பின்பற்றுபவர்கள்

22 மார்ச், 2008

இறைவன் இருக்கின்றானா ? எங்கே வாழ்கிறான் ?

அறிவு என்பதன் பொருள் ஒன்றைப்பற்றி நன்கு தெரிந்திருப்பது என்று சொல்ல முடியுமா ? அல்லது ஒன்றில் நிபுணத்துவம் பெற்ற அல்லது ஓரளவுக்கு அதைப்பற்றிய தெளிவு இருந்தால் அதை அறிவு திறன் என்று சொல்லலாம். அறிவு என்ற சொல் வினைத்தொகை என்றே நினைக்கிறேன் அறிந்து கொண்டது, அறிந்து கொண்டிருப்பது மற்றும் அறியப் போவது ஆகிய முக்காலங்கள் அடங்கிய சொல்.

உலகம் ஒன்றே எனினும் ஒவ்வொருவரின் உருவக அல்லது கற்பனை உலகம் என்பது தனித்தனி. 500 கோடி மக்கள் வாழும் இவ்வுலகம் மன அளவில் 500 கோடி உலகங்களாக இருக்கிறது என்றால் நம்புவதற்கு கடினம், ஆனால் அது கிட்டதட்ட உண்மைதான். என்னுடைய உலகம் என்பதன் மையம் எனது மனம் தான். நான் இதுவரை அறிந்து கொண்டுள்ளதை வைத்து உலகம் இப்படித்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். அது முற்றிலும் உண்மையல்ல என்றாலும் எனது உலகம் பற்றிய சிந்தனை அதைத்தாண்டி இருக்கவே இருக்காது. எனது உலகம் என்பது நான் அறிந்து தெரிந்துள்ளவற்றை உள்ளடக்கியது மட்டுமே. இந்த நேரத்தில் எத்தியோப்பியா காடுகளில் ஒரு சிங்கம் மானை துறத்துகிறதா, எத்தனை யானைகள் அங்கு இருக்கின்றன என்பதெல்லாம் எனக்குத்தெரியாது, என் உலகம் நான் கண்டு கேட்டு நேரடியாக சந்தித்தவற்றின் தொகுப்பே, இது போன்றே 500 கோடி மக்களுக்கும் தனித்தனியாக உலகமும், பலரும் அறிந்த செய்தியுடன் கூடிய ஒன்றாக பஞ்சபூதங்களும் அடங்கிய பொது திட (மெட்டீரியல்) உலகமும் இருக்கின்றது. சரிதானே ?

நாம் அறிந்த கொண்டுள்ளதை மூலதனமாக வைத்துதான் அறியாததை அறிந்து கொள்ளவே முடியும். பிரபஞ்சம் இயக்கமும், பிரபஞ்சம் முழுவதும் பரந்து இருக்கும் ஒவ்வொன்றின் இயக்கத்தில் எதோ ஒரு விதியின் படி இயங்குகின்றன. மனிதனை எடுத்துக் கொண்டால் இனப்பெருக்கம் என்பதற்காக ஆண் பெண் என்ற இரு அமைப்புகளின் சேர்க்கை தேவையாகிறது. இனப்பெருக்கம் நடைபெறுவதற்கு உள்ள விதிகளை மனிதனால் அறியமுடியும். அதை இருவர் சேர்ந்துதான் செய்யமுடியும் என்ற நிலை ஏன் உருவாகியது ? ஏன் மனிதனால் வாழை மரம் போல் தன் (சுய) உற்பத்தியில் சந்ததிகளைப் பெருக்கமுடியவில்லை ? மேலும் சந்ததிகளை உருவாக்குவதின் நோக்கம் (வாழ்தல் தவிர்த்து) இதுதான் என்பதற்கான காரணங்களை நாம் அறிந்து கொள்ள முடியவில்லை.

மனிதமனிதங்களின் உள்நோக்கம் தவிர்த்து (அதுவும் கூட சுயநல நோக்கம் தான்) இயங்கு பொருள் / உயிர்கள் அனைத்திற்கும் நோக்கம் என்று ஒன்று பின்னப்பட்டு இருக்கலாம். நோக்கமில்லாமல் எதுவுமே நடைபெறுவதில்லை என்று நினைக்கிறேன். உயிரோட்டம் உள்ளதை மட்டும் அறிவு என்று நாம் ஒப்புக் கொள்கிறோம், சூரியன் வட்டப்பாதையில் சரியாக அதே 365 1/2 நாட்கள் எடுத்துக் கொண்டு சரியான வட்டப்பாதையில் இயங்கும் படி செய்திருக்கின்ற இயற்கை / விதி அமைப்பும் ஒரு அறிவு என்று சொல்ல முடியும்.

தானாகவே இயங்குபவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட விதிகளின் கீழ் வரும் பொழுது அவை இயங்குகின்றன, இன்னின்ன சுழல் அமைப்பு இருந்தால் இவை இவை இயங்கும் அதைத்தான் வேதியல் / இயற்பியல் விதி என்கிறோம்.

இந்த விதியின் படி நடப்பது சரி, இதை நிர்ணயித்தது யார் என்ற கேள்வியில் தான் இறைவன் பின்னால் இருந்து இயக்குவதாகவும், இறைவனின் சித்தமாகவும் சொல்கிறார்கள்.

பிரபஞ்சத்தை பின்னியுள்ள இந்த விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டவையா ? கணக்கு அறிவே இல்லாத கற்காலத்திலும் 5 + 5 = 10 ஆகத்தான் இருந்திருக்கும், கண்டுபிடிக்கவில்லை என்பதால் கற்காலத்தில் 5 + 5 = 12 என்றிருந்திருக்கும் என்று சொல்ல முடியாது. அது போல் இயங்குவிசையின் விதிகள் இவை ஏற்படுத்தப்பட்டவை அல்ல என்றுமே இருப்பவை. எந்த ஒரு இயற்பியல் / வேதியல் விதியும் ஏற்படுத்தப்பட்டவை அல்ல. அதைப் பற்றி ஆராய்சி செய்யும் போதுதான் அதைப்பற்றி அறிந்து கொள்கிறோம். எனவே வேதியல் / இயற்பியல் வினைகள் இதற்கு முன்பு இவ்வாறு இல்லை என்று சொல்ல முடியாது, அறிந்தபிறகே இப்பொழுதுதான் கண்டுகொண்டோம் என்று சொல்லவதே சரி.

ஒரு பொருள் தெளிவாக தெரிவதற்கு போதிய வெளிச்சம் தேவை, வெளிச்சத்தின் உதவியுடன் தெரிந்து கொள்ளுதல். அதை அறிந்து கொள்ள போதிய அறிவு தேவை, அறிவை வெளிச்சம் அல்லது ஒளியுடன் உருவகப்படுத்தி அறிவொளி என்பார்கள். அறிவின்மையை இருட்டு என்பார்கள் அதாவது தெளிவற்றது. மனசுக்குள் மின்னல் அடிச்சது என்றால் சட்டென்று அதைப்பற்றி சிந்தனை கிடைத்தது என்ற பொருள்தானே. அறியும் திறனை ஒளியுடன் தொடர்பு படுத்தி, நம் அறிவுக்கு எட்டாத பிரபஞ்ச இயங்குவிசையின் / இயற்கையின் விதியின் காரணத்தை பேரறிவு என்ற உருவகம் செய்து அந்த பேரறிவே இறைவன் என்ற பொருளில் சொல்லப்படுகிறது. அனைத்து மதங்களிலும் இறைவனை ஒளிவடிவமாக நினைப்பதற்கான காரணம் ஒளியை அறிவுடன் ஒப்பிடுவதால் பிரபஞ்சம் பற்றிய பேரறிவே, பேரொளி இறைவன் எனச் சொல்லப்படுகிறது. பிரபஞ்சம் பற்றிய இயங்குதலின் நோக்கத்தை நாம் தெரிந்து கொள்ளும் போது எல்லோருமே இறைவன் தான். அந்த முயற்சிக்குள் நம் ஆயுள் முடிந்துவிடும்... உயிரினங்கள் அழிந்திருக்கும் ... அல்லது பிரபஞ்சம் மறுவெடிப்பிற்காக தயார் படுத்திக் கொள்ள ஒடுக்கத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும்.

