பின்பற்றுபவர்கள்

21 ஆகஸ்ட், 2007

*நட்சத்திரம்* : என் இனிய ஈழத்தமிழ் உடன்பிறப்புக்களே...

யாழ் சுதாகர் அவர்களின் நினை வலைகளை செல்பேசியில் தரவிரக்கம் செய்து கேட்டபோது அன்றைய நினைவு என்னையும் தூண்டிவிட்டது. பசுமைகளை காலம் அறுவடை செய்துவிட்டாலும் கோடை மழையில் தாள் அடி துளிர்க்கும் அது போல் யாழ் சுதாகரின் பேச்சு பசுமை நினைவுகளை துளிர்க்க செய்துவிட்டது.

************

70 களின் இறுதியாண்டுகள் நடுநிலை பள்ளிப்படிப்பில் எனக்கு ஓடியது காலம். அப்பொழுதெல்லாம் தொலைகாட்சி என்ற சொல்லே கேள்விப்பட்டது கிடையாது. எங்கள் வீட்டில் ஒரு வால்வு செட் ரேடியோ இருந்தது. பள்ளி முடிந்த வேளைகளிலும், வார இறுதி நாட்களிலும் பொழுது போக்கு என்பது வானொலி கேட்பதுதான்.

எங்கள் ஊர் நாகை, தெற்கில் இருந்து வேதாரணியத்துக்கு அடுத்தபடியாக கடற்கரையோரத்தில் அமைந்திருப்பதால் எங்கள் ஊரில் 90 விழுக்காட்டினர் இலங்கை வானொலியையே விரும்பி கேட்பர். வானொலி கேட்கும் ஆர்வம் குமரியில் இருந்து பாண்டிவரை உள்ள தமிழ்மக்களுக்கு அன்றைய காலத்தில் ஏற்பட்டதற்கு முதன்மை காரணம் கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகிய இலங்கை தமிழ் வானொலி. வானொலி அறிவிப்பாளர் திருவாளர்கள் கேஎஸ்ராஜா, அப்துல்ஹமீது மற்றும் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் ஆகியோர்களின் குரல்கள் இலங்கை வானொலி கேட்கும் பகுதிகளில் நன்கு பழகியிருந்தது (பரிட்சயம்) . சனிகிழமை மாலை 4 மணிக்கு ஒலிபரப்பாகிய இலங்கை தமிழில் பேசிய காதல் தொடர் நாடகம் மிகவும் புகழ்பெற்றதாக இருந்தது பாத்திர பெயர் வசந்தன் - ரமா இன்னும் கூட நினைவில் நிற்கிறது. நாடகத்தின் பெயர் தான் நினைவு இல்லை. 'பைலட் ப்ரேம் நாத்' என்ற நடிகர் திலகத்தின் படம் கொழும்பு நகரத்தில் வருங்களைக் கடந்து வெற்றிவாகை சூடியது. அந்தமான் காதலி, குரு, நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்கள் இலங்கையில் நீண்ட நாட்கள் ஓடியவை என்பதை இலங்கை வானொலி கேட்டவர்களுக்கு தெரியும்.

முகம் காட்டாத குயில்களாக இருந்த இலங்கை அறிவிப்பாளர்களை ஒருமுறை 'இலங்கை குயில்கள்' என்ற தலைப்பில் இராணி வார இதழ் நேர்முகம் கண்டு புகைப்படங்களை வெளி இட்டு இருந்தது அப்பொழுதுதான் அவர்களின் முகங்களை கண்டுகளித்தோம். ஆம் / இல்லை என்று பதில் சொல்லாமல், தொடர்ந்து 5 வினாடி மெளனம் சாதிக்காமல் 1 நிமிடம் கேஸ் ராஜா அவர்கள் நடத்தும் போட்டி, ஹப்துல் ஹமிது அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகள், உதாயாவின் பாட்டுக்கு பாட்டு போன்ற நிகழ்சிகளை மிகவும் சிறப்படைந்தவை

இலங்கை தமிழ்வானொலி நிகழ்சிகளை நினைவுறும் பொழுது அவர்கள் அன்று எவ்வளவு சீரூம் சிறப்பும், செழிப்பும், மகிழ்வோடும் வாழ்ந்திருப்பார்கள் என்று இன்றும் கூட நினைக்க முடிகிறது.

