பின்பற்றுபவர்கள்

2 செப்டம்பர், 2008

ஏழைப் பிள்ளையார் !

நாகையில் பிள்ளையார் கோவில்கள் இல்லாத தெருக்களே இல்லை என்னும் அளவுக்கு கிட்டதட்ட 100 பிள்ளையார் கோவில்கள் வரை உள்ளது. அதில் ஒன்று தான் எங்கள் வீட்டிற்கு அருகிலேயே இருக்கும் ஏழைப் பிள்ளையார் கோவில். நாகையில் வெறெந்த பிள்ளையார் கோவிலைவிட பக்தர்களை மிகுந்து பெற்றிருப்பது ஏழைப்பிள்ளையார் கோவில் தான். மற்ற பிள்ளையார் கோவில்களை விட பெரியது. எங்கள் ஊரில் தனித்திருக்கும் மற்ற பிள்ளையார் கோவில்கள் எதிலுமே இராஜ கோபுரம் கிடையாது. ஏழைப்பிள்ளையார் கோவிலில் சுமார் 40 அடி உயர இராஜ கோபுரம் உண்டு. அதைத் தாண்டிச் சென்றால் கருவரையுடன் கூடிய 20 வடி உயர கோபுரத்தில் சற்று நடுத்தர அளவு கருங்கல் பிள்ளையார் சிலை இருக்கும்.

இராஜ கோபுரத்தைத் தாண்டி கோவிலுக்குள்ளே உள் சுற்றும் (பிராகாரம்) இருக்கும், இராஜ கோபுரத்திற்கு வெளியே இருபக்கமும் கோவில் நுழைவாயிலுக்கு முன்பு வரை 30 அடி நீளத்தில் 2 அடி அகலத்தில் பக்தர்கள் அமர்ந்து இளைப்பார சிமெண்ட் திண்ணைகள் இருக்கும், அது தவிர கோவில் வளாகத்தினுள் நறுமணம் வீசும் நந்தவனத்தில் மலர்செடிகள் நிறைந்து இருக்கும். கோவிலுக்குள்ளேயே செவ்வளனி மரங்கள் இருக்கும். மொத்தத்தில் வெளியில் இருந்து, உள்ளிருந்து பார்த்தால் 'ஏழைப்' பிள்ளையார் கோவிலாக தெரியாது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோவில் நிர்வாகிகளாக மலையாளிகள் நடந்தி வந்தனர், பிறகு இந்து அறநிலைய துறையின் கீழ்வந்து பார்பனர்களால் பராமரிக்கப்படுகிறது.

ஏழைப் பிள்ளையாருக்கு ஆண்டுமுழுவதும் எதாவது ஒரு விழா நடந்து கொண்டே இருக்கும், அதில் சிறப்பானவை சொக்கப்பானை கொளுத்துவது, கார்திகையின் போது கோவிலுக்கு வெளியே பனைவோலை
குடிசை ஒன்றை அமைத்து பிள்ளையாருக்கு காட்டிய கற்பூர தீபத்தை வைத்து அதை கொளுத்திவிடுவார்கள், சிறுவர் சிறுமியர் அதில் பட்டாசுகளை வீசி வெடிக்கச் செய்வர். சுமார் 10 அடி தொலைவுக்கு நெருங்கவே முடியாத அளவுக்கு அணல் அடிக்கும், எல்லாம் எரிந்து முடிந்தது, தண்ணீரை விட்டு அணைப்பார்கள், பிறகு அதில் எஞ்சி இருக்கும் மரக்கரி துண்டுகள் ஒன்றிரண்டை பக்தர்கள் தங்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று பூசை அறையிலோ, வீட்டின் நுழைவாயிலுக்கு மேல் கட்டி தொங்கவிட்டுக் கொள்வார்கள். அந்த கரி வீட்டினுள் இருந்தால் பாம்பு, தேள் போன்ற கொடிய விஷம் உள்ளவை வீட்டினுள் நுழையாது, நுழைந்தாலும் கடிக்காது என்பது நம்பிக்கையாம்.

மார்கழி மாதம் முழுவதும், காலை, மாலை இருவேளைகளில் பக்திப்பாடல்கள் ஒலிக்கும், அதில் சில சமயம் திருவிளையாடல், சரஸ்வதி சபதம் ஆகிய படங்களின் முழுவசனங்களையும் ஒலி ஏற்றுவார்கள்.
அதைக் கேட்டு கேட்டு எனக்கு திருவிளையாடல் பட வசனம் முழுவதும் மனப்பாடமாகி இன்றும் கூட அடிகள் மாறாமல் நினைவு இருக்கிறது.

