பின்பற்றுபவர்கள்

17 பிப்ரவரி, 2012

இந்துத் தீவு - பகுதி 4

மனித குல இடப்பெயர்ச்சி துவக்க காலத்தில் நீர் நிலைகளை நோக்கிய பயணமாக இருந்தது, உலக பண்டைய நாகரீகங்கள் அனைத்தும் அவ்வாறே அமைந்தது, தண்ணீர் தேக்கம் பற்றி தெரிந்திருக்காத சூழலில் வற்றாத ஆறுகளின் கரைகளில் மக்கள் கூட்டமாக வாழ்ந்தனர், பின்னர் ஓரளவு நாகரீகம் பெற்ற பின்னர் விவசாயம் செய்யக் கற்று நகரங்களை அதற்குள் அமைத்துக் கொண்டனர், மனித இனக்குழுவாக அடையாளங்கள் தெரிந்த பிறகு இட அபகரிப்பு அல்லது கைப்பெற்றுதல் என்ற அளவில் பல்வேறு நகரங்கள் பிற இன / மத பழக்கத்தைச் சார்ந்தவர்களால ஆக்கிரமிக்கப்பட்டு, நிலத்தில் வாழ்ந்த மண்ணின் மக்கள் துறத்தப்பட்டனர், கடந்த 1000 ஆண்டுகளில் இடப் பெயர்வு என்பது தப்பிச் செல்லுதல் அல்லது கைப்பற்றுதல் என்ற அளவிலேயே நடந்துவருகின்றன, ஆனால் இன்றைய இடப் பெயர்வுகள் யாவும் பொருளாதாரத்தை நோக்கிய பயணமாகவே இடம் பெயர்கின்றன, ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் குடியேறுபவர்களில் பெரும்பாலோர் பொருளாதார வளர்ச்சியை முன்னிட்டு தம் வாழ்வையும் சந்ததியினர் வாழ்வையும் மேம்பெடுத்தும் நோக்கில் அமைக்கிறது.

படித்தவர்கள் இடம் பெயர்கிறார்கள், படிக்காதவர்கள் பொருளீட்டி திரும்புகிறார்கள், உலகெங்கிலும் இடப்பெயர்சிகள் எந்த காலத்திலும் தவிர்க்க முடியாதனவாக இருந்தாலும், இன்றைய அல்லது அன்மைய நூற்றாண்டுகளின் இடப்பெயர்சிகளில் குழுவாக நடைபெறும் யாவும் தொடர்ந்து வசிக்கமுடியாத நிலையில் அல்லது துறத்தப்படுதல் என்ற நிலையில் நடைபெறுவதே. அன்மைய எடுத்துக்காட்டு இலங்கைத் தமிழர்களின் பிறநாடுகளை நோக்கிய இடப்பெயர்வு, அண்மைய நூற்றாண்டுகளில் நடந்தது என்ற அளவில் இந்தோனேசியாவின் வசித்த பாலி பழங்குடி மற்றும் பண்டைய இந்துக்கள் அதன் பல்வேறு பகுதிகளில் இருந்து விரும்பியும், வேறு வழியின்றியும் இடம் பெயர்ந்த இடம் பாலித் தீவு.

*****

நாங்கள் உலுவாட் புரா வை பார்த்துவிட்டு விடுதிக்கு திரும்பினோம், மாலை மங்கி சூரியன் மறையப் போகும் நேரம் விடுதி எதிரே இருந்த கடற்கரையை பார்வை இட்டுவிட்டு, இரவு உணவிற்காக கிளம்பினோம், திரும்பவும் உலுவாட் புரா இருந்த பகுதி தான், அதற்கு அரைத் தொலைவில் ஜிம்பாராங்க் என்ற பகுதியில் அமைந்த கடற்கரை உணவகம், இந்த இரவு விருந்திற்கான செலவை எங்கள் நிறுவன உரிமையாளர் ஒப்புக் கொண்டு இருந்தார். நபர் ஒன்றுக்கு சிங்கப்பூர் வெள்ளி 28. இந்த செலவில் சென்றுவரும் பேருந்து கட்டணம் மற்றும் உணவு ஆகியவை அடக்கம்.


