பின்பற்றுபவர்கள்

16 டிசம்பர், 2009

பெண்ணுடலால் வளர்க்கப்படும் சாதீயம் !

மதங்கள் அனைத்தும் ஆண்கள் தலைமையில் உருவாகி இருந்தாலும் அன்னிய (மத/சாதி) ஆண் / பெண் ஈர்ப்பில் அந்த அமைப்பு சிதைந்துவிடாமல் இருக்கவும், அவ்வமைப்பில் குழப்பம் ஏற்படாமல் இருக்கவும் பெண்களின் வழியாக அவற்றைக் கட்டிக்காக்க முடியும் என்ற நம்பிக்கையில் மதக் கொள்கைகளின் வழியாக பெண்களின் மீதான கட்டுப்பாட்டில் அவை செயல்படுகின்றன. மதம் மாறி காதல் திருமணம் செய்துக் கொள்ளும் போது அங்கு பெண்களின் நிலை எப்போதுமே கவலைக்கிடம் தான். தான் இதுவரை வணங்கி வந்த கடவுள்களை மறந்து புதிய வகை வணக்கத்திற்கும், பழக்கவழக்கத்திற்கும் தன்னை அவள் ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கும். ஒவ்வொரு மதத்திலும் அந்நிய ஆண்களிடம் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது சமயப் பாடமாகவே நடத்தப்படுகிறது. அவை பெண்களின் கண்ணியம், கற்பு என்கிற புனிதங்களாக நிறுவப்பட்டு இருக்கும்.

இந்தியாவின் சிறப்புத் தன்மையாகவும், இந்து மதத்தின் பொதுத் தன்மையாகவும் இருக்கும் சாதியத்தில் பெண்களின் நிலைகுறித்து பல்வேறு சாதிய சமூகங்களும் பல்வகைக் கோட்பாடுகளைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பெண்கள் மறுமணம் செய்து கொள்ளலாமா வேண்டாமா என்பதை அவர்கள் சார்ந்த ஆண் சமூகத்தின் விருப்பமே தீர்மணம் செய்திருக்கிறது. இதற்கு அனுமதித்த, மறுத்த சமூகங்கள் அனைத்திலும் பெண்கள் எடுக்க வேண்டிய முடிவுகளை ஆண்கள் சமூகமே பரிந்துரை செய்து வந்திருக்கிறது. மறுமணம் செய்வதில் உடன்பாடு உள்ள சில சாதியினரிடம் கூட அம்மறுமணம் கூட அப்பெண் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பதை ஆண்களே முடிவு செய்துவிடுவார்களாம். கணவனை இழந்த பெண்கள் கணவரது தம்பியை திருமணம் செய்து கொள்வது கூட வழக்கில் இருந்திருக்கிறது. காரணம் சொத்து யாருக்கு என்பதில் அது உறவுமுறைகளைக் கடந்து வேறொருவருக்கு போய்விடக் கூடாது என்பதைத் தவிர்த்து மறுமணம் பெண்களின் மறுவாழ்வை மறு உறுதி படுத்துகிறது என்பதற்காக அல்ல என்பதாக இத்தகைய மறுமணங்கள் நடைபெற்று வந்திருக்கின்றன.

