திருவிளையாடல் புராணங்களின் ஆதார அடிப்படையில் சேக்கிழாரின் 63 நாயன்மார்களின் கதைகளில் ஒன்றான திருத்தொண்டர் புராணத்தில் திருத்தொண்டரின் சிவ பக்தி நெறியைப் பற்றிய கதையப் பற்றி பார்ப்போம்
பக்தர்களை 13 ஆம் நூற்றாண்டில் அடிக்கடி சோதித்த சிவன் ஒருமுறை திருத்தொண்டர் என்னும் சைவ அடியாரை சோதிக்க வருகிறார். திருத்தொண்டர் போன்ற ஆட்கள் சிவனுக்கு, சிவனடியாருக்கு என்றால் கொலையும் செய்யத் தயங்காதவர்கள். திருத்தொண்டர் எவ்வளவு தூரம் தன்மீது பக்தி பைத்தியமாக இருக்கிறார் என்று சோதிக்க எண்ணிய சிவபெருமான், சிவனடியார் வேடம் கொண்டு திருத்தொண்டரின் வாசல் கதவை தட்டினார்.
அங்கமெங்கும் விபூதியில் சிவனடியார் கோலம் கண்டு, மெய்மறந்த சிறுதொண்டர்,
"சிவனடியாரே, உங்களுக்கு திருஅமுது படைக்க எண்ணியுள்ளோம், தங்கள் திருவுளம் வேண்டி நிற்கிறேன்" என்று சொல்லி அவருடைய காலடியில் விழுந்தாராம்
"திருத்தொண்டரே, நான் உங்கள் வீட்டில் உண்ணவேண்டுமெனில் ஐந்து வயது சிறுவனை அரிந்து பதமாக சமைத்துத் தருவதாக இருந்தால் உண்ணுகிறேன்"
கேட்பது சிவனடியார் ஆயிற்றே, மறுப்பேதும் இல்லாமல் பேருவுவகைக் கொண்டு, அப்படியே ஆகட்டும் என்று உள்ளே அழைத்துச் சென்று இளைப்பார வைத்துவிட்டு,
கணவனும்(திருத்தொண்டர்), மனைவியும், ஊரார் யாரும் பிள்ளை தர ஒப்புக் கொள்ளமாட்டார்கள், எனவே நம் பிள்ளையையே அரிந்து சமைத்து திருஅமுது படைப்போம் என்றாராம், சற்றும் தயங்காத மனைவி, மகன் சீராளன் பாடசாலையில் இருந்து வந்ததும், எடுத்துச் சொல்ல, சீராளனும் தன்னை அரிந்து அமுது படைக்க ஒப்புக் கொண்டானாம். பிறகு கணவனும் மனைவியுமாக மகனை தரையில் கிடத்தி, மனைவி மகனின் உடலை அழுத்திப் பிடித்துக் கொள்ள, மகனின் கழுத்தை அறுத்து (நவரசுவை நினைச்சாலே குடலே நடுங்குது, பெற்ற பிள்ளையை எப்படி ?) தலை தனியாக எடுத்து வேலைக் காரியிடம் கொடுத்துவிட்டு , உடலை துண்டு துண்டாக்கி பதமாக சமைத்துவிட்டு, சிவனடியாரை உணவுக்கு அழைத்தனராம்.
"ஆகா அருமையான மணம், எங்கே உணவை இடுங்கள்" - சிவனடியார் (வடிவில் வந்த சிவன்)
"ஆகட்டும் ஸ்வாமி..."
என்று சொல்லி பரிமாறுகிறார்கள்,
"எனக்கு தலைக்கறியே பெருவிருப்பம், எனவே தலைக்கறியை கொண்டுவாருங்கள்"
'தலைக்கறியா ? அதைத்தான் வேலைக்காரியிடம் கொடுத்தாகிவிட்டதே....'என்று மனதிற்குள் கணவனும் மனைவியும் நினைக்க, இதுபோல் எதாவது ஏடாக் கூடம் ஆகலாம் என்பதால் முன் யோசனையால் வேலைக்காரி தலையை சமைத்து வைத்திருந்திருந்திருக்கிறாள். இவர்கள் கையை பிசைவதைப் பார்த்து குறிப்பறிந்து, தலைகறியை கொண்டு வந்து இலையில் படைத்தாளாம்.
இங்குதான் சிவனடியாராக வந்தவர் சித்து விளையாட்டைக் காட்டுகிறார்.
"எல்லாம் சரியாக இருக்கிறது, தங்கள் மகன் சீராளனைக் கூப்பிடுங்கள், சேர்ந்து உண்ணுகிறேன்" என்றார்
'அவனைத்தான் சமைத்தாயிற்றே...' என்று நினைத்தாலும் தயங்கி தயங்கி, சீராளனை கூப்பிடுவது போல் உருகி அழைக்க....அவன் பள்ளியில் இருந்து திரும்புவது போன்று வீட்டுக்குள் நுழைந்தானாம்.
