பின்பற்றுபவர்கள்

18 ஜூன், 2009

எங்கள் ஊர் கோயில் திருவிழா - பகுதி 2

முதல் பகுதியின் தொடுப்பு
இறை நம்பிக்கையாளர்களின் வேண்டுதல்கள் பற்றிய உளவியல் என்று பார்த்தால், தனக்கு அருளிக் கொண்டிருப்பதாக நம்பப்படும் தெய்வங்களுக்கு நேர்த்திக்கடன் என்ற பெயரில் தன்னால் முடிந்த அளவுக்கு உடலை வருத்திக்கொள்ளுதல் தான். காலம் காலமாக பல மதங்களிலும் உடலை வருத்திக் கொள்வது வழக்கமாக உள்ளது. அதில் எளிய வருத்திக் கொள்ளுதலான நடைப் பயணமும், அலகு குத்துதல், சிறிய அளவிலான வெட்டுக் கருவிகள் மூலம் உதிரம் சொட்டச் சொட்ட உடலைக் கீறி வருத்திக் கொள்ளுதல், தீ மிதி வரை அனைத்தும் உண்டு. மிகுந்த மனநிலை கெட்டவர்கள் கண்களை பிடிங்கி, விரல்களை வெட்டிக் காணிக்கை செலுத்துவதும், தன்னளவில் எந்த வருத்துதலையும் ஏற்படுத்திக் கொள்ளாதவர் உயிர் பலி இட்டு வேண்டுதல் நிறைவேற்றிக் கொள்வதும் அனைத்து மதங்களிலும் உள்ள வழக்கம், முறைகள் மட்டுமே வேறுபடுகிறது, மன நிலை கெட்டு உடல் உறுப்பை வெட்டிக் காணிக்கை ஆக்குவது தவிர்த்து மற்றதெல்லாம் கிட்ட தட்ட ஒரே வகைதான் அதில் எது மடத்தனம் என்று வரையறை செய்ய இயலாது.

***

அலகுக் குத்திக் கொள்ள மனம் வருமா ? உளவியலே காரணம், 'என்னால் முடியும், எனக்கு தெய்வம் துணை இருக்கிறது' என்று ஆழமாக நம்புவர்கள் உன்னத செயல் போல் எண்ணி அலகு குத்திக் கொண்டு காவடி எடுப்பதாக வேண்டிக்கொள்வர். எனக்கு வயது 5 ஆக இருக்கும் பொழுதிலிருந்து எனது தந்தை அலகு காவடி எடுப்பதைப் பார்த்து இருக்கிறேன். அதற்கான தேவை என்ன வென்று சரியாகத் தெரியாவிட்டாலும், அவருடைய சிறுவயதில் அவருடைய உறவினர்கள், முதிர்ந்த நண்பர்கள் அதுபோல் அலகு காவடி எடுப்பதையும், அதற்கு இவர் துணையாகவும் இருந்திருக்கிறார் என்பது தெரியும், அவர்களைப் போல் தானும் குறிப்பிட்ட வயதில் அலகு காவடி எடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம். மேலும் அதை கூடவே இருந்து கவணித்து வந்ததால் அச்சம் எதுவுமின்றி அலகுக் காவடி எடுக்க முடிவு செய்து எடுக்கத் தொடங்கி இருக்கலாம். கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது 30 வயதில் இருந்து தனது 51 ஆவது வயதில் மறைந்த ஆண்டு வரை அவ்வாறு அலகு காவடி எடுத்தார். அப்பாவின் மறைவிற்குப் பிறகு அதைத் தொடர எங்களில் யாருக்குமே விருப்பம் இல்லை. கிட்டதட்ட அதே 30 வயதில் இருந்து தற்பொழுது வரை எனது தம்பி அப்பா விட்டுச் சென்ற அலகு காவடியைத் ஆறு ஆண்டுகளாக தொடர்கிறான்.

***

எங்கள் வீட்டு அருகே இருக்கும் ஏழைப் பிள்ளையயார கோவில் இருந்து தான் எங்கள் வீட்டுக் காவடியை கிளப்புவோம்.

