பின்பற்றுபவர்கள்

23 ஜூலை, 2009

பெரியவர்களுக்கான வடை உணவு டிப்ஸ் !

வடை என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு பலகாரம். அதை நாம் எப்படி கடித்து மெல்லுகிறோம் என்பதைப் பொறுத்து நம் நாக்கிற்கு அதன் சுவையைக் கூட்ட முடியும். இது சிறுவர் பெரியவர் இருவருக்கும் பொருந்தும் என்றாலும் இந்த முறை பெரியவர்களுக்காக இதைக் கூறுகிறேன். இதுவரை எழுதிய இடுகைகளில் பெரியவர்கள் வடை சாப்பிடுவதைப் பற்றி தனியாக எதையும் எழுதியதில்லை. எனவே அதற்காக :)

வடை விசயத்தில் முக்கியமான ஒன்று அனைவரும் நம் உடல் நலத்துக்கு எது ஏற்றதோ அந்த வகையான வடைகளையே சாப்பிட வேண்டும். ஆசைப்படுகிறோம் என்பதற்காக எண்ணை அதிகம் சேர்ந்து கொண்ட வடைகளை தின்றுவிட்டு வயிற்றைக் கலக்கி அடிக்கடி பாத்ரூம் செல்லும் படி நடந்து கொள்ளக் கூடாது. சரியான வடைகளையே தின்பதன் மூலம் நாம் அறிந்த வடை சுவையின் மைனஸ்களை பிளஸ்களாக மாற்றலாம். எடுத்துக்காட்டாக குண்டாக கொழுப்பு அதிகமாக இருப்பவர்கள்,ரொம்ப ஒல்லியாக இருப்பவர்கள், எனக்கு நல்ல பசியெடுக்குது ஆனால் சாப்பிட சுவையான வடை கிடைக்கவில்லை என்று நினைக்கிறவங்க எல்லோரும் இந்த பிரச்சனையை முழுவதும் இல்லை என்றாலும் ஓரளவு சரி செய்யலாம்.

முதலில் குண்டாக இருப்பவர்கள்

இவர்களுக்கு தாங்க இருப்பதிலேயே ரொம்ப சிரமம், எந்த வடை சாப்பிட்டாலும் திருப்தி இல்லாமல் இருப்பாங்க, அதற்கு காரணம் எக்ஸ்ட்ரா லார்ஜ் ஆன இரைப்பைதான். உடற்பயிற்சி அது எது இதெல்லாம் இருந்தாலும் நாம் வடையின் மூலம் எவ்வாறு ஒரளவு சரி செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.

குண்டாக இருப்பவர்கள் கண்டிப்பாக ரொம்ப வழுவழுப்பான எண்ணை வழியும் வடைகளை சாப்பிட தேர்வு செய்யக் கூடாது. காரணம் அவ்வகை வடைகள் எண்ணைக் கொழுப்புகளை உடலுக்கு ஏற்றி உடல் பாகங்களை இன்னும் ஊதச் செய்துவிடும். குறிப்பாக தொப்பை, தொடை, தாடை இது பார்பவர்களுக்கு அருவெறுப்பையே தரும். இவ்வகையான எண்ணை வழியும் வடைகளை தவிர்த்துவிடுவது நல்லது. இல்லிங்க எனக்கு எண்ணை சேர்ந்த வடைகள் தான் பிடிக்கும் என்றால் இருப்பதிலேயே குறைவான எண்ணை சேர்த்து மைக்ரோவேவ் ஓவனில் செய்த வடைகளை சாப்பிடுங்கள். எண்ணையற்ற ஆவியில் வேகவைத்த வடைகளே சிறந்தது. ஏங்க ! எனக்கு என்ன அவ்வளவு தொப்பையா கூடிப் போச்சு ! ஆவியில் வெந்த வடைகளை திங்க ! என்றால் ஆவியில் வேகை வைக்கும் வடைகளில் பலவகை சுவையான வடைகளும் உண்டு என்பது உங்களுக்கு தெரியும். எனவே அதில் எதாவது ஒன்றை (ஒன்றெல்லாம் போதுமா ?) தேர்வு செய்யலாம்.

