*****
உபுட் கிராமத்தில் இருந்து பேருந்து கிளம்பும் போது மாலை 4:30 ஆகி இருந்தது, அடுத்ததாக கடற்கரை கோவில் மற்றும் அங்கே சூரிய மறைவைப் பார்க்க வேண்டும் என்பது தான் திட்டம் அதன் படி பேருந்து 'டனலாட்' கடற்கரைப் பகுதியை நோக்கி பயணித்தது, பயணம் இரண்டு மணி நேரம் இருக்கும் என்றார்கள், பேருந்து பயணத்தினூடாக பார்வையிட எழில் நிறைந்த வெளிகள் இருந்தும் அன்றைய அலைச்சல் மற்றும் சோர்வு தூக்கம் வரவழைத்தது, இடையில் ஒரு இடத்தில் நிறுத்தி எங்களுடன் வந்தவர்கள் 'துரியன்' பழம் வாங்கித் தின்றனர் , துரியன் பழம் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம், அடர்ந்த வாடை அதைக் கெட்ட வாடை என்று சொல்ல முடியாது ஆனால் ஒரு சில வாசனை திரவியங்களைப் பூசிக் கொண்டால் அருகில் உள்ளவர் முகம் சுளிப்பார்கள் அது போன்றே பழவாசனைகள் அனைத்தையும் சேர்தால் போல் மணம் நாசியை முடக்கும், துரியன் பழச் சுவை ? பலாப் பழத்தை அரைத்து கூழாக்கி சுவைப்பது போன்று கொஞ்சம் தித்திப்பாகத்தான் இருந்தது, நன்கு உணவு சாப்பிட்டுவிட்டு இதைச் சாப்பிடக் கூடாது, அப்படிச் சாப்பிட்டுவிட்டும் ஏப்பம் விட்டால் ஏப்பக் காற்று பக்கத்தில் உள்ளவரை மயங்கி விழும்படி தாக்கும் வல்லமை பெற்றது :)
ஒரு மணி நேரத்தூக்கம் களையவும் டனலாட் பகுதி நெருங்கவும், சூரியன் மறைய 10 நிமிடங்களே இருந்தன. நாங்கள் சென்ற கோவில் பாலியின் மிக முதன்மையான 8 கோவில்களில் ஒன்று, பல அரச வம்சங்கள் பாலியில் இன்னும் வசிக்கின்றன, அவர்களுக்கு சொந்தமானது என்ற அளவில் கோவில்கள் பொதுமக்களால் வழிபடப்படுகிறது, டனலாட் என்றால் கடற் பகுதியாம் அந்தக் கோவிலுக்குள் செல்லும் பகுதி கடல் மட்டத்திற்கு 20 அடி உயரத்தில் உள்ளது, அங்கு இரு கோவில்கள் உள்ளன, ஒன்று 20 அடி உயர கரையில் இருந்து இயற்கையாக அமைந்த பாறைப் பாலத்தின் மீது பாதை போடப்பட்டு கடலுக்குள் இருக்கும் செங்குத்தான பாறைமேல் அமைக்கப்பட்ட கோவில், கொஞ்சம் இடது அல்லது வலது பக்கம் தள்ளி நின்று பார்க்க, டைனசர் கடல் நீரை கழுத்து நீட்டிக் குடிப்பது போன்ற தோற்றம், அடுத்த 500 மீட்டர் தொலைவில் முக்கியமான டனலாட் கோவில் கடலின் கரைப் பகுதியில் சற்று கடலினுள் உள்ளது, கடல் தண்ணீர் பெருகாத நாட்களில் கடற்கரையில் இருப்பது போன்றும் கடல் தண்ணீர் பெருகிய நாட்களில் அந்தக் கோவில் சிறிய கப்பல் மிதப்பது போன்றும் தோன்று(மா)ம். அன்று கடல் நீர் பெருக்கு இல்லை.
நாங்கள் சென்ற அன்று நான் முன்பு குறிப்பிட்டிருந்த களுங்கன் பெருநாளின் மறுநாள் என்பதால் அன்று(ம்) பாலி இந்துக்கள் இந்தக் கோவில்களுக்கும் குடும்பம் குடும்பமாக வந்து சடங்குகள் செய்து கொண்டிருந்தனர், வசதிபடைத்தவர்கள் சிற்றுந்திலும், வசதி குறைந்தவர்கள் சிறிய லாரி போன்ற உந்திகளிலும் வந்தனர். டைனசர் போன்ற தோற்றம் உள்ள அந்தக் கோவிலை அடுத்து கடற்கரையின் உயரப் பகுதியில் இருந்து தீர்தம் விழும் கடற்கரைப் பகுதி ஒன்று உள்ளது அங்கு பாலி இந்துத் தலைவர் (அவர்கள் மொழியில் ப்ராமணா) வருபவர்களுக்கு ஆசிக் கொடுத்து நெற்றியில் அரிசிகளை பதித்துவிட்டார், எங்கள் அலுவலகத்து புத்தமதச் சீனர்கள் அங்கு சென்று ஆசி பெற்று வந்தனர்.
