பின்பற்றுபவர்கள்

31 ஆகஸ்ட், 2007

கிட்ட பார்வையும் வேண்டாம், தூரப் பார்வையும் வேண்டாம், நெருப்பை நெருப்பின்மையினால் தான் அணைக்க முடியும்

நான் பெளத்தன் அல்ல, ஆனால் எனக்கு புத்தரை பிடிக்கும்,

ஒரு முறை சுஜாதை என்ற பெண்மணி தன் இறந்த மகனை எடுத்துக் கொண்டு, புத்தன் என்ற மகானிடம் சென்றால் பிழைக்க வைத்துவிடலாம் என்று புத்தரிடம் வந்தார்.

அவரிடம் நடந்ததைச் சொல்லி தன் ஒரே மகனை பிழைக்க வைக்கச் சொல்லி கேட்டாள், 'சரி செய்கிறேன் ஆனால் நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என்றார் புத்தர். 'சரி சொல்லுங்கள்' என்றால் சுஜாதை. 'சரி அம்மா, இந்த ஊரில் யார் விட்டில் துக்கம் இதுவரை நடக்கவில்லையோ அவர்கள் வீட்டிற்கு சென்று சிறிது உப்பு வாங்கிவா, உன் மகனை பிழைக்க வைத்துவிடுகிறேன்' என்றார். இது எளிதான வேலை என்று நினைத்தவள் இறந்த மகனை அங்கேயே விட்டுவிட்டு, வீடுவீடாக சென்று விசாரித்தாள், ஒவ்வொரு வீட்டிலும் எதோ ஒரு விதத்தில் துக்கம் நடந்ததைச் சொல்லி கையை விரித்தார்கள். மாலை வரை ஒவ்வொரு வீடாக சென்றவளுக்கு இறுதியில் மரணம் என்பது இயற்கை என்று தெரிந்தது. பின்பு புத்தரை வணங்கி, தாம் மரணத்தை உணர்ந்து கொண்டதாக சொன்னாள். பின்பு ஒரு நாள் பெளத்த துறவியானாள்.

மரணம் என்பது இயற்கை அது வந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுரையாக சொல்லாமல் அவளாகவே புரிந்து கொள்ள வைத்தார்.

தலைப்பு ? அது புத்தர் கதைகளில் வரும் ஒரு குட்டி கதையில் இடம் பெற்ற அறிவுரை,

கிட்டப் பார்வையும் வேண்டாம் : எல்லோரிடத்திலும் மிக நெருங்கி சென்றுவிடக் கூடாது. அப்படி இருந்தால் எதாவது பிணக்குகள் வந்தால் தாங்கிக் கொள்ள முடியாது.

தூரப் பார்வையும் வேண்டாம் : எப்போதாவது நண்பர்களுக்கு இடையே பிணக்குகள் ஏற்பட்டால் அதை எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தால் தேவையற்ற விரோதம் வளர்ந்து விரிசல் வளர்ந்து கொண்டே செல்லும், அது முடிவுக்கும் வராது. அதாவது விலகிச் சென்று கொண்டே இருப்பது தூரப் பார்வை !

வெறுப்பை வெறுப்பால் நீக்க முடியாது. நெருப்பை அணைக்க நெருப்பின்மையை (நீரை) பயன்படுவது போல்வெறுப்பை அணைக்க வெறுப்பின்மையை அதாவது மறக்க முயலவேண்டும் அல்லது மன்னித்து அ(ரவ)ணைக்க வேண்டும் !

25 ஆகஸ்ட், 2007

*நட்சத்திரம்* : ஒருவார காலம் நிறைவு பெறுகிறது !

தாழ்வு மனப்பான்மை இருக்கும் வரை நாம் நினைப்பதை எதையும் செயல்படுத்த முடியாது. தாழ்வு மனப்பான்மை என்பது ஐம்பது விழுக்காடு தன்னுணர்வுகளால் இயல்பாக இருப்பவை, பிறரைப் பார்த்து அவற்றை நாமே நீக்கிக் கொள்ள முடியும். மீதம் ஐம்பது விழுக்காடு சமூகம் நம்மீது திணிப்பது. ஒரு ஆசிரியர் ஒரு மாணவனைப் பார்த்து 'நீ மாடுமேய்க்கத்தான் லாயக்கு' என்று சொல்லும் போது, அதே போன்று வசை மொழிகளைப் பெற்ற 90 விழுக்காடு மாணவர்களுக்கு தாழ்வு உணர்ச்சி வந்துவிடும் மீதம் 10 விழுக்காட்டினரே 'நாமும் வாத்தியாருக்கு பாடம் கற்றுக் கொடுப்போம்' என்று எதிர் உணர்வுகளால் தூண்டப்பட்டு தாழ்வுணர்வுகளில் இருந்து மீண்டு மிளிர்வர்.

சமுதாய அளவிலும் நடப்பதும் இதேதான். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை, அல்லது தன் காலடியில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கும் சமூகங்களை, ஆதிக்க சக்திகள் அமுக்கியே / அடக்கியே தொடர்ந்து வைத்திருப்பதற்கு இதே உத்தியைத்தான் பயன்படுத்துகின்றன. 'அறிவு, திறமை எல்லாம் 'வித்தில்' இருந்தே வருபவை எனவே நாங்களே அறிவாளிகள், இந்த கீழ்சாதியில் பிறந்தவர்களான நீங்கள் அறிவு சார்ந்த வேலைகளையோ, கல்விகளையோ நினைத்தாலும் உங்களால் அடைவதற்கான அறிவு அற்றவர்கள். உங்கள் நிலை என்பது ஆண்டவனே ஆக்கியது, எனவே இதுதான் உங்கள் தலையெழுத்து' என்பர். இதைப் பற்றி சிறிதேனும் சிந்திக்காமல் 'நாம் அப்படித்தான்' என்று முடங்கிவிடுகின்றனர். பார்க்கப்போனால் அறிவு, திறமை, சாதுரியம் மற்றும் அறிவுசார் அனைத்தும் திருடர்களுக்கும், சமூக விரோதிகளுக்கும் கூட இருக்கிறது. சமூகங்களை கீழிறக்கும் அறிவும், நுட்பமும் கூட இத்தகையது தான், இவை தன் நலம் சேர்ந்தவை. இதை 'புத்திசாலித்தனம்', 'பிறப்பின் அடையாளம்' என்று நினைத்துக் கொண்டு பெருமையடைபவர் அடையட்டும்.

********

நான் அண்மையில் 'ஓம்பிரகாஷ் வால்மிகி' என்ற வடநாட்டு தலித்திய இலக்கிய செல்வர் எழுதிய இந்தி நூலின் தமிழ் ஆக்கமான 'எச்சில்' என்பதை படித்தேன். அதில் அவர் தலித்துகளின் தாழ்வு நிலைபற்றி, அதாவது மனித மலத்தை தலையில் சுமப்பதைப் பற்றி எழுதி இருந்தார். அவர் சுட்டி எழுதிய அனைத்தும் சுதந்திர வாங்குவதற்கு முந்தைய நிகழ்வு அல்ல. எல்லாம் 1980 களில் நடந்தவை. இன்றும் நடப்பவை, நண்பர் சிவபாலன் கூட அதுபற்றி எழுதியிருந்தார். எல்லாவித கொடுமைகளைப் பற்றியும் எழுதிய அவர் அங்காங்கே குறிப்பிட்ட சில பற்றியங்களும் மனதை ரொம்பவுமே உறுத்தியது. அதாவது விழிப்புணர்வு பெற்று படித்து எழுபவர்களும் நகரத்தில் உயர்ந்த அரசாங்க வேலையில் அதிகாரியாக அமர்ந்துவிட்டால், அங்கு தம்மை சந்திக்கவரும் தங்கள் சமூகத்தின் உறவினர்கள் எவரையும் வீட்டுக்குள் அனுமதிப்பது இல்லை என்றும், முடிந்த அளவுக்கு உறவினர்கள் தங்களை நகரங்களில் வந்து சந்திப்பதை தவிர்க்கவே விரும்புகின்றனர். ஏனென்றால் இவர்களெல்லாம் உறவினர்கள் என்று தெரிந்துவிட்டால் தங்களுக்கு கிடைக்கும் சமூக மரியாதை கிடைக்காமல் போய்விடும் என்று தயங்குகிறார்கள் என்றெல்லாம் நிகழ்வுகளுடன் எழுதி இருந்தார். அது உணர்வுகளை பேசும் ஆக்கம்.

அவர் சுட்டிக்காட்டிய இந்த தாழ்வுணர்வை என்னவென்று சொல்வது ? தலித் சமூகம் அல்லது தாழ்த்தப்பட்ட சமுகத்திடமிருந்து, அவர்களில் ஒருவராக இருந்தவர்கள் தப்பி வந்து சுதந்திரகாற்றை சுவாசிப்பது போல் நினைத்துக் கொள்கிறார். தன் நிலை உயர்ந்தால் போதும் என்ற மனப்பான்மையில் தொடருவதால், கொடுமைகளை அனுபவித்தவர்களே எதிர்க்க தயங்கும் போது இவர்களால் அந்த சமூகத்தினருக்குதான் என்ன லாபம் ? இங்கு அந்த சமூகத்தை சேர்ந்தவர்களே தம் சமூகத்தை ஒதுக்கிறார்கள் என்று தெரிகிறது. இது பிறர் சாதியினர் அந்த சமூகத்துக்கு எதிராக செய்யும் துரோகத்தைவிட கொடுமையானது. தம் சமூகம் தாழ்ந்தது அல்ல, கல்வி, கேள்விகளில் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று வெளிப்படுத்த இவர்களுக்கு வாய்ப்பு இருந்தும் தம் உறவினர்களால் தம் சாதி வெளியே தெரிந்துவிட்டால் வெளியில் கிடைக்கும் மரியாதை கிடைக்காமல் போய்விடும் என்று, அந்த மரியாதைக்காக மாய வேலியை தங்களுக்குள் போட்டுக் கொள்கிறார்கள். படிப்பறிவு பெற்றும் கோழைகளாகவே இருக்கும் இவர்களின் இந்நிலை மாறவேண்டும்.

*******

கடவுளை நம்பாதவர் இவை இவையெல்லாம் மூடநம்பிக்கை என்று சுட்டிக் காட்டி அதன் பிறகு அவையெல்லாம் மாறுவதற்கு பதில், அந்தந்த மதத்தில் இருப்பவர்களே மனித வாழ்க்கைக்கு ஒவ்வாத ஒன்றை மதம் என்ற பெயரில் சிலர் தாங்கிப் பிடிப்பதை உணர்ந்து, அவற்றை விலக்க முன்வரவேண்டும். அதில் உள்ளவர்களுக்கு மட்டுமே எவை எவை கீழான, தாழ்வான மற்றும் மூட நம்பிக்கைகள் என்பது நன்கு தெரிந்திருக்கும். கடவுளை நம்பாதோர் எவரும் வழிபாட்டு உரிமை தங்களுக்கு வேண்டும் என்பதற்கு போராடவில்லை, நம்பிக்கையுடன் வருபவர்களை மறுக்காதே என்று தான் போராடுகிறார்கள், இதில் சுயநலம் என்பது எங்கே இருக்கிறது ? அதையும் தாண்டி மக்களால் அவர்களது சிந்தனைகள் கவரப்படலாம், மக்கள் அவர்களுக்கு தங்கள் சார்பில் பேசுகிறவர் என்ற அங்கீகாரம் கொடுக்கிறார்கள்.

இதை ஆத்திகர்களே செய்யலாமே. மதங்கள், கடவுள் நம்பிக்கை சமூக நல்லிணக்கத்துக்குத்தான் என்று நம்பும் ஆத்திகர்களுக்குத்தான் மூடநம்பிக்கை பிசாசுகளை விரட்ட வேண்டிய அந்த பொறுப்பு நிறையவே இருக்கிறது. இதை விடுத்து எதிர்ப்புகளை எதிர்பாக நினைத்து தற்காக்க சப்பைக்கட்ட நினைத்தால் நாத்திகன் பேசிக் கொண்டுதான் இருப்பான். மூடநம்பிக்கைக்கு நாத்திக பேச்சுகள் (பிரச்சாரம்) அடங்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்திகர்கள் மூடநம்பிக்கைக்கு எதிரான போராட்டங்களை தங்களே கையில் எடுத்துக் கொள்ளவேண்டும். இவர்கள் செய்ய வேண்டியதை நாத்திகர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆத்திகர்கள் நன்றி கூற கடமைப்பட்டவர்கள். நம்மிடையே இருக்கும் சில பதிவர்கள் குறிப்பாக பதிவு நண்பர் ஜி.ராகவன் மற்றும் பதிவு நண்பர் குமரன் ஆகியோர் பக்தியை வளர்த்தும், தமிழையும் வளர்த்தும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் அவ்வப்போது எழுதி வருகிறார்கள் அவர்களை பாராட்டுகிறேன். நண்பர் கண்ணபிரான் ரவிசங்கர் இனி அவற்றில் கவனம் செலுத்தப் போவதாக ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருந்தார் பாராட்டுகிறேன், வரவேற்கிறேன்.

*******

பரம்பரைகளுக் கென்றே உரிமை உள்ள சொத்துக்களும், உழைத்து வாழ வேண்டிய நிலை என்று எதுவும் இன்றி அல்லது உழைப்பே தேவையின்றி நிரந்தர வருமானம் இருந்தால் பொழுது போகாமல் அல்லது அதுமட்டுமே வேலை என வேதங்களை, புராணங்களைப் படித்து இறைவன், பேரானந்தம், மாயை, பிரம்மம் போன்ற பேருண்மைகளை உலக்குக்கு சொல்லும் 'உயர்ந்தவர்கள்', 'சமயத்தலைவர்கள்' ஆகமுடியும் அதில் அறிந்தபடி தமிழ் சூத்திர பாசை என்ற கண்டுபிடிப்பையும் வெளியில் சொல்லமூடியும். இதற்கெல்லாம் வாய்பே இல்லாமல் இருப்பவர்களுக்கு வேதங்களும் மதப்பெருமைகளும் புரியுமா என்ன ? :)) அவர்கள் அறிந்திருப்பது பாமரத் தமிழ்தானே.

இவர்களையெல்லாம் கோவிலுக்குள் எப்படி அனுமதிப்பது ? ஆனாலும் எப்படியோ,

கோவிலுக்குள் நுழையும் உரிமை பெற்றுவிட்டோம், நல்ல முன்னேற்றம்! இதில் வளர்ச்சியடைந்திருப்பது கோவில் உண்டியல்களின் உயரமும் x அகலமும், கை நுழையும் அளவுக்கு அகன்றிருக்கும் அதன் வாயும் தான். கருவறைகள் அதே இருட்டில் அதே புனித பூச்சில் இருக்கின்றன. இறைவன் எங்கும் இருக்கையில் கோவிலுக்கு ஏன் செல்ல வேண்டும் ? என்ற பக்தியாளரின் கேள்விக்கு ஒரு பக்தி நூலில், 'பசுவின் உடம்பு முழுவது பால் இருந்தாலும் மடியில் கறந்தால் மட்டுமே கிடைக்கும் என்று சொல்வர், இதுதான் இறைவனுக்கும் பொருத்தும்' என்ற அறிவு (பூர்வமான) முழுமையான பதில் போல் இருந்தது. இதில் சொல்லாமல் சொல்லி இருப்பது, எங்கும் இருக்கும் இறைவனை மறு(தலி)த்தும், கோவில் என்பது ஒரு அமைப்பு, அதற்கென்றே சில நடைமுறைகள், கட்டுப்பாடுகள் இருக்கிறது அவற்றை மீறக்கூடாது என்பதையும் தான். நாம் நம்வீட்டில், சாமி அறையில், நம்கையால் தூய்மை செய்து, பூசை செய்வதெல்லாம் கடவுள் இல்லையா ? அவை வெறும் பதுமைகள் என்று மறைமுகமாக துனிந்தே ஆகமத்தின் பெயரால் சொல்கின்றனர். நாத்திகன் கூட அவ்வாறெல்லாம் சொல்வதில்லை. கோவில் என்பதன் அமைப்பே பொதுமக்கள் கூடும் ஒரு இடம், இறைவனின் பெயரால் கூடுகிறார்கள். அங்கு வருகிறார்கள். இதற்கனவே திருவிழாக்கள் அமைக்கப்பட்டு இருகின்றன. அரசாங்க அறநிலையத்துறையின் கண்காணிப்பில் இருக்கும் கோவில்கள் பொது சொத்து. இதில் இறை நம்பிக்கை உடையவர் சென்று தம் மொழியில் பாடுவதற்கு அனுமதி இல்லை, காரணம் ஆகமங்கள் அனுமதிக்கவில்லை புனிதம் கெட்டுவிடும் என்று சொல்வதெல்லாம் மறைமுகமாக இறைவன் எங்கும் இல்லை எங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறான் என்று சொல்வதைத்தான். ஆத்திக அன்பர்கள் சிந்தித்து புறக்கணிக்க வேண்டும் அல்லது மாற்ற முயலவேண்டும்.

********

நட்சத்திர இடுகைகளுக்கு என்று எழுதிய அனைத்தையும் வெளியிடவில்லை. பேசும் பொருள் வேறு வேறு என்றாலும் அதாவது, சாதி வெறி, மதமூடநம்பிக்கைகள், தமிழ் தூற்றல் ஆகிய பற்றியங்களில் எழுதும் போது இவையெல்லாம் சமுதாயத்திற்கு எதிராக, ஆதயத்துக்காக ஒரே கட்டாக முப்புறி நூல்களால் பினை(யாக்)கப்பட்டு இருக்கின்றன என்பது தெரிகிறது. இவை வெறும் நைந்து போன நூல்கள் தான். பெண்கள் மஞ்சள் கயிற்றுக்கு கணவனுக்கு கொடுக்கும் மரியாதையைப் போலவே, நைந்த நூல்களை 'புனிதம், உயர்வு, வேதங்களில் சொல்லி இருப்பது, ஆகமம்' என்று இறைநம்பிக்கை, மதநம்பிக்கை என்ற பெயரில் மாயத் தளைகளை அப்படியே விட்டு வைத்திருக்கிறோம். சாம்ராஜ்ஜியங்களே காலவெள்ளத்தில் காணமல் போகும் போது நைந்த நூல்கள் நிலைக்காது என்று நம்புகிறேன்.

நட்சத்திர இடுகைகள் யாவிலும் நான் எழுதியவை கருத்துப் பரிமாற்றம் மட்டுமே எதையும் வரையறுக்கவும், வலியுறுத்துவதற்காக எழுதவில்லை. அனைத்து பதிவுகளிலும் தங்களுக்கு பிடித்த பதிவுகளுக்கு பின்னூட்டம் இட்ட பதிவ நண்பர்களுக்கு /நண்பிகளுக்கு மிக்க நன்றி. படித்து விட்டு மெளனமாக சென்ற மற்றவர்களுக்கும் நன்றி. பின்னூட்டங்களுக்கு உடனடியாக மறுமொழி கூற இயலாமல் போனதற்கும் வருந்துகிறேன். எழுதுவதற்கு இலவச தளம் அளித்த கூகுள் நிறுவனத்தாருக்கும், ஒருவாரம் நட்சத்திரமாக இருப்பதற்கு அழைப்பும், வாய்ப்பும் அளித்த தமிழ்மணம் நிர்வாகத்தினர் அனைவருக்கும் நன்றி !

அடுத்து நடசத்திரமாக அமரப்போகும் பதிவருக்கும் முன்கூட்டியே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழிய நற்றமிழ் ! வாழிய வாழியவே !!!

