பின்பற்றுபவர்கள்

13 ஜூலை, 2009

பாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை - 7

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6

பகுத்தறிவு, ஆன்மிகம் என எந்த நோக்கில் பார்த்தாலும் உயிரினங்கள் பிறப்பு வளர்ச்சி முடிவு என்கிற சுழற்சிக்கு ஒவ்வொன்றும் தன்னால் இயன்ற பங்களிப்பை செய்து பூமியை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகிறது, இதுதான் இயற்கை. இந்த உயிர்த்தன்மையின் கூறுகளாக தாவரங்களும் சிலவகை ஒரு செல் உயிரனங்கள் தவிர்த்து தன்னைத் தானே பெருக்கிக் கொள்ளும் வாய்ப்புகள் கிடையாது, உயிரினப் பெருக்கத்திற்கு ஆண் / பெண் என ஒரே உயிரினப் பிரிவின் இருவகை உயிரினங்களின் சேர்க்கை இன்றியமையாததாகும். ஆண் பெண் சேர்க்கையால் உயிரினப் பெருக்கம் என்கிற சமண்பாட்டில் தூண்டும் பொருள்களாக புலனின்பம் என்கிற பயனும், இனப்பெருக்கம் என்பது அதன் ஈடுகளும் ஆகும். இனப்பெருக்கம் என்கிற செயலுக்கான நற்பலனை செயல்படும் போதே பெருவது பெருவதே கலவி இன்பம் அல்லது உடல் இன்பம். உயிர்ப்புக்கான இனப்பெருக்கம் என்னும் செயல்பாட்டின் புறக்காரணிகள் தான் ஆண் / பெண் உடல் கூறுகள், அதில் பெறப்படும் பிற பயன் உடலின்பம். சமூகமாக மாற்றிக் கொண்ட மனித இனத்தின் நோக்கம் இனப்பெருக்கம் என்கிற மையத் தன்மையில் இருந்து விலகி பெண் உடலில் பெரும் இன்பத்தை தனது சமூகத்திற்கு வசப்படுத்துவதன் மூலம், தனது சமூகம் சார்ந்த இனப்பெருக்கம் செய்வதற்கு சமூகக் கட்டுப்பாடுகளை விதித்துவிட்டதன் கூறுகள், இயல்பான ஆண் பெண் ஈர்ப்பு என்பதில் மன ரீதியான சிக்கல் ஏற்பட்டுவிட்டதாகக் கருதுகிறேன். உடலின்பம் என்பது ஆண் பெண் ஈர்ப்பு அல்ல, தன்னலம் சார்ந்த ஒன்று என்பதாக மரபுக் கூறுகளில் மாற்றம் ஏற்பட்டு, உடலின்பத்திற்குத் தேவை இரு உடல்கள் மட்டும் இருந்தால் போதும் என்கிற மனமாற்றம் ஏற்பட்டு, எதிர்பால் ஈர்ப்புகள் குறைந்து அல்லது இல்லாது, தன்பால் சேர்க்கை விருப்பிற்கு சிலரின் மனம் ஏற்பாக மாறிவிட்டது சமூகம் மாற்றத்தினால் ஏற்பட்ட பக்க விளைவு.

