பின்பற்றுபவர்கள்

26 மார்ச், 2008

இறைவனை அறிந்தது யார் ?

இதைப்பற்றி என்னால் நினைக்காமல் இருக்கமுடிவதில்லை. தேடினோம் கிடைத்தது, உங்களுக்கும் கிடைக்கலாம் தேடுங்கள் என்கிறார்கள், கிறித்துவ மதத்தில் 'தட்டுங்கள் திறக்கப்படும்' கடவுள் கஜானா கூப்பாடு போடுவதால் தான் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இஸ்லாம் மதத்தில் எதையும் கேள்விக்கு உட்படுத்தக் கூடாது, கேள்விக்கு இடமில்லை, ஆனால் கேள்வி என்று கேட்காமல் சந்தேகமாக இது எனக்கு புரியவில்லை, விளக்க முடியுமா ? என்று ஐயமாக கேட்டுத் தெரிந்து கொண்டு இடமுண்டு, அதிலும் பதில் சொல்பவர் குரான், ஹதீஸ் என்ற வழிமுறைகளில் இல்லாத ஒன்றை சொல்லிவிட முடியாது. நான் ஏன் மதத்தையும் கடவுளையும் பற்றி பேசவேண்டும் ? நம் விருப்பமில்லாமல் நம்மீது திணிக்கப்பட்டதைப் பற்றி கொஞ்சம் கூட ஆர்வம் இல்லாமல் இருக்க முடியுமா ? இதுவரை வாழ்ந்து மறைந்தவர்கள், மகான்கள் அறிந்திருக்கிறார்களே அதற்கு ஆதாரமாக அவர்கள் எழுதிய நூல்கள் இருக்கிறதே அதெல்லாம் போதாதா ? கண்டிப்பாக போதாது. பசி தாகம் போன்ற உணர்வைப் போல் அவரவர் அனுபவத்தில் மட்டுமே இவற்றையெல்லாம் அறிந்து கொள்ள முயற்சி எடுக்க முடியும். வழிகாட்டல் என்ற வகையில் சிலவற்றைப் படிக்கலாம், அதுவும் அவர் பெற்ற அனுபவத்தை ஒத்த அனுபவத்தை வேறு எவரும் பெற்று இருக்க மாட்டார்கள்,

உதாரணத்திற்கு இராமகிருஷ்ணரும் விவேகாநந்தரையும் எடுத்துக் கொள்வோம். இராமகிருஷ்ணர் உருவ வழிபாடும் காளியை வழிபடுவது என பக்தி வழியில் சென்றார், அவருக்கு கிடைத்த அனுபவங்கள் பிறகாலத்தில் தண்ணுனர்வில் அனைத்தும் ஒன்றே என்று உணரும் அத்வைத அனுபவம் பெற்றார். விவேகநந்தரருக்கு முழுக்க முழுக்க தத்துவ நோக்கில் அவரது ஆன்மிக பயணம் அமைந்தது. இவர் அவரது சீடர் என்றாலும் படிப்பறிவு மிக்கவர் என்பதால் அனைத்து மதநூல்களையும் கற்று மதங்களில் சொல்லப்படுவது கடவுளில்லை, அதற்குமேல் என்று சொன்னார், அவரும் ஒரு அத்வைதிதான்.இருவரது அனுபவங்களும் வேறு. அதுபோல் இந்தியாவில் வாழ்ந்த சூஃபி ஞானிகள் மதங்களுக்கு அப்பாற்பட்டு வெவ்வேறு அனுபவம் உடையவர்களாகவே இருந்தார்கள்.

