பின்பற்றுபவர்கள்

3 டிசம்பர், 2009

கிறிஸ்தவம் ஒரு முழுமையான வரலாறு - சேவியர்

இறை நம்பிக்கைப் பற்றி எனது புரிதலில் எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், மனித புலன்களுக்கு அப்பாற்பட்ட ஒன்று, அனைத்தையும் அறிந்த ஒன்று, மனிதர்களை நல்வழிப்படுத்தும் ஒன்று என்கிற நம்பிக்கையின் வேராக இருப்பதே இறை நம்பிக்கை. இறை நம்பிக்கையில் இறை பற்றிய தன்மை அல்லது கட்டுமானம் மற்றும் அவை குறித்த கோட்பாடுகளின் வேறுபாடுகளின் தனித் தனி வேற்றுமைப் பெயர்களே மதங்கள் எனப்படுகின்றன. அவற்றினுள் முரண்பாடுகளை, அவை முரண்படும் போது அவற்றை எடுத்துக் கொண்டு தனித் தனியாக வடிவெடுத்தவையே மதப் பிரிவுகள். உலகில் உள்ள வளர்ந்த மதங்களை இருபிரிவுகளாக பிரிக்க முடியும், இந்திய மதங்கள், ஆப்ரகாமிய மதங்கள். ஆதாம் ஏவாளே மனித தோற்றுவாய், இறைச் சொல்லுக்கு கட்டுப்படாமல், விலக்கப் பட்ட கனியை உண்டதால் பாவம் செய்தவர்களானார்கள், அதன் தொடர்ச்சியாக அவர்களின் பாவத்தை சுமக்கும் அவர்களின் வாரிசுகளாக நாம், எனும் ஆப்ரகாம் என்கிற மூதாதைய நம்பிக்கையுடன் வளர்ந்தது ஆப்ரகாமிய மதங்கள் எனப்படுகின்றன. ஆப்ரகாமிய மதங்களில் யூத, கிறித்துவ அதன் உட்பிரிவுகள் மற்றும் இஸ்லாம் அடக்கம். இந்த வரிசைப்படி முதலில் தோன்றியது பிந்தியதை மறுதலிக்கும். பிந்தியவை நாங்களே இறுதியான, உறுதியானது உண்மையானது என்று சொல்லிக் கொள்ளும். இந்திய மதங்கள் பற்றி அனைவருக்கும் ஓரளவு நன்கு தெரியும் ஆகையால் நான் அதை மீண்டும் இங்கே எழுதுவதைத் தவிர்க்கிறேன். உலக மதங்கள் பற்றிய புரிதல் வலைப்பதிவுகளை வாசித்ததன் மூலம் நான் அறிந்து கொண்டவை தான்.

கிறித்துவம் பற்றி கிறித்துவம் சாராத பிற மதத்தினருக்கு குறிப்பாக இந்துக்களுக்கான, தமிழர்களுக்கான புரிதல் அவர்கள் (கிறித்துவர்கள்) நிறைய பள்ளிக் கூடங்களைத் திறந்தார்கள், ஏசு மற்றும் மாதாவை வழிபடுபவர்கள், ரோமை அல்லது வாடிகன் போப்பாண்டவரை தலைமையாக கொண்டவர்கள், துறவர வாழ்க்கை வாழும் சாமியர்கள் (பாதிரியார்கள்) தலைமையில் திருமணம் செய்து கொள்பவர்கள், ஞாயிற்றுக் கிழமை வழிபாடு செய்பவர்கள், அவர்களில் சிலர் வெள்ளை ஆடைகள் அணிந்து கொண்டு இரவு பதினோரு மணி வரை கூட 'ஏசு அழைக்கிறார், அலேலூயா, அலேலூயா, மீட்பர் வருகிறார்' என்று பிரச்சாரம் செய்து தூக்கத்தை கெடுப்பவர்கள், அங்கங்கே ஆர் எஸ் எஸ் காரர்களால் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள் என்கிற பொதுப் புரிதல் தான். இதைத் தாண்டி கிறித்துவம் என்கிற மதத்தைப் பற்றிய புரிதல், அதன் தோற்றம், அவற்றின் வளர்ச்சி, அவற்றின் பிரிவுகளை அறிந்தவர்கள் மிகவும் குறைவு தான்.

