பின்பற்றுபவர்கள்

15 நவம்பர், 2007

நா.கண்ணன் ஐயாவின் - "நாங்கள் ஒரு தலைமுறை பாழாய்ப்போனோம்."

//இந்தியன் என்று சொல்லிக் கொண்டு வெளிநாடு வந்து எல்லோருடனும் கலக்கும் போது இந்திப் பரீட்சியம் என்பது இன்றியமையாதது. முடிந்தால் இந்தி கற்றுக் கொள்ளுங்கள். நாங்கள் ஒரு தலைமுறை பாழாய்ப்போனோம். இந்தியும், ஆங்கிலம் போல் ஒரு மொழிதான். கற்றுக் கொள்ளுங்கள். அப்போதும் இந்தியும், தமிழும் கலந்து பேசாதீர்கள்.

வாழ்க நற்றமிழர். - நா.கண்ணன்//


நா.கண்ணன் ஐயா அவர்களே,

இந்தி வேண்டும்...... இந்தி வேண்டும் ..... தமிழர்கள் இந்தி படிக்க வேண்டும், மீண்டும் இந்தி கட்டாயமாக்கப் பட வேண்டும், இதுபோன்ற குரல்கள் மென்மையாகவும், கோபமாகவும், 'நல்லெண்ண அடிப்படையிலும்' போன்ற பலவழிகளில் அவ்வப்போது வெளிப்படுகிறது. இதற்கு பலரும் பலவழிகளில் பதில் சொல்லியாயிற்று அப்படியும், இதுபோல் எப்போதாவது ஒன்றை யாராவது விதைத்துவிட்டு செல்வார்கள். இவர்கள் வைத்திருக்கும் இந்தி சார்ந்த நம்பிக்கை அல்லது இவர்களுக்கு நம்ம வைக்கப்படது, என்ன வென்றால்

1. இந்தி இந்தியாவின் தேசிய மொழி
2. இந்தி தெரியாதவன் இந்தியன் அல்ல
3. இந்தி பிடிக்காதவன் தேச துரோகி

நா.கண்ணன் ஐயா இதில், நீங்கள் எந்த கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இந்தி தேசிய மொழி கிடையாது, இந்தி சில மாநிலங்களில் அதிகமாக பேசப்படும் ஒரு இந்திய மொழி. வெளி நாடுகளுக்கு வேலைக்குச் செல்கிறவர்களுக்கு ஓரளவுக்கு ஆங்கில அறிவு இருக்கும், எனவே அவர்களிடம் உரையாடுவதற்கு ஆங்கிலத்தை விட இந்தி இயல்பானது என்பதை கண்ணன் ஐயா, எப்படி நம்புகிறீர்கள் என்று தெரியவில்லை. இதையெல்லாம் விட வழக்கமாக சிலர் 'இந்தி படிக்கவிடாமல் பெரியாரும், அண்ணாவும் என் தலையில் மண்ணைப் போட்டுவிட்டார்கள்' என்பதை' வேறு மாதிரி 'நாங்கள் ஒரு தலைமுறை பாழாய்ப்போனோம்' சொல்லி இருக்கிறீர்கள்,

நா. கண்ணன் ஐயா அவர்களே, எந்த விதத்தில் பாழாய் போனோம் ? என்று சொல்லி இருந்தால் எம்போன்ற முட்டாள்களும் தெரிந்து கொண்டு உங்களுடன் சேர்ந்து இந்திக்கு கொடி பிடிப்போம். பொத்தாம் பொதுவாக நாங்கள் 'வீணாப் போனாம், காணாப் போனோம்' என்று சொல்வது எளிது, புழுதி வாரி தூற்றுபவர்கள் இதை செய்வார்கள், நீங்கள் அவ்வாறு செய்பவர் இல்லை என்பதால் விளக்கம் அளித்தீர்கள் என்றால் நன்று. எனக்கும் இந்தி தெரியாது, பல வடநாட்டினர்களை சந்தித்திருக்கிறேன், நான் அவர்களுடன் ஆங்கிலத்தில் பேசுகிறேன், இந்தி படிக்காததால் 'பாழாய் போனதாக நினைத்தது' இல்லை. இப்போது கூட நீங்கள் 'ZEE' டிவி அல்லது எதோ ஒரு இந்தி சானல் தொலைக்காட்சிகளை 3-6 மாதம் பார்த்தீர்கள் என்றால் அப்பறம் அமிதாப்பச்சனுக்கே நீங்கள் இந்தி டூயூசன் எடுக்க முடியும். எனவே அடிப்படை கல்வி வழியாக இலவசமாக கிடைக்க இருந்த இந்தியை படிக்க விடாமால் தடுக்கப்பட்டதால் 'பாழாய் போனோம்' என்பது தவறான வாதமாக படுகிறாது, முமபைக்கு வேலைக்கு செல்லும் பெயிண்டர், கொத்தனார்,
3 மாதத்தில் இந்தி பேச ஆரம்பித்து விடுகிறார்கள், மலாய் என்ற மொழியைப் பற்றி கேள்விப்பட்டிருக்காத தமிழர்கள் மலேசியாவில் வேலைக்குச் சென்றால் 6 மாதம் தான் பேசவும், படிக்கவும். மேலும் அதை யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற நிலையே இல்லாது கற்றுகொள்வர்.

தேவையின் காரணமாக எவர் வேண்டுமானாலும் எந்த மொழியையும் படிக்க முடியும், அல்லது விரும்புவர்கள் முன்கூட்டியே படித்துவிட முடியும். அதற்கு தடையில்லை, ஆனால் உங்கள் கருத்து 'இந்தி படிப்பது என்பது பொதுத் தேவை, தேவை மிக்கது, தவிர்த்தால் எங்களைப் போன்று சிரமப்படுவீர்கள்' என்பது போல் ஒலிக்கிறது. என்றோ ஒரு நாள் ஒரு இந்தி காரனை சந்தித்து 'ஆப்கா நாம் ஹை?' என்று கேட்பதற்கு இந்தி தெரியவில்லை என்றால் சிரமப்படுவீர்கள் என்று சொல்வது மிகைப்படுத்தல்.