தொலைவில் இருந்து பார்க்க டைனசர் கழுத்து நீட்டியது போல் இருக்கும் இந்த கோவில் டனலாட் கோவில் அருகே அமைந்துள்ள மற்றொரு சிறிய கோவில் இதன் பெயர் Pura Batu Balong
அதன் நுழைவாயில்
அங்கு செல்லும் சிறிய பாதை
அதனுள் சென்று வழிபடுபவர்கள் (கடல் மட்டத்தில் இருந்து 20 அடி உயரம் கைப்பிடிச் சுவர் கிடையாது)சூரியன் மறைய ஐந்தே நிமிடங்கள் மீதம் இருந்தன, நான் கடலுக்குள் இருக்கும் அடுத்த கோவில் பகுதிக்குச் சென்றேன். மேற்கு வானம் செந்நிரமாக காட்சி தந்தது, கொஞ்சம் மேகக் கூட்டங்கள் இருந்ததால் சூரியன் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் மெல்ல மெல்ல சூரியன் கீழிறங்க அந்த மேற்குக்கடலில் பொன்னிறம் மின்னிக் கொண்டு இருந்தது, சாரை சாரையாக பாலி இந்து மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வழிபாட்டுக் கூடைகளுடன் டனலாட் கடல்கோவிலுக்குச் சென்று கொண்டு இருந்தனர்.
கோவிலுக்குச் செல்லும் வழி கடற்கரை என்றாலும் அவை பாறை மேடுகள் குண்டு குழிகள் நிரம்பியவாகவே இருந்தது, அவை எரிமலை குழம்புகளால் ஏற்பட்ட பாறைகள் என்பது பார்க்கும் போதே தெரிகிறது, எரிமலைகள் உருகி பரவி இந்தத் தீவை ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். கோவிலுக்கு அருகே சென்றேன், கடற்கரைச் சுற்றிலும் சுற்றுலாவாசிகள் கோவிலையும் சூரிய மறைவையும் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தனர்.
டனலாட் கோவில் சிதைந்த கப்பல் போன்ற வடிவப் பாறைக் குன்றையும் அவற்றினுள் சிறிய குகைகளும் இருக்கும் குன்று, அதன் மீது வழிபாட்டுத் தளம் இருக்கிறது, நம்மால் கோவில் அருகில் மட்டும் தான் செல்லமுடியும், குன்றின் மீது ஏறுவதற்கோ, மேலே இருக்கும் கோவிலில் நுழைவதற்கோ அனுமதி இல்லை, பாலியைச் சேர்ந்த இந்துக்கள் தவிர்த்து வேறு எவருக்கும் அங்கு இருக்கும் கோவில்களில் நுழைந்து வழிபட அனுமதி கிடையாது. நானும் இந்து மதம் தான் உள்ளே வழிபடப் போகிறேன் என்றால் விடமாட்டார்கள். சீக்கிய மதத்தில் சீக்கியர்கள் மட்டும் இருப்பது போல், பாலி இந்துக்கள் என்றால் அதில் பாலித் தீவை சேர்ந்தவர்கள் மட்டும் தான் என்று புரிந்தது. பாலி இந்துயிசம் என்பது இந்திய இந்து மதச் சாயலில் பவுத்த சமண மதங்களையும் சேர்ந்த கலவையே, ஆனால் நாங்கள் புத்தரை வணங்கமாட்டோம் என்றே சுற்றுலா வழிகாட்டி என்னிடம் தெரிவித்து இருந்தார். என்னால் 3 நாள் சுற்றுலாவை பத்து இடுகைகளாக எழுத முடிகிறது என்றால், ஜெயமோகன் போன்றவர்கள் பாலிக்குச் சென்று வந்தால் 'இந்து ஞானமரபு பற்றி' 10 தொகுப்பாக, தொகுப்புக்கு 2000 பக்க அளவில் நாவல்கள் எழுத முடியும்,
வழிபாட்டிற்கு வரும் பாலி இந்து ஆண்கள் காதில் பூ வைத்துக் கொண்டு இருந்தனர், எல்லோருமே வெள்ளை நிற ஆடை அதில் சிறுவர்களும் தலைப்பாகை கட்டி இருந்தனர், பெண்கள் முழுக்கைச் சட்டை மற்றும் கைலி போன்ற ஒரு உடை அணிந்திருந்தனர், டனலாட் கோவிலுக்குள் இருப்பது சிவனாம்.