ஒரு மதம் பற்றிய பிற மதத்தினரின் புரிந்துணர்வுகள் என்பது அவர்களை மதிப்பது, அவர்களின் அடையாளம், பண்பாடு, அவர்களின் கடவுள் ஆகியவற்றுடன் முடிந்துவிடுகிறது. அதைத் தாண்டி மதங்களை வரலாறுகளாக படித்து தெரிந்து கொள்வோர் மிகக் குறைவே. அதற்கு காரணம் தன்னுடைய மதத்தின் மீதான உறுதியான நம்பிக்கையும், அந்த உறுதியான நம்பிக்கை பிற மதங்களைப் பற்றி தெரிந்து கொள்வதை, புரிந்து கொள்வதை மறுதலித்துவிடும்.

மதங்களை வரலாறு என்பதாக படிப்பதற்கு தமிழ் சூழலில் நூல்கள் குறைவாகவே இருக்கின்றன. மதங்கள் பற்றிய அறிமுகங்களை எளிமையான வரலாறு அல்லது வரலாற்று அடிப்படையில் தரவுகளுடன் எழுதப்படும் போது அவை ஒரு வரலாற்று இலக்கியம் என்கிற புரிதலுடன் பரவலாக வாசிப்பதற்கு வழி வகுக்கும். "கிறிஸ்தவம் ஒரு முழுமையான வரலாறு" என்கிற தலைப்பில் திரு சேவியர் 210 பக்கங்களில் மிகவும் எளிமையாக வரலாற்று இலக்கியம் போன்று மிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறார். கிழக்கு பதிப்பகம் அதை வெளி இட்டு இருக்கிறது. இந்த நூலை சென்றவாரம் சிங்கப்பூர் நூலகத்தில் இருந்து எடுத்துவந்து படித்தேன். விறுவிறுப்பாக நாவல் போல் தொடங்கும் நடை, தொய்வில்லாமல் பல்வேறு தலைப்பு உள்ளடக்கங்களுடன் சிறப்பாக எழுதப்பட்டு இருந்தது, போதிய நேரமின்மை என்பதைத் தவிர்த்துப் பார்த்தால் ஒரே மூச்சில் படித்துவிடக் கூடிய ஆவல் ஏற்படுத்தும் வண்ணம் எழுதப்பட்டு இருந்தது.

*****

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பிறகு கிறித்துவம் வளர்ந்தது பற்றியும், அது புறப்பட்டு, பயணப்பட்ட இடங்கள், அதை வளர்த்தெடுத்தவர்கள் பற்றி சிறப்பாக எழுதி இருக்கிறார். ஏசு கிறித்துவின் அப்போஸ்தலர்கள் எனப்படும் நேரடி சீடர்களில் அவரைக் காட்டிக் கொடுத்துவிட்டு, மனம் நொந்து தற்கொலை செய்து கொண்ட ஒரு சீடர், மற்றும் இயற்கை மரணம் அடைந்த யோவான் (John) தவிர ஏனைய 10 சீடர்களும் ஏசுவின் கொள்கைகளை போதித்தார்கள் என்பதற்காக அன்றைய ஆட்சியாளர்களாலும், பழைய மதத்தலைவர்களினாலும் கொடுரமாகக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள், இது பற்றிய குறிப்புகள், ஆண்டு விவரங்கள், அவர்கள் மதப் பரவலுக்குச் சென்ற இடங்கள், குறிப்பாக இந்தியாவிற்கு வந்த புனிதர் தோமா (செயின்ட் தாமஸ்) போன்ற விவரங்களைத் தந்திருக்கிறார். எந்த ஒரு மதமும் ஆளும் அரசர்களின் ஆதரவைப் பெறாமல் போனால் அது சந்திக்கும் இன்னல்களையும், ஆதரவு பெற்றால் பெரும் அசுர வளர்ச்சியையும் கான்ஸ்டண்டைன் மன்னருக்கு பிறகு கிறித்துவம், முன் கிறித்துவம் என்பதில் இருந்து நன்கு புரிய வைக்கப்பட்டு இருக்கிறது.

