீதுள்ள அன்பை, வரும் தலைமுறைக்கு வார்த்தையால் மட்டும் காட்டாது, இப்படி வழியிலும் காட்டுவதும் அறிமுகம் காண்பதும் நலமான நலமே! - நீத்தார் பெருமை என்று ஐயன் சொன்னதல்லவா?

kannabiran, RAVI SHANKAR (KRS) சொன்னது…

//அப்பா இன்னும் சாகவில்லை....!//

உண்மை தான் கோவி அண்ணா!
அடுத்த முறை அடியேன் கந்த கோட்டம் செல்லும் போது, இந்த நினைவும் வரும்!

நினைவிருந்தால் மறைவேது?

SanJai சொன்னது…

மனதை தொட்ட உருக்கமான பதிவு.. ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை..
அப்பாக்கள் தின வாழ்த்துக்கள் கோவி..

கோவி.கண்ணன் சொன்னது…

//VIKNESHWARAN said...
அழுத்தமாக பதிவு... தந்தையர் தின வாழ்த்துக்கள்...

11:38 AM, June 16, 2008
//

VIKNESHWARAN மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...

இல்லை (எங்கள் பகுதியில்)மூத்த மகனுக்குத்தான் அந்த ரைட்ஸ்!
தாய், தந்தை இருவருக்குமே அவன்தான் கொள்ளியிட வேண்டும்!
//

சுப்பையை ஐயா,

நான் அதுபோல் கேள்விபட்டது இல்லை. கொள்ளி போடுவது...அப்பாவுக்கு இளைய பிள்ளை அம்மாவுக்கு மூத்த பிள்ளை. பேரக்குழந்தைகள் அனைவரும் நெய்பந்தம் பிடிப்பார்கள்.

பெயரில்லா சொன்னது…

பெரும்பாலும் அப்பா குழந்தைகளுக்கு செய்வதை, கடமையாகவே நினைக்கிறார்கள். அப்பாவாய் இருப்பதில் எத்தனை கஷ்டம், அதிலும் ஆண் குழந்தைகளுக்கு அப்பா என்றால் கொஞ்சம் தகறாறு தான். அம்மா மகள் உறவுகளை விட அப்பா மகன் உறவுகள் கொஞ்சம் கஷ்டமானவை என்றே தோன்றுகிறது. அனுபவிச்சு எழுதியிருக்கீங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
மனதைச் சிறிது நேரம் கட்டிப் போட்ட பதிவு!

தந்தையர் தின வாழ்த்தைத் தந்தைக்கு நேரடியாகச் சொன்னதாக எண்ணிக் கொள்ளுங்கள் கோவி அண்ணா!

அடியேனும் இந்தச் சமயத்தி்ல் கந்தனைத் தேடிய "சாமி"யை அடி வீழ்ந்து வணங்கிக் கொள்கிறேன்!
//

KRS,

மிக்க நன்றி.

அதன் பிறகு 1993 வாக்கில் ஒரு திருமணத்திற்காக கந்த கோட்டம் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது... அப்பொழுதுதான் அது இருக்கும் இடம் தெரிந்து கொண்டேன். அங்கு சென்றது அந்த நினைவுகள் வந்தது.

//இருக்குங்கால் செய்யும் அன்பு அவர்களுக்குச் செய்யும் அன்பு! அது மாசற்றது! கட்டாயம் தேவை!

சென்ற பின்னுள்ள அன்பு நமக்கு நாமே செய்து கொள்ளும் அன்பு! அதற்கு மாசிருந்தாலும் கொஞ்சம் மதிப்பும் உண்டு!

சென்ற தலைமுறையின் மீதுள்ள அன்பை, வரும் தலைமுறைக்கு வார்த்தையால் மட்டும் காட்டாது, இப்படி வழியிலும் காட்டுவதும் அறிமுகம் காண்பதும் நலமான நலமே! - நீத்தார் பெருமை என்று ஐயன் சொன்னதல்லவா?//

நானும் இறந்த பிறகு எதுவும் செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை. இருக்கும் போது ஒன்றும் செய்யாமல் இருப்பது தவறு என்பது குறித்துச் அழுத்தம் கொடுப்பதற்காக 'இறந்த பின் படத்திற்கு முன்பு செய்வது வீன் என்றேன்'

இறந்தவர்களின் நினைவாக எளியோருக்கு பொருளதவி செய்யலாம்...உணவளிக்கலாம்...நானும் செய்வதுண்டு.

