பின்பற்றுபவர்கள்

18 அக்டோபர், 2007

'செல்வி' ஜெயலலிதாவிற்கு கண்டனம் !

ஜெயலலிதா செல்வியா ? அல்லது அம்மாவா ?
என்று நண்பர் அதிரைக்காரன் கேட்டு இருக்கிறார். ஜெயலிதாவின் அரசியல் தவிர்த்து, அவர் ஒரு அரசியல் கட்சித்தலைவர், இருமுறை முதல்வராக இருந்த முன்னாள் முதல்வர் என அவர் மீதான மதிப்பு எனக்கு எப்போதும் உண்டு.

முதிய பெண்களை திருமணம் ஆனவர் என்றால் 'திருமதி' என்று ஒரு அடைமொழி பெயருடன் அழைப்பதும், திருமணம் ஆகாதவராக தெரிந்தால் 'செல்வி' அடைமொழிப் பெயரில் அழைப்பதும் ஆணாதிக்க செயலாகவே தெரிகிறது. ஆண்களில் வயது வந்தவர்களாக இருந்தால் திருமணம் ஆனவராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்களது பெயருக்கு முன்பு மதிப்பின் அடையாளச் சொல்லாக 'திரு' சேர்க்கிறோம். ஆனால் மரியாதைக்காக என்று (பெயரளவில் ?)பெண்ணுக்கு கொடுக்கும் அடைமொழிச் சொல் என்பது ... அவருக்கு கொடுக்கும் மரியாதைக்காக அழைக்கப்படும் என்பதைவிட அவர் திருமணம் ஆனவரா ? இல்லையா ? என்பதை சொல்வதை குறிக்கும் குறிசொல்லாகவே அமைந்திருக்கிறது. சன் டிவி ஜெயலலிதாவை 'செல்வி' ஜெயலலிதா என்று சற்று அழுத்தமாகவே பலுக்குவது போன்று எனக்குதெரியும். அதாவது திருமணம் ஆகாதவருக்கு இவ்வளவுதான் மரியாதை இருக்கிறது என்பது போன்று சொல்வதாக எனக்கு தோன்றியது. அவர்கள் அந்த பொருளில் சொல்கிறார்கள் என்று சொல்லவில்லை. ஜெய டிவியிலும் 'செல்வி ஜெயலலிதா ?' என்று தானே சொல்லுவார்கள் ? ஆனால் என்னைப் போலவே பலருக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மற்றும் திருமணம் ஆகாத முதிய பெண்களை 'செல்வி' என்று அழைக்கப்படுவதில் உடன்பாடு இல்லை.

கன்னிமேரியம்மா, கன்யாகுமரியம்மா என்று அம்மா சேர்த்து தான் கடவுளையே குறிப்பிடுகிறோம். செல்வி கன்யாகுமரி என்று சொல்வதில்லை ... அன்னைத் தெரசாவை ... செல்வி தெரசா என்று அழைத்தால் அபத்தமாகத்தானே இருக்க்கும் ? அவ்வையார்களை 'கவிச்செல்வி' என்று சொன்னால் அபத்தம் தானே ? திருமணம் ஆகாத பெண்கள் அவர்கள் விரும்பினால் 'அம்மா' என்று பெயருக்குப் பின்னால் சேர்த்துச் சொல்வதால் மரியாதையாக அழைப்பதில் உண்மையிலேயே மரியாதை இருப்பதாகத்தான் தெரிகிறது. செல்வி கன்யா குமரி அம்மன் என்று சொன்னால் இழுக்காகத்தானே இருக்கும். திருமணம் செய்து கொள்வதும் செய்து கொள்ளாததும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால் அதை சொல்லில் அடையாளப்படுத்துவதென்பது அவர்களே விருப்பபட்டாளன்றி வலியுறுத்தி அழைப்பது என்பது புன்படுத்துவது போலத் தான், அதாவது திருமணம் செய்து கொள்பவர்கள் சமூக மதிப்பிற்கு (அந்தஸ்த்துக்கு) சொந்தக்காரர்கள் போலவும்... அதைச் செய்யாதவர்கள் சமூக மதிப்பிற்கு தேவையற்றவர்கள் போலவும் காட்டுவதாக நான் உணர்கிறேன்.