உலகில் அன்பு என்னும் ஆயுதம் ஏந்தி புறப்பட்டவை இரு மதங்கள் தான் ஒன்று பவுத்தம், மற்றொண்டு கிறித்துவம், இவைகள் பின்னாளில் அரச மதங்கள் மற்றும் தங்கள் ஆளுமைக்கான மத அடிப்படை நாடுகளை உறுவாக்கிக் கொண்டன, ஐரோப்பாவில் கிறித்துவ சமய நாடுகளும், ஆசியாவில் புத்த சமய நாடுகளும் இருப்பதற்கு அவை வலிமையாக வழியுறுத்தப்பட்டன என்று சொல்வதற்கான ஆதாரங்கள் குறைவு அல்லது இல்லை. மக்கள் சேவைகளின் வழியாக பரவியதில் கிறித்துவமே முதலிடத்தை இன்றும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. பிரித்தாளும் சூழ்ச்சியில் இந்தியாவில் கிறித்துவம் பரப்பப்பட்டது என்கிற கூற்று ஓரளவுக்கு உண்மையாக இருக்கலாம் என்கிற கூற்றுக்கு ஏற்ப பிற நாடுகளில் விரைவான வளர்ச்சி பெற்ற கிறித்துவம் இந்தியாவிற்கு தோமாவால் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக கிட்டதட்ட திருவள்ளுவர் காலத்தில் அறிமுகம் ஆகி இருந்தாலும், புரோட்டஸ்டாண்ட் பிரிவு வெள்ளையர்கள் இந்தியாவில் நுழைந்த பிறகே விரைவாக வளர்ச்சி கண்டது, இந்தியாவில் கிறித்துவ வளர்ச்சிக்கு வந்த அருட் தந்தைகள் இங்குள்ளது போல் காவி உடை, பூணூல் அணிந்தது, தமிழ் வளர்ச்சிக்கு உதவியது பற்றியெல்லாம் நூல் ஆசிரியர் குறிப்பிட்டு இருக்கிறார், தோமாவுக்கு முன்பும், பின்பும் கேரளா மற்றும் கேராளாவை ஒட்டிய தமிழக கடற்கரைப் பகுதி கிறித்துவர்கள் பல நூற்றாண்டுகளாகவே இருந்துவரும் கிறித்துவர்கள், கத்தோலிக்க மற்றும் சிரியன் கிறித்துவர்கள் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

மதத்தை பயன்படுத்துபவர்களின் மொழி(கள்) புறக்கணிக்கப்பட்டால் (கிரேக்கம் மற்றும் லத்தீன்) மதம் பிளவு பெறும் என்பதற்கு கிறித்துவத்தில் புரோட்டஸ்டாண்டு என்னும் பிரிவு ஏற்பட்டு கிறித்துவம் பிளவு ஆகியதை நூல் ஆசிரியர் மிதமாக உணர்த்தி இருக்கிறார், அதற்கு காரணமாக பிரிதொரு மையக் கருத்தாக ரோம் தலைமையின் கட்டுப்பாடுகள், ஆளுமைகள் என்கிற குற்றச் சாட்டு எழுந்து கிறித்துத்தில் பிரிவுகள் ஏற்பட்டு பிரிந்தாகக் குறிப்பிட்டு இருக்கிறார். 'ஆண் வாரிசு' இல்லை என்பதற்காக மற்றோர் திருமணம் செய்து கொள்ள இங்கிலாந்து மன்னன் எட்டாம் ஹென்றி முடிவு செய்த போது அதை பாப்பரசர்(போப்) தலைமை திருச்சபை எதிர்க்க, கட்டுப்படாத மன்னன் பாப்பரசருக்கு எதிராக புரோட்டஸ்டாண்ட் பிரிவை ஆதரிக்க இங்கிலாந்து முழுவதும், மற்றும் உலக நாடுகளில் புரோட்டஸ்டாண்ட் பிரிவு வளர்ச்சி கண்டதாகா குறிப்பிட்டு இருக்கிறார். ஆண் வாரிசு ஆசை மதங்களையே ஆட்டம் காண வைக்கிறது என்று நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது.

இன்றைக்கும் தொடரும் பாலஸ்தீன இஸ்ரேல் பிரச்சனைகள் சிலுவைப் போர்களின் தொடர்ச்சி எனலாம், கிறுத்துவின் நிலம் (பெத்லகேம்) மீட்கும் போராட்டமாக தொடங்கப்பட்ட சிலுவைப் போர்கள் பல பின்னடைவை சந்தித்து இஸ்ரேல் என்னும் தனி நாடு உருவாக காரணமாக அமைந்திருக்கிறது. ஐரோப்பாவில் இஸ்லாமிய படையெடுப்புகள் ஐரோப்பியர்களை கிறித்துவர் மதம் சேர்ந்தவர்கள் என ஒன்றிணைந்த போராட்ட சக்தியாக மாற்றியது, கிறித்துவ பிரிவுகள் வேற்றுமைகளை மறந்து ஒன்றிணைய இஸ்லாமிய படையெடுப்புகள் தான் மறைமுகமாக வழி அமைத்தது. சிலுவைப் போர்கள் பற்றிய அறிமுகமாக ஆசிரியர் எளிமையாகக் அவைபற்றிக் குறிப்பிட்டு இருக்கிறார்.