சித்திரை மாதங்களில் நாகையில் இருக்கும் அம்மன் கோவில்களுக்கு காவடி புறப்படும் முதன்மையான தலமாகவும் ஏழைப்பிள்ளையார் கோவிலை தேர்ந்தெடுப்பர் கோவிலுக்குள்ளேயே சிறு கிணறு இருப்பதால் பக்தர்கள் காவடி எடுப்பதற்கு நல்ல பயனாக அந்த கிணறு அமைந்திருக்கும். ஐயப்பன் சீசனில் மாலை நேரத்தில் பக்தர்கள் அந்த கிணற்றில் குளித்துவிட்டு அன்றைய மாலை பூஜைகளைச் செய்வர். அது தவிர மார்கழியில் வாய்ப்பாட்டு கதாயாடல்களும் கூட நடக்கும், எங்கள் வீடு அருகிலேயே இருப்பதால் காத்தவராயன் கதை, வில்லி பாரதம் ஆகியவற்றை கேட்டு இருக்கிறேன்.

குலதெய்வம் இன்னும் பல தெய்வம் இருந்தாலும் விதைத் தெளிப்பது முதல் அறுவடை வரை எங்கள் அம்மா ஏழைப்பிள்ளையாரிடம் சொல்லாமல் எந்த செயலையும் செய்ய மாட்டார். எங்கள் வீட்டில் இருந்து யாராவது ஊருக்குக் கிளம்பினால், அவர்களுக்கு முன் அம்மா நிற்கும் இடம் ஏழைப் பிள்ளையார் கோவில் தான், 1 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை நாணயங்களை கையில் கொடுத்து உண்டியலில் போட்டுட்டுப் போடா...என்று கெஞ்சாத குறையாக சொல்லுவார்கள், பிற்காலத்தில் ஆன்மிகம் தொடர்பாக பலவற்றைப் படித்த பிறகு எனக்கு சிலைவழிபாடுகளில் நாட்டம் கொள்வதில்லை அதனால் பலசமயம் அம்மாவிடம் பிடிவாதம் பிடித்து என் சார்பாக நீங்களே கோவில் உண்டியலில் போட்டுவிடுங்கள் என்பேன். சில சமயம் இதை உண்டியலில் போடுவதால் அவர்களுக்கு ஒரு திருப்தி என்று வாங்கிப் போடுவதும் உண்டு.

அதே ஏழைப்பிள்ளையார் கோவிலில், அப்பாவின் மறைவிக்குப் பிறகு விட்டுச் சென்ற ஆண்டு வழக்கமான அம்மன் கோவில் அலகு காவடியை எனது தம்பிதான் எடுக்கிறான். காவடிக்காக தம்பிக்கு உடலில் கூறிய தூண்டி முட்களால் அலகு குத்தும் போது, அதைத் தாங்கிக் கொள்ள அங்கு பலமான அதிர்வுடன் அடிக்கப்படும் ஒத்தையடி மேள ஓசையைக் கேட்கும் போது, அங்கிருக்கும் சூழலால் அப்பாவின் நினைவு வருவதையும் அங்கு எங்களோடு சேர்த்து, உறவினர்களின் சிலருக்கும், எனக்கும் வரும் கண்ணீரை சென்ற ஆண்டு வரையில் கூட என்னால் கட்டுப்படுத்த முடிந்தது இல்லை.

ஏழைப்பிள்ளையாரை குலதெய்வத்திற்கும் மேலாகவே எங்கள் வீட்டினர் போற்றுகின்றனர்.

******

நாளை பிள்ளையார் சதுர்த்திக் கொண்டாட இருக்கும் இந்து சமய அன்பர்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

16 கருத்துகள்:

narsim சொன்னது…

//அப்பாவின் நினைவு வருவதையும் அங்கு எங்களோடு சேர்த்து, உறவினர்களின் சிலருக்கும், எனக்கும் வரும் கண்ணீரை சென்ற ஆண்டு வரையில் கூட என்னால் கட்டுப்படுத்த முடிந்தது இல்லை//

உருக்கமான வரிகள்..

நர்சிம்

விஜய் ஆனந்த் சொன்னது…

பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!!!

துளசி கோபால் சொன்னது…

இனிய வாழ்த்து(க்)கள்.

அதென்ன பணக்காரப்பிள்ளையார், ஏழைப்பிள்ளையாருன்னு இருக்காரா?

இந்த வருசம் நம்மூட்டுப் புள்ளையார் 'டயட்'லே இருக்கார்.

வெறும் பழங்கள் மட்டும் போதுமாம்:-))))

பெயரில்லா சொன்னது…

ஏழைப்பிள்ளையார் - இப்பத்தான் கேள்விப்படுகிறேன்.

பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!!!

