பின்பற்றுபவர்கள்

27 மார்ச், 2008

நடுத்தர வயது பிரச்சனைகள்

நடுத்தரவயதினர் குறித்து சமூகம் அக்கரை கொள்வதில்லை, அவர்களுக்கான செய்திகள் அவ்வளவாக இல்லை என்று ரத்னேஷ் அண்ணா ஒரு இடுகை எழுதி இருந்தார். உண்மைதான்.

நடுத்தரவயதினருக்கு தன்னைப் பற்றிய நினைவே இருக்காது. திருமணம் நடந்து 40 வயது கடந்த ஆண்கள் பெண்களுக்கு பொறுப்புகள் அதிகமாகி இருக்கும், ஆண் என்றால் 25லிருந்து 35 வயது வரை எதிர்காலம் என்பதைக் கருத்தில் கொண்டு பல்வேறு திறமைகளை தனக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையில் இருப்பான். இவர்களை குறிவைத்து வேலை சந்தைகள், திருமணசந்தைகள் எல்லாம் இயங்கும். இலக்கியம், படைப்பாளிகள், சமூகம் பொதுவாக காதலையும், அதன் பிறகு கொஞ்சம் திருமண வாழ்கையையும் பற்றி பேசிவிட்டு குழந்தை பிறந்ததா இல்லையா என்று கவலைப்பட்டு நிறுத்திக் கொள்கிறது. அதற்குமேல் இலக்கியமும் இலக்கிய ஆர்வலர்களும், சமூகமும் பேசவேண்டுமென்றால் 50 வயது கடந்தவர்களுக்கும் வரும் நிகழ்வுகளையும், முதியோர் இல்லம், வாரிசுகளுக்கு வரன் தேடுவது, மருமகள் தொல்லை, மாமியார் தொல்லை ஆகியவற்றில் கவனம் செலுத்து கிறார்கள். 40 வயது ஆகிவிட்டால் ஓரளவு வாழ்வியல் அனுபவம் அடைந் திருப்பவர்கள் அவர்களுக்கு எதிர்கொள்ளவேண்டியவை எது என்று சொல்லத்தேவை இல்லை என்று சமூகம் கருதுகிறது.

என்னிடம் நெருங்கிய நண்பர் ஒருவர் "இந்தியாவுக்கு வந்தால் நல்ல எதிர்காலம் இருக்கு, யோசிக்கலாமே" என்றார். "ஐயா சாமி இன்னும் 15 அல்லது 16 ஆண்டுகள் தான் வேலை செய்யப் போகிறோம், பாதிவாழ்கை ஓடிவிட்டது, எதிர்காலம் என்று எதையும் இனி புதிதாக கற்பனை செய்யமுடியாது, இருக்கிற வேலையை பார்த்துக் கொண்டிருப்பதுதான் சரி என்று படுகிறது" என்றேன், என்வயதுகாரராக அவரும் இருப்பதால் "ம் சொல்வது சரிதான்" என்றார். நடுத்தரவயதில் புதிய முடிவெடுப்பது என்னைப் போன்றோர்களுக்கு கடினமே, சொந்த நிறுவனம் நடத்துபவர்களுக்கு வயது ஒரு பிரச்சனையே இல்லை அவர்கள் எண்ணிக்கையில் குறைவுதான். இங்கு சிங்கையில் 40 வயது கடந்தவர்களுக்கு
திறமை இல்லை என்றால் வேலை கிடைப்பது அரிது, டாக்சி ஓட்டச் சென்றுவிடுவார்கள்.

