பின்பற்றுபவர்கள்

31 அக்டோபர், 2007

தேவர் ஜெயந்தி ! - தமிழக அரசின் அரசு விழாவா ?

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் போல மதுரைக்கு தெற்கே ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தி என்ற பெயரில் முத்துராமலிங்க தேவருக்கு விழா எடுக்கிறார்கள். அதற்கு ஆயிரக்கனக்கான போலிஸ் பாதுகாப்பு, இது கடந்த 15 - 20 ஆண்டுகளாக புதிதாக புகுத்தப்பட்டு நடைபெறும் ஒரு சாதி சார்ந்த விழா. முத்துராமலிங்க தேவர் ஒரு சாதி சார்ந்த சமூகத்தலைவராக அடையாளப்படுத்திக் கொண்டவர். அவருடைய சமூகம் அவருக்கு விழா எடுக்கிறது, அதைப்பற்றி ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ஆனால் அந்த கூ(ட்ட)த்தின் கைவரிசையில் மதுரையில் இருந்த அம்பேத்கார் சிலை உடைபெற்றிருக்கிறது. தேவர் ஒரு மாநிலத்திற்குள், ஒரு சாதிக்குள் தன்னை குறுக்கிக் கொண்டவர். தேவரை எந்த வகையிலும் ஒப்பிட முடியாத அளவுக்கு உயர்வு பெற்றவர் அம்பேத்கார், மேலும் அவர் ஒரு தேசிய தலைவர். தேவரை போற்றுபவர் தேவரை மட்டும் போற்ற வேண்டியதுதானே. எதற்கு அம்பேத்கார் சிலைமீது கை வைத்து ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் ?

அங்கு நடைபெறும் தேவர் விழா என்பது வெள்ளிடை மலையாக ஒரு குறிப்பிட்ட சாதி விழா என்றே தெரிகிறது, ஓட்டு வங்கி குத்தகையை தக்கவைத்துக் கொள்ள ஆண்டுக்கு ஒருமுறை கையெழுத்துப் போட்டு செல்ல அரசியல் வாதிகள் குறிப்பாக ஜெ, கருணாநிதி போன்றோர் படையெடுத்துச் செல்கின்றனர். ஆண்டுக்கு ஆண்டு இந்த விழா விளம்பரப்படுத்தப்படுவதையும், அதற்கு முதன்மைத்துவம் கொடுத்து செய்திதுறைகள் கூட படங்களை வெளி இடுவதைப் பார்க்கும் போது தென் மாநில, தமிழக சாதி அரசியலும், சாதி வெறிகளும் ஒழிப்பதற்கு இந்த நூற்றாண்டிற்கு வாய்ப்பு கிடைப்பது போல் தெரியவில்லை.

பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலங்கள் அவலங்களுக்கு காரணமே உயர்சாதி நினைப்பில் முத்துராமலிங்க தேவரின் சமூகம் தலித்துகளுக்கு எதிராக செய்யும் அடக்குமுறைதான். அந்த ஊரில் குறிப்பிட்ட அந்த சமூகத்திடம் பேசி தேர்தலை நடத்த துப்பு இல்லாத அரசியல்வாதிகள் தேவர் ஜெயந்திக்கு சென்று மாலை அணிவித்து வருவதைப் பார்க்கும் தலித் பெருமக்களை அரசியல்வாதிகளும் ஒதுக்கித் தள்ளுவதாகத்தான் நினைக்க முடிகிறது. சாதியால் அடையாளப்படுத்தப்பட்டு முழுக்க முழுக்க சாதி விழாவாகவே நடைபெறும் விழாக்களுக்கு முன்னாள் முதல்வரும், இந்நாள் முதல்வரும் சென்று வருவதைப் பார்க்கும் தமிழகத்தின் ஒவ்வொரு சாதியும் தங்கள் சாதிக்கு அத்தகைய அங்கீகாரம் கிடைக்காதா ? என்று நினைக்கத்தான் செய்யும். தங்கள் சாதியையும் முன்னிலை படுத்தவேண்டும் என்று அனைத்து தமிழர்களும் நினைக்க ஆரம்பித்துவிடுவர். தீண்டாமை ஓரளவு குறைந்திருக்கிறது, ஆனாலும் சாதி வெறி வளர்ந்தால் மக்கள் தீவு கூட்டங்களாக மாறிப் போய்விடுவர்.

இஸ்லாமியர் கடைகளில் பொருட்களை வாங்காதே என்று இந்துத்துவ வாதிகள் நல்வழி(?) காட்டுவதைப் போலவே அடுத்த சாதிகாரர்களிடம் வியாபாரம் செய்யவோ, வாங்கவோ கூடாது என்ற மனநிலைக்கு சாதி வெறி இட்டுச் செல்லும். இன்றைய தேதியில் சாதியை வளர்க்க மறைமுகமாக பாடுபடுவது அரசியல்வாதிகள் தான். முதல்வர் பதவிக்கு அனைத்து சாதி/மத பெருமக்களும் தான் வாக்கு அளித்து இருக்கின்றனர். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சாதியை சேர்ந்தவராக இருக்கின்றனர், வாஉசி...திருப்பூர் குமரன்.. போன்று பட்டியல் எழுதி மாளாது.... இவர்கள் இன்னின்ன சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டு நாள்தோறும் ஒரு சாதி தம் தலைவருக்கு ஜெயந்தி விழா எடுத்தால் ஜெ, மற்றும் கருணாநிதி சென்று வருவார்களா ? நிச்சயம் முடியாது. தேவர் ஜெயந்தி விழாவுக்கு இவர்கள் சென்று வருவதன் மூலம் குறிப்பிட்ட சாதி(வெறி)யை வளர்க்க இவர்களும் சேர்ந்தே பாடுபடுகிறார்கள் என்று தான் நினைக்க முடிகிறது. எந்த கட்சித்தலைவர் அந்த சாதிக்கு நெருக்கமானவர் என்று காட்டிக் கொள்ள நடக்கும் 'போட்டோ' போட்டி போலவும் தெரிகிறது.

அனைத்து சாதிப்பிரிவினருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய பொறுப்புள்ள முதல்வர் பதவி வகித்தவர்கள், வகிப்பவர்கள் சாதி விழாக்களுக்கு சென்று வருவது முதல்வர் பதவிக்கே இழுக்கானது.

சாதிவிழாக்கள் நடத்துபவர்களைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. அது அந்தந்த சாதியினர் விருப்பம். பொறுப்புள்ள முதல்வர்கள் இதெற்கெல்லாம் சென்று வரலாமா ?

30 அக்டோபர், 2007

மோடியிசமும் - இந்திய மதச்சார்பின்மை முகமூடியும் !

மோடி வகையறாக்கள் தொகல்காவிடம் சிக்கியது அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறதா ? என்று பார்த்தால் அப்படி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் மோடிவகையறாக்கள் அப்படி செய்யக் கூடியவர்கள், அவர்கள் தான் செய்திருக்கிறார்கள் என்பதை எல்லோருமே ஊகித்தி இருக்கிறார்கள், தற்போது கிடைத்திருக்கும் ஆதாரம் மதவெறியில் அவர்கள் மாபெரும் வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்ற சான்றிதழ் மாட்டுமே.

குஜராத் கலவரம் தொடர்புடைய சாட்சி அடைப்படையில் வழங்கப்பட்ட நீதிகள்(?), தெகல்கா ஆதாரத்துக்கு முன்பு வெட்கி தலைகுனிகிறது.

இந்தியாவில் இருக்கும் அனைவரும் இந்தியர்களே, குறிப்பாக இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் வெளியில் இருந்து வந்தேறவில்லை. முன்னாள் குடிமக்களான அவர்கள் தீண்டாமை கொடுமைகளில் விடுபட மதம் மாறி சுயமரியாதை மற்றும்
அடிப்படை உரிமைகளை பெற்றுக் கொண்டனர். இதில் என்ன தவறு இருக்கிறது ? எந்த ஒரு குடிமகனுக்கும் அவன் விரும்பிய மதத்தில் இணைய உரிமை உண்டு. ஒருவர் இஸ்லாமியராகவோ, கிறித்துவராகவோ இருப்பதை வைத்து அவர்களை சிறுபாண்மையினர் என்று சிறுமைபடுத்தி பார்ப்பது எதற்கு ?

மதம் அன்பை போதிக்கிறது, இந்துமதமே எல்லா மதங்களுக்கும் 'மூலம்',, அனைத்து மதங்ககளும் கலந்த இந்துமதம் கங்கையைப் போல் ஒரு புனித(?) சாக்கடை என்று புனிதம்(?)
பேசிக் கொண்டே, இந்து மதத்தின் பெயரால் தீவிரவாதம் ஒருபக்கம் வளர்ந்து கொண்டிருக்கிறது. காந்தியை கொன்ற கோமான்களின் இரத்த வேட்டை காந்தி பிறந்த பூமியில் வீறுநடை போட்டு இருக்கிறது. குஜராத் நிகழ்வுகளுக்கு பின்னால், இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று பெருமை பேசினால் காக்கை கூட பேசுபவனின் நாக்கில் எச்சமிட்டு எள்ளிவிட்டு செல்லும்.

குடிமகன் அடிப்படை தகுதிக்கு முன்பு மதத்தின் பெயரால் மைனாரிட்டி மசுரு(நன்றி அசுரன்) பேசுவதெல்லாம் எதற்கு ? அவனும் மற்றும் எல்லோரும் இந்திய தாய்க்கு பிறந்தவன் தானே ? மைனாரிட்டி என்பதால் இராணுவத்தில் இல்லாமல் இருக்கிறார்களா ?
மைனாரிட்டி என்பதால் இலவசமாக எல்லாமும் கிடைக்கறதா ?

"அரசியலில் மைனாரிட்டியிஸத்தை புகுத்துவதைத் தான் நான் எதிர்க்கிறேன்" - மோடி

மோடி வெளிப்படையாக சிறுபாண்மையினருக்கு எந்த உரிமையும் இல்லை என்று கருத்து சொல்லும் அளவுக்கு இந்தியர்கள் மதவெறிகளை சகித்துக் கொள்ளுகிறார்களா ? அல்லது விரும்புகிறர்களா ? பதில் எப்படி இருந்தாலும் மோடியின் கருத்துக்கள் சிறுபாண்மையினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றன,
மோடியின் மைனாரிட்டி பேச்சு இன்னும் பல பாகிஸ்தான்களை இந்தியாவுக்குள்ளேயே உருவாக்கும் ஆபத்து இருக்கிறது. இந்திய மதச்சார்பற்ற முகமூடி அழுகிக் கொண்டிருக்கும் நிலையில் உள்ளே இருக்கும் இந்துத்துவ கோரப்பற்கள் தெரிய ஆரம்பித்திருப்பது கவலை அளிக்கிறது.

தொட்டதற்கெல்லாம் கருத்து கூறும் நீதிமன்றம் மோடி உதிர்த்தவைகளுக்கு மெளனம் காப்பது ஏன் ?

29 அக்டோபர், 2007

ப்ளாக்கர் பாஸ்வேர்டை திருடுவது சுலபம் ?!

கவனக்குறைவாக கணனி பயன்படுத்துவர்களிடமிருந்து இணைய தளவழி மின் அஞ்சல் (web based email) கடவுச் சொல்லை (password) கைப்பற்றுவது சுலபம். இது தொடர்பாக முன்பு எழுதிய இடுகை உடனடிதேவையாக எழுதியது. ஏனென்றால் பல பதிவர்கள் ஜிமெயிலை திறக்கவே அச்சமுற்றனர். அப்படி திறந்தால் எதாவது மின் அஞ்சல் ஆர்குட் தளத்துக்கு அழைக்குமோ என்ற கலவரப்பட்டனர். அதற்கு காரணம் பல வதந்திகள். பிரச்சனைகள் இதுவாக இருக்குமோ ? என்ற ஊகத்தில் எழுதப்பட்டவைகள். அவைகள் பிரச்சனை இருப்பதை மட்டும் பேசின. இங்கே செல்லாதீர்கள் என்று ஒரு குறிப்பிட்ட தள முகவரியை கொடுத்து அதை சொடுக்காதீர்கள் என்று தங்கள் கண்டு கேட்டதில் சற்று தன் கருத்தையும் ஏற்றி வந்த இடுகைகள் ஒரு வித பீதியை ஏற்படுத்தியது. அத்தகைய குழப்பங்களை தவிர்பதற்காக தொழில் நுட்ப ரீதியில் சிலவற்றை விளக்கி எழுதி இருந்தேன். அதன் பிறகு வதந்தீகள் அடங்கியது என்று நண்பர்கள் தெரிவித்தனர். இன்னும் இரண்டு நாள் இதை வைத்து கும்மி அடித்திருக்கலாம் என்று எவரும் நினைத்திருந்தால் அவர்களுக்கு நிச்சயம் என்மீது கோபம் வந்திருக்கும் :) - விடுங்க சார் கும்மி மேட்டருக்கு எப்போதும் பஞ்சமேயில்லை:)

சரி தலைப்புக்கு வருகிறேன். ஆர்குட்டில் நுழைய சொல்லி பாஸ்வேர்டை அபேஸ் செய்வதை விட ப்ளாக்கர் வழியாக அதை செய்வது சுலபம். ஏன் ஆர்குட் போலியாக பயன்படுத்தப்பட்டது ? என்று பார்க்கும் போது ஆர்குட் குழுமங்களின் தாக்கமே காரணம் என்று நம்ப வேண்டி இருக்கிறது. ஏனென்றால் ஆர்குட் குழுமத்தில் பெரும் குழுக்களாக இணைந்து கொண்டு சமுதாய கட்டமைப்பை ஏற்படுத்துகிறார்கள். நம் வலைப்பதிவில் (ப்ளாக்கரில்) குழுப்பதிவுகள் என்பது ஆர்குட் குழுமத்தை ஒப்பிட்டு பார்க்கையில் மிக மிக குறைவு. என்னதான் ப்ளாகர் வழி எழுதினாலும், திரட்டிகளின் சேவையை பயன்படுத்திக் கொள்ளும் போதே எழுத்துக்கள் குறிப்பிட்ட அளவினர் படிக்கின்றனர். 'சூடான தமிழ் செய்திகள்' என்ற பெயரில் வலைப்பதிவு இருந்து அதனை எந்த திரட்டியிலும் இணைக்காமல் இருந்தால், அதில் 'பின் லேடன் பிடிபட்டான்' என்ற செய்தி இருந்தாலும் எவருக்கும் தெரிவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு.

ஆனால் ஆர்குட் குழுமங்கள் பல உறுப்பினர்களால் இயங்குகின்றன. ஒவ்வொரு பெரிய ஆர்குட் குழுமும் ஒரு திரட்டிக்கு சமம். இத்தகைய குழுமங்கள் வெறும் அரட்டை கச்சேரிகளாக இருந்தால் எவருக்கும் தலைவலியே இல்லை. இவற்றின் வளர்சியும் பயனும் (நன்மை / தீமை) வலைப்பூக்களை விட வீச்சு அதிகம் கொண்டதாக உள்ளது. சில நாடுகளில் ஆர்குட் தளங்களை தடை செய்யும் அளவுக்கு ஆர்குட் குழும செயல்பாடுகள் நாட்டிற்கு எதிரான கருத்துக்களை கொண்ட குழுவாக நின்று அச்சமூட்டுகின்றன.

ஆர்குட் மூலம்.


வரலாற்றை திரிக்கலாம்
வரலாற்றை கட்டமைக்கலாம்
ரகசியமாக செயல்படலாம்
ஒரு அமைப்பாக குழுக்களை திரட்டலாம்


- இவை ஒரு நாட்டிற்கு எதிராக இருக்கும், தீவிர வாத குழுக்களுக்கு ஆதரவானதாக கூட இருக்கும், ஒரு சமுகத்தை தற்காப்பதற்காக இருக்கும், குறிப்பிட்ட சமூகத்தை கீழறுப்பதற்க்காக இருக்கும். வதந்திகளை கிளப்புவதற்க்காக இருக்கும், ஆபாசங்களை வெளிச்சம் போடுவதாக இருக்கும். பல பயன்கள் (நன்மை / தீமை) குழுக்களுக்கு கிடைப்பதால்... அரசாங்களுக்கே ஆர்குட்டின் அசுரவளர்ச்சி அச்சமூட்டுவதாகவே உள்ளது. இதை உடைப்பதற்கு, அப்படி குழுக்களாக செயல்படுபவர்கள் பற்றியும், என்ன தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன என்பதை அறிய ஆர்குட் பாஸ்வேர்டை கைப்பற்றுவதைத் தவிர வேறு வழி அரசாங்களுக்கு கூட இல்லை.

அரசாங்கங்கள் உள்நாட்டில் தளத்தை தடை செய்ய முடியும் ஆனால் உலக அளவில் செய்ய முடியாது. ஆர்குட் குழுமங்களினால் பாதிக்கப்படும் ஒரு அமைப்பு, ஆர்குட் தளங்களை கைப்பற்ற ஹேக்கர்களை ( பாதுகாப்புவிதி மீறிகளை) நாடுவர். அவர்கள் அதை வெற்றிகரமாக செய்து முடித்தால் பணம் கைமாறும். இது ஒரு லாபம் (பிஸினஸ்) தரும் தொழில் போலத்தான். ஆர்குட் தவிர்த்து வேறு சில தகவல் தொடர்பில் பல நிறுவனங்கள் எதிரி நிறுவனங்களின் ரகசியங்களை அறிந்து கொள்ள ஹேக்கர்களையே நாடுவர். மாட்டிக் கொள்ளாமல் அதை செய்து முடிக்கும் ஹேக்கர்கள் மில்லியன் கணக்கில் பணத்தை அள்ளிவிடுவர். மாட்டிக் கொள்ளாமல் செய்வதற்கென்றே கணனிக்குள் 64,000 ஓட்டைகள் (port - இது பற்றி பிறகு விபரமாக எழுதுகிறேன்) இருக்கின்றன. தொழில் நுட்பம் தெரிந்தவர் அதில் எந்த ஓட்டை அடைக்கப்படாமல் இருக்கிறது என்று அறிந்து அதன் வழியாக சென்று விபரங்களை பெற்றுவிடுவர். ஆர்குட் செயல்பாடுகள் பற்றி நான் அறிந்த வரையில் எழுதி இருக்கிறேன். ஆர்குட் பற்றி அதில் இணைந்துள்ளவர்களுக்கே அதன் செயல்பாடுகள் குறித்து நன்கு தெரியும்.

****

ஆர்குட் - ஐ கைப்பற்றுவதற்கான காரணம் ஆர்குட் - ன் பயமுறுத்தும் வளர்ச்சியே என்று நினைக்கிறேன். அதன் குழுக்களை உடைக்க முடியும் என்று பாதிக்கப்பட்டவர்கள் நினைக்கிறார்கள். ப்ளாக்கரை கைப்பற்றினால் பெரிய அளவில் ஒன்றும் நடக்காது. எல்லாம் இலவச கணக்கு, ஒன்று போனாலும் 100 திறந்து கொள்ளலாம். எழுதியவை கூகுள் கேச்சில் இருந்து ஓரளவு எடுத்துவிட முடியும்.

