பின்பற்றுபவர்கள்

1 டிசம்பர், 2007

TATTOO - பச்சை நாகரீகம் !

TATTOO - என்பதை பச்சைக்குத்துதல் என்று தமிழ்நாட்டில் சொல்லுவார்கள், அரசியல் கட்சித் தலைவன், நடிகன் ஆகியோரின் முறையே தீவிர தொண்டர்கள், ரசிகர்கள் அவர்களின் கட்சி சின்னங்களையும் முகங்களையும் பச்சை குத்திக் கொண்டு தங்கள் உண்மையான அன்பை வெளிப்படுத்துவது தமிழகத்தில் உள்ள வழக்கம்.

பச்சை குத்திக் கொள்வது நாடோடி மற்றும் பழங்குடியினரின் வழக்கம் மட்டுமல்ல, நாகரீகம் வளர்ந்த நாடுகளிலும் நன்கு படித்தவர்கள் கூட விரும்பிய வண்ணங்களில் பச்சைக் குத்திக் கொள்வது ஒரு தனிப்பட்ட நாகரீகமாக பச்சைக்குத்திக் கொள்பவர்கள் எல்லா இனத்திலும் இருக்கிறார்கள், நிறத்துக்கு எடுப்பாக இருக்கும் என்பதால் ஐரோப்பிய மற்றும் ஆசிய மங்கோலிய இனத்தோர் அதிகமாக செய்து கொள்கிறார்கள், சீனர்களில் ஆண் / பெண் என பலர் பச்சைக் குத்திக் கொள்வது ஆசிய நாடுகளில் நடப்பது தான்.

இதை உளவியல் ரீதியாக பார்த்தால் a person has tatoo - is it normal ? yes, it is normal personality என்று தான் சொல்ல வேண்டும். நம்பிக்கையின் அடிப்படையில் இந்துமதத்தில் ஆண்களுக்கு காது குத்துவது, பிற மதத்தில் சுன்னத் செய்து வைப்பது போன்றது தான்,, ஒருவர் தனிப்பட்ட முறையில் தனக்கு பிடித்தபடி பச்சை குத்திக் கொள்வதும். அவர்களை ஒழுங்கீனர்களாக பார்க்கத் தேவையில்லை. அதே சமயத்தில் பச்சைக் குத்திக் கொள்வதால் அதன் மூலம் மருத்துவ ரீதியாக கேன்சர் வரவாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். எனவே இதை ஊக்கப்படுத்தக் கூடாது என்று சொல்லலாம்.

மான், புலி, சிறுத்தை, சில மீன் வகைகள், சில நண்டுகள், வரிக் குதிரை, பாம்புகள் மற்றும் பல விலங்குகளின் உடல்களில் இயற்கையாகவே வரிவடிவ (pattern) இருக்கிறது, இதைப்பார்க்கும் சில மனிதர்களுக்கு உளவியல் ரீதியாக தன் உடலில் வேறுபாடுகாட்டி மற்றவர்களை விட தன்னை வேறுபடுத்திக் காட்டிக் கொள்ள முடியும் என்ற ஆள் மன எண்ணம், தன் உடலில் அது போன்று பச்சைக் குத்திக் கொள்வார்கள் என நினைக்கிறேன்.

வெளிநாட்டில் பச்சைக்குத்திக் கொள்பவர்கள் ஒரு குழுவாகத்தான் (கெங் அல்லது கேங்க்ஸ்டர்) செயல்படுகிறார்கள், அவர்களுக்குள் கூட்டங்கள், எக்சிபிசன் எல்லாம் நடப்பதுண்டு, அதில் பல கலைகள் இருக்கின்றன, பார்க்கும் நமக்கு புரியாது, ஒரு tattoo வைப்பார்த்தால் அது எந்த நாட்டைச் சேர்ந்த கலை என்று அதில் ஈடுபாடுள்ளவர்கள் சரியாக சொல்லிவிடுவார்கள். சிங்கையில் கூட tattoo கடைகள் இருக்கின்றன, வெளியில் இருந்தே பார்த்திருக்கிறேன். அரசாங்க சட்டபடி வயது வந்தவர்களுக்கு மட்டுமே அவை செய்யப்படும். எனக்கு பல நேரங்களில் வியப்பாக இருப்பது என்ன வென்றால் உடலில் நிரந்தராமாக தங்கும் ஒன்றை எப்படி துணிந்து செய்துகிறார்கள் என்பது தான்.