நம் மூளைக்குள் சிக்காத அல்லது அறிந்து கொள்ளமுடியாதவற்றால் ஏற்படும் வியப்பை இறைவனின் செயலாகவே நினைப்பது இயற்கை. எனெனில் நம் புலன்களுக்கு எல்லை உண்டு, எல்லைக்கு அப்பாற்பட்டவற்றின் முழுக்காரணத்தையும் அறிந்து கொள்ளவே முடியாது. ஓரளவுதான் விஞ்ஞான உதவியுடன் புலன்களின் திறனில் கொஞ்சம் நீட்சி செய்திருக்கிறோம், பூமிக்கு அப்பால் உள்ளவற்றை சாட்டிலைட் போன்றவற்றின் உதவியுடன் பார்க்கிறோம், கேட்கிறோம்.

புலன்கள் (கண், காது, முக்கு, உணர்வு) எல்லையின் கட்டுப்பாட்டில் இருக்கும் மனிதனால் பிரபஞ்சம் இயங்கவதற்கான நோக்கம் அறிய முடியாத ஒன்றுதான். நோக்கத்திற்கான தேடல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அதுவறையில் பிரபஞ்சத்தின் நோக்கத்தின் காரணம் அறிந்ததவனாக மனித மனங்களில் இறைவன் வாழ்ந்து கொண்டுதான் இருப்பான். இறைவன் இருபிற்கு இன்னொரு காரணம் மனிதனுக்கு இருக்கும் ஆறாவது அறிவே. அதாவது தன்னால் அறிய முடியாத ஒன்றை இறைவன் அறிந்திருப்பான் என்று நினைக்கும் / ஊகம் செய்யும் ஆறாவது அறிவும் காரணம். மனிதன் தவிர்த்த மற்ற உயிரினங்களுக்கு இறைவன் இருப்பின் தேவை இருப்பதில்லை.

மதக்கோட்பாடுகள் தவிர்த்து இறைவன் இருப்பை நம்புவதில் பாதகமும் இல்லை, நம்பாததால் யாரும் நாசமாவதுமில்லை.

பின்குறிப்பு : இந்த இடுகை நேற்றைய இடுகையின் நீட்சி. இதுவும் யாருடைய நம்பிக்கை / அவநம்பிக்கையை கெடுப்பதற்காக எழுதப்பட்டதல்ல. முழுக்க முழுக்க படித்தது கேட்டதில் நினைவில் கொண்டுள்ளவற்றின் கடன் சிந்தனையாக எழுதியது.

30 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

கோவியாரே.... என்ன சொல்வது என்று தெரியவில்லை.
எண்ணங்கள் அண்டவெளிகளையும் தாண்டி போய்கொண்டு இருக்கிறது.அதை காலத்துக்குள் அடக்காதீர்கள்.
இதுவரை எழுதியதில் மிகவும் கவர்ந்த பதிவு.
வாழ்க உங்கள் எண்ணம் & எழுத்து.

ஜெகதீசன் சொன்னது…

இறைவன் இருக்கிறான்!!! உங்களுக்குள்ளும் வாழ்கிறான்.. எனக்குள்ளும் வாழ்கிறான்...
:)

கோவி.கண்ணன் சொன்னது…

Comments - Show Original Post
//

வடுவூர் குமார் said...
கோவியாரே.... என்ன சொல்வது என்று தெரியவில்லை.
எண்ணங்கள் அண்டவெளிகளையும் தாண்டி போய்கொண்டு இருக்கிறது.அதை காலத்துக்குள் அடக்காதீர்கள்.
இதுவரை எழுதியதில் மிகவும் கவர்ந்த பதிவு.
வாழ்க உங்கள் எண்ணம் & எழுத்து.

3:21 PM, March 22, 2008
//

குமார்,

ரொம்ப பெரிய பாராட்டு, எனக்கு அதற்கு தகுதியில்லை. எழுதியதெல்லாம் எல்லாம் கடனாக கிடைத்தது இரவல் சிந்தனை தான்.

உங்கள் பாராட்டு மிக்க மகிழ்வாக இருக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
இறைவன் இருக்கிறான்!!! உங்களுக்குள்ளும் வாழ்கிறான்.. எனக்குள்ளும் வாழ்கிறான்...
:)
//

தம்பி ஜெகா,

நம் இரண்டு பேரிடம் மட்டும் தானா ?

பெரிய இதயம் வைத்துக் கொண்டு பினாங்கில் ஒருக்கு அதிர்ஷ்ட பிள்ளையாரிடம் இறைவன் இல்லையா ?

'முயல்' 'முயல்' என்று ஊக்கம் கொடுக்கும் நற்சிந்தனையாளர் ரத்னேஷ் அண்ணாவிடம் இறைவன் வாழவில்லையா ?

புரியல்ல தயவு செய்து விளக்கவும்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//என்னுடைய உலகம் என்பதன் மையம் எனது மனம் தான். நான் இதுவரை அறிந்து கொண்டுள்ளதை வைத்து உலகம் இப்படித்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். அது முற்றிலும் உண்மையல்ல என்றாலும் எனது உலகம் பற்றிய சிந்தனை அதைத்தாண்டி இருக்கவே இருக்காது. எனது உலகம் என்பது நான் அறிந்து தெரிந்துள்ளவற்றை உள்ளடக்கியது மட்டுமே.//

கணித,இயற்பியல்,வேதியல்,உயிரியல்,புவியியல்,வரலாறு என்று எல்லா உதாரணங்களையும் கையில் வைத்துக் கொண்டு கலக்குகிறீர்கள். நன்றாக இருந்தது.

ஆகா, நம் தமிழை விட்டுவிட்டேனே! அதுவும்தான்!!

மனம் என்று தெரிவித்திருக்கிறீர்கள். சிலர் இந்த மனம் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. மனம் எங்கு இருக்கிறது என்று கேட்கிறார்கள். அதற்கு பதில் கிடைக்குமா? மனம் என்பது மூளையா? அல்லது இதயமா? அல்லது இரண்டும் தானா? அல்லது இரண்டும் இல்லையா?

அன்புடன்,
ஜோதிபாரதி.

ஜமாலன் சொன்னது…

நண்பருக்கு..

தத்துவவிசாரத்தில் புகுந்து விளையாடும் உங்கள் இந்த இரு பதிவுகளையும் ஒரு மீள் வாசிபப்பிற்கு பிறகே கருத்து சொல்லமுடியும். ஆனால் மிகவும் ஆழமான தத்துவச் சிக்கல்களைக் கொண்ட பதிவுகள் இவை.

ஆழமான பதிவுகள். உரையாடலுக்கானவை. கருத்துக்களை தொகுத்தக்கொண்டு மீண்டும் வருகிறேன்.

1. //அதை இருவர் சேர்ந்துதான் செய்யமுடியும் என்ற நிலை ஏன் உருவாகியது ? ஏன் மனிதனால் வாழை மரம் போல் தன் (சுய) உற்பத்தியில் சந்ததிகளைப் பெருக்கமுடியவில்லை ? மேலும் சந்ததிகளை உருவாக்குவதின் நோக்கம் (வாழ்தல் தவிர்த்து) இதுதான் என்பதற்கான காரணங்களை நாம் அறிந்து கொள்ள முடியவில்லை//

சந்ததி உருவாக்கத்தி்ற்கு காரணம் முதலில் சொத்தை பாதுகாத்தல் மற்றும் ஒவ்வொரு மனிதனும் தனக்கான “நானை“ விட்டுச் செல்ல முனைவதும்தான். மனிதன்மட்டுமே இதனை தனது விருப்பத்திற்கு ஏற்ப செய்யமுடியும். அதாவது கருத்தடை முறைகள். மற்றவற்றில் இயற்கைதான் தீர்மானிக்கிறது. (ரொம்பவும் சப்பையாக இருக்கா?). உண்மையில் வாழ்தல் என்பதே பெரிய நோக்கம்தான். அதைமீறிய பெரிய நோக்கம் ஒன்று இருப்பதாக சொல்வது ஆன்மீகம் மற்றும் இறையியல் சார்ந்தது. அடிப்படையில் உலகை மறு உற்பத்தி செய்யாவிட்டால் என்ன நடக்கும்? அதனால்தான் பாலியல் என்பதை மனிதனின் இயல்பான ஊக்கமாக வேட்கையாக மனித உடல் கட்டமைத்துக்கொண்டுள்ளது. அதன் விளைவு சமூகத்தை உருவாக்குதல்.