பெண்களின் கற்பு என்பதை அவளுடைய பெண் குறியுடன் தொடர்பு படுத்தி புனிதம் கட்டமைக்கப்பட்டுவிட்டதால், கணவனின் இறப்பிற்கு பிறகு அவளது பெண் குறி வன்முறையாகத் தீண்டப்பட்டால் அவளுடைய தெய்வீகத் தன்மைக்கு இழுக்கு என்கிற சித்தாந்ததில் கணவன் பிணத்துடனேயே 18 ஆம் நூற்றாண்டுகள் வரை உயிருடன் பெண்கள் (உடன்கட்டை என்கிற) புனிதச் சடங்கு என்ற பெயரில் கொளுத்தப்பட்டு இருக்கிறார்கள், தமிழ் சூழலிலும் அது போன்ற நிகழ்வுகள் நடந்தேறியதாக புறநானூற்றுக் குறிப்புகள் உள்ளன. ஒரு ஆண் எத்தனைப் பெண்ணுடன் உறவு கொண்டிருந்தாலும், அவன் மாற்று சாதிப் பெண்களுடன் உறவு கொண்டிருந்தாலும் அவனுக்கு 'கற்பு' பாதிப்பு ஏற்படாது. ஆனால் ஒரு பெண் வன்முறையால் தீண்டப்பட்டால் கூட அவள் தீட்டுப்பட்டவள் ஆகிறாள் என்கிற சித்தாந்தங்களில், சாதியத்தின் நிலைப்பு அல்லது விளைச்சல் என்பது அந்த சாதியைச் சேர்ந்த பெண் அந்த சாதியைச் சேர்ந்த ஆணுடன் கூடிப் பெறும் குழந்தைகளினால் மட்டுமே ஏற்படக் கூடியவை என்பதால் பெண் குறியின் மீது ஏகப்பட்ட கட்டுபாடுகளை விதித்து 'பதிவிரதா, பத்தினி' தர்மங்கள், கோட்பாடுகள் எழுதப்பட்டன.

இன்னும் கூட உச்சமாக பெண்ணுக்கான ஆன்ம விடுதலை என்பது அவள் தன் கணவனுக்கு எவ்வளவு உண்மையாகவும், அவனுக்கே அற்பணிப்பாக வாழ்கிறாள் என்பதே முடிவு செய்துவிடும் எனவே பெண்கள் ஆண்களைப் போன்று கடுமையான சாதகப் பயிற்சியினால் ஆன்மிக முன்னேற்றம் அடைவதைவிட அது எளிய வழிகள் என்பதாகச் சொல்லப்பட்டன. ஆன்மிகம், சமூகம் அனைத்து வழியிலும் பெண்கள் மாற்று ஆடவரை திருமணம் செய்வது அவளுடைய புனிதத் தன்மைக்கு இழுக்கு என்பதாகவே சமூகம் கட்டமைத்து இருக்கிறது பெண் குறியை மூன்று தெய்வங்கள் காவல் காக்கின்றன என்பதாக மனுஸ்மிருதிகள் எழுதப்பட்டன. வேற்று (சாதி) ஆடவனை அங்கே எந்த சூழலிலும் அனுமதித்திவிட்டால் பெண் குறியை காவல் காக்கும் தெய்வங்களுக்கு தெரிந்து போய்விடும், அவள் தண்டனை அடைந்துவிடுவாள் என்கிற மனம் சார்ந்த பயத்தை பெண்களுக்கு ஏற்படுத்துவதன் முலம் பெண் தனது பிற ஆடவர் குறித்த மன அளவிலான சிந்தனையைக் கூட கட்டுபடுத்திவிட முடியும் என்கிற உளவியலுக்காக பெண் குறி தெய்வங்கள் அங்கே குடிகொண்டி இருப்பதாக கதைகள் உண்டாகின.

உயர்சாதி ஆண்களை காதல் மணம் புரியும் போது பெண்ணின் பெற்றோர்கள் அதை எதிர்க்க மாட்டார்கள், அவர்களுக்கு அது பெருமை என்பதாகவும், தாழ்ந்த சாதி ஆண்களை காதல் திருமணம் செய்து கொள்ளும் போது அந்தப் பெண்கள் பெற்றோர்களால் கைகழுவி விடப் பட வேண்டும் என்பது சமூக ஏற்பாடாகவே இருக்கிறது. காதல் திருமணம் செய்து கொள்ளும் பெண்களெல்லோருக்கும் இந்த காலத்தில் எதிர்ப்பு அவ்வளவு இல்லை என்றாலும் தன்னுடைய அடையாளத்தை அவள் துறந்தாகவே வேண்டும் என்கிற நிலையில் தான் இன்றைய சமூக அமைப்பும் இருக்கிறது.