ஆன்மிகம் அறிந்து கொள்ள விரும்புவர்கள் இவர்களைப் பற்றி படிக்கலாம், ஆனால் ஆன்மிக அனுபவம் வேண்டும் என்பவர்களுக்கு ஆன்மிகவாதிகளின் அனுபவங்கள் எந்தவிததிலும் உதாவாது, உதாரணத்திற்கு இரஜனீஸ் சாமியாரை எடுத்துக் கொள்வோம், 'காமத்திலிருந்து
கடவுளுக்கு என்பது போன்று கட்டமைத்துச் சென்றுவிட்டார். நீ எதையும் துறக்கவேண்டாம், ஆனால் அவற்றின் கட்டுப்பாட்டில் இருக்காதே என்பது தான் அவரது சித்தாந்தம். சாமியார் என்றாலே காமத்துக்கு இடமில்லை என்ற புனிதம் கற்பிக்கப்பட்டதால் அவரை 'செக்ஸ் சாமியார் என்று அவரை அறியாதவர்கள் தூற்றினார்கள். அப்படி தூற்றியவர்களும் ஆன்மிக வாதிகள்தான். இதுபோல் ஆன்மிகம் என்பது புனித பூச்சில் ஒரு கனவு மாளிகையாக இருப்பதால் கனவு வருபவர்கள் வேண்டுமானால் அதை அடையலாம் போல் இருக்கிறது என்ற நினைப்பில் இறைநம்பிக்கை உடையவர்கள் கூட மதம், பக்தி என்ற ஒடுங்கி அதிலேயே திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள். அதற்கும் மேல் என்ன இருக்கிறது ? பிறப்பதே
வாழ்வதற்குத்தானே ? எதோ ஒரு நம்பிக்கை வைத்திருக்கிறேன், எனது வாழ்க்கையும் நன்றாகவே செல்கிறது, இதற்கு மேல் கடவுளைத் தேடி நான் என்ன செய்யப் போகிறேன். வெளியில் சொல்லாவிட்டாலும், சொல்லத் தெரியாவிட்டாலும் 90 விழுக்காட்டுநம்பிக்கையாளர்களிடம் இருப்பது இத்தகைய எண்ணம் தான். கூடவே கடவுள் என்பது தண்டனை வழங்கும் சக்தியாகவும் மதங்களால் சொல்லப்பட்டு இருப்பதால், கடவுளைக் குறித்து கேள்வி எழுப்பினால் தண்டனை பெற்றுவிடுவேனோ ? எனது இல்லத்தில் துக்கம் நடந்துவிடுமோ என்ற உள் பயத்தில் கேள்வியோ, கடவுள் பற்றிய தேடலோ எதுவுமின்றி அன்றாடம் சாமி கும்பிடுவது ஒரு சடங்கு, அப்பா செய்தார் நான் செய்கிறேன் என்றே இருந்துவிடுவார்கள்.

பக்தி என்பது முற்றிலும் தன்நலமே, தன்நலம் தவறு அல்ல, வாழப்பிறந்தவர் அனைவரும் தமக்கு எது ஏற்றதோ அதைத்தான் செய்வார்கள். பக்தி தன்னலம் என்று சொல்லாமல், பக்தி உயர்வு என்று சொல்வதெல்லாம் வெறும் பாசாங்குதான், இறை உணர்வு அல்லது வேட்கை என்று இருந்தால் எந்த ஒரு மனிதனும் தன்னலத்திற்காக எதையுமே வேண்டிக்கொள்ள மாட்டான். எல்லாம் வல்ல இறைவனுக்கு எனக்கு எது கொடுக்க வேண்டும்,
பிறருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதை நான் சொல்லியே ஆகவேண்டுமா ? முடியாத போது சக மனிதர்களிடம் போய் நின்றால் 'முடியாது' சொல்லிவிடுவார்கள், கிடைக்கிறதோ, இல்லையோ கடவுள் காதில் போடும் போது அது வாய்திறந்து பட்டென்று சொல்லிவிடாது, அப்படி வந்தால் எவரும் கோவிலுக்குச் செல்ல மாட்டார்கள். திடிரென்று சில கோவில்களில் கூட்டம் அலைமோதும் அது நாள்வரை சென்று வந்த கோவிலுக்கு அன்றிலிருந்து ஒரு அகல்விளக்கு கூட வாங்கி வைக்கமாட்டார்கள், அந்த புதிய கோவிலில் சக்தி அதிகம் இருப்பதாக சொல்வார்கள், இவ்வாறு திடீர் மவுசு பெரும் கோவிலகளில் கூடும் கூட்டம் தன்னல நோக்கில் தானே செல்கிறது ?