வெளிநாட்டை விடுங்கள், இந்தியாவில் மும்பையில் வழக்கறிஞர் பிரபு இராஜதுரை அவர்கள் 6 ஆண்டுகள் இருந்தாராம், ஹிந்தி தெரியததால் இயல்பு வாழ்க்கை பாழாகி விடவில்லை என்று சொன்னார். காமராஜருக்கு இந்தி தெரியவில்லை. ஆனாலும் அவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தார். அவரெல்லாம் பாதிக்கப்படாத போது நீங்கள் 'பாழாய் போனது எப்படி ?' என்று சொன்னால் பலரும் திருந்த வாய்ப்பு உள்ளது

சிங்கைக்கு வேலைக்கு வரும் உடல் உழைப்பு ஊழியர் எவருக்கும் இந்தி தெரியாது, அவர்கள் ஓரளவுக்கு ஆங்கிலம் படித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், அவர்கள் இந்தி அறிந்து வந்து என்ன செய்யப் போகிறார்கள் ? எனக்கு தெரிந்து மற்ற மொழிக்காரர்களை விட தமிழர்களே வெளிநாட்டில் அதிகம் வசிக்கின்றனர், எனவே வெளிநாட்டுக்கு செல்ல விரும்பும் இந்தியர்கள் தமிழ் படிப்பது அவசியம் என்று ஒரு கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதி வடமாநிலத்தில் அதை ஒரு கருத்தாக உங்களால் விதைக்க முடியுமா ?

தமிழ்நாட்டில் இந்தி நுழைந்திருந்தால் நடக்கும் நன்மைகள்,

இந்தி தெரிந்தே பாம்பே மிட்டாய் விற்கிறவர்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள், 'நிக்கிறான், 'உட்கார்ரான்' என்று தட்டு தடுமாறி தமிழ் பேசுகிற சவுக்கார் பேட்டை சேட்டுகளுக்கும் இருக்கிறார்கள் அவர்கள் தமிழ்பேசி சிரமப் பட வேண்டி இருக்காது,

சாருக்கான்களும், சல்மான்கான்களும் சென்னை வீதிகளில் போஸ்டர்களில் சிரிப்பார்கள், காங்கிரஸ் தலைவரோ, வாஜ்பாயோ வணக்கம் என்று தமிழில் தடுமாறிச் சொல்லி புழகாங்கிதம் அடைய வேண்டி இருக்காது.

தமிழ் திரைப்படமோ, தமிழ் தொலைகாட்சிகளோ இந்த அளவுக்கு வளர்ந்து தொல்லைக் கொடுக்காத அளவுக்கு அவற்றை இந்தி தாம் கட்டுக்குள் வைத்திருக்கும்.

***************

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு மொழி உண்டு, அதனால் தான் இந்தியாவை மொழி வாரி மாநிலங்களாக பிரித்திருக்கிறார்கள், காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்தால் இந்தி சுதந்திர போராட்ட காலத்திற்கு முன்பே பல மாநிலங்களில் பரவியது, இஸ்லாமிய படையெடுப்புக்கு பின்னரே, 'இந்தி' என்ற ஒரு மொழி உருது,இந்துஸ்தானி,மற்றும் சமஸ்கிரதம் ஆகியவற்றின் கலவையால் பிற்காலத்தில் எற்பட்ட கலவை மொழி, எழுத்து வடிவமாக சமஸ்கிரத கிரந்த எழுத்துக்களை ஏற்றுக் கொண்டுள்ளது, பாபர் காலத்துக்கு முன்பு 'இந்தி என்ற ஒரு மொழி இருந்தது இல்லை. பாகிஸ்தானில் பேசும் உருதும், இந்தியும் ஒன்று தெரிந்தவர்கள் மற்றதை பேசும் போது புரிந்து கொள்வார்கள். உருதின் எழுத்து வடிவம் அரபு எழுத்துக்கள், இந்தி 'தேசியவாதிகளின்' மொழி ஆதலால் சமஸ்கிரத எழுத்தை கொண்டிருக்கிறது. சிலர் சமஸ்கிரதத்தை இந்தியை வாழவைத்தால் மீட்டுவிடலாம் என்று நம்பிக் கொண்டுள்ளனர். :) அது தவறான நம்பிக்கை. பேசுவதும் வழக்கில் இல்லாததாலும், புதிய ஆக்கங்கள் எதுவும் ஏற்படாததால் சமஸ்கிரத எழுத்தை மட்டுமே காக்க முடியும், மொழியை அல்ல.


தொடர்புடைய மற்ற எனது கட்டுரைகள் :

மொழிவாரி மாநிலங்களும், இந்தி(ய) தேசியவாத பம்மாத்தும் !
அரசியல்வாதிகள் இந்தி படிக்கவிடாமல் செய்துவிட்டனர் !
இந்தி யா ?

32 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

அப்படிப் பார்த்தால் சிங்கையில் சீனர்கள் தான் அதிகம்.. என்னால் அவர்களுடன் சீன மொழியில் பேச முடியவில்லை. சீன மொழி தெரியாததால் இங்குள்ள தமிழர்களும் "ஒரு தலைமுறை பாழாய்ப்போனோம்!!!!". சீன மொழி கற்றுத் தராத திராவிட ஆட்சியாளர்கள் ஒழிக!!!

:)))

jeevagv சொன்னது…

கண்ணன் ஐயா உணர்ந்து சொல்லி இருக்கிறார். நீங்களும் உணரும் நாள் வரும், அப்போது மற்ற அபத்தங்களில் இதுவும் ஒன்றாக சேர்த்துக் கொள்ளலாம். அதுவரை காலத்துக்குள் எல்லாம் அடக்கம் என்று சொல்லிக் கொள்ளலாம்!
:-)

ஜெகதீசன் சொன்னது…

g.k,
மேல கமெண்ட் போட்டது ஜீவி இல்லை ஜீவா!!! :)

jeevagv சொன்னது…

அச்சச்சோ!
ஒரு மாத்திரையில் ஆளையே மாற்றி விட்டீரே...
ஜீவி நானல்ல சாரு!