குள்ளமாக குண்டாக இருப்பவர்கள்

இவர்களும் கண்டிப்பாக ரொம்ப வழுவழுப்பான எண்ணை வழியும் வடைகளை தவிர்த்தே ஆக வேண்டும் வேறு வழியே இல்லை. இவ்வகை வடைகள் கொழுப்பைக் கூட்டி இன்னும் உயரம் குறைந்தவர்களாக காட்டும். பெண்களுக்கு மிக முக்கியமான அம்சம் குறிப்பாக குள்ளமாக இருப்பவர்களுக்கு வயிறு அகலமாக இருப்பது, உங்கள் வயிறு அகலமாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு சிலரை பார்த்தால் அவர்களுக்கு வயிறு அகலம் குறைவாக இருக்கும், அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி ஆவியில் வெந்த வடைகள் தான், இவைகள் தான் உங்கள் கொழுப்பைக் கூட்டாமல் மறைத்து வயிரை மட்டும் அகலப்படுத்தி காட்டும், அதோடு ஆவியில் வெந்த வடைகள் என்பதால் சதை பகுதிகளை அப்பட்டமாக கூட்டாது.

பெரியவர்கள் வடை சாப்பிடும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் மள மளவென்று திங்கக் கூடாது கூடாது குறிப்பாக குள்ளமாக குண்டாக உள்ளவர்கள், அதே போல ரொம்ப மொறு மொறுப்பாகவும் இல்லாமல் வடையின் நடு பகுதி மொறு மொறுப்பு குறைத்து ஓரளவாவது மென்று சாப்பிடும் படி இருக்க வேண்டும். ரொம்ப மொறுப்பாக இருந்தால் திங்கும் போது வாய் அசிங்கமாக தெரியும். எனவே வடையில் ஓரளவு மென்மை இருக்க வேண்டும்

ஒல்லியாக உள்ளவர்கள் ஆவி வடையைத் தவிர்க்க வேண்டும், இவை உடலை குச்சி குச்சியாக காட்டும். எலும்புகள் துருத்திக்கொண்டு அசிங்கமாக இருக்கும். வடை சாப்பிடும் போது கைக்கு குறைவாக எடுக்கக் கூடாது. இது உங்களின் நீண்ட கைகளை (ஒல்லியாக இருப்பதால்) இன்னும் நீட்டி நிறைய கை கொண்ட அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம். தேர்வு செய்யும் வடைகள் சத்தாக இருக்கும் படி தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது.

நான் குண்டும் இல்ல ஒல்லியுமில்ல குள்ளமும் இல்ல பர்ஃபெக்ட்டான ஸ்ட்ரக்சர் இருந்தாலும் சுவையான வடை கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகிறீர்களா! இதற்கெல்லாம் காரணம் வடை செய்பவர்களின் பக்குவம் மட்டுமே. ஏனோ தானோவென்று வடை செய்வதாலே அவ்வாறு தெரிகிறது. இதற்க்கும் உங்கள் சுவை உணர்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

பல் கூர்மையாக பலமாக இருப்பவர்கள் மொறுமொறுப்பான வடைகளை தேர்வு செய்வது நலம். நீங்கள் சைட் டிஸ்ஸாக சாப்பிடுவர்கள் என்றால் வடைகளுக்கென்றே வகையான சட்டினிகள் வைக்கிறார்கள் அதை பயன்படுத்தலாம். சட்டினி மற்றும் வடை சேர்ந்து சாப்பிடுவது தான் மிகச் சுவையானது, தற்போதைய ஸ்பெசல், சூடான வடையே வாசனையாகவும் கூடுதல் சுவையாகவும் இருக்கும். ஆமை வடை சாப்பிடுபவராக இருந்தால் சரியான பதமான சூட்டில் சிறிதளவு தேங்காய் சட்டினியுடன் சாப்பிட வேண்டும். வெறும் வடை அவ்வளவாக சுவைக்காது.