//நோக்கமில்லாமல் எதுவுமே நடைபெறுவதில்லை என்று நினைக்கிறேன். //

இதில் இருக்கும் தத்தவச் சிக்கல் இந்த பிரபஞ்ச தோற்றத்தின் நோக்கம் என்ன? இது இறையியலின் மற்றொருவகையான கேள்விதான். இக்கேள்வியை இந்திய தத்துவஞானத்தில் சமணம் மட்டுமே தீவிரமாக அலசி உள்ளது. அதன் முடிவு நோக்கம் என்பது எதுவும் இல்லை. ஆதி அந்தம் பற்றிய தேடலின் விளைவே இது. இது ஒரு தொடர்ச்சியான இயக்கம் என்பதே சமண நிலைபாடு. நவீன அஙிவியலிலும் இதுவே நிலைபாடு. பிரபஞ்ச தோற்றம் பற்றிய அறுதியான முடிவுகள் இல்லை. இரண்டு முடிவுகள் உள்ளன. 1. steady state theory 2. oscillating theory. விரிவான விளக்கம் எல்லா கலைக்களஞ்சியங்களிலும் இருக்கும். நோக்கம் என்கிற ஒன்றை யுகித்தால் அதனை செய்ல்படுத்த ஒரு ஆள் தேவை எனகிற பிரச்சனை வரும். இது திரும்பவும் கடவுள் கோட்பாட்டில் கொண்டுபோய்விடும்.

RATHNESH சொன்னது…

கோவி.கண்ணன்,

//உலகம் ஒன்றே எனினும் ஒவ்வொருவரின் உருவக அல்லது கற்பனை உலகம் என்பது தனித்தனி. 500 கோடி மக்கள் வாழும் இவ்வுலகம் மன அளவில் 500 கோடி உலகங்களாக இருக்கிறது//

உண்மை. கூடவே இதன் அடிப்படையில்,

//மனிதன் தவிர்த்த மற்ற உயிரினங்களுக்கு இறைவன் இருப்பின் தேவை இருப்பதில்லை.//

அதாவது மனிதனின் உலகத்தில்.

எனக்கெல்லாம் இறைவன் இருக்கும் இடம், எம்.ஆர்.ராதா சொன்ன இடம் தான். (ஆறடி மனுஷன் ஐந்தரை அடி நிலைப்படியில் தலையை இடித்துக் கொண்டால் "ஐயோ கடவுளே" என்கிறான். நிலைப்படி அரைஅடி கூடுதல் உயரத்தில் அமைந்திருந்தால் கடவுள் காணாமல் போய் விடுகிறான்.)

கூடுதல் தகவல்: ஜெகதீசன் கருத்து தெளிவாக இருக்கிறது. உங்கள் இருவருக்குள்ளும் இறைவன் வாழ்கிறான். எனக்குள் இருக்கிறான்; பினாங்குகாரர்? அவரே தான் பிள்ளையார் என்று சொல்லி விட்டீர்களே!

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
கணித,இயற்பியல்,வேதியல்,உயிரியல்,புவியியல்,வரலாறு என்று எல்லா உதாரணங்களையும் கையில் வைத்துக் கொண்டு கலக்குகிறீர்கள். நன்றாக இருந்தது.

ஆகா, நம் தமிழை விட்டுவிட்டேனே! அதுவும்தான்!!

மனம் என்று தெரிவித்திருக்கிறீர்கள். சிலர் இந்த மனம் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. மனம் எங்கு இருக்கிறது என்று கேட்கிறார்கள். அதற்கு பதில் கிடைக்குமா? மனம் என்பது மூளையா? அல்லது இதயமா? அல்லது இரண்டும் தானா? அல்லது இரண்டும் இல்லையா?

அன்புடன்,
ஜோதிபாரதி.
//

பின்னூட்டத்தில் பாராட்டியதற்கு மிக்க நன்றி.

மனம் பற்றி கேட்டு இருக்கிறீர்கள்,
அறிவியல் மனதை மறுக்கிறது, சுஜாதா சொல்வது போல் மூளையில் ஏற்படும் கெமிக்கல் ரியாக்சனின் கோர்வையான தொகுப்பின் மூலம் புலன்களின் துணையுடன் உணர்வாக இருப்பதே மனம், மூளை உயிருடன் இருந்தாலும் புலன்களின் தூண்டுதல் உணரப்படாமல் இருந்தால் அங்கு மனம் இல்லை.

ஆன்மிகக் கூற்றுபடி உடலுடன் சேறும் ஆன்மா புலன்கள் வழி பெறப்படும் தகவலை சேர்த்து அதன்படி உடல் இயக்கத்திற்கு தேவையான எண்ணமாக மாறி ஒத்துழைப்பதே மனம். அதாவது மனம் என்பது ஆன்மா.

உடல்செயல்படும் நிலையில் இருந்தால் தான் அங்கு ஆன்மா செயல்படும், வெறும் ஆன்மா ?அதற்கு செயல் என்று எதுவும் இல்லை.

வெறும் மனித உயிரனுவுக்கு மனம் கிடையாது அதுகருவாகி, புலன்கள் போதிய வளர்ச்சி பெற்றதும் தான் அதற்கு மனமோ அல்லது ஆன்மாவோ அதற்கு சேர்ந்துவிடுகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜமாலன் said...

நண்பருக்கு..

தத்துவவிசாரத்தில் புகுந்து விளையாடும் உங்கள் இந்த இரு பதிவுகளையும் ஒரு மீள் வாசிபப்பிற்கு பிறகே கருத்து சொல்லமுடியும். ஆனால் மிகவும் ஆழமான தத்துவச் சிக்கல்களைக் கொண்ட பதிவுகள் இவை.

ஆழமான பதிவுகள். உரையாடலுக்கானவை. கருத்துக்களை தொகுத்தக்கொண்டு மீண்டும் வருகிறேன்.

சந்ததி உருவாக்கத்தி்ற்கு காரணம் முதலில் சொத்தை பாதுகாத்தல் மற்றும் ஒவ்வொரு மனிதனும் தனக்கான “நானை“ விட்டுச் செல்ல முனைவதும்தான். மனிதன்மட்டுமே இதனை தனது விருப்பத்திற்கு ஏற்ப செய்யமுடியும். அதாவது கருத்தடை முறைகள். மற்றவற்றில் இயற்கைதான் தீர்மானிக்கிறது. (ரொம்பவும் சப்பையாக இருக்கா?). உண்மையில் வாழ்தல் என்பதே பெரிய நோக்கம்தான். அதைமீறிய பெரிய நோக்கம் ஒன்று இருப்பதாக சொல்வது ஆன்மீகம் மற்றும் இறையியல் சார்ந்தது. அடிப்படையில் உலகை மறு உற்பத்தி செய்யாவிட்டால் என்ன நடக்கும்? அதனால்தான் பாலியல் என்பதை மனிதனின் இயல்பான ஊக்கமாக வேட்கையாக மனித உடல் கட்டமைத்துக்கொண்டுள்ளது. அதன் விளைவு சமூகத்தை உருவாக்குதல்.
//

ஜமா, உங்கள் பின்னூட்டம் இந்த இடுகையில் சொல்லப்படாதவற்றை கொண்டு வந்திருக்கிறது, முதலில் அதற்கு பாராட்டுகள். வாழ்தல் என்பது வெளிப்படையான நோக்கம் மறுப்பதற்கில்லை. பிற உயிர்களில் அதே நோக்கம் இருப்பதால் தான் தன்னை முடிந்த அளவிற்கு தற்காத்துக் கொள்ள முடிகிறது. நான் வாழுதல் பற்றி சொல்லவரவில்லை. உயிரின உற்பத்தியின் / பிரபஞ்சம் விரிதலின் நோக்கம் என்ன என்பதைத் தான் கேட்டேன். நோக்கம் இல்லாது ஒரு ஒழுங்குமுறையில் சுழற்சியாக இயக்கம் நடைபெற்று வருக்கிறது என்று தான் தற்போதைக்கு அறிவியல் படியும் நினைக்க முடிகிறது. நோக்கம் எதுவுமின்றி காலம் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதுபோல் தான் பிரபஞ்சத்தின் வெளிப்பாடு ஒடுக்கம் ஆகியவை இயற்பியல் வேதியல் விதிகளுடன் இணைந்த இயக்கமாக நடந்தேறி வருகிறது என்றும் நினைக்கிறேன். தானியங்கு விசை மூலம் கடிகாரத்தின் பெண்டுலம் போல் வலது பக்கம் சென்ற பின் இடது பக்கம் நோக்கி நகருதல் என்று எளிமையாக சொல்லலாம்.