'திரு' என்ற சொல் ஒரு ஆணை திருமணம் ஆனவர் அல்லது ஆகாதவர் என்று காட்டாதபோது, பதின்ம (டீன் ஏஜ்) வயதைத் தாண்டிய பெண்களை ஏன் 'திருமதி' என்று அழைக்கக் கூடாது ? சிங்கையில் 'மாது' என்று பொதுவாக பெண்களை குறிக்க பயன்படுத்துவார்கள் அது போன்று 'திருவாட்டி' என்றும் சொல்லுவார்கள் ஆனால் அப்படி குறிக்கப்படும் பெண்கள் திருமணம் ஆனவர்கள் / ஆகாதவர்கள் என்ற பொருளில் குறிக்காது.

பதின்ம வயது பெண்களை 'செல்வி' என்றும் ஆண்களை 'செல்வன்' குறிப்பதும் சரி, அதே போன்று திருமண அழைப்பிதழிலும் குறிப்பிடுவது சரி. ஆனால் திருமணம் ஆகாதவர் என்பதல் செல்வன் என்ற அடைமொழியில் எந்த ஒரு 30 வயதுக்கு மேற்பட்ட ஆணையும் யாரும் சொல்லுவதில்லை. ஆனால் பெண்ணுக்க்கு மட்டும் ஏன் இந்த அநீதி?

ஆங்கிலத்தில் 'மேடம்' என்று பொதுவாகவே சொல்கிறார்கள். அது போல் பெண்களை ஏன் 'திருமதி' அல்லது 'திருவாட்டி' என்றோ சொல்லக் கூடாது ? சிங்கை செய்திகளில் திருவாட்டி ஜெயலலிதா, திருவாட்டி மாயாவதி என்று தான் சொல்கிறார்கள் !


ஊடகங்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை 'செல்வி ஜெயலலிதா' என்று தொடர்ந்து அழைக்கப்படுவதில் உடன்படுகிறீர்களா ?

22 கருத்துகள்:

லக்ஷ்மி சொன்னது…

நல்ல பதிவு. நானும் தலைப்பைப் பார்த்தவுடன் இவர் கூட இப்படி ஆரம்பிச்சுட்டாரா என்ற ஆதங்கத்துடனேயே உள்ளே வந்தேன். மகிழ்ச்சிகரமான ஏமாற்றம். :)

PPattian சொன்னது…

ஆம். ஆங்கிலத்தில் கூட Miss., Mrs. இரண்டுக்கும் சேர்த்து Ms. என்பது இப்போது பயன்படுத்தப் படுகிறது.

Mr = திரு
Ms = திருவாட்டி

சரிதான் என்று தோணுகிறது.

கையேடு சொன்னது…

முதல் பின்னூட்டம் குறிப்பிடுவதைப் போல தலைப்பைப் பார்த்து ஏமாற்றத்துடன் துவங்கினேன் - ஏமாற்றம் பொய்த்துப் போன நிறைவோடு சென்றேன்.

உங்கள் "குப்பை"யிலிருந்த ஆதங்கம் இதில் நிறைவேரும் என்று நினைக்கிறேன். :))

pulliraja சொன்னது…

இதற்கு சரியான தீர்ப்பு வழங்கும் தகுதி எம்.ஜீ.ஆர் மற்றும் சோமன் பாபு இன்னும் சில திரையுலகப் புள்ளிகளுக்கு மட்டுமே உண்டு என்பது என் தாழ்மையான கருத்து!!!!!!!!!

புள்ளிராஜா

குசும்பன் சொன்னது…

" ஜெயலிதாவின் அரசியல் தவிர்த்து, அவர் ஒரு அரசியல் கட்சித்தலைவர், இருமுறை முதல்வராக இருந்த முன்னாள் முதல்வர் என அவர் மீதான மதிப்பு எனக்கு எப்போதும் உண்டு."

கிரேட்!!!

துளசி கோபால் சொன்னது…

நீங்க சொல்வது முற்றிலும் சரிதான் ஜிகே.

செல்வியும் செல்வனும் தேவையில்லாத அடைமொழிகள்தான்.