இல்லச் சூழலிகளில் கூட 30 வயதில் திருமணம் நடந்தால் அதன் பிறகு வயது மூப்பின் காரணமாக அடுத்த ஆண்டே குழந்தை பெற்றுக் கொள்ளும் கட்டாயத்தில் இருப்பான், 40 வயதை நெருங்கும் போது குழந்தைக்கு 8 வயது ஆகி இருக்கும், அந்த தம்பதிகளின் நினைவு முழுவதும், வாரிசுகளின் எதிர்காலத்தை எப்படி அமைத்துக் கொடுப்பது என்ற நினைவிலேயே இருக்கும். பாசமான குடும்பத்தில் பிறந்தவர்கள் என்றால் பெற்றோர்களை எப்படியெல்லாம் மகிழ்வுடன் வைத்திருப்பது என்றெல்லாம் சிந்திப்பார்கள், அதற்கு வாய்ப்பில்லாதவர்கள் வார இறுதி நாட்களில் குழந்தைகளுடன் கடற்கரைக்குச் சென்று வருவார்கள். நடுத்தரவயதினரின் வீட்டைப் பொருத்து அன்றாட நடவெடிக்கை ஒரே மாதிரிதான் இருக்கும்.

இதற்கு மேல் இவர்களுக்கு இடற்பாடுகளோ மகிழ்ச்சிகளோ இருப்பது இல்லை வெளிப்படையாக தெரியாவிட்டாலும் பலரது நடுத்தர வயது வாழ்கை இவ்வளவுதான். இவர்களுக்கு ஆலோசனைக் கூறுவதற்கு தேவை இருப்பதில்லை. திரைப்படங்களில் இதை தெளிவாக பார்கலாம், எல்லா கதைகளிலுமே நடுத்தரவயது பாத்திரம் ஒரு துணை பாத்திரம் மட்டுமே. ஒன்று இளைஞர்களைச் சுற்றி கதை பின்னப்பட்டு இருக்கும், இல்லையென்றால் வெகு அரிதாக மாதவ படையாட்சி கதைபோல் முதுமையையின் துன்பங்களை சொல்லி இருப்பார்கள்.

நடுத்தரவயதினரைப் பற்றி சமூகம் கவலைப்படாததற்கு காரணம், நடுத்தரவயது புதிய பிரச்சனைகளை சந்திக்கும் வயது அல்ல என்பதுதான். நடுத்தரவயதினருக்கு தன்னைப்பற்றி எவரும் கவலைப்படுவதில்லை என்ற உள்ளுக்குள் வருத்தம் இருக்கும், முதுமை உடலுக்கு எட்டும் தொலைவில் இருக்கும் என்ற கவலை வந்துவிடும். அதை அவர்களே புரிந்து கொள்ளாமல் பிறரிடம் எரிந்துவிழுவார்கள். '40 வயதில் நாய்குணம்' என்று அதைத்தான் சொல்கிறார்கள். அதே போல் எரிந்துவிழும் பெண்களின் கோபத்திற்கு மெனோபாஸ் என்ற மாதவிலக்கு நின்று போவதும் ஒருகாரணம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள், அதன் தம் கணவரை மிகவும் நேசிக்கும் பெண்கள் 'மாதவிலக்கு நின்ற பிறகும் கணவர் தம்மை முன்பு போலவே நேசிப்பாரா ?' என்று வெகு சிலர் கவலை கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். இது இனம் கடந்து எல்லா மனித இனத்திலும் இருக்கும் உணர்வுதான். எனது அலுவலகத்தில் இருக்கும் பேரிளம் பெண் 50 வயதை நெருங்குபவர், மாதவிலக்கு இன்னும் நிற்கவில்லை என்பதை மேற்கண்ட கனவர் காரணத்தை சொல்லி, அது இன்னும் நிற்காமல் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக பெருமையுடன் வெளியில் சொல்லிக் கொள்வார்.