அது போன்று piercing எனப்படும் ஊசிகளை உடலில் கண்ட இடங்களில் சொருகிக் கொள்வதும் tattoo வுடன் இணைந்த மற்றொரு கலையாக இருக்கிறது, வெளிநாடுகளில் பிறந்து வளர்ந்த இந்தியர்களில் கூட ஆண்கள் பெண்கள் கூட புருவம், வாயின் கீழ் உதடு, நாக்கு ஆகியவற்றில் ஊசிகளை சொருகிக் கொண்டு அலங்கரித்துக் கொள்கிறார்கள். இதெல்லாம் உடலில் சேதம் இல்லாமால் செய்து கொள்வதுதான், ஆனால் டிஸ்கவரி சானலில் ஒருமுறை body modification எனச் சொல்லப்படும் உடலின் பாகங்களில் மாற்றங்களை சிலர் செய்து கொள்வதை பார்த்த போது அதிர்சியாகவே இருந்தது, பற்களில் வைரம் பதித்துக் கொள்வது, பற்களை கூறாக தீட்டிக் கொள்வது, சிலிக்கான் பொருத்து தலையில் கொம்பு போன்று வைத்துக் கொள்வது என்றெல்லாம் செய்து கொண்ட ஒருவரை 'லிசர்ட் மேன்' என்று காட்டினார்கள். ரொம்பவும் அருவெறுப்பாக இருந்தது. உடல் பாகங்களை கண்டபடி வெட்டிக் கொள்வது பைத்திய காரத்தனமாகத்தான் தெரிகிறது ( திருநங்கைகளை குறை சொல்லவில்லை)

டாட்டுக்கள் வெளிப்படையாக தெரியும் படி அதாவது முழுக்கைகளிலும் டாட்டுக்கள் வரைந்திருப்வர்களை அச்சத்துடன் பார்த்து அவர்களுக்கு வேலைக் கொடுப்பது குறைவாக இருக்கிறதாம். சீனர்கள் முதுகில் பெரிய டிராகன் வரைந்து கொள்வார்கள். டாட்டு செய்து கொள்ளும் சீன பெண்கள் பலர் கணுக்காலுக்கு மேலும், முழங்கைக்கு மேல் தோள்களுக்கு கீழே கைகளில் ஒன்றில் டாட்டு வரைந்து கொள்வார்கள்.

டாட்டு போட்டுக் கொண்ட சீன நண்பர்களை ,டாட்டு பற்றி கேட்ட போது, "உங்களுக்கு இது நிரந்தரமாக அழியாமல் இருப்பதில் வருத்தம் இருப்பது இல்லையா ?, அல்லது அதை செய்து கொண்டுவிட்டோமே என்று என்றாவது வருந்தியதுண்டா ? என்று கேட்ட போது, நிரந்தர அடையாளம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதற்காக வருத்தப்பட்டதெல்லாம் இல்லை, ஐ லவ் மை டாட்டு' என்றே சொல்லி இருக்கிறார்கள்.

***************

இன்னிக்கு வீட்டில் தனியாக இருப்பது வெறுமையாக இருந்தது, எதாவது ஆங்கிலப்படம் பார்கலாம் என்று சென்றேன், எந்த படமும் சரியில்லை, டாட்டூஸ்ட் (The Tatooist) என்ற நியூசிலாந்த் நாட்டில் எடுக்கப்பட்ட ஆங்கில படம் கண்ணில் பட்டது, வழக்கமாக 50 பேர்வரை இருக்கும் திரையரங்கில் 75 விழுக்காடு நிறைந்திருந்து, நிறைய பேர் வித்தியசமாக எதாவது இருக்கும் என்று ஆர்வத்துடன் வந்திருந்தார்கள்.

படத்தின் கதை படி, டாட்டு என்பது மதவிரோதமானது, அதாவது அது 'ஈவில் மார்க்' என்ற அடிப்படையில் சொல்லப்படுகிறது, கதாநாயகனிடம் டாட்டு வரைந்தவர்கள் ஒவ்வொருவராக ஒரு மதத்தலைவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆவி ஒன்றினால் கொல்லப்படுகிறார்கள், முடிவில் ஏவியவர் சிக்கிக் கொள்கிறார். ஆவி சாந்தி அடைந்துவிடுகிறது. டாட்டு வரைவது மத விரோதம் என்று சொல்லப்பட்டு வரும் கிறித்துவ கருத்தை உடைக்க முயன்றாதாக கதை(யில்) தெரிகிறது.