தமிழில் விவிலியம் எனப்படும் பைபிள் எனப்படும் கிறித்துவர்களின் மறை நூல்களின் பிரிவுகள் (புதிய, பழைய ஏற்பாடுகள்) யாரால் ஏற்பட்டது, யாரால் தொகுப்பட்டது போன்ற விவரங்கள் நூலில் அடங்கி இருக்கிறது. கிறித்துவத்தின் பல்வேறு பிரிவுகளின் வேறுபாடுகள், அவர்கள் தங்கள் பணியாக நினைப்பது பற்றி சுறுக்கமான அறிமுகங்களைக் கொடுத்து இருக்கிறார். கொலைக் கருவியான சிலுவை எப்போது புனித சின்னமாக மாறியது, கிறித்துவ கொள்கைகள் திரிப்பு அல்லது வசதிக்கேற்று பொருள் கூறி வளர்ந்த கிறித்துவ பிரிவு இயக்கங்கள் ஆகியவை நூலில் சொல்லப்பட்டு இருக்கின்றன.

ஏசுவின் மறுவருகை இதோ, மீட்பர் இதோ வருகிறார் என்று சொல்லப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரு மதம் வளர்ச்சி பெற்றே வந்திருக்கிறது என்று நினைத்துப் பார்த்தால் பெரும் வியப்பு தான். குறியீடுகளையும் சிலை வழிபாடுகளையும் எதிர்த்து துவங்கிய கிறித்துவ மதம் சிலுவை குறியீட்டையும், சிலை வணக்கங்களையும் மீண்டும் கொண்டிருக்கிறது என்பதையெல்லாம் பார்க்கும் போது 'நாளை வருகிறார் ஏசு' என்கிற நம்பிக்கைக்கு குறியீடுகளும் சிலை வணக்கமும் மறைமுகமாக உறுதுணை புரிவதாக எனது புரிதல்.

இன்னும் நூலின் தகவல் உள்ளடக்கம் மற்றும் கிறித்துவம் பற்றி மிகுதியாகவே எழுத விருப்பம், இடுகை நீண்டுவிடும் என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்

*****

சேவியர் சிறப்பாக எழுதி இருந்தாலும் படிக்கும் போது கிறித்துவத்தில் கத்தோலிக்க கிறித்துவ பிரிவே உண்மையானது என்று சொல்லுகிறாரோ என்கிற பொருள் மயக்கம் வருகிறது. இங்கு பின்னூட்டத்தில் சேவியர் விளக்கம் அளித்தால் மகிழ்வேன். என்னுடைய அவதனிப்பு, என்னுடைய வாசித்தல் துய்ப்புபடி சொல்வதென்றால் நூலின் உள்ளடக்கம் மற்றும் எழுத்து நடை மிகச் சிறப்பு.


வரலாற்று ஆர்வம் உடையவர்களுக்கு,கிறித்துவம் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவர்களுக்கு பரிசாக கொடுக்க ஏற்ற நூல்


நூல் கிடைக்கும் இடம் : கிழக்கு பதிப்பகம்
நூலின் விலை : 100

13 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நூலை முழுமையாக உணர்ந்து படித்துள்ளீர்கள் என்று புரிகின்றது... பகிர்வுக்கு நன்றி கலந்த பாராட்டுகள்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆ.ஞானசேகரன் said...
நூலை முழுமையாக உணர்ந்து படித்துள்ளீர்கள் என்று புரிகின்றது... பகிர்வுக்கு நன்றி கலந்த பாராட்டுகள்
//

பாராட்டுக்கு மிக்க நன்றி !

priyamudanprabu சொன்னது…

அண்ணே நான் கிமு என்ற புத்தகம் படித்துள்ளேன்

//////////
உலகில் அன்பு என்னும் ஆயுதம் ஏந்தி புறப்பட்டவை இரு மதங்கள் தான் ஒன்று பவுத்தம், மற்றொண்டு கிறித்துவம்,
/////

ஏந்தி புறப்படர்கள் ஆனால் பின்னர் அது கொலை ஆயுதமாக(சிலுவைபோர்) ஆகிபோனதே!!!

