பின்பற்றுபவர்கள்

7 ஆகஸ்ட், 2007

நேரம் 'நல்ல' நேரம் !

நேரம் (Time) என்று ஒன்று இல்லை. நம் வசதிக்கேற்ப கால சுழற்சியில் பிரிவுகளை (Section) ஏற்படுத்தி பயன்படுத்தி வருகிறோம். நாகரீகம் வளர்ந்த காலகட்டத்தில் கூட சூரியனின் எழுச்சி மற்றும் அமிழ்த்தல் இரண்டும் காலக் குறியீடுகளாக பழங்குடி மக்களுக்கு இருந்து வந்தன. அதாவது அவர்களைப் பொருத்து இருகாலங்கள். ஒன்று சூரியன் இருக்கும் பகல் மற்றொன்று நிலவிருக்கும் இரவு. நாகரீகம் நன்கு வளர்ந்த பிந்தைய கால கட்டங்களிலேயே நாட்காட்டி (காலண்டர்) முறை பழக்கத்திற்கு வந்திருக்கிறது. இந்திய மக்களிடம் நாட்காட்டி முறை எப்போது அறிமுகமானது என்று தெரியவில்லை. ஆனாலும் ஆங்கில நாட்காட்டியின் அளவீடுகளில் அதாவது 365 நாட்கள் என்ற கணக்கில் மாதங்கள், ஆண்டு ஆரம்பம் ஒத்துவராவிட்டாலும் எண்ணிக்கையில் மிகச்சரியாகவே இருக்கிறது. ஆதாரங்களுடன், வரலாற்றுடன் தொடர்பு இருப்பதால் ஆங்கில நாட்காட்டி முறையே முதன்முதலாக தோன்றியதாக சொல்கிறார்கள். அதாவது ஆங்கில மாதம் ஒவ்வொன்றின் பெயரும் முறையே, தத்துவஞானிகள், அரசர்கள், கிரேக்கக் கடவுள் பெயரால் வழங்கப்படுகிறது. முதன் முதலில் பருவநிலை சுழற்சியை வைத்து ஆண்டுக்கான நாட்கள் இவ்வளவு என்று ஒரு பாதிரியார் கணக்கிட்டதாக உலகவரலாறு சொல்கிறது.

இந்தியர்கள் குறிப்பாக திராவிட மக்கள், வடமொழி இலக்கியங்கள் ஆகியவற்றில் வானியியல், ஜோதிடம் , எண் கணிதம் போன்றவற்றில் நாட்கள், மற்றும் ஆண்டுக் கணக்கை பயன்படுத்தி இருப்பதால் நாட்காட்டி முறை என்பதை ஆங்கிலேயர்களிடம் நாம் கற்றுக் கொள்ளவில்லை என்று நம்பலாம். அது போன்று எண்கள் 0,1 முதல் 10 வரையிலும் (பத்தடிமான முறை) நாம் பயன்படுத்தி வந்ததுதான். குறியீட்டு பழக்கத்தின் காரணமாக அரேபிய எண்களை எழுதும் போது பயன்படுத்திக் கொள்கிறோம்.

நேரம் என்பது மணித்துளி (நொடி) என்ற சிறு அளவிலும் மணி என்ற பெரிய அளவிலும் பயன்பாட்டில் இருக்கிறது.

நேரம் சரி இல்லை என்பதை எதைவைத்து சொல்கிறோம் ? அதாவது ஒரு செயலை திட்டமிட்டு செய்ய முற்படும் போது எதிர்பாராதவிதமாக அந்த செயலில் ஏற்படும் தடை ! - என்பது சரியா ? நான் ஒரு நேர்முகத் தேர்வுக்கு செல்ல திட்டமிடுகிறேன். காலை 9:30 மணிக்கு செல்ல வேண்டும், அப்படி செல்லவில்லை என்றால் எனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு அடுத்து உள்ளவருக்கு கொடுக்கப்படும் என்று சொல்கிறார்கள். அதனை ஏற்றுக் கொண்டு வருவதாக சொல்கிறேன். அந்த இடத்தை அடைய 1 மணி நேரம் ஆவதாக வைத்துக் கொள்வோம். ஆனால் அரைதொலைவு (பாதி தூரம்) செல்லும் போதே எதிர்பாராத விபத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நேரத்துக்கு செல்ல முடியாமல் போகிறது. இதுதான் நடப்பது. ஆனால் நாம் அதை எப்படி சொல்வோம் என்றால் 'நேரம் சரியில்லை'. இது கூட பரவாயில்லை 'என் கெட்ட நேரம்' என்றும் கூட சிலர் சொல்வர்.