*************

தீபாவளி சமயத்தில் மருதாணி அரைத்து பெற்றோர்கள், உடன் பிறந்தோர் என் இருகைகளில் வைத்துவிடுவார்கள், 2 மணி நேரம் உடலில் அரிப்பு வந்தால் சொறிய முடியாது, அவஸ்தையாக இருக்கும், அதன் பிறகு கழுவி பார்த்தால் கோவைப்பழ சிகப்பில் கையில் மருதாணி அழகாக இருக்கும், விரலிலும் போட்டுக் கொள்வதுண்டு விரல் நகம் வளர்ந்து வளர்ந்து செல்லும் போது நகத்தில் உள்ள நிறம் மேலே சென்று சென்று மறைந்துவிடும். உள்ளங்கையில் உள்ளவை பத்து நாட்களில் வெளுத்து மறைந்திவிடும். கைகளில் போடும் மருதாணி கருஞ்சிவப்பாக மாறினால் போட்டுக் கொண்டவருக்கு பித்தம் ( பைத்தியம் அல்ல) அதிகம் இருக்கிறது என்று மருத்துவமும் சொல்வார்கள்.

8 கருத்துகள்:

மங்கை சொன்னது…

நல்லா சிவந்தா இன்னொன்னும் சொல்வாங்களே...:-)))நாங்க கல்லூரியில படிகிறப்போ இது தான் சொல்லீட்டு திரிவோம்.. இப்பவும் தான்...
அந்த மருதானி நல்லா சிவக்க சின்ன வயசுல..எறும்ப பிடிச்சு போட்டு அரைச்சு.. பாக்கு..தயிர்..எல்லாம் போட்டு...

இது எல்லாம் எதுக்குன்னு இப்ப நினச்சு பார்த்தா சிரிப்பா வருது...

இப்ப என்ன தான் இந்த டிசைன் எல்லாம் வந்திருந்தாலும்.. தோழிகளுடன் சேர்ந்து.. மருதானி இழைகளை பரித்து, எல்லாரும் சேர்ந்து அரைத்து சிவக்குமா சிவக்காதான்னு அடுத்த நாள் ஒவ்வொருத்தர் கைய பார்த்து சந்தோஷப்பட்ட நாட்கள் வராது..ம்ம்ம்ம்

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்கை said...

//

மங்கை அவர்களே,

சிங்கையில் ஆண்கள் முகப்பவுடர் போட்டால் கூட 'மேக்கப் ?' என்று கேட்பார்கள். பவுடர் அடிப்பதே இல்லை.

அப்பறம் எங்கே மருதானி போட்டுக் கொள்வது? எல்லாம் ஊரில் போட்டுக் கொண்டதுடன் சரி, இந்த தீபாவளிக்கு மனைவிக்கும், மகளுக்கும் ரெடிமேட் மருதானி கோன் (cone) வாங்கி வந்து போட்டுவிட்டேன்.

//எறும்பை பிடிச்சு போட்டு அரைச்சு.. பாக்கு..தயிர்..எல்லாம் போட்டு...
//
எறும்பை சேர்த்து அரைத்து ...
பாவம் இல்லையா ? :)) சின்னவயசில் அதெல்லாம் தப்பா தெரியாதுதான்.

RATHNESH சொன்னது…

மங்கை அவர்களுக்கு அந்தக் காலத்தில் கை சிவந்ததா என்று தெரிய வேண்டும்.

பச்சை குத்தியதைக் கதையின் முக்கிய மையமாக வைத்து பாக்யராஜ் ஒரு படம் கூட எடுத்தாரே (பவுனு பவுனு தான்). அந்தப் படம், அவர் தன் பெயரை ('வெற்றிகரமான திரையுலகத் திறமைசாலி' என்று) தமிழ்த் திரையுலகில் அழுத்தமாகக் குத்தியிருந்த பச்சையை அழித்து விட்டது ஒரு இழி முரண்.