ப்ளாக்கர் பாஸ்வேர்டை எப்படி கடத்துவார்கள் என்று பார்ப்போம் :

உங்களுக்கு கூகுள் ப்ளாக்கில் இருந்து மின் அஞ்சல் வருவது போல் வரும்,

Dear Blogger,

We have updated new features in to google blogs, please follow the link blogger.com. have a nice day !

Enjoy!

The Gmail Team

இது கூகுளில் இருந்து வந்திருக்கிறது என்று நினைத்து சந்தேகம் கொள்ளாமல் மேல் குறிப்பிட்டிருக்கும் லிங்கை சொடுக்குவீர்கள். ஆனால் அது ப்ளாக்கர் தளத்துக்குச் செல்லாமல் போலி ப்ளாக்கருக்கு சென்றுவிடும். எநத் சொல் மீதும் ஒரு லிங்க் சேர்ப்பது எளிது. blogger.com மீது blogger.blogs.com என்று லிங்க் சேர்த்திருந்தால் நமக்கு உடனடியாக தெரிவதற்கான வாய்ப்பு குறைவே. நீங்கள் blogger.com என்று மின் அஞ்சலில் குறிப்பிட்டு இருக்கும் லிங்கை சொடுக்குவீர்கள், அதில் இணைக்கப்பட்டு இருப்பதோ blogger.blogs.com,



எனவே அது அங்குதான் செல்லும். அந்த பக்கம் blogger.com போன்றே செய்து வைத்திருப்பார்கள். உங்களுக்கு சந்தேகம் வராது. வழக்கம் போல் லாகின் செய்வீர்கள். சரியான பாஸ்வேர்டு அடித்திருப்பீர்கள். பாஸ்வேர்டு 'பிழை' என்று சொல்லிவிட்டு உண்மையான blogger.com திருப்பி (redirect) அனுப்பபட்டுவிடும். அங்கு அதே கடவுசொல்லை அடிக்கும் போது ஒரிஜினல் பளாக்கராக இருப்பதால் உள்ளே சென்றுவிடும்.


உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் பாஸ்வேர்டும் களவாடப்பட்டு இருக்கும். அதை எடுத்த போலி ப்ளாக்கர் எப்போது வேண்டுமானாலும் உங்கள் ப்ளாக்கையோ, ஜிமெயிலையோ திறக்க முடியும். பாஸ்வேர்டையும் விருப்பம் போல் மாற்றிக் கொள்ள முடியும். இதுவும் பிஸ்ஸிங் தொழில் நுட்பம் தான். இதை செயல்படுத்துவதற்கு மிக்க பொருள் செலவு ஆகும், எதாவது நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்தால் மட்டுமே இதையெல்லாம் ஒரு வேலையாக எடுத்துக் கொண்டு செய்வார்கள். அதைத் தவிர வேறு எவரும் வேலை அற்று இதை செய்தாலும், முன்பு சொல்லிய பலன் தான் கிடைக்கும். ப்ளாக்கர் தொடர்புடைய ஜிமெயில் , ப்ளாக்கர் எல்லாம் குப்பை கூளங்களாகவே ( திராவிட - ஆரிய - சாதி - அரசியல் சாக்கடைகள்) தான் இருக்கிறது. மீறியும் ஒருவன் கைப்பற்றினால் அதை கைப்பற்றுபவன் கிறுக்கனாகத்தான் இருக்க முடியும்.

blogger.blogs.com - இங்கு நான் கொடுத்திருப்பது ஒரு உதாரணத்திற்காக மட்டுமே . 'blogs' என்ற இடத்தில் வேறு பெயர் பயன்படுத்துவார்கள். அது போலியான சர்வரின் தற்காலிக பெயர்.

எவர் அஞ்சல் அனுப்பி இருந்தாலும், அந்த மின் அஞ்சல் வழி ப்ளாக்கரில் நுழையும் முன் அது blogger.com தானா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள் !

27 அக்டோபர், 2007

ஜிமெயில் / ப்ளாக்கர் பாஸ்வேர்டு திருடு போவது எப்படி ?

'pishing' என்று சொல்வார்கள். பொதுவாக இது பேங்க் கிரிடிட்கார்டு எண்களை திருடுவதற்கு பயன்படுத்தும் தொழில் நுட்பம்(?). ஆன்லைன் பேங்கிங் என்பது இப்பொழுதெல்லாம் உலகமெல்லாம் வழக்காகிவிட்டது. எனவே பணமாற்று நடவடிக்கை முதல் அனைத்து வங்கி நடவடிக்கைகளும் இணையம் வழியாகவே நடைபெறுகிறது.

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் திருட்டு கும்பல், அந்தந்த வங்கிகளின் இணைய பக்கங்களைப் போல் போலியாக இணைய பக்கங்களை திறந்து வைத்து, ஸ்பேம் மெயில் நிறுவணங்களிடமிருந்து இமெயில் முகவரிகளை பெற்றுக் கொண்டு பேங்க் வழியாக மெயில் அனுப்புவது போன்று அனுப்புவார்கள். "உங்கள் பாஸ்வேர்டு எக்ஸ்பயர் ஆக இருக்கிறது உடனடியாக மாற்றவும் " என்று வரும். அந்த மெயில் கிடைக்கும் நபர் அதிகம் கணனி வழி திருட்டுக்களை அறியதவராக இருந்து, போலி பேங்கின் பெயரில் இருக்கும் உண்மையான பேங்கில் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால் உடனே அவசரப்பட்டு பாஸ்வேர்டை மாற்ற முயல்வார், முதலில் கணக்கு பெயரையும், ஒரிஜினல் பாஸ்வேர்டு கேட்கும், அதன் பிறகு புதிய பாஸ்வேர்டை அடிக்கச் சொல்லும். ஒரினினல் பாஸ்வேர்ட் முதலில் அடித்தவுடனே அதனை தனியாக கணக்கு எண்ணுடன் போலி இணையபக்கத்தின் டேட்டா பேஸில் சேமித்துவிடும்.

ஏமாளி கணக்கர் புதிய பாஸ்வேர்டு மாற்றியதும், "உங்கள் பாஸ்வேடு மாற்றப்பட்டுவிட்டது" என்று சொல்லிவிட்டு இணைய பக்கம் தன்னால் மூடிக் கொள்ளும். வெற்றிகரமாக போலி திருட்டு கும்பல் பாஸ்வேர்டை டேட்டா பேஸில் இருந்து எடுத்து ஒரிஜினல் பேங்கில் உள்ளே நுழைந்து அதிகபட்ச பணப் பரிவர்தனையை உடனே செய்துவிடுவர்.

இந்த திருட்டு 2002 ஆண்டு அதிகம் நடைபெற்றது, இண்டெர் நெட் குற்ற தடுப்புக்குப் பிறகு இணைய திருட்டு கும்பல்கள் கைவரிசை குறைந்திருக்கிறது.. ஏனென்றால் உலக அளவில் காவல் துறைகள் எச்சரிக்கை செய்து கடுமையான தண்டனையை அறிவித்திருக்கிறார்கள்.

அதே தொழில் நுட்பம் தான் தற்போது கூகுள் ஆர்குட்டை வைத்து ஜிமெயில் கணக்கையும், கடவு சொல்லையும் திருடுகிறார்கள். உள்ளே நுழையும் முன் அது ஆர்குட்டா வலைத்தளாமா ? என்று முதலில் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். http://www.orkut.com இதுதான் உண்மையான ஆர்குட் ஆனால் போலி ஆர்குட்டில் orkut.00bp.com என்று இருக்கும், அதாவது வேறு திருட்டு Server அது. இதனை பாஸ்வேர்டு பயன்படுத்தி திறந்துவிடக் கூடாது, தளத்தை லாகின் பண்ணாமல் லாகின் பக்கத்தை மட்டும் பார்வை இட்டால் உங்கள் கடவு சொல் களவு போகாது, அந்த தளத்திற்குள் சென்று லாகின் செய்தால் அவ்வளவுதான்..உடனே ஆட்டோமெடிக் மெயில் திருட்டு கும்பலுக்கு சென்றுவிடும். உடனே ஜிமெயில் பாஸ்வேர்டட மாற்றிவிடுவார்கள் அம்பேல் ... ஜிமெயில் பாஸ்வேர்டு, ப்ளாக்கர் பாஸ்வேர்டு எல்லாம் ஒன்று தான், அதன் பிறகு உங்களால் திறக்க முடியாது.

உங்கள் ஜிமெயிலில் இருந்து அந்த மெயிலை திறந்து பார்பதால் அவர்களால் திருட முடியாது, அதிலுள்ள லிங்கை சொடுக்கு ... அந்த தளத்திற்கு சென்று அதற்குள் நுழைய முற்பட்டு கடவு சொல்லை பயன்படுத்தினால் மட்டுமே கடவு சொல் திருட்டு கும்பல் கைகளில் போய்விடும். இப்படித்தான் இட்லிவடை மற்றும் தமிழச்சி ப்ளாக்கர் பாஸ்வேர்டு களவு போய் இருக்கிறது.

இதை எதற்கு செய்கிறார்கள் ?

ஜிமெயில் பலரும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டதால், அதில் பேங்க் அக்வண்ட் எண்களையும் பாஸ்வேர்டையும் சேமித்து வைத்திருப்பார்கள், அதை கைப்பற்றி திருடலாம் என்பதற்குத்தான். மற்றபடி இதை திருடி வலைப்பூக்களை அழிப்பார்கள் என்று நினைப்பது சந்தேகம் தான்.

பிஸ்ஸிங்(pishing) என்பது ஹை டெக்னாலஜி... ஆதாயம் இல்லாமல் செய்ய மாட்டார்கள். கம்பிக்கு பின்னால் களிதிங்கும் அளவுக்கு நிறைய ரிஸ்க் இருக்கிறது.


நம் வலைப்பதிவாளர்களின் இமெயிலை பிஸ்ஸிங் திருட்டு கும்பல் திறந்தால், திராவிட, ஆரிய கூட்டணி கதைகள் / எவனை எவன் கவுக்கலாம், யாருக்கு அனானி ஆபாச பின்னூட்டம் போடலாம் என்ற கதைகளும், தனக்குத்தானே பின்னூட்டமிட்டு அதனை நண்பர்களுக்கு தெரிவித்து புலகாங்கிதம் அடைந்த கதைகள் தான் சாட்டின் சேமிப்பிலும், மெயிலிலும் இருக்கும், திருட்டு கும்பலை சேர்ந்தவன் தமிழனாக இருந்தால் அதையெல்லம் படித்துவிட்டு... 'த்தூ' வென்று துப்பிவிட்டு ... வெறுத்துப் போய் திரும்ப பாஸ்வேர்டை அந்த மெயிலில் சேமிக்கப்பட்டுள்ள வேறு நண்பர்களின் முகவரிக்கு அனுப்பி திரும்ப கொடுத்தாலும் கொடுத்துடுவானுங்க :))

orkut.00bp.com - இது போலி ஆர்குட் வெப்சைட் orkut க்கும் .com க்கும் இடையில் எதாவது சொல் இருந்தால் அதாவது 00bp போன்று அல்லது வேறு எதோ ஒன்று இருந்தால் அது போலி வெப்சைட், அந்த பக்கதில் சென்று ஜிமெயில் கணக்கு மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தாதீர்கள்

orkut.00bp.com - இதை சிலர் நண்பர்கள் இணைப்பாக (link) இணைத்திருக்கிறார்கள். அது தவறு ஏனென்றால் கவனம் தேவை, அதை சொடுக்கினால் அந்த போலி ஆர்குட் பக்கத்துக்கு சென்ரு விடும். கவனக்குறைவால் பாஸ்வேர்டுடன் நுழைந்து பார்த்துவிடாதீர்கள்.

ஜிமெயில் வழியாக கடவு சொல்லை திருட முடியாது. அந்த போலி ஆர்குட் பக்கத்தில் பாஸ்வேர்டுடன் நுழைந்தால் மட்டுமே ஆபத்து ! எனவே மெயில் வந்திருந்தால் பதட்டம் தேவை இல்லை.

25 அக்டோபர், 2007

ஞானியும் பூணூலும் !

இருவாரங்களுக்கு முன்பு நண்பர் சிறில் அலெக்ஸ் சாட்டில் வந்து என்ன கண்ணன் நீங்க ஞானியை திட்டி கட்டுரை எழுதவில்லையா ? என்று கேட்டு ஆதங்கப்பட்டார் (கிண்டல் அடித்தார்) :))

திரு ஞானி எழுத்துக்களை முதன் முதலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திண்ணை இணைய இதழில் தான் வாசித்தேன். ஆழமாக எழுதக்கூடிய ஆற்றல் உடையவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஒருவர் நல்ல எழுத்தாளர் என்பது அவரது எழுத்தின் ஆளுமைக்கு கிடைக்கும் தகுதியேயன்றி அவரது 'எழுத்துக்களை' விரும்பிப் படிப்பவர்கள் எல்லோருமே அவரது 'கருத்துக்களை' ஏற்றுக் கொள்வார்கள் என்று சொல்ல முடியாது. ஞானி போன்ற எழுத்தாளர்களின், அவர்களது வாதத்திறமையில், சிந்தனையில் எழுதுவது எதிர்கருத்துக்கள் என்றாலும் எடுத்துவைக்கும் தரவுகளுக்கும், கட்டுரை நடைக்கும், பொருளுக்கும் பாராட்டுக்கள் எப்பொழுதுமே கிடைக்கும். ஞானியின் வாசகர்கள் எல்லோருமே ஞானியின் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. நல்ல எழுத்தாளர் என்ற அளவில் ஞானிக்கு உரிய மதிப்பு வலையுலக எழுத்தாளர்களுக்கு இடையில் இருக்கிறது.

கர்நாடக இசைக்குயில் சுப்புலட்சுமி அம்மா மறைந்த போது ஞானி திண்ணையில் எழுதிய கட்டுரை பலரையும் திகைக்க வைத்தது. அதில் அவர்
'எம் எஸ் சுப்புலட்சுமி அன்றாட வாழ்க்கையில் ஓர் அய்யர் மாமியாகவே வாழ்ந்திருக்கிறார் ' என்று எழுதியதும், திண்ணை வாசகர்கள் பலரும் கொதித்துவிட்டனர். அதன் பிறகு ஞானி திண்ணையில் எழுதுவதை நிறுத்திவிட்டார். அப்போதெல்லாம் ஞானி ஒரு பார்பனர் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது என்று நினைக்கிறேன். சிலருக்கு தெரிந்திருந்தாலும் அவரது அந்த கருத்துக்கு அவரை பார்பனராக பார்த்திருப்பார்களா ? என்று தான் கேட்கத்தோன்றுகிறது.

கருத்து ஒவ்வாமைகள் ஏற்படும் போது சொல்லுபவரை எள்ளி நகையாட அவரது சாதியை இழுப்பது என்பது கவலை அளிக்கிறது. சாதி வேண்டாம் என்று ஒதுங்கி வருபவர்களை இதுபோல் அடையாளப்படுத்தினால், வேண்டாம் என்று ஒதுங்குபவர்களுக்கு சமூகம் கொடுக்கும் மதிப்பு பிற்காலத்தில் சாதியை வைத்தே கேள்வி குறி ஆக்கப்பட்டுவிடுமோ ? என்ற எண்ணமும் பின் சாதியை துறக்க நினைப்பவர்களுக்கு ஏற்படும் பெரிய அச்சமாக மாறிவிடுமோ ? என்றும் ஞானியை பார்பனராக, சுகுணாவை பிள்ளைமாராக சிலர் அடையாளம் கண்டதில் இருந்து நினைக்கத் தோன்றுகிறது.

ஞானி கலைஞரின் வயதை குறிப்பிட்டு எழுதியதில் எனக்கும் உடன்பாடு இல்லை. ஓய்வெடுப்பது என்றால் என்ன முதியோர் இல்லத்தில் முடங்கி இருப்பதா ? கருணாநிதி போன்ற பல தலைவர்கள், சினிமா கலைஞர்கள் ஆகியோருக்கு ஓய்வென்பதே கிடையாது, திரு ஜெமினிகனேசன், காக்கா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தள்ளாத வயதிலும் நடிப்புத் தொழிலை செய்து கொண்டுதான் இருந்திருக்கின்றனர். அரசுவேலை போன்றவற்றில் ஓய்வு உண்டு. அரசியலில் வயது என்பது அனுபவ அறிவு என்றாகிவிடும் போது அரசியலில் ஓய்வென்பது இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மூட்டுக்கு முட்டுக் கொடுத்து அடுத்த பிரதமர் ஆகும் வாய்பு கிடைக்கும் என்ற ஆசையில் அவர் இல்லாவிட்டாலும், அவரது கட்சிக்காரர்களுக்கு அவரை விட்டால் மாற்று இல்லை. ஞானி கருணாநிதியுடன் சேர்த்தே பல தலைவர்களை குறிப்பிட்டு இவர்களும் ஓய்வெடுக்கலாம் என்று சொல்லி இருக்கலாம். அவ்வாறு சொல்லாத ஒரே காரணத்தினால் ஞானியிடம் பூணூல் தேடுகிறார்கள் என்றே நினைக்கிறேன்.

திரு ஞானி மட்டுமல்ல...ஞானி போன்று நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்கள் (திரு ஜெயகாந்தன், திரு சுஜாதா போன்றோர்) தமது எழுத்துக்களுக்கு கிடைக்கும் மதிப்பை தவறாக எடைப்போட்டு சமூகத்தில் அவர்களது கட்டமைப்பு கருத்தை திணிக்க முயல்கிறார்கள் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. அறிவு ஜீவித்தனம் வளர வளர சமூக வழிகாட்டி என்று தங்களைத் தாங்களே நினைத்துக் கொள்வார்கள் என்றே நினைக்கிறேன். இது தான் காரணமேயன்றி உதிர்க்கும் சொற்கள், கருத்துக்கள் இவற்றை ஞானியின் பார்பன அடையாளமாக தோய்து எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

ஞானியின் எழுத்துக்களில் பார்பனீயமா ? என்பது கேள்வி எழுப்பியவர்களும், ஞானியும், ஞானியின் வாசகர்கள் மட்டுமே தீர்மாணிக்க முடியும். ஆனால் ஞானியின் எழுத்துக்களில் பார்பனீயம் இல்லை என்பதை தேவையே இல்லாமல் பார்பனர்கள் வந்து கொடிபிடிப்பது நகைப்புக்கு இடமாக இருக்கிறது. ஞானியின் மீது பார்பனர்களுக்கு ஏன் திடீர் பாசம் ? தன்னை பார்பனராக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாத ஞானிக்கு ஏன் பார்பனர்கள் ஓடி வந்து ஞானி பார்பனீய கருத்தாக்கம் கொண்டவர் இல்லை என்று வரிந்து கட்டவேண்டும் ? இந்த கேள்விக்கு 'தான் ஆடாவிட்டாலும் பூணூல் ஆடுமோ ?' என்ற பதில் தான்கிடைக்கிறது. ஞானி ஒரு பார்பனராக தெரிந்துவிட்ட காரணத்தினால், ஒரு பார்பனரை பலரும் குற்றம் சொல்கிறார்கள் என்று தானே ? பார்பனர்கள் பொறுக்க முடியாமல் கருத்து சொல்கிறார்கள்.