சரியான நேரத்தில் செயலை செய்து முடிப்பது என்பது 'நல்ல நேரம்' (Time and Action matches together) என்று முடிகிறது. அப்படி செய்ய முடியாமல் போவது 'சரியில்லாத நேரம்' (mismatch between time and action) என்றாகிறது. உண்மையில் நடப்பது இரண்டு தான், ஒன்று குறித்த நேரத்தில் நடைபெறும் நிகழ்வு, மற்றொன்று நேரம் தவறிய நிகழ்வு அல்லது தடங்கள் ஏற்பட்டு தள்ளிப்போன நிகழ்வு. நேரம் - செயல் இரண்டையும் நாம் திட்டமிட முடியும். ஆனால் செயல்பாட்டின் இறுதிவடிவம் என்பது பல காரணிகளை (parameters) கொண்டது என்பதால் தீர்மாணிக்க முடியாது. சொல்ல வருவது நல்ல நேரம் என்பதோ, கெட்ட நேரம் என்றோ எதுவும் இல்லை. இது நேரம் பற்றிய எனது புரிதல். எதுவாக இருந்தாலும் நிகழ்வுகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உள்ளவர்கள்... நேரத்தை குறை சொல்வது இல்லை.

ஆனால் இவைகளை வைத்து செய்யப்படும் கூத்துகளும் மூட நம்பிக்கைகள் என்பது இருக்கிறதே. நேரத்திற்கு பிடித்த கெட்ட நேரம் அவைகள். இராகுகாலம், எமகண்டம், குளிகை, வடக்க சூலம், தெற்க சூலம் இவற்றையெல்லாம் சொல்லி சொல்லி வைத்திருப்பதால் எந்த செயலை செய்கிறோம் என்பதை விட எந்த நேரத்தில் செய்கிறோம் என்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த மூட நம்பிக்கை வளர்ந்து குறிப்பிட்ட நேரத்தில் பிறக்க வேண்டிய குழந்தைகளைக் கூட 'நல்ல நாள்', 'நல்ல நேரம்' என்ற பெயரால் அறுவை சிகிச்சை செய்து எடுக்கிறார்கள். இது போல் செவ்வாய் கிழமை என்றாலே பலருக்கு வேப்பங்காய். இன்னிக்கு இதை தொடங்கமாட்டேன். தொடங்கினால் தடங்கல் வந்திடும் போன்ற. தன்னம்பிக்கையை தொலைக்க வைக்கும் ஒருவித மூட நம்பிக்கை இவைகள்.

உதயாதி நாழிகை என்று ஜோதிடத்தில் ஒரு கணக்கை சொல்கிறார்கள். அதாவது சூரியன் உதிக்கும் நேரமாம். இந்த கணக்கெல்லாம் பூமி தட்டையானது என்று நம்பிய போது ஏற்பட்டவை. நாம் வாழும் பூமியில் ஒவ்வொரு விநாடியும் பூமியின் மேற்பரப்பில் விடியல்கள், அந்தி பொழுது சென்று கொண்டே இருக்கிறது. இதில் விடியல் நேரம் என்று எதைச் சொல்வது ? Based on Time Zone ? அவை கோள்கள் தொடர்புடையவை அல்லவே. Time Zone வசதிக்காக பிரித்தது.

நேரம் என்பதை நாம் வகுத்துவிட்டோம், அதன் பாதையில் அது செல்கிறது. இதில் நல்ல நேரம் எங்கே, கெட்ட நேரம் எங்கே இருக்கிறது.


--
அன்புடன்,

கோவி.கண்ணன்

10 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

இதைப்படித்த நேரம் எனக்கு நல்ல நேரம்.
வித்தியாசமான சிந்தனை.
நேரம் என்பதை நாம் வகுத்துவிட்டோம், அதன் பாதையில் அது செல்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
இதைப்படித்த நேரம் எனக்கு நல்ல நேரம்.
வித்தியாசமான சிந்தனை.
நேரம் என்பதை நாம் வகுத்துவிட்டோம், அதன் பாதையில் அது செல்கிறது.
//

வாங்க குமார்,
இந்த இடுகை "செவ்வாய்கிழமை" போடனும் என்று ஆகிவிட்டதே !
:))

நாள்தோறும் எம்ஆர்டியில் நீண்ட பயணம்...மனம் எதையாவது சிந்திக்கிறது...விளைவுகள் இங்கே இடுகையாக மாறிவிடுகிறது.