அன்புடன்,

கோவி.கண்ணன்



*நட்சத்திரம்* : கருத்து உரிமைகள் (சுதந்திரம்) !

கவிதைகள் மீது எனக்கு ஈடுபாடு வந்ததற்கு முதன்மைக் காரணமாக நான் நினைப்பது கவிஞர் வாலி மற்றும் கவிஞர் வைரமுத்து. சுற்றி வளைக்காது "நச்" சென்று எழுதுவதில் இருவரும் வல்லவர்கள். பெரியவர் வாலி எதுகை மோனைக்காக கவிதைகளில் ஆங்கில சொற்களை எடுத்தாளுவார், வைரமுத்து திரைப்படப் பாடல்களில் அதைச் செய்வார். இளமை என்பது பருவமே இல்லை, அது மனம் சார்ந்த அகப்பொருள். அது என்றும் இருப்பது, இதை நான் வாலியின் கவிதைகளை (சு)வாசிக்கும் பொழுது அவருடைய எழுத்தின் துள்ளல்கள் சொல்லிக் கொடுத்த பாடம். சில ஆபாச ('எப்படி எப்படி போன்ற') பாடல்களை அவர் எழுதி இருந்தாலும் என் ஆசாபாசத்துக்குள் என்றுமே இருப்பவர் கவிஞர் வாலி. கற்பனை என்ற விடயத்தில் எழுதும் பொழுது அது கவிதையானாலும் சரி கதை ஆனாலும் சரி அதை எழுதுபவரின் கற்பனை என்ற இடத்தில் நிறுத்திப் பார்பது போதும், அதை தாண்டி இப்படி கீழ்தரமாக எழுதுபவரும் கீழ்தரமான ஆளாக இருப்பார் என்று ஒரு சிலர் (எப்போதும் அப்படியே நடந்து கொள்பவர்) தவிர்த்து மற்றவர்கள் குறித்து மிதமிஞ்சிய கற்பனைகள் தேவையற்றது என்றே கருதுகிறேன். ஏனென்றால் 'பாசிட்டீவ் திங்' என்ற வரையரைக்குள் எழுத்தாளன் இருந்தால் எந்த அவலத்தையும் எழுத்தில் கொண்டு வரமுடியாத கட்டுப்பாட்டை அது அவனுக்கு விதித்துவிடும்.

உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே செய்யும் மிகச்சிலரின் ஆக்கங்கள் தவிர்த்து...கவிதையோ, கதையோ, கட்டுரையோ அதில் சொல்லுவருபவை அல்லது கருப்பொருள் விமர்சனத்துக்கு வரலாம் ஆனால் அதை சொல்பவரின் மனமோ அல்லது அவரது தனிப்பட்ட குணமாக அவரது ஆக்கத்தை விமர்சனமாக்கக் கூடாது என்றே நினைக்கிறேன், எல்லோரும் கண்டு கேட்ட அடிப்படையிலேயே தான் எழுதுகிறார்கள் தன்(சுய) விருப்பங்களும் கற்பனையில் இருக்கும் என்பதை ஒப்புக் கொள்ளலாம். அத்தகைய விருப்பத்தை ஒருவர் எழுதும் போது எல்லோரையும் போலவும் அவர்களும் சமூக பொறுப்புணர்வுடன்தான் செயல்படுவார்கள் என்பதையும் முதலில் நம்பி அதன் பின் ஆராய்ந்தே மறுத்துரைக்கலாம். விமர்சனமே இல்லாமல் ஒன்று எழுதவேண்டுமென்றால் அது 'சுற்றுலா சென்று வந்ததைப்பற்றி சிறு குறிப்பு வரைக' என்று பள்ளிகளில் ஆசிரியர் தரும் வீட்டுப்பாடத்துக்கு எழுதப்படும் கட்டுரைகள் மட்டுமே.

பதிவுலகம் போன்ற ஊடகத்தில் 'பாசிட்டிவ் திங்கிங்' என்ற எவரும் அறிவுறுத்தினால் அவர் பரிதாபத்துக்கு உரியவர்தான். குப்பனும் - சுப்பனும் பதிவு எழுத வந்தால் அவர்களுக்கு எழுத்து வரமால் போகலாம், பொது இடத்தில் எப்படி பேசுவது என்று தெரியாமல் போகலாம், ஆனால் அவர்களுக்கு இருக்கும் கருத்தை அவர்கள் மொழியில் அவர்களால் வெளிப்படுத்தவரும், அதை எவரும் தடை போடமுடியாது, என்பதைப் புரிந்து கொண்டால், பதிவுலகம் வார இதழ்கள் போல் இல்லாமல் எல்லைகள் உடைந்து பால்வெளி போல விரிந்து இருக்கும். முகம் சுளிக்க வைக்கும் ஆபாசங்கள் எப்பொழுதும் நம்மை சுற்றி நடப்பவையே, காதில் விழுந்தாலும் அவற்றில் நாம் கவனம் செலுத்துவதில்லை. பொருட்படுத்துவதில்லை. இணையத்திலும் இதே நிலையை வைத்துக் கொண்டால் போதும் அவரவர் எண்ணத்தை எழுதுவதற்கு வரும் எதிர்வினை ஆபாசங்கள் குறித்து ஐயப்படத்தேவை இல்லை. நாம் 'சமூக பொறுப்புடன்' தான் எழுதி இருக்கிறோம் என்று 'மனசாட்சிப்படி' உணர்ந்தால், வீனான ஆபாச அர்சனைகளை பற்றி கவலைக் கொள்ளத் தேவை இல்லை.

புனிதர்பட்டம் நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் போது, நம்மை நம் செயல்களை புனிதமாக நினைத்து அல்லது நம்மை / நம்மை சார்ந்தோரின் கீழ்தர செயல்களை முற்றிலும் மறந்துவிட்டு மற்றவர்கள் எல்லோரும் குறையுடவர்கள் போலவும் அவர்கள் எல்லோரும் அபத்தமாக நடந்து கொள்பவர்கள் என்று தெரிவது நம் மனவியாதியே அன்றி வேறொன்றும் இல்லை. அதற்காக கருத்துக்கு எதிர்கருத்து தேவை இல்லை என்ற சொல்லவரவில்லை. அவரவர் எண்ணத்தில் அவரவர் அறிந்துள்ள எல்லைக் குட்பட்டே எழுதுகிறார்கள் என்று புரிந்து கொண்டு மறுமொழிய முன்வரவேண்டும்.

நான் இங்கு பதிவுலகம் குறித்து வரையரைகளை செய்ய முயலவில்லை, காலப்போக்கில் அதுவாகவே ஒரு வடிவத்தை பெற்றுவிடும். எனது கருத்துக்களை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புடன்,

கோவி.கண்ணன்



அடுத்து ஒரு நிறைவு இடுகையுடன், எனது நட்சத்திர வாரம் நிறைவடைகிறது !

24 ஆகஸ்ட், 2007

*நட்சத்திரம்* : முக்கூடல் நகர் நாகை !

நாகை என்று சுருக்கிக் கூறப்படும் எனது ஊரான நாகப்பட்டினத்தைப் பற்றி பதிவுலக நண்பர்கள் நாகை சிவா மற்றும் வடுவூர் குமார் போன்றோர் எழுதி இருக்கின்றனர். இந்த இடுகையில் நாகையை பற்றி நான் அறிந்தவைகளை இங்கு தருகிறேன்.

நாகப்பட்டினம், நாகர்கோவில் என்ற பெயரை வைத்து அவை அருகருகே இருப்பது போல் எனது சென்னை நண்பர்கள் நினைத்துக் கொள்வார்கள். பலருக்கும் கூட அந்தக் குழப்பம் இருக்கும். எனக்கும் பல ஊர் பெயர்கள் தெரிந்தாலும் அங்கு சென்றதில்லை என்பதால் அந்த ஊர்களின் இருப்பிடம் குறித்த தெளிவு இருக்காது. சென்னையிலிருந்து கன்யாகுமரி வரை உள்ள கிழக்கு கடற்கரையில் நடுவில் அமைந்திருக்கிறது நாகை. சென்னையில் இருந்து சரியாக 300 கி.மீ. அதே தொலைவு தான் கன்யாகுமரிக்கும் நாகைக்கும் இடையில் இருக்கிறது. கூகுள் புவிப்படத்தில் (மேப்) தெளிவாக தெரியும்.

ஆங்கிலேயர்காலத்திலும் அதன் பிறகு சென்ற முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை கப்பல் வழி வணிகம் நாகையில் கொடிகட்டி பறந்தது. கப்பலில் சுமை தூக்கும் வேலைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த தேவர் வகுப்பு பாட்டாளிகள் பின்பு அங்கேயே தங்கி நகரின் மையப் பகுதிகளில் 1000 குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றனர். அது போல் கப்பல் வழி வணிக போக்குவரத்திற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து அதில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர் சமுதாயமும் நாகையில் வாழமுடிவு செய்து நகரின் மற்றொரு பகுதியில் 1000 குடும்பங்களுக்கும் மேல் வசிக்கின்றனர். இதைத் தவிர மற்ற இந்து பிரிவினர் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை சாதி பெயர் தாங்கிய தெருக்களில் அந்தந்த சாதியினரே வசித்து வந்தனர். இப்பொழுது எல்லா சாதியினரும் அனைத்து தெருக்களிலும் வசிக்கிறார்கள், ஊர் பெரியதாகிவிட்டது என்றாலும் மாவட்ட தலைநகரம் என்ற தகுதியில் இருக்கும் மிக சிறிய நகரம் (நகராட்சி), எண்ணை வளம், இயற்கை சமையல் வாயு போன்ற தொழில் துறைகளும் அதன் நிறுவனங்களும் அருகிலேயே அமைந்திருக்கிறது. நாகை மாவட்டத்தின் முதன்மை தொழில் விவசாயம் அதில் நெல் சாகுபடி தான். யூனியன் பகுதியான காரைக்கால் நாகைக்கு வெகு அருகில் இருப்பதால் நாகை குடிமகன்களுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதே இல்லை. :) பேருந்து நிலையத்தில் விற்கப்படும் பொருட்கள் குளிர் பாணங்களுக்கு கூடுதலாக விலை வைக்க மாட்டார்கள்.

நாகையில் மும்மதத்தினர் தற்போது வசிக்கின்றனர், துறைமுகமாக சோழர்காலத்தில் இருந்த நாகையில் அவர்கள் அமைத்த புத்தவிகார் இருந்ததாக வரலாற்றுச் செய்திகள் சொல்லுகின்றன. நாகர் என்னும் பழங்குடியினர் வாழ்ந்ததால் நாகப்பட்டினம் என்ற பெயர் பெற்றதாக தெரிகிறது. நாகையில் வெள்ளையர்கள் பல மாளிகைகளைக் கட்டி தமிழக தென்பகுதில் ஒரு சிறிய நகரமாகவே வைத்து இருந்தனர். இன்றும் வெள்ளையர் ஆட்சியில் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டியிலிருந்தே நாகையின் நகராட்சி மூலம் வீடுகளுக்கு அனுப்பப்படுகிறது. அது போல் வெள்ளையர் கட்டிய பலமாளிகைகள் அரசு அலுவலகங்களாகவும், நீதிமன்றங்களாகவும், நீதியரசர்கள் தங்கும் மாளிகைகளாகவும், அரசு விருந்தினர் மாளிகைகளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெள்ளையர்கள் நாகப்பட்டினம் என்பதை பலுக்குவதில் திணறி NEGAPATAM (நேகபடம்) என்று சொல்லிவந்தாக தெரிகிறது.தீயணைப்பு நிலையத்தில் இந்த ஆங்கில பெயர் பெறிக்கப்படடு, 1853 என ஆண்டு குறிப்பும் இருக்கும். சுனாமி இழப்பீடுகளை (நிவாரணம்) பார்வையிட அமெரிக்க அதிபர் கிளின்டன் நாகைக்கு வந்து சென்றிருக்கிறார். நாகை அரசு மருத்துவ மனை மிகப்பெரியது.

மதவிகித மக்கட் தொகையில் மாவட்ட அளவில் இந்துக்கள் பெருமளவிலும், நகர அளவில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் சம அளவில் இருக்கின்றனர். குறிப்பிடும் அளவுக்கு கிறித்துவர்களும் இருக்கிறார்கள். நாகையின் நடுநாயகமாக இருப்பது திரு காயாரோகண சுவாமி - நீலாயதாட்சி திருக்கோவில் சைவ மும்மூர்த்திகளால் பாடல் பாடப்பட்ட மிகப்பெரிய தலம். அது போல் வைணவர்களால் பாடல் பெற்ற தலமான செளந்தராஜ பெருமாள் கோவில் ஆகியவை மிகப்பெரிய ஆலயங்களாக இருக்கிறது. இதைதவிர 50க்கும் மேற்பட்ட சிறிய கோவில்கள் நகரம் முழுவதும் இருக்கிறது. சைவ ஆலயங்கள் இருக்கும் ஊர்களுக்கு முன்னால் அதைக்குறிக்க 'திரு' என்று அடைமொழி பெயர் இருக்கும் (திருவாரூர் இன்னும் பல ) அது போல் நாகையை பற்றிய பக்தி பாடல்களில் திருநாகை என்றும் அந்த பெயர் வழக்கில் இருந்து மறைந்து நாகையாக சுருங்கிவிட்டது.


நாகையின் தனிச்சிறப்பு மும்மத்தினர் விழாக்களில் சேர்ந்து மகிழும் முக்கூடல் நகர் என்றால் அது மிகையல்ல. ஏனென்றால் கத்தோலிக்க கிறித்துவர் புண்ணிய நகரமான வேளாங்கன்னி ஆலயமும், தர்கா வழிபாடு செய்யும் முஸ்லிம்கள் (வாகபிகள் அல்லாதோர்) நாடும் நாகூர் ஆண்டவர் கோவிலும் நாகைக்கு இடம், வலமாக இருப்பதும், அவற்றிற்காக நடக்கும் சந்தனக்கூடு, மாதா பிறந்தநாள் போன்ற திருவிழாக்களும், ஊருக்குள் நடக்கும் கோவில் திருவிழக்களும் நாகையை எப்பொழும் விழா கோலம் பூண்ட ஊராகவே வைத்திருக்கும்.
மும்மத கோவில்களின் கண்ணுற (தரிசனம்) வேண்டுபவர், நாகையின் கலங்கரை விளக்கில் ஏறிநின்று பார்த்தால் சிக்கல் சிங்கார வேலர் கோவில், வேளாங்கன்னி சர்ச் மற்றும் நாகூர் மினோராக்களை ஒரே நேரத்தில் பார்க்க முடியும்.

இதைத்தவிர, மறை மலை அடிகளார் பிறந்த ஊர் என்ற சிறப்பு பெற்றது நாகை. கவி காளமேக புலவர் வாழ்ந்த ஊர் என்ற சிறப்பும் இருக்கிறது.

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன?
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை? - மங்காத
சீரகத்தைத் தந்தீரேல், தேடேன் பெருங்காயம்!
ஏரகத்துச் செட்டியாரே!


கவி காளமேகம் எழுதிய இருபொருள் பாடல். பாடலைப் படிக்கும் போது செட்டியார் கடையில் மளிகை பொருள்களைக் கேட்பது போல் இருக்கும், ஆனால் பாடலின் பொருள் அதுவன்று. வெண்மையான உடலானது மூப்பு அடையக்கூடியது எனவே இதைவிடுத்து உனது திருவருளைப் தா, வேறு எதுவும் வேண்டாம் முருக பெருமானே என்பதுதான். முருகனுக்கு செட்டியார் என்ற பெயரும் உண்டு. (ஓசை செல்லாவின் பதிவில் ஒலியுடன் விளக்கம் இருகிறது)

காளமேகப் புலவர் சொல்வது பலிக்குமாம், அதற்கு பயந்து எல்லோரும் அவர் கேட்கும் முன்பே உணவளிப்பார்கள் ஒரு முறை கவி காளமேகத்தின் மீது சிறுவர்கள் பாக்குக் கொட்டைகளை வீசி அவரை தொல்லைப் படுத்தினராம். அவர் தாங்க மாட்டாது அவர்களுக்கு சாபம் கொடுப்பதற்காக கரியை எடுத்து சுவற்றில் ஒரு பாடலை எழுதினாராம், அதாவது,

பாக்கு தெறித்து ஆடும் பாலருக்கு
நாக்கு....


என்று எழுதிக் கொண்டிருக்கும் போது 'சாமி சாப்பிட வாங்க' என்று ஒரு அம்மையார் இவருக்கு உணவு தர அழைக்க அப்படியே விட்டு சென்றாராம்.
அவர் சென்றதும் அங்கு வந்த சிறுவர்கள் என்ன எழுதி இருக்கிறார் என்று அருகில் சென்று பார்த்த போது முற்றுபெறாமால் இருந்ததை கண்டு,

எஞ்சிய சொற்களைச் சேர்த்து

பாக்கு தெறித்து ஆடும் பாலருக்கு
நாக்கு தமிழ் மணக்கும் நன்நாகை


என்று முடித்து சிறுவர்கள் சென்றுவிட்டனர். திரும்பி வந்து பார்த்த காளமேகத்துக்கு வியப்பாகி விட்டதாம்.

எனென்றால் அவர்

பாக்கு தெறித்து ஆடும் பாலருக்கு
நாக்கு 'தெறிக்க' .....


என்று சாபமாக எழுத நினைத்திருந்தாராம். சரியான நேரத்தில் சிறுவர்கள் சாபம் பெறாமல் தப்பித்தனர். இது போல் பல செய்திகளை காளமேகப் புலவர்பற்றி எனது தந்தையார் என்னுடன் பகிர்ந்திருக்கிறார். நாகையைச் சேர்ந்தவர்களுக்கு ஓரளவு தெரியும்.

புயல் சின்னம், சுனாமி என்று மட்டும் நாகையை தெரிந்து வைத்திருப்பவர்களுக்கு இந்த சிறிய கட்டுரை மாற்றுச் செய்திகளை தந்திருக்கும் என்று நம்புகிறேன்.

--
அன்புடன்,

கோவி.கண்ணன்

*நட்சத்திரம்* : அயோத்தி தாச பண்டிதர் !

இந்த பெயரை எத்தனை பேர் கேள்விப்பட்டு இருப்பார்கள் ? என்பதே கேள்விக்குறி, கேள்விபடும் அளவுக்கு அவர் வளர்ந்திருந்தால் தெரியாமல் போய் இருக்காது என்ற எதிர் கேள்வியும் கூட ஞாயமானதே. அன்றைய அச்சு ஊடகங்களின் ஆதிக்கம் சிலரை கொஞ்சம் அளவுக்கு மிகுந்தே புகழும், சிலரை கண்டு கொள்ளவே கொள்ளாது. எனவே ஊடங்களின் வழி ஒரு சமூகத் தலைவரை கண்டு கொள்ள முடியும் என்பதெல்லாம் சரியான கூற்று அல்ல என நினைக்கிறேன்.அயோத்தி தாச பண்டிதரைப் பற்றி தற்பொழுது பலர் பேச ஆரம்பித்து இருக்கிறார்கள். ஊடகங்கள் வேண்டுமென்றே அயோத்திதாசரை புறக்கணித்தற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அயோத்தி தாசரின் காலகட்டம் 1845லிருந்து 1914 வரை இருந்தது.