இப்போது ஆறுதல் கிடைத்ததா?
நான் இளையவன் தான், அவரே மூத்தவர், முதல்வர்!
:-)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜீவா (Jeeva Venkataraman) said...
கண்ணன் ஐயா உணர்ந்து சொல்லி இருக்கிறார். நீங்களும் உணரும் நாள் வரும், அப்போது மற்ற அபத்தங்களில் இதுவும் ஒன்றாக சேர்த்துக் கொள்ளலாம். அதுவரை காலத்துக்குள் எல்லாம் அடக்கம் என்று சொல்லிக் கொள்ளலாம்!
:-)
//

ஜீவா ஐயா,

அவர் உணர்ந்து எழுதினார் என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள் அது போதும். இந்தியில் இனிமேல் உணருவதற்கான தேவை என்று எனக்கு எதுவுமில்லை.

:)

ஜெகதீசன் சொன்னது…

ஹைய்யா!! என் பிளாக் மாறுபட்ட வலைத்தளமா??? :)))))

(புரியல்ல... எல்லாரும் போடுற மொக்கையத் தான நானும் போடுறேன்...)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜீவா (Jeeva Venkataraman) said...
அச்சச்சோ!
ஒரு மாத்திரையில் ஆளையே மாற்றி விட்டீரே...
ஜீவி நானல்ல சாரு!

இப்போது ஆறுதல் கிடைத்ததா?
நான் இளையவன் தான், அவரே மூத்தவர், முதல்வர்!
:-)
//

ஜீவா ஜி,

மயக்க மாத்திரை போலும், அடிக்கடி இப்படி நடந்துவிடுகிறது. அழித்துவிட்டு உங்களுக்கான மறுமொழி இட்டுவிட்டேன். மிக்க நன்றி !

வவ்வால் சொன்னது…

ச்சே ...ச்சே இனிமே இன்னும் ஒரு தலை முறையை பாழாப்போக விடலாமா,

, ஹிந்தி மட்டும் இல்லாமல், ஜப்பான், சீனம், மலாய், தென் ஆப்ரிக்கா போன பேச வசதியாக சூலு, பிலிப்பைன்ஸ் போனா பேச தகலாக், தான்சானியாவில் பேச ஸ்வாஹிலி,அங்கே இருந்து சிக்குன் குனியா வரும் போது அவங்க மொழி வரக்கூடாதானு நாளைக்கு கண்ணன் கேட்டாலும் கேட்பாரே :-))

இப்படி ஒவ்வொரு தமிழனும் குறைந்த பட்சம் ஒரு டஜன் மொழியாவது கற்றுக்கொள்ள வேண்டும், அப்போது தான் பாழாய்ப்போவது தடுக்கப்படும்!

ஹிந்தி தெரிந்தால் வட இந்தியாவில் வேலைக்கிடைக்கும்னா வட இந்தியாவில் வேலை கிடைக்காம வெட்டியா பாதிப்பேர் இருக்காங்களே ஏன்? பிகாரில் தான் அதிக வேலை இல்லாத்திண்டாட்டமா இருக்காம்.அவங்களுக்கு ஹிந்தி தெரியாத என்ன?

ஒரு வேலை ஹிந்தி தெரியாததால் வட இந்திய பெண்களிடம் பேசி நட்பு வளர்க்க இயலவில்லை எனில், அந்த பொண்ணோட அப்பாவிடம் ஹிந்தி படிக்க டூஷன் சேர்ந்தால் கை மேல் பலன் கிடைக்குமே :-))

தற்போதைய நிலவரப்படி ,இப்போ தமிழைக்காப்பாற்ற வேண்டிய நிலையில் இருப்பதை ஏன் கண்டுக்கொள்ள மாட்டேன் என்கிறார் கண்ணன்.

தமிழ் நாட்டில் அரசுப்பள்ளிகளின் எண்ணிக்கைக்கு சற்றும் குறையாத எண்ணிக்கையில் தனியார் கான்வெண்ட்கள் உள்ளது, அங்கு தமிழை ஒரு பாடமாக கூட படிக்காமல், பல லட்சம் மாணவர்கள் இருக்கிறார்கள். விருப்ப மொழியாக ஹிந்தி, ஜெர்மன், பிரெஞ்ச் தான் படிக்கிறார்கள்.(அதற்கு காரணம் அன்னிய மொழியில் படிக்கும் போது, தமிழில் பாலப்பாடம் போல , அம்மொழியின் பால பாடம் தான் , அ,ஆ மட்டுமே படித்து மதிப்பெண்களை வாங்கலாம்)

எனவே தமிழ் இலக்கணம், தமிழ் எழுத்து வடிவம் எதுவும் புரியாமல் வளர்கிறார்கள் நாளைய அவர்களின் சந்ததி எப்படி இருக்கும், அவர்களுக்கு தமிழே ஒரு அன்னிய மொழி ஆகிவிடாதா?

இதை எல்லாம் தடுக்க தனியார் பள்ளிகளிலும் துவக்க வகுப்புகளில் கட்டாயம் தமிழ் போதிக்க வேண்டும் என சட்டமே போட்டுள்ளார்கள் இப்போது. அதற்கு தடை விதிக்க கூட கோர்ட் மறுத்தது என்றால் , தாய் மொழி கல்வி எத்தனை அவசியம் என்பதை புரிந்துக்கொள்ள முடியும்.

ஒரு மொழியைக்கற்க வேண்டிய தேவை ஏற்பட்டால் கண்டிப்பாக கற்றுக்கொள்வான் மனிதன், எனவே திணிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஹிந்தி படங்கள் எடுக்கும் மும்பையிலேயே மராத்தியை படியுங்கள், பேசுங்கள், அவர்களுக்கு முன்னுரிமை தாருங்கள் என்று போராடுகிறார்களே ஏன், தேசிய மொழி தெரிந்தாலே போதும் என அவர்கள் பெருமிதப்பட்டுக்கொண்டு சும்மா இருக்க வேண்டியது தானே!

