பின்பற்றுபவர்கள்

23 ஆகஸ்ட், 2007

*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !

மண் துகள்களில் ஒன்றை ஆராய்ந்தால் மலையின் தன்மையை சிறிதேனும் அறிந்து கொண்டதாக பொருள் கொள்ள முடியுமா ? தத்துவ(அர்த்தமாக) பொருளில் பார்த்தால் அது ஓரளவுக்கு சரிதான். ஏனென்றால் இங்கே எடுத்துக் கொண்ட பற்றியம் (விடயம் - விசயம்) அப்படி. மொழிஞாயிறு தேவ நேயப் பாவாணர் என்ற தமிழ் இமயத்தை கடுகு அளவுக்கு சுறுக்கி அந்த இமயத்தின் நிழலையாவது காட்ட முடியும் என்று நம்புகிறேன்.

****************

பெற்ற தாய் தனை மகன் மறந்தாலும்
பிள்ளையை பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்


- இராமலிங்க அடிகளார் அருளிய அருட்பாவில் ஒரு பாடல்

இதைப்பற்றி மறை மலை அடிகளார், தன் மகள் நீலாவுடன் பேசிக் கொண்டிருந்த போது, 'தேகம்' என்ற இடத்தில் 'யாக்கை' என்ற தனித் தமிழ்ச் சொல் இருந்தால் எவ்வளவு சொல் இனிமை இருக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தாரம். அந்த ஆர்வமே பின்னாளில் தமிழ் அறிஞர்களுடன் அவர் சேர்ந்து தனித்தமிழ் இயக்கம் தோற்றுவிக்க காரணமாக இருந்தது. இன்றைய நிலையில் 95 விழுக்காட்டு தூய்மையை அடைந்திவிட்டது.

தமிழின் தொன்மையை உலகுக்கு அறிவித்தவர் ஐரோப்பியர் கால்டுவெல் ஐயர், தமிழ் மொழி பற்றினால் சூரிய நாராயண சாஸ்திரி (பிராமனர்) என்ற வைதீக பெயரை துறந்து தனித்தமிழுக்கு வித்திட்டவர், தமிழ் திருப்பெயர் தாங்கிய பரிதி மாற் கலைஞர். உரமிட்டு செடியாக வளர்த்தவர் மறை மலை அடிகளார். அந்த செடியை மரமாக ஆக்கி நமக்கு நிழல் கொடுக்க வைத்தவர் செந்தமிழ் செல்வர் தேவ நேயப் பாவாணர்.
தேவ நேய பெருந்தகை பிறப்பினால் கிறிஸ்துவராக இருந்தாலும் தம் பிள்ளைகளுக்கெல்லாம் தனித்தமிழ் பெயரையே சூட்ட்டினார். தமிழுக்கென்று அகரமுதலியெனும் ( வேர்சொல் அகராதி)யை அமைக்க தம் வாழ்நாள் முழுவதும் செலவிட்டார்.

மொழி என்பது தகவல் தொடர்பு சாதனம் என்று சொல்லப்படுவதை மொழியாளர்கள் மறுக்கவே செய்வார்கள். பண்பாடுகளின் உருவகமாகத்தான் மொழிகள் இருக்கிறது. மொழிகளை ஆராய்ந்தாலே முழு உலக வரலாற்றையே கண்டு கொள்ளலாம். தேவ நேயப் பாவாணர் தம் மொழியறிவால் மாந்தன் தோன்றிய இடம் கடல் கொண்ட லொமுரியா எனப்படும் குமரிக்கண்டமே என்றும் உலகின் முதல் மொழி ஆதித் தமிழே என்றும் தக்க சான்றுகளுடன் பல ஆராய்சி நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