ஞானியை பார்பனராக சுட்டிக் காட்டுபவர்களும் சரி ... ஞானிக்கு திடீர் ஆதரவு கொடுக்கும் பார்பனர்களும் சரி ... அவரவர் அளவில் ஞானியை பார்பனராகவே அடையாளப்படுத்துகின்றனர். அவர் 'ஞானி' புரிந்து கொள்வார் !

24 அக்டோபர், 2007

தீப ஆவலி - மற்றும் பெரியார் !

தீபம் அல்லது தீப என்ற வடசொல்லின் மூலம் 'தீ' என்ற தனித்தமிழ் சொல். அதாவது தீ > தீப என்று வடமொழியாகி மீண்டும் தமிழ்படுத்த தீபம் என்று திரிந்து வந்திருக்கிறது. விளக்குத் திருவிழா என்பது ஆசீய நாடுகள் அனைத்திலுமே கொண்டாடுகிறார்கள். பசுநெய் விளக்குக்கு மாற்றாக சமணத் துறவிகளால் ஆமணக்கு எண்ணை கண்டுபிடிக்கப்பட்டதன் அடையாளமாக தீபத் திருவிழா தொடங்கியதாக அயோத்திதாசர் தம் ஆராய்ச்சி வழி சொல்லி இருக்கிறார். அண்ணாமலை என்னும் திருவண்ணாமலை ஒருகாலத்தில் சமணர் மலையாக இருந்ததாகவும் சமண பள்ளிகள் மிக்கவையாக இருந்த இடம் என்று இன்றும் அறியப்படுகிறது. திருவண்ணாமலை தீபம் ஏற்றும் நிகழ்வு (வைபவம்) சமண முனிகளால் தொடங்கப்பட்டதாகவும், சமணம் நலிந்தபிறகு அது கார்த்திகை தீபம் என்னும் இந்து பண்டிகையாக மாறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பொங்கலுக்கு முன்பு வரும் போகிப் பண்டிகை என்பது பெளத்தர்கள் கொண்டாடிய போதி சாத்துவர் நினைவாக கொண்டாடிய போதி பண்டிகையாம். ஏற்றுக் கொள்ளுதல் மறுத்தல் தாண்டி இதை ஒரு கருத்து என்ற அளவில் தான் கொள்கிறேன். தீபாவளி சமண / பவுத்த சமயங்களுக்கும் தொடர்புடையதாகவே இருக்கிறது.

தற்போதைய தீபாவளியை எடுத்துக் கொள்வோம், தென் இந்தியாவிலும் வட இந்தியாவிலும் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கான பழைய கதை (புராண) வேறு வேறாக இருக்கிறது. அதாவது தென்னிந்தியாவில் எப்பொழுதுமே சூரன், அசுரன் கதைகள் மிகவும் அறியப்பட்டவை ( பிரபலம்). முருகன் முதல் ஐயப்பன் வரை எதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சூரனை பிளந்து இருப்பார்கள். அதனால் தென்னிந்தியாவில் சூரனை வைத்து...தீபாவளிக்கான கதை நரகாசூரனை மையப்படுத்தி உள்ளது ( நரன் - என்றால் மனிதன் + அசூரன் - சூராபானம் குடிக்காதவன்; அதர்வண வேத விளக்கப்படி சுரர் என்றால் சுராபானம் என்ற பானத்தை குடிப்பவர்கள், அசுரர்கள் அதற்கு மாற்றானவர்கள் அல்லது அது கிடைக்கப் பெறாதவர்கள், கிறித்துவ தேவலயங்களில் அப்பம் கிடைக்காத கிறித்துவரல்லாதவர்கள் போன்றவர்கள், சுராபானம் குடிக்காத மனிதனே அசுரன் எனப்பட்டன் ) . நரகாசூரனை கிருஷ்ணனின் மனைவி கொன்ற நிகழ்ச்சியின் வெற்றியாக தீபாவளி வந்ததாம். ஆனால் வட இந்தியாவில் சூரன் கதைகள் அதிகமாக இருந்ததில்லை. மிகவும் பேசப்பட்டது மகாபாரதமும், இராமயணமும் தான். எனவே இராமயணத்தில் இராமணால் இராவனன் வதம் செய்யப்பட்டதன் நினைவாக தீபாவளி கொண்டாடுகிறார்கள். வட இந்தியர்களைப் பொருத்தவரையில் இராவண வதமே தீபாவளி ( இராவண்ண - மனிதர்கள் மனதில் உள்ள இரவின் வண்ணமான கருமை நீங்கி விடியல் தோன்றியதற்காக - என்று சொன்னால் தத்துவ விளக்கமாக இருக்கும்)

தீபாவளி என்ற சொல்லை வைத்துப் பார்க்கும் போது ஒளி ஏற்றும் நாள் அதாவது துன்பம் என்னும் இருளில் இருந்து நீங்கி மகிழ்ச்சி பொங்கவைக்க ஓவ்வொருவரும் தம்மை தயார்படுத்திக் கொள்வதற்கென ஒரு அடையாள பண்டிகையாக தீபாவளி தோன்றி இருக்கிறது என்று சொன்னால் பொருத்தமாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

*********

பெரியார் எவ்வளவோ சொல்லியும் தீபாவளி கொண்டாட்டங்களையும், கதைகளையும் அழிக்க முடியவில்லை என்று சில பற்றாளர்கள் ஆதங்கப்படுகிறார்கள், எதிர்பாளர்கள் கொக்கறிக்கிறார்கள். நல்லது. தீபாவளி என்பது அடிமைத் திருவிழா அல்ல. அதைக் கொண்டாடுபவர்கள் அதனால் நட்டம் அடைந்தது போல் தெரியவில்லை. கூலி வேலை செய்பவருக்கும் அவரது முதலாளி வேட்டி / புடவை எடுத்துக் கொடுத்து மகிழவைக்கிறார். ஏழைக்கு இதெல்லாம் இலவசமாக கிடைக்கும் போது தீபாவளியை எப்படி துறப்பார்கள் ? அதுபோல் நடுத்தரவர்கம், அரசாங்க ஊழியர்கள் அனைவருக்கும் தீபாவளி என்றாலே ஊக்க தொகை ( போனஸ்) கிடைப்பது தான் நினைவு வரும். பின்பு எப்படி அவர்கள் தீபாவளியை மறப்பார்கள் ? வியாபாரிகளுக்கு வியாபாரம் பெருகுகிறது. தீபாவளி மறக்கப்படாமல் இருப்பதற்கு இதெல்லாம் காரணமேயன்றி இராவண வதமா ? இல்லை நரகாசூர வதமா ? என்றெல்லாம் ஆராய்சியில் இவர்கள் யாரும் செல்வது இல்லை. யார் யாரை வதம் செய்தார்கள் என்ற கேள்விக்கெல்லாம் வியாபாரிகளுக்கோ, ஏழைகளுக்கோ எதுவும் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் வழக்கமான கொண்டாட்டங்கள் எதுவும் பாதிப்படையப் போவதில்லை. எனவே தீபாவளி கொண்டாட்டம் களைகட்டுவதற்கு பெரியாரின் பேச்சு எடுபடவில்லை என்று சொன்னால் அதுசரியல்ல.. திபாவளிக்கான காரணங்களை தெரிந்துதான் திபாவளி கொண்டாடுகிறார்கள் என்றும் சொல்ல முடியாது. அது ஒரு பண்டிகை வரவும், மகிழ்ச்சியும் இருக்கிறது அவ்வளவுதான்.

பொதுவாகவே பெரியாரிசம், மார்கிசம் போன்ற முற்போக்கு கொள்கை எல்லாம் தேவைமிக்கதன் (அத்யாவசிய) காரணமாகவே எழுகிறது அல்லது தோன்றுகிறது என்றும் சொல்லலாம். அதன்பிறகு கொள்கை தாக்கம் என்பது எப்போதும் ஓரளவு மட்டுமே இருக்கும். ஆனால் காலப்போக்கில் அதன் வீரியத்துக்கான தேவை இல்லாது போகும் காரணம் அவை பழைய தாழ்வு நிலை உயர்ந்து சமச்சீரடைய உதவுமேயன்றி ஒரேடியாக தலைகீழாக புரட்டிப் போட்டுவிடாது. சீனப்புரட்சியில் நடந்த தலைகீழ் மாற்றம் வெகுநாட்கள் நீடிக்கவில்லை. பெரியாரின் தேவை தற்பொழுது கூட தேவையாகத்தான் இருக்கிறது ஆனால் அதே அளவு வீரியத்திற்கு தற்பொழுது காரணங்கள் குறைந்து போய் இருக்கிறது. காரணம் பெரியாரின் தாக்கம் ஏற்கனவே ஓரளவுக்கு ஏற்றத்தாழ்வுகளை சமச்சீர் செய்து வெற்றி பெற்றுவிட்டது.


இது போல் பெரியார் எதிர்ப்பு குழு (கோஷ்டி) பெரியாருக்கு பிறகு கோவில்களும், அங்கு வரும் கூட்டம் பெருகிவிட்டதாகவும், பெரியார் கொள்கை நீர்த்துப் போய்விட்டதாகவும் வலிய வலியுருத்து கொக்கறிக்கிறார்கள். ஏன் பெருகிவிட்டது ? காரணத்தை ஆராய்ந்தால் முன்பு கோவிலுக்கு வெளியே நிறுத்தப்பட்ட பெரும்பாண்மை சமூகமான தலித் பெருங்குடிமக்கள் இன்று கோவிலுக்குள் உள்ளே சென்று வழிபடும் நிலைக்கு வந்து, வழிபாட்டு உரிமையுடன் சென்றுவருகிறார்கள். அதனால் கோவில்களில் கூட்டம் மிக்கவையாக உள்ளது. அவர்களின் வருகையே புதிய சிறிய கோவில்களின் தேவையாகவும் உள்ளது. அவர்களை கோவிலுக்குள் அனுப்பியது, உரிமையை பெற்றுத்தர அதற்காக போராடி வெற்றிகண்டுள்ளது... எல்லாமே பெரியாரின் அவர் கொள்கையின் வெற்றிதானே ?

தீபாவளி கொண்டாட்டங்களினால் எல்லோருக்கும் மகிழ்வென்றால் புராணங்களை மறந்துவிட்டு கொண்டாடுவதில் தவறே இல்லை.




அன்புடன்,

கோவி.கண்ணன்

23 அக்டோபர், 2007

இந்தியர்களுக்கு இனவெறி ?

இந்தியர்களுக்கு இனவெறி என்று வெள்ளைக்காரர்கள் சொல்கிறார்கள். அதுவும் ஒரு கிரிகெட் ஆடுகளத்தில் நடந்த சிறு நிகழ்வை மையப்படுத்தி இந்தியர்களுக்கு இனச்சாயம் பூச அதனை அனைத்துலக (சர்வதேச) அரங்கமாக மாற்றி இந்தியர்கள் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.

வரலாற்று வழியாக பார்த்தாலும், அதாவது இஸ்லாமிய படையடுப்பு, போர்த்துகீசிய, பிரஞ்சு மற்றும் இங்கிலாந்து வெள்ளையர் இன்னும் ஏனைய வந்தேறிகள் இந்திய மண்ணில் நுழைந்தபோது இந்தியர்களுக்கு இனவெறி என்பது இருந்திருந்தால் புட்டத்தில் சூடு போட்டு வந்த வழியாக வெளியேற துறத்தி இருப்பர். இந்தியன் என்றால் அவன் சாதியால் /மதத்தால் தனக்குள்ளே பிளவு பட்டவனேயன்றி உலக அளவில் தான் இந்தியன் என்பதை அடையாளப்படுத்தி எந்த நாட்டையும் அடிமை படுத்தி வைத்திருந்ததற்கான வரலாறுகள் என எதுவும் இதுவரை இருந்ததே இல்லை.

தங்களை உலக உத்தமர்கள் என்று காட்டிக் கொள்ளும் வெள்ளையர்கள் கோலோச்சும் நாட்டில் தான் நிறத்தினால் பிற இனங்களை பிரித்து பார்த்து உயர்வு தாழ்வு பேசும் நிலை இன்றும் தொடரவே செய்கிறது. ஜப்பானியர்களையும், சீனர்களையும் 'மஞ்சள் பிசாசுகள்' என்றே வெள்ளையர் அழைப்பார்கள். 'இந்தியன் இங்க்' என்று பேனா மையுக்கும் இந்தியர்களின் கருப்பு நிறத்தை குறிப்பிட்டு கேவலப்படுத்தும் உத்தியெல்லாம் வெள்ளைக்காரர்களுக்கே உரியது. இவர்களைப் பார்த்தே சீனர்கள் கூட இந்தியரின் உழைப்பை கேள்விக்குறி ஆக்க முடியாது என்று உணர்ந்தே இந்தியர்களை 'கருப்பு' என்று சொல்லித் தூற்றுவது ஆசிய நாடுகளில் நடக்கும் கேவலக் கூத்துகள். சிறிய நாடான இலங்கையில் இருக்கும் சிங்கள இனவெறிக்கு இந்தியன் விழித்து இருந்தால் என்றோ அங்கு அமைதி நிலையும், நீதியும் திரும்பி இருக்கும். இந்தியர் என்பதால் பெருமை அடைகிறேன் என்று சுதந்திர நாள் கொடியேற்றத்திற்கு பிறகு தூதரக (எம்பஸி) ஆட்களும் அன்றே மறந்து போய்விடுகிறார்கள்

இந்திய கிரிக்கெட் அணியினர் ஆஸ்திரேலியாவில் ஆடும் போதெல்லாம் இனத்தைச் சொல்லி வசையாடும் ஆஸ்திரேலிய வெள்ளையர் நிறவெறி ரசிகர்களை வைத்துக் ஆஸ்திரேலிய அணி செய்வது சாத்தான் வேதம் ஓதும் கதையாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் ஆசியர்களுக்கு எதிராக நடக்கும் கலவரங்கள் எப்போதும் இருப்பவை. அண்மையில் இங்கிலாந்தில் ஷில்பா ஷெட்டி இந்தியர் என்பதால் இனவெறியால் கேவலப்படுத்தி அதற்காக சம்பந்தப்பட்ட பெண் மன்னிப்பு கேட்டதையெல்லாம் உலகமே பார்த்து கண்டனம் தெரிவித்தது.

இந்தியர்களுக்கு இனவெறி இருந்தால் எந்த ஒரு இந்தியனும், வெளிநாட்டில் வாழும் எந்த இந்தியனும், அமெரிக்காவைப் பார், 'பாலும் தேனும் நயக்கராவில் வழிகிறது' என்று பெருமை பேசி இந்தியா ஒரு தரித்திர நாடு என்று சொல்லிக் காட்டிக் கொண்டிருக்க மாட்டான். ஆனால் நிலமை அப்படியா ? ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் குடியேறும் இந்தியர்கள் அந்த நாடுகெளெல்லாம் சொர்கலோகம் போல வர்ணித்து , இந்தியா எதோ நரகம் போல வெளிப்படையாகவே பெருமை பேசி திரி(க்)கின்றனர். இந்தியாவில் உள்ள இந்தியர்களுக்குமே வெளிநாடுகளை தங்கள் கனவு தேசமாக நினைத்து பிறந்த நாட்டை இழிவாகவே கருதுகின்றனர். எல்லா நாடுகளிலுமே மக்கள் பிரச்சனைகள் இருக்கிறது, வெளிநாட்டில் குடியேறி அங்கேயே தலைமுறைகளாக வாழும் சீனர்கள் தங்கள் தாய்நாடான சீன நாட்டை விட்டுக் கொடுத்து பேசி பார்த்தே இல்லை. ஏன்... மியன்மர் நாட்டினர்கள் கூட தங்கள் நாடு இயற்கை வளம் செறிந்தநாடு என்று போற்றுகின்றனர். ஆப்பிரிக்கர்கள் கூட தங்கள் நாட்டில் இந்தியர், மற்றும் பலவெளிநாட்டினர் இடங்களை வாங்கிப் போட்டதை சூறையாடினர். இந்தியர்களுக்கு இனவெறி இருந்திருந்தால் இந்தியாவின் தலையான ஜம்முவை பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் தாரை வார்த்திருக்க மாட்டோம். வெளிநாட்டிற்கு செல்லாத எந்த இந்தியருக்கும் இனவெறி என்ற சொல்லின் பொருள் தவிர்த்து நேரடி அனுபவம் கிடையாது.

இந்தியர்களுக்கு இனவெறி என்ற உணர்வு இருந்தால் இந்தியா என்றோ முன்னேறி இருக்கும். ஆனால் அது பிற இனமக்களைக் கெடுத்த வாழ்வாகவே இருக்கும். அதுபோல் நடந்ததே இல்லை. இந்தியர்களுக்கு இருப்பதெல்லாம் சாதிவெறி மட்டுமே, அதுவும் உயர்வு / தாழ்வு என்று பிறப்பின் அடிப்படையில் பேதம் பிரித்து வைத்திருப்பதால் மட்டுமே. வெளி உலகை பார்த்து இனவெறி வேண்டாம் ஆனால் கொஞ்சமாவது இந்தியர்களுக்கு இந்தியன் அதற்காக பெருமை படுகிறேன் என்ற உணர்வு இருக்க வேண்டும்.







அன்புடன்,

கோவி.கண்ணன்


தொடர்புடைய சுட்டிகள் !
இதுக்குப் பேரு இனவெறியா? - இலவசகொத்தனார்
விளங்கா மண்டையனால் இந்திய ரசிகர்கள் மேல் நடவடிக்கையா...!! - இரத்தம் வர வர அறுத்தவர்

அருண் விஜய் யாருங்கோ ?

செண்டி'மண்டு' த்தனம்ங்களுக்கு பெயர்'போன' திரையுலகில் பழைய முகம் ஒன்று புதிய பெயரை ஒட்டவைத்துக் கொண்டு வந்திருக்கிறார். விஜய குமாரின் மகன் அருண் குமார் என்பவர் தான் அவர். இன்னும் பெயர் பேசப்படவில்லை என்பதால் விஜயகுமார் மகன் என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. சென்னையில் ஆரம்பகால விஜய் படங்கள் ஒன்றிரண்டை பாத்து(தொலைந்த்)திருக்கிறேன். அதில் விஜய் திரையில் வரும் போது சென்னை லோக்கல் பார்டிகள் 'சந்திரசேகர் புள்ள' என்று அடையாளப்படுத்தும். இப்போது இயக்குனர் சந்திரசேகரை 'விஜய் அப்பா வருகிறார்' என்கிறார்கள்.