மனிதர்களில் சிலர் இருப்பது போல் பிற உயிரினங்களில் எப்போதுமே தற்பால் சேர்க்கை நாட்டம் உள்ள உயிரினம் எதுவும் கிடையாது. அப்படி இருக்கும் உயிரினங்கள் இருபால் நாட்டம் கொண்டவை, இனப்பெருக்கத்திற்கும் உதவும், தற்பால் நாட்டத்திலும் இருக்கும், அதன் செயல்பாடுகள் ஒற்றைத் தன்மை வாய்ந்தவை கிடையாது. ஆளுமைச் சமூகம் என்கிற ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளாதால் பிற உயிரனங்களில் தற்பால் நாட்டம் இருந்தாலும் அவை நிலைத்த தன்மை கொண்டது இல்லை. தனிமனிதனின் பருவத் தேவையாக இணையைத் தேடுவது, இனப்பெருக்கம் செய்வது, அவற்றை வளர்ப்பது, உடல் முதிர்ச்சி அடைந்ததும் மறைவது. பெண் உடலின் இயற்கை அமைப்பு பூப்பு எய்தியதிலிருந்து சுமார் 45 வயது வரை இனப்பெருக்கத்திற்கு தேவையான முட்டைகளை திங்கள் தோறும் வெளி ஏற்றும், அதன் பிறகு முதுமைப் பருவம், அதற்கு மேல் இயற்கையும் பெண்களை தொல்லைப் படுத்த விரும்பாததால் அல்லது உடல் தன்மை இனப்பெருக்கத்திற்கு ஏற்றதல்ல என்பதால் முட்டை உற்பத்தி நின்றுவிடுகிறது. இவை பெண்களைப் பொருத்த அளவில் கலவி இன்பத்திற்கான காலமும் இதுவே. ஆணுக்கு இந்தக் கட்டுபாடுகளை இயற்கை விதிக்கவில்லை சீரான உடல் நிலை உள்ள ஆண் இனப்பெருக்கத்திற்கு முடிந்த வரையில் உதவ முடியும் என்பதே இயற்கை விதியாக இருக்கிறது. இணையாக சேர்ந்த பெண் மாதவிலக்கு நின்ற பிறகும் ஆணுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கக் கூடிய கட்டாயத்தில் வைத்திருப்பது இயற்கை கிடையாது, சமூகம் மற்றும் இருவருக்கிடையே ஆன வயது வேறுபாடு அவற்றை நீட்டிக்கிறது, ஆணையும் கட்டுக்குள் கொண்டுவரவும் பெண்களை அதற்குமேலும் தொல்லை படுத்துவது நல்லது அல்ல என்பதால் இந்திய சமூகச் சூழலில் ஆணுக்கு வாலிபம், இல்லறம், துறவறம் என மூன்று பருவகாலங்கள் பிரிக்கப்பட்டு, இல்லறக் கடமைகள் முடிந்த ஆண் துறவரம் மேற்கொள்வது நல்லது என்கிற வழியுறுத்தல் இருந்தது. ஆனால் பலரும் அப்படி இருக்கவில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளுடன் 90 வயது வரை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.

உடல் நிலை காரணங்கள் தவிர்த்து வயதின் காரணாமாக இந்தகாலத்தில் செயல்படாத ஆணுக்கு வய்க்கரா போன்ற மருத்துவ வில்லைகளும், மாதவிலக்கு நின்ற பெண்களின் வரண்ட குறிகளுக்கு களிம்பு வகைகளையும் பரிந்துரை செய்து இல்லற இன்பம் சாகும் வரை என்பதாக நீட்டிக்கப்பட்டு இருப்பது இயற்கையா என்று பார்த்தால், கலவி இன்பத்திற்கு இருக்கும் இயற்கைத் தடைகளையெல்லாம் உடைத்து எரிந்துவிட்டிருக்கிறோம் என்றே தெரிகிறது. கலவி இன்பத்தின் நோக்கமான இனப்பெருக்கம் என்கிற காரணங்களே இல்லாத போது கலவி இன்பம் என்பதை ஆண் பெண் ஈர்ப்பின் நோக்கத்தில் எதிர்பாலினரிடம் மட்டும் தான் ஏற்பட வேண்டும் என்பது சரியான வாதமாக வைக்கும் அளவுக்கு இயற்கையின் கட்டுப்பாடுகளுக்கு நாம் கட்டுப்படவில்லை என்பதே உண்மை. சேர்க்கையின் நோக்கம் உடலின்பம் மட்டுமே என்கிற எண்ணங்களில் சேரும் உடல்களில் பால் தன்மைகள் விருப்பப்படி எப்படி இருந்தாலும் எதுவும் கெட்டுவிடப் போவதில்லை. அந்த வகையில் தற்பால் சேர்க்கையை இயற்கை செயற்கை வகைப்படுத்திப் பார்ப்பது தவறு.

***

ஒரு தனிமனிதன் இல்லறத்திற்குள் நுழைவது என்பதன் முதல் சடங்கு திருமணம், இதன் மூலம் எதிர்பாலினரிடம் கருத்தொற்றுமையுடன், இல்லற இன்பம் பெற்று, குழந்தைகள் பெற்று சந்ததி பெருக்கத்திற்கு உதவுவதாக சமூகத்தின் மூன்பு தன் சார்ந்துள்ள சமுக / மதப் பழக்கவழக்கப்படி உறுதி மொழி ஏற்கிறார்கள், அரசாங்க சட்ட அளவில் இருவருக்கும் பாதுகாப்பாக சொத்து உரிமை இன்னும் பல உரிமைகளை வழங்குகிறது. திருமணம் என்பது சமூகங்களை ஏற்றுக் கொண்டோரின் மன ஒப்புதலுடன் கூடிய முழுக்க முழுக்க சமுகம் சார்ந்த சடங்கு. இந்த சடங்கின் வழி அந்த சமூகத்தின் சந்ததிகள் பெருகிவளர்கின்றன. அனைத்து சமூகங்களின் திருமணச் சடங்குகளின் வழியாக பூமியின் உயிர்த்தன்மை நிலைத்து இருக்கிறது.