//இதில் இருக்கும் தத்தவச் சிக்கல் இந்த பிரபஞ்ச தோற்றத்தின் நோக்கம் என்ன? இது இறையியலின் மற்றொருவகையான கேள்விதான். இக்கேள்வியை இந்திய தத்துவஞானத்தில் சமணம் மட்டுமே தீவிரமாக அலசி உள்ளது. அதன் முடிவு நோக்கம் என்பது எதுவும் இல்லை. ஆதி அந்தம் பற்றிய தேடலின் விளைவே இது. இது ஒரு தொடர்ச்சியான இயக்கம் என்பதே சமண நிலைபாடு. நவீன அஙிவியலிலும் இதுவே நிலைபாடு. பிரபஞ்ச தோற்றம் பற்றிய அறுதியான முடிவுகள் இல்லை. இரண்டு முடிவுகள் உள்ளன. 1. steady state theory 2. oscillating theory. விரிவான விளக்கம் எல்லா கலைக்களஞ்சியங்களிலும் இருக்கும். நோக்கம் என்கிற ஒன்றை யுகித்தால் அதனை செய்ல்படுத்த ஒரு ஆள் தேவை எனகிற பிரச்சனை வரும். இது திரும்பவும் கடவுள் கோட்பாட்டில் கொண்டுபோய்விடும்.//


மிகச் சரியாகச் சொன்னீர்கள் இந்திய தத்துவங்களில் சமணம் மட்டுமே தத்துவ நோக்கில் சென்றது. மற்ற தத்துவங்களெல்லாம் பரமாத்மா, ஜீவாத்மா என்று பேசிக் கொண்டிருந்தன. நீங்கள் சொல்வது போல் நோக்கம் எதுவுமின்றி இயக்கம் நடைபெறுவதாகத்தான் நீலி கேசி போன்ற நூல்களில் மேற்கோள் இருக்கிறது. அது கடவுளையும் கடவுள் தான் தோன்றி என்பதையும் மறுக்கிறது. பிரபஞ்ச இயக்கத்தின் நோக்கம் அறிய முடியாததால் தான் கடவுள் கோட்பாடு வந்திருக்கிறது என்பதை சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள்.

மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
கோவி.கண்ணன்,

எனக்கெல்லாம் இறைவன் இருக்கும் இடம், எம்.ஆர்.ராதா சொன்ன இடம் தான். (ஆறடி மனுஷன் ஐந்தரை அடி நிலைப்படியில் தலையை இடித்துக் கொண்டால் "ஐயோ கடவுளே" என்கிறான். நிலைப்படி அரைஅடி கூடுதல் உயரத்தில் அமைந்திருந்தால் கடவுள் காணாமல் போய் விடுகிறான்.) //

முன்பே ஒரு இடுகையில் சொல்லி இருக்கிறீர்கள். ஆறு

//கூடுதல் தகவல்: ஜெகதீசன் கருத்து தெளிவாக இருக்கிறது. உங்கள் இருவருக்குள்ளும் இறைவன் வாழ்கிறான். எனக்குள் இருக்கிறான்; பினாங்குகாரர்? அவரே தான் பிள்ளையார் என்று சொல்லி விட்டீர்களே!
//

ஆமாம் ! மறந்துவிட்டேன் பினாங்கு பிள்ளையாரே கடவுள் தான்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

மனம் பற்றி மனம் திறந்து
தெரிவித்த விளக்கமான கருத்துக்கு நன்றி!
ஆன்மீகத்திலும் அசத்துகிறீர்கள்!!
வாழ்த்துக்கள்!!!

அன்புடன்,
ஜோதிபாரதி.

Thekkikattan|தெகா சொன்னது…

இதில நான் சொல்றதுக்கு என்ன இருக்கு. எல்லாம் கோர்வையா வந்திட்டே இருக்கு :).

சரி, இப்படியெல்லாம் யோசிச்சி இன்னமும் முடியெல்லாம் இண்டாக்ட்-அ இருக்குதா :))?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
மனம் பற்றி மனம் திறந்து
தெரிவித்த விளக்கமான கருத்துக்கு நன்றி!
ஆன்மீகத்திலும் அசத்துகிறீர்கள்!!
வாழ்த்துக்கள்!!!

அன்புடன்,
ஜோதிபாரதி.
//

மீண்டும் வந்து பாராட்டியதற்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//Thekkikattan|தெகா said...
இதில நான் சொல்றதுக்கு என்ன இருக்கு. எல்லாம் கோர்வையா வந்திட்டே இருக்கு :).

சரி, இப்படியெல்லாம் யோசிச்சி இன்னமும் முடியெல்லாம் இண்டாக்ட்-அ இருக்குதா :))?
//

தெகா,

பாராட்டுக்கு நன்றி !
:))

தலைமுடி கருகரு என்று இருக்கு, முன்பக்கம் கொஞ்சமாக 40 வயசு ரஜினிக்கு இருந்தது போல் சிறு ஏற்றம் இருக்கு ஆனால் தெரியாது.

ராஜ நடராஜன் சொன்னது…

நான் தமிழைத்தான் படித்துக் கொண்டிருந்தேன்.திடீரென்று இறைவன் வந்துவிட்டான்!

சொல்வது புரிகிறதா?

Unknown சொன்னது…

uirin padarkai nileye manam.manam pancha inthiriyangalodu thoderbu kollum pothu athu namathu moolaiel pathivaigerathu.antha pathivuthan arivu.ethuvarai naam manathal ulagai panchainthiriyangalal evalavu thooram pathinthuvanthirukiromo athuthan arivu.arivu veru deivam veru illai.arivu than deivam.

Venkatesh Kumaravel சொன்னது…

நீண்ட ஆய்வுக்கும், அனுபவத்திரட்சிக்கும் உட்படுத்தப்பட்ட கருத்துகள். ஐயங்கள் இருப்பினும் அவை தியாலஜிக்கல் (அ) ஃபிலாசபிகலாக இருப்பதால் விவாதத்தின் மையம் அதனை தீர்த்து வைக்காமல் மேலும் சிக்காக்கி விடும் அபாயம் உள்ள தலைப்பு. கோவையாக எழுதியிருப்பது தான் கட்டுரையின் பெரும் பலம். வலையுலகிற்கு புதியவன் என்பதனால் இப்போது தான் பார்வையில் பட்டது. வாழ்த்துகள் என்று எளிய பட்டறிவின் பயனாக சொல்லிவிட என்னிடம் ஞானம் ஏதுமில்லை. இருப்பினும்,
//ஏன் மனிதனால் வாழை மரம் போல் தன் (சுய) உற்பத்தியில் சந்ததிகளைப் பெருக்கமுடியவில்லை ?//
சுய இனப்பெருக்கம் என்பது சிற்சில தாவரங்களிலும் கடைநிலை ஃபைலம் எனப்ப்டும் உயிரியல் பகுப்புகளில் மட்டுமே உள்ள கருத்தரிப்பு முறையாகும். கடல்வாழ் பிராணிகள், எல்லா இடங்களிலும் விளையாத பயிர்கள், வாழ்நாள் மிகக்குறைவான புழு-பூச்சிகள் போன்றவையிடம் மட்டுமே காணப்படுகிறது. இல்லையா? மனிதன் தன்னை உயர்நிலையில் அமர்த்திக்கொள்கிறான், அது அறியல் பூர்வமாக சரியாகவே இருக்கவும் செய்கிறது. ஆகையினால் நீங்கள் குறிப்பிடும் வாழைமர ரக உற்பத்தி சாத்தியமற்றும், தேவையின்றியும் போகிறது. ஏதும் தவறா?