ஊரில் உருப்படாமல் சுற்றிக் கொண்டிருக்கும் ஊர் சுற்றி வாலிபர்களின் சாதகத்தை எடுத்துக் கொண்டு அவர்களுடைய பெற்றோர்கள் வசதிக்கு ஏற்றவாரு கிளி சோசியம் முதல் நம்பூதிரி வரை பார்க்கச் செல்வவர்கள். சோசியகாரர்கள் துட்டை கரந்ததற்கு பரிகாரமாக, எதாவது கோவிலுக்கு பரிகாரம் செய்யச் சொல்லுவார்கள். இதுவே எண்ணியல் சோதிடனாக இருந்தால் 'கார்த்திக்' என்ற பெயரில் 'கார்' என்பதை அழுத்தமாக கூப்பிட்டு பலர் உச்சரிப்பதால் உன் வாழ்கை விபத்தாகவே இருக்கிறது. எனவே கார்த்திக் என்ற பெயரில் சிறிது மாற்றம் செய்து 'கர்திக்' அல்லது 'கருதிக்' அல்லது 'காத்திக்' என்று மாற்றிக் கொண்டால் உன் வாழ்க்கை வி'மானம் (போல் காற்றில் ?) பறக்கும் என்று சொல்வார்கள். கேட்பவன் கேணையனாக இருந்தால் மண்டையை ஆட்டிக் கொண்டு பெயரையும் கெசட்டில் இருந்தும் மாற்றிக் கொள்வான். எனது நண்பர் ஒருவர் எண் கனித சோதிடத்தில் நம்பிக்கை உடையவர், தனது மகனுக்கு பெயர் வைக்க சோதிடரை பார்த்தார். 'உங்க பையன் பிறந்த நேரத்திற்கு சித்தார்த் என்ற பெயர் பொருத்தமானது, பேரும் புகழும் அடைவான். இருந்தாலும் சித்தார்த் என்ற புத்தர் சிறுவயதில் இல்லறத்தை துறந்தது போல் ஆகிவிடலாம் எனவே 'சிதார்த்' என்று வைத்துக் கொள்ளலாம் என்றாராம். எனது நண்பரும் தாம் பெற்ற பிள்ளைக்கு சோசியகாரனால் கொலை செய்யப்பட்ட 'சிதார்த்' என்ற பெயரை வைத்திருக்கிறார்.

திரையுலகில் தொடர்ச்சியாக படங்கள் பாதாளத்துக்கு போகும் போது அதில் நடிக்கும் கதைநாயகர்களுக்கு தம் பெயரில் 'டவுட்' வந்துவிடுகிறது. உடனே சோதிடத்தால் மாற்றிக் கொள்கிறார்கள். டி.ராஜேந்தர் என்ற பெயரில் கொடிகட்டி பறந்தவர், சரிவு ஏற்பட்டதன் காரணம் தன்னிடம் சரக்கு தீர்ந்துவிட்டது என்று உணராமல் 'விஜய' சேர்த்துக் கொண்டார். அதன் பிறகும் இவரது டப்பா(படம்) டான்சாடவே செய்கிறது. இன்னொமொரு முன்னாள் கடி(ச்சிரிப்பு?) நடிகர் பெயர் ஒய்ஜி மகேந்திரன். இவர் நடித்த சிறந்த படம் என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதுவுமே இருந்ததில்லை. இருந்தும் தான் திரையுலகில் மறைந்து போனதற்கு பெயரே காரணம் என்று முடிவு செய்து 'ஒய்ஜி மகேந்திரா' ஆனார். அதன் பிறகும் ஹேராம் மற்றும் பெரியார் படத்தில் சிறுவேடங்களில் தோன்றியதைத் தவிர்த்து ஒண்ணும் பெருசாக நடக்கவில்லை.

அந்த வரிசையில் சேர்ந்திருப்பவர் அருண் குமார். அவரது திரைப்படங்களைப் பார்த்தவரை இவரது வேலையை சரியாகவே செய்திருக்கிறார். நல்ல நடிகர். கதைக்களம் சரியில்லாததால் இயற்கை, பாண்டவர் பூமி தவிர்த்து அருண் பிரகாசிக்கவில்லை. தற்பொழுது பெயருக்கு பின்னொட்டு போட்டு 'அருண் விஜய்' ஆகி நடித்துவருகிறார். இவரது புதுப் பெயர் ராசி, இவரது நம்பிக்கையை உண்மையாக்கி வெற்றிதந்தால் மகிழ்ச்சிதான். வாழ்த்துகிறேன்.

இனி அவர் படங்கள் 'அருண் விஜய்' நடிக்கும் என்று டைட்டிலுடன் வரும், அருணும் விஜயும் சேர்ந்து நடித்த படம் என்று நினைத்துவிடாதீர்கள்.

22 அக்டோபர், 2007

திருமதி ஒரு வெகுமதி !

திருமணம் ஆகாத பெண்களை செல்வி என்று குறிப்பிடலாமா ? என்ற கேள்வியில் அவ்வாறு குறிப்பிடுவது நாகரீகம் இல்லாத செயல் என்றும், திருமணம் செய்து கொள்வதும், செய்யாதிருப்பதும் அவரவர் விருப்பம் ... இதில் அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக ஆணையோ, பெண்ணையோ திருமணம் ஆனாவரா ? என்று காட்ட சொல்லில் அடையாளப்படுத்தத் தேவை இல்லை என்று குறிப்பிட்டு ஒரு இடுகையை சமர்பித்திருந்தேன். பின்னூட்டங்கள் அனைத்தும் முன் மொழிவதாக ( பாசிடீவ் ரெஸ்பான்ஸ்) இருந்தது. அனைவருக்கும் நன்றி !

செல்வன், செல்வி என்று திருமணமானவரை அடையாளப்படுத்த வேண்டுமென்றால் அதற்கு விதிவிலக்கென வாஜ்பாய், அப்துல்கலாம் இன்னும் பல தலைவர்களை என எவரையும் விட்டுவிடமுடியாது.

செல்வன் வாஜ்பாய், செல்வன் அப்துல் கலாம் என்று அழைப்பதை அபத்தமாகவே நினைப்போம். பிறகு ஏன் ஜெயலலிதா, பாத்திமா பீவி போன்றரோரை செல்வி என்று அடையாளப்படுத்த வேண்டும் என்ற ஆதங்கம் எழுகிறது. ஒருவரை அடையாளப்படுத்தும் போது ஆண் / பெண் என்று பெயரளவில் அடையாளப்படுத்துவது சில நன்மை அளிக்கிறது. ஏனென்றால் ஆணுக்கும் பெண்ணுக்கும் மனது ஒன்றாகிலும், உருவம் வேறே. இன்னும் சமநிலையை நாம் எட்டவில்லை என்பதால் இவர் ஆண்/பெண் என்று அடையாளப்படுத்துவது தேவை. இல்லை என்றால் எப்படியும் பாலினம் என்ற பிரிவில் அந்த அடையாளம் தெரிந்துவிடப் போகிறது, பல இடங்களில் பாலி இனம் குறிப்பிடுவது தேவையாகவும் இருக்கிறது. சில பெயர்கள் பொதுவானவை முத்து, மாணிக்கம் இன்னும் சில பெயர்கள் ஆணா ? பெண்ணா ?
என்று பெயரைக் கேட்டுச் சொல்வது மிக்க கடினம். அதாவது பெயருக்கு முன்னால் திரு/திருமதி/செல்வி/செல்வன் ஆகியவை வயதைக் குறித்ததாக இருப்பதே சிறப்பு, அதைத் தவிர்த்து திருமணம் ஆனவரா என்பதைக் குறிக்க வேண்டுமென்பது தேவை என்றால் ஆணுக்கும் அவ்வாறு குறிப்பிடவேண்டும் நடைமுறையில் 30 வயதை கடந்த ஆண்களுக்கு அவ்வாறு இல்லை. ஆனால் பெண்களை வலியவே அடையாளப்படுத்துகின்றனர்.

செல்வி / செல்வன் என்ற அடையாளம் திருமணம் ஆகாத இளையோர் தவிர்த்து ஏனையோருக்கு தேவை இல்லை என்று அனைவரும் பரிந்துரைக்க வேண்டும். அப்படியும் செல்வி என்ற அடையாளத்தை ஜெயலலிதா போன்றவர்கள் விரும்பினால் அது அவர்கள் விருப்பம், மதிக்கலாம், அப்படி அழைக்கலாம். விரும்பமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

பேரிளம் பெண்கள் மற்றும் பதின்மவயதை (டீன் ஏஜ்) கடந்த பெண்களை பொதுவாக திருமதி என்றே அழைக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர். திரு + மதி > திரு என்பது அடைமொழி உயர்த்திச் சொல்லும் பொது அடையாளப் பெயர் (பகுதி), மதி என்பது பெண்பால் விகுதி. திருமதி - இது திருமணம் ஆனவரா ? இல்லை ? என்ற பொருளை எங்கேயும் சொல்லவில்லை. எனவே மேற்குறிப்பிட்ட பெண்களை திருமதி என்று அழைப்பதில் எந்த தவறும் இல்லை என்ற முடிவுக்கு வருகிறேன்.

இதுபற்றி நற்கருத்து பகிர்ந்தோர் :


லக்ஷ்மி said...
நல்ல பதிவு.

PPattian : புபட்டியன் said...
ஆம். ஆங்கிலத்தில் கூட Miss., Mrs. இரண்டுக்கும் சேர்த்து Ms. என்பது இப்போது பயன்படுத்தப் படுகிறது.

Mr = திரு
Ms = திருவாட்டி

சரிதான் என்று தோணுகிறது.

கையேடு said...
முதல் பின்னூட்டம் குறிப்பிடுவதைப் போல தலைப்பைப் பார்த்து ஏமாற்றத்துடன் துவங்கினேன் - ஏமாற்றம் பொய்த்துப் போன நிறைவோடு சென்றேன்.

துளசி கோபால் said...
நீங்க சொல்வது முற்றிலும் சரிதான் ஜிகே.

செல்வியும் செல்வனும் தேவையில்லாத அடைமொழிகள்தான்.

இன்னும் சொல்லப்போனால் திருமதி,திருவாட்டி எல்லாம் கூட வேணாம். அம்மா, ஐயாகூட என்னத்துக்கு? பேசாம பெயரின் பின்னால் 'அவர்கள்' என்ற சொல்லை அனைவருக்கும் பொதுவாகப் பயன்படுத்தலாம்.

பொண்ணு கல்யாணம் ஆனவளா இல்லை ஆகாதவளான்னு தெரிஞ்சு என்ன ஆகப்போகுது?

குமரன் (Kumaran) said...
Good Point.

ஜமாலன் said...

பிரச்சனையை பெண்ணிய நோக்கில் அனுகியிருப்பதுது அருமை. பொதுவாக பெண் நண்பர்கள நண்பர் அல்லது தோழர் என்ற அழைப்பதே எனது வழக்கம். திருமதி, திரு பொன்றவை எல்லாம்... பாலின வேறுபாட்டை அடிக்கடி நினைவூட்டவும் வேறுபடுத்தி காட்டவும் ஆன சொற்கள். இது ஒரு ஆணிய அரசியல்தான்.

நன்றி.

ஜிராகவன் said... ...
முதற்கண் திருமதி என்ற சொல்லை திருமணமான பெண்களுக்கு மட்டுந்தான் பயன்படுத்த வேண்டும் என்று எதுவும் சட்டம் இருக்கிறதா? இலக்கணம் இருக்கிறதா? மிஸ்டர் மிஸல்ல இருந்து கடன் வாங்குனதுதான. அப்புறமென்ன...எத்தனை தமிழ் இலக்கியங்கள்ள திருமதியைக் கல்யணாமான பெண்களுக்குப் பயன்படுத்தியிருக்காங்க?

பேரைப் பாத்ததும் அவங்களுக்குக் கல்யாணம் ஆயிருச்சான்னு கண்டிப்பாத் தெரியனுமா? தெரியலைன்னா ஒலகம் இடிஞ்சிருமா?

பேசாம ஆண்ணா திரு...பெண்ணா திருமதி.... இளைஞர்களாக இருந்தா செல்வன் செல்வி. அத்தோட முடிச்சிட்டுப் போய்க்கிட்டேயிருக்கனும். அதுதான் சரீன்னு தோணுது.





அனைவருக்கும் நன்றி ! நான் இனி ஜெ. வை குறிப்பிடுவதென்றால் திருமதி ஜெயலலிதா என்றே குறிப்பிடுவேன். எவரும் தவறு என்று தகுந்த காரணங்களை சொன்னால் மாற்றிக் கொள்வேன். இருந்தாலும் அதை மறுக்கும் உரிமை தொடர்புடையவர்களுக்கே இருக்கிறது !


20 அக்டோபர், 2007

விதிப்பயன் என்ற புண்ணாக்கு கான்செப்ட் !

உடுக்க உடையும், படுக்க இடமும் இருந்தால் 'எல்லாம் அவன் செயல்' என்று நினைத்து புலகாங்கிதம் அடையலாம். ஏனென்றால் பாதிப்பு என்றோ, பாதிப்பின் தன்மை என்றோ எதையும் அறிந்தில்லாத மனநிலையில் கடவுள் தனக்கு அருமையான வாழ்கையை கொடுத்திருக்கிறார் என்று நினைக்கலாம். கடவுள் நம்பிக்கைகள் பூசை அறையுடனோ, அல்லது கோவில் கருவறையில் இருந்தால் எவருக்கும் எந்த இடற்பாடும் இல்லை. ஆனால் மதம் என்ற பெயரில் கொள்கைகளை வைத்துக் கொண்டு ஒரு தனிமனிதனின் வாழ்கையையும் முடிவு செய்யவோ, வலியுறுத்தவோ செய்தால் அவை கொள்கைகள் அல்ல கொள்ளைகள். எந்த மதத்திலும் அதில் ஆளுமை உடையவர்களுக்கு மட்டும் ஆதாயமேயன்றி அதை பின்பற்றுபவர்களுக்கு என்று பெரிதாக பலனும் இல்லை. நம்பிக்கைகளால் பிறரை நாசம் செய்தவையே மிக்கவை.

நம்பிக்கைகள் வெறும் நம்பிக்கையாக மட்டுமே இருக்க வேண்டும், ஏழை ஏழையாக இருப்பதற்கும், ஒருவன் பள்ளனாக பிறப்பதற்கும், பார்பனாக பிறப்பதற்கும் விதிப்பயன் என்று துணிந்து சொல்கிறார்கள். அதாவது தான் பள்ளனாக பிறந்தது விதிப்பயன் என்று நினைத்து நன்கு முயற்சித்து பார்பனராக அடுத்த பிறவியில் பிறக்கவேண்டுமாம். அத்துடன் பிறவி சுழல் முடிவுக்கு வருகிறதாம். என்ன மடத்தனமான ஒரு கான்செப்ட் பாருங்கள். இனங்கள் என்பவை அந்தந்த நாட்டு சூழலுக்கு ஏற்ப உருவான நிறம் தோற்றம் குறித்ததே, ஆப்ரிக்க இனத்தினர் கருப்பாக இருப்பர், ஐரோப்பியர் வெள்ளையாக இருப்பர், சீனர்கள், ஜப்பானியர்கள் மஞ்சளாக இருப்பர். இது இயற்கை. இதில் உயர்வு தாழ்வு எங்கிருந்து வந்தது ? இதில் ஏன் ஒருவன் பள்ளனாக ( சூத்திரனாக) பிறப்பது இழிந்தது போன்றும் அவர் தம் இழிந்த நிலையில் இருப்பதை உணர்ந்து முயற்சித்து பார்பனாக பிறக்க வேண்டும் என்று சொல்வது பித்தலாட்டம் அன்றி வேறென்ன ? பார்பன் உயர்ந்த பிறவி என்பதை மதம் என்ற புண்ணாக்கை நம்புவதால் தானே ஏற்கவேண்டி இருக்கிறது ? இந்த அறிவற்ற கான்செப்டுகளை ஒதுக்கித்தள்ள மதத்தின் மீது நம்பிக்கை உடையவர்கள் முன்வரவேண்டும். இல்லை என்றால் விதி புண்ணாக்கு தத்துவங்களை சொல்லி சொல்லி 'நீ தாழ்ந்தவனாக பிறந்தது கடவுள் செயல், விதிப்பயன் என்று சொல்லி சிந்திக்க விடாமல் செய்துவிடுவர். உழைத்தால் சோறு, இதில் உயர்ந்தவன் என்ன ? தாழ்ந்தவர் என்ன ? கோவில் பிராசதத்தை உண்டவர் எத்தகையை தெய்வீக பிறவி என்றாலும் அடுத்த நாள் கோவில் பிராசதம் அவரிடமிருந்து மலமாகத்தான் வெளியேறும்.

ஜீவாவின் இடுகையில் ஒரு பின்னூட்டம் போட்டேன், ஒரு பெண் பல ஆண்களால் பலாத்காரம் செய்யப்பட்டு படும் துன்பத்தை அனுபவிக்கும் போது அது அவளின் விதிப்பயன் என்று சொல்வதற்கு துணிவு இருக்கிறதா ?

கர்மா, விதிப்பயன் இன்னும் பிற கருமங்கள் அனைத்தும் பூசை அறைக்குள் இருந்து படிக்க வேண்டியவை. அதை வைத்துக் கொண்டு அட்டூழியங்களை நியாப்படுத்துவது என்பது ஏற்புடையது அல்ல. இன்றைய பார்பனர்களின் நிலைக்கும் (டெல்லியில் கழிவரையில் வேலைபார்க்கிறார்களாம், கை ரிக்ஷா இழுக்கிறார்களாம்) , பல்வேறு தரப்பினர்கள் அவர்களை குற்றம் சொல்வதையும், அவர்கள் மீதான கருத்தியல் ரீதியில் ஆன தாக்குதல்களையும், அரசாங்கம் அவர்களை ஓபிசியில் சேர்த்ததையும் ஏன் கருமம், விதிப்பயன் மற்றும் கடவுளின் செயல் என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை ? இதற்கு பதில் தெரியவில்லை என்றால் பதில் சொல்வது தான் இடுகையின் தலைப்பு !

தொடர்புடைய சுட்டிகள் :

1. மனு ஸ்மிருதியின் பத்தாவது சருக்கத்தில் உள்ள அறுபத்தைந்தாவது செய்யுள் ஒரு சூத்திரன் பிராமணனின் நிலைக்கு உயர்வதும் அதேபோல் ஒரு பிராமணன் சூத்திரனின் நிலைக்குத் தாழ்வதும் சாத்தியம் என்று சொல்கிறது. சத்திரியர், வைசியர் விஷயத்திலும் இது பொருந் தும் என்று அது மேலும் விளக்குகிறது. இதிலிரு ந்து பிறவியின் பயனாக வர்ணங்கள் அமைவதில்லை, குணநலன்களின் அடிப்படையில்தான் அவை நிர்ணயிக்கப்படுகின்றன என்று மனு ஸ்மிருதி வலியுறுத்துவதாகக் கொள்ளமுடியும்.

2. தன் கர்மாவுக்கான பயன்களை அறுவடை செய்தபின், இந்த உலகுக்கு திரும்புகிறது. எப்படி கர்ம வினைகள் ஒருவருடைய செயலின் தேர்வின் அடிப்படையில் அமைகிறதோ, அதுபோலவே, அதனாலேயே, மறுபிறவியும் அவரவர் தேர்ந்தெடுப்பதுதான்

Anonymous said...
ஒரு சூத்திரன் தன் சூத்திர கடமையை செவ்வனே செய்தால் அடுத்த பிறவியில் பிராமனன் என்னும் உயர்ந்த குலத்தில் பார்பனாக பிறக்க முடியுமா ?