இன்னும் சொல்லப்போனால் திருமதி,திருவாட்டி எல்லாம் கூட வேணாம். அம்மா, ஐயாகூட என்னத்துக்கு? பேசாம பெயரின் பின்னால் 'அவர்கள்' என்ற சொல்லை அனைவருக்கும் பொதுவாகப் பயன்படுத்தலாம்.

பொண்ணு கல்யாணம் ஆனவளா இல்லை ஆகாதவளான்னு தெரிஞ்சு என்ன ஆகப்போகுது?

குமரன் (Kumaran) சொன்னது…

Good Point.

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்ஷ்மி said...
நல்ல பதிவு. நானும் தலைப்பைப் பார்த்தவுடன் இவர் கூட இப்படி ஆரம்பிச்சுட்டாரா என்ற ஆதங்கத்துடனேயே உள்ளே வந்தேன். மகிழ்ச்சிகரமான ஏமாற்றம். :)
//

லக்ஷ்மி அவர்களே,

இது சூடான இடுக்கைக்கான தலைப்பா ? 'செல்வி' என்று காமா விற்குள் போட்டுதானே குறிப்பால் உணர்த்தி இருக்கிறேன்.

மகிழ்ச்சிகரமான ஏமாற்றம் என்ற பாராட்டுக்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//PPattian : புபட்டியன் said...
ஆம். ஆங்கிலத்தில் கூட Miss., Mrs. இரண்டுக்கும் சேர்த்து Ms. என்பது இப்போது பயன்படுத்தப் படுகிறது.

Mr = திரு
Ms = திருவாட்டி

சரிதான் என்று தோணுகிறது.
//

ஐயா,

ஆங்கிலத்தில் சிங்கை மற்றும் வெளிநாடுகளில் எல்லா பெண்களையும் 'miss' என்று தான் குறிப்பிடுவார்கள். நம்ம இந்தியாவில் தான் திருமணம் ஆனவர்களுக்கு 'Mrs'

கோவி.கண்ணன் சொன்னது…

//கையேடு said...
முதல் பின்னூட்டம் குறிப்பிடுவதைப் போல தலைப்பைப் பார்த்து ஏமாற்றத்துடன் துவங்கினேன் - ஏமாற்றம் பொய்த்துப் போன நிறைவோடு சென்றேன்.

உங்கள் "குப்பை"யிலிருந்த ஆதங்கம் இதில் நிறைவேரும் என்று நினைக்கிறேன். :))
//

கையேடு அவர்களே,
குப்பையும் சூடான இடுகைக்கு போய்விட்டது. தலைப்பும் ஏமாற்றவில்லை இடுகையும் ஏமாற்றவில்லை. தலைப்பு பதிவுக்கு தொடர்புள்ளது தானே !

கோவி.கண்ணன் சொன்னது…

//pulliraja said...
இதற்கு சரியான தீர்ப்பு வழங்கும் தகுதி எம்.ஜீ.ஆர் மற்றும் சோமன் பாபு இன்னும் சில திரையுலகப் புள்ளிகளுக்கு மட்டுமே உண்டு என்பது என் தாழ்மையான கருத்து!!!!!!!!!

புள்ளிராஜா

7:33 PM, October 18, 2007
//


ம், மனசில் உள்ளதை ஒழிக்காமல் சொல்லிட்டிங்க, தீர்ந்ததா ? இன்னும் இருக்கிறதா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//குசும்பன் said...
" ஜெயலிதாவின் அரசியல் தவிர்த்து, அவர் ஒரு அரசியல் கட்சித்தலைவர், இருமுறை முதல்வராக இருந்த முன்னாள் முதல்வர் என அவர் மீதான மதிப்பு எனக்கு எப்போதும் உண்டு."

கிரேட்!!!
//

குசும்பரே,
அந்த அம்மாவின் அடாவடி அரசியில் பிடிக்காது அவர்களுக்கு பின்னும் கோடிக்கணக்கான தமிழ்மக்கள் தானே இருக்கிறார்கள். அவர்கள் அந்த அம்மாவை போற்றும் போது நாம் ஏன் மதிக்கக் கூடாது ?