பெயரில்லா சொன்னது…

தமிழ்மண விருது 2008 ஐப் பெற்ற உங்களின் இவ்வாக்கத்தை 4tamimedia இன் ஆன்மிகப் பிரிவில் கட்டுரையாகப் பிரசுரிக்க விரும்புகிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

// நவன் said...
தமிழ்மண விருது 2008 ஐப் பெற்ற உங்களின் இவ்வாக்கத்தை 4tamimedia இன் ஆன்மிகப் பிரிவில் கட்டுரையாகப் பிரசுரிக்க விரும்புகிறேன்
//

மிக்க மகிழ்ச்சி !

Radhakrishnan சொன்னது…

//அறிவு என்பதன் பொருள் ஒன்றைப்பற்றி நன்கு தெரிந்திருப்பது என்று சொல்ல முடியுமா?//

அறிவு என்பதற்கு பொருள் தேடும்போதே அங்கே அறிவற்ற தன்மை வந்து நிலவுவதைத் தவிர்க்க இயலாததாகிவிடுகிறது. ஆக அறிவு அறிவற்ற தன்மையையும் குறிக்கிறது.

''உலகம் ஒன்றே எனினும்''

ஏழு உலகங்கள் இருப்பதாகவே நமது முன்னோர்கள் கணித்து இருந்தாலும், மூவுலகங்கள் வெகு பரவலாக நமக்கு அறியத் தரப்பட்டவை.


//நாம் அறிந்த கொண்டுள்ளதை மூலதனமாக வைத்துதான் அறியாததை அறிந்து கொள்ளவே முடியும்.//

சில விசயங்களை அறிந்து கொள்ளாமலேயே, அறியாத விசயங்களை அறிந்தது போல் சொல்லவும் இயலும். அப்படி அறிந்ததுபோல் சொன்ன விசயங்களை அறியாமலேயே நம்மால் தொடரவும் முடியும்.

உதாரணத்திற்கு இறைவனைச் சொல்லலாம்.

//நோக்கமில்லாமல் எதுவுமே நடைபெறுவதில்லை என்று நினைக்கிறேன்.//

நடைபெறும் விசயங்களுக்கு நோக்கம் கற்பிக்கும் முறை நமது மூளை வளர்ச்சியினால் வந்தது என்றே நான் கருதுகிறேன்.

//வட்டப்பாதையில் சரியாக அதே 365 1/2 நாட்கள் எடுத்துக் கொண்டு //

நீள்வட்டப்பாதை எனவும் 365 1/4 நாட்கள் எனவும் குறித்து இருக்கிறார்கள் என்றே கருதுகிறேன்.

//சூரியனை சுற்ற முடியாமல் புளூட்டோ கோள் தனித்து சென்றுவிட்டதன் காரணம்//

இதற்கான சுட்டினைத் தர இயலுமா ஐயா?

மற்ற கோள்களைக் காட்டிலும் இந்த புளூட்டோ சுற்றும் பாதைதான் வித்தியாசமானது, மேலும் நிறை குறைவாக இருக்கும் காரணத்தினாலேயே இந்த கோள் தற்போதைக்கு விலக்கி வைக்கப்பட்டு உள்ளது.

//இந்த விதியின் படி நடப்பது சரி, இதை நிர்ணயித்தது யார் என்ற கேள்வியில் தான் இறைவன் பின்னால் இருந்து இயக்குவதாகவும், இறைவனின் சித்தமாகவும் சொல்கிறார்கள்.//

ஆன்மிகத்தைப் பின்பற்றுபவர்களும், ஆன்மிகத்தில் ஊறிப்போன அறிவியலாளர்களும் என சொன்னால் சரியாக இருக்கும்.


//நம் அறிவுக்கு எட்டாத பிரபஞ்ச இயங்குவிசையின் / இயற்கையின் விதியின் காரணத்தை பேரறிவு என்ற உருவகம் செய்து அந்த பேரறிவே இறைவன் என்ற பொருளில் சொல்லப்படுகிறது.//

அறிவுக்கு எட்டாத விசயம் என்று எதுவுமே இல்லை, எல்லாமே அறிவுக்கு உட்பட்ட விசயம்தான்! இல்லையெனில் இறைவனைப் பற்றியெல்லாம் எவரும் நினைத்துக்கூடப் பார்த்து இருந்திருக்கமாட்டார்கள். மேலும் புதுப்புது 'அறிவியல் கொள்கைகள்' எல்லாம் வந்து கொண்டிருக்காது. அறிவுக்கு எட்டிய விசயத்தை விளங்கப்படுத்தத்தான் பல முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

//இறைவன் இருபிற்கு இன்னொரு காரணம் மனிதனுக்கு இருக்கும் ஆறாவது அறிவே. அதாவது தன்னால் அறிய முடியாத ஒன்றை இறைவன் அறிந்திருப்பான் என்று நினைக்கும் / ஊகம் செய்யும் ஆறாவது அறிவும் காரணம். மனிதன் தவிர்த்த மற்ற உயிரினங்களுக்கு இறைவன் இருப்பின் தேவை இருப்பதில்லை.//

ஒவ்வொரு உயிருக்கும் இறைவன் இருக்கக் கூடும், அதனை விளங்கப்படுத்தும் செய்முறை நமக்கு இன்னமும் வசதிப்படவில்லை என்றே சொல்லலாம். நமது மனித இனத்தில் கூட பலருக்கு இறைவன் இருப்பின் தேவை இருப்பதில்லைதானே!

//மதக்கோட்பாடுகள் தவிர்த்து இறைவன் இருப்பை நம்புவதில் பாதகமும் இல்லை, நம்பாததால் யாரும் நாசமாவதுமில்லை.//

இறைவன் இருந்தாலும் இயக்கம் இருக்கும், இறைவன் இறந்தாலும் இயக்கம் இருக்கும், அதுவும் இயக்கம் இருக்கும் வரை!

ஒளி தான் மூல ஆதாரம் எனில் ஏன் எல்லா கோள்களிலும் உயிரினங்கள் இல்லை என கேள்வி எழும்போது, தகுந்த சூழல் இல்லை என பதில் சொல்லிவிட முடியும்!

எனவே இறைவன் இருந்தும் இல்லாமலிருக்கிறான், இறைவன் இல்லாமல் இருந்துமிருக்கிறான்.

நல்லதொரு சிறப்பான கட்டுரை ஐயா. பல விசயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

கோவி.கண்ணன் சொன்னது…

// வெ.இராதாகிருஷ்ணன் said...


அறிவு என்பதற்கு பொருள் தேடும்போதே அங்கே அறிவற்ற தன்மை வந்து நிலவுவதைத் தவிர்க்க இயலாததாகிவிடுகிறது. ஆக அறிவு அறிவற்ற தன்மையையும் குறிக்கிறது.

''உலகம் ஒன்றே எனினும்''

ஏழு உலகங்கள் இருப்பதாகவே நமது முன்னோர்கள் கணித்து இருந்தாலும், மூவுலகங்கள் வெகு பரவலாக நமக்கு அறியத் தரப்பட்டவை.//இராத கிருஷ்ணன் ஐயா, ஈரேழு பதினான்கு உலகம் என்று கூடச் சொல்லுவார்கள்.

//சில விசயங்களை அறிந்து கொள்ளாமலேயே, அறியாத விசயங்களை அறிந்தது போல் சொல்லவும் இயலும். அப்படி அறிந்ததுபோல் சொன்ன விசயங்களை அறியாமலேயே நம்மால் தொடரவும் முடியும்.

உதாரணத்திற்கு இறைவனைச் சொல்லலாம்.

//சில நாம் அறியாமல் கூட செய்ய முடியும் என்பதை ஒப்புக் கொள்கிறேன். உதாரணம் பிறந்த குழந்தை பால் உறிஞ்சுவது. கற்றுக் கொள்ளாமல் செய்வதுதான். அதே போல் பிறவிக் கலைஞர்கள் எனப்படுவோரும் அப்படியே. நான் இங்கே குறிப்பிட்டது உலகைப் பற்றிய அறிவு

//நடைபெறும் விசயங்களுக்கு நோக்கம் கற்பிக்கும் முறை நமது மூளை வளர்ச்சியினால் வந்தது என்றே நான் கருதுகிறேன்.//காரண - காரியம் இன்றி எந்த ஒரு இயக்கமும் இல்லை. இயக்க செயல்கள் ஒவ்வொன்றிலும் நமக்கு எதாவது ஒன்று அல்லது இரண்டுமே தெரிந்திருக்கும், அல்லது இரண்டுமே தெரியாமல் இருக்கும் வாய்ப்பு இருக்கிறது.