80 களின் ஆரம்பம் வரை உற்சாகமும், உழைப்புமாக வாழ்ந்த நம் தமிழ்மக்கள் உடமை, உறைவிடம், உறவையும் தொலைத்து அகதிகளாக வாழ்வதை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் கனக்கவே செய்கிறது. இலங்கை பற்றிய துயர செய்திகள் கேட்கும் போதும், மண்டபத்துக்கு அகதிகளாக கண்ணீருடன் வந்து இறங்கினார்கள் என்று செய்திவரும் போதெல்லாம் நெஞ்சம் பதறுகின்றது. வாழ்ந்து கெட்டவர்களை நினைத்தால் கண்களில் கண்ணீர் வரும். நன்கு வாழ்ந்தவர்களின் வாழ்வே பறிக்கப்பட்டதால் இந்நிலை என்று தெரிகிறபோது கண்ணீருடன் செந்நீரும் சேர்ந்தே வருகிறது.

இரண்டு தலைமுறையில் இருண்ட வாழ்கையாகவே, போராட்டமாகவே சென்று கொண்டிருக்கும் அவர்களின் வாழ்கையில் இடற்கள் நீங்கி அடுத்த தலைமுறையாவது இழந்தவற்றை யெல்லாம் பெற்று இன்புற்று வாழ்ந்து ஏற்றம் பெறவேண்டும்.

********

அறிவிப்பாளர் திரு யாழ்சுதாகர் அவர்களின் நினைவலைகளினுடன் இணைந்த வானொலி அறிவிப்புகளை இங்கு சொடுக்கிக் கேட்கலாம்

--
அன்புடன்,

கோவி.கண்ணன்

38 கருத்துகள்:

சிவபாலன் சொன்னது…

GK,

Good Post!

ILA (a) இளா சொன்னது…

இரண்டு தலைமுறையில் இருண்ட வாழ்கையாகவே, போராட்டமாகவே சென்று கொண்டிருக்கும் அவர்களின் வாழ்கையில் இடற்கள் நீங்கி அடுத்த தலைமுறையாவது இழந்தவற்றை யெல்லாம் பெற்று இன்புற்று வாழ்ந்து ஏற்றம் பெறவேண்டும்.

ஜோ/Joe சொன்னது…

//வானொலி கேட்கும் ஆர்வம் குமரியில் இருந்து பாண்டிவரை உள்ள தமிழ்மக்களுக்கு அன்றைய காலத்தில் ஏற்பட்டதற்கு முதன்மை காரணம் கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகிய இலங்கை தமிழ் வானொலி.//

முற்றிலும் உண்மை .எங்கள் ஊரில் காலைத் தென்றலில் இருந்து இரவின் மடியில் வரை இலங்கை வானொலி அலை வரிசையத் தவிர வேறு எதற்கும் யாரும் மாறுவது இல்லை .ஊர் முழுக்க ஏதாவது ஒரு வீட்டிலிருந்து இலங்கை வானொலி காதில் விழுந்து கொண்டே இருக்கும்.

உடுவை எஸ். தில்லைநடராசா சொன்னது…

//சனிகிழமை மாலை 4 மணிக்கு ஒலிபரப்பாகிய இலங்கை தமிழில் பேசிய காதல் தொடர் நாடகம் மிகவும் புகழ்பெற்றதாக இருந்தது பாத்திர பெயர் வசந்தன் - ரமா இன்னும் கூட நினைவில் நிற்கிறது. நாடகத்தின் பெயர் தான் நினைவு இல்லை//

வரணியூரன் என்றழைக்கப்படும் எஸ்.எஸ். கணேசபிள்ளை எழுதிய 'இரை தேடும் பறவைகள்" என்னும் நாடகமே அது.