கால்டுவெல் அவர்கள் திராவிட மொழிகள் தனித்தன்மை வாய்ந்தவை, அவற்றின் இலக்கண அமைப்புக்கும் வடமொழிக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. வடமொழிக் கலப்பினாலேயே திராவிட மொழிகள் வடமொழி வழியாக தோன்றியதாக தவறான தகவல்களை இதுகாறும் நம்பி இருந்தோம் என்றும், மற்ற திராவிட மொழிகளைவிட வடமொழிச் சொற்களை முற்றிலும் களைந்துவிட்டு தமிழ் தூய்மை அடைய முடியும் என்றும் அதற்கான வேர்சொற்கள் அனைத்தும் சங்க இலக்கியங்கள் முழுவதிலும் பரவிக்கிடக்கின்றன என்றும், வடமொழிச் சொற்களில் நூற்றுக்கணக்கான சொற்கள் தமிழை வேர்ச் சொல்லாகவும், தனித் தமிழ் சொற்களை அப்படியே கொண்டாதாகவும் இருக்கிறது என்று சொல்லி அவர் இந்திய மொழிகளை பிரித்து மேய்ந்து சென்றார். அவருக்கு முன்னோடியான ஐயு போப் வடமொழி இந்தியாவில் தோன்றிய மொழியே அல்ல என்றும் அது கிரேக்கத்தை ஒத்து இருக்கும் ஐரோப்பிய மொழி குழாமை (குடும்பம்) சேர்ந்தது என்று சான்றிச் சென்றார்.

இந்து இரு வெளிநாட்டு மேதைகளின் ஆராய்ச்சியை வைத்துக் கொண்டதுமின்றி, பரிதிமார் கலைஞர் ஒருமுறை 'பெரும்பாலான வடமொழி இலக்கியங்களின் மூலம் தமிழே' என்றும் 'அவற்றிலிருந்து மொழிமாற்றம் செய்தபின் தமிழ் இலக்கியங்கள் பண்டைய காலத்திலேயே அழிக்கப்பட்டு விட்டது' என்ற பற்றியத்தையும் பிடித்துக் கொண்ட தேவநேயர் தம் தமிழாராய்சியை அதன் அடிப்படையிலேயே துவங்கினார்.

பொதுவாக வளர்ந்த நாகரீகத்திலிருந்து பின்னோக்கி சென்று வரலாற்றை தேடுவது உலக இயல்பு, அதன் அடிப்படையில் வடமொழி இலக்கியங்களை கருத்தில் கொண்டு ஐயு போப்புக்கு முன்பு இருந்த ஆராய்சியாளர்களும், பல இந்திய ஆராய்சியாளர்களும் இந்திய வரலாற்றை வடமொழியுடன் தொடர்ப்பு படுத்தி அவை வேதகாலத்திற்கு பின்பட்டவையே என்றும் இந்திய நாகரீகம் என்பது ஆரிய நாகரிகமே என்று சொல்லி வந்தனர்.

கால்டுவெல் அவர்களின் வடமொழி தோற்றம் பற்றிய துணிபுக்கு பிறகு மொழி ஆராய்ச்சிகள் திராவிட மொழிகளை ஆராய்ந்து செல்வதால் மட்டுமே இந்திய நாகரிகத்தின் தொன்மையை கண்டு அறிய முடியும் என்று உணர்ந்தனர்.

இந்திய மொழிகள் அனைத்தையும் ஆராய்ந்துவிட்டு பாவாணர் பல ஆராய்சி நூல்களை எழுதியுள்ளார், அவற்றில் அவர் எழுதிய வடமொழி வரலாறு 1 & 2, தமிழ்மொழி வரலாறு 1 & 2 பல உண்மைகளை காட்டுகிறது. அவர் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட காலங்கள் தொல்காப்பியத்துக்கும் முந்தியது. ஏறத்தாள தொல்காப்பியருக்கும் முன்பு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அகத்தியர் தொல்காப்பிருக்கு ஆசிரியர் அல்ல வென்றும் தக்க சான்றுகளுடன் விளக்கியுள்ளார். மொழியை, பண்பாட்டை ஆராய்வதற்கு தொல்க்காப்பியத்தை சான்றாகக் கொள்ளக் கூடாது ஏனென்றால் தொல்காப்பியம் இலக்கண நூலேயன்றி சொல் அகராதியல்ல என்றார். மேலும் தொல்காப்பியர் காலத்தில் வடமொழிக்கு எழுத்தோ, இலக்கணமோ இருந்தது இல்லை என்றும் அப்படி ஒருவேளை எழுத்து இருந்தால் வடமொழியில் இருந்து தோன்றியதாக சொல்லப்பட்ட தமிழுக்கு அதைவிட குறைந்த அளவுக்கு எழுத்துக்கள் இருப்பதற்கான கூறுகளே இல்லை. மேலும் தமிழ் இலக்கணம் வடமொழிக்கு பிந்தியதாக இருந்திருந்தால் எழுதும் சொற்றொடர் முறைகள் தலைகீழாக இருப்பதற்கான கூறுகளே (சாத்தியம்) இல்லை என்று நிறுவினார்.

