மனித வாழ்க்கையாக இருந்தாலும் தாவிரங்கள் உள்ளிட்ட ஏனைய உயிர்வகையாகட்டும் விதிவிலக்குகள் எதுவும் கிடையாது, வாழ்கை என்பது போராட்டம் தான் . தன்னை காப்பாற்றிக் கொள்வது சந்ததிகளைப் பெருக்கிக் கொள்வது தவிர்த்து உயிர்வாழ்க்கையில் பெரிய சாதனைகள் செய்வதற்காக எந்த உயிரும் உருவாகுவதில்லை, இதற்கு மேம்பட்டும் மனித வாழ்க்கையில் வசதிகளின் தேடல், அதைப் பெருக்கிக் கொள்ளுதல், ஆளுமைகள், இருப்பதை இழக்கக் கூடாது என்பதில் செய்யப்படும் முன்னேற்பாடுகள் இவற்றைச் செயல்படுத்தத் துனியும் தன்னலம் இவை மட்டும் தான் மனித வாழ்கைக்கும் ஏனைய உயிர் வாழ்கைக்குமான வேறுபாடுகள். எதிர்கால சேமிப்புகள் ஆகியவற்றில் எறும்புகள் உள்ளிட்டவை முனைந்து செயல்பட்டாலும் தலைமுறைகள் தாண்டி பயன்படுத்தும் சேமிப்புகளை மனித இனம் தவிர்த்து வேறெந்த விலங்கினமும் செய்வதில்லை. இனம்பெருக்கம் தன்னலம் தாண்டிய மறு உற்பத்தி என்ற அளவில் மனித இனத்திற்கும் ஏனைய உயிரினத்திற்குமான வேறுபாடுகள் வியக்க வைக்கும் அளவில் நடைபெறுகின்றன, ஏனைய உயிரினங்களில் இனப்பெருக்கம் என்பவை சூழல் பாதுகாப்புகள் உள்ளிட்டவையாகவும், அதனை கட்டுப்படுத்தும் திறனும் அதே சூழலில் அமையப் பெற்றதாகவும் உள்ளன, இனப்பெருக்கம் உற்பத்தி மிக பெரிய அளவில் நடக்கும் உயிரனங்களில் அதன் வாழ்நாள்கள் மற்றும் பாதுகாப்பு மிகவும் சொற்பமானதே, மாறாக நெடுநாள் வாழக்கூடிய உயிரினப் பெருக்கத்தின் உற்பத்தி திறன் குறைவாகவும், அதன் பாதுகாப்புகள் பலமிக்கதாகவும் இருக்கும், மனித வேட்டையாடலில் மறைந்து போன உயிரனங்கள் தவிர்த்து இந்த அளவுகோளில் ஏனைய உயிரன உற்பத்திகளை இயற்கை சமஅளவில் வைத்திருக்கிறது
*****
விசைப் படகில் எங்களைத் தவிர்த்து மற்ற மூன்று சுற்றுலாவாசிகள் மற்றும் படகு செலுத்துபவர், தீவிற்கும் கரைக்கும் இடைப்பட்ட தொலைவு முக்கால் கிமி இருக்கும், செம்மண் நிற கலங்களான கடல் தண்ணீர், கரையை ஒட்டிய கடல் பகுதிகளிலும், கடலின் நடுப்பகுதிகளிலும் மீன் வளர்ப்பு தொட்டிகள் 1000க் கணக்கானவை அங்காங்கே அமைந்திருந்தது, இறால் உள்ளிட்ட பல்வேறு வகை மீன் வகைகளை வளர்த்து எடுத்து ஏற்றுமதி செய்கிறார்கள், கடல்நீருக்குள்ளேயே இவ்வாறு மீன் வளர்ப்பது அதன் சூழலில் வளரவிடுவது என்றாலும் அதற்கான இரைகள் போடப்பட்டுதான் வளர்க்கப்படுகின்றன, மீன் உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கு பல்வேறு உத்திகளை கையாள்கிறார்கள், இவ்வாறு வளர்க்கப்படும் மீன்களுக்கும், உரம் போட்டு வளர்க்கப்படும் பயிரினங்களுக்கும் உற்பத்தியைக் கூட்டுதல் விரைவாக அறுவடை செய்தல் ஆகியவை பொதுவானவை என்பதால் அவற்றின் சத்துகள் கேள்விக்குறிதான், எனினினும் தரையில் தொட்டிகள் அமைத்து வளர்க்கப்படும் மீன்களைவிட இவை கூடுதலான சத்துகள், செரிவுகள் கொண்டவகையாக இருக்கக் கூடும்.