சின்னக்குட்டி சொன்னது…

நல்லதொரு பதிவு. மிக்க நன்றிகள்

Ceylon Boy சொன்னது…

THanks. Many many Thanks.
we are ready to make our Home Land.
Dont forget to visit.
WE Welcome YOU ALL

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

தங்களைப் போன்றோர் உணர்வு, எதிர்காலம் உண்டு எனும் நம்பிக்கையைத் தருகிறது.
இன்றும் இத்தனையின் பின்பும் இலங்கை வானொலி நிகழ்ச்சிகள்,தமிழக நேயர்களால் விரும்பப்படுவதை,இணையத்தின் வாயிலாகக் கேட்டறிகிறேன்.

வடுவூர் குமார் சொன்னது…

நீங்கள் சொன்ன மாதிரி இலங்கை தமிழ் வானொலி தான் அந்த காலகட்டத்தில் மிக பெரும் பொழுது போக்கு.நல்ல தரமான நிகழ்ச்சிகள் மற்றும் உச்சரிப்பு என்று பல அட! போடு வைக்கும்.
சீக்கிரமே இவர்கள் வாழ்வு அலை அடங்கிய குளம் போல் இருந்தால் சந்தோஷப்படுபவர்களில் நானும் ஒருவன்.
கானா பிரபா ப்ரொபைலில் இருக்கும் ஒரு வார்த்தை அதன் உண்மையான வலியை உணரவைக்கும்.
"ஈழத்தை பிரிந்த நாளில் இருந்து முகவரி இல்லாமல் தவிக்கும்..."

வெத்து வேட்டு சொன்னது…

does anyone know why K.S. Rajah was killed? where and when?
thanks

நாமக்கல் சிபி சொன்னது…

நல்ல பதிவு ஜி.கே!

கருப்பு சொன்னது…

திருச்சி விவித பாரதி கீறல் விழுந்த கிராமபோன் தட்டாக எதையாச்சும் கத்திக் கொண்டிக்கும். விளம்பரங்கள் மிக அதிகம். அரசு வானொலி அதைவிட மோசம். காதுக்கு இனிய செவ்விசைகளை வழங்கியதில் இலங்கஒ ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனத்துக்கு நிகர் அதுவேதான்.

பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சி எனக்கு பிடித்த ஒன்று.

மாயா சொன்னது…

கும்மிப்பதிவு,மொக்கைப்பதிவுகள் கொடிகட்டிப்பறக்கும் இக்காலகட்டத்தில் இவ்வாறானதொரு பதிவைப்பார்த்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது

அண்ணா உங்களைப்போன்று இந்தியசொந்தங்கள் இருக்கும்வரை . . . .நிச்சயமாக இலங்கைத்தமிழர்கள் ஆகிய நாங்கள் என்றாவது ஒர் நாள் நிம்மதியாக வாழ்வோம் . .

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

இலங்கை வனொலியை நினைவுக்கூர்ந்த வேளையில், ஈழத்திற்க்கும் தமிழகத்திற்க்கும் இருந்த வணிக இருந்த வணிகத்தொடர்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
பர்மாவிற்க்கும் தமிழகத்திற்க்கும் எவ்வளவு ஆழமான வணிக தொடர்பு இருந்ததோ, அதைவிட நீண்ட நெடிய தொடர்பு இலங்கையுடன் இருந்தது.
கொழும்பில் இருந்து வரும் தேயிலை தமிழகத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது.
காரைக்குடி, திருநெல்வேலி மக்களிடம் கேட்டால் நிறைய சொல்வார்கள்.
கொழும்பில் இருக்கும் அவர்களுடைய கடைகளுக்கு தமிழகத்திலும் விளம்பர பலகைகள் வைப்பார்கள்.

இந்த இன போராட்டம் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, நமது தமிழக தமிழர்கள் அங்கே வணிகம் செய்தவர்கள் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்களாக இருந்தவர்கள் என அனைவருமே மிக மேசமாக பாதிக்கப்பட்டனர்.

பர்மா தமிழர்களுக்கு ஏதோ பர்மா காலணி அமைத்தது போல, இலங்கை தமிழர்களுக்கு மண்டபம் அகதி முகாம் என்பதல்ல தீர்வு...!