தமிழ் எப்படி திராவிட மொழிகளின் தாய்மொழி என்பதை 'திராவிடாத் தாய்' என்ற நூலில் விரிவாக குறிப்பிட்டுள்ளார். பெரும்தகையின் துணிவுபடி தமிழர்கள் வடமொழியில் இருந்து பெற்றுக் கொண்டது என எதுவும் இல்லை என்றாலும் அந்த போர்வையில் இழந்தது, மறைந்தது, மறைக்கப்பட்டவை மிக்கவையே என்பது அவரின் வாதம்.

நான் இதுவரை அவருடைய 10 விழுக்காட்டு எழுத்துக்களை மட்டுமே படித்து இருக்கிறேன். தேவ நேயப் பாவாணரின் தமிழ் தொகுப்பு நூல்களைப் தேடிப் பிடித்து படியுங்கள் அதன்பின் பெருமிதப்பின் வியப்பின் எல்லைக்கே செல்வீர்கள், பிறகு எவரேனும் தமிழ்பற்றி தாழ்வாகவும், தமிழின் குறையென்று எவரேனும் அறியாமையால் சொன்னால் ஒரு 'ஏளன பார்வையை வீசிவிட்டு பதில் சொல்லாமல்' அவர்களை கடந்து செல்வீர்கள். :)

பாவணரின் நூல்கள் அனைத்தும் நாட்டுடமை ஆக்கப்பட்டவை எவர் வேண்டுமானலும் அதிலிருக்கும் கருத்துக்களை வெளியிட முடியும். நானறிந்த தமிழ்யாவும் அவர் ஆக்கி வைத்த நூல்கள் தந்தவையே !

வாழ்க பாவாணர் புகழ் !!!

***********
இந்த இடுகையில் நம் பெருமதிப்புக்குறிய
வளவு இராமகி ஐயாவைப் பற்றி நினைவு கூர்ந்து பாராட்டி மகிழ்கிறேன். இணையத்தில் இப்படி ஒரு தமிழ்மேதை ஒருவர் இருந்து கொண்டு 'அபிஷேகம்' போன்ற வடமொழிச் சொற்களுக்கு (அப்பும் இழிதலும்) வேர் (மூலச்) சொற்களை தக்க சான்றுகளுடன் (ஆதாரங்கள்) விளக்கியிருப்பதை நினைக்கையில் நெஞ்சம் உவகை கொள்கிறது.

தமிழ்மேதை இராமகி ஐயா அவர்கள் வாழ்க ! வாழ்க !! வாழ்க !!!

அன்புடன்,

கோவி.கண்ணன்

32 கருத்துகள்:

இரா. செல்வராசு (R.Selvaraj) சொன்னது…

கோவி.கண்ணன், நல்ல கட்டுரை. பயனுள்ளதும் கூட. பாவாணரைப் பற்றிய அறிமுகம் இருந்தும் நான் இன்னும் அவர் நூட்கள் எதையும் படிக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியதே. எண்ணிக் கொண்டிருக்கிறேன். அதுவரையில் வளவில் இராம.கி அவர்களின் வழியே படித்து ஆறுதலடைந்துகொள்கிறேன். அவரையும் இங்கே குறிப்பிட்டுச் சொல்லியிருப்பது பொருத்தமானதென்றே நான் எண்ணுகிறேன்.

இவ்வார நட்சத்திர இடுகைகள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. தொடருங்கள்.

சிவபாலன் சொன்னது…

GK,

மிக அருமையான பதிவு!

கலக்கியிருக்கீங்க..

மீன்டும் வருவேன் சில சந்தேகங்களுடன்...

நன்றி

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

ஐயா தேவநேயப் பாவாணர் பற்றிய முன்னுரைத் தகவல்கள் நன்றாக இருந்தது GK.

