பின்பற்றுபவர்கள்

10 பிப்ரவரி, 2009

மதுரை திருக்காட்சி பகுதி 3

சீனா ஐயாவை அலுவலகம் செல்லச் சொல்லிவிட்டு, மாட்டுதாவணி செல்லும் சிறு பேருந்து ஒன்றில் ஏறி அமர்ந்தேன். அது சந்துபொந்தெல்லாம் புகுந்து ஒரு 30 நிமிடத்தில் மாட்டுதாவணி நிலையத்தில் நின்றது. மாலை 4:30 இருக்கும், ஓட்டல் அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தேன். அலைபேசி அழைத்தது...'நான் தருமி பேசுகிறேன்...(வெளிநாட்டில் இருந்து வந்த) மகள் மற்றும் பேரக் குழந்தைகள் வேறொரு உறவினர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். நான் இப்ப ப்ரீதான்...வருகிறேன்'
என்றார். வருவதற்கு 30 நிமிடங்கள் ஆகும் என்றார்.

சரியாக 30 நிமிடத்திற்குள்ளேயே வந்துவிட்டார்.

பெரியவர்களில் மற்றவர்களிடம் பழகுவதற்கும் தருமி ஐயாவிடம் பழகுவதற்கும் வேறுபாடு உள்ளது.எப்போதும் தற்கால சிந்தனைகளில் இருப்பவர். பகுத்தறிவு வாதி, எந்தவயதினராக இருந்தாலும் கிட்டதட்ட ஒத்த வயதினர் போலவே இவருடன் உரையாடும் அளவுக்கு மிக இயல்பாக பேசுவார். மற்றவர்களிடம் பேசும் போது அவர்களின் வயதின் காரணமாக மிகவும் மதிப்பு கொடுத்து பேசுவேன். இவரிடம் நெருங்கிய நண்பரைப் போல பேசுவேன். வயதாகிவிட்டாலே நாத்திக கொள்கைகளில் எவ்வளவு உறுதியாக இருந்தாலும் மரண பயம் காரணமாக மாற்றம் இருக்கும். இவரிடம் அதை சிறிதும் பார்க்க முடியாது. 'கடவுள் உண்டு / இல்லை என்பதில் முன்பெல்லாம் அப்படி இப்படி நினைப்பேன்...இப்ப ரொம்ப தெளிவாக இருக்கிறேன்' என்றார். ஹோட்டல் அறையிலேயே சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தோம்.



பிறகு வீட்டுக்கு அழைத்தார்.

வரும்போது மகிழுந்து அவரே ஓட்டிக் கொண்டு வந்திருந்தார். இருவரும் அவர் இல்லம் நோக்கி பயணித்தோம். வழியெங்கும் 'அழகிரி பிறந்த நாள்' கொண்டாட்டம் களைகட்டி இருந்தது. அதைப் பற்றி கலகலப்பாக பேசிக்கொண்டே சென்றோம். அவர் திமுக அனுதாபி/ அபிமானி. 'கட்சியை கெடுத்துடுவானங்க போல இருக்கு, ரொம்ப வருத்தமாக இருக்கிறது' என்றார்.




'கட்சி ஏற்கனவே திசைமாறிவிட்டது, மூன்றாம் கட்டத் தலைவர்கள் வரும் போது எல்லா கட்சியிலுமே இவையே நடக்கும், கெட்டும் போன கட்சிக்கு ஏன் வருத்தப்படுறிங்க' என்றேன்

'என்ன இருந்தாலும் திமுகவை விட்டால் அதிமுக...அந்த அம்மா அப்படியே தானே இருக்கு, அதனால்தான் கவலையே' என்றார்

'எல்லோரும் ஒரே குட்டையில் ஊறும் போது, அதே தட்டில் தானே எடைபேடமுடியும்' என்றேன்

'கட்சி கெட்டுப் போகுது...எனக்கு ஏற்கமுடியவில்லை' என்றார். திமுக மீது இவ்வளவு அபிமானமா ? கலைஞர் ஒருவரால்தான் பலரும் திமுக மீது அனுதாபம் கொண்டு சகித்திக் கொண்டு இருக்கிறார்கள் என்று புரிந்தது.

பேசிக் கொண்டு சென்றதில் நேரமோ, தொலைவோ தெரியவில்லை. மதுரை நகருக்கு கொஞ்சம் தள்ளி அவரது இல்லம் என்றாலும், மதுரையின் வளர்ச்சியில் அந்த இடமும் மதுரைக்குள்ளே இருப்பதாக நினைக்கும் அளவுக்கு எங்கும் குடியிருப்புகள். முதன் முதலில் இவர் வீடுகட்டி வந்தபோது மண் பாதையாக இருந்தது. அரசாங்கத்திடம் இவரது தொடர் முறையீட்டால் / முயற்சியால் தார் சாலையாக இருக்கிறது, என்பதை அவர் சொன்னதில் இருந்து அறிந்து கொண்டேன். தார் சாலை வரக் காரணமாக இருந்தவர் என்பதால் அவர் மீது அப்பகுதி மக்களுக்கு பெரிய மதிப்பு இருக்கிறது.