கோவை சிபி சொன்னது…

past one month i read maximum postings from u.your thoughts are need of the hour.i am doing business with northindian peoples past 7 year.mutually we are very comfortable with english.
sadly ground reality in tamilnadu changing very fast.common people(educated also)doesnt have language concience.self financing schools largely insisting to take hindi as language compulsory.90% of those schools not singing thamizthai valthu,even though its statutory.i wrote several letters to district education officers in this reagrd.this is alarming situation.
good work.continue.
(i am not able to write in tamil.)

TBCD சொன்னது…

தலைமுறை எல்லாம்..ஒன்னும் பாழாய்ப்போகவில்லை..
உங்க தேவைக்கு நீங்க படிக்கனுமின்னா..எப்படி வேண்டுமென்றாலும் படிக்கலாம்..
எங்க பள்ளிகளிலே நீங்க ஹிந்திக் கேட்காத வரை..எங்களுக்கு பிரச்சனை இல்லை..

நான் ஹிந்தி படிச்சிருந்தா நல்லா இருந்திருப்பேன்னு சொல்லூறது...எனக்கு லாட்டரி அடிச்சிருந்தா நானும் கோடிசுவரன்னு சொன்னா எப்படி அபத்தமோ..அப்படிப்பட்ட அபத்தம்....

ஹிந்தி தேசிய மொழி இல்லை என்று தான்..நினைத்து வந்தேன்...வவ்வால்...நீங்க தேசிய மொழின்னு சொல்லுறீங்க...ஏதாவது சுட்டி இருக்கா..

Dr.N.Kannan சொன்னது…

கோவி.கண்ணன்:

எனக்கு இந்தி தெரியாது. அதனால் பாழாய்ப்போனோம் என்று சொல்லவில்லை. எனக்குத் தெலுங்கு கூடத்தான் தெரியாது :-) ஆனால், கற்றுக் கொடுக்கப்பட்ட ஒரு மொழி தடை பட்டுப் போனது. இதன் அரசியலை விட்டு ஒரு மொழி அறிவின் பயன்கள் என்ற காரணத்தால் இதை நோக்கவும். வெளி நாட்டில் வதிக்கும் 90% இந்தியர்களுக்கு இந்தி புரிகிறது. இவர்கள் அனைவரும் உத்திரப்பிரதேசம் அல்ல. ஆனால், நம்மால் மட்டும் இக்கூட்டங்களில் சங்கோஜமின்றிக் கலக்க முடியவில்லை. அவர்களுடன் சேர்ந்து நிகழ்ச்சி நடத்த முடியவில்லை. தமிழ் நாடு மட்டும் தனித்தீவாக நிற்கிறது. எனவே, நான் இந்தியத் தமிழ்நாட்டிற்கு இந்தி மீண்டும் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்ற பெரிய அளவில் பேசவில்லை. வெளிநாடு வருபவர்கள் தங்கள் ஆங்கிலப் புலமையை கூர் தீட்டிக் கொள்ளும் போது கொஞ்சம் இந்தியும் கற்றுக் கொண்டால் நலம் என்று சொல்ல வருகிறேன்.

மற்றபடி, இந்தித் திணிப்பு என்பதில் எக்காலத்திலும் உடன்பட்டவனில்லை. தண்டி யாத்திரை சரித்திரம் ஆனது போல் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்ட தியாகி :-) என்று சொல்லிக் கொள்ளலாம்தான்!

நாகை சிவா சொன்னது…

இந்தி படிச்சு இருந்தாலும் மத்திய அமைச்சர் ஆகி இருந்து இருக்கலாம்( சில காலத்துக்காவது)... அப்படி நினைச்சு சொல்லி இருப்பார்... ;)

பனிமலர் சொன்னது…

பொதுவாக இந்தியர்கள் கூடும் இடத்தில் இந்தி தெரியவில்லை என்றால் நீ எல்லாம் ஒரு இந்தியனா என்று வினவுவர். ஆங்கிலம் உலக மொழி அதிலே கதைக மாட்டார் ஏன் என்றால் அவர் உலகத்தில் இல்லை போலும். இந்தி பேசுபவரின் ஆங்கிலத்தை கேட்டு இருக்கிறீர்களா அப்படியே இந்தியில் பேசுவதை போல் இருக்ககும். எனக்கு இந்தி தெரியவில்லை நான் இந்தியன் இல்லை என்றால் உனக்கு தமிழ் தெரியவில்லை நீயும் இந்தியன் இல்லை என்று சொல்லிவிட்டு போகவேண்டியது தானே. பக்கத்தில் இருக்கும் தெலுகு, மலையாளம், கன்னடம் தெரியாது இதிலே எங்கோ இருக்கும் இந்தியை தேடி பிடித்து கத்துக்கொண்டு இவனுக்காக நான் பேச வேண்டுமாம். என்ன ஆசை பார்தீர்களா இவனுக்கு.

இந்தி தெரிந்தால் தான் உங்களோடு எல்லாம் பேசுவோம் என்றால் தமிழ் தெரியாத உன்னோடெல்லாம் பேச நாங்களும் தயாரில்லை. உங்கள் இந்தியை கட்டிக்கொண்டு நீங்களே அழுங்கள்.

ஜமாலன் சொன்னது…

கோவி இது நீங்கள் இடும் 3 வது பதிவு. அப்பதிவில் ரதணேஷ்கூட 5 ஆழ்ந்த கருத்தக்களை சொல்லி உள்ளார்.

இங்கு வவ்வால்கூட ஒரு முக்கியப் பிரச்சைனையை முன்வைத்துள்ளார். தமிழை காப்பதற்கே இனி போராட வேண்டிய நிலை.. இதில் இந்தி என்பது ஒரு பழைய வாதமாகி விட்டது. புதிய தலைமுறை அந்த கண்ணோட்டத்தில் இல்லை.