அயோத்திதாசர் பெரியாருக்கும் முன்னோடியாக இருந்திருக்கிறார் என்ற தகவலும், அவரது சிந்தனைகளையும் கருத்தில் கொண்டே பெரியார் திராவிட இயக்கத்தை தோற்றுவித்தாக அயோத்திதாசரைப் பற்றி எழுதியிருந்த நூலில் பல பற்றியங்கள் இருக்கிறது

சரி, இவரைப் பற்றி ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கேள்வி கூட வரும். சமயம், இலக்கியம், மறுமலர்ச்சி இதெற்கெல்லாம் வித்திட்டவர்கள் பெரும்பாலும் உயர்சாதியினர் மற்றும் அவர்களுக்கு கீழ் உள்ளவர்கள் என்ற கருத்து நிலவி வருகிறது. தலித்துக்கள் எனப்படும் ஆதி (பூர்வ) குடிமக்கள் இவற்றிற்காக என்ன செய்தனர் ? என்ன செய்தனர் என்பதே வெளியில் தெரியாமல் இருக்கிறது. அவர்கள் எல்லோருமே உடல் உழைப்பாளிகளாக மட்டுமே இருந்ததில்லை, நன்கு படித்தவர்களும், சமூக மாற்றத்திற்கு வித்திட்டவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் ஒருவர் ஐயா வைகுண்டர், இவரை ஓரளவுக்கு அறிந்திருப்பீர்கள், 18 ஆம் நூற்றாண்டு வரையில் தாழ்த்தப்பட்டவர்களாக நடத்தப்பட்ட சாணார் (சான்றோர்) எனப்படும் நாடார் வகுப்பு மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டினார். அவர் மட்டும் அந்த சமூகத்தில் பிறந்திருக்காவிடில் நாடார் சமூகம் அனைத்தும் கிறித்துவர்களாக மாறி இருந்திருப்பார்கள். தமது மதத்தை கிறித்துவர்களிடம் விட்டுக் கொடுக்கக் கூடாது மேலும் தம் தமத்தில் தமக்கு உரிமை கிடைக்கப் படவேண்டும் என்ற சிந்தனையில் கிறித்துவ மதமாற்றாளர்களுக்கு எதிராக போராடினார், இந்து மதத்து மூடநம்பிக்கைகளை புறம் தள்ளிவிட்டு 'அன்பு வழி' என்று இந்து மத உட்பிரிவு ஒன்றை ஏற்படுத்தினர்.

மற்றொருவர்,
அயோத்திதாச பண்டிதர் பறையர் (தலித்) குலத்தில் பிறந்தவர், நன்கு படித்தவர், முதலில் வைணவராகவும், அத்வைதம் மீது ஈடுபாடு கொண்டவராகவும் இருந்து வந்ததார். அவரை தீயீல் தள்ளிவிட்டதைப் போன்று பின்பு நடந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் அவர் பலரையும் விழிப்படைய வைத்தார். கிழே அந்த நிகழ்வின் பக்கங்களைக் இணைத்திருக்கிறேன். சொடுக்கி பொருமையாக படியுங்கள், அன்றைய கால கட்டத்தையும், இன்றைய மாற்றங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இன்று வாழும் நாம் முன்னேறி இருப்பதும், விழிப்புணர்வு அடைந்திருப்பது வெள்ளிடை மலையாகக் காட்டும்.

அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் அவரது சிந்தனையில் திராவிட கருத்து வித்தாக ஆனது. 'திராவிட' என்ற சொல்லை 'ஆரிய' என்பதற்கு எதிராக முதன்முதலாக பயன்படுத்த துணிந்தவரும் அவரே. நமக்கெல்லாம் திராவிடக் கழகம் என்பது பெரியார் வழி வந்ததாக மட்டுமே தெரிகிறது. பெரியாருக்கும் அயோத்தி தாசருக்கும் நட்பு இருந்தது, அயோத்திதாசர் நாத்திகர் அல்ல, அவர் பின்பு பல ஆய்வுகளை நடத்தி தமிழக தாழ்த்தப்பட்ட குலத்தினவர் அனைவரும் முன்பு பெளத்த சமயத்தினர் ஆக இருந்தவர்கள், பெளத்த சமயம் சைவ/வைணவத்திடம் வீழ்ந்துவிட்ட பிறகு தாழ்த்தப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டு சேரிக்கு துறத்தப்பட்டனர் என்று ஆதரங்களுடன் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இவர் எழுதிய கட்டுரைகளில் பலவற்றில் அறிய அரிய உண்மைகள் இருக்கிறது, அதில் ஒன்று திருவண்ணாமலை பற்றியது, திருவண்ணமலை தீபத்திருவிழா, பசுநெய்க்கு மாற்றாக ஆமணக்கு எண்ணை கண்டு பிடிக்கப்பட்டதை கொண்டாடுவதற்கு ஏற்பட்ட ஒரு நிகழ்வு என்றும், இன்று அது வேறு புராணங்களுடன் தொடர்பு படுத்திக் கொண்டாடப்படுகிறது என்ற கட்டுரையை நிறைய ஆதரங்களுடன் எழுதியுள்ளார். இது போல் இந்துக்கள் கொண்டாடும் தீபாவளி போன்றவற்றை பற்றி அவர் எழுதிய கட்டுரைகள் இன்றைக்கு சொல்லப்படும் கதைகளைவிட ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இருக்கிறது.

அவருடைய கட்டுரை குறிப்பு ஒன்றில் 'பறையர்' என்ற தாழ்த்தப்பட்டவர்களுக்கு இருக்கும் பெயர் குறித்து ஒரு சுவையான கட்டுரை இருந்தது, அதாவது பிராமணர்கள் தென்புலத்துக்கு இடம் பெயர்ந்த பொழுது அவர்களை பலரும் துறத்தினர். ஒரு பிராமணர் ஊருக்குள் நுழைந்தால் பறை அடித்து எச்சரிப்பது வழக்கமாம், அதானால் பறைகிறவர்கள் இருக்கும் ஊருக்குச் சொல்லும் போது 'பறையன் இருக்கிறான்' எச்சரிக்கையாக செல்லவேண்டும் என்றும் 'பறைகின்றவர்களை' அச்சமுடன் பார்த்து 'பறையன் வருகிறான்' என்று பிராமணர்கள் அழைக்க ஆரம்பித்தார்கள், பின்னாளில் தலித்துக்கள் அடிமைப் பட்டபோது 'பறையன்' என்ற பெயராக அது நிழைத்துவிட்டது என்றும், பிராமணரும், தலித்துக்களும் என்றுமே எதிரியாக இருந்ததற்கு அதுவே காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அன்புடன்,

கோவி.கண்ணன்











*நட்சத்திரம்* : அத்வைதம் - 'உயர்ந்த' ஞானம் ?!

இடம் காலாடி ( ஆதிசங்கரர் பிறந்த ஊர்)

ஒரு இனிய பொழுதின் மாலை, ஆசரமகுடிலுக்கு வெளியில் உள்ள புலிதோல் மீது சங்கரர் அமர்ந்திருக்கிறார்
சிஷ்ய கோடிகள் அவருக்கு முன்னால் அமர்ந்திருக்கிறார்கள்

சங்கரர் நிஷ்டை களையும் நேரம் வந்தது, மெதுவாக கண்கள் திறந்தது, சிறிது நேர மெளனத்திற்கு பிறகு

சங்கரர் : ப்ரியமான சிஷ்யர்களே, நான் இன்று உங்களுக்கு பிரம்ம ஞானத்தை சொல்லப் போகிறேன். கவனமாக கேளுங்கள்.உங்களுக்கு தெளிவு ஏற்படவில்லை என்றால் கேள்வி எழுப்புங்கள்

சிஷ்யர்கள் : லோக குருவான ஆச்சாரியார் அவர்களே அப்படியே ஆகட்டும்.

சங்கரர் : கர்மயோகம் அனைத்தையும் கற்று தேர்ந்து...கூடுவிட்டு கூடு பாய்ந்து காமத்தையும் அறிந்த நான் உலக வாழ்வின் தன்மைகள் முழுதும் அறிந்து கொண்டேன். எனது ஆழ்ந்த யோகத்தின் வழி பிரம்ம ஞானத்தை தெரிந்து கொண்டிருக்கிறேன். பிரம்மத்தை அடைவதே நம் நோக்கம். பிரம்மம் என்பது என்ன ?

சிஷ்யர்களில் ஒருவரான சுரேஸ்வரர் : சுவாமிஜி ... ஆச்சாரியார் அவர்களே... பிரம்மம் பற்றி நம் வேத நூல்கள் கூட சொல்கிறது. பிரம்மம் என்பது ஆகயம் என்று சொல்கிறார்கள், சூரியன் என்று சொல்கிறார்கள். எங்களுக்கெல்லாம் பிரம்மம் பற்றிய புரிதல் குழப்பமாகவே இருக்கிறது.

சங்கரர் : அது ஒருவகையில் சரி ஆனால். பிரம்மம் என்பது எங்கும் நிறைந்திருப்பது, பிரம்மம் தவிர வேறு எதுவுமே இல்லை. பிரம்மம் நிரந்தரமானது, அழிவற்றது பிரம்மமே உண்மை, தினம் மாறும் இவ்வுலகமும், இவ்வாழ்கை எல்லாமும் மாயம். ஒருவன் பிரம்மத்தை அடைவதன் மூலம் பிறப்பற்றவனாகிறான். துன்பம் மிகுந்த உலகவாழ்கையில் இருந்து முற்றிலும் விடுதலை அடைகிறான். பிரம்மத்தை அடைதல் என்பது நீயே பிரம்மாக மாறிவிடுவாது. எங்கும் இருக்கும் பிரம்மத்தில் நுழையும் வாசல் இருக்கிறது. வெளியேறும் வழியில்லை. எனவே பிரம்மத்தை அடைந்தவன் பிறப்பறுக்கிறான். இன்னும் சற்று தெளிவாக சொல்ல வேண்டுமானால் 'ஏகத்துவம்' ஒரேநிலை, அசைவற்ற நிலை, உலகியலுக்கு அப்பாற்பட்ட இறுதி நிலை.

சுரேஸ்வரர் : ஓரளவுக்கு புரிகிறது. ஆச்சாரியாரே... பிரம்மத்தை அடைவது எப்படி ?

சங்கரர் : எங்குமாகி இருக்கும் பிரம்மத்தின் மீது பற்றுதல் கொள்ள வேண்டும், பிரம்மமே உயர்வு என்று எப்பொழுதும் நினைக்க வேண்டும். பிரம்மம் பிறப்பறுக்கிறது என்று உலகத்தாருக்கு உணர்த்த முயலவேண்டும். எந்த வருணத்த்தை சேர்ந்தவனாக இருந்தாலும் பிரம்மத்தை அடைவதை குறிக்கோளாக கொண்டு அதை அடைபவனே பிராமணன் ஆகிறான். உலகில் உள்ள தத்துவ ஞானங்களிலெல்லாம் உயர்நது பிரம்ம ஞானமே, மற்ற ஞானங்கள் வாழ்வியலுக்கும், இறையியலையும் பேசுகின்றன. பிரம்ம ஞானம் மட்டும் தான் விடுதலை அளிக்கிறது இதுவே அத்வைதம் அதாவது இரண்டற்ற ஒரு நிலை.

சுரேஸ்வரர் : ஆச்சாரியாரே...குடும்பஸ்தர்களிடம் சென்று பிரம்மம் பற்றி பேசினால் அவர்கள் புரிந்து கொள்வார்களா ?

சங்கரர் : அதைப் பற்றிய அச்சங்கள் தேவையில்லை. முதலில் நாம் செய்ய வேண்டியது, புத்தர் கொள்கை பரவிய பிறகு வீழ்ந்த பக்தி மார்கங்களை அதாவது சனாதன தர்மத்தை எழுச்சி பெறவைக்க வேண்டும். புத்தர் கொள்கையில் முக்கியமாக மக்களை கவருவது 'நிர்வாண' தத்துவம் - ஏதுமற்ற தன்மை மற்றும் ஆசைகளை துறப்பது. பிரம்மம் என்பது ஏதுமற்றதல்ல...எல்லாமுமாக இருப்பது... நாம் ஆசைகளை துறக்க வேண்டாம் மாறாக ஆசைகளை வெறுப்போம். எந்த அளவுக்கு உலக வாழ்கையென்னும் மாயையை வெறுக்க முயற்சிக்கிறோமோ அல்லது பற்றற்று இருக்கிறோமோ ... அந்த அளவுக்கு நாம் பிரம்மத்தை நெருங்குகிறோம். நாம் உலக வாழ்கையை வெறுத்தவர்களாக உலகாருக்கு காட்ட வேண்டும். அதே சமயத்தில் பக்திமார்கத்திற்கு வெளியில் வந்து இதை செய்ய முடியாது. மக்களை முதலில் பெளத்த கொள்கைகளிலிருந்து சனாதன தருமத்திற்கு மீட்டுக் கொண்டுவர வேண்டும். அதன் பிறகு பிரம்மம் பற்றிய பாடங்களையும், சூத்திரங்களையும் அவர்களுக்கு தெளிவிப்போம். தற்பொழுது சிலைவழிபாட்டை கேலி செய்த பெளத்தர்கள் சமணர்கள்....புத்தரையும், சமணரையும் சிலையாக வடித்திருக்கிறார்கள், சனாதன தருமத்தின் இந்திரனை ஏற்றுக் கொண்டு இந்திரவிழா நடத்துக்கிறார்கள் ... மடங்களை விட்டு விட்டு பெளத்த சன்யாசிகள் ஆடம்பர கோவில்களை அமைத்திருக்கிறார்கள் . இதன் மூலம் மக்கள் சிலை வழிபாட்டின் மீது நாட்டம் கொண்டிருக்கிறார்கள் என தெரிகிறது. நாமும் சிலை வழிப்பபட்டின் மீது மக்கள் வைத்திருக்கும் ஈடுபாட்டை பயன்படுத்திக் கொள்வோம்.

சுரேஸ்வரர் : நல்லது ஆச்சாரியார் அவர்களே...நங்களெல்லாம் பிரம்ம நிலையை அடையும் பிராமணர்கள் என்ற உறுதி மொழியை இன்று முதல் ஏற்கிறோம். தங்கள் சொல்லும் பிரம்மமே உயர்வானது.

மற்ற சிஷ்யர்களும் அவ்வாறே, பிரம்மமே உயர்வானது !. பிரம்மமே உயர்வானது !! என்று குரல் எழுப்புகிறார்கள்

சங்கரர் : முக்கியமாக நீங்கள் நினைவு கொள்ள வேண்டியது, உலக வாழ்கையை வெறுக்க வேண்டும், எந்த ஒரு பொருளையோ, விலங்கையோ, பிரம்மத்த்தை ஏற்காத அல்லது புரிந்து கொள்ளாதவர்களை 'தீண்டத்தாகதவர்களாக' நினைத்து மனதளவில் நெருங்காமல் இருக்க வேண்டும்.

சுரேஸ்வரர் : மிகவும் நன்று ஆச்சாரியார் அவர்களே...அப்படியே செய்கிறோம்

சங்கரர் : நமக்கு முக்கிய வேலை இனிமேல் தான் இருக்கிறது. பாரத தேசத்தின் நான்கு திக்குகளிலும் சங்கர மடங்களை நிறுவப்போகிறேன். அதன் மூலம் முதலில் சனாதனத்தை வளர்க்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்போம். நம் பஜகோவிந்தமும், செளந்தர்யலகரியும் சிலைவழிபாட்டுக்கு உதவி பக்தி மார்கத்தாரிடம் தாக்கத்தை ஏற்படுத்தி மக்கள் சநாதனத்துக்கு திரும்புவார்கள். அதிலிருந்தபடியே அத்வைத தத்துவமான பிரம்ம தத்துவத்தை போதிப்போம்

********

நூற்றாண்டுகளுக்கு பிறகு, சுரேஸ்வர் வழிவந்த அவர் சந்ததியின்

ஒருபிரிவினர் : "நாங்கள் ஆதி சங்கரர்...சுரேஸ்வரர் வழிவந்த பிராமணர்கள், பிரம்மத்தை உணர்ந்தவர்கள், பிரம்மம் பற்றிய அறிவில்லாதவர்களை நாங்கள் தீண்டுவதில்லை".

அதன் பிறகு மனு(அ ?) தர்மம் இயற்றபெற்றது

1000 ஆண்டுகளுக்கு பிறகு
********

"நாங்கள் பிராமணர்கள், பிரம்ம ஞானத்தின் வழி பிறந்தவர்கள், மற்றவர்கள் எல்லாம் பிரமணர் அல்லாதோர் அதாவது தீண்டத்தாகதவர்கள்

******
2000 ஆண்டிலும்

இன்னும் கூட சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள் .... தீண்டாமை !

டிஸ்கி :

தீண்டாமை தோன்றிய காரணம் என்ன ?

மேலே சொன்ன 'பிரம்ம ஞானம்' அத்வைதம் தான் அதற்கு மூலம் என தெரியவருகிறது. ஒரு சில புத்தகங்களில் எழுதி இருந்த குறிப்புகளை வைத்து எழுதியது இது. பிரம்மத்தை அடைவது பற்றிய பல்வேறு விளக்கங்களைப் பார்த்த பின் எனது கருத்து பிரம்மத்தை அடைந்தவன் நிலை என்பது இருட்டு அறையில் இறந்த பிணம் எவருக்கு தெரியாமல் நிரந்தரமாக அப்படியே கிடப்பதற்கு ஒப்பானது என்று விளக்கம் சொன்னால் கூட அது சரியாகக் கூட இருக்கலாம் ஏனெனில் பிரம்மத்தை அடைவது என்பது பிறப்பறுத்த (செயல்படாத) மீளாத நிலை. இதற்கு மாற்றாக பிரம்மத்தை அடைந்த பலாபலன் அத்வைதத்தில் இருந்தால் அதுவும் இப்படித்தான் இருக்கும் ஆனால் அதற்கு மேற்பட்டதாக இருக்க முடியாது.


அவரது நோக்கம் அனைத்தையும் ஒன்றாக பார்க்கும் ஒரு நல்ல நோக்கமே. உலக வாழ்கை என்பது மாயை என்று சொன்னார். ஆனால் அத்வைதிகள் அல்லது அதில் நம்பிக்கை உடையவர்கள் மற்ற மனிதர்களை தீண்டக்கூடாது என்றெல்லாம் சொல்லவில்லை. அது உயர்ந்த ஞானம் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அதைப்பற்றி எந்த அனுபவமுமே இல்லாமல் பின்னாளில் அதில் நம்பிக்கை கொண்டிருந்தவர்கள் அதுவே உயர்ந்தது என்ற வீன் பெருமையும், மற்றவை தாழ்ந்தவை என்ற எண்ணம் கொண்டிருந்தனர். தீண்டாமை என்ற கொள்கை என்பது பின்னாளில் திரிக்கப்பட்டவைதான் அதற்கு முன்பு சநாதன தருமத்தினர் குழுக்காளாக இருந்தலும் பிறரிடம் தீண்டாமை பாராடியதற்கான இருந்தற்கான குறிப்புகள் கிடைக்கவில்லை. சங்கரரோ, அவரின் மாணாக்கர்களோ தீண்டாமை பாராட்டுவதற்காக அத்வைதக் கொள்கையை உண்டாக்கவில்லை.


எப்படியோ பிறந்துவிட்டோம்... அதன் கடமையான வாழ்க்கையை மகிழ்வுடன் நேசிப்போம். புரியாத ஒன்றை அல்லது இல்லாத ஒன்றை உயர்வாக காட்டிக் கொண்டே போனால் 'ஏற்றத் தாழ்வுகளின்' தோற்றமாக அது அமைந்துவிடும். சமூக நலன் சாராத தத்துவங்கள் எவையும் நல்வாழ்கைக்கு உதவாது என்றே கருதுகிறேன்.