கணவனும் - மனைவியும் மகிழ சிவனடியார் சிவனாக மாறி, பார்வதியுடன் இடப வாகனத்தில் திருக்கயிலாய தோற்றத்துடன் காட்சி கொடுத்து மறைந்தாராம்
*********
இந்த திருத்தொண்டர் மட்டுமல்ல, ஏனைய சிவனடியார்களும் சிவ பக்தி என்ற பெயரில் வெறி ஆட்டமே ஆடி இருப்பதாக நாயன்மார்கள் கதைகளைப் படித்ததும் தெரிகிறது.
1. அம்மையே அப்பனே என்று போற்றப்படும் சிவன், பக்தனை சோதிக்க பக்தனின் மகனை அரிந்து சமைத்து தரச் சொன்னாராம். இறைவனை இதைவிட கீழ்த்தரமான மனித மாமிசம், அதுவும் சிறுகுழந்தையின் மாமிசம் உண்ணுபவனாக காட்டமுடியாது, (இது போலவே மற்றொரு கீழ்த்தர நடவடிக்கையாக சிவன் சிவனடியார் வேடம் கொண்டு இயற்பகை நாயனாரின் மனைவியைக் தனக்கு கூட்டிக் கொடுக்கச் சொல்லிக் கேட்டாராம்)
2. பெற்ற பிள்ளையையே அரிந்து கொடுக்க துணிபவனின் சமய வெறி எத்தகையதாகவும், மூட நம்பிக்கையும் உச்சியாகவும் இருக்கிறது, இதற்கு மனைவியும் உடந்தை என்று எழுதப்பட்டு இருக்கிறது, கணவனை கல்லால் அடித்துக் கொல்லத் துணியும் மனைவி கூட பெற்றப் பிள்ளையை கொல்லவும், அதை சமைத்துத் தரவும் முன்வருவாளா ? இந்த பைத்தியத்திடம் இல்லறம் நடத்துவதைவிட பிச்சை எடுத்து உண்ணலாம் என்றே நினைப்பாள்.
3. ஐந்துவயது மகனிடம் சம்மதம் கேட்டார்களாம், அவனும் சிவனடியாருக்கு என்பதால் இசைந்தானாம். என்ன கொடுமை அந்த வயதில் செய்வது சரி / தவறெல்லாம் தெரியுமா ?
4. நரபலி என்னும் கேடுகெட்ட செயலை செய்ததுமின்றி அதை மசாலா போட்டு சமைத்தனராம், தலைக்கறிதான் வேண்டும் என்று சிவனடியார் பிடிவாதமாகக் கேட்டாராம்.
5. சிவன் பிள்ளைக் கறி கேட்டான் என்று சொல்லுவது 'சைவ' சமயமாம்
ஐயோ......ஐயோ......இதுவா பக்தி, இதுவா ஆன்மிகம். இந்த கேடுகெட்டக் கதையை எழுதியதும், இல்லாமல் நாயன்மார்களுள் ஒருவனாகும் தகுதியுடன் திருத்தொண்டர் சிலையாக வைக்கப்பட்டு இருக்கிறார். இதற்கு நாள் பூசையும், தீபாரதணையும் நடைபெறுகிறது.
******
மற்ற நாயன்மார்களும் சைவ வெறியில் இன்னும் பல அடாத, அறிவுக்கு ஒவ்வாத செயல்களை செய்யத் துணிந்து இருக்கிறார்கள். அறுபத்து மூவர் நாயன்மார்கள் கதையைப் போன்று பலக் (சைவ) கதைகள் சேர்ந்துதான் சைவ சமயம், இந்த கதைகளைப் போற்றிதான் அந்தகாலத்தில் சைவ சமயமே உயர்ந்தது என்கிற சண்டையெல்லாம் நடைபெற்று, சமணம் / பெளத்தம் துடைத்தொழிக்கப்பட்டது
சிதம்பரத்தில் பூட்டப்பட்டு இருந்த திருமுறைகளை தொகுத்த நம்பியாண்டார் நம்பி 12 ஆம் திருமுறையாக சேக்கிழாரின் பெரியபுராணத்தை சேர்க்காமலேயே கரையான் அரிப்பதற்கு விட்டு இருந்தால் சிவனுக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்திருக்கும்.
சிவப் பேரொளியன்பது ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அலியுமல்ல என்பதே ஆன்றோர் வாக்கு, இதையெல்லாம் மழுங்கச் செய்ய சிவன் சிவனடியார் வேடம் கொண்டு பார்வதியுடன் விடப (ரிஷப) வாகனம் ஏறிவந்தான், சிவகனங்களுடன் காட்சி தந்தான், சோதனைக்காக அறிவுக்கு ஒவ்வாத திருவிளையாடல் புரிந்தான் என்பதெல்லாம் முற்றிலும் பகுத்தறிவுக்கோ, பக்தி செய்து போற்றவோ ஒவ்வாதவைகள். மறுப்பவர்கள் எவரும் சிவனடியாருக்கு பிள்ளைக் கறி சமைத்துத்தர துணிந்தவருமல்லர். அப்படி துணிந்தால் பக்தி என்கிற பெயரில் ஒரு முற்றிய பைத்தியம் இருப்பதாகவே கொள்ளலாம்.
"அம்மையப்பா போற்றி......போற்றி !"