இரவு 8 மணி ஆகி இருந்தது, 'டாமாஸ் காபே' என்கிற கடற்கரை உணவகம், பெரும்பாலும் கடலுணவு விரும்பிகள் அங்குவருவார்கள், அது போன்ற உணவு விடுதிகள் அங்கு கடற்கரையை ஒட்டி 100க் கணக்கானவை இருந்தது, உணவகத்தின் முகப்பு வரவேற்பில் நம்ம ஊர் பிள்ளையார் இருபக்கமும் மஞ்சள் குடைகள் சூழ இருந்தார்.
உள்ளே நுழைய பின்வாசல் வழியாக கடற்கரைப் பகுதியில் மேசை நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன, இருபக்கமும் அமர்ந்து சாப்பிட நீளவாக்கில் அவை போடப்பட்டு இருந்தன, வரவேற்பு பானமாக இளநீர் வெட்டி வைக்கப்பட்டு இருந்தது, எல்லோரும் அமர்ந்ததும் அருகே அமைக்கப்பட்ட மேடையில் அலங்காரத்துடன் வந்த இரு பெண்கள் இசைக்கேற்ற பாலி நடனம் ஆடினார்கள்.

இடையே தனித்தனியாக தட்டுகளில் நண்டு, மீன், இறா உள்ளிட்ட கடலுணவுகளும் சோறும் வழங்கப்பட்டது, எனக்கு அவித்த கீரை மற்றும் வேக வைத்த சோயா கட்டித் தயிர் சக்கை மற்றும் சோறு, ஏற்கனவே அன்று மதியம் உண்ட அதே வகை சைவ உணவு. கொஞ்சம் சாப்பிட திகட்டியது, பிறகு அனைவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பாட்டில் கொடுத்தார்கள். கிட்டதட்ட 90 நிமிடங்கள் அங்கு இருந்துவிட்டு விடுதிக்கு திரும்பிக் கொண்டு இருந்தோம் இரவு 10:30 மணியை நெருங்கி இருந்தது. விடுதிக்கு சற்று தொலைவின் முன்பே விடுதிக்குச் செல்லாமல் பாதியிலேயே இறங்கி அந்தப் பகுதியின் இரவை பார்வை இட எங்களில் தனியாளாக வந்த ஆண்கள் மட்டஹரி பகுதியில் இறங்கி விடுதி பாதையின் எதிர்புறம் இடது பக்கம் நடந்தோம்.

அந்தப் பகுதி குட்டா - பாலி அங்கு பாலியின் பகல் என்பதே மாலையும் பின்னிரவு தான் என்று தெரிந்தது. பத்து விரலே மூலதனம் என்பதன் எடுத்துக்காட்டாக அருகருகே நிறைய மசாஜ் நிலையங்கள், அவற்றின் தோற்றம் தரம் ஆகியவற்றிற்கேற்ப ஒரு மணி நேர மசாஜுக்கு 50,000 ருபியா (9 சிங்கப்பூர் வெள்ளி) முதல் 150,000 ருபியா வரையிலும் விலைகளின் பட்டியல் இருந்தது. மாசாஜ் நிலையங்கள் பேங்காக்கை ஒப்பிட இங்கு இருமடங்கு எண்ணிக்கையில் இருந்தன. வலுக்கட்டாயமாக யாரையும் அவைகள் அழைக்கவில்லை, விரும்பியவர்கள் சென்று கொண்டு இருந்தனர்.

அந்த சாலையில் கைவினைப் பொருள்கள், துணிகள் ஆகிய சில கடைகளும் இருந்தன, அதைக் கடந்து அடுத்து சாலை சந்திக்கும் பகுதியில் வலது பக்கம் திரும்ப குட்டா - பாலி பகுதியின் புகழ் பெற்ற 'லெகியான் ஸ்ட்ரீட்' இந்த சாலை கடற்கரை சாலையில் இருந்து ஒரு கிமீ தள்ளி அதற்கு இணையாக நீண்டுள்ளது. இடையே குறுகிய சந்துகளாக இரண்டு சாலைகளையும் இணைக்கும் வழிகளும் கடைகளும் இருந்தன.