இப்படி ஒரு திருமணச் சடங்கை தற்பால் சேர்க்கையாளர்கள் உரிமையாகக் கேட்பது திருமணம் என்கிற பொருள் பொதிந்த சடங்கையே கேலிக்கூத்தாகுவதாகவே நினைக்கிறேன். திருமணத் தேவை என்பதற்கு தற்பால்சேர்க்கையாளர்கள் முன்வைக்கும் காரணங்களாக, சொத்துரிமை மற்றும் துணை இறந்துவிட்டால் அடக்கம் செய்யும் உரிமை அல்லது இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் உரிமை ஆகியவை திருமணம் செய்து கொள்வதால் கிடைக்கும் என்கிறார்கள். இவையும் 'திருமணத் தேவைக்கு' ஏற்றுக் கொள்ளும் காரணங்களாகத் தெரியவில்லை.


பொதுச் சட்டங்களில் வழி, தனிமனிதன் தன்னுடைய சொத்துக்களை யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்க சட்டங்களில் இடம் இருக்கிறது, தனிமனிதன் ஒருவன் தன்னலனில் அக்கரை கொண்டவர்கள் தனது இறப்பிற்கு பிறகு எப்படி நடந்து கொள்ளலாம் என்பற்கான அனுமதியும் சட்டத்தின் மூலம் பெறமுடியும். இதற்கு திருமணம் என்கிற சமூகச் சடங்குகளெல்லாம் தேவை இல்லை என்பது என் கருத்து. இன்னொரு காரணமாக நான் நினைப்பது ஓரின தம்பதிகளில் ஒரு சிலர் தவிர்த்து நீண்டகாலம் சேர்ந்து வாழ்வதில்லை, ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு உடலின்பம் கொடுக்க இயலாத சூழலில் இருந்தால் இன்னொருவரை நாடிவிடுவார்கள், இவர்களின் பெரும்பாலோனோரின் நோக்கம் வெறும் ஈர்ப்பு மட்டுமே, அதில் எழுதப்படாத ஒப்பந்தமாக மனம் ஒப்புதலுடன் சேர்ந்து இருப்பார். அந்த ஈர்ப்பின் செயல் தன்மை பாதிக்கப்படும் போது வெறொருவர் பக்கம் சாய்ந்துவிடுவர், இவை உடலின்பம் பெறும் ஆண் / பெண் ஈர்ப்பிலும் மணவிலக்காக இருந்தாலும் அவர்களின் வாரிசுகளுக்கு சில சட்டக் கடமைகள் தேவைப்படுவதால் அந்தத் திருமணமும் ஓரினவாதிகள் கேட்கும் திருமண அங்கீகாரமும் ஒன்று அல்ல. சீரான உடல் நிலையுடன் இருந்தும், பிள்ளைப் பெற்றுக் கொள்ள விருப்பப்படாமல் திருமணம் செய்து கொள்ளும் ஆண் / பெண் இணைகளை என்னவென்று சொல்வது, அவர்களைப் போல் தானே ஓரின விருப்பர்களும் ?

திருமணம் என்பது இரு உடல்களின் சங்கமத்திற்கு ஒப்பந்தம் போடும் ஒரு நிகழ்வு என்பதாக மட்டும்மல்லாது திருமணம் என்பது இனப்பெருக்கத்திற்கு முன்மொழியப்படும் முதல் சடங்கு என சமூகத்தில் திருமணம் பற்றிய புரிந்துணர்வுகள் இருக்கிறது. அப்படி இல்லை என்றால் திருமணச் சடங்குகளே இல்லாது போய் இருக்கும், இன்றும் கூட சமூகத்தில் திருமணம் என்பது உடல் இணைப்பிற்கான சடங்கு அல்ல அதற்கும் மேலாக இல்லற ஒப்பந்ததில் சந்திகளை நல்ல முறையில் கொண்டு சென்று உயிர்த்தன்மையை அடுத்த தலைமுறைக்கு அனுப்பி வைக்க முயற்சிக்கும் ஒரு தொடக்கம், அதனை பெற்றோர்கள் வாழ்த்துகிறார்கள். அதை வெறும் சட்டங்களுடன் தொடர்பு படுத்திப் பார்த்து ஓரினவாதிகள் திருமணம் சமூகத்தால் அங்கிகரிக்கப்பட வேண்டும் என்று கூறுவதும், தாங்கள் திருமணம் செய்து கொண்டதாக அறிவிப்பதும், கேலிக் கூத்தாகத் தான் நினைக்க முடிகிறது. நல்ல உடல் நிலையில் இருந்து அடுத்தலைமுறை தேவைகள் என்கிற எந்த ஒரு நோக்கமும் இல்லாமல் வாழ்ந்து இறந்து போவது உயிர்புடன் வைத்திருக்க முயலும் சமூகத்திற்கு பேரிழப்புதான்.

