பின்பற்றுபவர்கள்

27 ஜூலை, 2009

தீர்ப்பு நாள் !

'கலி முத்திடுத்து, கல்கி வரப்போறான்', 'ஜீஸஸ் வருகிறார்', 'இஸ்லாமியர்கள் குறிப்பிடும் 'தீர்ப்பு நாள்' - இவையெல்லாம் உண்மை தானோ ? என்று நினைக்கும் படி அன்று காலை அலுவலக கணனியில் திடிரென்று தனி திரையாக வெளிப்பட்ட செய்தி அதிர்ச்சிக்குள்ளாக்கியது

"நாளை க்ரீன்விச் நேரம் காலை 11.00 மணிக்கு மிகப் பெரிய எரிகல் ஒன்று பூமியைத் தாக்குகிறது, ஒளியின் வேகத்திற்கு சற்று குறைவாக எரிகல் பூமியை நோக்கி வருவதால் முன்கூட்டியே நாசா விஞ்ஞானிகள் கணிக்க தவறிவிட்டனர்... எரிகல் தாக்கினால் அப்போது பூமியில் ஏற்படும் வெப்பம், பூகம்பம், சுனாமி ஆகியவற்றால் பூமியின் உயிரனங்கள் அழிந்துவிடும் என்று ஊகிக்கப்படுகிறது, பொதுமக்கள் உடனடியாக தங்கள் உறவினர்களிடம் சென்று சேர்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்...வீடுகளை விட்டு திறந்த வெளியில் அமர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்"

படித்து முடித்ததும் வியர்த்தது, உடலெங்கும் நடுங்கியது,அடுத்த சில வினாடிகளில் அலுவலகம் எங்கும் கூச்சல் குழப்பம், அலுவலகத்துக்கு வெளியே வாகனங்கள் சீறிச் செல்லுகின்ற ஓசை. அலுவலகத்தின் ஒவ்வொருவரும் அழுகை வெடிப்புடன், பயத்துடன், பரபரப்பாக வீட்டுக்குக்கு கிளம்பிக் கொண்டு இருந்தனர்.

திடிரென்று மின்சாரமும் நின்றுவிட்டது, ஒருவேளை மின்சார ஊழியர்களும் அப்படியே விட்டுவிட்டு வீட்டுக்கு கிளம்பிவிட்டார்களோ, ஒருவருக்கு ஒருவர் பேசும் நிலையிலோ, ஆறுதல் கூறும் வழிவகைகளோ இல்லை, 'ஐயோ.....பசங்களை ஸ்கூலில் இருந்து கூட்டிவருனுமே...'......வீட்டுக்கு உடனே போகனுமே' என்பதாக திருமணம் ஆனவர்கள் பரபரத்துக் கொண்டே ஓடிக் கொண்டு இருந்தனர். நானும் அதே காரணங்களினால் நானும் இறங்கி ஓடினேன். மின்சாரம் இல்லாததால் மின் தூக்கிகள் இயங்கவில்லை, பத்து மாடி இறங்குவதற்குள் மூச்சு வாங்கியது, நான்காவது மாடியில் லிப்டுக்குள் சிக்கியவர்களின் உதவி கேட்கும் பெரும் குரல், யாருக்கும் கேட்டும் கேட்காதது போல் ஓட...நானும் படியில் இறங்கி ஓடிக் கொண்டு இருந்தேன். எப்படி வீட்டுக்குச் செல்வது, வழி தெரியும், தொலைவு 15 கிமீ......ஓடிச் சென்று விட வேண்டியது தான்.

அலுவலக கட்டிடத்தை விட்டு வெளியே வந்து பலருடன் ஓடிக் கொண்டு இருந்தேன். அவசரத்தில் அலுவலகத்தில் சாவியை வைத்துவிட்டு வந்துவிட்டேன்......சாப்பிடக் கூட ஒண்ணும் எடுக்க முடியாதே....என்ன பண்ணுவது என்று தெரியவில்லை என்று அழுது கொண்டே ஒருவர் ஓடிக் கொண்டு இருந்தார். மின் சாரம் இல்லாததால் நின்று போன போக்குவரத்து விளக்குகள், அவசரத்தில் கடக்கும் வாகனங்கள் ஒன்றை ஒன்று முட்டி மோதிக் கொண்டு இருந்தன. சாலை எங்கும் வாகன இறைச்சல், டமால் டாமல் என்று மோது சத்தம், ரத்த வெள்ளத்தில் பலர். போக்குவரத்து நின்று போனதால் காரில் இருந்து இறங்கி பலர் ஓடிக் கொண்டு இருந்தார்கள்.

தண்ணீர் தண்ணீர் என்று பலர் கத்திக் கொண்டே ஓடிக் கொண்டும் சிலர் மயங்கி விழுந்து கொண்டும் இருந்தார்கள். விழுபவர்களைப் பார்த்தாலும் யாரும் நின்று உதவுவதற்குத் தயாராக இல்லை, அவர்கள் எண்ணமெல்லாம் வீட்டிற்கு விரைவாகச் சென்று குழந்தைகளை பெரியவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் இறுதி நேரத்தில் அன்புக்குரியவர்களிடம் இருக்க வேண்டும் என்பதாக இருந்தது.