காவடி எடுக்கும் மூன்று நாட்களுக்கு முன்பு காவடி எடுக்கப் போகும் கோவிலுக்குச் சென்று திருக்காப்பு அணிந்து வரவேண்டும், திருக்காப்பு எனப்படுவது சிறிய கைக்குட்டைப் போன்ற மஞ்சள் துணியில் சுற்றப்பட்ட 50 பைசா நாணயம், அதை கையில் கைகடிகாரம் போல் காவடி முடியும் வரை அணிந்து இருப்பார்கள். காவடி எடுக்கும் அன்று தண்ணீர் தவிர்த்து உண்ணா நோண்பு (விரதம்). மிகவும் களைப்புடன் இருந்தால் வேக வைத்த பச்சைப் பயிறு கஞ்சியில் வெல்லம் போட்டு கொடுப்பார்கள். காவடியின் முதல் நாள் இரவே காவடிக்கு தேவையான பூசைப் பெருள்களை வாங்கி ஆயத்தமாக வைத்திருப்பார்கள். காவடி அன்று பால் காவடி என்றால் அன்று கறந்த பால், மற்றபடி சந்தனம், திருநீறு, பன்னீர் காவடி என்றால் தேவைக்கேற்ப முதல் நாளே வாங்கி வைத்துவிடுவார்கள்.

எங்கள் வீட்டுக் காவடி எப்போதும் பால்காவடிதான், இப்பொழுது உடன்பிறந்தோரின் பிள்ளைகளும் நானும் காவடி எடுக்கிறேன் என்று கிளம்பிவிட்டதால் சந்தனம், திருநீறு, பன்னீர் குடங்களை அவர்களின் தலையில் ஏற்றுகிறோம்.

எனக்கும் என் அண்ணனுக்கும், தம்பி அலகு குத்தும் காவடி எடுப்பதில் விருப்பம் இல்லை, ஆனாலும் அண்ணன் முன்னின்று காவடிக்குத் தேவையான அனைத்து பூசைகளையும் செய்து தருவார்.

காவடி எடுக்கும் அன்று சிறிய குடங்களை வைத்து பூசைப் பொருள்களுடன் தீபம் காட்டி, குடத்தினுள் சாம்பிராணி புகையைக் காட்டி பாலை குடம் நிறைந்து வழியும் வரை ஊற்றப்படும்.

பிறகு காய்ந்த வாழையிலையால் குடத்தை மூடி, சணலால் இறுகக் கட்டிவிட்டு, அந்த குடத்திற்கு திருநீறு சந்தன குங்குமம் சாற்றி, மாலையிட்டு தலையில் தூக்கிய பிறகு எடுக்கும் இடத்தில் இருக்கும் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு முன்று சுற்று சுற்றி பால் முழுக்கு செய்யப் போகும் கோயிலுக்குச் நடை பயணமாகச் செல்வார்கள்.

தம்பி அலகு காவடி எடுப்பதால் பால் குடங்கள் ஆயத்தம் ஆனவுடன் அலகு குத்துதல் நடைபெறும். தூண்டில் முள் போன்று வளைந்து இருக்கும் ஊசியை இடுப்பைச் சுற்றிய தசையில் சொருகுவார்கள், உதிரம் வந்தால் திருநீற்றை வைத்து அதன் மீது பூசுவார்கள்.

அலகு குத்தும் போது சுற்றி நிற்கும் அன்பர்கள் அனைவரும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருப்பார்கள், ஆட்டம் போட வைக்கும் மேளதாள நாதசுவரம் ஒருபக்கம் காதைப் பிளக்கும், அம்மன் பாடல்கள் பாடப்படும், அலகு குத்த குத்த உடலில் வியர்த்துக் கொட்டும், விசிறியை வீசி ஆசுவாசப்படுத்துவார்கள். குத்திக் கொள்ளும் அன்பர் மிகவும் உணர்ச்சி வயப்பட்டவராக இருந்தால் மயக்கமடைந்துவிடுவார் (சாமி வந்துவிட்டது என்று சொல்லுவார்கள்)


அந்த நேரத்தில் அனைத்து அலகுகளையும் குத்திவிட்டுவிடுவார்கள், மயக்கம் வராவிட்டால் தாங்கிக் கொள்வார்கள், கடவுளின் பெயரால் செய்வதால் வலிக்கிறது என்று நினைப்பது தனது பக்தியின் குறைபாடு என்று நினைக்கக் கூடும் என்பதால் வலியைத் தாங்கிக் கொள்வார்கள் அல்லது அந்த நேரத்தில் இறை உணர்வில் இருப்பதால் வலியை பொருட்படுத்துவதில்லை என்பதாக நான் கொள்கிறேன்.