-----------

ஜீவா (Jeeva Venkataraman) said...
மற்றொரு அனானி நண்பரிடம் இருந்து வந்திருக்கும் மறுமொழி -
மட்டுறுத்தப்பட்டபின்:

அய்யா,

முடியும்,தாரளமாக முடியும். ****...*** பாவங்களையும் செய்யாமல் இருந்தால் கண்டிப்பாக முடியும்.முயன்று பாருங்க.


11:08 PM

19 அக்டோபர், 2007

சூடான இடுகைகளில் ஒரே குப்பை !





சூடான இடுகைகளில் இருந்த ஒரே ஒரு குப்பை இதுதான் !
:)


18 அக்டோபர், 2007

'செல்வி' ஜெயலலிதாவிற்கு கண்டனம் !

ஜெயலலிதா செல்வியா ? அல்லது அம்மாவா ?
என்று நண்பர் அதிரைக்காரன் கேட்டு இருக்கிறார். ஜெயலிதாவின் அரசியல் தவிர்த்து, அவர் ஒரு அரசியல் கட்சித்தலைவர், இருமுறை முதல்வராக இருந்த முன்னாள் முதல்வர் என அவர் மீதான மதிப்பு எனக்கு எப்போதும் உண்டு.

முதிய பெண்களை திருமணம் ஆனவர் என்றால் 'திருமதி' என்று ஒரு அடைமொழி பெயருடன் அழைப்பதும், திருமணம் ஆகாதவராக தெரிந்தால் 'செல்வி' அடைமொழிப் பெயரில் அழைப்பதும் ஆணாதிக்க செயலாகவே தெரிகிறது. ஆண்களில் வயது வந்தவர்களாக இருந்தால் திருமணம் ஆனவராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்களது பெயருக்கு முன்பு மதிப்பின் அடையாளச் சொல்லாக 'திரு' சேர்க்கிறோம். ஆனால் மரியாதைக்காக என்று (பெயரளவில் ?)பெண்ணுக்கு கொடுக்கும் அடைமொழிச் சொல் என்பது ... அவருக்கு கொடுக்கும் மரியாதைக்காக அழைக்கப்படும் என்பதைவிட அவர் திருமணம் ஆனவரா ? இல்லையா ? என்பதை சொல்வதை குறிக்கும் குறிசொல்லாகவே அமைந்திருக்கிறது. சன் டிவி ஜெயலலிதாவை 'செல்வி' ஜெயலலிதா என்று சற்று அழுத்தமாகவே பலுக்குவது போன்று எனக்குதெரியும். அதாவது திருமணம் ஆகாதவருக்கு இவ்வளவுதான் மரியாதை இருக்கிறது என்பது போன்று சொல்வதாக எனக்கு தோன்றியது. அவர்கள் அந்த பொருளில் சொல்கிறார்கள் என்று சொல்லவில்லை. ஜெய டிவியிலும் 'செல்வி ஜெயலலிதா ?' என்று தானே சொல்லுவார்கள் ? ஆனால் என்னைப் போலவே பலருக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மற்றும் திருமணம் ஆகாத முதிய பெண்களை 'செல்வி' என்று அழைக்கப்படுவதில் உடன்பாடு இல்லை.

கன்னிமேரியம்மா, கன்யாகுமரியம்மா என்று அம்மா சேர்த்து தான் கடவுளையே குறிப்பிடுகிறோம். செல்வி கன்யாகுமரி என்று சொல்வதில்லை ... அன்னைத் தெரசாவை ... செல்வி தெரசா என்று அழைத்தால் அபத்தமாகத்தானே இருக்க்கும் ? அவ்வையார்களை 'கவிச்செல்வி' என்று சொன்னால் அபத்தம் தானே ? திருமணம் ஆகாத பெண்கள் அவர்கள் விரும்பினால் 'அம்மா' என்று பெயருக்குப் பின்னால் சேர்த்துச் சொல்வதால் மரியாதையாக அழைப்பதில் உண்மையிலேயே மரியாதை இருப்பதாகத்தான் தெரிகிறது. செல்வி கன்யா குமரி அம்மன் என்று சொன்னால் இழுக்காகத்தானே இருக்கும். திருமணம் செய்து கொள்வதும் செய்து கொள்ளாததும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால் அதை சொல்லில் அடையாளப்படுத்துவதென்பது அவர்களே விருப்பபட்டாளன்றி வலியுறுத்தி அழைப்பது என்பது புன்படுத்துவது போலத் தான், அதாவது திருமணம் செய்து கொள்பவர்கள் சமூக மதிப்பிற்கு (அந்தஸ்த்துக்கு) சொந்தக்காரர்கள் போலவும்... அதைச் செய்யாதவர்கள் சமூக மதிப்பிற்கு தேவையற்றவர்கள் போலவும் காட்டுவதாக நான் உணர்கிறேன்.

'திரு' என்ற சொல் ஒரு ஆணை திருமணம் ஆனவர் அல்லது ஆகாதவர் என்று காட்டாதபோது, பதின்ம (டீன் ஏஜ்) வயதைத் தாண்டிய பெண்களை ஏன் 'திருமதி' என்று அழைக்கக் கூடாது ? சிங்கையில் 'மாது' என்று பொதுவாக பெண்களை குறிக்க பயன்படுத்துவார்கள் அது போன்று 'திருவாட்டி' என்றும் சொல்லுவார்கள் ஆனால் அப்படி குறிக்கப்படும் பெண்கள் திருமணம் ஆனவர்கள் / ஆகாதவர்கள் என்ற பொருளில் குறிக்காது.

பதின்ம வயது பெண்களை 'செல்வி' என்றும் ஆண்களை 'செல்வன்' குறிப்பதும் சரி, அதே போன்று திருமண அழைப்பிதழிலும் குறிப்பிடுவது சரி. ஆனால் திருமணம் ஆகாதவர் என்பதல் செல்வன் என்ற அடைமொழியில் எந்த ஒரு 30 வயதுக்கு மேற்பட்ட ஆணையும் யாரும் சொல்லுவதில்லை. ஆனால் பெண்ணுக்க்கு மட்டும் ஏன் இந்த அநீதி?

ஆங்கிலத்தில் 'மேடம்' என்று பொதுவாகவே சொல்கிறார்கள். அது போல் பெண்களை ஏன் 'திருமதி' அல்லது 'திருவாட்டி' என்றோ சொல்லக் கூடாது ? சிங்கை செய்திகளில் திருவாட்டி ஜெயலலிதா, திருவாட்டி மாயாவதி என்று தான் சொல்கிறார்கள் !


ஊடகங்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை 'செல்வி ஜெயலலிதா' என்று தொடர்ந்து அழைக்கப்படுவதில் உடன்படுகிறீர்களா ?

குப்பை !






சூடான இடுகைக்கு எதாவது எழுத முடியுமா ? என்று முயற்சித்தேன் எதுவும் தோன்றவில்லை ! ஏமாற்றத்திற்கு மன்னிக்கவும் !
:(

17 அக்டோபர், 2007

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தன்னிச்சை செயல்பாடுகளுக்கு எதிரான கண்டன குரல்கள் !

நீதிபதிகள் அதிகார மையத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல, சட்டவழி தீர்ப்பு சொல்லும் அலுவலர்களே ... என்று நீதிபதிகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா ? என்று ஒரு இடுகையை சென்ற வாரத்தில் எழுதி இருந்தேன். அந்த கருத்தைப் போன்றே தினமணியிலும் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது.



உயரத்தை உணர்ந்து செயல்படுவதே உசிதம்!

உ .ரா. வரதராசன்

உங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே!


ஐக்கிய முன்னணி ஆட்சியில் பிரதமராக இருந்த தேவ கௌடா பதவி விலக நேரிட்டபோது, அடுத்த பிரதமர் யாரென்ற கேள்வி எழுந்தது; திமுக தலைவர் கருணாநிதியிடம், பத்திரிகையாளர்கள், "நீங்கள் ஏன் பிரதமராக முயற்சி செய்யக்கூடாது' என்று கேட்டனர். கருணாநிதியோ "என்னுடைய உயரம் எனக்குத் தெரியும்' என்று அர்த்தமுள்ள பதிலைச் சொன்னார்.

உயர் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் மட்டுமல்ல, உயர் பதவியில் அமர்பவர்களும், தங்களின் - தங்கள் பதவியின் உயரத்தை உணர்ந்து செயல்படுவது என்பது மிகமிக அவசியம். உச்ச நீதிமன்றத்தின் அண்மைக்காலச் செயல்பாடுகள் இதை மிகத் தெளிவாக உணர்த்துகின்றன.

பொதுப் பதவி எதுவாக இருப்பினும் அது மக்களின் நம்பிக்கைக்குரியதாக அமைய வேண்டும்; நீதித்துறைப் பதவிகளும் இந்தப் பொறுப்பாண்மைக்கு உட்பட்டவையே. இந்திய அரசியல் சட்டத்தின்படி, அரசு நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை இவை மூன்றுமே அவற்றுக்கான பொறுப்புகளைச் சுதந்திரமாக வகிக்க உரிமையுள்ளவை. ஆனால் இவை எல்லாமே அரசியல் சட்டத்துக்கு உட்பட்டவை. அந்த வகையில் நீதித்துறையும் அரசியல் சட்டத்துக்கு மேலான - அல்லது உயர்வான - ஒன்றல்ல.

ஆனால், வழக்கு விசாரணையின்போது, அண்மைக்காலங்களில் சில நீதிபதிகள் கூறியுள்ள கருத்துகள் இந்த வரம்பை மீறியதாகவே உணரப்படுவது கவலைக்குரிய ஒன்று.

தலைநகர் தில்லியில், அமைச்சர்கள், எம்.பி.க்கள் முதலானோர் குடியிருப்பதற்காக ஒதுக்கப்படும் வீடுகள் பலவற்றில், அவற்றைப் பெற்று அனுபவித்த நபர்கள் பதவிக்காலம் முடிந்த பின்னரும், காலவரையறையற்ற முறையில் தொடர்ந்து வசித்து வருவது தொடர்பான ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஒருவர் "அவருக்கு தில்லியில் என்ன வேலை? அவரைத் தூக்கி எறியுங்கள்' என்று கோபத்தைக் கக்கினார். அந்த "அவர்' ஒரு முன்னாள் மத்திய அமைச்சர்; அந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நேரத்தில் ஒரு மாநிலத்தின் ஆளுநர்! நீதிபதி ஒருவர், அவரைப் போன்ற உயர் பதவியில் இருந்த ஒருவரை, தூக்கியெறிய உத்தரவிடும் அளவிற்கு அலட்சியமாகக் கருதியது வரம்புக்கு உட்பட்டதுதானா?

இன்னொரு வழக்கு: மத்திய அரசின் பொறுப்பிலுள்ள மருத்துவக் கழகம் மூன்றாண்டுகளாகப் பட்டமளிப்பு விழா நடத்தவில்லை. பட்டம் பெற முடியாமல் அவதியுற்ற மாணவர்கள் நீதிமன்றத்தை நாடியபோது, நீதிமன்றம் பட்டமளிப்பு விழாவை நடத்தி முடிக்க ஒரு காலக்கெடு விதித்திருந்தால் போதுமானது. "24 மணி நேரத்துக்குள் பட்டப்படிப்புச் சான்றிதழ்களில் கையெழுத்திடுக' என்று மத்திய அமைச்சருக்கு உத்தரவிடும் அளவுக்கு நீதிபதி சென்றது சரியான நடைமுறையா?'

நிர்வாகத்தின் தவறுகளை, சட்டமன்ற - நாடாளுமன்றங்களின் அத்துமீறல்களை தயவுதாட்சயண்மின்றிக் கடுமையாகச் சாடும் நீதிமன்றங்கள், நீதித்துறையின் உயர் பதவி வகிப்பவர்களைப் பற்றிய பிரச்னைகள் எழும்போது அதே அளவுகோலைக் கடைப்பிடிப்பதில்லையே!

குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய - மாநில அமைச்சர்கள் போன்ற உயர் பதவிகளில் இருப்போருக்கு எதிராக "பிடி வாரண்ட்' பிறப்பித்த நகைப்புக்கிடமான செயல்பாட்டில் நீதித்துறையின் ஒரு பிரிவு இறங்கியது, சில ஆண்டுகளுக்கு முன் பரபரப்புச் செய்தியானது. அதைவிட அந்தப் "பிடி வாரண்டுகள்' விலை கொடுத்து வாங்கப்பட்டவை என்றும் தகவல் வெளியானதுதான் அதிர்ச்சியானது!

நீதித்துறையின் ஒரு பிரிவு இதுபோன்ற பேரத்தில் ஈடுபட்டதைப் படம்பிடித்து ஊடகம் ஒன்று வெளியிட்ட நிகழ்வில், தவறு பேரம் பேசியதில் அல்ல; ஊடகம் படம் பிடித்ததுதான் என்று நீதிமன்றம் சினங்கொண்டதையும் நாம் பார்த்தோம்!

நீதிபதி ஒருவர் நேர்மையற்ற முறையில் செயல்பட்டதாக, மும்பை நாளேடு ஒன்று குற்றஞ்சாட்டியதோடு, அதையொட்டிய பின்னணித் தகவல்களையும் சித்திரித்து வெளியிட்டது. அதற்காக நீதிமன்ற அவமதிப்புக் குற்றஞ்சாட்டப்பட்டு அந்த நாளேட்டின் பொறுப்பாளர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது மற்றொரு நிகழ்வு.

நீதிமன்றத்துக்கு வரும் வழியில் ஊர்வலம் ஒன்று குறுக்கிட்டதால் சில மணிநேரம் வழியில் தாமதிக்க நேரிட்ட நீதிபதி ஒருவர், கோல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் எவருமில்லாமலேயே தானாகவே வழக்கு ஒன்றை சிருஷ்டித்து, "வார (வேலை) நாள்கள் எதிலும் இனி ஊர்வலம் என்பதையே அனுமதிக்கக் கூடாது' என்று உத்தரவு போட்ட வானளாவிய அதிரடி அதிகாரத்தையும் நாடு கண்டது.

அண்மையில் வெளிச்சத்துக்கு வந்த இரண்டு வழக்குகளில் ஒன்று, 40 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டது; இன்னொன்று 50 ஆண்டுகள் நீடித்தது. இவற்றில் தீர்ப்பைச் சொன்ன நீதிபதிகள், "இத்தகைய காலதாமதங்கள் நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு இருக்க வேண்டிய நம்பிக்கையையே தகர்த்துவிடும்' என்று மிகச் சரியாகவே குறிப்பிட்டனர்.

வேறொரு நிகழ்வில் ஒரு நீதியரசர் வேதனையோடு சுட்டிக்காட்டிய விஷயம் - "நீதிமன்றங்கள் வழங்குகிற உத்தரவுகள் அமல்படுத்தப்படுவதில்லை; அதிலும் மீண்டும் அவமதிப்பு புகார் மனுவின் மீதோ அல்லது வேறுவகையிலோ நீதிமன்றம் சாட்டையை எடுக்க வேண்டியுள்ளது'' என்பதாகும்.

மேற்குறிப்பிட்ட இரண்டுமே, பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு அப்பாலும் தங்களுக்கு நியாயம் கிடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டியுள்ளது என்ற கசப்பான உண்மையைச் சுட்டுவனவே. இந்த முயற்சிகள் ஜனநாயகப்பூர்வமாக அமைய வேண்டும்; வன்முறை கலவாததாக இருக்க வேண்டும் என்பதில் நீதித்துறைக்கு மட்டுமன்றி, நாட்டு மக்கள் அனைவருக்குமே அக்கறை உண்டு. அந்த ஜனநாயக உரிமைகளுக்கு நீதிமன்றங்களின் சொல்லும் செயலுமே குறுக்கே நிற்பதாக மக்கள் கருத நேரிட்டால், அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

தமிழ்நாட்டில் அக்டோபர் முதல் நாளில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த "பந்த்', உயர் நீதிமன்றம் அதைச் சில நிபந்தனைகளுக்கு உட்படுத்தி தடை விதிக்க மறுத்த பின்னணி, ஞாயிற்றுக்கிழமை அவசர அவசரமாக விசேஷ அமர்வு நடத்தி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தடைஉத்தரவு, அதை, "பந்த்'துக்கு அழைப்பு விடுத்த அரசியல் கட்சிகள் உண்ணாவிரதமாக மாற்றி அறிவித்தது, நடைமுறையில் கிட்டத்தட்ட முழு அடைப்பாக மாறிக் காட்சியளித்த தமிழ்நாடு, அதையொட்டி எதிரும் புதிருமாக எழுந்த பலமான குற்றச்சாட்டுகள் - இவை, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளால் மிகுந்த பொறுமையோடும் நிதானத்தோடும் கருத்தூன்றிப் பரிசீலிக்கப்பட வேண்டியவை.

ஆனால் வழக்கில் ஒருதரப்புக்காக வாதிட்ட வழக்கறிஞர் ஒருவர் கூறியதையே வேதவாக்காக ஏற்று, "அரசியல் சட்டம் நிலை குலைவு', "மாநில அரசைக் கலைக்க உத்தரவிடுவோம்', "நீதிமன்ற அவமதிப்பு என்று புகார் மனு கொடுக்கவும்', "முதலமைச்சரையும், தலைமைச்செயலாளரையும் கொண்டு வந்து நிறுத்துவோம்' - என்றெல்லாம் நீதிபதி ஒருவர் மனம்போன போக்கில் பொறிந்து தள்ளியது எந்த வகையில் நியாயம்?

நீதித்துறையின் சின்னமே, துலாக்கோலைச் சமன்செய்து தூக்கிப்பிடித்து, கண்கள் மறைக்கப்பட்டு நிற்கும் நீதிதேவதைதான். ஒருபால் கோடாமைக்கும் சார்புநிலைக்கு அப்பால் நின்று செயல்படுவதற்குமான அடையாளங்கள் அவை! நீதித்துறை அந்த அடையாளங்களை இழந்துவிடக் கூடாது.

உச்சத்தில் அமர்ந்தாலும் தன் உயரத்தை உணர்ந்து செயல்படுவதே நீதித்துறைக்கும் உசிதமாகும்.

(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ.)

நன்றி : தினமணி

நந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது ? சிவ ஆகமம் !

சிவலிங்க வழிபாடு இந்தியாவில் குறிப்பாக திராவிட இனத்தில் சிந்து சமவெளி நாகரீகம் தொட்டே நடைபெற்றுவருவதென்பதற்கு சாட்சியாக ஆங்கில ஆய்வளர்களால் சிந்து சமவெளி நாகரீகத்தில் அகழ்ந்து எடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சிவலிங்க உருவங்களே சாட்சி. ஆரியர்கள் இவ்வுருக்களை ஆண்குறி வடிவம் என்று வேதங்களில் இழித்தே கூறி இருக்கின்றனர். சிவலிங்க உருவம் ஆண்குறி குறியீடா ? என்று பார்த்தால் அவ்வாறு பொருளல்ல வென்றும், முழுமுதற்கடவுளாகிய சிவபெருமானின் பேரொளியை தீ வடிவத்தில் வழிபட்டதும் அத்தீ அமைக்க அமைக்கப்பட்ட வேள்விக் குழியே ஆவுடையார் எனும் கீழ்பீடமாகவும். கொழுந்து விட்டொறிந்த ஜோதியே லிங்கவடிவமாகவும் வடிக்கப் பெற்றதென்பர். அதாவது ஆண்பெண் வடிவத்தினனில்லாத இறைவனை ஜோதியாக உருவகித்து வழிபட்டதே சிவலிங்க சொரூபமென்பர்.