சென்னை அண்ணா சாலையில் உள்ள (டிவிஎஸ் பேருந்து நிறுத்தம்) பெரிய நூலகத்துக்கும் ஐயாவின் பெயர் தான். தேவநேயப் பாவாணர் அரசு நூலகம். கல்லூரி வாழ்வில் என் தமிழ்த் தாகம் தீர்த்த நூலகமும் கூட.

பாவாணரின் மாணாக்கர், பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் பற்றியும் அப்புறம் எழுதுங்கள்.

//பரிதிமார் கலைஞர்//

GK
அது பரிதி மாற் கலைஞர்!
றகரம். திருத்தி விடுங்கள்.

சூரிய=பரிதி
நாராயண=மால் (திருமால்)
சாஸ்திரி=கலைஞர்
சூரிய நாராயண சாஸ்திரி = பரிதி மாற் கலைஞர்

அதே போல் தான்
வேதாசலம் (வேத+அசலம்) சுவாமிகள் = மறை மலை அடிகள்

ஜெகதீசன் சொன்னது…

பயனுள்ள கட்டுரை.
//
தேவ நேயப் பாவாணரின் தமிழ் தொகுப்பு நூல்களைப் தேடிப் பிடித்து படியுங்கள்..
//
சிங்கை நூலகங்களில் உள்ள பாவாணரின் நூல்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறேன். விரைவில் படிக்கத் தொடங்குவேன்.
நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
பயனுள்ள கட்டுரை.
சிங்கை நூலகங்களில் உள்ள பாவாணரின் நூல்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறேன். விரைவில் படிக்கத் தொடங்குவேன்.
நன்றி.
//

ஜெகதீசன்,

பாராட்டுக்கு நன்றி,

நூல்களைத்தேடி வேறெங்கும் செல்ல வேண்டாம். அங்மோகியோ நூலகத்திற்கு செல்லுங்கள் அது போதும். 10 - 15 நூல்கள் இருக்கிறது

ஜெகதீசன் சொன்னது…

நன்றி GK.

கோவி.கண்ணன் சொன்னது…

//செல்வராஜ் (R.Selvaraj) said...
கோவி.கண்ணன், நல்ல கட்டுரை. பயனுள்ளதும் கூட. பாவாணரைப் பற்றிய அறிமுகம் இருந்தும் நான் இன்னும் அவர் நூட்கள் எதையும் படிக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியதே. எண்ணிக் கொண்டிருக்கிறேன். அதுவரையில் வளவில் இராம.கி அவர்களின் வழியே படித்து ஆறுதலடைந்துகொள்கிறேன். அவரையும் இங்கே குறிப்பிட்டுச் சொல்லியிருப்பது பொருத்தமானதென்றே நான் எண்ணுகிறேன்.

இவ்வார நட்சத்திர இடுகைகள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. தொடருங்கள்.
//

செல்வராஜ் அவர்களே,

விரைவில் பாவாணரின் நூல்களை படியுங்கள். எனக்கும் இராமகி ஐயாவின் இடுகைகளே ஊக்கமளிக்கின்றன. அவரை தாங்களும் பாராட்டியிருப்பதும் மகிழ்வாக இருக்கிறது.

நட்சத்திர இடுகைகளை பாராட்டியதற்கும் நெகிழ்கிறேன்.
நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//சிவபாலன் said...
GK,

மிக அருமையான பதிவு!

கலக்கியிருக்கீங்க..

மீன்டும் வருவேன் சில சந்தேகங்களுடன்...

நன்றி
//

பாராட்டுக்கு நன்றி சிபா,

ஐயங்களை கேளுங்கள், எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஐயா தேவநேயப் பாவாணர் பற்றிய முன்னுரைத் தகவல்கள் நன்றாக இருந்தது GK.

சென்னை அண்ணா சாலையில் உள்ள (டிவிஎஸ் பேருந்து நிறுத்தம்) பெரிய நூலகத்துக்கும் ஐயாவின் பெயர் தான். தேவநேயப் பாவாணர் அரசு நூலகம். கல்லூரி வாழ்வில் என் தமிழ்த் தாகம் தீர்த்த நூலகமும் கூட.

பாவாணரின் மாணாக்கர், பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் பற்றியும் அப்புறம் எழுதுங்கள்.

//பரிதிமார் கலைஞர்//

GK
அது பரிதி மாற் கலைஞர்!
றகரம். திருத்தி விடுங்கள்.