வெறும் தன்னல நோக்கில் பக்தியாளர்களாக இருந்து கொண்டு அவை புனிதம் போல் பேசுபவர்கள் ஆன்மிகம் பேசுவதாகவும், ஆன்மிகவாதிகளாகவும் சொல்லிக் கொள்வதை அவர்களே சீர்துக்கிப் பார்த்துக் கொள்ளவேண்டும். ஆன்மிகம் என்பதற்கு இன்னொரு பெயர் மெய் ஞானம், அதாவது உலகம் மற்றும் 'தன்னைப்' பற்றிய உண்மையை அறிதல், பெளத்த சமண தத்துவ சார்பில் சொல்லப்படுபவை எந்த ஒரு செயலுக்கும் காரணம் காரியம் என்று இருக்கும், முதலில் ஒரு காரணமும் அதன் பிறகு அதை செய்யத்தூண்டி செய்து முடிப்பதும். இந்த அடிப்படையில் எலலாவற்றையும் அதில் அடக்கலாம். நான் பவுத்தம் சமணம் தான் உயர்வான உண்மையான சமயம் என்று சொல்லவரவில்லை, அது போல் சைவ சித்தாந்தங்களும் இறைநம்பிக்கை தாண்டி உலகவாழ்வின் காரண காரியங்களைப் பற்றி பேசி, ஆன்மா கர்மா என்றெல்லாம் வகைப்படுத்துகிறது.ஒரு நாத்திகவாதியாக இருந்தால் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படமாட்டான், அவனைப் பொருத்து வாழும் வாழ்க்கை உண்மை.

நாத்திகன் கடவுளை மறுக்கிறானா ? ஏன் ? கற்பனையாக சொல்லப்படுவதை அவன் ஏற்பது இல்லை. கடவுள் இது என்று மதங்கள் சொல்வது தானே கடவுள், மதங்களின் புனிதத்தன்மை(?) அறிந்தவன் மதம் காட்டும் கடவுளை மறுக்காமல் என்ன செய்வான் ? அவன் இறைநிந்தனை செய்கிறானா ? நான் பல இடங்களில் சொல்லி வருகிறேன், எந்த மதத்தையும் உயர்வென பிடித்துக் கொண்டிருக்கும் இறை நம்பிக்கையாளர்கள்
மாற்றூமதத்தைப் பொறுத்து நாத்திகன் தான். இதில் ஒட்டுமொத்தமாக இவையாவும் உண்மையெல்ல என்று சொல்பவனை இறைநிந்தனை செய்பவன் என்று சொல்வதில் பொருள் இருக்கிறதா ? ஆத்திகம் இது என்று கட்டமைக்கும் போது அவை இல்லாததெல்லாம் நாத்திகம் தான். நாத்திகத்தை ஆத்திகமே உருவாக்கித்தருகிறது.

கடவுளை நம்பாதவன் நாத்திகனா ? அதைச் சொல்ல முதலில் இறைவனைப்பற்றிய உறுதியான கருத்தாக்கம் இருக்க வேண்டும். அப்படி எதுவுமில்லை. அப்படியே இல்லாவிட்டாலும் இறைவனுக்கு ஏது இவன் ஆத்திகன் .. இவன் நாத்திகன் - என்ற குறுகிய மனம் ? இறைவன் என்ன வெறும் ஆறே அறிவு கொண்ட மனிதனா ?

இறைநம்பிக்கை எனக்கு இருக்கிறதா இல்லையா என்பதைவிட எனக்கு பிடித்த ஒரே வாசகம், "இறைவன் ஒப்பற்றவன் / இணையற்றவன்" என்ற இஸ்லாமிய வாசகம்.
இறைவன் என்று ஒன்று இருந்தால் அவன் எந்த கட்டமைப்புக்குள்ளும் அவன் சிக்க மாட்டான்.

தானே அறிந்திராத இறைவனை 'நாத்திகன் தூற்றுகிறான்' என்று ஒரு ஆத்திகன் சொன்னால் அது நகைப்புக்கிடம் தானே?

இன்னும் தொடரும் ...

பின்குறிப்பு : இவை எனது கருத்துக்கள் விரும்புவர்கள் படிக்கலாம் கருத்துரைக்கலாம், எதையும் கட்டமைக்கும் முயற்சி அல்ல.

8 கருத்துகள்:

நையாண்டி நைனா சொன்னது…

பக்தி என்பது சுயநலம்: நூற்றுக்கு 100000000000000000000 சதம் உண்மை.

யாராவது நம்ம பதிவு தமிழ் மனத்தில் வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதினை விளக்கமாக கூறினால்
எனக்கு உதவியாக இருக்கும்

RATHNESH சொன்னது…

என்ன, இப்படி எல்லோரையும் மௌனமாக்கி விட்டீர்கள்!