ஆரியர்க்கு இறைவணக்கமெல்லாம் இந்திரன், வருணன் போன்றோர்காக செய்யப்படும் வேள்வித்தீயும் அதற்கு முன் இடப்படும் குதிரை, காளை ஆகியவற்றின் உயிர்பலியுமே யாகும் என்பது வேதங்களில் தெளிவாக்கப்பட்டு இருக்கிறது. ஆரியர்களின் வேள்வியை காக்கும் பொருட்டு அவிற்பாகம் பெற்றுக் கொண்டு வேள்வியை அழிக்கவரும் அசுரர்களை அழிப்பதே ருத்திரன் எனும் வேத தெய்வம் என்பர். சுரர் என்றால் சுரா பாணம் அருந்துபவர்கள் அதாவது தேவர்கள். அசுரர் என்றால் சுராபாணம் அருந்தாதவர்கள். சுராபாணம் என்றால் கள் என்றே சொல்லப்படுகிறது. அசுரர்கள் எனப்பட்டோர் வேத வேள்வியின் உயிர்கொலையை கண்டித்து அதனை அழிக்கவே முற்பட்டு இருக்கின்றனர். அவர்களையெல்லாம் ருத்திரன் மற்றும் கண்ணன் ஆகியோரால் அழிக்கப்பட்டதாகவே வேத சுலோகங்கள் சொல்லுகின்றன.

வேதவழி வேள்வி வீழ்ச்சியுற்றபின்பு அதாவது கொல்லாமை அறம் ஓங்கியபோது சிவலிங்கவழிபாட்டை ஏற்றுக் கொண்ட ஆரியர்கள், வேள்வியின் அடையாளமே தீப அடையாளமான ஜோதிர்லிங்கம் என வேள்வியின் அடையாளமாகவே போற்ற ஆரம்பித்தனர். உயிர் கொலையை மறந்தாலும் முன்பு செய்யப்பட்ட பலிகளின் அடையாளமாக சிவலிங்கத்திற்கு முன்பு காளைமாட்டையும் அதன் பின்னே பலிபீடத்தையும் அமைத்து வைத்து நந்தி என்று சொல்லியதாக அறியப்படுகிறது. வெட்டப்போகும் மாட்டின் முன் சென்றால் அருவாள் நமது உடலிலும் விழலாம் என்ற பொருளிலேயே 'நந்தியின் குறுக்கே செல்லக் கூடாது' என்ற எச்சரிக்கை வழக்கும் வந்திருக்கிறது.

வேள்விக்கு முன் உயிர்கொலை என்னும் இந்நேரடி பொருள் பொதிந்த நந்தி மற்றும் பலிபீடத்தை மறைப்பதற்காக தமிழ்சைவர்கள் உயர்தத்துவத்தின் பொருளாக மாற்றி வைத்தனர். அதாவது இறைவனாகிய பதியின் முன் பசுவாகிய ஆத்மா தனது ஆணவ மலத்தை பலி இடுவதின் குறியீடே நந்தி மற்றும் பலிபீடம் என்று ஆகமங்களில் மாற்றி எழுத்தப்பட்டு உயிர்கொலையின் வடிவு தத்துவ அடையாளமாக மாறியது.

தரவுகள் :






சொடுக்கிப் பெரிதாக பார்க்கவும்

13 அக்டோபர், 2007

வேழமுகத்து விநாயகன் அழுக்கு பிள்ளையார் ?

விநாயகர் வழிபாடு வேதகாலத்திலோ, அதற்கு பிற்பட்ட காலத்திலோ கிடையாது. கிபி 6 ஆம் நூற்றாண்டிற்கு பின்பு, அதாவது சிலப்பதிகாரத்துக்கு பிறகு, அல்லது களப்பிரர் ஆட்சி காலத்தில் தான் விநாயகர் வழிபாடு தமிழகத்தில் வந்தேறி இருக்கமுடியும் என்பது வரலாற்றிஞர்களின் மற்றும் தமிழ் ஆய்வலர்களின் துணிபு. புத்தவிகார்கள் இருந்த இடத்தை ஆக்கிரமித்தில் விநாயக பெருமானுக்கு பெரும்பங்கு உண்டென்பர். ஆரசமரத்தடியும், ஆற்றங்கரையும், துணையற்ற ஒற்றை அருள்வடிவம் புத்தருக்கும் உண்டு என்பதை ஒப்பு நோக்குக. விலங்குவழிபாடின் நீட்சியாக ஆனை வடிவத்தை மனித உடலுடன் பொருத்தி வழிபடும் ஒரு முறையாகவும் விநாயக வழிபாட்டைச் சொல்கிறார்கள். வேத வியாசர் பிள்ளையாரை வைத்து மகாபாரதம் எழுதியதாக புராணக் கதை இருந்தாலும் வியாசர் வாழ்ந்த காலத்தில் உருவாகியிருந்த நான்கு பிராகிருத (பாலி) வேதங்களான இருக்கு - சாம வேதத்தில் பிள்ளையார் பற்றிய எந்த குறிப்புகளும் இல்லை.

வடபுலத்தார் - தென்புலத்தார் ஒற்றுமைக்காக இரண்டிற்கும் தொடர்பில்லாதா ஒரு உருவ வழிபாட்டை வழியுறுத்தும் வண்ணம் விநாயக வழிபாடு பரவியிருக்க வேண்டும். முருகனுக்கு உள்ள நீண்ட சங்ககாலப் பின்னணிகள் விநாயகருக்கு இல்லை. இருந்தும்.. விநாயகரை சொந்தமாக்கிக் கொள்ள விநாயகனை மூத்தமகனாக அறிவித்தது சைவம். அதாவது முருகனுக்கு முன் பிள்ளையார் வழிபாடு தமிழகத்தில் அறிய பெற்றதன்று. வைணவமும் விநாயக வழிப்பாட்டை புறம் தள்ளவில்லை. இருந்தாலும் 'நாராயண நமோ' விற்கு அடுத்தது தான் கனபதி வணக்கம்.

நன்கு கவனித்து உற்று நோக்கினால் சோழர் காலத்து பெரிய கோவில்களில் விநாயகர் உருவங்கள் இருந்தது கிடையாது. இப்பொழுது நீங்கள் பார்பதெல்லாம் பின்பு ஒட்டவைக்கப்பட்டது. சில அமைப்பின், நிறத்தின், கலையில் அது ஒட்டவைக்கப்பட்டது தான் என்பது நன்கு தெரியும் படி இருக்கிறது. நான் கங்கை கொண்ட சோழபுரம் கோவிலிலும் தஞ்சை பெரிய கோவிலும் ஒட்டவைக்கப்பட்ட விநாயக சிலைகளைப் பார்த்திருக்கிறேன். அதே போன்று அந்த கோவில்களில் புத்தருக்கென்ற தனி சன்னதியும் இருக்கிறது.

புராணக்கதைகள் பெரும்பாலும் அருவருக்கத்தக்கதாகவும், பகுத்தறிவுக்கு ஒவ்வாதையாகவையாகவே இருக்கும். உதாரணத்துக்கு பார்வதி என்கிற உமையாள் குளிக்கும் போது உடலில் உள்ள அழுக்குகளை திரட்டி ஆற்றங்கரையில் வைத்ததாகவும் ( அவ்வளவு அழுக்கா ?) அது பிள்ளையாராக மாறியதாகவும் இழிவான புராணக் கதைகளைக் கேட்டதாலேயே பிள்ளையாரின் தோற்றம் பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒன்று என்று பகுத்தறிவாளர்கள் இராமனுக்கு கொடுத்த அதே தண்டனையை பிள்ளையாருக்கும் கொடுத்தனர்.

பிள்ளையார் அழுக்கில் இருந்து பிறந்தது காட்டுக்கதை. ஆனால் பிள்ளையார் சிலைகளால் கடற்கரை அழுக்காவது நடப்பு கதைதான். :) . வினைதீர்க்கும் நாயகர்.. கலவர நாயகரானது சோகம் தான் :)

அதையும் மீறி நாடெங்கிலும் பிள்ளையார் சிலைகள் தெருவுக்கு தெரு இருக்கத்தானே செய்கிறது என்பது பக்தியாளர்களின் எதிர் கேள்வி. தற்காலத்தில் திருநெல்வேலி, மதுரை பகுதிகளில் 'இரவில் ஒரு பெண் குழந்தையுடன் வந்து கதைவை தட்டி தண்ணிக் கேட்பதாகவும், கொடுக்க மறுப்பவர்கள் வாந்தி பேதி கண்டு மாண்டுவிடுவதாகவும்' கதைகட்டி, அதை தவிர்பவர்கள் வீட்டுக்கு வீடு வேப்பிள்ளை கட்டி வைத்தால் தப்பிக்கலாம் என்று வதந்தி பரவியது. அது போன்றே 'திருடி கொண்டு வரும் பிள்ளையார், சக்தி வாய்ந்தவர்' என்று கட்டுக்கதை கட்டப்பட்டு, பிள்ளையார் சிலைகள் வீதிக்கு வீதி வந்தன.

சைவ சித்தாந்தக் கூற்றுப்படி பிள்ளையார் வடிவம் என்பது புராணக்கதை பின்னனிகள் கொண்டதல்ல. வேழ முகம் என்பது 'ஓ'ம் என்ற ஓங்கார வடிவத்தின் உருவகம் என்கிறார்கள். யானை முகத்திற்கும் 'ஓ' என்ற வடிவத்தையும் ஒப்பு நோக்குக. அதனுடன் இணைந்த பானை வயிறு உலகை குறிப்பதாகவும். ஓம் என்ற மந்திரத்துடன் இணைந்த உலக தத்துவமாக சொல்கிறார்கள். சைவ - வைணவ சண்டைகளை நிறுத்திக் கொள்வதற்க்காகவும் பொதுவான கடவுளாக விநாயக வழிபாடு பரவியிருக்கக் கூடும்.

அடுத்த பதிவில் ஆகம விதியில் அமைப்பட்ட சிவன் கோவில் நந்தி மற்றும் பலிபீடம் பற்றி பார்ப்போம்.









10 அக்டோபர், 2007

நீதிபதிகள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களா ?

நீதிபதிகள் தீர்ப்பு வாசிப்பதென்பதோ சட்டம் என்ற அரசு விதிகளை ஒட்டித்தான் என்று சொல்லிக் கொள்கிறார்கள். பலவழக்குகள் கீழ்கோர்ட் 'நோ' சொல்ல மேல் கோர்டில் 'யெஸ்' சொல்லப்படுகிறது, அதற்கு சிறந்த உதாரணம் ஜெயலலிதாவின் 'டான்சி' வழக்கு. கீழ்கோர்டில் தண்டனை பெற்று தேர்தலில் நிற்கமுடியாமல் போனவர், மேல்கோர்ட் உத்தரவில் பன்னீருக்கு 'கல்தா' கொடுத்து மீண்டு(ம்) வந்தார். ஜெயலலிதா போன்ற செல்வாக்கு உள்ளவர்களால் பணம் செலவு பண்ண முடிகிறது. ஆனால் ஒரு சாமானியனால் டெல்லிக்கு அலைந்து கொண்டிருக்க முடியுமா ?

அண்மையில் ஒரே வழக்கிற்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சில் இரு நீதிபதிகளும் வெவ்வேறு கருத்தை சொல்லி இருக்கிறார்கள். இருவரும் படித்தது ஒரே சட்ட புத்தகம் தானே ? பின்பு கருத்து வேற்றுமை எப்படி வரும் ?

நீதிபதிகளோ, தீர்ப்போ விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என்றால் ஒரு நீதிபதி லஞ்சம் பெற்றுக் கொண்டு ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு பிடிவாரண்ட் கொடுத்த கதையெல்லாம் நடந்தேறி இருக்கிறது. உச்சமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கும் கடவுளாக இருந்திருந்தால், பதவியை தவறாக பயன்பாடுத்தியதற்காக, நம்பிக்கை துரோகம் செய்ததாக லஞ்ச நீதிபதியை தூக்கில் போட பரிந்துரை செய்திருக்க வேண்டும் செய்தார்களா ? வேண்டுமென்றே இழுத்தடிக்கப்படும் பல வழக்குகளை ஒரு சில நீதிபதிகள் தவிர்த்து மற்றவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் வாய்தா கொடுத்து அனுப்பவதாகத் தான் சொல்லப்படுகிறது.

நீதிமன்றங்கள் என்பது சட்ட விதிகளை மீறுவதாக எவரும் வழக்கு தொடுக்க வரும் போது அவற்றின் தரப்புகளை நன்கு கேட்டறிந்து ஆவணங்களை சரிபார்த்து தீர்ப்பு வழங்கும் அமைப்பு மட்டுமே. அந்த கல்வி தகுதி உள்ளவர்களே அந்த பதவிக்கு வரமுடியும். சுறுக்கமாக சொல்லப்போனால் நீதிபதிகளும் அரசு ஊழியர்களே. மக்கள் பிரதிநிதிகள் அல்ல.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பை கலைக்கச் சொல்ல, பரிந்துரைக்க நீதிமன்றத்திற்கு, அங்குள்ள நீதிபதிகள் அவர்கள் தன்னிச்சையாக சொல்ல எந்த அதிகாரமும் இல்லை என்றே நினைக்கிறேன். நீதிபதியாக பதவி வகிப்பவர் அத்தகைய்ய கருத்துக்களைச் சொல்ல விரும்பினால் நீதிமன்றத்துக்கு வெளியே பொதுமக்களில் ஒருவனாக, அரசியல் விமர்சகனாக சொல்ல உரிமை உண்டு, ஆனால் நீதிபதி என்ற இடத்தில் அமர்ந்து கொண்டு சொல்வது என்பது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது ஆகும் என்றே நினைக்கிறேன். இது அரசியல் சட்டத்தையே அவமதிக்கும் செயலாகும். நீதிபதிகளுக்குத் தான் கடமை இருப்பது போல் காட்டிக் கொண்டு ஜனாதிபதியின் அதிகாரத்தை பரிகாசம் செய்வது போன்ற செயலாகும் என்று கருதவேண்டி இருக்கிறது.

சட்டத்தை மதிக்கிறோம் என்று சமூகமாக வாழும் ஒரு நாட்டின் குடிமகனாக இருப்பவருக்கு, சட்டவழி பெறப்படும் நீதிபதிகளின் தீர்ப்புகள் வேண்டுமானால் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம். ஆனால் அந்த நீதிபதிகள் மூன்றாம் தர அரசியல்வாதிகள், மேடை பேச்சாளர் போல் சட்டதிட்டதிற்கு அப்பாற்பட்டு உதிர்ப்பவற்றை விமர்சனம் செய்வதிலோ, கண்டனம் தெரிவிப்பதிலோ தவறு இருப்பதாக தெரியவில்லை என்று கருதுகிறேன். 'யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே !' நீதிபதிகளுக்கும் பொருந்துதானே !

9 அக்டோபர், 2007

இயலாமை என்ன செய்ய முடியும் ?

இன்று தட்ஸ் தமிழை திறந்ததும் அதன் பின்னூட்ட பகுதி தடை செய்யப்பட்டதாக அறிவித்திருந்தனர். அதற்கான காரணம் வழக்கம் போல் ஆபாச விமர்சனங்கள் தான். கருத்து தெரிவிப்பதற்கு ஒரு வழியாகத்தான் பின்னூட்ட பெட்டிகள் இருக்கின்றன. நிகழ்வுகளை, வரலாறுகளை, அரசியல்கள் ஆகியவற்றை பற்றி எவருக்குமே கருத்துக்கள் இருக்க முடியும், அவை ஒத்தக் கருத்துக்களாகவோ அல்லது எதிர்கருத்துக்களாவோ தான் இருக்கும். ஒரு நிகழ்வை சுட்டும் போது அவற்றிற்கான எதிர்வினை என்பது அந்த நிகழ்வைக் குறித்த விமர்சனம் என்றால் அது ஆரோக்யமான விவாதத்திற்கு இட்டுச் செல்லும். அதைத் தவிர்த்து அந்த எதிர்வினையானது ஆபாச அர்சனையாக மாறினால் அந்த நிகழ்வு மிக வலுவான மறுக்க முடியாத கருத்தைக் கொண்டிருக்க வேண்டும். அல்லது அந்த நிகழ்வின் மூலம் சிலர் பாதிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

இணையத்தில் கருத்துக்கள் எவரும் கூற முடியும் என்ற நிலை இருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் ஒத்த கருத்துக்கள் அல்லது எதிர்கருத்துக்களின் விழுக்காடு அதிகமாக இருக்கிறதென்பதை அளவுகோளாக்கி ஒரு முடிவுக்கு வர முடியாது. ஏனென்றால் பல சமயம் இந்த விழுக்காட்டு அளவு உயர்வு என்பது இயல்பாக அமைந்திருப்பதைவிட, விருப்போ, எதிர்ப்போ வேண்டுமென்றே விழுக்காட்டை உயர்த்தப்பட செய்யும் உத்திகளே அதிகம். அதாவது இணைய வாக்கெடுப்பு என்பதில் கண்காணிப்பு இல்லாததால் எதாவது ஒரு உத்தியில் முனைப்புடனே அதனை உயர்த்த விரும்பும் குழு அதனை செய்யும்.

இது வாக்கெடுப்பு தவிர்த்து விரும்பியவற்றை பதிவு செய்வது அல்லது எதிர்ப்பை தெரிவித்து அது பலரை சென்றடைய வேண்டுமென்றால் அந்த கருத்தாக்கம் நன்கு செறிவுடனும் ஆதாரத்தடனும் எழுதப்பட்டு இருக்கவேண்டும். அதனை பலரும் ஆதரிப்பார்கள். இதனைச் செய்வது எளிதன்று ஒரு கருத்தை மறுப்பதற்கு பொது அறிவு இன்றி அமையாது ஆனால் வரலாற்று ரீதியாக நடக்கும் மோசடிகளை அம்பலப்படுத்தும் போது அதற்குதகுந்த ஆதாரங்கள் தேவைப்படும், அதனை மறுப்பவர்களும் அத்தகையதை முன் வைக்க வேண்டும். இதற்கு அவகாசமோ, பொறுமையோ, ஏற்றுக் கொள்ளும் மனநிலையோ இல்லாதவர்கள் உடனடியாக செய்வது தான் ஆபாச அர்சனை.

ஆபாச கருத்துக்களாக வரும் எதிர்வினைகள் யாவும் ஒரு கருத்தின் வலிமையை மறைமுகமாக அவை சரிதான் என ஒப்புக் கொண்டவற்றின் காரணமாக... ஏற்க மனமுமின்றி, எதிர்க்க வழியுமின்றி இருக்கும் போது ஏற்படும் இயலாமையின் வெளிப்பாடே.

8 அக்டோபர், 2007

சில 'வெளிப்படையான' எண்ணங்கள் !