இரயில் நிலையத்தை தொடும் தொலைவில் பெரிய தொரு மேம்பாலத்தில் ரயில் பாதியில் நின்று கொண்டிருக்க, ட்ரைவரும் அப்படியே நிறுத்தி விட்டு ஓடி இருக்க வேண்டும் என்று புரிந்தது, பலர் ரயில் டிராக்கில் ஒருவரை ஒருவர் கீழே தள்ளிவிட்டுவிட்டு ஓடிக் கொண்டு இருந்தனர். அங்கும் ஒரே ஓலம். சிலர் மேம்பாலத்தில் இருந்து குதித்துக் கொண்டு இருந்தார்கள். 'நாளை காலைதானே பொருமையாக வீட்டுக்குச் சென்றிருக்கலாமே ஏன் எல்லோரும் இப்படி அவரப்பட்டுவிட்டார்கள், கடவுளே இன்னும் எவ்வளவு தூரம் தான் ஓடுவது, தண்ணீர் தாகம், எதிரே கிழே விழுந்து கிடந்தவரின் அருகே பையில் தண்ணீர் பாட்டில் எட்டிப்பார்க்க எடுத்துக் குடித்துக் கொண்டே ஒட்டிக் கொண்டு இருந்தேன். தண்ணீர் தாகம் நிற்கவே இல்லை. சாலை எங்கும் ஓடுபவர்களின் பேரிரைச்சல், கூச்சல், அழுகை, கடவுளைத் திட்டிக் கொண்டும், காப்பாற்றும் படியும் வேண்டிக் கொண்டு ஓடிக் கொண்டு இருந்தார்கள், அல்லா, ஜீஸஸ், முருகா, பெருமாளே காப்பாற்று காப்பாறு என்ற வேண்டுதல்களுடன் ஓடிக் கொண்டும், முடியாததால் நிற்கவும் முடியாமல் மெதுவாக முகத்தில் அசதி தெரிந்தாலும் முனுகியபடி நடந்து கொண்டிருந்தனர்,

அங்கங்கே எங்கும் வாகனங்கள் உறுமிக் கொண்டு நின்று கொண்டும், ஒன்றை ஒன்று மோதிக் கொண்டு, அதில் சில எரிந்து கொண்டும் இருந்தன. அங்கங்கே சிதறிக் கிடந்த சில்லரைகளையும், பணத்தையும், இறந்தவர்களின் கழுத்தில் இருக்கும் நகைகளையும் யாரும் கண்டு கொள்ளாமல் ஓடிக் கொண்டே இருந்தனர்.

மேலே ஹெலிக்காப்டர் சத்தம், ஒரு சில ஹெலிக்காப்டர்கள் வட்டமிட்டபடி துண்டு சீட்டுகளை வீசியது, எடுத்துப் படித்தேன் 'பொதுமக்கள் பீதி அடையாமல் பொறுமையாக செல்லும் படி அறிவிப்பு' இருந்தது, எதும் உதவி கிடைக்குமா என்று எதிர்பார்ப்புடன் இருந்தவர்கள் மட்டும் எடுத்துப் படித்துவிட்டு வீசி எறிந்து நடந்து கொண்டிருந்தார்கள். ஒரு 4 கிலோ மீட்டர் நடந்திருப்பேன், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களில் சிலர் பெரிய திடல் ஒன்றில் கூச்சல் குழப்பத்துடன் கூடி இருந்தார்கள். ஐயோ நான் வீட்டுக்குச் செல்ல இன்னும் 9 கிலோ மீட்டர் நடக்கனும், தாங்க முடியாத கால்வலி..........என்னால் முடியல.......நானும் கீழே விழப் போகிறேன். என்னால முடியல...ஒவ்வொரு அடியும் 100 கிலோ எடையை தலையில் ஏற்றியது போன்ற அவஸ்தையுடன் எடுத்து வைப்பதாகவே இருந்தது......'என்னால முடியல.......கால் வலிக்கிறது....முடியல.......எனக்கு மயக்கம் வருவது போல் இருந்தது.......அப்படியே கிழே விழுந்துவிட்டேன்'

முகத்தில் யாரோ தண்ணீர் தெளித்தார்கள், வீட்டுக்குப் போகனும்.......நடக்கனும் நடக்கனும்.......என்று எழ முயன்றேன்

*****

"கட்டிலில் இருந்து தவறி விழுந்திட்டிங்க......எழுப்பி எழுப்பிப் பார்தேன்...மயக்கமாக இருந்திங்க......எழுந்திருங்க காலை 7 மணி ஆச்சு ....அலுவலகம் கிளம்புங்க" லேசான பதட்டத்துடன் கவலையுடன், மனைவியின் குரல்.

ஆழப் பெருமூச்சு வந்தது..........அப்படின்னா கண்டதெல்லாம் கனவா ?