எனது வளைகுடா பற்றிய பதிவில்கூட இப்பிரச்சனைப்பற்றி பேசி உள்ளேன். வெளிநாடுகளில் பணியாற்றுபவர்கள் இதுபோன்ற வாதங்களை எதிர்கொள்கிறார்கள். யதார்த்ததை அல்ல.

covi என்கிற நண்பர் இதனை யதார்த்தமாக முன்வைத்தள்ளார். இந்தி என்பது ஒரு மொழியாக கட்டமைக்கப்பட்டது பற்றிய உங்கள் குறிப்புகள் வரலாற்றுப்பூர்வமானவை. இதனை ஒரு ஆதிக்க மொழியாகவும் தேசிய மொழியாகவும் கட்டமைக்கும் முயற்சி உயர் வர்க்க சமஸ்கிருத மயமாதலின் அரசியல்தான். அதாவது இந்து - இந்தி - இந்தியா. அதையும் நீங்கள் நுட்பமாக சுட்டிக் காட்டியுள்ளீர்கள்.

மற்றொரு கோணத்தில் பிரச்சனையை அனுகும் முக்கியமான பதிவு.. பாராட்டுகள்.

லக்கிலுக் சொன்னது…

ஜமாலன் சொல்வதிலிருந்து முக்கியமான ஒரு கருத்தினை உணரமுடிகிறது. இனி தமிழர்கள் இந்தி திணிப்பு எதிர்ப்பை விட்டு விட்டு தமிழ்மொழி காக்கும் போராட்டங்கள் நடத்தவேண்டிய நிலை வந்திருக்கிறது :-(

Unknown சொன்னது…

நா.கண்ணன் said ...//ஆனால், நம்மால் மட்டும் இக்கூட்டங்களில் சங்கோஜமின்றிக் கலக்க முடியவில்லை. //

:-))

கண்ணன்,
இது உங்களின் தாழ்வு மனப்பான்மை.
எனக்கு ஜப்பானிய மொழி தெரியாது. அதற்காக அவர்களின் கூட்டங்களில் நான் சங்கோஜப்பட்டது இல்லை.

எனக்கு தெரியாது என்பதை சத்தமாகவே கூறுவேன்.

உங்களுக்கு ஒரு 5 மொழி தெரியும் என்று வைத்துக் கொள்வோம். தன்னம்பிக்கை இல்லையென்றால் அந்த 5 மொழி பேசும் கூட்டங்கள் தவிர்த்து எந்த கூட்டத்திலும் சங்கோஜம்தான்.

நன்றாக ஹிந்தி படித்த பிறகு அவர்களின் கூட்டங்களுக்குப் போகவும்.சங்கோஜம் விலக வாய்ப்பு உள்ளது.

//கற்றுக் கொடுக்கப்பட்ட ஒரு மொழி தடை பட்டுப் போனது. //

:-))

சம்ஸ்'கிரகம்' கூடத்தான் கற்றுக்கொடுக்கப்பட்டதாம். அது தெரியாமல் "இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்" என்று எழுதியிருப்பதைப் படித்து தமிழில் அர்ச்சனை செய்யச்சொன்னால் சங்கோஜமாகவே இருக்கும். எனவே சம்ஸ்'கிரகத்தையும்' படித்துக் கொள்ளுங்கள்.


tbcd...said
//ஹிந்தி தேசிய மொழி இல்லை என்று தான்..நினைத்து வந்தேன்...வவ்வால்...நீங்க தேசிய மொழின்னு சொல்லுறீங்க...ஏதாவது சுட்டி இருக்கா..
//

இந்தியாவில் national language (தேசிய மொழின்னு) ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. எல்லாம் officila language தான். அதுவும் மாநில அரசாங்கம் நினைத்தால் நரிக்குறவர் மொழியைக்கூட அவர்கள் மாநிலத்திற்கு officila language ஆக வைத்துக் கொள்ளலாம்.

ஹிந்தி நேசனல் லாங்குவேஜ் என்பது உண்மையல்ல.

THE CONSTITUTION OF INDIA
PART XVII
OFFICIAL LANGUAGE
(பி.கு:
CONSTITUTION OF INDIA வின் வேறு எந்தப் பிரிவிலும் தேசிய மொழி பற்றி இருப்பதாகத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது.)

PART XVII
OFFICIAL LANGUAGE
CHAPTER I.—LANGUAGE OF THE UNION

343. Of f icial language of the Union.—(1) The official language of the
Union shal l be Hindi in Devanagar script .


http://india.gov.in/
Home > Government > Constitution of India : English Version

டிஸ்கி:
இந்தி என்பது ஒரு மொழி என்ற அளவில் கற்றுக் கொள்வது நல்லதுதான். எந்த மொழியாக இருந்தாலும்.

ஆனால்...

1.நான் பூட்டேன் நீயும் நாசமாப் பூடுவே

2.அதுதான் தேச்சிய மொலி படிச்சுக்க.

3.கிந்தி தெரியாம நார்த்துல நாரிப்பூடுவ

போன்ற ஜல்லிகள் வேண்டாம் கண்ணன் ..ப்ளீஸ்

வவ்வால் சொன்னது…

கல்வெட்டு,

ஆகா என்ன இத்தனை தெளிவா இருக்கிங்க! , நான் எங்கே ஹிந்தி தேசிய மொழி என்று நிறுவ முயன்றேன், தேசிய மொழி என்று சொல்லிக்கொண்டு படிக்க சொல்கிறார்களே அப்படி எனில், மகாராஷ்டிரர்கள் ஏன் ஹிந்தி போதும் என்று இருக்காமல் , மராத்தி படிக்க, பேச போராடுகிறார்கள் என்று கேட்டு இருக்கிறேன்.

ஹிந்தி அவசியம் படிக்க வேண்டும் என்று சொல்வது தேவையற்றது என்று அவ்வளவு நீளமாக சொல்லி இருக்கேன் அதை எல்லாம் விட்டு விட்டு கடைசியில் சொன்ன அந்த ஒரு வரி அதுவும் வேறு பொருளில் வருவதை எடுத்துக்கொண்டு விட்டீர்களே, கொஞ்சம் முழுசா படிங்க என் பின்னூட்டத்தை!

