பின்பற்றுபவர்கள்

23 டிசம்பர், 2007

மரணதண்டனை தேவையா ?

மரணம் என்பது ஒருவரின் அல்லது ஒரு உயிர் உடலில் வாழ்ந்த வாழ்வின் முடிவு. விபத்து, நோய், தற்கொலை, கொலை, முதுமை என எப்படி வந்தாலும் மரணம் வாழ்வின் முடிவு. அதாவது உடலசைவின் இறுதி நாள். அந்த உடலை வைத்துக் கொண்டு அதன் பிறகு எதுவும் செய்ய முடியாது, உயிர் நீங்கியவுடனே உடலும் அழுகத் தொடங்கிவிடும். பெளதீகம் தத்துவம் என்று எப்படிப் பார்த்தாலும் உடலை (விட்டு) உயிர் நீங்குவதே மரணம்.

பாராளுமன்றத்தில் குண்டு வெடித்த வழக்காக இருக்கட்டும் பஸ் எரிப்பு வழக்காக இருக்கட்டும் மரணதண்டனை என்பது சட்ட வழியில் சரி என்று வைத்துக் கொண்டாலும் மரணத்திற்கு மரணம் தண்டனை என்பது ஒப்புக் கொள்ள முடியாததாகவே இருக்கிறது. மரணதண்டனை பெற்ற ஒருவர் மரணத்தின் வலியை மரணதண்டனை மூலம் அடைவானா என்பதே சந்தேகத்துக்கு உரியதுதான். அப்படி மரணத்தின் வலியை தூக்கு தண்டனையின் போது உணர்ந்தால் இறந்த பிறகு அவனுக்கு தண்டனை என்பதே இல்லாமல் போகிறது. அல்லது மரணத்தின் வலியை உணராமலேயே இறக்கிறான் என்றே நினைக்கிறேன்.

மிருகமாக மாறி ஒருவன் தன்னிலை மறந்து கொலை(கள்) செய்ததை 'மரணம் விளைவித்த கொடியவன் என்கிறோம், கொலையின் மூலம் மரணம் விளைவிப்பது மாபெரும் குற்றம். அதையே சட்டத்தின் முலம் அதே போன்ற தண்டனைகள் கொடுப்பதை எப்படி ஞாயம் என்று கொள்ள முடியும் ?

குற்றவாளிகள் குறித்து மன்னிப்பு வழங்கவேண்டும் கருணை கடவுளாக நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொல்லவேண்டாம். ஆனால் மரணதண்டனை என்பது சர்சைக்குறியதாகவே இருக்கிறது. இன்றைய காலங்களில் சாட்சிய அடிப்படை நீதிகள் என்பது தானே கிடைக்கிறது. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நிரபராதி என்றால் அவர் தம்மைத் தாமே நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்ற சூழல் கண்ணகி காலத்தில் இருந்தே இருக்கிறது. சாட்சிய அடிப்படையில் கிடைக்கும் நீதிகள் உண்மையான நீதிகள் இல்லாதபோது அதன் வழி கிடைக்கும் தண்டனைகள் மட்டும் ஞாயமானதா ? இந்த வழக்குகளுக்காக இதைச் சொல்லவில்லை. பொதுவாக நீதிபதிகள் எவருமே கடவுள் இல்லை, சாட்சிய அடிப்படையில் நீதி வழங்கும் 'நீதிபதி தொழில்' செய்யும் மனிதர்கள் தான்.

மரணத்திற்கு மரணம் தண்டனையாகாது. அரசாங்கமே அதைச் செய்வதற்கும் கொலைகாரனுக்கும் வேறுபாடு இல்லை. இது பலரைப் போல் எனது தனிப்பட்ட கருத்துதான். சரியான தண்டனை என்பது அத்தகைய குற்றவாளிகள் சாகும் வரை மனிதர் எவரையும் பார்க்க முடியாமல் தனிச்சிறையில் அடைத்து வைத்திருப்பதுதான். தண்டனைகள் திருந்துவதற்கு வாய்ப்பு கொடுக்காவிட்டாலும் 'குற்றம் செய்ததால் தண்டனை அடைந்திருக்கிறேன்' என்ற என்ற பாடத்தை, உணர்வை அவனுக்கு கொடுக்க வேண்டும். மரண தண்டனை மூலம் இது சாத்தியமே இல்லை. அவன் இறந்தும் அவன் செய்த குற்றங்களின் வடுக்கள் இருந்து கொண்டுதான் இருக்கும். அவனுடைய மரணத்தில் அவன் மட்டுமே மறைவான். இதில் எவருக்கும் எந்த லாபமும் இல்லை.