சூரிய=பரிதி
நாராயண=மால் (திருமால்)
சாஸ்திரி=கலைஞர்
சூரிய நாராயண சாஸ்திரி = பரிதி மாற் கலைஞர்

அதே போல் தான்
வேதாசலம் (வேத+அசலம்) சுவாமிகள் = மறை மலை அடிகள் //

KRS,
நான் அறிந்ததை விட தங்களுக்கு பாவணரைப்பற்றி நன்கு தெரிந்திருக்கிறது. நீங்கள் பாவாணர் பற்றிய இடுகைகளை எழுதவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எனக்கு பாவாணர் நூலகம் சென்னையில் இருப்பது தெரியும். ஆனால் அவர் யார் என்றே எனக்கு தெரியாது. சிங்கையில் நூலக மேய்சலில் கண்ணில் பட்டவர்தான் பாவாணர்.

பெரும்சிதனார் பற்றி நான் அறிந்திலேன். படிக்க வேண்டும்.

பிழைகளை திருத்தியமைக்கும் நன்றி.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

அன்புள்ள கோ.வி.கண்ணன் ஐயா
அவர்களுக்கு வணக்கம்.பாவாணர் பற்றிய தங்களின் ஈடுபாடு மகிழ்வு
தருகிறது.பாராட்டு,வாழ்த்து.
சிங்கையில் உள்ள திரு. கோவலங் கண்ணன் ஐயாவைக்கண்டு உரையாட இன்னும் புத்தொளி பெறலாம்.

முனைவர் மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
பார்க்கவும்.
muelangovan.blogspot.com
muelangovan@gmail.com

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

பெருஞ்சித்திரனார் பற்றி அறிய
என் கட்டுரையைத் திண்ணை இணையதளத்தில் பார்க்கவும்.(16.08.07)
அல்லது விரைவில் என்பக்கத்தில்
வெளியிடுவேன்.
முனைவர் மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
muelangovan.blogspot.com

கோவி.கண்ணன் சொன்னது…

// Dr Mu.Elangovan said...
அன்புள்ள கோ.வி.கண்ணன் ஐயா
அவர்களுக்கு வணக்கம்.பாவாணர் பற்றிய தங்களின் ஈடுபாடு மகிழ்வு
தருகிறது.பாராட்டு,வாழ்த்து.
சிங்கையில் உள்ள திரு. கோவலங் கண்ணன் ஐயாவைக்கண்டு உரையாட இன்னும் புத்தொளி பெறலாம்.

முனைவர் மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
பார்க்கவும்.
//

இளங்கோவன் ஐயா,

பாராட்டுக்கு நன்றி ஐயா. கோவலங் கண்ணன் ஐயாவை பார்க்க ஆவலாக இருக்கிறேன். தனிமடல் அனுப்புகிறேன் விவரம் தாருங்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Dr Mu.Elangovan said...
பெருஞ்சித்திரனார் பற்றி அறிய
என் கட்டுரையைத் திண்ணை இணையதளத்தில் பார்க்கவும்.(16.08.07)
அல்லது விரைவில் என்பக்கத்தில்
வெளியிடுவேன்.
முனைவர் மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
muelangovan.blogspot.com
//
இளங்கோவன் ஐயா,

பெருஞ்சித்திரனார் பற்றி நண்பர் கண்ணபிரான் குறிப்பிட்ட உடனே எனக்கு ஆவல் கூடிவிட்டது. தங்களின் திண்ணை கட்டுரையை இனி தேட்டி போகவேண்டியது தான்.

குறிப்புக்கு மிக்க நன்றி !

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

தாரகைப் பதிவுகள் யாவும் ஒளிர்கின்றன..
பாவாணர் பற்றிய பதிவும்
இராம.கி பற்றியக் குறிப்பும்
மகிழ்ச்சியளிக்கின்றன.

வெற்றி சொன்னது…

கோ.க,
மிகவும் அருமையான பதிவு. தேவ நேயப் பாவாணர் பற்றி இதுவரை அறிந்திலேன். மிக்க நன்றி.

இராம.கி ஐயா அவர்கள் பற்றிய உங்களின் கருத்தை வழிமொழிகிறேன்.