பிழை இல்லாமல் தமிழ் எழுத படிக்க ,அனைவருக்கும் சொல்லித்தர வேண்டும், தற்போதைய காலக்கட்டத்தில் தமிழ் மாசு படும் நிலையில் உள்ளது எனவே சிறப்பு கவனம் தமிழ் மீது செலுத்த வேண்டும் என்பதே எனது கருத்து.

ஜமாலன் சொன்னது…

//லக்கிலுக் said...
ஜமாலன் சொல்வதிலிருந்து முக்கியமான ஒரு கருத்தினை உணரமுடிகிறது. இனி தமிழர்கள் இந்தி திணிப்பு எதிர்ப்பை விட்டு விட்டு தமிழ்மொழி காக்கும் போராட்டங்கள் நடத்தவேண்டிய நிலை வந்திருக்கிறது :-( //

லக்கி இதில் ஒன்னும் உள்குத்து இல்லையே. என்ன ரொம்ப அப்பிரானியா வளர்த்துட்டாங்க.
":-(" - இதன் பொருள் என்ன? வலைப்பதிவின் இந்தவகை குறியீடுகளின் அர்த்தம் புரியவில்லை.

ஆனாலும், இன்று தமிழ் அழியக்கூடிய மொழிப்பட்டியலில் இருப்பது நமக்கு ஐ.ந. ஆவால் தரப்பட்டிருக்கும் அபாய எச்சரிக்கை.

kaialavuman சொன்னது…

கண்ணன், நான் டில்லியில் சுமார் 18 வருடங்களாக இருக்கிறேன். எனக்கு முதலில் ஹிந்தி தெரியாது. முதல் மூன்று மாதங்களில் பேசக் கற்றேன். இப்போது flueந்ட்‍ஆக பேச, படிக்க, எழுத தெரியும். எனவே தேவை இருந்தால் கற்றால் போதும். தெரிந்து கொள்வதில் தவறில்லை. ஆனால், படிக்காத்தால் பாழாய் போனோம் என்பது தவறு. வேண்டுமானால் இப்போது படிக்கலாமே. தடுப்பவர் யார்?

மற்றபடி இப்போது தமிழ், தமிழகத்தை விட வெளியில் தான் நன்றாக உள்ளது என்பதை தமிழ் ஊடகங்களை பார்த்தாலே தெரியும். அதை தான் நாம் முதலில் சீர் செய்ய வேண்டும்.

Unknown சொன்னது…

வவ்வால்,
இது உங்களுக்கான விடையல்ல :-))

TBCD உங்களின் பின்னூட்டத்தைப்படித்து // ஹிந்தி தேசிய மொழி இல்லை என்று தான்..நினைத்து வந்தேன்...வவ்வால்...நீங்க தேசிய மொழின்னு சொல்லுறீங்க...ஏதாவது சுட்டி இருக்கா..// என்று கேட்டதாலும் , அவரைப்போல் பலரும் இதை தேசிய மொழி என்று இன்னும் நம்புவதாலும்... பல இடங்களில் ஏற்கனவே நான் சொன்னதை மறுபடியும் எடுத்துப் போட்டேன்.

**

மேலும் "படிக்காட்டி வெளங்கமாட்ட" என்ற ரீதியில் நா.கண்ணன் சொன்னதற்கும் சேர்த்து ஒரு எதிர்வினையாக சொன்னேன்.

RATHNESH சொன்னது…

கல்வெட்டு சார் சொல்லி இருப்பதைப் படித்த பிறகு தான் கண்ணன் அவர்களின் உணர்வு புரிந்தது.

தமிழனுக்கு மட்டும் தான் மொழி தெரியாத இடத்தில் இருப்பது சங்கோஜமாக இருக்கிறது. வேறு எந்த மொழிக்காரரும் தனக்குத் தெரியாத மொழிக்காரர்களின் மத்தியில் அவஸ்தையாக உணர்வதில்லை. வடக்கே அந்தந்த மொழிக்காரர்களின் சமாஜங்கள் ஏதாவது பண்டிகை / பூஜை / விழா நடத்தினால் எல்லா மொழிக்காரர்களும் தத்தமது குடும்பத்தோடு சந்தோஷமாகக் கலந்து கொள்வார்கள். (அவர்களின் குடும்பத்தார் எவரும் பன்மொழிப் புலவர் அப்பாதுரையின் வாரிசுகள் அல்லர்). தமிழர்கள் மட்டுமே மனைவியரை வீட்டில் விட்டு விட்டுத் தனியாக வருவார்கள். கேட்டால் "மொழி தெரியாமல் சங்கோஜப் படுவாள்" என்று மனைவி சார்பில் இவர்களே சொல்வார்கள். முடிந்தால் இவர்களுமே (அழைப்பின் பேரில் கூட) பிறமொழிக்காரர்களின் கூட்டத்திற்குச் செல்வதைத் தவிர்த்து விடுவதைக் கண்டிருக்கிறேன்.

கண்ணன் சார், மனதைத் தொட்டுச் சொல்லுங்கள், தங்களுக்கு ஆங்கிலம் தெரிகிறது என்பதனால் ஆங்கிலேயர்களின் வீட்டு விசேஷங்களில் சென்று சகஜமாகக் கலந்து பழகி இருக்கிறீர்களா? மனம் கலப்பதற்கு மொழி இரண்டாம் பட்சமான ஒன்றுதான். நமது வீட்டு விழாக்களுக்கு வரும் மாற்று மொழிக்காரர் தமிழைத் தவறாகப் பேசினாலோ தமிழ் தெரியாமல் திணறினாலோ நாம் கேவலமாக ஒதுக்குகிறோமா? அதைப்போல் தானே மற்றவர்களும் இருப்பார்கள்?

பதினாறு மொழி தெரிந்த நரசிம்மராவ் எதாவது மொழியில் பேசி இருக்கிறாரா? அவரைப் பார்த்த பிறகுமா மொழி பற்றி காம்ப்ளக்ஸ்?