:))

Unknown சொன்னது…

கோவி. கண்ணன்,
//ஆங்கில நாட்காட்டி முறையே முதன்முதலாக தோன்றியதாக சொல்கிறார்கள்//
கண்டிப்பாக நீங்கள் குமரிமைந்தனின் படைப்புகளை படிக்க வேண்டும். அவர் நாட்காட்டிகளின் தோற்றம் மற்றும் வரலாறு பற்றி விரிவாக எழுதியுள்ளார். தெரிந்துகொள்ள நிறைய விசயங்கள் அவரின் பதிவில் இருக்கின்றன.
url="http://kumarimainthan.blogspot.com".இது அவருடைய பதிவின் சுட்டி. குமரிக்கண்டம் பற்றிய அவருடைய கட்டுரைகள் சில நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் அவரின் கட்டுரைகளில் தெரிந்துகொள்ள நிறைய இருக்கின்றன. இராம.கி ஐயாவுக்கு இணையாக நான் அவரை மதிக்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

உமையணன் அவர்களே,

நன்றி,

குமரிமைந்தன் படைப்புகளுக்கான சுட்டி தந்தமைக்கு நன்றி. இராமகி ஐயாவின் பதிவுகள் பலவற்றை படித்து உள்வாங்கி இருக்கிறேன்.

Chittoor Murugesan சொன்னது…

கோ.வி.கண்ணன் அவர்களுக்கு,
தங்கள் கருத்தை படித்து அக,மிக மகிழ்ந்தேன். என்னை, என் எழுத்தைப் பாராட்டிய முதல் ஆள் நீங்கள் தான். (என் ஜோதிட ஞானம் தவிர்த்த எழுத்துக்கு). முதற்கண் அதற்கு நன்றி.

தங்கள் வலைப் பதிவை படித்தேன். சோதிடம் குறித்த தங்கள் குற்றச்சாட்டில் உண்மையில்லாமலில்லை. அதே நேரம் சோதிடத்துறையில் பிரபலமாக உள்ள விஷயங்களை மட்டுமே குறி வைத்து விமர்சித்துள்ளீர்கள். சோதிடம் விஞ்ஞானப் பூர்வமானதே என்பதை நிரூபிக்க ஆயிரம் வாதங்களை என்னால் முன் வைக்க முடியும்.

என்வலைப்பதிவை மேய்ந்த தங்களுக்கு என் லட்சியம் என்ன அதற்கான என் முயற்சிகள் என்ன அதற்காக நான் இழந்தவை என்ன என்பது ஓரளவு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

தற்சமயத்துக்கு ஆப்பரேஷன் இந்தியா 2000 ஒன்றில் தான் எனக்கு ஆர்வம். அதற்கு ஆதரவு திரட்டத்தான்
வலை தள மேய்ச்சல் மைதானத்துக்கு வந்தேன்.யூனி கோடில் தட்டச்ச நான் அறிந்து கொண்டதே..கடந்த 10 தினங்களில் தான்.

எனவே விரிவான் பதிலை தர நான் துடித்தாலும் சிரமமாகவே உள்ளது. நிலா சாரல் டாட் காமில் உள்ளிடப்பட்டிருக்கும் என் ஜோதிட ஆய்வுக்கட்டுரையை ஒருதரம் படித்துப் பாருங்கள். ஜோதிடம் குறித்த என் பார்வைக்கும்/பிற பிரபலங்கள் பார்வைக்கும் உள்ள வேறுபாடுகள் புரியலாம்.

தங்கள் தொடர்புக்கு மீண்டும் நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

திரு முருகேசன் அவர்களே,

ஜோதிடம் உண்மையா ? பொய்யா ? என்ற கேள்வியில் உண்மையை எடுத்துக் கொள்வோம், இது நடக்கும் என்று அதன் கணிப்பு தெளிவாக சொன்னால் பரிகாரம் செய்து மாற்ற முடியும் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறதே ? பரிகாரம் செய்து மாற்ற முடியுமென்றால் சோதிடத்தில் சொன்னபடி நடக்காமல் பொய்துப் போகிறதே ? அது எப்படி ?