வீட்டுக்குள் சென்றோம், வீட்டுவாசலில் அவர்கள் வளர்க்கும் குட்டி நாய் வரவேற்பு கொடுத்தது, உள்ளே நுழைந்ததும் தருமி ஐயாவின் துணைவியார் மிகுந்த வரவேற்பு கொடுத்தார். வீட்டின் உற்பகுதிகளைக் அழைத்துச் சென்று காட்டினார்கள். இவருக்கென்றே கணினியுடன் கூடிய தனி அறை இருக்கிறது.


வீட்டுற்குள் நுழைவாயிலாக அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய அழகான ஓரளவு பெரிய ஒற்றை நிலைக்கதவு இருந்தது. பொதுவாக இந்துக்கள் தான் இப்படி மெனக்கட்டு கதவுக்கு செலவு செய்து அலக்கரிப்பார்கள், இவர் மதம் என்ற அளவில் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் ... இவர்களும் இப்படி கதவு செய்வார்களா ? கதவு கண்ணை விரியவைத்தது. வரவேற்பு அறை சுவர்களில் அழகான ஜெய்பூர் சித்திர ஓவியம் பொருத்தப்பட்டு இருந்தது. எதிர்சுவரில் வாரிசுகள் மற்றும் பேரக் குழந்தைகளின் நிழல்படங்கள் அலங்கரித்திருந்தன. முகம் கைகால் கழுவிக் கொள்ளச் சொன்னார்கள், பிறகு சிற்றூண்டியாக சமோசா மற்றும் ஜாங்கிரியுடன் தேநீர் பரிமாறினார்கள்.

இந்த தம்பதிகள் ஒருவருக்கொருவர் 'யப்பா...யப்பா' என்று அழைத்துக் கொள்கிறார்கள். வியப்பாக இருந்தது, அவர்கள் இருவருக்கும் இருக்கும் நெருக்கம் தோழமையுடனும் சேர்ந்தே இருப்பதையே உணர்ந்தேன். தருமி ஐயாவின் துணைவியாரும் அன்பாக எனது உறவுகள் குறித்து விபரங்களைக் கேட்டுக் கொண்டார். சுமார் 30 நிமிடம் அங்கிருந்திருப்பேன். சீனா ஐயா இரவு உணவுக்கு ஒரு ஓட்டலை குறிப்பிட்டு அங்குவருமாறு என்னையும் தருமி ஐயாவையும் அழைத்தார். அங்கிருந்து இந்த முறை ஸ்கூட்டியில் கிளம்பினோம், அவரே ஓட்டிவந்தார். .

ஓட்டல் பெயர் குழப்பத்தில் வேறொரு இடத்திற்கு சென்று பிறகு அவரை அழைத்து தெளிவு படுத்திக் கொண்டு சரியான ஓட்டலுக்குச் சென்றோம், காண்டினென்ட் ஓட்டல். மாலை 6:30 ஆகி இருந்தது, சீனா ஐயாவும், செல்விஷங்கர் அம்மாவும் வரவேற்பறையில் காத்திருந்தனர்

இரவு சாப்பிடும் நேரம் அதுவல்ல என்றாலும் அங்கே பேசிக் கொண்டே பொறுமையாக உணவருந்த முடியும்,



பேபிகார்ன் சூப்பில் ஆரம்பித்து, Nan மற்றும் அன்னாசி வறுத்த சோறு (பைனாப்பிள் ப்ரைட் ரைஸ்) மற்றும் பழத்துண்டுகள் (சாலட்), பனிக்குழைவு (ஐஸ்கிரீம்) என வரவழைத்து சீனா ஐயா உபயத்தில் சாப்பிட்டோம். மிக மகிழ்ச்சியான பொழுதுகள் ஆக இருந்தது. உரையாடல்கள் மிக இயல்பாகவே...தருமி ஐயா...சீனா ஐயா இருவரில் யார் அண்ணன் / தம்பி என கேலியும் கிண்டலுமாகவே சென்றது.



மணி இரவு 8. அவர்களிடம் ஏற்கனவே தெரிவித்திருந்தபடி 8:30க்கு நான் இரயில் நிலையத்திற்கு போகும் நேரம் நெருங்கவே சீனா ஐயாவிடமும், செல்விஷங்கர் அம்மாவிடமும் விடைபெற்றுக் கொண்டேன். தருமி ஐயா இரயில் நிலையம் அருகில் என்னை இறக்கிவிட்டார்.