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
இனிய வாழ்த்து(க்)கள்.

அதென்ன பணக்காரப்பிள்ளையார், ஏழைப்பிள்ளையாருன்னு இருக்காரா?

இந்த வருசம் நம்மூட்டுப் புள்ளையார் 'டயட்'லே இருக்கார்.

வெறும் பழங்கள் மட்டும் போதுமாம்:-))))
//

துளசி அம்மா,

பெயர் தான் ஏழைப் பிள்ளையார், மற்றபடி வசதியான பிள்ளையார் தான்.

உங்க வீட்டுப் பிள்ளையாருக்கு 'டயட்' ஏன் என்ன ஆச்சு ? தொப்பை பெருத்து எழுந்திருக்க முடியாமல் இருக்கார்ரா ?

உங்க ஊரில் மூஞ்சூர் இருக்கிறதா ?

சில மூஞ்சூரின் முதுகுப்பகுதி சற்று சாம்பலாக மாறுபட்ட நிறத்தில் இருக்கும், காலையில் சிலசமயம் அவை குறுக்காக ஓடும் போது, இரவு பிள்ளையார் இந்த மூஞ்சூர் மீதுதான் சென்று இருக்கிறார் என்று அம்மா சொல்லுவாங்க.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//வடகரை வேலன் said...
ஏழைப்பிள்ளையார் - இப்பத்தான் கேள்விப்படுகிறேன்.

பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!!!

1:36 PM, September 02, 2008
//

அண்ணாச்சி,
நாகைப் பக்கம் போனால் சொல்லுங்க முகவரி தருகிறேன்ன். அப்படியே எங்க வீட்டுக்கு ஒரு விசிட் அடிச்சிட்டு ஏழைப்பிள்ளையாரையும் பார்த்துவரலாம் !

கோவி.கண்ணன் சொன்னது…

//narsim said...

உருக்கமான வரிகள்..

நர்சிம்

12:25 PM, September 02, 2008
//
நர்சிம்,
உருக்கத்தைக்கை உள்வாங்கி பாராட்டுவதற்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//விஜய் ஆனந்த் said...
பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!!!

12:30 PM, September 02, 2008
//

விஜய்,

நீயும் கொஞ்ச கொஞ்சமாக பிள்ளையாராக மாறிக் கொண்டு வருகிறாய். யாராவது கடத்திட்டுப் போய் பூசை அறையில் வச்சிடப் போறாங்க.

பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள் !

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

அன்பர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். சிங்கை அன்பர்கள் என் வீட்டு முகவரிக்கே கொழுக்கட்டைகளை அனுப்பிவிடவும். நீங்கள் அனுப்பும் கொழுக்கட்டை பார்சலின் மேற்புறம் உங்கள் பெயரை மறக்காமல் எழுதிவிடவும். சிறந்த கொழுக்கட்டைக்கு பரிசு எங்கள் அண்ணண் கோவி.கண்ணண் வழங்குவார்.

(குசும்பன் துபாய்ல இருக்கதால அவரு வீட்டு கொழுக்கட்டையில இருந்து தப்பிச்சுட்டேன்.)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
அன்பர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். சிங்கை அன்பர்கள் என் வீட்டு முகவரிக்கே கொழுக்கட்டைகளை அனுப்பிவிடவும். நீங்கள் அனுப்பும் கொழுக்கட்டை பார்சலின் மேற்புறம் உங்கள் பெயரை மறக்காமல் எழுதிவிடவும். சிறந்த கொழுக்கட்டைக்கு பரிசு எங்கள் அண்ணண் கோவி.கண்ணண் வழங்குவார்.

(குசும்பன் துபாய்ல இருக்கதால அவரு வீட்டு கொழுக்கட்டையில இருந்து தப்பிச்சுட்டேன்.)
//

பால்ராஜ்,
இது என்ன கொடுமை 'ஒவ்வொரு அரிசியிலும் உன் பெயர் இருக்கும்' என்பதைப் போல் கொழுக்கட்டையில் பதிவர் பெயர் இருக்கனுமா ? நீங்கள் சொல்வதுபோல் பதிவர்கள் கொழுக்கட்டை அனுப்ப முயற்சித்தால் வீட்டுக்கார அம்மாவிடம் வாங்கும் கொழுக்கட்டையை யாருக்கு கொடுப்பது.

முரளிகண்ணன் சொன்னது…

கோவி நீங்கள் சகலகலாவல்லவர் என்பதை அடிக்கடி நிரூபிக்கிறீர்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//முரளிகண்ணன் said...
கோவி நீங்கள் சகலகலாவல்லவர் என்பதை அடிக்கடி நிரூபிக்கிறீர்கள்

6:28 PM, September 02, 2008
//

முரளிகண்ணன்,

பாராட்டுக்கு நன்றி ! அதற்கு தகுதி உடையவனாக ஆக்கிக் கொள்ள முயற்சிக்கிறேன்.