ஆக்கம் எழுத உதவி குறிப்பு நூல் : "இந்திய கதை - ஏகம், அநேகம்,சாதியம்" - ஆசிரியர் நா.முத்துமோகன்"







23 ஆகஸ்ட், 2007

*நட்சத்திரம்* : தமிழுணர்வால் ஏற்பட்ட அழிவுகள் !

மனிதர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு மேன்மை உணர்வான பக்தி உணர்வை வைத்து ஆன்மிகம் வளர்ந்ததை விட சாதியம் வளர்ந்து வந்திருக்கிறது. வருணாசிரமம் என்னும் அசைக்க முடியாத கோட்டையில் அவ்வப்பொழுது விரிசல் விழுந்தபோது அவற்றிற்கு மேல் பூச்சு பூசி விரிச்லை மறைக்க மக்களின் பக்தி உணர்வு பெரிதும் பயன்பட்டிருக்கிறது. 'இந்து' என்ற சொல்லாடலில் இந்துக்களின் உணர்வுகளைத் தூண்ட முடிவது போல், அதே உத்தியில் 'தமிழ்' என்று சொன்னால் தமிழர்கள் உணர்வு வயப்படுக்கிறார்கள். இவை பலசமயங்களில் ஆக்க முழுமையாக (பூர்வமாக) இருந்தாலும் சில பாதகங்களையும் செய்துவிடும், அப்படி ஒரு நிகழ்வுக்கு தமிழர்களின் தமிழுணர்வு உரமாக இருந்திருக்கிறது என்பது அதிர்ச்சி தகவலாக இருக்கிறது.

நான்காம் நூற்றாண்டுகளுக்கு முன்பே பெளத்தம் தமிழகத்திலும் வெளியிலும் தழைத்தோங்கியது. தமிழகத்தில் நன்கு வேறூன்றிய நிலையில் சமணமும், பெளத்தமும் நிருவாண தத்துவம் என்ற நிலையை மறந்து உருவழிபாடு, இந்திரவிழா என பக்திமார்கமாக பரிணாமத்துடன் வளர்ந்துவிட்ட நிலையில்... வருண வேதத்தார்...வருணாசிரம சநாதனத்தை வளர்க்க வழிதெரியாமல் திண்டாடினார்கள். அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் தமிழர்களுக்கு என்றுமே இயற்கையாக இருந்த தமிழுணர்வு என்ற நீரோடை வற்றாமல் இருப்பதை சநாதனவாதிகள் உணர்ந்து கொண்டார்கள்.

பெளத்தமும், சமணமும் தமிழகத்தை சேர்ந்தது அல்ல...பாலி மொழியையும் வளர்க்கவும்,
சமஸ்கிரதத்தின் வளர்ச்சியையும் பயன்படுத்திக் கொண்டு மதம் பரப்புவதாகவும், தமிழுக்கு அவ்விருமதங்களும் எதிரிகள் என்று முன்மொழியப்பட்டது (பிரகடனம்). அதைத் தொடர்ந்து தமிழக அரசர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டது. வருணாசிரம வாதிகளின் (இதில் வேதங்களை ஏற்றுக் கொண்ட தமிழர்களும் அடக்கம்) சமஸ்கிரத போதனைகளை (தற்காலிகமாக ?) நிறுத்திக் கொண்டு பெளத்ததிற்கு எதிராக தமிழர்களிடையே 'தமிழர், தமிழுணர்வு' என்பதை சொல்லி சொல்லி தமிழர்களை வசப்படுத்தினர். தமிழுணர்வு எதிர்பார்த்ததைவிட நன்கு செயல் (படுத்தப்) பட்டதால். அவசரத் தேவையாக புதிய பக்தி இலக்கியங்கள் தமிழில் தோன்றியது. அப்பர்- சுந்தரர் - ஞானசம்பந்தர் ...மற்றும் நாயன்மார்கள் ஏற்படுத்திய தமிழ் பக்தி இலக்கிய நூல்களுக்கு தமிழர்களுக்கு இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. சைவசமயம் மற்றும் வைணவம் வளர்ந்தது, அதனை ஏற்க மறுத்த பெளத்தர்களும், சமணர்களும் தமிழுக்கு எதிரி என்பதை அரசர் மற்றும் மக்கள் மனதில் பதிய வைக்க முடிந்தது. பாண்டியர்கள் ஆட்சியில் என்பதாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டனர்.

உண்மையில் சமணர்களோ, பெளத்தர்களோ தமிழுக்கு எதிரியாக இருந்தது இல்லை. அவர்கள் பாலி மொழியிலும் சமஸ்கிரதத்திலும் இலக்கியங்களை எழுதினார்கள் அதில் புலமை பெற்றவர்களாக இருந்தனர். உண்மையான காரணம் அம்மதத்தினர் சாதி பிரிவினைக்கு எதிரானவர்கள் என்பதே முதன்மை காரணம். தமிழில் இருக்கும் ஐம்பெரும் காப்பியங்களும் சமண பெளத்த சமயத்தை சேர்ந்த தமிழர்கள் இயற்றியதுதான். அப்படி இருக்கையில் சமணர்களும் பெளத்தர்களும் தமிழுக்கு எதிரி என்று நம்ப வைக்கப்பட்டது. தமிழகத்தில் பக்தி இலக்கியம் வளர்ந்த பொற்காலம் என்று சிலாகித்து சொல்லப்பட்டவை சமணர்களையும், பெளத்தர்களையும் அழித்த அந்த இருண்டகாலம் தான். சமண பெளத்த காலத்தை களப்பிரர்கள் காலம் என்று சொல்லி அதில் இருந்த வரலாற்று சுவடுகள் எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டது தமிழில்
எழுதப்பெற்ற எண்ணற்ற சாங்கிய நூல்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. ஐம்பெரும் காப்பியங்களில் எரியாமல் கிடைத்திருப்பது சீவகசிந்தாமனி, சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் குண்டலகேசியின் ஒரு பகுதி. திருவள்ளுவர் சமண மத்ததை சேர்ந்தவர் என்பதும் தற்போதைய தமிழாராய்சியாளர்கள் ஏற்றுக் கொள்ள முன்வந்து ஆய்ந்துவருகிறார்கள்.

தமிழுணர்வால் பெளத்த சமயம், சமண சமயம் தமிழகத்தில் முற்றிலும் அழிக்கப்பட்ட பிறகு புத்தர் சிலை அமர்ந்த ஆற்றங்கரை அரசமரத்தடியில் (போதிமரம்) பிள்ளையார் சிலைகள் வந்து உட்கார்ந்து கொண்டதும். தமிழக தெய்வங்கள் சமஸ்கிரதம் கற்றுக் கொண்டதும், கடம்பன் இடும்பன் போன்ற கிராம தெய்வங்களுக்கு கூட சமஸ்கிரத சொற்கள் கலந்து கவசங்கள் இயற்றியதும், மணிப்ரளவ நடை தோன்றியதும் தனிக்கதை.


இங்கே சமணர்களும் , பெளத்தர்களும் அன்றைய அந்த நூற்றாண்டுகளில் சாதுக்களாக இருந்தார்கள் என்று நான் குறிப்பிடவில்லை. மதங்களை பின்பற்றுவதாலேயே தனிமனித ஒழுக்கமும், சமூக ஒழுக்கமும் இருக்கும் என்பது ஏற்பதற்கு இல்லை. உலகெங்கிலும் நிகழ்வுகள் எப்போதும் மெய்பிப்பவை என்னவென்று பார்த்தால், ஒரு கொள்கை மக்கள் இடையில் (மத்தியில்) செல்வாக்கு பெற்றவுடன், அந்த செல்வாக்கை தக்கவைப்பதற்கு ஆதிக்க சக்திகளாக பரிணாமம் அடைந்து தீயவழியையும் அக்கொள்கையைப் பின்பற்றுபவர் தேர்ந்தெடுப்பர். இதை இன்றைய அரசியல்களிலும் சமுக அமைப்புகளில் இருந்தும் கூட நாம் நன்கு உணரமுடியும். பெளத்தர்களையும், பெளத்தையும் புரிந்து கொண்ட இலங்கை கடற்கோள் நிவாரணத்தில் கூட பாகுபாடாக நடந்து கொண்டதை பலரும் கண்டித்தனர். அவர்களின் அரசியல் பற்றியும், புத்த பிச்சுகளின் பிடிவாதங்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. இனக்குழுக்கள் செல்வாக்கை இழப்பதாக நினைத்துக் கொள்வதே இதற்கு காரணம் அப்படி நினைப்பதால் மதங்களின் பின்னால், மக்களின் உணர்வுகளின் பின்னால் வசதியாக நின்று கொண்டு மக்களை ஏமாற்றுகின்றனர். இது எந்த குழுவுக்கும் அது மதமாக இருந்தாலும், இனமாக இருந்தாலும் பொருந்திப் போகும்.

தமிழர்களின் பக்தியுணர்வும், தமிழுணர்வும் பெளத்த சமண சமயங்களை தமிழகத்திலிருந்து அழிக்க பகடைகாயாக பயன்படுத்திய காலமே பக்தி இலக்கியம் வளர்ந்த காலம் என்று மிகவும் தாமதமாக தமிழறிஞர்கள் தற்பொழுது கண்டு கொண்டிருக்கிறார்கள்.


--
அன்புடன்,

கோவி.கண்ணன்

*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !

மண் துகள்களில் ஒன்றை ஆராய்ந்தால் மலையின் தன்மையை சிறிதேனும் அறிந்து கொண்டதாக பொருள் கொள்ள முடியுமா ? தத்துவ(அர்த்தமாக) பொருளில் பார்த்தால் அது ஓரளவுக்கு சரிதான். ஏனென்றால் இங்கே எடுத்துக் கொண்ட பற்றியம் (விடயம் - விசயம்) அப்படி. மொழிஞாயிறு தேவ நேயப் பாவாணர் என்ற தமிழ் இமயத்தை கடுகு அளவுக்கு சுறுக்கி அந்த இமயத்தின் நிழலையாவது காட்ட முடியும் என்று நம்புகிறேன்.

****************

பெற்ற தாய் தனை மகன் மறந்தாலும்
பிள்ளையை பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்


- இராமலிங்க அடிகளார் அருளிய அருட்பாவில் ஒரு பாடல்

இதைப்பற்றி மறை மலை அடிகளார், தன் மகள் நீலாவுடன் பேசிக் கொண்டிருந்த போது, 'தேகம்' என்ற இடத்தில் 'யாக்கை' என்ற தனித் தமிழ்ச் சொல் இருந்தால் எவ்வளவு சொல் இனிமை இருக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தாரம். அந்த ஆர்வமே பின்னாளில் தமிழ் அறிஞர்களுடன் அவர் சேர்ந்து தனித்தமிழ் இயக்கம் தோற்றுவிக்க காரணமாக இருந்தது. இன்றைய நிலையில் 95 விழுக்காட்டு தூய்மையை அடைந்திவிட்டது.

தமிழின் தொன்மையை உலகுக்கு அறிவித்தவர் ஐரோப்பியர் கால்டுவெல் ஐயர், தமிழ் மொழி பற்றினால் சூரிய நாராயண சாஸ்திரி (பிராமனர்) என்ற வைதீக பெயரை துறந்து தனித்தமிழுக்கு வித்திட்டவர், தமிழ் திருப்பெயர் தாங்கிய பரிதி மாற் கலைஞர். உரமிட்டு செடியாக வளர்த்தவர் மறை மலை அடிகளார். அந்த செடியை மரமாக ஆக்கி நமக்கு நிழல் கொடுக்க வைத்தவர் செந்தமிழ் செல்வர் தேவ நேயப் பாவாணர்.
தேவ நேய பெருந்தகை பிறப்பினால் கிறிஸ்துவராக இருந்தாலும் தம் பிள்ளைகளுக்கெல்லாம் தனித்தமிழ் பெயரையே சூட்ட்டினார். தமிழுக்கென்று அகரமுதலியெனும் ( வேர்சொல் அகராதி)யை அமைக்க தம் வாழ்நாள் முழுவதும் செலவிட்டார்.

மொழி என்பது தகவல் தொடர்பு சாதனம் என்று சொல்லப்படுவதை மொழியாளர்கள் மறுக்கவே செய்வார்கள். பண்பாடுகளின் உருவகமாகத்தான் மொழிகள் இருக்கிறது. மொழிகளை ஆராய்ந்தாலே முழு உலக வரலாற்றையே கண்டு கொள்ளலாம். தேவ நேயப் பாவாணர் தம் மொழியறிவால் மாந்தன் தோன்றிய இடம் கடல் கொண்ட லொமுரியா எனப்படும் குமரிக்கண்டமே என்றும் உலகின் முதல் மொழி ஆதித் தமிழே என்றும் தக்க சான்றுகளுடன் பல ஆராய்சி நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

கால்டுவெல் அவர்கள் திராவிட மொழிகள் தனித்தன்மை வாய்ந்தவை, அவற்றின் இலக்கண அமைப்புக்கும் வடமொழிக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. வடமொழிக் கலப்பினாலேயே திராவிட மொழிகள் வடமொழி வழியாக தோன்றியதாக தவறான தகவல்களை இதுகாறும் நம்பி இருந்தோம் என்றும், மற்ற திராவிட மொழிகளைவிட வடமொழிச் சொற்களை முற்றிலும் களைந்துவிட்டு தமிழ் தூய்மை அடைய முடியும் என்றும் அதற்கான வேர்சொற்கள் அனைத்தும் சங்க இலக்கியங்கள் முழுவதிலும் பரவிக்கிடக்கின்றன என்றும், வடமொழிச் சொற்களில் நூற்றுக்கணக்கான சொற்கள் தமிழை வேர்ச் சொல்லாகவும், தனித் தமிழ் சொற்களை அப்படியே கொண்டாதாகவும் இருக்கிறது என்று சொல்லி அவர் இந்திய மொழிகளை பிரித்து மேய்ந்து சென்றார். அவருக்கு முன்னோடியான ஐயு போப் வடமொழி இந்தியாவில் தோன்றிய மொழியே அல்ல என்றும் அது கிரேக்கத்தை ஒத்து இருக்கும் ஐரோப்பிய மொழி குழாமை (குடும்பம்) சேர்ந்தது என்று சான்றிச் சென்றார்.

இந்து இரு வெளிநாட்டு மேதைகளின் ஆராய்ச்சியை வைத்துக் கொண்டதுமின்றி, பரிதிமார் கலைஞர் ஒருமுறை 'பெரும்பாலான வடமொழி இலக்கியங்களின் மூலம் தமிழே' என்றும் 'அவற்றிலிருந்து மொழிமாற்றம் செய்தபின் தமிழ் இலக்கியங்கள் பண்டைய காலத்திலேயே அழிக்கப்பட்டு விட்டது' என்ற பற்றியத்தையும் பிடித்துக் கொண்ட தேவநேயர் தம் தமிழாராய்சியை அதன் அடிப்படையிலேயே துவங்கினார்.

பொதுவாக வளர்ந்த நாகரீகத்திலிருந்து பின்னோக்கி சென்று வரலாற்றை தேடுவது உலக இயல்பு, அதன் அடிப்படையில் வடமொழி இலக்கியங்களை கருத்தில் கொண்டு ஐயு போப்புக்கு முன்பு இருந்த ஆராய்சியாளர்களும், பல இந்திய ஆராய்சியாளர்களும் இந்திய வரலாற்றை வடமொழியுடன் தொடர்ப்பு படுத்தி அவை வேதகாலத்திற்கு பின்பட்டவையே என்றும் இந்திய நாகரீகம் என்பது ஆரிய நாகரிகமே என்று சொல்லி வந்தனர்.

கால்டுவெல் அவர்களின் வடமொழி தோற்றம் பற்றிய துணிபுக்கு பிறகு மொழி ஆராய்ச்சிகள் திராவிட மொழிகளை ஆராய்ந்து செல்வதால் மட்டுமே இந்திய நாகரிகத்தின் தொன்மையை கண்டு அறிய முடியும் என்று உணர்ந்தனர்.

இந்திய மொழிகள் அனைத்தையும் ஆராய்ந்துவிட்டு பாவாணர் பல ஆராய்சி நூல்களை எழுதியுள்ளார், அவற்றில் அவர் எழுதிய வடமொழி வரலாறு 1 & 2, தமிழ்மொழி வரலாறு 1 & 2 பல உண்மைகளை காட்டுகிறது. அவர் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட காலங்கள் தொல்காப்பியத்துக்கும் முந்தியது. ஏறத்தாள தொல்காப்பியருக்கும் முன்பு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அகத்தியர் தொல்காப்பிருக்கு ஆசிரியர் அல்ல வென்றும் தக்க சான்றுகளுடன் விளக்கியுள்ளார். மொழியை, பண்பாட்டை ஆராய்வதற்கு தொல்க்காப்பியத்தை சான்றாகக் கொள்ளக் கூடாது ஏனென்றால் தொல்காப்பியம் இலக்கண நூலேயன்றி சொல் அகராதியல்ல என்றார். மேலும் தொல்காப்பியர் காலத்தில் வடமொழிக்கு எழுத்தோ, இலக்கணமோ இருந்தது இல்லை என்றும் அப்படி ஒருவேளை எழுத்து இருந்தால் வடமொழியில் இருந்து தோன்றியதாக சொல்லப்பட்ட தமிழுக்கு அதைவிட குறைந்த அளவுக்கு எழுத்துக்கள் இருப்பதற்கான கூறுகளே இல்லை. மேலும் தமிழ் இலக்கணம் வடமொழிக்கு பிந்தியதாக இருந்திருந்தால் எழுதும் சொற்றொடர் முறைகள் தலைகீழாக இருப்பதற்கான கூறுகளே (சாத்தியம்) இல்லை என்று நிறுவினார்.

தமிழ் எப்படி திராவிட மொழிகளின் தாய்மொழி என்பதை 'திராவிடாத் தாய்' என்ற நூலில் விரிவாக குறிப்பிட்டுள்ளார். பெரும்தகையின் துணிவுபடி தமிழர்கள் வடமொழியில் இருந்து பெற்றுக் கொண்டது என எதுவும் இல்லை என்றாலும் அந்த போர்வையில் இழந்தது, மறைந்தது, மறைக்கப்பட்டவை மிக்கவையே என்பது அவரின் வாதம்.

நான் இதுவரை அவருடைய 10 விழுக்காட்டு எழுத்துக்களை மட்டுமே படித்து இருக்கிறேன். தேவ நேயப் பாவாணரின் தமிழ் தொகுப்பு நூல்களைப் தேடிப் பிடித்து படியுங்கள் அதன்பின் பெருமிதப்பின் வியப்பின் எல்லைக்கே செல்வீர்கள், பிறகு எவரேனும் தமிழ்பற்றி தாழ்வாகவும், தமிழின் குறையென்று எவரேனும் அறியாமையால் சொன்னால் ஒரு 'ஏளன பார்வையை வீசிவிட்டு பதில் சொல்லாமல்' அவர்களை கடந்து செல்வீர்கள். :)

பாவணரின் நூல்கள் அனைத்தும் நாட்டுடமை ஆக்கப்பட்டவை எவர் வேண்டுமானலும் அதிலிருக்கும் கருத்துக்களை வெளியிட முடியும். நானறிந்த தமிழ்யாவும் அவர் ஆக்கி வைத்த நூல்கள் தந்தவையே !

வாழ்க பாவாணர் புகழ் !!!

***********
இந்த இடுகையில் நம் பெருமதிப்புக்குறிய
வளவு இராமகி ஐயாவைப் பற்றி நினைவு கூர்ந்து பாராட்டி மகிழ்கிறேன். இணையத்தில் இப்படி ஒரு தமிழ்மேதை ஒருவர் இருந்து கொண்டு 'அபிஷேகம்' போன்ற வடமொழிச் சொற்களுக்கு (அப்பும் இழிதலும்) வேர் (மூலச்) சொற்களை தக்க சான்றுகளுடன் (ஆதாரங்கள்) விளக்கியிருப்பதை நினைக்கையில் நெஞ்சம் உவகை கொள்கிறது.