அவர்களின் விடுதலை போராட்டத்துக்கு இன்னும் வலுவான ஆதரவு கரம் நீட்ட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//
சிவபாலன் said...
GK,

Good Post!
//

வழக்கம் போல் விரைவாக வந்து பாராட்டுவதற்கு நன்றி சிபா !

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA(a)இளா said...
இரண்டு தலைமுறையில் இருண்ட வாழ்கையாகவே, போராட்டமாகவே சென்று கொண்டிருக்கும் அவர்களின் வாழ்கையில் இடற்கள் நீங்கி அடுத்த தலைமுறையாவது இழந்தவற்றை யெல்லாம் பெற்று இன்புற்று வாழ்ந்து ஏற்றம் பெறவேண்டும்.
//

வழிமொழிந்ததற்கு நன்றி இளா !

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜோ / Joe said...
முற்றிலும் உண்மை .எங்கள் ஊரில் காலைத் தென்றலில் இருந்து இரவின் மடியில் வரை இலங்கை வானொலி அலை வரிசையத் தவிர வேறு எதற்கும் யாரும் மாறுவது இல்லை .ஊர் முழுக்க ஏதாவது ஒரு வீட்டிலிருந்து இலங்கை வானொலி காதில் விழுந்து கொண்டே இருக்கும்.
//

ஜோ !!!!!
கூடுதல் தகவல் கொடுத்து இடுகையை சிறப்பித்ததற்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//உடுவைத்தில்லை said...
வரணியூரன் என்றழைக்கப்படும் எஸ்.எஸ். கணேசபிள்ளை எழுதிய 'இரை தேடும் பறவைகள்" என்னும் நாடகமே அது.
//

ஐயா,

முதல் முறை வருகை தந்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது மிக்க மகிழ்ச்சி,

தாங்கள் சொன்னதும் நினைவுக்கு வருகிறது 'இரைதேடும் பறவைகள்'
இன்றும் நினைவில் இருக்கிறது அந்த காதல் காவியம்.

நன்றி ஐயா.

கோவி.கண்ணன் சொன்னது…

// சின்னக்குட்டி said...
நல்லதொரு பதிவு. மிக்க நன்றிகள்
//

பாராட்டுக்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//Ceylon Boy said...
THanks. Many many Thanks.
we are ready to make our Home Land.
Dont forget to visit.
WE Welcome YOU ALL
//

கண்டிப்பாக வந்துடுவோம், அந்த நாளுக்குத்தான் எல்லோரும் காத்திருக்கிறார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
தங்களைப் போன்றோர் உணர்வு, எதிர்காலம் உண்டு எனும் நம்பிக்கையைத் தருகிறது.
இன்றும் இத்தனையின் பின்பும் இலங்கை வானொலி நிகழ்ச்சிகள்,தமிழக நேயர்களால் விரும்பப்படுவதை,இணையத்தின் வாயிலாகக் கேட்டறிகிறேன்.
//

ஒரே உதிரம், ஒரே மொழி எனவே உணர்வு இருப்பது இயல்பான ஒன்று. வெளிப்படுத்திக் காட்டததால் பலரும் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியாமல் இருக்கிறது என்றே நினைக்கிறேன். சென்றவாரம் சிவபாலன் ஒரு இடுகையை இட்டார். அதற்கு முன்பே இந்த இடுகையை நான் எழுதி முடித்துவிட்டேன். அதிலிருந்து நான் அறிந்து கொண்டது எல்லோருக்குமே ஈழ உறவுகளைப் பற்றிய எண்ணம் உள்ளுக்குள் இருக்கிறது என்ற புரிதலை.

நன்றி யோகன் !