தகடூர் கோபி(Gopi) சொன்னது…

//சென்னை அண்ணா சாலையில் உள்ள (டிவிஎஸ் பேருந்து நிறுத்தம்) பெரிய நூலகத்துக்கும் ஐயாவின் பெயர் தான். தேவநேயப் பாவாணர் அரசு நூலகம். கல்லூரி வாழ்வில் என் தமிழ்த் தாகம் தீர்த்த நூலகமும் கூட.//

அண்ணா சாலையில் இருக்கும் இந்த நூலகம் பல துறைகளை சார்ந்த கலைக்களஞ்சியங்கள், எண்ணற்ற தமிழ் நூல்கள் கொண்டது. (நான் பட்டப் படிப்பு முடித்து வேலை தேடிய காலத்தில் கர்னாடகத்தில் வெளியாகும் "Deccan Herald" பத்திரிக்கை சென்னையில் படிக்க கிடைக்கும் வெகு சில இடங்களில் இந்நூலகமும் ஒன்றாக எனக்கு அறிமுகமானது) அப்போதெல்லாம் யார் இவர் எனத் தோன்றியதுண்டு. பின்னாளில் அவர் குறித்து அறிய வந்த பிறகு இந்நூலகத்துக்கு தேவநேயப் பாவாணர் அவர்களின் பெயர் சாலப் பொருந்தும் என்று தோன்றும்.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

பெருஞ்சித்திரனார் கட்டுரை என் பக்கத்தில் உள்ளது.
முனைவர் மு.இளங்கோவன்
புதுச்சேரி
இந்தியா
muelangovan.blogspot.com

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

பெருஞ்சித்திரனார் கட்டுரை என் பக்கத்தில் உள்ளது.
முனைவர் மு.இளங்கோவன்
புதுச்சேரி
இந்தியா
muelangovan.blogspot.com

Kanags சொன்னது…

கோவி கண்ணன் அவர்களுக்கு, முதலில் எனது நட்சத்திர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேவநேயப் பாவாணர் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றிகள். இவரைப்பற்றிய விக்கிபீடியா கட்டுரை இன்னும் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது. தங்களால் முடிந்தால் அக்கட்டுரையை முழுமையாக்கித் தர வேண்டுகிறேன். நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

இப்பெயரைக் கேள்விப்பட்டுள்ளேன். எதுவுமே படிக்கவில்லை. பதிவு படிக்கத் தூண்டியுள்ளது.
இராம.கி ஐயாவை சரியாக நினைவு கூர்ந்தீர்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Dr Mu.Elangovan said...
பெருஞ்சித்திரனார் பற்றி அறிய
என் கட்டுரையைத் திண்ணை இணையதளத்தில் பார்க்கவும்.(16.08.07)
அல்லது விரைவில் என்பக்கத்தில்
வெளியிடுவேன்.
முனைவர் மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
muelangovan.blogspot.com
//

இளங்கோவன் ஐயா,

தங்களின் பெருஞ்சித்திரனார் பற்றிய சிறப்பான இடுகையை படித்து நெகிழ்வுற்றேன். அரியதந்தமைக்கு மிக்க நன்றி!

கோவி.கண்ணன் சொன்னது…

//siva gnanamji(#18100882083107547329) said...
தாரகைப் பதிவுகள் யாவும் ஒளிர்கின்றன..
பாவாணர் பற்றிய பதிவும்
இராம.கி பற்றியக் குறிப்பும்
மகிழ்ச்சியளிக்கின்றன.
//

சிவஞானம்ஜி ஐயா,
பதிவுலகை நீண்டகாலமாக கவணித்துவரும் தங்களைப் போன்றோரின் பாராட்டு ஊக்கப்படுத்துகிறது. மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//வெற்றி said...
கோ.க,
மிகவும் அருமையான பதிவு. தேவ நேயப் பாவாணர் பற்றி இதுவரை அறிந்திலேன். மிக்க நன்றி.

இராம.கி ஐயா அவர்கள் பற்றிய உங்களின் கருத்தை வழிமொழிகிறேன்.
//
வெற்றி அவர்களே,
பாராட்டுக்கு மிக்க நன்றி. தகுந்த நேரத்தில் குறிப்பிடவேண்டும் என்று நினைத்தேன். இங்கு முடிந்தது.
எனக்கும் மிக்க மகிழ்ச்சி !