கோவி.கண்ணன் சொன்னது…

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//அப்பா இன்னும் சாகவில்லை....!//

உண்மை தான் கோவி அண்ணா!
அடுத்த முறை அடியேன் கந்த கோட்டம் செல்லும் போது, இந்த நினைவும் வரும்!

நினைவிருந்தால் மறைவேது?
//

KRS,
சரிதான்....தொட்டுணரத்தான் முடியாது...நினைவில் இருப்பது என்றுமே அகலாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//SanJai said...
மனதை தொட்ட உருக்கமான பதிவு.. ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை..
அப்பாக்கள் தின வாழ்த்துக்கள் கோவி..
//

மிக்க நன்றி சஞ்ஜை !

கோவி.கண்ணன் சொன்னது…

//சின்ன அம்மிணி said...
பெரும்பாலும் அப்பா குழந்தைகளுக்கு செய்வதை, கடமையாகவே நினைக்கிறார்கள். அப்பாவாய் இருப்பதில் எத்தனை கஷ்டம், அதிலும் ஆண் குழந்தைகளுக்கு அப்பா என்றால் கொஞ்சம் தகறாறு தான். அம்மா மகள் உறவுகளை விட அப்பா மகன் உறவுகள் கொஞ்சம் கஷ்டமானவை என்றே தோன்றுகிறது. அனுபவிச்சு எழுதியிருக்கீங்க.
//

சின்ன அம்மிணி,

அப்பாக்கள் எப்போதும் இறப்பிற்கு பிறகே புரிந்து கொள்ளப்படுகிறார்கள். என்னைப் பொருத்த அளவிற்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. புரிந்து கொள்ளக் கூடிய பக்கும் வந்த போது அவர் இல்லை.

T.V.Radhakrishnan சொன்னது…

கோவி.சார் தந்தையர் தினம் பற்றி என் பதிவை படித்தீர்களா?
தந்தைகளின் பாசத்தை அவர் உயிர் இருக்கும் வரை முழுவதுமாக நாம் உணர்வதில்லை.
இதுதான் ஊண்மை.

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
கோவி.சார் தந்தையர் தினம் பற்றி என் பதிவை படித்தீர்களா?
தந்தைகளின் பாசத்தை அவர் உயிர் இருக்கும் வரை முழுவதுமாக நாம் உணர்வதில்லை.
இதுதான் உண்மை.
//

T.V.Radhakrishnan,
மன்னிக்கன்னும் ஐயா,

தங்கள் பதிவில் சென்று பார்த்தேன் அப்படி ஒரு பதிவு இல்லையே ?

இணைப்பு கொடுத்தால் எளிதாக இருக்கும். இங்கு பதிவின் சுட்டியை (URL) இடுகிறீர்களா ?

Kanchana Radhakrishnan சொன்னது…

tvrk.blogspot.com paarungal
radhakrishnan

திண்டுக்கல் சர்தார்12818834628383879881 சொன்னது…

"தந்தையைப் போல் உலகிலே
தெய்வம் உண்டோ-ஒரு மகனுக்கு
சர்வமும் அவரென்றால்
விந்தை உண்டோ

அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்-அவ்வையின் பொன்மொழி வீணா?
ஆவியைப் போலே நீதி புகன்றார்
அனுபவமே இதுதானா

உண்ணாமல் உறங்காமல்
உயிரோடு மன்றாடி
என் வாழ்வின் இன்பமே
எதிர்பார்த்த தந்தை எங்கே?

உண்ணாமல்
உறங்காமல்
உயிரோடு மன்றாடி
என் வாழ்வின் இன்பமே எதிர்பார்த்த தந்தை எங்கே-என் தந்தை எங்கே

கண்ணிமை போலே
என்னை வளர்த்த
கடமையை நான் மறவேனா
காரிருள் போலே பாழான சிதையிற்
கனலானார் விதி தானா
என் தந்தை
கனலானார் விதி தானா

என் அன்னையும் பிதாவும் முன்னேறி தெய்வம்-அவ்வையின் பொன்மொழி வீணா
அவ்வையின் பொன்மொழி வீணா?"