ஒருவேளை பரிகாரத்தின் வழி மாற்றமுடியாது என்று நீங்கள் கூறுவீர்களேயானால் நடப்பது நடக்கவே செய்யும் அதை தெரிந்து கொள்வதால் என்ன பயன் ? என்ற அடுத்தக் கேள்வி வருகிறது. :) ஆக்கப்பூர்வ பயன் என்பதற்கு ஜோதிடத்தில் சொல்லுபவை எந்த விதத்தில் பயனளிக்கும் என்று தாங்கள் விளக்குவீர்கள் என நம்புகிறேன்.

விதியை (கர்ம வினையை) மதியால் வெல்ல முடியும் என்ற கூற்றை நம்புகிறீர்களா ? அப்படி நம்பினால் ஜோதிடம் பொய்யாகிறதே. நம்பாவிட்டால் ஜோதிடமே தேவை இல்லையே !

நான் ஜோதிடத்திற்கோ, இறைநம்பிக்கைக்கோ எதிரி அல்ல, இவற்றில் மேலாக இருக்கும் மூட நம்பிக்கைகளும் அவற்றை தாங்கிப் பிடிப்பபர்களுக்கு மட்டுமே நான் 'அபத்தமாக' பேசுவது போல் தெரியும் ( உங்களைக் குறித்த கருத்து அல்ல)

மனசாட்சிபடி வாழ்பவர்களுக்கு, பிறரை துன்புறுத்தாதவர்களுக்கு எத்தகைய நம்பிக்கையும் தேவை இல்லை என்பது என்கருத்து

//என்வலைப்பதிவை மேய்ந்த தங்களுக்கு என் லட்சியம் என்ன அதற்கான என் முயற்சிகள் என்ன அதற்காக நான் இழந்தவை என்ன என்பது ஓரளவு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
//

உங்களின் சில கட்டுரைகளை படித்தேன், மிக அருமையாக வேறுபட்ட கோணத்தில் அவை இருந்தன பாராட்டுக்கள், எழுத்திப் பழகிய ஒருவரின் நடையாகத் தெரிந்தது. மீண்டும் மனம் திறந்த பாராட்டுக்கள்.

உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது விரிவாக சொல்லுங்கள் ஒன்றும் அவசரமில்லை.

சிவபாலன் சொன்னது…

GK,

// நாள்தோறும் எம்ஆர்டியில் நீண்ட பயணம்...மனம் எதையாவது சிந்திக்கிறது...விளைவுகள் இங்கே இடுகையாக மாறிவிடுகிறது. //

இப்பதான் விசயமே புரியுது!

நல்லதுதான். நீங்கள் சிந்திப்பதால் எங்களுக்கு லாபம்!

Sanyaasi சொன்னது…

///
உதயாதி நாழிகை என்று ஜோதிடத்தில் ஒரு கணக்கை சொல்கிறார்கள். அதாவது சூரியன் உதிக்கும் நேரமாம். இந்த கணக்கெல்லாம் பூமி தட்டையானது என்று நம்பிய போது ஏற்பட்டவை ///

நண்பரே, இந்தியா என்றுமே பூமியைத் தட்டை என்று சொன்னதில்லை. அது அரை வேக்காட்டுப் பாதிரிகள் சொன்ன கதை. கலீலியோவை மிரட்டி பூமி தட்டை என்று சொல்லுமாறு செய்த கூட்டம் தான் பூமி தட்டை என நம்பியது. அண்டம் எனப் பெயரிட்டு வான சாஸ்திரத்தில் கரை கண்டவர் எம் முன்னோர். ஜோதிடம் என்பது வெறும் 'நல்ல நேரம் பார்க்கும் சம்பிரதாயமன்று. அது மிகப் பெரியது'.