இந்த காரணங்களுக்காக சமூகம் தற்பால் புணர்ச்சியனரின் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளச் சொல்லி வழியுறுத்தலாம். ஆனால் பருவ வயதினரிடையே அவர்கள் தங்கள் ஒப்புதலுடன் நிறைவேற்றிக் கொள்ளும் தற்பால் இன்பங்களை மதங்களுக்கு எதிரானது என்கிற பழமை வாத சப்பைக் காரணங்களைக் காட்டி, குற்றமாகக் கருதி கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்ல எந்த வெறெந்த ஞாயமான காரணமும் இல்லை.

முடிவாக,
தனிமனிதனின் பாலியல் நாட்டங்களில் இயற்கை செயற்கை என்று எதுவும் கிடையாது, அப்படி இருப்பவை அனைத்தும் சமூக மாற்றங்களினால் ஏற்பட்ட கூறுகளே, ஒத்த பாலின நாட்டத்திற்கு தனிமனித மனம் தவிர்த்து சமூகத்தில் ஏற்பட்ட உடலின்பம் குறித்த செயல்பாடுகளில் ஏற்பட்ட மாற்றமும் காரணி ஆகிறது என்பதால் சமூகமும் அதற்கு காரணமாக அமைகிறது, இதில் விரும்பி ஈடுப்பட்டவர்களுக்கு அங்கீரமின்மையால் ஏற்படும் உணர்ச்சிப் பூர்வமான, மான - அவமான தற்கொலை, கொலை, மற்றும் புதியவர்களின் விருப்பம் இல்லாமல் அதில் நுழைவதற்கு மறைமுகமாக தடை ஏற்படுத்த, தற்பால் சேர்க்கை அங்கீகரிக்கக் தேவையானது தான். அங்கீகரிக்கப்பட வேண்டும்.

ஓர்பால் விருப்பர்களின் திருமணம் ? என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, ஏற்றுக் கொள்ள வேண்டும் என்போர் சரியான காரணங்களைக் கூறவும்.

தற்போதைக்கு தொடர் முற்றும்.

4 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//ஓர்பால் விருப்பர்களின் திருமணம் ? என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, ஏற்றுக் கொள்ள வேண்டும் என்போர் சரியான காரணங்களைக் கூறவும்.//

வழிமொழிகின்றேன்,,,,,,,,,,

ர.கிருஷ்ணசாமி சொன்னது…

தொடர் முழுவதையும் படித்தேன். ஓரினச்சேர்க்கையில் ஆண்கள் மட்டுமே ஈடுபடுவது போல் எழுதியுள்ளீர்கள். பெண்களிலும் ஆண்களுக்கு சமமாக ஓரினச்சேர்க்கையாளர்கள் உள்ளனர் என்றே கருதுகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ர.கிருஷ்ணசாமி said...
தொடர் முழுவதையும் படித்தேன். ஓரினச்சேர்க்கையில் ஆண்கள் மட்டுமே ஈடுபடுவது போல் எழுதியுள்ளீர்கள். பெண்களிலும் ஆண்களுக்கு சமமாக ஓரினச்சேர்க்கையாளர்கள் உள்ளனர் என்றே கருதுகிறேன்.
//

ஓரின சேர்க்கை என்றால் தனித்தனியாக பால் படுத்த முடியாது. அது பொதுப் பெயரே. ஆண்களின் இந்த நடவெடிக்கை வெளிப்படையானது, அதனால் ஆண்களைப் பற்றி எழுதினேன். இந்தியாவில் பெண் ஓரினசேர்க்கையாளர்களின் எண்ணிக்கை விழுக்காடு கணக்கெடுக்கும் அளவுக்கெல்லாம் இருக்காது என்பது என் எண்ணம்.

snkm சொன்னது…

இந்த தொடரை இப்போது தான் படிக்க வாய்ப்பு கிடைத்தது! அருமை! நன்றி!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்