தாய்க்குப் பின் தாரம் திரைப்படத்தில்
எம்.ஜி.ஆர்.பாடுவதுபோல் வருகிறது இப்பாடல்.அருமைத் தந்தையை இழந்த ஒருவனின் கதறல் இது.

1972ம் ஆண்டில் தந்தையை இழந்தவன் என்ற முறையில் ஒரு சகோதரனாக உங்கள் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.

நெஞ்சார்ந்த தந்தையர் தின வாழ்த்துகள்.

Pondy-Barani சொன்னது…

பதிவு படிக்கும் போது கண்ணில் வந்த கண்ணீர் கட்டுபடுத்த முடியவில்லை
மிக நெகிழ்ச்சியான பதிவு

தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் சொன்னது…

'அப்பாவை கடைசியாகக் கூட பார்க்க கொடுத்து வைக்கலையே......'
நெஞ்சுருக, வைக்கு கண்ணன்..தற்பொதுதான் தெரிந்துகொண்டேன்..

பரிசல்காரன் சொன்னது…

//அதன் பிறகு எவ்வளவோ கனவுகள் ......அப்பா கனவில் வரும் போதெல்லாம் அவரை கட்டியணைத்து மகிழ்கிறேன்....கனவில் வந்தாலும் கூட கண்ணீரால் தலையணையே நனைந்துவிடுவது...நானும் தந்தையான பின்பு இன்றும் எப்போதாவது நடக்கிறது.//

நிஜமாகவே படிக்கும்போது எனக்கு தொண்டை அடைத்துக் கொண்டது. ஒன்றுமே சொல்ல முடியவில்லை. ஒரு பதிவைப் படித்துவிட்டு இப்படி ஒரு உணர்வு வருவது.. இதுவே முதல்முறை! பிற..பின்..

VSK சொன்னது…

தந்தையர் தினத்தன்று எழுதப்பட்ட உருக்கமான பதிவு.

ஒவ்வொரு வார்த்தையும் உணர்ந்து எழுதப்பட்டிருப்பது தெரிகிறது.
அப்படியே நல்லா இருக்கு.

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

நெஞ்சைத் தொட்ட ஈரமான பதிவு.

ரூபஸ் சொன்னது…

தந்தையின் அருமையை உணர்த்தும் பதிவு.

உங்களின் கடைசி அறிவுறைகள் மிகவும் அருமை...

கோவி.கண்ணன் சொன்னது…

திண்டுக்கல் சர்தார்12818834628383879881 said...
"தந்தையைப் போல் உலகிலே
தெய்வம் உண்டோ-ஒரு மகனுக்கு
சர்வமும் அவரென்றால்
விந்தை உண்டோ ........

1972ம் ஆண்டில் தந்தையை இழந்தவன் என்ற முறையில் ஒரு சகோதரனாக உங்கள் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.

நெஞ்சார்ந்த தந்தையர் தின வாழ்த்துகள்.//

திண்டுக்கல் சர்தார் சார்,

ஆறுதல்கள் மிக்க நெகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//Pondy-Barani said...
பதிவு படிக்கும் போது கண்ணில் வந்த கண்ணீர் கட்டுபடுத்த முடியவில்லை
மிக நெகிழ்ச்சியான பதிவு

தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
//


Pondy-Barani அவர்களே,

சோகத்தில் பங்கெடுத்து தேற்றுவதற்கு மிக்க நன்றி. தந்தையர் தினத்தில் பழைய நினைவுகள்...பதிவை எழுதும் போது எனக்கும் கண்ணீர்.... :(

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆ.ஞானசேகரன் said...
'அப்பாவை கடைசியாகக் கூட பார்க்க கொடுத்து வைக்கலையே......'
நெஞ்சுருக, வைக்கு கண்ணன்..தற்பொதுதான் தெரிந்துகொண்டேன்..
//

ஞான்ஸ்,

வருகைக்கும் வார்த்தைக்கும் நன்றி !!

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...