தற்போதைய திரைப்படங்களில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால் அவளை அவனுக்கே திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது போன்ற அபத்தங்கள் இல்லை என்றாலும், ஒரு பெண் ஒருவனை மனதார நினைத்துவிட்டால் அவள் சாகும் வரையில் பிற ஆணை நினைக்கமாட்டாள் என்கிற ஆண்கள் எழுதும் வசனங்களைப் பல்வேறு திரைப்படப் பாத்திரங்கள் பேசுவதைக் கேட்கிறோம். இவற்றின் வழியாகக் கூட பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும், மனது உடலும் ஒருமுறை யாருக்கேனும் கொடுக்கப்பட்டால் அவள் சாகும் வரையில் அப்படியே தான் இருக்க வேண்டும் என்கிற ஆணிய சாதித்துவ ஆசைகளை அப்படி வெளிப்படுத்தி எழுதிவிடுகிறார்கள். அந்த வசனத்தை பெண்களின் காதலைச் சொல்லும் உறுதியான மனவியல் வசனங்கள் என்பதைவிட முன்கூட்டியே பெண் எதிர்புகளை எல்லாம் சிந்தித்து அதன் பிறகே தனது மனதை ஒருவருக்குக் கொடுக்க வேண்டும், இல்லை என்றால் அப்படியே அவள் இருக்க வேண்டியது தான் என்கிற சாதித்துவ ஆசைகள் அதில் அடங்கும். ஒரு பெண் ஏமாற்றப்பட்டாலும் அந்த ஒருவனைத் தான் நினைக்க வேண்டுமா இல்லையா என்பதைப் பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டுமேயன்றி ஆண்கள் எழுதும் வசனங்கள் அல்ல.

பொட்டு வைத்துக் கொள்வது, பூ வைத்துக் கொள்வது போன்றவை விதவைகளுக்கான புரட்சிகள் இல்லை, அவள் முறையாக மறுமணம் செய்து வைக்கபடவேண்டும் அதுவும் அவள் விருப்படியானதாக இருக்க வேண்டும் என்பதை சமூகம் சிந்திப்பது இல்லை. முடிந்த அளவுக்கு அதே சாதியில் ஒருவன் வந்து கட்டமாட்டானா என்றே காத்திருப்பார்கள். இன்றைய தேதியில் விதவைகளைத் திருமணம் செய்து கொள்ள ஆண்கள் பலர் முன்வந்தாலும் சாதியத் தடைகளை மீறி அத்தகைய திருமணங்கள் நடைபெறுவது அரிது.
குழந்தையற்ற விதவைகள் என்றால் திருமணம் செய்து கொள்கிறோம் என்பதாக சிலர் இருக்கிறார்கள், அவர்களுக்கான விளம்பரமாக "நோ இஸ்யூ" அதாவது அவளுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை, என்பதும் கூட விளம்பரப்படுத்தப்படுகிறது.

மத அடையாளம், சாதிய அடையாளம் இவை அனைத்தும் மறு தலைமுறைக்கு பெண்களின் வழியாகவே அனுப்பப் படுகிறது என்பதை விழாக்கள், விருந்துகள், பண்டிகை காலங்களில் நன்கு அறியலாம். ஆண்கள் வெள்ளைகாரனின் உடையை அணிந்திருக்க, பட்டுபுடைவை சலசலக்க பெண்களை அங்கே அழைத்துவருவது தான் பெருமையானதும், பாரம்பரியத்தைக் கட்டிக்காக்கும் வழிமுறையாகவும் சுறுக்கிக் கொண்டு இருக்கிறார்கள். குலதெய்வ வழிபாடு மற்றும் சாதிய பழக்க வழக்கங்கள் அனைத்தையும் ஆண்கள் வெளியே வெளி உலகில் காட்டாவிட்டாலும் பெண்களின் வழியாக அதைச் செய்தே வருகிறார்கள். தாய் மொழி மாறி திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் கூட தன்னுடைய குழந்தைக்கு தன்னுடைய மொழியை தாய் மொழி ஆக்கிவிட முடியாது.