சேவியர் சொன்னது…

அன்பின் கோவி.கண்ணன்,
விரிவான விமர்சனத்துக்கு மனமார்ந்த நன்றிகள். இதுவரை வந்த கிறிஸ்தவ வரலாறுகள் சார்பு வரலாறுகள் என்பது என் கருத்து. அதாவது கத்தோலிக்கர்கள் சொல்லும் வரலாறு, புராட்டஸ்டண்ட் பிரிவினர் சொல்லும் வரலாறு. இரண்டிலும் பல வேறுபாடுகள் இருக்கும். அந்த வேறுபாடு இருக்கக் கூடாது என்பதற்காகத் தான் இந்த நூலில் இரண்டு தரப்பு நிகழ்வுகளின் அடிப்படையில் வரலாறு தரப்பட்டுள்ளது. இரண்டு தரப்பு விவிலிய அறிஞர்களின் கருத்துகள், தகவல்கள் அடிப்படையில் தான் இதை எழுதியிருக்கிறேன். அதே போல புராட்டஸ்டண்ட் வரலாறுகள் மறைக்க முயலும் புராட்டஸ்டன் பிரிவினையின் உண்மையான காரணங்களில் ஒன்றையும் இதில் பதிவு செய்திருக்கிறேன். அந்த செய்தி மற்றும் மேரி வணக்கம் , பின்னணி போன்றவை உங்களுக்கு கத்தோலிக்க சார்பு எனும் தோற்றத்தை உருவாக்கியிருக்கலாம் என நினைக்கிறேன்.
வாசித்தமைக்கும், நேசித்தமைக்கு, எழுதியமைக்கும் மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்
சேவியர்

கோவி.கண்ணன் சொன்னது…

// பிரியமுடன் பிரபு said...

அண்ணே நான் கிமு என்ற புத்தகம் படித்துள்ளேன்//
கிமுகிபி புத்தகமா ? ஆவி மதன் எழுதியதா ?


// ஏந்தி புறப்படர்கள் ஆனால் பின்னர் அது கொலை ஆயுதமாக(சிலுவைபோர்) ஆகிபோனதே!!!//

அந்த குறீயீட்டில் இணைந்தார்கள். இஸ்லாம் என்ற பெயரில் அவர்களுக்கு முன்பு பெரும் அறைகூவல் இருந்ததால் அவர்களும் கிறிஸ்தவம் என்னும் மதம் சார்பில் இணைவது தேவையாக இருந்தது.

கோவி.கண்ணன் சொன்னது…

சேவியர்,

விளக்கத்திற்கும், இடுகையைப் பாராட்டியதற்கும் மிக்க நன்றி.

பழகிய சீனப் பெண்மணி ஒருவரிடம் 'நீங்கள் கத்தோலிக்கரா ?' என்று கேட்டேன்,
"இல்லை, நான் கிறித்துவர் என்றார்"
எனக்கு வியப்பாக இருந்தது, அவர் தன்னை மெதடிஸ்ட் என்று சொல்லிக் கொண்டார். அவர்கள்(மெதடிஸ்ட் மற்றும் புரோட்டஸ்டண்ட்) கத்தோலிக்கர்களை கிறித்துவராக நினைப்பதில்லை என்று தெரிந்தது.

சேவியர் சொன்னது…

//அண்ணே நான் கிமு என்ற புத்தகம் படித்துள்ளேன்//

நன்றி பிரபு. கி.மு நூல் பரவலாக சென்று சேர்ந்த நூல். வெளிநாடுகளிலிருந்தும், திரை நண்பர்கள் வட்டாரத்திலிருந்தும் (இயக்குநர் மகேந்திரன் உட்பட) நிறைய பாராட்டுகளைப் பெற்றுத் தந்த நூல்.

priyamudanprabu சொன்னது…

///
கோவி.கண்ணன் said...

// பிரியமுடன் பிரபு said...