நெற்றியில் சிறிய அளவிலான வேல்கள், இடுப்பைச் சுற்றிய அலகுகள் போடப்பட்டதும், இறுதியாக கன்னத்தைத் துளைத்து மறுகன்னத்தின் வழியாக ஒரு சிறிய வேலைச் சொருகி அந்த வேலில் பிடிப்பில் வாயை மறைக்கும் படியான வெள்ளி அணியை முடுக்கியதும் அலகு குத்துவது முடிந்துவிடும்,


பிறகு பால் குடத்தை தலையில் வைத்து கோயிலைச் சுற்றிவந்ததும் அலங்காரக் காவடியில் அந்த குடத்தை வைத்து கட்டிவிட்டு, காவடியை தோலில் தூக்கி வைத்துக் கொண்டு பிறகு, நீண்ட வேல்களை இடுப்பில் குத்தி இருகும் அலகுடன் இணைத்துவிட காவடியுடன் நடை பயணம் தொடங்கிவிடும்.***

காவடி எடுப்பது மட்டும் போதாது காவடியுடன் எதாவது புத்துணர்வு உந்துதல் தொடர்ந்து இருந்தால் நடைபயணமும், காவடி கூட்டமும் பலரைக் கவரும், பார்வையாளர்கள் நின்று பார்த்துச் செல்வார்கள். அதற்காக காவடியுடன் ஆடுவதற்கு ஆட்டக்காவடி எனப்படும் இரதக் காவடியை ஏற்பாடு செய்து கொள்வதுண்டு, அருகில் இருக்கும் கிராமங்களில் உள்ள இளைஞர்கள் அத்தகைய ஆட்டக்காவடிகளை வைத்திருப்பர்கள், ஒரு காவடியைத் தூக்கி மாற்றி மாற்று 10 பேர் வரை சலங்கை கட்டி ஆடுவார்கள். ஒற்றையடி மேளத்துடன் ஆட்டக்காவடி ஆடும் போது பக்கத்தில் நின்று பார்த்தால் நமது கால்களும் ஆடுவதற்கு ஆயத்தமாகும் உணர்வு இருக்கும்.
எட்டுக்குடி முருகன் கோவிலின் சிறப்பே இந்த ஆட்டக்காவடிகள் தான் ( அது பற்றி அடுத்த பகுதியில் எழுதுகிறேன்) காவடி எடுக்கும் நிகழ்ச்சி சிறப்பாக இருக்க வேண்டும் என்பதால் ஆட்டக்காவடியையும் எனது தம்பி ஏற்பாடு செய்து கொள்வான்.
ஆட்டக்காவடியின் எடை 30 கிலோ முதல் 40 கிலோ வரை இருக்கும், பழக்கம் இல்லாதவர்கள் அதைத் தூக்கவோ, சாயாமல் தோலில் வைக்கவோ முடியாது,
ஆனால் அந்த காவடியை எளிதாக தூக்கி அந்த இளைஞர்கள் சுழன்று சுழன்று ஆடுவார்கள். அவர்கள் மட்டுமா ? கூட்டத்தோடு கூட்டமாக நானும் தூக்கி ஆடினேன். ஆட்டம் என்றால் ஆட்டம் அப்படி ஒரு குத்தாட்டம். 10 நிமிடம் ஆடியதற்கே 3 நாள்கள் வரை தோ(ள்)ல் வலி இருந்தது


கோயில் தொலைவு சுமார் 4 கிலோமீட்டர், அங்கங்கே நின்று நின்று ஆடிவிட்டு செல்லச் செல்ல, அலகுகாவடி, பால்குடம் வைத்திருப்பவர்களின் கால்களில் தண்ணீர் ஊற்றி விழுந்து வணங்குவார்கள், சிலர் தேங்காய் பழங்களுடன் தீப வழிபாடு செய்வதும் உண்டு,

அவர்களுக்கு எனது தம்பி அவர்களுக்கு திருநீறு கொடுப்பான், இப்படியாக நின்று நின்று நடந்து நடந்து கோயிலுக்குச் செல்ல சுமார் 4 மணி நேரமாகும்,