உயிரும் வாழ்வும் நாமே கேட்டுப் பெற்றதில்லை என்று ஆன்மிக தத்துவம் பேசுகிறோம். அப்படிப்பட்ட ஆன்மிக வாதிகள் கூட வழக்கையும் கொடுரத்தையும் பொறுத்து மரண தண்டனையை மனிதன் தீர்மாணிப்பது சரி என்கிறார்கள். உயிரை உண்டாக்குவது நம் கையில் இல்லை என்றால் உயிரை எடுப்பது மட்டும் நம் கையில் இருக்கிறதா ?

19 கருத்துகள்:

புரட்சி தமிழன் சொன்னது…

//. உயிரை உண்டாக்குவது நம் கையில் இல்லை என்றால் உயிரை எடுப்பது மட்டும் நம் கையில் இருக்கிறதா ?//
exacatly this is good point.

கிருத்திகா ஸ்ரீதர் சொன்னது…

ரொம்ப சரியான கேள்வி.. எனக்கும் அடிக்கடி இது போல் தோன்றும் அதுவும் அந்த தர்மபுரி பேரூந்து எரிப்பு வழக்கு தீர்ப்பு வந்ததில் இருந்து மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத அழுத்தம் இருக்கத்தான் செய்கிறது. மரணத்திற்கு மரணம் எவ்வாறு தீர்வாக முடியும். இதை அரசியல் சாயங்களற்று உரத்து பேச முடியும் என்று தோன்றவில்லை.

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

நீங்கள் மனிதநேயக் கூற்றில் இதைக் கூறலாம்.
ஆனால் கொடும் குற்றங்கள் நிகழ்த்துவோரும் மனித நேயத்தைக் க்கொன்று விட்டுத்தான் குற்றங்களை நிகழ்த்துகிறார்கள்.

ஆயினும் கொடும் குற்றங்கள் செய்தவர்களுக்கு,மரணதண்டனையன்றி நீங்கள் கூறுவது போல வாழ்நாள் தனிமைச் சிறை கொடுத்தாலும்,குற்றவாளி தான் செய்த குற்றத்தை நினைத்து வருந்துவான் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
அவன்,ஆகா,நாம் கொடிய குற்றம் செய்தாலும்,நமது உயிர் தப்பித்தது என்று உள்ளூர மகிழ்ந்து வாழ்க்கையைக் கழிக்கலாம் இல்லையா? அவனது குடும்பத்தினரும் சரி,எப்படி இருந்தாலும் அவன் உயிருடன் இருக்கிறான்,தேவைப் பட்டால் சிறை அனுமதி வாங்கி அவ்னைப் பார்த்துவிட்டு வரலாம் என்ற சூழலும் இருக்கிறதல்லவா?
மேலும் இவ்வுலக வாழ்வில் எவ்வளவு சம்பாதித்தாலும்,எவ்வளவு சக்தி கொண்ட பொறுப்பில் இருந்தாலும்,உயிரை இழந்துவிட்டால் உலகில் இருக்கும் எந்த செல்வத்தாலும்,அதிகாரத்தாலும் பயன் இல்லை அல்லவா?
ஆக ஒரு உடைக்க முடியாத தடையாக-deterent- ஆக இருப்பது மரண தண்டனை ஒன்றுதான்.
எனவே மரணதண்டனை ஒரு நிச்சயத்தேவை என்பதோடு,அது தயவு தாட்சணியம் இன்றி,ஓட்டுப் பொறுக்கித் தனம் இல்லாமல் நிறைவேற்றப்படவேண்டும்.
ஏனெனில்,
1.அது கொடும் குற்றங்கள் நிகழ்த்துபவர்களுக்கு நிச்சயம் ஒரு deterrent ஆக இருக்கிறது.
2.குற்றவாளியின் குடும்பத்தவரும்,இக்குற்றச் செயலில் ஈடுபட்டால் நாங்கள் உன்னை நிரந்தரமாக பிரியவேண்டிவரும்,எனவே இதைச் செய்யாதே என்ற கூறில் குற்றத்தைத் தடுக்கும் முகாந்திரம் வரும்
3.தயவுதாட்சணியம் இல்லாத த்ண்டனை நிறைவேற்றம் சமூக அளவில் குற்றச் செயல்களுக்கு ஒரு deterrent ஆக இருக்கும்.
4.குற்றத்தை நிகழ்த்திவிட்டு குற்றவாளியைத் திருத்த வேண்டும் எனச் சொல்வதை விட,குற்றம் நிகழ வாய்ப்பில்லாத சமூகச் சூழலே ஆரோக்கியமானது.