(இணையத்தில் எடுத்தப்படம்)
சூரியன் முற்றிலும் அமிழ்ந்துவிட்ட நிலையில் அந்த இடம் இருட்டத்துவங்கி இருந்தது, நிறைய புகைப்படங்களை எடுத்துவிட்டு திரும்பினோம்.
அடுத்து செல்ல வேண்டிய இடம் இரவு உணவிற்கான இந்தோனேசிய உணவு வகை உணவகம், ஒரு மணி நேரப் பயணம். வழிகாட்டி பாலித் தீவினர் ஈமக் கிரியை பற்றிச் சொல்லிக் கொண்டு வந்தார் (சிவன் கோவிலைப் பற்றி எழுதிவிட்டு இதை எழுதாமல் விட்டால் எப்படி ?). பாலித் தீவினர் மரணத்தைக் கொண்டாடுபவர்களாம், வேறெந்த இல்ல நிகழ்வைக் காட்டிலும் மரணச் சடங்குகளுக்கு ஆகும் செலவு மிக அதிகமாம். இறந்த உடல்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட நாளில் கூட்டமாக எரியவிடப்படுமாம், அதற்காக தற்காலிகமாக (பதப்படுத்தி) புதைத்துவிட்டு பிறகு எடுத்து திரளாக ஊர்வலமாகச் சென்று ஆட்டம் பாட்டம் இசை என்று கொண்டாடிச் சென்று எரிப்பார்களாம், இறந்தவரின் ஆவி வீடு திரும்பாமல் இருக்க ஊர்வலப் பாதியில் குழப்பங்கள் இருப்பது போல் செய்ய முன்னும் பின்னும் பக்கவாட்டு தெரு ஆகியவற்றில் மாறி மாறி சென்று வேண்டுமென்றே நடிக்கப்படுமாம், மரண ஊர்வலத்தில் இறந்த உடல் சாதி வழக்கத்திற்கேற்ப ப்ராமணர்களின் பிணம் மிகப் பெரிய காளை உருவத்துடன் ஊர்வலமாகவும், சத்திரியர்கள் குதிரை வடிவ ஊர்வலத்துடன், பிறர் ஆடு உருவ பொம்மைகளையும் செய்து ஊர்வலமாக எடுத்துச் சென்று எரிப்பார்களாம். எனக்கு அவன் - இவன் படத்தின் இறுதி காட்சி தான் நினைவுக்கு வருகிறது. (சுற்றுச் சூழலுக்கு கேடு இல்லையா ?) எரிமலைகள் கிளப்பும் சாம்பலைவிட பெரிதல்ல என்று நினைக்கிறார்களோ என்னவோ. சாம்பல் பின்னர் கடலில் தூவப்படுமாம். பாலித் தீவினர் நம்பிக்கை இறந்தவர்கள் மீண்டும் மறுபிறப்பாக பாலியில் பிறப்பார்களாம், ஒரு காலத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது அவமானமாகக் கருதப்பட்டதாம், தற்போது அது மூடப் பழக்கம் என்று மாற்றிக் கொண்டார்களாம்.
பாலி இந்துக்களின் ஈமச்சடங்குகள் பற்றிய கீழ்கண்ட படங்கள் இணையத்தில் எடுத்தது
மேலும் இணைய படங்களுக்கு....இணைப்பு
இந்தத் தொடர் அடுத்தப் பகுதியில் நிறைவுறும்.
6 கருத்துகள்:
நல்ல தகவல்கள்.
// நன்கு உணவு சாப்பிட்டுவிட்டு இதைச் சாப்பிடக் கூடாது, அப்படிச் சாப்பிட்டுவிட்டும் ஏப்பம் விட்டால் ஏப்பக் காற்று பக்கத்தில் உள்ளவரை மயங்கி விழும்படி தாக்கும் வல்லமை பெற்றது :)//
ஹி ஹி ஹி பயங்கரமா கற்பனை செய்து இருக்கீங்க :-)
//வழிபாட்டிற்கு வரும் பாலி இந்து ஆண்கள் காதில் பூ வைத்துக் கொண்டு இருந்தனர், //
ஹா ஹா ஹா இதை படித்ததும் எனக்கு சிரிப்பு வந்து விட்டது;
சிறப்பான, மனதையும், கண்களையும் கவரும் படங்களுடன் சொன்ன யதார்த்தமான பதிவு.
//பழனி.கந்தசாமி said...
நல்ல தகவல்கள்.//
ஐயா, மிக்க நன்றி
கிரி நன்றி
//VSK said...
சிறப்பான, மனதையும், கண்களையும் கவரும் படங்களுடன் சொன்ன யதார்த்தமான பதிவு.//
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு உங்கப் பின்னோட்டம், மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது
கருத்துரையிடுக