மனித மனம் பலவகை, அதில் சிலர், "சார், நான் எதையும் மறைக்க மாட்டேன், மனசுல வச்சிக்க தெரியாது சார் ! உள்ளே ஒண்ணு வச்சு, வெளியே ஒண்ணு வச்சு பேசறதெல்லாம், சுட்டுப் போட்டாலும் எனக்கு வரவே வராது சார்" என்று சொல்லுவார்கள். கேட்கிறவர்களுக்கு 'இவர், ஹரிசந்திரனுக்கு ஒண்ணு விட்ட தம்பியோ ?' ன்னு நினைக்கத் தோன்றும் :)

இது போன்ற ஆசாமிகள் உண்மையிலேயே வெகுளித்தனமானவர்களா ?, பரந்த மனப்பான்மையானவர்களா ? என்று பார்த்தால் பெரும்பாலும் 'இடம், பொருள், ஏவல்' அறிந்து பேச வேண்டிய / தவிர்க்க வேண்டிய இடத்தில் அங்கெல்லாம் உண்மையோ, அல்லது இவர்களே உண்மை என்று கருதிக் கொண்ட அனுமானமோ உளரிக் கொட்டுவார்கள்

'நம்ம வீட்டுக்கு நாமளே கூப்பிட்டு இருக்கிறோம், அவர்களிடம் போய், இப்படி வெளிப்படையாக கேட்டு வைத்து ஏன் அவமானப்பட்டுத்த வேண்டும் ?' என்று ஒரு மனைவியோ, கணவனோ சென்சீடிவ் பிரச்சனைகளை கிளரியவரைப் பார்த்து கேட்கும் போது, 'எனக்கு எதையும் மனசில் வச்சிக்கத் தெரியாது என்று சொல்வது வெகுளியான பதிலா ?

நன்று பழகியவராக கூட இருக்கும், "சார் என் செல்போனைக் காணும், உங்க மேசை டிராயரை செக் பண்ணனும் கொஞ்சம் திறந்து காட்டுகிறீர்களா ?" அவர் முறைத்தால், " மனசில ஒன்னு வச்சிக்கிட்டு பேச தெரியாது, தப்பா எடுத்துக் கொள்ளாதீர்கள்" என்று சொல்வது வெளிப்படையா ? வெகுளித்தானமா ? இதன் பெயர் சந்தேக புத்தி, நெருங்கிய உறவாக இருந்தாலும் சரி, இப்படி உள்ளவர்கள் நெருக்கத்தின் உணர்வுகளை புரிந்து கொள்ள மாட்டார்கள். பதிலுக்கு கோபப்பட்டால் தாம் வெளிப்படையாக பேசுவதாக சொல்லுவார்கள். 'உண்மை என்பது தாம் நம்புவதாகவே இருக்க வேண்டும் !' என்று நினைப்பதன் வெளிப்படை அது :).

இன்னும் சிலர் சற்று விநோதமானவர்கள், "நீ மோசமானவனிடம் பழகுகிறாய், அதானால் நீயும் மோசமானவன் தான்" என்று வெளிப்படையாக சொல்லுவார்கள். ஆனால் இவர்கள் தம்மை நல்லவராகத்தானே நினைக்கிறார்கள், இவர்களிடமும் பழகுவதால் ஏன் நல்லவனாக இவர்களால் நினைக்க முடியவில்லை ? தமக்கு சாதகமாக நடந்து கொள்ளவில்லை என்ற ஆதங்கத்தில் எழும் வெளிப்படையான மனநிலை.

சில மேதாவிகள், "நான் வெளிப்ப்படையாக சொன்னது தவறாக கூட இருக்கலாம், இருந்தாலும் நீங்க அப்படி நடந்து கொள்ளக் கூடியவர் தானே" என்று தம் 'வெளிப்படை' உளரல், தவறென்று நிரூபணம் ஆனதும் சமாளிப்பர்.

நாகரீகமாக பொதுநலம் கருதி சிலவற்றை தவிர்ப்பதென்பது உண்மையை மறைப்பது என்ற பொருளல்ல, தவிர்த்தல் வேறு, மறைத்தல் வேறு இரண்டுக்கும் ஒரு நுண்ணிய வேறுபாடு உண்டு. தவிர்த்தல் என்றால் இங்கு இது தேவையற்றது என்று உணர்ந்து அது குறித்து பேசாதிருப்பது. மறைத்தல் என்பது இதை இங்கு சொல்வதால் எங்கே சிக்கல் ஆகிவிடுமோ என்று கருதி சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லாமல் மறைப்பது. எதையும் பொது இடத்தில் அல்லது ஒருவரை சுட்டிச் சொல்லும் போது, விளைவுகளை முன்கூட்டி அறிதல் என்னும் பகுத்தறிவின் துணை கொண்டு, இந்த இடத்தில் இதை சொன்னால் விவகாரம் ஆகுமோ என்று சிரிதேனும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

பொய்மையும் வாய்மையிடத்த புரை தீர்ந்த
நன்மை பயக்கும் எனில்


இது பெரும்பாலும் நடைமுறையில் இருக்கிற பொருளைப் பார்த்தால், 'தமக்கு நன்மை பயக்குமெனில்' என்று தன்நலம் கருதும் இடத்திலெல்லாம் பொய் மெய்யாக்கபடுகிறது.

வெளிப்படையான பேச்சு நல்லதுதான், ஆனால் அது எவரையும் காயப்படுத்துவதாகவே, அவமானப்படுத்துவதாகவே இருக்கக் கூடாது. அப்படி இருப்பவர் வெகுளியானவர். அப்படி இல்லாத பேச்சுக்கள் அசட்டுத் தனமானவை, பிறரை புரிந்து கொள்ளவோ, மதிக்கவோ விரும்பாதவார்களின் வெளிப்படையான பேச்சுக்கள் நாகரீகமற்றவைகள். பெரும்பாலும் இத்தகைய வெளிப்படை சில சமயங்களில் தன் நலம் சார்ந்தும், அதிமேதாவியாக காட்டிக் கொள்ளவும் நடத்தும் அறிவிலித்தனங்கள்.

சாதுக்கள் என்ற சொல்லின் புனித தன்மையை தனக்கு அடையாளமாகக் காட்டிக் கொள்ளும் போலி சாமியார்களைப் போலவே, 'வெளிப்படையானவர்' என்று தம்மை அறிவித்துக் கொள்பவர் பெரும்பாலும், 'வெளிப்படையானவர்' என்ற உரிச்சொல்லின் மதிப்புக்கு ஆசைப்படும் உள் நோக்காளர்களாவே இருக்கிறார்கள்.

வெளிப்படையாக இருக்கும் எவரும் தன்னைப் பற்றி ஒருபோதும் 'தாம் வெளிப்படையானவர்' என்று சொல்லிக் கொள்ள மாட்டார், 'பேச வேண்டிய இடத்தில் தாம் நினைத்ததை தயங்காமல் சொல்லுபவர்' என்று அவரை அறிந்த பிறர் தான் அவரை 'வெளிப்படையானவர்' என்று அடையாளப்படுத்துபவர்.

சிலர் உண்மையிலேயே வெகுளித்தனமாக இருப்பார்கள் அவர்கள் எப்போதுமே அப்படி இருப்பவர்கள். அவர்கள் தமக்கே பிரச்சனையாக முடியும் என்று கூட அறியாது சொல்லுபவர்கள்.

பல இடங்களில், பலரின் வெளிப்படையான பேச்சுக்கள் என்பது முதிர்வற்றதின் தன்மை, சுயநல வெளிப்பாடு, மேதாவித்தனம் போன்று பல பரிணாமங்கள் கொண்டது.

--
அன்புடன்,

கோவி.கண்ணன்

7 அக்டோபர், 2007

செல்பேசியில் பேசிக் கொண்டே...

கைக்குள் உலகம் - செல்பேசி தொழில் நுட்பத்த்தின் வளர்ச்சி. கைக்குள் உலகம் இருப்பதால் வெளி உலகம் சிலருக்கு மறந்துவிடும். முன்பெல்லாம் தொலைபேசி அழைப்பு என்றால் வீட்டுக்கு உள்ளேயே பேசி முடித்துவிடுவோம். ஆனால் கைதொலைபேசி வந்ததும் கழிவரையில் கூட அதனையும் எடுத்துச் செல்வது வரை பலரும் இணை பிரியாதிருக்கிறார்கள். இருமுறை எனது செல்பேசி பேன்ட் பாக்கெட்டில் இருந்து நழுவியதிலிருந்து ஸ்ட்ராப் போட்டு கழுத்தில் தொங்கவிட்டுக் கொள்வது வழக்கம். அதற்காகவே வடிவில் சிறியதாக வாங்குவேன். அப்படியும் ஒரு முறை குனிந்து மீன் அருங்காட்சியகத்தில் மீன்தொட்டி மீனை கையால் பிடிக்கும் போது செல்பேசியும் சேர்ந்து நீருக்குள் இறங்கிவிட்டது. :)

சாப்பிடும் போது தொலைகாட்சி பார்பது போலவே அனிச்சை செயலை அனுகூலமாக எடுத்துக் கொண்டுள்ளதால் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுவது மற்றும் சாலையில் குறுக்கே நடப்பது போன்றவற்றால் பல விபத்துக்கள் ஏற்பட்டு இருக்கின்றன.

அண்மையில் "டான்சஸ்" படத்தில் நடித்து தன்னம்பிக்கையை பறைசாற்றிய ஒற்றைக் கால் நடிகர் குட்டி செல்பேசியில் பேசிக் கொண்டே எதிர்பாராவிதமாக கீழே விழுந்து மாண்டார். அது போலவே தற்போது இளைஞர் ஒருவர் நான்காவது மாடியில் நடந்தபடி செல்பேசிக் கொண்டிருந்தவர் தடுமாறி கிழே நின்ற தள்ளுவண்டியில் முறுக்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த 70 வயது முதியவர் மீது விழுந்திருக்கிறார். இதில் அந்த முதியவர் படுகாயமடைந்து இறந்து போய் இருக்கிறார்ர். இளைஞரின் காலும் உடைந்ததாம்.


எல்லோரிடமும் செல்பேசி இருக்கிறது. செல்பேசியில் பேசிக் கொண்டிருக்கும் போது எதிரில் மறைந்திருக்கும் ஆபத்துக்களைக் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பது தேவை. பொதுச் சாலைகளில் அல்லது வாகனம் செல்லும் இடங்களில் நடந்து கொண்டே பேசுவதை தவிர்கலாம். மொட்டை மாடியிலோ அல்லது தடுப்பு இல்லாத விளிம்பு உள்ள உயரமான இடங்களில் செல்பேசுவதை தவிர்கலாம். குறிப்பாக வாகனம் ஓட்டும் போது முற்றிலும் தவிர்பது மிக நல்லது. உடனடியாக செயலாற்றவேண்டிய காரணங்கள் இருந்தால் பாதுகாப்பான இடத்தில் வாகனத்தை நிறுத்துவிட்டு பேசலாம். முடிந்தவரை நடந்து கொண்டே பேசுவதை தவிர்க்க வேண்டும். 'கரணம் தப்பினால் மரணம்' என்பது சர்கஸ் பழமொழி. தற்காலத்தில் செல்பேசியில் 'பேசும் போது கவனம் தப்பினால் மரணம்' என்று நடந்துவிடும்



அன்புடன்,

கோவி.கண்ணன்

6 அக்டோபர், 2007

பொடா இல்லையே ! மூக்கு சிந்துகிறார் இல.கனேசன் !

பொடா சட்டத்தை தூக்கிவிட்டதால் இந்தியா பயங்கரவாத நாடாகிறாதாம்... வைகோ 'வெளியில்' வந்தது இல.கனேசனுக்கு பிடிக்கவில்லை போலும் :). பொடா சட்டம் இல்லாமல் பயங்கர வாதத்தை ஒழிக்க முடியாதாம். அந்த பொடா சட்டத்தை வைத்துக்குக் கொண்டு ஜெயலலிதாம்மா ஆடிய ஆட்டங்களை மறந்துவிட்டார் போலும். தருமபுரியைச் சேர்ந்த 14 வயது சிறுவர்களை பொடா சட்டத்தில் அடைத்து நீதிபதிகளால் கண்டனம் பெற்றதும், நக்கீரன் கோபால், வைகோ,சுபவீரபாண்டியன், நெடுமாறன் மற்றும் பல தமிழர்களை அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கப் பயன்படுத்தியதையும் தவிர்த்து இந்திய அளவில் எந்த பயங்கரவாதியையும் அந்த சட்டத்தால் ஒன்னும் பிடுங்க முடியவில்லை.

பொடா சட்டம் இருந்த போது காஷ்மிர் தீவிரவாதிகளும், உல்பாக்களும் துப்பாக்கியை தூக்கிப் போட்டுவிட்டு பரமபதம் ஆடியதுபோலவும் :) காஷ்மீர் பிரச்சனையும், அசாம் உல்பா தீவிரவாதிகள் இப்போதும் செயல்படுவதற்கும் பொடா சட்டம் நீக்கப்பட்டதே காரணம் என்று சொல்லுகிறார்.

காங்கிரஸ் ஆட்சியிலூம் வன்முறையில் இறங்குபவர்கள் இந்துத்துவாக்களே, முன்பு நரசிம்மராவ் ஆட்சியின் போது பாபர் மசூதியை இடித்துத் தள்ளினார்கள். அதற்கு இந்த நாள் வரை வெட்கப்பட்டது போல் தெரியவில்லை. இவர்களின் பிஜேபி ஆட்சியும் முன்பு தனிப்பெரும்பாண்மையுடன் ஆட்சி அமைக்கவில்லை. கூட்டணி ஆட்சிதான் அமைத்தது. அதே வழியில் தான் காங்கிரஸ் பிஜேபியை வரவிடக்கூடாது என்பதற்காகவே கூட்டணி கட்சியின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி நடத்திவருகிறது காங்கிரஸ் ஆட்சி நீடிக்கக் கூடாது என்பதற்காகவே,

தீவிரவாதிகளின் அச்சுறுத்தலைவிட பாராளுமன்றம் கூடும் போதெல்லாம் பிஜேபி கட்சி எம்பிக்கள் அனைவரும் சபாநாயகரை பாராளுமன்ற கூட்டம் நடத்தவிடாமல் ஜனநாயக ஆட்சியை கேலி கூத்தாக்குகிறார்கள். ஒவ்வொரு பாராளுமன்ற கூட்டத்திற்குச் செலவு செய்யப்படும் கோடிக்கணக்கான பொதுமக்கள் பணம் வீணடிக்கப்படுகிறது. இவர்கள் இந்திய வளர்ச்சியில் அக்கரை கொண்டுள்ளது போன்ற பாசாங்கிற்காக 'காங். ஆட்சியால் இந்தியா பயங்கரவாத மையமாக மாறி விட்டது' மூகாரி பாடுகிறார்.

பயங்கரவாதங்களை தூண்டிவிடுபவர்கள் இவர்களே என்பதற்கு சாட்சியாக மோடியின் ரத்த தாண்டவங்கள் இன்னும் எவர் நெஞ்சிலிருந்தும் மறையாது இருக்கும் போது, அண்மையில் கர்நாடகாவில் சங்கர்பரிவார் அமைப்புகளால் இரு தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் கட்சியின் வழி எம்பி பதவி வகித்த 'மனு சாஸ்திரம், மற்றும் பகவத் கீதை' வழி நாக்கை வெட்டு, தலையை கொண்டுவா எடைக்கு எடை பணம் கொடுப்பதாக சாது(வேசமிட்ட) ராம்விலாஸ் 'வேடா'ந்தி, இவர்கள் ஆட்சியில் இல்லாத போதே அறிவிக்க முடிகிறதென்றால்... கலைஞரின் ஸ்டேட்மெண்டுக்கு..இவர்கள் ஆட்சியும், பொடாவும் இருந்திருந்தால் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தாலும் பிடித்துப் போட்டு இருப்பார்கள்.

மதவாதம்..தீவிரவாதத்தைவிட பயங்கரமானது ஏனென்றால் அது ஆட்சி அதிகாரத்தை வைத்தே காரியத்தை சாதித்துக் 'கொல்லும்' என்பதை பிஜேபியின் ஆட்சிக்குப் பிறகு மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். பிஜேபி மதவாதகட்சியாக இருக்கும் வரை மற்ற கட்சிகளின் செயல்பாடுகளை விமர்சிப்பதிற்கு அவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை.

5 அக்டோபர், 2007

குமாரசாமி பிஜேபிக்கு வைத்த ஆப்பு ?

கூட்டணி ஆட்சிகள் விரைவிலேயே சந்திக்கு வரும் என்பதற்கு கர்நாடகாவில் நடைபெற்றுவரும் அரசே சாட்சி. கர்நாடகவில் நடந்த கடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பாண்மை இல்லாததால், ஆட்சியை 'பங்கிட்டு' கொள்வதில் உடன்பாடு ஏற்பட்டு மதச்சார்பற்ற ஜெனதா தளமும், மதச்சார்புள்ள பிஜேபியும் கைகோர்த்தன ( சார்பு இல்லாதவங்க எப்படி சார்பை சாருவாங்க ? :)

20 மாதத்துக்கு ஒருமுறை சுழற்சி முறையில் 'பங்கிட்டு'க் 'கொள்ளலாம் என்ற ஒப்பந்த கொள்கை அடிப்படையில் குமாரசாமி அரியணை ஏறினார். 20 மாதங்கள் ஆயிற்று. ஒப்படைக்கச் சொல்லி பிஜேபி நெருக்குவதைத் தொடர்ந்து, குமாரசாமிக்கு திடிரென்று பிஜேபி மதவாத கட்சி என்று ஞானோதயம் பிறந்திருக்கிறது. அதன்படி பிஜேபிக்கு 'கேசரி' கொடுத்துவிட்டார், நம்ம ஊரில் தான் அல்வா :) உறுதிமொழியை காப்பாற்றவில்லை என்று பிஜேபி குமாரசாமியை குற்றம் சொல்லி தமது அமைச்சர்களை பதவி விலக சொல்லிவிட்டது.


குமாரசாமி அதிரடியாக,

"கொடுத்த உறுதிமொழியை நான் காப்பாற்றவில்லை என பாஜக சொல்கிறது. அவர்கள் மட்டும் உறுதிமொழியை காப்பாற்றினார்களா. பாபர் மசூதியை இடிக்க விடமாட்டோம் என உச்ச நீதிமன்றத்தில் உறுதிமொழி தந்தது யார். பாஜக தான். அதே பாஜக தான் மசூதியையும் இடித்துத் தள்ளியது. இதனால் உறுதிமொழி பற்றியெல்லாம் பேச பாஜகவுக்கு எந்த அருகதையும் கிடையாது".

அந்தர்பல்டி அடித்திருக்கிறார். கவனிக்க வேண்டியது பாபர் மசூதி இடிக்கப்பட்டு 15 வருடங்கள் ஆகிறது. தற்போது 20 மாதங்கள் பதவியை அனுபவித்துவிட்டு, பிஜேபி மீது இருக்கும் பழைய குற்றத்தைச் சுமத்தி சந்தர்பவாத அரசியல் நடத்துகிறார்.