இன்று உலக அளவில் குற்றங்கள் குறைந்திருக்கிற நாடுகள்,தயவு தாட்சணியம் இல்லாமல் தண்டனைகளை நிறைவேற்றுகின்ற நாடுகளே.
மும்பையிம் மாறி மாறி எத்தனைமுறை குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன,எத்தனை அப்பாவிகள் பலியானார்கள்? பயங்கரவாதிகள்தான் அதை நிகழ்த்தினார்கள் எனத் தெரிந்தும் இந்தியா என்ன நடவடிக்கை எடுத்துக் கிழித்தது?
இந்தியா டுடே இதழ் Indian state became soft targets என அழகாகச் சொன்னது !
சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கொடும் குற்றங்கள் மிகக் குறைவாக இருப்பதன் காரணம் என்ன ? குற்றம் இழைத்தால் நம் உயிர் நமக்கு இல்லை என்ற உறுதியான சூழல்தான் !
நமது மனோபாவத்தில் ஆரோக்கியமான மாறுதல்களோடு நல்ல சமூகத்திற்கு சரியான குற்றவியல் நடைமுறைகளும் சட்டங்களும் தேவை,அதுவே சாதாரண மனிதனின் பாதுகாப்பான, நிம்மதியான வாழ்வை உறுதி செய்யும் !!!!!1

கோவி.கண்ணன் சொன்னது…

//இன்று உலக அளவில் குற்றங்கள் குறைந்திருக்கிற நாடுகள்,தயவு தாட்சணியம் இல்லாமல் தண்டனைகளை நிறைவேற்றுகின்ற நாடுகளே//

அறிவன் சார்,
இதெற்கென புள்ளி விவரம் எதுவும் இல்லை. மரணதண்டனைக்கு பயந்து குற்றங்கள் குறையும் என்றால் மரணதண்டனை என்பதே ஒழிந்திருக்கும். ஆனால் அவை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதற்கு புதிய மரணதண்டனைகளே சாட்சி. குற்றம் என்பது தனிமனித தொடர்புள்ளது அது எவருக்கும் கொடுக்கப்படும் தண்டனையை நினைத்து கலங்குவதெல்லாம் இல்லை.

ஜமாலன் சொன்னது…

மரணதண்டனை தேவையில்லை என்பதே எனது கருத்து. நல்ல பதிவு. மனித உரிமை குறித்து அக்கறையுள்ள சரியான நேரத்தில் வெளியிடப்படும் பதிவு. பாராட்டுக்கள்.

குற்றமும் தண்டனையும் கண்காணிப்பு அரசியலின் ஒரு வெளிப்பாடு. அதில்லாமல் அதிகாரம் இல்லை. இருப்பினும் மரணதண்டனைக்கு எதிரான குரல்கள் ஒருங்கிணைக்கப்ட்டு ஒரு இயக்கமாக எடுக்கப்படவேண்டியதின் அவசியத்தை உணர்த்துகிறது இப்பதிவு.

Unknown சொன்னது…

மரண தண்டணை தேவை இல்லை என்பதை பாதிக்கப்பட்டவர்கள் சொல்லட்டும். பொதுவில் பார்க்கும்போது தேவையில்லாததாக தோன்றும். காய்ச்சலும் தலைவலியும் அவரவர்களுக்கு வந்தால்தான் தெரியும் என்ற கருத்து நோக்கத்தக்கது.