குமரன் (Kumaran) சொன்னது…

ஏழைப்பிள்ளையாராகவே இருந்திருந்தால் அறநிலையத்துறையின் பார்வையில் பட்டிருக்காது. மதுரையில் மேலமாசிவீதி திண்டுக்கல் ரோடு சந்திப்பில் ஒரு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் இருக்கிறது. நடைப்பாதை ஓரக் கோவில் தான். ஆனால் கூட்டம் அலைமோதும். அதனால் அது அறநிலையத்துறையின் கண்ணில் பட்டு அதன் நிர்வாகத்தின் கீழ் வந்துவிட்டது. :-)

தந்தையாரின் நினைவால் மட்டுமின்றி தம்பி படும் வேதனையைப் பார்த்தும் கண்ணில் நீர் வருகின்றது என்று நினைக்கிறேன் கண்ணன். சரியா?

பரிசல்காரன் சொன்னது…

//கோவி நீங்கள் சகலகலாவல்லவர் என்பதை அடிக்கடி நிரூபிக்கிறீர்கள்//

நாம நெனைக்கறதை அடுத்தவங்க அடிச்சா பப்ளிஷ் ஆகாதமாதிரி ஒரு சாஃப்ட்வேர் கண்டுபிடிங்கப்பா!

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
ஏழைப்பிள்ளையாராகவே இருந்திருந்தால் அறநிலையத்துறையின் பார்வையில் பட்டிருக்காது. மதுரையில் மேலமாசிவீதி திண்டுக்கல் ரோடு சந்திப்பில் ஒரு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் இருக்கிறது. நடைப்பாதை ஓரக் கோவில் தான். ஆனால் கூட்டம் அலைமோதும். அதனால் அது அறநிலையத்துறையின் கண்ணில் பட்டு அதன் நிர்வாகத்தின் கீழ் வந்துவிட்டது. :-) //

எங்கள் ஊரில் இது புகழ்பெற்ற கோவில், அந்த கோவிலை கடந்து தான் நான் வீட்டுக்குச் செல்ல முடியும். இப்போதெல்லாம் கூகுள் மேப் வழியாக அந்த கோவில் இருக்கும் இடத்தை எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடிகிறது.

//தந்தையாரின் நினைவால் மட்டுமின்றி தம்பி படும் வேதனையைப் பார்த்தும் கண்ணில் நீர் வருகின்றது என்று நினைக்கிறேன் கண்ணன். சரியா?//

தம்பி கடந்த 10 ஆண்டுகளாகவே அலகு காவடி எடுத்துவருகிறான். இடுப்புக்கு மேல் உடல் சுற்றில் 16 தூண்டில் முட்கள், கன்னங்களை துளைக்கும் ஒரு சிறிய சூலம், நெற்றியில் சிறிய வேல்கள் எனக் குத்தப்பட்டு இருப்பதைப் பார்க்கும் தீவிர பக்தியாளர்கள் சாமியாட ஆரம்பித்துவிடுவார்கள். அந்த காவடி எங்கள் குடும்ப வழக்கம் ஆகிவிட்டதால்...தம்பி அதனை விருப்பத்துடனே ஏற்று செய்கிறான். காவடி பால்குடம், வாகன, திருவாச்சி, சிலை ஆகியவற்றுடன் சுமார் 50 கிலோ இருக்கும், 6 கிலோ மீட்டருக்கு தூக்கிச் செல்ல வேண்டும். தம்பி வருந்துகிறான் என்று நினைத்தது இல்லை, அந்த சமயத்தில் அப்பாவே அங்கு இருப்பதாக உணருவோம், தம்பியின் தடிமனான உடலும், முகமும் கிட்டத்தட்ட அப்பாவின் ஜாடையில் இருப்பதால், காவடிக்கான வேலை நடக்கும் போது நாங்கள் எல்லோருமே உணர்ச்சிப் பெருக்கில் இருப்போம்,
அப்பாவின் மீது உறவினர்களுக்கெல்லாம் அளவிட முடியாத அன்பு, அந்த நேரத்தில்
எங்களைவிட சித்தியின் (அம்மாவின் இளைய சகோதரி) மகன்கள் அடக்க முடியாமல் கண்ணீர் பெருக்கில் விம்முவார்கள்.

SurveySan சொன்னது…

//ஏழைப் பிள்ளையார்//

peyar kaaranam?

Nice post and touching last few lines.

thanks,

Happy Pillayar Chathurthi.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்