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
நீங்க சொல்வது முற்றிலும் சரிதான் ஜிகே.

செல்வியும் செல்வனும் தேவையில்லாத அடைமொழிகள்தான்.

இன்னும் சொல்லப்போனால் திருமதி,திருவாட்டி எல்லாம் கூட வேணாம். அம்மா, ஐயாகூட என்னத்துக்கு? பேசாம பெயரின் பின்னால் 'அவர்கள்' என்ற சொல்லை அனைவருக்கும் பொதுவாகப் பயன்படுத்தலாம்.

பொண்ணு கல்யாணம் ஆனவளா இல்லை ஆகாதவளான்னு தெரிஞ்சு என்ன ஆகப்போகுது?
//

துளசியம்மா 'அவர்களே',

அவர்களே - சரிதான் ஆனால் அது பொதுச் சொல்லாக இருக்கிறது. சில சமயங்களில் பெயரைக் குறிப்பிடும் போது ஆண்பால் / பெண்பால் தெரிவது தேவை. கிறித்து / இஸ்லாமிய பெயர்களில் ஆண் / பெண் கண்டுகொள்வது சுலபம். ஆனால் இந்திய பெயர்களில் பல பெயர்கள் பொதுவானதாக இருக்கும்.
மாணிக்கம் என்ற பெயரை ஆணுக்கும் பெண்ணுக்கும் வைத்திருக்கிறார்கள்.

ஆண்களை திரு / SIR போட வேண்டிய இடத்தில் பெண்களை திருவாட்டி / Miss அல்லது மேடம் என்று குறிப்பிடலாம். 'செல்வி' சின்னப்புள்ளத்தனமாகவே தெரிகிறது.
:) அதுதான் என் ஆதங்கம் !

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
Good Point.
//

நன்றி குமரன் !

PPattian சொன்னது…

//ஆங்கிலத்தில் சிங்கை மற்றும் வெளிநாடுகளில் எல்லா பெண்களையும் 'miss' என்று தான் குறிப்பிடுவார்கள். நம்ம இந்தியாவில் தான் திருமணம் ஆனவர்களுக்கு 'Mrs'
//

கோவி அவர்களே,

சிங்கை குறித்து எனக்கு தெரியவில்லை. ஆனால், அமெரிக்கா, மற்றும் பிரிட்டனில் என்ன வழக்கு என்பதை கீழ்க்கண்ட விக்கி பக்கத்தில் பார்க்கலாம்.

http://en.wikipedia.org/wiki/Ms.

செல்வி என்பதில் எனக்கும் உட்ன்பாடில்லைதான். நன்றி.

சாணக்கியன் சொன்னது…

அண்டம் காக்கும் உலக மாதா என்று அழைப்பதே சரியானது

ஜமாலன் சொன்னது…

இன்றும் குப்பையைக் கீளாராமல் நல்ல பதிவைப் போட்டீர்கள்.

உங்களது அரசியல் ஜனநாயகத்திற்கு வழ்த்துக்கள்.

பிரச்சனையை பெண்ணிய நோக்கில் அனுகியிருப்பதுது அருமை. பொதுவாக பெண் நண்பர்கள நண்பர் அல்லது தோழர் என்ற அழைப்பதே எனது வழக்கம். திருமதி, திரு பொன்றவை எல்லாம்... பாலின வேறுபாட்டை அடிக்கடி நினைவூட்டவும் வேறுபடுத்தி காட்டவும் ஆன சொற்கள். இது ஒரு ஆணிய அரசியல்தான்.

நன்றி.

G.Ragavan சொன்னது…

அரசியலில் ஜெயலலிதாவைப் பிடிக்காது என்பதைத் தவிர்த்து அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சொல்ல என்னிடம் எந்தக் கருத்தும் இல்லை. அவர் எத்தனை பேருடன் வாழ்ந்தார் என்று ஏளனம் செய்கின்றவர்கள் எத்தனை பேர்களை மனதால் நினைத்து மகிழ்ந்திருத்திருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்க்கட்டும் முதலில். அவருடைய அரசியல் செயல்பாடுகளைக் குறை சொல்ல வேண்டுமா..நானும் தயார். அதையும் இதையும் குழப்பக் கூடாது.