ரூபஸ் சொன்னது…

காரசாரமான விவாதம்..

oru Elaththu thamilan சொன்னது…

இந்தித் திணிப்பாளருக்கு பலதடவை பலராலும் பதில்கள் சொல்லப்பட்டாலும் விவாதம் தொடர்கிறது. இலங்கையிலும் கட்டாய சிங்களத் திணிப்பு 1958இல் சட்டமாக்கப்பட்டதன் விளைவுதான் ஈழ நெருக்கடி. இலங்கை அரசு ஒருபடி மேலே சென்று சிங்கள மொழி தேர்ச்சி பெறாத பல தமிழர்களை பணி நீக்கம் செய்தது.
அசல் தமிழ் கிராமத்தில் பணியாற்றிய காவலாளிக்குகூட விதிவிலக்களிக்கப்படவில்லை.

ஆனால் எந்தவொரு சிங்கள ஊழியரும் தமிழ் படிக்கவேண்டும் என இலங்கை அரசோ அல்லது சிங்கள அறிவாளிகளோ திருவாய் மலரவில்லை.

நாம் அடிமைகளாக இல்லாவிட்டாலும் பெரும்பாண்மை இனத்தின் சேவகர்களாகவே
நீண்டகாலமாக தமிழர்கள் வாழ்கின்றார்கள். சோழருக்குப் பின்னர் தமிழர்கள் கட்டளையிட்டு ஆட்சி செய்யவில்லை.


மத்திய கிழக்கில் பணியாற்றும் படிப்பறிவில்லாத பணிப்பெண்கள் அரபு பேசுகின்றார்கள்.
உலகில் பரந்து வாழும் ஈழத் தமிழர்கள் பல நாட்டு மொழிகளை புலம் பெயர்ந்த பின்னர்தான் கற்றார்கள்.

யார் யார் எங்கே பணிபுரிவோம் எனத் தெரியாத காலம் இது.

டாக்டர் கண்ணன் ஐயா அவர்களே! நீங்கள் கொரியாவில் பணிபுரிகின்றீர்கள்.
கொரிய மொழி படித்த பின்னர்தானா கொரியா பயணமானீர்கள்?ஒரு ஈழத்து தமிழன்

oru Elaththu thamilan சொன்னது…

இந்தித் திணிப்பாளருக்கு பலதடவை பலராலும் பதில்கள் சொல்லப்பட்டாலும் விவாதம் தொடர்கிறது. இலங்கையிலும் கட்டாய சிங்களத் திணிப்பு 1958இல் சட்டமாக்கப்பட்டதன் விளைவுதான் ஈழ நெருக்கடி. இலங்கை அரசு ஒருபடி மேலே சென்று சிங்கள மொழி தேர்ச்சி பெறாத பல தமிழர்களை பணி நீக்கம் செய்தது.
அசல் தமிழ் கிராமத்தில் பணியாற்றிய காவலாளிக்குகூட விதிவிலக்களிக்கப்படவில்லை.

ஆனால் எந்தவொரு சிங்கள ஊழியரும் தமிழ் படிக்கவேண்டும் என இலங்கை அரசோ அல்லது சிங்கள அறிவாளிகளோ திருவாய் மலரவில்லை.

நாம் அடிமைகளாக இல்லாவிட்டாலும் பெரும்பாண்மை இனத்தின் சேவகர்களாகவே
நீண்டகாலமாக தமிழர்கள் வாழ்கின்றார்கள். சோழருக்குப் பின்னர் தமிழர்கள் கட்டளையிட்டு ஆட்சி செய்யவில்லை.


மத்திய கிழக்கில் பணியாற்றும் படிப்பறிவில்லாத பணிப்பெண்கள் அரபு பேசுகின்றார்கள்.
உலகில் பரந்து வாழும் ஈழத் தமிழர்கள் பல நாட்டு மொழிகளை புலம் பெயர்ந்த பின்னர்தான் கற்றார்கள்.

யார் யார் எங்கே பணிபுரிவோம் எனத் தெரியாத காலம் இது.

டாக்டர் கண்ணன் ஐயா அவர்களே! நீங்கள் கொரியாவில் பணிபுரிகின்றீர்கள்.
கொரிய மொழி படித்த பின்னர்தானா கொரியா பயணமானீர்கள்?ஒரு ஈழத்து தமிழன்

கோவி.கண்ணன் சொன்னது…

பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நன்றி, திரு கண்ணன் ஐயா சிறந்த தமிழ்பற்றாளர் என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது என்ற அளவில் பின்னூட்டம் அளித்ததற்கு நன்றி. அவர் குறிப்பிட்டிருந்த 'இந்தி தெரியாததால் பாழாய் போனோம்' என்ற செய்திதான் இப்பதிவை எழுதத்தூண்டியது. அவரது இந்த கருத்து அவரது தமிழ்பற்றிற்கான அளவு கோள் அல்ல. இந்தி ஆதரவாளர்களின் ஒருபக்க கருத்தை அதிகம் படித்து வந்திருப்பார் என்று மட்டும் கருதுகிறேன். பலர் கூறியது போல் எந்த நாட்டிற்கு சென்றாலும் அவர்களுடைய மொழி தெரியவில்லை என்பதற்கு நாம் வெட்கப்படத் தேவை இல்லை. இந்தியாவிற்குள்ளும் ஆந்திராவில் இந்தி தெரிந்து வேலை பார்கும் தமிழர்கள் தமக்கு தெலுங்கு தெரியாததால் இந்தி தெரியாத தெலுங்கர்களிடம் பேச முடியவில்லை என்று நினைத்து 'பாழாய் போனதாக சொல்ல மாட்டார்கள். இந்திவெறியர்கள் தமிழர்களுக்கு இந்தி தெரியவில்லை என்ற ஏளனத்துக்கு ஆளாகி இருந்து அதனை பெரிதாக எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

அரை பிளேடு சொன்னது…

தமிழர்கள் எல்லாரும் கட்டாயம் தமிழை படிக்கணும்.