நடுத்தரவயதில் திடீர் பிரச்சனை ஏற்பட்டாலும் அதை தீர்க்க முடியாத பருவம் என்பதால், பிரச்சனை என்றால் இந்த வயதினர் பின்வாங்குவார்கள். மணமுறிவு போன்ற சூழல்களில் நன்கு யோசித்தே முடிவெடுப்பார்கள், இந்த வயதுக்கு மேல் வெறொரு திருமணம் செய்து அந்த வாழ்கையிலும் நிம்மதி இல்லாமல் போய்விட்டால் அதன்பிறகு மேலும் துன்பம் தான், அதனால் பிரச்சனையை ஏற்றுக் கொண்டு, அல்லது பிரச்சனையுடனேயே அதன் போக்கில் விட்டு வாழ பழகிவிடுவார்கள். தனக்கு என்று ஒரு இல்லம் இருக்கிறது என்பதை உணர்ந்தாலும் தனிமனித நலனே முக்கியம் என்று நினைக்கும் ஒரு சில நடுத்தர வயதினர் மட்டுமே மணமுறிவு, மறுமணம் என்று முடிவெடுப்பார்கள்.

திருமணம் ஆன ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, நடுத்தரவயதில் பிரச்சனைகளை சந்திப்பவர் என்ற நிலையில் இருப்பவர்கள் அந்த வயதினரின் விழுக்காட்டு அளவில் மிகக் குறைவே. ஆணாக இருந்தால் நரைக்க ஆரம்பிக்கும் மீசைக்கு மை தடவுவதும், தாடியில் வெள்ளை முடி தெரியும் என்பதற்காக நாள்தோறும் மழுங்க மழித்துக் கொள்வதிலும் முனைப்பாக இருப்பார்கள்.

படைப்பாளிகள் மேற்கண்ட காரணங்களினால் தான் நடுத்தரவயதினரை கண்டு கொள்வதே இல்லை. பதிவர்களிலும் கூட நடுத்தரவயதினர், வயதில் மூத்த பதிவர்களை விட எண்ணிக்கை குறைவுதான். 40 வயது ஆகும் போது சென்ற பத்தாண்டுகள் 10 நாளில் முடிந்தது போல் இருக்கும், 30லிருந்து 40 வயதில் எதிர்கால திட்டங்கள் மற்றும், வாழ்வின் அடித்தளம் அமைப்பது என்ற ரீதியில் வாழ்கையின் வேகம் வெகு விரைவுதான்.

13 கருத்துகள்:

நையாண்டி நைனா சொன்னது…

பின்னூட்டம் போடலாம்னு பார்த்தா, இது இப்போ பெரியவங்க பேட்டையா போச்சு.... ஹி... ஹி.. ஹி..

அதனாலே நான் வெளியில் இருந்து ஆதரவு தருகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
பின்னூட்டம் போடலாம்னு பார்த்தா, இது இப்போ பெரியவங்க பேட்டையா போச்சு.... ஹி... ஹி.. ஹி..

அதனாலே நான் வெளியில் இருந்து ஆதரவு தருகிறேன்.
//

அதனால் என்ன ?

எல்லோருக்கும் நடுத்தரவயது வருவதுதானே.

ஜெகதீசன் சொன்னது…

அது சரி, ரத்னேஷ் அண்ணாவை, "அண்ணா, அண்ணா" ன்னு கூப்பிடுறீங்களே? அது ஏன்? உங்க வயது குறையாகத் தெரிவதற்காகத் தானே?
:)))

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
அது சரி, ரத்னேஷ் அண்ணாவை, "அண்ணா, அண்ணா" ன்னு கூப்பிடுறீங்களே? அது ஏன்? உங்க வயது குறையாகத் தெரிவதற்காகத் தானே?
:)))
//

தம்பி ஜெகதீசன்,
இரட்டையர்களில் முதலில் பிறந்தவரை இளையவர் அண்ணா என்று தான் கூப்பிடுவார். இளையவருக்கு வயது ஒருநாள் கூட குறைந்து இருக்காது.

நட்பைத்தாண்டி கொஞ்சம் அன்பும் வைத்தால் அப்படி கூப்பிட தோன்றும்.
:))) ஆராய்ச்சி பண்ணக் கூடாது அனுபவிக்கனும்.