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
நீங்கள் சொன்ன மாதிரி இலங்கை தமிழ் வானொலி தான் அந்த காலகட்டத்தில் மிக பெரும் பொழுது போக்கு.நல்ல தரமான நிகழ்ச்சிகள் மற்றும் உச்சரிப்பு என்று பல அட! போடு வைக்கும்.
சீக்கிரமே இவர்கள் வாழ்வு அலை அடங்கிய குளம் போல் இருந்தால் சந்தோஷப்படுபவர்களில் நானும் ஒருவன்.
கானா பிரபா ப்ரொபைலில் இருக்கும் ஒரு வார்த்தை அதன் உண்மையான வலியை உணரவைக்கும்.
"ஈழத்தை பிரிந்த நாளில் இருந்து முகவரி இல்லாமல் தவிக்கும்..."
//

குமார்,
தங்கள் அனுபவங்களையும், உங்கள் எண்ணங்களையும் அழகாக பகிர்ந்து கொண்டீர்கள். நம் எண்ணங்கள் விரைவில் உண்மையாகட்டும்

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//somberi said...
does anyone know why K.S. Rajah was killed? where and when?
thanks
//
சோம்பேறி பையன்,

இதுபற்றிய விவரம் யாரும் தெரிந்து கொள்ள விரும்பவில்லை என்றே நினைக்கிறேன். அவரைப்பற்றி இனிய நினைவுகள் போதுமே.

கோவி.கண்ணன் சொன்னது…

//நாமக்கல் சிபி said...
நல்ல பதிவு ஜி.கே!

9:06 AM, August 22, 2007
//

சிபியாருக்கும் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//விடாதுகருப்பு said...
திருச்சி விவித பாரதி கீறல் விழுந்த கிராமபோன் தட்டாக எதையாச்சும் கத்திக் கொண்டிக்கும். விளம்பரங்கள் மிக அதிகம். அரசு வானொலி அதைவிட மோசம். காதுக்கு இனிய செவ்விசைகளை வழங்கியதில் இலங்கஒ ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனத்துக்கு நிகர் அதுவேதான்.

பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சி எனக்கு பிடித்த ஒன்று.
//

தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கருப்பு அவர்களே !

கோவி.கண்ணன் சொன்னது…

//மாயா said...
கும்மிப்பதிவு,மொக்கைப்பதிவுகள் கொடிகட்டிப்பறக்கும் இக்காலகட்டத்தில் இவ்வாறானதொரு பதிவைப்பார்த்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது

அண்ணா உங்களைப்போன்று இந்தியசொந்தங்கள் இருக்கும்வரை . . . .நிச்சயமாக இலங்கைத்தமிழர்கள் ஆகிய நாங்கள் என்றாவது ஒர் நாள் நிம்மதியாக வாழ்வோம் . .
//

எண்ணங்களில் எப்போதும் இணைந்தே இருக்கிறோம் என்று சொல்வதற்கு எனக்கு கிடைத்த வாய்ப்பாக நினைக்கிறேன் மாயா அவர்களே.

நல்ல எதிர்காலம் எதிரில் இருக்கிறது. புயலுக்குப்பின் அமைதி என்பது நியதி

கோவி.கண்ணன் சொன்னது…

// பாரி.அரசு said...
இலங்கை வனொலியை நினைவுக்கூர்ந்த வேளையில், ஈழத்திற்க்கும் தமிழகத்திற்க்கும் இருந்த வணிக இருந்த வணிகத்தொடர்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
பர்மாவிற்க்கும் தமிழகத்திற்க்கும் எவ்வளவு ஆழமான வணிக தொடர்பு இருந்ததோ, அதைவிட நீண்ட நெடிய தொடர்பு இலங்கையுடன் இருந்தது.
கொழும்பில் இருந்து வரும் தேயிலை தமிழகத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது.
காரைக்குடி, திருநெல்வேலி மக்களிடம் கேட்டால் நிறைய சொல்வார்கள்.
கொழும்பில் இருக்கும் அவர்களுடைய கடைகளுக்கு தமிழகத்திலும் விளம்பர பலகைகள் வைப்பார்கள்.

இந்த இன போராட்டம் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, நமது தமிழக தமிழர்கள் அங்கே வணிகம் செய்தவர்கள் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்களாக இருந்தவர்கள் என அனைவருமே மிக மேசமாக பாதிக்கப்பட்டனர்.

பர்மா தமிழர்களுக்கு ஏதோ பர்மா காலணி அமைத்தது போல, இலங்கை தமிழர்களுக்கு மண்டபம் அகதி முகாம் என்பதல்ல தீர்வு...!