தனது பதவியை தக்கவைத்துக் கொள்ள, காங்கிரசுடன் கைகோர்த்துக் கொண்டு...கலைஞர் கருணாநிதியின் மகள் இல்லத்தை தாக்கியதையும் சாக்கிட்டு "சமீபத்தில் ராமர் பிரச்சனையை முன் வைத்து தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் வீட்டின் மீது பாஜகவும் அதைச் சார்ந்த அமைப்பினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். தமிழக பஸ்ஸை எரித்து இரு அப்பாவிகளை எரித்துக் கொன்றுள்ளனர்." என்பதையும் குறிப்பிடுகிறார்.


மங்களூரில் மதக் கலவரத்தைத் தூண்டிவிட்டுள்ளனர். இந்த விவகாரங்களில் கைதான அனைவருமே பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தான். இந் நிலையில் இவர்களிடம் ஆட்சியைத் தந்தால் சிறுபான்மையினருக்கும் தலித்களுக்கும் என்ன பாதுகாப்பு இருக்கும் என்பதை பாஜக தெளிவுபடுத்த வேண்டும்... என்றும் வெடிகுண்டு வீசியுள்ளார்.


பிஜேபிக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. குமாரசாமியின் சந்தர்பவாத அரசியல் எப்படியெல்லாம் பேசவைக்கிறது என்று நினைக்க வேண்டி இருக்கிறது.

குமாரசாமி செய்வது அராஜகம் என்றாலும் மதவாத அரசியல் பற்றி கர்நாடக மாநிலத்தவருக்கு விழிப்புணர்வு தருவதற்கு அவரை பாராட்டத்தான் வேண்டும்.

தம்மை புனிதராக காட்டிக் 'கொல்ல'.. அரசியல்வாதிகள் திடிரென்று விழித்துக் கொள்வது போல் பேசுவது எப்போதும் நடப்பதுதான். திமுகவும் முன்பு பிஜேபி ஆட்சியில் 'பங்கு' பெற்றது என்று நமக்குத் தெரிவதால். 'இதெல்லாம் அரசியலில் சகஜம்பா' என்று தேற்றிக் கொள்ளலாம்.
:)

4 அக்டோபர், 2007

மூடநம்பிக்கைக்கு எல்லையே இல்லையா ?

வெறும் நம்பிக்கையை வைத்துக் கொண்டு இந்துத்துவாக்கள் ஆடும் ஆட்டம் சகிக்கவில்லை.

//மகாத்மா காந்தியால் நேசிக்கப்பட்ட ராமர் மீது சோனியா காந்திக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் தனது பெயரிலிருந்து காந்தி என்ற பெயரை சோனியா காந்தி நீக்கி விட வேண்டும் என பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
//

ஐயா சாமிகளா, இந்திரா காந்தி என்ற இந்திரா நேரு 'பெரோஸ் காந்தியை திருமணம் செய்ததால் இந்திரா 'காந்தி' ஆனார், அவரது வாரிசுகளுக்கும் 'காந்தி' என்பது குடும்ப பெயராயிற்று. மகாத்மா காந்திக்கும் சோனியா காந்திக்கும் என்ன சம்பந்தம் ? ராஜிவ் காந்தியின் மனைவி என்பதால் பெயரில் தனது கனவரின் குடும்ப பெயரான காந்தியை சேர்த்து இருக்கிறார். இதுதான் இந்தியாவில் திருமணம் ஆனதும் பெரும்பாலும் மனைவியர், தமிழ்நாடு என்றால் தமது கணவரின் பெயரையோ, வேறு மாநிலங்களின் கணவரின் குடும்ப பெயரையே தம் பெயருக்கு பின்னால் சேர்த்து போட்டுக் கொள்வது வழக்கம். வெளிநாட்டுக்காரனுக்குத்தான் 'காந்தி' தெரியாது என்றால் குஜராத்தை தலைமையிடமாக கொண்ட பிஜேபி அண்ட் கோ வினருக்கு ?

கோட்சேக்கள் பிறந்தநாடு என்பதால் சோனியா 'காந்தி' எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

சோனியா காந்தியின் பெயரில் 'காந்தியை' எடுக்கச் சொல்லி வாந்தி எடுப்பவர்கள், ராகுல் காந்தியையும் சொல்வார்களா ? சொல்ல மாட்டார்கள். சோனியா என்ன ராஜிவ் காந்திக்கு குழந்தை பெற்றுத் தந்த வாடகை தாயா ?

சோனியா காந்தி 30 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்தாலும், அவரது கணவரை இழந்தும் சொந்த நாட்டுக்கு திரும்பாமல் இதே நாட்டில் வாழ்ந்தாலும் அவர் வெளிநாட்டவர், மேலும் கிறித்துவராம். பிறப்பால் யார் யார் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று பார்த்தால் பாஜகாவில் பலர் பாகிஸ்தான்காரர்களாகத் தான் இருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் சோனியா காந்தியை குறித்து தொடர் அவதூறு வேறு. சில இந்தியர்கள் / வம்சாவளிகள் வெளிநாட்டில் (பிஜி, மாலத்தீவு, சிங்கை) அரசியலில் கொடிகட்டிப் பறக்கிறார்கள் என்று பெருமையாக சொல்லிக் கொள்கிறோம். வெளிநாட்டு அரசியலில் இந்தியருக்கு என்ன வேலை என்று இவர்கள் கேள்வி எழுப்ப முடியுமா ? ஆனால் இந்த மண்ணிலேயே வாழ்ந்துதாலும் வீழ்ந்தாலும் சோனியா வெளிநாட்டுக்காரி ?

மேலும் இந்துத்துவ ஆதரவாளர்களுக்கு சில யோசனைகள்.

1. நாத்திகர் கருணாநிதி இந்து பெயர் வைத்துக் கொள்ளலாமா ?
2. சுனிதா வில்லியம்ஸ் என்ற கிறித்துவர் இந்தியவரலாமா ?
3. இஸ்லாமியரான அப்துல் கலாம் பகவத் கீதை படிக்கலாமா ?
4. ஐயப்ப பக்தர்கள் என்ற இந்து பக்தர்கள் 'வாபர் சாமி' என்னும் இஸ்லாமிய அரசனை தரிசிக்கலாமா ?
5. முசாரப் இந்தியாவில் பிறந்ததால் இந்திய தேர்த்தலில் போட்டி இடலாமா ?

மேலும் சில சுவையான 'லாமா?' இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் !

இராமர் பிரச்சனையால் மத அடிப்படை வாதம் பெரிதாகவே தலைதூக்கிறது. இந்த லட்சணத்தில் சந்திரனுக்கு ராக்கெட் விடுகிறார்கள்.
:))

3 அக்டோபர், 2007

நினைவு தடங்க'ல்' !

எதிர்ப்பார்பில் விளைவதல்ல
நட்பும், காதலும் !
காதலுக்கென்று கூட எதிர்ப்பார்ப்பு
இருக்கிறது, கைகூடினால்
காமமாம்.

நட்பு ?
கொடுக்கல் வாங்கலல்ல நட்பு
என்று புனிதம் பேசினாலும்
ஒருகை தட்டி ஓசை
வரவைக்க முடியுமா ?

எனக்கு உன்னைப் பிடிக்கிறதென்பதற்காகவே
நீ வேண்டுமென்றே
சொல்லுவது 'குற்றமே' என்றாலும்
அதையும் ஏற்றுக் கொள்வேன்
என்று என்மீது 'சுமத்துவது' தான் நட்பா ?

நட்பின் அளவுகோள்
எதையும் ஏற்றுக் கொள்வதா ?
அப்படி என்றால் நான்
ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை
நீ ஏன் ஏற்கவில்லை ?
என்ற என் எதிர்கேள்வியில்
தொலைந்து போனது
நட்பு.

நினைவில் மறந்தாலும், அடிக்கடி
என் இரவு கனவை நிறப்பிவிட்டுச்
செல்கிறது அந்த நட்பு !
--
அன்புடன்,

கோவி.கண்ணன்




எனது கவிதைகள் வலைப்பூ ஸ்பேம் என்று தகவல் வருது, அதனால் எதையும் அதில் போட முடியவில்லை.
:(((

WARNING
This blog has been locked by Blogger's spam-prevention robots. You will not be able to publish your posts, but you will be able to save them as drafts.

Save your post as a draft or click here for more about what's going on and how to get your blog unlocked.

2 அக்டோபர், 2007

மகாத்மாவின் கனவு ராஜியம் !





காந்தி கண்ட கனவு தேசமாம்
'இராம இராஜ்ஜியம்'
கைக் கெட்டும் தொலைவில்...

இராமன் பிறந்த(?) அயோத்தி
கையகப்படுத்தி யாயிற்று !

இராமன் நடந்து(?) போன
சேது, நாசா உதவியுடன்
கண்டுபிடித்தாகி விட்டது !

இன்றைய இராம ராஜியத்தில்
வாழ்வதற்கு காந்திக்கு
வயதின் காரணமாக
கொடுத்து வைக்காது என்று
எண்ணியும்...

ஈஸ்வரன் அல்ல அல்லா...
இதை உணர்ந்து கொள்ளச்
சொல்லி
நாது 'ராம்' கோட்சே,
அண்ணல் காந்தியை
அன்றே அனுப்பிவைத்தான்
இராமனின் திருவடிக்கு(?) !

ஹே ராம்.....!

காந்திஜியின் புகழ்வாழ்க !

1 அக்டோபர், 2007

ஆன்மீகம் சைவமா ? அசைவமா ?

அனைத்தையும் படைத்தது இறைவன், எனவே மனிதருக்கான உணவு பொருள்களாக விலங்குகளையும், கடல்வாழ் உயிரினங்களையும் படைத்திருக்கிறார் என்கிறது இந்திய தத்துவம் சாராத வெளிநாட்டு மதங்கள். விலங்குகளை உணவுக்காக கொல்லும் போது கடவுள் பெயரில் கொன்றால் பாவம் இல்லை என்கிறது அவைகள். இந்திய மதங்கள் அனைத்தையும் படைத்தது இறைவன், கருணை வடிவானவன், எனவே அவன் படைப்பான விலங்குகளை கொல்வது பாவம் என்கிறது இந்திய தத்துவங்கள்.

இரண்டும் வேறு வேறு நம்பிக்கையை கொண்டிருந்தாலும் இந்தியம் சாராத இறை கோட்பாடுகளிலும் உயிர்களைக் கொள்வது 'பாவம்' என்ற கருத்து இருந்ததன் பின்பே அவற்றை இறைவனின் பெயரில் கொள்வது பாவமில்லை என்ற கருத்து தோன்றி இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் 'பாவம்' குறித்து எதுவுமே சொல்லி இருக்காது என்றே நினைக்கிறேன்.

பாவம் / புண்ணியம் என்பதைத் தவிர்த்து பார்த்தால், அசைவம் உண்ணுவது / விலங்குகளை பலி இடுவது இழிவு என்று வலியுறுத்தப்பட்டு சமண/புத்தர் மதங்கள் வளர்ந்தபோது, அம்மதங்களின் உயிர்கொல்லாமை என்பது பாரதம் தழுவிய கருத்தாக இருந்திருக்கிறது. அந்த இழிவிலிருந்து விலக்கிக் கொள்ளவே வைதீக சநாதன தர்மமும் புலால் உணவையும் / வேள்வி பலிகளையும் விலக்கிக் கொண்டது.

காலப்போக்கில் புலால் உணவு உண்ணுபவர் / உண்ணாதாவர் என்ற இருபிரிவுகளாக இந்தியர்ர் இருந்திருக்கின்றனர். இதில் புலால் உண்ணுபவர்கள் அனைவரையும் ஒதுக்கி வைத்திருந்தனர். புலால் உண்ணுவதை திருவள்ளுவரும் 'அண்ணாத்தல் செய்யாது அளறு' என்று கடுமையாகவே சாடி இருக்கிறார்.

'புலால் உண்ணுவது பாவம்' என்ற கருத்து வலுப்பட்டு, அப்படி உண்ணுபவர்களை பாவிகள் என்ற அழைக்க ஆரம்பித்திருக்கின்றனர், 'தீண்டாமையின் தோற்றம்' என்பது ஆரம்பத்தில் 'அசைவம் சாப்பிடுபவர்' என்ற அளவிலேயே தொடங்கி இருக்க வேண்டும்.

ஒருமதத்தை ஏற்றுக் கொள்ளும் போது அதை ஏற்றுக் கொண்டு அந்த மதத்தை போற்றுபவர், அம்மதக் கொள்கைகளை முனைந்து கடைபிடிப்பர். மிகக்கடுமையான கட்டுப்பாடுகளை நாளடைவில் விட்டுவிடுவர்... ஆனாலும் அந்த மதங்களைச் சேர்ந்தவர்களாகவே அவர்கள் இருப்பர். இதை மதம்மாறியவர் அனைவரின் நிலையை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். ஆரம்பத்தில் சைவமாகிய மதப்பிரிவுகள் அனைத்தும் புலாலை மறுத்து இருக்கின்றனர். ஆனால் பின்பு சென்ற நூற்றாண்டுக்கு முன்பே இந்திய சாதிகள் அனைத்தும் புலால் உணவை தொட(ர) ஆரம்பித்துவிட்டன.

மதக்கோட்பாடுகளை கடைபிடிப்பவருக்கு மதம் சொல்லியுள்ளபடி ஏற்பதும், அவை கூடாது என்று சொல்லி இருப்பதை விலக்குவது எளிது. ஆனால் அந்தந்த மதம் சாரதவர்களுக்கும் அதற்கும் தொடர்பே இல்லை. மதக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாதவர்களை பல்வேறு மதங்களும் பழித்தே வந்திருக்கிறது. மதங்கள் இந்த நூற்றாண்டில் இருப்பது போன்று முன்பெல்லாம் 'ஆள்பிடிப்பு' வேலைகளில் இரங்கவில்லை. மதங்கள் என்பது.. இன அடையாளம் மற்றும், உயர் வகுப்பு அடையாளமாகவே இன்றும் இருக்கிறது என்பதை, அந்தந்த மதங்களின் தலைமை இடத்தை பற்றி இருக்கும் கரங்களை வைத்தே சொல்லிவிட முடியும்.

புலால் உணவில் தடையில்லை என்பதால் வெளிநாட்டில் கருப்பர்கள் மீதான தீண்டாமை என்பது இன/மத வெறியின் வழி வந்திருக்கிறது. இந்தியாவில் ஒற்றையாக பரிணமித்த மதம் என்பது இந்துமத ஒருங்கிணைப்புக்கு முன்பு இருந்ததே இல்லை. எனவே தீண்டாமை என்பது சைவமா ? அசைவமா ? என்னும் உணவு பழக்கத்தை வைத்தே வந்திருக்கிறது. அப்படி விலக்கி வைத்து அறியப்பட்டவர்களை சாதிய கட்டமைப்பாக்கி அதை தக்கவைத்துக் கொள்ளவும், உயர்வை தாங்கிப்பிடிக்கவும் மனுபோன்ற அரண்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. பறையர் / பள்ளர் எனப்படும் தமிழர் பிரிவில் பறையர் நத்தை சாப்பிடுபவர். பள்ளர் நத்தை சாப்பிடமாட்டார் இது ஒரு வேறுபாடாம். இதுபோன்றே அதாவது அசைவம் சாப்பிடுவதிலும் பன்றி போன்ற விலங்குகளை சாப்பிடுவது தாழ்வாம். இது மதக் கோட்பாடுகளாகவும் இருக்கிறது.

விலங்குகளை உணவின் தேவைக்காக உண்ணுவது பாவ / புண்ணியம் சேர்ந்த கருத்தே அல்ல. விலங்குகள் / இயற்கை மீது அன்பு செலுத்துதல் என்பதற்காக கொல்லாமை வலியுறுத்தப்பட்டு பின்பு, அதை கடுமையாக சொல்ல பாவ / புண்ணியங்களுடன் அது இணைக்கப்பட்டு இருக்கிறது.

சைவம் என்பது கொல்லாமை அடிப்படை கொண்டிருப்பதாலேயே அது மற்றவையை விட உயர்ந்தது என்று சொல்ல முடியாது. மாடு உயிருடன் உழவுக்காக வைத்திருப்பவனுக்கு, மாடு செத்தால் தான் இறைச்சி உணவே கிடைக்கும். இதை மறந்து... இறந்த மாட்டை தோலை உறித்து தின்றார்கள் என்பதற்காக நான்கு தலித்துக்கள் அடித்தே கொல்லப்பட்டார்கள். இன்று சைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் வைதீகர்கள் முன்பு வேள்வியில் பசுக்களை பலி இட்ட உண்டவர்களே. தற்போதும் வேள்வியில் கொள்ளப்பட்ட விலங்குகளை புசிக்கலாம் என்ற கருத்து இருக்கிறது. அவ்வாறு உண்பது கருநாடகத்தில் ஒரு வைதிக கிராமத்தில் நடைமுறையில் இருப்பதாக நக்கீரனின் ஒருமுறை படித்திருக்கிறேன்.

சைவம் உயர்ந்தது என்று நினைப்பவர்களில் 95 விழுக்காட்டினர் வீட்டில் சமைக்காவிட்டாலும் வெளியில் சுவையுடன் இருந்தால் உண்ணுபவர்களாகவே உள்ளனர். சீன புத்தமதத்தின், ஒரு பிரிவினர் முட்டை முட்டை சாப்பிடுவது ஏற்கத்தக்கதாக சொல்கிறார்கள். அதில் சிலர் இந்தியாவில் பல இந்துக்களைப் போலவே மாட்டிறைச்சி உண்ணுவது இல்லை. இந்தியாவில் சில மாநிலங்களில் 'மீன்' சைவ உணவாக கருதப்படுக்கிறது.

புலால் உண்ணுவது பாவமோ / புண்ணியமோ சார்ந்ததல்ல... மாறாக விலங்குகளும் ஒரு உயிர்... அறுக்கும் போது நிச்ச்சயம் துடிக்கும்... என்பதால் அவற்றை தவிர்க்கச் சொல்லுவது, அனைத்து உயிர்கள் மீதான அன்பு சார்ந்த உணர்வு கொள்ளச் சொல்வது மட்டுமே.

மற்றபடி புலால் உணவு கொள்கைக்கும் இறைவனுக்கும் தொடர்பில்லை என்றே நினைக்கிறேன். அப்படி இருந்தால் கொசுக்களையும், மூட்டை பூச்சிகளையும், எலிகளையும் மருந்து வைத்து கொள்ளவேண்டாம் என்று இறைவன் சொல்லி இருப்பார். :)).

உணவு சுழற்சி என்ற அமைப்பில்...விலங்குகளின் உயிர்களைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்றால் ...ஆடு/கோழிகளை பலியிட்டு கடவுளின் பெயரால் தாரளமாக சாப்பிடலாம். புலால் உணவு உண்ணாமைக்கும் 'தகுதி' க்கும் தொடர்பு இல்லை. புலால் உண்ணுவதை ஆன்மிகத்துடன் முடிச்சு போடுவது தவறு என்றே நினைக்கிறேன்.


ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்
அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே.
- திருநாவுக்கரசர்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்