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
என்ன, இப்படி எல்லோரையும் மௌனமாக்கி விட்டீர்கள்!
//

ரத்னேஷ் அண்ணா,

நான் சொல்வது உங்களுக்கு(ம்) 'சம்மதமாக' இருக்கும்.

அதாவது தொடர் 'மவுனம்' ஏன் என்பதற்கு தெளிவான காரணமும் உண்டு.
:)

துளசி கோபால் சொன்னது…

உள்ளேன் ஐயா.

கோவை சிபி சொன்னது…

பக்தி என்பது முற்றிலும் தன்நலமே, தன்நலம் தவறு அல்ல, வாழப்பிறந்தவர் அனைவரும் தமக்கு எது ஏற்றதோ அதைத்தான் செய்வார்கள். பக்தி தன்னலம் என்று சொல்லாமல், பக்தி உயர்வு என்று சொல்வதெல்லாம் வெறும் பாசாங்குதான், இறை உணர்வு அல்லது வேட்கை என்று இருந்தால் எந்த ஒரு மனிதனும் தன்னலத்திற்காக எதையுமே வேண்டிக்கொள்ள மாட்டான்.//
சரியான மையப்புள்ளி இதுதான்.

ஜெகதீசன் சொன்னது…

இறைவன் இருக்கலாம்... ஆனால் அவன் இருந்தால் இணையற்றவனாகத் தான் இருப்பான்...
அவனை நினைப்பவர்களுக்கு/ வணங்குபவர்களுக்கு மட்டும் அருள் புரிபவன் இறைவன் அல்ல...

http://jegadeesangurusamy.blogspot.com/2007/09/blog-post_09.html
http://jegadeesangurusamy.blogspot.com/2007/09/blog-post_21.html

:))

Thamizhan சொன்னது…

அன்றிலிருந்து இன்றுவரை கேட்கப் படும் கேள்விகள் தான்.
சித்தார்த்த கௌதமன் எவ்வளவோ வேதாந்திகள்,வேத விற்பன்னர்கள் என்று அவர்கள் சொன்ன மாதிரி உடல் வருத்தமெல்லாம் செய்து பதில் தேடி பல ஆண்டுகள் அலைந்து திரிந்து கடைசியில் அவர்களையெல்லாம் நம்ப முடியாமல் ஒதுக்கி விட்டார்.அவராகவே ஆசை தான் பலவற்றிற்கும் காரணம், அன்பு தான்
விடுதலை என்று கண்டார்.விவேகானந்தர்-ராமகிருஷ்ணர் விவாதங்களில் புத்தர் பற்றிய விவாதம் பார்க்கலாம்.

ஆசைதான் கடவுளையே படைத்தது போலத் தானே இருக்கிறது.

பலர் பலவிதமாகச் சொல்கிறார்கள்.

அன்பே-கடவுள். சைவமும் மற்ற பலரும்.
உண்மையே கடவுள்-காந்தியார்.

கடவுள் - சுயநலம் என்பது தானே மிஞ்சுகிறது.
சமுதாய நலத்தில் பார்த்தால்,

கடவுளை மற!மனிதனை நினை!

வவ்வால் சொன்னது…

கோவி,

இறைவனை அறிந்தவர் யார்னு கேட்கறிங்க இல்லாத ஒன்றை எப்படி அறிவதாம்? புரியல விளக்கவும்!

உன்னை நான் அறிவேன் என்னை அன்றி வேறு யார் அறிவார்னு வரலட்சுமிய கூப்பிட்டு வந்து பாட விட்டுப்பார்ப்போமா :-))

த்வைதம் , அத்வைதம் என்றும் சொல்லி இருக்கிங்க அதில ஒரு சந்தேகம்,

த்வைதம் = இரண்டானது,

அத்வைதம் - ஒன்று என்று சொல்றிங்க, ஆனால் அத்வைதம் என்றால் "இரண்டல்ல" என்று தான் பொருள்,ஒன்றுனு சொல்லவே இல்லை. அப்படினா அது ஒன்றுனு எப்படி எடுத்துக்க முடியும், மூன்றாக, நான்கா எதாவேண்டுமானாலும் இருக்கலாம் அல்லது எதுவுமே இல்லாம கூட இருக்கலாம் தானே!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்