(மதவாதிகள் அது பற்றி சிறிதும் கற்பனை இன்றி சொல்லும் உலகம் அழிவு ... என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன்....நம்ம கற்பனையைவிட அப்படி ஒரு நிகழ்வு நடந்தால் .... அது இன்னும் மோசமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்)

15 கருத்துகள்:

cheena (சீனா) சொன்னது…

வேண்டாம் கோவி

தேவை இல்லாத கற்பனை

பல சமயங்களில் கிளம்பும் பீதியை விட விளைவுகள் மோசமானதாக இருந்தது இல்லை. கவலை வேண்டாம்

கோவி.கண்ணன் சொன்னது…

//cheena (சீனா) said...

வேண்டாம் கோவி

தேவை இல்லாத கற்பனை

பல சமயங்களில் கிளம்பும் பீதியை விட விளைவுகள் மோசமானதாக இருந்தது இல்லை. கவலை வேண்டாம்

12:33 AM, July 27, 2009//

:) தீர்ப்பு நாள் பற்றி மதங்கள் அனைத்தும் பேசுவதால் கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தேன்.

ஐந்திணை சொன்னது…

பயமுறுத்தாதீங்க சார்!

கோவி.கண்ணன் சொன்னது…

// ஐந்திணை said...

பயமுறுத்தாதீங்க சார்!//

பயமுறுத்தல சார். மனுசனுக்கு காசு பணம், நகை இவையெல்லாம் உயிரச்சத்தின் முன் துச்சமே, அவை அப்படிப் பட்ட நேரத்தில் உதவாது என்கிற மெசேஜும் அதில் வருது.

:)

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

கோவி என்னாச்சு

பீர் | Peer சொன்னது…

பின்னூட்ட மெசேஜ முன்னாடியே போட்டிருக்கலாம்.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//ஆழப் பெருமூச்சு வந்தது..........அப்படின்னா கண்டதெல்லாம் கனவா ?//

தேவையில்லா கற்பனை

அப்பாவி முரு சொன்னது…

//'ஐயோ.....பசங்களை ஸ்கூலில் இருந்து கூட்டிவருனுமே...'......வீட்டுக்கு உடனே போகனுமே' என்பதாக திருமணம் ஆனவர்கள் பரபரத்துக் கொண்டே ஓடிக் கொண்டு இருந்தனர். நானும் அதே காரணங்களினால் நானும் இறங்கி ஓடினேன்//
இதெல்லாம் உங்கள மாதிரியான ஆட்களுக்குத்தான்.

என்னைய மாதிரி கல்யாணமாகாத ஆட்களெல்லாம்

இருந்த இடத்திலேயே ஒரு அன்புக்கு உரியவரை தேடி செட்டில் ஆகிடுவோம்.

எப்பூடி!!!

கோவி.கண்ணன் சொன்னது…

// T.V.Radhakrishnan said...

கோவி என்னாச்சு

1:04 AM, July 27, 2009//

ஆலிவுட்காரங்க தான் கற்பனை செய்யனுமா ? நாங்களெல்லாம் பண்ணக் கூடாதா ?
:)))))))0

கோவி.கண்ணன் சொன்னது…

//பீர் | Peer said...

பின்னூட்ட மெசேஜ முன்னாடியே போட்டிருக்கலாம்.

2:04 AM, July 27, 2009//

ஏன் ஏன்... தீர்ப்பு நாள் உங்களுக்கும் பிடிக்கலையா ?

Kala சொன்னது…

படித்து முடித்த்தும் வியர்த்த்து...........
என்ற வரிகளைப் படிக்கும் போதே எனக்கு
தெரிந்து விட்டது ,கனவுதானென்று இருந்தாலும்,
உங்கள் கனவு நிஐந்தான்’ஒரு’ நாட்டில்...

பீஷான் கலா

Bharath சொன்னது…

இதே கான்ஸப்ட்ல லக்கியோட அருமையான நகைச்சுவை பதிவ படிச்சுட்டுப் படுத்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்.. கனவும் உங்க ஸ்டைல்ல கொஞ்சம் கொழப்பிடுச்சு.. :)

துபாய் ராஜா சொன்னது…

ம்ம்ம்ம்ம்.வேண்டாத நினைப்புதான் எல்லோருடைய பொழப்பையும் கெடுக்குது.

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

நீங்க ஒருத்தர்தான் அப்துல் கலாம் சொன்னதை பின்பற்றி செயல்படுகிறீர்கள்.

வாழ்த்துக்கள்.

உங்கள் வலைப்பூவை படிப்பவர்களுக்கு இப்படி பீதியை கிளப்பியதற்கு தீர்ப்பு நாள் அன்று விஷயம் தெரியும் ;).

அப்துல்மாலிக் சொன்னது…

அண்ணே பலதையும் மனசுலே போட்டு குழப்பிக்கொண்டால் இப்படித்தான் கெட்ட கனவு வரும்... மனதிலுள்ள குழப்பங்கள்தான் கனவாக வெளிப்படுகிறது..

இறுதி தீர்ப்பு நாள் முன் சொல்லி வருவதில்லை.... அது எப்போது என்று நாஸா விஞ்ஞானிக்கு கூட தெரியாது என்பதுதான் உண்மை..

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்