எனக்கு மசால் வடை பிடிக்கவில்லை, மெதுவடையும் பிடிக்கவில்லை கீரை வடை மட்டும் தான் சாப்பிடுவேன் என்று சொல்கிறீர்களா! கவலையே படாதீங்க. உலகிலேயே சத்தான வடை என்றால் அது கீரை வடைதான். எந்த வயதினருக்கும் ஏற்ற வடை கீரை வடை.

கீரைவடை சாப்பிடுவதும் பெரியவிசய மில்லை. நல்ல முறையில் யாராவது செய்து தரவேண்டும். என்ன நீங்க... எவ்வளவு வருசமாக கீரை வடை சாப்பிடுகிறேன் எனக்கு கீரை வடை பற்றி சொல்றிங்களே என்று கோவப்படாதிங்க. ஒரு சிலர் கீரை வடையில் சுவையான கீரையைப் பயன்படுத்தி இருக்கமாட்டாங்க. இஞ்சி போட்டு இருக்க மாட்டாங்க, பூண்டு போட்டு இருக்கமாட்டாங்க, வெங்காயம் குறைவாக இருக்கும். இவையெல்லாம் சரியான பக்குவத்தில் அளவில் இருக்க வேண்டும், வடை அகலம் குறைவாக இருக்கும், கீழ் பகுதியில் சரியாக வெந்து இருக்காது, அவசரபட்டு எடுத்து விட்டதால் வேகாமல் இருக்கும், வடையை கருகிப் போகும் அளவுக்கு வேகவைத்து எடுத்திருக்கக் கூடாது.

முக்கியமான விஷயம் சுண்டலுடன் வடைகள். பெரும்பாலும் இதை போல இப்போதைய பெரியவர்கள் திங்க விரும்புகிறார்கள், ஆனால் அது அனைவருக்கும் நன்றாக இருக்காது. ஒரு சிலருக்கு மட்டுமே நன்றாக இருக்கும். இதை விலாவாரியாக விவரிக்க முடியாது என்பதால் நீங்களே புரிந்து கொள்ளுங்கள் ;-) சுவையாக இருக்க வேண்டுமே தவிர கேஸ் ட்ரபுலை ஏற்படுத்திவிடக் கூடாது அல்லது மற்றவர்கள் பார்த்து வேறு விதமாக கிண்டலடிக்கும் படியோ மூக்கு முட்ட வடை திங்கக் கூடாது. அதிகப்படியான காரம் உள்ள வடைகள் மற்றும் சட்டினிகள் அவ்வாறான வயிற்றுப் போக்கை தந்து விடும். ஒரு சிலருக்கு அது ஒத்துக் கொள்ளலாம், ஆனால் அவர்கள் பெரும்பான்மையானவர்கள் கிடையாது.

அதே போல பெரியவர்களுக்கு உள்ள எண்ணம் மிகவும் விலை உயர்வான பைவ் ஸ்டார் ஓட்டல் வடையே சுவையானது என்று, இது முற்றிலும் தவறான எண்ணம். மிக குறைந்த விலைகளில் கூட சுவையான வடைகள் உள்ளது, எந்த வடையாக இருந்தாலும் நம் பட்ஜட்டுக்கு பொருத்தமாக உள்ளதா என்று தான் பார்க்க வேண்டுமே தவிர, விலை உயர்ந்ததாக உள்ளதா என்று பார்க்க கூடாது.