கோயிலின் பெரிய தெருவைச் சுற்றி வந்ததும் கோயிலுக்குள் சென்று மூன்று சுற்று சுற்றிவிட்டு, காவடியில் இருந்து பால் குடத்தை எடுத்துக் கொண்டு சாமி சிலைக்க்கு முழுக்கு செய்யச் செல்வார்கள், கோயிலினுள் நிற்க இடம் இல்லாத படி எங்கும் கூட்டம், சாமியைப் பார்க்க நீண்ட வரிசை. ஆனாலும் அலகு குத்தி இருப்பதால் உடனடியாக உள்ளே அனுமதித்துவிடுவார்கள்,
முழுக்கும் வழிபாடும் முடிந்ததும் குத்திய அலகுகளை ஒவ்வென்றாக கழட்டி விட்டு, முழுக்கில் வழியும் போது பிடித்த பாலை அனைவருக்கும் திருவமுதாக(பிரசாதம்) கொடுக்கப்படும், பிறகு வீட்டுக்குத் திரும்பிவிடுவோம்.

***
அலகு குத்தி காவடி எடுப்பதில் எங்கள் வீட்டில் யாருக்கும் உடன்பாடு இல்லை, ஆனால் அப்படி எடுத்துச் செல்வதைப் பார்க்க வரும் உறவினர்கள், 'உங்கள் அப்பாவை மீண்டும் பார்ப்பது போல் உள்ளது' என்று சொல்வதைக் கேட்க மனதுக்கு நிறைவாகவும், நெகிழ்ச்சியாகவும் இருப்பதை உணர முடிவதால்... எங்கள் அனைவருக்கும் அப்பாவின் நினைவை ஏற்படுத்தும் இந்த அலகு காவடியை தம்பி தொடர்வதை தடுக்கும் எண்ணம் ஏற்படுவதில்லை.


தொடரும்...

அடுத்த பகுதி எட்டுக்குடி முருகன் கோயில் சித்திரை திருவிழா

31 கருத்துகள்:

நையாண்டி நைனா சொன்னது…

மீ பஸ்ட்டா???

நையாண்டி நைனா சொன்னது…

எஸ் நான் பஸ்ட்டு தான்.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

நல்லா இருந்தது உங்க ஊர்த்திருவிழா

காவடி எடுத்திருக்கீங்க போல !

வடுவூர் குமார் சொன்னது…

நன்றாக இருக்கு குத்தாட்டம்.10 நிமிடம் எதுக்கு 2 அல்லது 3 நிமிடங்களிலேயே தோள் வலி எடுத்துவிடும் போல் இருக்கு.

க.பாலாசி சொன்னது…

உண்மையிலேயே ஒரு நல்ல பதிவு. இன்றளவும் நம் கிராமப்புரங்களில் நடக்கும் உன்னதமான கோயில் திருவிழாக்களை கண்முன்னே நிறுத்துகிறது உங்கள் பதிவு. தொடரட்டும் உங்கள் பயணம். வாழ்த்துக்கள்.

அப்பாவி முரு சொன்னது…

அண்ணா, பெரியாளுண்ணா நீங்க!!!

30 கிலோ காவெடி தூக்கி ஆடியிருக்கீங்க...

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

அட!
கோவியாரா காவடிய தூக்கிக்கிட்டு ஆடுறது!
உங்கள் சேவடிகள் ஆன்மீகத்துக்குத் தேவை!
ஆண் மீக பதிவர் கோவியார் வாழ்க!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
எல்.ஆர்.ஈஸ்வரியோட பாட்ட பேக்கிரவுண்டுல
போட்டா ஒரு ரவுண்டு ஆடுவாரு போலிருக்கே!
சூப்பர்!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

Me the 8th!
எட்டு நல்ல நம்பரோ என்னவோ?
இருந்தாலும் மீ த எட்டு!