கோவி.கண்ணன் சொன்னது…

//Sanyaasi said...
//
நண்பரே, இந்தியா என்றுமே பூமியைத் தட்டை என்று சொன்னதில்லை. அது அரை வேக்காட்டுப் பாதிரிகள் சொன்ன கதை. கலீலியோவை மிரட்டி பூமி தட்டை என்று சொல்லுமாறு செய்த கூட்டம் தான் பூமி தட்டை என நம்பியது. அண்டம் எனப் பெயரிட்டு வான சாஸ்திரத்தில் கரை கண்டவர் எம் முன்னோர். ஜோதிடம் என்பது வெறும் 'நல்ல நேரம் பார்க்கும் சம்பிரதாயமன்று. அது மிகப் பெரியது'.
//

Sanyaasi, அதற்கும் கீழே,
'நாம் வாழும் பூமியில் ஒவ்வொரு விநாடியும் பூமியின் மேற்பரப்பில் விடியல்கள், அந்தி பொழுது சென்று கொண்டே இருக்கிறது. இதில் விடியல் நேரம் என்று எதைச் சொல்வது ?'

இதுக்கு பதிலே இல்லை. டைம் சோன் உள்ள நாட்டில் ஜோதிடம் சரியாக வேலை செய்யுமா ?

தட்டையானது என்று ஏன் சொன்னதில்லை.

வாமன அவதாரம் பூமியை ஒரு காலல் அளக்குமாம், அதற்கு கால் பாதம் எப்படி இருக்கனும் ? பூமி வடிவம் எப்படி இருக்கனும் ? இல்லாத வானத்தை இன்னொரு கலால் அளந்ததாம். எப்படி இருக்கு ?

எதோ ஒரு அசுரன் பூமியை பாயாக சுருட்டி கடலுக்குள் ஒளித்தானாமே !
:)

Chittoor Murugesan சொன்னது…

சாவுக்கு கூப்பிட்டா காரியத்துக்கு வந்த கதையா இருக்கேனு திட்டிக்காதிங்க..ஜோதிடம் /பரிகாரம் இது ரெண்டுக்கும் இடையில் உள்ள முரண்பாடை வச்சு விளையாடியிருக்கிங்க.

ஒரு உதாரணம் மூலமா இதை விளக்க முயற்சி பண்றேன். ஒருத்தனுக்கு ஜாத‌கத்துலயோ ,கோச்சாரத்துலயே செவ்வாய் 8 அல்லது 12 ல் உள்ளார் என்றால் அவருக்கு (செவ்வாய்க்கில்லிங்க ஜாதகருக்கு) விபத்து ரத்த விரயம் நடக்கனும்.

ஜோதிடர் வாக்குப்படி அவர் முருகன் கோவிலுக்கு போய் முருகனுக்கு தேனாலயே அபிசேகம் பண்றாருன்னு வைங்க . அப்ப என்னாகும்? தேனை சேகரிக்கிறது தேனீ. அதை சேகரிச்சு கொண்டுவந்து விக்கறவருக்கு செவ்வாய் அனுகூலமா இருந்ததாலதான் கொட்டுவாங்கி சாகாம விக்க வந்தார். அதை இந்த ஜாதகர் தான் பல கொட்டு (மக்களின் ஏச்சு பேச்சு இத்யாதி) வாங்கி சம்பாதித்த காசை கொடுத்து தேனை வாங்கி முருகனுக்கு தரார். எனவே இங்கே உபசமனம் ஏற்படுது. இவர் தேனி கிட்டே கொட்டு வாங்கினாலும், கொட்டு வாங்காம‌வெற்றியோட திரும்பி வந்தவருக்கு தான் கொட்டு வாங்கி சேர்த்த பணத்தை கொட்டி கொடுத்தாலும் பலன் ஒன்னுதான். செவ்வாய்க்கும் ,முருகருக்கும் என்ன தொடர்புனு அனுபஜோதிடம் டாட் ப்ளாக் ஸ்பாட் டாட் காம் ல செவ்வாய் எனும் தலைப்பில் எழுதியுள்ள விவரத்தை பாருங்கள்.

நீங்க ரொம்பவே தர்க்கத்த நம்பறாப்ல யிருக்கு. வாழ்க்கையில தர்க்கத்துக்கு இடமே கிடையாது.

இங்கே எதுவும் 100 சதம் உண்மையுமில்லே 100 சதம் பொய்யுமில்லே

ஜோதிடத்துலயே தர்கம் நாலு காலை தூக்கிரும்னா ஆன்மீகத்துல என்னாகும் ? யோசனை பண்ணுங்க

ஜோதிடம் சைன்ஸ் தான் ஆனால் மிஸ்டிக் சைன்ஸ்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்