என்மீது அன்பு மழை பொழிந்தவர்களுக்கு எப்படி நன்றி சொல்லப் போகிறேன் என்று நினைத்துக் கொண்டே இரயில் நிலையம் நோக்கி நடந்தேன்.



மணி 8:30 இரயில் நிலையத்தில் வரும் / போகும் இரயில்கள் மிகுந்த நேரம். கூட்டமாகவே இருந்தது. 'வைகை வந்துவிட்டதா', சிலரிடம் கேட்டேன் சரியான தகவல் இல்லை. பிறகு ஒலிப்பெருக்கியில் வந்து சேர்ந்ததை தெரிவித்தார்கள், அந்த பதிவர் நண்பர் இப்படியாகத்தான் வரவேண்டும் என்று பயணிகள் வெளியேறும் வழியில் காத்திருந்தேன். வெளியே வந்த கூட்டத்தில் அவர்களைக் கண்டு கொள்வது வாய்ப்பற்றது என்றே தெரிந்தது. ரயில் நிற்கும் இடத்தில் பார்கலாம் என்று மேலே படியில் ஏறிக் கொண்டே... வந்துவிட்டாரா என்பதை அறிய அழைபேசியில் அழைத்தேன்.

'வந்துட்டோம்...இறங்கி அங்கேயே தான் நிற்கிறோம்...' என்றார்

'எங்கே நிற்கிறிங்க...சரியாக பெட்டி எண்ணை சொல்லுங்க'

'C1...'

'வைகை நிற்கும் அடுத்த ப்ளாட்பார்மில் இப்ப ஒரு இரயில் கிளம்பி போய் கொண்டு இருக்கிறதே...அது போகும் பக்கமா ...எதிர்பக்கமா ?'

'ரயில் செல்லும் பக்கம் தான்'

நடந்தேன்....அரை கிலோமீட்டருக்கும் மேலான தொலைவு, 15 பெட்டிகளைக் கடந்து சென்றேன்.B1..B5..B12...C1...

C1 கடைசி பெட்டி அருகில் இருந்தே நான் C1 ஐ நெருங்கும் முன்பாக என்னை கண்டு கொண்டு என்னை நோக்கி நடந்து வந்தார் அந்த பதிவர், கூடவே அவரது மனைவி, அவரது அப்பா...மற்றும் அவரது நான்கு வயது பையன்......அந்த

பையன் யாருமல்ல..... உதட்டை கடித்தபடி



குட்டி ரத்னேஷ் ...!!!

தொடரும்....

12 கருத்துகள்:

வால்பையன் சொன்னது…

தருமி ஐயா வீட்ல அவரே செஞ்ச ஒரு ஜூஸை கொடுத்து டெஸ்ட் பண்ணுவாரே! கொடுக்கலையா?

சும்மா லுலுலாயிக்கு!

நான் முதன் முதல் சந்தித்த போது அவர் ஆக்டிவா வண்டியில் வந்தார்! நீங்கள் ஸ்கூட்டி என்று குறிப்பிடுகிறீர்கள்.

வண்டி மாறிவிட்டதா?

சீனா ஐயா அழைத்து சென்ற உணவகம் சங்கம் ஹோட்டலா?

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

அண்ணே 8.30 கிளம்புறது வைகை எக்ஸ்பிரஸ் அல்ல...பாண்டியன் எக்ஸ்பிரஸ்

(அடப்பாவி...நீ வெளிநாடாதான் பொறுக்குறன்னு நினைச்சா உள்நாட்லயுமான்னு நீங்க கேக்குறது புரியுது)

:))))))))))))

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
தருமி ஐயா வீட்ல அவரே செஞ்ச ஒரு ஜூஸை கொடுத்து டெஸ்ட் பண்ணுவாரே! கொடுக்கலையா?

சும்மா லுலுலாயிக்கு!
//

அதெல்லாம் யாரை துறத்துனும்னு நினைக்கிறாரோ அவங்களுக்கு கொடுப்பார் போலும் ! :) சும்மா லுலுலாயிக்கு!


//நான் முதன் முதல் சந்தித்த போது அவர் ஆக்டிவா வண்டியில் வந்தார்! நீங்கள் ஸ்கூட்டி என்று குறிப்பிடுகிறீர்கள்.

வண்டி மாறிவிட்டதா?
//

வண்டி பெயரெல்லாம் தெரியல, பெரிய ஸ்கூட்டி மாதிரி இருந்தது

//சீனா ஐயா அழைத்து சென்ற உணவகம் சங்கம் ஹோட்டலா?
//

அதே அதே !