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

சூப்பரோ சூப்பர்!
நான் தான் சொன்னேன்-ல?
//தத்துவப் புரிதலில், இவர் கேள்விகள் எல்லாம், நாத்திகத்தை விட, ஆத்திகம் வளர்க்கவே பெரிதும் உதவுகின்றன! :)
அந்த வகையில் குமரனுக்கு அடுத்து சிறந்த ஆன்மீகப் பதிவர் எங்க ஜிரா கூட இல்லை! ஒன் & ஒன்லி கோவி. கண்ணனே! :)//

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

பால் காவடி பன்னீர் காவடி கோவி காவடியாம்!
காலைத் தூக்கி காவடி ஆட்டம் தினமும் நடக்குதாம்!
கந்தனுக்கு அரோகரா!
முருகனுக்கு அரோகரா!
கண்ணனுக்கு அரோகரா!
கோவி-கண்ணனுக்கு அரகரோகரா! :)

குமரன் (Kumaran) சொன்னது…

அலகு காவடியின் விவரிப்புக்கு நன்றி கண்ணன்.

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//கிட்டதட்ட அதே 30 வயதில் இருந்து தற்பொழுது வரை எனது தம்பி அப்பா விட்டுச் சென்ற அலகு காவடியைத் ஆறு ஆண்டுகளாக தொடர்கிறான்//

வாழ்த்துக்கள்! வாழ்க! கோவி அண்ணாவின் தம்பியார் வாழ்க!

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

கோவி அண்ணா
கோவித்துக் கொள்ளா விட்டால், ஒரு சின்னக் கேள்வி கேட்கிறேன்.

இந்த அலகுகள், திருகு, வெள்ளிப் பூண் முடுக்கு - இதெல்லாம் வருடா வருடம் புதுசா வாங்குவீங்களா? இல்லை அவரவர் வீட்டில் இருக்குமா? இல்லை கோயிலில் கொடுப்பாங்களா?

சென்ற ஆண்டு ஒருவர் குத்திய அலகை இன்னொருவருக்கு கொடுக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்! அது சுகாதாரமற்றதும் கூட!
அதே போல் காவடிப் பூசைக்கு முன்னர் அலகுகளை வெந்நீரால் ஆட்டுவார்கள்! மஞ்சளும் பூசுவார்கள்! ஆட்டம் முடிந்ததும் இன்னொரு முறை நீராட்டியே, வெண்பருத்தித் துணியில் சுருட்டி வைப்பார்கள்!

இந்த முறையெல்லாம் எங்க வாழைப்பந்தல் கிராமத்தில் இன்னும் உண்டு!
பாட்டி பாட்டெடுத்துக் குடுக்க, நான் மற்றும் ஊர்க்காரவுக ஆடிய காவடியைப் பத்தி, முருகனருள்-100 ஆம் பதிவில் சொல்லி இருந்தேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

பெண்கள் எடுக்கும் காவடி பற்றியும் அடுத்த எட்டுக்குடி பதிவில் சொல்லுங்க!

ஆட்டக் காவடியைப் போலவே, நீட்டக் காவடி (நீள் காவடி) என்ற ஒன்றும் உண்டு! ஒரே காவடியை, இருவர்/மூவர் சேர்ந்து, ஒரே நேரத்தில் தூக்கி ஆடணும்! அதற்கேற்றாற் போல், காவடியின் இடைக்கழிக் கம்பு நீளமா இருக்கும்!

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

காவடி சங்கத் தமிழ் இலக்கியங்களில் பேசப்படுகிறதா அண்ணா?
வேலன் வெறியாடல் பற்றி குறிப்புகள் உண்டு! அதில் காவடி வருகிறதா என்ன?

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

இந்தக் காலத்தில் சினிமாப் பாடல்கள் எல்லாம் சேர்ந்து காவடியாட்டம் கொஞ்சம் சுருதி குறைந்து விட்டாலும், காவடிக்கென்றே தனியான பாடல் மற்றும் ராகங்கள் உண்டு! பெரும்பாலும் செஞ்சுருட்டி ராகம் தான்! அதைத் தவிலும், நாதசுரமும், சலங்கையும், தாரையும், பறையும், கெண்டை மேளமும் முழங்க ஆடும் போது...காவடிச் சிந்து அழியா வரம் பெற்று விடும்!

சிந்து என்னும் கண்ணி வகையில் தான் இந்தப் பாடல்கள் எழுதப் பட்டு இருக்கும்! காவடிச் சிந்து என்றே பெயர் நிலைத்து விட்டது!

தமிழிசைக்குப் பெரும் பணி செய்தவர் அண்ணாமலை ரெட்டியார்! அவர் சென்னிக்குள நகர் முருகப்பெருமான் மீது பாடிய காவடிச் சிந்துகள் மிகவும் அறிமுகமானவை!