அது இருந்தால்தான் குற்றமிழைக்கத் தூண்டப்படும்போது அதிலிருந்து அவர்களாகவோ அல்லது மற்றவர்கள் சொல்லியோ அதிவிருந்து விலக ஒரு வாய்ப்பு இருக்கும். மனித குல பாதுகாப்புக்கு இது போன்ற கடுமையான சட்டங்கள் அவசியம் என்றே தோன்றுகிறது.

தவறாக யாரும் தண்டணை அடைந்து விடாமல் இருக்க பல அரண்கள் அமைக்கப் பட வேண்டும். அதன் வழி மென்மேலும் முயற்சிகள் தொடரப்பட வேண்டும்.

Voice on Wings சொன்னது…

மரண தண்டனை தேவையில்லை என்பதுதான் எனது நிலைப்பாடும். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

குசும்பன் சொன்னது…

நம்ம மக்களிடம் இருக்கும் பெரிய குறையே இதுதான்.

உதாரணத்துக்கு பஸ் எரிப்பு நடந்து 3 மாணவிகள் சாவு என்றவுடன்...

இது மாதிரி ஆட்களை நடுரோட்டில் நிப்பாட்டி சுடனும், தூக்கில் போடனும் என்று வசவு பாடுவோம்.

ஒரு 5 ஆறு வருடம் போய்விட்டால் ச்சீ பாவம் என்று சொல்லுவோம்.

ராஜீவ்காந்தி கொலையின் பொழுது கொந்தளிச்சோம், பின் நளினிக்கு குழந்தை இருக்கு அது இதுன்னு சொன்னவுடன் ச்சீ பாவம் என்று சொல்கிறோம்.

மனிதனின் உயிரை மனிதன் எடுப்பதா என்று சொல்றீங்க அப்புறம் என்னாத்துக்கு போர் அனு ஆயுதம் துப்பாக்கி எல்லாம் விவசாயம் பார்க்கவா? மனிதனின் உயிரை மனிதன் எடுக்கும் செயல்கள் பல நடக்கிறது அதை எல்லாம் நிறுத்தியபிறகு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறுத்தலாம்.

குசும்பன் சொன்னது…

இதோ பக்கத்து ஊரில் ஏன் இந்த ஊரிலேயே பொண்ணுங்க மேல கை வைக்க பயப்படுறாங்க ஏன்? வைத்தால் குஞ்சு வெட்டி காக்காய்க்கு போட்டுவிடுவாங்க என்ற பயம். சிலரை அன்பால் திருத்த முடியும் சிலரை பயத்தால் திருத்தமுடியும். பயம் இருக்கும் வரையே மனிதன் மனிதனாக இருப்பான், பயம் இல்லாதவனே மிருகமாக மாறுகிறான்.

ஒவ்வொருவருக்கும் பயம் பல விதத்தில் இருக்கும் சிலருக்கு கடவுள் பயம், மனசாட்சிக்கு பயம், அடுத்த பிறவி பயம் என்று பயம் இருப்பதாலே கொஞ்சம் தவறு செய்யாமல் இருக்கிறான் சிலருக்கு சட்டத்தின் மூலம் போலீஸ் மூலம் பயம் தேவை படுகிறது.

கண்டிப்பாக அந்த பயம் தேவை!!!