முதற்கண் திருமதி என்ற சொல்லை திருமணமான பெண்களுக்கு மட்டுந்தான் பயன்படுத்த வேண்டும் என்று எதுவும் சட்டம் இருக்கிறதா? இலக்கணம் இருக்கிறதா? மிஸ்டர் மிஸல்ல இருந்து கடன் வாங்குனதுதான. அப்புறமென்ன...எத்தனை தமிழ் இலக்கியங்கள்ள திருமதியைக் கல்யணாமான பெண்களுக்குப் பயன்படுத்தியிருக்காங்க?

பேரைப் பாத்ததும் அவங்களுக்குக் கல்யாணம் ஆயிருச்சான்னு கண்டிப்பாத் தெரியனுமா? தெரியலைன்னா ஒலகம் இடிஞ்சிருமா?

பேசாம ஆண்ணா திரு...பெண்ணா திருமதி.... இளைஞர்களாக இருந்தா செல்வன் செல்வி. அத்தோட முடிச்சிட்டுப் போய்க்கிட்டேயிருக்கனும். அதுதான் சரீன்னு தோணுது.

கோவி.கண்ணன் சொன்னது…

//PPattian : புபட்டியன் said...

கோவி அவர்களே,

சிங்கை குறித்து எனக்கு தெரியவில்லை. ஆனால், அமெரிக்கா, மற்றும் பிரிட்டனில் என்ன வழக்கு என்பதை கீழ்க்கண்ட விக்கி பக்கத்தில் பார்க்கலாம்.

http://en.wikipedia.org/wiki/Ms.

செல்வி என்பதில் எனக்கும் உட்ன்பாடில்லைதான். நன்றி.//

புபட்டியன் சார்,

சுட்டியைப் பார்த்தேன். மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//சாணக்கியன் said...
அண்டம் காக்கும் உலக மாதா என்று அழைப்பதே சரியானது

12:47 PM, October 20, 2007
//

வாங்க இரண்டாம் இலைக்காரரே.
ஆதிபராசக்தி என்று அழைப்பதில் உங்களுக்கு தயக்கம் இருக்கிறதா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜமாலன் said...
இன்றும் குப்பையைக் கீளாராமல் நல்ல பதிவைப் போட்டீர்கள். //

சூடான இடுகைக்க்கு பதிவு போடவேண்டும் என்று கை அறித்தது. தவறாக நினைக்காதீர்கள் !
:))

//உங்களது அரசியல் ஜனநாயகத்திற்கு வழ்த்துக்கள். //

நன்றி !

//பிரச்சனையை பெண்ணிய நோக்கில் அனுகியிருப்பதுது அருமை. பொதுவாக பெண் நண்பர்கள நண்பர் அல்லது தோழர் என்ற அழைப்பதே எனது வழக்கம். திருமதி, திரு பொன்றவை எல்லாம்... பாலின வேறுபாட்டை அடிக்கடி நினைவூட்டவும் வேறுபடுத்தி காட்டவும் ஆன சொற்கள். இது ஒரு ஆணிய அரசியல்தான்.

நன்றி.

3:38 PM, October 20, 2007
//

பாலியல் வேறுபாட்டைகுறிப்பிடுவதற்க்கு மட்டுமே பயன்படுத்தலாம் தவறே இல்லை. மலர்களில் வண்ணங்களும், நறுமணம் வேறுபட்டு அடையாளப்படுத்துவது சிறப்பு. ஆனால் இங்கு 'செல்வி' என்று சொல்வது முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களை சொல்வதென்பது ஏற்புடையதல்ல. திருமணமானவரை செல்வன், செல்வி என்று குறிப்பிடுவது சரி என்றால். 'செல்வன் வாஜ்பாய், செல்வன், அப்துல் கலாம், செல்வன் இல.கனேசன்கள்' கூட இருக்கவேண்டுமே. அது இல்லாததால் தான் செல்வி என்று ஜெயலலிதாவையும் பிற திருமணம் ஆகா பெண்களையும் முன்னால் ஆளுனர் செல்வி பாத்திமா பீவி ஆகியோரையும் அழைப்பது, அழைத்தது தவறு தவறு. கருத்துக்கு ஆதரவு தரும் தங்களுக்கும் நன்றி !