நான் கூறிய எல்லாவற்றையும் விட மிக மிக மிக முக்கியமானது தன்னம்பிக்கையும், தாழ்வு மனப்பான்மை இல்லாமல் இருப்பதும் தான். ஒருவரை மிக அழகாக காட்டுவதில் மிக முக்கிய பங்காற்றுவது வடை தான், எனவே இப்படி எல்லாம் இருக்கிறோமே என்று வருத்தப்படாமல் வடைகளை உங்கள் உடல்வாகிற்கு தகுந்த மாதிரி வடைகளை மாற்றி சாப்பிடுவதன் மூலம் நம்மிடம் உள்ள சில குறைகளை வெற்றி கொள்ள முடியும். இது வரை உங்களை கண்டு
கொள்ளாமல் இருந்தவர்கள் நீ மட்டும் வடை சாப்பிடுவது தெரிந்திருந்ததால் மணிப் பர்சை வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்திருப்பேன், தண்டம் அழுவதில் இருந்து தப்பி இருப்பேன் என்று சொல்லுபடி ஆகி விடும். அதே போல இன்னொரு முக்கியமான விஷயம் வடை விசயத்தில் நன்கு ஆர்வம் இருப்பவர்களால் மட்டும் தொடர்ந்து இதை பின் பற்ற முடியும், மற்றவர்கள் ஆசைக்கு ஒரு வடை சாப்பிட்டுவிட்டு விட்டு வழக்கம் போல புலம்பி கொண்டு இருப்பார்கள். எந்த ஒரு செயலிலும் ஆர்வம் இருந்தால் மட்டுமே அது சிறப்பாக இருக்கும் என்பது அனைத்திற்கும் பொருந்தும் நம் வடை தேர்வு உட்பட.

பின் குறிப்பு

மேற்கூறிய அனைத்தும் பிரச்சனை உள்ளவர்களுக்கு மட்டுமே, மற்றவர்கள் இதை மனதில் வைத்துக்கொள்ளலாம், அதே போல ஓரளவு குண்டாக உள்ளவர்களுக்கு மட்டுமே நமது வடைத் தேர்வை மாற்றி அமைப்பதின் மூலம் ஓரளவு சரி செய்யலாம், அதிக குண்டாக உள்ளவர்கள் வடையைத் தவிர்ப்பது தவிர வேறு வழி இல்லை. மணமிருந்தால் மார்க்க பந்து :-)

இந்தப் பதிவுக்கும் பதிவர் கிரியின் பெண்களுக்கான உடை அழகு டிப்ஸ்! - இந்தப் பதிவுக்கும் தொடர்பு இல்லை :)

25 கருத்துகள்:

இராம்/Raam சொன்னது…

ஹி ஹி... பாவம் கிரி.. பொண்ணுகளுக்கெல்லாம் டிப்ஸ் எழுதினாரு.. :)))

துளசி கோபால் சொன்னது…

இது உங்களுக்கேக் கொஞ்சம் ஓவராத் தெரியலையா?

இப்போ நான் வடையைத் திங்கணுமா இல்லையா?

சென்னையில் வடைகள் சின்ன சைஸ்.

ஆனால்...சிங்க வடைகள் பெரூஊஊஊஊஊஊஊஊஊஊசு.
கவனமா இருங்க. அம்புட்டுதான் சொல்வேன்:-)))))

துளசி கோபால் சொன்னது…

சிங்க வடைகளைச் சிங்கை வடைகள் என்று வாசிக்கவும்.:-)

நட்புடன் ஜமால் சொன்னது…

ஹா ஹா ஹா

டிப்ஸ் வாரமா இனி ...

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

அட பாவமே.... பாவம் கிரி...

cheena (சீனா) சொன்னது…

நான் என்ன சாப்பிடணூம்னு குறிப்பா சொல்லணூம் ஆமா

வட சாப்டறது சரி - பண்றது யாரு

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

அண்ணே.. இது வடைக்கான பதிவா இல்ல வேறு ஏதாவது பதிவுக்கு எதிர் பதிவா?