பெயரில்லா சொன்னது…

டாட்டூயிஸ்ட் படம் இன்னும் நான் பாக்கலை. கண்டிப்பா பாப்பேன். நியூசியில் வாழும் மவுரிகளிடையே இந்த டாட்டூ ரொம்ப அதிகம். கொஞ்சம் முரட்டுத்தனமா காட்டுவதற்காகக்கூட டாட்டு போடுபவர்கள் உண்டு. உங்களுக்கு ஒண்ணு தெரியுமா. டேவிட் பெக்கம் கையில அவர் மனைவி விக்டோரியா பேரை இந்தில பச்சை குத்தியுருக்கார்.Something got lost in Translation. So instead of Victoria he is stuck with Vhictoria.பெக்கம் நேத்து வெலிங்டன் வந்து கால்பந்து ஆடினார். நான் டீ வில பாத்தேன்.
அப்பறம் நல்ல சிவந்தா இன்னோன்னும் சொல்லுவாங்கன்னு மங்கை சொன்னத நானே பல முறை நண்பர்களிடம் சொல்லியுருக்கேன். மருதாணி அரைச்சா வீதியில இருக்க எல்லாக்குழந்தைகளுமே வப்போம். அப்பதானே யாருக்கு நல்ல சிவந்துருக்குன்னு கதை பேசமுடியும்.
ஆஹா ஒரு பதிவு அளவுக்கு பின்னூட்டம் ஆயுடுச்சே.

துளசி கோபால் சொன்னது…

இங்கே நியூஸியில் பச்சைகுத்தல் ஒரு கலாச்சாரச்சின்னமாத்தான் இருக்கு. பழங்குடிகளான மவோரிகள்
முகமெல்லாம் கூட பச்சைக்குத்தி இருப்பாங்க. பெண்கள் மோவாய்க்கருகில் சில புள்ளிகள், மற்றும் டிசைன்களில்.

ஒவ்வொரு பிரிவுக்கும்(iwi)ஒரு அடையாளம் இருக்காம். அதைவச்சே யார் எந்தக் குழுன்னு கண்டுபிடிக்கலாமாம்.

ஆனால், இப்படி முகமெல்லாம் பச்சைகுத்துன ஆட்களுக்கு வெள்ளைக்காரர்களின் நிறுவனத்தில்
வேலை கிடைப்பதில்லை. வெளிப்படையாகத் தெரியாத ஒரு உண்மை இது.

மவோரி கலைக் கலாச்சாரக்குழுவில் பாடும் மக்கள் அந்தந்த நிகழ்ச்சிகளுக்கு பச்சைக்குத்தியதுபோல face painting செஞ்சுக்கறாங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
மங்கை அவர்களுக்கு அந்தக் காலத்தில் கை சிவந்ததா என்று தெரிய வேண்டும்.

பச்சை குத்தியதைக் கதையின் முக்கிய மையமாக வைத்து பாக்யராஜ் ஒரு படம் கூட எடுத்தாரே (பவுனு பவுனு தான்). அந்தப் படம், அவர் தன் பெயரை ('வெற்றிகரமான திரையுலகத் திறமைசாலி' என்று) தமிழ்த் திரையுலகில் அழுத்தமாகக் குத்தியிருந்த பச்சையை அழித்து விட்டது ஒரு இழி முரண்.
//

ரத்னேஷ்,

பதிவு எழுதும் போதே பவுனு பவுனுதான் படமும், ரோகினியும் நினைவுக்கு வந்தது, அந்த ப்டத்தில் ரோகினி பாக்கியராஜை ஒதுக்குவதற்கு மார்ப்புக்கு அருகில் முறைமாமன் பெயரை பச்சைக் குத்தியது தான் என்பது போல் கதை அமைக்கப்பட்டு இருக்கும். நீங்களும் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.

பாக்யராஜ் மட்டுமல்ல பாரதிராஜா போன்றோரும் திரையிலகில் ஓய்வு பெற்றுவிட்டார்கள் என்று நினைக்கும் அளவுக்கு அவர்களின் நிலை இருக்கிறது.

சினிமாவில் இயக்குனர்கள் சாதிக்கும் வயது 30 - 40 வயது தான் அதன் பிறகு ஓரிரு படங்கள் தான் வெற்றி அடையும். அந்த ஜெனரேசனுக்கு உள்ள சூழ்நிலைப்படி, ரசிப்புப்படி படமெடுப்பவர்கள் ஜெயிக்கிறார்கள். வயது ஆனதும் சிந்தனைகள் அதற்குள் பொருந்தாது.

அந்த வயதில் ஹிட் படங்கள் வரிசையாக 6 - 7 தான் இருக்கும், அதன் பிறகு எவராக இருந்தாலும் இறங்குமுகம் தான். இதனை சமாளிக்க ஷங்கர் கையாளும் உத்தி 10 - 15 இளம் உதவி இயக்குனர்களை கையில் வைத்திருப்பது, ஒவ்வொரு புதியபடத்திலும் உதவி இயக்குனர்களை மாற்றிக் கொள்வார், புதிய சொந்தபடம் எடுப்பது போன்றவற்றால் சமாளிக்கிறார்.