தீவுப்பகுதியின் கரைப்பகுதி அடர்ந்த மரங்களால் நிறைந்திருந்தது, அங்கே நாரைகள் பல அமர்ந்திருந்தன, சதுப்பு நிலக்காடுகள் அமைந்தப் பகுதிகளில் நாரைகளுக்கு உணவுக்கு கிடைக்கும் மீன்களுக்கு குறைவு இருக்காது என்பதை உணர்த்தும் படி ஏகப்பட்ட நாரைகள், அதன் கரகர கீச் கீச் ஒலி கேட்டுக் கொண்டு இருந்தது, படகு தீவின் முகப்படை அடைந்ததும் இறங்கினோம், திரும்பி வரும் பொழுது அலைபேசியில் அழைத்தால் வந்து அழைத்துச் செல்வதாக படகோட்டி அங்கு ஒட்டப்பட்டு இருந்த எண்களைக் காட்டினார், தீவு முகப்பில் நுழைவுக் கட்டிடம், 'ஜோகூர் மாநிலத்தின் தேசிய பூங்கா என்ற பொருளில் அறிவுப்புடன் நுழைவாயில், உள்ளே சென்றால் தீவிற்குள் நுழைவுக் கட்டணம் செலுத்தி பின்னர் செல்ல வேண்டும், வெளிநாட்டு சுற்றுலாவாசிகளுக்கு 25 ரிங்கிட்டும், உள்நாட்டினருக்கு 5 ரிங்கிட்டும் கட்டணம் வாங்குகிறார்கள், நண்பர் மலேசியவாசி என்பதால் 10 ரிங்கிட்டுக்கு இரண்டு நுழைவுச் சீட்டுகளைப் பெற்று வந்தார், அந்த தீவின் முகப்பு கட்டிடமே கடல் தண்ணீரினுள் தான் அமைக்கப்பட்டிருந்தது, சுற்றுலா வளர்ச்சிகாக பல மில்லியன் ரிங்கிட்டுகளை செலவிட்டு அரசாங்கம் பல வசதிகளை செய்து தந்திருப்பதாக நண்பர் குறிப்பிட்டு இருந்தார்,
கட்டிடத்தை பின்வாசல் வழியாகக் கடக்க, தீவின் நுழைவாயி, ல் அதன் பிறகு வழியாக மரப்பாலங்கள் தான் தென்பட்டன, 1 1/2 மீட்டர் குறுக்களவில் மரப்பலகைகளால் அமைக்கப்பட்ட பாதைகள் தான் போடப்பட்டிருந்தன, நேராக ஒரு வழி தொடர்ந்து செல்ல அதன் இடையே 200 மீட்டர் தொலைவில் நான்கு மாடி உயரக் கோபுரம்,. அதன் உச்சியில் இருந்து அங்கே ஓடும் சதுப்பு நில ஆற்றைக் கடந்து அடுத்துப் பகுதிக்குச் செல்லும் தொங்கு பாலம், டவரில் கழிவறை வசதிகள் இருந்தன, தொங்கு பாலத்தில் மூவருக்கு மேல் நடந்து செல்லக் கூடாது, அவர்கள் கடந்த பின்பு தான் அடுத்தவர்கள் செல்ல வேண்டும் என்ற அறிவிப்புகள் இருந்தன, தொங்கு பாலத்தில் ஏறினேன், நம் எடைக்கும் காற்றுக்கும் ஏற்றபடி கொஞ்சம் ஆட்டம் தான், புகைப்படம் எடுக்கும் பொழுது செல்பேசி தவறி விழலாம் என்பது தவிர்த்து அந்த ஆட்டம் ஒன்றும் பயமுறுத்தவில்லை. அடுத்தப் பகுதி கோபுரத்தை அடைந்து கீழே இறங்க இன்னொரு மரப் பாலப் பாதை சற்று வளைந்து சென்றது.