நான் சின்ன பையன் அதான் தெரியாம கேடகுறேன்..

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

ஐயா அடங்கமாட்டியளா...


இருந்தாலும் கோவியார் சார்புல இந்த வடையை மூத்த பதிவர்(பிரபல) டிவிஆர் ஐயா அவர்களுக்கு பார்சல் செய்கிறோம்...

Suresh Kumar சொன்னது…

ஆகா நல்ல டிப்ஸா இருக்கே பெரியவர்களே வாங்க டிப்ஸ படியுங்க ........................ நல்ல வேலை நம்ம பெரியவங்க இல்ல

பரிசல்காரன் சொன்னது…

விடை, வடைன்னாலே பயமா இருக்கு கோவி ஜி!

கலக்கல் எதிர்பதிவு!

உடன்பிறப்பு சொன்னது…

துளசி கோபால் said...

ஆனால்...சிங்க வடைகள் பெரூஊஊஊஊஊஊஊஊஊஊசு.
கவனமா இருங்க. அம்புட்டுதான் சொல்வேன்:-)))))

/\*/\

தேக்காவில் இருக்கும் வடை கடைகளில் நம்மூர் கடைகள் போலவே சூப்பரான வடைகள் கிடைக்கும். மற்ற இடங்களில் நீங்கள் சொல்வது மாதிரி தான் இருக்கிறது

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

கோவியார்!
மாட்டுக்கு மாடு சொன்னால் கேட்காது; மணிகட்டிய மாடு சொல்ல வேண்டுமென்பாங்க.
இதில் ஒரு பிரதி எடுத்து என் மனைவி கையில் கொடுத்து விட்டேன்.

கிரி சொன்னது…

:-))))))))))) Time illa appuram varen

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

//இது உங்களுக்கேக் கொஞ்சம் ஓவராத் தெரியலையா?

இப்போ நான் வடையைத் திங்கணுமா இல்லையா?

சென்னையில் வடைகள் சின்ன சைஸ்.

ஆனால்...சிங்க வடைகள் பெரூஊஊஊஊஊஊஊஊஊஊசு.
கவனமா இருங்க. அம்புட்டுதான் சொல்வேன்:-)))))//

துளசி அக்கா!
ஏதோ தெரியல; உங்கள் பதிவுகளோ; பின்னூட்டமோ படிக்கும் போது அதை சின்னத்திரை பெரிய திரை அம்மா; பாட்டி நடிகை திருமதி வஸ்தலா ராஜகோபால்- அவர்கள் குரலிலேயே கிரகிக்கிறேன்.
நான் கேட்ட குரலுக்குரியவர்களின் உரையாடல்கள் படிக்கும் போது அவர்கள் குரலிலே கிரகிக்கும்
பழக்கமுடையவன் உதாரணம் -கலைஞர்; வாரியார்; சொலமன் பாப்பையா; கேட்காத குரலுக்குரியவர்களின் உரையாடல்களை (உங்களைப் போல்);இயல்பாகவே யாரோ ஒரு கேட்ட
குரலுடன் கிரகிப்பேன். அந்த வகையில் உங்கள் உரையாடல் வகை எழுத்துக்களுக்கு
, அவர் குரல் அற்புதமான பொருத்தம் (எனக்கு).
அக்கா, இது என்ன வகை வியாதி என தெரியல்ல . ஆனால் ஆபத்தில்லாத வியாதிதானே!

மங்களூர் சிவா சொன்னது…

பெரியவர்கள் இன்றைக்கோ நாளைக்கோ போகப்போகிறவர்கள் எதோ ஆசையாக சாப்பிட விருப்பப்பட்டால் அதில் மண்ணள்ளிப்போடும் உங்கள் ஆதிக்க மனப்பான்மை பளிச்சென பதிவில் தெரிகிறது.