நிஜமாகவே படிக்கும்போது எனக்கு தொண்டை அடைத்துக் கொண்டது. ஒன்றுமே சொல்ல முடியவில்லை. ஒரு பதிவைப் படித்துவிட்டு இப்படி ஒரு உணர்வு வருவது.. இதுவே முதல்முறை! பிற..பின்..

1:07 AM, June 17, 2008//

கே கே,
நம்மைப் போல் தந்தையை இழந்தவர்கள் இது போன்றவற்றைப் படிக்கும் போது அப்படி உணர்வை கொண்டுவந்துவிடும். உங்கள் தந்தையைப் பற்றி எழுதி இருந்த இடுகையும் உணர்வால் அமைந்து இருக்கிறது. அழிக்க முடியாத நினைவுகள் !

கோவி.கண்ணன் சொன்னது…

//VSK said...
தந்தையர் தினத்தன்று எழுதப்பட்ட உருக்கமான பதிவு.

ஒவ்வொரு வார்த்தையும் உணர்ந்து எழுதப்பட்டிருப்பது தெரிகிறது.
அப்படியே நல்லா இருக்கு.
//

மிக்க நன்றி ஐயா,

உங்கள் பதிவை படித்திருக்காவிட்டால் தந்தையர் தினமே நினைவுக்கு வந்திருக்காது.

அப்பா... எதாவது ஒரு விதத்தில் கூடவே இருக்கிறாரே.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
நெஞ்சைத் தொட்ட ஈரமான பதிவு.
//

உணர்வான பின்னூட்டத்திற்கு நன்றி சுந்தர்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ரூபஸ் said...
தந்தையின் அருமையை உணர்த்தும் பதிவு.

உங்களின் கடைசி அறிவுறைகள் மிகவும் அருமை...
//

ரூப்ஸ்,

படித்து உணர்வை புரிந்து கொண்டு பாராட்டுவதற்கு மிக்க நன்றி.

வடுவூர் குமார் சொன்னது…

இரண்டாவதாக மற்றொரு அருமையான பதிவு.
படித்து முடித்ததும் கண்ணீர் ஓரத்தில் நீர்.

இப்படி எழுதுகிறவர்.... வேண்டாம் இங்கு.

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
இரண்டாவதாக மற்றொரு அருமையான பதிவு.
படித்து முடித்ததும் கண்ணீர் ஓரத்தில் நீர்.

இப்படி எழுதுகிறவர்.... வேண்டாம் இங்கு.
//

உணர்வுடன் கூடிய உண்மை நிகழ்வுகளைச் சொல்லும் போது படிப்பவர்களும் உணர்ச்சி வசப்படுவார்கள். சில திரைப்படக் காட்சிகளைப் பார்க்கும் போதும் பலருக்கும் கண்களில் ஈரம் சுரக்கும்.

தியாகராஜன் சொன்னது…

உணர்வுகளை உதிர்த்திருக்கிறீர்கள்.நெஞ்சம் கணத்துவிட்டது. அடியேனும் சற்றே இதே நிலையிலிருந்தவன் தான்.எமது தந்தையார் இரவில் நன்றாக உறங்கச் சென்றவரை காலையில் உயிரற்று கண்டோம்.அவரை அப்போது கட்டியணைத்து .... .
இளையவன் என்பதால் அடியேனே கருமம் செய்தேன்.ஆகவே எம் நண்பர்களுக்கு ஓர் கருத்தை அவசியம் வலியுருத்தி வருகிறேன். தந்தையார் என்ன சொன்னாலும் உடனே செய்து முடித்துவிடுங்கள்.ஏனென்றால் நீங்கள் செய்ய நினைக்கும்போது சொல்ல அவர் இருப்பது கடினம் .
பின்னர் வருந்திப் பயனில்லை என்று.

//நீங்கள் உங்கள் தந்தையை மிகவும் நேசிப்பவர் என்றால் ஈகோ பார்க்காது.....அவரை கட்டியணைத்து .... முத்தம் கொடுத்து ... மகிழுங்கள்... அவருக்கு நெகிழ்ச்சியாக இருக்கும்//

உண்மை.
வாய்ப்பிருப்பவர்கள் அனுபவியுங்கள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்