ஒரு விவாதத்திற்காக மற்றும் பிணக்கே இல்லாத இந்த பதிவில் கூட பலர் கருத்து சொல்லத் தயங்குவது வியப்பாக இருக்கிறது.
:(((

கோவி.கண்ணன் சொன்னது…

//G.Ragavan said...
அரசியலில் ஜெயலலிதாவைப் பிடிக்காது என்பதைத் தவிர்த்து அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சொல்ல என்னிடம் எந்தக் கருத்தும் இல்லை. அவர் எத்தனை பேருடன் வாழ்ந்தார் என்று ஏளனம் செய்கின்றவர்கள் எத்தனை பேர்களை மனதால் நினைத்து மகிழ்ந்திருத்திருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்க்கட்டும் முதலில். அவருடைய அரசியல் செயல்பாடுகளைக் குறை சொல்ல வேண்டுமா..நானும் தயார். அதையும் இதையும் குழப்பக் கூடாது.//
அரசியல் வாதிகளின் தனிப்பட்ட வாழ்கை குறித்து எழுதினால் அண்ணாத்துரை, கலைஞர், கண்ணதாசன் எவரும் யோக்கியர்கள் இல்லை. இதில் ஜெவை மட்டும் இழித்து கூறுவதென்பது ஏற்கத்தகதல்ல, மன அழுக்கு என்பதைத் தவிர்த்து வேறு என்ன சொல்வது ? உங்கள் கருத்தை ஏற்கிறேன்.

/முதற்கண் திருமதி என்ற சொல்லை திருமணமான பெண்களுக்கு மட்டுந்தான் பயன்படுத்த வேண்டும் என்று எதுவும் சட்டம் இருக்கிறதா? இலக்கணம் இருக்கிறதா? மிஸ்டர் மிஸல்ல இருந்து கடன் வாங்குனதுதான. அப்புறமென்ன...எத்தனை தமிழ் இலக்கியங்கள்ள திருமதியைக் கல்யணாமான பெண்களுக்குப் பயன்படுத்தியிருக்காங்க?//

பெண்ணை அடிமை படுத்தவேண்டும் என்று கூட எந்த சட்டமும் இல்லை. ஆனால் எழுதப்படாத சட்டமாக நடைமுறையில் இருக்கிறதே. திருமதி என்பது கெளவுரவ பதவி போன்றும் அது திருமணம் ஆனவர்களுக்கு போடும் புகழ்மாலை போலவும், என்று சொல்லும் அளவுக்கெல்லாம் பெண்களை சமூகத்தில் வைத்திருக்கவில்லை. அப்படி இருக்கையில் திருமணம் ஆகாத பெண்களை திருமதி என்று சொல்வதில் என்ன தவறு ? என்று தெரியவில்லை. செல்வி என்பது திருமணம் ஆனவரா ஆகாதவரா என்று வெளிச்சம் போடவே பயன்படுகிறது. ஜெ போன்றவர்கள் இந்த அவமதிப்புகளை எதிர்த்து மாற்றிக் காட்ட வேண்டும்.

//பேரைப் பாத்ததும் அவங்களுக்குக் கல்யாணம் ஆயிருச்சான்னு கண்டிப்பாத் தெரியனுமா? தெரியலைன்னா ஒலகம் இடிஞ்சிருமா?//

ஆதானே...ஆண்கள் ஆகி இருந்தாலும் பெரும்பாலும் மறைக்கவே விரும்புகின்றனர்.
:)

//பேசாம ஆண்ணா திரு...பெண்ணா திருமதி.... இளைஞர்களாக இருந்தா செல்வன் செல்வி. அத்தோட முடிச்சிட்டுப் போய்க்கிட்டேயிருக்கனும். அதுதான் சரீன்னு தோணுது.
//

நாம வலைப்பதிவில் முன்னாள் முதல்வர் திருமதி ஜெயலலிதா என்று எழுதி முன்னேடியாக இருப்போம். யார் என்ன செய்ய முடியும் !
:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்