தமிழ்மேதை இராமகி ஐயா அவர்கள் வாழ்க ! வாழ்க !! வாழ்க !!!

அன்புடன்,

கோவி.கண்ணன்

22 ஆகஸ்ட், 2007

*நட்சத்திரம்* : கைப்புள்ள - குட்டு வெளிப்பட்டது (நகைச்சுவை)

வழக்கமான சவடாலுடன் கடைத்தெருவை அலம்பல் பண்ணிக் கொண்டுவருகிறார் கைப்புள்ள.

கைப்பு : டேய்ய்ய்... எவண்டா அவன் ? ஊருக்குள்ள ஒரு பயலும் வாயை தொறந்து பேசப்படாது, மீறி பேசினா நான் பேசமாட்டேன், அறுவா பேசும் அறுவா.

அல்லக்கை ஒருவர் : அண்ணே அங்கே பாருங்கண்ணே ஒருத்தன் வாயைத்தொறந்து பேசிக் கிட்டு இருக்கான் என்று அருகில் எஸ்டிடி பூத்தில் பேசிக் கொண்டிருக்கும் பார்த்தியை காட்டுகிறார்.

கைப்பு : டேய் ... எவண்டா அவன் ?, சிங்கம் தூங்கி எழுந்ததைப் பாத்ததில்லைய்யா நீய்யீ ?

பார்த்தி யாருடனோ போனில் பேசிக் கொண்டிருக்கிறார்,

பார்த்தி : என்கவுண்டர் இருக்கு, அதனால் நம்ம பக்கம் வரவே பயப்படுறானுங்க, இன்னிக்கு கூட ஒருத்தன் மாட்டி இருக்கான், அவனுக்கு ஒரு நாள் இருக்கு

அதை கேட்டுவிட்ட கைப்புவின் உடல் நடுங்குகிறது

கைப்பு : இவனா....ஆ !....அடி ஆத்தி போலிஸ் இன்ஸ்பெக்டராக ஆயிட்டான் போல....இது தெரியாம இங்கிட்டு வந்து மாட்டிக்கிட்டேனே ?

அவரை நோக்கிவருகிறார் பார்த்தி,

பார்த்தி : இங்கே சவுண்ட் விட்டது நீ தானே ?

கைப்பு : அருகில் இருந்தவனை தலையில் தட்டி 'டேய் அண்ணன் கேக்கிறாரு இல்லே... சொல்லுடா, நீ சவுண்ட் விட்டியா ?'

பார்த்தி : டேய் டேய்....நான் என் இந்த காதால கேட்டேன் ... இந்த கண்ணால பார்த்தேன்... சவுண்டு விட்டது நீதான். அது என்னது சிங்கம் தூங்கி எழுந்ததை பார்த்திருக்கியான்னா கேட்கிறே ?

கைப்பு : மென்று முழுங்கிவிட்டு 'அது சும்மா தமாஷு' என்கிறார்

பார்த்தி : சிங்கம் தூங்கி எழுவதைப் பாக்கனும்னா காலையில எழுந்து ஜூவுக்கு போய்தான் பாக்கனும், அவனவனுக்கு வேலை வெட்டி இல்லையா ? காலங்காத்தால வெட்டித்தனமாக போய் சிங்கம் தூங்கி எழறத பாக்கனுமாம் ? சரி மொதல்ல நீ பார்த்திருக்கியா ?

கைப்பு : அது வந்து ....இல்ல பாத்தது இல்ல

பார்த்தி : நீயே பார்க்காத ஒண்ணைப் பத்தி பேசுறியே நீ பைத்தியம் தானே ?

கைப்பு : அட போப்பா, என்னைய மாதிரி ரவுடிங்க இப்படித்தான் மெரட்டுவாங்க

பார்த்தி : என்னது ரவுடியா ? நீய்யா ?

கைப்பு : நாஞ்சொல்லலப்பா, நம்ம புள்ளைங்க தான் சொல்லுறாங்கே என்று அல்லக்கைகளை காட்டுகிறார்

அங்கு எவரும் இல்லை. எல்லாம் அல்ரெடி எஸ்கேப்

பார்த்தி : இங்கே யார் இருக்கான்னு கையை காட்டுறே...உண்மையிலேயே ஒனக்கு பைத்தியம் தானே புடிச்சிருக்கு ?

கைப்பு : சரி என்ன வேணுமானாலும் சொல்லு, ஆனால் என்கவுண்டரில் போட்டு தள்ளிடாத, என் பொண்டாட்டி புள்ளைங்க பாவம்

பார்த்தி : எண்கவுண்டரா ? நானா ? குருவிய சுடறத்துக்கு பீரங்கியா ? ஏன் ...ஏன் ...ஏன் இந்த உளரல் ?

கைப்பு : நீ இப்ப போனில் பேசினியே எங்கிட்ட மறைக்காதே... ' என்கவுண்டர் இருக்கு, அதனால் நம்ம பக்கம் வரவே பயப்படுறானுங்க' னு போனில் சொன்னியா...அப்பா அப்பா ...ஓடவிட்டு சுட்டுறாதப்பா..

கெஞ்சி, கையெடுத்து கும்பிடுகிறார்

பார்த்தி தெளிவாகிறார்
பார்த்தி : ஆமாம் சொன்னேன், இருக்கு

கைப்பு : நீ எதுக்கேட்டாலும் தர்ரேன்ப்பா, இன்னிக்கு வசூலு அம்புட்டும் தர்ரேன்.. என்னிய விட்டுடு. நான் இப்படியே கண்காணாத இடத்துக்கு ஓடிப்போய் பொழச்சுக்கிறேன்.

பார்த்தி : அடச்சே உன் பணம் யாருக்கு வேணும் ? ஓடிடுறேன்னு சொன்னதால விடுறேன். மறுபடியும் ரவுடி மாதிரி ஒன்னைய பார்த்தேன் அவ்வளவுதான் ஞாபகம் வச்சுக்கோ.....சரி எண்கவுண்டர்னா என்னனு தெரியுமா ?

கைப்பு : போலிஸ்காரெங்க நடுமண்டையில் நச்சின்னு சுட்டுப் போடுவாங்களே அதானே, அது தெரியாமலா ரவுடியா இருக்கோம் ( சொல்லிவிட்டு பம்முகிறார்)

பார்த்தி : மறுபடியும் ரவுடியா ? இன்னொருதடவ சொல்லு

கைப்பு : ஒரு பேச்சுக்கு சொன்னேன்பா, இதபாரு ஆத்தா சத்தியமா இனி ஒரு பயலையும் மெரட்டமாட்டேன்

பார்த்தி : சொன்ன வாக்கு தவறமாட்டியே

கைப்பு : நாக்கு செத்தாலும் வாக்கு தவறமாட்டான் கைப்புள்ள

பார்த்தி : அப்படி செஞ்சே மகனே... நெஜம் போலிசை கூப்பிட்டு வந்து நிஜாமாகவே உனக்கு என்கவுண்டர்தான்

கைப்பு : என்னாது ....? அப்ப நீ என்கவுண்டர் போலிஸ் இல்லையா ? போனில் பேசியது ? மீண்டும் குரலை உயர்த்தி பேசுகிறார்

பார்த்தி : அதுவா என்னோட ... அது என் ப்ளாக்கில் உள்ள பேஜ் விசிட் கவுண்டர்...அதைத்தான் 'எண்' கவுண்டர்னு சொன்னேன், அப்பறம் ஐபி செக்கரும் இருக்கு யார் யார் ப்ளாக்குக்கு வந்தாங்கன்னு, எத்தனை பேர் வந்தாங்கன்னு தெரிஞ்சுடும்

கைப்பு : மெல்லமாக 'ம்கும் இதுதெரியாமத்தான் உளறிட்டேனா ?'

பார்த்தி : என்னது ?

கைப்பு : ஒன்னுமில்லைப்பா...

பார்த்தி : ஒன்னைய இப்படியே விட்டால் சரிப்பட்டு வராது...

கைப்பு : என்ன செய்யப் போறே....


மறுபடியும் தெனாவெட்டு தொணியில் கேட்கிறார்.

பார்த்தி : இப்ப ஒரு குட்டை வெளிப்படுத்தப் போறேன் பாரு

கைப்பு : குட்டையும் இல்ல மட்டையும் இல்லை ஆள உடு

கைப்பு: நீ உடுன்னா ? உட்டுடனுமா ? நான் உன் வீட்டு வேலக்காரனா ?

என்று கேட்டுவிட்டு மண்டையில் நறுகென்று ஓங்கி குட்டுகிறார்

வலி பொருக்கமுடியாமல், தலையில் கையை வைத்து

கைப்பு : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் - என்று சினுங்குகிறார்

உச்சந்தலையில் புஸ்ஸ்ஸ் என்று புடைத்து வீங்குகிறது

பார்த்தி : இப்ப தலையில கையை வச்சு பாரு

கைப்பு : என்னாது ?

பார்த்தி : குட்டு புடைச்சு வெளிப்பட்டு இருக்கு தடவி பாரு.. அது உன் குட்டு இல்லை என் குட்டு

கைப்பு : க்கும்... நக்கலுக்கு ஒண்ணும் கொறைச்சலில்லை என்று முறைத்துவிட்டு, மீண்டும் பார்த்தி வாயைத்திறப்பதற்குள் பம்மிவிட்டு அங்கிருந்து தலையை தடவிக் கொண்டு , 'எங்கனப் பார்த்தாலும் இவனுக்கு என் பொழப்பை கெடுப்பதே வேலையாப்போச்சு' முணுகிக் கொண்டே இடத்தைக் காலி செய்கிறார்

--
அன்புடன்,

கோவி.கண்ணன்


மேலும் கைப்பு கலாட்டக்களுக்கு,

தமிழாசிரியர் ஆன கைப்புள்ள
கைப்புள்ள போட்ட ஆறு !
இம்சை அரசன் அடித்த மணி !

*நட்சத்திரம்* : ஆகமம் ஆலயம் ஆன்மா !

'ஆலயம் தொழுவது சாலவும் நன்று'...'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்'... சும்மாவா சொன்னார்கள் ? நம் இந்து கோவில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்களா ? அதன் சிறப்பைக் கூறி ...வெறும் வழிபாட்டுத்தலங்கள் இல்லை என்கிறது ஆலய சிவ ஆகமும், சைவ சித்தாந்தங்களும்... சரி ஆலய சிறப்பை அதன் அமைப்பை வைத்து பார்ப்போம்.

'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே' -


என்பது திருமூலர் அருட்பாடல்.

இதன் பொருளைப் பாருங்கள், மிகச் சிறப்பாக இருக்கும், அதாவது

அவர் உடலே கோயில் என்றார். உடம்பே கோயிலாய் எழுந்துள்ளது

உடம்பில் பாதங்கள் கோபுரமாகவும், முழங்கால் ஆஸ்தான மண்டபமாகவும், தொடை நிறுத்த மண்டபமாகவும், கொப்பூழ் (தொப்புள்) பலி பீடமாகவும், மார்பு மகா மண்டபமாகவும், கழுத்து அர்த்த மண்டபமாகவும், சிரம் (தலை) கருவறையாகவும் கோயிலாய் எழுந்துள்ளது என்பது ஆகம மரபு.

கோயில் அமைப்பில், உடலில் அன்னமய கோசம், பிரணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்த மய கோசம் ஆகிய ஐந்து உள்ளது போல கோயிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.

தூல சரீரம், சூட்சும சரீரம், குண சரீரம், அஞ்சுக சரீரம், காரண சரீரம் போல ஐந்து சபைகள் உள்ளன.

ஆகம விதிப்படி ஆலயங்கள் கருவறை, ஒன்று முதல் ஐந்து பிரகாரங்களுடன் கூடிய ராஜகோபுரம், பலி பீடம், கொடிமரம், யாகசாலை, நந்தி முதலியவற்றுடன் விளங்கும்.

மேலும் நம் உடல் தோல், இரத்தம், நரம்பு போன்ற ஏழு வகை தாதுக்களால் ஆனது போல் ஆலயமும் செங்கல், காரை, கல், போன்ற ஏழு வகையான பொருள்களால் ஆனது என்கிறது நமது சாத்திரங்கள்.

கோயில் என்பதை கோ-இல் எனப் பிரித்து 'கோ' என்றால் இறைவன். −ல் என்றால் இருப்பிடம் என்கிறார்கள். ஆக, கோயில் என்பது இறைவனின் இருப்பிடம் என்றும் ஆலயம் என்பதை 'ஆ' ஆன்மா என்றும் லயம் சேருமிடம் என்றும் பொருள்படுகிறது.

மனிதனின் வடிவமாகச் சிவாலயத்தை ஒப்பிடும்போது (1) கருவறை- தலை, (2) அர்த்த மண்டபம் - கழுத்து, (3) மகா மண்டபம் - மார்பு, (4) யாகசாலை - நாடி, (5) கோபுரம் - பாதம் என்றும் கூறுவர்.

அதே போல் (1) ஆலயம் - உடல், (2) கோபுரம் - வாய், (3) நந்தி - நாக்கு, (4) துவஜஸ்தம்பம் (கொடிமரம்) - உள்நாக்கு, (5) தீபங்கள் - பஞ்சேந்திரியங்கள், (6) கருவறை - −தயம், (7) சிவலிங்கம் -உயிர் என்றும் கூறுவர்.

உள்ளமே கோவில் என்று 'தத்துவார்த்தமாக' உணர்ந்து சொல்லி இருக்கிறார்கள் அல்லவா ? படிப்பதற்கே மெய் சிலிர்கிறது. இதன் 'சூட்சமம்' தெரியாமல் கோவில்கள் கூடாது என்கிறார்கள் நாத்திகர்கள். அறிவு கெட்டவர்கள் தானே ?

*************

இதெல்லாம் கோவிலையும், கோவிலுக்குள் இருக்கும் அமைப்பையும் பற்றிய தத்துவங்கள். கோவிலுக்குள் வெளியே இருப்பதை எவரும் பேசுவதே இல்லை. ஏன் பேச வேண்டும் ? பெரிய இராஜ வீதிகளைத் தவிர கோவிலைச் சுற்றி என்ன இருக்க முடியும் ? தஞ்சை பெரிய கோவில்கள் போல் இருந்தால் கோட்டையும், இருக்கும் தானே ?

கோவில்கள் இருக்கும் ஊர்களின் அமைப்பைப் பார்த்தால் உங்களுக்கு விளங்கும், அதாவது. இந்து மதத்தில் இருக்கும் நான்கு சாதி அடுக்கு முறைபற்றி அனைவரும் அறிந்ததே. பிராமணர், சத்திரியர், வைசியர் மற்றும் சூத்திர சாதி அமைப்பின் படியே ஆகம விதிகளின் படி அமைக்கப்பட கோவில்களில் தெருக்கள் இருக்கும். அதாவது கோவிலைச் சுற்றி இருக்கும் முதல் தெருவில் இருப்பது மடவிளாகம் எனப்படும் அஹ்ர'ஹாரங்கள்', அடுத்த தெரு வட்டத்திற்குள் கோவில் நடவடிக்கையுடன் அன்றாடம் தொடர்பு கொண்டுள்ள இசை வேளாளர்கள், யானை பாகர்கள் மற்றும் பொற்கொல்லர்கள், தீவட்டி பிடிப்பவர்கள் அதற்கு அடுத்த தெருவில் தச்சர்கள், வணிகர்கள் மற்றும் வேளாளர் மறபினர் நெற்வயல்களை எளிதில் அடையும் தொலைவில் இது இருக்கும், இந்த மூன்று தெருக்களும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை அந்த சாதி பயன்படுத்தும் அளவுக்கு ஆகம கோவில்கள் உள்ள ஊர்களில் கோவிலைச் சுற்றியே பத்து முதல் இருபது தெருக்கள் வரை இருக்கும், அந்தந்த தெருக்களில் அந்தந்த வகுப்பினரே வசிப்பர், ஊருக்கு வெளியில் இருந்து ஆபத்து வந்தால் மற்ற இருவகுப்பினர் (ஷத்திரியர்களாக மாறி ?) கேடயமாக இருந்து மடவிளாகங்களையும் கோவில் சொத்துக்களையும் காப்பர். சூத்திரர் எங்கு வசித்தார் ? சூத்திரனுக்கு ஊருக்குள் இடமா ? இருந்ததே இல்லை, சுடுகாடுகளைத் தாண்டி சேரிகளுக்கு துறத்தப்பட்டு வேறுவழியின்றி வாழ்ந்து வந்தனர்.

ஊருக்குள் தாழ்த்தப்பட்டவர் வந்தே இல்லையா ? மேலே சொல்லிய அமைப்பில் இருந்த அந்த காலத்து வீடுகளில் வீட்டிற்கு இரு வழிகள் இருக்கும், ஒரு வழிவீட்டின் முகப்பு, அது பெரிய தெருவில் ஆரம்பிக்கும், பெரிய திண்ணைகள் இருக்கும், பிறசாதியினர் வீட்டிற்கு வந்தால் அங்குதான் உட்கார வைக்கப்படுவர், கொல்லை பக்கம் ஒரு பின் வாசல் (புழக்கடை) இருக்கும், அது பின்பக்கம் சிறிய தெருவில் முடியும். இரு பெரிய தெருக்களுக்கு நடுவில் பொது என்று சிறிய தெரு இருக்கும், சிறிய தெரு இருபெரிய தெருக்களின் பின்வாசல்கள் சிறிய தெரு( சந்தில்)வில் முடியும். அந்த சந்தின் வழியாக தாழ்த்தப்பட்டவர் சென்று பின் பக்க கதவு வழியாக வீட்டுக்கு பின்பக்கம் வந்து மாட்டுத் தொழுவத்தில் சாணி அள்ளுவது, பால் கறந்து கொடுப்பது மற்றும் துப்புரவு தொழில்களை செய்துவிட்டு கையை நீட்டி கைகளில் அதில் மேலிருந்து தீர்த்தம் போல் ஊற்றப்படும் தண்ணீரைக் குடித்துவிட்டு, அவர்களுகென்றே இருக்கும் பாத்திரத்தில் கைபடாத சுத்தத்தில் பெறப்பட்ட பழைய உணவை வாங்கிச் செல்வர்.