அவர்களின் விடுதலை போராட்டத்துக்கு இன்னும் வலுவான ஆதரவு கரம் நீட்ட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

//

பாரி,
பல அரிய தகவல்களை அறியதந்து கட்டுரைக்கு சிறப்பு சேர்த்ததற்கு நன்றி !

நாடோடி இலக்கியன் சொன்னது…

//ஒரே உதிரம், ஒரே மொழி எனவே உணர்வு இருப்பது இயல்பான ஒன்று. வெளிப்படுத்திக் காட்டததால் பலரும் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியாமல் இருக்கிறது என்றே நினைக்கிறேன்.//

உண்மை,தவிரவும் வெளிபடுத்துவதற்கான வாய்ப்புகள் சாமாண்ய தமிழனுக்குக் கிடைப்பதில்லை.தமிழ்,தமிழர் என்று பேசினாலே எதோ அரசியல் சாயம் பூசியே பார்க்கப்படும் அவல நிலை இங்கே உள்ளது.காரணம் தமிழ் ,தமிழர் என்று பேசியே பலர் அரசியல் பிழைத்துக் கொண்டிருபபதுதான்.

யாழ் சுதாகர் சொன்னது…

தங்களின் நினைவலைகள் என்னை நெகிழ வைத்தன.

வசந்தன்(Vasanthan) சொன்னது…

இடுகைக்கு நன்றி.

~~~~~~~~~~~~~~~~~~~~
அப்போது வந்த 'இரை தேடும் பறவைகள்' நாடகம் கேள்விப்பட்டதில்லை. (அந்நாடகம் ஒலிபரப்பான காலம் சரியாகத் தெரியவில்லை. நான் பிறக்கும்போதென்றால், எனது பெயருக்கு அந்நாடகத்தின் நாயகன் காரணமா என்று பெற்றோரிடம் கேட்டுப்பார்க்க வேண்டும்.;-)

ஆனால் 1998 காலப்பகுதியில் வன்னியில் 'இரை தேடும் பறவைகள்' என்ற பெயரில் தொடர்நாடகம் ஒலிபரப்பானது. புலிகளின் குரலின் சகோதர ஒலிபரப்பான தமிழீழ வானொலியில் ஒலிபரப்பான இத்தொடர்நாடகத்தை எழுதி இயக்கியவர் செ.யோகேந்திரநாதன்.
உயிர்குடிக்கும் விமானங்களை மையமாக வைத்து இக்கதை பின்னப்பட்டிருந்தது.

வெத்து வேட்டு சொன்னது…

if you are only going to "remember the sweet memoirs" that fits you...then can't you find "1000 sweet things from indian stations"?
if you are only going to talk about "sweet" things that can mean "BUTTERING UP" or in other words biased???

கானா பிரபா சொன்னது…

வணக்கம் கோவியாரே

இன்று தான் படிக்கக் கிடைத்தது. யுத்தம் தீவிரமானதும் இலங்கை வானொலி கூட முகவரி இழந்து மாற்றான் கையில் போயிவிட்டது, கடந்த காலம் கடந்த காலமே தான். நான் இப்போது தேடிப் பிடித்து மலேசியாவின் தமிழ் வானொலியைத் தான் தமிழ் கேட்கப் பயன்படுத்துவது.

அருமையான பதிவு

கோவி.கண்ணன் சொன்னது…

//நாடோடி இலக்கியன் said...
உண்மை,தவிரவும் வெளிபடுத்துவதற்கான வாய்ப்புகள் சாமாண்ய தமிழனுக்குக் கிடைப்பதில்லை.தமிழ்,தமிழர் என்று பேசினாலே எதோ அரசியல் சாயம் பூசியே பார்க்கப்படும் அவல நிலை இங்கே உள்ளது.காரணம் தமிழ் ,தமிழர் என்று பேசியே பலர் அரசியல் பிழைத்துக் கொண்டிருபபதுதான்.
//

நாடோடி இலக்கியன் ஐயா,

நீங்கள் சொல்வது சரிதான்,

எல்லாம் பிழைப்பு அரசியல் ஆகிவிட்ட நிலையில் ... வேடதாரிகளாகவே இருக்கிறார். பொதுமக்கள் உணரவேண்டும்.