லெகியான் தெருவுக்குள் நுழைய கொஞ்சம் தொலைவில் டிஸ்கோ இசைகளின் ஒலி, அருகே செல்லச் செல்ல அவை இறைச்சல் என்ற அளவுக்கு காது பிளக்கும் அளவு டெசிபல்களில் கேட்டுக் கொண்டு இருந்தன, அந்த சாலையின் இருபுறமும் டிஸ்கோத்தே நிலையங்கள், அங்கு அரைகுரை ஆடைகளில் வெள்ளைக்கார ஆண் பெண்கள் ஆட்டமும் கொண்டாட்டுமாக களித்துக் கொண்டு இருந்தனர். பாலியின் மொத்த உற்சாகம் கொண்டாட்டங்களின் இடமும் அங்கு தான் குழுமி இருந்தது போன்று இருந்தது, கொஞ்சம் தள்ளி சாலை 'வி' வடிவில் பிரியும் அந்த இடத்தில் தான் பாலி குண்டுவெடிப்பின் நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டு நின்று கொண்டு இருந்தது.



கிட்டதட்ட 202 பேர் (அக் 12, 2002 நடந்த தீவிரவாத தாக்குதல் குண்டுவெடிப்பில்) உயிரழந்ததன் அடையாளமாம், சிலர் சோகத்துடன் புகைப்படம் எடுத்தனர். இறந்தவர்களில் 88 பேர் ஆஸ்திரேலியர் மட்டுமே, அடுத்ததாக இந்தோனேசியர் 38 பேர், இங்கிலாந்து நாட்டினர் 27 மற்றும் மேலும் இருபத்தைந்து மேற்கத்திய நாடுகளைச் சார்ந்த ஓரிருவர் என்ற பட்டியல்கள் பொறிக்கப்பட்டு இருந்தன.



அங்கு நின்றபடி அங்கே அருகே நடைபெறும் கொண்டாட்டங்களையும் இந்த நினைவு சுவரையும் பார்க்க, குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் இந்த கொண்டாட்ட மனநிலையிலேயே மடிந்திருப்பார்கள், காயம்பட்டு தப்பியவர்களும், அவர்களின் உறவினர்களும் அந்தநொடிக்கு பிறகு கண்ணீரிலும் வேதனையிலும் வாடியிருபபர்கள் என்று நினைக்க முடிந்தது. எஞ்சியிருக்கும் அவர்களின் ஆற்றாமை மற்றும் சாபங்களை கிளறிவிடும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12 தேதியும் இந்த நினைவுத் சுவரின் பெயர்களும் ஈரம் காயமல் வைத்திருக்குமோ ? என்று நினைக்க முடிந்தது.

என்றோ நாம் மறந்த ஒரு நிகழ்வை இது போன்ற நினைவிடங்களுக்குச் செல்லும் போது நம்மையும் மீறிய சோகம் ஏற்படும் போது தான் அந்த பழைய நினைவுகள் முன்பு நம்மை எந்த அளவுக்கு பாதித்திருக்கின்றன, பிறருக்காக நாம் இரக்கம் கொள்ளக் கூடியவர்களா ? என்று அறிய முடியும். எம்ஜிஆர் சமாதிக்கு சென்று அழும் தொண்டனைப் போல், சிலர் முகம்வாடி இருந்தனர். 2002 பாலியில் குண்டுவெடிப்பு நிகந்த போது இங்கு சிங்கையில் 10 நாட்களுக்கு அந்த தகவல் எழுதப்பட்டு வந்தன, பாலிக்கு செல்லும் அனைத்து விமானங்களும் விலக்கப்பட்டு இருந்தன.