ஒரு சூத்திரன் கோவிலுக்குச் நேராகச் செல்ல வேண்டும் என்று நினைத்தால் மூன்று தெருக்களைத் தாண்டிதான் அவனால் செல்ல முடியும். முதல் தெருவிலேயே தடுக்கப்படுவான். அதாவது சூத்திரனின் கால்கள் அஹ்ரஹாரத்தில் தஞ்சை கோபுரத்தின் நிழலைப் போல தரையில் பட்டதே இல்லை. அதையும் மீறி சென்ற தாழ்த்தப்பட்ட சைவ நந்தனாரும், வைணவ திருப்பணந்தாழ் ஆழ்வாருக்கும் இறைவன் 'அடி' எப்படி கிடைத்தது என்பதை பலரும் சொல்லிவிட்டார்கள் என்றே நினைக்கிறேன். (விரிவாக படிக்க ஐயா வைகுந்தர் வாழ்வும் வளமும் என்ற நூலை படியுங்கள்)

கோவில்கள் இல்லாத காலத்தில் தமிழகத்தில் வழிபாடு இல்லாமல் இல்லை.
அல்லது கோவில்கள் இல்லாத ஊரில் சாதிகள் இணைந்து வாழாமல் இல்லை. நாட்டார் வழக்கில் அவர்களுக்கென உள்ள கோவில்களின் முன்பு திருவிழாக் காலங்களிலும் அனைத்து சாதியினரும் கூடிக் ஆடல் பாடல் என களிப்பர். ஆகம கோவில்கள் வளர்த்தது பக்தியை மட்டுமல்ல, பக்தி இயக்கம் வளர்ந்தபோது கோவில்களின் கோபுரமும் வளர்ந்தது. இன்னார் இன்னார் தேர் வடம் பிடிக்க வேண்டும் என்ற விதிகளும் வரையறை களையும் செய்தது. பாணர், தேசிகர் என பழங்குடி குலத்தினர், (பாண பத்திரர் - டி.ஆர் மகாலிங்கம் கோவில்களில் பஜனைப் பாடல்கள் பாடுவபர்களாக திருவிளையாடல் படத்தில் கூட அவரை வைத்து ஒரு கிண்டல் வசனம் இருக்கும்) மருத்துவர் போன்ற ஆதித் தமிழர்களையும் அசைவம் சாப்பிடுபவர்கள், மாட்டை உறித்து செய்யும் தோல் கருவி வாசிப்பவர்கள் என்பதற்காக, பாணர்களை பறையர்களாக ஆக்கி (பின்னாளில் தோல்கருவியான மேளம், ம்ருதங்கம் என்ற பெயர் பெற்று வைதீக கருவியானது தனிக்கதை) ஊருக்குள் வெளியே தள்ளியதுதான் ஆகமவழி கோவில்களின் கோபுரங்கள் எழுந்து நின்ற போது நடந்தது.

கோவில்கள் வெறும் தத்துவம் மட்டும் தானா ? அது யாரை பாதுகாத்தது, யாரை இழிவுபடுத்தியது என்பது தெரியவருகிறது. கோவிலுக்கு வெளியே வெளிப்படையாக இருக்கும் இந்த வருண தத்துவம் மெய்சிலிர்ப்பை தருகிறதா ? இதையெல்லாம் எவரும் தட்டிக் கேட்கவே இல்லையா ? கேட்டிருக்கிறார்கள். அவர்களின் வாய் பக்தியின் பெயராலே அடைக்கப்பட்டு இருக்கிறது. தொலைவில் இருந்து தரிசித்தால் என்ன ? அருகில் இருந்து தரிசித்தால் என்ன ? 'கோபுர தரிசனம் கோடி நன்மை தரும்' என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள் ? :) சேரிகளில் இருந்து பார்த்தால் எந்த விண் முட்டும் கோவிலின் கோபுரமும் தெளிவாகத்தான் தெரியும்.

சூத்திரன் தொடமலா கோவில் எழுந்துவிட்டது. அடடே... சுயம்பாக எழுந்த கோவில்கள் பற்றி கேள்விபட்டதே இல்லையா ? அப்படியும் அவர்கள் தொட்டுத்தான் கட்டியிருப்பார்கள் என்றால், தீட்டுக் கழிக்கும் வைபவம் என சூத்திரன் தொட்டு கட்டிய செங்கற், கருங்கற் கோவில்களை சுத்தப்படுத்த எளிய வழிமுறைகளும் கையாளப்பட்டன.

உள்ளே சென்று வழிபட கற்பக் கிரகமும், வெளியே தொலைவிலேயே வழிபட கோவில் கோபுரமும் தமிழக கோவில்கள் வைதீக மயமாக்கப்பட்டதன் வழி வந்த மாபெரும் சிறப்பு என்றால் எவரும் மறுக்க முடியுமா ? அவரவர் 'நின்று' வழிபட கோவில் அமைப்பை அழகாகத்தான் தத்துவமாக அமைத்திருக்கிறார்கள் அதுமட்டுமல்ல அதைச் சேர்ந்த ஊர்களையும் சேர்த்தே. மற்ற மாநிலங்களில் பெரிய பெரிய கோவில்களும் அதைச் சுற்றி அக்ரஹாரங்களும் இருப்பது போல தெரியவில்லை. தமிழக மன்னர்களுக்கு இருந்த தாரள மனசு மற்ற மாநிலத்து மன்னர்களுக்கு இருநத்தில்லை என கருத வேண்டி இருக்கிறது. கொள்ளிக்கட்டையை தன் தலையில் தானே சொறிந்து கொண்ட கதைதான்.

வைதீக ஆகமங்கள் கோவில்களை மட்டுமா ஆக்கிவைத்தன ? ஊர் அமைப்பையே மாற்றிவைத்தன. மக்களையும் பிரித்து வைத்தன, தமிழையும் தள்ளிவைத்தன. தெரிந்து கொள்ளும் போது உடலும் சிலிர்கிறது கூடவே ஆன்மாவும்.

தென்னாடு அடகுவைத்த சிவனே போற்றி !
தமிழ்ச்சொல் கேளா செவிடா போற்றி !

--
அன்புடன்,

கோவி.கண்ணன்

21 ஆகஸ்ட், 2007

*நட்சத்திரம்* : என் இனிய ஈழத்தமிழ் உடன்பிறப்புக்களே...

யாழ் சுதாகர் அவர்களின் நினை வலைகளை செல்பேசியில் தரவிரக்கம் செய்து கேட்டபோது அன்றைய நினைவு என்னையும் தூண்டிவிட்டது. பசுமைகளை காலம் அறுவடை செய்துவிட்டாலும் கோடை மழையில் தாள் அடி துளிர்க்கும் அது போல் யாழ் சுதாகரின் பேச்சு பசுமை நினைவுகளை துளிர்க்க செய்துவிட்டது.

************

70 களின் இறுதியாண்டுகள் நடுநிலை பள்ளிப்படிப்பில் எனக்கு ஓடியது காலம். அப்பொழுதெல்லாம் தொலைகாட்சி என்ற சொல்லே கேள்விப்பட்டது கிடையாது. எங்கள் வீட்டில் ஒரு வால்வு செட் ரேடியோ இருந்தது. பள்ளி முடிந்த வேளைகளிலும், வார இறுதி நாட்களிலும் பொழுது போக்கு என்பது வானொலி கேட்பதுதான்.

எங்கள் ஊர் நாகை, தெற்கில் இருந்து வேதாரணியத்துக்கு அடுத்தபடியாக கடற்கரையோரத்தில் அமைந்திருப்பதால் எங்கள் ஊரில் 90 விழுக்காட்டினர் இலங்கை வானொலியையே விரும்பி கேட்பர். வானொலி கேட்கும் ஆர்வம் குமரியில் இருந்து பாண்டிவரை உள்ள தமிழ்மக்களுக்கு அன்றைய காலத்தில் ஏற்பட்டதற்கு முதன்மை காரணம் கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகிய இலங்கை தமிழ் வானொலி. வானொலி அறிவிப்பாளர் திருவாளர்கள் கேஎஸ்ராஜா, அப்துல்ஹமீது மற்றும் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் ஆகியோர்களின் குரல்கள் இலங்கை வானொலி கேட்கும் பகுதிகளில் நன்கு பழகியிருந்தது (பரிட்சயம்) . சனிகிழமை மாலை 4 மணிக்கு ஒலிபரப்பாகிய இலங்கை தமிழில் பேசிய காதல் தொடர் நாடகம் மிகவும் புகழ்பெற்றதாக இருந்தது பாத்திர பெயர் வசந்தன் - ரமா இன்னும் கூட நினைவில் நிற்கிறது. நாடகத்தின் பெயர் தான் நினைவு இல்லை. 'பைலட் ப்ரேம் நாத்' என்ற நடிகர் திலகத்தின் படம் கொழும்பு நகரத்தில் வருங்களைக் கடந்து வெற்றிவாகை சூடியது. அந்தமான் காதலி, குரு, நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்கள் இலங்கையில் நீண்ட நாட்கள் ஓடியவை என்பதை இலங்கை வானொலி கேட்டவர்களுக்கு தெரியும்.

முகம் காட்டாத குயில்களாக இருந்த இலங்கை அறிவிப்பாளர்களை ஒருமுறை 'இலங்கை குயில்கள்' என்ற தலைப்பில் இராணி வார இதழ் நேர்முகம் கண்டு புகைப்படங்களை வெளி இட்டு இருந்தது அப்பொழுதுதான் அவர்களின் முகங்களை கண்டுகளித்தோம். ஆம் / இல்லை என்று பதில் சொல்லாமல், தொடர்ந்து 5 வினாடி மெளனம் சாதிக்காமல் 1 நிமிடம் கேஸ் ராஜா அவர்கள் நடத்தும் போட்டி, ஹப்துல் ஹமிது அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகள், உதாயாவின் பாட்டுக்கு பாட்டு போன்ற நிகழ்சிகளை மிகவும் சிறப்படைந்தவை

இலங்கை தமிழ்வானொலி நிகழ்சிகளை நினைவுறும் பொழுது அவர்கள் அன்று எவ்வளவு சீரூம் சிறப்பும், செழிப்பும், மகிழ்வோடும் வாழ்ந்திருப்பார்கள் என்று இன்றும் கூட நினைக்க முடிகிறது.

80 களின் ஆரம்பம் வரை உற்சாகமும், உழைப்புமாக வாழ்ந்த நம் தமிழ்மக்கள் உடமை, உறைவிடம், உறவையும் தொலைத்து அகதிகளாக வாழ்வதை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் கனக்கவே செய்கிறது. இலங்கை பற்றிய துயர செய்திகள் கேட்கும் போதும், மண்டபத்துக்கு அகதிகளாக கண்ணீருடன் வந்து இறங்கினார்கள் என்று செய்திவரும் போதெல்லாம் நெஞ்சம் பதறுகின்றது. வாழ்ந்து கெட்டவர்களை நினைத்தால் கண்களில் கண்ணீர் வரும். நன்கு வாழ்ந்தவர்களின் வாழ்வே பறிக்கப்பட்டதால் இந்நிலை என்று தெரிகிறபோது கண்ணீருடன் செந்நீரும் சேர்ந்தே வருகிறது.

இரண்டு தலைமுறையில் இருண்ட வாழ்கையாகவே, போராட்டமாகவே சென்று கொண்டிருக்கும் அவர்களின் வாழ்கையில் இடற்கள் நீங்கி அடுத்த தலைமுறையாவது இழந்தவற்றை யெல்லாம் பெற்று இன்புற்று வாழ்ந்து ஏற்றம் பெறவேண்டும்.

********

அறிவிப்பாளர் திரு யாழ்சுதாகர் அவர்களின் நினைவலைகளினுடன் இணைந்த வானொலி அறிவிப்புகளை இங்கு சொடுக்கிக் கேட்கலாம்

--
அன்புடன்,

கோவி.கண்ணன்

*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)

காலை பத்துமணிக்கு அலுவலகம் வந்தவுடன் அடித்த தொலைபேசி, மரண செய்தியை தாங்கி வந்ததும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது, உடனடியாக விடுப்பு சொல்லிவிட்டு, மனைவிக்கும் தகவல் சொல்லி வரச் சொல்லிவிட்டு ...பதட்டமாக இருந்ததால் ஆட்டோவில் ஏறி நண்பர் சிவராமன் வீட்டை நோக்கிச் சென்றேன்.

சிவராமன் அப்பாவின் நண்பரின் மகன். அப்பாவுடன் சிவராமன் அப்பாவிற்கு ஏற்பட்டிருந்த நட்பு அவர்களுடைய காலத்திற்கு பிறகு சிவராமனுக்கும் எனக்கும் தொடர்ந்திருந்தது. அவர்களுடைய குடும்பம் ஆச்சார்யமான குடும்பம் என்று அப்பா அடிக்கடி சொல்லுவார். அதில் உண்மையும் இருக்கிறது. நண்பர் சிவராமன் வங்கியில் பணிபுரிந்து கொண்டு இருப்பவர். ஓய்வு நேரத்தில் சமய உபாசகராகவும் இருந்தார். அவரை 'பஜகோவிந்தம் சிவராமன்' என்றும் நன்கு தெரிந்தவர்கள் அழைப்பார்கள். சமய கூட்டங்களில் அவர் கொடுக்கும் சாஸ்திர விளக்கங்களை கேட்பதற்கு ஆன்மிக ஆர்வளர்கள் சேர்ந்த ஒரு கூட்டமே உண்டு. எனக்கு மதவிசயங்களில் அவ்வளவு ஈடுப்பாடு இல்லாவிட்டாலும், அவரின் சமய அறிவை எண்ணி வியந்திருக்கிறேன். ஒரு சில சத்சங்க கூட்டங்களுக்கு சிவராமனின் வற்புறுத்தலின் பேரில் சென்றிருக்கிறேன்.

ஒரு முறை வைகுண்ட ஏகதேசியின் முதல் நாள் சிவராமன் என்னை அழைத்துச் சென்றார். ஒரு திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த சத்சங்கக் கூட்டத்தில் அவர் ஆற்றிய சொற்பொழிவு இன்னும் கூட எனக்கு நினைவில் இருக்கிறது. அவர் சொல்லும் சுலோகங்கள் புரியாவிட்டாலும் விளக்கங்கள் ஏதோ ஒன்றை புரிய வைப்பதாகவே இருக்கும். அன்று அவர் சொல்லிக் கொண்டிருந்தார் ...

"புணரபி மரணம் ...புணரபி ஜனனம் ..."

வேதாந்திகளில் சிறப்பானவரும், லோக குருவானவரும், ஆச்சாரியார்களில் மிக முக்கியமானவருமான ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஆதிசங்கரர் என்ன சொல்லுகிறார் என்றால்..."

"மரணம் ... ஜனனம் ...இயற்கையானது...ஓவ்வொரு ஜீவனும் பிறப்பு இறப்பு என்ற சுழலில் வருகிறது. ஜீவன் நித்தியமானது, மரணம் ஜனனம் எல்லாம் மாயத்தோற்றங்கள். ஏன் பிறந்தோம்...ஏன் இறக்கிறோம் என்ற கேள்விகள் அர்த்தமற்றது...ஜீவன் ஒன்றே நித்யமானது. மகாபாரத கதையில் இருந்து ஒரு சிறிய கதையைச் சொல்கிறேன் கேளுங்கள் ... பாரதப் போரில் தன் மகன் அபிமன்யு சக்ர வியூகத்தில் சிக்கி இறந்ததும்... அர்ஜுனன் அவனை கான ஒருமுறை சொர்கத்திற்கு சென்றான். மகன் அபிமன்யுவை மிகவும் நெருங்கி சென்றான். தந்தையான அவனைப் பார்த்தும் கூட அபுமன்யுவிடமிருந்து எந்தவிதமான உணர்ச்சிகளும் ஏற்படவே வில்லை. அர்ஜுனனுக்கு வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் ஆகிவிட்டது. 'மகனே நான் உன் தந்தை வந்திருக்கிறேன்' என்றான் அர்ஜுனன். 'ஓ அப்படியா. நான் எத்தனையோ ஜன்மங்கள் எடுத்திருக்கிறேன். நீ என் எந்த பிறவிக்கு தந்தை ? ' என்று அர்சுனனைப் பார்த்துக் கேட்டான் அபிமன்யூ... அவனே தொடர்ந்து 'ஓ மானிடா உனக்கு ஆன்மா என்றால் என்னவென்று தெரியவில்லையே. பிறப்பும் இறப்பும் பஞ்ச பூதங்களால் ஆன உடலில் ஆன்மா சஞ்சரிக்கும் போது ஏற்படும் தோற்றங்கள். எதோ ஒரு முறை நான் பிறப்பெடுக்க நீ காரணமாக இருந்திருக்கிறாய். அதனுடன் உன்னுடன் உண்டான தொடர்பு என்றோ முடிந்துவிட்டது. எனவே எனக்கு தற்போது தந்தை என்று எவருமே இல்லை. நீ சென்றுவரலாம்.' என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு திரும்பிக் கூட பார்க்காமல் சென்றுவிட்டான். அதிர்ச்சி அடைந்தாலும் அர்சுனனுக்கு ஆன்ம ஞானத்தை அபிமன்யு உணர்த்தியதால் மரண ரகசியங்களை அறிந்த திருப்தியில் அங்கிருந்து பூலோகத்திற்கு வந்துவிட்டான். இப்பொழுது புரிகிறதா ?

மரணம் ... ஜெனனம் எல்லாம் மாயை.

அன்று அவர் சொல்லி முடித்ததும்...பிறப்பு - இறப்பு பற்றி ஏதோ புரிந்தது.

********

சிவராமன் வீட்டை நெருங்கியதும் அழுகுரல்கள்...

சிவரமானும் அவரது மனைவியும் அதிர்ச்சியில் அப்படியே மயங்கி கிடந்தனர். என் மனைவி அதற்குள் வந்து அங்கே சிவராமன் மனைவியின் அருகில் அமர்ந்து அவரை தாங்கி பிடித்துக் கொண்டிருந்தாள்.

மெதுவாக அங்கு துக்கத்திற்கு வந்தவர்களிடம் கேட்டேன்.

"எப்படி நடந்தது..."

"காலையில் அவருடைய பையன் ஸ்கூலுக்கு போனபோது சாலை சந்திப்பில் ... சாலையை கடக்கும் போது எதிர்பாராமல் வந்த கார் மோதியதில் பையன் அங்கேயே..." அதற்கு மேல் அவரால் சொல்ல முடியவில்லை. போஸ்ட் மார்டம் முடிந்து வர மதியம் ஆகும் என்றார்கள்.

வந்து சேர்ந்தது. உறவினர்கள் எல்லோருமே வந்துவிட்டதால் உடனடியாக அடக்கம் செய்துவிட முடிவு செய்தார்கள்

இடையே சற்று நிதானத்துக்கு வந்த சிவராமன் என்னை கட்டிக் கொண்டு அழுதார்.

"ஐயோ...இப்படி ஆயிடுச்சே..."

"......" எனக்கு ஆறுதல் சொல்ல வார்த்தை வரவில்லை கண்கள் நினைந்தது

"நான் எவ்வளவு புண்ணியம் செய்திருக்கிறேன். சதா காலமும் பகவானையே சேவிக்கிறேன்...எனது ஒரே மகனை....." விம்முகிறார்

அவரை இறுக்கி அணைத்து முதுகில் தட்டிகொடுத்தேன்.

"தாங்க முடியலையே...பகவானே என்னையும் கொண்டுட்டு போய்டு..."

அடக்க முடியாமல் அழுதார்.

வீட்டில் சடங்குகள் முடிந்ததும்... உடலை எடுத்துக் கொண்டு சுடுகாட்டுக்கு
சென்றோம். வழியெங்கும் அதிர்சியில் இருந்து மீளாமல் பலமுறை மயங்கினார். மனம் முற்றிலும் உடைந்துவிட்ட நிலையில் எனக்கும் அந்த சூழல் தாங்கிக் கொள்வதற்கே முடியாமல் கண்ணீருடன் இடுகாட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

எல்லாம் முடிந்துவிட்டதே பெரும் சோக அலறலைத் தொடர்ந்து அவரை அப்புறப்படுத்தி திரும்பிப் பார்க்கவிடாமல் அழைத்துச் சென்றனர்.

"சாமி...இன்னும் ஐம்பது ரூவாய் கொடுங்க..."

அந்த நேரத்தில் அந்த சூழலில் வெட்டியானின் பணத்தின் மீதான குறியும், அதன் கெஞ்சலும் மிகவும் எரிச்சலை ஏற்படுத்தியது.

"யோவ்...என்னைய்யா மனுசங்க நீங்களெல்லாம்...சின்ன பையன் சாவுல கூட காசு தான் முக்கியமாக நினைக்கிறிங்க..."

"அதுல்ல...சாமி... அங்கே எரியுது பாருங்க பொனம் அதை ராத்திரியெல்லாம் நாய் நரி நெருங்காமல் பார்த்துக்கனும்...."