அந்தப் பகுதிகள் முழுக்க முழுக்க சதுப்பு நிலக் காட்டு மரவகைகள் இருந்தன, அவற்றின் வேர்கள், வேர்கள் கிளைத்த மரங்கள், கடல் நீர் ஏற்ற இரக்கம் இந்தப் பகுதியில் எப்படி இருக்கும் என்பதன் அளவுகோலாக இருந்தன, சதுப்பு நிலத்தில் வாழும் தவளை இனம் போனறு கால்கள் உடைய மீன்வகைகள், நண்டுகள், இவைகள் பெரும்பாலும் தண்ணீரிலும் ஈரத்தரையிலும் வாழக்க் கூடியவை, அடந்த நிழல்களும், சேற்று நீரின் குளுமையும் மிகவும் இனிமையாக இருந்தது, ஒரு 200 மீட்டர் நடந்த பிறகு ஒரு மரப் பாலம் வழியாக முன்பு துவங்கிய வழியை குறுக்காக அடையும் இடம் இருக்கிறது, அங்கே துடுப்பு ஓடங்கள் இருந்தன, வெள்ளம் பெருகும் நாள்களில் அந்த காட்டினுள் சுற்றுலா படகு பயணம் செய்வதற்கான ஏற்பாடுகளாக அவைகள் இருந்தன, நாங்கள் சென்றது செவ்வாய் கிழமை என்பதால் எங்களையும் சேர்த்து ஐவர் மட்டுமே தீவுக்குள் இருந்தோம், எங்களுடன் வந்த மற்ற மூவர் எங்களைப் பின் தொடரவும் இல்லை, தீவின் நடுப்பகுதிக்குச் செல்லும் மரப்பாதைக்கு வந்தோம், குரங்குகள் பல இருந்தன, எல்லாம் கொஞ்சம் பயந்தது போல் நம்மைப் பார்த்து விலகியே சென்றன, பாலி தீவு குரங்குகள் போல் எதையும் தட்டிப் பறிக்க முயற்சிக்கவில்லை.
கொஞ்சம் தூரம் நடந்த பிறகு இயற்கை ஆர்வலர்கள் அவ்வப்போது அங்கு வந்து மரங்களை நட்டுப் பாதுகாக்கும் இடங்கள் பல இருந்ததைப் பார்க்க முடிந்தது, இங்கே எதற்கு வந்து நட வேண்டும், இயற்கையாகவே அவை வளருகின்றன அல்லவா ? சதுப்பு நில மரவகைகள் 100க் கணக்கானவை உண்டு, அவற்றின் இனப்பெருக்கும் பெரும்பாலும் ஒரே மாதிரி தான், மரத்தில் முருங்கைகாய் போன்று நீளமாக ஆனால் பட்டை பட்டையாக இல்லாமல் 10 செமி விட்டத்தில் ஒரு சற்று கூறிய முனையுடன் அடிக் குச்சி தண்டு காயாகவும் அதன் மேல் முனை மொட்டுப் பகுதிகள் மரத்தில் தொங்கி வளர்ந்து வருகின்றன, அவை நீளமாக இருந்தாலும் உறுதியானவை கிடையாது, உடைத்தால் எளிதில் உடையும், குரங்குகள் பறித்து அந்த காய்களை கடித்து உண்ணுகின்றன, மரம் சுமார் 20 அடி உயரும் பொழுது காய்க்கத் துவங்குகின்றன, மரங்கள் 100 அடி வரை வளர்க்கின்றன, குரங்குகள் தவிர்த்து வேறு எதுவும் அந்த காய்களை உண்ணுவதாக தெரியவில்லை, காய்கள் முற்றிய நிலையில் காம்புகள் நைந்து போக காற்றடிக்கும் பொழுது அவை செங்குத்தாக கீழே விழுந்து சேற்றில் சொருகினால் அவை கீழ் பகுதி வேராகவும், மேல் பகுதி இலையாகவும் வளரும் வாய்ப்புகள் உள்ளன, அவ்வாறில்லாமல் காய்ந்த சேற்றிலோ, வேரிலோ விழுந்தால் உடைந்துவிடும், செங்குத்தாக விழ போதிய எடை மற்றும் ஈரப்பதம் இருந்தாலும் காற்றடிக்கும் பொழுது விழுவதால் செங்குத்தாக விழும் வாய்ப்புகள் மிகவும் அரிது, எனவே இவ்வகை மரம் காய்க்கும் காய்களில் இருந்து இனப் பெருக்க வாய்ப்பு வெறும் 10 விழுக்காட்டு காய்களுக்குத் தான் கிடைக்கின்றனவாம், அவற்றிலும் அடந்த கருநிழலைத் தாண்டி வளர்ந்து வருபவை மிகக் குறைவு. அந்த மரங்களின் அடர்வில் மீதம் 90 விழுகாட்டு விதைகள் முளைத்தாலும் வளர வாய்ப்பில்லை, வெறும் இரண்டு விழுக்காட்டு மறு உற்பத்திகள் தான் காய்கின்ற விதைகளில் இருந்து நடக்கின்றன, அடர்வு குறைந்த பகுதியை சீர் செய்ய அந்த விதைகளை செயற்கையாகவே நட்டு வளர்த்து வேறு இடத்தில் வைக்கிறார்கள்.
