பின்பற்றுபவர்கள்

17 செப்டம்பர், 2008

ஆத்திகர், நாத்திகர் இவர்களில் மிகவும் நல்லவர்கள் யார் ? - கர்மாவுக்கு பதில்

//நல்லவர்களாக வாழவேண்டியதன் அவசியத்தை விளக்குமாறு பாவ, புண்ணியங்கள் மற்றும் இறைவன் பற்றிய பயங்கள் தவிர்த்த பகுத்தறிவாளர்களிடம் கேட்கிறேன்.// - கர்மாவுக்கு பதில்.

ஆத்திகம், நாத்திகம் எந்த கொள்கையாக இருந்தாலும் அதன் தோற்றத்திற்கு 'துன்பத்திலிருந்து விடுதலை அளிப்பது' என்கிற ஒரே காரணம் தான். துன்பம், துயரம், துக்கம் இதிலிருந்து வாழும் போதும், வாழ்கைக்குப் பிறகும் விடுதலை அடைய முடியும் என்ற நம்பிக்கையில் கொள்கைகள் வளர்த்துக் கொண்டவர்கள் ஆத்திகர்கள், கண்ணுக்குத் தெரியாத, உணரமுடியாத மறுவாழ்வு பற்றி ஏன் கவலைப்பட வேண்டும், அது வெறும் கற்பனையாகக் கூட இருக்கலாம் இருக்கின்ற வரையில் மகிழ்ச்சியாக இருப்போம் என்று சொல்வதுதான் நாத்திகம்.

ஆத்திகத்தின் மூலக் கொள்கை சிதையாது இருந்திருந்தால் நாத்திகம் வந்திருக்கவே வந்திருக்காது, ஆத்திகம் பண்பாடு, கலாச்சாரம் என்று வளர்த்துக் கொண்டிருந்தாலும் கவலையே இல்லை. ஆனால் அந்த கொள்கைகளில் ஒன்றாக பிறரை (குறிப்பாக இன / சாதி அடிப்படை ஏற்ற தாழ்வு) , பிற உயிர்களைக் கூட துன்புறுத்தி (வேள்வியில் பலி இடுதல்) இன்பம் காண்பதாகவும் இருந்ததால் அவை விலக்கப்பட வேண்டும் என்று போர்கொடி எழுந்தது.

உதாரணத்துக்கு வாழும் உரிமை மனிதர்களுக்கு மட்டும் இருக்கிறதா ? யாரையும் கேட்டுப்பாருங்கள், இல்லை என்றே சொல்வார்கள், அனைத்து உயிரினங்களுக்கும் வாழும் உரிமை உண்டு, இருந்தாலும் நம் சுயநலத்திற்காக விலங்குகளை உண்கிறோம், அதற்கு காரணமாக உணவு சுழற்சி என்பது இயற்கையாகவே உள்ளது, அதாவது பூச்சி - தவளை - பருந்து , பருந்து இறந்தால் பூச்சிகள் அதை உண்ணும் என்று ஞாயம் கற்பிப்பர், அந்த உணவு சுழற்சிக்குள் நாம் செல்வதை நாம் ஏன் அனுமதிப்பது இல்லை ? நாம் பிற விலங்குகளை அடித்து உண்ணும் போது பிற விலங்குகளும் நம்மை அடித்து தின்னும் அந்த உரிமையை நாம் கொடுக்கிறோமா ? இல்லை, பாதுகாப்பாக வசிக்கிறோம், அல்லது தாக்க வருவதைக் வதைக்கிறோம், கொல்கிறோம். இது முரண்பாடுதான். இந்த முரண்பாட்டிற்கான ஞாயமும், அதிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவும் மனிதனுக்கு இருக்கும் ஆறாம் அறிவு செயல்படுகிறது. முற்றிலும் சுயநல நோக்கானது இது தவறுதானே. ஆறாவது அறிவை வைத்து அனைத்து உயிர்களை நேசிக்கிறோமோ இல்லையோ, அதனை அழிவில் இருந்து காப்பதற்காவது நாம் முயற்சி எடுக்கவேண்டும்.

