********
சிங்கப்பூரில் தைபூச விழா தண்டபாணி முருகன் கோவில் ஏற்பட்டத்திலிருந்து நடந்துவரும் நூற்றாண்டு நிகழ்ச்சியாகும், காவடி எடுத்தல் என்னும் நிகழ்வு தமிழர்கள் கடைவிரித்திருக்கும் செரங்கூன் சாலையில் உள்ள பெருமாள் கோவிலில் துவங்கி ஏறக்குறைய 4 கிமி தொலைவில் இருக்கும் டோபிகாட் அருகே அமைந்த தெண்டபாணி முருகன் கோவிலில் முடிவடைகிறது, இந்த நிகழ்வின் ஊர்வலத்திற்காக சாலைகளின் ஒரு பகுதியில் தடுப்புகளை அமைத்து வசதி செய்து தருகிறது சிங்கப்பூர் அரசு, இதற்காக முதல் நாள் இரவில் இருந்தே சாலைகள் மாற்றி அமைக்கப்பட்டு மறுநாள் பின்னிரவு வரை காவடிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, காவடியின் உற்சாகத்திற்கு வழக்கமான ஒத்தையடி மேளம் தடை என்றாலும் ஒலி குறைந்த வகையில் வாசித்துக் கொண்டு செல்வதை அரசு கண்டு கொள்வது கிடையாது, இதற்காக வாசிப்பு குழுவினர்கள் மற்றும் இளைஞர்கள் காவடி எடுக்கும் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டால் வாசித்து அவர்களிடம் தொகை பெற்றுக் கொள்கின்றனர். தொகைப் பெற்றுக் கொள்வதை நான் பார்க்கவில்லை, இருந்தாலும் பணம் கொடுக்கப்படும் என்றே நினைக்கிறேன்.
சீன நம்பிக்கைகளுக்கும் இந்திய சமய சார் நம்பிக்கைகளுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை, இந்தியக் கோவில்களில் சீனர்களையும் சீனக் கோவில்களில் இந்தியர்களையும் பார்க்க முடியும் என்பதாலும் காவடி எடுப்பவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சீனர்களும் உண்டு, பெரும்பாலும் மயில் தோகையால் அலங்கரித்த காவடிகளை சுமந்து செல்கின்றனர், அவர்களில் பெரும்பாலோர் அலகு எனப்படும் ஊசிகளை உடலில் சொருகியுள்ளனர், சிலர் கன்னத்தில் வேல் சொருகி இருந்தனர். 8 வயதிற்கும் 70 வயதிற்கும் உட்பட்ட ஆண் பெண் என பலரும் பால்குடம் சுமந்து சென்றனர். மயில் தோகை அலங்காரக் காவடிகளை எடுப்பவர்கள் பெரும்பாலும் நடுத்தரவயது ஆண்களே.
காவடிகளை கண்டுகளிக்க இந்திய சமூகம் அங்கங்கே கூடி இருந்தனர், அவர்களுக்கும் காவடியுடன் வருபவர்களுக்கும் இளைப்பார நீர் மோர், தண்ணீர் மற்றும் பிற குளிர்பான வகைகளுடன் அங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தன. நான் முன்பு பலமுறை சென்றிருக்கிறேன் இந்த ஆண்டும் வழக்கம் போல் கட்டுக்கடங்காத கூட்டம் தான், செரங்கூன் சாலையின் அருகே போக்குவரத்து விளக்கைக் கடக்கும் போது மக்கள் நெருக்கத்தில் பிதுங்க நேரிட்டது.
எட்டுக்குடி உள்ளிட்ட புகழ்பெற்ற முருகன் கோவில்களின் காவடி குழுவினருடன் ஒவ்வொரு ஆண்டும் திருவிழாக்களுக்குச் சென்றிருக்கிறேன், அங்கிருக்கும் உற்சாகங்கள் இங்கு இல்லை என்று ஒப்பீட்டு அளவில் நினைத்தாலும், அல்ட்ரா மாடர்ன் சிட்டி எனப்படும் சிங்கப்பூரில் வானுயர்ந்த கட்டிடங்களிடையே இத்தகைய காவடி ஊர்வலங்கள் கண்களை விரிய வைத்து உற்சாகம் கொடுப்பது என்னவோ உண்மை தான்.