வெளிநாடுகளில் சாதியற்ற சமூகங்கள் உள்ளன, அங்கே பெண்கள் மறுமணம் செய்து கொள்வது புரட்சியாகப் பார்க்கப்படுவதும் இல்லை, அது ஒரு நிகழ்வு தான். இந்தியாவில் வேலைக்கு போகும் பெண்கள் கூட ஒழுக்க மற்றவர்கள் என 'வருண' பகவான் காஞ்சி சங்கராச்சாரியால் சொல்ல முடிகிறது, வெளி நாட்டுப் பெண்கள் அனைவருமே ஒழுக்கமற்றவர்களாக இந்திய பொது ஆணிய சமூகம் அடிக்கடி பரப்பிவரும் தகவல்களை ஒப்பு நோக்குக.

பெண்களின் மீதான சாதிய பிடிகள், கற்பு சித்தாந்தங்கள் முற்றிலும் உடைபடும் போது சாதியற்ற சமூகங்கள் மலரும். அதுவரை பெண்கள் வழியாக ஆணிய சமூகம் சாதியத்தின் நிழல் கூட சாகமல் காத்துக் கொணடே வரும். சாதிகளை / மத இறுக்கங்களை காக்கும் ஆயுதங்கள் அனைத்தும் பெண்களை புனிதத்துவப் படுத்துவதன், கண்ணியப்படுத்துவதன் மூலம் சமார்த்தியமாக ஆண்கள் சமூகம் அவளிடம் திணித்து வைத்திருக்கின்றன. பெண் சமூகம் அவற்றை ஒவ்வொன்றாக வீசி எறிய எறிய சாதி அற்ற சமூகம் சாத்தியப்படும். பெண் விடுதலையில் ஆணாதிக்க சமூகம் செயல்படுத்தும் சாதி வெறியின் விடுதலையையும் சேர்ந்தே உள்ளது.

5 கருத்துகள்:

பெருசு சொன்னது…

ரொம்ப சரியாத்தான் சொன்னீங்க கோவி.

ஆணுக்கு கற்பு நிலை எதுவென்று சொல்ல பெண்ணியவாதிகள் அல்லது ஜனநாயக முற்போக்குவரத்து கழகத்தின் சார்பாக யாராவது வருவாங்க

Kesavan சொன்னது…

உடன் கட்டை ஏறுதல் , மறுமணம் , அங்களுக்கு நிகராக வேலை செய்தல் என்று பல விதங்களிலும் பெண்கள் மாறி இருகிறார்கள் . ஆனால் அனதிக்க சமுதாயம் என்பதை ஒத்து கொல்ல முடியாது . ஏன் என்றால் எல்லா வீட்டிலும் அந்த பையனின் தாயார் தான் பல விஷயங்களில் முடிவு எடுக்கிறார் . அதனால் பழமை கல சமுதாய வெறியில் இருந்து வெளியே வர வேண்டும் .

Kesavan சொன்னது…

ஆண் ஆதிக்கம் என்பது கிடையாது . பெண்கள் தான் பெண்களுக்கு எதிரி

கோவி.கண்ணன் சொன்னது…

//Kesavan said...
ஆண் ஆதிக்கம் என்பது கிடையாது . பெண்கள் தான் பெண்களுக்கு எதிரி
//

பொதுப் புத்தி ன்னு சொல்லுவாங்க, அதன் பொருள் பொது சமூகத்தின் புரிதலில் எதையும் பார்ப்பது என்பதாகும்.

பெண்கள் இப்படித்தான் என்பதாக பொதுச் சமூகம் ஒரு கருத்தைச் சொல்லி இருக்கும், அது பெண்களைப் பற்றிய சமூகக் கட்டமைப்பே.

உங்களுக்கு இந்தக் கட்டுரையை பரிந்துரைக்கிறேன். மொழி நடை கொஞ்சம் கடினமாக இருக்கும்

priyamudanprabu சொன்னது…

ஊள்ளேன் அய்யா

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்