முதன் முதலில் நாத்திக மதமான பெளத்த மதமே உயிர்கொலை செய்வதை வன்மையாக கண்டித்தது, அதை முற்றிலும் வலியுறுத்தவில்லை, ஒரு சில கட்டுப்பாட்டுடன் பசிக்கு வேறு எதுவுமே கிடைக்கவில்லை என்றால் உங்களுக்காக கொல்லப்படவில்லை என்றால் இறைச்சியை நீங்கள் புசிக்கலாம் என்பதே. எனவே பாவ /புண்ணியம் காண்செப்ட் என்பதைவிட வாழும் உரிமையை பிற உயிர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது தான் நோக்கம். வலி என்பது இரத்தம் ஓடக் கூடிய உயிரினங்கள் அனைத்திற்குமே உண்டு, கூடுதலாக மனிதனுக்கு உணர்வு பூர்வமான துன்பம், துயரம், துக்கம் இவைகள் உண்டு, தனக்குத்தானே ஏற்படுத்திக் கொள்வதற்கு யாரும் பெரிதாக வருத்தப்படுவது இல்லை. பிறரால் நேரும் போது தான் வருத்தம், மன உளைச்சல் என அத்தனையும் ஏற்படும். இவற்றைப் போக்கவோ, கட்டுப்படுத்தாவோ ஆத்திக கொள்கைகள் உதவவில்லை.

ஆத்திக நம்பிக்கையுடையவர் ஆயிரத்தில் ஒருவர் முற்றிலும் நல்லவராக இருப்பதே அரிதுதான். கொள்கை, நோக்கம் ஒன்று இருந்தால் அதனால் பயன் இருக்க வேண்டும், கொள்கை இருந்தாலும் அதனால் பயனில்லை என்றால் அந்த கொள்கையே வீண்தானே. ஆத்திகர்கள் தவறு செய்துவிட்டு எல்லாவற்றையும் 'ஆண்டவனுக்காகவும்' ஏன் 'ஆண்டவன் செயல்' என்றே சப்பைக் கட்டி தங்களுக்குக்குள் ஆறுதல் ஏற்படுத்திக் கொண்டும், பிறருக்கு இவர்களால் ஏற்படும் துன்பங்களை 'விதியின் விளையாட்டு' அல்லது 'முன் ஜென்ம பாவம்' அல்லது 'அவனுக்கு ஆண்டவன் கொடுத்தது அவ்வளவுதான்' என்று சொல்லிக் கொண்டு கண்டும் காணாமல் இருப்பதுடன் மென்மேலும் துன்பத்தையே ஏற்படுத்தினார்கள், ஏற்படுத்தேயே வருகிறார்கள்.

இந்த இடத்தில் தான் நாத்திகம் அதனையெல்லாம் மறுத்து அனைத்து உயிர்களும், குறைந்த அளவாக மனிதன் எல்லோருமே சமம் என்று சொல்ல முயற்சிக்கிறது. கண்ணுக்கும் கருத்துக்கும் தெரிவதை நம்பினால் போதும், வாழ்கை என்பது மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கே என்பதை வலியுறுத்துகிறார்கள். நாத்திகர்கள் எவரும் கொலை செய்தால் எனக்கு மனவுளைச்சல் ஏற்படுவதில்லை என்று சொல்லத் துணிபவர் அல்ல. நல்லவர்களாக வாழத் துணிவதற்கும், அதனை வலிவுறுத்துவதற்கும் காரணம், உனக்கு எது துன்பமோ அதை பிறருக்கும் துன்பம் என்று நினைத்து, நீயும் பிறருக்கு அந்த துன்பத்தை ஏற்படுத்தாதே என்பது தான்.

ஆத்திகர்கள் நல்லவர்களாக இருப்பதற்கு சொர்கப் பதவி, சொர்க சுகம் என்கிற ஆசை, மறுபிறவி தண்டனை, இறையச்சம் இவைகள் கூட காரணமாக இருக்கலாம், இந்த கற்பனை எதுவும் இல்லாமல் நல்லவனாக இருக்கும் நாத்திகர்களே மனதளவிலும், செயலளவிலும், பலன் எதிர்பாராதவர்களாக இருப்பதால் ஆத்திகர்களை விட மிக நல்லவர்கள். மண்ணில் வாழ்ந்த மகான்களிலேயே யார் மிகவும் நேசிப்பதற்கு ஏற்றவர் என்று கேட்டுப்பாருங்கள் ஒப்புக்கொள்ள மனமில்லாவிட்டாலும், மனது சொல்லும் நாத்திகனின் பெயர் 'புத்தர்'

இந்த கருத்து இன்றைய நாத்திகர்களுக்கோ, ஆத்திகர்களுக்கோ முற்றிலும் பொருந்தாது, இங்கே எழுதி இருப்பது கோட்பாட்டுக்கான பொருள் தான். இருப்பக்கமும் கெட்டவர்களும் உண்டு, நல்லவர்களும் உண்டு, தவறு செய்தால் தனக்கு தண்டனை உண்டு என்று நம்பினாலும் (அறிந்தே) தவறு செய்பவர்கள் கெட்டவர்களா ? தண்டனைப் பற்றி பயமே இல்லாமல் (அறியாமையில்) தவறு செய்பவர்கள் கெட்டவர்களா ?