"அதுக்கு அவங்க ஆளுங்களிடம் தானே கேட்கனும்"

"சாமி அது யாரோ அனாதை பினாமாம்...யாரோ நாலு புண்ணியவன்கள் எரிக்கறத்துக்கு மட்டும் காசு கொடுத்துட்டு போய்டாங்க...இப்பதான் நல்லா எரிய ஆரம்பிச்சுருக்கு...இனிமே நாத்தம் கொடலை புடுங்கும். அதில நிக்க்றத்துக்கு தான் கொஞ்சம் குடிக்கனும்...அதுக்குதான் பணம் கேட்டேன்"

சற்று இரக்கம் வந்தது எனக்கு

"அதுக்குன்னு ஒரு சின்னப்பையன் இறந்து போய் இருக்கிறான் என்ற வருத்தம் கொஞ்சங்கூட இல்லாமல் காசு கேட்கிறே...மனுசனா நீயெல்லாம் "

"சாமி...அங்கே பாருங்க நாலு முட்டு தள்ளி ஐஞ்சாவது முட்டு...இன்னும் ஈரம் காயாமல் இருக்கே சமாதி ... எது என் மவனோட இருளனோட சமாதிதான்...என்கையாலேயே பொதெச்சேன்..."

எனக்கு தூக்கிவாரி போட்டது... தொடர்ந்தான்

"என் மவன் எப்போதும் ராவெல்லாம் சுடுகாட்டில் எங்கூட தொணைக்கு இருப்பான். போன வாரம் இருட்டுக்குள்ள கொஞ்சம் தள்ளி வெளிக்கு போனவனை பாம்பு கடிச்சுட்டு...ஊருக்குள்ள தூக்கி போறதுகுள்ள நொரை தள்ளி செத்துட்டான் "

"எம் பொண்டாட்டி கதறி.. கதறி அழுதா...நானும் அழுதேன் ... எல்லாம் மூணு நாள் தான் சாமி...முணாம் நாள் அழுது ஓஞ்சு வயக்காட்டு வேலைக்கு போய்டா"

"எம் மவனை பொதச்சதும் சுடுகாட்டு பக்கமே நான் வரலை"

"பக்கதூரு சொந்தக்காரன் சடையன் தான் சுடுகாட்டை பாத்துக்கிட்டான்"

"......."
எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்சியாக இருந்தது...மேலும் சொல்லிக் கொண்டிருந்தான்

"நேத்து, சடையன் அவன் பொண்டாட்டிய புள்ள பெத்துக்க ஆத்தா வீட்டுல விட போறேன்..நீயே சுடுகாட்டை பார்த்துக்க...இன்னிக்கு இரண்டு பொனம் வருது' ன்னு சொல்லிட்டு போய்டான் என்ன செய்றது ..."

மவன் செத்து அஞ்சே நாள்ல இங்க வந்துட்டேன் சாமி..."

அதிர்சியினூடே,

"உனக்கு மவன் செத்துட்டானேன்னு வருத்தமே இல்லையா ?"

"சாமி..பொறப்பு இறப்பெல்லாம் நம்ம கையிலா இருக்கு ?, யார் இன்னைக்கு சுடுகாட்டுக்கு, வருவாங்க, யார் பொறப்பாங்கன்னு யாருக்கு தெரியும் சாமி ?... மவன் செத்துட்டான்...ஆனா... எம்புள்ள இதே சுடுகாட்டில் எங்கூடத் தானே இருக்கான். எல்லோரும் ஒரு நாள் சாகத்தானே போறோம்...சாமியா பாத்து ...கொடுப்பதை சாமியா எடுத்துகுது நாம என்ன செய்ய முடியும் சாமி...பாழும் வயுத்துப் பொழப்பையும் பாக்கனுமே..."

அவன் சொல்லச் சொல்ல எனக்கு எது எதையோ தொடர்புபடுத்தி ஒரு தெளிவு கிடைத்தது.
அவன் கேட்ட 50க்கு பதிலாக 100ஐ கொடுத்துவிட்டு வந்து கொண்டிருந்தேன்.

"நாடாள பொறந்த மவராசா... நானே ஒன்னெ பொதச்சேனடா..."

நான் அங்கிருந்து அகன்ற நிமிடத்தில் ... அவன் பாடிய ஒப்பாறி பாட்டு ...நான் அந்த இடத்தைக் கடந்தும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

--
அன்புடன்,

கோவி.கண்ணன்

எனது மற்ற சிறுகதைகள் :

பொன்னியின் செல்லம்மா !
கடவுள் நம்பிக்கை !
நாணயத்தின் பக்கங்கள்
பட்டமரம்
பூவினும் மெல்லியது...(பெரிய சிறுகதை)
வேம்பு !

20 ஆகஸ்ட், 2007

*நட்சத்திரம்* : 19ஆம் நூற்றாண்டும், பகவத் கீதையும் !

இந்திய மண் முழுவதும் அந்நியருக்கு அடிமைப்பட்டுக் கிடந்தபோது அதிலிருந்து விடுபடுவதற்கு இந்தியர்களை ஒன்றுபடுத்தி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடுவதற்கு பொதுவான விடயம் ஒன்று தேவைப்பட்டதை, விடுதலைப் போராட்டத்தில் போராடிய மகாத்மா காந்தி உட்பட அனைத்துத் தலைவர்களும் உணர்ந்தனர். இந்தியர்களை குறிப்பாக பெரும்பாண்மை என்ற சொல்லாடலில் வைத்திருக்கும் இந்துக்களை ஒன்றுபடுத்துவதென்றால் பொதுவாக எதாவது ஒரு அம்சம் இருக்க வேண்டும். அது எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்றும், மேலும் அதை முன்னிலைப்படுத்திப் போராடினால் அது ஊக்கம் தருவதாக இருக்க வேண்டும் என்று நினைத்தனர். இந்த தேடலில் திடீர் ஞான உதயமாக காட்சி கொடுத்ததுதான் பகவத் கீதை.

19 ஆம் நூற்றாண்டுக்கு முன் பகவத் கீதை என்பது ஒரு உபநிடத நூல் என்ற அளவில் மிகச் சிலரால் பொத்தி பொத்தி உயர்வாக பேசப்பட்டு வந்திருந்தது. நாடுமுழுவதும் பேசப்படாத, மொழி பெயர்க்கப்படாத நூலாகவே அது இருந்தது. அதைத்தாண்டி பகவத் கீதையின் தேவை வாழ்வியலுக்காகவோ வேறு எதற்காகவோ பயனளிக்கக் கூடியது என்று ஆராய்ச்சி எல்லாம் எவரும் செய்யவில்லை. மேலும் பகவத் கீதை அன்றாடத் தேவைக்கு மிக அவசியம் என்ற காரணம் சமூக காரணங்கள் இருக்கவில்லை.

பகவத்கீதையின் ஒரு சிறப்பு அம்சம், வேதத்தை நம்பும் வைதீகத்தின் கருத்துக்களை அது உள்வாங்கி இருக்கிறது என்பதால் வைதீக பிராமணர்களாலும் அது சிறப்பிக்கப்பட்டது. அதே போன்று கிருஷ்ணர் அருளியது என்ற தோற்றம் இருப்பதால் வைணவர்களாலும் போற்றப்பட்ட பொதுவான நூலாக அது இருந்தது. இந்த இரு அம்சங்களை முதலில் கருத்தில் கொண்டுவந்த விடுதலைப் போராட்ட இந்து அமைப்பினர், அதை முன்னிலைப்படுத்துவது என்ற முடிவுக்கு வந்தனர். இது மட்டும் போதுமா ? இது வெறும் வைதீக மரபினரை மட்டுமே திருப்தி படுத்தும் என்பதால், மேலும் அதற்கு புனித நூல் அங்கீகாரம் கொடுத்தால் தான் அவற்றை மற்ற இந்து சமயத்தை உள்ளடக்கிய பிற சமயத்தினரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று கருதினர்.

ஆங்கிலேயர்களால் ஏற்பட்ட நீதிமன்றத்தில் சத்திய உறுதி ( பிரமாணம்) ஏற்பது என்பது வழக்கு நடக்கும் போது முதலில் செய்யப்படும் ஒரு முறை (சம்பிரதாயம்). இதன் மூலம் தாம் கடவுளின் பெயரால் சொல்வதெல்லாம் உண்மை என்று ஆரம்பித்து அதன் அடிப்படையிலும், சாட்சியங்களின் அடிப்படையிலும் நீதி வழங்கப்படுகிறது. ஏற்கனவே புனித நூல் என்ற அந்தஸ்தை கிறித்துவ பைபிள் பெற்றிருப்பதால் கிறிஸ்துவர்களுக்கும், குரானை புனித நூலாக கொண்டுள்ள இஸ்லாமியர்களுக்கோ எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இந்துக்கள் என்று வரும் போது ஒரு புனித நூல் என்பது இருந்து அது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் மட்டுமே அவை நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் என்ற நிலை அன்றைய நீதீமன்றங்களில் இந்து வழக்குகளுக்கு அவசியமானதாக இருந்தது.

இந்த சூழ்நிலையில் பகவத்கீதையை புனித நூல் என்று பொதுப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று இந்து தலைவர்கள் முடிவு செய்து பகவத்கீதையை முன்னிலைப்படுத்த பல்வேறு இந்திய மொழிகளில் உரை எழுத தலைப்பட்டனர். காந்திஜி, இராஜாகோபால் ஆச்சாரியார், கோபால கிருஷ்ண கோகலே மற்றும் நம் பாரதியாரும் வந்தே மாதிரத்தை மொழி பெயர்த்தவுடன் கீதையை மொழி பெயர்த்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன்பிறகு இந்து சமயத்தில் சைவம் - வைணவம் என்று பெரிய எதிர்ப்பு எதுவும் வராததால் பகவத் கீதை புனித நூலின் சிறப்புத் தகுதியை பெற்றது.

பகவத்கீதை முழுவதற்குமே பொருள் சொல்லி போற்ற முயன்றிருந்தால் அது அன்றே நிராகரிக்கப்பட்டு இருக்கும், ஏனென்றால் 'நான்கு வர்ணங்கள் என்னிடமிருந்தே தோன்றி யதாகவும், யார் யார் ? எங்கிருந்து பிறந்தார்கள்' என்றும் கண்ணன் அதில் ஆணித்தரமாக சொல்கிறான். எனவே அவற்றைத் தவிர்த்து கர்மயோகத்தில் காட்டியுள்ள 'செயல்கள்' குறித்து மட்டுமே விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. 'கடமையை செய், பலனை எதிர்பாராதே' என்ற வாக்கியம் முன்னிலைப் படுத்தப்பட்டது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடுவது என்பது கடமை என்றும் போராடுபவர்களே சத்திரியர்கள், 'வெற்றித்தோல்வி பற்றி எண்ணம் எதுவுமின்றி போராட்டம் ஒன்றையே குறிக்கோளாக் கொள்ள வேண்டும்' என்று இந்து போராட்ட வீரர்களுக்கு அது உபதேசமாக்கப்பட்டது. ஏனென்றால் அப்போதும், எப்போதும் இருப்பது போலவே இஸ்லாமிய - இந்து சண்டைகள், கிறித்துவ - இந்து சண்டைகள் இருந்தன. அவர்கள் புனிதப்போர் என்று புனித நூல்களின் மேற்கோளைக் காட்டிப் போரிடும் போது அதே செயல் (உத்)வேகம் இந்து மதத்து இளைஞர்களுக்கும் இருக்க வேண்டும் என்பதற்காக பகவத்கீதை புனித நூலாகவும் கர்மயோக கோட்பாடுகள் போரைப்பற்றிய தெளிவு கொடுப்பதற்கும் பயன்பட்டது.

**********************

இவையெல்லாம் சுதந்திர போராட்டத்துக்கு முந்தைய கீதைப்பற்றி மக்கள் மத்தியில் முன் வைக்கப்பட்ட கருத்துக்கள். கீதைவழி - எதிர்பார்தது போலவே இந்து இளைஞர்களின் எழுச்சியாலும் விடுதலை போராட்டம் வெற்றி பெற அதுவும் ஒரு காரணமாக அமைந்தது. அதன் பிறகு அது இந்து வெறியாகவும் மாறியது, முடிவில் ? மகாத்மாவே கொலை செய்யப்பட்டார். இன்றைய தேவை என்று பகவத் கீதையில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு குறிப்பாக இந்துக்களின் ஒருமைப்பாட்டுக்கு எந்த விடயமும் இல்லை. தமிழக இந்துக்களுக்கு கீதையோ, வேறு வடமொழி நூல்களோ புதிதாக எதுவும் சொல்வதற்கு என்று ஒன்றுமே இல்லை எனலாம்.

சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரம், கெளடில்யர் எழுதிய தர்ம சாஸ்திரம், வாத்ஸ்யாயனர் எழுதிய காம சாஸ்திரம் ஆகிய மூன்றிற்கும் முன்பே முப்பாலும் ஒருங்கே இணைந்த ஐயன் வள்ளுவனின் அழகு குறள்கள் நமக்கு இருக்கின்றன. 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்றுரைக்கும் திருமூலச் சித்தரின் திருமந்திரத்தை விடவும், சைவர்கள் மூவர் அருளிய தேவரம், திருவாசகத்தைவிடவும் வைணவர்களின் நாலாயிரம் திவ்யபிரபந்தத்தை விடவும் பக்தியை வளர்க்க கீதை எந்த விதத்திலும் பயனளிப்பதாக நான் கருதவில்லை.

பகவத்கீதை - இதில் மனு என்ற அரக்கன் மறைவாக பதுங்கி இருந்து சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிறப்பை வைத்து இழிவுபடுத்தவும், பிறப்பின் அடிப்படையில் 'தகுதிகள்' பற்றி பேசவும் கண்விழித்துக் காத்துக் கொண்டிருக்கிறான். இதற்குமேலும் தமிழக இந்துக்கள் கீதையை போற்ற ஆரம்பித்தால் அதில் மறைந்துள்ள வர்ண சூட்சமத்தை சூரணமாக்கி தின்று அந்த தெம்பில் வெளியே வந்து பயமின்றி நடனமே ஆடுவான். புனித நூல் என்பதால் சில கருத்துக்களில் உடன்பாடு (சமரசம், காம்ரமைஸ்) செய்து கொள்ளலாம் என்று நினைத்து அலட்சியமாக இருந்தால் மனுவென்ற அரக்கன் கீதையின் (கிருஷ்ணனின்) ஆதரவு நிழலில் படுத்துக்கிடக்கும் ஆதிசேசன் போன்றவன். எந்த நேரத்திலும் அவன் விஷம் கக்கினால் மீண்டும் நாமெல்லாம் சூத்திரர்கள் ஆக்கப்படுவோம் என்ற ஆபத்து நிறையவே இருக்கிறது. சூத்திரன் - இதன் பொருள் வேசி மகனா ? இழிபிறவியா ? மனுவில் உள்ள குறிப்புப் படி அப்படித்தான் பொருளாம் !!!

எதைக் கொண்டுவந்தாய் எதை இழப்பதற்கு ?
பகவத் கீதையை கொண்டுவந்தால் அதன் பிறகு இழப்பதற்கு ஒன்றுமே இல்லை!!!

இன்று உன்னுடையதாக இருப்பது (அதாவது நீ மீட்டுக் கொண்டது ?) நாளை வேறு ஒருவருடையது ஆகும் ! :))
அதன்பிறகு பெறுவதற்கென்று எதாவது கிடைத்தால் தானே இழப்பைப் பற்றி பேச முடியும் ? :(
இன்று மாலை இந்திய நேரப்படி, அடுத்த இடுகை ஒரு கலக்கல் சிறுகதை !!!

*நட்சத்திரம்* : சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா φ

தமிழக இந்துக்கள் (சைவ / வைணவர் / நாட்டார் தெய்வங்களை வணங்குபவர்/ வைதீக மரபினர் என) அனைவரும் ஏற்றுக் கொள்ளும் ஒரே ஒரு பொது கடவுள் முருகன். சங்காலத்திற்கு முற்பட்டே தமிழகத்தில் முருகன் வழிபாடு வழக்கத்தில் இருக்கிறது என்பதற்கு இலக்கியங்களில் ஏராளமான குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. தமிழகத்தில் குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று போற்றப்பட்டது என்பதில் இருந்து முருகன் வழிபாடு தமிழகம் முழுவதும் பரவிக் கிடந்தன என்பது நமக்கு தெரிய வருகிறது. மலைகள் அற்ற தஞ்சை மாவட்டத்தை அடக்கிய கும்பகோணம் சுவாமி மலை, நாகையை ஒட்டிய எட்டுக்குடி, திருவாரூரை ஒட்டிய என்கண், சிக்கல் சிங்காரவேலர் கோவில்கள் போன்று பெரிய ஆலயங்களும், சிறிய ஆலயங்களும் எண்ணற்ற அளவில் முருகனுக்கு ஆலயங்கள் இருக்கின்றன.

தமிழர்கள் சாதி வேறுபாட்டில் விழுந்திருக்காத காலம் தொட்டே முருக வழிபாடு இருப்பதால், பின்னாளில் வருணத் தாக்குதலால் சாதியம் வளர்ந்த போதும் முருகன் இந்த சாதிக்கு மட்டுமே உரிமையுடைய கடவுள் என்று பிரிந்து போய்விடவில்லை. அதைவிட எங்களைச் சேர்ந்தவர் என்று காட்ட பல்வேறு தமிழக சாதிகளும் முருகனை வைத்து புனைவு கதைகளைப் புகுத்தி சேர்த்துக் கொள்ளவே செய்திருக்கின்றனர். வேடுவன் முருகன் எனவே குறவரும் மறவரும் முருகனை தங்களைச் சேர்ந்தவர் என்று சொல்லுகிறார்கள். முருகன் தங்கள் சாதியைச் சேர்ந்தவர் என்று காட்டுவதற்காக எழுதப்பட்ட 'செட்டி மகனே திலக கட்டிமணியே' என்ற ஒற்றையடி காவடி சிந்து பாட்டுக்கள் செட்டியார்களால் இயற்றப்பட்டது. தமிழகத்தில் முருகன் வழிபாடே முதன்மையானது என்று பின்னாளில் தமிழகத்தில் குடியேறிய போது அறிந்து கொண்டு முருகன் வேதக்கடவுள் என்று சொல்ல முயன்ற வைதிக மதம், வேதகடவுளான இந்திரனின் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்தும், தங்களின் முதல் கடவுளான வேதம் போற்றிய பிரம்மனை பிரணவ மந்திரத்தை மறந்ததற்காக சிறையில் அடைத்தாக புராணம் எழுதி (முதலில் தாழ்த்திக் கொண்டு) பிறகு தமதாக்கிக் கொள்ள முனைந்ததும் கூட நடந்திருக்கிறது. மேலும் குமரகுருபரரே குமரன் முருகன் என்றும், மேலும் கந்தபுராண பாடல்கள் முழுவதுமே முருகனை ஷண்முகனாக்கி, சுப்ரமணியனாக்கி, வேதக்கடவுளாக்கிப் போற்றிப் பார்த்தனர். வைணவர்களைக் முருகன் பக்கம் இழுப்பதற்காக திருமாலுக்கு இருப்பது போலவே அவதாரக் கதைகளும் சூரனை அழித்த கதைகள் மற்றும் திருமால் முருகனுக்குத் தாய்மாமன் என்ற உறவாகவும் சொல்லப்பட்டது. முருகனை உறவாகக் கொண்ட பின்பு சைவமும் வைணவும் கைகோர்க்க ஆரம்பித்தது.