சுமார் 600 மீட்டர் வரை உள்ளே மரப் பாதை செல்கிறது, அதன் முடிவில் 5 மாடி அளவுக்கு உயர்ந்த கோபுரம், சுற்றிலும் பார்வை இட அமைத்திருக்கிறார்கள், மரப் பாதைத் தவிர்த்து வேறு வழி இல்லாத இந்த இடத்தில் அந்த கோபுரமே அங்கு ஓடும் சதுப்பு நில ஓடை வழியாக படகுகள் மூலம் கட்டுமானப் பொருள்கள் கொண்டு வந்து கட்டி இருக்க வேண்டும் என்பது தவிர்த்து வேறு வாய்ப்பில்லை, கோபுரத்தின் மீது ஏறினோம், உலகில் இருக்கும் பெரிய சதுப்பு நிலக்காடுகளில் இந்த குக்குப் தீவும் ஒன்றாம், குக்குப் என்றால் தடுப்பு, அதாவது நில அரிப்பை தடுக்கும், மற்றும் சுனாமி அலைகள் உள்ளிற்றவற்றை இந்த தீவைக் கடந்து செல்லாது நிலப்பகுதியைக் காக்கும் தீவாம், உச்சியில் நின்று பார்க்க சுற்றிலும் மரங்களின் தலைகள், பச்சை தளைகள். நடுக்கடலில் நின்று பார்க்க சுற்றிலும் கடல் நீர் சூழப்பட்டது போல் இருப்பது போன்றே சுற்றிலும் கண்ணுக்கு எட்டிய வரை பசுமை பசுமை. அனை அனுபவிக்க ஏதுவாக குளிர்ந்த காற்று. அப்படியே அங்கேயே ஒரு அரை மணி நேரம் அமர்ந்திருந்தோம்,
அங்கே எங்களுடன் படகில் வந்த மூவரும் வந்து சேர அவர்கள் சேர்ந்து நிற்கும் நிழல்படம் எடுக்க உதவினோம், அவர்களும் எங்களுக்கு அவ்வாறே உதவினார்கள், பசி களைகட்டி திரும்பிச் செல்ல நச்சரிக்க கையில் கொண்டு சென்ற தண்ணீரில் கொஞ்சம் குடித்துவிட்டு கோபுரத்தில் இருந்து இறங்கினோம், திரும்பிச் செல்ல நடந்து கொண்டிருக்கும் பொழுது சட சடவென்று மழைக் கொட்டத் துவங்கியது, திரும்பவும் கோபுரத்தின் அடிக்கு வந்து மழை நிற்க காத்திருக்க, ஐந்து நிமிடத்தில் தூறல்களாக மாறியது, திரும்பவும் ஒரு 100 மீட்டர் நடந்ததும் பழையபடி இன்னும் பலத்த மழை, ஓட்டம் ஓட்டம் வேற வழியில்லை, ஒதுங்க இடமில்லை, 600 மீட்டர் ஓடினால் முகப்பு கட்டிடத்தை அடைய முடியும், முன்னே நண்பர் ஓட, பின்னே செல்பேசி நனைத்துவிடாமல் பாக்கெட்டில் போட்டு கையில் பிடித்துக் கொண்டு நானும் பின் தொடர்ந்து ஓடினேன். கொஞ்சம் உணவு பொருளோ அல்லது குடையோ எடுத்து வந்திருந்தால் இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாம் என்று தோன்றியது. நடுவே ஒரு மரப்பாலத்தின் அருகே அமைந்த ஓய்வு குடிலில் சற்று நேரம் இளைப்பார மழை நிற்கவும், படகுத்துறைக்குச் செல்ல படகும் காத்திருந்தது ஏறி வந்து சேர்ந்தோம்,