6 கருத்துகள்:

கிருஷ்ணா சொன்னது…

அருமையான பதிவு..

பனிமலர் சொன்னது…

கோவியாரே, அவரது பதிவை பார்த்ததும் எனக்கும் இப்படி ஒரு பதிவு எழுத வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவர் என்னவோ தெரியாம் எழுதியது போல தெரியவில்லை . வேண்டும் என்றே வாயை பிடுங்க எழுதியுள்ளார் என்று தெரிகிறது. அவரது பதிவில் பின்னூட்டம் இட்டுவிட்டேன் இருந்தாலும், இங்கே. நீதியும் நேர்மையும் வழங்கும் உத்திரவாதம் என்ன, என்ன பலம் இருந்தாலும் அடுத்தது உனது வாய்ப்பு என்றால் அது உனக்கு தான் என்று கொடுப்பது நல்லோரின் வழக்கும் வாழ்க்கையுமாகும். இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை, தேவை இல்லாமல் பதிவிட்டு விட்டீர்கள் என்று கருதுகிறேன், தவறு என்றால் மன்னிக்கவும்.

RATHNESH சொன்னது…

கடவுள் சிலைக்கு மாலை போட்டு விட்டு அயோக்கியத் தனம் செய்பவன் ஆத்திகர்களில் நல்லவன்; பெரியார் சிலைக்கு மாலை போட்டு விட்டு அயோக்கியத்தனம் செய்பவன் நாத்திகர்களில் நல்லவன்.அவனுக்கு இவன் கெட்டவன்; இவனுக்கு அவன் கெட்டவன். இதுதான் ஈக்வேஷன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கிருஷ்ணா said...
அருமையான பதிவு..

12:12 PM, September 17, 2008
//

கிருஷ்ணா,

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//பனிமலர் said...
கோவியாரே, அவரது பதிவை பார்த்ததும் எனக்கும் இப்படி ஒரு பதிவு எழுத வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவர் என்னவோ தெரியாம் எழுதியது போல தெரியவில்லை . வேண்டும் என்றே வாயை பிடுங்க எழுதியுள்ளார் என்று தெரிகிறது. அவரது பதிவில் பின்னூட்டம் இட்டுவிட்டேன் இருந்தாலும், இங்கே. நீதியும் நேர்மையும் வழங்கும் உத்திரவாதம் என்ன, என்ன பலம் இருந்தாலும் அடுத்தது உனது வாய்ப்பு என்றால் அது உனக்கு தான் என்று கொடுப்பது நல்லோரின் வழக்கும் வாழ்க்கையுமாகும். இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை, தேவை இல்லாமல் பதிவிட்டு விட்டீர்கள் என்று கருதுகிறேன், தவறு என்றால் மன்னிக்கவும்.

12:15 PM, September 17, 2008
//

பனிமலர்,

கருத்துக்கு நன்றி ! 'கர்மா' வேண்டுமென்றே அவ்வாறு கேட்டது போல் தெரியவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
கடவுள் சிலைக்கு மாலை போட்டு விட்டு அயோக்கியத் தனம் செய்பவன் ஆத்திகர்களில் நல்லவன்; பெரியார் சிலைக்கு மாலை போட்டு விட்டு அயோக்கியத்தனம் செய்பவன் நாத்திகர்களில் நல்லவன்.அவனுக்கு இவன் கெட்டவன்; இவனுக்கு அவன் கெட்டவன். இதுதான் ஈக்வேஷன்.

3:46 PM, September 17, 2008
//

ரத்னேஷ் அண்ணா,
கருத்துக்கு நன்றி,

நான் இங்கே பெரியாரை 'நாத்திகத்திற்கு' அளவுகோளாக வைக்கவில்லை, புத்தர் பெயரை மட்டும் குறிப்பிட்டு இருக்கிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்