நான் பரவாயில்லை, சில பெரியப்பாக்கள் டிபிசிடி ஐயாவை அண்ணா என்று கூப்பிடுகிறார்களே இதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள் ?

RATHNESH சொன்னது…

கோவி.கண்ணன்,

//பாதிவாழ்கை ஓடிவிட்டது, எதிர்காலம் என்று எதையும் இனி புதிதாக கற்பனை செய்யமுடியாது, இருக்கிற வேலையை பார்த்துக் கொண்டிருப்பதுதான் சரி என்று படுகிறது" என்றேன், என்வயதுகாரராக அவரும் இருப்பதால் "ம் சொல்வது சரிதான்" என்றார். நடுத்தரவயதில் புதிய முடிவெடுப்பது என்னைப் போன்றோர்களுக்கு கடினமே//

என்ன, இப்படி சலித்துக் கொண்டு விட்டீர்கள்! சிந்தனையின் இளமைக்கும் வயதுக்கும் சம்பந்தமே கிடையாது.

நடுத்தர வயது இலக்கிய திரைப்பட கவனத்தில் வராததற்கு காரணம், அந்த வயதில் காதலைக் காட்ட முடியாது, மர சுற்றி ஒடி ஆடுவதாகக் காட்ட முடியாது என்பதனால் மட்டுமே. (நம் இலக்கிய மற்றும் திரைத்துறை மெச்சூரிடி அந்த எல்லைகளை இன்னும் கடக்கவில்லை. இதைத் தான் நீங்கள் சுட்டியுள்ள அந்தப் பதிவிலும் கூறி இருந்தேன்) அந்த வயதினர் கஷ்டப்படுவதாகக் காட்டினாலும் ஒட்டாது. மாதவப்படையாச்சி வயதுக்கு மேல் தள்ளாடுவதாகக் காட்டினால் தான் கதையில் பொருத்தம் இருக்கும் என்கிற எல்லையை நம் சிந்தனை தாண்டவே இல்லை.

அதற்காக நடுத்தர வயது எல்லாம் முடிந்து விட்ட, எந்தத் தொடக்கத்துக்கும் லாயக்கு இல்லாத வயது அல்ல.

சுஜாதா, பாலகுமாரன், பெர்னாட்ஷா போன்ற எத்தனையோ சாதனையாளர்களின் எழுத்துத் துறைச் சாதனை நடுத்தர வயதில் தான் தொடக்கம் கொண்டிருக்கிறது.
எந்தத் துறையிலும் இதற்கு உதாரணங்கள் சொல்லலாம்.

ரகசியமாக ஒன்று சொல்கிறேன்; பெண்களின் பொருளாதார சுதந்திரம் பெருகப் பெருக, நடுத்தர வயது ஆண்களுக்குத் தான் லாபம்(?). அடுத்த பத்தாண்டுகள் இதனை நிரூபிக்கப் போகின்றன.

வெளியிலிருந்து ஆதரவு தருகிறேன் என்று ஒதுங்க நினைக்கும் நையாண்டி நைனா போன்றவர்களுக்கு, காத்திருப்போர் பட்டியலில் தான் இடம்.

SP.VR. SUBBIAH சொன்னது…

////40 வயது ஆகும் போது சென்ற பத்தாண்டுகள் 10 நாளில் முடிந்தது போல் இருக்கும், ////

50 வயதிலும் அப்படித்தான் தோன்றும்!
எலக்ட்ரானிக் யுகம் என்றால் சும்மாவா?

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
கோவி.கண்ணன்,

//என்ன, இப்படி சலித்துக் கொண்டு விட்டீர்கள்! சிந்தனையின் இளமைக்கும் வயதுக்கும் சம்பந்தமே கிடையாது.//

எண்ணத்துக்கு வயது கிடையாது, கற்பனைக்கும் உள்ளத்திற்கும் கூட தொடர்பு கிடையாது. வீஎஸ்கே ஐயாவின் எழுத்தைப் பார்த்து 25 வயது இளைஞராக இருக்கும் என்று நினைத்தேன். :) வயதாகிவிட்டது என்ற எண்ணமெல்லாம் இல்லை. நமக்கு முன்பே இருக்கும் ஆண்டுகளும், நாம் பார்த்த போது இளைஞர்களாக இருந்த முதியவர்களின் முகமும் வாழ்கையும் உண்மை பேசுகிறது.