பசிப் போக்க அதே சீனர் கடைக்குச் சென்றோம், அவர் சொன்னது போலவே வெஜிடேரியன் ப்ரைடு ரைஸ் எனக்கும், நண்பருக்கு நண்டு மற்றும் நூடுல்ஸ் உணவு, நான் நினைத்த அளவிற்கெல்லம கவுச்சி வாடை எதுவுமே அடிக்கவில்லை, மிகவும் தூய்மையாக, சுவையாக வெஜிடேரியன் ப்ரைட் ரைஸ் இருந்தது, அங்கே அந்த உணவு கிடைப்பது கொடுப்பினை தான், நண்பருக்கு நண்டை உடைக்க பாக்கு வெட்டி போன்ற ஒன்றையும் கொடுத்திருந்தனர், பொறுமையாக உடைத்து சாப்பிட்டார். அவர் சொன்னது போல் ரிலாக்ஸாக இருக்க வந்திருக்கிறோம், எதற்கு அவசரம் ? அதற்கான தேவையும் இருக்கவில்லை,
பின்னர் கார் நிறுத்தும் இடத்திற்கு சென்று கடைபாட்டியிடம் மற்றொரு தண்ணீர் பாட்டில் வாங்கிவிட்டு கார் பார்த்துக் கொண்டதற்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பினோம், ஏற்கனவே வழியில் பார்த்த ப்ழக் கடையில் சில பழங்களை வாங்கிவிட்டு ஜோகூர் வந்து சேர்ந்தோம்.
*****
குக்குப் தீவுக்குச் சென்று வர ஜோகூரில் இருந்து பேருந்துகள் உண்டு, நாள் ஒன்றுக்கு 2 - 4 பேருந்துகள் வரை இருக்கலாம், கட்டணம் தொலை அடிப்படையில் பார்க்க 10 ரிங்கிட்டுகள் வரை இருக்கும், கடற்கரை கிராமம், கடலில் படகு பயணம், இயற்கை வளமாக அமைந்த சதுப்பு நிலக் காடுகள், புகைப்படம் எடுப்பது இவற்றில் ஆர்வம் உள்ளவர்கள், கடலுணவு விருப்பர்கள், சென்றுவரலாம் ஒரு நாள் போதுமானதாகும். விடுதிகள் கூட அங்குண்டு.
7 கருத்துகள்:
நானும் உங்களுடன் குக்குப் தீவைப் பார்த்தது போல் இருந்தது. நல்ல வர்ணனை. நன்றி.
மரங்களின் பசுமை மனதை நிறைத்தது...
அருமை அண்ணா...
நல்ல பயணம்...
உபயோகமான தகவல்கள்...
அமைப்பெல்லாம் பார்க்கும் போது சிங்கைக்கு பக்கத்தில் உள்ள ஒரு தீவு (பெயர் ஞாபகம் வரவில்லை) போல் உள்ளது.
குமார்,
நீங்கள் சொல்வது சுங்கைப் புலாவ் என்று நினைக்கிறேன்
பார்க்க வேண்டிய இடம்தான்...
அந்த நண்டு கறி உணவின் விலை என்ன ? உண்மையாகத்தான் கேட்கிறேன்.ஏனென்றால் அதிலிருந்து நான் அவர்களின் உணவு விலைகளை ஊகிக்க முடியும்.(அதிகமா அல்லது மலிவா என்று)
கருத்துரையிடுக