இந்திய ஆயா & தாத்தாஸ் சப்போர்ட்டர்ஸ் சங்கம்
மங்களூர் கிளை

சிநேகிதன் அக்பர் சொன்னது…

அண்ணே இங்கே வடையே கிடைக்கிறதில்லை.

வடை படத்தை போட்டு கடுப்பேத்திட்டீங்களே.

CA Venkatesh Krishnan சொன்னது…

அவ்வ்வ்வ்வ்.

வடை பதிவு போட்டுட்டீங்க.

அப்படியே பொண்டா டீ பதிவுகளும் போட்டுட்டீங்கன்னா ஒரு வேல முடிஞ்சுரும்....

இதுக்கு நான் என்ன எதிர்பதிவு எழுதலாம்னு யோசிக்கிறேன்.

துளசி கோபால் சொன்னது…

யோகன் தம்பி,

வத்சலா ராஜகோபால்..... ஊஹூம்.சரிப்படாது.பானுமதியம்மாவை நினைச்சுக்குங்க இனிமேல். முடியலைனா மனோரமா.

இளையபல்லவன்,

விசுவோட ஒரு பழைய படத்துலே, இப்படி ஒரு டயலாக் வரும். அந்த ஊர்லே பொண்டாட்டீ வேணுமான்னு பஸ்ஸில் விப்பாங்கன்னு:-)

துபாய் ராஜா சொன்னது…

//இந்தப் பதிவுக்கும் பதிவர் கிரியின் பெண்களுக்கான உடை அழகு டிப்ஸ்! - இந்தப் பதிவுக்கும் தொடர்பு இல்லை :)//

:)))))

இருந்தாலும் இத்தனூண்டு வடைய வச்சி இம்புட்டு மேட்டர் எழுதியிருப்பது நல்லாதான் இருக்கு.

இங்க எகிப்துல வடை மாதிரியே ஒன்னு 'தமையா'ன்னு சொல்றாங்க.
நல்லா சுவையாத்தான் இருக்கு.

கிரி சொன்னது…

எதிர்பதிவு போடுறேன்னு இப்படி வடையை "பஜ்ஜி"யாக்கி வைத்து இருக்கீங்களே! :-)))

அவ்வ்வ்வ்வ்வ்

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

ஜோதிபாரதி..அனுப்பிய வடை வந்து சேர்ந்தது..(அதை கிள்ளும்போது..)ஊசியும்..நூலையும் வேறு ஏன் அனுப்பினார் எனத் தெரியாததால் அப்படியே வைத்து விட்டேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//இராம்/Raam said...
ஹி ஹி... பாவம் கிரி.. பொண்ணுகளுக்கெல்லாம் டிப்ஸ் எழுதினாரு.. :)))
//

அப்படி ஒரு மேட்டர் இருக்கா, அவரு என்கிட்ட சொல்லி இருந்தால் சும்மா இருந்திருப்பேன்.

//துளசி கோபால் said...
இது உங்களுக்கேக் கொஞ்சம் ஓவராத் தெரியலையா?

இப்போ நான் வடையைத் திங்கணுமா இல்லையா?
//

அவரை நிறுத்தச் சொல்லுங்க நான் நிறுத்துறேன் :)

ஊசிப் போறத்துக்குள்ள தின்றுவிடுங்கள்.

//துளசி கோபால் said...
சிங்க வடைகளைச் சிங்கை வடைகள் என்று வாசிக்கவும்.:-)
//

உங்க புன்னியத்துல 2 பின்னூட்டம் சொற்பிழை வாழ்க !

//நட்புடன் ஜமால் said...
ஹா ஹா ஹா

டிப்ஸ் வாரமா இனி ...
//

டிப்பு டிப்பு.....ன்னு கிரி பாட தொடங்கிடப் போறார்

//VIKNESHWARAN said...
அட பாவமே.... பாவம் கிரி...
//
கிரிக்கு எல்லோரும் அனுதாபப் படுறிங்க. ஒருத்தன் கைவலிக்க அதையே தட்டி இருக்கேன். எனக்கு ஒண்ணும் பாராட்டு கீராட்டு இல்லையா ?