கோவி.கண்ணன் சொன்னது…

//கோபி(Gopi) said...

அண்ணா சாலையில் இருக்கும் இந்த நூலகம் பல துறைகளை சார்ந்த கலைக்களஞ்சியங்கள், எண்ணற்ற தமிழ் நூல்கள் கொண்டது. (நான் பட்டப் படிப்பு முடித்து வேலை தேடிய காலத்தில் கர்னாடகத்தில் வெளியாகும் "Deccan Herald" பத்திரிக்கை சென்னையில் படிக்க கிடைக்கும் வெகு சில இடங்களில் இந்நூலகமும் ஒன்றாக எனக்கு அறிமுகமானது) அப்போதெல்லாம் யார் இவர் எனத் தோன்றியதுண்டு. பின்னாளில் அவர் குறித்து அறிய வந்த பிறகு இந்நூலகத்துக்கு தேவநேயப் பாவாணர் அவர்களின் பெயர் சாலப் பொருந்தும் என்று தோன்றும்.
//

கோபி,
சரியாக சொல்லியுள்ளீர்கள். தேவ நேயப் பாவாணருக்கு தமிழகம் என்றுமே கடமை பட்டுள்ளது. அவரின் உழைப்பு அனைவரையும் சென்று சேர்ந்து பயனடையவேண்டும் என்பது இந்த இடுகை வழி நான் வெளிப்படுத்து விரும்பியது. அதற்காக மகிழ்கிறேன்.

உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் !

கோவி.கண்ணன் சொன்னது…

//Kanags said...
கோவி கண்ணன் அவர்களுக்கு, முதலில் எனது நட்சத்திர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேவநேயப் பாவாணர் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றிகள். இவரைப்பற்றிய விக்கிபீடியா கட்டுரை இன்னும் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது. தங்களால் முடிந்தால் அக்கட்டுரையை முழுமையாக்கித் தர வேண்டுகிறேன். நன்றி.
//
Kanags,

தேவ நேயப் பாவாணரின் ஆக்கங்களை நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் எடுத்து எழுத வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். விக்கிபிடியாவிலும் எழுதுவேன். தங்கள் அதைக்குறிப்பிட்டு கேட்பதற்கும் மிக்க நன்றி!

தங்களின் நட்சத்திர வாழ்த்துக்கும் நன்றி!

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

நல்ல ஒரு பதிவு !
//நூல்களைத்தேடி வேறெங்கும் செல்ல வேண்டாம். அங்மோகியோ நூலகத்திற்கு செல்லுங்கள் அது போதும். 10 - 15 நூல்கள் இருக்கிறது//
தேவநேயப் பாவாணரின் பற்றிய உலகத் தமிழாராய்ச்சி நிலைய நூல்களைப் அங் மோ கியோ நூலகத்திற்குப் பரிந்துரைத்தது அடியேன்...அவைகளை உபயோகப்படுத்துங்கள்.(இருப்பீர்கள் என எண்ணுகிறேன்)

கோவி.கண்ணன் சொன்னது…

//Sangap Palagai said...
நல்ல ஒரு பதிவு !//

சங்க பலகை ஐயா,

பாராட்டுக்கு மிக்க நன்றி !

//தேவநேயப் பாவாணரின் பற்றிய உலகத் தமிழாராய்ச்சி நிலைய நூல்களைப் அங் மோ கியோ நூலகத்திற்குப் பரிந்துரைத்தது அடியேன்...அவைகளை உபயோகப்படுத்துங்கள்.(இருப்பீர்கள் என எண்ணுகிறேன்)//

சங்க பலகை ஐயா,

உங்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை, மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் பரிந்துரைத்திருக்காவிடில் எனக்கு அவருடைய நூல்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது.

கோடி நன்றிகள் !

பின்னூட்டத்தை வெளியிட்டுவிட்டு நீங்கள் என்ன எழுதி இருந்தீர்கள் என்பதை சரியாக கவனிக்காமல் இருந்துவிட்டேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

//
சங்க பலகை ஐயா,

உங்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை, மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் பரிந்துரைத்திருக்காவிடில் எனக்கு அவருடைய நூல்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது.

கோடி நன்றிகள் !