எனது அலுவலக நண்பர்களில் சிலர் ஒரு டிஸ்கோத்தே கிளப்புக்குள் நுழைந்தனர் நுழைவு கட்டணம் நபர் ஒன்றுக்கு சிங்கப்பூர் வெள்ளி மதிப்பில் 5 தான், அதற்கு இலவச பீர் பாட்டில் ஒன்றையும் தந்தார்களாம், உள்ளே செல்லும் அனைவரையும் மெட்டல் டிடெக்டரால் சோதித்தே அனுப்புகிறார்கள், எனக்கு உள்ளே செல்ல விருப்பம் இல்லை, உடல் அசதியாக இருந்தது, இரவு மணி 12 ஐ நெருங்க, அந்தப் பகுதியின் வரைபடம் ஓரளவு மனதில் ஓடியதால் குறுகிய சாலை ஒன்றில் நுழைந்தால் தங்கும் விடுதி வந்துவிடும் என்று நினைத்து தனிதே நடந்தேன்.

ஆள் அரவம் மிகுதியாக இல்லை, கொஞ்சம் தள்ளட்ட நடமாட்டம் இருந்தது, உள்ளே செல்லச் செல்ல கொஞ்சம் இருட்டு, ஆள் நடமாட்டமும் மிகக் குறைவு, எனக்கு முன்பு வெள்ளைகாரப் பெண்மணி ஒருத்தி அரை ட்ராயர் மற்றும் பனியன் மேலாடையுடன் சென்று கொண்டிருந்தாள், அடிக்கடி பாலிக்கு வருபவள் போல் தெரிந்தது, அருகே இரவு கொண்ட்டாட்டம் மற்றும் குடி இவற்றை நுகரும் ஆண் சமூகம் இந்த சூழலில் இரவு பணிரெண்டு மணிக்கு மேல் குறுகிய மற்றும் வெளிச்சம் குறைவான சாலைகளில் அளவு குறைவான உடையுடன் பெண்கள் நடமாட முடியுமா ? பாலியில் இவை மிகச் சாதாரணம் என்பதை பின்னர் நாட்களிலும் அவ்வாறான காட்சிகள் மூலம் உறுதியானது. இந்த தீவில் சுற்றுலாவாசிகள் பாலியின் லோக்கல் சமூகவிரோதிகளால் குறிவைக்கப்படுவதில்லை, காரணம் சுற்றுலாவாசிகள் இல்லை என்றால் பாலித் தீவும் செயல்படாது

கொஞ்ச தொலைவில் அந்தப் பெண்ணும் வேறொரு குறுகிய சாலைக்கு திரும்ப, நான் நினைத்தபடி கொஞ்சம் சுற்றலுடன் அந்த சாலை நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு அருகே உள்ள கடற்கரைச் சாலையில் முடிந்தது, விடுதிக்குச் சென்று நன்றாக குளித்துவிட்டு கொஞ்ச நேரம் தொலைகாட்சிப் பார்த்துக் கொண்டிருந்தேன், டிஸ்கோத்தேக்கு சென்றுவிட்டு அலுவலக நண்பர்களும் திரும்பி இருந்தனர், அடுத்த நாள் முழுநாள் சுற்றுலா, காலை 8 மணிக்கு உணவுகளை முடித்துவிட்டு காத்திருக்கச் சொல்லி இருந்தனர், வெறும் 4 மணி நேரம் தான் தூக்கம், காலை 7 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு, நண்பர் குளித்துவர காத்திருக்கும் வேளையில் தொலைகாட்சியை ஓடவிட்டு சானல்களை திருப்பி நேசனல் ஜியாகரபி சானலில் வைக்க நேற்றைய பின்னரவு பாலி வெடிகுண்டு நினைவகத்தை மீண்டும் கிளறிவிடும் 'செகண்ட்ஸ் ப்ரம் டிஸாஸ்டர் பாலி ப்ளாஸ்டிங்க்(Seconds From Disaster - The Bali Bombing)' ஆவணப்படம் ஓடிக்கொண்டு இருந்தது.