குப்பைப் போட்டால் 500 வெள்ளி தண்டனை கட்டணம் வாங்கும் சிங்கப்பூரில் காவடி ஊர்வலத்தில் அதற்கு அமைக்கப்பட்ட சாலை தடுப்புகளுக்குள் போடப்படும் வெற்று பாட்டில்கள் மற்றும் பிற தாள் தம்பளர்கள், பேப்பர் குப்பைகள் கண்டு கொள்ளப்படவில்லை, சிங்கப்பூர் சாலைகளில் குப்பைகளை காவடி ஊர்வலத்தின் போது காணலாம், ஆனால் அவை ஊர்வலம் முடிந்த அரைமணி நேரத்திற்குள் சாலை தடுப்புகளை அகற்றும் முன்பே அகற்றப்பட்டுவிடும், மறுநாள் பார்க்கும் போது இந்த இடம் நேற்று இப்படி இருந்தது என்று சொன்னால் நம்புவது கடினம் தான்.
பொங்கல் மற்றும் தீபாவளி கடைகளுக்காக இந்திய சமூகம் ஒன்று கூடினாலும் பொருள் வாங்க வந்தவர்கள் என்ற அளவில் தான் அவர்களின் முகங்களை காண முடியும், ஒரு கொண்டாட்டமாக இருக்கும் மனநிலைகளில் அவர்களின் முகங்களைப் பார்க்க தைப்பூச விழா வாய்திருக்கிறது, குறிப்பாக இவ்வளவு பேர் இங்கு வசிக்கிறார்களா ? இவ்வளவு ஆண்டுகளுக்கு முன்பே கோவில்களை அமைத்து தமக்கான அடையாளங்களை உறுதி செய்துவிட்டார்களா ? தமக்கான கொண்டாட்டும் உரிமையை அரசிடம் இருந்து பெற்று விட்டார்களா ? என்று நினைக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி பிற பண்டிகை நாள்களில் கிடைப்பது இல்லை. என்னுடயை தனிப்பட்ட நம்பிக்கைகளை தள்ளி வைத்துப் பார்த்தாலும் பெருமிதமாகவே உணர்கிறேன்.
எந்த நாட்டிற்கு புலம் பெயர்ந்தாலும் தத்தம் அடையாளங்களை பேணுவது மிகவும் தேவையான ஒன்று, தமிழர்கள் அதை ஓரளவு சரியாக செய்துவருகின்றனர், குறிப்பாக இந்திய சமய, தமிழர் சார் கோவில்கள் மட்டுமின்றி, தமிழர்களால் கட்டப்பட்ட மசூதிகள், சர்சுகள் கூட சிங்கப்பூரில் இருக்கிறது, அதில் அந்தந்த மதத்தை சேர்ந்தவர்கள் பங்குபெறுகின்றனர்.
காவடி எடுப்பது அலகு குத்துவது உள்ளிட்டவை மூட நம்பிக்கை என்றாலும் கூட அவ்வாறு செய்பவர்கள் பிறருக்கு என்ன கேடு செய்கிறார்கள் என்று கேட்டுக்கொள்ளும் போது இத்தகைய மூட நம்பிக்கைகளை விமர்சனம் செய்வது வேலையற்ற வேலை என்றே நினைக்கிறேன், உடலை வருத்தும் வழிபாட்டு முறைகள் இல்லாத மதச் சமூகமே இல்லை என்னும் போது இவை சமூகக் குற்றமாக, சீர்கேடாக பார்க்க ஒன்றும் இல்லை என்றே கருதுகிறேன்.
விக்கிப்பீடியா தமிழ் பிரிவில் இணைக்க சுருக்கமாக :
தைப்பூசம் : இது தமிழகத்தைத் தவிர்த்து சிங்கப்பூர், மலேசியா மொரிசியஸ் மற்றும் தமிழர்கள் வாழும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் முருக வழிபாட்டை முன்னிட்டு சமயம் சார்ந்த பண்டிகை,ஆண்டு தோறும் தை திங்கள் முழுநிலவு அன்று வரும் பூச வின்மீன் நாளில் காவடி எடுத்து கொண்டாடப்படுகிறது. பால்குடம் மற்றும் மயில் தோகையில் அலங்காரம் செய்யப்பட்ட காவடிகளை அன்பர்கள் சுமந்து ஊர்வலமாக வந்து முருகன் கோவிலை அடைந்து அங்கு தாம் சுமந்துவந்த முழுக்கு பொருள் அல்லது பாலை முருகன் முழுக்கிற்காக கொடுத்துவிட்டு வணங்குவர், நிகழ்வின் ஒரு கிழமை (வாரம்) முன்பே காப்பு கட்டுதல் நடக்கும், அப்போது காவடி எடுக்கும் அண்பர்கள் நாணயத்தை மஞ்சள் துணியில் சுற்றி கைக்கடிகாரம் போன்று அணிந்து கொள்வர், வேண்டுதல் படி சில அன்பர்கள் மொட்டை அடித்துக் கொள்வர். காவடி எடுப்பவர்களும் அவரது இல்லத்தினரைச் சார்ந்தவர்களும் காப்பு கட்டியது முதல் காவடி எடுப்பது வரையிலான நாட்களில் அசைவ உணவுகளை தவிர்த்துவிடுவர்.