பின்னூட்டத்தை வெளியிட்டுவிட்டு நீங்கள் என்ன எழுதி இருந்தீர்கள் என்பதை சரியாக கவனிக்காமல் இருந்துவிட்டேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.சங்க பலகை ஐயா,

உங்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை, மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் பரிந்துரைத்திருக்காவிடில் எனக்கு அவருடைய நூல்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது.

கோடி நன்றிகள் !

பின்னூட்டத்தை வெளியிட்டுவிட்டு நீங்கள் என்ன எழுதி இருந்தீர்கள் என்பதை சரியாக கவனிக்காமல் இருந்துவிட்டேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.
//
நன்றி,நானும் வெகு நாள் கழித்துத்தான் உங்கள் பதிலைப் பார்த்தேன்.
பாவாணர் நூல்கள் மட்டுமல்ல,சுமார் 300 புத்தகங்கள் வரைக்கும் இதுவரை சிங்கை நூலகத்திற்குப் பரிந்துரை செய்திருக்கிறேன்;ஒரு மின்மடல் அனுப்பி பாராட்டினார்கள்(நானே சொல்ல கொஞ்சம் கூச்சமாய்த்தான் இருக்கிறது,ஆனாலும் வேற யாரும் சொல்ல முடியாது,இல்லையா??? :-))
அப்புறம் ஐயா' எல்லாம் போட்டு என்னை பெரியவராக்கி விடாதீர்கள்,நானும் உங்கள் சக வயதினன் தான்..
-சங்கப்பலகை & அறிவன்

Unknown சொன்னது…

மிகவும் செறிவுள்ள, பயனுள்ள கட்டுரை. நன்றி. அய்யா பாவாணர் மற்றும் அய்யா பாவலறேறு ஆகியோரின் படைப்புகள் மின்னூல்களாக வெளிவந்துள்ளனவா? இருந்தால் அறிமுகப் படுத்தவும்.

தமிழ் சொன்னது…

கோவி.கண்ணன் said:
//தங்கள் மொழி ஞாயிறு அவர்கள் அதிகாரம் என்னும் சொல்லைக் குறித்து எழுதியிருப்பதைப் படித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்//

பாவாணர் ஐயா அவர்களின் அனைத்து நூல்களையும் படிக்கும் பேறு இன்னும் பெறவில்லை. ஓரளவு வாசித்து இருக்கிறேன். ஆனால் பாவாணர் ஐயாவை நினைக்கும் பொழுதெல்லாம் சிலிர்க்கவே செய்கிறது. தமிழ் அரசியல்வாதிகள் அவரை மேலே கொண்டு வந்திருக்கலாம். ஐயாவின் உழைப்பில் 10 விழுக்காடு கூட இன்னும் மக்களை சென்று அடையவில்லை. :(

நேரம் இருந்தால் படித்துப் பாருங்கள்

அருமையான கட்டுரை

மொழி ஞாயிறு அவர்களின் நிழல்பாடத்திற்காக இணையத்தில் அலைந்துப் பொழுது தங்களின் பதிவைப் படிக்க முடிந்தது.


ஒவ்வொரு தமிழனின் கரங்களில் இருக்க வேண்டிய புத்தங்கள்,
அவர் எழுதிய புத்தங்கள்
அத்தனையும்

தமிழ் சொன்னது…

"வாரமலர் திண்ணை!
தமிழறிஞர், தேவநேய பாவாணர் பெயரிலேயே வட மொழி இருக்கிறது. முதலில் அவர் தன பெயரை மாற்றிக்கொண்டு இருக்க வேண்டும். 25-அக்-2015 14:31:02 IST"

http://www.dinamalar.com/user_comments.asp?uid=126740&name=Antoni%20Raj

இந்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. அதே நேரத்தில் என்னிடம் செந்தமிழ் அகராதியும் இல்லை. இதற்கு யாரேனும், பதிலளிக்க முடியுமா?

- சு. முருகானந்தம்

PDF BOY சொன்னது…

http://www.viruba.com/pavanar/paavanarbooks.aspx

👆 தேவநேயப் பாவாணர் அவர்களின் நூல்களை மின்னூளாக பதிவிறக்கி படியுங்கள். மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள் நண்பர்களே. நன்றி..

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்