இது தற்செயலான காட்சியாக இருந்தாலும், நண்பர் பிறகு வரட்டுமே என்று நான் முன்கூட்டியே சாப்பிடப் போகமல் ஏன் தொலைகாட்சியை போட வேண்டும், அப்படியே போட்டு இருந்தாலும் நேசனல் ஜியாகரபிப் சானல் வரைக்கும் திருப்ப, அந்த காலை வேளையில் அவர்கள் அதையே ஏன் ஒலிபரப்ப வேண்டும் ? இதை அடிக்கடி ஒலிபரப்பினால் சுற்றுலாவாசிகள் பீதி அடையாமாட்டார்களா ? என்று எண்ண ....அந்த ஒலிபரப்பு அன்றைக்கு காலையில் தற்செயலாக வந்திருக்கிறது என்றே நினைத்து வியப்படைந்தேன்.




அரைமணி நேரம் அந்த ஆவணத்தைப் பார்த்தேன், மட்டஹரியில் தற்கொலை குண்டுவெடிப்பும், லெகியான் தெருவில் சரக்கு வாகனத்தில் (வேன்) வெடிகுண்டு நிரப்பட்டு வெடிக்க வைத்திருந்ததாகவும் தொலைகாட்சி ஆவணத்தில் காட்டினார்கள். ஆஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் பாலி அதிகாரிகள் விசாரணை நடத்தினார்களாம், தொடர்சியான மழையில் தடயங்கள் அழிந்து போய் இருக்க, துப்பு துலக்க திணறியதாகவும், பாலியைச் சேர்ந்த விசாரணை அதிகாரி கோவிலில் சாமி கும்பிடும் போது வந்த அலைபேசி அழைப்பில் வெடிகுண்டு வெடித்த வாகனத்தின் பதிவு எண் பற்றி துப்பு கிடைத்ததாக தகவல் கிடைத்ததாம். பொதுவாக சரக்கு வாகனத்தில் இருபுறமும் இருக்கும் வாகனப்பதிவு எண்ணுடன் பாதுகாப்பிற்காக மூன்றாவதாக ஒரு இடத்தில் ரகசியமாக பதிவு எண் பதிக்கப்பட்டு இருக்குமாம், வாகனத்தை தயார் செய்த தீவிரவாதி முன் பின் நம்பர் ப்ளேட்டுகளை மட்டும் அழித்து இருக்கிறான். மூன்றாவதாக ஒன்று இருப்பது அவனுக்கு தெரியாது, இந்த திட்டமிட்ட வெடிகுண்டு வெடிப்பை நடத்தியவர்கள் இந்தோனேசியாவின் மையத் தீவான ஜாவாவைச் சார்ந்த ஜமாலியா இஸ்லாமிய அமைப்பைச்சார்ந்தவர்களாம். மொத்தம் 9 பேர் குழுவாகச் செயல்பட்டதில் ஒருவர் தற்கொலை குண்டில் மாண்டுபோக மீதம் 8 பேரை அள்ளியது இந்தோனேசிய போலிஸ்.



குண்டுவெடிப்பு பற்றி பாலி இந்துக்கள் என்ன நினைத்தார்கள் ? இவை வெறும் வெள்ளைகாரர்களுக்கு மட்டுமான மிரட்டல் தானா ? பின்வரும் பதிவுகளின் இடையே பார்ப்போம். இறைவன் நாடினால் தொடரும்....

பிகு : நேற்று வெளியிட நேரமில்லை ஆகையால் 3, 4 பகுதிகளை இன்றே வெளி இடுகிறேன். இன்னும் ஐந்து அல்லது ஆறு பகுதிகள் வரும், அதில் பாலி இந்துக்களின் பண்பாடு, குடும்ப அமைப்புகள் மற்றும் பெயர்கள், மேடை நாடகம், எரிமலை, கடற்கோவில் ஆகியவை இடம்பெறும்.

2 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

இந்த வருசம் அக்டோபர் 12 வந்தால் 10 வருச நினைவுநாள்.

அதுலே எங்க ஆளுங்க 3 பேர் இறந்துட்டாங்க:(

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.
நன்றி.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்