முருகனுக்கு மட்டுமே எடுக்கும் காவடியை, கண்ணனுக்கும் சில ஊர்களில் எடுப்பதுண்டு! மாயோன், மாயாண்டி-க்கு இது எடுக்கப்படும்!
http://kannansongs.blogspot.com/2008/01/blog-post_17.html

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

எதுக்கு இம்புட்டு வெக்கப்படறீங்கண்ணா? சும்மா காலு பாஞ்சி பாஞ்சி ஆட வேணாமா? காவடியின் மகத்துவமே காலாட்டமும், கழுத்தில் வைத்து சுத்தும் கழுத்தாட்டமும் தான்! எங்கூருக்கு வாங்க! நான் சொல்லிக் குடுக்குறேன்! சும்மா ஒரு ரவுண்டு வரும் போதே, பெண்கள் எல்லாம் சியர் லீடிங் பண்ணும் போது, காவடியை எறக்க மனசே வராது! :))

இந்தப் பதிவு ரொம்ப பிடிச்சிருக்கு! :)

பச்சைக் கலைமயில் ஆட்டம் - புகழ்
பாடும் அடியவர் கூட்டம்
ஓம் முருகா! ஓம் முருகா! ஓம் முருகா! என வருவார்
பல கோடி அருள் தேடி....

கோவி.கண்ணன் சொன்னது…

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
கோவி அண்ணா
கோவித்துக் கொள்ளா விட்டால், ஒரு சின்னக் கேள்வி கேட்கிறேன்.//

கேஆர்எஸ்,

கோவிக்கும் படி எதுவும் நீங்கள் கேட்கவில்லை என்று உங்களுக்கே தெரிந்தும் இப்படிக் கேட்டதற்கு கோவிக்கிறேன் :)

//இந்த அலகுகள், திருகு, வெள்ளிப் பூண் முடுக்கு - இதெல்லாம் வருடா வருடம் புதுசா வாங்குவீங்களா? இல்லை அவரவர் வீட்டில் இருக்குமா? இல்லை கோயிலில் கொடுப்பாங்களா? //

புதிதாக வாங்குவதில்லை, எப்போதும் வீட்டில் இருக்கும்.

//சென்ற ஆண்டு ஒருவர் குத்திய அலகை இன்னொருவருக்கு கொடுக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்! அது சுகாதாரமற்றதும் கூட!//

ஆமாம் அலகு காவடி எடுப்பவர்கள் அவரவர்கள் தனித்தனியாக செய்து வைத்திருப்பார்கள். அலகு தவிர்த்து அலங்கார காவடியை மட்டும் சிலையுடன் வேண்டுவோர்களுக்கு கொடுப்பார்கள், அதாவது காலையில் சென்ற ஒரு காவடியை மாலையில் வேறொருவர் புதிய பூ அலங்காரங்களுடன் தூக்கிச் செல்வதுண்டு. எங்க ஊரில் மின் அலங்காரக் காவடிகள் சிறப்பாக இருக்கும், பொதுவாக இரவு நேரத்தில் எடுப்பார்கள், அத்துடன் தஞ்சாவூர் கரகம், குறவன் - குறத்தி, மயிலாட்டம் ஒயிலாட்டம் விடிய விடிய நடைபெறும், காலவெள்ளத்தில் இப்போதெல்லாம் காணாமல் போய்விட்டது.

//அதே போல் காவடிப் பூசைக்கு முன்னர் அலகுகளை வெந்நீரால் ஆட்டுவார்கள்! மஞ்சளும் பூசுவார்கள்! ஆட்டம் முடிந்ததும் இன்னொரு முறை நீராட்டியே, வெண்பருத்தித் துணியில் சுருட்டி வைப்பார்கள்!//

போட்டு எடுத்தவுடன் வாழைப்பழத்தில் சொருகி வைப்பார்கள், பிறகு நீங்கள் குறிப்பிட்டது போல் பாதுகாப்பாக பூசை அறையில் வைத்துவிடுவார்கள்.

//இந்த முறையெல்லாம் எங்க வாழைப்பந்தல் கிராமத்தில் இன்னும் உண்டு!
பாட்டி பாட்டெடுத்துக் குடுக்க, நான் மற்றும் ஊர்க்காரவுக ஆடிய காவடியைப் பத்தி, முருகனருள்-100 ஆம் பதிவில் சொல்லி இருந்தேன்!
//
படித்த நினைவு !