வருகைக்கு நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//யாழ் சுதாகர் said...
தங்களின் நினைவலைகள் என்னை நெகிழ வைத்தன.

8:45 PM, August 22, 2007
//

யாழ் சுதாகர் ஐயா,

நீங்கள் தூண்டிவிட்ட நினைவலை அவைகள். பல அரிய தகவல்களை மதுரகுரல் பதிவில் தந்துள்ளீர்கள். உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//somberi said...
if you are only going to "remember the sweet memoirs" that fits you...then can't you find "1000 sweet things from indian stations"?
if you are only going to talk about "sweet" things that can mean "BUTTERING UP" or in other words biased???
//

கார்த்தி,
ஒன்னும் புரியலைங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//கானா பிரபா said...
வணக்கம் கோவியாரே

இன்று தான் படிக்கக் கிடைத்தது. யுத்தம் தீவிரமானதும் இலங்கை வானொலி கூட முகவரி இழந்து மாற்றான் கையில் போயிவிட்டது, கடந்த காலம் கடந்த காலமே தான். நான் இப்போது தேடிப் பிடித்து மலேசியாவின் தமிழ் வானொலியைத் தான் தமிழ் கேட்கப் பயன்படுத்துவது.

அருமையான பதிவு
//

உங்கள் சோகம் வருத்தமளிக்கிறது. அதையே நினைத்துக் கொண்டிருப்பதை தவிர்க்கவும் முடியவில்லை என்பது புரிகிறது.

சிங்கை வானொலியும் நல்ல நிகழ்ச்சிகளை படைக்கிறார்கள்.

oru Elaththu thamilan சொன்னது…

நாங்கள் அனாதைகள் அல்ல. எங்களுகு கடலுக்கு அப்பாலும் உறவுகள் உண்டு. தமிழகப் பதிவுகளை வாசிக்கும்போது தன்னம்பிக்கை மட்டுமல்ல, விடிவும் தெரிகிறது.

ஒரு ஈழத்துத் தமிழன்

பாரதிநேசன் சொன்னது…

அன்புக்குரிய உடன்பிறப்பே.. உங்கள் அன்பு வார்த்தைகள் எங்களுக்கு நம்பிக்கையை தருகிறது. நன்றி

வந்தியத்தேவன் சொன்னது…

வணக்கம் கோவிகண்ணன்
உங்கள் பதிவு மலரும் நினைவுகளை மீட்டித் தந்தது, ஒரு காலத்தில் கொடிகட்டிப்பறந்த இலங்கை வானொலிதற்போது ரசனையற்ற சிலரின் கைகளுக்கு சென்று அதன் பின்னர் அது ஈழத்தமிழருக்கு எதிர்ப்பான வானொலியாக மாறிவிட்டது. ஆங்கிலம் கலந்து சன் டீவி ஸ்டைலில் இவர்களும் தம்மை மாற்றிவிட்டார்கள். அத்துடன் தனியார் வானொலிகளின் வருகை இவர்களைப் பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டது. வானொலி நாடகம் எல்லாம் இப்போ வழக்கொழிந்து மக்கள் சீரியல்களின் பின்னால் சென்றுவிட்டார்கள். கோலங்களில் அபிக்கு எப்போ நினைவு திரும்பும் ஆனந்தத்தில் அபிராமி கைதாவாரா என்ற உலக முக்கியம் வாய்ந்த விடயங்கள் மக்களை திசை திருப்பி விட்டன. தொலைக்காட்சிகளின் வருகையால் அடிபட்டுப்போயிருந்த வானொலி கேட்கும் விருப்பம் பின்னர் எவ் எம்களின் வருகையால் சற்றுபுத்துயிர் பெற்றுள்ளது.

ராஜேஸ்வரி சண்முகம் அப்துல் ஹமீத் போன்றவர்களின் குரலும் அந்த தமிழ் உச்சரிப்பும் இனிமேல் யாரிடம் இருந்துவரப்போவதில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்