அண்ணே நான் கிமு என்ற புத்தகம் படித்துள்ளேன்//
கிமுகிபி புத்தகமா ? ஆவி மதன் எழுதியதா ?
////

நான் படித்தது
கி.மு விவிலியக் கதைகள் - சேவியர் எழுதியது

priyamudanprabu சொன்னது…

////
அந்த குறீயீட்டில் இணைந்தார்கள். இஸ்லாம் என்ற பெயரில் அவர்களுக்கு முன்பு பெரும் அறைகூவல் இருந்ததால் அவர்களும் கிறிஸ்தவம் என்னும் மதம் சார்பில் இணைவது தேவையாக இருந்தது.
///




சமிபத்தில் நான் படித்த நிலமெல்லாம் ரெத்தம் என்ற புத்தகத்தில் சிலுவை போர் பற்றி படித்துள்ளேன்


அவர்கள் இணைந்ததன் விளைவு கொலைகள் தானே
ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறு கண்ணம் காட்டு என்று பேசிய மதத்தில்தான் 250 ஆண்டுகள் சிலுவை போர் என்ற பெயரில் படுகொலைகள் நிகழ்ந்தன(1095-1250)

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

//பழகிய சீனப் பெண்மணி ஒருவரிடம் 'நீங்கள் கத்தோலிக்கரா ?' என்று கேட்டேன்,
"இல்லை, நான் கிறித்துவர் என்றார்" //

பெரியவா,
இந்தியாவில் எல்லாரையும் கிறிஸ்தவர்கள் என்று சொல்லுவோம், கிறிஸ்தவ மதத்திற்குள் உட் பிரிவுகளாக கத்தோலிக்கர், ப்ரெட்டஸ்டாண்ட், ஜெகோவைட், பெண்டிகோஸ்ட் என பல பிரிவுகளை சொல்லுவோம். ஆனால் சிங்கையிலும் சரி, பிற நாடுகளிலும் சரி கத்தோலிக்கர்கள் தவிர்த்து மீதமுள்ள அத்தனை பிரிவினரையும் கிறிஸ்தவர்கள் என சொல்லுகிறார்கள். கத்தோலிக்கம் என்பதே இங்கு தனிமதமாகப் பார்க்கப்படுகிறது.

கத்தோலிக்கர்கள் குழந்தை பிறந்த உடனேயே ஞானஸ்நானம் எனும் திருமுழுக்கு நடத்திவிடுவோம். ஆனால் பிற பிரிவுகளில் வயது வந்த பின்னரே இந்த திருமுழுக்கு நிகழ்கிறது. இது தான் அவர்கள் கூறும் மிகப் பெரிய வித்தியாசம்.

கத்தோலிக்கர்கள் மிகுந்த சகிப்புத் தன்மை வாய்ந்தவர்கள். உங்கள் வீட்டில் சாமி கும்பிட்டு பலகாரம் குடுத்தா நாங்க சாப்புடுவோம். ஆனா பிற பிரிவினர் அடுத்த மதத்து சாமிக்கு படைச்சது அப்டின்னு சொல்லி சாப்புட மாட்டாங்க. இப்டி பல விசயங்கள் அடுக்கிக்கிட்டே போகலாம்.

சேவியர் அவர்கள் எழுதிய புத்தகம் இன்னும் படிக்கலை. படிச்சுட்டு என்னோட கருத்தை கட்டாயம் சொல்லுறேன்.

மிக ஆழமா படிச்சு, மிகத் தெளிவா விமர்சனம் செஞ்சுருக்கீங்க. நல்லாருக்கு.

மீனாட்சி சுந்தரம் சொன்னது…

கட்டுரை அருமை அண்ணா,,ஆழ்ந்து படித்துள்ளீர்கள் போல,,,

முகவை மைந்தன் சொன்னது…

உலகில் பெரும்பான்யோர் கிறித்துவர்கள்ன்றது கொஞ்சம் நெருடுது. 50 விழுக்காட்டுக்கு மேல் கிறித்துவர்களா??? ஒருவேளை தேர்தல் முடிவு காட்டும் பெரும்பான்மையோ (இருக்குற மதங்கள்ல நிறையப் பேர் பின்பற்றுவது)?

கோவி.கண்ணன் சொன்னது…

//முகவை மைந்தன் said...
உலகில் பெரும்பான்யோர் கிறித்துவர்கள்ன்றது கொஞ்சம் நெருடுது.
//

முகவை,
எங்கே அது போல் சொல்லப்பட்டு இருக்கு ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்