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

கண்ணன்,நீங்கள் சீனியர் லீ'யின் தி சிங்கப்பூர் ஸ்டோரியை'ப் படித்திருக்கிறீர்களா?
He says that He learnt to deal with crime makers only from happenings from japanese invation.
He says,he learnt the lesson of punishing heavily on the heinous crimes from Japanese and also during their period of invation,singapore was relatively crime free.
லீ'யின் அந்த உறுதியான அணுகுமுறைதான் இன்றைய பாதுகாப்பான சிங்கப்பூரின் அடித்தளம்.
கிட்டத்திட்ட அதே நேரத்தில் விடுதலை பெற்ற இந்தியா,உறுதியான அணுகுமுறை இருந்திருந்தால் எங்கோ போயிருக்கும்,நமது விளக்கெண்ணெய் ஜனநாயகக் கொள்கைகளால் நமக்கு நேர்ந்த அழிவுகள் அதிகம்.
மேலும் நான் ஐரோப்பா தவிர உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வாழ்ந்து பார்த்திருக்கிறேன்.
எனது பார்வையில் எந்த நாடுகளில் கொடும் குற்றங்கள் கடுமையாக அணுகப்படுகின்றனவோ,அங்கெல்லாம் சமூக அமைதி இருக்கிறது.
கொடும் குற்றங்களைக் கடுமையாக அணுகுவதற்கும்,சர்வாதிகாரப் போக்கிற்கும் உள்ள வேற்றுமையை நீங்கள் உணர்ந்தே இருப்பீர்கள் என நம்புகிறேன்.
மேலும் தண்டனைகளை நீக்கிவிட்டு மக்கள் நேர்மையாக கொடும் குற்றம் இழைக்காமல் வாழ்கிறார்களா எனப் பார்ப்பதை விட,கொடுங்குற்றத்திற்கு மரணதண்டனை உண்டு என்ற பயத்திலாவது குற்றச்செயல்கள் இல்லாதநிலை எவ்வளவோ மேல் !
தண்டனைகளை மீறி கொடும் குற்றங்கள் இழைப்பவர்கள் தனிமனிதர்கள்தான்,அவர்களுக்கு சமுதாயம் கொடுக்கும் deterrent-பயங்கள் ஒரு பொருட்டல்ல என்று நீங்கள் சொன்னாலும்,சமூகத்தின் வியாதி போன்ற அத்தகையவர்கள் நீக்கப்படுவது சமூகத்தை சுத்தப்படுத்தும் !

மங்களூர் சிவா சொன்னது…

NICE POST. COMMENTS TOO GOOD. NOTHING TO TELL FROM MY SIDE.

ரூபஸ் சொன்னது…

யோசிக்க வேண்டிய விஷயம்..

Me சொன்னது…

ஒரு மனிதனின் உயிரைப் பறிக்க மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த சட்டத்திற்கும் (அது இந்திய தண்டனை சட்டமாகட்டும் அல்லது ஷரியத் ஆகட்டும்) உரிமையில்லை.

ஆனால் பசுவதைக்கு எதிராக குரல் எழுப்பும் சில புண்ணியவான்கள், ஒரு மனிதனின் உயிரை ஏன் பறிக்கவில்லை என அரசியல் செய்வதை என்ன சொல்ல. (பசு ஒரு தெய்வம் அதை ஒரு குற்றவாளியுடன் ஒப்பிடுவதா என ஜல்லியடிக்க ஒரு கும்பல் காத்திருக்கும் என்பது தனி விஷயம்)

PRABHU RAJADURAI சொன்னது…

பாராட்டுக்கு நன்றி நண்பரே!

தங்களது பதிவினையும், பின்னூட்டங்களையும் இரு நாட்களாக கவனித்து வருகிறேன்!

Arun Kumar சொன்னது…

மரண தண்ட்னை வேண்டாம் என்று சொல்வதில் உங்கள் கருத்தில் பல உண்மைகள் உண்டு

உணர்ச்சி வேகத்தில் அல்லது தன் நிலை தவறி செய்யும் குற்றங்களுக்கு இது பொருந்தும்
ஆனால் தெரிந்தே அடுத்தவர் உயிரை பறிக்கும் என்று முடிவாக தெரிந்தும் செயல்படும் குற்றங்களுக்கு இது பொருந்துமா?

தர்மபுரி வழக்கில் எரிக்கபட்ட மாணவிகள் போல இனி இந்தியாவில் குறைந்தது தமிழ்நாட்டில் இது போல குற்றங்கள் நிகழமாமல் தடுக்க அந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கண்டிப்பாக கொடுக்கபட வேண்டும்..

Doctor Bruno சொன்னது…

தர்மபுரி வழக்கிற்கும் இந்த பின்னூட்டத்திற்கும் தொடர்பு கிடையாது
--
சமீபத்தில் குமுதம் இதழில் பாமரன் எழுதிய கட்டுரை.