//cheena (சீனா) said...
நான் என்ன சாப்பிடணூம்னு குறிப்பா சொல்லணூம் ஆமா

வட சாப்டறது சரி - பண்றது யாரு
//

ஐயா சோதனை எலியாக இருப்பது தான் கடினம்.

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
ஐயா அடங்கமாட்டியளா...
//

அதெல்லாம் மாட்டோம்.

//இருந்தாலும் கோவியார் சார்புல இந்த வடையை மூத்த பதிவர்(பிரபல) டிவிஆர் ஐயா அவர்களுக்கு பார்சல் செய்கிறோம்...
//

அவருமேல வெளிச்சப்பதிவருக்கு கொல வெறி இருப்பது 'வெளிச்சமாகி' விட்டது

கோவி.கண்ணன் சொன்னது…

//Suresh Kumar said...
ஆகா நல்ல டிப்ஸா இருக்கே பெரியவர்களே வாங்க டிப்ஸ படியுங்க ........................ நல்ல வேலை நம்ம பெரியவங்க இல்ல
//

அப்படி என்றால் தலைப்பை மாற்றி சிரியவர்களுக்கான (மிட்டாய்) கடைன்னு ஒரு பதிவைப் போட்டுவிட வேண்டியது தான்

//பரிசல்காரன் said...
விடை, வடைன்னாலே பயமா இருக்கு கோவி ஜி!

கலக்கல் எதிர்பதிவு!
//
கொலவெறிப்படை, பின்னூட்ட சூராவளியெல்லாம் பார்த்துட்டு விடைக்கும் வடைக்கும் பயப்படலாமா பரிசல்.

//உடன்பிறப்பு said...
துளசி கோபால் said...

ஆனால்...சிங்க வடைகள் பெரூஊஊஊஊஊஊஊஊஊஊசு.
கவனமா இருங்க. அம்புட்டுதான் சொல்வேன்:-)))))

/\*/\

தேக்காவில் இருக்கும் வடை கடைகளில் நம்மூர் கடைகள் போலவே சூப்பரான வடைகள் கிடைக்கும். மற்ற இடங்களில் நீங்கள் சொல்வது மாதிரி தான் இருக்கிறது
//

செல்வி உணவகம், கோமளவிலாஸ் ஆகிய்வற்றில் நல்லா இருக்கும் உடன்பிறப்பு.

// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
கோவியார்!
மாட்டுக்கு மாடு சொன்னால் கேட்காது; மணிகட்டிய மாடு சொல்ல வேண்டுமென்பாங்க.
இதில் ஒரு பிரதி எடுத்து என் மனைவி கையில் கொடுத்து விட்டேன்.
//

அப்ப உங்களுக்கு இனிமே முறுக்கு அதிரசம் தான் கிடைக்கும். தீபாவளி வரைக்கும் காத்திருக்கனும் நீங்க. அவசரப்பட்டு அவங்களை சீண்டி இருக்கிங்க

//கிரி said...
:-))))))))))) Time illa appuram varen
//

யோவ் பின்னூட்டம் பாத்துப் போடுய்யா, 2 மணி நேரம் தட்டச்சு செய்திருக்கேன்

//நான் கேட்ட குரலுக்குரியவர்களின் உரையாடல்கள் படிக்கும் போது அவர்கள் குரலிலே கிரகிக்கும்
பழக்கமுடையவன் உதாரணம் -கலைஞர்; வாரியார்; சொலமன் பாப்பையா; கேட்காத குரலுக்குரியவர்களின் உரையாடல்களை (உங்களைப் போல்);இயல்பாகவே யாரோ ஒரு கேட்ட//