//அதற்காக நடுத்தர வயது எல்லாம் முடிந்து விட்ட, எந்தத் தொடக்கத்துக்கும் லாயக்கு இல்லாத வயது அல்ல.//

முடிந்துவிட்டது என்ற பொருளில் சொல்லவில்லை, எது எப்படி என்ற போதிய அறிவு இருக்கும். அவர்களுக்கு அறிவுரை தேவைப்படாது.

//சுஜாதா, பாலகுமாரன், பெர்னாட்ஷா போன்ற எத்தனையோ சாதனையாளர்களின் எழுத்துத் துறைச் சாதனை நடுத்தர வயதில் தான் தொடக்கம் கொண்டிருக்கிறது.
எந்தத் துறையிலும் இதற்கு உதாரணங்கள் சொல்லலாம். //

பல அரசியல் தலைவர்கள் கூட தலைவர்கள் ஆவது நடுத்தரவயதில் தான் ஒப்புக் கொள்கிறேன்.

//ரகசியமாக ஒன்று சொல்கிறேன்; பெண்களின் பொருளாதார சுதந்திரம் பெருகப் பெருக, நடுத்தர வயது ஆண்களுக்குத் தான் லாபம்(?). அடுத்த பத்தாண்டுகள் இதனை நிரூபிக்கப் போகின்றன.//

அதிலும் கஷ்டம் உண்டு, முன்பு அலுவலக வேலை மட்டும் தான் கணவர்கள் பார்த்தார்கள், வீட்டில் ராஜ கவனிப்புத்தான். இப்போது வார இறுதியில் கணவன் - மனைவி இருவருக்கும் நேரம் கிடைப்பதே அரிது.

பெண்களை வேலைக்கு அனுப்புவது பொருளாதார சுதந்திரம் தான். பெற்ற பிள்ளைகளைக் கூட கவனிக்க முடியாமல் தானே அவர்களும் கஷ்டப்படுகிறார்கள். அடுத்தபத்தாண்டுகள் முடியும் போது எதையுமே அனுபவிக்கவில்லை என்றும் ஆண்கள் சொல்லுவார்கள்.
:)

//வெளியிலிருந்து ஆதரவு தருகிறேன் என்று ஒதுங்க நினைக்கும் நையாண்டி நைனா போன்றவர்களுக்கு, காத்திருப்போர் பட்டியலில் தான் இடம்.
//

அவரைப் போன்றவர்களுக்காகதான் 30லிருந்து 40 வயதின் வேகம் குறித்து சொன்னேன்.

RATHNESH சொன்னது…

//பெண்களின் பொருளாதார சுதந்திரம் பெருகப் பெருக, நடுத்தர வயது ஆண்களுக்குத் தான் லாபம்(?). அடுத்த பத்தாண்டுகள் இதனை நிரூபிக்கப் போகின்றன//

நான் சொன்ன லாபம் வேறு அர்த்தத்தில். இப்போதே அவர்களின் ஆசை அடையாளங்கள் மாறத் தொடங்கிய அறிகுறிகள் வெளிப்படை.

துளசி கோபால் சொன்னது…

//நடுத்தர வயது இலக்கிய திரைப்பட கவனத்தில் வராததற்கு காரணம், அந்த வயதில் காதலைக் காட்ட முடியாது, மர சுற்றி ஒடி ஆடுவதாகக் காட்ட முடியாது என்பதனால் மட்டுமே//

ரத்னேஷ் சீனியர் தமிழ்ப் படங்களைப் பார்த்தில்லையா? :-))))

ஹைய்யோ ஹைய்யோ....