அப்பாலிக்கா வோணா வேணும்ன்றவங்க வேணும்ன்ற லாங்குவேஜை எக்ஸ்ட்ராவா கத்துக்கட்டும். அது இந்தியா இருந்தாலும்சரி இல்லை சிந்தியா இருந்தாலும் சரி :))

குமரன் (Kumaran) சொன்னது…

இந்த இடுகையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் எனக்கும் உள்ள கருத்துகள் என்பது உங்களுக்குத் தெரியும் கோவி.கண்ணன். ஆனால் பின்னூட்டங்கள் நீங்கள் அடிக்கோடிட்ட கண்ணன் ஐயாவின் கருத்தினை மட்டுமே வைத்து கண்ணன் ஐயாவைப் பற்றிய தவறான புரிதல் கொள்கின்றனவோ என்ற ஐயம் ஏற்பட்டது. கண்ணன் ஐயாவின் இடுகைகளைத் தொடர்ந்து படித்து வருபவன் என்ற முறையிலும் அவரது தமிழ்த் தொண்டினை பல இணைய இலக்கிய வட்டங்களிலும் மதுரைத்திட்டத்திலும் பல முறை கண்டவன் என்ற முறையிலும் அந்தத் தவறான புரிதலைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று இன்று வந்தேன். நீங்களே ஐயாவின் தமிழ்ப்பற்றைப் பற்றியும் கூறிவிட்டீர்கள். மிக்க நன்றி.

PRINCENRSAMA சொன்னது…

//தமிழ்நாட்டில் இந்தி நுழைந்திருந்தால் நடக்கும் நன்மைகள்//

இதுதாங்காணும் கட்டுரைக்கே மெருகு...அருமையான பதில்... இவரு மட்டுமில்ல... இன்னும் பல அரைகுறைகளும் இப்படித்தான் சொல்லிக்கிட்டு திரியுதுகள்!

குல்பி வாங்கித் திங்கிறதுக்காக நாங்கள்லாம் இந்தி படிக்க முடியாது.
(அரைகுறைகள் என்ற சொல்லில் த்ரு நா.கண்ணன் அவர்களை நான் நுழைக்கவில்லை. ஏனெனில் அவரைப்பற்றி எனக்குத் தெரியாது. அவர் அறியாமையில் கூட சொல்லியிருக்கலாம்.)

கொண்டோடி சொன்னது…

ஜமாலன்,

நகைக்குறிகள் வரும்போது தலையை இடப்பக்கம் சாய்த்துப் பார்க்கவும்.
;-)
மேலுள்ளதை தலையை இடப்பக்கம் சாய்த்துப் பார்த்தால், ஒருவர் மெலிதாகச் சிரிப்பது போலத் தெரிகிறதா? (அரைப்புள்ளி கண்களையும் இடைக்கோடு மூக்கையும் அடைப்புக்குறி வாயையும் குறிக்கும்)
;-))
இப்போ வாய்திறந்து சிரிப்பது தெரிகிறதா?
;-D
இதுவும் கொஞ்சம் பெரிய சிரிப்புத்தான்.

;-(
இப்போ ஏதோவொரு கவலையோடு இருப்பது போல் தெரிகிறதா?

;-((
ரொம்பக் கவலையோட இருக்கிறது தெரியுதா?

;-O
வாயைத்திறந்து 'ஓ'வென ஆச்சரியப்படுவதாகத் தெரிகிறதா?

_/\_
மேலுள்ளதை தலையைச் சரிக்காமல் நேராகப் பார்த்தால் இருகை கூப்பி வணக்கம் கூறுவதைப்போலுள்ளது.

இவை அடிப்படையானவை.
இப்படி இன்னும் சில இருக்கின்றன.
அதிகம் பயன்படுத்தப்படுபவை, தலையை இடப்பக்கம் சாய்த்துப் பார்க்க வேண்டியவை.

*** அதிகநேரம் தலையைச் சாய்த்து வைத்திருக்காதீர்கள்.

சிறுபத்திரிகையில் இவற்றையெல்லாம் பயன்படுத்துவதில்லையா?
வலைப்பதிவில் இந்த நகைப்பான்களின் பொருள் விளங்காமல் பதிவையோ பின்னூட்டத்தையோ சரியாகப் புரிந்துகொள்ள முடியாது.

Bruno_புருனோ சொன்னது…

A related post

http://bruno.penandscale.com/2006/01/importance-of-education.html

கோவி.கண்ணன் சொன்னது…

//Doctor Bruno said...
A related post

http://bruno.penandscale.com/2006/01/importance-of-education.html
//

Doctor Bruno,

I read that post. the points that you mentioned are well and appriciated.

thank you !

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
இந்த இடுகையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் எனக்கும் உள்ள கருத்துகள் என்பது உங்களுக்குத் தெரியும் கோவி.கண்ணன். ஆனால் பின்னூட்டங்கள் நீங்கள் அடிக்கோடிட்ட கண்ணன் ஐயாவின் கருத்தினை மட்டுமே வைத்து கண்ணன் ஐயாவைப் பற்றிய தவறான புரிதல் கொள்கின்றனவோ என்ற ஐயம் ஏற்பட்டது. கண்ணன் ஐயாவின் இடுகைகளைத் தொடர்ந்து படித்து வருபவன் என்ற முறையிலும் அவரது தமிழ்த் தொண்டினை பல இணைய இலக்கிய வட்டங்களிலும் மதுரைத்திட்டத்திலும் பல முறை கண்டவன் என்ற முறையிலும் அந்தத் தவறான புரிதலைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று இன்று வந்தேன். நீங்களே ஐயாவின் தமிழ்ப்பற்றைப் பற்றியும் கூறிவிட்டீர்கள். மிக்க நன்றி.
//

குமரன்,

மதிப்புக்குரியவர்களை மதிக்கத் தவறியதில்லை. குறிப்பிட்டு பாராட்டியதற்கும் நன்றி.

நா.கண்ணன் ஐயாவுக்கு நான் அந்த மாதிரி இல்லைப் போல, என் பெயரை ஒரு கோழி கிறுக்கியதை அனுமதித்து இருக்கிறார். வாழ்க !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்