கோவி.கண்ணன் சொன்னது…

//எம்.எம்.அப்துல்லா said...
அண்ணே 8.30 கிளம்புறது வைகை எக்ஸ்பிரஸ் அல்ல...பாண்டியன் எக்ஸ்பிரஸ்

(அடப்பாவி...நீ வெளிநாடாதான் பொறுக்குறன்னு நினைச்சா உள்நாட்லயுமான்னு நீங்க கேக்குறது புரியுது)

:))))))))))))
//

தம்பி,
கிளம்பிய ரயில் இல்லை,மதுரைக்கு வந்து சேர்ந்த ரயிலு.

வெண்பூ சொன்னது…

கோவி.. உங்களுக்கு பயணக்கட்டுரை அழகாக எழுத வருது.. போர் அடிக்காமல் படிக்க இன்ட்ரெஸ்டாக இருக்கிறது..

ambi சொன்னது…

என்னது தருமி அய்யா, சீனா சார் (ஒரு தடவ தான் அய்யான்னு சொல்லுவோம்)எல்லாரும் மதுரையா? அவ்வ்வ்வ். தெரியாம போச்சே! ஜனவரி 26 மதுரைல தான் இருந்தேன். அடுத்த தடவ பாத்துக்கறேன்.

சூஸ் குடுக்காம இருந்தா சரி (இதுவும் சும்மா லுலுவாயிக்கு தான்) )))

என்ன கோவி அண்ணே, சென்னை, மதுரைன்னு ஒரே சுற்றுபயணமா இருக்கு? எம்.பி எலக்ஷனுல நிக்க போறீங்களா? :p

ambi சொன்னது…

//அதெல்லாம் யாரை துறத்துனும்னு //

துரத்தனும். சின்ன ர தான் இங்க வரனும்.

பனிக்கூழ் அது இதுன்னு போட்டு இருக்கீங்க இல்ல, அதான் திருத்தனும்னு கை துறுதுறுத்தது. (இந்த இடத்துல பெரிய ற தான்) :))

priyamudanprabu சொன்னது…

கோவி.. உங்களுக்கு பயணக்கட்டுரை அழகாக எழுத வருது.. போர் அடிக்காமல் படிக்க இன்ட்ரெஸ்டாக இருக்கிறது..



இதைத்தானுங்க நானும் சொல்ல வந்தேன்

priyamudanprabu சொன்னது…

நல்லா ஊர் சுத்துவிங்க போல!!1

துளசி கோபால் சொன்னது…

அப்பாடா...... தருமி வீட்டுக்கதவை முதல்முதல் பார்த்த பதிவர் நாந்தான்:-))))

அவுங்க வீட்டுக் குட்டிநாய் பெயர் விசாரிச்சீங்களா?

நான் போனப்ப 'போபோ' :-))))

ரத்னேஷ் சூப்பரா இருக்கார்.

குமரன் (Kumaran) சொன்னது…

அடுத்து ஊருக்குப் போகும் போது உங்க பதிவைப் பாத்துத் தான் யார் யாரைப் பாக்கலாம்ன்னு பட்டியல் போடப்போறேன். தொடர்பு எண்களைக் கேட்டு அப்ப உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும். :-)

போன தடவை சொல்லாம கொள்ளாம வந்து போயிட்டேன்னு தருமியார் கோவிச்சுக்கிட்டார். இந்தத் தடவையும் அப்படி பண்ணுனா நல்லாயிருக்காது. :-)

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) 8:33 AM, February 12, 2009
அடுத்து ஊருக்குப் போகும் போது உங்க பதிவைப் பாத்துத் தான் யார் யாரைப் பாக்கலாம்ன்னு பட்டியல் போடப்போறேன். தொடர்பு எண்களைக் கேட்டு அப்ப உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும். :-)//

எப்ப வேண்டுமானாலும் அனுப்புங்க, ஜிமெயில் அலைபேசி எண்களை அப்படியே டிராப்டில் வைத்திருக்கிறேன். அனுப்புகிறேன்

//போன தடவை சொல்லாம கொள்ளாம வந்து போயிட்டேன்னு தருமியார் கோவிச்சுக்கிட்டார். இந்தத் தடவையும் அப்படி பண்ணுனா நல்லாயிருக்காது. :-)
//

ஊருக்குள்ளே இருந்துக் கொண்டே அக்கிரமம், அநியாயம்.

எல்லோருமே எப்போதுமே அதே ஊரில் இருப்பார்கள் என்பது நிச்சயமற்றது. வாய்ப்பு கிடைக்கும் போது தவறவிடக் கூடாது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்