//
நீள்வட்டப்பாதை எனவும் 365 1/4 நாட்கள் எனவும் குறித்து இருக்கிறார்கள் என்றே கருதுகிறேன்.

//
நீங்கள் சொல்வது சரி, நான் குறிப்பிட்டது சிறிய தகவல் பிழை.

//இதற்கான சுட்டினைத் தர இயலுமா ஐயா?

மற்ற கோள்களைக் காட்டிலும் இந்த புளூட்டோ சுற்றும் பாதைதான் வித்தியாசமானது, மேலும் நிறை குறைவாக இருக்கும் காரணத்தினாலேயே இந்த கோள் தற்போதைக்கு விலக்கி வைக்கப்பட்டு உள்ளது.//

புளூட்டோ, சூரிய மண்டலத்தில் இருந்து விலகிச் சென்றுவிட்டதாகத் தான் வானவியலார் சொல்லுகின்றனர் என்பதாக நினைத்திருந்தேன். ஆனால் நீங்கள் இங்கே கேட்ட பிறகு தேடிப்பார்த்ததில் சூரிய குடும்பத்தில் இருந்து அறிவியலாளர்களால் விலக்கப்பட்டதாக அறிகிறேன்.
http://www.unarvukal.com/index.php?showtopic=2182

//ஆன்மிகத்தைப் பின்பற்றுபவர்களும், ஆன்மிகத்தில் ஊறிப்போன அறிவியலாளர்களும் என சொன்னால் சரியாக இருக்கும்.//

இறை நம்பிக்கையாளர்கள் என்று குறிப்பிட்டு இருக்க வேண்டும்

//ஒவ்வொரு உயிருக்கும் இறைவன் இருக்கக் கூடும், அதனை விளங்கப்படுத்தும் செய்முறை நமக்கு இன்னமும் வசதிப்படவில்லை என்றே சொல்லலாம். நமது மனித இனத்தில் கூட பலருக்கு இறைவன் இருப்பின் தேவை இருப்பதில்லைதானே!//

ஒவ்வொரு உயிரிலும் இறைவன் இருக்கிறான் என்கிற கருத்தை நான் ஏற்பது இல்லை. ஏனெனில் கொலைகாரனும், கொலை செய்யப்படுபவனும் ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை. வேண்டுமென்றால் அவர்கள் இறை உணர்வு என்பதில் வேறுபட்ட அளவு கொண்டவர்களாக இருக்கலாம். அனைத்திலும் இறைவனைக் காண்பதென்பது அனைவரையும் நேசிக்கத் தூண்டும் ஒரு சித்தாந்தம் தான் என்பதாக என் எண்ணம்.

//இறைவன் இருந்தாலும் இயக்கம் இருக்கும், இறைவன் இறந்தாலும் இயக்கம் இருக்கும், அதுவும் இயக்கம் இருக்கும் வரை!//

பெளதிகப் பொருள்களுக்குத் (பஞ்ச தத்துவங்களுக்கு) தான் இறப்பு / பிறப்பு எல்லாம். அதற்கு அப்பாற்பட்டது என்று சொல்வது இறைவன் என்று சொல்லும் பொழுது இறைவன் இல்லாத பொழுது, இறந்த பிறகு என்று சொன்னால் 'இறைவன்' என்ற சொல்லே பொருளற்றதாகிவிடும்

//ஒளி தான் மூல ஆதாரம் எனில் ஏன் எல்லா கோள்களிலும் உயிரினங்கள் இல்லை என கேள்வி எழும்போது, தகுந்த சூழல் இல்லை என பதில் சொல்லிவிட முடியும்!//

சூழல் தான் மிகவும் முக்கியமானது. சூழல் இருக்கும் போது உலகம் தோன்றும், சூழல் தேயும் போது உலகம் அமிழும், அந்த சூழல் மாற்றம் கூட தன்னிச்சையானது என்றே கருதுகிறேன். அந்த சூழலை முடிவு செய்வது நேரம் மற்றும் அப்போது ஏற்படும் சூழலில் நடைபெறும் மாற்றம். அதாவது உதாரணத்துக்கு ஏற்படும் புகை கண்ணுக்கு தெரியும், சிறிது நேரத்தில் காற்றில் கலக்கும், அதன் பிறகு கண்ணுக்கு தெரியாது, ஆனால் காற்றின் தூய்மையை கெடுத்து இருக்கும், டைம் டொமைனில் தொடர்சியாக நடைபெறும் செயல் அதன் ரிசல்ட் சங்கிலி

//எனவே இறைவன் இருந்தும் இல்லாமலிருக்கிறான், இறைவன் இல்லாமல் இருந்துமிருக்கிறான். //

இறைவன் தன்னன ஒரு பொருளாக காட்டிக் கொள்ள தேவை இல்லாமல் இருக்குமோ என்னவோ :)

//நல்லதொரு சிறப்பான கட்டுரை ஐயா. பல விசயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.
10:09 PM, June 29, 2009//

மிக்க நன்றி ஐயா. நான் ஐயா இல்லை, நீங்கள் தான். என்னை கோவி என்றே விளிக்கலாம்

Radhakrishnan சொன்னது…

//ஒவ்வொரு உயிரிலும் இறைவன் இருக்கிறான் என்கிற கருத்தை நான் ஏற்பது இல்லை. ஏனெனில் கொலைகாரனும், கொலை செய்யப்படுபவனும் ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை. வேண்டுமென்றால் அவர்கள் இறை உணர்வு என்பதில் வேறுபட்ட அளவு கொண்டவர்களாக இருக்கலாம். அனைத்திலும் இறைவனைக் காண்பதென்பது அனைவரையும் நேசிக்கத் தூண்டும் ஒரு சித்தாந்தம் தான் என்பதாக என் எண்ணம். //

விளக்கங்கள் அனைத்தும் இரசித்தேன். உயிர், உயிரற்றது எனப் பார்த்தீர்களேயானால் உயிர் எங்கிருந்து வந்தது எனில் உயிரற்றதிலிருந்துதான் வந்தது என்கிறது தற்போதைய அறிவியல். வைரஸ் எனும் நுண்ணுயிர் ஒரு செல் அமைப்பு உடையது அல்ல. மேலும் அது தனித்து இருக்கும்போது செத்ததுபோல் இருக்கும், செல்களில் நுழையும்போது உயிர் பெற்றுக்கொள்ளும். வைரஸ் தான் முன்னோடி என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள், காரணம் ஆர் என் ஏ பல முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஆர் என் ஏ வை அதிகம் கொண்டவை வைரஸ்கள் என்கிறார்கள்.

எது எப்படியோ, ஒவ்வொரு உயிரினத்துக்கும் என எழுதுவதற்குப் பதிலாக ஒவ்வொரு உயிருக்கும் என எழுதி உங்கள் கருத்தை அறிந்து கொண்டேன்.

கொலைகாரனுக்கும், கொலைசெய்யப்படுபவனுடைய ஆன்மா பாதிக்கப்படாதது என்கிறது இறை தத்துவம், எனவே இருவரும் ஒருவராகிறார் என்கிறது.

மேலும் பட்டினத்தார் பாடலைப் படித்தால் ஒரு உண்மை புரியும், எல்லாம் தனதென்று கொண்டாடுவார், இறுதியில் வெட்டியானிடம் வீசிவிட்டு போவார் என்பார்.

இருக்கும் வரை தான் எல்லா வேறுபாடுகளும், வித்தியாசங்களும் இறைவனில் கூட.

அற்புதமாக எழுதி வரும் தங்களுக்கு எனது வணக்கங்கள் கோவி.