கதை நாயக நடிகர்கள் 40 வயதுக்கு மேலும் தப்பிப் பிழைப்பது, இயக்குனர்களின் திறமையால் தான்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//சின்ன அம்மிணி said...
டாட்டூயிஸ்ட் படம் இன்னும் நான் பாக்கலை. கண்டிப்பா பாப்பேன். நியூசியில் வாழும் மவுரிகளிடையே இந்த டாட்டூ ரொம்ப அதிகம். கொஞ்சம் முரட்டுத்தனமா காட்டுவதற்காகக்கூட டாட்டு போடுபவர்கள் உண்டு. உங்களுக்கு ஒண்ணு தெரியுமா. டேவிட் பெக்கம் கையில அவர் மனைவி விக்டோரியா பேரை இந்தில பச்சை குத்தியுருக்கார்.Something got lost in Translation. So instead of Victoria he is stuck with Vhictoria.பெக்கம் நேத்து வெலிங்டன் வந்து கால்பந்து ஆடினார். நான் டீ வில பாத்தேன்.
அப்பறம் நல்ல சிவந்தா இன்னோன்னும் சொல்லுவாங்கன்னு மங்கை சொன்னத நானே பல முறை நண்பர்களிடம் சொல்லியுருக்கேன். மருதாணி அரைச்சா வீதியில இருக்க எல்லாக்குழந்தைகளுமே வப்போம். அப்பதானே யாருக்கு நல்ல சிவந்துருக்குன்னு கதை பேசமுடியும்.
ஆஹா ஒரு பதிவு அளவுக்கு பின்னூட்டம் ஆயுடுச்சே.
//

சின்ன அம்மினி,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,

நீங்களும் துளசி அம்மா போல் நியூசி வாசியா ? நீங்க இரண்டு பேர் இருந்தால் நீயூசி தாங்குமா ?
:)

அந்த படத்தைப் பார்த்து நீங்களோ, துளசி அம்மாவோ விமர்சனங்களை எழுதுவீர்கள் என நம்புகிறேன். எனக்கு சில இடங்களில் புரியவில்லைதான். படம் சிங்கப்பூரில் ஆரம்பிக்கிறது. நியூசியில் முடிகிறது. ஹீரோ பார்பதற்கு டாம் குருஸ் மாதிரி இருந்தார் பெயர் நினைவு இல்லை. திகில் படம் தான்.

எல்லோரும் மங்கை அம்மாவை கலாய்கிறீர்கள் எனக்கு புரியவில்லை. தெரிந்தால் நானும் கேட்பேன்,

'மங்கை, அவர்களே அன்றைய நாளில் உங்கள் கை சிவந்ததா ?'

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
இங்கே நியூஸியில் பச்சைகுத்தல் ஒரு கலாச்சாரச்சின்னமாத்தான் இருக்கு. பழங்குடிகளான மவோரிகள்
முகமெல்லாம் கூட பச்சைக்குத்தி இருப்பாங்க. பெண்கள் மோவாய்க்கருகில் சில புள்ளிகள், மற்றும் டிசைன்களில்.

ஒவ்வொரு பிரிவுக்கும்(iwi)ஒரு அடையாளம் இருக்காம். அதைவச்சே யார் எந்தக் குழுன்னு கண்டுபிடிக்கலாமாம்.

ஆனால், இப்படி முகமெல்லாம் பச்சைகுத்துன ஆட்களுக்கு வெள்ளைக்காரர்களின் நிறுவனத்தில்
வேலை கிடைப்பதில்லை. வெளிப்படையாகத் தெரியாத ஒரு உண்மை இது.

மவோரி கலைக் கலாச்சாரக்குழுவில் பாடும் மக்கள் அந்தந்த நிகழ்ச்சிகளுக்கு பச்சைக்குத்தியதுபோல face painting செஞ்சுக்கறாங்க.
//

துளசி அம்மா,

நீங்கள் சொல்வது போல் பழங்குடியினரைச் சுற்றி தான் அந்த கதை இருக்கிறது. நீங்கள் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதுவீர்கள் என நினைக்கிறேன். உங்கள் நாட்டு படம் நீங்கள் தான் எழுதவேண்டும். :) படத்தில் காட்டிய இடம் 'BEDLAM' என்னும் இடத்தில் (place) பச்சை குத்தும் கடைகள் இருப்பதாக காட்டினார்கள்.

திகில் படமாக இருந்தாலும் படம் போரடிக்கவில்லை. மாறுபட்ட படம்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்