ஒரு பெண்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இருவர் சில வருடங்களுக்கு முன்னர் (காவல் நிலையத்தில்) ஒப்பு கொள்கிறார்கள்.

வழக்கு நடந்து வருகிறது. (என்ன தண்டனை என்பது நினைவு இல்லை)

ஒரு நாள் திடீரென அந்த பெண் தனது கனவருடன் வருகிறார் !!!!

ஒரு வேளை அந்த இருவரையும் தூக்கில் போட்டிருந்தால்.... நினைக்கவே பதறுகிறது.

Doctor Bruno சொன்னது…

எனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு வருத்தம்.

மரண தண்டனை குறித்த விவாதங்கள் ஒரு வழக்கின் தண்டனை அறிவிக்கப்பட்டவுடன் துவங்குவதால், விவாதம் தண்டனை பற்றி அல்லாமல் அந்த வழக்கு பற்றியே நடக்கிறது.

இதில் பிரச்சனை என்னவென்றால் மரணதன்டனை குறித்த கருத்து வழக்கு குறித்த கருத்தாகவே (மக்களால் மற்றும் ஊடகங்களால்) பார்க்கப்படுகிறது.

பெயரில்லா சொன்னது…

நல்லோதோர் விவாதம்.
மரணதண்டனை குறித்த உங்களின் மனிதநேய விளக்கம் மிகச்சரியானது. கைக்கு கை கண்ணுக்கு கண் என்பதைப்போன்ற தண்டனை முறைகளின் தொடர்ச்சியே மரணதண்டனை என்பது. ஈரான் நாட்டு நீதிமன்றம் கல்லாலடித்து ஒரு பெண்ணைக் கொல்ல உத்தரவிடுகிறது. அதைத் தவறு என்று சொல்லிவிட்டு கயிறால் இறுக்கிக் கொள்வது எப்படி சரியாக இருக்கும்? நீதியமைப்பு என்பது குற்றவாளிகளைத் திருத்துகிற அமைப்பாக இருக்கவேண்டும். வெளிப்படையாகப் பேசினால் கொலைகாரர்கள் அனைவரும் மரணதண்டனையில் சிக்குவதில்லை. நாதியற்ற ஏழைகளும் விளிம்பு நிலை மக்களும்தான் இதுவரை அதிகம்பேர் மரணதண்டனைகளில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பாகிஸ்தானின் ஒரு கிராமத்தில் இருந்த கசாப்பை கொலைகாரனாக்கியதில் இந்த உலக அரசியலே அடங்கியிருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்வோம். குற்றங்களின் கொடூரம் என்பது ஊடகங்களின் அரசியலைப் பொறுத்தது. 1 இலக்கம் ஈழத்தமிழர்கள் ஓரிரு நாட்களில் கொல்லப்பட்ட வீடியோவைக் காட்டினால் போரில் இது தவிர்க்கமுடியாது என்று சொல்பவர்கள் இங்கு அதிகம். அவர்களுக்கு அந்த சிறுவன் கசாப்தான் நமது காலத்தின் பெருங்குற்றவாளியாகத் தெரிகிறான்.
மரணதண்டனை கொடுமையானது. ஏனெனில் அது சமூகமே ஒரு மனிதனுக்கு எதிராய் இழைக்கிற தீங்கு. இதில் கொடுங்குற்றம் சாதாக்குற்றம் எனப்பேசுவதெல்லாம் அரசியல் அரசியல் அரசியலன்றி வேறில்லை.
ராசீவ் காந்தி கொலை வழக்கை எடுத்துக்கொள்வோம். கொடூரமான கொலையாக அது கருதப்பட்டதற்கு ராசீவ் காந்தியின் அரசியல் தகுநிலைதான் காரணம் என்பதை யாரால் மறுக்க முடியும்?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஈரான் நாட்டு நீதிமன்றம் கல்லாலடித்து ஒரு பெண்ணைக் கொல்ல உத்தரவிடுகிறது. அதைத் தவறு என்று சொல்லிவிட்டு கயிறால் இறுக்கிக் கொள்வது எப்படி சரியாக இருக்கும்?//

சிறப்பான கருத்து,

மிக்க நன்றி திரு இளங்கோவன்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்