இணைப்பு:
8 கருத்துகள்:
// பொங்கல் பண்டிகையைப் போல் பி(பு)றமதங்களைச் சாராத தமிழர்கள் கொண்டாடும் மற்றொரு பண்டிகை 'தைபூசம்' முருகனைக் கொண்டாடுவது
//
தீபாவளி பண்டிகைப்போல என்று சொல்லுங்கள். பொங்கல் மதம் சார்ந்த பண்டிகை அல்ல :)
//தீபாவளி பண்டிகைப்போல என்று சொல்லுங்கள். பொங்கல் மதம் சார்ந்த பண்டிகை அல்ல :)//
அப்து ஐயர்,
பொங்கல் தமிழ் பண்டிகை என்றாலும் கொண்டாடுபவர்களில் பெருமளவு இந்தியசமய சார்பினர் தவிர்த்து வேறு யாரும் இல்லை, காரணம் அதன் கொண்டாட்ட முறைகளாக இருக்கலாம் என்ற பொருளில் அவ்வாறு குறிப்பிட்டேன், தவிர பொங்கலும் தைப்பூசமும் ஒன்று அல்ல, தைப்பூசம் முழுக்க முழுக்க சங்க கால சமய நம்பிக்கை தொடர்பில் சமய சார்பு பண்டிகை என்பது தெளிவு.
கோவி.கண்ணன் வடகலை அய்யங்கார் அவர்களே, இதைத்தான் நானும் சுட்டிக்காட்ட விரும்பினேன் :)
//புதுகை.அப்துல்லா said...
கோவி.கண்ணன் வடகலை அய்யங்கார் அவர்களே, இதைத்தான் நானும் சுட்டிக்காட்ட விரும்பினேன் :)//
அப்து ஐயர்,
அடுத்த முறை சிங்கப்பூருக்கு தைத்திங்கள் நாளில் நீங்கள் வந்தால் எங்காத்து சர்கரைப் பொங்கலை சுவைத்துக் கொண்டாடுவோம் வாருங்கள்.
பதிவு சொன்ன செய்தி புரிகிறது.
நம்பிக்கை அதன் வழித்தோன்றலான எதிர்ப்பார்ப்பு இல்லாமல் வாழ்க்கையை அமைக்க முடியாது. நம்பிக்கை எப்பொழுது மூட நம்பிக்கையாகும், என்பது நம்பிக்கை எப்படி ஏற்பட்டது என்ற methodology யை வைத்துதான்.
இந்தப் பதிவை வைத்து உங்களது நண்பர்கள் உங்கள் தலையை எப்படி உருட்டப் போகிறார்களோ தெரியவில்லை.
//இந்தப் பதிவை வைத்து உங்களது நண்பர்கள் உங்கள் தலையை எப்படி உருட்டப் போகிறார்களோ தெரியவில்லை.//
ஜால்ரா கோஷ்டி குழுமம் எதிலும் நான் உறுப்பினர் இல்லை, அவ்வாறவனர்கள் எனக்கு நண்பர்களாகவும் இல்லை. நான் தனிப்பட்ட மனிதர்களின் என்ன நினைப்பார்கள் என்று எழுதும் போது நினைப்பது இல்லை, என் மன ஓட்டத்தை எழுத எவரும் குறுக்கே நிற்பது போல் தெரியவில்லை.
:)
//பி(பு)றமதங்களைச் சாராத தமிழர்கள் // இதை கொஞ்சம் விளக்கவும் ..//பி(பு)றமதங்களைச் சாராத தமிழர்கள் -ன்னா இந்து தமிழர்கள்-ன்னு பொருள் வருது ..அது தான் நீங்க சொல்ல வருவதா ?
//பி(பு)றமதங்களைச் சாராத தமிழர்கள் -ன்னா இந்து தமிழர்கள்-ன்னு பொருள் வருது ..அது தான் நீங்க சொல்ல வருவதா ?//
காவடி எடுப்பது இந்து வழக்கம் இல்லை, தமிழர் வழக்கம், மற்றும் இந்து என்பதன் ஒட்டுமொத்த சந்தில் எல்லாவற்றையும் நுழைக்க விருப்பமின்மையால் அவ்வாறு குறிப்பிட்டேன்.
:)
கருத்துரையிடுக