கோவி.கண்ணன் சொன்னது…

//விளக்கங்கள் அனைத்தும் இரசித்தேன். உயிர், உயிரற்றது எனப் பார்த்தீர்களேயானால் உயிர் எங்கிருந்து வந்தது எனில் உயிரற்றதிலிருந்துதான் வந்தது என்கிறது தற்போதைய அறிவியல். வைரஸ் எனும் நுண்ணுயிர் ஒரு செல் அமைப்பு உடையது அல்ல. மேலும் அது தனித்து இருக்கும்போது செத்ததுபோல் இருக்கும், செல்களில் நுழையும்போது உயிர் பெற்றுக்கொள்ளும். வைரஸ் தான் முன்னோடி என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள், காரணம் ஆர் என் ஏ பல முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஆர் என் ஏ வை அதிகம் கொண்டவை வைரஸ்கள் என்கிறார்கள். //

இராதகிருஷ்ணன் ஐயா, உயிருள்ளதற்கும் உயிரற்றதற்கும் ஒரே வேறுபாடு, உயிருள்ளவை அனைத்தும் தன்னைப் (இனப்) பெருக்கும், உயிரற்றது (தன்னால்) அசையாத் தன்மை கொண்டது. உயிருள்ளது பெருகும் போது வளர்ச்சி பெறும், வளர்ச்சி முடிவுறும். இடையே உயிர்களைத் தோற்றுவிக்கும் தன்மை கொண்டது, அது ஒருசெல் உயிரியாக இருந்தாலும் பலசெல் தொகுப்பான மனித / விலங்கு / பறவை / தாவரமானாலும் அவற்றின் (இனப்)பெருக்கம் என்கிற தன்மை ஒன்று தான்.

//எது எப்படியோ, ஒவ்வொரு உயிரினத்துக்கும் என எழுதுவதற்குப் பதிலாக ஒவ்வொரு உயிருக்கும் என எழுதி உங்கள் கருத்தை அறிந்து கொண்டேன்.//

உயிரினம் என்றாலும் உயிர் என்றாலும் அவற்றின் இயக்க தன்மை பொதுவில் ஒன்று தான். எனது எண்ணப்படி உங்கள் கருத்தும் சரிதான்.

//கொலைகாரனுக்கும், கொலைசெய்யப்படுபவனுடைய ஆன்மா பாதிக்கப்படாதது என்கிறது இறை தத்துவம், எனவே இருவரும் ஒருவராகிறார் என்கிறது.//

மாவு ஒன்று என்றாலும் இட்டலி, தோசை ஒன்றாகுமா ? :) ஆன்மா என்கிற பெயர் தான் ஒன்று, ஏனெனில் உடலற்றத் தன்மையில் அதற்கு உடலின் பெயரைக் கொடுக்க முடியாது, இருந்த போதிலும் முன்பு செய்த செயலுக்கான பலனை எடுத்துச் செல்லுவதால் (அப்படித்தான் இந்து தத்துவங்கள் கர்மா குறித்து சொல்கின்றன) ஒவ்வொரு ஆன்மாவும் அதனுடைய உடலால் செய்த செயலுக்கான பலன்/பாவ தொகுப்பை எடுத்துச் செல்கின்றன. பிறகு எப்படி எல்லா ஆன்மாவும் ஒன்றாக இருக்க முடியும். எல்லாம் ஒன்று என்றால் வேவ்வேறு தோற்றத்தில் இந்திய சமயங்களில் கடவுள் உருவங்கள் இருக்காது. கடவுள் உருவங்களே வெவ்வேறாக இருக்கும் பொழுது ஆன்மாக்கள் எவ்வாறு ஒன்றாகவே இருக்க முடியும் ? ஒன்றா இல்லையா என்கிற குழப்பம் ஏன் ஏற்படுகிறது என்றால், அத்வைத சித்தாந்தமே அதற்குக் காரணம், அத்வைதம் அனைத்தும் ஒன்றென்கிறது, இராமனுஜர் கூட அதனை ஏற்கவில்லை. இராமானுஜர் சொல்லுவார், எனது பகவானும் நானும் ஒன்றா ? என்னால் அப்படி நினைக்க முடியாது, நான் எனது பகவானல்ல, அதன் தன்மையும் எனக்கில்லை என்பார். தோட்டத்தில் பல வகையான பூக்கள் இருக்கிறது, அனைத்தும் பூக்கள் தான். வண்ணமும், மணமும் வேறல்லவா ? அவை எப்படி ஒன்றாக இருக்க முடியும் ?

//மேலும் பட்டினத்தார் பாடலைப் படித்தால் ஒரு உண்மை புரியும், எல்லாம் தனதென்று கொண்டாடுவார், இறுதியில் வெட்டியானிடம் வீசிவிட்டு போவார் என்பார். //

உடல் நிலை இல்லை என்பது அனைவரும் அறிந்தவர்கள் தான். ஒவ்வொருவரும் அந்த உடலின் மூலம் இயங்குவதால் அதை பொய்யென எவரும் நினைக்க மறுப்பர். பட்டினத்தார் போன்ற மகான்கள் அவ்வப்போது சொல்லிக் காட்டி தலையில் தட்டுகிறார்கள்.

//இருக்கும் வரை தான் எல்லா வேறுபாடுகளும், வித்தியாசங்களும் இறைவனில் கூட.//

நாம் கண்டுபிடிக்கும் விளக்குகளின் ஒளியில் கலப்படம் இருக்கும் அதாவது தூய்மையற்றத் தன்மை, சூரியனின் ஒளியில் கலப்படம் இருக்குமா ? அல்லது ஒளியின் தன்மைதான் குறைகிறதா. அறிவியலாளர்கள் சொல்லுவார்கள் பல மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு சூரியன் சாம்பலாகும், பெரிதாகும் அழிந்து போகும் என்று ஆனால் எல்லாம் ஊகம் தான்.
வித்யாசங்கள் இறைவனில் கூட என்பதை நான் ஒருபோதும் சொல்லமாட்டேன். நமக்கெல்லாம் நோக்கம், விருப்பம் இருக்கிறது, இறைவனுக்கும் அதுபோல் எதாவது இருப்பதாக தெரியவந்தால் உங்கள் கூற்று சரியாக இருக்கும்

//அற்புதமாக எழுதி வரும் தங்களுக்கு எனது வணக்கங்கள் கோவி. //

மிக்க நன்றி, எனது எழுத்துகள் நாத்திகம் போல் இருக்கிறது என்று எண்ணிப் புறக்கணிக்காமல் தொடர்ந்து பாராட்டுவது நிறைவளிக்கிறது.

Radhakrishnan சொன்னது…

விளக்கம்தனை மிகவும் இரசித்தேன் கோவியாரே.

எழுத்துக்களுக்கு எப்போதும் நான் நாத்திக, ஆத்திக முலாம் பூச விரும்புவதில்லை, எழுத்தின் நோக்கம் என்னவெனில் அது ஒன்றை நமக்கு அறிவுறுத்த விரும்புகிறது. அந்த அறிவுறுத்தலை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம், ஏற்றுக்கொள்கிறோம் என்பதைப் பொருத்தே நமது எண்ணம் விருத்தியடைகிறது என்றே கருதுகிறேன்.

'நீங்கள் சொல்லும் வள்ளலாரும், பெரியாரும் எனக்கு ஒன்றுதான்' என்பது முரண்பாடாகத் தெரிந்தாலும் அதுதான் நிதர்சனம்.

நாத்திகமும் ஆத்திகமும் ஒன்றுதான் அது அறிவைப் போதிக்கவல்லவை என்கிற எண்ணம் ஏற்படுமானால் எதையும் எதிர்க்கத் தோணாது, எதையும் ஒழிக்கத் தோணாது. அததது அதன்பாட்டுக்குத் தங்கள் வேலையில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கும்.

உங்கள் எழுத்துக்களில் பல விசயங்கள் கற்றுக்கொள்கிறேன். மிக்க நன்றி கோவியாரே.

Unknown சொன்னது…

//எழுதியதெல்லாம் எல்லாம் கடனாக கிடைத்தது இரவல் சிந்தனை தான்.//

உண்மைதான். இரவல் சிந்தனை பெற்றவர் அனைவரும் உங்களைபோல் எழுதவில்லையே. மிக அருமையான பதிவு.