கோவி.கண்ணன் சொன்னது…

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
எதுக்கு இம்புட்டு வெக்கப்படறீங்கண்ணா? சும்மா காலு பாஞ்சி பாஞ்சி ஆட வேணாமா? காவடியின் மகத்துவமே காலாட்டமும், கழுத்தில் வைத்து சுத்தும் கழுத்தாட்டமும் தான்! எங்கூருக்கு வாங்க! நான் சொல்லிக் குடுக்குறேன்! சும்மா ஒரு ரவுண்டு வரும் போதே, பெண்கள் எல்லாம் சியர் லீடிங் பண்ணும் போது, காவடியை எறக்க மனசே வராது! :))//

பயிற்சி எடுத்து ஆடினால் சிறப்பாக இருக்கும், நான் அந்த மேள அடிக்கு ஆசைப்பட்டு ஆடினேன். பழக்கம் உள்ளவர்கள் சுழன்று சுழன்று சிறப்பாக ஆடுவார்கள், உச்சந்தலையில் கூட சாயாமல் வைத்து ஆடுவார்கள்

//இந்தப் பதிவு ரொம்ப பிடிச்சிருக்கு! :)

பச்சைக் கலைமயில் ஆட்டம் - புகழ்
பாடும் அடியவர் கூட்டம்
ஓம் முருகா! ஓம் முருகா! ஓம் முருகா! என வருவார்
பல கோடி அருள் தேடி....

10:10 AM, June 19, 2009
//

மிக்க மிக்க நன்றி !

இது முருகன் காவடி அல்ல, அம்மன் காவடி அரோகராவுக்கு பதிலாக 'மகமாயி' ம்பாங்க !

கோவி.கண்ணன் சொன்னது…

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
காவடி சங்கத் தமிழ் இலக்கியங்களில் பேசப்படுகிறதா அண்ணா?
வேலன் வெறியாடல் பற்றி குறிப்புகள் உண்டு! அதில் காவடி வருகிறதா என்ன?
//

மன்னிக்கனும், மொழியில் இருக்கும் ஆர்வம் போல் இலக்கியத்தில் அவ்வளவு ஆர்வம் இல்லை. சங்க இலக்கியத்துக்கும் எனக்கு தொலைவு மிகுதி. அதனால் அந்த தகவல் பற்றி தெரியாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
இந்தக் காலத்தில் சினிமாப் பாடல்கள் எல்லாம் சேர்ந்து காவடியாட்டம் கொஞ்சம் சுருதி குறைந்து விட்டாலும், காவடிக்கென்றே தனியான பாடல் மற்றும் ராகங்கள் உண்டு! பெரும்பாலும் செஞ்சுருட்டி ராகம் தான்! அதைத் தவிலும், நாதசுரமும், சலங்கையும், தாரையும், பறையும், கெண்டை மேளமும் முழங்க ஆடும் போது...காவடிச் சிந்து அழியா வரம் பெற்று விடும்!//

திரை இசைப்பாடல்கள் என்றாலும், 'வளையப்பட்டி தவிலே..தவிலே..' அவங்க வாசிக்கும் போது நம்மை துள்ள வைக்கும், வெரைட்டி கிடைக்குது இல்லையா ? பழமைக்கு கருவிகள், புதுமைக்கு திரை இசை. காம்பினேசன் கலக்கலாக இருக்கும். குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்திக் கண்ணா. :)

//சிந்து என்னும் கண்ணி வகையில் தான் இந்தப் பாடல்கள் எழுதப் பட்டு இருக்கும்! காவடிச் சிந்து என்றே பெயர் நிலைத்து விட்டது! //

அதை ஒற்றையடிப்பாட்டு என்பார்கள், மேள தாளத்துடன் கேட்க அருமையாக இருக்கும்

//தமிழிசைக்குப் பெரும் பணி செய்தவர் அண்ணாமலை ரெட்டியார்! அவர் சென்னிக்குள நகர் முருகப்பெருமான் மீது பாடிய காவடிச் சிந்துகள் மிகவும் அறிமுகமானவை!