சிறுதெய்வ வழிபாடாக இருந்தாலும் அது சிறப்படைந்திருந்தால் கொள்ளப்பட்டிருந்தால் அவற்றிற்கு
புராணம் ஏற்றி வைதிகவழி வந்ததாக காட்டுவது பின்னால் ஏற்பட்ட வழக்கு, இன்றும் கூட கிராமக் கோவில்களில் திருவிளக்கு பூஜை என்ற பெயரில் நாட்டார் தெய்வங்களை வேதகால தெய்வங்களின் 'அம்சம்' என்பது போன்று கதைகளைச் சொல்லியும், சமஸ்கிரத மந்திரங்களைச் சொல்லியும்
வேதகால தெய்வம் என்ற 'புரோமசன்' கொடுத்துக் கொண்டி ருப்பதைப் தற்காலத்திலும் பார்க்கலாம். இந்த வகையில் தான் காளியம்மன், மாரியம்மன் போன்ற நாட்டார் தெய்வங்கள் கூட சக்தியின் அவதாரமாக உருமாறின.

இவற்றிற்கான தேவைதான் என்ன என்று பார்த்தால் குறிப்பிட்ட உருவ தெய்வ நம்பிக்கைகள் அந்த மண்ணில் செலுத்தி வந்த ஆதிக்கமே காரணம் என்று தெரிகிறது. அவற்றில் புகுவதின் மூலம் அந்த மக்களுடன் உறவாட முடிந்தது. இதுபோன்றே முருகன் வழிபாடு பலசமயத்தினராலும் உரிமையுடன் போற்றப்பட்டது. அதாவது அபகரித்தல் என்று சொல்வதைவிட உரிமை இருக்கிறது என்று காட்டவே முதன்மையாக கையாளப்பட்டது. பிற்கால சமுக அரசியலில் 'தெய்வத்தை அபகரித்தல்' என்பதாக மாறியதற்கு காரணம். கதைகள் உண்மை என்று பக்தியாளர்கள் நம்பிவிட்டதால் அதையே காரணமாக வைத்து பிறருக்கும் இருக்கும் உரிமையை மறுத்ததாலேயே என்பதும் தெளிவாகிறது.

முருகன் வழிபாடு மட்டுமே இருந்த காலத்தில் சிவனுக்கு மைந்தனாக இருந்தது இல்லை. திருமாலுக்கு மருமகனாகவும் இருந்தது இல்லை. இவையெல்லாம் பின்னால் புனைவுடன் எழுதப்பட்டு வாரிசாக்கப்பட்ட கதைகள். முருகனுடன் இணைத்து எழுதும் போதும் தங்கள் நம்பும் கடவுளையும் முருக வழிபாடு செய்பவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பி செய்ததும் அது நடந்தேறியதும் அறிந்ததே. அதற்காக நான் சைவ கடவுள் சிவனையும், வைணவ கடவுள் திருமாலையும் வைதீக கடவுள் என்று சொல்லவில்லை. அவைகள் வைதீக மயமாக்கப்பட்டது வேறொரு நிகழ்வில் அது புத்தர் காலத்துக்கு பிந்தியது.

14 ஆம் நூற்றாண்டிற்கு பிறகே அதாவது சைவசமயம் ஓங்கி வளர்ந்த பக்தி இலக்கிய காலகட்டத்திலேயே பிள்ளையார் முருகனுக்கு அண்ணன் ஆக்கப்பட்டார். அதற்கு முன்பு எந்த சங்க இலக்கியங்களிலும் பிள்ளையார் வணக்கம் செய்து பாடல்கள் இல்லை. ஐயப்பன் முருகனுக்கு தம்பியானது இயற்கையாக நிகழ்ந்த ஒரு நிகழ்வு அதற்கு என்று தனியாக புனைவு தேவைப்படவில்லை. எனென்றால் ஐயப்பன் சிவனுக்கு மைந்தனாகிய போது முருகனுக்கும் தம்பியானவது பிறப்பின் அடிப்படையில் (இன்ஹெரிட்டன்ஸ்) ஏற்பட்ட இயல்பு நிகழ்வு.

இந்து பக்தி இலக்கியத்தின் வழியாகவோ அல்லது வேறுவழியாகவோ எதுவாக
இருந்ததலும் அதில் முருகனுடன் உறவை புனைவதைத் தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டுக்குள் எந்த கடவுளையும் இந்துமதம் சார்பாக புகுத்த முடியாது என்பதற்கு இவைகள் ஆதாரமாக இருக்கின்றன.

இவை மட்டும் தான முருகன் தமிழர்களுக்கு உறவானவன் என்று காட்டுவதற்கு ? இல்லை இல்லை. தமிழர்கள் எங்கு குழவாக குடிபெயர்ந்தாலும் குழுக்களாக இணைந்து கொண்டாலும் தவறாமல் உடன் எடுத்துச் செல்வது
முதன்மையாக முருகனைத்தான். கண்டி கதிர்காமம், மலேசியா பத்துமலை, சிங்கை தண்டாயுதபானி சுவாமி,
அட்லாண்டா முருகன் என தமிழர் இருக்கும் இடம் என்று அடையாளப்படுத்தும் அளவுக்கு முருகன் வழிபாடு தனிச் செல்வாக்கு படைத்தது.

பிள்ளையார் மற்றும் இராமனை எப்போதும் விமர்சித்த பெரியார் கூட முருக வழிபாட்டை அவ்வளவாக எதிர்க்கவில்லை. என்னதான் மூட நம்பிக்கை மற்றும் உருவ வழிபாடுகளை பெரியார் எதிர்த்திருந்தாலும் தமிழர்களின் 'ஓம்'கார முருகனை பெரியார் அவ்வளவாக தொடவே இல்லை. முருகன் மேல் இருந்த 'ஸ்கந்தன்' என்ற வைதீக பெயரையும், அதன் பெயரை வைத்து புனைந்த புராணங்களை மட்டுமே இகழ்ந்தார். முருகன் படங்களை தீயிட்டு கொளுத்தியதாகவோ, சிலைகளை உடைத்ததாகவே தெரியவில்லை. கலைஞர் முக அவர்கள் கூட அண்மையில் எட்டுக்குடியில் பெரியார் பாடலை பாடிக்கொண்டே பெரியார் தொண்டர்கள் முருகனுக்கு காவடி எடுத்தது சென்றதை நினைவில் இருந்து குறிப்பிட்டுள்ளார் என்பது இங்கு நினைவுறத்தக்கது.

தமிழருக்கு முழுமுதல் கடவுள் முருகன் என்று தமிழ் மக்கள் மனதில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பதிந்துவிட்ட நிலையில், முருகனையும் தமிழையும் என்றுமே தனித்துப் பார்க்க முடியாது. 12 கைகளும் உயிர் எழுத்துக்களாகவும் , தலைக்கு முன்று என 18 கண்கள் மெய் எழுத்துக்களாகவும் வேல் என்ற ஆயுதம் ஆய்த எழுத்தாகவும் முருகனின் உருவம் ஒரு 'தமிழ் குறீயீடு' என்கிறார்கள். வல்லின, மெல்லின, இடையின எழுத்துக்கள் சேர்ந்து 'தமிழ்' என்பது போல் தான் 'முருகு' என்ற சொல்லும் அழகாக அமைந்திருக்கிறது. தமிழும் முருகனும் வேறில்லை. தமிழ் நீசபாசை என்று பழித்துச் சொல்லும் போது அந்த அசுரர்களின் தலையை கொய்ய முதலில் எரியப்படுவது முருகனின் 'ஆய்த எழுத்தாக இருக்கும் கூர் வெற்றி வேல் தமிழ். அந்த வேல் கொண்டு , வீறுகொண்டு எறிபவர் யாவரும் முருகனின் உயர்ந்த திருவுருவில் (விஷ்வ ரூபம்) இருந்து எழும் முருகன்(பக்தர்)கள் தாம்.

முருகனும் தமிழும் வேறல்ல.

முருகன் தான் தமிழ், தமிழ் தான் முருகன் ! அறி'ஓம்' !!!

உரக்க சத்தமிடு'ஓம்' !

வெற்றிவேல் முருகனுக்கு ... அரோகரா
!

:)))

சென்ற பதிவில் குறிப்பிட்டு இருந்த தாடி வைத்த தமிழ்க் கடவுள் ? மேலே பாருங்கள் வள்ளியை ஏமாற்றும் முருகன் வேடத்தை, தாடி இருக்கும். :))


--
அன்புடன்,

கோவி.கண்ணன்

19 ஆகஸ்ட், 2007

*நட்சத்திரம்* : ஒருவார 'காலம்' உங்களோடு ...

வணக்கம் நண்பர்களே,

தமிழ்மணத்தில் இருந்து நட்சத்திர பதிவுகள் எழுத நான்கு வாரங்களுக்கு முன்பே அழைப்பு வந்துவிட்டது. பல பதிவர்களை பாராட்டிய மேடை என்பதால் கூட்டத்துடன் கோஷமிட்டுக் கொண்டிருந்த எனக்கு இது கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும், அந்த கூட்டத்தில் ஒருவனான எனக்கும் தனிமேடையாக ஒருவாரத்துக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்கிறேன். அதற்காக தமிழ்மணம் நிறுவனத்தாருக்கு எனது நன்றிகள்.

****************

ஓர் ஆண்டுக்கும் மேலாக எழுதுவதால் என்னைப் பற்றிய தன்(சுய) அறிமுகம் தேவை இல்லை என நினைக்கிறேன். மேலும் என்னைப் பற்றிய இலவச விளம்பரங்களை அவ்வப்போது நெருங்கிய நண்பர்களே அன்புடன், மகிழ்வுடன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள், தி(க?)ட்டாமல் வேண்டுகோளும் வைத்திருக்கிறாகள் என்பதால் அறிமுகம் முற்றிலும் தேவை இல்லை. போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் (என் 'காலத்திலும்') கண்ணனுக்கே. :))

கிழே பெரிய டிஸ்கி... :))

வலைப்பதிவு எழுதுவதற்கு முன், பதிவு நடப்புகள் ஓரளவுக்கு தெரிந்ததால் எழுத ஆரம்பிக்கும் போது எதை எதையெல்லாம் எழுதலாம் என்று ஒரளவுக்கு தெளிவு கிடைத்தது. மூன்று விடயங்களில் பொதுவாக எல்லோரும் ஆர்வம் செலுத்துகிறார்கள். ஒன்று சமூகம், இரண்டு அரசியல், மூன்றாவது அன்றாடம் புதிதாக முளைக்கும் எல்லாம் கலந்த பிணக்குகள். கும்மிகள் தனிவகை :)). எனவே இதில் கும்மியைக் குறைத்துக் கொண்டு எழுதுவது எனக்கு கடினமாக இருக்கவில்லை. பத்து ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் நிகழ்வுகளைப் பார்த்து வருவதால் அரசியலில் நடக்கும் கூத்துக்களை விமர்சித்திருக்கிறேன். தவறுகளைச் சுட்டிக் காட்டுவதில் தயங்கியதில்லை. அதே சமயத்தில் திராவிடக் கட்சிகள் பிடிக்கும் என்பதால் சப்பைக் கட்டும் கட்ட முயற்சிக்கவில்லை என்றே நினனக்கிறேன். அடுத்தது சமூகம் ... நேற்று வெற்றி அடைந்த காதல் திரைப்படம் வரை சாதீயக் கெடுதிகளைப் பொதுப்படுத்திப் பேசதவர்களே இல்லை. சாதியம் என்பது ஒரே இனத்தைச் சேர்ந்த மக்களை கூறுபோட்டு பிரிவினையை வளர்ப்பதே. அன்றாடம் சாதிகளை மையமாக வைத்து பிணக்குகள் எழும் போது அவற்றைப் பற்றி பேசமால் இருக்க முடியாது.

முற்றிலும் இந்திய சூழலில், சாதிகளின் தற்காப்பு கேடயமாக இருப்பது மதம், எந்த மதம் ? கிறித்துவத்தில் சாதி பார்பது வழக்கில் உள்ளதை கிறித்துவ பதிவர்கள் சிலர் எழுதி இருக்கின்றனர், இஸ்லாமிலும் கஃபீர் என்ற சொல் இஸ்லாமியர் அல்லாதவர்களைக் குறித்தாலும் காஃபிர் என்ற சொல்லை தாழ்வாக விளிப்பதற்கான குறீயீட்டுச் சொல்லாக வழக்கில் பயன்படுகிறது என்பதை வெளிப்படையாக இஸ்லாமிய சகோதரர்கள் ஒப்புக் கொள்ள மறுப்பர், ஆனாலும் இன ரீதியான மோதல்களை 'ஆம்' என்று சொல்வர். எனக்கு மற்ற மதங்கள் பற்றிய கவலை தேவையில்லை. அதை அந்த மதத்துக்கு சகோதரர்கள் பார்த்துக் கொள்ளட்டும். பிறக்கும் போதே என் மீது விழுந்திருக்கும் மதத்தின் மேலுள்ள சேறுகளை அகற்றி தூய்மை படுத்துவதற்கு என்னளவில் நான் நான் முயற்சிப்பது தவறில்லை என நினைக்கிறேன். என்மதத்தை சேர்ந்த சீர்திருத்தவாதிகள் விவேகநந்தர் முதல் திரு சுகிசுவம் வரை பலரும் சீர்படுத்துவதில் முயன்றிருக்கிறார்கள், வருகிறார்கள் என்பதையும், தந்தைப் பெரியாரும் மதத்திலிருந்து கொண்டே சவுக்கை சுழற்றினார் என்பதையும் அறிந்திருக்கிறேன்.

சாதியத்தை மத ஆர்வலர்கள் தாங்கிப் பிடிக்கும் போது சாதியத்தால் விளைந்த கேடுகளை குறித்து கேள்வி எழுப்ப வேண்டியது தேவை (அவசியம்) என்றாகிறது, அதன் காரணிகளாக, தொடர்ச்சியாக மதத்தில் காணப்படும் கண்மூடித்தனமான மூடநம்பிக்கைகளை குறைசொல்லாமல் இருக்க முடியாது. இன்றைக்கு, தாம் இந்த சாதியில் பிறந்தோம் என்பதை மாற்ற முடியாவிட்டாலும் சாதிப் பெருமைப் பேச பொதுவாக இளைஞர்கள் தயங்குகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது சாதியத்தை பலரும் கடுமையாக விமர்சிப்பதே அந்த நல்ல மாற்றத்திற்கான காரணம் என்பது ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை. சாதியம் வேண்டும் என்பவர்களின் காட்டுக் கூய்ச்சல் எப்போதும் கேட்டுக் கொண்டிருக்கத்தான் செய்யும், அவற்றைப் புறம் தள்ளி குலப் பெருமை பேசும் எந்த சாதியாக இருந்தாலும் அவை முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியதே. [என் குடும்பத்தை இழுத்து என் உறவுகளை பல சாதி ஆண்களுக்கு பங்கு வைத்தால் சமத்துவம் காணமுடியும், எனவே முயற்சி செய்யேன் !!! என்ற பொருள்படும் ஆபாச சொற்களால் எழுதப்பட்ட பின்னூட்டங்கள் *அறி'வுறுத்தகள்' ?* கூட வந்திருக்கிறது.] மனக்குப்பையை கொட்டி தூய்மைப் படுத்திக் கொள்ளட்டுமே. இறைவன் இருப்பதை நம்பும் 'எவரும் பாவமண்ணிப்பு கேட்கும் போது தம் பாவங்களைத்தானே எடுத்துக் கொள்ளச் சொல்லி நன்மைக்காக வேண்டுவார்கள் இல்லையா ?' அந்த நோக்கில் அவர்களின் (மன) அழுக்குகளை ஏற்கலாம்.

***********

எதிர்பாராத விதமாக சாதிகளின் பெயரில் (ரீதியான) இருக்கும் இட ஒதிக்கீடுகளினால் சாதிப்பற்றாளர்களின் சாதிபோற்றும் ஆசையில் இன்னும் சில காலங்களுக்கு மண் விழாது என்று அவர்கள் ஆறுதல் பட்டுக் கொள்ளலாம். ஆனாலும் முன்பு போல் எவரையும் சாதியைச் சொல்லி தாழ்த்த முடியாது என்பதால் வரும் காலத்தில் சாதியின் பயன்பாடு குறைந்து சாதிகள் அழியும் சாத்திய கூறுகள் உருவாகும் என்றே கருதுகிறேன்.

தமிழ்மணத்தில் தொடர்ந்து என் இடுகைகளைப் படித்தவர்களுக்கு நன்கு தெரியும். அதாவது நான் எந்த தனிமனிதரையும் தாக்கி எழுதியது இல்லை. மூட நம்பிக்கைகளினால் பலரும் பாதிக்கப்படுவதையும், அறிவுக்கு ஓவ்வாத ஒன்றை உயர்வாக எண்ணிப் பேசுவதையும் அதை உண்மை என்று கூறி மக்களை ஏமாற்றுவதையும் பன்னெடும் காலமாக 'மகான்கள்' எதிர்த்தே வந்திருக்கின்றனர். தமிழ் சித்தர்கள் 18 பேர்களும் பக்தியை வளர்க்க பாடுபட்டது போலவே மூட நம்பிக்கைகளுக்கு எதிராக கத்தி வீசியிருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டால் என் எழுத்துக்கள் அதில் ஒரு விழுக்காடு கூட இருக்காது என்றே கூறிக்கொள்கிறேன். அதற்காக என்னை சித்தர்களுடன் ஒப்பிடுகிறேன் என்று தவறாகவும் பொருள் கொள்ள வேண்டாம். இந்து மதத்தில் சீர்திருத்தம் வேண்டும், மதம் மக்களுக்காக பயன்படவேண்டும் என்று நினைப்பவர்களும், இறைவன் அனைவருக்கும் பொது என்று நினைப்பவகள், குறிப்பாக தமிழக இந்துக்கள் என எவரும் என் கருத்துக்கள் அவதூறு என்று சொன்னது கிடையாது. புரியாதவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. தூங்குபவர்களாக நடிப்பவர்களையும், செத்துப் போனவர்களையும் ஒருபோதும் எழுப்ப முடியாது. என் மதம் இழிவானது எனவே மாற்று மதத்தை நாடுங்கள் என்று தவறான கருத்தை நான் தெரிவித்தது இல்லை. என்னைப் பொருத்து மதமே தேவையற்றது. இறைவன் என்று ஒருவன் இருப்பதை நம்பும் போது அவற்றை மதத்தில் கூறப்பட்டுள்ள வழிமுறைகள் மூலமே புரிந்து கொள்ள முடியும் என்று எவரேனும் சொன்னால் அது நிராகரிக்கக்கூடிய கருத்து என்று உலகலவில் பலரும் ஒப்புக் கொள்கிறார்கள். மதங்களைக் கடந்த சூஃபி ஞானிகள் நல்லதையும், ஒற்றுமையையுமே வளர்த்து இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.

இந்த சிந்தனையில் எனது இடுகைகளை இந்தவாரம் முழுதும் இருக்கும். அதே சமயத்தில் எல்லாமும் சமுகம் சார்ந்ததாக இருக்காது. சில சிறுகதைகள், சில கட்டுரைகள், சில விமர்சனங்கள், நகைச்சுவை(கள்) இருக்கும்.

பின்னூட்டமிட்டு வாழ்த்தப் போகும் மற்றும் கருத்துச் சொல்லப் போகிற உடன் (சக) பதிவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் முன்கூட்டியே நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்த இடுகை ?
கடவுள் வாழ்த்து ! :))

எந்த கடவுள் ?
தாடி வைத்த தமிழ்க் கடவுள் பற்றியது, இந்திய நேரப்படி இன்று மாலை வரும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்