இன்னொரு விசயம் என் பதிவின் கேள்வி இறைவனின் இருப்பை பற்றியது இல்லை.

நன்றி கோவியார்.

http://oviya-thamarai.blogspot.com/2009/08/2.html

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

நன்றி பதிவின் சுட்டிக்கு...

பகுத்தறிவினால்தான்-:))-அதாவது ஆறாவது அறிவினால்தான் இறைவனின் தேவை தோன்றியது என்பது அறிவியலின் ஏற்றுக் கொள்ளக் கூடிய கூற்று அல்ல.

என்னுடைய பதிவில் விளக்க முயற்சிக்கிறேன் அல்லது முடிந்தால் சுஜாதாவின் கடவுள் இருக்கிறாரா' படித்துப் பாருங்கள்.

இறைவனின் கட்டமைப்புக்கு மனவியல் கூறுகள் அவசியம்-அவை ஆறாவது அறிவினால் மட்டும் நிகழ்பவை அல்ல என்பது என் புரிதல்.

இறைவனை தொழும் ஆறாவது அறிவில்லாத உயிரினங்கள் பற்றிய செய்திகள்,நடைமுறையிலும்-முசுகுந்த சக்ரவர்த்தி போல-ஏராளமாக கிடைக்கலாம் இல்லையா??

:)))

கோவி.கண்ணன் சொன்னது…

//இறைவனை தொழும் ஆறாவது அறிவில்லாத உயிரினங்கள் பற்றிய செய்திகள்,நடைமுறையிலும்-முசுகுந்த சக்ரவர்த்தி போல-ஏராளமாக கிடைக்கலாம் இல்லையா??

:)))//

அறிவன் சார்,

பழக்கப்படுத்தப்பட்ட இராம நாராயணன் பட பாம்புகள், விலங்குகள் தவிர்த்து வேறு எதற்குமே இறை வணக்கமெல்லாம் தெரியாது !
:)

இனியன் பாலாஜி சொன்னது…

//மனிதமனிதங்களின் உள்நோக்கம் தவிர்த்து (அதுவும் கூட சுயநல நோக்கம் தான்//

ஆமாம் எல்லா மனிதர்களும் சுய நலமாகத்தான் இருக்க முடியும் .
ஜீவன் முக்தி நிலை அடையும் வரை
ஒரு ரமண மகரிஷி , நிஸர்தத் மஹராஜ், ராமகிருஷ்ண பரமஹம்ஸர் போன்று மாறினால்தான் முடியும் . நாம் பிறவி எடுப்பதே அதற்காகத் தான் . அந்த் நிலையை யடைந்து அவர்கள் வெற்றியடந்து
விட்டார்கள். நாம் இன்னும் பரீட்சை எழுதிக் கொண்டேதான் இருக்கின்றோம்
என்வேதான்
“புனரபி மரணம் புனரபி ஜனனம்” என்றார் சங்கரர்
அவர்கள் வந்ததெல்லாம் “என் மகளுக்கு திருமணம் ஆகவில்லை என்பதற்கும்
என்மச்சானுக்கு வேலைகிடைக்கவில்லை” என்று நாம் கேட்பதற்கும் இல்லை.
ஆனாலும் அவர்கள்
அதற்கும் அருள் புரிந்துதான் இருக்கின்றார்கள். உண்மையில் நமக்கு அவர்களின் நிலை
அந்த ஆனந்த நிலை அடைவதைத்தான் பெரிதும் விரும்பினார்கள்
உலகத்தைப் ப்ற்றி சிந்திக்கமுடியும்.
அதுவரை எப்படி
அதனால் தான் இறைவன் வேண்டும் என்பது


அதைத்தான் வேதியல் / இயற்பியல் விதி என்கிறோம்.

இந்த வேதியியலும் இய்ற்பியலும்
தானய்யா கடவுள் என்பது


// அந்த முயற்சிக்குள் நம் ஆயுள் முடிந்துவிடும்//
நிச்சயம் ஒரு ஆயுள் அல்ல ஒராயிரம் ஆயுள் முடிந்து விடும் .
ஆனால் அவற்றை த் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வம் இருந்தால் ஐந்தே நிமிடங்களில்
எத்தனையோ பேர் கண்டறிந்துள்ளனர். ஆனால் கண்டதை அவர்களால் வெளிப்படுத்தமுடிந்த‌
தில்லை.
இதைத் தான் கண்டவர் விண்டிலர்
என்றனர் ஆன்றோர்.


மதக்கோட்பாடுகள் தவிர்த்து இறைவன் இருப்பை நம்புவதில் பாதகமும் இல்லை,
நம்பாததால் யாரும் நாசமாவதுமில்லை.

மதக் கோட்பாடுடனும் கூட இறைவன் இருப்பை நம்புவதிலும் ஒன்றும் பாதகமில்லை. என்ன‌
அதைத் தவறாக புரிந்துக் கொண்டதில் தான் பிரச்சினையே இருக்கின்றது.
சில சமயங்களில் அந்தந்தக் காலக் கட்டத்தில் அந்தந்த இடங்களில் சில விஷயங்களை இறைவன்
அந்த் மக்களுக்காக தருவதுண்டு. அவற்றில் இப்போதும் பொருந்தும் என்றும் எல்லா மக்களுக்கும்
பொருந்தும் எனும் போதுதான் சங்கடங்கள் ஏற்படுகிறது. அவற்றில் சில மாற்றங்களை செய்வதில்
தவறேதும் இல்லை. ஆனால் இது பொதுவாகக் கூடாது. தனிப்பட்டவர்களின் விருப்பம் இது.

அதேசமயத்தில் இன்னொன்றையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்
அவைகளில் சில நமக்கு புரியாமல் இருக்கலாம் . அதற்காக அவை களை தூக்கி எறிந்தும் விடக்கூடாது
சிலவற்றை நாம் கண்மூடித்தனமாகவும் கடைபிடிக்கலாம். அதில் தவறேதும் இல்லை. இது
இறையனுபம் பெற்றவர்களுக்கு மட்டுமே புரியும். என்னைப் பொறுத்தவரை எல்லா மதங்களும்
சத்தியமானவையே. இன்னும் கேட்டால் ஒன்றுக் கொன்று முரண்பட்ட மதங்களில் கூட உண்மை
யிருக்கின்றது என்பதை நான் கண்டு பிடித்க்தேன். அது தான் என் வாழ்க்கையின் தேடுதலே
அந்த தேடுதலில் நான் வெற்றி பெற்று விட்டேன்.அற்புதமான படைப்பு
உள்ளே விஷயங்கள் தெரிந்திருந்தாலும் அவற்றை வெளிப்படுத்துவது என்பது ஒரு தனிக்
கலைதான் கோவியாரும் நீங்களும் அதில் தேர்ந்திருக்கின்றீர்கள் என்னால் அவ்வாறு இயலாது
ஆனால் எந்த ஆன்மிகவாதிகளையும் நாத்திகவாதிகளையும்
முடிந்த வரை புண்படுத்தாமல்எழுதுவதே உண்மையான மனிதனின்
இலக்கணம் நன்றாக எழுதியுள்ளீர்கள்.

வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//அற்புதமான படைப்பு
உள்ளே விஷயங்கள் தெரிந்திருந்தாலும் அவற்றை வெளிப்படுத்துவது என்பது ஒரு தனிக்
கலைதான் கோவியாரும் நீங்களும் அதில் தேர்ந்திருக்கின்றீர்கள் என்னால் அவ்வாறு இயலாது
ஆனால் எந்த ஆன்மிகவாதிகளையும் நாத்திகவாதிகளையும்
முடிந்த வரை புண்படுத்தாமல்எழுதுவதே உண்மையான மனிதனின்
இலக்கணம் நன்றாக எழுதியுள்ளீர்கள்.

வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி ஐயா

'பசி'பரமசிவம் சொன்னது…

இன்றுதான் தங்களின் ‘தங்கமீன்’படிக்கும் வாய்ப்பு அமைந்தது.
பதிவுகள் ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடு.
அரிய கருத்துகளை அழகு தமிழில் புரியும் நடையில் தற்சார்பின்றி வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
தொடர்ந்து எழுதுங்கள். மக்கள் பயன்பெறுவார்கள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்