யோகன் உங்களுக்கும் அந்தப் பழக்கம் இருக்கா ? அவ்வ்வ்வ். நான் தான் அப்படின்னு நினைச்சேன்

//மங்களூர் சிவா said...
பெரியவர்கள் இன்றைக்கோ நாளைக்கோ போகப்போகிறவர்கள் எதோ ஆசையாக சாப்பிட விருப்பப்பட்டால் அதில் மண்ணள்ளிப்போடும் உங்கள் ஆதிக்க மனப்பான்மை பளிச்சென பதிவில் தெரிகிறது. //

பெரியவங்க சின்னவங்க எல்லோரும் (ஆசையாக) சாப்பிட்ட பிறகு போகப் போறவங்க தான், இது இன்னிக்கா நாளைக்காங்கிறது அவங்க அவங்க வயறு சரியாக இருப்பதைப் பொறுத்தது.

//இந்திய ஆயா & தாத்தாஸ் சப்போர்ட்டர்ஸ் சங்கம்
மங்களூர் கிளை
//

ஆயா தாத்தாஸிடம் நான் சொன்ன பதிலைச் கோவியானந்தாச் சொன்னதாகச் சொல்லிடுங்க.

//அக்பர் said...
அண்ணே இங்கே வடையே கிடைக்கிறதில்லை.

வடை படத்தை போட்டு கடுப்பேத்திட்டீங்களே.
//
அக்பர்,
பிட்டுப் படம் பார்க்கும் போது எப்படி மன நிலையில் இருப்போமோ....அதே மாதிரி நினச்சிக்கனும், அது மட்டும் வெறும் படமாக தெரியுதா ?
:)

//இளைய பல்லவன் said...
அவ்வ்வ்வ்வ்.

வடை பதிவு போட்டுட்டீங்க.

அப்படியே பொண்டா டீ பதிவுகளும் போட்டுட்டீங்கன்னா ஒரு வேல முடிஞ்சுரும்....

இதுக்கு நான் என்ன எதிர்பதிவு எழுதலாம்னு யோசிக்கிறேன்.
//

நீங்க யோசிக்கிறத்துக்குள்ள கிரி அடுத்தப் பதிவு போட்டுவிடுவார், அப்பறம் நானும் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//துபாய் ராஜா said...
//இந்தப் பதிவுக்கும் பதிவர் கிரியின் பெண்களுக்கான உடை அழகு டிப்ஸ்! - இந்தப் பதிவுக்கும் தொடர்பு இல்லை :)//

:)))))

இருந்தாலும் இத்தனூண்டு வடைய வச்சி இம்புட்டு மேட்டர் எழுதியிருப்பது நல்லாதான் இருக்கு.

இங்க எகிப்துல வடை மாதிரியே ஒன்னு 'தமையா'ன்னு சொல்றாங்க.
நல்லா சுவையாத்தான் இருக்கு.
//

துபாய் ராஜா,

எகிப்து தாமையா வடையில் நிஜமாலும் ஆமை கறி இருக்குமா ?

//கிரி said...
எதிர்பதிவு போடுறேன்னு இப்படி வடையை "பஜ்ஜி"யாக்கி வைத்து இருக்கீங்களே! :-)))

அவ்வ்வ்வ்வ்வ்
//

வடை மாவுக்கு பதிலாக கடலை
மாவு மாறிப் போச்சு !

//T.V.Radhakrishnan said...
ஜோதிபாரதி..அனுப்பிய வடை வந்து சேர்ந்தது..(அதை கிள்ளும்போது..)ஊசியும்..நூலையும் வேறு ஏன் அனுப்பினார் எனத் தெரியாததால் அப்படியே வைத்து விட்டேன்
//

டிவிஆர்,
ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் வெளிச்ச பதிவரை ஒரு நாள் பழிவாங்கிடுவோம்

GEETHA ACHAL சொன்னது…

வடையில் இவ்வளவு உள்ளதா?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்