TBR. JOSPEH சொன்னது…

நீங்கள் சொல்வது மிகவும் சரி கண்ணன். நடுத்தர வயது என்பது ஒரு இக்கட்டான காலம்தான். நான் அந்த வயதில் மனைவி, மக்கள் என்று கவலைப் படாமல் என் வேலையே முக்கியம் என்று ஊர் ஊராக பயணித்திருந்தேன். குடும்பம் ஓரிடத்திலும் நான் ஓரிடத்திலுமே காலம் கழிந்துபோனது. ஐம்பத்தைந்து வயதில் குடும்பத்துடன் மீண்டும் இணைந்தபோது பிள்ளைகள் வளர்ந்து தன்னிச்சையாக முடிவெடுக்கும் வயதில் இருந்ததைப் பார்த்தபோதுதான் தெரிந்தது நான் எத்தனை முட்டாளாக இருந்தேன் என்று.

நம்மில் பலரும் இப்படித்தான். வாழ வேண்டிய வயதில் வேலை, வேலை என்று அலைந்து திர்ந்துவிட்டு ஓய்ந்து நிற்கும்போது வாழ்க்கை நம்மை கடந்து போயிருப்பது தெரிகிறது.


'When we needed you, you were not there dad.' என்பாள் என் இளைய மகள் அவ்வப்போது. உண்மைதான்.

நையாண்டி நைனா சொன்னது…

/*RATHNESH said...
வெளியிலிருந்து ஆதரவு தருகிறேன் என்று ஒதுங்க நினைக்கும் நையாண்டி நைனா போன்றவர்களுக்கு, காத்திருப்போர் பட்டியலில் தான் இடம்.*/

நான் இப்போ கல்யாண சந்தையிலும் காத்திருப்போர் பட்டியலில் தான் உள்ளேன். உங்கள் கணிப்பு மிகச் சரியானது.

அதனால் தான், அனுபவம் இல்லாததால் தான் வெளியில் இருந்து ஆதரவு தருவதாக சொன்னேன். வெறுப்பினால் அல்ல, அல்ல, அல்ல என்று ஆணித்தரமாக கூறுகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...

நான் இப்போ கல்யாண சந்தையிலும் காத்திருப்போர் பட்டியலில் தான் உள்ளேன். உங்கள் கணிப்பு மிகச் சரியானது.//

இங்கே ஒரு குறிப்பிட்ட பதிவர்கள் வலைப்பக்கம் தான் சுற்றி சுற்றி வருகிறீர்கள்.

திரைப்படத்தில் திடிரென்று ஹீரோ யாருக்கும் தெரியாமல் ஊருக்கு நல்லது செய்து கொண்டிருப்பார், ஒரு நாள் "நீங்க யாரு சாமி" என்று யாரோ ஒருவர் கேட்பார்கள். ப்ளாஸ் பேக் ஆரம்பிக்கும்.

உங்களோட ப்ளாஸ் பேக் என்ன ?

Unknown சொன்னது…

மனுசப் பய வாழ்க்கையே இப்பிடித்தானே? நடக்குற நேரத்துல அதது நடக்குறதில்ல. அப்புறம் காலம் கடந்த catch-up process! நாமதான் வாழ்க்கைய சுவாராசியமாக்கிக்கணும், எந்த வயதா இருந்தாலும்!

ஒரு படத்துல நாகேஷ் காமெடி:

ஜோசியக்காரன்: 40 வரைக்கும் உனக்கு நாய்ப் பொழப்புதான்..

நாகேஷ்: அதுக்கு அப்புறம்?

ஜோ.காரன்: அதுவே உனக்குப் பழகிப் போகும்!

சும்மா...கலகலப்புக்கு! நானும் கூடிய சீக்கிரம் 'பழகிப் போற' காலத்துக்குக் காத்துகிட்டு இருக்கேன் :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்