முருகனுக்கு மட்டுமே எடுக்கும் காவடியை, கண்ணனுக்கும் சில ஊர்களில் எடுப்பதுண்டு! மாயோன், மாயாண்டி-க்கு இது எடுக்கப்படும்!
http://kannansongs.blogspot.com/2008/01/blog-post_17.html
//
செட்டியார் பாடல் தான் 'சீர் மேவும் எட்டுக்குடி வாழும்....தெய்வானைத் தன்னுடைய மணாளனே வா..வா'. முருகன் காவடி கடம்பன் - இடும்பனுடன் தொடர்புடையது.

கண்ணனுக்கு காவடி !!! தகவலுக்கு நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//கிட்டதட்ட அதே 30 வயதில் இருந்து தற்பொழுது வரை எனது தம்பி அப்பா விட்டுச் சென்ற அலகு காவடியைத் ஆறு ஆண்டுகளாக தொடர்கிறான்//

வாழ்த்துக்கள்! வாழ்க! கோவி அண்ணாவின் தம்பியார் வாழ்க!
//

அண்ணாவின் தம்பியாருக்கு உங்களை விட வயசு மிகுதி, எனவே அண்ணாவின் தம்பி அண்ணார் என்று சொல்லலாம் !
:)))))))

கோவி.கண்ணன் சொன்னது…

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
பெண்கள் எடுக்கும் காவடி பற்றியும் அடுத்த எட்டுக்குடி பதிவில் சொல்லுங்க!

ஆட்டக் காவடியைப் போலவே, நீட்டக் காவடி (நீள் காவடி) என்ற ஒன்றும் உண்டு! ஒரே காவடியை, இருவர்/மூவர் சேர்ந்து, ஒரே நேரத்தில் தூக்கி ஆடணும்! அதற்கேற்றாற் போல், காவடியின் இடைக்கழிக் கம்பு நீளமா இருக்கும்!
//

பழனியில் விதவிதமான காவடிகள் வரும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன், பார்த்தது இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
அலகு காவடியின் விவரிப்புக்கு நன்றி கண்ணன்.
//

வருகைக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// நையாண்டி நைனா said...
மீ பஸ்ட்டா???
//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
நன்றாக இருக்கு குத்தாட்டம்.10 நிமிடம் எதுக்கு 2 அல்லது 3 நிமிடங்களிலேயே தோள் வலி எடுத்துவிடும் போல் இருக்கு.
//

குமார் அண்ணா,
வலி சரியாக 3 நாள் ஆச்சு !

கோவி.கண்ணன் சொன்னது…

//starjan said...
நல்லா இருந்தது உங்க ஊர்த்திருவிழா//

ஸ்டார்ஜன், நன்றி

//காவடி எடுத்திருக்கீங்க போல !
//

படத்தில் நான் சீருடை எதுவும் போடல. நான் வேண்டுதலுக்கு எடுக்கல. ஆர்வம் காரணமாக தூக்கி ஆடிப் பார்த்தேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பாலாஜி said...
உண்மையிலேயே ஒரு நல்ல பதிவு. இன்றளவும் நம் கிராமப்புரங்களில் நடக்கும் உன்னதமான கோயில் திருவிழாக்களை கண்முன்னே நிறுத்துகிறது உங்கள் பதிவு. தொடரட்டும் உங்கள் பயணம். வாழ்த்துக்கள்.

5:22 PM, June 18, 2009
//

பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜோதிபாரதி said...
அட!
கோவியாரா காவடிய தூக்கிக்கிட்டு ஆடுறது!
உங்கள் சேவடிகள் ஆன்மீகத்துக்குத் தேவை!
ஆண் மீக பதிவர் கோவியார் வாழ்க!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
எல்.ஆர்.ஈஸ்வரியோட பாட்ட பேக்கிரவுண்டுல
போட்டா ஒரு ரவுண்டு ஆடுவாரு போலிருக்கே!
சூப்பர்!
//

பாராட்டுக்கு நன்றி !

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நல்லாதான் காவடி ஆடுரீங்க சார்.. கொட்டுதான் வேகம் பத்தல

Nathanjagk சொன்னது…

ஜிகே,
காவடி பற்றி நல்ல விவரணை. படிக்க சுவாரஸியமாவும், பார்க்க இனிமையாகவும் இருக்கு. திருவிழாங்கிறத கற்பனை செஞ்சாலே ஒரு மாதிரி பரபரப்பா, வாசனையா, கிறக்கமா இருக்கு!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்